Friday, September 26, 2014

பாறைகளைப் பிளக்கும் விதைகள்

ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள்......... 

அத்தியாயம் 9 

பாறைகளைப் பிளக்கும் விதைகள் 

"உனக்குத் தேவையில்லாத விசயங்களில் தலையிடாதே? முதலாளி இந்தப் பொறுப்பை உனக்குக் கொடுத்ததும் நீ என்ன பெரிய ஆள்ன்னு நினைப்போ? உனக்கு என்ன வேலை கொடுத்து இருக்கின்றார்களோ அதை மட்டும் பார்? 

நான் இங்கே பத்து வருசமா இருக்கேன். உன்னை மாதிரி மாதம் ஐந்து பேர்கள் வந்து போய்க் கொண்டு இருக்கானுங்க. நீ இங்கே எத்தனை நாளைக்குத் தாக்கு பிடித்து நிற்பாய்? என்று எனக்குத் தெரியும்? நோண்டற வேலையை விட்டு விடு?புரியுதா?" என்றார். 


மரியாதைக்காக என்றார் என்று எழுதி இருக்கின்றேனே தவிர மிரட்டினான் என்று தான் எழுத வேண்டும். காரணம் எங்கள் இருவருக்கும் நடந்த அரைமணி நேர வாக்குவாதத்தின் இறுதியில் இப்படியான மிரட்டலை அவன் என்னிடம் சொன்னான். 

முதல் முதலாக அவனுடன் அறிமுகமான நாள் என்பது என் வாழ்வின் மிக முக்கியமான நாளாகும். காரணம் என் பொறுமையின் எல்லை என்பதை அன்று தான் என்னால் அடையாளம் கண்டு கொள்ள முடிந்தது. நான் அன்று அவனிடம் அமைதியான முறையில் தான் எதிர் கொண்டேன். 'நம் மீது தவறேதும் இல்லாத போது நாம் ஏன் கோபப்பட வேண்டும்?' என்ற என் கொள்கையின் காரணமாக அவன் தொடர்ந்து என்னைக் கோபப்படுத்திக் கொண்டே இருந்த போதிலும் சிரித்துக் கொண்டே நிற்க அவனுக்கு மேலும் ஆத்திரம் அதிகமாகி வார்த்தைகளை இறைத்துக் கொண்டிருந்தான். 

"கடமையே கண்" போல நான் தொடர்ந்து கேள்வியாகக் கேட்க அவன் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்று கத்தத் தொடங்கினான். 

அவனைச் சுற்றிலும் ஏராளமான பேர்கள் அங்கே நின்று கொண்டிருந்தனர். மேலும் பலரும் வந்து போய்க் கொண்டிருந்தனர். அத்தனை பேர்களுக்கும் அவன் தேவதூதனாகத் தெரிந்தான். அங்கே வந்திருந்த சிலர் அவன் எப்போது தங்களிடம் பேசுவான் என்று காத்துக் கொண்டிருந்தார்கள். சிலர் பவ்யமாக நின்ற கொண்டிருந்தார்கள். 

ஆனால் அவன் என் பார்வையில் அக்மார்க் பொறுக்கியாகத் தெரிந்தான். அவன் இருந்த பதவியின் காரணமாக அவனுக்கு அங்கே ஒரு ராஜாங்கம் அமைந்து இருந்தது. 

அரசியல்வாதிகளுக்கும் மத்திய தணிக்கை துறைக்கும் எப்போதும் ஏழரை தான் என்பதை நாம் பத்திரிக்கையின் படித்துருப்போம் தானே? 


என்னையும் அப்படித்தான் அவன் பார்த்தான். நேற்று வந்தவன் இவன் ஏன் நம்மைக் கேள்வி கேட்க வேண்டும்? என்ற எண்ணம் தான் அவன் மனதில் மேலோங்கி நின்றது. நான் கேட்ட ஆவணங்களை அவனால் கொடுக்க வாய்ப்பிருந்த போதும் அதைத் தவிர்க்கவே முயற்சித்தான். இது குறித்து நான் கேட்ட போதெல்லாம் ஏளனப்படுத்தினான். 

அவன் அங்கே அமர்ந்திருந்த விதமே எனக்குச் சிரிப்பை வரவழைத்தது. தன்னுடைய கனத்த உருவத்தைக் கஷ்டப்பட்டு அவன் அமர்ந்திருந்த நாற்காலியில் திணித்து அமர்ந்து இருந்தான். அவனைச் சுற்றி ஏராளமான ஜால்ரா கோஷ்டிகள் இருந்தது. அவன் பேச்சை நிறுத்தும் போது அவர்களும் கூடவே சேர்ந்து என்னை மிரட்டிக் கொண்டிருந்தனர். 


Saturday, September 20, 2014

பலி கொடுத்து விடு!


ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள்...... எட்டாவது அத்தியாயம்.

பலி கொடுத்து விடு!

ஒவ்வொரு துறையிலும் மாடசாமிகள் போல உழைப்பதற்கென்றே பிறப்பெடுத்த பிறவிகள் உண்டு. இவர்களைப் போன்றவர்கள் வாழ்க்கை முழுக்க பிறருக்காகவே தங்களை அர்ப்பணித்து விட்டு தனக்கென்று எதையும் பார்த்துக் கொள்ள விரும்பாமல் மடிந்தும் போய்விடுகின்றார்கள். 

ஆனால் ஒவ்வொரு தொழில் நிறுவனங்களிலும் வரம் தரும் சாமியான முதலாளிகளைக் காலி செய்யக்கூடிய ஆசாமிகளைப் பற்றித்தான் இப்போது நாம் பேசப் போகின்றோம்.


இவனைப் பலிகொடுத்தால் தான் நாம் இனி பிழைக்க முடியும்? என்று யோசிக்க வைக்கக் கூடிய மோசமான நபர்களும் ஒவ்வொரு இடத்திலும் இருக்கத்தானே செய்கின்றார்கள்? திருப்பூர் போன்ற கோடிக்கணக்கில் பணம் புழங்கும் ஊர்களில் ஒவ்வொரு இடத்திலும் திருட்டுத்தனத்திற்குப் பஞ்சமே இல்லை. எனக்குத் தெரிந்த ஒரு பெரிய ஏற்றுமதி நிறுவனத்தில் ஒரு ஒப்பந்தத்திற்குப் போடப்படுகின்ற விலையில் அந்த நிறுவனத்தின் முதலாளி ஐந்து சதவிகிதம் என்று தனியாகக் கட்டம் கட்டி வைத்து விடுவார்.

மேலும் படிக்க : http://goo.gl/socQC0


தொடரை முழுமையாக வாசிக்க

Friday, September 12, 2014

உழைத்து (மட்டும்) வாழ்ந்திடாதே!

பணம் தான் ஒவ்வொருவரையும் இயக்குகின்றது. பணம் தான் வாழ வேண்டும் என்ற ஆசையையும் வளர்க்கின்றது. பணம் இருந்தால் எல்லாமே கிடைத்து விடும் என்ற எண்ணத்திற்குச் சமூகம் மாறி வெகு நாளாகிவிட்டது. மற்ற அனைத்தும் தேவையற்ற ஒன்றாக மாறிவிட்டது.

தொழில் சமூகம் என்பதன் கொடூரமான உலகத்தில் ரசனைகள் என்பதை நினைத்துப் பார்க்க கூட முடியாது. அப்படி ரசனையுடன் வாழ விரும்புவர்களைத் தயவு தாட்சண்மின்றி எட்டி உதைத்து வெளியே தள்ளி விடும் என்பதால் அவரவர் சுயபாதுகாப்பு கருதி முகமூடிகளைப் போட்டுக் கொண்டு தான் வாழ விரும்புகின்றார்கள்.
இவனுடன் ஏன் பேச வேண்டும்? இவன் எதற்கு நம்மை அழைக்கின்றான்? என்று அலைபேசியில் எண் வரும் பொழுதே பார்த்து எடுக்காமல் இருக்கும் பலரையும் எனக்குத் தெரியும். "உனக்குப் பணம் என்பது தேவையில்லாமல் இருக்கலாம். எனக்கு அது தான் முக்கியத் தேவையாக இருக்கின்றது. உன் எண்ணம் என்னிடம் வந்தாலும் அந்தப் பணம் வந்து என்னிடம் சேராது" என்று முகத்திற்கு நேராகச் சொன்னவரைப் பார்த்து ஆச்சரியப்பட்டுள்ளேன். 
பணம் என்பதை வாசலில் மாக்கோலம் போட்டு பந்தல் கட்டி வரவேற்க காத்திருப்பவர்கள் போலத்தான் இங்கே பலரும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். 


Saturday, September 06, 2014

என் பெயர் மாடசாமி.

ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள்..........

ஆறாவது அத்தியாயம்.

என் பெயர் மாடசாமி.

மாடசாமியை முதல்முறையாக சந்தித்த தினம் இன்றும் என் நினைவில் உள்ளது.  ஒரு நாள் அதிகாலை நான்கு மணி அளவில் அவன் வேலை பார்த்துக் கொண்டிருந்த நிறுவனத்தில் சந்தித்தேன். 

அதுவொரு வளர்ந்து கொண்டிருக்கும் நிறுவனம். சிறிய நிறுவனமாக இருந்தாலும் சரியான நிலையில் தாக்குப்பிடித்து வருடத்திற்கு வருடம் வளர்ந்து கொண்டேயிருந்த நிறுவனமது. இது போன்ற நிறுவனங்களை திருப்பூர் மொழியில் JOB WORK UNIT என்பார்கள். 


இது போல திருப்பூரில் ஆயிரக்கணக்கான நிறுவனங்கள் உள்ளது. இவர்களின் முக்கியப்பணி என்பது நேரிடையாக ஏற்றுமதி செய்து கொண்டிருக்கும் நிறுவனங்களுக்குத் தேவையான அனைத்து வேலைகளையும் செய்து கொடுப்பதே ஆகும். இது போன்ற நிறுவனங்கள் ஐம்பது சதுர அடி முதல் 5000 சதுர அடி வரைக்கும் உள்ள இடங்களில் இருந்து செயல்பட்டுக் கொண்டிருக்கும்.  

மனித வாழ்க்கை மட்டுமல்ல.  தொழில் துறையும் கூட ஒவ்வொரு காலகட்டத்திலும் அவ்வப்பொழுதுக்குள்ள சூழ்நிலைக்கு தகுந்தாற்போல மாறிக் கொண்டே வருவதை கூர்மையாக கவனித்தால் தெரியும். ஒவ்வொரு தொழிலுக்கும் லாபமே முக்கியமானதாக  இருக்கும். அந்த லாபத்தை அடைய எத்தனை வழிகள் உள்ளதோ அத்தனை வழிகளையும் தொழில் நடத்துபவர்கள் தேர்ந்தெடுப்பார்கள். திருப்பூரில் இன்றைய சூழ்நிலையில் குறிப்பிட்ட சில வேலைகளைத் தவிர மற்ற அனைத்து வேலைகளும் வெளியே உள்ளே நபர்களிடம் சென்று முடிவடைந்து மீண்டும் நிறுவனத்திற்குள் வருகின்றது.