Monday, September 17, 2012

கூடங்குளம் -- உண்மைக்கும் பொய்க்கும் நடுவில்


 எதிர்க்காதே என்று தொடங்கினார்கள்.  ஆனால் இப்போது தொடக்கத்திலேயே சொல்லியிருந்தால் இந்த அளவுக்கு பிரச்சனை வந்துருக்காதே என்கிறார்கள். 

இறுதியாக அணு உலை மூலம் மின்சாரம் அவசியம் தேவை. தமிழ்நாடு மின்வெட்டில் தத்தளித்துக் கொண்டுருக்கிறது என்று அறிவுரையை வழங்கி முடிக்கின்றார்கள். கூடவே 14,000 கோடி முதலீடு வீணாக போய்விடக்கூடாது. எதிரே வந்து நிற்காதே என்கிறார்கள்.


அணு உலைக்கு மக்களின் எதிர்ப்புகள் நாளுக்கு நாள் அதிகமாக 500 கோடி செலவில் ஊரை உல்லாசபுரியாக மாற்றுவோம் என்று சப்பைக்கட்டிகள் சர்க்கரையில் தேன் தடவி நாக்கில் வைக்கிறார்கள். தொடக்கம் முதல் எதிர்த்த அத்தனை நிகழ்வுகளும் பத்திரிக்கைகளுக்கு துணுக்குச் செய்திகளாகவே போய்விட இன்றைய இடிந்தகரை மக்களின் வாழ்வாதார பிரச்சனைகளை கவர் ஸ்டோரியாக எழுத முடிகின்றது. அணு உலை பூதத்தை அமைதியாக வேலை வாங்கி விடுவோம் என்று அரசு அளிக்கும் நம்பிக்கைகளை இடிந்தகரை குழந்தைகள் கூட நம்பத் தயாராக இல்லை.

அரசு நிர்வாக லட்சணத்தை புரிந்து கொண்டே விடாப்பிடியாக போராட்டக்காரர்கள் இன்று வரையிலும் தொடர்ந்து கொண்டேயிருக்கிறார்கள். ஒரு வருடத்தினை கடந்தும் போராட்டத்தின் வேகத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. கடைசியாக போராட்ட ஒருங்கிணைப்பாளர் உதயகுமாரை தேசத் துரோகி என்ற வார்த்தையில் கொண்டு வந்து நிறுத்தி விட்டார்கள்.

நீங்கள் அணு உலையை ஆதரிக்காவிட்டால் தேசத் துரோகிகளின் பக்கம் இருப்பதாக அர்த்தம். கட்சிகளில் மட்டும் எழுத்துக்களை மாற்றி வைத்திருக்கும் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளைப் போலவே ஒவ்வொரு ஊடகமும் இறுதியாக இப்படித்தான் முடிக்கின்றார்கள்.

400 நாட்களை தொடப்போகும் கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பாளர்களின் போராட்டத்திற்கு தேசிய அளவில் பெரிதான ஆதரவில்லை. இந்தியா என்பது ஒரே நாடு என்பதில் இருந்து மாறி வெகு நாளாகி விட்டது. அரசியல்வாதிகளின் ஒற்றுமை என்பது ஊழல்களில் சிக்கியவர்களை பரஸ்பரம் காப்பாற்றிக் கொள்வதில் மட்டுமே இருக்கிறது.  மற்றபடி அரசியல் கண்க்குகளின் அடிப்படையில் அந்தந்த மாநில பிரச்சனைகள் அவரவர் பக்கம் என்பதாகத்தான் தற்போதைய இந்தியா ஒளிர்கின்றது. போபால் விஷவாயு சம்பவம் இந்தியா முழுக்க எதிரொலித்து இருந்தால் இன்று இந்தியாவில் எந்த விஷவாயு ஆலைகளும் செயல்பட்டுக் கொண்டுருக்க முடியாதே?

தமிழ்நாட்டில் குறிப்பிட்ட பகுதியின் வாழ்வாதாரம் என்பதோடு பல தலைமுறைகள் சார்ந்த பிரச்சனை என்பதைக் கூட எவரும் யோசிக்க தயாராய் இல்லை. தற்போது தமிழ்நாட்டில் நிலவிக் கொண்டுருக்கும் மின்வெட்டு தான் முக்கிய பிரச்சனை.  மின்வெட்டிலிருந்து காக்க வந்த ரட்சகராக இந்த அணு உலை பார்க்கப்படுவதால்  ஒரு மாநிலத்திற்காக ஒரு ஊரை காவு கொடுக்கலாம் என்ற தத்துவம் தூசி தட்டப்பட்டு பலரின் கண்களை மறைந்து இருக்கிறது.

இப்போதுள்ள சூழ்நிலையில் மின்வெட்டில் இருந்து தப்பிக்க இதைத்தவிர வேறென்ன வழி?

காரணம் மாற்று வழியை சிந்திக்கத் தெரியாதவர்களை தலைவர்களாக பெற்ற நாம் காலம் முழுக்க மக்கு மக்களாகத் தான் தான் இருக்க முடியும். இதன் காரணமாகவே மக்கி போக முடியாத, பாதுகாக்க முடியாத அணுஉலை கழிவுகளைப் பற்றி அடித்தட்டு மக்கள் புரிந்து கொள்ள தயாராய் இல்லை.

இந்தியாவின் எதிர்கால வளர்ச்சிக்கு இந்த அணுமின்சாரம் அவசியம் தேவை என்பவர்களிடம் கேட்டுப் பார்க்கலாம். 


தற்போதைய இந்திய மின்சாரத் தேவையை 71 சதவிகிதம் அனல் மின்சாரம் மூலமும், 21 சதவிகிதம் புனல் மின்சாரம் மூலமும் நிறைவேற்றப்படுகின்றது. மரபு சார்ந்த நிலையில் தான் இன்றைய பெரும்பாலான மின்சாரத் தேவை பூர்த்தி செய்யப்படுகின்றது.  இன்று ஐரோப்பிய நாடுகள் அணைத்தும் சூரிய ஒளியை பயன்படுத்தி முடிந்தவரைக்கும் தங்களுக்கான தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளும் போது இந்தியா மட்டும் ஏன் இந்த அளவுக்கு இந்த அணுமின்சாரத்தில் ஆர்வமாக இருக்கிறது.

அணு உலையை வாங்கும் இடம் முதல் அதை பொருத்தும் இடம் வரைக்கும் ஊழல் கூட்டணி மக்களின் சாம்ராஜ்யமாக இருப்பதால் இந்த சர்வதேச லாபிக்கு முன்னால் சாதாரண மக்களின் குரல்கள் எடுபடுவதில்லை. இதற்கு மேலும் பல அணுகுண்டு ரகசியங்களும் இதற்குள் உண்டு. அது தேச பாதுகாப்பு என்பதிற்குள் கொண்டு போய் நிறுத்தி கேள்வியே கேட்க முடியாமல் மாற்றி விடுவார்கள்.

மற்ற மாநிலங்களை தமிழ்நாட்டில் காற்றாலை மின்சார உற்பத்தி அதிகம். மேம்படுத்த வாய்ப்புகளும் அதிகம். ஆனால் காற்றாலை மின்சாரத்தை ஆதரிக்கத் தெரியாத அரசு தனது பயம் காட்டும் நடவடிக்கைகள் மூலம் மட்டுமே இது போன்ற அணுஉலையை செயல்படுத்த விரும்புகின்றது.

கூடங்குளம் அணுஉலையை திறக்கக்கூடாது என்று சொல்பவர்களை நோக்கி வீசப்படும் கேள்விகளைப் போல ஆதரவுக்கும் எதிர்ப்புக்கும் இடையே இருக்கும் கேள்விகள் அர்த்தமற்று சிரிக்கின்றது.

1948 ஆம் ஆண்டு இந்திய அணுசக்தி ஆணையம் தொடங்கப்பட்டது. இந்த அணுசக்தி துறை தன்னாட்சி பெற்றது. நேரிடையாக பிரதமர் கட்டுப்பாட்டில் உள்ள அமைப்பாகும்.  நீதிமன்றங்கள் கேட்கும் கேள்விகள் கூட பல சமயம் நாட்டின் பாதுகாப்பு என்ற போர்வையில் மறைக்கப்படும். ஒரு வல்லரசு நாடு உலகத்திடம் சொல்ல சில தகுதிகள் உண்டு. மக்களுக்கான நல்லரசு என்பதை விட வல்லரசு நாட்டில் பாதுகாப்புக்காக அணுகுண்டுகள் இருக்கிறதா என்பதை வைத்து தான் அந்த வல்லரசு பேட்டைக்குள் நுழைய முடியும். 

இந்த அணுக்களை பிளந்து தான் இங்கே மின்சாரம் தயாரிக்கப்படுகின்றது.  அணு உலையில் யுரேனிய அணுக்களை பிளக்கப்படும் 3500 முதல் 4000 டிகிரி செல்சியஸ் வரைக்கும் சக்தியாக மாறி அணுகுண்டாக வெடிக்கின்றது. இந்த அணு பிளப்பின் போது நியூட்ரான்களை நுழைவித்து வெப்பசக்தியை கட்டுப்படுத்தப்படுகின்றது. இந்த வெப்பசக்தி மூலம் உருவாகும் நீராவி மூலம் மின்சாரம் தயாரிக்கப்படுகின்றது.

2032 ஆம் ஆண்டுக்குள் இந்திய அரசாங்கம் அணுஉலைகள் மூலம் 63,000 மெகாவாட் மின்சாரம் எடுக்க திட்டம் தீட்டியுள்ளது. 1987 ஆம் ஆண்டுக்குள் 25,000 மெகாவாட, 2000 ஆம் ஆண்டுக்குள் 45,000 மெகாவாட் என்று திட்டம் தீட்டி பல்லாயிரக்கணக்கான கோடிகளை விழுங்கி விட்டு இன்று வரையிலும் சாதித்த சாதனை 3310 மெகாவாட் மட்டுமே.  இந்த கணக்கெல்லாம் அமைச்சர் நாராயணசாமிக்கு தெரியுமோ? தெரியாதோ? இந்த துறையில் முதலீடாக போடப்படும் தொகையை மரபுசார்ந்த மின்சாரத் தேவையில் போட்டுருந்தால் இந்நேரம் இந்தியா மின்சார உற்பத்தியில் தன்னிறைவு அடைந்து மற்ற நாடுகளுக்கு மிச்சத்தை விற்று லாபம் பார்த்திருக்க முடியும். 

இன்று ஊழல்களின் தொகை மில்லியனைத் தாண்டி பில்லியன்களிடம் வந்து விட்டதால் மரபு தன்மைகளை விட்டு வெளியே வந்து விட்டார்கள் நம் தலைவர்கள்.

கூடங்குளம் அணுஉலை என்பது இப்போதைக்கு தேசிய சொத்து. தமிழ்நாட்டில் இருந்தாலும் மாநில அரசாங்கத்திற்கு ஓர் அளவுக்கு மேல் எந்த செயலையும் செய்துவிட முடியாது. காரணம் நெய்வேலி திட்டம் தொடங்கும் போதும் இப்படித்தான் பலவிதமான உறுதிகள் அங்குள்ள மக்களுக்கு வழங்கப்பட்டது. ஆனால் இன்று நெய்வேலியில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தில் மூன்றில் ஒரு பங்கு தான் தமிழகத்திற்கு வழங்கப்படுகின்றது. நெய்வேலியில் தயாரிக்கப்படும் மின்சாரத்தை வெளிசந்தையில் விற்க தமிழ்நாடு ஒரு அடித்தளம்.  அவ்வளவுதான்.

அதற்குள் இந்த அணு உலை மூலம் உற்பத்தியாகும் மின்சாரத்தில் ஆயிரம் மெகாவாட் தமிழ்நாட்டுக்கு என்று கட்டியம் கூறி மக்களை நம்பவைத்துக் கொண்டுருக்கிறார்கள். ஒரு வேளை இந்த அணுஉலை செயல்படும் பட்சத்தில், ஒழுங்காக செயல்படும் பட்சத்தில் முழுமையான உற்பத்தி திறன் வரவே குறைந்தது இரண்டு வருடமாகும்.  அதற்குள் தமிழ்நாட்டின் மின்வெட்டும் இன்னும் பல மடங்கு அதிகமாக எகிறிவிடும்.

தமிழ்நாட்டின் தற்போதைய பற்றாக்குறை 3000 மெகாவாட். கூடங்குளத்தில் செயல்படுத்த நினைக்கும் ஆறு உலையும் முழுமையாக ஓடினால் கூட பூர்த்தி செய்துவிட முடியாது. அப்போதைக்கு இங்குள்ளவர்கள் வாட் என்று மத்திய அரசாங்கத்தை கேட்டு விட முடியாது.  காரணம் நாம் அணைவரும் இந்தியர்கள். வேற்றுமையில் ஒற்றுமையாய் வாழ்பவர்கள். பகிர்ந்துண்டு பல்யுர் ஓம்புதல் போன்ற வார்த்தைகள் பதிலாக வரும்.


அணுஉலை பிரச்சனை தொடங்கியதிலிருந்தே தேசபக்தி காற்றில் பறந்து வந்து தாக்குகின்றது.  ஊடகங்கள் அறிவுரையை கட்டுரையாக எழுதி களைத்துப் போயிருக்கிறார்கள். அச்சமற்று இருக்க அத்தனை ஏற்பாடுகளையும் செய்து விட்டோம் என்கிறார்கள். பாதி அளவுக்கு கூட முடியாத போது ஏனிந்த அவசரம் என்றால் அறிஞர்கள் சொல்லி விட்டார்கள். அமைதியாய் இரு என்கிறார்கள். இத்தனை கோடிகளை கொண்டு வந்து கொட்டிவிட்டு நிறுத்தினால் தகுமா? என்கிறார்கள். அணுஉலை ஓடாத நாட்களை சுட்டிக்காட்டி நட்டக்கணக்கில் நம்மை யோசிக்க வைக்கிறார்கள். இறுதியாக உச்ச நீதிமன்றமே உத்தரவு கொடுத்தாகி விட்டது. இதற்கு மேலும் தாமதப்படுத்தலாமா என்கிறார்களா.

அணு உலை செயல்பாட்டின் மூலம் உருவாகும் சுற்றுச்சூழல் பிரச்சனைகளை விட மற்றொரு பெரிய பிரச்சனை அணுஉலை கழிவுகள்.

புளூடோனியம் 239 தனது கதிர்வீச்சு தன்மையை பாதியாக குறைத்துக் கொள்ள எடுத்துக் கொள்ளும் காலஅளவு சுமாராக 24,000 வருடங்கள்.  அயோடின் 129 தனது கதிர்வீச்சை பாதியாக குறைத்துக் கொள்ளும் கால அளவு 17 மில்லியன் வருடங்கள்.  ஒரு அணுமின் நிலையம் வருடம் முழுக்க ஓடினால் 20 மெட்ரிக் டன் அணுக்கழிவுகளை உருவாக்கும். இவற்றிக்கு மாற்று ஏற்பாடு இதுவரையிலும் கண்டுபிடிக்க வில்லை என்பதால் பாதுகாத்து தான் ஆக வேண்டும். இங்கே தான் பிரச்சனையே ஆரம்பம் ஆகின்றது.  

மற்றொன்றையும் நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.  ஒரு அணுஉலை அதிகபட்சமாக 45 வருடங்கள் தான் செயல்படுத்த முடியும். அதற்குப்பிறகு மூடி வைத்துவிட வேண்டும். மிகப் பெரிய அளவில் காங்கீரிட் தொட்டி கட்டி அதை பூமிக்கடியில் புதைத்து வைத்து விட வேண்டும். பூதம் போல் காவல் காக்க வேண்டும். கரணம் தப்பினால் மரணம். இதற்குப் பிறகு குறிப்பிட்ட பகுதியை மனிதர்கள் வாழ முடியாத பகுதியாக மாற்றப்பட்டு விடும்.  

ஒவ்வொரு 45 வருடங்களுக்கு ஒரு முறை அணுஉலையை மாற்று இடத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். கிடைக்கப் போகும் 300 மெகாவாட் மின்சாரத்திற்கு 3 லட்சத்திற்கும் மேற்பட்ட தலைமுறைகளை பழி கொடுத்து நாம் சுகவாசியாக வாழ நினைக்கின்றோம்.

இறுதியாக இந்திய இறையாண்மையைக் கொண்டு வந்து அணைவரையும் ஒரு வட்டத்திற்குள் நிறுத்தி வேடிக்கை காட்டுகிறார்கள். ஆனால் வன்முறையின்றி எந்தவித அசம்பாவிதமும் இன்றி, வருடங்களைத்தாண்டி நடத்தப்பட்ட இந்த போராட்டத்தை ஊழல்வாதிகள் கண்டு கொள்வார்கள் என்று எதிர்பார்ப்பது போராட்டக்காரர்களின் தவறே? பொசுக்கென்று கோபப்படும் மீனவ சமுதாயத்தை ஒன்றினைத்து சாத்வீக போராட்டத்தை முன்னெடுத்த உதயகுமார் இவர்களின் பார்வையில் காசு வாங்கிக் கொண்டு கள்ளத்தனம் செய்கின்றவர் தான். 

இதற்கு மேலும் உதயகுமாருக்கு பல பட்டங்கள்.  ஓடிவிட்டார். தப்பிவிட்டார். மதத்திற்கு பின்னால் நின்று கொண்டு பயங்காட்டுகிறார் என்று ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான விமர்சனங்கள்.  பிரியாணி கொடுத்து கூட்டம் கூட்டி பழக்கப்படுத்தியவர்களிடம் வேறெந்த விமர்சனத்தை எதிர்பார்க்க முடியும்.


வசதிகளற்று வாழும் ஒரு சமூக மக்களின் அவலங்களை கிண்டலாக சித்தரிக்கின்றார்கள். அவர்களின் அச்சத்துடன் கேட்கப்படும் கேள்விகளுக்கு அது தேவையற்ற பயம் என்பதற்குள் முடித்து விடுகிறார்கள். கேள்விகள் தொடர்ந்து எழ, இந்தியாவின் வளர்ச்சிக்கு எதிரானவன் என்பதில் தொடங்கி மிரட்டுகிறார்கள். 

அகிம்சை போராட்டம் இன்று ஹிம்சையின் பக்கம் மெதுவாக திரும்பத் தொடங்கியுள்ளது.  மகாதமா காந்தியின் அகிம்சை போராட்டத்தை இன்று வரையிலும் சிலாகித்து பேசுபவர்கள்  உதயகுமார் நடத்திக் கொண்டுருக்கும் அகிம்சை போராட்டத்தினை ஆதரிக்க தயாராக இல்லை. காரணம் காந்தி எதிர்கொண்டது வெள்ளையர்களை.  உதயகுமார் எதிர்கொள்வதே கொள்ளையர்களை. 

இதுவே தமிழ்நாட்டு மீனவ சமுதாயம் ஒன்று சேர்ந்து தமிழ்நாடு முழுக்க இந்த பிரச்சனை பரவும் போது வாழ்வாதார பிரச்சனை மதப்பிரச்சனையாக மாறிவிடும் அபாயமுண்டு. மதக்கலவரமாக மாற்றிவிடத்தான் மாதா கோவிலை மாசுபடுத்தியவர்கள் விரும்புகிறார்கள் போலும். . 

Sunday, September 09, 2012

ஆழம் -- 2வது படைப்பு -- டல்லடிக்கும் டாலர் நகரம்,ஒவ்வொரு வாரத்தின் இறுதி மூன்று நாட்களும் திருப்பூர் நகர போக்குவரத்தில் நாம் நீந்தி தான் வரவேண்டியிருக்கும்.  மூச்சு திணறிவிடும்.  பிபி எகிறிவது போல படிப்படியாக வியாழன் தொடங்கும் சாலை போக்குவரத்து நெரிசல் சனிக்கிழமை அன்று உச்சமாய் இருக்கும்.  ஒவ்வொரு சனிக்கிழமையும் தொழிலாளர்களின் சம்பள தினம். தள்ளுவண்டி கடை முதல் டாஸ்மாக் கடை வரைக்கும் எங்கெங்கும் மனித தலைகளாகவே தெரியும்

சனிக்கிழமையன்று கடைநிலை தொழிலாளி கைகளில் கூட 500 ரூபாய் தாள்கள் சர்வசாதரணமாக புழங்கும், குறிப்பாக அவினாசி, பல்லடம், பெருமாநல்லூர் சாலைகளில் எள் போட்டால் எண்ணெய் ஆகிவிடும் அளவிற்கு ஜனக்கூட்டம் பிதுங்கி வழியும், எங்கு பார்த்தாலும் வாகன இரைச்சலும், மனிதர்களின் அவசர ஓட்டத்திற்குள் தான் நாமும் ஓட வேண்டியிருக்கும்,

இப்போது அத்தனையும் மாறிவிட்டது. ஏறக்குறைய ஞாயிற்றுக் கிழமை போலத்தான் தற்போதைய திருப்பூர் சாலை போக்குவரத்து இருக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் திருப்பூரை விட்டு இரண்டு லட்சம் மக்கள் வெளியேறி விட்டனர், அநத அளவுக்கு இந்த ஊரின் முகமே மாறிப் போய்விட்டது. தென் மாவட்ட மக்கள் முதல் தஞ்சாவூர், திருவண்ணாமலையைச் சுற்றியுள்ள அத்தனை கிராம மக்களின் புகலிடமாக இருந்த இந்த உழைப்பாளர்களின் நகரம் சொல்ல முடியாத துயரங்களில் தவித்துக் கொண்டிருக்கிறது

ஏற்றுமதி நகரமாக பொருளாதார ரீதியாக உயர்ந்து கொண்டிருந்த திருப்பூர் தற்போது தற்கொலை நகரமாக, திருட்டூராக மாறி இரண்டு வருடத்திற்கு மேலாகி விட்டது. 

1978 ஆம் ஆண்டு திருப்பூருக்கு ஆய்த்த ஆடை ஏற்றுமதி தொழிலுக்ககான அங்கீகாரம் கிடைத்ததுமுதல் இலக்காக 1985 ஆம் ஆண்டு 15 கோடி ஏற்றுமதி செய்தது, தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் வாழ்ந்து கொண்டிருந்த விவசாயக் குடும்பங்கள் ஓரு அளவிற்கு மேல் தங்கள் நிலங்களுடன் போரட வழியில்லாமல் திருப்பூர் பக்கம் நகர்ந்து வர திருப்பூரின் வளர்ச்சி மேலேறத் தொடங்கியது. வருடத்திற்கு வருடம் உழைப்பவ்ர்களின் கூட்டம் அதிகமாக ஆய்த்த ஆடைகளின் ஏற்றுமதியின் வளர்ச்சியும் செங்குத்தாக ஏறத் தொடங்கியது,  

இந்த வளர்ச்சி நம்ப முடியாத அளவிற்கு அடுத்த இருபது ஆண்டுகளில் 19,000 கோடியை எட்டியது, காரணம் தினந்தோறும் ஒருவர் 18 மணி நேரம் உழைப்பது என்பது திருப்பூரில் சர்வசாதரணமான விசயமாகும்,


இந்திய அளவில் மொத்த பின்னலாடை உற்பத்தில் 80 சதவிகிதம் திருப்பூரில் இருந்து தான் ஏற்றுமதி ஆகின்றது, திருப்பூரைப் போல இந்தியாவில் உள்ள மற்ற நகரங்களான பெங்களூரு, தில்லி, மும்பை, லூதியானா போன்ற இடங்களிலும் இந்த ஆய்த்த ஆடை தொழில் நிறுவனங்கள் இருந்த போதிலும் திருப்பூருக்குள் இருக்கும் உள்கட்டமைப்பு வசதிகள் வேறு எங்கும் இல்லை என்பதே உண்மை,  

நூல் முதல் கடைசியாக பெட்டியாக லாரியில் ஏற்றி துறைமுகங்களுக்கு அனுப்பி வைப்பது முதல் அத்தனை சார்பு தொழிலிலும் அருகருகே இருப்பதால் முதலீடு போட்டவர்களுக்கு மிக எளிதாக அமைந்து விடுகின்றது,  இதன் காரணமாகவே இந்தியாவில் மற்ற இடங்களில் உள்ளவர்களும், மற்ற நாடுகளில் உள்ளவர்களுக்கும் திருப்பூர் என்பது ஒரு வரப்பிரசாதமாகவே இருக்கின்றது,

ஏறக்குறைய வாழைமரத்தைப் போல இந்த பின்னலாடை தொழிலும்எதுவும் வீணாகிப் போய்விடுவதில்லை, நூல் முதல் சாயமேற்றிய துணி வரைக்கும் அத்தனையிலும் காசு பார்க்க முடியும். ஏற்றுமதியான பிறகு கூட தரமில்லாத அந்த ஆடைகளுக்கு கூட உள்ளூர் சந்தை என்று தனியாக உள்ளது என்பதால் சிறு, குறு முதலாளிகள் நிறைய உலகம் இது, இதன் காரணமாகவே இங்குள்ள ஏற்றுமதி தொழிலைச் சார்ந்த சார்பு தொழில்கள் இங்கு அதிகம், சார்பு தொழிலும் அதனைச் சார்ந்த உப தொழிலுமாக பல்லாயிரக்கணக்கான மக்கள் வாழ வழி செய்து கொண்டிருக்கிறது

பல கோடி ரூபாய் முதலீடு போட்டு தொழில் செய்பவர்கள் முதல் சில ஆயிரங்களை வைத்துக் கொண்டு தொழில் செய்பவர்கள் வரைக்கும் அத்தனை பேர்களுக்கும் காமதேனு போல அவரவர் உழைப்புகேற்றவாரு வசதிகளை இந்த பனியன் ஏற்றுமதி தொழில் உருவாக்கி தருகின்றது,

சர்வதேச பின்னலாடை வர்த்தகத்தில் இந்தியாவின் பங்கு 2,5 சதவிகிதமேஇதில் 1,5 சதவிகிதம் திருப்பூரிலிருந்து தான் ஏற்றுமதியாகின்றதுமத்திய அரசாங்கத்திற்கு தேவைப்படும் அந்நியச் செலாணியை ஈட்டித் தரும் முக்கிய ஊராக திருப்பூர் இருந்தாலும் கூட இன்று வரையிலும் இந்த ஊரின் வளர்ச்சியில் மத்திய, மாநில அரசாங்கங்கள் ஒரு துரும்மைப் கூட கிள்ளிப் போடவில்லை என்பது தான் உண்மை, இயல்பான உழைப்பில் அவரவருக்கு தோன்றிய வகையில் ஏறக்குறைய குடிசைத் தொழில் போல அபார உழைப்பின் காரணமாகவே இந்த அளவுக்கு திருப்பூர் வளர்ந்துள்ளது,

உலகில் எந்த மூலையில் என்ன பிரச்சனை நடந்தாலும் அது உடனடியாக ஏற்றுமதி தொழிலில் பிரதிபலிக்கும்நிலையில்லாத டாலரின் மதிப்பு, வங்கிகளின் கெடுபிடித்தனம், அரசாங்கத்தின் தெளிவற்ற கொள்கை என்று ஏற்றுமதியாளர்களுக்கு தினமும் நித்ய கண்டம் பூரண ஆயுசு தான், அத்தனையும் தாண்டி மேலேறி வரவேண்டும், இதுவே மத்திய மாநில அரசாங்கத்தின் வருடந்தோறும் மாற்றிக் கொண்டிருக்கும் கொள்கைகள் ஏற்றுமதியின் குரல்வளையை ஒரு பக்கம் நெறிக்க, மூலப் பொருட்களின் விலையேற்றங்கள் அடுத்த பக்கம் நெறிக்க மொத்தத்தில் முழி பிதுங்கி நிற்பவர்கள் ஏற்றுமதியாளர்கள் மட்டுமே

பழைய கல்கத்தாவிலிருந்து வந்த இந்த பின்னலாடை தொழில் இன்று சிறிய கிராமமாக இருந்த திருப்பூரை இப்போது மாவட்ட தலைநகராக்கும் அளவிற்கு வளர்ந்துள்ளதுஆனால் மாவட்ட தலைநகருக்குண்டான எந்த உள்கட்டமைப்பு வசதிகளும் இந்த ஊரில் இல்லை.  அரசாங்கம் என்பது ஆமை போல நகர மண்ணின் மைந்தர்கள் முடிந்தவரையிலும் போராடிக் கொண்டிருக்கிறார்கள்,

தேவையில்லாத செலவீனங்களை குறைக்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு முதல் முறையாக நிதி அமைச்சராக ப,சிதம்பரம் பதவியேற்றபோது ஏற்றுமதி செய்வதன் மூலம் மத்திய அரசாங்கம் கொடுத்துக் கொண்டிருந்த ஊக்கத் தொகையில் கைவைத்தார்அப்பொழுதே திருப்பூருக்கு முடக்குவாதத்தின் முதல்படி ஆரம்பம் ஆனதுஅது படிப்படியாக வளர்ந்து கடந்த ஆட்சியில் நிலவிய மின தடை பிரச்சனை முற்றிலும் இந்த தொழிலை முடக்கியே போட்டு விட்டது, இன்று ஆட்சி மாறிய போதிலும் காட்சிகள் எதுவும் மாறவில்லை, இன்று மூலப்பொருட்களின் விலையேற்றம், சாய்ப்பட்டறை பிரச்சனைகள், பருத்தி ஏற்றுமதியினால் உருவான செயற்கை தட்டுப்பாடு என்று மாறி மாறி இன்று பின்னலாடை நகரை பிணி நகராக்கிவிட்டது,

திருப்பூர் மூலம் அந்நியச் செலவாணியை ஆதாயமாக எதிர்பார்க்கும் மத்திய அரசாங்கம் ஏற்றுமதியாளர்களுக்குத் தேவைப்படும் எந்த கொள்கைதிட்டங்களையும் நடைமுறையில் கொண்டு வந்ததே இல்லை.  உலகம் மாறிக் கொண்டேயிருக்கிறது, மாற்றம் என்பது மாறாதது தானே? ஆனால் எதிர்கால சவால்களை சந்திக்க தயார்படுத்தாத தொழில் முனைவோர்களுக்கு அரசாங்கம் வழங்காத ஆதரவினால் இந்தியாவில் உள்ள எத்தனையோ தொழில்கள் மூடுவிழாவை நோக்கி போய்க் கொண்டிருப்பதைப் போலவே இந்த ஏற்றுமதி தொழிலும் இறங்குமுகத்தை நோக்கி போய்க் கொண்டு இருக்கிறது,

தாராளமயமாக்கல் என்றொரு வார்த்தை உலகத்திற்கு அறிமுகம் ஆக திருப்பூருக்கும் போட்டியாக அண்டை நாடுகள் அத்தனையும் முழித்துக் கொள்ள சனி திசை திருப்பூருக்கு ஆரம்பம் ஆனதுபாகிஸ்தான், பங்ளாதேஷ், இலங்கை இத்துடன் சீனா போன்ற நாடுகளின் பக்கம் இறக்குமதியாளர்களின் பார்வை திரும்பியதுகுறைந்த விலை என்பதே தாரகமந்திரமாக மாறிப்போனது, இறக்குமதியாளர்களின் குறைந்த விலை எதிர்பார்ப்பை ஈடு ஜசெய்யும் அண்டை நாட்டு ஏற்றுமதியாளர்களுக்கு அந்தந்த நாடுகளின் கொள்கைகள் வேறு விதமாக உதவிகரமாக இருக்கிறது. 

வளர்ச்சியடையாத நாடுகளிலில் இருந்து இறக்குமதியாகும் பின்னலாடைகளுக்கு இறக்குமதி வரி இலவசம் என்பது உருவாக மொத்தமாக அத்தனை இறக்குமதியாளர்களும் இந்தியாவை புறக்கணிக்கத் தொடங்கினர். இதனை FREE TRADE AGREEMENT ஃப்ரி டிரேட் அக்ரிமெண்ட் என்கிறார்கள்,

திருப்பூருக்குள் இரண்டு உலகம் உண்டு, ஒன்று இந்திய சந்தையை அடிப்படையாக வைத்து செயல்பட்டுக்கொண்டிருக்கும் உள்நாட்டு தயாரிப்புகளான பனியன் மற்றும் ஜட்டிகள், மற்றொன்று ஏற்றுமதி சார்ந்த அத்தனை வகையான ஆடை ரகங்களும், ஆனால் இரண்டு சந்தைகளுக்கும் நூல் என்பது முக்கிய மூலப்பொருளாக இருக்கின்றது, அமைச்சராக இருந்த தயாநிதி மாறன் முதல் இப்போதைய சரத்பவார் வரைக்கும் கொண்டு வந்த பல கொள்கைகள் பல்லாயிரக்கணக்கான பஞ்சாலைகளை மூட வைத்தன,  

பஞ்சாலைகளுக்கு தேவைப்படும் பருத்தி ஏற்றுமதி என்ற பெயரில் பறக்கத் தொடங்கியது. நம்மோடு தொழில் ரீதியான போட்டி போட்டுக் கொண்டுருக்கும் பக்கத்து நாடுகளான பங்களாதேஷ், பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகளுக்கு பஞ்சு ஏற்றுமதியாக அவர்கள் நம்மிடம் வாங்கும் பஞ்சை வைத்துக் கொண்டே சவாலே சமாளியாக திருப்பூர் பின்னலாடைத் தொழிலை உண்டு இல்லை என்று ஆட்டிப் படைக்கத் தொடங்கினர்.
  

ஏற்றுமதி என்ற நோக்கத்தில் விளைந்த பஞ்சுகளும் பதுக்கல் மூலம் கடத்தப்பட, இதற்கு மேலாக ஆன்லைன் வர்த்தகம் மூலம் பஞ்சின் விலை வானம் அளவிற்கு உயரத் தொடங்கினமின் தடை காரணமாக டீஸல் போட்டு பஞ்சாலையை ஓட்ட முடியாதவர்கள் படிப்படியாக தங்கள் உற்பத்தியைக் குறைக்க நாங்கள் வைத்தது தான் விலை என்று சந்தடி சாக்கில் மற்ற பஞ்சாலைகள் சிந்து பாடிக் கொண்டுருக்கிறார்கள். 

திருப்பூரிலிருந்து ஏற்றுமதியாகும் பின்னலாடை விலைக்கும் அண்டை நாடுகளின் விலைகளின் வித்தியாசம் இருக்க அத்தனை இறக்குமதியாளர்களும் திருப்பூரை புறக்கணிக்கத் தொடங்க போட்டி போட முடியாத ஏற்றுமதியாளர்கள் தங்களின் உற்பத்தியை படிப்படியாக குறைத்து இன்று வங்கியில் வாங்கிய கடனுக்கு பயந்து கொண்டு தொழில் என்ற பெயரில் ஒரு ஷிப்ட்டை ஓட்டிக் கொண்டுருக்கிறார்கள்.  இறக்குமதியாளர்கள் சொன்னபடி ஏற்றுமதிக்கு தேவைப்படும் அத்தனை வசதிகளையும் ஒரே கூரையின் கீழ் அமைத்து விட்டு இன்று ஒப்பந்தங்கள் இல்லாமல் பல பெரிய நிறுவனங்கள் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஒரு பக்கம் வங்கிகளுக்கு கட்ட வேண்டிய வட்டித் தொகைமற்றொரு பக்கம் தங்களுடன் இருக்கும் பயிற்சி பெற்ற தொழிலாளர்களை தக்க வேண்டிய அவசியம்ஒரு நிறுவனம் ஒரு வாரம் தொடர்ச்சியாக வேலை இல்லை என்று சொல்லும் பட்சத்தில் ஒரு தொழிலாளி எளிதாக வேறொரு நிறுவனத்திற்கு மாறி விடுவார்மறுபடியும் நினைத்த நேரத்தில் அந்த தொழிலாளியை வரவழைப்பது மிகக் கடினம்,  

இதுவே அந்த தொழிலாளி பல நிறுவனங்கள் மாறிச் செல்ல அவரின் சுய திறமையும் மங்கிப் போய் இன்றைய பிழைப்புக்கு என்ன வழி என்று சிந்தனைகளும் மாறிப் போய்விடுகின்றது, எவரை குற்றம் செர்ல்ல முடியும்? உழைப்பாளர்களின் உலகமான திருப்பூர் இன்று ஒப்பாரி வைத்தாலும் கண்டு கொள்ளாத ஆட்சியாளர்களை மனதிற்குள் திட்டிக் கொண்டுருக்கின்றது,

சில வாரங்களுக்கு முன்னால் இங்கு திருப்பூர் வெற்றிப்பாதையில் 2012 என்றொரு கருத்தரங்கம் நடத்தப்பட்டது,  பின்னலாடைத் தொழிலில் நேரிடையாக மறைமுகமாக சம்மந்தப்பட்ட அத்தனை தொழில் முனைவோர்களும் அரசாங்கத்தின் சார்பாக வந்திருந்த அதிகாரவர்க்கத்தினரிடம் தங்கள் குமுறல்களை கொந்தளிப்பாக வெளிப்படுத்தினர்,  இலவச செல்போன் கொடுக்க திட்டம் தீட்டும் மத்திய அரசாங்கம் உழைக்க தயாராக இருக்கின்றோம் என்று சொல்லும் திருப்பூருக்கு எதிர்காலத்தில் என்ன திட்டி இந்த ஊர் மக்களை காப்பாற்றப் போகின்றார்களோ?

நன்றி - 'ஆழம்' மாதாந்திர இதழ் 

Wednesday, September 05, 2012

இட ஒதுக்கீடு - ஒடுக்கப்பட்டவர்களின் வாழ்க்கை


இன்றைய நவீன விஞ்ஞானம் தந்த ஏவுகணை கூட ஒரு நாட்டின் குறிப்பிட்ட இலக்கை மட்டும் தான் தாக்கும். ஆனால் மதம் என்ற ஒரு சொல்லை மட்டும் வைத்துக் கொண்டு மொத்த நாட்டையும் பற்றியெறிய வைக்க முடியும். மனிதர்களால் உருவாக்கப்பட்ட விஞ்ஞானம் அணைவருக்கும் பொதுப்படையான வளர்ச்சியை தந்தது. ஆனால் இடையே உருவாக்கப்பட்ட மதங்களோ இன்று உலகத்தையே அச்சுறுத்திக் கொண்டுருக்கிறது.

ஆனால் இந்திய நாடு மட்டும் இந்த விசயத்திலும் வித்தியாசமானது.  மதம் என்ற சொல்லுக்குண்டான வலுவை விட சாதி என்ற சொல்லுக்குத் தான் இங்கு வலிமை அதிகம். சாதி என்ற இந்த ஒரு வார்த்தையின் மூலம் மட்டுமே இன்றைய இந்தியாவையே நிலைகுலைய வைக்கமுடியும்.

இந்தியாவை ஆண்டு கொண்டுருந்த ஆங்கிலேர்களுக்கு கடைசி வரைக்கும் ஆட்சி புரிய உதவி புரிந்ததும் இங்கிருந்த சாதி தான். 

பிரிக்கப்பட்டு இருந்தார்கள். கடைசி வரைக்கும் பிரிந்தே இருந்தார்கள்.  இன்று வரையிலும் பிரிந்து தான் இருக்கிறார்கள். சுதந்திரம் வாங்கிய போது காந்தி சொன்ன மைனாரிட்டிகளின் உரிமையும் இன்று வரையிலும் எந்த மாற்றமும் இல்லாமல் அப்படியே தான் இருக்கிறது. சாதியைப் பற்றி பேசுபவர்கள் அடுத்து ஆரம்பிப்பது இந்த மைனாரிட்டிகளின் உரிமை என்பதை இந்திய அரசியல்வாதிகளால் அதிகம் உச்சரிக்கப்பட்டுக் கொண்டே தான் இருக்கிறது.  

ஆனால் இவற்றையெல்லாம் மற்றொரு பொக்ரான் அணுகுண்டு ஒன்று உண்டு. அது இந்தியாவில் உள்ள சாதிகளைப் பற்றி பேசுதல் மற்றும் சாதிவாரியான இட ஒதுக்கீடுகளைப் பற்றி பேசுதல்.


இந்த ஒதுக்கீடுகளில் உள்ள பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட பழங்குடியினர் மற்றும் சீர்மரபினர் மக்களுக்கு ஒதுக்கப்பட்ட ஒதுக்கீடு சதவிகிதங்களைப் பற்றி முரண்பாடாக பேசினால் போதும்.  நாடே பற்றியெறியத் தொடங்கும். பேசியவரின் தலை இருக்காது. அந்த அரசியல் கட்சியே இல்லாமலேயே கூட போய்விடும்.  சாதிகள் இல்லையாடி பாப்பா என்று சொன்னவர் பாப்பாவுக்கு மட்டும் தான் சொல்லியிருக்கிறார் என்று கணக்கில் எடுத்துக் கொண்டு இன்றைய தலைவர்கள் மறந்து விட்டார்கள். 

சாதி இன்றும் ஆலமரமாக ஏராளமான விழுதுகளுடன் ஆரோக்கியமாகவே இருக்கிறது. இன்று அரசியல் என்ற உரம் போட்டு வளர்த்துக் கொண்டுருக்கிறார்கள். 

இன்றைய இந்திய அரசியலுக்கு சாதி தான் உயிர் நாடி. இந்த சாதி தான் பதவியைத் தருகின்றது. தந்த பதவியை எடுக்க உதவுகின்றது. தரமுடியாத பதவியை தந்தே ஆக வேண்டும் நிர்ப்பந்தம் மூலம் பெற முடிகின்றது. இதன் காரணமாகவே சாதிவாரியான ஒதுக்கீடுகளைத் தாண்டி உள் ஒதுக்கீடு என்பது வரைக்கும் வளர்ந்துள்ளோம்.


இந்திய தலைவர்களில் இந்த பொக்ரான் அணுகுண்டின் மேல் ஏறி நின்று பார்த்தவர் முன்னாள் பிரதமர் விபி.சிங். 

'மண்டல் கமிஷன்' என்ற ஆயுதம் பூமராங் போலவே அவரை உண்டு இல்லையென்று மாற்றி கடைசியில் அவரையே நிலைகுலையவும் வைத்துவிட்டது. இதன் காரணமாகவே எந்த அரசியல் கட்சிகளும் முடிந்தவரையிலும் இந்த ஒதுக்கீடு விசயத்தில் வாயைக் கொடுத்து புண்ணாக்கி கொள்ள விரும்புவதில்லை. முடிந்தவரைக்கும் எறியும் கொள்ளியில் எண்ணெய் ஊற்றுவதைத் தான் எல்லா கட்சிகளும் இன்று வரைக்கும் செய்து கொண்டுருக்கிறார்கள்.  

ஆனால் உருவாக்கப்பட்ட சாதி வாரியான ஒதுக்கீடுகள் இப்போதைய நிலைமையில் உண்மையான நபர்களுக்குத் தான் செல்கின்றதா? மைனாரிட்டிகளுக்கு வழங்கப்படும் உரிமைகள் உரியவர்களுக்கு பயன்படுகின்றதா?

அப்துல்கலாம் இந்திய நாட்டின் ஜனாதிபதியாக ஆனது அவரின் தனிப்பட்ட திறமைகளுக்காக அல்ல.  அந்த சமயத்தில் அரசியல் கட்சிகளுக்கு தேவைப்பட்ட 'மைனாரிட்டிகளின் காவலன்' என்ற பட்டத்திற்காகவே முன்னிறுத்தப்பட்டார். எந்த நாட்டிலும் இந்த மைனாரிட்டிகளை பகைத்துக் கொள்ள விரும்புவதில்லை. காரணம் தேர்தல் சமயத்தில் இவர்களின் ஓட்டு தான் முக்கிய பங்காற்றுகின்றது.

ஆனால் அடுத்த முறை காட்சி மாறியது. 

மைனாரிட்டி என்ற வார்த்தை மாறி பெண்ணுரிமை என்று வர பிரதிபா பாட்டீலுக்கு அடித்தது யோகம். இந்தியாவில் உள்ள பதவிகளுக்கு தகுதி என்பது முக்கியமல்ல. சந்தர்ப்ப சூழ்நிலைகள் தான் முக்கியத் தேவையாக இருக்கிறது.

அப்துல்கலாமைப் பொறுத்தவரையில் ஒரு விஞ்ஞானிக்கு இந்திய நாடு கொடுத்த கௌரவம் என்பதாகக் கூட எடுத்துக் கொள்ளலாம். பிரதிபாவுக்கு என்ன தகுதியிருந்தது? 

அவரின் தகுதியைத் தான் அணைவரும் பார்த்து விட்டார்களே? 

ஜனாதிபதி மாளிகையில் சுவற்றில் அடித்த சுண்ணாம்புகளைத் தவிர அத்தனையும் பதவி காலம் முடிந்ததும் வெட்கப்டாமல் தனது வீட்டுக்கு எடுத்துக் கொண்டு சென்று விட்டார்.  பெண்ணுரிமைக்கு முன்னுரிமை கொடுக்கின்றோம் என்று சொன்னவர்கள் தான் பாராளுமன்றத்தில் பெண்களுக்கு உரிய சதவிகிதத்தை கொடுக்கவும் மறுக்கின்றார்கள். காலங்கள் மாறும் போது காட்சியும் மாறுகின்றது. ஒவ்வொரு கட்சிகளும் தங்கள் கொள்கைகளை புதுப்பித்துக் கொள்கின்றது.

முன்னாள் பாரத பிரதமர் நரசிம்மராவ் ஆட்சி காலத்தில் பம்பாயில் கலவரம் நடந்து கொண்டுருந்த போது அவரால் அமைதியாகவே இருக்க முடிந்தது. அத்வானி கரசேவையின் மூலம் இந்தியாவை மத அச்சுறுதலுக்கு உரிய நாடாக மாற்றிய போதும் கூட அமைதியாகவே இருக்க முடிந்தது.  ஆனால் ஆண்டது காங்கிரஸ்.  செய்தது பாரதிய ஜனதா கட்சி. காங்கிரஸ் அமைதியாகத்தான் இருந்தது.  இதுவே பாரதிய ஜனதா ஆட்சியில் இருந்தால் அதன் முகமே வேறு விதமாக இருக்கும்.  எதைத் தொட்டாலும் அதற்கு மத சாயம் பூசப்படும். இன்று வரையிலும் அப்படித்தான் பேசப்படுகின்றது.  குஜராத் வரைக்கும்.

இங்கு என்ன பிரச்சனை? என்று எவரும் பார்க்க விரும்புவதில்லை.  அது யாரால் என்பது தான் முக்கியமாக படுகின்றது.  அதை எப்படி தேர்தல் சமயத்தில் பயன்படுத்தப்படலாம் என்ற யோசனை தான் முன் வைக்கப்படுகின்றது.  

ஆனால் எந்த பிரச்சனை என்றாலும் அதை முழுமையாக தீர்க்கப்படுவதை எவரும் விரும்புவதிலலை. பாரதிய ஜனதா கூட நாங்கள் முழுமையான இந்துத்துவா கட்சி என்று சொல்வதில்லை.  நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மைனாரிட்டிகளின் உரிமைகளுக்கு முன்னுரிமை கொடுப்போம் என்று தான் தொடங்குகிறார்கள். காரணம் பயம். இந்தியா ஒரு மத சுதந்திர நாடு என்று சொல்லியே மங்கிய ஒளியில் காட்டும் உருவம் போலவே பலதும் தெரிகின்றது. யாரும் வெளிச்சத்தில் நின்று உரக்க பேச முடியாத நிலைமைக்கு வந்துள்ளது. இது தான் இன்றைய அரசியல்வாதிகளுக்கு பம்பர் பரிசாக இருக்கின்றது. 

இந்த மைனாரிட்டிகளுக்கு உரிமை என்ற நோக்கத்தில் தான் பல சட்டதிட்டங்கள் வளைந்து கொடுத்துக் கொண்டுருக்கிறது. இன்றைய கல்வியானது அநேக மைனாரிட்டி நிறுவன பெயரைத் தாங்கிக் கொண்டு வியாபாரமாக மாறிவிட்டது. காரணம் மைனாரிட்டி நிறுவனங்கள் என்றாலே அரசாங்கத்தின் பார்வை வேறுவிதமாக இருக்கிறது. அதுவே மெஜாரிட்டி என்னும் போது தனியாக இருக்கின்றது.  

சாதாரண மனிதர்கள் சந்திக்கும் எந்த பிரச்சனைகளையும் மைனாரிட்டி நிறுவனங்கள் எதிர்கொள்ள தேவையில்லை. அதையும் மீறி முறைப்படி சட்டம் தன் கடமையைச் செய்யும் பட்சத்தில் அதற்கு வேறொரு மூலாம் பூசப்பட்டு நோக்கமே வேறொரு திசையில் கொண்டு போகப்படும். இதற்குப் பயந்தே பாதி அதிகாரிகள் கண்டும் காணாமல் ஒதுங்கிப் போய்விடுகிறார்கள். இதே மைனாரிட்டி சார்பாக தொடங்கும் நிறுவனங்களில் எத்தனை சதவிகிதம் மைனாரிட்டி சமூக மக்களுக்கு முன்னுரிமை கொடுத்து வாழ்க்கை தருகிறார்கள். பட்டியலிட்டு பார்த்தால் அவரவர் பண சம்பாத்தியத்திற்கு மட்டும் இந்த பெயர்களை பயன்படுத்திக் கொண்டுருப்பது புரியும். சாதியோ, மதமோ எதுவானாலும் அரசியல் தலைவர்களுக்கு காசே தான் கடவுளடா? 

இதன் தொடர்சசியாக தான் இன்று மத்திய அரசாங்கத்தின் அமைச்சரவை தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமை என்ற நோக்கத்தில் ஒரு சட்டத்திற்கு அனுமதி கொடுத்துள்ளது.

உச்சநீதிமன்றம் தொடர்ச்சியாக முட்டுக்கட்டை போட்டுக் கொண்டேயிருக்க, இந்த பஞ்சாயத்தில் இனி நீதிமன்றங்கள் தலையிட தேவையில்லை என்று இந்திய அரசு தனது அரசியல் சாசன சட்டத்தையே மாற்றப் போகின்றது. அதாவது ஒதுக்கீடு மூலம் குறிப்பிட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் அரசுபணியில் இன்று எளிதாக நுழைந்து விட முடிகின்றது.  வாழ்க்கையில் மற்றவர்களைப் போல அவர்களும் சரிசமமாக உயர வேண்டும் என்று ஏராளமான சலுகைகள் வழங்கப்பட்டு இருக்கிறது. 

கல்வி முதல் வேலைவாய்ப்பு வரைக்கும் அத்தனை துறைகளிலும் இந்த இன மக்களுக்காக பல சலுகைகள் வழங்கப்பட்டு வந்து கொண்டுருக்கிறது. ஆனால் பிரச்சனை முடிந்தபாடில்லை. இவர்கள் பணிபுரியும் அலுவலகத்தில் இவர்களின் பதவி உயர்வு ஆதிக்க சாதியினரால் தடுக்கப்படுகின்றது எனற கோரிக்கை நீண்ட நாட்களாகவே இருந்து வந்தது. 

உத்திரப்பிரதேச நவீன புரட்சித்தலைவி மாயாவதிக்கு இதுவொரு ஆயுதமாகவும் கனவாகவும் இருந்தது.  இன்றைய சூழ்நிலையில் அவரது கட்சி தலைகுப்புற கிடந்தாலும் அவரே அங்குள்ள மொத்த தாழ்த்தப்பட்ட மக்களின் ரட்சகராக இருப்பதாக பரப்பப்படுகின்றது. ஆனால் பெரும்பான்மை பெற்று ஆட்சியில் இருந்த போது இந்த இன மக்களுக்கு இவர் உருப்படியாக என்ன செய்தார் தெரியுமா? உத்திர பிரதேசத்தில் அவர் ஊரெங்கும் உருவாக்கிய அவர் கட்சியின் சின்னமான யானை சிலைகளை தான் காட்ட முடியும்.

அவரைத் தொடர்ந்து ஒவ்வொரு மாநில கட்சிகளும், சாதி ரீதியான கட்சிகளும் தாழ்த்தப்பட்டவர்களின் காவலன் என்ற பட்டத்தைப் பெற முடிந்தவரைக்கும் முயற்சி எடுத்து வந்தது. இன்று அரசியல் சாசன திட்ட மாறுதல் வரைக்கும் வந்து நின்றுள்ளது. தாழ்த்தப்பட்ட சமூகத்திலிருந்து வந்து அரசுப் பணியில் இருக்கும் ஒருவர் அந்த துறையில் உச்சகட்ட பதவி உயர்வு வரைக்கும் வரும் அளவுக்கு உண்டான அங்கீகாரத்திற்கு அனுமதி கொடுத்து நிறைவேற்றி உள்ளது. 

அதாவது குறிப்பிட்ட துறையில் பணியாற்றும் போது அவருக்குண்டான பணி சார்ந்த திறமைகள் குறித்து கவலைப்படத் தேவையில்லை. அவர் இன்ன சாதி என்ற நோக்கம் ஒன்றே அவருக்கு பதவி உயர்வை தந்து விடும்.  இது தான் இந்த சட்டத்தின் மூலம் கிடைக்கும் பலன்.


அண்ணல் அம்பேத்கார் தொடங்கி வைத்த பயணம் இது. தலித் மக்களின் தலைவர் என்று கொண்டாடப்படும் இந்த தலைவர் பெற்ற கல்வியறிவு என்பது அன்றைய காலகட்டத்தில் நினைத்தே பார்க்க முடியாத சாதனை. கல்வியறிவு பெற்று இருந்த போதிலும் கூட தன்னை நிலைநிறுத்திக் கொள்ள பாடுபட்ட விதம் தான் குறிப்பிடத்தக்கது. அடக்குமுறை, ஒடுக்குமுறை, அவமானங்கள் அத்தனையும் தாண்டி வந்த சாதித்த சாதனைகளின் விளைவுகளை தான் இன்று ஒடுக்கப்பட்டவர்கள் அத்தனை பேர்களும் சுகவாசியாக அனுபவித்துக் கொண்டுருக்கிறார்கள். ஆனால் தங்களின் உண்மையான விடுதலையென்பது கல்வியின் மூலம் மட்டுமே என்பதை உணர்ந்தவர்களின் சதவிகிதம் குறைவாகவே இருக்கிறது.   

இந்தியா சுதந்திரம் பெற்று 66 ஆண்டுகளை தாண்டி வெற்றிகரமாக கடந்து வந்து விட்டோம்.

இந்த 66 ஆண்டுகளில் ஒவ்வொரு 20 ஆண்டுகளாக கணக்கில் எடுத்துக் கொண்டாலும் இந்த இன மக்களில் மூன்று தலைமுறையாக கல்லூரி வரைக்கும் வந்தவர்கள் மிக குறைவே. குடும்ப சூழ்நிலை, பொருளாதார காரணங்கள் என்று எத்தனை அடுக்கிப் பார்த்தாலும் தங்கள் வாழ்க்கையை அரசாங்கம் கொடுத்த வாய்ப்புகளை பயன்படுத்தி மேலே வந்து இருக்க வேண்டும்.  இன்றைய உண்மையான நிலை என்ன? 

ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர் வளர்ச்சி பெற்று பெரிய தொழில் அதிபராக இருக்கிறார். மற்றொருவர் கல்வியின் மூலம் அரசாங்கத்தில் நல்ல பதவியில் இருக்கிறார். ஒருவர் இதே அரசாங்கத்தில் கடைநிலை ஊழியராக இருக்கிறார். இது அரசாங்கம் கொடுத்த வாய்ப்பை பயன்படுத்தி மேலே வந்தவர்கள்.

நிச்சயம் இவர்களின் பொருளாதார வாழ்க்கை சிறப்பாக இருப்பதோடு தனது தலைமுறைகளின் வாழ்க்கையை சரியான பாதையில் கொண்டு போக முடியும்.

இதைப் போலவே கூலி வேலை செய்து கொண்டுருப்பவர்களும், அடிப்படை வசதிகள் அற்ற இடங்களில் வாழ்ந்து கொண்டுருப்பவர்களும் என தனியான வாழ்க்கை முறையில் வேறொரு கூட்டமும் வாழ்ந்து கொண்டுருக்கிறது.  இவர்களுக்கு இரண்டு பிரச்சனைகள். பொருளாதார வாழ்க்கையும் சுகமாக இருக்காது. தன்னை அடிமைப்படுத்தி வைத்திருப்பவர்களை தாண்டியும எதுவும் செய்து விட முடியாது. பெரும்பாலான கிராமங்களின் இன்று வரையிலும் இது தான் நடந்து கொண்டுருக்கிறது.  இவர்களின் தலைமுறையும் வேறுவழியே தெரியாமல் இதே பாதையில் தான் வாழ்ந்தாக வேண்டும்.

இது தவிர இந்த ஒடுக்கப்பட்ட மக்களில் வாழ்ந்து கொண்டுருக்கும் நடுத்தர வர்க்கம்.

மேலே சொன்ன மூன்று கூட்டத்திற்கும் இந்த இட ஒதுக்கீடு ஒரே மாதிரியான பார்வையில் தான் வைக்கப்படுகின்றது. அதிகாரியின் மகன் பெற்ற ஒதுக்கீட்டின் காரணமாக வசதியற்ற குடும்பத்தில் உள்ளவனுக்கு எதுவும் போய்ச் சேர்வதில்லை. இது தவிர ஒரு குடும்பத்தில் ஐந்து பேர்கள் இருக்கிறார்கள் என்றால் அவர்கள் அத்தனை பேர்களுக்கும் இந்த வசதிகள் கிடைக்கின்றது. இட ஒதுக்கீடு மூலம் பெற்ற வாழ்க்கைத் தரம் என்பதை அரசாங்கம் கணக்கில் எடுத்துக் கொள்ளாது. சாதி என்பதே எல்லா இடங்களிலும் முன்னிறுத்தப்படுகின்றது.

பொருளாதார ரீதியான பங்கீட்டை அமல்படுத்த எவருக்கும் மனம் இருப்பதில்லை. மொத்தத்தில் முறைப்படியான பங்கீடுகள் இல்லை.  சேர வேண்டியவர்களுக்கு போய்ச் சேரவும் இல்லை.  மீண்டும் மீண்டும் அதே சுழல். அதே வாழ்க்கை. அதே கொடுமை.

வர்க்கப்போராட்டத்தின் அரிச்சுவடியான "வசதியானவர்கள் விட்டுத் தருவதில்லை.  வாய்ப்பு கிடைக்காதவன் அடித்துப் பிடுங்குவதும் தவறில்லை" என்கிற நிலைக்குத் தான் இப்போதுள்ள இட ஒதுக்கீடு அழைத்துச் சென்று கொண்டுருக்கிறது.

பள்ளியில் சலுகை, பள்ளி முடித்த போது கல்லூரியில் சேர சலுகை.  கல்லூரி முடித்த போது அரசு பணியில் சேர சலுகை.  பணியில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வில் சலுகை.  இப்போது கூடுதலாக குறிப்பிட்ட துறையில் உச்சத்தை தொடும் அளவுக்கு பணித்திறமைகளுக்கு அப்பாற்பட்டு தனிச் சலுகை.

இன்றும் சாதீய கொடுமை இருக்கின்றது என்பது மறுக்க முடியாத உண்மை. 

அதைப் போல அரசாங்கம் கொடுத்த சலுகைகளை பயன்படுத்தி மேலே வந்தவர்கள் அத்தனை பேர்களும் அவர்கள் அடைந்த சுதந்திரத்தை மற்றவர்களுக்கும் தருகிறார்களா? குறைந்தபட்சம் தங்களது இன மக்களுக்காக தங்களால் முடிந்த உதவிகளை செய்து அடுத்தவர் மேலேற உதவுகின்றார்களா என்பது தான் இன்று வரையிலும் கேள்விக்குறியாக இருக்கிறது. இன்றும் பார்பனீயம் என்ற வார்த்தை இந்தியாவில் விடாது துரத்தும் கருப்பாக இருப்பதைப் போலவே உயர்படிப்பில் காட்டும் பாரபட்சம் என்பதில் தொடங்கி உள்ளூர் கிராமங்களில் தேர்ந்தெடுத்த தலித் பஞ்சாயத்து தலைவர்களை பணியாற்ற விடாமல் தடுப்பது வரைக்கும் அரங்கேறிக் கொண்டு தான் இருக்கிறது.  உண்மையான காரணங்கள் எத்தனை இருந்தாலும் இதில் உளவியல் காரணமும் இருக்கின்றது.

3000 வருடங்களாக இந்தியாவில் நடந்து வந்த கொடுமை இது. இன்று வரையிலும் மனிதர்களால் தங்களை மாற்றிக் கொள்ள முடிவதில்லை. ஆண்டாண்டு காலமாக தங்களைப் பார்த்து வணங்கிய கூட்டம் இன்று வசதியாக தங்களை மாற்றிக் கொள்ளும் போது உருவான ஆதிக்கதீ உள்ளுற கொளுந்து விட்டு எறிந்து கொண்டு தான் இருக்கிறது. நாடாக இருந்தாலும் வீடாக இருந்தாலும் இன்று பொருளாதாரம் தான் அனைத்தையும் தீர்மானிக்கின்றது. பணம் இருந்து விட்டால் பதவி வந்து விடுகின்றது. பதவி வந்து விட்டால் பழையவை மறக்கப்படுகின்றது. கடந்து வந்த பாதையை மறக்கும் போது தனக்கு பின்னால் கண்ணீர் வடித்துக் கொண்டுருப்பவர்கள் எவரும் கணகளுக்கு தெரிவதில்லை. 

சரி, உதவிகள் தான் செய்யவில்லை என்பதை கணக்கில் எடுத்துக் கொண்டாலும் இட ஒதுக்கீடு சலுகைகளை அனுபவித்து மேலே வந்தவர்களின் வாழ்க்கையோ முற்றிலும் வேறு விதமாக இருக்கிறது.

படித்து மேலே வருபவர்கள் எவரும் நான் இந்த இனத்தைச் சேர்ந்தவர் என்று சொல்லிக் கொள்ள விரும்புவதே இல்லை.  முடிந்தவரைக்கும் தன் இடத்தை, தன் வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்ளத் தான் விரும்புகிறார்கள்.  படித்தவர்கள், படித்துக் கொண்டுருப்பவர்கள், பணியில் சேர்ந்தவர்கள், வாழ்வில் உயர்ந்தவர்கள் என்று தெரிந்த வட்டத்தில உள்ளவர்களை கணக்கு எடுத்துப் பார்த்தால் அவர்களின் உறவினர்களுக்கு கூட உதவி செய்யாதவர்களாகத்தான் இருக்கிறார்கள். 

மற்ற காரணங்களை விட இது தான் முழுமையான சுதந்திரம் கிடைக்காமல் இருக்க முக்கிய காரணமாக இருக்கின்றது. சுதந்திரம் என்பது கொடுப்பதல்ல. தான் உணர்வது. தான் உணர்ந்ததை மற்றவர்களுக்கு கொடுக்கும் போது தான் அதுவொரு உருவமாக மாற்றப்படுகின்றது.  உணரும் போது தான் உண்மையான சுதந்திரத்தின் அருமை தெரியும்.  உணரவும் தெரியாமல் ஒதுங்கவும் முடியாமல் இன்றைய ஒடுக்கப்பட்டவர்களின் வளர்ச்சி வினோத கலவையாக இருக்கிறது.

ஒரு சிலையை உடைத்து விட்டார்கள் என்று எழுச்சியோடு கூடும் கூட்டம் தங்கள் இடங்களில் உள்ள பள்ளிக்கூடங்கள் தேவை என்பதற்காக அதிக எழுச்சியோடு போராட்டம் செய்வது குறைவாகத்தான் இருக்கின்றது. எங்கள் பக்கம் ஓட்டுக்கு பணம் கொடுக்கவில்லை என்று கதறிக் கொண்டு பேட்டி கொடுப்பவர்கள், தகுதி பார்த்து தங்கள் தலைவர்களை தேர்ந்தெடுப்பதில் ஆர்வம் காட்டுவதில்லை. வலியோடு அதிகம் வாழ்பவர்கள் தாங்கள் செய்யும் சிறிய தவற்றின் வலிமை அடுத்த பல தலைமுறைகளுக்கும் கடத்தப்படுகின்றது. தகுதியான தலைவர்கள் உருவாகாமல் போனதற்கு இதுவே முக்கிய காரணமாக இருந்து விடுகின்றது. இதன் காரணமாகவே இன்று வரையிலும் இந்த மக்களை வெறும் உணர்ச்சிக்கூட்டமாகவே வைத்திருக்க முடிகின்றது.   

இன்று வரையிலும் இவர்களுக்கு ஒதுக்கப்பட்ட அரசாங்க இடங்கள் பெரும்பாலான சதவிகிதம் வருடந்தோறும் நிரப்பப்படாமல் தான் இருக்கின்றது.  காரணம் கல்வியில் அக்கறையின்மை.  தலைவர்கள் என்று சொல்லிக் கொண்டு எவர் வந்தாலும் ஏற்றுக் கொண்டு கண்மூடித் தனமாக ஆதரவு அளிப்பது என்பது வரைக்கும் போய்க் கொண்டே இருப்பதால் தன்னலமற்ற ஒரு தலைவர் கூட இந்த இன மக்களுக்கு அமையவே இல்லை என்பது தான் உண்மை. முறையான தகுதியுள்ளவர்களுக்கும் இதன் காரணமாகவே வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றது.

தாழ்த்தப்பட்ட மக்கள் என்று பொதுப்பபடையாக சொல்கின்றோமே தவிர அதற்குள் இருக்கும் அத்தனை பிரிவுகளும் ஒன்றுடன் ஒன்று சேராமல தனித்தனி தீவுகளாகத் தான் இருக்கிறார்கள்.  அதற்குள்ளும் நான் பெரியவன்.  நீ எனக்கும் கீழே என்ற ஆதிக்க உணர்வு தான் இன்னமும் இருக்கிறது. பார்ப்னீயத்தை கேலி செய்து கொண்டே தங்களையும் ஒரு பார்ப்னீய பாதையில் தான் கொண்டு போய்க் கொண்டுருக்கிறார்கள்.  

இந்திய அளவில், தமிழக அளவில் அத்தனை தாழ்த்தப்பட்ட மக்களின் தலைவர்களும் இன்று வரையிலும் தேவதூதர்களாகத்தான் இருக்கிறார்கள்.  கலவரம் உருவாவதற்கும் காரணமாக இருப்பவர்கள் அத்தனை பேர்களும் கலவரம் அடங்கி உயிர்பலியை வேடிக்கைப் பார்க்கத்தான் வருகிறார்கள். அதுவரையிலும் பாதுகாப்பாகத்தான் இருக்கிறார்கள். பள்ளிக்கூட பாடங்களில் முதல் பக்கத்தில் நாம் பார்த்த படித்த வரிகள் மிக முக்கியமானது.

தீண்டாமை பாவச் செயல்.
தீண்டாமை ஒரு பெங்குற்றம்.
தீண்டாமை ஒரு மனித தன்மையற்ற செயல்.

ஆனால் இப்போது நடந்து கொண்டுருக்கும் சூழ்நிலைகளை வைத்துப் பார்க்கும் போது இனிமேல் இப்படித்தான் எழுத வேண்டியிருக்கும் போலிருக்கு.

தெளிவற்ற ஒதுக்கீடு பாவச் செயல்,
தேவையற்ற ஒதுக்கீடு ஒரு பெருங்குற்றம். 
தகுதியானவர்களை ஒதுக்குவது மனிதத்தன்மையற்ற செயல்.

டாலர் நகரம் 4

Monday, September 03, 2012

முகமூடி- விமர்சனமல்ல


 திருப்பூர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளராக இருந்த அஸ்ரா கர்க் தர்மபுரிக்கு மாற்றப்பட்டுள்ளார்.  பதவியேற்று நான்கு மாதங்கள் கூட முடியவில்லை. இந்த குறுகிய காலத்திற்குள் பலரின் கண்களிலும் விரலை விட்டு ஆட்டிவிட்டார்.  இதற்கு முன்பு இருந்த அருண், பாலகிருஷ்ணன், அஸ்ரா கர்க் இந்த மூவருக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. தங்கள் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருந்த விதமும், உடற்பயிற்சிகளில் உள்ள ஆர்வமும் என பலருக்கும் முன் உதாரணமாக இருந்தார்கள். ஊருக்குள் நடக்கும் அத்தனை கல்லூரி, பள்ளி கலந்துரையாடல்களிலும் பாரபட்சமின்றி கலந்து கொண்டு ஊக்குவித்தார்கள். பார்ப்பதற்கு கல்லூரி செல்லும் மாணவர்களைப் போலத் தான் இருப்பார்கள்.


திருப்பூர் மாவட்டமாக மாறிய பின்பும் அதற்குண்டான அடிப்படை கட்டமைப்புகள் இல்லாத காரணத்தால் போக்குவரத்து முதல் குற்றச்செயல்கள் வரைக்கும் எதற்கும் பஞ்சமில்லை. ஆனால் எந்த நேர்மையான காவல்துறை அதிகாரியும் சமீப காலத்தில் இங்கே தொடர்ந்து மூன்று வருடங்கள் இருக்க முடிவதில்லை. ஆனாலும் இங்கேயே பட்டறை போட்டுக் கொண்டு பல துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் அதிகமாகவே இருக்கிறார்கள்.

அருண் எஸ்.பியாக இருந்த போது இங்குள்ள ஒரு திமுக பிரபல்யத்தின கைத்தடிக்கு கும்மாங்குத்து விழுந்தது. அந்த பிரபல்யத்தின் எதிரே முகத்தில் அறையும் விழுந்தது. 'இங்கேயே எண்கவுண்டரில் போட்டுத் தள்ளிட்டு போயிக்கிட்டே இருப்பேன்' என்றதும் சிபாரிக்கு வந்த பிரபல்யத்திற்கு சப்தநாடியும் அடங்கிவிட்டது. கலைஞர் ஆட்சியில் பிரபல்யமும் முதல் மேயராகவே வலம் வந்தார். குறி வைத்தார்கள். முடித்தே விட்டார்கள். அடுத்து வந்த பாலகிருஷ்ணன் கூட சிறப்பாகவே செயல்பட்டார். கடைசியாக அஸ்ரா கர்க். 

இவர் மதுரையிலிருந்து இங்கு மாற்றலாகி வருகின்றார் என்றதும் பாதிப்பேர்களுக்கு தூக்கமே போய்விட்டது.  மணல் மாஃபியாக்களை முழுமையாக ஒழிக்க முடியா விட்டாலும் கூட திருப்பூர் மாவட்டத்திற்குள் இருந்த அத்தனை மூகமுடிகளின் தூக்கத்தையும் கெடுத்தவர்.  காவல் துறை சார்ந்த கருங்காலிகளுக்கு ஆப்பு, ரிவீட்டு என்று மாறி மாறி அடித்துக் கொண்டே இருந்தார். திருப்பூர் மாவட்ட மக்களுக்கு காவல்துறை என்றால் ஒரு மரியாதையை உருவாக்கியது தான் இவர் செய்த முக்கிய பணியாக இருந்தது. இதைவிட பிரச்சனைகளை கொண்ட தர்மபுரி மக்களுக்கு இவரின் சேவை இன்னும் எத்தனை நாளுக்கோ?

ஆட்சிகள் மாறினால் என்ன?  மூகமூடிகள் தான் ஒவ்வொரு சமயத்திலும் ஜெயித்துக் கொண்டேயிருக்கிறார்கள். 
.............................................................................................. 
வெற்றிகரமாக டாமின் நிறுவன ஊழல் பூதம் ஒவ்வொன்றாக வெளியே வந்து கொண்டுருக்கிறது. முக்கிய மூன்று அதிகாரிகளை கைது செய்து பூஜையை தொடங்கியுள்ளார்கள். மூவரும் முகமூடி போல் துண்டை வைத்து தங்கள் முகத்தை மறைத்துக் கொண்டு வந்தாலும் ஊடகத்துறை அவர்களின் முகதரிசனத்தை பார்க்க வைத்து விட்டது.  பி.ஆர்.பி போல சிக்காமல் வாழ்க்கையின் எல்லைக்கே மத்திய அமைச்சர் அழகிரி மகன் துரைதயாநிதி ஓடிக் கொண்டுருக்கிறார் போலும். 

இவரின் முகமூடி வாழ்க்கை இன்னும் எத்தனை நாளுக்கோ தெரியவில்லை?.

தங்கள் முகத்தினை துண்டுகளை வைத்து மறைத்து கொண்டு வந்த அதிகாரிகள் இதற்கு முன்பு பலரும் லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்டு இதே போல ஊடகத்தில் வந்த அதிகாரிகளை வந்திருந்ததை பார்த்திருப்பார்கள் தானே?  அப்போது நாமும் இதைப் போல ஒரு நாள் மாட்டத்தான் போகின்றோம் என்று நினைத்துருப்பார்களா? குறைந்தபட்சம் தங்கள் குடும்பம் சார்ந்த அத்தனை உறவுகளின் மத்தியில் அவர்களுக்குண்டான மரியாதை எப்படியிருக்கும்? "திருடத் தெரியனும்.  ஆனால் சிக்கிக் கொள்ளாமல் இருக்க சிந்தனையை பயன்படுத்த வேண்டும்" என்று சமூகம் அறிவுரை வழங்குமோ? 

இந்த முகமூடி அதிகாரிகளைப் பார்த்து தற்போது வெளியே வராமல் ஊழலில் சம்பாரித்துக் கொண்டுருக்கும் மற்ற துறைகளில் உள்ள அதிகாரிகளின் மனோநிலையில் மாற்றம் வருமா? 

............................................................................................ 
வீட்டுக்குள் வரும் முகமூடி கொள்ளைக்காரர்கள் கூட ஓர் அளவுக்குத் தான் கொள்ளையடிக்கிறார்கள்.  ஆனால் இன்றைய நிலையில் நாட்டுக்குள் செய்து கொண்டுருக்கும் அரசியல்வியாதிகளின் கொள்ளைகள் ஆயிரம் கோடிகளை தாண்டினாலும் கூட எதைப்பற்றியும் யோசிப்பதில்லை. எது குறித்தும் அஞ்சுவதும் இல்லை. வழக்குகளை எதிர்கொண்டு நீதிமன்றத்திற்கு வரும் போது எவரும் தன் முகத்தை முகமூடி போட்டு மறைத்துக் கொள்வதும் இல்லை. கையாட்டிக் கொண்டு புன்சிரிப்போடு தான வருகிறார்கள்.

ஆட்சியில் இருப்பவர்கள் "சட்டம் தன் கடமையைச் செய்யும்" என்கிறார்கள்.  பாதிக்கப்பட்டவர்களோ "சட்டத்தின் துணையால் வெல்வோம்" என்கிறார்கள். ஆனால் ஒவ்வொரு சட்டமான்களும் ஓய்வு பெற்று போனபின்பும் கூட சட்டம் என்பது இந்த முகமூடிகளுக்கு பின்னால் உள்ள உண்மையான முகத்தை காட்ட முடியாமல் கடைசி வரைக்கும் தேங்காய் மூடியாகத்தான் இருக்கிறது.  கடைசியில் நோய்கள் தான் இவர்களின் வாழ்க்கையை முடித்து வைக்கின்றது.  அடுக்கி வைத்த கேஸ் கட்டுகள் ஆவண காப்பத்திற்குள் போய்விடுகின்றது.
............................................................................................... 

தொழிலாளர், பணியாளர், முதலாளி மூவருக்குமே திருப்பூர் வாழ்க்கை என்பது முகமூடி வாழ்க்கைதான். உண்மையான முகத்தை எந்த இடத்திலும் காட்ட முடியாது.  எப்போது எது நடக்கும் என்பதே தெரியாது. பெருநகரங்களில் வாழ்பவர்கள் அனுபவிக்கும் இயல்பான விசயம் தான் இது. எதனால் இந்த வீழ்ச்சி என்று யோசிப்பதற்குள் அடுத்தடுத்து பல படிகள் நம்மைவிட்டு கடந்து போயிருக்கும்.

அது போன்ற ஒரு சமயத்தில் தான் இநத் வலைபதிவு உலகம் எனக்கு அறிமுகமானது. மன அழுத்தத்திற்கு தேவைப்படும் மருந்து குடிக்கும் பழக்கம் இல்லாத காரணத்தால் இந்த எழுத்துப் பழக்கம் உருவானது. நான் சிறுவயதில் கற்றுக் கொண்ட மிதிவண்டி முதல் சிறிய ரக லாரி வரைக்கும் கற்றுக் கொளள ஒவ்வொரு சமயத்திலும் எவரோ ஒருவர் உதவி இருக்கிறார். நான் இதுவரையிலும் கற்றுக் கொண்ட அனைத்து முயற்சிகளிலும் அடுத்தவர் பங்கும் அதிகமாக உண்டு. அடுத்தடுத்து வாழ்வில் உயர்ந்த போதும் கூட பலரும் உதவியாய் இருந்து இருக்கிறார்கள். 

ஆனால் நான்கு வருடங்களுக்கு முன்பு எழுதிப் பார்க்கலாம் என்று தோன்றிய போது அப்போது முதன் முதலாக என் கண்ணில் பட்டது வேர்ட்ப்ரஸ் தளமே. மூன்று வாரங்கள் போராடி ஒரு உருவத்திற்கு கொண்டு வந்தேன்.  மேற்கொண்டு நானே கற்றுக் கொண்டேன் என்கிற விதத்தில் இந்த ஒரு செயல்பாடு மட்டுமே வாழ்வில் சாதித்ததாக உணர முடிகின்றது.  வலைபதிவில் அடிப்படை செயல்பாடுகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு சமயத்தில் அறிமுகமானது.  இந்த ப்ளாக் என்ற தளம் கூட நாகா தான் உருவாக்கி கொடுத்தார்.  

ப்ளாக் பக்கம் எழுத வந்த பிறகு வேர்ட்ப்ரஸ் தளம் கவனிக்காத சவலைக்குழந்தை போல தேமே என்று கேட்பாரற்று கிடந்தது. அது அரிச்சுவடி கற்றுத்தந்த பள்ளிக்கூடம் அல்லவா? உள்ளூற வருத்தமாக இருந்தது. ஓர் அளவுக்கு மேல் வேர்ட்ப்ரஸ் தொழில் நுட்பத்தை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. குறிப்பாக நாம் நினைக்கும் அளவுக்கு அதில் பல சிறப்பு அம்சங்களை கொண்டு வரமுடியவில்லை. எனக்கு அறிமுகமான வகையில் கிரி, தமிழ்மணம் செல்வராஜ், வெயிலான் இந்த மூன்று பேர்களின் வேர்ட்ப்ரஸ் தளங்களின் வடிவமைப்பு ஆச்சரியத்தை தந்துள்ளது. ஆனால் வெயிலான் பழைய அற்புத வடிவமைப்பு தற்போது மாற்றி விட்டார்.  என்ன காரணம் என்று தெரியவில்லை. இவர்களின் தளங்களைப் போல உருவாக்க வேண்டும் என்று மனதில் நினைத்து வைத்திருந்தேன்.

கோடம்பாக்கத்தில் "பிலிம் நியூஸ்" ஆனந்தன் என்றால் அனைவருக்கும் தெரியும்.  திரைப்படம் சம்மந்தப்பட்ட அத்தனை விபரங்களையும் ஆவணமாக, கருத்துக்களாக விரல் நுனியில் வைத்திருப்பார்.  அவரைப் போல தமிழ் வலைபதிவுகளுக்கென்று ஒரு ஆனந்தன் இருக்கிறார்.  இவரின் பெயர் ரமேஷ்.  ஆனால் வலைபதிவில் வெயிலான். இவரும் திருப்பூரில் ஒரு நிறுவனத்தில் உயர்பதவியில் இருக்கிறார். திருப்பூரில் சேர்தளம்என்ற அமைப்பை பொறுப்பாக நிர்வகித்து வருகின்றார்.

குறைவாக எழுதினாலும் வலைபதிவு உலகில் இவரை தெரியாதவர்கள் குறைவு. ஒத்த வயதாக இருந்தாலும் வலைபதிவில் எனக்கு அண்ணன். இந்த வலைபதிவின் தொழில் நுட்பங்களை நன்றாக தெரிந்தவர் என்பதால் அவரிடம் கோரிக்கை வைத்திருந்தேன்.  நான் வேர்ட்ப்ரஸ் தளத்தை இழக்க விரும்பவில்லை. நான் தொடக்கப்பள்ளியில் படித்த பாடங்களைப் போல இந்த தளத்தில் தான் எழுதவே கற்றுக் கொண்டேன்.


வெயிலானுக்கு தேவியர் இல்லத்தின் நன்றிகள். 
............................................................................................................................
எழுதத் தொடங்கிய போதும், தொடர்ந்து வந்த வருடங்களிலும் ஒரு வகையில் நானும் முகமூடியாகத் தான் இருந்துள்ளேன்.  இப்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக கழற்றி வைத்துக் கொண்டுருக்கின்றேன்.

தொடக்கத்தில் எழுதும் போது மனதில் பட்டதை அப்படியே எழுதியிருக்கின்றேன்.  அது எத்தனை பெரிதான கட்டுரையாக இருந்தாலும் கவலைப்பட்டதில்லை. சுருக்க முயற்சிப்பதில்லை. எழுத்துப் பிழைகளை கண்டுகொண்டதில்லை. விமர்சனமாக எவர் எது சொன்னாலும் கேட்டதே இல்லை. ஒரு வாக்கியம் என்பதை பத்து வரிகளுக்குச் சென்று பிறகு முடித்து படிப்பவரை பயமுறுத்தி இருக்கின்றேன். ஆனால் நான் செய்த தவறுகள் ஒவ்வொன்றும் எனக்கு பல விதங்களில் இன்று உதவியாக இருக்கிறது. இன்று எனது எழுத்து நடையை ஒவ்வொரு விதமாக மாற்றி மாற்றி பல விதங்களிலும் முயற்சித்து பார்த்துக் கொண்டுருக்கின்றேன். 

குறிப்பாக பத்திரிக்கை உலக வடிவம் என்பது வலைபதிவுகளுக்கு சம்மந்தம் இல்லாதது.  ஒவ்வொரு பத்திரிக்கைகளுக்கு ஒவ்வொரு விதமான நடையழகு.  சில நமக்கு பிடிக்கும். பலவற்றை நம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது.  ஆனாலும் சுருக்கம் என்பது சுகமானது என்பதை எழுத்துப் பயணம் உணர வைத்துள்ளது.  துறை சார்ந்த விசயங்களை சுருக்கும் போது அதுவொரு சுருக்கு கயிறு போலத்தான் இருக்கிறது. எவரும் உணருவதே இல்லை.

சமீபத்தில் ஒரு பத்திரிக்கை நண்பர் கேட்ட தற்போதைய திருப்பூர் நிலைமை குறித்து "டல்லடிக்கும் டாலர் நகரம்" என்ற தலைப்பில் எழுதிக் கொடுத்தேன்.  அடிப்படை கட்டுமானம், தெளிவான நடை, கூடவே புள்ளிவிபரங்கள், அளவான கட்டுரை என்று விமர்சனம் செய்து இருந்தார்.  சாதித்த மகிழ்ச்சியில் அதே பாணியில் சமீப நாலைந்து கட்டுரைகள் எழுத முடிந்தது. கற்றுக் கொள்வதில் உள்ள ஆர்வம் தான் நம்மை அடுத்தபடிக்கு அழைத்துச் செல்கின்றது. வரும் ஆக்கபூர்வமான எந்த விமர்சங்களையும் பார்த்து முகம் சுளிப்பதே இல்லை.  கதவுகளை தைரியமாக திறந்து வைக்க முடிந்தது.  இதுவரையிலும் எந்த குப்பை கூளமும் இல்லத்தை தாக்கவில்லை. முகமூடியாக இருந்து கொண்டு எழுத்தில் மட்டும் கவனம் செலுத்தியதால் இன்று எழுத்துக்கலை சற்று கைகூடி வந்துள்ளது. 400 பதிவுக்கு மிக அருகில் வந்துள்ளேன். 
.............................................................................................................. 
இந்த தளத்திலும் வேர்ட்ப்ரஸ் தளத்திற்கும் பேனர் வடிவமைத்து கொடுத்த மற்றொரு முகமூடி மனிதர் மதுரை தமிழ்ன் தற்போது அமெரிக்காவில் இருக்கிறார். (உங்க பெயரைக் கூட தெரிந்து கொள்ள முடியல நண்பா?)

இந்த தளத்தில் உள்ள பேனர் போல ஒன்றை வடிவமைத்து திடீர் என்று ஒரு நாள் மின் அஞ்சல் வாயிலாக நான் கேட்காமலேயே அனுப்பி இருந்தார்.  சற்று மாறுதலாகி இப்போதைய வடிவமைப்பு உருவானது.  வேர்ட்ப்ரஸ் தளத்திற்கும் அவரே வடிவமைத்து கொடுத்துள்ளார். அவர்கள் உண்மைகள் என்ற தளத்தில் எழுதிக் கொண்டுருக்கிறார். தனக்கு முகமூடி போட்டுக் கொண்டுருந்தாலும் நம்ம மேல ரொம்ப பாசக்கார பயபுள்ளையாட்டம் இருப்பது தான் ஆச்சரியமாக இருக்கு. எனக்கு தனிப்பட்ட முறையில் எனது எழுத்தின் மூலம் அறிமுகமாகும் பெரும்பாலன நண்பர்கள் அணைவரும் பக்காவான வாசிப்பு புலிகளாகவே இருக்கிறார்கள். வலைபதிவுகளுக்கு அப்பாற்பட்டு கரை கண்ட வேந்தர்களாகவே இருக்கிறார்கள். பலருடன் பேசி முடிக்கும் மனதில் பயம் வருகின்றது. அந்த பயமே ஒவ்வொரு முறையும் எழுதும் போது இந்த முறையாவது ஒழுங்காக எழுத வேண்டுமென்ற தூண்டு கோலாக இருக்கிறது.