Saturday, March 25, 2017

பெண் குழந்தைகளும் பயமும்


சென்ற பதிவான என் டைரிக்குறிப்புகளை வாசித்த நண்பர்கள் பல கேள்விகளை எழுப்பியிருந்தனர். பெண் குழந்தைகள் என்பதால் உருவாகும் பயம், மாறும் வாழ்க்கை குறித்த புரிதலற்ற தன்மை, எதிர்மறை சிந்தனைகள் என்று ஒவ்வொருவரும் அவரவர் பார்வையை விமர்சனங்களாகத் தந்து இருந்தனர். ஒவ்வொன்றுக்கும் தனித்தனி பதில் பதிவு எழுத உத்தேசம். ஆனால் இதற்கு முன்பு இந்தக் கவிதையை நண்பர்கள் பார்வைக்குப் பகிர்கின்றேன். 

சமூகவலைத்தளங்கள் பலருக்கும் அவர்களின் தனிப்பட்ட திறமைகளை நொடிப் பொழுதில் உலகம் முழுக்கக் கொண்டு போய்ச் சேர்த்துக் கொண்டிருக்கின்றது. ஆனால் எழுதியவர் யார் என்றே தெரியாமல். பகிர்பவர்கள் கவனமாக எழுதியவர்களின் பெயரை தவிர்த்து விடுகின்றனர். எழுதியவருக்கே வந்து சேரும் போது வாசித்த பின்பு அழுவதா? சிரிப்பதா? என்று தெரியாமல் தவிக்கக்கூடும். இந்தக் கவிதையைச் சில வாரங்களுக்கு முன்பு நான் முகநூல் வழியாக வாசித்த போது பிரமித்துப் போனேன். கல்லூரி காலத்திற்குப் பின்பு கவிதை என்ற வஸ்துவை நான் சீண்டியதில்லை. கவிதை என்றால் காதல் என்பது மட்டும் தான் என்று மாறிய கொடுமையினால் அந்தப் பக்கம் தலை வைத்துப்படுப்பதில்லை. 

அதையும் தாண்டி இந்தக் கவிதை சமூகம், பெண், ஆண், குழந்தைகள், வாழ்க்கை, மனம், வாழ்க்கைத் தடுமாற்றம், புத்தி மாறுதல், சுய பச்சாதாபம், கழிவிரக்கம், பாவத்தைக் கரைத்தல், குழந்தைகளின் உலகம் போன்றவற்றை அழகாக எடுத்துச் சொல்கின்றது. 

எழுதியவர் யார் என்று தெரியவில்லை என்று பகிர்ந்தவர் எழுதியிருந்தார். மற்ற தளங்களில் நாம் வேகமாகச் செயல்பட்டாலும் நாம் எழுதிய பழைய விசயங்களை அவ்வளவு எளிதாக எடுத்து விட முடிவதில்லை. பதிவுலகத்தில் தேவையான சமயத்தில் தேவையானதை நாம் எடுத்துக் கொள்ள முடியும். 

முகநூல், டிவிட்டர், கூகுள் ப்ளஸ் ல் பழைய பதிவுகளைத் தேடிப் பெற முடிவதில்லை. இதன் காரணமாக நண்பர்களின் கேள்விகளுக்கு அடுத்தடுத்த பதிவுகளில் பதில் அளிப்பதற்கு முன்பு இந்தக் கவிதையை இங்கே என் விருப்பத்தின் பொருட்டு இங்கே பகிர்கின்றேன். இந்தக் கவிதையை எழுதிய நண்பருக்கு என் நன்றி.

வாழைத்
தோட்டத்திற்குள்
வந்து முளைத்த...

காட்டுமரம் நான்..!

எல்லா மரங்களும்
எதாவது...
ஒரு கனி கொடுக்க ,

எதுக்கும் உதவாத...
முள்ளு மரம் நான்...!

தாயும் நல்லவள்...
தகப்பனும் நல்லவன்...

தறிகெட்டு போனதென்னவோ
நான்...

படிப்பு வரவில்லை...
படித்தாலும் ஏறவில்லை...

இங்கிலீஷ் டீச்சரின்
இடுப்பைப் பார்க்க...

இரண்டு மைல் நடந்து
பள்ளிக்கு போவேன் .

பிஞ்சிலே பழுத்ததே..
எல்லாம் தலையெழுத்தென்று
எட்டி மிதிப்பான் அப்பன்...

பத்து வயதில் திருட்டு...
பனிரெண்டில் பீடி...

பதிமூன்றில் சாராயம்...
பதினாலில் பலான படம்...

பதினைந்தில்
ஒண்டி வீட்டுக்காரி...
பதினெட்டில் அடிதடி...

இருபதுக்குள் எத்தனையோ...
பெண்களிடம் விளையாட்டு...

இரண்டு ,மூன்று முறை கருக்கலைப்பு...

எட்டாவது பெயிலுக்கு...
ஹெட்மாஸ்டர் வேலையா கிடைக்கும் ?

மண்லாரி ஓட்டினால் லோடுக்கு...
நூறு தருவார்கள .

வாங்கும் பணத்துக்கு...
குடியும் கூத்தியாரும் என...

எவன் சொல்லியும் திருந்தாமல்...
எச்சிப் பிழைப்பு பிழைக்க ...

கை மீறிப்
போனதென்று...
கால்கட்டுக்கு ஏற்பாடு செய்தனா் .

வேசிக்கு காசு
வேணும் ...

வருபவள் ஓசிதானே...

மூக்குமுட்டத் தின்னவும்...
முந்தானை விரிக்கவும்...
மூன்று பவுனுடன் ...

விவரம் தெரியாத ஒருத்தி...
விளக்கேற்ற வீடு வந்தாள் .

வயிற்றில் பசித்தாலும்...
வயிற்றுக்குக் கீழ் பசித்தாலும்...
வக்கணையாய் பறிமாறினாள்...

தின்னு கொழுத்தேனே தவிர...
மருந்துக்கும் திருந்தவில்லை...

மூன்று பவுன் போட
முட்டாப் பயலா நான்...

இன்னும் ஐந்து வேண்டுமென்று ,
இடுப்பில் மிதித்து அனுப்பி வைக்க ...

கறவை மாட்டை சந்தைக்கு அனுப்பி ,

நான் கட்டினவளை வீட்டுக்கு அனுப்பினான் ,
சொந்தம் விட்டுப்போகாமல் இருக்க...

மாமனாரான மாமன்...!

பார்த்து வாரமானதால்...
பசிக்கிறதென்று கைப்பிடிக்க..,

தள்ளிப் போனதென்று தள்ளி விட்டாள்...
சிறுக்கிமவ .

இருக்கும் சனி...
போதாதென்று
இன்னொரு சனியா..?

மசக்கை என்று சொல்லி...
மணிக்கொரு முறை வாந்தி..,

வயிற்றைக் காரணம் காட்டி...
வாய்க்கு ருசியாய் சமைப்பதில்லை..,

சாராயத்தின் வீரியத்தால்...
சண்டையிட்டு வெளியே அனுப்ப..,

தெருவில் பார்த்தவரெல்லாம்
சாபம் விட்டுப்
போவார்கள் .

கடைசி மூன்று மாதம்...

அப்பன் வீட்டுக்கு
அவள் போக..,
கறிவேப்பிலைக்காரி ஒருத்தி...

வாசனையாய் வந்து போனாள்..,

தர்ம ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளதாக...
தகவல் சொல்லியனுப்ப..,

ரெண்டு நாள் கழித்து...
கடமைக்கு எட்டிப் பார்த்தேன்...

கருகருவென
என் நிறத்தில்...

பொட்டபுள்ள..!

எவன் கேட்டான் இந்த மூதேவியை... ?

'கள்ளிப் பால் கொடுப்பாயோ ...
கழுத்தை திருப்புவாயோ...
ஒத்தையாக வருவதானால் ...
ஒரு வாரத்தில்
வந்து விடு '

என்று சொல்லி திரும்பினேன் .

ஆறு மாதமாகியும் அவள் வரவில்லை...

அரசாங்க மானியம்
ஐயாயிரம்...
கிடைக்குமென்று

கையெழுத்துக்காகப்
பார்க்கப் போனேன் ,

கூலி வேலைக்குப் போனவளைக்
கூட்டி வரவேண்டி...

பக்கத்து வீட்டு பாப்பா ஓடிச் செல்ல...

ஆடி நின்ற ஊஞ்சலில்...
அழுகுரல் கேட்டது..,

சகிக்க முடியாமல்
எழுந்து ...
தூக்கினேன் ...

அதே அந்த பெண்
குழந்தை..!

அடையாளம் தெரியவில்லை ...
ஆனால் அதே கருப்பு...

கள்ளிப் பாலில்
தப்பித்து வந்த அது ,
என் கைகளில் சிக்கிக் கொண்டது..,

வந்த கோபத்திற்கு...
வீசியெறியவே தோன்றியது...

தூக்கிய நொடிமுதல்...
சிரித்துக் கொண்டே இருந்தது,

என்னைப் போலவே...
கண்களில் மச்சம்,

என்னைப் போலவே
சப்பை மூக்கு,

என்னைப் போலவே
ஆணாகப்..,
பிறந்திருந்தால் இந்நேரம் இங்கிருக்க
வேண்டியதில்லை...,

பல்லில்லா வாயில்...
பெருவிரலைத் தின்கிறது,

கண்களை மட்டும்..,
ஏனோ சிமிட்டாமல் பார்க்கிறது,

ஒரு கணம் விரல் எடுத்தால்...
உதைத்துக் கொண்டு அழுகிறது,

எட்டி... விரல் பிடித்துத்..
தொண்டை வரை வைக்கிறது,

தூரத்தில்
அவள் வருவது கண்டு...
தூரமாய் வைத்து விட்டேன்...

கையெழுத்து வாங்கிக்கொண்டு...
கடைசி பஸ்ஸுக்கு திரும்பி வருகிறேன்,

முன் சீட்டில் இருந்த குழந்தை...

மூக்கை எட்டிப் பிடிக்க
நெருங்கியும்...
விலகியும் நெடுநேரம்...

விளையாடிக் கொண்டு இருந்தேன்!

ஏனோ அன்றிரவு ...
தூக்கம் நெருங்கவில்லை,

கனவுகூட
கருப்பாய் இருந்தது,

வெளிச்சம் வரும்வரை காத்திருந்தேன்...

போட்ட கையெழுத்துப் பொருந்தவில்லை...
என்ற பொய்த்தனத்தோடு ,

இன்னொரு கையெழுத்துக்கு...
மீண்டும் சென்றேன்,

அதே கருப்பு,
அதே சிரிப்பு,

கண்ணில் மச்சம்,
சப்பை மூக்கு...

பல்லில்லா வாயில்
பெருவிரல் தீனி...

ஒன்று மட்டும் புதிதாய் ...

எனக்கும் கூட
சிரிக்க வருகிறது ...

கடைசி பஸ், ஆனால் பேருந்தில்...
எந்த குழந்தையும் இல்லை .

வீடு நோக்கி நடந்தேன்,

பாதி வழியில் கறிவேப்பிலைகாரி...

கைப் பிடித்தாள்
உதறிவிட்டு நடந்தேன்...

தூக்கம் இல்லை
நெடுநேரம்...

பெருவிரல்
ஈரம் பட்டதால் ...
மென்மையாக
இருந்தது ...

முகர்ந்து பார்த்தேன் ....

விடிந்தும் விடியாததுமாய்...
காய்ச்சல் என்று சொல்லி...

ஊருக்கு
வரச் சொன்னேன்,

பல்கூட விளக்காமல் ...
பஸ் ஸ்டேண்டுக்கு சென்று விட்டேன்,

பஸ் வந்ததும் லக்கேஜை
காரணம் காட்டி...
குழந்தையைக் கொடு என்றேன் !

பல்லில்லா வாயில் பெருவிரல் !

இந்த முறை பெருவிரலைத் தாண்டி... ஈரம் எங்கோ
சென்று கொண்டு இருந்தது...

தினமும் என் மீது படுத்துக்கொண்டு...
பொக்கை வாயில் கடிப்பாள்,

அழுக்கிலிருந்து
அவளைக் காப்பாற்ற...

நாளுக்கு நாலைந்து முறை குளிப்பேன்,

பான்பராக் வாசனைக்கு...
மூக்கைச் சொரிவாள் ,விட்டு விட்டேன் ...

சிகரெட் ஒரு முறை..,
சுட்டு விட்டது
விட்டு விட்டேன்...

சாராய வாசனைக்கு...
வாந்தியெடுத்தாள் ...விட்டு விட்டேன்,

ஒரு வயதானது ...

உறவுகளெல்லாம்...
கூடி நின்று ,

'அத்தை சொல்லு '
'மாமா சொல்லு '
'பாட்டி சொல்லு '
'அம்மா சொல்லு 'என்று...

சொல்லிக் கொடுத்துக் கொண்டு இருந்தார்கள்...

எனக்கும் ஆசையாக இருந்தது,
'அப்பா 'சொல்லு
என்று சொல்ல,

முடியவில்லை ......
ஏதோ என்னைத் தடுத்தது,

ஆனால் அவளை எதுவும் தடுக்கவில்லை...

அவள் சொன்ன முதல் வார்த்தையே...

'அப்பா'தான்!

அவளுக்காக எல்லாவற்றையும்...
விட்ட எனக்கு ,

அப்பா என்ற
அந்த வார்த்தைக்காக...

உயிரைக்கூட விடலாம் என்று தோன்றியது,

அவள் வாயில் இருந்து வந்த..,

அந்த வார்த்தைக்காக மீண்டும் பிறந்தேன்,

இந்த சாக்கடையை...
அன்பாலேயே கழுவினாள்...

அம்மா சொல்லித் திருந்தவில்லை,

அப்பா சொல்லித் திருந்தவில்லை ,
ஆசான் சொல்லித் திருந்தவில்லை ,

நண்பர்கள் சொல்லித் திருந்தவில்லை ,
நாடு சொல்லியும் திருந்தவில்லை,

முழுசாய் மூன்று வார்த்தை பேச வராத ...

இந்த முகத்தை பார்த்து திருந்தி விட்டேன்..

வளர்ந்தாள்..,
நானும் மனிதனாக வளர்ந்தேன்...

படித்தாள்,
என்னையும் படிப்பித்தாள்...

திருமணம்
செய்து வைத்தேன் ,

இரண்டு குழந்தைகளுக்குத் தாயானாள்,

இரண்டு குழந்தைகளுமே...
பெரியவர்களாய் வளர்ந்து விட்டார்கள்,

நானும்கூட தாத்தாவாகி விட்டேன் ,

என்னை மனிதனாக்க...
எனக்கே மகளாய் பிறந்த...

அந்த தாய்க்காகக் காத்திருக்கிறது ...

#இந்த_கடைசி_மூச்சு..!

ஊரே ஒன்று கூடி..,
உயிர்த் தண்ணீர் விட்டுக் கொண்டிருக்கிறார்கள்,

எனக்குத் தெரியாதா என்ன?

யாருடைய பார்வைக்கப்புறம்...

பறக்கும் இந்த உயிரென்று?

வானத்தை பார்த்துக் காத்திருக்கிறேன்...

......................வாசலில் ஏதோ சலசலப்பு,

நிச்சயம் என் மகளாகத்தான் இருக்கும்..,

என் பெருவிரலை யாரோ
தொடுகிறார்கள் ,

அதோ அது அவள்தான்,
மெல்ல சாய்ந்து ...

என் முகத்தை பார்க்கிறாள் ...

என்னைப் போலவே...

கண்களில் மச்சம்,
சப்பை மூக்கு,
கருப்பு நிறம்,
நரைத்த தலைமுடி,
தளர்ந்த கண்கள்,

என் கைகளை முகத்தில் புதைத்துக் கொண்டு,

'அப்பா அப்பா' என்று குமுறிக் குமுறி அழுகிறாள்,

அவள் எச்சில்
என் பெருவிரலிட,

உடல் முழுவதும் ஈரம் பரவ...

ஒவ்வொரு புலனும் துடித்து...

#அடங்குகிறது....................
.......................

"தாயிடம் தப்பி வந்த
மண்ணும்...
கல்லும்கூட ,

மகளின் ..
கை பட்டால் காந்தச் சிலையாகும்! "

29 comments:

 1. இந்தக் கவிதையை சில மாதங்கள் முன்னர் முகநூலில் வாசித்தேன் அண்ணா...
  ரொம்ப நேரத்துக்கு அப்படியே உக்காந்துட்டேன்... என்ன கவிதை இது...
  தேவதைகளைப் பெற்றவர்கள் பாக்கியசாலிகள்தான்...
  எங்க வீட்டு தேவதைக்கு நாளை (26 மார்ச்) பிறந்தநாள்.....
  வலைத்தள இணைப்புக் கொடுத்தமைக்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. என் வாழ்த்துக்களை தெரியப்படுத்துங்க குமார்.நல்வாழ்த்துகள்.

   Delete
 2. "தாயிடம் தப்பி வந்த
  மண்ணும்...
  கல்லும்கூட ,

  மகளின் ..
  கை பட்டால் காந்தச் சிலையாகும்! "

  மனதை அப்படியேப் புரட்டிப் போட்ட கவிதை ஐயா
  படிக்கப் படிக்க கலங்காத நெஞ்சம் கூட கலங்ககும்

  ReplyDelete
 3. அற்புதமான ரசிகர் சார். இதை கவிதை சிறுகதை என்று சொல்லலாம். சிறப்பான பகிர்வின் மூலம் கண்கலங்க வைத்து விட்டீர்கள் . இதனை எழுதியவருக்கு பாராட்டுகள் போய்ச் சேரட்டும்

  ReplyDelete
  Replies
  1. தொடக்கத்தில் இதனை முகநூலில் படித்துவிட்டு தேவைப்படும் என்று பகிர்ந்து இருந்தேன். மறுபடியும் இதனை கண்டுபிடிப்பதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது. அதனால் தான் நம் நண்பர்கள் வட்டத்திற்கு போய்ச் சேர வேண்டும் என்று இதனை வலைதளத்தில் பகிர்ந்தேன். நன்றி.

   Delete
 4. கர்வத்துடன் சொல்லுடா நான் பெண் குழந்தைக்கு தகப்பன்னு .......

  ReplyDelete
 5. சில மாதங்கள் முன்னர் படித்தேன்.நெடுநேரம் அசை ோடவைத்த உணர்ச்சி கவிதை

  ReplyDelete
  Replies
  1. இன்று வரையிலும் ஒவ்வொரு வரியின் தாக்கமும் அதிக சிந்தனையை தந்து கொண்டேயிருக்கின்றது,

   Delete
 6. கட்டுரையையும் கவிதையையும் படித்தேன். இந்த கவிதையைப் பாடியவர் யார் என்று தெரிந்து கொள்ளாமலேயே, பலரும் பகிர்ந்துள்ளனர். சங்க இலக்கியத்தில் பாடியவர் பெயர் இன்னார் என்று தெரியவில்லை என்று சில பாடல்களைப் பற்றி குறிப்பிடுவார்கள். இன்றைய வாட்ஸ்அப், ஃபேஸ்புக் காலத்திலும் அது தொடர்வது வருத்தமான விஷயம்தான். எழுதியவரே நான்தான் என்று சொன்னாலும் நிரூபிக்க வேண்டிய காலமாகிவிட்டது. – இதன் தொடர்ச்சியை ஆவலோடு எதிர் பார்க்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. உண்மை தான். மதுரைத்தமிழன் எழுதிய வரிகள் அனைத்தும் உண்மை.

   Delete
 7. தறிகெட்டடு போன இந்த முரட்டு தந்தையின் இதயம் கல்லாக இருந்தாலும் அதனுள் சிறிது ஈரம் என்பது இருந்திருப்பதால்தான் இந்த பெண் குழந்தை வளர்ந்து இருக்கிறது கல்லும் இங்கு மணலாகி ஒரு உயிர் வளர இந்த பெண் குழந்தை காரணமாயிருக்கிறது


  பெரும்பாலான ஆண்கள் பெண்களை ஒரு போகப் பொருளாகவே பார்த்து வரும் சமுகத்தில் அந்த ஆண்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறக்கும் போதுதான் பெண் ஒரு போகப் பொருள் அல்ல என்ற உண்மை புரிகிறது  பொதுவாகவே நாம் எழுதும் கதைகளிலும் கவிதைகளிலும் சினிமாக்களிலும் குழந்தையை அதிலும் பெண்குழந்தையை வெறுக்கும் பெற்றோர்கள் அல்லது தந்தைகள் இறுதியில் அவர்கள் பெண் குழந்தையை நேசிப்பதாகவே முடித்து இருப்ப்பார்கள் ஒரு வேளை குழந்தைகளை நேசிக்கும் நம்மை போல ஒரு ஜெனரேஷனை சார்ந்தவர்களாக இருப்பார்கள் சிலர் இந்த ஜெனரேஷனையும் சார்ந்தவர்களாகவும் இருக்க கூடும் இதை நான் சொல்லக்காரணம் சமீபகாலமாக நான் சந்தித்தவர்க்ளை சொல்லாம் இந்த புதிய தலைமுறைகள் குழந்தைகளை நேசிக்காதவர்களாகவே இருக்கிறார்கள் அவர்கள் நேசிப்பது எல்லாம் வேலை வேலை தான்
  இப்படி பலரை நான் நேரிலேயே பார்த்து வேதனைப்பட்டு இருக்கிறேன் அதிலும் ஒரு தமிழ்இளம்பெண்னை கடந்த 5 வருடங்களாக பார்த்து வருகிறேன் அந்த பெண் என் நண்பரின் அலுவலகத்தில் வேலை பார்க்கும் தமிழ்பெண் பல குடும்ப பார்ட்டிகளில் பல முறை சந்திட்து இருக்கிறேன் அவருக்கு குழந்தைகள் மீது அவ்வளவு இஷடம் கிடையாது ஒரு வேளை அவர் குழந்தை பெற்றால் மாறக் கூடும் என்பதால் அவரிடம் சொல்லியும் விட்டேன் அதற்கு அந்த பெண் சொன்ன பதில் எனக்கு கேரியர்தான் முக்கியம் குழந்தை அல்ல இது அந்த பெண்ணிற்கும் மட்டுமல்ல அந்த பெண்ணின் கணவருக்கும்தான் பல சம்யங்களில் இந்த பெண்ணிண் கணவர் வேறு நாடுகளுக்கு சென்று ஆண்டுகணக்கில் வேலை பார்க்கிறார். கேட்டால் கேரியர்தான் முக்கியம் என்கிறார்கள் இது போல பலரை நான் அதிகமாகவே பார்த்து வருகிறேன்

  ReplyDelete
  Replies
  1. உண்மை மதுரைத் தமிழன். இப்போதைய பெண்களுக்குக் குடும்பம் அதாவது குழந்தை பெற்றுக் கொளல், அன்புடன் வளர்த்தல் குடும்ப அமைப்பு போன்றவற்றில் ஈடுபாடு இல்லாமல்தான் இருக்கிறார்கள். கேரியர் என்று. மட்டுமல்ல கேரியர் என்று தன் வாழ்க்கையையும் தொலைப்பதும் அதிகமாகி வருகிறது. நான் இங்கு சொல்ல நினைத்ததை என்னடா இது மதுரைத் தமிழன் இம்மாம் பெரியகருத்து அதுவும் மூன்று பகுதியாகக் கொடுத்திருக்கிறாரே என்று வாசிக்கும் போது அட நாம் சொல்ல நினைத்த கருத்து என்று... இதைப் பற்றி ஒருகதை நான் எழுதுகின்றேன்....மிக அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள்

   கீதா

   Delete
 8. இந்த கவிதையை நானும் ஏற்கனவே படித்து இருக்கிறேன். இந்த மாதிரி கவிதை கட்டுரையை பகிரும் பலர் அதை எழுதியவர் பேரை கட் செய்துவிட்ட்டு பகிர்கிறார்கள் அடுத்தவரின் சிந்தனையை தம் சிந்தனையாக வெளிப்படுத்துவதில் இவர்களுக்கு என்ன போலி ஆனந்தமோ அடுத்தவர்களின் சிந்தனைக்கு தான் உரிமை கொண்டாடுவது அசிங்கம் என்று தெரியாமல் வளர்ந்து இருக்கிறார்கள்


  மேலும் பேஸ்புக்கில் இருக்கும் பல பிரபலங்களை பார்ட்து இருக்கிறேன் அவர்கள் இப்படித்தான் பலரின் பதிவுகளை பகிரும் போது எழுதியவர் பெயர் தெரிந்து இருந்தாலும் தங்களின் தளத்தில் அவர்களது பெயரை போட்டால் எங்கே அவருக்கு அந்த கிரெடிட் போய் சேர்ந்து அவருக்கு பாலோவர் அதிகம் சேர்ண்டு விடுவார்களோ என்று கருதி பெயரை கட் செய்து படித்தில் பிடித்தது என்று போடுகிறார்கள் சிலர் இன்னும் கொஞ்சம் உஷாராகி பபி என்று போடுகிறார்கள் பபி என்றால் படித்தைல் பிடித்ததாம் என்னவொரு மனநிலை இவர்களுக்கு.

  என்னை பொறுத்தவரை தரமாக கவிதை கட்டுரை கதை போன்றவைகளை எழுதுபவர்கள் தாங்கள் எழுதுவதை முதலில் வலைத்தளங்களில் பகிர்ந்துவிட்டு அதன்பின் மற்ற சமுக தளங்களில் பதிய வேண்டும் என்ற ஒரு விழிப்புணர்வு வேண்டும் ஆனால் பலர் இந்த வலைத்தளம் பற்றிய அறியாமலே இருக்கிறார்கள் அதனால் தாங்கள் எழுதுவதற்கு தாங்கள் சொந்த கொண்டாடும் உரிமையை இழந்து தாங்கள்தான் அந்த கருத்திற்கு சொந்த்காரார்கள் என்பதை நிறுபிக்க இயலாமல் இருக்கிறார்கள்  என்னை பொறுத்த வரையில் பேஸ்புக்கில் டிவிட்டரில் என்னை கவர்ந்தது ஏதும் இருக்குமென்றால் அவர்களின் பெயரை வெளியிட்டு இதை அவர்கள் பேஸ்புக்கில் எழுதியது டிவிட்டரில் எழுடியது வலைத்தளங்களில் எழுதியது என்றும் சொல்லுவேன் நேரம் கிடைக்கும் போது அவர்களின் அக்கவுண்டிற்கும் லிங்கும் தருவேன் இதை நெடுநாளாக நான் கடை பிடித்து இருக்கிறேன் ஆரம்பகாலங்களில் எழுதியவரிடமே அனுமதி கேட்டு பெறுவேன் சில சமயங்களில் அனுமதி கிடைக்க மிகவும் தாமதம் ஆகிவிடும் அந்த தாமத்தில் அந்த விசயம் ஆறிம் போன கஞ்சி போல ஆகிவிடும் அதனால் இப்போது எல்லாம் நான் அவர்களின் பதிவை அவர்களின் பெயரோடு வெளியிட்டு அதற்கான லிங்கை அவர்களிடம் அனுப்பி உங்களுக்கு ஆட்சேபணை இருந்தால் அதை நீக்கிவிடுகிறேன் என்று அனுப்புவேன் அதன் பின் எவரும் ஆட்சேபணை சொல்லுவது கிடையாது

  ReplyDelete
 9. வலைதளத்திற்கும் பேஸ்புக் போன்ற சமுகதளங்களுக்கும் உள்ள முக்கிய வேறுபாடுகள் என்னவென்றால் நீங்கள் எழுதும் கருத்தை பிடிக்காதவர்கள் ஒன்று சேர்ந்து உங்களின் பேஸ்புக் போன்ற சமுகதளங்களை ரிப்போர்ட் செய்து எளிதில் முடக்கிவிடுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் அதன் பின் நாம் போராடிதான் அந்த அக்கவுண்டை திரும்ப பெற முடியும் ஆனால் அப்படி செய்வது போல வலைத்தளங்களை எளிதில் முடக்க முடியாது வலைத்தளங்களை முடக்குவது என்பது அரசாங்கத்தால்மட்டுமே முடியும்  பேஸ்புக் அக்கவுண்டை எளிதில் முடக்குவது மாதிரி கூகுல் அக்கவுண்டை எளிதில் முடக்க முடியாது அதுமட்டுமல்ல கூகுல் மிக எளிதில் அக்கவுண்ட் ஹோல்டர் யார் என்ற தகவலை அரசாங்கட்திற்கு எளிதில் தந்துவிடாது அல்லது அரசாங்கம் அந்த அக்கவுண்ட ஹோல்டர் சமுகத்திற்கு கெடுவிளைவிக்கும் தகவலை செய்கிறார் என்று நிருபித்தால் ஒழிய அது தகவலை தராது

  ReplyDelete
  Replies
  1. ஆச்சரியமாக இருக்கு. வெளுத்து வாங்கீட்டீங்க.

   Delete
  2. கரெக்ட்டாகச் சொன்னீர்கள் மதுரை தமிழன். இந்தத் தகவலை இங்கு எல்லோரும் அறியும் வண்ணம் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி. மட்டுமல்ல உங்கள் தளத்திலும் பதியுங்கள் மதுரைத் தமிழன் பலருக்கும் இது சென்றடையும் என்பதால் இந்த வேண்டு கோள். அது போன்று இதற்கு முந்தைய கருத்திலும் நீங்கள் சொல்லியிருக்கும் வரிகள் //என்னை பொறுத்தவரை தரமாக கவிதை கட்டுரை கதை போன்றவைகளை எழுதுபவர்கள் தாங்கள் எழுதுவதை முதலில் வலைத்தளங்களில் பகிர்ந்துவிட்டு அதன்பின் மற்ற சமுக தளங்களில் பதிய வேண்டும் என்ற ஒரு விழிப்புணர்வு வேண்டும் ஆனால் பலர் இந்த வலைத்தளம் பற்றிய அறியாமலே இருக்கிறார்கள் அதனால் தாங்கள் எழுதுவதற்கு தாங்கள் சொந்த கொண்டாடும் உரிமையை இழந்து தாங்கள்தான் அந்த கருத்திற்கு சொந்த்காரார்கள் என்பதை நிறுபிக்க இயலாமல் இருக்கிறார்கள்// இதற்காகவும் உங்கள் தளத்திலும் இதை பதிவாக எழுதுங்கள் சகோ...எல்லோருக்கும் உதவியாக இருக்கும்...

   கீதா

   Delete
 10. நல்வாழ்த்துகள்.with tears..

  ReplyDelete
 11. நீங்கள் பகிர்ந்திருக்கும் கவிதை ஏற்கனவே வாசித்து மனதைத் தாக்கிய கவிதை. உண்மையை தோலுரித்துக் காட்டியிருக்கும் கவிதை. உண்மை சுடும்தானே. அந்த யதார்த்தம் மனதைத் தாக்கியது. எப்படி அழகாக எழுதியிருக்கிறார் அதை எழுதியவர்...!!!பெண்குழந்தைகளைப் பெற்றவர்கள் பாக்கியசாலிகள்! அந்த பாக்கியசாலிகளில் நானும் ஒருவன்!!

  அருமை.கவிதையை அதை இங்கு நீங்கள் பகிர்ந்தமைக்கும் மிக்க நன்றி.

  கீதா: மேற் சொன்ன கருத்தே எனதும் ஒரு வரியைத் தவிர....பெண் குழந்தை உள்ள பாக்கியசாலிகளில் நான் இல்லை!!!

  அருமையான பகிர்வு ஜி!

  ReplyDelete
 12. அருமை தோழர்

  ReplyDelete
 13. கவிதை ஏற்கனவே வாசித்திருக்கேன் ..எத்தனை முறை வாசித்தாலும் மனதை கலங்கடிக்கும் வரிகள் ..பெண்களுக்குரிய இயல்பான குணம் அன்பு செலுத்துவது அது பிறந்து சில மாதங்களே ஆன இந்த பெண்குழந்தையின் அன்பு ஒரு பிசாசான மூர்க்கனையும் மாற்றியிருக்கே !! பெண் குழந்தைகள் fairy wand உடன் வரும் தேவதைகள் என்பது உண்மையே .மீண்டும் வாசிக்கத்தந்தமைக்கு நன்றிகள் .
  முகப்புத்தகத்தில் பகிர்வதை தேட மிக கஷ்டம் நான் முன்பு சில நேரம் பதிவின் சுட்டியை அல்லது முழு பகிர்வையே பேஸ்ட் செய்து மெயிலில் வைப்பேன் ..

  ReplyDelete
 14. பகிர்ந்த விதம் அருமை. பாராட்டுகள்.

  ReplyDelete
 15. வாழ்க்கையின் போக்கில் ஏதோ ஒன்று வாழ்க்கையின் தளத்தையே மாற்றி விடும் பெண்குழந்தை என்றாலேயே வெறுத்து உமிழும் பலர் மத்தியில் ஒரு சிறு பெண்குழந்தை ஒருத்தனின் சிந்தனைப் போக்கையே மாற்றி இருப்பதை அழகாகச் சொல்லிச் செல்லும் பதிவு பகிர்வுக்கு பாராட்டுகள்

  ReplyDelete
 16. நா.ன்முகப்புத்தகத்தில் படித்ததாக நிணைவு..அப்போதே அதற்கு பதிலும் எழுதினேன். அது இதுதான்..பெற்ற அப்பனின் முகம் பார்க்க கொடுத்து வைக்காதவன் நான் இருந்தாலும் என் சிற்றறிவில் ஆயிரம் அப்பன்களில் தப்பிப்பிழைத்த அப்பனாக அவன்” என்று

  ReplyDelete

கேட்பது தவறு. கொடுப்பது சிறப்பு.