Thursday, June 30, 2011

ராஜபக்ஷே மகா கெட்டிகாரர்.

இந்த தொடரின் தொடக்கம் இங்கேயிருந்து

தொடர்ந்து வாசித்துக் கொண்டிருப்பவர்களுக்கு ஒரு கேள்வி இயல்பாக எழ வேண்டும்?  அதென்ன ஸ்பெக்ட்ரம் பிரச்சனை, தயாநிதி மாறன் இவருக்குப் பின்னால் உள்ள மலேசிய தொழில் அதிபர் ஆனந்த கிருஷ்ணன் என்று தொடங்கி இப்போது இந்த களம் எங்கங்கோ போய்க் கொண்டேயிருக்கிறது.?கடந்த பல அத்தியாயங்களில் ஆனந்தகிருஷ்ணன் வந்தபாடில்லையே என்ற சந்தேகம் எழு வேண்டும்?  உண்மை தான்.  சர்வதேச தொழில் அதிபர்களின் முதலீடுகள் மட்டும் கனமாக இருக்காது.

அவர்களின் ஒவ்வொரு நடவடிக்கைகளுமே மர்மமாகவே இருக்கும். இப்போது இந்த அத்தியாயத்தில் ஒரு இடத்தில் நம்ம ஆனந்த கிருஷ்ணன் தலைகாட்ட வருகிறார்.  அதுவும் எப்படி என்பதை நீங்கள் தான் புரிந்து கொள்ள வேண்டும். இது தவிர இந்த தொடரின் முக்கிய நோக்கமென்பது இறுதி கட்ட போராட்டத்திற்காக முன்னேற்பாடுகளாக ராஜபக்ஷே என்ன செய்தார்? எதையெல்லாம் சர்வதேச நாடுகளிடம் விட்டுக் கொடுத்து இந்த வெற்றியை பெற்றுள்ளார் என்பதோடு இதன் மூலம் இந்தியா எதிர்காலத்தில் சந்திக்க போகின்ற சவால்கள் தான் நமக்கு முக்கியமானதாகும்.

அதில் ஒரு கதாபாத்திரம் தான் ஆனந்த கிருஷ்ணன்.

சேது சமுத்திர திட்டத்தைப்பற்றி உங்களுக்குத் தெரியும் தானே?

குறிப்பாக திமுக கடந்த மத்திய அரசில் அங்கம் வகித்த போது டி.ஆர்.பாலு தொட்டதெல்லாம் பொன்னாகிக் கொண்டிருந்த காலம்.  கூரையை பிய்த்துக் கொண்டு கொட்டோ கொட்டென்று அவருக்கு கொட்டியது. ஆனால் இராமர், வானரம் என்று ஆயிரத்தெட்டு காரணங்கள் சொல்லி அந்த திட்டமும் இறுதியில் அதோகதியாகி பாதியில் நின்று விட்டது.  நமக்கு இப்போது சேது சமுத்திர திட்டம் முக்கிய பிரச்சனையில்லை.  காரணம் இது போன்ற விசயங்களை நிறுத்த உதவிய,  கூலிக்கு மாறடித்த சுப்ரமணியசாமிக்குத் தான் ரொம்ப முக்கியம்.  அவர் நினைத்தபடியே சுபமங்களம் என்று பாடிவிட்டு நகர்ந்து விட்டார்.  நம்மவர்களும் இந்த திட்டத்தின் மூலம் சுருட்டியவரைக்கும் லாபம் என்று அதைப்பற்றி மறந்து விட்டார்கள்.  

2005 ஜுலை 2ந் தேதி இந்த திட்டம் துவங்கப்பட்டது.

மிகப் பெரிய அளவில் எதிர்பார்ப்பை உருவாக்கியது.

இதே சமயத்தில் 2006 ஆம் ஆண்டு இறுதியில் சீனா மன்னார் வளைகுடாவில் பெட்ரோலியம் கிடைக்கின்றதா என்பதை ஆராய்ந்து பார்க்கின்றோம் என்று இலங்கையிடம் அனுமதி கேட்டது.  2007 மார்ச்சில் எந்த வித டெண்டரும் இல்லாமல் ராஜபக்ஷே தனது சீன பயணத்தின் போது சீனாவுக்கு வழங்கினார்.  ஏறக்குறைய சேதுசமுத்திர திட்டம் தொடங்கி 20 மாதங்கள் கழித்து இந்த திட்டம் இலங்கையால் சீனாவுக்கு வழங்கப்பட்டது.

இந்த சமயத்தில் சேதுசமுத்திர திட்டத்தில் பாக் நீரிணைப் பகுதியில் உள்ள பெரும்பாலான பணிகள் நிறைவுக்கு வந்து இருந்தது.  இதன் தொடர்ச்சியாக அதன் தெற்குப் பகுதியான ஆதாம் பாலத்தின் மீது செய்யப்பட வேண்டிய பணிகள் துவங்கியிருந்தது.  சேதுசமுத்திர கப்பல் கழகம் மும்முரமாக தங்கள் உழைப்பை காட்டிக் கொண்டிருந்த நேரமும் கூட.

சீனாவுக்கு மன்னார் வளைகுடாவில் பெட்ரோலிய தூரப் பணிகளுக்காக வழங்கப்பட்ட பகுதியென்பது சேது சமுத்திர திட்ட பாதைகளுக்கு அருகே ஏறக்குறைய 20 கீமீ தொலைவில் அமைந்து இருந்தது. மொத்ததில் உள்ளே வரக்கூடிய செல்லக்கூடிய அத்தனை கப்பல்களையும் சீனா தனது கண்காணிப்பில் வைத்துக் கொள்ள முடியும். இதே சமயத்தில் செட்டி நாட்டு சீமான் ப.சிதம்பரம் பலமுறை தொடர்ந்து கூப்பாடு ஒன்றை எழுப்பிக் கொண்டிருந்தார்.

அதாவது சேது சமுத்திர திட்டத்தை விடுதலைப்புலிகள் சீர்குலைக்க அதிகம் வாய்ப்புள்ளது என்பதை தொடர்ச்சியாக அறிக்கை வாயிலாக தெரிவித்துக் கொண்டிருந்தார். ஆனால் அருகே சீனா செய்து கொண்டிருந்த வேலைகளையும், அதன் கண்காணிப்பில் தான் இந்த சேது சமுத்திர திட்டமே நடந்து கொண்டிருப்பதையோ ப.சிதம்பரம் மட்டுமல்ல துறைப் பொறுப்பில் இருந்த டி.ஆர்.பாலு கூட மறந்தும் கூட மூச்சு விடவில்லை.

 காரணம் என்ன?  

சரி பெரிய இடத்து பொல்லப்புக்குள்ள இப்ப நாம போக வேண்டாம்.  இப்ப இந்த இடத்தில் இன்னோரு ஆச்சரியத்தையும் நாம் பார்க்க வேண்டும். 

2008 பிப்ரவரி மாதம் இலங்கை அரசு மன்னார் வளைகுடாவில் இருந்த மூன்று பகுதிகளில் பெட்ரோலிய தூரப்பணிகளுக்காக டெண்டர் விட்டது. இந்தியாவின் சார்பாக ஓன்என்ஜீசி நிறுவனத்துடன் மற்றொரு நிறுவனமும் கலந்து கொண்டது.

அந்த நிறுவனத்தின் பெயர் Cairn India.  

பெயரில் இந்தியா இருக்கிறதே அப்ப இது இந்திய நிறுவனமா? என்று யோசிக்காதீங்க.  இந்த டெண்டரில் குறிப்பாக வடக்கு கிழக்காக உள்ள பகுதிகளில் குறிப்பாக வடக்கில் உள்ள புத்தளத்தை அடுத்துள்ள பகுதியைத்தான் இரண்டு நிறுவனங்களும் கைப்பற்ற போட்டா போட்டி போட்டது.  அதற்கும் காரணம் உண்டு.  ஆனால் போட்டியின் இறுதியில் 2008 ஆம் ஆண்டு இந்தியா நிறுவனத்திற்கே இந்த டெண்டர் கிடைத்தது.

இதற்கு பின்னால் உள்ள காரணம் புத்தளத்திலும் PEARL 1 என்ற பகுதியிலும் சீனா பெட்ரோலிய ஆராய்ச்சி செய்கின்றோம் என்று வேறொரு ஆராய்ச்சியையும் செய்து கொண்டிருந்தார்கள்.  அதாவது சீனா உருவாக்கிய உளவு நடவடிக்கைகளை இந்தியா கவனித்து விடக்கூடாது என்பதற்காகவே மட்டுமே ஒன்என்ஜிசி க்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது.  அப்புறம் மற்றொரு விசயத்தையும் நாம் இந்த இடத்தில் பார்க்க வேண்டும்.  இந்த நிறுவனம் குறிப்பாக இதே இடத்தில் தான் தங்கள் செயல்பாடுகளை அமைக்க வேண்டும் என்பதற்கான காரணம் என்ன?

புத்தளத்தில் இருந்து இந்த நிறுவனம் அமைந்த இடத்திலிருந்து தமிழ்நாட்டில் உள்ள கூடங்குளத்திற்கு 300 கீமீ. இது தவிர தூத்துக்குடிக்கு 250 கீமீ.

செய்வினை, சூனியம் போன்றவைகள் எல்லாம் இப்ப உங்க ஞாபகத்திற்கு வரனுமே?

சரி, இப்ப இந்த இந்தியா என்று பெயர் வைத்துள்ள இந்த நிறுவனம் யார்ரென்று பார்த்துவிடலாம்.


Cairn India  என்ற நிறுவனம் முறைப்படி ஒரு இங்கிலாந்து முதலாளிக்குச் சொந்தமானது.அவர் பெயர் பில் கேம்பெல். (Bill Gammell).  இவர் தான் இந்த நிறுவனத்தின் 64 சதவிகித பங்குகளை வைத்துள்ளார்.  1979 ஆம் ஆண்டில் Castle Cairn Financial Services என்ற நிறுவனத்தை தொடங்கினார்.  இந்த நிறுவனத்தின் முக்கிய பணி என்பது பெட்ரோலிய்ப் பொருட்கள் எங்கங்கு கிடைக்கின்றதோ அங்கே போய் தனது செயல்பாடுகளை தொடங்குவது.  இதன் தொடர்ச்சியாக இந்த நிறுவனம் Cairn Energy என்ற நிறுவனத்தை தொடங்கியது.

1996 ஆம் ஆண்டு இந்தியாவில் இயங்கிக் கொண்டிருந்த ஆஸ்திரேலிய நிறுவனமான Command Petroleum Ltd பெரும்பாலான பங்குகளை வாங்கி தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து இந்தியாவிற்குள் தனது சேவையை விரிவுபடுத்த தொடங்கிய போதே மேல்மட்ட நிலையில் உள்ள அரசியல்வாதிகள், அதிகாரவர்க்கத்தினர் போன்ற அத்தனை புனித ஆத்மாக்களோடு நல்லுறவை ஏற்படுத்திக் கொண்டது.  

இந்தியாவிற்குள் தொழில் தொடங்கி அதுவும் நல்ல லாபகரமான நிறுவனமாக வளர வேண்டுமென்றால் முக்கியமாக குறுக்குவழியில் சென்றால் தானே முடியும்?

அதைத்தான் தொடக்கத்திலே இந்த நிறுவனம் செய்யத் தொடங்கியது.  2000 ஆம் ஆண்டில் இந்தியாவின் கிழக்கு மற்றும் மேற்கு கடல் பகுதிகளில் பெட்ரோல் மற்றும் எரிவாயு இருப்பதை கண்டறிந்து தனது பணியைத் தொடங்கியது.  2004 ஆம் ஆண்டு ராஜஸ்தானுக்கு அருகே உள்ள கடல்பகுதியில் மிகப் பெரிய பெட்ரோலிய வளம் இருப்பதைக் கண்டு கொண்டது.  இந்த நிறுவனத்தில் மலேசிய நிறுவனமான Petronas நிறுவனத்திற்கு 13 சதவிகித பங்குகள் உள்ளது.  இந்த மலேசிய நிறுவனத்திறகு யார் முக்கியமான பொறுப்பாளியாக இருப்பவர்?  மலேசிய தொழில் அதிபர் ஆனந்த கிருஷ்ணன்.  

சரி, இந்த இந்தியாவின் இயக்குநர் யார்? 

திரு நரேஷ் சந்திரா சேகனா.முக்கிய பொறுப்பில் இருப்பவர்.  இவரைப்பற்றி சிறு குறிப்பு வரைக? 

1990 ஆம் ஆண்டு இந்தியாவின் பாதுகாப்பு செயலாளராகவும், உள்துறை செயலாளராகவும், கேபினட் செயலாளராகவும், 1992 முதல் அப்போதைய பிரதமர் நரசிம்மராவ்க்கு ஆலோசகராகவும் இருந்தவர். 1995 முதல் குஜராத் ஆளுநராகவும் இருந்தவர்.  1996 முதல் 2001 வரை அமெரிக்காவிற்கான இந்திய தூதவராகவும் இருந்தவர்.  அதிலும் குறிப்பாக 1981 முதல் 1984 வரைக்கும் இலங்கைக்கான ஏற்றுமதி கொள்கைகான காமன்வெல்த் ஆலோசகராவும் இருந்தவர்.

சற்று மூச்சு விட்டுக கொள்ளுங்க.  

முறைப்படி இலங்கை கொடுத்த டெண்டரை கைப்பற்றியது மலேசியாவின் பெட்ரோனஸ் நிறுவனம்.  அதற்கு காரணகர்த்தவாக முன்னால் நின்றவர் நரேஷ் சந்திரா சேகனா.  ஆனந்த கிருஷ்ணன் யாருக்கு நெருக்கமான கூட்டாளி?  இந்தியாவிற்கா?  சீனாவுக்கா?

நம் இந்தியாவில் மகத்தான ஆச்சரியம் ஒன்று எப்போதும் உண்டு.

ஒருவர் உயர்ந்த பதவியில் இருந்தாலும், இந்தியாவின் ராஜரகஸ்யங்களை காத்திருந்த பதவியாகக்கூட இருக்கலாம்.  ஆனால் அவர் ஓய்வு பெற்ற பிறகு அவரைப்பற்றி எந்த கேள்வி கேட்பாடும் இருக்காது.  எங்கு வேண்டுமானாலும், எந்த அந்நிய நிறுவனத்தின் கூடவும் புரிந்துணர்வை உருவாக்கிக் கொள்ளலாம்.  லாபத்திற்கு, தங்கள் சுய லாபத்திற்காக இவர்களைப் போன்றவர்கள் சோரம் போகமாட்டார்கள் என்பதற்கு என்ன நிச்சயம்?

ஒன்றோடு ஒன்று முடிச்சுப் போட்டு பார்த்துக் கொள்ளுங்க. 

இலங்கையைப் பொறுத்தவரையிலும் இநதியாவை பகைத்துக் கொண்டு இந்த டெண்டரை நேரிடையாக சீனாவுக்கு கொடுத்து விட முடியாது.  அதே சமயத்தில் சீனா சம்மந்தப்பட்ட ஆனந்த கிருஷ்ணன் நிர்வாகத்தில் உள்ள மற்றொரு நிறுவனத்திற்கு கொடுத்து விட்டால் பிரச்சனை முடிந்து விட்டது.  மொத்தத்தில் இந்தியாவால் வேடிக்கை பார்க்கக்கூடிய சூழ்நிலை.

அப்ப இந்த தொழில் விளையாட்டில் ஜெயித்தது? 

இந்தியாவின் இறையாண்மைக்கு,பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு விடுதலைப்புலிகள் காரணமாக இருந்து விடுவார்கள் என்ற இந்த வார்த்தைகளை வைத்துக் கொண்டு இன்று வரைக்கும் ஆட்டம் காட்டிக் கொண்டிருக்கும் ராஜபகேஷவை எப்பேர்பட்ட ஆள் என்று உங்களுக்கு புரிமே?

                                                                       $$$$$$$$$$$$
குறிப்புரை 

தொடர்வாசிப்பில் இருக்கும் நண்பர்களுக்கு.

இது போன்ற கட்டுரைக்ளுக்கு நீங்கள் கொடுத்த ஆதரவு எனக்கு மிகுந்த ஆச்சரியத்தை அளித்துள்ளது.  இந்த கட்டுரையுடன் 329 என்ற எண்ணிக்கை முடிவுக்கு வந்து அடுத்த கட்டுரையில் தலைப்பு 330 என்ற நிலைக்கு வரப்போகின்றது.  தேவியர் இல்லத்தோடு இணைத்துக் கொண்ட நண்பர்களின் எண்ணிக்கையும் 330.  இது எதிர்பாரத ஒன்று.  ரீடர், மின் அஞ்சல், பேஸ்புக், ட்விட்டர் என்று கடந்த சில மாதங்களில் நிறைய நண்பர்கள் அறிமுகமாகி உள்ளார்கள்.  அணைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி.  இந்த கட்டுரையின் இடையில் சில நண்பர்கள் என்னுடன் பேச வேண்டும் என்றார்கள்.  சிலர் இது போன்ற விசயங்கள் எழுதும் போது கவனமாக இருங்க என்றார்கள்.  இது போன்ற மனசஞ்சல விசயங்கைளை தாண்டி வருவதற்காகவே நான் மனதிற்குள் நினைத்தபடியே இதுவரைக்கும் சமயம் கிடைத்த போது ஒரே மூச்சில் எழுதி வைத்து தினந்தோறும் வெளியிட்டு வந்தேன். அதிகமாக பின்னூட்டங்களுக்கு பதில் கூட அளிக்க முடியவில்லை.  .

ஈழம் தொடர்பாக எழுதும் போது என்ன விதமான எதிர்வினைகள் வரும் என்பதை ஏற்கனவே ஈழம் தொடர் எழுதிய போதே கண்டு கொண்டேன் என்பதால் நண்பர்களின் வேண்டுகோளை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

மன்னிக்கவும்.

குறிப்பாக இதன் முதல் பகுதியை 4 தமிழ்மீடியா தனது தளத்தில் தொடராக வெளியிட அனுமதி கேட்டு அதன்படியே என் கட்டுரையின் முதல் பகுதியும் வெளியானது.  ஆனால் இதற்கிடையே 4 தமிழ்மீடியா தளத்திற்கு குறிப்பிட்ட மக்களின் தாக்குதல் (ஏற்கனவே பலமுறை அவர்களுக்கு நடந்து கொண்டிருப்பதும் .கூட) காரணமாக மீள் கட்டமைப்பு நடந்து கொண்டிருப்பதால் அந்த குழுமமும் விடாமல் தனது சேவையை தொடர்ந்து கொண்டேயிருக்கிறது.  இது குறித்த மேற்கொண்டு விபரங்கள் அவர்களே வெளியிட்டுள்ளார்கள்..  


வருகின்ற ஜுலை 3 தேவியர் இல்லத்தின் மூன்றாம் ஆண்டு வலையுலக எழுத்துப் பயணம் தொடங்குகின்றது. 

இதுவரைக்கும் விமர்சனம் அளிக்காமல் எப்போதும் போல தொடர்ந்து கொண்டிருக்கும் நண்பர்களின் கருத்துக்களை, விமர்சனங்களை தெரிந்து கொள்ள ஆசைப்படுகின்றேன். வெளிப்படையாக உங்கள் மனதில் நினைக்கும்   என் எழுத்துக்கள் குறித்த நிறை, குறைகளை அவஸ்யம் ஜுலை 3 அன்று வெளியாகும் கட்டுரையின் பின்னூட்டத்தின் வாயிலாக தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன்.


நான் கடந்து வந்த பாதை (எழுத்துப் பயணத்தில்) என்ற அமைப்பு மேல்பகுதியின் பக்கவாட்டில் பொருத்தியுள்ளேன்.

உங்களின் வெளிப்படையான விமர்சனம் என்னை மேலும் செல்ல வேண்டிய பாதைக்கு உறுதுணையாக இருக்கும் என்று நம்புகின்றேன். 

அதன் பிறகு ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு இந்த தொடர் தொடங்கும்.

ஜுலை 3 அன்று வழி மேல் விழி வைத்து.

நன்றி.

Wednesday, June 29, 2011

ராஜபக்ஷே அல்வா வியாபாரி

இப்போது விடுதலைப்புலிகளுக்கும், இலங்கை இராணுவத்திற்கும் போர் வெடித்து விட்டது. இலங்கைக்குள் இருந்த தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் முதல் ஆள்காட்டிகள் மூலம் அடையாளம் கண்டு கொண்டவர்கள் வரைக்கும் அழித்து முடிப்பதற்கு இலங்கை இராணுவத்திற்கு பெரிய அளவுக்கு ஆயுதங்கள் தேவையில்லை. ஆனால் இப்போது போரை தொடங்கியாகி விட்டது. 

வெளியே சென்று வாங்கவும் கஜானாவில் டப்பும் இல்லை.  2006 ஆம் ஆண்டு சீனாவின் நோரிங்கோ நிறுவனத்துடன் கூடிய ஒப்பந்தத்தை புதுப்பிக்க நினைத்துக் கொண்டிருக்கும் இந்த வேளையில் ஏற்கனவே சீனாவிடமிருந்து வாங்கிய ஆயுதங்களுக்கு கடனாக 200 மில்லியன் டாலர் வேறு கொடுக்க வேண்டியுள்ளது. இப்போதுள்ள சூழ்நிலையில் இந்த கடனைக் கூட திருப்பி கொடுக்க முடியாது.  எனவே தான் ராஜபகேஷ சீனாவை ஆயுத வியாபாரியாக மட்டும் பார்க்க விரும்பாமல் தன் நேச கூட்டாளியாக மாற்றிக் கொள்ள வேண்டிய அவஸ்யத்தை உணர்ந்தார்

இன்று வரைக்கும் இறுதிக்கட்ட போர் தொடங்குவதற்கு காரணம் மாவிலாறு அணையை விடுதலைப்புலிகள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து பிரச்சனை செய்கிறார்கள்.  இதை நம்பி பாசனம் செய்து கொண்டிருக்கும் தமிழர், சிங்களர், முஸ்லீம் மக்கள் பாதிப்படையக்கூடாது என்பதற்காகவே தொடங்கினோம் என்ற இலங்கையின் கூற்றைத்தான் உலகம் நம்பிக் கொண்டிருக்கிறது. விடுதலைப்புலிகளே இந்த யுத்தத்தை தொடங்க காரணமாக இருந்தார்கள் என்று தான் இன்று வரைக்கும் நம்பப்படுகின்றது.  ஆனால் உண்மை என்பது வேறு?

இதே காலகட்டத்தில் ஐரோப்பிய ஒன்றியம் விடுதலைப்புலிகள் இயக்கத்தை தடை செய்ததைத் தொடர்ந்து இலங்கை இராணுவத்தினரால் உள்ளே நடத்தப்பட்டுக் கொண்டிருந்த வன்முறை தாக்குதல்கள் அளவு கடந்து போய்க் கொண்டிருந்தது. இதன் காரணமாக இலங்கை அரசு பிரதிநிதிகளையும், விடுதலைப்புலிகளையும் தனித்தனியாக நார்வே குழுவினர் நார்வே தலைநகர் ஓஸ்லோவில் ஜுன் 8 ல் சந்தித்தனர். ஆனால் இந்தியாவின் குறுக்கீடு காரணமாக இருவரையும் சந்திக்க வைக்க முடியாமல் இறுதியில் நார்வேயும் பின்வாங்கியது.

ஓஸ்லோவில் இருந்து விடுதலைப்புலிகள் திரும்பி வந்து கிளிநொச்சிக்கு சென்ற மறுநாள் முதல் இலங்கையின் இராணுவமும், கப்பற்படையும் சேர்ந்து தமிழ்மக்களின் குடியிருப்புகளின் மீது தொடர்ச்சியாக தாக்குதல்களை தொடங்கியது.  இந்த தாக்குதல் ஏற்கனவே ஏப்ரல் முதலே தொடங்கியிருந்தது. மூதூர் பகுதிக்குள் உள்ளே உணவு, மருந்துப் பொருட்கள் எதுவும் நுழைந்து விடாத அளவுக்கு ரவுண்டு கட்டி அடித்துக் கொண்டிருந்தார்கள். சுமார் 30 ஆயிரம் பேர்கள் குடியிருப்பின்றி அனாதை ஆக்கப்பட்டார்கள்.  பள்ளிக்குடியிருப்பு, தங்கபுரம், சந்தனவேட்டை, சீனிவாசபுரம், சின்னகுளம், இத்திகுளம், பட்டாளிபுரம் உட்பட 12 கிராமங்களில் வாழ்ந்து கொண்டிருந்த 3000 தமிழ்க் குடும்பங்கள் தண்ணீரில்லாமல் தவித்தன. 

இந்தப் பிரச்சனைகளை சர்வதேச நாடுகளிடம் விடுதலைப்புலிகள் முறையிட்ட போது எந்த தீர்மானமான உடனடி நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. விடுதலைப்புலிகளின் குணாதிசியம் தெரிந்தது தானே? நம்மை நோக்கி இவர்களை வரவழைக்க வேண்டுமென்றால் இது தான் ஒரே வழியென்று மாவிலாறு மதகை விடுதலைப்புலிகள் மூடினார்கள். ஆனால் இதை வைத்துக் கொண்டே உள் அரசியல் சதுரங்க காய்களை ராஜபக்ஷே கவனமாக நகர்த்தி தாக்குதலை தொடங்கினார். இதில் மற்றொரு ஆச்சரியமும் உண்டு.  போர் நிறுத்த கண்காணிப்பு குழு முன்னிலையில் உடன்பாடு ஏற்பட்டு விடுதலைப்புலிகளின் தளபதி எழிலன் மதகை திறக்கச் சென்ற போது மாவிலாறு அணையை கைப்ற்றுகிறோம் என்று மீண்டும் இலங்கை ராணுவம் குண்டு வீச்சுக்கள் மூலம் விடாமல் தாக்கிக் கொண்டேயிருந்தது. போர் நிறுத்த கண்காணிப்பு குழு தலைவர் பதுங்கு குழியில் மறைந்து உயிர் தப்பினார்.  மொத்தத்தில் விடுதலைப்புலிகள் எதற்கும் ஒத்துவரமாட்டுகிறார்கள் என்பதை உலகத்திற்கு பரப்ப வேண்டும்.  அதே சமயத்தில் உள்ளேயிருப்பவர்கள் ஓட்டு மொத்தமாக ஒழித்துக் கட்டிக் கொண்டேயிருக்க வேண்டும்.  அதைத்தான் ராஜபக்ஷே அன் கோ தெளிவாக செய்து கொண்டிருந்தது.

இதே சமயத்தில் ராஜபக்ஷே மற்றொரு காரியத்தையும் செய்து கொண்டிருந்தார்.  பாகிஸ்தான் நாட்டிடம் அதாவது 2006 ஆகஸ்ட் மாத இறுதியில் எங்களுக்கு 60 மில்லியன் அளவிலான ஆயுத உதவிகள் தேவை என்று கோரிக்கை வைத்திருந்தார்.

காரணம் பாகிஸ்தானும் இலங்கையுடன் நெருங்க நேரம் பார்த்துக் கொண்டிருந்தது.  வேறு என்ன காரணமாக இருக்க முடியும்?  ஏற்கனவே இந்தியாவுடன் இலங்கை போட்டுருநத தடையற்ற சுதந்திர வியாபார ஒப்பந்தம் போல எங்களுடனும் ஒரு ஒப்பந்தம் போட் வேண்டும் என்று மறைமுகமாக கோரிக்கை வைத்திருந்தது. இந்த கோரிக்கை பாகிஸ்தான் அரசால் 2003 ஆம் ஆண்டு முதல் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தாலும் கூட அப்போது அது கேட்பாரற்று இருந்து.  இப்போது பாகிஸ்தானும் இலங்கைக்கு உதவ காத்திருந்தது.  காரணம் பாகிஸ்தான் கோரிக்கையின்படி 2005 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் அந்த ஒப்பந்தத்தில் இலங்கை கையெழுத்திட்டுருக்க இபபோது ராஜபகேஷவுக்கு வசதியாக போய்விட்டது.

ஒரு வேளை சீனா சரியான சமயத்தில் உதவாவிட்டால் என்ன செய்யலாம்?  அதற்கும் அடுத்த யோசனை ராஜபகேஷவிடம் தயாராக இருந்தது.  சீனாவின் நட்பு நாடான ஈரானினிடம் போய் நின்றது.  அதாவது தென் இலங்கையில் உள்ள உமா ஆற்றில் 100 மெகாவாட் திறனுள்ள மின் நிலையம் அமைப்பதற்காகவும் கொழும்பு நகருக்கு அருகேயுள்ள சபுகஸ்கந்தா பெட்ரோல் சுத்திகரிப்பு நிலையத்தினை விரிவாக்கம் செய்வதற்காக கொடுப்பதன் மூலம் ஈரான் அரசு மூலம் தேவைப்படும் உதவியை பெற ஏற்பாடு செய்யப்பட்டது. 2007 நவம்பர் மாதம் இது தொடர்பாக ராஜபக்ஷே ஈரான் பயணமானார். எந்தவித டெண்டர் இல்லாமலேயே இவற்றை ஈரானுக்கு வழங்கப்படும் என்ற தனிப்பட்ட உறுதியையும் ராஜபக்ஷே ஈரான் அரசிடம் தெரிவித்தார். 

2007 நவம்பர் 29 அன்று ஈரானுடன் இலங்கை எட்டு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டது. இப்போது ராஜபகேஷவின் ஒரே நோக்கம் சீனாவை தன் பக்கம் வரவழைக்க வேண்டும்.  அதிலும் குறிப்பாக அமெரிக்காவின் எதிர்ப்பு நாடுகளை தன் பக்கம் கொண்டு வருவதன் மூலம் எளிதாக சீனா தங்கள் பக்கம் வந்து விடும் என்று அவர் நம்பி தொடங்கிய ஒவ்வொரு செயல்பாடுகளும் அவருக்கு இறுதியில் பழமாக மாறத் தொடங்கியது. எந்த அளவுக்கு ராஜபக்ஷே இதில் தீவிரமாக இருந்தார் என்பதற்கு இந்த சினன உதாரணமே போதுமானது.  ஈரான் குறிப்பிட்ட (சபுகஸ்கந்தா சுத்திகரிப்பு நிலைய விரிவாக்கம்) தொகையானது அப்போதைய சந்தை நிலவரத்தைக் காட்டிலும் 300 சதவிகிதம் அதிகமாக கேட்டது.  ஆனால் இதற்கு உடன்பாடு ஏற்படும் பட்சத்தில் ஒரு பெருந்தொகை இலங்கையின் வளர்ச்சி நிதிக்காக வழங்கப்படும் என்ற ஈரான் கொடுத்த உறுதிமொழியின் அடிப்படையில் ராஜபஷே எந்த கேள்வியும் கேட்காமல் ஒத்துக் கொண்டார். 

இதற்குள் மற்றொரு ராஜதந்திரமும் உண்டு.  ஒரு வேளை எதிர்காலத்தில் இந்தியா இலங்கைக்கு எதிரணியில் நிற்கும் பட்சத்தில் இலங்கை மண்ணில் ஈரான் இருப்பது பல வகையிலும் உதவக்கூடும் என்ற கணக்கும் உண்டு. இதே சமயத்தில் ராஜபக்ஷே உறுதியளித்தபடியே சீனா 2006  மே மாதம் 900 மெகாவாட் திறனுடைய அனல்மில் நிலையத்திற்காக கட்டுமான பணிகள் தொடங்கியது. இந்த திட்டத்தை ஏற்கனவே இலங்கை அரசு இந்தியாவின் தேசிய அனல் மின் குழுமத்துடன் (National Thermal Power Corporation – NTPC) செய்து கொள்வதாக சொல்லியிருந்ததை மாற்றிவிட்டு இப்போது அதை சீனாவின் கையில் கொடுத்து இந்தியாவிற்கு அசல் திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வாவை பரிசளித்தது.

ஆனால் நிரந்தரமாக இந்தியாவை பகைத்துக் கொள்ள முடியுமா?

இந்த இடத்தில் இலங்கை ஆட்சியாளர்களின் தில்லாலங்கடி ஆட்டத்தைப் பற்றி சிலவரிகள் மூலம் பார்த்து விடலாம்.

1993 ஆம் ஆண்டு அப்போது இருந்த நரசிம்மராவ் அரசின் எதிர்ப்பை மீறி புத்தளத்தில் அமையவிருந்த அரசு சிமெண்ட் நிறுவனத்தை யாருக்கு விற்றார்கள் தெரியுமா?  பாகிஸ்தானின் தாவாக்கல் நிறுவனம்.  இந்த நிறுவனம் பாகிஸ்தானின் உளவு நிறுவனங்களுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பவர்களுக்குச் சொந்தமானது

இப்போது சீனாவுக்கு கொடுத்துள்ள அனல்மின் நிலையத்திற்கு ஒரு மாற்று ஏற்பாடு ஒன்றை இந்தியாவிற்கு கொடுக்க வேண்டும் அல்லவா?

இந்த இடத்தில் தான் ராஜபக்ஷேவை நீங்கள் பாராட்டியே ஆக வேண்டும்.  ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்த தானைத்தலைவன். 

எப்படித்தெரியுமா?

2006 ஆகஸ்ட்டில் விடுதலைப்புலிகளிடமிருந்து கைப்பற்றிய கிழக்கு இலங்கையில் இருந்த சம்பூர் பகுதியை (திருகோணமலைப்பகுதியில் உள்ள பகுதி) இந்தியா வசம் ஒப்படைத்தது. சம்பூர் பகுதியில் 500 மெகாவாட் திறனுள்ள மின் நிலையம் அமைக்க இந்தியாவிடம் இலங்கை கோரிக்கை வைத்தது. இலங்கை மின்சார வாரியமும், இந்தியாவின் தேசிய அனல் மின் கழகமும் இணைந்து நிறுவுவதே இதன் திட்டமாகும்.

இதன் மூலம் என்ன லாபம் என்கிறீர்களா?

இதனைச் சுற்றியுள்ள பகுதிகளை இந்தியாவே விடுதலைப்புலிகளிடமிருந்து காத்துக் கொள்ள வேண்டும்.  திருகோணமலைப் பகுதி என்றால் இந்தியாவுக்கு சொல்லவா வேண்டும்.  

எப்பூடி? 

Tuesday, June 28, 2011

சீனாவின் கண்பார்வையில் இந்தியா

" இலங்கை அரசுக்குச் சொந்தமான சொத்திணை நட்பு நாட்டவருக்கு பகிர்ந்து கொடுப்போம். இதன் மூலம் அவர்களின் நன்மதிப்பையும் நட்பையும் பெறுவோம்.  இவ்வாறு பெற்ற துணையைக் கொண்டு இந்தியாவின் இராணுவ தலையீடுகளிலிருந்து இலங்கையைக் காப்போம்"

1977 ஆம் ஆண்டு ஜெயவர்த்னே கூறிய வாசகம் இது.

காரணம் தொடக்கம் முதலே இலங்கை ஆட்சியாளர்களுக்கு இந்தியாவின் மகா எரிச்சல்.  அதற்கான காரணத்தையும் சென்ற அத்தியாயத்தில் பார்த்தோம். இந்தியா இலங்கையில் உருவாக்கியுள்ள தொழில் முதலீடுகளின் மூலம் அதிக லாபத்தை ஈட்டிக் கொண்டிருந்தாலும் அவ்வப்போது உள்ளே வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழர்களை வைத்துக் கொண்டு மிரட்டிக் கொண்டிருப்பதே முக்கிய காரணமாக இருந்தது.


2003 செப்டம்பர் மாதத்தில் ரணில் விக்ரமசிங்கே சீனா சென்றிருந்த போதிலும்
முழுமையான புரிந்துணர்வை உருவாக்க முடியவில்லை.  ஆனால் இலங்கையை தாக்கிய ஆழிப்பேரலையின் தாக்கத்தால் 2004 டிசம்பருக்கு பிறகே சீனாவின் பார்வை சற்று மாறத் தொடங்கியது. இலங்கையின் மீது இப்போது சற்று மேம்பட்ட கரிசனம் உருவாகியிருந்தது. காரணம் சீனா தனது ஆயுதக்கிடங்கை உருவாக்கியிருந்த கல்லே என்ற கடற்கரை பகுதியில் ஆழிப்பேரலைகள் உருவாக்கியிருந்த சீரழிவை போக்க இலங்கைக்கு 14 லட்சம் டாலர் வழங்கியது.  இதன் தொடர்ச்சியாக சந்திரிகாவை சீனா தங்களது நாட்டுக்கு வரவழைத்து அடுத்த கட்டத்திற்கான செயல்பாடுகளை செய்யத் தொடங்கியது.

தென் இலங்கையில் இருந்த ஹம்பன்தோட்டா துறைமுகத்தை விரிவுபடுத்துவதற்கும், அங்கு ராட்சத எண்ணெய் கலன்களை அமைப்பதற்கும், மேற்கு இலங்கையில் புத்தளத்திற்கு அருகாமையில் அமர்ந்துள்ள நோரோச்சோலைக் கடற்கரை கிராமத்தில் 900 மெகாவாட் திறனுள்ள அனல் மின் நிலையம் ஒன்றை அமைப்பதற்கும் சீனாவின் உதவி தேவையென்று சந்திரிகா சீனா சென்றிருந்த போது அவர்களிடம் கோரிக்கை வைத்ததார்.

இலங்கை வைத்த கோரிக்கைகள் சீனாவுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. ஏன்எனில் ஹம்பன்தோட்டா சீனாவின் கீழ்வரும் பட்சத்தில் இந்துமகா சமுத்திரத்தில் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து சீனாவை நோக்கி வந்து கொண்டிருக்கும் எரிபொருள் நிரம்பிய கப்பல்களை கண்காணிப்பது எளிதாகிவிடும். மேலும் நோரோச்சோலையின் மின் நிலையம் அமைக்கும்பட்சத்தில் 70 கீமீ வடமேற்கு அருகேயுள்ள சேதுசமுத்திர திட்டத்தினை தங்கள் கண்காணிப்பில் கொண்டு வந்து விடமுடியும்.

2004 ஏபரல் முதல் 2006 ஜுலை வரைக்கும் இலங்கை இராணுவத்தினர் விடுதலைப்புலிகளின் மீது இராணுவ ரீதியான தாக்குதல்களை கொஞ்சம் கொஞ்சமாக அதிகப்படுத்திக் கொண்டேயிருந்தது. ரணிலும் ஆட்டத்தை விட்டு விலகி மாஜியாகிவிட் இப்போது மகிந்தாவுக்கு பம்பர் லாட்டரி போல ஒவ்வொன்றும் பழமாக மாறத் தொடங்கியது.

இப்போது மகிந்தாவுக்கு சீனாவை வெறும் ஆயுத வியாபாரியாக பார்ப்பதை விட இலங்கையின் முக்கியமான கூட்டளியாக மாற்றிக் கொள்ள வேண்டிய அவஸ்யத்தை உணர்ந்து ஒவ்வொரு அடியையும் கவனமாக எடுத்து வைத்தார்.
இந்தியாவுடன் நட்பாக இருப்பதை விட சீனாவை மிக நெருங்கிய கூட்டாளியாக உள்ளே கொண்டு வந்து விட்டால் பாதிப் பிரச்சனைகள் முடிந்துவிடும் என்று ராஜபக்ஷே தீர்மானமாய் நம்பி அதற்கான காரண காரியங்களில் கவனம் செலுத்தினார். காரணம் சீனாவை உள்ளே கொண்டு வந்தால் சீனாவின் ஆதரவு நாடுகளிடமிருந்து ஏராளமான உதவிகளை, ஆயுதங்களை பெற வாய்ப்பாக இருக்கும் என்பதை உணர்ந்து கொண்டார். முதல் வேலையாக அதுவரையிலும் புதுப்பிக்கப்படாமலிருந்த சீனாவின் நோரிங்க்கோ நிறுவனத்தின் ஒப்பந்தத்தை தூசி தட்டி மீண்டும் சீனாவை உள்ளே கொண்டு வரும் முயற்சியில் இறங்கினார்.


2006 ஆம் ஆண்டு கருப்பு ஜுலை கலவர நினைவு நாளுக்கு மூன்றாம் நாள் அதாவது ஜுலை 26 ஆம் தேதி இலங்கை விமானப்படையின் விமானங்கள் திருகோணமலை மாவட்டத்திலுள்ள மாவில் ஆறு அணையைச் சுற்றியிருந்த விடுதலைப்புலிகளின் முகாம் மேல் தொடர்ச்சியாக குண்டு போட்டு தாக்குதல்களை தொடங்கியது.  விடுதலைப்புலிகள் மாவிலாறு அணையை தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்டு தண்ணீர் திறக்க மறுக்கிறார்கள் என்ற காரணத்ததிற்காக இந்த தாக்குதல் என்று கூறியது.

இத்துடன் இலங்கை அரசுக்கும் விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கும் இருந்த சமாதான உடன்படிக்கு முறிநது வெளிப்படையான தாக்குதல்கள் உருவாகத் தொடங்கியது.

Monday, June 27, 2011

சீனா -- முத்துமாலை திட்டம்

இந்த தொடரின் தொடக்கம் இங்கேயிருந்து தொடங்குகின்றது. 

இப்போது மகிந்த ராஜபக்ஷே. தன் தம்பி கோத்தபய மூலம் உள்ளே நடத்திக் கொண்டிருந்த வீரவிளையாட்டுகளை கவனித்துக் கொண்டிருந்ததைப் போலவே மற்றொரு காரியத்திலும் கவனமாக இருந்தார். விடுதலைப்புலிகளை கூண்டோடு அழித்து முடிக்க வேண்டும்.

காரணம் அந்த அளவுக்கு உள்ளேயிருந்த சிங்கள இனவாத கட்சியான ஜேவிபி மகிந்தாவை படாய்படுத்திக் கொண்டிருந்தார்கள். கூட்டணியின் போது போட்ட ஒப்பந்தங்களை திரும்ப திரும்ப ராஜபக்ஷேவுக்கு நினைவூட்டிக் கொண்டிருந்தனர்.

விடுதலைபுலிகளை இராணுவ ரீதியாக தோற்கடிக்க வேண்டும்.

இது ஜேவிபியின் முக்கிய கொள்கையாக இருந்தது. ஜேவிபியை விட புலிகளை ஒழித்தே ஆக வேண்டும் என்று மகிந்தாவுக்கும் உள் மனதில் ஆசை தான். ஆனால் போர் என்றால் ஆயுதங்கள் வேண்டும். அதற்கு மாளாத பணம் வேண்டும்? என்ன செய்யமுடியும் என்று ஒவ்வொன்றின் சாதக பாதகங்களை பட்டியலிட்டுப் பார்த்தார்.

எந்த மேற்கித்திய நாடுகளும் இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்கு என்று கேட்டால் அணைவருமே பணம் தரத் தயாராகயிருக்கிறார்கள். ஆனால் இராணுவ ரீதியான முன்னேற்பாடுகளுக்கு ஒரு பயபுள்ளைகளும் திரும்பிப் பார்க்கத் தயாராக இல்லை. ரணில் காலத்தில் ஜெனிவா ஒப்பந்தம் போட்டபிறகு ஒவ்வொரு நாட்டிலும் போய் இலங்கையால் பிச்சை எடுக்க முடிந்தது. ஆனால் இப்போது என்ன செய்வது? எதைச் சொல்லி கேட்பது. விடுதலைப்புலிகளை இராணுவ ரீதியாக தோற்கடிக்க வேண்டும் எனறால் எவராவது பணம் தருவார்களா?

போய்யா போ.. போய் உள்ளேயிருக்கும் புள்ளகுட்டிகளை படிக்கவைக்கப் பாருய்யா என்று எட்டி உதைத்து அனுப்பிவிடுவார்கள். இடையிடையே புலிகளை அடித்து ஒடுக்க முற்பட்ட போது இந்த மேற்கித்திய நாடுகள் தான் சமாதானம் என்ற புறாவை பறக்கவிட்டார்கள்.

என்ன ஆச்சு?

விடுதலைப்புலிகள் கொழும்பு அரசவைக்கு வராதது தான் மிச்சம். அந்த அளவுக்கு முன்னேறிவிட்டார்கள். இதை இப்படியே வைத்திருக்கக்கூடாது?
என்ன செய்யலாம்?

இந்தியாவில் இப்போதுள்ள மன்மோகன் சிங் அரசாங்கம் எத்தனை உதவிகள் செய்து கொண்டிருந்தாலும் அதன் ஒவ்வொன்றுக்கும் பின்னாலும் ஓராயிரம் விசயங்களை விட்டுக கொடுத்து தான் இந்தியாவின் உதவியை பெற முடிகின்றது. காலம் காலமாக இந்தியா நம் மேல் சவாரி செய்வதை அனுமதிக்கக்கூடாது? நாம் தான் அவர்களை குனிய வைத்து கும்மி தட்ட வேண்டும். அதற்கு நமக்கு ஒரே ஆள் சீனா தான்.

பார்க்கலாம் !

ஒரு ஆட்டம் ஆடி பார்த்து விடலாம் என்ற மகிந்தா நினைத்தபடியே அடுத்த கட்ட நகர்வுகள் நகர ஆரம்பித்தது. தம்பி கோத்தபய மூலம் உள்ளேயிருக்கும் ஜனநாயகவாதிகள் முதல் சந்தேகப்படுபவர்கள் வரைக்கும் புதைக்குழிக்குள் அனுப்பும் பணியும் சுணங்காமல் போய்க் கொண்டேயிருந்தது. ஆனால் தம்பியின் பணி தொடர்ந்து முன்னேற வேண்டுமென்றால் ஆயுதங்கள் தேவை. அதற்கு சீனாவை இலங்கையின் பங்காளியாக மாற்ற வேண்டும் என்று நினைத்துக் கொண்ட மகிந்தா அதன்படியே செயல்பட ஆரம்பித்தார்.

ஆனால் இந்தியாவை பகைத்துக் கொள்ள முடியாது. 2008 ஆம் ஆண்டு இந்தியாவின் விருப்பதிற்கேற்ற இலங்கை சந்தையை Comprehensive Economic Partnership Agreement (CEPA) முழுமையாக இந்தியாவிற்காக திறந்து விட தயாராக இருந்த போதிலும் நிச்சயம் ஒர் அளவுக்கு மேல் இந்தியாவை பக்கத்தில் வைத்துக் கொள்ள முடியாது. இந்தியாவின் கூட உருவாகப் போகும் ஒப்பந்தமென்றாலும், போரும், போருக்கு பின்னால் உருவான தமிழர் அழிப்புகளை தமிழ்நாட்டில் எழும் கூக்குரல் திசைதிருப்பி விடக்கூடும். ஆனால் நிச்சயம் மற்றவர்கள் போல இந்தியாவை ஓர் அளவுக்கு மேல் சார்ந்து இருக்காமல் இருக்க சீனாவை இலங்கையின் முக்கியமான பங்காளியாக மாற்ற வேண்டும்.

சந்திரிகா, ரணில் ஏற்கனவே தோற்றது போல் நாமும் இந்த முறை தோற்றுப் போய்விடக்கூடாது இது போன்ற பிரச்சனைகள் வராமல் இருக்க வேண்டுமென்றால் சீனாவின் உதவி நமக்கு ரொம்ப தேவை. மேலும் 1957 ஆம் ஆண்டு முதல் சீனாவுடன் கூடிய புரிந்துணர்வு இன்று வரைக்கும் நன்றாகவே உள்ளது. இவ்வாறு மகிந்தா மனதில் நினைத்துக் கொண்டிருந்ததைப் போலவே சீனாவும் மற்றொரு கணக்கு போட்டுக் கொண்டிருந்தது. அமெரிக்காவுடன் இந்தியா சேர்ந்து கொண்டு அடிக்கும் லூட்டிகளுக்கு அளவில்லாமல் போய்க் கொண்டேயிருக்கிறது. அமெரிக்கா வணக்கம் என்று சொன்னாலே இந்திய அரசியல்வாதிகள் சாஷ்டாங்கமாக கீழேயே விழுந்து கும்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதை இப்படியே விட்டுவிட்டால் நமக்குப் பின்னால் பல விதமான பிரச்சனைகள் உருவாகக்கூடும். இந்தியாவை தெற்காசியாவில் தனிமைப்படுத்த வேண்டுமென்றால் இலங்கையை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இதன் காரணமாகத் தான் சீனா தனது முத்துமாலை என்ற திட்டத்தை உருவாக்க ஆரம்பித்தது. சீன அரசின் கொள்கையான வங்காள தேசம், பர்மா, இந்தோனேஷியா, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளுடன் கொண்ட கொள்கைகளால் திட்டமிட்டு நகர்த்த தொடங்கின.

படத்தில் சுட்டிக் காட்டப்பட்டுள்ள நட்சத்திர குறீயிடுகள் முழுமையும் சீனாவின் திட்டமானதாக இருக்கிறது.

மத்திய கிழக்கு நாடுகளையே சீனா தனது எரிபொருள் தேவைகளுக்காக எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறது. இங்கிருந்து சீனாவை நோக்கிச் செல்லும் எண்ணெய் கப்பல்களின் பாதுகாப்பு என்பது சீனா அரசுக்கு மிக முக்கியமானதாகும். இதனை சாத்தியப்படுத்துவற்காகவே சீனா எகிப்தில் தொடங்கி பாகிஸ்தான் இலங்கை, வங்காளதேசம், பர்மா, தாய்லாந்து ஆகிய நாடுகளில் தனது கால்களை பலமாக ஊன்றிக் கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு செயல்பாடுகளும் தங்களது கண்காணிப்பு மூலம் கவனிக்க முடியும். இதன் காரணமாக்கத்தான் அந்தந்த நாடுகளுடைய கடற்படையுடன் தன்து கடற்படையை ஒன்று சேர்ந்து செய்ல்பட வைக்க விரும்புகின்றது.

பாகிஸ்தானின் (Gwadar),க்வாடார், வங்காள தேசத்தின் சிட்டாங், பர்மாவின் சிட்வி, (Sittwe), தாய்லாந்தின் (Kra Canal) க்ரா கால்வாய், வியட்நாமிற்கு 500 மைல் கிழக்கில் அமைந்துள்ள (Woody Islands)வுடி ஐலேண்டு விமானத்தளம், சீனாவின் ஹைனான் தீவு போன்ற இடங்களில் சீனாவின் கடற்படை நிலை கொள்வதற்காக பணிகள் நடந்து வருகின்றது.

இந்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் சீனா இலங்கையிடம் விரும்பி கேட்பது கடற்கரை நகரமான ஹம்பன் தோட்டா, இதை சீனா மிகப் பெரிய சரக்கு பெட்டமாக வளர்த்தெடுக்க விரும்புகின்றது

எனவே தான் சீனா இந்தியப் பெருங்கடலில் தனது நீண்ட நாள் பாதுகாப்பின் பொருட்டு இந்த முத்துமாலைத் திட்டத்தை செயல்படுத்த விரும்புகின்றது. இதனை புரிந்து கொண்ட மகிந்தா நிச்சயம் சீனா நமக்கு உதவும் என்று உறுதியாக நம்பினார். ராஜபக்ஷே தனது தம்பி கோத்தபயவிடம் உன் கடன் பணி செய்து கிடப்பதே என்று ஆசி வழிங்கி விட்டு அடுத்த கொள்முதல் வேலையில் இறங்கினார்.

Sunday, June 26, 2011

ராஜாதி ராஜா மகிந்த ராஜா


பெரிய அளவிலான மோதல்கள் 2006 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் மீளவும் ஆரம்பித்துள்ளன. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷேவும் அவரது சகோதரும் பாதுகாப்புச் செயலாளருமான கோத்தபாய ராஜபக்ஷேவும் குடிமக்களது பாதுகாப்பில் கரிசனை ஏதுவுமின்ற நாட்டின் வடக்கு கிழக்கில் ராணுவ நடவடிக்கைகளை முன்னெடுத்துக் கொண்டுருக்கின்றனர்


நியூயார்க்கில் இருந்து செயல்படும் மனித உரிமை கண்காணிப்பு அமைப்பு வெளியிட்டு அறிக்கை இது.  இந்த அறிக்கையை மனித உரிமைக் கழகம் வெளியிட்ட போது மகிந்தா முதல் ஆண்டு ஆட்சிக்காலத்தைக் கூட முடித்து இருக்கவில்லை.  மகிந்தா ஆட்சிப் பொறுப்புக்கு உள்ளே வந்ததும் மிகத் தெளிவாக தொடக்கம் முதலே செயல்படத் தொடங்கினார். காரணம் இது வரை ஆண்டுவிட்டுப் போன எந்த பிரதமர்களுக்கும் அதிபர்களுக்கும் இல்லாத அதிர்ஷட வாய்ப்புகளை நிறைவே இருந்தது. ஒவ்வொருவரும் உருவாக்கி விட்டு பாதியில் சென்ற காரியங்களை தனக்குச் சாதகமாக மாற்றிக் கொண்டு கனகச்சிதமாக செயல்படத் தொடங்கினார்.


தன் மனதில் வைத்திருந்த ஒவ்வொன்றையும் திட்டமிட்டு நடத்தத் தொடங்கினார்.

ராஜபக்ஷேயின் தந்தையின் பெயர் டான் ஆல்வின் ராஜபக்ஷே, சுருக்கமாக டி.ஏ. ராஜபக்ஷே. இவர் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை உருவாக்கிய பண்டாரநாயகாவின் வலதுகரம் போல் செயல்பட்டு விவசாய மற்றும் நிலம் துறைகளுக்கு அமைச்சராக இருந்தவர். ராஜபக்ஷேவின் பெரியப்பாவும் பிரபல அரசியல்வாதி. தந்தை இறப்புக்குப் பிறகு ராஜபக்க்ஷே 1969 ஆம் ஆண்டு நடந்த இடைத்தேர்தலில் முதன் முதலாக போட்டியிட்டு சொற்ப வித்யாசத்தில் ஜெயித்து பாராளுமன்றத்திற்குள் தனது 24 வயதில் நுழைந்து. மிக இளம் வயது பாராளுமன்ற உறுப்பினர் என்ற பெருமையை பெற்றவர். 

ராஜபக்ஷே 1976 ஆம் ஆண்டு இலங்கையின் சட்டக்கல்லூரியில் படிப்பை முடித்தவர். குடும்பத்தினரைப் போலவே அரசியல் தந்திரங்களில் கரைதேர்ந்தவர்.  இடையில் 1977 ல் பெற்ற தோல்விக்குப் பிறகு இவரின் அரசியல் வளர்ச்சி அம்பாந்தோட்டை பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுத்த 1989 முதல் ஏறுமுகமாகவே இருந்து அதிபர் பதவி வரைக்கும் கொண்டு வந்து சேர்த்தது.

இவரின் மனைவி பெயர் ஷிராந்தி விக்ரமசிங்கே. 1978 ஆம் ஆண்டு மிஸ் இலங்கையாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். உலக அளவிலான பல அழகிப் போட்டிகளிலும் கலந்து கொண்டவர். 1983 மே 13ந் தேதி  துரத்தி காதலித்து வந்த ராஜபக்ஷேவை மணம் முடித்தார்.  ராஜபக்ஷேவுக்கு மூன்று ஆண் குழந்தைகள். அதில் ஒருவர் இப்போது அப்பாவைப் போல வளர்ந்து வரும் இளம் அரசியல்வாதி.

இலங்கையில் ஆண்ட அரசியல்வாதிகள் நடத்திய பாதயாத்திரையைப் போலவே இவரும் 1992 ஆம் ஆண்டு பிரேமதாசாவிற்கு எதிராக நடத்திக் காட்டிய பாதயாத்திரை தான் இவரின் பெயரை இலங்கை முழுக்க பரப்ப உதவியது. 1994 ஆம் ஆண்டு சந்திரிகா குமாரதுங்கே இவரை தனது மந்திரிசபையில் தொழிலாளர் முன்னேற்றத் துறை அமைச்சராக நியமித்தார். தொடர்ந்து மீன்வளத் துறை அமைச்சரானார்.

ஏற்கனவே சந்திரிகாவுக்கு உதவியாய் பாதுகாப்புத் துறையில் இருந்தது அவரது மாமா. ஆனால் அவரால் விடுதலைப்புலிகளின் திட்டங்களையும் புரிந்து கொள்ளத் தெரியாமல் புலிகளின் வீரத்தினால் பெற்ற அடிவாங்கியது போல் இல்லாமல் தனது தம்பி கோத்தபயாவை பாதுகாப்பு செயலாளராக அமர வைத்தார்.

கோத்தபாய மே 1972ல் இலங்கை இராணுவத்தில் இரண்டாம் நிலை லெஃப்டினன்டாக வேலைக்குச் சேர்ந்தவர். இவரின் முழுப்பெயர் ஜார்ஜ் நந்தசேனா கோத்தபய ராஜபக்ஷே.,  1980 ல் ரெஜிமெண்டின் தளபதியாக உயர்ந்தவர். ஓய்வு பெற வேண்டிய இறுதி காலத்தில் ராணுவ பயிற்சி கல்லூரியில் வேலைக்குச் சேர்ந்து இளம் இராணுவ வீரர்களை உருவாக்கிக் கொண்டுருந்தவர். 1992ல் அமெரிக்காவில் குடியேறி அந்த நாட்டின் குடியுரிமையையும் பெற்றுருந்தவர்.

2005 ல் ஆட்சிக்கு வந்த அண்ணணுக்கு வாழ்த்துச் சொல்ல வந்தவரை மகிந்தா பாதுகாப்புச் செயலாளராக அமர வைத்தார். தம்பி உடையான் படைக்கு அஞ்சான் என்பது போல ஆட்சியின் தொடக்கத்திலேயே அட்டகாசமாக ஒவ்வொன்றையும் செயல்படுத்த தொடங்கினர்.

மகிந்தா ராஜபக்ஷே ஆட்சியில் அமர்ந்ததும் முதன் செய்த முத்ல் வேலை பாதுகாப்பு மற்றும் நிதித்துறை தன் கையில் வைத்துக் கொண்டது.  அடுத்து யாழ்பாணத் தளபதி சரத் பொன்சேகாவை ராணுவ தளபதியாக்கியது. பொன்சேகா 1970 ல் தரைப்படை வீரராக சிம்ஹா ரெஜிமெண்டில் வேலைக்குச் சேர்ந்தவர்.. 1950 டிசம்பர் 18ல் பிறந்தவர். சந்திரிகா ஆட்சியில் விடுதலைப்புலிகளுடன் நடந்த பல போரில் முக்கிய பங்கு வகித்தவர்.  விடுதலைப்புலிகளின் வீரச்செறிந்த யாழ்பாணத்தில் நடைபெற்ற சமரில் சிக்கி காப்பற்றப்பட்டவர். வடக்குப் பகுதிக்கு தலைமையக தலைவராக செயலாற்றியவர். மகிந்தா ஆட்சிக்கு வந்த சீஃப் ஆஃப் ஸ்டாப் பதவியில் இருந்த போது இவருக்கு முன்னால் வரிசையில் இருந்தவர்களை தள்ளிவிட்டு இவரை மகிந்தா ராணுவ தளபதியாக கொண்டு வந்தார். இவருக்கு அந்த தகுதி இருந்தது என்பதோடு இவரின் கடந்த கால அனுபவங்கள் தனக்கு தேவைப்படும் என்பதோடு தம்பி கோத்தபாயவுடன் ஒன்றாக பணியாற்றிவர் என்ற முறையில் மகிந்தா இவருக்கு முக்கியத்துவம் கொடுத்து முன்னால் கொண்டு வந்தார். கடைசியாக இலங்கையில் ஆட்சிக்கு வரும் ஒவ்வொரு ஆட்சியாளர்களும் செய்யும் சம்பிராதய கடமையான இந்தியாவை வந்து பார்த்து குசலம் விசாரித்தது. 


மகிந்த ராஜபக்ஷே, கோத்தபயா ராஜபக்ஷே, சரத்பொன்சேகா.

பிரபாகரன் இதுவரையில் எதிர்பார்ககாத தந்திரம், முரட்டுத்தனம், களமாடிய அனுபவ பெற்ற இந்த புதிய மூவர் கூட்டணி உருவானது

பிரபாகரன் யோசித்த புதியவரான மகிந்தாவுக்கு என்ன தெரியும்? என்ன சாதிக்க முடியும்? என்ற நோக்கம் இங்கிருந்து தான் அடிபடத் தொடங்கியது.  இதற்கு மேலாக மகிந்தாவுக்கு முக்கிய ஆதரவு கொடுத்துக் கொண்டுருப்பது சிங்கள இனவாத கட்சியான ஜேவிபி.. ராஜபக்ஷேவால் அவர்களை பகைத்துக் கொள்ள முடியுமா?  நாட்டின் அமைதியை அப்புறம் பார்த்துக் கொள்ளலாம்.  தன்னுடைய மாமாவிடம் கற்றுக் கொண்டதை, முன்னால் போட்டுக் கொள்ளும் துண்டை சரிசெய்தபடி உள்ளே அலட்டிக் கொண்டுருப்பவர்களை கணக்கு எடுக்கத் தொடங்கினர்.

இப்போது இவர்கள் கண்களில் முதலில் தென்பட்டது இலங்கை பாராளுமன்றத்திற்குள் வந்து மக்கள் சேவை செய்து கொண்டுருக்கும் தமிழர்களின் ஜனநாயக காவல்ர்கள். 

வேட்டை நாய் போல வேட்டையாடத் தொடங்கினர். 


மட்டக்களப்பு நாடளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் டிசம்பர் 24 2005 ல் நள்ளிரவு மட்டக்களப்பில் கிறிஸ்து பிறப்பு நாள் வழிபாட்டில் கலந்து கொண்டுருந்த போது உள்ளே வைத்து சுட்டுக் கொல்லப்பட்டு முதல் பலியை தொடங்கி வைத்தனர்.  இவருக்கு அடுத்து  வன்னியசிங்கம் விக்னேஸ்வரன் பாராளுமன்ற வேலைக்காக செல்லும் வழியில் ஏப்ரல் 7 2006 சுட்டுக் கொல்லப்பட்ட போது ஒரு பகுதி முடிவுக்கு வந்தது.  நாடாளுமன்ற உறுப்பினர் தேர்வு பட்டியலில் இருந்த ஆறுமுகம் செந்தில்நாதன்,  யாழ்பாண நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ், அம்பாறை நாடாளமன்ற முன்னாள் உறுப்பினர் சந்திர நேரு என்று தொடங்கி இவர்களின் வேட்டையாடல் தொடர்ந்து கொண்டுருந்தது. இந்த கண்க்கில் முக்கியமான ஒரு நபர் உண்டு. 


புலம் பெயர்ந்த தமிழ் மக்களால் அதிகம் படிக்கப்பட்டுக் கொண்டுருந்த புலிகள் ஆதரவு இணையதளத்தை நடத்திக் கொண்டுருந்த பத்திரிக்கையாளர் தர்மரத்தினம் என்ற தராகி சிவராம்.  ஒவ்வொருவரையும் சுற்றி  வளைத்து உள்வட்டம் வெளிவட்டம் ஒவ்வொன்றின் கணக்குகளையும் பார்த்து பார்த்து செயல்படுத்திக் கொண்டுருந்தனர்.   வடக்கு கிழக்கு பகுதிகளில் உள்ள ஊடக மக்களை மிரட்டலில் தொடங்கி ஆள் கடத்தல் வரைக்கும் நடந்தேற இதற்கிடையே இராணுவத்தினருடன் சேர்ந்து கொண்டு விடுதலைப்புலிகளுக்கு எதிர் அணியில் இருந்த ஆயுத குழுக்களும் ஆள் காட்டி வேலைகளை செய்து கொண்டுருந்தனர். மேலைநாடுகளின் அழுத்தம் மெதுவாக மேலே வரத் தொடங்கியது.

கோத்தபயாவின் தத்துவம் மிக எளிமையானது.  எதிரிகள் முக்கியம்.  அதைவிட எதிரிகளுக்கு உதவிக் கொண்டுருப்பவர்கள் அதை விட முக்கியம். 

அதையே தொடக்கத்திலேயே கோத்தபயா தெளிவாக செய்ய மனித உரிமைக் கழகம் அறிக்கை விடும் அளவிற்கு வந்து நின்றது.  தனது முயற்சியில் மனம் தளராத விக்ரமாதித்தன் போல தன்னுடைய கடமைகளை ஒவ்வொன்றாக ரசித்து ருசித்து கோத்தபயா செய்து கொண்டுவர உள்ளேயிருந்த பத்திரிக்கைகள் கூட மௌனிக்கத் தொடங்கியது.

இம் என்றால் சிறைவாசம். ஏன் என்றால் சிவலோக பதவி.

நார்வே தூதுவர் எரிக் சோல்கைம் பிரபாகரனுடன் நடத்திய பேச்சு வார்த்தைக்குப் பிறகு ஜெனிவாவில் நடத்தப்படும் பேச்சு வார்த்தைகளில் கலந்து கொள்வதாக விடுதலைப்புலிகள் இயக்கம் அறிவித்தது.  விடுதலைப்புலிகளின் அறிவிப்புக்கு மகிந்தா அரசு வேறொரு வகையில் பரிசு கொடுத்தது.  விடுதலைப்புலிகளின் மேஜர் கபிலன் சுட்டுக் கொல்லப்பட்டதோடு விடுதலைப்புலிகளின் நடத்திக் கொண்டுருந்த புனர்வாழ்வு கழகத்தின் 3 ஊழியர்களையும் அரசுபடைகளுடன் செயல்பட்டுக் கொண்டுருந்த ஆயுதபடைகள் கடத்திச் சென்றனர். பேசியபடி ஜெனிவா மாநாட்டில் அரசு சார்பில் கொடுக்கப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை அரசு நிறைவேற்றக்கூடாது என்று ஜாதிக ஹெல உறுமய கட்சி கூச்சலிட அணைத்துக்கட்சி கூட்டம் மகிந்தாவால் கூட்டப்பட்டது. பாராளுமன்ற தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களுக்க மட்டும் அழைப்பு கொடுக்காமல் சிங்கள இனவாத கட்சிகளை வைத்து கூட்டத்தை நடத்தி கும்மி தட்டி முடித்து வைத்தார்.

கூட்டத்தின் கூக்குரலாக எழுந்த அமைதி பேச்சு வார்த்தை என்ற பெயரில் பஞ்சாயத்து செய்து கொண்டுருக்கும் நார்வேயை நீக்க வேண்டும் என்பதோடு முடிவுக்கு வந்தது. மற்றொரு அதிர்ஷ்ட வாய்ப்பு மகிந்தா காதுக்கு செய்தியாக வர அடுத்த கட்ட நகர்வுகள் அப்போது தான் உண்மையிலேயே நகரத் தொடங்கியது.. சரத் பொன்சேகா கொடுத்த தகவலான கருணா உதவியோடு விடுதலைப்புலிகளை இராணுவ ரீதியாக தோற்கடிக்க முடியும் என்று முடிவாக காரியங்கள் நடந்தேறத் தொடங்கியது.  

Saturday, June 25, 2011

ரத்தச் சகதியின் காலடித் தடங்கள் 2

இப்போது ராஜபக்ஷே உள்ளே வந்துள்ள நேரம்.  இவரைப்பற்றி நாம் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.

இவர் முதன் முதலாக பிரதமர் பதவிக்கு வந்த விதத்தையும், பிறகு அதிபராக மாறிய வித்தைகளை நாம் இப்போது அவஸ்யம் தெரிந்து கொள்ள வேண்டும். .  இலங்கையில் இதுவரைக்கும் ஆண்டுவிட்டு சென்ற பிரதமர்கள், அதிபர்களை விட மகிந்தா மிக லாவகமாக கம்பி மேல் நடக்கும் வித்தையை கற்று வைத்திருபவர். திருமாவளவனை கட்டிப்பிடித்து எகத்தாள சிரிப்பு சிரித்து உதிர்த்த வார்த்தைகளை இன்று திருமா மறந்திருக்கக்கூடும்.

இலங்கை அரசியலில் ஏறக்குறைய மூன்றாம் நிலை தகுதியில் இருந்தவர். இந்த அளவுக்கு மேலேறி வர எப்படி சாத்யமானது?

காரணம் இவர் ஆட்சி அதிகாரத்தில் வந்தபிறகே அடுத்தடுத்த 33 மாதங்கள் ஈழத் தமிழர்களின் வரலாற்றில் மறக்க முடியாத நிகழ்வுகளாக இருந்தது.

இப்போது சரித்திர பாதைக்குள் சென்று மீண்டும் இங்கே திரும்பி வந்து விடலாம்.  

இலங்கைக்கு சர்வதேச நதி உதவி கோருவதற்கான மாநாட்டை 2003 ஜுன் ஜப்பானில் டோக்கியோ நகரில் நடத்த ஏற்பாடாகியிருந்தது.  இந்த ஏற்பாட்டை செய்து இருந்தவர்கள் அமெரிக்கா,ஐரோப்பிய யூனியன்,நார்வே,ஜப்பான் மற்றும் சார்பு நாடுகள். 

விடுதலைப்புலிகள் இயக்கத்துடன் நார்வே நாட்டின் தூண்டுதல் மூலம் ரணில் விக்கிரமசிங்கே சமாதான ஒப்பந்தங்கள் முன்னெடுத்துச் சென்றார் என்று பார்த்தோம் அல்லவா?  அதனைத் தொடர்ந்து திட்ட வரைவுக்காக அமெரிக்காவில் வாஷிங்டன் நகரில் 2002 ஏப்ரலில் ஒரு கூட்டம் நடத்த ஏற்பாடாகியிருந்தது. 

ஏற்கனவே அமெரிக்கா விடுதலைப்புலி இயக்கத்தை தடைசெய்யப்பட்ட பயங்கரவாத இயக்கமாக வைத்திருந்த காரணத்தால் கடவு சீட்டுக்கான அனுமதியும் கலந்து கொள்ள அனுமதியும் அளிக்கவில்லை. இது வரை ரணில் அரசாங்கத்துடன் நடத்தப்பட்டுக் கொண்டிருந்த ஒவ்வொரு சுற்று பேச்சு வார்த்தையின் போது உறுதியளித்திருந்தபடி எந்த செயல்பாடுகளும் நடைமுறைக்கு வந்தபாடியில்லை.  இதுவே பிரபாகரன் மனதில் ஏராளமான கேள்விகளை உருவாக்கி அளவு கடந்த வெறுப்பையும் உருவாக்கியிருந்தது. 

திட்ட வரைவுக்காக இப்போது வாஷிடங்டனில் நடக்கப் போகும் கூட்டத்தில் விடுதலைப்புலி இயக்க சார்பாளர்களைகளை கலந்து கொள்ள முடியாத அளவுக்கு ஏராளமான பிரச்சனைகளை உருவாக்கினார்கள். ஆனால் இதற்கு பின்னால் இருநது செயல்பட்டவர் ராஜீவ் நம்பியார். அது பின்னாளில் தான் வெளியே வந்தது. அமெரிக்காவில் நடைபெறப் போகும் கூட்டத்தில் அனுமதி மறுத்த நிலையில் பிரபாகரனுக்கு கோபத்தை உருவாக்க பொறுத்தது போதும். பொங்கியெழு என்று பிரபாகரன் சமாதான பேச்சு வார்த்தையில் இருநது விலகின்றோம் என்று அறிவித்தார். 

இதற்குப் பிறகு தான் ஒவ்வொன்றும் கோணலாக நகரத் தொடங்கியது.

விடுதலைப்புலிகள் இயக்கம் சமாதான பேச்சு வார்த்தைகளில் இருந்து விலகி நிற்க்ப் போவதாக ஒருதலை பட்சமாக அறிவிக்க அமெரிக்காவில் வாஷிடங்டன் மாநாடு ஏப்ரல் 14 ./15 அன்று விடுதலைப்புலிகள் இயக்கம் கலந்து கொள்ளாமலேயே நடந்தது.  இதன் காரணமாக ஜுன் 9 மற்றும் 10 தேதிகளில் ஜப்பான் நகர் டோக்யோவில் நடந்த ஈழப் புனரமைப்புக்கான உதவி வழங்கும் நாடுகளின் கூட்டத்தையும் விடுதலைப்புலிகள் புறக்கணித்தனர்.  

ரணில் ஆட்சியில் விடுதலைப்புலிகள் இயக்கத்துடன் நடத்தப்பட்டுக் கொண்டிருந்த ஒவ்வொரு பேச்சு வார்த்தையின் போது இந்தியா வெளியே இருந்து வேடிக்கை பார்த்துக் கொண்டுருந்தது.  உடல் நலம் குன்றியிருந்த ஆன்டன் பாலசிங்கம் இந்தியாவில் இருந்து கொண்டு எளிதாக சிகிச்சை பெற அனுமதி கேட்ட போது கூட மறுத்து விட்டார்கள்.  இதன் மூலம் நடந்து கொண்டிருக்கும் பேச்சு வார்த்தைகளில் இந்தியாவையும் கலந்து கொள்ள வைக்க வேண்டும் என்று எண்ணியிருந்த புலிககளின் நோக்கமும் அடிபட்டுப் போனது.

ஆனால் புலிகள் இயக்கத்திற்கு பன்னாட்டு நிர்ப்பந்தம் வேறு வகையில் உருவாக்கப்பட்டது.  ஜப்பான் மற்றும் நார்வே பிரதிநிதிகள் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த கிளிநொச்சி முகாமில் பிரபாகரனை சந்தித்தனர். டோக்கியோ மாநாட்டில் சந்திக்க அழைப்பு விடுத்தும் பிரபாகரன் அதனை நிராகரித்தார். ஏற்கனவே நடந்த பலசுற்று பேச்சுவார்த்யின் போது பேசியபடி வட கிழக்கிற்கான இடைக்கால சபையை முழுமையாகவும் உடனடியாகவும் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஆன்டன் பாலசிங்கம் இலங்கை பிரதமருக்கும் நார்வே அரசுக்கும் கடிதம் எழுதினார். இலங்கைக்கு பன்னாட்டு நிதி கிடைத்தாலும் புனரமைப்பு என்பது வெறும் கண்துடைப்பாக இருக்கும் என்பதை உணர்ந்து கொண்ட பிரபாகரன் புறக்கணிப்பு என்பதில் பிரபாகரன் உறுதியாக இருந்தார். .

51 நாடுகள், 22 சர்வதேச அமைப்புகள் ஈழ புணரமைப்பு என்ற பெயரில் இலங்கை பெற்ற நிதியென்பது விடுதலைப்புலிகளின் மாநாட்டில் கலந்து கொள்ளாமலேயே எளிதில் கிடைத்தது இலங்கை அரசாங்கம் எதிர்பார்த்து போயிருந்த 3000 கோடி தொகையை விட 4500 கோடி நிதியை டோக்யோ மாநாட்டில் அதிகமாகப் பெற்று மகிழ்ச்சியாக திரும்பினர்.  .

தள்ளாடிக் கொண்டுருந்த இலங்கை அரசாங்கத்திற்கு இப்போது தண்ணீர் வரத்து காய்ந்த நிலத்தில் பாய்வது போல சர்வதேச கரன்சிகள் வரத்தொடங்க காத்திருந்த சந்திரிகா கனகச்சிதமாக காய் நகர்த்த தொடங்கினார். 

ரணில் செல்வாக்கை மட்டுப்படுத்த வேண்டுமென்றால் ஆட்டத்திலிருந்து நீக்க வேண்டும். நாடாளுமன்றத்தை உடனடியாக கலைக்க வேண்டும். ஆனால் அதைச் செய்வதற்கு முன்பு உள்ளேயிருந்த ஜேவிபியுடன் கூட்டணியையும் வெற்றிகரமாக அமைத்திருந்தார். ஆட்சிக்கு வருபவர்கள் உள்ளேயிருக்கும் தமிழர் கட்சிகளை கருவேப்பிலை மாதிரி எப்படி பயன்படுத்துவார்களோ அதே போலத்தான் உள்ளேயிருக்கும் சிங்கள கட்சிகளும். இந்தியாவில் மைனாரிட்டி ஓட்டுக்கள் எத்தனை முக்கியமோ அதுபோல இந்த சிங்கள உதிரிக்கட்சிகளின் ஓட்டுக்களும் இலங்கை ஆட்சியாளர்களுக்கு ரொம்பவே முக்கியம். ரணிலின் பிரதமர் பதவி முடிய இன்னும் 3 ஆண்டுகள் இருக்கிறது. அடுத்த மூன்றாண்டு காலத்தை முடிவுக்கு கொண்டு வரும் பொருட்டு ரணில் அமெரிக்கா சென்ற சமயத்தில் பார்த்து 2004 பிப்ரவரி 7 அன்று சந்திரிகா நடாளுமன்றத்தை கலைத்தார். 

சந்திரிகா எதிர்பாத்ததைப் போலவே ஏப்ரல் 2ல் நடந்த தேர்தலில் சிங்கள இனவாத கட்சிகளாக ஜேவிபி மற்றும் ஜாதிக ஹெல உறமயவுடன் கூட்டு சேர்ந்து வெற்றி பெற்றார். 

விடுதலைப்புலிகள் மீதான கடும் விமர்சனத்தை தேர்தல் வாக்குறுதியாக கொடுத்த போதும் கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு தான் வெற்றி பெற முடிந்தது.  அதுவே பின்னாளில் “ அவசரப்பட்டு ஆட்சியை கலைத்தது தவறு. ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியும் ஐக்கிய தேசிய கட்சியும் சேர்ந்து அமைதிக்கு பாடுபட்டுருக்க வேண்டும் ” என்பதை சூசமாக அவர் வாயாலே சொல்லவும் வைத்தது. 

காரணம் கூட்டணி வைத்து போட்டியிட்ட ஜேவிபியும் சிங்கள கட்சியும் வலுவாக தங்கள் கால்களை ஊன்றியிருந்தனர். தனது அதிபர் பதவியை விட்டுக் கொடுக்க விருப்பமில்லாமல் தன்து கட்சியில் தனது கட்சியைச் சேர்ந்த மகிந்த ராஜபக்சேவை ஏப்ரல் 6 2004 அன்று பிரதமராக நியமித்தார். 

மகிந்த ராஜபக்ஷே இலங்கை வரலாற்றில் 13 வது பிரதமர் கூடவே எந்த நாட்டு அரசியல்வாதிகளும் விரும்பும் துறையான நெடுஞ்சாலைத்துறை அமைச்சக பொறுப்பும் வந்து சேர்ந்தது. இப்போது தான் தன்னுடைய மாமா பாணியில் தோளில் ஒரு நீண்ட அங்கியை அணிய ஆரம்பித்தார்.  தனக்கென்று ஒரு அடையாளம் தெரிய வேண்டும் என்பதற்காகவும், விவசாயப் பயிரான வரகுப் பயிரை நினைவுப் படுத்தும் விதமாகவும் அணிவதாக ஊடக பேட்டியில் தெரிவித்தார்.

டிசம்பர் 26 2004 உருவான ஆழிப்பேரழையில் விடுதலைப்புலிகளின் நிர்வாக பகுதிக்குள் இருந்த 15000க்கு மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்தனர். பிரபாகரன் இறந்து போனதாக தமிழ்நாட்டில் இதற்கென்று காத்திருந்த ஊடகங்கள் ஒப்பாறி போல் பாடிக் கொண்டுருந்தது.  சுனாமி பேரவலத்தை போக்க வெளிநாட்டு நிதியை எதிர்பார்த்து காத்துக் கொண்டுருந்த இலங்கை அரசாங்கத்தை எதிர்பார்க்காமலேயே பிரபாகரன் பாதிக்கப்பட்ட அத்தனை பகுதிகளையும் நேரிடைப் பார்வையில் களத்தில் இறங்கி அவசர கதியாய் செயல்பாடுகளை முடுக்கி விட்டுக் கொண்டுருக்க வேறொரு முக்கிய நிகழ்வும் அப்போது நடந்தேறியது.
.

இதே வருடம் மார்ச் மாதம் புலிகள் இயக்கத்தில் இருந்து கருணா என்ற வினாயகமூர்த்தி முரளீதரன் வெளியேற வெற்றிகரமாக இரண்டாவது கோணல் உருவானது. 

டோக்யோ மாநாட்டில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்த விடுதலைப் புலிகளின் இயக்கத்தை மேலைநாடுகள் பார்த்த பார்வைக்கும் இப்போது கருணா இயக்கத்தை விட்டு வெளியே வர,   காத்துக் கொண்டுருந்த இலங்கை அரசாங்கத்திற்கும், கருணாவை வெளியே கொண்டு வர உழைத்த உளவுப் படைகளுக்கும் கொண்டாட்டமாக போனது.  கருணாவை கொழும்புக்கு கொண்டு போய்ச் சேர்ந்த முக்கியமானவர் ஒரு முஸ்லீம் அரசியல்வாதி, 

கருணா கிழக்கு மகாணத்தின் தளபதியாக இருந்தவர்.  கருப்பு ஜுலை கலவரத்திற்குப் பிறகு இயக்கத்தில் இணைந்து 1984ல்தமிழ்நாட்டில் சேலத்தில் பயிற்சி பெற்றவர்.  புலிகளின் புலனாய்வு பிரிவில் பணியாற்றியதோடு பிரபாகரனின் மெய்காப்பளாராகவும் பணியாற்றியவர். 

2004 மார்ச்சில் வெளியேறி கருணா தனியாக தமிழ் ஈழ மக்கள் விடுதலைப்புலிகள் என்றொரு இயக்கத்தை தொடங்கினார்.  வன்னிப் பேரரசை பிரபாகரன் உருவாக்கியிருந்தாலும் உள்ளேயிருந்த கிழக்கு பிராந்தியங்கள் முழுவதும் கருணாவின் கட்டுப்பாட்டில் தான் இருந்தது. இதற்கு மேலாக இவர் தனக்கென்று தொடக்கம் முதல் உருவாக்கி வைத்திருந்த அடிப்படை கட்டமைப்புகளை விடுதலைப்புலி இயக்கத்தால் ஒன்றும் செய்ய முடியாத அளவிற்கு தப்பிப் பிழைத்து இலங்கை அரசாங்கத்தின் ஆள்காட்டியாக மாறினார். அதுவே அவரின் உயிரைக் காப்பாற்றி இன்று அவரும் ஒரு மந்திரியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். ஆனால் விடுதலைப்புலிகளுக்கு பயந்து அவரின் ஓடி ஒளிந்த ஓட்டத்திற்கு உறுதுணையாக இருந்தவர்கள் இந்தியாவின் ரா அமைப்பினர்.

இந்திய உளவுத்துறையான ரா மூலம் கேரளாவிலும் மலேசியாவிலும் இவரை ஒழித்து வைத்து காப்பாற்றும் அளவிற்கு இவர் முக்கியமானவராகத் தெரிந்தார். விடுதலைப்புலிகள் இயக்கத்தில் உருவான இந்த இரண்டாவது கோணல் பின்னால் உருவாகப் போகும் விபரீதமான பாதைக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

சந்திரிகாவுடன் விடுதலைப்புலிகள் இயக்கம் சுனாமி நலத்திட்டத்திற்காக கையெழுத்திட்டு இருந்தனர்.  சுனாமிக்கு பிறகு செயலாக்க நடைமுறைகளை விடுதலைப்புலி இயக்கத்தோடு சேர்ந்து செய்யக்கூடாது என்று எதிர்த்த சிங்கள கட்சிகள் சந்திரிகாவையும் எதிர்க்கத் தொடங்கினர். 

அதிபர் பதவிக்கு காத்துக் கொண்டுருந்த மகிந்த ராஜபக்ஷே உருவான வாய்ப்பை கனகச்சிதமாக பயன்படுத்திக்கொண்டார். 

சிங்கள கட்சிகளான ஜேவிபி, ஜாதிக ஹெல உறுமய போன்ற உதிரிக்கட்சிகளின் முக்கிய கோரிக்கை ஒன்றே ஒன்று தான்.  

சுனாமி பேரவலத்தை போக்க வரும் எந்த வெளிநாட்டு நிதியும் தமிழர்கள் வாழும் பகுதிக்கு சென்றுவிடக்கூடாது என்பதில் மிகக் கவனமாக இருந்தனர்.  அதைப்போலவே புலிகள் இயக்கம் வெளிநாட்டில் நடத்திக்கொண்டுருந்த சமாதான உடன்படிக்கை மாநாட்டுக்களை நிறுத்தி விட வேண்டும்.  நார்வே தலையீட்டை தடுத்தி நிறுத்தி விடவேண்டும் என்பது போன்ற பக்கம் பக்கமாக அடித்தாலும் சோர்வு தருகின்ற அத்தனை கோரிக்கைகளையும் மகிந்தா ஏற்றுக் கொள்ள செப் 13  2005 ல் கண்டியில் மகிந்தாவுக்கும் இனவாத கட்சிகளுக்குமிடையே உடன்படிக்கை உருவானது. 

நீதிமன்றத்தின் மூலம் இடைக்கால உத்தரவு வர உருவாகியிருந்த சுனாமி புனரமைப்பு நிர்வாகம் புழுக்கம் காணத் தொடங்கியது. ஆனால் இந்த ஆழிப்பேரலையின் கோரத்தாண்டவத்தால் பாதிக்கப்பட்டது முழுக்க முழுக்க தமிழர்கள் வாழும் பகுதிகளே.  அதிலும் கடற்கரையோரமாக வாழ்ந்த முஸ்லீம் மக்கள் அதிகமாக பாதிக்கப்பட்டனர். தேவைப்படும் நிதியும் வராமல் காப்பாற்ற நாதியுமில்லாமல் பாதிக்கப்பட்டவர்கள் பிணமாக மாறியது தான் மிச்சம்.

நவம்பர் 17 2005 நடந்த தேர்தலில் அதிபர் தேர்தலுக்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பா மகிந்த ராஜபக்ஷேவும் ஐக்கிய தேசிய கட்சியின் சார்பாக ரணில் விக்ரமசிங்கேயும் போட்டியிட்டனர்.  பண்டரா நாயகா உருவாக்கிய இலங்கையின் பிரதான எதிர்க்கட்சியான ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியில் சந்திரிகாவின் ஆளுமையையும் மீறி, சந்திரிகா விரும்பிய அவரின் தம்பியையும் ஓரங் கட்ட வைத்து மகிந்த ராஜபக்ஷே அதிபர் வேட்பாளராக மாறினார்.   எதிர் வேட்பாளராக சந்திரிகா நினைத்துருந்தால் அவரின் வலது இடது கரமாக செயல்பட்டுக் கொண்டுருந்த தமிழர் லஷ்மணன் கதிர்காமர் வந்துருக்க முடியும்.  ஆனால் இலங்கை அரசாங்கத்தில் ஒரு தமிழர் அதிபர் பதவிக்கு வரமுடியுமா?

இனிமேல் மகிந்த ராஜபக்ஷே பெறப் போகும் அத்தனை வெற்றிகளுக்கும் அடிகோலியவர் கதிர்காமர் தான். 

அதில் எந்த சந்தேகமும் இல்லை.  

காரணம் ராஜீவ் காந்தி படுகொலை என்ற நோக்கத்தில் இந்தியா மட்டுமே விடுதலைப்புலி இயக்கத்தை பயங்கரவாத இயக்கமாக தடை செய்து இருந்தது.  ஆனால் சந்திரிகாவின் 10 ஆண்டு கால ஆட்சியில் இலங்கை தீவின் நான்கு புறமும் நீர் என்பது போல இலங்கைக்கு வெளியே உள்ளே மேலை நாடுகள் அத்தனையையும் புலிகள் இயக்கத்திற்கு எதிராக மாற்றி வெற்றிகண்டவர் தமிழர் லஷ்மணன் கதிர்காமர்.  

ஏற்கனவே உழைத்த பல தமிழர்களைப் போலவே இவரும் சிங்களர்களுக்காவே உழைத்து தன்னை மிகச் சிறந்த இலங்கை குடிமகனாகவே காட்டிக் கொண்டு கடைசியில் நீச்சல் குளத்தில் இருந்து வெளியே வரும் போது விடுதலைப்புலி இயக்கத்தால் சுட்டு கொல்லப்பட்டு மேலோகப் பதவியை அடைந்தார்..

ஆனால் நடந்த தேர்தலில் பிரபாகரன் பார்வை எப்படி மாறியதோ? 

அடுத்த நான்காவது கோணல் உருவானது. 

விடுதலைப்புலிகள் இயக்கம் அறிவித்தபடி பெரும்பாலான தமிழர்கள் ஓட்டுப் போடாமல் புறக்கணிக்க மகிந்த ராஜபக்ஷே மயிரழையில் தப்பி பிழைத்து அதிபராக மாறினார்.  மகிந்தா பெற்ற வாக்கு 50,29 சதவிகிதமும் ரணில் 48.43 பெற மகிந்தா அதிபராக உள்ளே வந்தார். நான்கு கோணல்கள்.

இப்போது விடுதலைப்புலி இயக்கத்திற்கு இலங்கைத் தீவின் நான்கு புறமும் எதிரிகள், . காரணம் இந்தியா முதல் ஏறக்குறைய 30 நாடுகள் விடுதலைப்புலி இயக்கத்தை தடை செய்து இருந்தனர்.

தமிழர்களின் ஆதரவு இல்லாமலேயே வென்று நவம்பர் 23 2005 ல் அதிபர் பதவிக்கு வந்த மகிந்த ராஜபக்ஷே தனது புனித திருப்பணிகளை செய்யத் தொடங்கினார்.

ரத்தச் சகதியின் காலடித் தடங்கள் 1

மற்ற துறைகளை விட அரசியலில் அதிர்ஷடமென்பது கொஞ்சம் கூடுதலாகவே தேவைப்படும் சமாச்சாரம். அதுவும் இந்தியாவில் இந்த அதிர்ஷ்ட சமாச்சாரம் தான் முக்கிய இடத்தை வகிக்கின்றது.  கால், அரை, முக்கால், முழு அதிர்ஷ்டம் என்று ஒவ்வொரு வகையாக பிரிந்து கிடந்தாலும் நாம் இப்ப பார்க்கப்போகும் மன்மோகன் சிங் முழுமையான அதிர்ஷ்ட சாலியே, பிரணாப் முகர்ஜிக்கு கீழே வேலை பார்த்தவரு இப்ப அவருக்கே கட்டளை போடும் பிரதமர் பதவி? சோனியாவுக்கு உள்ளேயிருந்த ஆசையை கடவாய்க்குள் அடக்கி வைத்தேயிருக்க வேண்டிய சூழ்நிலை. 

இதை.  என்ன சொல்வீங்க?

மன்மோகன் சிங் இந்தியாவின் பிரதமர் பதவியை ஏற்றுக் கொள்ள சம்மதம் தெரிவித்த விசயம் சோனியாவிற்கு மட்டுமல்ல மொத்த அமெரிக்க தொழிலதிபர்களுக்குமே சந்தோஷமாகத் தான் இருந்திருக்க வேண்டும்.

காரணம் திருவாளர் மன்மோகன் சிங் படித்தவர், பண்பாளர், திறமையானவர் என்பதெல்லாம் விட தாராளமயமாக்குதல், தனியார்மயமாக்குதலை அட்சரம் பிறழாமல் கடைபிடிக்க நினைப்பவர்.  சுருக்கமாகச் சொல்லப்போனால் கடைத் தேங்காயை எடுத்து வழியில் பார்க்கும் பிள்ளையாருக்கு உடைக்கும் பக்தி மான்.

அக்மார்க் அமெரிக்கா பக்திமான்.

உலகமே வேறொரு பாதையில் போய்க்கொண்டிருக்கும் போது இந்தியா மட்டும் ஏன் தனிமைப்பட்டு நிற்கவேண்டும் என்பதை தனது தீர்க்க தரிசன பார்வையில் கண்டு கொண்டு ஆட்சிக்கு வந்த சித்தர்.


இவர் ஆட்சிக்கு வந்த போது இலங்கையில் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் உள்ள கடல்புலிகள் கன்னாபின்னாவென்று வளர்ந்து இருந்தார்கள். இலங்கையில் பெரும்பாலான கடல் பகுதிகள் அவர்களின் கட்டுப்பாட்டில் தான் இருந்தது. விடுதலைப்புலிகளின் இயக்கத்திற்கு ஜீவதாரமாக இருந்தவர்கள்.  முக்கியமாக விடுதலைப்புலிகளுக்கு வந்து கொண்டிருக்கும் ஆயுதக்கப்பல்கள் அத்தனையும் நினைத்த நேரத்தில் விரும்பும் இடத்தில் நிறுத்தி தங்கள் பகுதிகளுக்கு கொண்டு வந்து சேர்க்கும் அளவுக்கு வலுவானவர்களாக கடல்புலிகள் இருந்தார்கள்.  இந்திய உளவுத்துறை கொடுத்த தகவல்களின் அடிப்படையில் மன்மோகன் சிங் அரசாங்கம் இதைத்தான் முக்கியமானதாக எடுத்துக் கொண்டது.

2004 ல் இந்திய கப்பற்படை தலைவராக பதிவியேற்ற அட்மிரல் அருண் பிரகாஷ் தன் முதல் வேலையாக இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

கடற்புலிகளை அடக்குவது குறித்த ஆலோசனைகளை இலங்கை கப்பற்படையுடன் பேச்சு வார்த்தை மூலம் பல புதிய திட்டங்களை உருவாக்க முடிவெடுக்கப்பட்டது.  இப்போது இந்த இடத்தில் நாம் ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.  எந்த நாடாவது இந்தியாவுடன் ஒரு தொழில் ரீதியான ஒப்பந்தம் போட்டு அது செய்தித் தாளில் வருகின்றதென்றால் அதற்குப் பின்னால் ஒரு பெரிய லாபச்செயல் இருக்கிறது என்று அர்த்தம். இரண்டு நாடுகளுக்குமே அந்த லாபம் இருக்கும்.  இது தான் ஒவ்வொரு ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கமே.

இப்போது மன்மோகன் சிங் அரசாங்கம் 2004 அக்டோபர் 15ந் தேதியன்று இலங்கையுடன் ஒரு ஒப்பந்தம் போட்டது.  அதாவது இலங்கைக்கு 15 கோடி டாலர் கடனாக இந்தியா கொடுப்பதாக அந்த ஒப்பந்தம் கூறியது. இதன் மூலம் இலங்கை இந்தியாவிலிருந்து பெட்ரோலிய பொருட்களை இறக்குமதி செய்து கொள்ளலாம். அதன் பிறகு இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் சிரில் ஹெராத் தும் மற்றும் இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் ரஞ்சித் இஸ்ஸாரும் அக்டோபர் 18 அன்று சந்தித்தனர். அக்டோபர் 19 பூனைக்குட்டி வெளியே வந்தது.  அது அறிக்கையாக வெளியே வந்த போது பின்வருமாறு இருந்தது.

இலங்கை இராணுவ அதிகாரிகளுக்கு இந்தியாவில் பயிற்சி

தமிழ் போராளி இயக்கங்களைப் பற்றி உளவு சார்ந்த விசயங்களை இரு நாடுகளும் பறிமாறிக் கொள்வது.

இருநாடுகளையும் பாதிக்கக்கூடிய சட்டத்திற்கு புறம்பான செயல்பாடுகளை கூட்டு நடவடிக்கைகள் மூலம் கண்காணிப்பது.

இதன் தொடர்ச்சியாக இருநாடுகளும் பல விதமாக கூட்டு நடவடிக்கைகளை எதிர்காலத்தில் மேற்கொள்வது.

இது தான் அதன் சராம்சம்.

இந்த அறிக்கை வெளியானதும் இந்தியாவின் ராணுவத் தளபதி என்.சி.விஜ்
2004 நவம்பர் 1 அன்று இலங்கை சென்று பத்திரிக்கையாளர்களிடம் சொன்ன வாசகங்கள் இது.

இப்போது இலங்கை அமைதியான காலகட்டத்தில் இருந்த போதிலும் இரண்டு நாடுகளுக்கும் இராணுவ ரீதியான பறிமாற்றம் அவஸ்யம் தேவை.  இலங்கை இராணுவ வீரர்களுக்கு பயிற்சியளிப்பதும், ஆயுதப்பறி மாற்றமும் முக்கியமாகும். என்றார்.  இலங்கையில் இருந்து அவமானகரமாக இந்திய அமைதிப்படை திரும்பியதற்குப் பிறகு முதல் முறையாக அதிகாரப்பூர்வமாக இந்தியாவில் இருந்து சென்றவர் இவர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.


இந்தியா இராணுவத் தளபதி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து கொண்டிருந்த போது சந்திரிகா டெல்லிக்கு வந்து பிரதமர் மன்மோகன் சிங்கை 2004 நவம்பர் 3 -7 அன்று சந்தித்தார்.  ஏற்கனவே வாங்கிய தொகையுடன் இப்போது மன் மோகன் சிங் தனது அடுத்த அன்புப்பரிசை அதாவது இலங்கையின் ஊரக வளர்ச்சிக்காக 10 கோடி டாலரை வழங்குவதாக அறிவித்தார். சந்திரிகா இப்போது வந்தது வெறுமனே கடன் வாங்க மட்டுமல்ல. கண்களை உறுத்திக் கொண்டேயிருக்கும் புலிகள் இயக்கத்தை ஒரு கை பார்த்து விட வேண்டும் என்பதன் ஆதாரப்புள்ளியையும் இங்கேயிருந்து தான் தொடங்கி வைத்தார்.  சந்திரிகா கரைத்த விதத்தில் மன் மோகன் சிங் மூலம் அடுத்த அறிக்கை வெளியானது.

இலங்கைக்குத் தேவைப்படும் அனைத்து விதமான இராணுவ உதவிகளை இந்தியா வழங்கும்.  வடக்கு கிழக்கு பகுதிகளில் உள்ள விமான தளங்களை இந்தியா சீரமைத்து கொடுக்கும். விடுதலைப்புலிகளின் கடற் போக்குவரத்தையும், கடல்புலிகளின் செயல்பாடுகளையும் இந்தியா கவனித்து இலங்கையுடன் பகிர்ந்து கொள்ளும். இந்த ஒப்பந்தம் விரைவில் கையெழுத்து இடப்படும் என்று அந்த அறிக்கை சொன்னது.

ஏன் இரண்டு நாடுகளும் விடுதலைப்புலிகளின் கடல்புலிகளை குறிவைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று உங்களுக்கு கேட்கத் தோன்றும்.  அது தான் பிரபாகரன்?  கடல்புலிகள் வலுவாக இருந்த பகுதிகளுக்குள் சிங்கள கப்பற்படை மறந்தும் கூட நுழைந்து விட மாட்டார்கள்?  அவ்வளவு மரியாதை என்றால் நீங்களே யூகித்துக் கொள்ளுங்க.  இதன் சார்ந்த மற்ற விசயங்களை பின்னால் பார்க்கலாம்.


இதே சமயத்தில் அதாவது 2004 மார்ச்சில் தான் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்து கருணா வெளியேறினார்.  ஒவ்வொரு தமிழர்களும் வாழ்நாள் முழுக்க மறக்க முடியாத அளவுக்கு தன் திறமையைக் காட்டிய  தானைத்தலைவன் மகிந்தா ராஜபக்ஷேவும் இப்போது களத்திற்கு வந்து விட்டார்.

Friday, June 24, 2011

முற்றுகைக்குள் இந்தியா --4

சென்ற அத்தியாயத்தில் இந்தியா இலங்கையில் உருவாக்கிய தொழில் ஒப்பந்தங்கள் மூலமும், அங்கே கொண்டு போய் கோடி கோடியாய் கொட்டிய தொழில் முதலீடுகளின் மூலம் அள்ளிக்குவித்த லாபங்களைப் பார்த்தோம்.  இயல்பாகவே நமக்கு ஒரு சந்தேகம் வர வேண்டும்.  நம் நாடு தான் அங்கே பலமான பட்டறையை போட்டுருக்கே?.  அப்புறம் எதுக்கு இலங்கை சீனா ஆதரவைத் தேடி ஓடுகின்றது? 

நாம் ஏன் பயப்படவேண்டும்?

அங்கேதான் வில்லங்கமே தொடங்குகின்றது.

உலகில் பார்வையில் அப்பாவியாகத் தெரியும் ரணில் விக்ரமசிங்கே எப்படி தந்திரமாக காய் நகர்த்தி கருணாவை விடுதலைப்புலிகள் இயக்கத்தை விட்டு வெளியே கொண்டு வந்தாரோ அதைப்போலவே அவரின் ஆட்சியில் தான் பல விசயங்களை மறைமுகமாக செய்யத் தொடங்கினார்.  சந்திரிகா அதிபராகவும் ரணில் பிரதமராகவும் வந்த போது இருவரும் வெவ்வேறு கட்சிகள் வெவ்வேறு பாதைகள் என்று சென்று கொண்டிருந்தாலும் இருவருக்கும் ஒரு விசயத்தில் மட்டும் ஒத்த கருத்து உண்டு.

நாம் சிங்களர்கள்.  இது சிங்கள நாடு.  இந்த நாட்டை சிங்களர்கள் மட்டுமே ஆள வேண்டும்.

கொஞ்சம் அசந்தாலும் தமிழர்கள் நம் தலைமேல் மொட்டை அடித்து மிளகாயை மிக்ஸியில் போட்டு அரைத்தும் தடவி விடக்கூடும் என்பதில் மிகவும் கவனமாகவே இருந்தார்கள்.

இந்த காலகட்டத்தில் தான் அதிக அளவு சர்வதேச ஒப்பந்தங்களை இருவரும் பறந்து பற்ந்து போய் கொண்டு வந்து இறக்கினார்கள். இதற்கு மற்றொரு காரணமும் உண்டு.  காரணம் கடந்த முறை ஆட்சியில் இருந்து சந்திரிகா அம்மையார் போட்ட ஆட்டத்தில் இருந்த மொத்த கஜானாவும் போர் பக்கம் கொண்டு கொட்டிவிட,  கொட்டி கவிழ்த்த பானை போலவே இலங்கை நிதியம் இருந்தது.

தமிழர்களை அப்புறம் பார்த்துக் கொள்வோம்.  முதலில் கடன் வாங்க வேண்டும்.  அதற்கு போர் நிறுத்தம் வேண்டும்.  ஒவ்வொருவரும் நாம் சென்றாலே கதவை சாத்துகிறார்கள்.  இப்போதைய சூழ்நிலையில் அதட்டிக் கேட்கவும் முடியாது என்ற இந்த எண்ணமே சந்திரிகாவையும் ரணிலையும் ஒரே புள்ளியில் கொண்டு வந்து சேர்த்தது.


காரணம் தொடக்கம் முதல் இலங்கையில் உள்ள ஐக்கிய தேசிய கட்சிக்கு இந்தியா என்றாலே பச்சை மிளகாய் போலவே இருக்கும் போல?    2002 ஆம் ஆண்டு தொடக்கத்தில் ரணில் சீன பெட்ரோலிய நிறுவனமான SINOPEC ஐ உள்ளே கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டார். ரணிலின் நோக்கம் இலங்கை அரசாங்கத்திற்கு சொந்தமான (Ceylon Petroleum Corporation – CPC) 1070 பெட்ரோல் விநியோக மையங்களை சீனாவுக்கு கொடுப்பதே ஆகும். இந்த திட்டத்தை வாஜ்பாய் அரசு கடுமையாக எதிர்த்தது.  இந்த இடத்தில் தான் ராஜிவ் காந்தி ஈழ மக்களுக்காக போட்டப்பட்ட இந்திய இலங்கை ஒப்பந்த வாசகங்கள் இந்தியாவுக்கு உதவியது.  இதைத்தான் இந்திய அரசு ரணிலுக்கு சுட்டிக்காட்டி மிரட்டியது.  திருகோணமலையில் உள்ள எண்ணெய் கலங்களை இந்தியாவுக்கே வழங்கப்பட வேண்டும் என்று நிர்ப்பந்தம் செய்ய ரணில் சீனாவுக்கு முழுமையாக கொடுக்க எண்ணிய திட்டம் கைவிடப்பட்டது. குறிப்பிட்ட சதவிகிதம் சீனாவுக்கு வழங்கப்பட்டது.

சிங்களர்களை நம்ப முடியுமா?

இதற்காக ஒப்பந்தம் 2002 டிசம்பர் 5 அன்று இலங்கை சிபிசி க்கும் இந்தியாவின் இந்தியன் ஆயில் கார்ப்ரேஷனுடன் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தின்படி இலங்கை, இந்திய மற்றும் சீனா நிறுவனங்கள் மட்டும் தான் அடுத்த ஐந்தாண்டுகள் பெட்ரோலிய பொருட்கள் விற்க முடியும்.  வேறு எவரும் விற்கமுடியாது. முதல் ஐந்து வருடங்கள் இந்திய நிறுவனத்தின் மீது எந்த வரியும் விதிக்கக்கூடாது. அடுத்துவரும் வருடங்களில் இலங்கையில் நடைமுறையில் இருந்து 35 சதவிகிதத்திற்கு பதிலாக 15 சதவிகிதம் வரியே விதிக்கப்பட வேண்டும். இந்தியாவிலிருந்து ஐஓசி இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு வரியில்லை.

இதன் தொடர்ச்சியாக திருகோணமலையின் சீன வளைகுடாப் பகுதியில் இருந்த 99 எண்ணெய் கலன்களை நிர்வகிப்பதற்கான உரிமையும் இந்தியாவிற்கு வழங்கப்பட்டது.  இந்த கலன்கள் இராண்டாம் உலகப் போர் தொடங்கிய காலகட்டத்தில் உருவாக்கப்பட்டதாகும். ஆக மொத்தத்தில் பெட்ரோல் மொத்த வியாபார உரிமையும், சுமார் 100 பெட்ரோல் விநியோக மையங்களும் 2003 பிப்ரவரியில் இந்தியா வசம் ஒப்படைக்கப்பட்டது. இது அடுத்த 35 ஆண்டுகளுக்கான உரிமையாகும். இதன் அன்றைய மதிப்பு 375 கோடி. இது தவிர இலங்கையில் பெட்ரோலிய பொருட்களை சேமித்து வைக்கும் அரசு நிறுவனத்தில் Ceylon Petroleum Storage Terminals Limited (CPSTL)  மூன்றில் ஒரு பங்கு உரிமமும் இந்திய நிறுவனமான ஐஓசிக்கு வழங்கப்பட்டது. 

இந்த ஒரு பங்கு உரிமம் கொடுப்பதிலும் இலங்கை அரசு ஒரு தில்லாலங்கடி வேலையைக் காட்டியது. மூன்றில் ஒரு பங்கை வெளிப்படையாக ஏலமிட விருமப இந்தியாவின் நிர்ப்பந்தத்தால் அதையும் நிறுத்தி வைக்கப்பட வேண்டியதாகி விட்டது.  காரணம் வெளிப்படையாக ஏலமிடுவதன் மூலம் இந்த உரிமையை சீன அரசுக்கு கொடுத்து விடலாம் என்ற ரணிலின் எண்ணத்தையும் இந்தியா தவிடுபொடியாக்கியது.

இப்போது பொதுவான ஒரு விசயத்தைப்பற்றியும் பேசிவிடலாம்.

ஏன் இலங்கைக்கு இந்தியா மேல் கசப்பு?  

ஒரே காரணம் தமிழ்நாடு.  இங்கு வாழும் தமிழர்கள்.  

இந்தியா போன்ற நாட்டில் உள்ள ஜனநாயக ஆட்சியில் தமிழ்நாட்டின் பாராளுமன்ற உறுப்பினர்களும் மிக முக்கியமானவர்கள்.  இந்தியாவின் ஒரு பகுதி தமிழ்நாடு.  இதற்கு மேல் தமிழர்கள்.  இந்த பாழாய்போன தமிழினம் தானே இங்கே இன்னும் வாழ்ந்து கொண்டு நம்மை சாகடித்துக் கொண்டிருக்கிறார்கள்.  எத்தனை கலவரங்கள் நிகழ்த்திய போதிலும் குறிப்பிட்ட எண்ணிக்கை இருந்து கொண்டேதான் இருக்கிறது.  முழுமையாக அழிக்கவும் முடியவில்லை.  முடியும் போது கஜானாவில் பணமும் இருப்பதில்லை.  இங்கே ஏதாவது ஒன்றால் தமிழ்நாட்டில் சுயநலமாய் பொதுநலமாய் குய்யோ முய்யோ என்ற சப்தம் வேறு வந்து தொலைத்து மொத்தத்தையும் கெடுத்துவிடுகின்றது. இந்திய அரசாங்கம் பம்மி விடுகின்றது. என்ன செய்வது?  இப்போதைய சூழ்நிலையில் இந்தியாவின் ஆதிக்கத்தை நிறுத்தவும் முடியாது.  ஆனால் இவர்களை இங்கே பெரிய அளவில் வளர்த்து விடவும் கூடாது.

இந்தியாவைத் தவிர எந்த நாடுகள் இலங்கைக்குள் உள்ளே வந்தாலும் அவரவர் தொழில் உண்டு லாபம் உண்டு என்று பொட்டியை கட்டிக் கொண்டு சென்று விடுகிறார்கள்.  ஆனால் இந்தியாவிற்கு மட்டும் இது விதிவிலக்காக இருக்கிறது. வாஜ்பாயிடம் எந்த உதவி கேட்டாலும் தமிழ்நாட்டை ஒரு பார்வை பார்த்துக் கொண்டே கொள்ளைப் புறமாகவே வரச்சொல்கிறார்? எத்தனை நாளைக்கு இந்த கண்ணாமூச்சி?  பேசாமல் இந்தியாவிற்கு மாற்றாக சீனாவுடன் உறவு கொண்டால் தெரு வரைக்கும் ஆயுதங்களை கொண்டு வந்து கொடுக்க தயாராக இருக்கிறார்கள். கடன் வேறு.  கடனுக்கு வட்டியும் இல்லை.  விலை மலிவும் கூட.  ஆனால் பாழாய் போன இந்தியா ஒவ்வொரு முறையும் உர் என்று பார்த்துக கொண்டேயிருக்கிறதே? 

நிச்சயம் ஈழத்தலைவர்கள் இப்படித்தான் யோசித்து இன்று வரைக்கும் இந்தியா மேல் வெளியே காட்டிக் கொள்ளமுடியாத கசப்பை கடைவாயில் வைத்திருக்கக்கூடும்.


ஒரு பெரிய ஆச்சரியம் என்னவென்றால் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் வியாபார ரீதியான எத்தனையோ உறவுகள், புரிந்துணர்வுகள் இருந்த போதிலும் இராணுவ ரீதியான எந்தவித முன்னேற்பாடுகள், உதவிகள் என்பது நடைபெறவேயில்லை.  இந்திய அமைதிப்படை திரும்பி 1990 முதல் 2003 வரைக்கும் பெரிதான அளவில் இல்லை என்பதை குறிப்பிட்டே ஆக வேண்டும். அதிலும் ராஜிவ் காந்தி கோர மரணத்திற்குப் பிறகும் கூட பெரிய அளவில் ஒரு முன்னேற்றமும் இல்லை. 1993 ஆம் ஆண்டு நரசிம்மராவ் ஆட்சியில் இருந்த போது விடுதலைப்புலிகளின் ஆயுதக் கப்பலான எம்.வி.அஹாத் தினை இந்திய கப்பற்படை மறித்து மூழ்கடித்தது போன்ற ஒரு சில நிகழ்வுகள் மட்டுமே நடந்து கொண்டிருந்தது.


வாஜ்பாய் அரசாங்கத்திடம் இலங்கை அரசு ஆயுதங்கள் கேட்ட போதிலும் கூட இங்குள்ள சூழ்நிலையை கருத்தில் கொண்டு பாகிஸ்தானிடம் வாங்கிக் கொள்ளுங்க என்று வாஜ்பாய் ஒதுங்கியே இருந்தார்.  ஆனால் யாழ்பாணத்தில் விடுதலைப்புலிகளால் இலங்கை இராணுவம் சுற்றி வளைக்கப்பட்ட பிறகே ரோந்து கப்பலான SLN SAYURA வழங்கப்பட்டது.

இதைப் போலவே 1990 முதல் 2003 வரைக்கும் இந்திய இராணுவத்தைச் சேர்ந்த எவரும் இலங்கைக்குச் செல்லவில்லை.  முதல் முறையாக 2003 ஆம் ஆண்டு இந்திய கப்பற்படையின் தலைவர் அட்மிரல் மாதவேந்திர சிங் இலங்கைக்கு செல்ல திட்டம் வகுக்கப்பட்டது. 

சிங்களத் தலைவர்கள் தான கெட்டிக்காரர்களாச்சே? 

இதே சமயத்தில் பாகிஸ்தான் முப்படைத் தளபதியும், கார்கில் போருக்குத் தலைமை தாங்கியவருமான ஜெனரல் முகம்மது அஜிஸ் கான் தனது ஏழு நாள் சுற்றுப்பயணத்தை இலங்கையில் ஏற்பாடு செய்திருந்தார். ஆனால் இது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்வில்லை. மோப்பம் பிடித்த இந்தியா கப்பற்படை தலைவர் சுற்றுப்பயணத்தை ரத்து செய்தது. அப்போது இந்தியா கொடுத்த மிரட்டலில் இலங்கை ஆட்சியாளர்கள் சாக்குபோக்குச் சொல்லி சமாளித்தாலும் உள்ளே கருவிக்கொண்டிருந்தார்கள் என்பதே உண்மை.

சிங்களர்கள் இந்தியாவை "நண்பேண்டா" என்றார்கள்?  எப்போது?

மன்மோகன் சிங் பிரதமராக வர "எல்லாமே" சிறப்பாக நடைபெறத் தொடங்கியது.