Sunday, April 09, 2017

நடைபயிற்சிதிடீரென்று பைத்தியம் பிடித்து விடும்? என்ன காரணமென்று மனம் உணர்வதற்குள் விருப்பங்கள் ஆர்வமாய் மாறி உடலும் உள்ளமும் அதே சிந்தனைக்குத் தயாராகிவிடும். திருமணத்திற்கு முன்பு தங்கியிருந்த இடத்திற்கு அருகே இரவு நேரங்களில் மதுக்கடைகளுக்கு அருகே மீன் பொறித்து விற்கும் வண்டிகள் அதிகமாக இருக்கும். என்னுடன் அறையில் இருந்தவர் தீவிர அசைவ பிரியர். கூட்டலும் கூட்டலும் சேர்ந்தால் என்னவாகும். பையில் உள்ள பணமெல்லாம் கழித்தல் ஆகும் தானே? 

விடாமல் தினந்தோறும் வெறித்தனமாகத் தின்று தீர்த்தோம். காலமாற்றத்தில் அருகே உள்ள அணையில் உள்ள தண்ணீர் வற்ற இப்போது தெருவுக்குத் தெருவுக்குப் பிராய்லர் கோழித் துண்டை பலவிதங்களில் வண்டிக்கடைகளில் பொறித்து விற்கின்றார்கள். தினந்தோறும் இரவு அலுவலகம் விட்டு வரும் வழியில் பலவித கோழிக்கடைகளைக் கடந்து தான் வீட்டுக்கு வந்து சேர வேண்டும். பலவிதமான வாசனைகளைக் கடந்து வீட்டுக்கு வந்து சேர்கின்றேன். சில சமயம் என்னை நானே கட்டுப் படுத்த முடியாமல் ஒவ்வொரு கடையாக ஏறி சுவையறிந்து, எரிச்சலாகி வெறுத்து ஒதுக்கி இப்போது எந்தக் கடைக்கும் போவதில்லை.

அமெரிக்காவை வாழ வைத்துக் கொண்டிருக்கும் எண்ணெய் அரசியல் என்பது பெட்ரோல் ஆகும். இதைப்போல இந்தியாவில் தற்போது நடுத்தரவர்க்கம், ஏழை மக்கள் என்ற பாரபட்சமின்றிச் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் என்றொரு விஷ யுத்தம் நடந்து கொண்டிருக்கின்றது. உள்நாட்டு எண்ணெய் வித்துக்களை அழித்து ஒழித்துச் சூரியகாந்தி எண்ணெய், தவிட்டு எண்ணெய் என்று பலவித எண்ணெய்கள் சந்தையில் நாள்தோறும் கவர்ச்சிகரமான பெயருடன், விளம்பரங்களுடன் அணிவகுத்து வருகின்றது. சராசரி குடும்பத்தின் அடிப்படை உணவு பழக்கத்தையே வந்து கொண்டிருக்கும் விளம்பரங்கள் மாற்றி விட்டது. ஒவ்வொரு சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் என்பதும் 90 சதவிகிதம் குரூட் ஆயிலில் இருந்து தயாரிக்கப்படுவது என்பது எத்தனை பேர்களுக்குத் தெரியும்? ஆனால் அந்த எண்ணெய்யைக் கூடப் பயன்படுத்திக் கீழே கொட்டி விட மனசு இல்லாத வண்டிக்கடைக்காரர்கள் திரும்பத் திரும்பப் பயன்படுத்தும் போது வாங்கித் தின்னும் உணவின் தரம் எப்படியிருக்கும் என்பதனை யோசித்துப் பாருங்கள்?

பொறிக்கும் எண்ணெய் என்பது காலாவதியாக வேண்டியது என்பதனை மாற்றி அதனையே தொடர்ந்து பயன்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள். திரும்பத் திரும்ப அதே எண்ணெய் பயன்படுத்தும் போது அது விசமாக மாறிவிடுகின்றது. உணராத மக்கள் கோழியில் சேர்க்கும் நிறமூட்டிகள் மற்றும் சுவைகளுக்காக விசத்தை விழுங்கிக் கொண்டிருக்கின்றார்கள். 

என்ன சாப்பிட்டாலும் உள்ளே தங்க விடாத அளவுக்குக் கட்டுப்பாடுகள் எனக்கு இருப்பதால் உடல் ரீதியான பிரச்சனைகள் வருவதில்லை. ஆனால் வயதாகும் போது எச்சரிக்கை மணி அடிக்குமே? 

அப்படித்தான் நடைப்பயிற்சி என்ற பழக்கம் சில மாதங்களுக்கு முன்னால் மனதில் உருவானது. 

பள்ளியில் படித்த காலம் முதல் இன்று வரை விளையாட்டு, உடற்பயிற்சி சார்ந்த எந்த விசயங்களிலும் ஈடுபாடு வந்ததே இல்லை. எனக்கு மட்டுமல்ல. குடும்பத்தில் எவரும் அந்தப் பக்கம் தலைவைத்து படுத்ததே இல்லை. கடைசித் தம்பி மட்டும் கல்லூரியில் படிக்கும் போதே என்சிசி பக்கம் சென்று உடற்பயிற்சி, ஓட்டப்பயிற்சி என்று தடம் மாறி கடைசியில் இந்திய ராணுவத்தில் அலுவலகப் பணிக்கு தேர்வான போது எனக்கே கொஞ்சம் ஆச்சரியமாக இருந்தது. ஆனாலும் எனக்கு உணவில் மேல் இருந்த ஈடுபாடு இதுபோன்ற உடல் சார்ந்த பயிற்சியில் உருவானதே இல்லை. இப்போது உருவானதற்குக் காரணம் அலுவலகத்தில் ஒருவர் தனது அலைபேசியில் வைத்திருந்த செயலியைக் காட்டி பேசிக் கொண்டிருந்தார். 

ஸ்போர்ட்ஸ் ட்ராக் என்ற செயலியின் செயல்பாடுகளைப் பற்றிச் சொன்ன போது கொஞ்சம் ஆர்வம் பிறந்தது. எத்தனை கிலோ மீட்டர் நடக்கின்றோம்? எத்தனை அடிகள் நடந்தோம்? இது போன்ற பல சமாச்சாரங்கள் அதில் இருக்கச் சிறிதாக ஆர்வம் உருவானது. நாளை முதல் காலை நான் வாக்கிங் போகப் போகிறேன்? என்று வீட்டில் வந்து சொன்ன போது பெரிய நகைச்சுவை சமாச்சாரத்தைக் கேட்டது போல நான்கு பேர்களுமே சிரித்தார்கள். காரணம் நம் ஜாதகம் அப்படி. 

எனக்கே கொஞ்சம் சந்தேகமாக இருந்தது. ஆகா....... இவர்கள் சிரிக்கின்றார்களே? என்று காலையில் எழுந்து முதல் வேலையாகச் செய்ய வேண்டிய கடமைகளை முடித்து விட்டு சிறிய இலக்காகத் தீர்மானித்து விட்டு ஸ்போர்ட்ஸ் ட்ராக்கர் செயலியை இயக்கிவிட்டு என் நடைப்பயிற்சியைத் தொடங்கினேன். 

வீட்டுக்கருகே உள்ள பாதையைத் தீர்மானித்து விட்டு தினந்தோறும் வந்து செயலியைக் கவனித்த போது அதிகபட்சமாக நான்கு கிலோமீட்டர் என்று காட்டியது. அது சார்ந்த பல சமாச்சாரங்களைக் (எரித்த கலோரிஅளவுகள்) காட்டியது. வீட்டில் இதனைக் காட்டி பெருமையாகச் சொன்ன போது மற்றொரு பிரச்சனை உருவானது. எரித்த கலோரிக்குச் சமமாகக் குழந்தைகளுக்கு வாங்கி வைத்துள்ள திண்பண்ட சமாச்சாரங்களை எடுத்த விளாசித் தள்ள ஒவ்வொரு நாளும் குழந்தைகள் தூங்கும் போது மறக்காமல் தங்கள் திண்பண்ட சமாச்சாரங்களை எடுத்து ஒளித்து வைத்து விட்டே தூங்கத் தொடங்கினார்கள். மனைவி சிரிக்க என் நடைப்பயிற்சி சில வாரங்களில் முடிவுக்கு வந்தது. 

நாம் கற்ற அறிவு எந்த அளவுக்கு நம்மைத் தனிப்பட்ட வாழ்க்கையில் வளர்த்திருந்தாலும் நம்மிடம் உள்ள அடிப்படை அறிவு என்பது என்றுமே மாறாது. ஒவ்வொரு சமயத்திலும் அது வெளிப்பட்டே ஆகும். அது குடும்பம், வாழ்ந்த சூழ்நிலை, பழகும் மனிதர்கள் உருவாக்கும் தாக்கம், நமக்கு நாமே கற்பித்துக் கொள்ளும் நியாயங்கள். அதன் மூலம் உருவாகும் தர்க்க வாதங்கள் என்று நமக்கு நாமே நம்மையறியாமல் குறிப்பிட்ட மாற்ற முடியாத குணாதிசியங்களை வாழ் நாள் முழுக்க வளர்த்துக் கொண்டே வருகின்றோம். இதைத்தான் இன்று ஜாதியின் பெயரால் இழிவுப் படுத்துகின்றார்கள். மதத்தின் பெயரால் சுட்டிக் காட்டுகின்றார்கள். வணங்கும் கடவுளை வைத்துப் பரிகாசம் செய்கின்றார்கள். 

மொத்தத்தில் எல்லா இடங்களிலும் மனிதன் என்பவன் ஒவ்வொரு காலகட்டத்தில் தனித்தீவாகத் தான் இருக்கின்றான். கட்டாயத்தின் பேரில் குடும்பம் என்ற அமைப்பும், அதன் மூலம் உருவாகும் சமூக நிர்ப்பந்தம் நம்மை விலங்கிலிருந்து வித்தியாசப்படுத்திக் காட்டுகின்றது. இந்த வித்தியாசங்களை ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு செயல்பாடுகளிலும் நான் உணர்ந்தே வந்துள்ளேன். நான் குறுகிய காலம் நடைப்பயிற்சி என்ற பெயரில் நான் வேடிக்கை பார்த்த அந்த அதிகாலை சமூகத்தை உங்களிடம் தொடர் எழுத்து மூலம் பகிர்ந்து கொள்ளப் போகின்றேன்

நடை பயில்வோம்.............

20 comments:

 1. try cycling with some work. example buying vegetable or milk in bycycle.. will good

  ReplyDelete
  Replies
  1. கடந்த சில மாதங்களாக பல இடங்களுக்கு மிதி வண்டியில் தான் செல்கிறேன்.

   Delete
 2. நானும் அவ்வப்போது ஆரம்பிப்பேன்... பின்னர் நிறுத்திவிடுவேன்....

  ReplyDelete
 3. சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் வகைகளை ஒன்றரை ஆண்டுகளாக தொடுவதில்லை ..அதன் பலன்கள் ஒவ்வொன்றாக உணர்கிறேன் ..விலை கொஞ்சம் அதிகமானாலும் நான் வீட்டில் தயாரித்த நெய் பிறகு செக்கிலாட்டிய நல்லெண்ணெய் ,நெய் வெர்ஜின் ஆலிவ் எண்ணெய் மட்டுமே ..வெளி உணவுகள் உடலை மிகவும் பாதித்துவிட்டதால் தொட இயலாத நிலை ..நடைப்பயிற்சி நான் தினமும் 12000-14000 ஸ்டெப்ஸ் நடக்கிறேன் ..இங்கே அதிகாலை சமூகம் நாலுகால் பிராணிகளுடன் நடப்பவர்கள் மட்டுமே ..

  ReplyDelete
  Replies
  1. நானும் சில மாதங்களாக செக்கு எண்ணெய் தான் பயன்படுத்துகின்றோம்.

   Delete
 4. நடப்பது உடலுக்கு மட்டுமல்ல மனதிற்கும் ஒரு நல்ல பயிற்சி சிறு வயதில் பள்ளிக்கு சென்ற பொழுதில் இருந்து கல்லூரி முடிக்கும் வரை நடை நடை நடைதான். அப்போது மனனும் உடலும் மிக நல்ல நிலையில் இருந்தது ஆனால் வசதிகக்ள் வாய்ப்புகள் வந்துவிட்ட பொழுது இதெல்லாம் அடியோடு மாறிவிட்டது. நல்ல வேளை எங்கள் வீட்டில் நாய் குட்டி ஒன்றை வாங்கியதில் இருந்து வாழ்க்கையில் ஒரு பெருத்தமாற்றம் அதன் வரவால் ஒரு நாளைக்கு மூன்று வேளை மழையோ குளிரோ பனிபொழிவோ வெயிலோ நடைப்பழக்கம் ஆரம்பித்து இருக்கிறது நடக்கும் போது சிந்திக்க முடிகிறது அதனால் மன அழுத்தம் மிக குறைகிறது அதுமட்டுமல்ல நாயின் வரவால் வாழ்வில் மகிழ்ச்சி மீண்டும் வந்துள்ளது மன அழுத்தம் மிக குறைந்துள்ளது


  பலரும் சொல்லுவது மது அருந்தாதே இனிப்பு சாப்பிடாதே அதிகம் சாப்பிடாதே இப்படி பல காரணங்களை சொல்லி இப்படி எல்லாம் செய்தால் உடலுக்கு நல்லது இல்லை என்று சொல்லுவார்கள் ஆனால் நான் சொல்லுவது ஒன்றே ஒன்றை மட்டுமே உடலும் மனதும் நலம் பெற வீட்டிற்கு ஒரு நாயை வளருங்கள் அதன் பின் பாருங்கள் என்றுதான்  நாய்குட்டியின் வரவால் என் வாழ்க்கையில் மட்டுமல்ல என் மனைவி மற்றும் குழந்தையின் வாழ்க்கையில் மிகப் பெரிய மாற்றம் வந்துள்ளது

  ReplyDelete
 5. //நாம் கற்ற அறிவு எந்த அளவுக்கு நம்மைத் தனிப்பட்ட வாழ்க்கையில் வளர்த்திருந்தாலும் நம்மிடம் உள்ள அடிப்படை அறிவு என்பது என்றுமே மாறாது. ஒவ்வொரு சமயத்திலும் அது வெளிப்பட்டே ஆகும். அது குடும்பம், வாழ்ந்த சூழ்நிலை, பழகும் மனிதர்கள் உருவாக்கும் தாக்கம், நமக்கு நாமே கற்பித்துக் கொள்ளும் நியாயங்கள். அதன் மூலம் உருவாகும் தர்க்க வாதங்கள் என்று நமக்கு நாமே நம்மையறியாமல் குறிப்பிட்ட மாற்ற முடியாத குணாதிசியங்களை வாழ் நாள் முழுக்க வளர்த்துக் கொண்டே வருகின்றோம். // இது என்னவோ சத்தியமான உண்மை.

  வரவர உங்க எழுத்துகளில் முதிர்ச்சி நல்லாவே தெரிகிறது! மனம் நிறைந்த அன்பான வாழ்த்து(க்)கள்!

  ReplyDelete
 6. அடியேன் நடந்தே தீர வேண்டும்... ஆனால் பல நாட்கள் முடிவதில்லை...

  ReplyDelete
  Replies
  1. உங்கள் அலைச்சலுக்கு நடைபயிற்சி தேவையே இல்லை.

   Delete
 7. /ஒவ்வொரு சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் என்பதும் 90 சதவிகிதம் குரூட் ஆயிலில் இருந்து தயாரிக்கப்படுவது என்பது எத்தனை பேர்களுக்குத் தெரியும்?/ எனக்குத் தெரியவில்லை.இப்படி ஒரு உண்மை இருக்கும் பட்சத்தில் அதை ஏன் அனுமதிக்கிறார்கள் வேறு என்ன எண்ணைதான் வாங்குவது நடைப் பயிற்சி உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது இப்போதெல்லாம் இரண்டு கி. மீ. தூரம் நடப்பதே பெரிய பயிற்சியாக இருக்கிறது ஒரு காலத்தில் ஓட்டமும் வேக நடையுமாக சுமார் ஐந்து கிமீ தூரம்வரை சென்றதுண்டு

  ReplyDelete
  Replies
  1. தொடர்ந்து வரும் பதிவுகளில் நீங்க கேட்ட கேள்விகளுக்கு எழுத முயற்சிக்கின்றேன்.

   Delete
 8. நடைபயிற்சி - அருமை. தொடர்ந்து எழுதுங்கள். எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி திரு ஜோதிஜி

  ReplyDelete
 9. ஜோதிஜி பதிவு நல்ல சுவாரஸ்யமாக நகைச்சுவை இழையோட வருகிறது!

  நடைப்பயிற்சி என்பது உடலுக்கு மட்டுமல்ல. மனதிற்கும். அதிகாலை செல்லும் போது இயற்கை, சூரியன் ஒளி, மழைத்தூரல், அந்த வெளிச்சம், மனிதர்கள், என்று ஒவ்வொன்றும் நம் மனதிற்கு புத்துணர்ச்சி தருவாதாகத் தோன்றும். நானும் எனது 4கால் செல்லத்துடன் தான் நடைப்பயிற்ச்சி. அவள் வீட்டில் இருப்பதே லைவ்லியாக இருக்கும். என்னுடனேயே வந்துகொண்டிருப்பாள்...
  //நாம் கற்ற அறிவு எந்த அளவுக்கு நம்மைத் தனிப்பட்ட வாழ்க்கையில் வளர்த்திருந்தாலும் நம்மிடம் உள்ள அடிப்படை அறிவு என்பது என்றுமே மாறாது. ஒவ்வொரு சமயத்திலும் அது வெளிப்பட்டே ஆகும். அது குடும்பம், வாழ்ந்த சூழ்நிலை, பழகும் மனிதர்கள் உருவாக்கும் தாக்கம், நமக்கு நாமே கற்பித்துக் கொள்ளும் நியாயங்கள். அதன் மூலம் உருவாகும் தர்க்க வாதங்கள் என்று நமக்கு நாமே நம்மையறியாமல் குறிப்பிட்ட மாற்ற முடியாத குணாதிசியங்களை வாழ் நாள் முழுக்க வளர்த்துக் கொண்டே வருகின்றோம். // உண்மை உண்மை!!

  எண்ணெய் பற்றி நீங்கள் சொல்லியிருப்பது இப்போது பேசப்படுகிறதுதான். நாங்கள் நல்லேண்ணை செக்கெண்ணை..தேங்காய் எண்ணெயும் செக்கெண்ணை. வாங்குகிறோம். விலை பட்ஜெட்டிற்கு கொஞ்சம் கடினமாகத்தான் இருக்கிறது. ஆனால் அதுவும் நம்மூரில் எவ்வளவு தூரம் உண்மை என்று தெரியவில்லை...ஆர்கானிக் என்பதெல்லாம்...ஏனென்றால் இப்போது விற்கப்படும் எண்ணெய்களுக்கே ஐஎஸை தரக்கட்டுப்படு இல்லாமலா வரும்? அப்படி வந்தால் இந்த ஆர்கானிக், செக்கு எல்லாமும் அப்படித் தரக்கட்டுப்பாடு இல்லாமல் வருவதாக இருந்தால் எப்படி நம்ப முடியும்.?..நம் அரசு அடிப்படை உணவுப் பொருட்களைக் கூடத் தரக்கட்டுப்பாட்டு இல்லாமலா சந்தைக்கு அனுப்ப அனுமதிக்கிறது? எங்கேயோ இடிக்கிறதே...ஐல்லை ஐஎஸ்ஐ யே ஊழல் நிறைந்ததா...பல கேள்விகள் எழுகின்றன.

  கீதா

  ReplyDelete
  Replies
  1. ஊழலை மனதார எல்லோரும் விரும்பத் தொடங்கி விட்டனர். பிறகென்ன? இங்க எல்லாமே கவர்ச்சியின் அடிப்படையில் தான் வியாபாரமே நடக்கின்றது.

   Delete
 10. anupavam arumi. thodar nadai payerchee kaatelum oru naal aasanam oru naal theyanam oru naal nadai payerchee oru naal moochai nirvakethal ithu pool maatri seiya palan kooduthla kidikum.

  ReplyDelete
 11. நடை (பயிற்சி) தொடர்ந்திட வாழ்த்துகள்.

  ReplyDelete

கேட்பது தவறு. கொடுப்பது சிறப்பு.