Thursday, November 28, 2013

வலைக்காடு

ஆயிரத்து இருநூறு மதிப்பெண்களுக்கு ஆயிரத்து இருநூற்றி ஐம்பது மதிப்பெண்கள் பெற்று விட மாட்டானா தன் பிள்ளை? என்று ஏங்குகிற பெற்றோர்களைத் தான் பார்க்க முடிகிறது. இந்தப் பொது ஆசை, கல்வியை எந்த அளவு கீழே கொண்டு போய்த் தள்ளுகிறது என்பதை அவர்களின் பெரும்பாலோர் கொஞ்சமும் அறிந்திருக்க நியாயமில்லை. 

இத்தகைய சூழலில் ஏன் என் பிள்ளைகளை மதிப்பெண்கள் கொண்டு அளவிடுகிறீர்கள்? என்று ஒரு தந்தை கேட்கிறார் என்பது ஆச்சரியத்தை மட்டுமல்ல, மகிழ்ச்சியையும் சேர்த்தே நம்மிடம் அழைத்து வருகிறது, 

குறைவான மதிப்பெண்கள் பெறுகிற குழந்தை ஒருவனின் தந்தை இப்படிக் கோபப்படுகின்றார் என்றால் அதில் ஆச்சரியப்படுவதற்கு அதில் எதுவும் இல்லை. ஆனால் எண்ணூறுக்கு எழுநூற்றி என்பது மதிப்பெண்கள் பெற்றிருக்கும் ஒரு குழந்தையின் தந்தை மதிப்பெண் பட்டியலை கையில் வைத்துக் கொண்டு உரத்த குரலெடுத்துக் கேட்கின்றார் என்றால் அவரைக் கொண்டாட வேண்டாமா? 

அதுவும் அவருக்கு வலை ஒன்றிருந்து அதில் கல்வி குறித்து அவரளவில் நியாயம் எனப் பட்டவற்றை வெளிப்படையாக எழுதுகிறார் என்றால் அவரைப் படிப்பதோடு மட்டுமல்லாமல் அவற்றை நாம் இயங்கிக் கொண்டிருக்கும் தளங்களில் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டும் என்ற நியாயமான ஆசையில் தான் அவரது வலைதளத்தை அறிமுகம் செய்கிறேன். 

அவர் "ஜோதிஜி". அவரின் வலை "தேவியர் இல்லம்". 

ஒரு நாள் முழுக்க விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தையிடம் "ஏன்டா படிக்கலையா"? என்று கேட்டால் "நாளை டெஸ்ட் இல்லை என்று சொல்வான்." இதைச் சொல்லிவிட்டு ஜோதிஜி சொல்கின்றார். 

"குழந்தைகளை டெஸ்ட்டுகள் தான் படிக்க வைத்துக் கொண்டிருக்கின்றன". 

இதற்குள் போவதற்கு முன் ஒரு விசயத்தைச் சொல்லி விட வேண்டும். 

இப்போதெல்லாம் குழந்தைகளுக்கு டெஸ்ட் இல்லாத நாட்கள் அபூர்வமானவை. ஒவ்வொரு நாளும் நாலைந்து டெஸ்ட்டுகள் அவர்களுக்கு. ஆகக் குழந்தைகள் விளையாடுகின்றார்கள் என்றால் அவர்களுக்கு அடுத்த நாள் டெஸ்ட் இல்லை என்று அர்த்தம். இதைக் கொஞ்சம் மாற்றிச் சொன்னால் அவர்களுக்கு டெஸ்ட் இல்லையென்றால் அடுத்த நாள் விளையாட முடியும். இன்றைய சூழலில் குழந்தைகள் எப்பொழுதாவது தான் விளையாட முடியும் எனில் "மாலை முழுவதும் விளையாட்டு" என்ற பாரதியின் கனவு பொய்த்துப் போகாதா என்ற ஆதங்கத்தோடு இவரது வலை விவாதிக்கின்றது. 

பரிட்சைக்காவும், பிரகாசமான எதிர்காலத்திற்காகவும் இன்றைக்குக் கல்வி 
என்றாகிப் போன கவலையைப் பகிர்வதோடு பிரகாசம் என்பது கூட உடனடி வேலை வாய்ப்பு என்கிற அளவில் சுருங்கிப் போனதே  என்றும் கவலைப்படுகின்ற வலையாகத் தேவியர் இல்லம் இருக்கின்றது. 

மனிதர்களை உருவாக்கக்கூடிய கல்வி ஊழியக்காரர்களை உருவாக்குவதோடு சுறுங்கிப் போகிறதே என்பதில் அவருக்குள் அக்கறை நியாயமாகவே படுகிறது. பாடத்திட்டங்களின் கட்டமைப்பு குறித்தும் இந்த வலை சன்னமாகப் பேசுகிறது. பாடத்திட்டத்திற்கு அப்பால் பாடங்கள் போதிக்கப்படுவதில்லை என்றும் ஜோதிஜி இந்த வலையில் கவலைப்படுகின்றார். 

குழந்தைகளைப் பேசவிடாமலும், கேள்வி கேட்கவிடாமலும் மனனம் செய்து வாந்தியெடுக்க வைக்கும் இன்றைய கல்வி முறையை ஏறத்தாழ இந்த வலையின் அனைத்து பக்கங்களிலும் சபித்தவாறே பயணிக்கின்றார் ஜோதிஜி. 

போக. ஒவ்வொரு தேர்வு முடிந்ததும் தேர்ச்சி அறிக்கையில் கையொப்பமிட பெற்றோரை பள்ளிக்கு வரச்சொல்வார்கள். அது பல இடங்களில் செம காமெடியாக இருக்கும். எனக்கே இப்படிப்பட்ட ஒரு அனுபவம் நேர்ந்தது. 

கிஷோர் 12 ஆம் வகுப்புப் படித்த போது அவனது ஆங்கில ஆசிரியரைப் பார்க்க வரிசையில் ஒரு ஆளாய் நின்றிருந்தேன். 188 மதிப்பெண்கள் எடுத்திருந்தான். அவனது ஆசிரியர் ஒரு இளைஞர். எனக்குப் பாடமே நடத்தினார். ஆறு மாதங்களாக 12 ஆம் வகுப்பிற்குப் பாடம் நடத்தும் அவர் 22 ஆண்டுகளாக (அதே பள்ளியில் இரண்டு ஆண்டுகள்) 12 வகுப்புக்கு ஆங்கிலம் நடத்தும் எனக்கு வகுப்பு எடுக்க வேண்டிய சூழல். எதுவும் பேசாமல் "சரிங்க சார்" என்று சொல்லி கையொப்பமிட்டு வந்தேன். 

இது கூடப் பரவாயில்லை. பெற்றோர் கூட்டம் என்பார்கள். ஆனால் தயார் போனால் அப்பா இல்லையா? என்பார்கள். ஏன் தாய் என்பவள் பெற்றோர் இல்லையா? 

என் மகள் மனைவி வேலை பார்க்கும் பள்ளியில் தான் படிக்கிறாள். அவளது தேர்ச்சி அறிக்கையில் நான் தான் கையொப்பமிட வேண்டும். அம்மாவிடம் வாங்கிக்க என்றால்" சிஸ்டர் திட்டுவாங்க" என்கிறாள். 

தலைமை ஆசிரியை உள்ளிட்டு எல்லா ஆசிரியர்களும் பெண்களாகவே இருக்கும் ஒரு பள்ளியிலேயே இது தான் நிலைமை எனில் எங்கே போய் முட்டிக் கொள்வது? இத்தகைய கேவலமான ஆணாதிக்க மனோபாவத்தை எதிர்த்து ஜோதிஜி இன்னமும் எழுதுவார் என்றே எதிர்பார்க்கின்றேன். 

சேவை என்ற நிலையிலிருந்த கல்வி இன்றைய சூழ்நிலையில் வணிகமயமாகிப் போயுள்ளது. இன்றைய கல்வி ஏறக்குறைய மளிகைக்கடையில் துவரம்பருப்பு போய் வாங்குவது போல் உள்ளது. இன்றைய ஆசிரியரின் நிலையென்பது மளிகைக்கடையில் உள்ள ரேக்கில் துவரம்பருப்புப் பொட்டலத்தை எடுத்து தர வேண்டிய நிலையில் தான் உள்ளது. இதை இன்னமும் இவர் புரிந்து எழுத வேண்டும் என்பது நேயர்களின் விருப்பம். 

இந்த வலையில் நான் முக்கியமானதாகக் கருதும் மற்றொரு தலைப்பு "தொடர்பு எல்லைக்கு வெளியே இருக்கின்றார்கள்" என்பது ஆகும். 

இன்றைய ஆங்கில வழிக் கல்வி என்பது பாட்டியையும் பேரப் பிள்ளைகளையும் எப்படி அந்நியப்படுத்துகின்றது என்பதை அழகாக விளக்குகின்றது. இயற்கை மருத்துவம் குறித்து, வவ்வால் விலங்கா? என்பது குறித்து இப்படி ஏராளமாக இந்த வலையில் உள்ளது. கல்வியை மட்டுமே நான் எடுத்துக் கொண்டேன். 

அவசியம் பார்க்க வேண்டிய வலை. பாருங்கள். 

நன்றி புதிய தரிசனம் மாதமிருமுறை இதழ்

விமர்சனம் எழுதியவரின் பெயர் திரு. இரா. எட்வின் 

(தலைமையாசிரியர். பெரம்பலூர்)

வாசிக்க  


Wednesday, November 27, 2013

சொல்ல மறந்த கதைகள் (3)

கற்றதும் பெற்றதும் 

புத்தக வாசிப்பென்பது நவீன தொழில் நுட்ப உதவியால் மின் நூல் அளவிற்கு வளர்ந்துள்ளது. எனக்குப் புத்தகங்களைக் கையில் வைத்துக் கொண்டு வாசிக்கும் அந்தச் சுக அனுபவத்தை மின் நூல் தருவதில்லை. இணையத்தில் கிடைக்கும் முக்கியமான சில மின் நூல்களை நான் சேமித்து வைத்துக் கொள்வதுண்டு.  

சில விசயங்களைப் புரிந்து கொள்ள, தெரிந்து கொள்ள உதவும் என்பதன் பொருட்டு அவசரத்திற்கு இந்த மின் நூல்கள் பயன்படுகின்றது. மின் நூல்களை உறுத்தல் இல்லாது வாசிக்க என்கிற ரீதியில் தற்போது நவீன தொழில் நுட்பம் பல வசதிகளைத் தந்த போதிலும் இன்னமும் இதில் ஈடுபாடு வரவில்லை. இணைய மேய்ச்சல் மற்றும் எழுதுவதென்பது 90 சதவிகிதம் வீட்டில் இருந்தபடியே என்கிற சூழ்நிலையில் இருப்பதாலும் அலைபேசியில் கூட இணையத்திற்குள் செல்ல விரும்புவதும் இல்லை.

எதையும் ஈடுபாடுடன் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் அதைச் செய்யக்கூடாது. 

இன்று வரையிலும் எனக்கு அலைபேசி என்பது பேசுவதற்கு மட்டுமே. ஆனால் சமீப கணக்கின்படி இந்தியாவில் அலைபேசி வாயிலாக அறுபது சதவிகித மக்கள் இணையத்தைப் பார்வையிட்டுக் கொண்டேயிருக்கின்றார்கள் என்று படித்தேன். சமீபத்தில் இணையத்தில் கிடைத்த எழுத்தாளர் சுஜாதாவின் கற்றதும் பெற்றதும் என்ற மின்நூல் கிடைத்தது.

வாசிக்க வாசிக்க இன்னமும் அவரின் மேல் உள்ள பிரமிப்பும், ஆச்சரியமும் தீர்ந்தபாடில்லை. 

எனக்குத் தெரியாத, மறந்த, புரியாத விசயங்களைப் பற்றி வீட்டில் குழந்தைகள் கேள்விகளாக என்னிடம் கேட்கும் போது நான் வாங்கி வைத்துள்ள பல சுஜாதா எழுதிய நூல்கள் தான் அவர்களுக்கு இன்று உதவி கொண்டு இருக்கின்றது. 

உண்மைகள் உறங்காது

வினவு தளத்தில் பவா செல்லத்துரை பற்றி எழுதியுள்ள கட்டுரையை வாசித்ததும் திருப்பூரில் நடக்கும் பல விழாக்களின் உண்மையான சுயரூபத்தை ஒப்பிட்டு பார்த்துக் கொண்டேன்.

பல கேள்விகள், புன்னகைகள் மனதில் வந்து போனது.

வலைபதிவில் மிக அழகாக அற்புதமாக எழுதிக் கொண்டு வரும் எழுத்தாளர் அமுதவன் எழுதிய பழைய ஒரு பதிவில் நான் படித்த மூன்று வரிகள் என்னுள் இருந்த மொத்த சந்தேகத்தையும் தீர்த்தது.

1) ஒரு அரசியல்வாதி இங்கே புகழுடன் விளங்க வேண்டுமென்றால் அவனுடன் சினிமாவும் இலக்கியமும் கலந்திருக்கவேண்டியுள்ளது.
2) ஒரு சினிமாக்காரன் இங்கே புகழுடன் இருக்க வேண்டுமென்றால் அவனுடன் அரசியல் கலந்திருக்கவேண்டியுள்ளது.
3) ஒரு இலக்கியவாதி இங்கே புகழுடன் இருக்க வேண்டுமென்றால் அவனுடன் அரசியல் சினிமா இரண்டும் கலந்திருக்கவேண்டியுள்ளது

இந்தக் குப்பையான கலவைதான் அத்தனைச் சீரழிவுகளுக்கும் காரணமாக உள்ளது.

மாவீரர்கள்

நான் எழுதத் தொடங்கிய போது நான் புத்தகங்கள் வாசிக்கும் பழக்கத்தை விட்டு ஏறக்குறைய 17 வருடங்கள் ஆகியிருந்தது. காரணம் வாழ்க்கை அனுபவங்களை மட்டுமே படிக்க வேண்டிய சூழ்நிலையில் இருந்தேன். 

2007 க்குப் பிறகே வாசிக்கக்கூடிய சூழ்நிலை அமைந்தது.

கல்லூரி வரைக்கும் படித்த ஆயிரக்கணக்கான புத்தகங்கள் தந்த தாக்கம் கூட என்னுள் மறைந்து விட்டது. கற்ற அனுபவங்கள் மட்டுமே நிலையானதாக இருந்த போது தான் ஈழம் குறிதது, வேலுப்பிள்ளைப் பிரபாகரன் குறித்த ஆர்வமும் தேடலும் என்னுள் தொடங்கி இது குறித்து மட்டுமே இரண்டு வருடங்கள் நூற்றுக்கணக்கான புத்தகங்கள் வாங்கிப் படிக்க ஆர்வம் உருவானது. 

இந்தத் தளத்தில் அடிப்படை முதல் ஈழப் போராட்டத்திற்குப் பின்னால் உள்ள சர்வதேச அரசியல் வரைக்கும் நான் அறிந்த புரிந்தவரையில் எழுதியுள்ளேன். இந்தப் பழைய கட்டுரைகள் நிச்சயமாக எவருக்கோ ஒவ்வொரு சமயத்திலும் பயன்படும் என்ற நினைப்பைத் தவிர வேறொன்றுமில்லை. இந்த நம்பிக்கை இன்று வரையிலும் பொய்க்க வில்லை.

குறிப்பாகக் கனடா நாட்டில் உள்ள ஈழத்தமிழர்களுக்கு இந்தக் கட்டுரைகள் இன்று வரையிலும் பயன்படுகின்றது என்பதை அவர்களின் ஒவ்வொரு சமய கடிதமும் எனக்கு உணர்த்துகின்றது. 

வேலுப்பிள்ளை பிரபாகரன் குறித்த நேர்முறை எதிர்மறை கருத்துக்களைப் பல புத்தகங்கள் வாயிலாக முடிந்தவரைக்கும் அறிந்தவன் என்ற முறையில் இன்று வரையிலும் அவர் மேல் கொண்ட மரியாதை ஒரு துளி கூட மாறவில்லை.

அவர் வாழ்ந்த காலத்தில் நானும் வாழ்ந்துள்ளேன் என்பதே எனக்குப் பெருமையாக உள்ளது. 

அவரின் ஒவ்வொரு பிறந்த நாளான நவம்பர் 26 அன்று என் வலைபதிவில் அவரைப்பற்றி எழுதியுள்ள ஒரு முக்கியத் தலைப்பை மீள்பதிவு செய்வதுண்டு.

ஆனால் பத்திரிக்கையில் இங்கே ஈழ அகதி முகாமில் கணவனைப் பார்க்கச் சென்ற ஒரு கர்ப்பிணிப் பெண்ணைச் சோதனை என்ற பெயரில் நிர்வாணப்படுத்திய நமது தமிழ்நாட்டு காவல் துறையின் அக்கிரமச் செயலைப் பார்த்த போது இனி ஈழம் குறித்து என்ன எழுதி எவருக்குப் புரிய வைக்க முடியும் என்றே தோன்றியது. 

இன்று மாவீரர்கள் தினம். என்னுடைய அஞ்சலிகள். 

தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் எல்லா விசயங்களிலும்அன்றும் இன்றும் என்றும் வாய்ச்சொல்லில் (மட்டும்) மகா வீரர்களாக இருப்பதால் ஈழம் குறித்து என்ன எழுத முடியும்?

செய்திகளை, காட்சிகளை வேடிக்கை மட்டுமே பார்க்க முடியும். 


என் தாய் மொழி என் குழந்தைகளுக்கும் உரியது.

கடந்த பல மாதங்களாக நான் எழுதிய கல்வித் தொடர் குறித்துக் குறிப்பாகத் தமிழ் மொழிக் கல்விக்கான ஆதரவு குறித்தும் எழுதும் போது என்னை நோக்கி வந்த வந்த கேள்விகள் சில உண்டு. 

உன் குழந்தைகள் மட்டும் ஏன் ஆங்கில வழிக்கல்வியில் படிக்கின்றார்கள்?

தற்போது உள்ள குழந்தைகளின் மொழிக் கொள்கையை விமர்சிப்பவர்கள் தங்கள் குழந்தைகளின் தமிழ் அறிவு வளர என்ன செய்கின்றார்கள்?

போன்ற பல கேள்விகள் என்னை நோக்கி வந்தது.

சமீபத்தில் எழுத்தாளர் ஜெயமோகன் உருவாக்கிய எழுத்துரு விவாதம் அடுத்தக் கட்டத்திற்குப் பலரையும் நகர்த்தியது.  அவர் எழுதியதை குறித்து நான் என் பார்வையைச் சொன்ன போது சிலரை வேறு விதமாக யோசிக்க வைத்தது.

ஒருவர் ஒரு கருத்தைச் சொல்கின்றார் என்றால் அதன் மூலம் எனக்கு என்ன தேவை? சுய வாழ்க்கையில் நாம் மாற்றிக் கொள்ள வேண்டியது என்ன? என்பது போன்ற ஆக்கபூர்வமான விசயத்தை மட்டுமே எடுத்துக் கொள்வதுண்டு. அந்தக் கருத்தை எழுதியவரின் கருத்தாக மட்டுமே எடுத்துக் கொள்வதுண்டு. 

தொடக்கம் முதல் குழ்ந்தைகளின் தமிழ் மொழி குறித்த பேச்சு, எழுத்து, வாசிப்புப் பழக்கத்தை மிக நுணுக்கமாகக் கவனித்து அவர்களை வளர்த்து வந்துள்ளேன்.

இன்று தமிழிலில் 98 சதவிகிதம் என்கிற அளவிற்கு வளர்நதுள்ளார்கள். 

இந்தப் படங்கள் தேவையா? இல்லையா என்பதை விட எழுதுபவன் எவரும் தன் வாழ்க்கையில் அதை அப்படியே கடைபிடிப்பதில்லை என்கிற கூற்று மெய்யாகி விடக்கூடாது என்பதற்காக மட்டுமே.

நண்பர் ராஜா, உங்கள் குழந்தைகள் குறித்து நீங்க எழுதுவதன் சிறப்பே உங்களின் சுய அனுபவமாக இருப்பதால் அதைப்படிக்கும் எனக்கு என் குழந்தையை எப்படி வளர்க்க வேண்டும் என்பதைக் கற்றுக் கொள்கின்றேன் என்று பல சமயம் சொல்லியுள்ளார்.

காரணம் நாம் மற்றவர்களின் பார்வையில் எப்படித் தெரிகின்றோம் என்பதை விட நம் மனசாட்சியின் பார்வையில் நாம் எப்படியான மனிதராக தெரிகின்றோம் என்பதே முக்கியமானது.  இதை ஒவ்வொருவரின் அனுபவங்கள் தான் உணர்த்தும். அந்த அனுபவங்கள் தான் இன்று வரையிலும் என்னை இயக்கிக் கொண்டு இருக்கின்றது.

குழந்தை வளர்ப்பில் தாய்மொழி முக்கியமானது என்பதை மீண்டும் ஒரு சொல்லி எங்கள் ஒத்துழைப்பின் மூலம் எங்கள் குழந்தைகள் நாள்தோறும் செய்து கொண்டிருக்கும் பயிற்சியும், குறிப்பிட்ட சில படங்கள் மட்டுமே இங்கே. அவர்கள் கற்றதும் பெற்றதும் 


தொடர்புடைய பதிவுகள்

Friday, November 22, 2013

நம் கனவுகளின் நாயகன்


இன்று வரையிலும் பலரும் புலம்பிக் கொண்டுதான் இருக்கின்றனர். "என் பதிவை தமிழ்மணத்தில் இணைக்க முடியவில்லை" என்று. 

சிலரோ "நான் தமிழ் மணம் பக்கம் சென்று மாதங்களாகி விட்டது" என்கிறனர்.

இன்னும் சிலரோ "ஃபேஸ்புக் வந்தவுடன் வலைபதிவுகளுக்கு இருந்த மவுசு போய் விட்டது" என்கின்றனர்.

நீண்ட கட்டுரைகளைப் படிக்கத் தற்போது எவரும் விரும்புவதில்லை போன்ற அத்தனை புலம்பல்களையும் மீறி நாள்தோறும் புதியவர்கள் தனக்கென்று வலைபதிவுகளை உருவாக்கி தமிழிலில் எழுத முயற்சிப்பதும் நடந்து கொண்டேதானிருக்கின்றது. 

உண்மையான பொறியை அடைகாத்து வைத்திருந்தவர்களுக்கு வலைபதிவு என்பது மகத்தான வரமே. அத்தகைய பொறி இல்லாதவர்களுக்கு எப்போதும் போல பொழுது போக்கில் ஒன்று. 

தமிழ் வலைபதிவுகளில் த ம முன் அல்லது த ம பின் என்று தான் பார்க்க வேண்டியுள்ளது.இப்போது பயன்பாட்டில் உள்ள ஓட்டரசியலுக்குப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் த ம 7 அல்ல என்பதை நினைவில் வைத்திருக்கவும். 

ஒவ்வொரு திரட்டிக்கும் உண்டான மரியாதையென்பது இன்றுவரையிலும் தனித்துவமாகத்தான் உள்ளது. இத்தனை களேபரத்திற்கிடையே தமிழ்மணம் திரட்டிக்கான ஆதரவென்பது புழுதியும் சகதிகளுக்கிடையே புதுச்செடி போலத்தான் வளர்ந்து கொண்டேயிருக்கின்றது. 

தமிழ்மணம் உருவாகி பத்து வருடங்களுக்கு அருகே வந்து விட்டது. 

என்னைப் போலக் கணினியுடன் நாள் முழுக்க வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்தவர்களுக்கே இப்படி ஒரு உலகம் இருக்கின்றது என்பதை உணர்ந்து கொள்ளத் தெரியாமல் இருந்த கொடுமையைப் போல இன்னமும் பெரும்பான்மையான மக்களுக்குத் தமிழிலில் மின் அஞ்சல் அனுப்ப முடியும் என்பது கூடத் தெரியாத அளவுக்குத் தான் கற்றறிந்த கூட்டம் நாள் தோறும் இணையத்தில் புழங்கிக் கொண்டிருக்கின்றனர். 

நான் எழுதத் தொடங்கியது முதல் இன்று வரையிலும் திரட்டிகளில் இணைப்பதென்பது பெரிய சவாலாகத் தெரிந்ததில்லை. வேறெந்த பிரச்சனைகளும் உருவானதும் இல்லை. திரட்டி சார்ந்த அதீத மயக்கமும் உருவாகவில்லை. 

இன்று வரையிலும் என் மேல் தனிப்பட்ட அக்கறை கொண்ட தமிழ்வெளி குழலி, சர்ச்சையில் சிக்காத இன்ட்லி, தொடக்கம் முதல் இன்று வரையிலும் சர்ச்சைகளுடனே பயணப்பட்டு வரும் தமிழ்மணம். என என் எழுத்துக்களைப் பலரின் பார்வைக்குப் பட வைத்துக் கொண்டிருக்கும் மூன்று திரட்டிகளுக்கும் எப்போதும் நன்றிக்கடன் பட்டுள்ளேன். 

திரட்டிகள் மட்டுமே நம்மை அடையாளம் காட்டும் என்கிற நிலை இன்று மாறிவிட்டது. ஏனைய பிற சமூக வலைதளங்கள் ஏராளமாக உள்ளது. ஏதோவொரு வழியின் மூலம் இன்று உங்கள் தளத்திற்கு ஒருவரை வரவழைத்து விட முடியும். ஆனால் வந்தவர்களை நிரந்தரமாகத் தக்க வைப்பதில் தான் உங்களின் தனித்திறமை இருக்கின்றது. இந்தத் திறமை இருப்பவர்களுக்குத் திரட்டிகள் தேவையில்லை என்கிற ரீதியிலும் இருக்கின்றார்கள். "ஆற்றில் பாதி சேற்றில் பாதி" என்பவர்களும் இருக்கின்றார்கள். 

ஆனாலும் இணைய வாசிப்பை விட அச்சு ஊடகத்தைத்தான் நான் இன்று வரையிலும் விரும்புகின்றேன். 

அச்சு ஊடகத்திற்கு இன்று மிகப் பெரிய சவாலாக இணைய வாசிப்பு உருவாகிக் கொண்டிருக்கின்றது என்ற புலம்பலைத் தாண்டியும் இன்று வரையிலும் வெகு ஜன இதழ்களின் வாசிப்பாளர்களின் ஆதரவு குறைந்துள்ளதே தவிர நின்றுவிட வில்லை. குறைவு என்பதற்கான காரணம் இணையம் அல்ல. நீக்கமற ஊடுருவிய தொலைக்காட்சியே.

இந்த இடத்தில் தான் இணைய வாசிப்பின் சூட்சமத்தை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். 

தொழில் ரீதியாகக் கணினியுடன் நாள்தோறும் உறவாடிக் கொண்டு இருப்பவர்களுக்கு மட்டுமே இந்த இணைய வாசிப்பு சாத்தியம். அதுவே அவர்களின் சூழ்நிலைகள் மாற இணைய வாசிப்பென்பது கடினமே. ஒரு பத்திரிக்கையை கடந்த ஐந்தாண்டுகளாக ஒருவர் படித்துக் கொண்டிருப்பது சாத்தியமே. தமிழ்நாட்டிற்குள் எங்குச் சென்றாலும் அவரால் வாங்கி விட முடியும். வளர்ந்து கொண்டிருக்கும் நாடுகளில் வளராத தொழில் நுட்பத்தில் இங்கே பலதும் சாத்தியமில்லை. 

கணினி மையத்தில் சென்று இவர் எழுதியதைப்படித்தால் தான் எனக்கு வேலையே ஓடும்  என்கிற நிலையில் தானா நம்மவர்கள் வாசிப்பு புலியாக இருக்கின்றார்கள்? 

இங்கே "நிரந்தர வாசகர்" என்பது வெறுமனே பொம்மலாட்டம். 

வந்து போய்க் கொண்டிருப்பவர்களை வைத்து தான் இணையம் வளர்நது கொண்டிருக்கின்றது. மற்றபடி வெளிநாட்டில் இருக்கும் தமிழர்களுக்கு தமிழ் இணையம் என்பது மிகப் பெரிய வரப்பிரசாதமே. அதுவும் கூட தமிழர்களுக்கு பொழுதுபோக்கிற்கு மட்டுமே பயன் பட்டுக் கொண்டிருக்கிறது.

பலசமயம் நாம் இதற்குள் வருவதற்கு முன் எவரெல்லாம் இங்கு இருந்தனர்? எப்படியெல்லாம் இந்தத் தமிழ் இணையம் வளர்ந்தது என்பதைப் பல சமயம் ஆராய்ந்து பார்ப்பதுண்டு. 

திரட்டி என்ற வடிவம் அறிமுகமாவதற்கு முன் எழுதிக் கொண்டிருந்தவர்கள், குழும மின் அஞ்சலில் கும்மியடித்தவர்கள், உரையாடிக் கொண்டிருந்தவர்கள், வம்பு உருவாக்குவதை மட்டுமே கொள்கையாக வைத்திருந்தவர்கள், இலக்கிய ஆசான்கள், லேகிய மேதைகள், தாதாக்கள், என்று இணையத்தில் தீவிரமாக இயங்கிக் கொண்டிருந்தவர்கள் எவரும் இன்று காணாமல் போய்விட்டார்கள். அல்லது வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள். 

வயதானவர்களுக்கும் இளைஞர்களும் ஒரு பெரிய இடைவெளி உருவாகுமே? இதைப் போலத்தான் இணையத்திலும் ஒவ்வொரு வருடத்திலும் மாறுதல்கள் உருவாகிக் கொண்டேயிருக்கின்றது. 

ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒருவரின் தனிப்பட்ட கருத்து ரீதியான கொள்கைகள் காலாவதியாகிப் போகின்றது. சூடம் போலக் கரைய வைத்து விடுவதால் எண்ணங்களும் மாறிவிடுகின்றது. பொருளாதார நிர்ப்பந்தங்கள் அவரின் மூர்க்கத்தனத்தைக் குறைந்து விடுகின்றது. 

"பழையன கழிதலும் புதியன புகுதலும்" என உள்ளே வருவதும் போவதும் இடையூறாத சுழற்சியில் வருகின்றார்கள். சிலர் நிலைக்கின்றார்கள். 

பலரோ காணாமல் போய் லைக் பட்டனில் அடைக்கலமாகி விடுகின்றார்கள். சிலர் குறிப்பிட்ட சிலரின் பின்னூட்டத்தில் பதில் கொடுத்து "நாங்களும் இருக்கின்றோம்" என்று காட்டிக் கொள்கின்றார்கள். சிலரோ "உங்கள் காலம் பொற்காலம்" என்று கூலி வாங்காமல் கூவிக் கொண்டிருப்பவர்களின் வார்த்தைகளில் திருப்தி பட்டுக் கொண்டு விடுகின்றார்கள்.

இவரை நம்மால் சந்திக்க முடியுமா? என்ற காலங்கள் போய்விடடது. அத்தனை பேர்களும் ஃபேஸ்புக்கில் வந்து அடைக்கலமாகி விட்டதால் கொஞ்சலாம், திட்டலாம், நடிக்கலாம். தற்போது புகழ் என்பது பொது மேடை. காரணம் நவீன தொழில் நுட்பம் தந்த வளர்ச்சி இது.

ஆனால் இன்று வரையிலும் தமிழ்மணத் திரட்டியை திட்டிக் கொண்டிருப்பவர்களின் எண்ணிக்கை மட்டும் குறைந்தபாடில்லை. இதில் ஒரு ஆச்சரியம் என்னவென்றால் எவரொல்லாம் தமிழ்மணத்தின் மூலம் பலருக்கும் தெரியக்கூடியவராக அறிமுகமானார்களோ அவர்கள் தான் இன்று "நெஞ்சு பொறுக்குதில்லையே" என்கிறார்கள். 

இன்று தினந்தோறும் உறவே எங்கள் திரட்டியில் இணைந்து பயன்படுத்துங்கள் என்கிற விளம்பர வாசகத்தைப் பார்க்கும் பொழுதெல்லாம் இந்தத் திரட்டி என்ற வடிவத்தைத் தமிழிலில் முதல் முறையாக உருவாக்கியவரின் முகத்தை நான் நினைத்துக் கொள்வதுண்டு. 

அவரைச் சமீபத்தில் சந்தித்தேன். 

கிராமங்களில் வாழ்ந்தவர்கள் சிம்னி விளக்கு, அரிக்கேன் விளக்கு போன்றவற்றை இன்றும் மறந்திருக்க வாய்ப்பில்லை. முப்பது ஆண்டுகளுக்கு முன் மின்சாரத் தெருவிளக்கில் படித்தவர்களும் அதிகமே. 1879 ஆம் ஆண்டுத் தாமஸ் ஆல்வா எடிசன் கண்டுபிடித்த மின்சாரம் நமக்கு இயல்பாக இன்று இருப்பதைப் போல உள்ளடங்கிய கிராமங்கள் வரைக்கும் பயன்பாட்டுக்கு வர நூறு ஆண்டுகளுக்கு மேல் ஆனது. 84 வயது வரை வாழ்ந்து எடிசன் இன்று மறைந்து 72 ஆண்டுகள் முடிந்து விட்டது. 

இன்று நாம் மின்சாரத்தைப் பயன்படுத்தும் போது எடிசனை நினைத்துக் கொள்கின்றோமோ? 

இன்று தமிழ்நாட்டில் நிலவி கொண்டிருக்கும் மின்தடையை நினைத்து தான் நம் எரிச்சலை காட்டிக் கொண்டிருக்கின்றோம். 

ஒரு கண்டுபிடிப்பின் பரிணாமம் வளர வளர கண்டுபிடித்தவர் அஸ்திவாரம் என்ற நிலையில் மறந்து போய்ப் பயன்பாட்டில் உள்ள நவீனம் மட்டுமே தான் பேசப்படும். இது தான் நவீன தொழில் நுட்பம் உணர்த்தும் பாடம். மற்றக் கண்டுபிடிப்புகளை விட மின்சாரம் என்பதை கண்டுபிடிக்காத பட்சத்தில் உலகம் எப்படியிருக்கும் என்பதை எப்பொழுதாவது யோசித்திருப்பீர்களா? 

இதைப் போல இன்றைய வலைபதிவுகளின் வளர்ச்சியென்பது திரட்டி இல்லாதபட்சத்தில் எப்படியிருக்கும் என்பதை ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ள முடியும். 

நாம் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்திக் கொண்டிருக்கும் எந்த நவீன தொழில் நுட்பமும் நமக்குச் சுகம் தரும் வரையிலும் "இனியெல்லாம் சுகமே " என்று குதுகலிக்கின்றோம். ஒரு மணி நேரம் மின் தடை உருவாக ஆட்சியாளர்களின் மேல் நாம் எரிச்சலை காட்டுவதைப் போலத்தான் நம் பதிவு பலரின் பார்வைக்குப் படாமல் இருக்கின்றதே என்று வலைபதிவுகளைத் திரட்டும் திரட்டிகளைத் திட்டத் தொடங்கி விடுகின்றோம். 

தமிழ் எழுத்துரு பயன்பாட்டுக்கு வந்த பிறகு, குழும மின் அஞ்சலில் தங்களின் கருத்துக்களைப் பறிமாறிக் கொண்டிருந்தவர்கள் அடுத்தக் கட்டமாகத் தாங்கள் உருவாக்கிய வலைபதிவுகளில் தங்களின் கருத்துக்களை எழுதத் தொடங்கினர். மேலைநாட்டினர் உருவாக்கிய வலைபதிவின் தன்மையும் படிப்படியாக மாறிக் கொண்டேயிருந்தது. 

ஆங்கிலத்தில் தொடங்கியவர்களின் பயணம் படிப்படியாகத் தமிழுக்கு நகர்ந்தது. ஒவ்வொருவரும் தங்களுக்கென்று ஒரு வலைபதிவுகளை உருவாக்கிக் கொண்டு தமிழிலில் எழுதத் தொடங்கினர். 

ஆனால் அது அங்கங்கே சிதறிக்கிடந்த எவருக்கும் பயன்படாத சில்லுகள் போலவே இருந்தது. குறிப்பிட்ட சிலரின் பார்வையில் மட்டும் பட எழுதியவர்களுக்கும் சோர்வு வர இந்தச் சமயத்தில் தான் இந்திய மொழிகளில் முதன் முதலாகத் தமிழுக்கென்று ஒரு திரட்டி இருந்தால் நன்றாக இருக்குமே? என்ற யோசனை ஒருவரின் மனதில் உருவானது. 

அவர் கற்ற எந்திரவியலுக்கும் கணினி சார்ந்த நிரலி மொழிகளுக்கும் எட்டு காத தூரம். ஆர்வமே வழிகாட்டி. அந்த ஆர்வமே அவரை ஓய்வு நேரத்தில் உழைக்க வைத்து இன்று நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கும் திரட்டியின் அஸ்திவாரம் உருவானது. 

தமிழிலில் எழுதிக் கொண்டிருப்பவர்களை ஒருங்கிணைக்க ஒரு திரட்டி இருந்தால் எப்படியிருக்கும் என்ற யோசித்தவரைப் பற்றி நமக்கு எத்தனை பேர்களுக்குத் தெரியும்? 

டாலர் நகரம் புத்தக வெளியீட்டு விழாவில் தமிழ் வலைபதிவுகளின் தோற்றம், வளர்ச்சி குறித்து ஒரு மலர் வெளியிட வேண்டும் என்று எனக்குத் தோன்றியது. இதற்கான காரணம் என் தொடர்பில் இருப்பவர்கள் ஒரு நாளின் பெரும்பான்மையான நேரத்தை கணினியுடன் கழிப்பவர்களிடம் புத்தக விழா குறித்துத் தெரிவித்த போது வலைபதிவுகள் என்றொரு உலகத்தை எவருமே அறிந்தவர்களாக இல்லை. 

விழா மலர் என்பது செலவு பிடித்த சமாச்சாரமாக இருந்தாலும் நம்மால் முடிந்த ஒன்று என்கிற ரீதியில் இந்த ஆர்வம் மேலோங்க ஆய்த்த பணியைத் தொடங்கினேன். 

என்னுடைய பணிச்சூழல், நண்பர்களின் செயல்பட முடியாத நிலையில் நெருக்கடி உருவானது. ஒரு நள்ளிரவில் கூகுளில் தேடிய போது தான் இந்த வலைபதிவு முதன் முதலாக என் கண்ணில் பட ஆச்சரியமாகி, நாம் எதிர்பார்த்த அத்தனை விசயங்களையும் இவர் எழுதியுள்ளாரே என்று அப்படியே சேமித்து, அவரின் அனுமதி பெற அவரை அழைத்த போது தான் முதன் முறையாக அவரின் அறிமுகம் கிடைத்தது. 

சேமித்த கட்டுரைகளை அச்சில் கொண்டு வர முடியாத அளவுக்கு அதில் உள்ள எழுத்துரு அமைப்புச் சிக்கலில் கொண்டு வந்து நிறுத்திய போது நண்பர் காட்டிய அசாத்திய உழைப்பால் விழாவில் மலராக வந்தது. இந்தத் தளத்தில் பக்கவாட்டில் நிரந்தரமாக வைத்தேன். 

என்றாவது ஒரு நாள் இவரைச் சந்திக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். 

அமெரிக்காவில் இவர் பணிபுரிந்த சமயத்தில் உருவாக்கிய தமிழ்மணம் 2003 இறுதியில் தொடங்கிய உழைப்பின் பலன் 2004 இறுதியில் வடிவம் பெற்றது. இன்று இதன் பரிணாம வளர்ச்சியில் சூடான இடுகையில் நாம் வந்து விட முடியுமா? என்ற ஏக்கத்தையும் உருவாக்கியுள்ளது. முதல் இருபதுக்குள் நாம் இல்லையா? என்று துக்கத்தையும் கொண்டு வந்து நிறுத்தியுள்ளது. 

தற்போது கோவையில் வாழ்ந்து கொண்டிருப்பவர் உறவினர்களின் விசேடங்களுக்குத் திருப்பூர் வந்து போய்க் கொண்டிருப்பது தெரிந்த போதிலும் நான் உங்களைச் சந்திக்க ஆவலாய் உள்ளேன் என்று தகவல் மட்டும் சொல்லியிருந்தேன். 

அவர் ஒவ்வொருமுறையும் வந்து போய்க் கொண்டேயிருந்தார். தரிசனம் மட்டும் கிடைத்தபாடில்லை. சில சமயம் அவர் இங்கு வந்திருந்த போது அவர் அழைப்பு விடுத்தும் என்னால் சந்திக்க முடியாத சூழ்நிலை. சில வாரங்களுக்கு முன் சந்தர்ப்பம் சரியாக அமைந்தது. அப்போது தான் நீண்ட நாட்களாக என் மனதில் இருந்த தொழில்நுட்பம் சார்ந்த பல விசயங்களைக் கேட்டேன். 

பத்தாண்டுகளுக்கு முன்னால் நடந்த நிகழ்வுகள் சார்ந்த பல பதிவுகள் என் கண்ணில் காட்டினார். 

அவரைச் சந்தித்த போது குறிப்பாகத் தமிழ்மண தொடக்கக் கால வளர்ச்சி, சந்தித்த சவால்கள், கிடைத்த ஆதரவு போன்றவற்றைத் தான் அதிகம் கேட்டேன். அப்போது தான் கீழ்க்கண்ட இணைப்புகளை என் பார்வைக்குத் தந்தார். 

இது குறித்து முழுமையாக எழுதுவதை விட ஒவ்வொரு பகுதியிலும் வந்துள்ள பின்னூட்டங்களில் உள்ள வார்த்தைகளைப் படிக்கும் பொழுதே இவரின் உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரத்தை உணர்ந்து கொள்ள முடிந்தது. 

வலைபதிவில் எழுதி, ஓட்டு வாங்கி, பலரின் பார்வையில் பட்டு, ஹிட்ஸ் என்ற வார்த்தையோடு சிநேகம் கொண்டாடி, விளம்பரங்கள் மூலம் சம்பாரிக்க முடியுமா? என்று யோசிப்பவர்களுக்கும் 

எழுதக் கற்றுக் கொண்டதும் எழுத்தாளர் ஆசை உருவாகி நம் படைப்புகள் வெகுஜன இதழ்களில் வந்து விட முயற்சிகள் செய்பவர்களுக்கும், 

வலைபதிவில் எழுதியதை புத்தகமாக்கி நானும் எழுத்தாளர் தான் என்று சொல்லிக் கொள்பவர்களும்

ஏதோவொரு வகையில் இவருக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளார்கள்.  

இவர் மட்டும் எவரின் நன்றியையும் எதிர்பார்க்காமல் என்னுடைய தொழில் மூலம் உருவாகும் பிரச்சனைகளைக் சமாளிக்க ஏழெட்டு கணினி மொழிகளைக் கற்று வைத்துள்ளேன் என்று எதார்த்தமாக சொல்லிக் கொண்டு எது குறித்த ஆசையுமில்லாத மனிதராக நகர்ந்து சென்றவரை வினோதமாகப் பார்த்து விட்டு வீட்டுக்கு வந்தேன்

தமிழ்மணம் உருவானது தொடர்பான இவரின் முழுமையான அனுபவங்கள் குறித்து அறிந்து கொள்ளவலைப்பதிவுகளுக்காக ஒரு மேடைத்தளம்

துல்லியமான தமிழாக்கம்

தமிழ்மணம் தளத்துக்கு தொடுப்புக் கொடுங்கள்

தமிழ்மணத்தின் முதல் 100 நாட்கள்

தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி


வாசிக்க

தமிழ்மணம் நட்சத்திரம் அறிமுகம்
Wednesday, November 20, 2013

வாசித்ததும் (ரொம்பவே) யோசித்ததும் 2

எவராவது கணினி வழியே தங்கிலீஷ் ல் உரையாடத் தொடங்கினால் எனக்குத் தடுமாற்றமாகி விடும். அதனை வாசிப்பதென்பது என்னைப் பொறுத்த வரையிலும் நரகதண்டனைக்குச் சமமானது. தொடங்கும் பொழுதே சொல்லிவிடுவதுண்டு. தமிழ் அல்லது ஆங்கிலத்தில் பேசலாமா? என்று. சிலரால் ஆங்கில வார்த்தைகளைக் கோர்க்க முடியாது. பலரால் தமிழில் தட்டெச்சுச் செய்யத் தெரியாது. திரிசங்கு சொர்க்கம் தான்.

தமிழ் மொழி குறித்து யோசிக்கும் பொழுது இப்போது என் நினைவில் எந்த ஆசிரியர்களும் நினைவில் வருவதில்லை. பாடங்களுக்கு அப்பால் எந்த எல்லையையும் அவர்கள் தாண்டியதில்லை. அவர்கள் மூலம் நான் எதையும் புதிதாகக் கற்றுக் கொண்டதில்லை. மதிப்பெண்களுக்குப் படித்த பல தமிழ் இலக்கணங்கள் கூட இன்று நினைவில் இல்லை.ஆனால் பாடப்புத்தகங்களுக்கு அப்பால் வாசித்த வாசிப்பு தான் இன்று வரையிலும் எழுத, வாசிக்க, யோசிக்க முடிகின்றது. வலைபதிவில் எழுத வந்து மூன்றாவது மாதம் தமிழ் மொழி குறித்து எழுதிய கட்டுரை இது.

ஈரவெங்காயம். 

மற்ற இன மக்களை விடத் தமிழர்களுக்கென்று தனிப்பட்ட சிறப்புகள் பல உண்டு. தமிழர்களால் என்னவெல்லாம் செய்ய முடியாது என்பதில் முதன்மையானதும் முக்கியமானதும் விவாதிக்கத் தெரியாது.

காரணம் குறிப்பிட்ட விசயங்கள் குறித்து முழுமையான விபரங்கள் எதுவும் தெரியாமல் இருந்தாலும் கடைசியில் தனி மனித தாக்குதல்களில் இறங்கி விடுவது தான் வாடிக்கை. கடந்த 40 ஆண்டுகளில் தான் இந்த கலாச்சாரம் இங்கே வேகமாக பரவியது. இன்று இதுவே தான் கலாச்சாரமாக உள்ளது. மற்ற மாநிலங்களை விடத் தமிழ்நாட்டில் மட்டும் அரசியலில் நாகரிகம் என்பது அறவே வளராமல் போனதற்குக் காரணம் இந்தக் கட்டம் கட்டும் வேலை தான்.

எழுத்தாளர் ஜெயமோகன் சொன்ன எழுத்துரு விவாதத்திற்கு வந்த அத்தனை எதிர்க்கருத்துக்களையும் கவனித்த போது ஐந்தில் ஒரு பங்கு அளவே அதன் சாதகப் பாதக அம்சங்களைப் பேசியது. மற்றவை எப்போதும் போலவே தமிழர்களின் தனிச்சிறப்பைக் காட்டியது.

அப்போது தான் இந்தக் கட்டுரை என் கண்ணில் பட்டது.

பிரச்சனைகளுக்காக முண்டாசு கட்டி புறப்பட்டவர்களைப் பற்றி நான் யோசித்த மாதிரியே இவரும் எழுதியுள்ளார். இந்தத் தளத்தின் பழைய கட்டுரைகளைப் படித்துப் பாருங்கள்.

"அச்சம் என்பது மடமையடா" என்று எம்.ஜி, ஆர் பாடிய பாடலில் மூலம் நாம் கேட்டு இருப்போம். ஆனால் இவரே "அச்சப்படாத வாலிப சங்க"த்தின் தலைவராகவே இருக்கின்றார். இவர் யாரென்று பழைய ஆட்களுக்குத் தெரியும். உங்களுக்குத் தெரிய வேண்டுமென்றால் சில மணி நேரம் ஒதுக்கி உள்ளே குதித்து விடுங்கள். முகமூடிகளைச் சிரித்துக் கொண்டே கிழித்துத் தோரணம் கட்டியுள்ளார்.

ஆடுறா ராஜா! போடறா பல்டி! 

நம்மால் எழுத முடியும் என்ற நம்பிக்கை வந்த போது தொடக்கம் முதலே கலப்புச் சொற்களைத் தவிர்த்து வந்துள்ளேன். ஆனால் கடந்த ஒரு வருடமாக பல தரப்பட்ட ஆளுமைகளின் பதிவுகளை வாசிக்கும் போது தான் நாம் கற்றுக் கொள்ள வேண்டியது இன்னமும் நிறைய உள்ளது என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது. குறிப்பாக எழுத்துப்பிழைகள்.

இயல்பான தமிழ்ச்சொற்களில் பல கடந்த 20 வருடங்களில் தேவையற்றுப் போய்விட்டது. ஆனால் இன்று 90 சதவிகித பத்திரிக்கைகளில் தமிழ்ச் சொற்களை எழுதினால் வாசகர்களுக்குப் புரியாது என்ற நோக்கத்தில் சாலையில் சென்றான் என்பதைக் கூட ரோட்டில் சென்றான் என்று தான் தமிழ்ச்சேவை செய்து கொண்டிருக்கின்றார்கள்.

இயல்பான நடைமுறை கலப்புச் சொற்கள் என்பதற்கும் வலிய திணித்தல் என்பதற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. ஒவ்வொரு பத்திரிக்கையில் பணியாற்றும் குறிப்பிட்ட நபர் செய்யும் அயோக்கியத்தனத்தாலும், அதைக் கண்டு கொள்ளாத நிர்வாகத்தாலும் அதுவே சரியான தமிழ் போலவே இன்று படிப்பவர்களால் வாசிக்கப்படுகின்றது.

காட்சி ஊடகங்கள் செய்யும் பொருப்பற்ற தனத்தினாலும் அவர்கள் செய்து கொண்டிருக்கும் மொழி சார்ந்த விபச்சார நடவடிக்கைகளால் கடந்த இருபது ஆண்டுகளில் பேச்சு மொழி வழக்கில் கூட நாகரிகம் என்ற பெயரில் நாதாரித்தனம் தான் மேலோங்கி உள்ளது.

ஆனால் நண்பர் சுடுதண்ணி எழுதியுள்ள 4 தமிழ் மீடியா வெளியிட்டு வரும் தொடரை படித்துப் பாருங்கள். தற்போதைய அறிவியலில் வளர்ந்த இணையம் குறித்து, உருவாகியுள்ள சவால்களைக் குறித்து இயல்பான தமிழிலில் எழுத முடியும் என்றதொரு சாதனை தான் இந்தத் தொடர்.

இணையம் வெல்வோம்தொடர்புடைய பதிவுகள்

வாசித்ததும் யோசித்ததும் 1

சொல்ல மறந்த கதைகள்

சொல்ல மறந்த கதைகள் 2


நாம் எழுதுவது சரியா?


Monday, November 18, 2013

நாம் எழுதுவது சரியா?

கடந்த இரண்டு வருடங்களாகப் பதிவுலகில் பல பெரியவர்கள் என் கண்களுக்குத் தெரிகின்றார்கள். பணியிலிருந்து ஓய்வு பெற்றவர்கள், விருப்ப ஓய்வு பெற்றவர்கள் எனப் பலதரப்பட்டவர்கள் தனக்கென்று ஒரு அடையாளத்தை நிறுவ முற்பட்டுக் கொண்டிருப்பதைப் பார்க்கின்றேன். 

அவர்களின் ஓய்வுப் பொழுது என்பது எவருக்கும் தொந்தரவு இல்லாமலும் இது வரையிலும் அவர்களுக்குக் கிடைக்காத சுதந்திரமும் கிடைக்கின்றது. எழுதும் பதிவுகள் மூலம் அங்கீகாரமும் கிடைக்கின்றது. 

இந்தச் சமயத்தில் தமிழ் எழுத்துக்கள் கணினி வரை வராமல், வளராமல் இருந்திருந்தால் என்னவாயிருக்கும் என்பதை யோசித்துக் கொள்வதுண்டு!. 

"உங்களால் மறக்க முடியாத நாள்"? என்று ஒவ்வொருவரிடமும் கேட்கப்படும் போது நம்மிடம் உள்ள சுக, துக்க நாள் ஏதோவொன்று நம் நினைவுக்கு வரும். 

நான் ஆறேழு வருடத்திற்கு முன்பு அலுவலகத்தில் இருந்த போது ஏதோவொரு தேடலில் என் கணினியில் தமிழ் எழுத்துக்கள் தெரிந்த போது நான் அடைந்த ஆச்சரியத்திற்கு அளவே இல்லை. எந்த நாள் என்று கூடத் துல்லியமாக நினைவில்லை. இன்றும் அடிக்கடி நினைத்துக் கொள்வதுண்டு. 

கடந்த நான்கு வருடங்களில் என் எழுத்துக்கள் அச்சு ஊடகங்கள், புத்தக வடிவம் என்ற எத்தனையோ கடந்து வந்த போதிலும் கூகுள் தேடலில் தமிழ் மொழி வார்த்தைகள் வைத்து இன்று எதைப்பற்றி வேண்டுமானாலும் தேட முடியும் என்கிற அளவிற்கு வளர்ச்சி அடைந்துள்ளதைப் பார்க்கும் இதற்காக உழைத்தவர்களை நினைத்துப் பார்க்கத் தோன்றியது. 

என் தேடல் தொடங்கியது....... 

பலவிதமான தளங்கள் என் பார்வையில் பட்ட போதிலும் சில வாரங்களுக்கு முன் பார்த்த படித்த தளம் ஒன்று முக்கியமானது. 

நான் வேர்ட்ப்ரஸ் ல் எழுதத் தொடங்கிய பிறகு ஆச்சரியங்கள் மாறி இயல்பான நிலைக்கு வந்த பின்பு தமிழ் மொழி குறித்த உண்மையான ஆர்வமே எனக்குள் உருவானது. 

எழுதத் தொடங்கிய முதல் மூன்று மாதத்தில் என்னைப் போலவே எழுதிக் கொண்டிருக்கும் உள்ளூர் நண்பர் உங்கள் எழுத்து நடையைப் பார்த்து நானும் மொழியின் தன்மையை மாற்றியுள்ளேன். அழகான தமிழ்வார்த்தைகளை நானும் அறிமுகம் செய்து வைக்க முயற்சிக்கின்றேன் என்றார். 

அப்போது அவரின் பாராட்டு எனக்குப் பெரிய அங்கீகாரமாகவே தெரிந்தது. 

ஆனால் எழுதும் போது அவசரத்தில் வரும் பிழைகள், தெரிந்தாலும் பணிச்சூழல் காரணமாகவும், பொறுமையின்மையினாலும் அதைக் கண்டும் காணாமல் நகர்த்திய சூழ்நிலைகள் என்று கடந்து வந்த இந்த ஐந்தாம் ஆண்டில் திடீரென்று ஒரு நாள் இந்தத் தளம் என் கண்ணில் பட்டது. 

ஏற்கனவே இந்தத் தளத்தைப் பார்த்து இருந்த போதிலும் இவர் உருவாக்கிய இந்த மென்பொருள் தான் அதிக அதிர்ச்சியைத் தந்தது.

காரணம் இதில் என் பழைய பதிவுகளைத் தூக்கிப் போட்டுச் சோதித்த போது தமிழ் மொழியைப் பற்றி நீ பேசத் தகுதியான ஆளா? என்று கேட்பது போல இருந்தது. 

நம் நாட்டில் உள்ள சாதிப்பிரிவினைகளை எதிர்காலத்தில் பொருளாதரக் காரணிகள் மாற்றி விடும் என்று உறுதியாக நம்புகின்றேன்.

சாதி ரீதியான பாகுபாடுகளைப் போலப் பணக்காரன், நடுத்தரவர்க்கம், ஏழை, பரமஏழை என்ற நான்கு வட்டத்திற்குள் நின்றே தன் விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்ள முடியும். இது என் தனிப்பட்ட கருத்து. 

ஆனால் நாளுக்கு நாள் மாறிக் கொண்டே வரும் ஒவ்வொரு துறை சார்ந்த தொழில் நுட்பமும் என்ன மாதிரியான எதிர்விளைவுகளை உருவாக்கும் என்பதை எவராலும் இறுதியிட்டு கூற முடியாத நிலையில் தான் இருக்கின்றோம். இந்த மாத அறிமுகமென்பது அடுத்த மாதம் புதிதாக வந்த ஒரு தொழில் நுட்பம் அதைக் காணாமல் போக்கி விடுகின்றது. 

சமீபத்தில் நான் ரசித்த பிரிவினைகளை உடைத்த தொழில்நுட்ப காணொளி காட்சியும் இதைத்தான் எனக்கு உணர்த்தியது. 

தமிழ் எழுத்துருவை கணினி மொழியில் உருவாக்கியவர்கள், உருவாக்க காரணமாக இருந்தவர்கள், அதனைப் பல வகையில் மேம்படுத்தியவர்கள், மேற்கொண்டு வளர்த்தவர்கள், பயன்பாட்டுக்குக் கொண்டு வந்தவர்கள், எளிமைப்படுத்தியவர்களைப் பற்றிய தேடல் கடந்த ஒரு மாதமாக மனதில் ஓட நான் பார்த்த படித்த தளங்களைப் பற்றித் தனியாக எழுதுகின்றேன். 

ஆனால் இவர் உருவாக்கிய நாவி என்ற இந்த மென்பொருள் என்னைப் போன்ற அவசர மனிதர்களுக்கும்,தொடர்ந்து பதிவு எழுதிக் கொண்டு இருப்பவர்களுக்கும் முக்கியமாக உதவக்கூடியது. மொழிக் குழப்பம், எழுத்துப்பிழைகளை இனம் கண்டு பிடிக்கத் தெரியாமல் இருப்பவர்கள் என்று ஒவ்வொருவருக்கும் மிக மிகப் பயன் உள்ளதாக இருக்கும்.  நான் எழுதிய கடந்த நாலைந்து பதிவுகளை எழுதி முடித்த பிறகு இந்த நாவியில் போட்டு பரிசோதித்த பிறகே வலையில் ஏற்றுகின்றேன்.

இந்த மென்பொருள் வளரும் நிலையில் இருந்தாலும் கூட இப்போது அளிக்கும் சேவை என்பதே பல வகைகளில் பலன் உள்ளதாக உள்ளது.

மற்றொரு ஆச்சரியம், 

இன்று தமிழ் எழுத்துரு குறித்துத் தீவிரமாக இணையத் தளத்தில் (மட்டும்) விவாதித்துக் கொண்டிருக்கின்றோம். தொல்காப்பியம் என்ற இலக்கண நூலை அடிப்படையாகக் கொண்டு இந்தத் தமிழ்மொழியின் காலத்தை 2500 வருடங்கள் என்று உத்தேசமாகக் கணக்கிடுகின்றார்கள். 

ஆனால் இன்று வரையிலும் இந்த மொழியின் தோற்றுவாய் குறித்து ஆதாரப்பூர்வமான தகவல்கள் நம்மிடம் இல்லை. காரணம் எந்த ஆவணமும் நம்மிடமும் இல்லை. 

தமிழ்த்தாத்தா என்றழைக்கப்படும் உ.வே.சா அவர்களின் முயற்சியில் தொடங்கி இன்று வரையிலும் தமிழ் மொழிக்காகத் தனிப்பட்ட நபர்கள் தங்களின் சொந்த விருப்பத்தின் அல்லது ஆர்வத்தின் அடிப்படையில் மட்டுமே இந்த மொழி வளர காரணமாக இருந்துருக்கின்றார்கள். 

இதே போல நீச்சல்காரன் தனக்குப் பெயர் வைத்துக் கொண்டுள்ள இந்த நண்பரும் தமிழ் மொழிக்காகத் தொழில் நுட்ப ரீதியாகப் பல அற்புதமான வேலைகளைத் தொடர்ந்து செய்து கொண்டிருக்கின்றார். 

ஒவ்வொரு காலகட்டத்திலும் வியாபாரிகள், பிழைப்புவாதிகள் என இரண்டு கூட்டத்திடமும் சிக்கியிருந்த இந்த மொழியை எவரோ ஒருவர் தன்னலமற்றுத் தங்கள் வாழ்க்கையை இழந்து அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்தியுள்ளனர். கடந்த 30 ஆண்டுகளாகக் கணினியில் தமிழ் மொழி வளர்ந்த வரலாற்றிலும் நான் படித்த கட்டுரைகள் வாயிலாக இதைத் தான் கவனித்தேன். 

ஆனால் தொழில் நுட்பம் தெரிந்தவர்கள் எவரும் தங்கள் வாழ்க்கையை இழக்காமல் தாங்கள் பணிபுரியும் சூழலுக்கிடையே இதிலும் ஆர்வம் செலுத்தி தமிழ் மொழியைக் கணினி மொழியாக மாற்றியுள்ளனர்.

அதிகப்படியான நண்பர்கள் கணினித்துறைக்கு அப்பாற்பட்டு வேறு துறையில் இருந்து கொண்டு தங்கள் சுய ஆர்வத்தின் மூலமே இந்த தொழில் நுட்ப அறிவை வளர்த்துக் கொண்டுள்ளனர் என்பதை இங்கே குறிப்பிட்டு ஆக வேண்டும்.

ஒவ்வொரு சமயத்திலும் உருவான போட்டித் சூழலில் அவரவருக்குத் தெரிந்த வகையில் பல விதமான எழுத்துருக்களைக் கண்டுபிடிக்கத் தொடங்கி இன்று "வலிமையானது வெல்லும்" என்கிற ரீதியில் இன்று எவர் வேண்டுமானாலும் தனக்கு வசதியான மென்பொருள் மூலம் தமிழ்மொழியில் கணினி வழியே, கைபேசி மூலம் உலகத்தில் எந்த மூலையில் இருப்பவர்களிடமும் உரையாட முடியும் என்கிற நிலைக்கு வளர்ந்துள்ளோம். 

இந்தச் சமயத்தில் மற்றொரு விசயத்தை நினைத்துப் பார்க்கத் தோன்றுகின்றது. 

நாங்கள் மொழி 'இனக் காவலர்கள்' என்று சொல்லியவர்களும், 'தமிழே என் மூச்சு'என்றவர்களும் எவருமே இது போன்ற பணிகளில் தங்கள் சுண்டுவிரலைக்கூட நகர்த்தவில்லை.

அரசு சார்ந்து செயல்பட்ட மொழித்துறை அமைப்புகளும், இதற்கென உருவாக்கப்பட்ட குழுவினர்களின் செயல்பாடுகளும் ஒப்பீட்டளவில் மிகவும் குறைவான செயல்பாடுகளையே சாதித்துக் காட்டியுள்ளனர்.  இன்று வரையிலும் முழுமையாக கலைச்சொல் அகராதியை உருவாக்க முடியாமல் இருப்பதே இதற்கு சான்று. அருகே உள்ள கர்நாடகா நம்மை விட பல மடங்கு முன்னேற்றம் கண்டுள்ளது.

இது போன்ற அமைப்புகள் தனிப்பட்ட நபர்களின் புகழைப் பரப்பவும், துதிபாடிகளை வளர்க்கவும், ஒதுக்கிய பணத்தை சுருட்டவும் மட்டுமே உதவியது.

இன்று வரையிலும் அப்படித்தான் உள்ளது.

சுய ஆர்வமுள்ள தொழில் நுட்ப வாதிகளால் மட்டுமே இன்று "தமிழ் காலம் கடந்தும் வெல்லும்" என்கிற நிலைக்கு வளர்ந்துள்ளது. 

தமிழ் எழுத்துரு உருவாக்கம் என்பது தேவைப்படும் அளவிற்கு வளர்ந்துள்ளது. தமிழிலில் எழுத வேண்டும் என்று நினைப்பவர்களுக்குக் கூட அவர்கள் தேர்ந்தெடுக்க நிறைய (மென்பொருட்கள்) வாய்ப்புகள் உள்ளது. 

மீதி இருப்பது இரண்டே இரண்டு வேலைகள் மட்டுமே. 

ஒன்று மொழி மாற்றி. மற்றொன்று ஓசிஆர் மென்பொருள். 

தமிழ் மொழியிலிருந்து ஆங்கிலத்திற்கும், ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மாற்றுவதும் உண்டான தொழில் நுட்பத்தில் நாம் தொடக்க நிலையில் தான் இருக்கின்றோம் என்றே நினைக்கின்றேன். கூகுள் வழங்கும் சேவை என்பது ஜுனுன் தமிழ் என்றே அழைக்கப்படுகின்றது. 

ஒவ்வொருவரின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவக்கூடியதாக இருக்கும் சர்வதேச ஆங்கில மொழிக்கு உண்டான மரியாதையைப் போல ஒரு மாநில மொழி அடைவது கடினம் என்றாலும் உலகமெங்கும் பரவியிருக்கக்கூடிய ஆங்கிலம் தெரியாத தமிழர்களுக்கு இந்தச் சரியான மொழி மாற்றி மென்பொருள் வரும்பட்சத்தில் ஆங்கிலத்திற்கும் தமிழுக்கும் உள்ள எல்லைக்கோடு அழிக்கப்படும் என்றே நம்புகின்றேன். 

இன்னும் கடக்க வேண்டிய தூரம் நிறைய உள்ளது. 

ஓசிஆர் என்பதன் வளர்ச்சி தமிழ் மொழியில் சோதனை முயற்சியில் தான் உள்ளது. மேம்பட்டு வளரும் போது அத்தனை ஆவணங்களும் அழியாமல் பாதுகாக்கப்படமுடியும். 

கணினி சார்ந்த துறையில் வல்லுநராக இருப்பவர்கள் இரண்டு ரகமாக உள்ளனர். 

ஒன்று பணிபுரியும் நிறுவனத்திற்கு விசுவாசமாக இருந்து தங்கள் வாழ்க்கையை முடித்துக் கொள்பவர்கள். தமிழர்களாக இருந்தாலும் பணிபுரியும் சூழல் தந்த பொருளாதார வளர்ச்சியின் காரணமாகத் தங்களைக் கணவானாக மாற்றிக் கொண்டவர்கள். 

ஆனால் தமிழ் மொழியின் சூட்சமம் குறித்து அறியாமல், தான் கற்று வைத்துள்ள அறிவியல் படிப்புகளோடு இயல்பாக வளர்த்துக் கொண்ட தொழில் நுட்ப அறிவின் காரணமாகப் பலரும் இந்த மொழியின் வளர்ச்சியில் பிரமிக்கத் தக்க பங்களிப்பை செய்துள்ளனர். 

அனுபவ படிப்பு மூலம் கற்றுக் கொண்ட கணினி சார்ந்த அறிவையும் வைத்து இன்று தன்னை மொழி ஆர்வலாக வெளிக்காட்டிக் கொள்ளாமலேயே உழைத்துக் கொண்டிருக்கும் நண்பர் நீச்சல்காரனனுக்கு என் வாழ்த்துகள். 

நீச்சல்காரன் தமிழ்மொழி குறித்த தொழில் நுட்பம் சார்ந்த கட்டுரைகள், அவரின் ஈடுபாடு, அவர் கற்ற தொழில்நுட்பத்தை இந்த மொழிக்காகச் செயல்படுத்திக் கொண்டிருக்கும் அவரின் உழைப்புக்கு உங்கள் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதோடு இந்த மென்பொருளை பரவலாக்கம் செய்ய உதவலாமே? தொடர்புடைய பதிவுகள்

இதற்குத் தானே ஆசைப்பட்டாய்?

Sunday, November 17, 2013

நாம் (மட்டுமே) தான் காரணம்

புதிய வீடு ஒன்று தேவை என்ற போது நண்பர் மூலமாகத்தான் அவர் அறிமுகமாயிருந்தார். அவரைப் பற்றி வேறு எதுவுமே தெரியாது. கைபேசியில் தொடர்பு கொண்ட போது "வீட்டுக்கே வந்து விடுங்க" என்றார். 

அவர் சொன்னபடி ஞாயிற்றுக் கிழமையன்று காலையில் வீட்டுக்குச் சென்ற போது எனக்கு அங்கே ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. 

அந்த வீடு சமீபத்தில் தான் கட்டப்பட்டிருந்தது. புதிய வீடு. வெளியே அமர்ந்திருந்த போது ஜன்னல் வழியே உள்ளே உள்ள அறையின் அமைப்பு முழுமையாகத் தெரிந்தது. நூலகம் போன்ற ஒரு அமைப்பு தெரிய ஆர்வம் மேலிட எழுந்து சென்று உள்ளே எட்டிப்பார்க்க ஆயிரக்கணக்கணக்கான புத்தகங்கள் நேர்த்தியாக வைக்கப்பட்டிருந்தது. 

மனதிற்குள் குழப்பம் அலையடித்தது. இவர் தொழிலுக்கும் இங்குள்ள சூழ்நிலைக்கும் சம்மந்தமில்லாமல் ஏன் இத்தனை புத்தகங்கள்? என்பதை யோசித்துக் கொண்டே இருந்த போது பக்தி பழமாகப் பூஜையெல்லாம் முடித்து விட்டு வெளியே வந்து எங்களின் தேவையைக் கேட்கத் தொடங்கினார். 

நான் போன வேலையை மறந்து விட்டு எடுத்தவுடன் உள்ளே நூலகம் எதுவும் வைத்திருக்கீங்களா?என்று கேட்டு விட்டு அவர் அனுமதியை எதிர்பார்க்காமலேயே நான் பார்க்கலாமா? என்று கேட்டேன். 

அவர் சற்று நேரம் யோசித்து விட்டு "அந்தப் புத்தகங்கள் உங்களுக்குப் புரியாது" என்றார். காரணம் கேட்ட போது அங்குள்ள அத்தனை புத்தகங்களும் சித்த மருத்துவம் சார்ந்த புத்தகங்கள். அடுத்த அரை மணி நேரத்தில் அவரைப் பற்றிய முழுமையான விபரங்களைத் தெரிந்து கொள்ள முடிந்தது. 

இவரின் தாத்தா, அப்பா என்று தலைமுறையே சித்த மருத்துவத் துறையில் இருந்தவர்கள். இவரும் ஆர்வத்துடன் இதற்கான படிப்பு படித்து, மேற்கொண்டு ஆர்வத்தின் காரணமாகப் பல ஆயிரக்கணக்கான புத்தகங்கள் வாங்கித் தன்னை ஒரு தகுதியான சித்த மருத்துவராக மாற்றிக் கொண்டு ஐந்து வருடங்களுக்கு முன் கிளினிக் ஒன்றை தொடங்கியுள்ளார். 

தொடக்கத்தில் இருந்த மக்களின் ஆதரவு படிப்படியாகக் குறையத் தொடங்கியது. இவரின் தனிப்பட்ட திறமைகள் சில பணக்காரர்களின் தொடர்பை உருவாக்கிக் கொடுத்தது. ஆனால் அந்தப் பழக்கம் காசு சாம்பாரிக்க உதவவில்லை. இலவச ஆலோசனைகள் என்கிற ரீதியில் சென்று விடத் தடுமாற ஆரம்பித்துள்ளார். 

இதற்கு மேலாக இவர் மூலம் பலன் அடைந்தவர்களே பணம் என்கிற போது கவனமாகத் தவிர்த்து விடுவதும் வாடிக்கையாக இருக்கச் சித்த மருத்துவத்தை மட்டுமே படித்து வந்தவருக்கு அப்போது தான் மக்களின் மனங்களைப் படிக்கத் தொடங்கினார். 

தனக்கு எது வசதியாக இருக்கும் என்பதைக் கருத்தில் கொண்டு வீடு, அலுவலகம் பிடித்துக் கொடுக்கும் புரோக்கர் தொழிலில் இறங்கி விட்டார். எவரிடமும் தான் கற்று வைத்துள்ள சித்த மருத்துவம் குறித்து உரையாடுவது கூட இல்லை. காரணம் அவர் பெற்ற கசப்பான அனுபவங்கள். 

இவரின் தொடர்பு கிடைத்து, என் தனிப்பட்ட ஆர்வத்தின் காரணமாக இந்தத் துறை குறித்த பல விபரங்களைக் கேட்டுத் தெரிந்து கொள்வதுண்டு. 

பல சமயம் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு உதவியுள்ளார். வீடு, அலுவலகத்திற்குக் கட்டிடங்கள் தேவை என்று எவர் என்னிடம் கேட்டு வந்தாலும் இன்று வரையிலும் இவரிடம் அனுப்பி வைப்பது வாடிக்கை. நல்ல தொடர்பில் இருந்தாலும், இவர் சொன்ன எதையும் முழுமையாக எதையும் நான் பின்பற்றியதே இல்லை. காரணம் சில உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும். குறிப்பாகக் கட்டுப்பாடுகள் என்பதைக் கவனத்தில் வைத்திருக்க வேண்டும். 48 நாட்கள் என்றால் முழுமையாக விடாமல் கடைபிடித்து மருந்துகளை உண்ண வேண்டும். 

லேகியம், மற்றும் சூரணம் வகையான பொடிகளைக் குழந்தைகளை உண்ண வைப்பதற்குள் நமக்கு நாக்கு தள்ளி விடும். பலன் கிடைப்பதற்குப் பொறுமையாகக் காத்திருக்க வேண்டும். 

அசட்டை பாதி. அவநம்பிக்கை பாதியென மனம் ஊசலாட்டத்தில் தவித்தாலும் எப்படியாயினும் இந்த ஆங்கில மருத்துவத்திலிருந்து விடுபட வேண்டும் என்ற எண்ணம் மட்டும் மனதிற்குள் இருந்து கொண்டேயிருந்தது. 

இந்தச் சமயத்தில் மற்றொரு சம்பவம் என் நினைவில் வருகின்றது. 

வீட்டில் ஒருவருக்குத் தோல் சம்மந்தப்பட்ட பிரச்சனை உருவானது. நாள்பட நாள்பட அது படையாக மாறியது. மேலே உள்ள நண்பருடன் இது குறித்துக் கேட்க வந்து பார்த்து விட்டு வேலிப்பருத்தியை கொண்டு வந்து தினந்தோறும் கசக்கி அதைச் சாறாக்கி அந்த இடத்தில் தடவி வாருங்கள் என்றார். 

தேடிக்கண்டு பிடிப்பதில் உண்டான சவாலின் காரணமாக அதனைத் தொடர்ச்சியாகச் செய்து வர முடியவில்லை. ஆனால் அந்தப் படையின் அளவு மட்டும் பெரிதாகிக் கொண்டேயிருக்க மனதில் பயம் வர திருப்பூருக்குள் இருக்கும் தோல் மருத்துவர் குறித்து ஆராய்ச்சி தொடங்கியது. கடைசியாக இவர் தான் சிறப்பான மருத்துவர் என்று நண்பர்களால் அடையாளம் காட்டப்பட்டவரிடம் சென்ற போது சில மாதங்கள் அவர் சொன்ன மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொண்ட போதிலும் சரியானபாடில்லை. ஒவ்வொரு முறையும் ஐந்நுறு ரூபாய்க்குக் குறையாமல் தீட்டிக் கொண்டிருந்தார். 

அன்றொரு நாள் கோபத்தில் இதைச் சுட்டிக்காட்டி சொன்ன போது "ரத்த பரிசோதனை செய்து விடுங்க" என்றார். 

அதையும் எடுத்துக் கொண்டு போய்க் கொடுத்த போது "இது பிறவியிலேயே வந்த கோளாறு. ஹீமோகுளோபீன் குறைவாக உள்ளது. நிரந்தரமாகக் குணமாகக்க முடியாது. இந்த மருந்துகளைத் தொடர்ந்து சாப்பிட்டு வாருங்கள். மாதம் ஒரு முறை வந்து காட்டி விட்டு போங்க" என்றார். 

இந்தத் தகவல் கிடைக்க ஏழு மாதங்கள் அவர் மருத்துவமனை சென்று காத்திருந்த நேரங்கள் என்று ஒவ்வொன்றும் மனதில் வந்து போனது. 

மீண்டும் ஒரு முறை முயற்சி செய்து பார்க்கலாமோ? என்று யோசித்துக் கொண்டு மற்றொரு நண்பரை அழைத்துக் குழந்தையின் தோல் சார்ந்த பிரச்சனையைச் சொன்ன போது அவர் ஒருவரின் கைபேசி எண் கொடுத்து இவரைப் போய்ப் பாருங்க. இரண்டு மாதத்தில் நிரந்தரமாகக் குணமாகி விடும் என்றார். 

ஆர்வம் பாதி அவநம்பிக்கை பாதி என அவரைச் சந்தித்த போது அங்கே ஒரு ஆச்சரியம் காத்திருந்தது. 

சித்த மருத்துவத்துறையில் மாவட்ட அளவில் உயர் அதிகாரியாக இருந்தவர். அரசாங்கம், அரசு மருத்துவமனைகளில் தேவைப்படும் மருத்துவர்களைப் போடாமல் இவரைப் படுத்தி எடுக்க விருப்ப ஓய்வு பெற்று விட்டு தனது சொந்த ஊரான திருப்பூரிலேயே குடும்பத்துடன் வாழ்ந்து வருகின்றார். அடிப்படையில் வசதியான குடும்பம் என்பதால் பெயருக்கென்று கிளினிக் ஒன்று வைத்துக் கொண்டு நண்பர்கள் மூலம் வருகின்றவர்களுக்கு மட்டும் அவர் வீட்டிலேயே தயாரிக்கும் மருந்துகள் மூலமும், பல இடங்களிலிருந்து வரவழைக்கும் மருந்துகள் மூலம் வைத்தியம் பார்த்துக் கொண்டிருக்கின்றார். 

மகளை அழைத்துச் கொண்டு போய்க் காட்டியதும் முழுமையாகப் பரிசோதனை செய்து விட்டு "ஒரு வாரம் கழித்து வாருங்க. ஒரு பொடி தருகின்றேன். தேனில் கலந்து இரண்டு மாதங்கள் சாப்பிட வைங்க. இந்தப் பிரச்சனை முழுமையாகப் போய் விடும்" என்றார். 

எனக்கு நம்பிக்கை வரவில்லை என்றாலும் பெண் குழந்தையின் தோல் சார்ந்த பிரச்சனை என்பதால் அவர் என்ன சொன்னாலும் கேட்கும் மனோநிலையில் இருந்தேன். அவர் சிறிய டப்பாவில் கொடுத்த பொடிக்கு நானூறு ரூபாய் வாங்கிய போது எரிச்சலாகவே இருந்தது. 

எங்கள் விடத் தோல் நோயால் பாதிக்கப்பட்டவர் ஆர்வமாக இருந்த காரணத்தால் முழுமையாக இரண்டு மாதமும் அவர் சொன்னபடியே செய்து முடித்த போது அந்த இடத்தில் சிறிய கரும்புள்ளி (மச்சம்) என்பது போல மாறி மற்ற அனைத்தும் அப்படியே மறைந்து போய் விட்டது. தோல் நோயால் உருவான அரிப்பு, அது சார்ந்த பிரச்சனைகள், கரும்படலம் என்று அனைத்தும் மறைந்து போன பின்பு தான் இந்தச் சித்த மருத்துவத்தின் மேல் முழுமையாக நம்பிக்கை வந்தது. 

எனக்குச் சித்த மருத்துவத்தில் அரைகுறை நம்பிக்கை. ஆனால் வீட்டில் இருப்பவருக்கோ நம்பிக்கை என்பது துளி கூட இல்லை. 

ஆனால் இந்தத் தோல் வியாதிக்கு ஒரு சிறிய டப்பா பொடி கொடுத்தத் தாக்கத்தினால் என்னை விட இவரே ஆர்வமாக இருப்பதால் எனக்கு முக்கால்வாசி பிரச்சனைகள் தீர்ந்து விட்டது. 

இந்தச் சமயத்தில் தேன் நெல்லி, இஞ்சித் தேன், சத்து மாவு என்று இயற்கை சார்ந்த விசயத்தில் குடும்பத்தின் ஆர்வம் முழுமையாக மாற வெற்றிகரமாக இரண்டாம் ஆண்டில் ஆங்கில மருத்துவம் மிக அவசியம் தேவை ஏற்பாட்டாலொழிய அது அடிப்படை ஆரோக்கிய வாழ்க்கைக்குத் தேவையில்லை என்கிற நிலைமைக்கு வந்துள்ளோம்.

++++++++++++++++++++++++++++++

(மன்னிக்கவும், 

தனிப்பதிவாக போட வேண்டிய விசயங்களை இத்துடன் தந்து விடுகின்றேன். மேற்கொண்டு பதிவின் சாராம்சத்தை நீட்டிக்க விரும்பவில்லை. நேரம் இருக்கும் போது வந்து படித்துக் கொள்ளவும்)

கடைசியாகத் தற்போதைய சூழ்நிலையைப் பற்றிப் பேச வேண்டும். 

கல்வித்துறை, காவல் துறை, நீதித்துறை, மருத்துவத்துறை இந்த நான்கு துறைகளையும் சமூகத்தில் சேவைத்துறை சார்ந்தது என்கிறார்கள். 

குறிப்பாக மருத்துவத் துறை என்பது மிக முக்கியமானது. 

ங்கில மருத்துவர்கள் கொள்ளையடிக்கின்றார்கள் என்று பொத்தாம் பொதுவாகச் சுட்டிக்காட்டுகின்றோம். ஆனால் மக்களின் மனோநிலை தான் அவர்களை அப்படி மாற்றுகின்றது என்பதில் என்னைப் பொறுத்தவரையிலும் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. 

த்துக்குப் பத்து அறையில் இருந்து கொண்டு மருத்துவம் பார்க்கும் உண்மையான மருத்துவருக்கு எந்த மரியாதையும் இல்லை. மக்கள் எதிர்பார்க்கும் திடம் மணம் குணம் போன்ற ஆடம்பர அட்டகாசங்கள் அவசியம் தேவைப்படுவதால் ஒவ்வொருவரும் கடன் வாங்கிக் கட்டிடங்கள் கட்டுவதும், மருத்துவ உபகரணங்களை வாங்கிப் போடுவதும் வாடிக்கையாக உள்ளது. கடன்களைக் கட்ட மக்களைக் கடன்காரர்களாக மாற்றுவது தான் நடக்கும். அது தான் நடந்து கொண்டிருக்கின்றது. 

யல்பாகச் சேவை மனப்பான்மையில் பணியாற்றும் நூற்றில் பத்து மருத்துவர்களைக் கூட நம் மக்கள் நம்பத் தயாராக இல்லை. தோற்றத்தை வைத்து எடை போடுவது தான் நம்மவர்களின் வாடிக்கை. மேலும் நம் மக்கள் அவர்களின் எதிர்பார்ப்புகளை ஒரேடியாகத் திணிக்க அவர்களும் பாதை மாறத் தொடங்கி விடுகின்றார்கள். 

ஆசை கொண்ட மனம் மாறுமா? 

மாற்றுச் சிந்தனைகளைப் பற்றி யோசிக்க மனமில்லாமல் மக்களின் சுய சிந்தனைகள் மழுங்கி எதற்கெடுத்தாலும் மாத்திரை, உடனே மருத்துவர், எப்போதும் பயம் என்கிற சூழ்நிலையில் வாழப் பழகி விட்டதால் பணம் தின்னிக் கழுகுகளாக மருத்துவர்கள் மாறுவது ஒன்றும் ஆச்சரியமல்ல. 

ன்றைய மருத்துவ உலகம் என்பது கார்ப்பரேட் கலாச்சாரம் என்கிற பாதைக்கு மாறி பல வருடங்களாகி விட்டது. இதில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய ஒரு விடயம் ஷிப்ட் முறையில் மருத்துவர்கள் பணியாற்றுவது. ஒரே நபர் பல இடங்களில் ஒரு மணி நேரம் தொடங்கி மூன்று மணி நேரம் வரையிலும் பணியாற்றுவதால் நோயாளிகளின் ஆரோக்கியம் பல மருத்துவர்களின் காலில் சிக்கிய பந்தாக மாறியுள்ளது. 

நாமும் குளிர்சாதன வசதியுடைய மருத்துவமனைகளையே தேடிச் செல்லும் போது அவர்கள் குனிய வைத்து தான் குத்துவார்கள்.  குத்துதே, குடையுதே என்ற கத்த முடியுமா?

ன்று வரையிலும் சித்த மருத்துவம் என்றாலே பாலியல் சார்ந்த பிரச்சனைகளுக்கு அணுகுபவர்கள் தான் அதிகம். _என் ஆண் குறி அதிக நேரம் விறைத்து நிற்க என்ன செய்ய வேண்டும்?_ என்பது போன்ற கேள்விகளைத் தான் படித்த புத்திசாலிகள் கூடச் சில சித்த மருத்துவப் பதிவு எழுதிக் கொண்டிருப்பவர்களிடம் கேட்பதாக ஒருவர் எழுதியிருந்தார். 

இது சார்ந்த கேள்விகளும் எதிர்பார்ப்புகளும் பல பதிவுகளில் பின்னூட்டமாக வருகின்றது. நம்மவர்களின் அடிப்படை பலவீனமே இங்கிருந்து தான் தொடங்குகின்றது. இதைப் பயன்படுத்தி முடிந்தவரைக்கும் லாபம் பார்க்க விரும்புவர்களால் சித்த மருத்துவத்தின் மீது இருந்த நம்பிக்கையும் போய் விட்டது. 

சித்த மருத்துவம் என்பது அறிவு சார்ந்த பொக்கிஷம். ஆனால் குரு சிஷ்யன் என்ற நோக்கில் பாதி விசயங்கள் அடுத்தத் தலைமுறைக்கு வராமல் போய்விட்டது. மீதி எழுதப்பட்டு இருந்த ஓலைச்சுவடிக்களைக் கரையான் தின்று விட்டது. 

ஞ்சாவூரில் உள்ள சரஸ்வதி மஹால் போன்ற இடங்களில் உள்ள சுவடிகளைப் பாதுகாக்க மனமில்லாத அரசாங்கம் ஒரு பக்கம். மிச்சம் மீதி வைத்திருப்பவர்கள் அதை மற்றவர்களுக்குப் புரிய வைக்க மனமில்லாமல் இருப்பது மறு பக்கம். 

து குறித்துச் சிறிதளவே தெரிந்தவர்கள் இன்று வரையிலும் கிடைத்த விசயங்களை வைத்து எப்படிக் காசாக்கலாம்?என்று தான் யோசிக்கின்றார்களே தவிர மேலைநாட்டுக் கலாச்சாரம் போல அதைப் பொதுவில் வைத்து அதன் நம்பகத்தன்மையை உணர வைத்து உலகறியச் செய்வது என்ற பழக்கம் நம்முடைய தமிழர்கள் பண்பாட்டில் எந்தக் காலத்திலும் இல்லை என்பதை இங்கே குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.

சித்த மருத்துவம், ஆங்கில மருத்துவம் இடையே உள்ள வேறுபாடுகள்

ங்கில மருத்துவம் நோய்களை உடம்பு என்கிற ஒரே வரையறைக்குள் கொண்டு வந்து நிறுத்தி விடுகின்றது.

சித்த மருத்துவம் நோய்களை உடல், உயிர், ஆன்மா என்று பிரித்துப் பார்க்கின்றது.

சித்த மருத்துவத்தின் அடிப்படைத்தன்மை ஆன்மீகம்.  நம்பிக்கை இருந்தால் மட்டுமே ஆன்மா அமைதி பெறும்.  ஆங்கில மருத்துவத்தில் ஆன்மா என்றால் கிலோ என்ன விலை?

மேற்கித்திய மருத்துவமுறைகளில் சோதனை முக்கியம். இன்று காய்ச்சலுக்கு ஒரு மாத்திரை என்றால் அதை விட நாளை ஒன்று வந்தால் இது மறக்கப்படும்.  முக்கியமாக நிரூபிக்கப்பட வேண்டும்.

மது மருத்துவத்தில் ஒரே ஒரு மூலிகை என்றாலும் அதை எந்த சமயத்தில் எதனுடன் சேர்த்து பயன்படுத்தப்பட வேண்டும் என்பதில் தான் கவனம் செலுத்தும்.

ங்கில மருத்துவத்தில்  மனித உடம்பு என்பது சோதனைச் சாலை.

சித்தர்களின் பார்வையில் உடம்பு என்பது இறந்து போகும் வரையிலும் ஆரோக்கியத்துடன் பாதுகாக்கப்பட வேண்டிய பொக்கிஷம்.

சித்த மருத்துவமென்பது உணவே மருந்து. அதற்கு நேர்மாறானது ஆங்கில மருத்துவம். இங்கே கண் கெட்ட பிறகே சூர்ய நமஸ்காரம்.

ம்புலன்களை அடக்க வேண்டிய அவசியத்தை போதிப்பது சித்த மருத்துவம். ஆனால் புலனாவது புடலங்காயவது என்பது ஆங்கில மருத்துவம். எல்லாவற்றுக்கும் மாத்திரை ஒன்றே போதும்.

சித்த மருத்துவத்தில் பட்டினி கிடப்பது பல முக்கியமான நோய்களுக்கு உதவக்கூடியதாக இருக்கும். ஆனால் இங்கோ அத்தனைக்கும் ஆசைப்படு. கடைசியில் இருக்கவே இருக்கு அறுவை சிசிக்சை.

நடைமுறைச் சிக்கல்கள்

2,50,000 மூலிகை சமாச்சாரங்கள் அடங்கிய இந்தச் சித்த மருத்துவத்தில் இன்று எத்தனை மூலிகைகள் இருக்கும் என்று நம்புகின்றீர்கள். 

னாலும் தற்போதைய நவீன உலக மாற்றத்திற்கு ஏற்ப பலரும் டானிக் போன்ற வகைகளில் இந்த மருந்துகளைத் தயாரிப்பதும், விபரம் புரிந்து வைத்திருப்பவர்களும், கடைசியாக வேறு வழியே இல்லை என்று இந்தச் சித்த மருத்துவத்திடம் அடைக்கலம் ஆனவர்களையும் பல இடங்களில் பார்க்க முடிகின்றது. 

நாட்டு மருந்துக் கடைகளில் இருக்கும் கூட்டத்தைப் பார்க்கும் போது உணர முடிகின்றது. இருமலுக்கு, சளிக்கு துளசி கண் கண்ட நிவாரணி.  இதைக்கூட டானிக் முறையில் கொண்டு வந்துள்ளார்கள்.  ஒரு வருடத்தில் தீராத பிரச்சனை நாற்பது ரூபாயில் தீர்த்ததோடு நிரந்தர நிவாரணியாகவும் உள்ளது.

சித்தர்களால் சொல்லப்பட்ட விசயங்களும், சராசரி வாசிப்பு உள்ளவர்களுக்குப் புரிய வைக்க முடியாத சூட்சுமமான பாடலாகவே ஒவ்வொருவரும் எழுதியிருப்பதால் இது பலருக்கும் செல்லாமல் இன்று இதன் பலன் தெரியாமலேயே போய்விட்டது. 

மிழர்களிடத்தில் எதையும் ஆதரிக்கும் தன்மை குறைவு. ஆதரிப்பவர்களையும் அதட்டி உட்கார வைத்து விடும் தன்மை அதிகம். 

சுய முனைப்பு அறவே இருக்காது. தங்கள் சிந்தனைகளை சுருக்கியே வாழப் பழகிக் கொண்டதுமான தமிழர்களின் கலாச்சாரமும் ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால் உருவாக்கியவர்களை விட அதைத் தானே செய்து சாதித்ததாகத் தம்பட்டம் அடித்துக் கொள்வதில் நம்மவர்களுக்கு மிஞ்சியவர்கள் எவருமே இல்லை. 

இதற்கு மேல் வேறென்ன சொல்ல? 

உங்கள் ஆரோக்கியம். உங்கள் சிந்தனைகளிலிருந்து தொடங்கட்டும். 

(எழுதக் காரணமாக இருந்த ராஜா, அமுதவன், தமிழ் இளங்கோ அவர்களுக்கு நன்றி)


தொடர்புடைய பதிவுகள் Friday, November 15, 2013

கழுகுக்கூட்டங்கள்

நான் இருபது வயது வரைக்கும் மருத்துவமனைகளுக்குச் சென்றதே இல்லை. ஊரில் இருந்த ஒரே சிறிய அரசு ஆரம்பச் சுகாதார நிலையத்திலும் பெரும்பாலும் வயதானவர்களின் கூட்டம் தான் அதிகமாக இருக்கும். எப்போதும் போல அதே வெள்ளை மாத்திரை. ஊதா நிற களிம்பு. அங்குப் பணியிலிருந்தவர் தனியாகக் கிளினிக் வைத்திருந்தார். அவர் வரும் ராஜ்தூத் வண்டி இன்னமும் நினைவில் உள்ளது. 

ஆனால் சித்த மருத்துவம் படித்தவர்கள் அல்லது தெரிந்தவர்கள் வைத்திருந்த பத்துக்குப் பத்து அறையில் தான் கூட்டம் அதிகமாக இருக்கும். நான் மட்டுமல்ல. குடும்பத்தில் எவருக்கும் அடிக்கடி மருத்துவமனைகள் பக்கம் செல்லும் நிலையில் இருந்ததே இல்லை. காரணம் செமத்தியான சாப்பாடு. அதற்குச் சமமான உழைப்பு. வீட்டில் வேலையாட்கள் அதிகளவு இருந்த காரணத்தால் வீட்டு விறகடுப்பு திருவண்ணாமலை தீபம் போலவே எப்போதும் எறிந்து கொண்டேயிருக்கும். 

நொறுக்குத் தீனி வகையாறாக்களோ, கடைகளில் விற்கும் நொந்து போன பலகாரங்களையோ தின்றதில்லை என்பதை விட அதற்கு வாய்ப்பும் அமைந்ததும் இல்லை. 

ஊருக்குள் நிரம்பியிருந்த குளங்களிலும், வழிந்து நிற்கும் கண்மாயிலும், காட்டுச் சிவன் கோவில் பகுதியில் இருந்த தாமரைக்குளமும், ஒட்டியிருந்த பெரிய கிணற்றில் நீச்சலே தெரியாமல் குதித்து வெளியே வந்த போதிலும் எந்தச் சந்தர்ப்பத்திலும் ஜல்பு (ஜலதோஷம்) பிடித்ததே இல்லை. இராமநாதபுர மாவட்டத்தின் வெயிலின் தாக்கம் மட்டும் வருடந்தோறும் மறக்காமல் உடம்பில் வேணல்கட்டியை கொண்டு வந்து விடும். முகம் முழுக்கக் கட்டி பெரிதாக வரும். வீட்டில் எப்போதும் போல மஞ்சளை அறைத்து போட அடுத்தச் சில வாரங்களில் காணாமல் போய்விடும். 

திருப்பூர் வந்த போது மாறிய பழக்கவழக்கங்கள், நேரந் தவறிய உணவுகள், உணவக சாப்பாடுகள், இரவு நேர தொடர் உழைப்பு என்று மூன்று வருடங்கள் கொடுத்தப் பலனால் டைபாய்டு வருடந்தோறும் வந்த போது சற்று முழித்துக் கொண்டேன். திருமணம் ஆகும் வரையிலும் ஒல்லி உடம்பில் ஓராயிரம் நம்பிக்கைகள் இருந்த காரணத்தால் அதுவே பல சமயங்களில் எதிர்ப்பு சக்தியாக இருந்து உதவி கொண்டிருந்தது. 

குழந்தைகள் வந்த பிறகு தான் ஆங்கில மருத்துவர்களுக்கும் எனக்கும் ஒரு பெரிய போராட்டமே தொடங்கியது. 

முதன் முதலாக நண்பர் சொல்லி பல்லடம் சாலையில் இருந்த தமிழ்நாடு திரையரங்கம் இருந்த அந்தப் பெண் மருத்துவரை சந்தித்தோம். பத்துக்குப் பத்து அறையில் தான் இருந்தார். பரிசோதனைகள் முடிந்த பிறகு "உங்களுக்கு இரட்டைக்குழந்தை" என்று அவர் சொன்ன போது "தப்பா எடுத்துக்காதீங்க " என்று சொல்லி விட்டு அவர் அனுமதியை எதிர்பார்க்கமலேயே அவர் கையை வலிக்கும் வரையிலும் குலுக்கிய போது என்னை வினோதமாகப் பார்த்தார். 

அது தான் அவருடனான முதல் சந்திப்பு. 

இனிதாகத் தான் தொடங்கியது. ஆனால் சில மாதத்திற்குப் பின்பு எங்கள் இருவருக்கும் கைகலப்பு என்கிற ரீதிக்குக் கொண்டு வந்து நிறுத்தியது. 

முதல் மாதம் சென்ற போது பரிசோதனைகள் முடிந்து அவர் எழுதிக் கொடுத்த மருந்துச் சீட்டை அவர் கிளினிக்கிற்கு வெளியே இருந்த மருந்துக் கடையில் வாங்கிய போது நான் அவசரத்தில் எதையும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. 

அடுத்த மாதம் அவர் கிறுக்கலாக எழுதிய வார்த்தைகளைக் கவனித்துக் கொண்டே குழப்பத்துடன் மருந்துக் கடையில் கொடுத்த மாத்திரைகளை எழுதப்பட்ட சீட்டில் உள்ள முதல் எழுத்தை வைத்து உத்தேசமாக வைத்துக் கொண்டு "என்னங்க மாறியிருக்கே?" என்ற போது தான் அவர் எதார்த்தமாக "இரண்டுமே ஒரே கம்பெனி" என்றார். 

மனதில் குறித்து வைத்துக் கொண்டேன். 

ஒவ்வொரு மாதமும் மருந்தும் மாத்திரையும் மாறிக் கொண்டேயிருந்தது. செலவும் அதிகமாகிக் கொண்டேயிருந்தது. அடுத்த மாதம் அவர் புதிததாக எழுதிய போது தைரியமாகக் கேட்டேன். 

"கொஞ்சம் புரியும்படியா எழுதலாமே?" என்றேன். 

"உங்களுக்குப் புரிஞ்சு என்ன ஆகப்போகுது? நான் எழுதிக் கொடுப்பதை வாங்கிக் கொடுங்க. வேற எந்த ஆராய்ச்சியும் செய்யாதீங்க " என்றார். 

இடையிடையே அவர் கேட்ட ஸ்கேன் ரிப்போர்ட் முதல் அவர் தனியாக வேலை செய்த மற்றொரு தனியார் மருத்துவமனைக்கு வரச் சொல்லி அங்கே சோதிப்பது வரைக்கும் நடந்து கொண்டிருந்தது. 

அடுத்த மாதம் ஒரு முடிவோடுதான் சென்றேன். 

மருந்துச்சீட்டு எழுதியவுடன் "எங்க சொந்தக்காரர் கடை வைத்திருக்கின்றார். நான் அங்கே வாங்கிக் கொள்கின்றேன்" என்றவுடன் வந்ததே கோபம். 

பொறிந்து தள்ளிவிட்டார். 

அதுவரைக்கும் அவர் எழுதிய மாத்திரை மருந்துகளின் விலையை மற்றக் கடைகளில் ஒப்பிட்ட போது விலையோ மலைக்கும் மடுவுக்கும் இருந்தது. இது தவிர அந்தக் குறிப்பிட்ட மருந்துகள் அந்தக் கடையைத் தவிர வேறு எந்தக் கடைகளிலும் கிடைக்காது. 

நண்பர் வைத்திருந்த மருந்துக் கடையில் ஒவ்வொன்றையும் அவரிடம் விலாவாரியாகக் கேட்ட போது அவர் எழுதிக் கொடுத்த எதுவும் பெரிய அளவில் சொல்லிக் கொள்ளும் அளவில் இல்லை என்பதையும் மனதில் குறித்துக் கொண்டு அவரிடம் செல்வதை நிறுத்தி விட்டோம். 

அதன் பிறகே என்ன ஆனாலும் பராவாயில்லை என்று காய்கறிகள், பழங்கள் என்று எங்களுக்குத் தெரிந்த வகையில் மாத்திரை மருந்துக்களைத் தவிர்த்து துணிவோடு இறங்கினேன். 

இன்று அவர் நகர்புறத்தில் மூன்று மாடிகள் உள்ள சொந்த கட்டிடத்தில் இருந்து கொண்டு மருத்துவச் சேவை செய்து கொண்டிருக்கின்றார். 

குழந்தைகள் வந்த பிறகு அடுத்தப் போராட்டம் தொடங்கியது. 

கிடைத்த அனுபவங்களின் பலனாக இயற்கையான சத்து மாவுச் சமாச்சாரங்கள் என்று இரட்டையருக்கு கொடுத்து இந்த மருத்து மாத்திரைகளைத் தவிர்த்த போதிலும் எதிர்பாராமல் வரும் சளித் தொந்தரவில் இருந்து தப்பிக்க முடியவில்லை. ஒரு மருத்துவர் அறிமுகம் ஆனால் அவர் சரியானவர் சரியில்லை என்று உடனே முடிவுக்கு வந்து விடுவதில்லை. 

அவர் சொல்லும் அத்தனை விசயங்களையும் அப்படியே ஏற்றுக் கொண்டு செயல்பட்ட போதிலும் அடுத்த நான்கு மாதத்தில் அதே போலப் பிரச்சனை வரும் மாத்திரை மாறும். அதன் வீரியம் கூடும். செலவு அதிகமாகும். பல சமயம் இந்த வீர்யம் தாங்காமல் குழந்தைகளின் நாக்கு உதட்டிலும் புண் வரும் 

எந்த மருத்துவரும் பேச அனுமதிப்பதில்லை. அவர்கள் எழுதிக் கொடுக்கும் எந்த மருந்து மாத்திரையும் அவர்கள் குறிப்பிட்ட மருந்துக் கடைகளைத் தவிர வேறு எந்தக் கடைகளிலும் கிடைப்பதே இல்லை. நள்ளிரவில் பல சமயம் கொடுமையான சிக்கலில் மாட்டிய கதையெல்லாம் உண்டு. 

குழந்தைகளுக்குப் பார்த்துக் கொண்டிருந்த மருத்துவரிடம் இது குறித்துக் கேட்ட போது அவர் சிரிக்காமல் சொன்ன பதில். 

"ஸ்டாக் வாங்கி வைத்துக் கொள்ள வேண்டியது தானே" என்றார். 

நான் போட்டிருந்த செருப்பு வெளியே கழட்டி வைத்து விட்டு வந்த காரணத்தால் அமைதியாகத் திரும்பி வந்து விட்டேன். 

திருப்பூரில் உள்ள தண்ணீரில் மற்றொரு பிரச்சனையும் உண்டு. 

வீட்டுக்கு வரும் தண்ணீரும், குடிக்கப் பயன்படுத்தும் தண்ணீரும் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு இடத்திலும் இருந்து வரும். தண்ணீர் பற்றாக்குறை காரணமாகப் பல சமயம் லாரியில் வரும் நீரின் தன்மை என்று வெவ்வேறாக இருக்க இதன் பாதிப்பு உடனடியாகக் குழந்தைகளின் ஆரோக்கியத்தில் கண்கூடாகத் தெரியும். 

சளியில் தொடங்கி வைக்கும். காய்ச்சலில் கொண்டு போய் விடும். சில சமயம் சளி கோழையாக நெஞ்சில் தங்கி விடும். வாங்கி வரும் மாத்திரையும், மருந்தும் அந்த நேரத்தில் கேட்கும். அதன் எதிர்விளைவுகளும் உடனடியாகத் தெரியும். வேறு வழியே இல்லை என்கிற போது பார்த்துக் கொண்டே கடந்து செல்ல வேண்டியதாக இருக்கும். 

கடந்த பத்து வருடங்களில் ஏறக்குறைய ஆறு குழந்தைகள் மருத்துவராவது பார்த்திருப்பேன். ஒன்று வீர்யத்தின் அளவைக் கூட்டி உடனடி நிவாரணத்தில் இறங்கி விடுகின்றார்கள்.அல்லது விற்காத பைசாவுக்குப் பிரயோஜனமில்லாத கண்ட மருந்துகளை நம் தலையில் கட்டுவதைக் குறியாக இருக்கின்றார்கள். 

தற்போது ஒவ்வொரு மருத்துவரும் அவர்களின் மருத்துவமனையிலேயே மருந்துக்கடைகளையும் வைத்துள்ளார்கள். 

ஒவ்வொரு சமயமும் உடனடியாக மருத்துவரை மாற்றக்கூடாது என்று யோசித்து யோசித்துப் பலரையும் கேட்டு கேட்டு ஒவ்வொருவரிடமும் சென்றாலும் இறுதியில் மிஞ்சுவது ஏமாற்றமே. 

குழந்தைகளைக் குழந்தைகளாகப் பார்க்கும் வெங்கடாச்சலம் என்பவரை சில வருடத்திற்கு முன்பு சந்தித்தேன். 

நான் சந்தித்த போதே அவரின் வயது 70 இருக்கக்கூடும். 

அந்த ஒரு வருடமும் எந்தப் பிரச்சனையும் பெரிய அளவில் சந்திக்கவில்லை. அவரின் சிகிச்சை செய்யும் விதமும் வித்தியாசமானது. உள்ளே நுழைந்ததும் நம்மிடம் விபரங்களைக் கேட்டு விட்டு நம்மை வெளியே அனுப்பி வைத்து விடுவார். அவர் மேஜையில் எப்போதும் கடலை மிட்டாய் வைத்திருப்பார். ஒன்றை எடுத்து முதலில் குழந்தைகளிடம் கொடுத்து விட்டுப் படிப்படியாகப் பேசத் தெரிந்த குழந்தைகளிடம் பேசிக் கொண்டே ஒவ்வொன்றாகக் கேட்டுக் கொண்டே வருவார். 

சட்டையை முழுமையாகக் கழட்டச் சொல்லி அமைதியாகப் பரிசோதனை எல்லாம் முடித்த பிறகு கடைசியாக நம்மை அழைத்துச் சில பொட்டலங்களில் வைத்துள்ள பொடி போன்ற வஸ்துவை கொடுப்பார். சில மாத்திரைகள் மட்டும் எழுதிக் கொடுப்பார். 

மிக மிக அவசியம் என்றாலொழிய ஊசி போட மாட்டார். 

எட்டு வருடங்கள் கடந்து வந்து நின்ற போது குழந்தைகளின் ஆரோக்கியமென்பது நான் நினைத்த அளவிற்கு இல்லை என்பது மட்டும் நன்றாகப் புரிந்தது. ஒவ்வொரு முறையும் பேய்க்கு பயந்து பிசாசுக்களிடம் சிக்குவது போலவே இருந்தது. 

அப்போது தான் அவரைச் சந்தித்தேன். 

சித்த மருத்துவத்தில் இருந்தவர் அதனை விட்டு வெளியே வந்து வீட்டு புரோக்கர் தொழிலில் இருந்தார்.

ஆங்கில மருத்துவம் (மட்டும்) சிறப்பானதா?

மீதி அடுத்தப் பதிவில் 

Thursday, November 14, 2013

ஆங்கில மருத்துவம் (மட்டுமே) சிறப்பானதா?

விஞ்ஞான வளர்ச்சியில் நாம் பெற்ற நவீன மருந்துகள் மட்டும் இல்லாவிட்டால் பழைய காலம் போல நம்முடைய மனித இனத்தின் ஆயுள் என்பது முப்பதோ அல்லது நாற்பது வயதுக்குள் முடிந்து போயிருக்கும்.

கலப்பின விதைகளும், ரசாயன உரங்களும் இங்கே வராவிட்டால் இன்னமும் இந்தியாவில் பசியும், பட்டினியும் தலைவிரித்தாடிக் கொண்டிருக்கும்.

சித்த மருத்துவத்தைப் பற்றிப் பேசினால் இவன் மாறிக் கொண்டிருக்கும் உலகத்தைப் புரிந்து கொள்ளாதவனாக இருப்பானோ? என்று சொல்லக்கூடிய நவநாகரிக உலகத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம்.

தலைப்பிற்குரிய முழு விபரங்களைப் பற்றித் தனியாக எழுத வேண்டும் என்றாலும் சமீபத்தில் இந்தியாவிற்கு வந்த இங்கிலாந்து இளவரசர் கேரளாவில் உள்ள குமரகம் ஆயுர்வேத சிகிச்சைக்குச் சென்றார் என்பதை மட்டும் மனதில் வைத்துக் கொண்டு நேரம் இருப்பவர்கள் இந்தப் பெரிய கட்டுரையைப் படிக்கலாம்.

நமக்கு விஞ்ஞானத்தை கற்றுத் தந்தவர்களே கடைசியில் அடைக்கலமாகும் அளவிற்கு சித்த மருத்துவம் இன்று வரையிலும் சிறப்பாக இருந்தாலும் நமக்கு சிரிப்புச் சமாச்சாரமாகவே இன்று வரையிலும் உள்ளது.  மூட நம்பிக்கைகள என்ற பெயரில் நமது பழைய பொக்கிஷங்களை பகுத்தறிவு சட்டியில் போட்டு கிண்டி உண்ண முடியாத பொருளாக மாற்றிவிட்டோம்.

சித்தர்கள் நமது உடல் அமைப்பை எப்படிப் பகுத்துப் பிரித்தார்கள் என்பதற்காக இந்த ஆவணம், அரிய பொக்கிஷத்தை நாம் எப்படி இழந்துள்ளோம் என்பதற்காக இந்தக் கட்டுரை..


தமிழச்சித்தர்கள் வகுத்த உறுப்புகளும் நோய்களும் 

தமிழச்சித்தர்கள் கண்டறிந்த நோய்கள் 4448. இதைவிட ஒரு நோய் கூடவும் முடியாது குறையவும் முடியாது. அவை, உடல் முழுவதும் தோன்றுவதாகும். உடலிலுள்ள உறுப்புகள் சிலவற்றில் இந்த நோய்கள் உண்டாகுமென்றும், நோய் உண்டாகும் உறுப்புகளாகப் பத்தொன்பதைக் கூறி, அவை ஒவ்வொன்றிலும் தோன்றக் கூடிய நோய்களின் எண்ணிக்கை பிரித்துக் கூறப்படுகிறது. 

1. தலை 307 

2. வாய் 18 

3. மூக்கு 27 

4. காது 56 

5. கண் 96 

6. பிடரி 10 

7. கன்னம் 32 

8. கண்டம் 6 

9. உந்தி 108 

10. கைகடம் 130 

11. குதம் 101 

12. தொடை 91 

13. முழங்கால் கெண்டை 47 

14. இடை 105 

15. இதயம் 106 

16. முதுகு 52 

17. உள்ளங்கால் 31 

18. புறங்கால் 25 

19. உடல்உறுப்பு எங்கும் 3100 

ஆக 4448 என்பனவாகும்.

இவ்வாறு உறுப்புகள் தோறும் உண்டாகும் நோயின் எண்ணிக்கையைப் பிரித்துத் தொகைப்படுத்திக் கூறியிருப்பது, சித்த மருத்துவத்தின் தொன்மை, வளர்ச்சி ஆகிய இரண்டையும் காட்டுவதாகக் கொள்ளலாம். 

உலக மருத்துவம், இவ்வாறு நோய்களைத் தொகையாக்கிக் கூறுவது இல்லை என்பது கருதுதற்குரியது. 

கிருமிகளினால் உண்டாகும் நோய்கள் 

குடலில் உருவாகும் பூச்சிகள் நோய்களை உண்டாக்கும் கிருமிகள் என்று குறிப்பிடப் படுகின்றன.

அவை, குடலில் உண்டாகும் நோய்களின் மூலமாகவும், கெட்ட உணவுகளின் மூலமாகவும் உண்டாகும். அவை, பூ நாகம், தட்டைப்புழு, கொக்கிப்புழு, சன்னப்புழு, வெள்ளைப் புழு, செம்பைப் புழு, கீரைப்புழு, கர்ப்பப் புழு, திமிர்ப்பூச்சி எனப் பலவாகும். இவை துர்நாற்றமடைந்த மலத்தினாலும், சிறுநீர், இரத்தம், விந்து, சீழ், சளி, வியர்வை ஆகியவற்றிலும் உற்பத்தியாகும். 

கிருமிகளால் உண்டாகும் நோய்க்குறி குணங்கள் 

குடலில் உண்டாகும் கிருமிகளினால் உடல் நிலை பாதிக்கப்பட்டு, அதன் விளைவாக நோய்க்குரிய குணங்கள் புறத்தே தோன்றுமாறு குணங்களை ஏற்படுத்தும். அவை, உடல் நிறம் மாறும். சுரம், வயிற்றுவலி, மார்பு நோய், வெளுப்பு நோய், ஊதல் நோய், இருமல், வாந்தி, சயநோய், அருசி, அசீரணம், பேதி, வாய் நீரூறல், பிரேமை, சூலை, தொப்புள் சுற்றி வலி, வயிறு உப்பல், தூக்கத்தில் பல் கடித்தல், மாலைக்கண், குழந்தைகளுக்குத் தெற்கத்திக் கணை, குழந்தை இசிவு, மூக்கில் புண் ஆகிய குணங்களை விளைவிக்கும். 

குடற் கிருமிகளினால் கிராணி, பவுத்திரம், மூலம், மலக்கட்டு, தேகக் காங்கை, சுரம், மயிர் உதிர்தல், குட்டம், சொறி சிரங்கு, படை, கரப்பான் முதலிய நோய்களை உண்டாக்கும் என்று, கிருமிகளினால் உண்டாகக் கூடிய உடல் பாதிப்பு விரித்துரைக்கப்படுகிறது. 

கிருமிகள் உருவாகக் காரணம் 

கரப்பான், கிராணி, பவுத்திரம், மூலம், மலக்கட்டு, தேகக் காங்கை முதலிய நோய்கள் உண்டாகும் வழிகளை ஆராய்ந்தால், அவை, உடலின் சூட்டினாலேயே உருவானவை எனத் தெரியும்.அதிகமான உடலுறவின் காரணத்தினால் உடல் சூடுண்டாகி, அச்சூடு கொழுப்பு, தசை யாவற்றையும் தாக்கி, கிருமிகளை உண்டாக்கும். அக்கிருமிகள் உடலைத் துளைத்துக் கொண்டு எங்கும் பரவி விஷ கரப்பான் என்னும் நோயை உண்டாக்கித் தினவை விளைவிக்கும். 

அதே மாதிரியான உடற்சூடு மலத்தைத் தீய்த்து, கட்டுண்டாக்கித் துர்நாற்றமுண்டாக்கும். மலம்அழுகிக் கிருமிகளை உண்டாக்கும். அவை குடலுக்குள், உண்ணும் உணவை உண்டு வளர்ந்து குட்டம், வெடிப்புண்,சொறி, கரப்பான், கிராணி, பவுத்திரம், சுக்கிலப் பிரமேகம் போன்ற நோய்களை உருவாக்கும். மேலும் குடற்புழுக்களால் மலத்துவாரத்தில் இரத்தம், சீழ், நீர்க் கசிவு, முளைமூலம், வயிறு பொருமல், வாய்வு, புழுக்கடி, சோகை, குன்மம், சயநோய், மலடு, பெருவயிறு, சுக்கில நட்டம், உடல் தடிப்பு போன்ற நோய்களும் உண்டாகும். 

நோய்க் கிருமிகளால் உடலுக்கு நேரக் கூடிய விளைவுகளை விவரித்துள்ளது, நோய் வரும் வழிகளை யெல்லாம் கண்டறிந்ததின் விளைவாகவே எனலாம். எவையெவை நோயைத் தரவும், உண்டாக்கவும் வல்லவை என்பதை உணர்ந்து உணர்த்தினால் மட்டுமே நோயிலிருந்து விலகவும், நோயிலிருந்து உடலைப் பாதுகாத்துக் கொள்ளவும் இயலும் என்பதை அறிந்தே சித்த மருத்துவத்தின் செயல்பாடுகள் அமைந்திருக்கின்றன எனல் பொருந்தும். 

கண் நோய் : 

கண் மருத்துவம் என்பது இன்றைய காலத்தில் சிறந்த இடத்தைப் பிடிப்பதைப் போலவே, தமிழ் மருத்துவ நூலாரும் கண் மருத்துவத்தைச் சிறந்த மருத்துவமாக வளர்த்தனர் எனலாம். 

பொதுக் காரணங்கள் : 

வேகங்களின் வழியே உண்டாகும் தீவினையாகிய நோய்களையும், வெம்மையால் உண்டாகும் எரிச்சலையும், புவன போகங்களின் மேல் கொண்ட பெருத்த ஆர்வத்தால் உண்டான பற்பல நோய்களும், அதனால் மெய்யிலும், உள்ளத்திலும் ஏற்படும் தளர்ச்சிகளும், உலக வாழ்க்கை என்று கூறப்படும் இருநூறு துக்கச் சாகரங்களும் கண்நோய் உண்டாவதற்கான பொதுக் காரணங்கள் என்றும், மனிதன் பிறந்தபோதே உடன்தோன்றி வருத்துகின்ற வேகம் என்னும் பதினான்கு நோய்களும் குறிப்பால் உணர்த்தப் பட்டுள்ளன.

அவை : சுவாசம், விக்கல், தும்மல், இருமல், கொட்டாவி, பசி, தாகம், சிறுநீர், மலம், இளைப்பு, கண்ணீர், விந்து, தூக்கம், கீழ்நோக்கிச் செல்லும் வாயு (அபான வாயு என்பர் சிலர்). பொதுவாக ஆராய்ந்தால் மேற்கண்ட பதினான்கும் உடலில் தோன்றும் எல்லா நோய்களுக்கும் அடிப்படையாக உள்ளன என்பது தெளிவாகும். அவை இல்லா மனிதன் தேவனெனப் படுவான். 

சிறப்புக் காரணம் : 

சிசுவானது தாயின் கர்ப்பத்தில் இருக்கும் போது, தாயின் வயிற்றில் கிருமிகள் சேர்ந்திருந்தாலும், தாயானவள் பசியால் வருந்தினாலும், தாயானவள் திகிலடைந்தாலும், மாங்காய், மாம்பழம் இவற்றை விரும்பித் தின்றாலும் சிசு பிறந்தவுடன் சிசுவின் கண்களில் நோய்கள் உண்டாகும். 

காசநோய் : 

கண்ணில் உண்டாகும் காசநோய், நீலகாசம், பித்தகாசம், வாதகாசம், வாலகாசம், மந்தாரகாசம், ஐயகாசம், வலியுங்காசம், விரணகாசம் என எட்டாகும். 

வெள்ளெழுத்து 

கண்பார்வை மயக்கம் என்று கூறப்படும் ‘திமிரம்’ ஏழாகும். அவை வெள்ளெழுத்து, மந்தாரம், மூளை வரட்சி, பித்தம், சேற்பம், நீர் வாயு, மேகம் என்பன. 

முப்பத்தேழு வயது வரை கண் பார்வை தெளிவாகத் தீங்கின்றி இருக்கும். நாற்பத்தைந்தில் கண்பார்வை சற்று இயற்கைக்கு ஒதுங்கியும், தெளிவின்றிச் சற்றுப் புகைச்சலாய்த் தோன்றும். ஐம்பத்தேழாம் வயதிலிருந்து சிறிது சிறிதாகக் கண்பார்வை இருளத் தொடங்கும். கண்பார்வை அறவே நீங்கி இருண்டிடும் நூறாமாண்டில். கூர்மையான பார்வை தரத்தக்க கருவிழியில் அடர்ந்த புகை கப்பியது போலவும், மேகக் கூட்டம் போலவும், பார்வை தடைப்பட்டு, நேராய்க் காணத்தக்க பொருள் சற்று ஒதுங்கிக் காணப்பட்டாலும், பொருள்கள் சற்று மஞ்சளாகவும் நேர்ப்பார்வை சற்று தப்பியும் காணும். இத்தகைய குறிகள் கண்ணில் தோன்றினால் அதனை வெள்ளெழுத்து (திமிரம்) என்று அறியவும். கண்பார்வை வயது ஏறயேறக் குறைவதின் விவரத்தைக் குறிப்பதுடன், பார்வைத் திறன் ஒடுங்குவது இயற்கை என்பதையும் இக்கருத்து விவரிக்கிறது. 

கண்ணின் நோய்களைக் குறிப்பிட்டு அதன் தோற்றத்தையும் வண்ணத்தையும் குறிப்பிட்டுக் காட்டியிருப்பது மருத்துவ நூலாரின் ஆழ்ந்த மருத்துவப் புலமை நன்கு விளங்கக் கூடியதாக இருக்கிற தெனலாம். 

தலைநோய்

உடம்பு எண் சாண் அளவு, அவ்வுடம்பில் உண்டாகும் நோய்கள் 4448, அவற்றில் தலையில் தோன்றும் நோய்கள் 1008 என்று குறிப்பிடுவர். ஒவ்வொரு உறுப்பிலும் உண்டாகும் நோய்கள் என்று குறிப்பிடும் அங்காதி பாதம், தலையின் உறுப்புகளாகக் கொண்ட கபாலம் வாய், மூக்கு, காது, கண், பிடரி, கன்னம், கண்டம் ஆகிய எட்டுப் பகுதிகளில் வரும் நோய்கள் மொத்தம் 552 என்கிறது. ஆனால், தலை நோயைக் குறிப்பிடும் நாகமுனிவர் 1008 என்கிறார். இதனால் நாக முனிவர் தலைநோய் மருத்துவத்தில் கொண்டிருந்த ஆழ்ந்த ஈடுபாடும், ஆய்வும் புலப்படும். மேலும், அம்முனிவர் எண்ணூற்று நாற்பத்தேழு நோய்களைத் தன்னுடைய அனுபவத்தினால் உணர்ந்ததாகக் கூறுவதும் குறிப்பிடத்தக்கது. 

தலை உறுப்புகளில் உண்டாகும் நோய்களின் எண்ணிக்கை 

ஒவ்வொரு உறுப்பிலும் எத்தனை நோய்கள் உண்டாகும் என்ற குறிப்பினைத் தருகின்றபோது, தலையின் உச்சியில் நாற்பத்தாறு மூளையில் (அமிர்த்தத்தில்) பதினாறு, காதில் நூறு, நாசியில் எண்பத்தாறு, அலகில் முப்பத்தாறு, கன்னத்தில் நாற்பத் தொன்பது, ஈறில் முப்பத்தேழு, பல்லில் நாற்பத்தைந்து, நாக்கில் முப்பது நான்கு, உண்ணாக்கில் இருபது, இதழில் பதினாறு,நெற்றியில் இருபத்தாறு, கண்டத்தில் நூறு, பிடரியில் எண்பத் தெட்டு,புருவத்தில் பதினாறு, கழுத்தில் முப்பத்தாறு, என, தாம் அனுபவத்தினால் உணர்ந்தவற்றை மட்டும் குறிப்பிடுகின்றார்.

ஆனால், எந்த முறையைக் கொண்டு 1008 என்ற எண்ணின் தொகையைக் கூறினார் என்பது குறிப்பிடப் படவில்லை. 

கபால நோயின் வகை : 

வாதம் முதலாகக் கொண்ட முக்குற்றங்களினால் வரும் நோய்கள்10, கபாலத் தேரை1, கபாலக் கரப்பான் 6, கபாலக் குட்டம் 5, கபாலப் பிளவை 10, கபாலத் திமிர்ப்பு2, கபாலக் கிருமி2, கபாலக் கணப்பு3, கபால வலி1, கபாலக் குத்து1, கபால வறட்சி1, கபால சூலை3, கபால தோடம்1 ஆக 46–ம் உச்சியில் தோன்றும் வகையாகக் குறிப்பிடுவர். 

தலையில் தோன்றும் நோய்களில் கண், காது, தொண்டை, மூக்கு, ஆகியவையும் அடங்கும். தற்காலத்தில் கண் மருத்துவம் எனத் தனியாகவும், காது, தொண்டை, மூக்கு ஆகியவை தனியாகவும், மூளை மருத்துவம் தனியாகவும்–சிறப்பு மருத்துவமாகவும் கொள்ளப் படுகின்றன.

ஆனால் சித்த மருத்தவம் அனைத்தையும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை என்பதால் தனித்தனியே கருதாமல் ஒன்றாகவே கருதியிருக்கக் கூடும். அறிவியல் வளர்ச்சி என்பது தலைக்காட்டாத காலத்திலேயே அறிவியல் முறைக்கு உகந்ததாகச் சித்த மருத்துவத்தை வளர்த்தனர். மூளையில் உருவாகும் குற்றங்களைக் கண்டறிந்து அவை பதினாறு வகை நோயென உரைத்திருப்பது கருதுதற்குரியதாகும். 

அம்மை நோய் : 

அம்மை நோய் என்னும் இந்நோயை வைசூரி நோய் என்று சித்த மருத்துவம் குறிப்பிடுகிறது. இந்நோய் வருவதற்குக் காரணமாக அமைவது வெப்பமாம். இதனை வெக்கை நோய் என்றும் குறிப்பிடக் காணலாம். 

மேலும், அம்மை நோய்க்கு குரு நோய், போடகம் என்னும் பெயர்களும் வழங்கப்படுகின்றன. 

அம்மைநோய், உடலில் ஏற்படுகின்ற அழலின் காரணத்தினால் உடலில் சூடு உண்டாகி, மூளை கொதிப்படைந்து, எலும்பைத் துளைத்துக் கொண்டு உண்டாகின்றது என்று மருத்துவ நூல் குறிப்பிடுகிறது. 

இந்திய மருத்துவ வரலாற்றில் பெரும்பாதிப்பை உருவாக்கியது பெரியம்மை என்னும் வைசூரி நோய். இந்நோய் உயிர்க்கொல்லி நோயாக இருந்தது. 

அம்மை நோயால் கண்கள் பாதிப்படையும். தோலில் பள்ளங் களைக் கொண்ட புள்ளிகளை ஏற்படுத்தும். அப்புள்ளிகள் என்றும் மாறாமல் இருப்பதுண்டு. 

சித்த மருத்துவம் கண்டறிந்த அம்மை நோய்கள் பதினான்கு. அவை, 

1. பனை முகரி 2. பாலம்மை 

3. மிளகம்மை 4. வரகுதரியம்மை 

5. கல்லுதரியம்மை 6. உப்புதரியம்மை 

7. கடுகம்மை 8. கடும்பனிச்சையம்மை 

9. வெந்தயவம்மை 10. பாசிப்பயறம்மை 

11. கொள்ளம்மை 12. விச்சிரிப்பு அம்மை 

13. நீர்கொள்ளுவன் அம்மை 14. தவளை அம்மை 

என்பனவாகும். இந்நோய்ப் பெயர்கள் அனைத்தும் அம்மைப் புள்ளிகள் தோன்றுவதைக் கொண்டும், அம்மை நோயுற்றவரின் செயலைக் கொண்டும் காரணப் பெயரால் சுட்டப்படுகின்றன. 

இந்நோய் பெரும்பாலும் குழந்தைகளுக்கு வரும் நோயாகவே கருதப்படும். அதுவும் கோடைக் காலமான வேனிற் காலத்திலேயே வரும். 

தொடர்புடைய பதிவுகள்