Sunday, April 23, 2017

தண்ணீருக்கு கையேந்தும் நாள் வரும்?

வெளியே பேரருவி சப்தம் கேட்டது. தெருவில் இருந்த குழாயில் இருந்து கொட்டிக் கொண்டிருந்த தண்ணீர் மொத்தமும் அருகே இருந்த சாக்கடையில் கலந்து சென்று கொண்டிருந்தது. வீட்டின் இரண்டு கதவுகளையும் திறந்து கொண்டு வெளியே வருவதற்கு முன்பே எனக்குப் பதட்டம் வந்தது. 

நடைப்பயிற்சியைத் தொடங்குவதற்கு அன்று அதிகாலையில் எழுந்து விட்டேன். பக்கத்து வீட்டின் முன்பு இந்தக் காட்சியைப் பார்த்த போது கோபத்தில் நடைப்பயிற்சியை மறந்து விட்டு குழாய் அருகே சென்ற போது தான் புரிந்தது. அந்தக் குழாயில் மேல்பகுதி முழுவதும் கழட்டப்பட்டு இருந்தது. தண்ணீர் வரும் பகுதியில் ஒரு திருகாணி மட்டும் இருந்தது. அதுவும் நசுக்கப்பட்டு இருந்தது. வயல் பகுதிகளில் பயன்படுத்தும் பம்புசெட் ல் வருகின்ற நீரின் அளவைப் போல மொத்த தண்ணீரும் வீணாகிக் கொண்டிருந்தது. 

திருப்பூரில் நான் வசிக்கும் பகுதி வித்தியாசமானது. இன்று வரையிலும் தமிழகக் கிராமங்களில் தீண்டாமை கொடுமையுண்டு என்று ஆதங்கப்படுவோர் அநேகம் பேர்கள் உண்டு. அதுவே நகரமயமாக்கலில் படிப்படியாகக் குறைந்து கொண்டு வருகின்றது என்ற எண்ணம் கொண்டவராக இருந்தால் அதை நீங்கள் மாற்றிக் கொள்ள வேண்டும். 

நகரங்களில் வசிப்பவர்களை அது வேறுவிதமாகத் தாக்கும். பெருநகரங்கள், தொழில்நகரங்கள், வளர்ந்து வரும் நகரங்களில் நீங்கள் வசிப்பவராக இருந்தால் உங்கள் வசிப்பிடங்களைச் சற்று ஆராய்ந்து பார்த்தால் அதனை உங்களால் எளிதாகப் புரிந்து கொள்ள முடியும். அதிகப் பணம் உள்ளவர்கள், பணம் உள்ளவர்கள், பணம் அன்றாட வாழ்க்கை வாழ மட்டும் சம்பாரித்துக் கொண்டு வாழ்பவர்கள், பணம் இல்லாதவர்கள் என்ற அடுக்கு நம் கண்ணுக்குப் புலப்படும். பெரும் கோடீஸ்வரர்கள் வாழும் பகுதிகளில் சாலை வசதிகள் முதல் தண்ணீர் மற்றும் சுகாதார வசதிகள் அரசாங்கத்தால் அன்றாடம் தெளிவாகப் பராமரிக்கப்படும். அதுவே படிப்படியாகக் குறைந்து கடைசியில் உள்ளவர்களுக்கு ஏனோதானோ என்று தான் அரசாங்க சேவைகள் கிடைக்கும். 

ஆனால் நாங்கள் வசிக்கும் பகுதியில் மேலே சொன்ன நான்கு அடுக்குகளும் கலந்து இருக்கின்றார்கள். இதனை நான் வேறு எங்கும் பார்த்தது இல்லை. கடந்த ஏழு ஆண்டுகளாக இங்கே வசிக்கின்றோம். நடைபயிற்சி தொடங்கிய போது தான் ஒவ்வொரு பகுதியில் இருந்த வீடுகளையும், மற்ற சமாச்சாரங்கள் அனைத்தும் முழுமையாகக் கண்டறிந்தேன். எத்தனை எத்தனை வேறுபாடுகள் என்பதனை உணர்ந்து கொள்ள முடிந்தது. 

எங்கள் வீட்டுக்கு அருகே தொழிலாளர் குடியிருப்பு உண்டு. அங்கே பத்து ஓட்டு வீடுகளில் பல ஏற்றுமதி நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் வாழ்ந்து வருகின்றார்கள். ஒவ்வொரு சனிக்கிழமையும் மது போதையினால் உருவாகும் சண்டை சச்சரவுகளுக்குப் பஞ்சமிருக்காது. ஒவ்வொரு வாரமும் கவனித்தே வந்துள்ளேன். வீட்டுக்குள் இருந்தால் சந்தின் தொடக்கம் முதல் மற்றொரு சந்தின் இறுதிப் பகுதி வரைக்கும் கலந்து கட்டிய கெட்ட வார்த்தைகள் காற்றில் கலந்து வந்து கொண்டேயிருக்கும். இது வாரந்தோறும் நடக்கும் நிகழ்வு என்பதால் எங்கள் வீட்டுக்குச் சுற்றிலும் இருப்பவர்கள் கண்டும் காணாமல் கடந்து போய்க் கொண்டிருப்பார்கள். 

அலுவலகம் விட்டு வீட்டுக்கு வந்ததும் சாப்பாடு முடிந்து குழந்தைகளுடன் வெளியே அமர்ந்து அரட்டைக் கச்சேரி நடத்திக் கொண்டிருக்கும் போது சண்டை தொடங்கி விட்டால் மனைவி குழந்தைகளை அழைத்துக் கொண்டு வீட்டுக்குள் சென்று விடுவார். நான் மட்டும் அங்கே அமர்ந்து நடந்து கொண்டிருக்கும் காட்சியின் ஒவ்வொரு நிகழ்வையும் கவனித்துக் கொண்டிருப்பேன். அடிதடி, கூச்சல், இரைச்சல், பெண்களின் கதறல் என்று காட்சிகள் மாறிக் கொண்டேயிருக்கும். ஆனால் காலையில் பார்த்தால் நடந்த சுவடே இல்லாமல் இயல்பான வாழ்க்கைக்கு அனைவரும் திரும்பியிருப்பார்கள். 

மற்ற வீடுகள் அனைத்துக்கும் மாநகராட்சி வழங்கியுள்ள குடிநீர் குழாய் இருக்கும். வீட்டுக்குள் இல்லாதவர்களுக்குத் தெருவில் இருக்கும். குறிப்பிட்ட வீடுகள் இந்தக் குழாய் என்று பாகம் பிரித்து இருப்பார்கள். சற்று வசதிபடைத்தவர்களுக்கும் இந்தத் தொழிலாளர் குடியிருப்புக்கும் சண்டை சச்சரவாகவே இருந்து வந்தது. நான் பலமுறை அலுவலகம் செல்லும் போது பார்த்துக் கொண்டு செல்வேன். கணவன்மார்கள் அலுவலகத்திற்குக் காரில் சென்ற பிறகு சுகவாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் பெண்கள் காலை எட்டு மணிக்குத் தொழிற்சாலைக்குள் நுழைந்தே ஆக வேண்டிய பெண்களுடன் மல்லுக்கட்டிக் கொண்டிருப்பார்கள். அது பலசமயம் கலவரமாக முடியும். 

ஒருமுறை நகர்மன்ற உறுப்பினர் எங்கள் சந்தின் வழியே வந்த போது எங்கள் வீட்டின் முன்னால் நின்று யாருடனோ பேசிக் கொண்டிருக்கின்றார்? என்பதனை மனைவி என்னுடன் சொன்னபோது வேகமாக அவரிடம் சென்று தினந்தோறும் இங்கே தண்ணீருக்காக நடக்கும் பிரச்சனைகளைப் புரிய வைத்து "தொழிலாளர் குடியிருப்புக்கு அருகே ஒரு குழாய் அமைத்துக் கொடுங்கள்" என்று கோரிக்கை வைத்தேன். 

காரணம் தொழிலாளர்கள் ஒன்று சேர்ந்து அவரிடம் சொன்ன போது அது நடக்காமல் இருந்ததை உணர்ந்தே கொஞ்சம் அழுத்தமாகப் பேசினேன். அண்ணே நிச்சயம் செய்து தருகின்றேன் என்று சொல்லிவிட்டுச் சென்றவரை தொடர்ந்து அலைபேசி வழியாக நினைவு படுத்திக் கொண்டிருந்தேன். ஆச்சரியமாகச் சில வாரங்களில் குழாய் மாட்டப்பட்டு ஒரு சுபயோக தினத்தில் தண்ணீர் வரத் தொடங்கியது. அதன் பிறகு தான் பிரச்சனை வேறு விதமாக மாறத் தொடங்கியது. பத்துக் குடும்பங்கள் என்பதால் சற்று பெரிய அளவிலான குழாயை மாட்டிக் கொடுக்க அது பிரச்சனையின் ரூபத்தை அதிகமாக்கியது. 

ஒவ்வொரு பகுதியிலும் இருந்த குடிநீர்க் குழாயை பராமரிக்கத் தனியாக ஒருவரை நகர் மன்ற உறுப்பினர் நியமித்திருந்தார். அவர் ஊமையும் கூட. இரவில், நள்ளிரவில்,அதிகாலையில், காலையில் என்று மிதிவண்டியில் ஒவ்வொரு பகுதியிலும் அமைக்கப்பட்டு இருக்கும் திருகாணி போன்ற அமைப்பில் இருக்கும் சமாச்சாரத்தைத் திறந்து விட்டு அவர் வைத்திருக்கும் பெரிய விசில் மூலம் சப்தம் எழுப்புவார். அந்தச் சப்தம் கேட்டு அந்தப் பகுதியில் உள்ளவர்கள் தெருவில் உள்ள குழாய்க்கு ஓடி வருவர். இது நடைமுறையில் இருக்கும் சமாச்சாரம். 

அவர் சப்தம் எழுப்பிவிட்டு அடுத்தப் பகுதிக்குச் சென்று விடுவார். இங்குத் தான் பிரச்சனை தொடங்கியது. மற்ற இடங்களிலும் குடிநீர் குழாய் ஒழுங்காகப் பராமரிக்கப்பட்டு வந்தது. தொழிலாளர் குடியிருப்பில் உள்ள குழாயில் உள்ள மேல்பகுதி ஒரு குடிகாரன் போட்ட ஆட்டத்தில் தனியாகக் கழன்று விட்டது. அதை மறுபடியும் மாட்ட முடியாமல், வேறு வாங்கவும் முடியாமல் துணியைச் சில நாட்கள் கட்டி வைத்திருப்பார்கள். பல சமயம் அப்படியே வைத்திருக்கத் தண்ணீர் வந்ததும் அப்படியே கொட்டத் தொடங்கி விடும். 

மற்ற வீடுகளில் தொலைக்காட்சித் தொடர்களைப் பார்த்து விட்டுச் சுகமாகத் தூங்கிப் பழகிவிடும் பெண்கள் மத்தியில் இரவில், நள்ளிரவில் வேலை முடித்து வந்து படுக்கச் செல்லும் தொழிலாளர்கள் காலை நேரத்தில் குறிப்பாக விசில் சப்தம் கேட்டு எழுவதில்லை. சில நாட்கள் அவர்களிடம் பகல் நேரத்தில் அங்கேயிருந்தவர்களிடம் சொல்லிப் பார்த்தேன். சில சமயம் வீட்டுக்குள் சென்று கத்திப் பார்த்த போதும் எவரும் கதவைத் திறந்து வெளியே வந்தபாடில்லை. தன்னிலை மறந்து தூங்குபவர்களின் உலகம் வேறுவிதமாக இருந்தது. 

அன்று காலை பதட்டமாய் வேகமாகச் சென்று போராடிய போது அணிந்திருந்த உடைகள் அனைத்தும் நனைந்து விட்டது. ஐந்து நிமிடமாகப் போராடிக் கொண்டிருந்த போது என்னைப் பார்த்த மனைவி வீட்டுக்குள் இருந்த ஒரு ஆயுதத்தைக் கொண்டு வந்து கொடுத்தார். அதனை வைத்து மேலே உள்ள வால்வு போன்ற பகுதியைத் திருகி தண்ணீர் வருவதை நிறுத்தினேன். 
அடுத்த உலக யுத்தம் என்பது தண்ணீரை அடிப்படையாக் கொண்டது என்று சூழலியாளர்கள் கணக்கீடு வைத்துச் சொல்கின்றார்கள். 

ஆனால் தமிழர்கள் போல உலகளவில் மடச்சாம்பிராணிகள் வேறெங்கும் இருப்பார்களா? என்பது சந்தேகம். இது தொழிலாளர்கள் குடியிருப்புச் சம்மந்தப்பட்ட விசயமல்ல. நடைபயிற்சியின் நான் பார்த்த வீடுகளில் ஒவ்வொரு இடங்களிலும் ஒவ்வொரு கொடுமையுண்டு. 

மாநகராட்சி வழங்கியுள்ள குடிநீர்க்குழாயை எந்திரம் வைத்து அளவுக்கு மீறித் திருடுபவர்கள், பெரிய அளவிலான குழாய் வைத்து அந்தத் தண்ணீரை வீட்டுக்குள் வைத்திருக்கும் வாகனங்களைக் கழுவி கொண்டிருப்பவர்கள், வீட்டுக்குள் முன்னால் உள்ள தலைகளைத் தண்ணீர் வைத்துச் சுத்தம் செய்கின்றோம் என்று மொத்த நீரையும் வீணாக்குபவர்கள் என்று பட்டியல் பல மைல் நீளம். இங்குப் பணக்காரன் , ஏழை என்று இரண்டு பிரிவாக இருந்தாலும் சுயநலத்தின் அளவுகோல் இடத்திற்குத் தகுந்தாற் போல மாறியுள்ளதே தவிரத் தனி மனித சுயநலம் எந்த இடங்களிலும் குறைந்தபாடில்லை.

 நாம் அரசியல்வாதிகளைக் குறை சொல்ல எந்த அருகதையும் இல்லாதவர்கள். அடிப்படை வசதிகளுக்கு அலையவிட்டால் தான் நம்மை நோக்கி தேவையற்ற கேள்விகள் வந்து தாக்காது என்பதனை அவர்கள் தெளிவாக உணர்ந்தே வைத்துள்ளார்கள்.


முந்தைய பதிவுகள்
Friday, April 21, 2017

அரசியல் செய்து பழகுடைபயில்வோம் தொடர் பதிவைக் கூடத் தொடர்ந்து எழுத முடியவில்லை. அலுவலகம் முடிந்து வீட்டுக்கு வந்து சேர்ந்ததும் பள்ளி விடுமுறையில் இருக்கும் மூன்று பெண்களின் உலகத்தைத் தாண்டி எழுத முடிவதில்லை. பகல் முழுக்கப் பஞ்சாயத்துச் செய்து ஓய்ந்து போன மனைவியின் நிலை பார்த்து நானும் சில மணி நேரம் நீதிபதியாக மாறியாக வேண்டிய தருணமாக உள்ளது. எனக்கான ஞாயிறு எனக்கானது இல்லை என்பதனை வீட்டின் மூத்தவர் உணர வைத்து விடுகின்றார். காரணம் அவர் பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கும் கால்பந்து மைதானத்தில் கொண்டு போய் விட்டு வரும் காவல்காரனாக மாற வைத்துள்ளது. அப்புறம் எங்கே எழுதுவது? 

தமிழ்நாட்டு அரசியல் களம் மிக மிகச் சூடாக இருக்கிறது? நீங்கள் ஏன் எதுவும் எழுதாமல் இருக்கின்றீர்கள் என்று நண்பர் அழைத்து உரிமையுடன் கேட்ட போது பல விசயங்கள் நினைவில் வந்து போனது. பதிவில் எழுதமுடியவில்லையே தவிர முகநூலில் தோன்றும் போதெல்லாம் எழுதி வைத்து விடுகின்றேன். குறிப்பாகச் சமீபத்தில் பட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்து வழக்குரைஞர் திரு பாலு அவர்களின் முயற்சியால் உச்சநீதிமன்றம் தமிழ்நாட்டில் மதுக்கடைகளை மூடிய விவகாரம் பற்றி எழுதிய ஆச்சரியப்படத்தக்க வகையில் பல ஆயிரம் பேர்களின் பார்வைக்குச் சென்றது. முகநூலில் எழுதிய பலவற்றை இங்கே எழுதிவைக்க வேண்டும். 

காரணம் எனக்குத் தெரிந்த பல பேர்கள் முக நூல் என்பதனை தேவையற்ற ஒன்றாக இன்னமும் கருதிக் கொண்டிருக்கின்றார்கள். நாம் ஒன்றை எப்படிப் பயன்படுத்த கற்றுக் கொள்கின்றோம் என்பதனைப் பொறுத்தே அதற்கு நாம் கட்டுப்பட்டு இருக்கின்றோமோ? அல்லது அதனை நம் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கின்றாமோ? என்பதனை புரிந்து கொள்ள முடியும். 

••••••••••


ர் விட்டு ஊர் வந்து கை நிறையச் சம்பாரிக்கும் லட்சக்கணக்கான திருப்பூரில் வாழ்ந்து கொண்டிருக்கும் தொழிலாளர்களுக்கு மறைந்த ஏ1 குற்றவாளி ஜெயலலிதா ஆணவத்தால், பிடிவாதத்தால் உருவான டாஸ்மாக் கலாச்சாரம் என்பது எந்த எழுத்தாலும் எழுத முடியாத துயரங்களை உருவாக்கிக் கொண்டிருந்தது. இன்று பா.ம.க. வழக்குரைஞர் திரு பாலு அவர்களின் இடைவிடாத போராட்டத்தின் காரணமாகத் தமிழ்நாட்டில் உள்ள 3400 மதுக்கடைகள் மூடப்பட்டது என்ற செய்தியை நானும் படித்து விட்டு இயல்பாகக் கடந்து வந்து விட்டேன். 

ஆனால் கடந்த சில மணி நேரமாக நண்பர்கள் ஒவ்வொருவரும் அழைத்துப் பேசிய பின்பு நான் வசிக்கும் பகுதியில் மதுக்கடைகள் இருந்த பகுதிகளுக்கு நடைபயிற்சி போலப் பல இடங்களுக்குச் சென்று பார்த்து விட்டு இதனை எழுதியே ஆக வேண்டும் என்பதால் எழுதுகிறேன். 

இது குறித்த செய்திகளை நான் வாசித்த போது தேசிய நெடுஞ்சாலைப் பகுதிகளில் உள்ள கடைகள் மட்டும் தான் மூடியிருக்கின்றார்கள் என்றே நினைத்தேன். ஆனால் மாநில சாலைகள் உள்ள (500 மீட்டர் அளவுக்குள் உள்ள ) கடைகள் அனைத்தும் மூடப்பட வேண்டும் என்பதை நேரில் பார்த்த பின்பே உணர்ந்து கொண்டேன். 

நான் பணிபுரியும் நிறுவனத்தில் நேற்று மதியத்திற்கு மேல் பாதி டைலர்கள் வர வில்லை. சாப்பிடச் சென்றவர்கள் அப்படியே சென்று விட்டார்கள். முக்கிய வேலைகள் அனைத்தும் நின்று விட்டது. 

தொழிற்சாலைக்குள் டெக்னிஷியன் சம்மந்தப்பட்ட துறை சார்ந்த எவர் வந்தாலும் அதிகபட்சம் நான்கு வாரங்களுக்கு மேல் தாக்குப் பிடிப்பதில்லை. காரணம் அவர்கள் உடம்பு ஒத்துழைப்பதில்லை. எட்டு மணிக்கு ஷிப்ட் முடிகின்றது என்றால் அவர்கள் கைகள் ஆறு மணிக்கு மேல் நடுங்கத் தொடங்கி விடும். 

பிரதமர் மோடி கொண்டு வந்த பணமதிப்பு இழப்பு விவகாரத்திற்குப் பின்பு ஒவ்வொரு வாரச் சம்பளமும் வங்கி வழியே தான் பரிவர்த்தனை செய்ய வேண்டியதாக உள்ளது. ஒவ்வொரு மாதத்திலும் இரண்டு சனிக்கிழமை வங்கி விடுமுறை என்பதால் நிரந்தரமாக வெள்ளிக்கிழமையே அவரவர் கணக்குக்கு சம்பளம் சென்று விடும். பணம் வந்ததும் சனிக்கிழமை முன் அறிவிப்பு இன்றி காணாமல் போய்விடுவார்கள். வாங்கிய பணத்தை சனி, ஞாயிறு அத்துடன் திங்கள் கிழமை வரை அழித்து முடித்து விட்டு செவ்வாய் கிழமை தான் உள்ளே வருவார்கள். 

ஒவ்வொரு நிறுவனத்திற்கும் இதனால் ஏற்படும் இழப்பு என்பது கணக்கில் அடங்கா. காரணம் இந்த மதுக்கடைகள். 

தொழிலாளர்கள், பணியாளர்கள் பாரபட்சமின்றிக் காலையில் வேலைக்கு உள்ளே வந்ததும் அருகில் நின்று பேசும் நிலை உருவானால் தொடர்ந்து பேச முடியாத அளவுக்கு முதல் நாள் அருந்திய மது வாடை கெட்ட நாற்றமாக நம் குடலை புரட்டச் செய்யும். 

ஆனால் இதனை, இந்தச் சூழ்நிலையை இனி மாற்றவே முடியாது என்று தான் நம்பிக்கொண்டிருந்தேன். காரணம் மது லாபி என்பதும், இதன் மூலம் வருவாய் பார்த்த அதிகாரிகள், அரசியல்வாதிகள் எவரும் விட்டுக் கொடுக்கவே மாட்டார்கள் என்று நம்பிக் கொண்டிருந்தேன். ஆனால் பா.ம.க பாலு அவர்கள் எப்படிச் சட்டப் போராட்டத்தின் மூலம் சாதித்தார்? என்பது ஆச்சரியமாகவே உள்ளது. இதனை நீடிக்க லாபி அரசியல் விடுமா? என்ற சந்தேகம் உருவாகிக் கொண்டேயிருக்கின்றது. 

திருப்பூரில் 100 கடைகளுக்கு மேல் 31ந் தேதி இரவோடு மூடியிருக்கின்றார்கள். அவினாசி ஊர் எல்லை தொடங்கும் பகுதி முதல் பல்லடம் ஊர் வரைக்கும் ஏறக்குறைய 20 முதல் 30 பேருந்து நிறுத்தம் உண்டு. இந்த 20 கிலோமீட்டர் பகுதியில் உள்ள அத்தனை கடைகளும் தூக்கப்பட்டு உள்ளது. நான் பார்த்த நாலைந்து இடங்களில் சாவுகளைப் போல ஆரவாரம் அனைத்தும் அடியோடு இல்லாமலே போய்விட்டது. நான் அங்குள்ள சிலரிடம் விசாரித்த போது பம்மிக் கொண்டு பதில் அளித்தார்கள். வேறு எங்கேயாவது வைத்து விற்கின்றார்களா? என்று பார்த்தேன். கப் சிப். இடையிடையே யார் யாரோ? வந்து விசாரித்துக் கொண்டேயிருக்கின்றார்கள். 

ஒவ்வொரு குடிமகன்களும் பைத்தியம் பிடித்து வண்டியில் அலைந்து கொண்டேயிருக்கின்றார்கள். சிலர் பேருந்து வழியே விசாரித்துச் சென்று கொண்டிருக்கின்றார்கள். 

பா.ம.க கட்சி மகத்தான சாதனை செய்துள்ளது. எங்கே அடித்தால் என்பதனை உணர்ந்து அங்கே அடிக்க வேண்டும் என்பதனை மிகச் சரியாகச் செய்துள்ளார்கள். உணர்ச்சியைத் தூண்டி அரசியல் செய்பவர்கள் இனியாவது மூளையைப் பயன்படுத்தி அரசியல் செய்தால் வருங்காலத் தமிழகம் பிழைக்கும். 

#வாழ்த்துக்கள் வழக்குரைஞர் பாலு


•••••••••••••••

னக்குத் தட்டெழுத்துப் பயிலகத்தில் ஆசிரியையாக இருந்தவரை ஞானாலயா திரு. கிருஷ்ணமூர்த்தி அய்யா அவர்களின் மணி விழாவில் ஏறக்குறைய 25 வருடத்திற்குப் பிறகு திடீரெனச் சந்தித்தேன். இருவருக்கும் அதே ஆச்சரியம் ப்ளஸ் பரவசம். காரணம் திருக் கிருஷ்ணமூர்த்தி அய்யா அவர்களின் வீட்டுக்கருகே அவரின் வீடும் உள்ளது என்பதனை அன்று தான் கேட்டுத் தெரிந்து கொண்டேன். பலமுறை ஞானாலயா சென்ற போதும் எப்படி இவர்களை இத்தனை நாளும் கண்டு கொள்ளாமல் இருந்தேன் என்று ஆச்சரியமாக இருந்தது. 

இப்போது விசயம் இதுவல்ல. 

ஆசிரியையின் கணவர் புதுக்கோட்டையில் சுற்றியுள்ள அத்தனை கிராமங்களிலும் கிராம நிர்வாக அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். திருமணத்தின் போது அவரைச் சந்தித்தது. மீண்டும் அன்று தான் மீண்டும் சந்தித்தேன். அன்று தான் அறிமுகம் செய்து கொண்டு ஏறக்குறைய இரண்டு மணி நேரம் பேசிக் கொண்டு இருந்தேன். 

இந்த உரையாடல் நடந்து இரண்டு வருடங்களுக்கு மேலிருக்கும். அன்றைய அவரின் முழு உரையாடலும் இன்றைய ஹாட் டாப்பிக்கில் இருக்கும் அமைச்சர் விஜயபாஸ்கர் லீலைகளைப் பற்றியது. 

காரணம் விஜயபாஸ்கர் மருத்துவக்கல்லூரியில் நுழைவதற்கு முன்பு முதல் அவரின் ஒவ்வொரு நிகழ்வையும் அருகே இருந்து அவர் ஊருக்கருகே, இருந்து பார்த்தவர். குடும்பம், பின்னணி போன்ற அனைத்தும் தெளிவாகத் தெரிந்தவர். இன்று பத்திரிக்கையில் வந்து கொண்டிருப்பது நூறில் ஒரு மடங்கு மட்டுமே. அன்று அவர் சொன்னதை எழுத வேண்டுமென்றால் பத்து அத்தியாயங்கள் எழுதினாலும் போதாது. 

சுற்றியுள்ள கிராமங்கள் வளைக்கப்பட்ட விதம் முதல் திமுக ஆட்சியில் கூட விஜயபாஸ்கர் நடத்தி வரும் கிரஷர் முதல் பல தொழில்களின் எவரெல்லாம் பங்குதாரராக இருந்தார்கள் போன்ற அனைத்தும் புள்ளி விபரங்களோடு சொன்ன போது எனக்கு அதிக ஆச்சரியம் அளிக்கவில்லை. 

இவர் கிராம நிர்வாக அதிகாரியாக இருந்த காரணத்தால் ஒவ்வொரு நிகழ்வும் இவர் பார்வைக்கு வந்தே போகும் என்பதால் இவர் நேர்மையை அவர்களால் கடைசி வரைக்கும் விலை பேச முடியவில்லை. 

ஆனால் அமைச்சர் மற்றும் குடும்பம் மொத்த புதுக்கோட்டை சார்ந்த அத்தனை அரசுத் துறை சங்கங்களையும் விலைபேசி வைத்திருந்த காரணத்தால் இவரை எவருமே கண்டு கொள்ளவும் இல்லை. இவரும் கடைசி வரைக்கும் சகாயம் போலவே வாழ்ந்து முடித்து விட்டு வெளியே வந்து விட்டார். 

ஆனால் இவை அனைத்தும் புதுக்கோட்டைப் பகுதியைச் சார்ந்த அத்தனை திமுகப் பிரமுகர்களுக்கும் தெரிந்தாலும் எவரும் வாய் திறக்க மாட்டார்கள். காரணம் உனக்கு நான். எனக்கு நீ என்ற கூட்டணி தத்துவம் தமிழக அரசியலில் என்றுமே மாறாது. நாமும் இரண்டு வாரங்களுக்குக் காசு கொடுத்துக் கவர் ஸ்டோரி வாங்கிப் படித்து விட்டு அடுத்த அமைச்சரின் ஊழல் பற்றிப் படிக்கத் தயாராக இருப்போம். 

வாழ்க ஜனநாயகம்.

April 12 2017 

•••••••••••••

திமுக என்ற கட்சியின் வீழ்ச்சியும், அந்தக் கட்சியில் இருந்த கொள்ளைக்கூட்ட நபர்கள் நாள் தோறும் செய்து கொண்டிருக்கும் வேலைகளைப் பற்றி நானும் சராசரி வாக்காளன் என்ற முறையில் பார்த்துக் கொண்டே வருகின்றேன். 

தொலைக்காட்சியில் அதிமுகச் சார்பாகப் பேசுபவர்கள் ஏ1 குற்றவாளியை ஆதரிப்பதில் நியாயமுண்டு. காரணம் திருடனுக்குத் திருடன் உறுதுணையாய் இருக்க முடியும். இதைப் போலப் பத்திரிக்கைகள் இன்று வரையிலும்  நடந்சத தவறுகள் அனைத்துக்கும் காரணம் சசிகலா தான் என்று அவர் மேல் காட்டக்கூடிய வன்மம் கலந்த வெறுப்புணர்பில் கூட ஒரு தர்மம் உள்ளது. காரணம் பணத்திற்காக மலத்தை எடுத்து உண் என்று சொன்னாலும் செய்யக்கூடியவர்கள் பத்திரிக்கை நடத்தும் போது அது தான் சரி என்பதனை புரிந்து கொள்ள முடிகின்றது. 

ஆனால் நான் சமீபத்தில் திருப்பூரைச் சுற்றிலும் உள்ள கிராமங்களின் உள்பகுதியில் சென்று வந்த போது மக்களின் மனதில் ஜெ. குறித்த வெறுப்புணர்வைப் பார்க்க முடியவில்லை. இன்னமும் அவர்கள் மனதில் உள்ள திமுகக் குறித்த கசப்புணர்வு மாறவில்லை. தமிழ்நாட்டில் இன்னமும் பல கட்சிகள் உள்ளது என்பதனைக் கூட உணரத் தயாராக இல்லை. இவர்களுக்கு நல்லவர்களை விடத் திருடர்கள் தான் ஆளச் சரியான நபர்கள் என்பதனை மனதிற்குள் குறித்து வைத்துக் கொண்டேன். 

•••••••••••••••••••••

றைந்த முன்னாள் பாரதப் பிரதமர் நரசிம்மராவ் முதல் மன்மோகன்சிங் வரைக்கும் இடையில் இந்தியா பல பிரதமர்களைக் கண்டது. சந்து கேப்பில் தேவகௌடா கூடப் பிரதமராக இருந்தார். இவர்கள் அத்தனை பேர்களுக்கும் ஒரே ஒற்றுமை உண்டென்றால் எவருமே களத்தில் இறங்கிப் பணியாற்றக்கூடியவர்கள் அல்ல. மக்கள் செல்வாக்கு இல்லாதவர்களாக இருந்தார்கள். எல்லோருமே காகிதப் புலிகள். ஆனால் தற்போதைய பிரதமர் நரேந்திரமோடி அடித்தளம் வரைக்கும் இறங்கி ஆடி அடிப்பவராக இருக்கின்றார். அமைதிப்படை அம்மாவாசைப் போலவே செயல்படுகின்றார். அரசியலில் அதிகாரத்தைக் கைப்பற்ற, அதனைத் தொடர்ந்து தக்கவைக்க என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்கிற கொள்கைக்குச் சொந்தக்காராக இருக்கின்றார். 

அதன்படியே தொடர்ந்து வெற்றிக் கோடுகளைத் தாண்டி வந்து கொண்டேயிருக்கின்றார். 

தேசிய அரசியலைப் புரிந்து கொள்ள வேண்டுமென்றால் சர்வதேச அரசியலின் பாலபாடங்கள் தெரிந்து இருக்க வேண்டும். மாநில அரசியலில் ஜொலிக்க வேண்டுமென்றால் தேசிய அரசியலைக் கண்கொத்திப் பாம்பாகக் கண்டு கொண்டே வரவேண்டும். இன்றைய சூழ்நிலையில் ஒரு நாட்டின் அதிபர், பிரதமர், எவராக இருந்தாலும் சர்வதேச அழுத்தங்களை மீறி அவர்களால் தொடர்ந்து பதவியில் தொடர்ந்து இருக்க முடியாது. இதைப் போலவே இந்தியாவில் ஒரு மாநிலத்தின் முதல்வர் மத்திய அரசாங்கத்தைப் பகைத்துக் கொண்டு நீண்ட நாட்கள் காலம் தள்ள முடியாது. மக்கள் செல்வாக்கு மிக்க எம்.ஜி.ஆராக இருக்கட்டும், கலைஞர் என்று இரு ஆளுமைகளும் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள வளைந்து நெளிந்து தான் வாழ்ந்தார்கள். 

உள்ளுரில் மக்களிடம் பேச வேண்டிய மொழி வேறு. மத்திய அரசாங்க அதிகாரத்திடம் பேச வேண்டிய மொழி வேறு. தனக்கு அந்தத் திறமை இல்லாத போது அதற்குண்டான நபர்கள் மூலம் தங்கள் அதிகாரத்தைத் தொடர்ந்து வைத்துக் கொள்ளும் கலையை இருவரும் கற்று வைத்திருந்தனர். ஆனால் தமிழ்நாட்டில் தற்போது நடக்கும் காட்சிகள் மொத்தத்திலும் வினோதமானது. அதிலும் சசிகலா தோற்றுப் போனது முதல் டிடிவி தினகரன் நான் ஒதுங்கிக் கொள்கிறேன் என்பது வரைக்கும் உள்ளே என்ன நடக்கின்றது? எதனையும் பொதுமக்கள் எவரும் அறிந்திருக்க நியாயமில்லை. 

இவர்களைப் பொறுத்தவரையிலும் எப்போதும் போல "டில்லிக்காரன் ஆப்பு மேல ஆப்பு சொறுகுகிறான்ப்பா" என்ற ஒற்றை வார்த்தையில் கடந்து சென்று விடுகின்றார்கள். சமயம் வரும் போது இதனைப் பற்றி விரிவாக எழுதுகின்றேன். 

சசிகலா குறித்து நிலைத்தகவலில் (பிப்ரவரி 12, 15) எழுதிய இரண்டு விசயங்கள் இப்போது பொருத்தமாக இருப்பதால் அதனை மட்டும் இங்கே மீண்டும் எழுதி வைக்கின்றேன். 

•••••••• 

திரைக்குப் பின்னால் செயல்படுவர்கள், செயல்பட்டுக் கொண்டிருப்பவர்களுக்குப் பொறுமை, சகிப்புத்தன்மை போன்ற எதுவும் தேவையிருக்காது. நினைத்த காரியம் நினைத்தவாறு முடியவேண்டும் என்ற நோக்கம் மட்டுமே பிரதானமாக இருக்கும். 

ஆனால் அதிகாரவட்டத்திற்குள் உள்ளே நுழையும் போது ஆயிரம் தடைகள், அதிகாரத்தடைகள், கடைபிடித்தே ஆக வேண்டிய ஒழுங்கு முறைகள் இருந்தே ஆகும். ஜெ. வுக்குக் கடைசிவரைக்கும் அதைக் கற்றுக் கொள்ள எண்ணமும் இல்லை. அதை எந்த ஊடகமும் பெரிதுபடுத்திக் கொள்ளவும் இல்லை. ஆனால் சசிகலா கற்றுக் கொள்கிறாரோ இல்லையோ? அவர் பின்னால் இருந்து இயக்கும் எவருக்கும் இது குறித்த அடிப்படை அறிவு இருப்பதாகத் தெரியவில்லை. அடியாள் வேலை மட்டும் பார்த்துப் பழகியவர்களுக்கு அது மட்டும் தான் சரியாக இருக்கும் என்பது வரலாறு சொல்லும் பாடம். 

•••••••••

இனியாவது சசிகலாவிற்குப் பின்னால் உள்ள உறவுகள் அரசியல் பால படங்களைக் கற்றுக் கொள்ளப் பழக வேண்டும். "புத்தி மட்டுமே செயல்படும் இடம்" என்பதனை உணர்ந்து கொள்ள வேண்டும். ஊடகங்களைக்கூட எளிதில் மிரட்டிப் பணிய வைக்கக்கூட முடியும். ஆனால் உள்ளங்களை வாங்குவது அத்தனை எளிதல்ல என்பதனை உணர வேண்டும். இல்லாவிட்டால் சேர்த்து வைத்துள்ள சொத்துக்களும் கைவிட்டுப் போய்விடும் வாய்ப்புள்ளது. 

ஆத்திரம் அறிவுக்குச் சத்ரூ.


தொடர்புடைய பதிவுகள்Thursday, April 13, 2017

போதி மரம்


"தயவு செய்து இந்தச் செடியை வெட்டி விடாதே" என்று மனைவியிடம் கெஞ்சலாகக் கேட்டு அந்தச் செடியைக் காப்பாற்றி வைத்திருந்தேன். நடைப்பயிற்சி தொடங்குவதற்கு முன்பு காலையில் கழிப்பறைக்குச் செல்லும் போது அந்தச் செடியைக் கண்டேன். சந்து போன்ற பகுதியில் சுவரின் ஓரமாகச் சிமெண்ட் தரையிலிருந்து அந்தச் செடி முளைத்திருந்தது. அதுவும் சுவரின் ஓரமாக அருகே இருந்த சிமெண்ட் பைப் விரிசலின் இடைவெளியில் கிடைத்த துளி அளவு ஓட்டைக்குள் இருந்து அந்த விதை ஜனனமாகியிருந்தது. ஒரே ஒரு பச்சை இலை என்னை வரவேற்றது. ஆச்சரியமாக இருந்தது. 

இரண்டு வாரங்கள் கழித்துப் பார்க்கும் போது நாலைந்து இலைகளுடன் அழகான ஒரு குறுஞ்செடியாக மாறி பச்சை பசேல் என்று என்னைப் பார்த்துச் சிரித்தது. சுவரின் ஓரமாக அந்தச் செடி வளர்ந்த காரணத்தினால் சுவரில் விரிசல் வந்து விடுமோ? என்ற அச்சத்தில் மனைவி அந்தச் செடிக்கு தூக்குத் தண்டனை நாள் குறித்து இருந்தார். முதல் நாள் இரவில் வெளியே அமர்ந்து குழந்தைகளுடன் பேசிக் கொண்டிருந்த போது அவர் எண்ணத்தைச் சொன்ன போது திடுக்கிட்டுப் போனேன். 

சில வாரங்களுக்கு முன்னால் தான் வீட்டில் மற்றொரு படுகொலை நடந்திருந்தது. வீட்டுக்கு முன்னால் ஒரு பெரிய வேப்ப மரம் இருந்தது. வீட்டின் உரிமையாளர் பெண்மணி அந்த மரத்தைப் பற்றி அவ்வப்போது புலம்பலாகப் பேசிக் கொண்டிருப்பார். தினந்தோறும் உதிரும் சருகுகள் அவருக்கு வேலை வைத்துக் கொண்டிருந்தது. என்னால் தினமும் கூட்டிப் பெருக்க முடியவில்லை. இந்த மரத்தை வெட்டினால் தான் சரியாக இருக்கும் என்று மனைவியிடம் சொல்லியிருக்க அந்தச் செய்தி என் காதுக்கு வந்து சேர்ந்த போது அதிர்ச்சியடைந்தேன். மறுநாளே அவரிடம் சென்று "அந்த மரத்தை வெட்டிவிட வேண்டாம்" என்று வேண்டுகோள் வைத்தேன். மனைவியும் அவரும் சிரித்தனர். 

ஒரு நாள் மதியம் வீட்டுக்குச் சாப்பிட வந்து சேர்ந்த போது சுத்தமாக மொட்டையடிக்கப்பட்டுத் தூர் மட்டும் மிஞ்சியிருந்தது. எங்கள் வீட்டின் சந்தின் முனையில் நுழைந்த எனக்குத் தூரத்தில் பார்த்த போதே எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. இனி இவர்களிடம் பேசி பலன் இல்லை என்று நினைத்துக் கொண்டு இரண்டு நாட்கள் மனம் துக்கத்தை மனதிற்குள் கொண்டாடிவிட்டு கடந்து வந்து விட்டேன். பல வருடங்கள் வளர்ந்த மரம். நிழல் தந்து அந்த இடத்தையே குளுமையாக வைத்திருந்தது. சருகுகள் வேலை வாங்க ஒரே முடிவில் முடித்து விட்டார்கள். 

ஊரில் வாழ்ந்த போது அம்மா, அக்காக்கள் தோட்டத்தில் உள்ள ஒவ்வொரு மரத்தின் சருகுகளையும் தினமும் கூட்டிப் பெருக்கும் நாட்கள் என் நினைவுக்கு வந்து போனது. நானும் தம்பிகளும் கூடப் பல முறை கூட்டிப் பெருக்கியிருக்கின்றோம். குளுமையாக இருந்த நாட்கள் இன்று வரையிலும் மனதில் பசுமையாக உள்ளது. ஆனால் நகர்ப்புறங்களில் வாழும் போது நாம் தினந்தோறும் இழக்கும் இழப்புகள் கணக்கில் அடங்கா? 

தாங்கள் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் மனிதர்களும் இங்குள்ள அமைப்புகளும் ஒவ்வொரு காரணம் வைத்துள்ளார்கள். அரசாங்கம் சாலை விரிவாக்கம் செய்கின்றோம் என்று 50 வருடங்கள் வளர்ந்த மரங்களை ஒரே நாளில் வெட்டிச் சாய்த்து விடுகின்றார்கள். இந்தச் செயலில் ஈடுபடும் அதிகாரிகளிடம் பேசிப் பாருங்கள்? முதலில் பேசவே மறுப்பார்கள். அப்படியே பேசினால் கூட எகத்தாளமாகப் பேசுவார்கள். ஈரம் என்றால் கிலோ என்ன விலை? என்று கேட்பார்கள்? நாம் இங்கே வாழ வேண்டுமென்றால் பலவற்றைப் பொறுத்துக் கொள்ளத்தான் வேண்டும். 

பேசிக் கொண்டிருந்த போது குழந்தைகளிடம் கேட்டேன். "அந்தச் செடியைப் பார்த்தீர்களா?" என்று. ஒருவர் மட்டும் கவனித்திருந்தார். ஆனாலும் அதனை அவர் பொருட்படுத்த தயாராக இல்லை. அடுத்த இருவரும் அப்போது தான் பார்க்க ஓடினார்கள். மனதில் குறித்துக் கொண்டேன். 

காலையில் தாமதமாக எழுவதும், மனைவியிடம் திட்டி வாங்கிய பின்பு ஆடி அசைந்து குளியல் அறைக்குச் செல்லும் இவர்கள் எதையும் கவனிப்பதில்லை என்பதனை உள்வாங்கிக் கொண்டேன். விடாத வேதாளம் போல மூவரிடமும் அலுவலகம் செல்லும் போது ஒரு கேள்வியைக் கேட்டு விட்டுச் சென்றேன். அந்தச் செடி மூலம் என்ன உணர்ந்தீர்கள்? என்ன கற்றுக் கொண்டீர்கள்? நான் அலுவலகம் முடித்து இரவு வந்ததும் எனக்குச் சொல்ல வேண்டும் என்று சொல்லிவிட்டுச் சென்றேன். 

எப்போதும் போல நான் கேட்ட கேள்வியை மறந்து விட்டனர். இரவு சாப்பாடு முடிந்து தூங்கச் சென்றவர்களிடம் மறக்காமல் கேட்டேன். அப்போதும் நாளை பேசிக் கொள்ளலாம் என்று அவசரம் அவசரமாகத் தப்பிப்பதில் குறியாக இருந்தனர். அடுத்த இரண்டு நாட்கள் பொறுமையாக இருந்து காலைவேளையில் அந்தச் செடிக்கு அருகே நின்று கொண்டு வந்த ஒவ்வொருவரிடமும் இந்தச் செடி மூலம் என்ன கற்றுக் கொண்டீர்கள்? என்ற கேள்வியைக் கேட்ட போது இனி தப்பிக்க முடியாது என்பதனை உணர்ந்து கொண்டு ஒவ்வொருவரும் ஒரு பதிலைத் தந்தனர். 

மூத்தவர் மட்டும் நான் நினைத்திருந்ததற்கு அருகே வந்து பதில் அளித்தார். "போராடினால் வெற்றி நிச்சயம்" என்றார். அடுத்த இருவரும் "நிறையக் கஷ்டப்பட்டு வளர்கின்றது" என்றார்கள். சரி இரவு வந்ததும் பேசுகின்றேன் என்று சொல்லிவிட்டு நகர்ந்து சென்று விட்டேன். 

உனக்கு அறிவு இருக்கா? உன் தலையில் களிமண்ணா இருக்கு? ஏன்டா இது கூட உனக்குப் புரியலையா? போன்ற கேள்விகளை நாம் படித்த பள்ளிக்கூடத்தில் ஆசிரியர் சொல்லி பல முறை கேட்டு கடந்து வந்திருப்போம். நம்முடன் படித்த பலரையும் பரிகசித்த ஆசிரியரை, சக மாணவ மாணவியரைப் பார்த்து பயந்த காலத்தை இப்போது யோசித்துப் பார்த்தாலும் வியப்பாகவே உள்ளது. இன்று வரையிலும் அறிவு என்றால் என்ன? அதன் அளவு கோல் தான் என்ன? என்பதனை இன்று வரையிலும் நம்மால் அறுதியிட்டுக் கூற முடியுமா? 

சிந்தனை செயலாக்கம் என்பது இயற்கையில் உருவாகக்கூடிய ஒன்றா? அல்லது சூழ்நிலையின் காரணமாக இயல்பாகவே வரக்கூடியதா? என்ற கேள்விக்கு ஒவ்வொரு சமயத்திலும் நான் பதில் தேடிக் கொண்டேயிருப்பதுண்டு.

படு பயங்கர மக்கு என்று ஒதுக்கப்பட்ட பலரும் இன்று கோடீஸ்வர்களாக இருக்கின்றார்கள். படிப்பில் சுட்டி என்று சுட்டிக் காட்டப்பட்டவர்கள் இன்று மாதந்திர சம்பளத்திற்குள் வாழ்க்கையைப் பணயம் வைத்து வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். 

நாம் பார்க்கும் அரசியல்வாதியை நம்மால் திறமைசாலி என்று ஏற்றுக் கொள்ள முடிகின்றதா? ஒரு அமைச்சராவது ஒரு மாநிலத்தை நிர்வாகிக்கக் கூடிய திறமையுள்ளவர் என்று நம்மால் அடையாளம் காட்ட முடியுமா? இவர்கள் எப்படி ஐஏஎஸ் முடிந்தவர்களை, மற்ற அதிகாரிகளை வேலை வாங்க முடியும்? அவர்கள் எழுப்பும் வினாக்களை எப்படிச் சமாளிப்பார்கள்? எந்த அளவுக்கு நிர்வாகத்திறமையைக் கற்றிருப்பார்கள்? போன்ற பலவற்றை யோசித்தாலும் அத்தனையும் மக்களாட்சி தத்துவம் என்பதற்குள் அடங்கி விடுகின்றது. சுருக்கமாகச் சொன்னால் படிக்காதவன் முதலீட்டில் கட்டப்பட்ட கல்லூரிகளில் படித்துப் பல பட்டங்கள் வாங்கியவர் மாத சம்பளம் தொடர்ந்து கிடைக்குமா? என்ற அச்சத்தில் தான் வாழ வேண்டியுள்ளது. 

இதனையே குழந்தைகள் விசயத்தில் பல சமயங்களில் யோசித்துப் பார்ப்பதுண்டு. இவர்கள் மூவரும் பிறந்த அந்தக் கணத்தில் அவர்கள் அழுகை என் காதில் விழுந்த நொடிப் பொழுது முதல் இன்று வரையிலும் அவர்களின் ஒவ்வொரு செயல்பாடுகளையும் கவனித்தே வருகின்றேன். எத்தனை பேர்களால் இப்படி முடியும்? என்று யோசித்துள்ளேன். 

அவர்களின் படிப்படியான வளர்ச்சியைக் கவனித்தவன் என்ற முறையில் இன்று ஏராளமான ஆச்சரியங்களும், அதிசியங்களும் ஒருங்கே எனக்குக் கிடைத்துள்ளது. "ஒரு குழந்தையை எப்படி வளர்க்க வேண்டும் என்பதனை அவனிடம் கற்றுக் கொண்டு வாங்க" என்று என் அம்மா எனக்குக் கொடுத்த உயர்ந்த பட்ச அங்கீகாரம் இன்று காற்றில் பறந்து விட்டது. காரணம் இவர்கள் முழுமையாக மாறியுள்ளார்கள். அதில் ஒரு படி தான் இப்போது இந்தச் செடி குறித்து அவர்களிடம் கேட்ட கேள்விகளும். 

எல்லாமே இவர்களுக்கு எளிதாகக் கிடைப்பதால், விரும்பிய அனைத்தும் இதுவரைக்கும் கிடைத்த காரணத்தால் இவர்களின் வாழ்க்கை முறை என்பது வேறு விதமாக அமைந்துள்ளது. கடைசியாக அவர்களிடம் சொன்னேன். "நான் பயன்படுத்துப் பீரோவில் ஒரு வாசகம் எழுதிய ஸ்டிக்கர் ஒட்டி வைத்துள்ளேன். அதனைப் படித்துப் பாருங்கள்" என்றேன். இருவர் வேகமாகச் சென்று பார்த்து விட்டு உரக்கப் படித்தார்கள். 

"பாறை இடுக்குகளில் வளர்வது தாவரமல்ல. தன்னம்பிக்கை". 

நடைபயில்வோம்........... 

முந்தைய பதிவுகள்Tuesday, April 11, 2017

ஒரு சேவலும் நான்கு கோழிகளும்


அதுவொரு ஞாயிற்றுக்கிழமை......... 

அன்று தான் முதன் முறையாக நடைப்பயிற்சியைத் தொடங்கினேன். ஞாயிறு என்பது எனக்கு விசேட தினம். ஆறு நாட்கள் யாருக்கோ உழைத்து, எவருடனோ விருப்பமின்றி உறவாடி, பலவித வேடங்கள் போட்டு எனக்கான சுயத்தை மறந்து வாழும் எனக்கு ஞாயிறென்பது எனக்கான தினம். ஒவ்வொரு ஞாயிறும் அதிகாலையில் விழிப்பு வந்து விடும். முதல் நாள் இரவு எத்தனை மணிக்கு வந்து படுத்தாலும் மனம் சொல்லிவைத்தாற்போல ஐந்து மணி அளவில் உடம்பை எழச் செய்துவிடும். 

சனிக்கிழமையன்றோ வீட்டில் நான்கு பேர்களும் ஒரு வசனத்தைத் தூங்கப் போவதற்கு முன்பு மறக்காமல் சொல்வார்கள். "நாளைக் காலை எங்கள் யாரையும் ஏதாவது தொந்தரவு செய்தால் நடப்பதே வேறு?" என்று மிரட்டல் தொனியில் எச்சரிப்பார்கள். காரணம் ஒவ்வொரு ஞாயிறும் அவர்களுக்கு அதிக நேரம் தூங்க வேண்டும் என்பது அவர்களின் கொள்கை. 

ஏற்றுமதி நிறுவனங்களில் பணிபுரியும் பெண்கள் மீது எப்போதும் எனக்குக் கனிவுப் பார்வை உண்டு. எட்டரை மணிக்கு உள்ளே வந்து மீண்டும் எட்டரைக்கு வீட்டுக்குச் செல்லும் இவர்களின் மற்ற கடமைகளை எப்படி முழுமையாகச் செய்ய முடியும்? என்பதே இதன் அடிநாதம். அவசரம் அவசரமாக ஓடிவந்து, உள்ளே வந்து கைரேகை பதித்துப் பத்தரை மணிக்கு விடப்படும் தேநீர் இடைவேளையில் அவசரகதியில் அமர்ந்து அவர்கள் கொண்டு காலை உணவை உண்ணும் போது மனம் வலிக்கும். ஆனால் வெளியே காட்டிக் கொள்ள முடியாது. மணிச் சப்தம் ஒலிக்கும் போது பாத்திரங்களைக்கூடக் கழுவ நேரமிருக்காமல் ஓடி வருவார்கள். 

பல முறை கவனித்துள்ளேன். அதையே வீட்டுக்கு வந்து குழந்தைகளிடம் வந்து சொல்லும் போது எளிமையாகப் பதில் சொல்வார்கள். "நீங்க தானே மேனேஜர். உங்கள் முதலாளியிடம் சொல்லி கூடுதலாக நேரம் கொடுக்க வேண்டியது தானே?" பதில் பேசாமல் நகர்ந்து விடுவேன். 

இங்கு ஒவ்வொருவருக்கும் ஒரு பாத்திரப்படைப்புச் சமூகம் உருவாக்கி வைத்துள்ளது. அதுவொரு வேடம் என்றாலும் அந்த வேடத்தில் எந்தளவுக்குத் திறமையாக நடிக்கக் கற்றுக் கொண்டவர்களால் மட்டுமே தங்களைக் காப்பாற்றிக் கொள்ள முடியும். நடிக்கத் தொடங்கும் போது சுயம் கழன்று விடும். அறம் என்பது மறந்து விடும். அதிகப் பணமிருப்பவர்களுக்கும் அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான பணத்தைத் தேடுபவர்களுக்கு மத்தியில் நாம் வாழ்ந்தாக வேண்டும் என்றால் அலுவலகத்திற்குச் செல்லும் போது உடைகள் மாற்றத் தொடங்கும் போதே உள்ளே உள்ள நடிகனுக்குத் தேவைப்படும் ஒத்திகையையும் ஒரு முறை பார்த்துக் கொள்ள வேண்டும். 

பல நாட்கள் ஞாயிற்றுக்கிழமையும் தொழிற்சாலையில் வேலையிருக்கும். நான் கிளம்பும் வரைக்கும் மூன்று பேரும் ஆழ்ந்த தூக்கத்தில் இருப்பார்கள். ஆச்சரியமாகவும், அயர்ச்சியாகவும் இருக்கும். 

தொடக்கத்தில் குறைந்தபட்சம் குழந்தைகளையாவது இந்தப் பழக்கத்தில் மாற்றிவிட முடியுமா? என்று முயற்சித்த போது குடும்பம் மொத்தமாக எதிரணியில் நின்று நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றி குண்டுக்கட்டாகத் தூக்கி சபையை விட்டு வெளியே அனுப்பி வைத்து விட்டார்கள். அப்பொழுதே புரிந்து விட்டது. சபாநாயகர் மனைவியின் சோம்பேறித்தனத்திற்கு மூன்று உறுப்பினர்களும் ஒட்டு மொத்த ஆதரவு தெரிவித்த பின்பு சுயேச்சை உறுப்பினர் நான் மட்டும் என்ன செய்ய முடியும்? 

இதுவும் ஒரு வகையில் நல்லதாகப் போய்விட்டது. 

காலைக்கடன்கள் முடித்து விட்டு எழுதத் தொடங்கினால் அந்த வாரத்திற்குத் தேவையான விசயங்களை அடுத்த நான்கு மணி நேரத்தில் எழுதி முடிக்க வசதியாக இருந்தது. அவர்கள் ஒவ்வொருவராக முழித்து வெளியே வந்து நிற்கும் போது நான் பிழைகள் திருத்திக் கொண்டிருப்பேன். இடையிடையே அந்த வாரத்தில் வந்த அரசியல் சார்ந்த காணொலிக் காட்சிகளைப் பார்த்து முடித்து இருப்பேன். 

மற்ற நகரங்களில் எப்படியோ? ஆனால் திருப்பூரில் தொழிலாளர்கள் மட்டுமல்ல, பெரும்பணம் படைத்த முதலாளிகளும் தொடர்ந்து வேலை செய்து கொண்டேயிருப்பது என்ற பழக்கத்திற்கு அடிமையாகத் தான் உள்ளனர். மற்ற துறைகளில் உள்ள முதலாளிகள் வாழ்க்கையை அனுபவிக்கப் பல வித முன்னேற்பாடுகளை மாதந்தோறும் வருடந்தோறும் செய்து அதன்படி வாழ்ந்தாலும் இங்குள்ள முதலாளிகள் பதட்டமும் பரபரப்புமாகவே வாழ்க்கையைக் கழிக்கின்றனர். 

இந்தக் கூட்டத்தில் பழகியே தொடர்ந்து வேலை செய்வது என்ற பழக்கம் எனது இயல்பான குணாதிசியமாகவே மாறிவிட்டது. இது தான் எங்கள் வீட்டுச் சபாநாயகருக்கும் எனக்குக் கருத்து வேறுபாடுகள் உருவாக முக்கியக் காரணமாகவும் அமைந்து விடுகின்றது. 

இதே பழக்கம் இன்று குழந்தைகளுக்கும் தொற்றி ஞாயிறென்றால் பத்து மணி வரைக்கும் தூங்கிக் கொண்டிருக்கின்றார்கள். பல முறை ஆச்சரியமாக ஆழ்ந்து தூங்கும் இவர்களைக் கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டே நின்று கொண்டிருப்பேன். ஒரு சலனம் இருக்காது. வெளியே ஒரு உலகம் இயங்கிக் கொண்டிருக்கின்றது. வாகனங்களின் சப்தங்கள் எதுவும் அவர்களைத் தொந்தரவு செய்யாது. அப்போது தான் தூங்கச் சென்றது போல இவர்கள் தூங்கிக் கொண்டிருப்பார்கள். 

பள்ளி செல்லும் நாட்களில் நாள் தோறும் அதிகபட்சம் பத்து மணிக்குள் ஆழ்ந்த தூக்கத்திற்குள் சென்று விடும் இவர்கள் சரியாக ஆறு மணிக்கு எழுந்து தங்கள் கடமைகளைச் செய்யத் தொடங்கி விடுவார்கள். எட்டு மணி நேரமும் முழுமையான தூக்கம். ஆனால் இதனையும் மீறி ஞாயிற்றுக் கிழமையென்றால் கூடுதல் போனஸ். இவர்களை மாற்ற வேண்டும் என்பதற்காக வாக்கிங் செல்ல அழைப்பு விடுப்பேன். அது காற்றில் கேட்ட கேள்வியாக மாறிவிடும். கேலியாக மாறுவதற்குள் வெளியே நடக்கத் தொடங்கி விடுவேன். 

வீட்டுக்குள் பலவற்றை மாற்ற முயற்சித்துள்ளேன். ஆனால் பலன் என்னவோ பூஜ்யம் தான். காரணம் ஒரு சேவலும் நான்கு கோழிகளும் இருந்தாலும் என்னவாகும்? ஒவ்வொரு முறையும் சேவலில் கம்பீரமான கொக்கரக்கோ சப்தம் கூடக் கெக்கெக்கே என்று சிரிப்பொலியில் மறைந்து விடுகின்றது. 

இருந்தாலும் இவர்களை மாற்ற வேண்டும் என்பதற்காகவே வீட்டுக்குள் வளர்ந்து கொண்டிருக்கும் போதிமரத்தை அவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தேன்.

நடைபயில்வோம்.............

முந்தைய பதிவு

Sunday, April 09, 2017

நடைபயிற்சிதிடீரென்று பைத்தியம் பிடித்து விடும்? என்ன காரணமென்று மனம் உணர்வதற்குள் விருப்பங்கள் ஆர்வமாய் மாறி உடலும் உள்ளமும் அதே சிந்தனைக்குத் தயாராகிவிடும். திருமணத்திற்கு முன்பு தங்கியிருந்த இடத்திற்கு அருகே இரவு நேரங்களில் மதுக்கடைகளுக்கு அருகே மீன் பொறித்து விற்கும் வண்டிகள் அதிகமாக இருக்கும். என்னுடன் அறையில் இருந்தவர் தீவிர அசைவ பிரியர். கூட்டலும் கூட்டலும் சேர்ந்தால் என்னவாகும். பையில் உள்ள பணமெல்லாம் கழித்தல் ஆகும் தானே? 

விடாமல் தினந்தோறும் வெறித்தனமாகத் தின்று தீர்த்தோம். காலமாற்றத்தில் அருகே உள்ள அணையில் உள்ள தண்ணீர் வற்ற இப்போது தெருவுக்குத் தெருவுக்குப் பிராய்லர் கோழித் துண்டை பலவிதங்களில் வண்டிக்கடைகளில் பொறித்து விற்கின்றார்கள். தினந்தோறும் இரவு அலுவலகம் விட்டு வரும் வழியில் பலவித கோழிக்கடைகளைக் கடந்து தான் வீட்டுக்கு வந்து சேர வேண்டும். பலவிதமான வாசனைகளைக் கடந்து வீட்டுக்கு வந்து சேர்கின்றேன். சில சமயம் என்னை நானே கட்டுப் படுத்த முடியாமல் ஒவ்வொரு கடையாக ஏறி சுவையறிந்து, எரிச்சலாகி வெறுத்து ஒதுக்கி இப்போது எந்தக் கடைக்கும் போவதில்லை.

அமெரிக்காவை வாழ வைத்துக் கொண்டிருக்கும் எண்ணெய் அரசியல் என்பது பெட்ரோல் ஆகும். இதைப்போல இந்தியாவில் தற்போது நடுத்தரவர்க்கம், ஏழை மக்கள் என்ற பாரபட்சமின்றிச் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் என்றொரு விஷ யுத்தம் நடந்து கொண்டிருக்கின்றது. உள்நாட்டு எண்ணெய் வித்துக்களை அழித்து ஒழித்துச் சூரியகாந்தி எண்ணெய், தவிட்டு எண்ணெய் என்று பலவித எண்ணெய்கள் சந்தையில் நாள்தோறும் கவர்ச்சிகரமான பெயருடன், விளம்பரங்களுடன் அணிவகுத்து வருகின்றது. சராசரி குடும்பத்தின் அடிப்படை உணவு பழக்கத்தையே வந்து கொண்டிருக்கும் விளம்பரங்கள் மாற்றி விட்டது. ஒவ்வொரு சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் என்பதும் 90 சதவிகிதம் குரூட் ஆயிலில் இருந்து தயாரிக்கப்படுவது என்பது எத்தனை பேர்களுக்குத் தெரியும்? ஆனால் அந்த எண்ணெய்யைக் கூடப் பயன்படுத்திக் கீழே கொட்டி விட மனசு இல்லாத வண்டிக்கடைக்காரர்கள் திரும்பத் திரும்பப் பயன்படுத்தும் போது வாங்கித் தின்னும் உணவின் தரம் எப்படியிருக்கும் என்பதனை யோசித்துப் பாருங்கள்?

பொறிக்கும் எண்ணெய் என்பது காலாவதியாக வேண்டியது என்பதனை மாற்றி அதனையே தொடர்ந்து பயன்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள். திரும்பத் திரும்ப அதே எண்ணெய் பயன்படுத்தும் போது அது விசமாக மாறிவிடுகின்றது. உணராத மக்கள் கோழியில் சேர்க்கும் நிறமூட்டிகள் மற்றும் சுவைகளுக்காக விசத்தை விழுங்கிக் கொண்டிருக்கின்றார்கள். 

என்ன சாப்பிட்டாலும் உள்ளே தங்க விடாத அளவுக்குக் கட்டுப்பாடுகள் எனக்கு இருப்பதால் உடல் ரீதியான பிரச்சனைகள் வருவதில்லை. ஆனால் வயதாகும் போது எச்சரிக்கை மணி அடிக்குமே? 

அப்படித்தான் நடைப்பயிற்சி என்ற பழக்கம் சில மாதங்களுக்கு முன்னால் மனதில் உருவானது. 

பள்ளியில் படித்த காலம் முதல் இன்று வரை விளையாட்டு, உடற்பயிற்சி சார்ந்த எந்த விசயங்களிலும் ஈடுபாடு வந்ததே இல்லை. எனக்கு மட்டுமல்ல. குடும்பத்தில் எவரும் அந்தப் பக்கம் தலைவைத்து படுத்ததே இல்லை. கடைசித் தம்பி மட்டும் கல்லூரியில் படிக்கும் போதே என்சிசி பக்கம் சென்று உடற்பயிற்சி, ஓட்டப்பயிற்சி என்று தடம் மாறி கடைசியில் இந்திய ராணுவத்தில் அலுவலகப் பணிக்கு தேர்வான போது எனக்கே கொஞ்சம் ஆச்சரியமாக இருந்தது. ஆனாலும் எனக்கு உணவில் மேல் இருந்த ஈடுபாடு இதுபோன்ற உடல் சார்ந்த பயிற்சியில் உருவானதே இல்லை. இப்போது உருவானதற்குக் காரணம் அலுவலகத்தில் ஒருவர் தனது அலைபேசியில் வைத்திருந்த செயலியைக் காட்டி பேசிக் கொண்டிருந்தார். 

ஸ்போர்ட்ஸ் ட்ராக் என்ற செயலியின் செயல்பாடுகளைப் பற்றிச் சொன்ன போது கொஞ்சம் ஆர்வம் பிறந்தது. எத்தனை கிலோ மீட்டர் நடக்கின்றோம்? எத்தனை அடிகள் நடந்தோம்? இது போன்ற பல சமாச்சாரங்கள் அதில் இருக்கச் சிறிதாக ஆர்வம் உருவானது. நாளை முதல் காலை நான் வாக்கிங் போகப் போகிறேன்? என்று வீட்டில் வந்து சொன்ன போது பெரிய நகைச்சுவை சமாச்சாரத்தைக் கேட்டது போல நான்கு பேர்களுமே சிரித்தார்கள். காரணம் நம் ஜாதகம் அப்படி. 

எனக்கே கொஞ்சம் சந்தேகமாக இருந்தது. ஆகா....... இவர்கள் சிரிக்கின்றார்களே? என்று காலையில் எழுந்து முதல் வேலையாகச் செய்ய வேண்டிய கடமைகளை முடித்து விட்டு சிறிய இலக்காகத் தீர்மானித்து விட்டு ஸ்போர்ட்ஸ் ட்ராக்கர் செயலியை இயக்கிவிட்டு என் நடைப்பயிற்சியைத் தொடங்கினேன். 

வீட்டுக்கருகே உள்ள பாதையைத் தீர்மானித்து விட்டு தினந்தோறும் வந்து செயலியைக் கவனித்த போது அதிகபட்சமாக நான்கு கிலோமீட்டர் என்று காட்டியது. அது சார்ந்த பல சமாச்சாரங்களைக் (எரித்த கலோரிஅளவுகள்) காட்டியது. வீட்டில் இதனைக் காட்டி பெருமையாகச் சொன்ன போது மற்றொரு பிரச்சனை உருவானது. எரித்த கலோரிக்குச் சமமாகக் குழந்தைகளுக்கு வாங்கி வைத்துள்ள திண்பண்ட சமாச்சாரங்களை எடுத்த விளாசித் தள்ள ஒவ்வொரு நாளும் குழந்தைகள் தூங்கும் போது மறக்காமல் தங்கள் திண்பண்ட சமாச்சாரங்களை எடுத்து ஒளித்து வைத்து விட்டே தூங்கத் தொடங்கினார்கள். மனைவி சிரிக்க என் நடைப்பயிற்சி சில வாரங்களில் முடிவுக்கு வந்தது. 

நாம் கற்ற அறிவு எந்த அளவுக்கு நம்மைத் தனிப்பட்ட வாழ்க்கையில் வளர்த்திருந்தாலும் நம்மிடம் உள்ள அடிப்படை அறிவு என்பது என்றுமே மாறாது. ஒவ்வொரு சமயத்திலும் அது வெளிப்பட்டே ஆகும். அது குடும்பம், வாழ்ந்த சூழ்நிலை, பழகும் மனிதர்கள் உருவாக்கும் தாக்கம், நமக்கு நாமே கற்பித்துக் கொள்ளும் நியாயங்கள். அதன் மூலம் உருவாகும் தர்க்க வாதங்கள் என்று நமக்கு நாமே நம்மையறியாமல் குறிப்பிட்ட மாற்ற முடியாத குணாதிசியங்களை வாழ் நாள் முழுக்க வளர்த்துக் கொண்டே வருகின்றோம். இதைத்தான் இன்று ஜாதியின் பெயரால் இழிவுப் படுத்துகின்றார்கள். மதத்தின் பெயரால் சுட்டிக் காட்டுகின்றார்கள். வணங்கும் கடவுளை வைத்துப் பரிகாசம் செய்கின்றார்கள். 

மொத்தத்தில் எல்லா இடங்களிலும் மனிதன் என்பவன் ஒவ்வொரு காலகட்டத்தில் தனித்தீவாகத் தான் இருக்கின்றான். கட்டாயத்தின் பேரில் குடும்பம் என்ற அமைப்பும், அதன் மூலம் உருவாகும் சமூக நிர்ப்பந்தம் நம்மை விலங்கிலிருந்து வித்தியாசப்படுத்திக் காட்டுகின்றது. இந்த வித்தியாசங்களை ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு செயல்பாடுகளிலும் நான் உணர்ந்தே வந்துள்ளேன். நான் குறுகிய காலம் நடைப்பயிற்சி என்ற பெயரில் நான் வேடிக்கை பார்த்த அந்த அதிகாலை சமூகத்தை உங்களிடம் தொடர் எழுத்து மூலம் பகிர்ந்து கொள்ளப் போகின்றேன்

நடை பயில்வோம்.............