Showing posts with label டாலர் நகரம் புத்தக விமர்சனம். Show all posts
Showing posts with label டாலர் நகரம் புத்தக விமர்சனம். Show all posts

Friday, April 05, 2013

வெளியே தெரியாத படைப்பாளி


ஜோதிஜியின் டாலர் நகரம் - ஒரு பார்வை

ஜோதிஜியின் டாலர் நகரம் : 

ஒரு தனிமனிதனின் வாழ்க்கைப் போராட்டமும் முன்னேற்றமும் எப்படி இருக்குமென்பதை இந்நூல் வெளிப்படுத்தி உள்ளது. அதில் ஆங்காங்கே சமுதாயப் பார்வையும் சற்றே தலை தூக்குகிறது. பொதுவாக திருப்பூரில் வாழ்பவர்களுக்கு இந்நூலில் கூறப்பட்டிருப்பவை இயல்பானதாக இருக்கலாம். 

ஆனால் திருப்பூரைப் பற்றி புதிதாக அறிபவர்களுக்கு வியப்பாகவும் வேதனையாகவும் இருக்கலாம்.

ஒரு வளர்ந்து வருகின்ற ஊர் - ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குத் துணை செய்கின்ற ஒரு ஊர் - உழைப்பையும் உழைப்பின் பயனையும் அடுத்த மாநிலத்திற்கும் அயல் நாட்டிற்கும் தருகின்ற ஒரு ஊர் - வளர்ச்சிப் பாதையை நோக்கிச் செல்வதற்குத் தயங்காத மக்களைப் பெற்றிருக்கின்ற ஒரு ஊர் - முன்னேற்றமடைவதற்கு முட்டுக் கட்டையாக இருக்கின்ற சூழ்நிலைகள் உழைப்பாளிகளை வெறுப்படையச் செய்கின்றன எனபதை ஆதங்கத்தோடு எடுத்துரைத் திருக்கின்றார் ஆசிரியர்.  

அயல் நாட்டின் வளர்ச்சிக்கும் பொருள் வரும் வழிக்கும் வழி வகுத்துக் கொடுக்கத் தயாராக இருக்கின்ற நாட்டாமைகள்,  உழைக்கின்ற ஊருக்கு உதவி வரத் தடுக்கின்ற வழி முறைகளை உள்ளத்தின் நெருடலோடு ஆங்காங்கே உணர்த்துகிறது இந்நூல்.

இயற்கை வளத்தை அழிக்கின்றது சாயக் கழிவுகள் என்றால் அதை நீக்கித் தொழில்வளம் பெறுவதற்கும்,  தனி ஒரு மனிதனுக்கும், அதனையே தொழிலாய்க் கொண்ட ஊருக்கும் வழி வகைகளைச் செய்வதற்கு ஆளுகின்ற அரசு உதவ வேண்டுமே என்ற ஆதங்கம் கருத்துக்களாய் வெடிக்கின்றது இந்நூலில். 

நூலின் துவக்கத்தில் வேலையின் அடிப்படை நிலையில் எல்லாம் தன் திறமையை மட்டுமே ஊன்றுகோலாய்க் கொண்டு உழைப்பில் போராடி முன்னேறிய வரலாற்றைச் சோர்வின்றி ஒரு எழுத்தாளனின் பார்வையில் கொண்டு சென்றிருப்பது ஆசிரியரின் எழுத்தாற்றலை வெளீப்ப்டுத்துகிறது. தொழில் - வளர்ச்சி - போராட்டம் - பொருள் - வாழ்க்கை  என்ற நிலைகளை எல்லாம் சொல்லும் போது ஆசிரியர் பாரம்பரியம் - கலாச்சாரம் - தாய் மொழிப் பற்று என்பதனை எல்லாம்  ஆங்காங்கே சொல்லி இருப்பதும் நமமை எல்லாம் சிந்திக்க வைக்கிறது. 

ஒரு ஊருக்கு உயிர் கொடுக்கின்ற தொழிலை, வளர்வதற்கு வழி வகை செய்ய வேண்டும். செய்தால் அது நாட்டின் நலத்திற்குத் துணை செய்யும் வளர்ச்சி தானே ! என்பதனை நூல் சொல்லாமல் சொல்கிறது. 

எண்ணங்களை எழுத்தாக்குவதென்பது எல்லாராலும் இயலாது.  ஆனால் அது ஜோதிஜிக்கு கை வந்த கலையாக வாய்த்திருப்பது நிச்சயம் பாராட்டப் பட வேண்டிய ஒன்று. பாராட்டும் தகுந்த நேரத்தில் இருப்பது அதற்கு இன்னும் மேன்மை சேர்க்கும். 

நல்வாழ்த்துகள் ஜோதிஜி 

நல்ல சிந்தனைகளை இன்னும் தாருங்கள்.

ஆக்கம்   செல்வி ஷங்கர். (வலைச்சரம் சீனா அவர்களின் துணைவியார்)

தொடர்புடைய பதிவுகள்

புத்தகம் வாங்க




Tuesday, April 02, 2013

தமிழாசிரியை கடிதம்


முனைவர்  சு உஷாராணி,
தமிழாசிரியை
ஸ்ரீ கே.கே. நாயுடு மேனிலைப்பள்ளி
விமானநிலைய அஞ்சல்
கோயம்புத்தூர் 641 014

வணக்கம்

பொதுவாக எந்த நூலை நான் வாசிப்புக்கு எடுத்துக் கொண்டாலும் 'அட்டை டூ அட்டை' படிப்பது எனது வழக்கம்.

சமர்ப்பணம் படிக்கும் போதே நூலாசிரியர், சாமான்ய முகம் கொண்ட சராசரி மனிதரல்ல என்பது புரிந்தது.

என் சமகால இளைஞர் ஒருவர் நாலு முழ வேஷ்டியுடன் கையில் துணிக்கடை மஞ்சள் பையோடு, பிழைப்புத் தேடி நகரம் வந்தது......பாலகுமாரன் சுஜாதா என எழுத்துக்களில் தம்மைப் புதைத்துக் கொண்டது.......  எங்கே இந்தக் கிட்டங்கி வேலையிலேயே சோம்பேறியாக மாறிக் காணாமல் போய்விடுவோமோ? எனச் சுதாரிக் கொண்டு வேற வேலை தேடி ஓடியது..... எனத் தொடக்கமே விறுவிறுப்பு.

தன் வரலாறு என்பதைக் காட்டிலும், நாவலைப் போலக் கதை சொல்லும் உத்தி, நூலின் போக்கை சுவராசியமாகக் கொண்டு செல்கிற்து.

ஏற்றுமதி நிறுவனத்தில் நுழைந்து, உண்மையான கடும் உழைப்பால் உயர்ந்து, உடன் பணிபுரிபவரின் ஏமாற்று வித்தையில் சிக்கி, பண இழப்புக்காகக் காரணம் சுமத்தப்பட்டு அந்நிறுவனத்தை விட்டு வெளியே நேர்ந்தது... எனச் சொல்லிச் செல்லும் போதே, ஏற்றுமதி நிறுவன வேலைகள், நடைமுறைகள், ஆட்களின் பங்களிப்பு என அழகிய ஆடையை நெய்வது போல செய்திகளை இழையோட விட்டிருக்கும் பாங்கு ரசிக்க வைக்கின்றது.

நூலாக இருக்கும் நிலையிலிருந்து ஆடையாக வடிவமைக்கப்பட்டுப் பெட்டியில் அடுக்கப்படுவது வரை மிகத் தெளிவாக விவரிக்கும் பாங்கு ... துறை சார்ந்தவர்கள் பயன் பெறப் பேருதவியாகவும், வழிகாட்டுதலாகவும் அமையும். ஏற்றுமதி அரசாங்கம் விதிக்கின்ற கட்டுப்பாடுகள், தரகர்களின் வேலை என்பதெல்லாம் துறை சார்ந்த விஷயங்களாகவே இருப்பதால் நுனரஞ்சக ரசிப்புத் தன்மை ஈர்ப்பிலிருந்து விடுபட்டு விலகியே நிற்கின்றன.

தாய்மொழி மீது கொண்ட நேசம், குழந்தை தொழிலாளர் உருவாக்கப்பபடும் சூழலியல் காரணங்கள், கொடுத்த வாக்கைக் காப்பாற்றாத மனிதர்கள் மீது, ஒரு சக மனிதனுக்கு ஏற்படும் தார்மீகக் கோபம், அடித்தட்டு மக்களின் அன்றாட வாழ்வை விவரித்தல் என நூலின் பாதை பல தளங்களின் பயணிக்கிறது.

ஒரு பக்கம் அரசின் கொள்கைகள்... மறுபக்கம் சாயக்கழிவு நீர் பிரச்சனைகள் என இரண்டுக்குமிடையே இன்றைக்குத் தடுமாறிக் கொண்டிருக்கும் திருப்பூரின் நிலையை இந்நூல் அப்பட்டமாக வெளிச்சம் போடுக் காட்டுகின்றது.

அரசின் பொருளாதார ஒப்பந்தங்களால், நம் நாட்டு உற்பத்திக்கான மூலப் பொருள் பற்றாக்குறை ஏற்படுதல், உற்பத்தித் திறன்  குறைவு, வெளிநாட்டு ஏற்றுமதி என இவர் விவரித்துள்ள செய்திகளைப் படிக்கும் போது ஒரு சராசரி இந்தியக் குடிமகனாய் நமக்கும் கூடக் கொஞ்சம் கோபமும் இயலாமை குறித்து கழிவிரக்கமும் தோன்றுகிறது.

விரும்பும் துணியின் வடிவத்தை வடிவமைத்துத் தரும் நிட்டிங் இயந்திர அமைப்பை இவ்வளவு அருமையாக விபரிக்க முடியுமா? என்ன!

வலையை விரித்தது யாராடா? தலைப்பில் பகவான கண் விழத்துப் பார்து விட்டு மறுபடியும் உறங்கத் தொடங்கினார்.   பகவான் சோம்பலுடன் எழுந்து உட்கார்ந்தார் என் இடைத் தொடர்களை அமைத்திருப்து நகைச்சுவையும் நையாண்டியும் கலந்து மாறுபட்ட உத்தி.

அமெரிக்கர்களின் வெளிப்படையான அணுகுமுறைச் சொல்லி எச்சரித்து வாழ்வில் உயர வழியும் காட்டப்பட்டுள்ளத.

உரம் போடாமல் வளர்த்த பஞ்சிலிருந்து உருவாக்கிய ஆடைகள் குறித்த இன்றைய நிலையைச் சொல்லும் போது இயற்கை வேளாண்மையை விவரிப்பது இவரின் இன்னொரு விவசாயி முகம் தெரிகிறது.

"அடித்தட்டு வர்க்கமோ நடுத்தர வர்க்கமோ எவராயிருந்தாலும் தங்களை நம்பி வாழ்பவர்களுக்காகவே தங்களை வாழ்க்கையை வாழ்ந்தாக வேண்டி கட்டாயத்தில் இருக்கிறார்கள்"

"அளவான வருமானம் வாழ்க்கை முழுக்க அமையப் பெற்ற அத்தனை பேர்களும் ஆயுள் முழுக்க ஒருவிதம ஒரு விதமான அடிமை"

நச்சென்ற வரிகள்

தொழில் நிலையில் பலமுறை ஏமாற்றங்களை எதிர்கண்ட போதும், நம்பிக்கையும் உழைப்பையும் மட்டுமே துணையாகக் கொண்டு முன்னேறிய ஒரு இளைஞனின் கதை

திருப்பூரின் முதன்மைத் தொழிலை அலசி நன்கு ஆராய்கின்ற நூல்.

வாழ்வில் உயர, தொழிலில் உயர, இளைஞர்கள் கடைபிடிக்க வேண்டிய அணுகுமுறைகளை விவரிக்கும் சுய முன்னேற்ற நூல்

தொழில் முனைவோர் கடைபிடிக்க வேண்டிய சூட்சுமங்களைச் சொல்லிச் செல்கின்ற நூல்

டாலர் நகரத்தை எப்படி வேண்டுமானலம் இப்படி பெயரிட்டு அழைக்கலாம்.  

நான் இதுவரையிலும் படித்த புத்தகங்களில் இது போன்ற வடிவமைப்பில், வாசிப்பவனை மனதில் கொண்டு அழகான தாளில் தெளிவான பெரிய எழுத்துக்களில் கொண்டு வந்த 4 தமிழ் மீடியா குழுமத்திற்கு தமிழ் புத்தக உலகமும், புத்தக பிரியர்களும் நன்றி சொல்ல கடமைப்பட்டு இருக்கின்றார்கள். இது போல இன்னும் பல புத்தகங்களை இது போன்ற நேர்த்தியுடன் கொண்டு என் வாழ்த்துகள்..

ஜோதிஜி உங்களுக்கு நடைமுறை எதார்த்த வாழ்க்கையை வசமாக்கத் தெரிந்ததோடு, வார்த்தைகளையும் வசப்படும் வித்தையும் வாய்த்திருக்கிறது.  

என் வாழ்த்துதுக்ள்.

அன்புடன்
சு உஷாராணி
21.3.2013

டாலர் நகரம் புத்தகம் தற்போது கோவையில் விஜயா பதிப்பகத்தில் கிடைக்கின்றது.

தொடர்புடைய பதிவுகள்

புத்தகம் வாங்க



Sunday, March 31, 2013

அகலிகன்


வணக்கம் 

இது டாலர் நகரம் பற்றி என் பார்வை. 

அகலிகன். சென்னை. 

 “டாலர் நகரம்” அடிப்படையில் பெயரே சரியானதாய் அமைந்துவிட்டிருக்கிறது 

அமெரிக்க டாலரைப்போலவே வெளிப்பார்வைக்கு மிக கவர்ச்சியானதாகவும் பலம் வாய்ந்ததாகவும் இருக்கும் டாலருக்குப்பின்னால் பல கோரங்களும், கொடுமைகளும், அத்துமீறல்களும், அவலங்களும், சுரண்டல்களூம் இருப்பதுபோலவே திருப்பூர் பின்னலாடை தொழில் வளர்ச்சி வெளிப்பார்வைக்கு கவர்ச்சியானதாக இருந்தாலும் அது தன்னுள் பல குறைகளையும் ஏற்ற இறக்கங்களையும் கொண்டுள்ளது. 

பாலகுமாரனின் வெள்ளைத்தாமரை பேப்பர் வியாபாரத்தை அக்குவேறுறாகவும், நெல்லுச்சோறு நிலக்கடலை வியாபாரத்தை ஆணிவேறாகவும், தண்ணிர்துறை மைலாபூர் தண்ணிதுறை மார்கெட்டையும் என கதாபாத்திரங்களின் தொழில் சார்ந்த விவரங்களையும் விளக்கங்களையும் மிகத்தெளிவாய் முன்வைக்கும். அதுவே அவர் படைப்புக்களின் வெற்றியும்கூட. அந்த வகையில் டாலர் நகரம் ஒரு தொழில் சார்ந்த விவரங்களை மிகத்தெளிவாக முன்வைத்திருக்கிறது. 

(தாங்கள் இதையே கதாபாத்திரங்களை அதிகம் பயன்படுத்தி பல கதைகளாகவும் முயற்சிக்கலாம் அல்லது ஆரம்ப அத்தியாங்கள் பொல் மற்ற அத்தியாங்களிலும் உங்கள் பங்களீப்பு சார்ந்ததுபோலவே விவரித்திருக்கலாம், ஒரு நாவலுக்கான வடிவம் கிடைத்திருக்கும்). கோட்டா சிஸ்டத்தில் பெற்றுள்ள கோட்டாவின் அளவிற்குத்தான், நாட்டிற்குத்தான் ஏற்றுமதி செய்யவேண்டும் என்ற சட்டத்தில் உள்ள ஓட்டை காரணமாய் இந்தியா முழுவதும் பரவிய கோட்டா தரகர்கள் பற்றி கொஞ்சம் அறிந்திருக்கிறேன். 

சில ஏற்றுமதி நிறுவனங்களே தன் தேவைக்கு அதிகமான கோட்டாக்களை பெற்றுவைத்துக்கொண்டு இந்த கோட்டா தரகர்களுடன் கூட்டுகளவாடி லாபம் பார்த்தகதை சில கேள்விபட்டிருக்கிறேன். மற்றபடி தொழில் சார்ந்த தரவுகள் எனக்குள் மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தவில்லை. 

ஏற்கனவே ஒரு தொழிலில் 15 ஆண்டுகளாக இருப்பதனாலும் இது ஏற்பட்டிருக்கலாம். ஆனால் புதிதாய் தொழில்களை முனையப்போகிறவர்கள் அல்லது புதிதாய் ஓரு துறையில் பணிபுரிய விழைபவர்களை இப்படியான தரவுகள் கவரும் என்பதொடல்லாமல் அவர்களுக்கு இத்தரவுகள் உதவவும் செய்யும். ஆனால் இத்தொழில் சார்ந்த சமூக பிரச்சனைகளை துளியும் மறைகாமல் அரசு மற்றும் அதிகாரிகள் செய்யும் அத்துமீறல்களையும் அலட்சியத்தையும் துணிவுடன் சொல்லியிருப்பது பாரட்டத்தக்கது. 

தொடக்க சில அத்தியாங்களைத்தவிர மற்றவை பெரும்பாலும் தொழில்சார்ந்த மற்றும் நகர்சார்ந்த பிரச்சனைகளை பேசியிருப்பதால் இயல்பாகவே வாசிப்பதில் ஒரு ஈர்ப்பு வந்துவிடுகிறது. ( கூடவே அக்கறையில்லா அரசுகளின் கொள்கை முடிவுகளீன்மீதும் கோபமும் வெறுப்பும்). திருப்பூரைச்சுற்றி உருவாகிவரும் புறநகர் பற்றியும் அதன் அடிப்படைவசதியின்மை பற்றியும் ஆதங்கப்பட்டுள்ளீர்கள் ஆனால் உலகெங்கும் அடித்தட்டு மக்கள் எல்லா அரசுகளாலும் புறந்தள்ளப்படுகிறார்கள் என்பது நிதர்சனம். 

சென்னையிலுமேகூட சிங்க்காரச்சென்னை என்ற கான்செப்ட் அடிப்படையில் அன்றாடம் நகரைச்சார்து உழைத்து பிழைக்கும் அப்படியான மக்கள் சென்னைக்கு வெகுதூரம் மிகமிக மோசமான சூழ்நிலையில் குடியமர்த்தப்படுகிறார்கள். உண்மையில் நகரங்கள் வசதிபடைத்தவர்களுக்கு மட்டுமே என சொல்லாமல் சொல்லப்படும் செய்தி இது.  

ஆடை தொழில் சார்ந்த புத்தகமாக இருந்தாலும் மனிதர்களின் மனஉணர்வுகளையும் பதிவு செய்திருப்பது சிறப்பு. (அதிக இடங்களில் இல்லையென்றாலும் சாத்தியப்படக்கூடிய இடங்களில்) அதே சமயம் அன்றைய விவசாயமும் அதன் இயற்கை வழி உர சுழற்சியும் பற்றிய தகவல் இன்றய விவசாய முறைகளையும் விவசாயின் நிலையையும் ஒப்பிட்டு காண்கையில் ரத்தக்கண்ணீர்தான். 

அ. முத்துக்கிருஷ்ணனின் “உழவின் திசைவழியே” என்ற ஆய்வு கட்டுரை ஒரு சிறந்த படைப்பு. முயற்சிக்கவும். கூடங்குளம் அனு உலை தொடர்பான அரசின் அத்தனை பொய் பிரசாரங்களையும் தொலுரித்துக்காட்டும் “கூடங்குளம் விழித்தெழும் உண்மைகள்” என்ற பெயரில் மக்களுக்கான விழிப்புணர்வு பதிப்பாக வெளிவந்திருப்பதைப்போல் (உயிர்மைபதிப்பகம் அ. முத்துக்கிருஷ்ணன்) சாயமே இது பொய்யடா தொகுப்பும் சாயப்பட்டறை கழிவுகளின் பாதிப்பு பற்றிய விழிப்புணர்வுக்கான  மக்கள் பதிப்பாய் வெளியிடக்கூடிய முக்கிய பகுதி.

நான் மிகவும் ரசித்தது.

எல்லா காலங்களிலும் திறமையானவர்களை உதவிசெய்து வழியனுப்புவது மாதவன்போன்ற பள்ளித்தோழர்கள்தான். அந்தவகையில் மாதவன், முருகேஷ் கவர்ந்தார்.

 (நம் ‘+’ ‘-’ களை அறிந்த பால்யகால நட்பு கடைசிவரை உடன்பயனிக்கும்) நம் ஆறாவது வயதில்தான் முதல் முதலாய் பள்ளிக்கு சென்றோம் இன்று 3 வயது எப்படாமுடியும் எனகாத்திருக்கிறார்கள் 

பெற்றோர்கள் கொத்திக்கொள்ள PLAY SCHOOLஸும் வலைவிரித்து காத்திருக்கின்றன. எல்லாவற்றிலும் தன் குழந்தை முதலாவதாய் வரவேண்டுமென ஆசை அத்தனை பெற்றோர்க்கும் உண்டு ஆனால் அதற்கான வயது குழந்தைக்கு இல்லை என்பதை மறந்துவிடுகிறார்கள். இந்நிலையில் தன் குழந்தை முதல் ரேங்க் எடுத்திருந்தாலும் ஏற்கனவே முதல் ரேங்க் வாங்கிய குழந்தை இப்ப என்ன ரேங்க் என்ற அக்கறை எல்லா குழந்தைகளுமே குழந்தைகள்தான் என்பது புரிந்த கேள்வி, 

மகிழ்ச்சியும் ஆச்சரியமும் அளித்தது.

பணம் துரத்திப்பறவைகள் மற்றும் காமம் கடந்த ஆட்கள் வேண்டும் அத்தியாயங்கள் மக்களின் வறுமையும் அதன் விளைவான விட்டுக்கொடுத்தல்கள் மற்றும் ஏற்றுக்கொள்ளுதல்கள் பற்றி மிகமிக தெளிவாக எடுத்துக்காட்டுகிறது. 

கொடிது கொடிது வறுமை கொடிது அதனினும் கொடுமை இளமையில் வறுமை. வறுமை காரணமாய் இளமையிலேயே பணிச்சூழலுக்கு தள்ளப்பட்டு அங்கெ தன் குடும்பசூழலிலிருந்து மெல்ல விலகி தன் வாழ்க்கைப்போக்கை தானே தெர்ந்தெடுக்கும் நிலையை ஏற்படுத்தும் பொருளாதார வளர்ச்சி அதன் விளாய்வாய் ஏற்படும் கூடா நட்பு 

இவை சார்ந்த ஆட்களை என் உடனிருந்தவர்களிடமே கண்டிருப்பதால் உங்கள் பதிவுகள் புரிந்துகொள்ளமுடிந்தது.

உண்மையில் எல்லோராலும் படிக்கப்படவேண்டியவை.

தொடர்புடைய பதிவுகள்

புத்தகம் வாங்க


Monday, March 04, 2013

தமிழ் இளங்கோ - ஆசையும் என் அச்சமும்


நான் வங்கி வேலைக்கு சேர்ந்த பிறகு திருப்பூரைப் பற்றி கேள்விப் பட்ட தகவல், திருப்பூரில் இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளின் கிளைகளும் உள்ளன என்பதுதான். 

எனக்குத் தெரிந்த கிராமத்தைச் சேர்ந்த இருவர் திருப்பூருக்கு சென்றனர். ஒருவர் 15 நாளிலேயே ” என்னால் ஈரத்தில் ரொம்பநேரம் நிற்க முடியவில்லை என்று தாக்கு பிடிக்க முடியாமல் வந்து விட்டார். 

இன்னொருவரால் கடினமாக உழைக்க முடியவில்லை. அவரும் ஓடி வந்து விட்டார். ஆனாலும்  மற்றொருவர் (கடுமையான உழைப்பாளி) எங்கள் கிராமத்துக்காரரோடு திருப்பூருக்கு சென்றவர், இன்று நல்ல நிலைமையில் இருக்கிறார். தனது கடைசி தம்பிகள் இருவரையும் நன்கு படிக்க வைத்தார். கிராமத்தில் நிலங்களை  வாங்கி போட்டார் . 

எனவே எனக்கு திருப்பூரில் என்னதான் நடக்கிறது என்று தெரிந்து கொள்ள ரொம்ப நாளாக ஆவல். அந்த கேள்விக்கு விடை சொன்ன நூல்தான்  ஜோதிஜி (திருப்பூர்) எழுதிய “டாலர் நகரம்” –  என்ற நூல் ..

“ கோவில் விசேடத்திற்கு ஊருக்கு வந்திருந்த செட்டியார் மூலம் இந்த முதல் வேலை வாய்ப்பு வந்தது. ஊரில் வாட்ச் கடை நாச்சியப்பனிடம், படித்த ஒரு பையன் தேவையென்று செட்டியார் சொல்லி வைத்திருக்க; கூட்டாளிகளுடன் சுற்றிக் கொண்டிருந்த என்னை வாட்ச் கடை நாச்சியப்பன் தான் திருப்பூருக்கு அனுப்பி வைத்தார். பள்ளித்தோழன் மாதவன் செலவுக்கு பணங்கொடுத்து வழியனுப்ப திருப்பூருக்கு வந்து சேர்ந்தேன்.” - என்று தொடங்கி தான் மஞ்சள் பையோடு திருப்பூரில் தொடங்கிய வாழ்க்கை அனுபவத்தினை விளக்குகிறார். 

”திருப்பூரிலுள்ள எந்த நிறுவனங்களையையும் நம்ப முடியாது. உள்ளே பணிபுரிபவர்களுக்கும், தொழிலாளர்களுக்கும் தங்களின் அடுத்த நாள் எப்படியிருக்கும்? என்பதே யூகிக்க முடியாது. இன்று நிறுவனத்திற்கு லாபமாக வந்த பத்து லட்சம், நாளை பத்து கோடி நட்டத்தில் சிக்க வைத்து விடும். ஏற்றுமதி நிறுவனங்கள் வளர உழைப்பு, தரம், நிர்வாகத்திறமை வேண்டும். ஆனால் இவை எல்லாவற்றுக்கும் மேலே அதிர்ஷடம்., நம்ப கடினமாக இருக்கும், ஆனால் இது தான் உண்மை. மாமனாரும் சகலையும் என்னைப் பார்த்து விட்டு சென்ற போது மற்றொரு நிறுவனத்தில் உள்ளே நுழைய முயற்சித்துக் கொண்டிருந்தேன்.” என்று தான் கூடு விட்டு கூடு பாய காரணம் என்ன என்பதனை விளக்குகிறார். - 

ஒவ்வொரு நிறுவனத்திற்கும் மாறி மாறி உழைத்த அவர், ” 15 ஆண்டுகளாக போராடிக் கொண்டிருந்த சொந்த தொழில், சொந்த நிறுவனம் என்ற எண்ணம் இயல்பாக என்னைத் தேடி வந்த போது சரியாக பயன்படுத்திக் கொண்டேன். வாழ்வின் அடுத்த மறுமலர்ச்சி அத்தியாயங்கள் உருவாகத் தொடங்கியது “ என்று சொல்கிறார்.

அப்போது தனக்கு தொழில் ரீதியாக ஏற்பட்ட அனுபவங்களை சுவைபட சொல்லிச் செல்கிறார். அவருடைய ஒவ்வொரு அனுபவமும் திருப்பூரில் வேலைதேடி செல்வோருக்கும் தொழில் முனைவோருக்கும், கலங்கரை விள்க்கங்களாக உள்ளன.

திருப்பூரில் ஆடை தயாரிப்பு:

திருப்பூரில் தயாரிக்கப்படும் ஆடைகள் எவ்விதம் உருவாகின்றன,  சாயப் பட்டறையில் ஏற்றப்படும் சாயங்கள் ,தயாரிக்கப் பயன்படுத்தும் எந்திரங்கள் பெயர் என்பது உட்பட அலுப்பு தட்டாத வகையில் எழுதுகிறார்.

“உருவாகும் ஒவ்வொரு ஆடைக்கும் ஒவ்வொரு சூத்திரம். அத்தனையும் பயன்படுத்தும் நூலில் தான் தொடக்கம் பெறுகிறது. நீங்கள் போடும் ஜட்டி, போர்வை போல கடினமாக இருந்தால் உங்கள் உறுப்புகளை உண்டு இல்லை என்று படுத்தி எடுத்தி விடாதா? குளிர் காலத்தில் போடக்கூடிய ஆடைகள் உள் உறுப்புகள் தெரியும் அளவிற்கு இருந்தால் எப்படியிருக்கும்? குளிர் நடுங்க வைத்து விடாதா? “ 

“நீங்கள் உடுத்தும் சில ஆடைகளில் ஜட்டியின் துணி ஒரு விதமாகவும் பனியனி துணி வேறுவிதமாகவும் இருப்பதை பார்த்திருப்பீர்கள் தானே? சில துணிகளில் உள்ளே கடினமாக சொர சொரப்பாக இருக்கும். அதே துணியின் வெளிப்புறம் முயலை தடவிப் பார்க்கும் சுகம் தெரியும். அத்தனையும் நிட்டிங் எந்திரத்தின் மூளைப் பகுதியில் செய்யப்படும் ஜாலவித்தையாகும்.” - 

திருப்பூர் சாய பட்டறைகள்:

திருப்பூர் என்றாலே சாயப் பட்டறைகள் நினைவுக்கு வராமல் போகாது. அந்த அளவுக்கு இப்போது செய்தித் தாள்களில் ஊடகங்களில் சாயப்பட்டறை பற்றிய தகவல்கள் வருகின்றன. 

“இந்த சாயப்பட்டறை மற்றும் சலவைப் பட்டறைகளில் பணிபுரியும் 90 சதவிகித தொழிலாளிகள் தஞ்சாவூர், திருவண்ணாமலை, இராமநாதபுரம், மதுரை சிவகங்கை, கம்பம், தேனி, போடி, சுற்று வட்டார பகுதியில் இருந்த வந்த 16 முதல் 40 வயது வரைக்கும் உள்ள நல்ல உடல்வலிமை  வாய்ந்த  இளைஞர்கள்.. படிப்பை பாதியில் விட்டு ஓடி வந்தவர்கள் முதல்,  வாழ்க்கையை வாழ்ந்தாகி விட வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்கள் வரையுள்ள அத்தனை பேரையும்  இந்தத்  தொழிலில் பார்க்கலாம். “ 

மேலும் இந்த சாயக்கழிவுநீரால் ஒரத்துப் பாளையம் அணை, விவசாயம், குடிநீர் ஆகியவற்றில் ஏற்பட்ட பாதிப்புகளையும் அதனை நீக்க எடுக்கப்பட்ட முயற்சிகளையும் அதில் நடக்கும் தில்லுமுல்லுகளைப் பற்றியும் சொல்கிறார்.

திருப்பூர் நிறுவனதாரர்கள்:

திருப்பூர் இந்த அளவுக்கு ஒரு தொழில் நகரமாக உருவாக அங்கு முதல் போட்ட நிறுவனதாரர்களின் பங்கு முக்கியமானது. இந்த நூலின் ஆசிரியர் ஜோதிஜி அவர்கள், இந்த தொழில் ஈடுபட்ட நிறுவனதாரர்கள் எனப்படும் முதலாளிகளைப் பற்றியும் அவர்கள் செய்த, ஏற்றுமதி – இறக்குமதி தொழில் திருப்பூரில் பெற்ற வளர்ச்சியைப் பற்றியும் எடுத்துக் காட்டுகளோடு விளக்குகிறார். அதேசமயம் இறக்குமதியாளரிடம் தான் பேசியபடி போட்ட  ஒப்பந்தத்தை நிறைவேற்றாததால் கோடிக் கணக்கான ரூபாய் மதிப்புள்ள ஆர்டர்களை இழந்தவர்கள், காமத்தால் தொழிலை சொத்துக்களை அழித்தவர்கள்,  என்றும்  உதாரணம் காட்டுகிறார்.

“உலகமயமாக்கல் தத்துவத்தில் இறக்குமதியாளரின் சட்டங்கள் ஒவ்வொன்றாய் திருப்பூருக்கு உள்ளே வர, நிறுவன முதலாளிகள் தங்களின் வாலைச் சுருட்டிக் கொள்வதை தவிர வேறொன்றும் செய்ய முடியவில்லை . நிறுவனங்களின் உள்ளே பணிபுரிபவர்களின் வயது கணக்கெடுக்கப்பட்டது. தொழிலாளிகளின் அடிப்படை வாழ்வாதார வசதிகள் சோதிக்கப்பட்டது. 

சோதித்த முடிவு சாதகம் என்றால் ஒப்பந்தம். இல்லையென்றால் நிறுவனங்களுக்குப் பாதகம்.. நிறுவனத்தின் கழிப்பறை சுத்தம் முதல் பணியாளர் வசதி வரை கண்கொத்திப் பாம்பாய் இறக்குமதியாளர்கள் கவனிக்கும் போது முதலாளிகளால் என்ன செய்து விட முடியும்? இன்றைய நவீன வசதியில் நேரடி ஒலி ஒளி காட்சியாய் ஏதோ ஒரு மூலையில் உட்கார்ந்து கொண்டு திருப்பூரில் உள்ள நிறுவனத்தின் மொத்த நிர்வாகத்தையும் தனக்குள் வைத்துக்கொள்ளும் இறக்குமதியாளர்களும் உண்டு. 

இறக்குமதியாளர்களின் வெளிப்படையான ஒப்பந்தம் குறித்து.... 
...
“ நான் இப்படித் தான். இது தான் எனக்கு வேண்டும். உனக்கு என்ன தேவை? அப்படியா? இது தான் என்னால் முடியும்? உனக்கு வாய்ப்பு இருக்கா இல்லையா? சரி இதை வைத்துக் கொள்? இதுதான் இதற்கான சட்டதிட்டம். மாறாதே........ நீ மாறினால் நானும் வேறு பக்கம் மாற்றிக் கொள்வேன். எளிமையான சட்டதிட்டம். அதற்கு நீங்கள் சுயநலம், பொதுநலம் போன்ற எத்தனை பெயர்களை வைத்துக்கொண்டாலும் அவர்கள் கவலைப்படுவது இல்லை. 

மேலும் ஏற்றுமதி – இறக்குமதியில் விளையாடும் அரசியல் பற்றியும் கோடிட்டு காட்டுகிறார்.

திருப்பூர் தொழிலாளர்கள்:

திருப்பூர் என்றாலே உழைப்பு என்று அழைப்பு தருகிறார்.

“தூங்கா நகரம், கோவில் நகரம், என்ற பெயர்கள் மதுரைக்கு இருப்பது போலவே திருப்பூரும் நிட் சிட்டி, டாலர் சிட்டி, பின்னாலாடை நகர், பனியன் நகரம் எனப் பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. ஆயத்த ஆடைகளின் (HOSIERY GARMENTS) உற்பத்தியை நம்பி மட்டுமே இந்த நகர் இயங்கிக் கொண்டிருக்கிறது. வெளிநாட்டுக்கு ஏற்றுமதி அல்லது உள்நாட்டுக்கு தேவைப்படும் ஆடைகள் என்று  இரண்டு விதங்களில் இங்குள்ளவர்கள் பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.” 

”தினந்தோறும் எட்டு மணி நேரம் தான் என்னால் உழைக்க முடியும்? என்பவர்கள் இந்த ஊர்ப்பக்கம் எட்டிப்பார்க்காமல் இருப்பது நல்லது.  தினந்தோறும் 16 மணிநேர உழைப்பு என்பது இங்கு சர்வசாதாரணம். “

புதுக்கோட்டை பக்கம் ஆலங்குடி அருகே உள்ள ஒரு கிராமம்தான் கருணாகரனுக்கு சொந்த ஊர். படிப்பு வரவில்லை என்று திருப்பூருக்கு வந்த அவன் ஆரம்பத்தில் செய்த வேலை தினக் கூலிக்கு காஜா பட்டன் அடிப்பது. அவன் தனது உழைப்பால் முன்னேறி பெரிய ஆளாகிய கதையை எடுத்துக் காட்டுகிறார்.

பணம் துரத்திப் பறவைகள்  என்ற தலைப்பில் திருப்பூர் தொழிலாளர்களது நிலையக் காட்டுகிறார். அதில் ஆண் தொழிலாளர்களை மட்டுமன்றி பெண் தொழிலாளர்களைப் பற்றிய விவரங்களையும் வெளிப்படையாகவே பேசுகிறார்.

” பெண்களின் பணி நேரமென்பது, தினமும் காலை எட்டு மணிக்குள் நிறுவனத்திற்குள் இருக்க வேண்டும். காலை ஐந்து மணிக்குள் சமையல் செய்தாக வேண்டும். இதற்கிடையே பெண்களின் மற்றொரு வேலையில் கவனம் வைத்தாக வேண்டும். தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டும். அவசரமாய் டப்பாவில் காலைக்கும் மதியத்திற்கும் சேர்த்து உணவை அடைத்துக் கொண்டு எடுத்துச் செல்ல வேண்டும். இரவு ஒரு மணி வரைக்கும் வேலையென்றால் நிறுவனங்களுக்கருகே கிடைக்கும் இரண்டு புரோட்டாக்கள் தான் உணவாகயிருக்கும். நள்ளிரவு வேலை முடித்து வந்தாலும்,  மறுநாள் காலை , எப்போதும் போல , காலை ஐந்து மணிக்கு எழுந்து தங்கள் கடமைகளைச் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் காலை எட்டு மணி வேலைக்கு செல்லமுடியாது. இரவு எத்தனை மணிக்கு வேலை முடிகின்றது ? என்பது முக்கியமல்ல. மறுநாள் காலை எட்டு மணிக்கு நுழைவது தான் முக்கியமாக இருக்கும். அரை மணி நேரம் தாமதம் என்றாலும் உள்ளே அனுமதிக்கமாட்டார்கள். “ 

மேலும்  தொழிலாளர்களது குடியிருப்புகள், அங்கும் வேலை பார்க்கும் இடங்களிலும்  நடக்கும் பாலியல் குற்றங்கள், கட்டை பஞ்சாயத்துக்கள் குறித்தும் அத்தியாயம் – 21 இல்” காமம் கடத்த ஆட்கள் தேவை” என்ற தலைப்பில் பேசுகிறார்.
.
திருப்பூர் இடைத் தரகர்கள்:

இப்போது  எல்லா மட்டத்திலுமே  இடைத் தரகர்கள் ஊடுருவி விட்டார்கள். மந்திரி பதவி வாங்கித்  தருவதற்கு  கூட ஆட்கள் இருக்கிறார்கள். 

திருப்பூர் மட்டும் இதற்கு விதிவிலக்கா? என்ன?

நிறுவனதாரர்களும் தொழிலாளிகளும் உழைத்து உருவாக்கும் திருப்பூரில் எல்லாவற்றிற்கும் இடைத் த்ரகர்களே முன் வந்து நிற்கிறார்கள். “ தரகர்கள் எனும் தரமற்ற கூட்டம் ( அத்தியாயம் – 4.) “ என்ற தலைப்பில் இடைத் தரகர்களின் மோசடித்தனங்களை சொல்லுகிறார்.

திருப்பூரில் வேலை வாய்ப்பு, மார்க்கெட்டிங்:

திருப்பூர் செல்லும் அனைவருக்கும் வேலை கிடைத்து விடுமா? இந்த வேலை வாய்ப்பை வைத்து நடக்கும் மோசடிகள் குறித்தும் அலசுகிறார்.” 

வேலை காலி இருக்கு ” என்ற பக்கங்களைப் படியுங்கள். 

 “ சந்தைக்கு போகலாம் வாரீங்களா ? “ என்று மார்க்கெட்டிங் முறைகளைப் பற்றி விவரிக்கிறார். மார்க்கெட்டிங் பற்றி ஆராயும் மாணவர்களுக்கு தேவையான குறிப்புகள்.

முடிவுரை:

ஆசிரியர் ஜோதிஜி (திருப்பூர்) அவர்கள் எழுதிய “டாலர் நகரம்” –  என்ற நூல் அனைவருக்கும் பயன்படக் கூடியது.  எனவே இந்நூலை  ஆங்கிலம், ஹிந்தி போன்ற பிற மொழிகளிலும் மொழி பெயர்க்க வேண்டும். ஒரு ஆராய்ச்சி நூல் போல பல விவரங்கள் அடங்கிய இந்த நூலுக்காகவே ஆசிரியருக்கு “முனைவர்” பட்டம் தரலாம்.

நூல் வெளியீடு: 4தமிழ்மீடியா படைப்பாய்வகம்
நூலின் விலை ரூ 190/ பக்கம் – 248  

புத்தகம் வாங்க

புத்தக விமர்சனங்கள்



Sunday, March 03, 2013

கடுகு சிறிது. காரம் அதிகம்

பிரபல பதிவர்களைப் படிக்கும் பிற பல  பதிவர்களில் நானும் ஒருவன். திடங்கொண்டு போராடு  என்னும் தலைப்பில் எழுதி வருகிறேன். 

தேம்பி அழும் குழந்தை நொண்டி - நீ  
திடங்கொண்டு போராடு பாப்பா  

என்று பாரதி சொன்ன வரிகளை தலைப்பாக மாற்றிக் கொண்டேன்.

பெரிதினும் பெரிது கேள், 

ரௌத்திரம் பழகு 

போன்ற பாரதியின் தலைப்பை மற்ற நண்பர்கள் எடுத்துக் கொண்டதால் நான் திடங்கொண்டு போராடுகிறேன்.

திடங்கொண்டு போராடு சீனு (டாலர் நகரம் புத்தக விமர்சனம்)

முன்குறிப்பு : 

டாலர் நகரம் புத்தகத்தில் இடம் பெற்ற ஜோதிஜியின் எழுத்துக்கள் நீல நிறத்தில் 

டாலர் நகரம். இருநூறுக்கும் அதிகமான பக்கங்களை உடைய சற்றே பெரிய புத்தகம். முதலில் புத்தகத்தைப் பார்த்த பொழுது சற்றே மலைப்பாய் இருந்தது. 

பொழுது போக்கிற்காகப் படிக்கும் புத்தகங்களுக்கும்,'குறிப்பிட்ட ஒரு விசயத்தைப் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டும்' என்பதற்காகப் படிக்கும் புத்தகங்களுக்கும் நிறையவே வித்தியாசம் உண்டு.

ஜோதிஜி எழுதி இருக்கும் டாலர் நகரம் இரண்டாவது ரகம்.

உண்மையை சொல்லவேண்டும் என்றால் முதலில் படிக்கும் பொழுது ஒரு சில இடங்களில் சலிப்பு தட்டியது என்னவோ உண்மை, 

ஆனால் புத்தகத்தை மீண்டும் ஒருமுறை புரட்டும் பொழுது தான் அதில் ஜோதிஜியின் உழைப்பு மிக தெளிவாக தெரிந்தது. 

திருப்பூர், திருப்பூர் சார்ந்த தொழிற்சாலைகள், அதிகார வர்க்கத்திற்கும், அரசியல் வர்க்கத்திற்கும் இடையில் பலிகடாவாகும் திருப்பூர் சார்ந்த மக்கள் என்று அனைத்து தளங்களிலும் இந்தப் புத்தகம் பயணிக்கிறது. 
  
கல்லூரிப் படிப்பு முடிந்ததும் ஒரு சாதாரண மனிதனாக திருப்பூருக்குள் நுழைந்தவர், தன் அசாதாரணமான உழைப்பின் மூலம் திருப்பூர் உற்பத்தி உலகத்தின் மிக முக்கியமான சக்தியாக உருவெடுத்துள்ளார். அவர் கடந்து வந்த பாதைகளின் மூலம் டாலர் நகரத்தை முழுமையாக சுற்றிக் காட்ட முயன்றுள்ளார்.

"சுற்றிக் காட்ட முயன்றுள்ளார்" என்று நான் கூற காரணம் வீடு சுரேஷ் அவர்களின் விமர்சனம் தான், 

ஒருவேளை அவரது விமர்சனத்தை படிக்காமல் டாலர் நகருக்குள் நுழைந்திருந்தால் "சுற்றிக் காட்ட முயன்றுள்ளார்" என்பதற்குப் பதிலாக சுற்றிக் காட்டியுள்ளார் என்று தான் எழுதியிருந்திருப்பேன். 

ஜோதிஜியின் ஆரம்பகட்ட வாழ்க்கை தோல்விகளை மட்டுமே அடித்தளமாகக் கொண்டு ஆரம்பித்ததால், புத்தகம் முழுவதுமே சில தன்னம்பிக்கை வார்த்தைகளை ஆங்காங்கே பதிவு செய்துள்ளார்.  

என்னுடைய திட்டமிடுதலும், விருப்பங்களும் நிறைவேறாத ஆசையாகவும், கனவாகவும் தான் தொடர்ந்தது. ஆனால் விடா முயற்சிகளை மட்டும் நான் பத்திரப்படுத்தி வந்தேன். 

திருப்பூர் பற்றி நான் அறிந்தது, கொடிகாத்த குமரன், உள்ளாடைகள் உற்பத்தியாகும் இடம், சாயக் கழிவால் நொய்யலாறை முடமாக்கி விவசாயிகளை நடக்க விடாமல் செய்த மற்றும் செய்து கொண்டிருக்கும் இடம், தமிழகத்தின் முக்கியமான ஏற்றுமதி நகரம் மற்றும் தொழிற்களம் தளத்தின் இயங்குதளம். 

ஓட்டுமொத்த தமிழகமும் தற்போது இந்தியாவும் திருப்பூரை தேடி வருவதற்கான முக்கியமான காரணம்,"முக்கால்வாசிப் பேர்கள் தங்களுடைய குடும்பக் கடன் தொல்லைகள் பொறுக்க முடியாமற் தான் திருப்பூருக்கு வருகிறார்கள்." என்று ஜோதிஜி குறிப்பிடுவது நானும் நேரிடையாக அறிந்து கொண்ட உண்மை., 

குடும்ப சூழலும், திருப்பூர் வேலை வாய்ப்புகளும் ஒரு குடும்பத்தில் இருக்கும் அத்தனை பேருக்கும் வேலை கொடுத்து விடுவதால் திருப்பூர் முழுவதும் ஒரு அசாதரணமான சூழல் நிலவுவதை இந்தப் புத்தகம் தெளிவாகக் காட்டுகிறது.

உழைப்பிற்குப் பெயர் போன திருப்பூரின் மற்றொரு முகம் சோகமும் கொடூரமும் சமவிகிதத்தில் கலக்கப்பட்ட, விடைதெரியா வாழ்வாதாரக் கேள்விகளை சுமந்து கொண்டு நிற்கும் நகரமாக இருக்கிறது.     

பெண்களும் குழந்தைகளும் வேலைக்குச் செல்வதால் குடும்பத் தலைவனின் குடும்ப பாரம் சற்றே குறைகிறது, ஆனால் அவனோ புகை மது மாது என்று தடம் மாற அவன் மனைவியின் தலையில் மொத்த பாரமும் விழுகிறது. 

காலை எட்டு மணி வேலைக்குச் செல்வதற்கு முன், குடும்பத்திற்கு, குழந்தைகளுக்கு தேவையான முன்னேற்பாடுகளை அதிகாலையிலேயே எழுந்து செய்தாக வேண்டும். மூன்றுவேளைக்குமான உணவு, குழந்தைகள் பள்ளி செல்வதற்கான ஏற்பாடுகள் அத்தனையையும் செய்திருக்க வேண்டும். இவற்றைக் கடந்து வேலைக்கு சென்றால் அங்கே ஆண்வர்க்கம் தரும் காம தொல்லைகள். தேவைபட்டால் பின்னிரவு வரையிலும் வேலை பார்க்க வேண்டிய சூழலில் சிக்கித் தவிக்கும் பெண்கள். பின்னிரவு கடந்து வீடு வந்தாலும், அடுத்த நாள் அதிகாலையில் எழுந்து அதே போன்ற மற்றுமொரு நாளில் சிக்கித் தவிக்க வேண்டிய சூழல் தான் திருப்பூர் வாழ் பெண்களுக்கு.

அப்பா அம்மா இருவரும் வேலைக்கு செல்வதால், அரவனைக்கப்பட வேண்டிய குழந்தைகள் தறிகெட்டுசெல்ல நேர்கிறது, பின் அவர்களும் வேலைக்கு செல்ல, கிடைக்கும் வருமானத்தை என்ன செய்வதென்று தெரியாமல் தவறான வழிகளில் செலவிடுகிறார்கள். 

திருப்பூரில் வேலைக்கு செல்லும் பெண்களின் நிலைமை நினைத்துப் பார்க்கவே கஷ்டமாய் இருக்கிறது. 

ஜோதிஜியின் எழுத்துக்களில் திருப்பூர் பெண்கள்,

சில சமயம் வேலை முடித்து ஒன்பது மணிக்கு உள்ளே நுழையும் அம்மாவின் குரலை, பாதி தூக்கத்தில் காதுகள் கேட்கும்.. குழந்தைகளின் மூளை உணராது. 12 மணி நேரமும் நின்று கொண்டே பார்த்த வேலையின் காரணமாக வீட்டுக்கு திரும்பி வரும்பொழுது பாதி உயிருடன் தான் வந்து சேர முடியும். 

வீட்டுக்குள் நுழையும் போது மூலைக்கொன்றாய் புரண்டு கிடக்கும் குழந்தைகளின் பாசத்தை விட, அவளின் உயிர் கேட்கும் பசியே, பிரதானமாய் இருக்கும். குழந்தைகள் கொட்டி கவிழ்த்து இருந்தால் கூட திட்ட முடியாமல், இருப்பதை உண்டு ஓரமாய் சுருள வேண்டும். காலையில் எழும் போது, காதுக்குள் கேட்கும் இரைச்சல் காணமல் போய் இருக்கும்.                

வாரத்தில் எந்த நாளில், பொதுக் குழாயில் குடிதண்ணீர் வருமென்று இங்குள்ள மாநகர மேயருக்கும் தெரியாத ரகசியமாய் இருக்கிறது. உடைபட்ட குழாய்கள் தாண்டி, ஒழுகிய தண்ணீர் போக, வரக்கூடிய தண்ணீர் வாராவாரம் என்பது மாறி சிலசமயம் மாதம் கூட ஆகலாம். 

அதனால் என்ன?

நாலு சந்து தாண்டி போனால், நடு சாமத்தில் அமைதியாய் பிடித்து வர, வாழ்ந்து கொண்டிருப்பவர்களுக்கு தெம்பு இருக்கிறது. இவர்களிடம் ஓட்டு வாங்கி அடுத்த முறையும் ஆட்சியைப் பிடித்து விடலாமென்று ஊரெங்கும் கழுதை கூட திங்க முடியாத பிளக்ஸ் போர்ட் கட்ட அரசியல்வாதிகளிடம் பணமும் இருக்கிறது. 

காமப் பார்வைக்கு பலியாகும் பெண்களின் நிலை குறித்து 

எவருக்கும், எந்த குற்ற உணர்வும் தோன்றாத அளவிற்கு, சராசரி சிந்தனைகளுடன் கலந்துவிட்டது. தற்போது பாலுணர்வு என்பது பண்டமாற்று மிறை போல் ஆகிவிட்டது. 

பணிபுரியும் படித்த பெண்கள், தாங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இது போன்ற நரக வேதனையை தாண்டி தான் வர வேண்டும். பலர் தாண்டி வருகிறார்கள். சிலர் ஆசைகளுக்காக தங்களை மாற்றிக் கொண்டு விடுகிறார்கள். பெண்களை தங்கள் இச்சைகளுக்கு பயன்படுத்திக் கொள்ளும் சில முதலாளி அம்மாக்களும் இதில் அடக்கம். 

முறையான நிர்வாகமின்மை, தரகர்கர்கள் தரும் தொல்லை, குறைந்த முதலீட்டில் தொழில் தொடங்க ஏற்படும் இடையூறுகள், குடும்ப உறுப்பினர்களின் நிர்வாக தலையீடல், தொழிலாளர்களுக்குள் நடைபெறும் உள் அரசியல் என்று தொழிற்சாலைகளுக்குள்ளும் அசாதாரணமான சூழலே நிலவுகிறது.   

பல லட்சங்கள் முதலீடு மற்றும் பல தொழிலாளர்களை நிர்வாகம் செய்து தொழிற்சாலை நடத்தும் நிர்வாகம் கூட மூளையையும், ஆங்கில அறிவையும் மட்டுமே மூலதனமாக கொண்டு செயல்படும் தரகர்கள் முன் அடிபணிந்து போக வேண்டிய ஒரு வித்தியாசமான சூழல் நிலவுகிறது. அத்தகைய தரகர்கள் பற்றி ஜோதிஜி குறிபிடுவது 

அவருக்கு மெசர்மென்ட் டேப் பிடித்து ஆடைகளை அளக்கத் தெரியாது. துணிகளுக்கு இடையேயான வித்தியாசம் தெரியாது. மொத்தத்தில் இந்தத் தொழில் குறித்து எந்த அறிவும் இல்லை. கற்று வைத்துள்ள ஆங்கில அறிவின் மூலம் இரண்டு மாதத்தில் நான்கு லட்ச ருபாய் கிடைத்து இருக்கிறது. நான் இந்தத் தொகையை சம்பாதிக்க வேண்டுமென்றால் குறைந்தது இரண்டு வருடங்களாவது உழைக்க வேண்டும். இது தான் இந்த தொழிலின் சாபக் கேடு. 

தொழிற்சாலைகளுக்கு தேவையான பல லட்சம் லிட்டர் தண்ணீர் பூமியில் இருந்து உறிஞ்சப்படுகிறது, நிலத்தடி நீர் வற்ற வற்ற ஆழ்துளைக் குழாய்கள் இன்னும் இன்னும் ஆழமாய் சென்று கொண்டுள்ளன. விவசாயம் படுத்துவிட்டது, விவசாயத்திற்கு தேவையான குடிநீர் முற்றிலும் சாய நீராக மாற்றப்பட்டு விவசாய பூமி முழுமையான சாய பூமியாக மாற்றப்பட்டுவிட்டது.

சாயப்பட்டறைகளை மூடும்படி விவசாயிகள் போராடுகிறார்கள், சாயநீர் சுத்திகரிகபட்டு மீண்டும் உபயோகப்படுத்தும் படியாக மாற்றப்படுகிறது என்று நிர்வாகம் உறுதி கூறினாலும் அவர்கள் எப்படியெல்லாம் அரசாங்கத்தை ஏமாற்றுகிறார்கள் அல்லது வளைத்துப் போட்டுள்ளார்கள் என்பதை தெளிவாக எழுதியுள்ளார்.   

தொழிற்சாலை கழிவுகள் மொத்தமாக திருப்பூரை பாழ் செய்துவிட்டது. அதுபற்றி 

பல நாட்கள் கழித்து மழை பெய்ய, மழை நீருடன் சாயக் கழிவு நீரும் ஒன்றாக சேர்ந்து விட, நீரனைத்தும் பாழாகிப் விடுகிறது. ஒரத்துப்பாளையம் அணையில் ஒரே நாளில் 20 அடி உயரும் சாயக் கழிவு கலந்த நீரால், யாருக்கும் எந்தப் பயனும் இல்லை.

மத்திய அரசாங்கத்தின் பொறுப்பில்லாத வர்த்தக மற்றும் ஏற்றுமதிக் கொள்கைகள் திருப்பூரை நலிவடைய செய்து கொண்டே உள்ளது என்பதை மிகத் தெளிவாகக் குறிப்பிட்டு உள்ளார். உலக சந்தையில் போட்டி நாடுகள் நம்மை போட்டி போட்டு முந்திக் கொண்டிருக்கும் வேளையில் சிங் அரசு இன்னும் சைலண்ட் மோடிலேயே இருப்பது வருங்கால திருப்பூருக்கும் இந்தியாவிற்கும் ஆபத்து, தனது மொத்த கோபத்தையும் ஒற்றை வரியில் வெளிப்படுத்தி இருக்கிறார் ஜோதிஜி. 

ஜட்டி போடாமல் இருக்க பழகிக் கொள்ளுங்கள் அது பின்னால் உங்களுக்கு உதவக்கூடும். 

எவ்வளவு தொழிற்சாலைப் பிரச்சனைகள் இருந்தாலும் பிழைக்க தெரிந்த முதலாளிகள், அரசியல் தெரிந்த முதலாளிகள் பிழைத்துக் கொண்டு தான் இருகிறார்கள்.

"இன்றைய திருப்பூர் ஏற்றுமதியில் முதன்மை இடத்தில் இருக்கும் நிறுவனத்தின் ஆண்டு வருமானம் 700 முதல் 800 கோடிக்குள் உங்களுக்குப் பிடித்த எண்களை நீங்களே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். அவர்கள் வருத்தப்பட மாட்டார்கள்." என்று ஜோதிஜி குறிப்பிடும் இந்த வார்த்தைகள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.    

மேலும் அந்த பணம் தின்னும் முதலாளிகள் விரும்புவது கீழ்க்கண்ட வார்த்தைகளைத் தான் 

நீ உழைத்துக் கொண்டே இரு. இரவு பகல் பாராமல் உன்னால் உழைக்க முடியுமா? முழு இரவும் முழித்து வேலை பார்த்துவிட்டு மறுநாள் காலை  எட்டு மணிக்கு வந்து நிற்க முடியுமா? நீ தான் முதல் தகுதியாளன். நாளை செத்துவிடப் போகிறாயா? நல்லது? உன் தம்பியை கொண்டு வந்து சேர்த்து விட்டு செத்துப் போ. எட்டு மணி நேர நிர்வாக அமைப்பா? அது எதற்கு? சொன்னதை செய். சட்ட திட்டங்கள், அரசு அதிகாரிகள்? அவர்கள் கிடக்கிறார்கள். அவர்கள் வந்து இறங்கும் பொது பார்த்துக் கொள்ளலாம்.             

ஜோதிஜியிடம் சில கேள்விகள் அல்லது வேண்டுகோள்கள் 

இது விறுவிறுப்பான கதை சொல்லும் புத்தகம் அல்ல. விசயங்களை தெரிந்து கொள்வதற்கான புத்தகம் அதனால் சில இடங்களில் மீண்டும் மீண்டும் வரும் சில பகுதிகளை வெட்டி இருக்கலாம்.

ஆங்கிலப் பள்ளியும் அரை லூசுப் பெற்றோரும் என்னும் பகுதி சிறப்பான கட்டுரையாக இருந்தாலும் அந்தக் கட்டுரைக்கும் டாலர் நகரத்திற்கும் தொடர்பு இல்லை, புத்தகம் படிக்கும் பொழுது அதன் வேகத்தை இது தடுப்பது போல் இருந்தது. அதில் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம். 

திருப்பூர் பஞ்சாலை நூற்பாலை நிட்டிங் செக்சன் போன்றவற்றை புத்தகம் மூலம் சுற்றிப் பார்த்துவிட்டேன், நேரில் பார்க்க வாய்ப்பு கிடைக்குமா. (இது சற்றே தனிப்பட்ட அவா)...  

திருப்பூர் உங்களை இனிதே வரவேற்கின்றது. டொங்...டொங்...

என்னுடைய பார்வையில் 
   
டாலர் நகரம் - நம்மைத் தொட்டுக் கொண்டிருக்கும் உள்ளாடைகளைப் பற்றிய புத்தகம் அல்ல இது, ஆடை உற்பத்திக்காக உழைக்கும் மக்களின் வாழ்வியலை தொட்டுச் செல்லும் புத்தகம். திருப்பூர் பற்றி தெரிந்து கொள்ள நினைப்பவர்கள் தைரியமாக வாங்கிப் படிக்கலாம்.   

டாலர் நகரம் புத்தகம் வாங்க நினைக்கும் நண்பர்கள் ஜோதிஜியின் எண்ணையும் 94431 71966, சென்னையை சேர்ந்த நண்பர்கள் எனது 99402 29934 எண்ணையும் தொடர்பு கொள்ளவும். 

டாலர் நகரம் - ஜோதிஜி - 4தமிழ்மீடியா வெளியீடு- விலை 190   

புத்தக விமர்சனங்கள்