Saturday, April 12, 2014

பெரிய மனிதர்கள் Vs எளிய மனிதர்கள்

பெரிதான ஆசைகள் இல்லை. தகுதிக்கு மீறிய லட்சியங்களோ ஏக்கங்களோ கூட இல்லை. இது தான் "தனக்குரிய வாழ்க்கை" என்று எளிதாக ஏற்றுக் கொண்ட மனம். தொழிலாளர் என்ற பெயரில் தினந்தோறும் அவர்கள் உழைக்கும் உழைப்பை பார்க்கும் போதெல்லாம் "இது போதும் எனக்கு" என்ற அவர்களின் எளிய நேர்மையான உள்ளம் தான் எனக்குத் தெரிந்தது. 

மனித மனம் எதிர்பார்க்கும் அங்கீகாரத்தை எனக்கு முன்னால் இருந்தவர்கள் எவரும் கொடுக்கவில்லை. கொடுக்கவும் தயாராக இல்லை. அவர்களின் புழுங்கிப் போன மனத்தை ஒவ்வொரு நாளும் கவனித்துக் கொண்டே வந்தேன். சில குறிப்பிட்ட நாளில் அவர்களின் தகுதிக்கு மீறிய வேலைப்பளூவை கொடுத்த குற்ற உணர்வு எனக்குள் உறுத்திக் கொண்டே இருந்தது. 

இதை எப்படிச் சமன் செய்வது என்று யோசித்துக் கொண்டே இருந்த போது அவர்களுக்குரிய அங்கீகாரத்தைக் கொடுத்து பார்த்தால் என்னவாகும்? என்று மனம் யோசித்தது. 

பெரிய பதவிகளில் இருக்கும் அத்தனை பேர்களும் எல்லாவிதமான அங்கீகாரமும் தனக்கே உரியதாகக் கருதிக் கொள்வதால் எளிய மனிதர்கள் "அங்கீகாரம் என்பதே தங்களுக்குரியது அல்ல" என்பதாகத் தங்கள் வாழ்க்கையை "உயிர் பிழைத்து இருப்பதற்கு என்பதற்காக மட்டுமே" என்பதாக வாழ்ந்து முடித்து விடுகின்றார்கள். 

இதை மாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் உருவானது புதிய திட்டம். 

என் அதிகாரத்திற்கு உட்பட்டு ஒவ்வொரு தொழிலாளர்களுக்குத் தேவைப்படும் அங்கீகார வார்த்தைகள், ஆறுதல் வார்த்தைகள், புழுக்கமான மனதில் நிரப்பப்பட வேண்டிய இதமான வார்த்தைகள் இதற்கு மேலாக உழைத்தவர்களுக்குச் சேர வேண்டிய ஊக்கத் தொகை என்று எல்லாவகையிலும் சிறப்பான ஒரு கூட்டத்தை நான் பணிபுரியும் பெரிய நிறுவனத்தின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் உள்ள தொழிற் கூடத்தில் நடத்திய போது மனிதவளத்துறை அவசரமாக எடுத்த படங்கள் இது. 

இதே போல ஒவ்வொரு தொழிற்கூடத்திலும் மாதம் தோறும் கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்று மனதில் நினைத்துக் கொண்டு ஒவ்வொரு தொழிலாளர்களின் பாராட்டுகளையும் பெற்று எனது இருக்கையில் அமர்ந்த போது அடுத்தப் பிரிவில் இருந்த தொழிலாளர்களிடத்தில் இருந்து தொடர்ச்சியான அழைப்பு வந்தது. 

எங்கள் பகுதிக்கு எப்போது வருவீர்கள்? 

நேசிக்க, ரசிக்க, பரஸ்பரம் அங்கீகாரம் கொள்ளத்தானே இந்த வாழ்க்கை. தனி மனிதர்களின் மனதை அன்பால் நிரப்பிப் பாருங்கள். உங்கள் முகம் மட்டுமல்ல. உள்ளத்து எண்ணங்களில் கூட அழகு கூடும். 

#நினைத்தேன் செய்தேன் 

( APRIL 10 2014 GARMENT DIVISION. SECTION WISE BEST ACHIEVER PERFORMANCE MEETING)

Tuesday, April 01, 2014

பசி முக்கியமா? மதம் முக்கியமா?

மூன்று மாதங்களுக்கு முன் எனக்கு அறிமுகமான "மின் நூல்" என்ற உலகம் நான் நினைத்தே பார்த்திராக விசயமது. நண்பர் சீனிவாசன் அறிமுகமாகி அதனைப் பற்றி முழுமையாகப் புரிந்து கொண்ட பிறகு அதற்காக என்னை தயார் படுத்திக் கொண்டேன்.

கடந்த ஐந்தாண்டுகளில் வலைபதிவுகளில் பல சமயங்களில் எழுதிய கட்டுரைகளை நான்கு தலைப்புகளில் தொகுத்துக் கொண்டு வந்து விட வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் உருவானது. நான்கு தலைப்புகள். நான்கும் வெவ்வேறு விசயங்களைப் பற்றிப் பேச வேண்டும் என்று திட்டமிட்டு வைத்திருந்தேன். 
வடிமைப்பு  - நண்பர் அவர்கள் உண்மைகள்

அதன்படி ஒவ்வொரு மாதத்தின் இறுதியிலும் ஒரு தலைப்பு மின் நூலாக வெளி வந்தது. இன்று "கொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு "  என்ற எனது நான்காவது மின் நூல் வெளியாகி உள்ளது. 

ழத்தில் வாழ்ந்தவர்கள், வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் அந்த மண்ணின் மைந்தர்களா? இல்லையா? ஏன் பிழைக்கச் சென்ற இடத்தில் உரிமை வேண்டும் என்ற பெயரில் பிரச்சனை செய்கின்றார்கள்? என்ற பொதுப்படையான எண்ணத்தை மனதில் வைத்திருப்பவர்கள் புரிந்து கொள்ள ஈழ வரலாற்றின் நீள அகலத்தை மொத்தமாக ஒரே பார்வையில் பார்க்கும் பொருட்டு இந்த மின் நூல் இருக்க வேண்டும் என்பதே என் நோக்கமாக இருந்தது. (ஈழம் - வந்தார்கள் வென்றார்கள்)

னக்கு வலைபதிவுகள் அறிமுகமான பின்பு நம்மால் கூட எழுத முடிகின்றது என்று அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கிக் கொள்ளாமல் தொடர்ந்து எழுதிக் கொண்டு வந்தேன். ஒவ்வொரு சமயத்திலும் முறைப்படி எழுதுவது எப்படி? என்பதையும் படிப்படியாகக் கற்றுக் கொண்டும் வந்தேன். எழுதுவதற்காகப் படித்த வரலாற்று புத்தகங்களின் மூலம் தமிழர்களின் வரலாற்றை அதிக அளவு தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் பிறக்க அது தொடர்பான பல புத்தகங்களைச் சிரத்தை எடுத்துப் படிக்கத் தொடங்கினேன். பெரிய அளவில் தமிழர்களின் வரலாற்றைப் பற்றி எழுத வேண்டும் என்ற எண்ணம் மனதிற்குள் இருந்து கொண்டேயிருக்கிறது. அது முடியுமா? என்று காலம் தீர்மானிக்கும். ஆனால் முடிந்தவரைக்கும் அடிப்படை விசயங்களைப் பற்றித் தெரிந்து கொள்ள ஆசைப்படுபவர்களுக்காகத் "தமிழர் தேசம்" என்ற மின்நூலை உருவாக்க முடிந்தது. 

ன்னும் சில மாதங்களில் தற்போது ஆண்டுக் கொண்டிருக்கும் காங்கிரஸ் அரசாங்கம் தெருவில் கிடக்கும் குப்பையாக மாறப் போகின்றது. இந்தப் பத்தாண்டுகளில் காங்கிரஸ் அரசாங்கம் மக்களுக்காகச் செய்கின்றோம் என்று சொல்லிக் கொண்டு செய்த கேடு கேட்ட சமாச்சாரங்களை மக்கள் இன்னமும் முழுமையாகப் புரிந்து கொள்ளவில்லை. 

இவர்கள் உருவாக்கி உள்ள ஒவ்வொரு பன்னாட்டு ஒப்பந்தங்களின் விளைவை நிச்சயம் அடுத்த 20 ஆண்டுகளில் இந்தியா மொத்தமும் உணரும். குடிக்கத் தண்ணீர் இருக்காது. மீதம் இருக்கும் விவசாயிகள் இந்த நாட்டிற்குப் பாரமாக இருப்பவர்கள் என்கிற நிலைக்கு மாறியிருப்பார்கள். பத்திரிக்கைகள் வாயிலாக வெளியே தெரிந்த மற்றும் தெரியாத விசயங்களைப் பற்றி "வெள்ளை அடிமைகள்" என்ற மின் நூலில் எழுதியுள்ளேன். 

னால் இதனை விட மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளை இந்தியாவிற்குள் வர அனுமதி கொடுத்துள்ள திடீர் அமைச்சர் வீரப்ப மொய்லி (ஜெயந்தி நடராஜன் கையில் இருந்த சுற்றுச்சூழல் பொறுப்பு) செய்துள்ள காரியத்தின் பலனை அடுத்த ஐந்தாண்டுகளில் ஒவ்வொரு இந்தியனும் உணர முடியும்.  அதனைப் பற்றி இன்று வெளியான மின் நூலில் பேசியுள்ளேன்.

"கொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு" மின் நூலில் நம்மைச் சுற்றிலும் உள்ள உலகத்தில் உள்ள சுற்றுச் சூழல் சீர்கேட்டைப் பற்றியும், நான் பார்த்த இடங்களில் உள்ள அனுபவங்களைப் பற்றியும் எழுதியுள்ளேன். இதற்கு மேலாக மரபணு மாற்ற விதைகளுக்குப் பின்னால் உள்ள சர்வதேச அரசியலைப் பற்றி எழுதி உள்ளேன். பசி இல்லாத போது தான் பலவற்றையும் பற்றி யோசிக்கவே முடியும்.  பசி வந்தால் பத்தும் பறந்து போய் விடும் என்கிறார்கள்.  ஆனால் காங்கிரஸ் அரசாங்கம் கையில் எடுத்துள்ள மரபணு மாற்ற விதைகளுக்கான அனுமதி என்பது மொத்த நாட்டையும் ஒரு குறிப்பிட்ட நிறுவனத்திற்கு அடகு வைத்ததற்கு சமமாகவே கருதப்பட வேண்டும். 

காங்கிரஸ் வியாதிகள் கடந்த பத்தாண்டுகளில் உருவாக்கிய ஒவ்வொரு திட்டத்திற்குப் பின்னாலும் ஓராயிரம் ஓட்டை உடைசல் திருட்டுத்தனத்தோடு மொத்தமாக ஒவ்வொரு இந்தியனையும் "நமக்குத் தேவைப்படும் உணவுப் பொருட்களை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்து நாம் உயிர்வாழ முடியும்" என்ற நம்பிக்கையை உருவாக்கியுள்ளது. ஒரு விவசாயி பக்கத்தில் உள்ள மற்றொரு விவசாயிக்குக் கூட விதைகளை விற்கக் கூடாது போன்ற "விதை விற்பனை தடைச் சட்டமெல்லாம்" கொண்டு வந்துள்ள இந்த அரசாங்கத்திற்கு நாம் என்ன கைமாறு செய்ய முடியும்?

உங்கள் மனதில் நினைப்பதை தவறாமல் இந்த தேர்தலில் ஓட்டளித்து உங்கள் கடமையைச் செய்து விடுங்க. மாற்றம் வருமா? என்று யோசிப்பதை விட மாறுதல் உருவாவதற்கு நம் ஓட்டும் ஒரு காரணம் என்பதை மறந்து விடாதீங்க. நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் ஜனநாயக நாட்டில் இது ஒன்று மட்டுமே நமக்கு கிடைத்த வாய்ப்பு என்பதையும் மறந்து விடாதீங்க.

த்துடன் என் மின் நூல் பயணம் முடிவுக்கு வந்து விட்டது.

நினைத்தபடியே மாதம் ஒரு மின் நூல் வெளியாக வேண்டும் என்ற எண்ணம் நிறைவேறியுள்ளது. பல வகைகளில் ஒத்துழைப்பு கொடுத்த நண்பர் திரு. சீனிவாசன் அவர்களுக்கு மிக்க நன்றி.  

கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக என் எழுத்துப் பயணத்தில் பல வகைகளில் ஒத்துழைப்பு கொடுத்துக் கொண்டிருக்கும் சேலத்தைச் சேர்ந்த திரு. லெஷ்மணன் அவர்களுக்கும், தற்பொழுது ஒரிஸ்ஸாவில் வாழ்ந்து கொண்டிருக்கும் திரு. சங்கரநாராயணன் அவர்களுக்கும், நச்சுப் பொருட்களுக்கு எதிராக களத்தில் வலுவாகப் போராடிக்குக் கொண்டிருக்கும் திரு. செல்வம் அவர்களுக்கும் இந்த மின் நூலை சமர்ப்பிக்கின்றேன். 

ற்கனவே வெளியிடுட்டுள்ள மூன்று மின் நூலும் 20,000 பேர்களுக்குச் சென்று சேர்ந்துள்ளது. வலைபதிவு பற்றி அதிகம் அறிந்திராதவர்கள் கூட அழைத்துப் பேசினார்கள். ஆதரவளித்த அத்தனை நல் இதயங்களுக்கும் மிக்க நன்றி.

ஒரு காரியத்தில் இறங்கி விட்டால் எந்தச் சூழ்நிலையிலும் பின் வாங்காமல் சரியோ? தவறோ? அதனை முடித்து விடுவது என்பது என் இயல்பான பழக்கம்.
வலைபதிவு எழுத்துக்கள் குறித்து சமீபத்தில் நண்பர் சீனு அவர் தளத்தில் வெளியிட என் கருத்தை கேட்டு இருந்தார். இதனை அவர் தளத்திலும் வெளியிட்டுள்ளார். அதனை இந்த இடத்திலும் எழுதி வைத்து விடுகின்றேன்.

சில நினைவுகள் மட்டுமே நம் சாவின் கடைசி நிமிடம் வரைக்கும் நம்மோடு இருக்கும். தொடர்ந்து இணையத்தில் செயல்பட்டுக் கொண்டிருந்தவர்களால் அவர்களின் கடைசி காலம் வரைக்கும் தமிழ் பதிவுலகம் மறக்க முடியாதாக இருக்கும் என்றே நம்புகின்றேன். ஆண், பெண் என்ற இரண்டு பாலினத்தைப் போல இங்கும் இரண்டு பிரிவினர்கள் உண்டு. அவர்களால் மட்டுமே நாள்தோறும் பதிவுலகம் வளர்ந்து கொண்டிருக்கின்றது. வாழ்க்கை என்பது ரசித்து கொண்டாடப்பட வேண்டிய ஒன்று என்று கொண்டாட்ட மனோநிலை கொண்டவர்களாலும், ரசிப்பதோடு சிந்திக்கவும் கூடியதாக இந்த வாழ்க்கை இருக்க வேண்டும் என்பவர்களாலும் நாள்தோறும் பதிவுலகத்தின் பரப்பளவு விரிந்து கொண்டே இருக்கின்றது.

பதிவுலகத்தின் பலமென்பது எந்த துறையென்றாலும் பட்டவர்த்தனமாக சிதறு தேங்காய் போல உடைத்து தேவைப்படுபவர்களுக்கு பொறுக்க்கிக் கொள் என்று சொல்லலாம். சமூகத்தில் கணவான் வேடம் போட்டுக் கொண்டிருப்பவர்களை கலங்கடிக்க வைக்க முடியும். அதேபோல கடைசி வரைக்கும் வாசிப்பவனை சிந்திக்கத் தெரியாத வெறும் விடலையாக, பொறுக்கியாகவே வைத்து விடவும் முடியும்.

தமிழர்கள் தங்கள் வரலாற்றை ஆவணப்படுத்தி வைப்பதில் காட்டிய தேக்க நிலையினால் 2000 ஆண்டு சரித்திரத்தில் பாதி பக்கங்கள் மட்டுமே இன்று வரையிலும் உள்ளது. மீதி
நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் என்கிற நிலையில் தான் உள்ளது. ஆனால் கடந்த பத்தாண்டுகளில் பதிவுலகம் அறிமுகமான பிறகு எது தேவை எது தேவையில்லை என்பதையும் தாண்டி இங்கே அனைத்தும் ஆவணமாக மாறிக் கொண்டிருக்கின்றது. காலம் தீர்மானிக்கும். தேவையான விசயங்கள் தேவையான நபர்களுக்கு காலம் கடந்தும் அவர்களின் கண்ணில் படும் அளவுக்கு இங்கே உள்ள நவீன வளர்ச்சி நாள்தோறும் வளர்ந்து கொண்டேயிருக்கின்றது.

உங்களால் தினந்தோறும் அரை மணி நேரம் ஒதுக்க முடியும் என்ற சூழ்நிலையில் உங்களைச் சுற்றியுள்ள, உங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்திய சம்பவத்தை எழுதத் தொடங்கவும். அது உங்களுக்குப் பின்னால் இணையத்தில் புழங்கப் போகின்றவர்களின் பார்வையிலும் படப் போகின்றது என்ற அக்கறையுடன் எழுதிப் பழகுங்கள். 



எப்படி நேரம் கிடைக்கின்றது என்று கேட்பவர்களுக்கு என்னிடம் இருக்கும் ஒரே பதில். 

ஒரு நாள் வாழ்க்கையை மட்டும் வாழப் பழகுங்கள். 

உங்களின் உண்மையான ஆர்வம் கஷ்டப்பட்டு உழைக்க வைக்காமல் இஷ்டப்பட்டு உழைக்க வைக்கும். 

ஒவ்வொரு மணித்துளியையும் தெளிவாகத் திட்டமிட்டுப் பயன்படுத்த முயன்று பாருங்க.

(விலையில்லா)மின் நூல் தரவிறக்கம் செய்ய, பகிர்ந்து கொள்ள, வாசிக்க