Sunday, March 12, 2017

(அவசியம்) வாசிக்க வேண்டிய பேட்டி


என்னுடைய கட்டுரைகள் நடுநிலையானவை அல்ல! - ப.திருமாவேலன் நேர்காணல்

ஜூனியர் விகடன் ஆசிரியர், அரசியல் விமர்சகர், 'பெரியோர்களே... தாய்மார்களே!', 'ஊழலுக்கு ஒன்பது வாசல்' போன்ற நூல்களையும் எண்ணற்ற அரசியல் கட்டுரைகளையும் எழுதியவர். அவருடனான ஒரு சந்திப்பிலிருந்து...

அரசியல் கேள்விகளுக்குச் செல்லும் முன், உங்களைக் குறித்து ஒரு கேள்வி. ஒரு அரசியல் விமர்சகராக நீங்கள் ஆகவேண்டும் என்பதற்கான தூண்டுகோல் எது? ஒருவர் அரசியல் விமர்சகர் ஆகவேண்டும் என்றால் எவ்வாறு தன்னைத் தயார் செய்துகொள்ள வேண்டும்?

அதை தீர்மானித்ததும் அரசியல்தான். அரசியல் ஆர்வம், சமூக அக்கறை, தமிழ்ப் பற்று என்று செல்ல செல்ல, ஒருகட்டத்தில் நாம் சார்ந்த இனத்தின் பயன்பாட்டிற்காக நாம் என்ன செய்கிறோம், என்ற அடிப்படையான கேள்வி எழும். அந்தப் புள்ளியில்தான் நமக்கான அரசியல் உதயமாகிறது. அந்த அரசியல் ஆர்வம்தான் என்னை அரசியல் விமர்சனம் நோக்கிச் செலுத்தியது.

அடிப்படையாக அந்த ஆர்வம் ஒரு அரசியல் விமர்சகருக்கு வேண்டும். அடுத்ததாக, அந்த ஆர்வத்தை செயலாக மாற்றும் ஈடுபாடு இருக்க வேண்டும். எல்லோருக்கும் ஒரு அரசியல் இருக்கிறது. அரசியல் பற்றி எவரும் பேசலாம்; ஆனால் அந்த அரசியலின் பன்முகத்தன்மையை அறிய மெனக்கெட வேண்டும். அரசியல் ஒரு கடல்; தகவல்கள் கொட்டிக்கொண்டே இருக்கும், அதுபோக இன்னும் கூடுதலாகத் தெரிந்துகொள்ள வேண்டும், என்ற முனைப்பு இருந்துகொண்டே இருக்க வேண்டும். நிறைய நேரம் ஒதுக்கி நூலகங்களுக்குச் சென்று வாசிக்க வேண்டும்.

இப்பொழுதும் நான் எழுதும்போது திடீரென்று நான் பதினைந்து பதினாறு வயதில் வாசித்தவையெல்லாம் நினைவிற்கு வந்து போகும். நமக்கான வேர் என்பது நம் இளவயது வாசிப்புதான். என் தந்தை ஒரு தமிழாசிரியர், அதனால் வீட்டில் தமிழ்ப்புத்தகங்கள் நிறைய வாசிக்கக் கிடைத்தன. அவர் திருவள்ளுவர் மன்றம் என்று ஒன்றை நடத்தினார். சிறுவயதில் அந்தக் கூட்டங்களுக்குச் சென்று பல பேச்சுகளைக் கேட்டதில் எனக்கு அரசியல் மீது பெரும் ஆர்வம் வந்தது. ஆனால் இந்த ஆர்வம் மட்டுமே போதுமா என்றால் இல்லை. என்னிடம் வந்து சேர்ந்த அரசியல் பற்றி மேலும் தெரிந்துகொள்ள வேண்டும், என்ற ஈடுபாடு இருந்தது. அந்த ஈடுபாட்டுடன் நாம் வாசித்துக்கொண்டே இருந்தால் ஒரு கட்டத்தில் நம் சிந்தனைப் பரப்பு விரிவடைந்தது தெரியவரும். அதோடு நிற்காமல் மேலும் இந்த அரசியல் கடலில் பயணித்துக்கொண்டே இருக்க வேண்டும்.

நடுநிலையான அரசியல் விமர்சனம் என்கிறார்களே? நடுநிலை என்றால் என்ன?

நடுநிலையான அரசியல் விமர்சனம் என்று ஒன்று இருக்கவே முடியாது. தர்மத்துக்கும் அதர்மத்துக்கும் இடையிலான போராட்டத்தில், நியாயத்திற்கும் அநியாயத்திற்குமான போராட்டத்தில், நீதிக்கும் அநீதிக்குமான போராட்டத்தில் நாம் ஒரு சரியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும். நாம் நீதியின் பக்கம் நிற்கப்போகிறோமா அநீதியின் பக்கம் நிற்கப்போகிறோமா, ஒடுக்கப்பட்டவனின் பக்கமிருந்து எழுதப்போகிறோமா ஒடுக்கியவனின் பக்கமிருந்து எழுதப்போகிறோமா, என்பதுதான் இங்கு கேள்வி. இதில் இரண்டிற்கும் இடையே நடுநிலையாக இருப்பேன், என்று சொல்வதே ஒரு போலியான வாதம். இரண்டு பேரையும் குறை சொல்லி, இரண்டு தரப்பையும் நியாயப்படுத்தி, அல்லது இரண்டு தரப்பையும் எதிர்த்து, ஒரு விமர்சனம் எழுதிவிட முடியாது. அது தப்பித்தல்வாதம். என்னுடைய கட்டுரைகள் எவையுமே நடுநிலையான கட்டுரைகள் அல்ல! அவை அனைத்தும் என் மனசாட்சிக்கு உட்பட்டு சமூகநீதி சார்ந்து ஒரு நிலைப்பாட்டை எடுத்து எழுதப்பட்டவைதான். என் எழுத்தை வாசிப்பவர்கள் அவை ஒரு பக்கச் சார்பாக இருக்கின்றன என்று விமர்சித்தால் அதை ஏற்றுக்கொள்ளுபவனாகத்தான் நான் இருக்கிறேன்.

அப்படியென்றால் எதுதான் நடுநிலை? என்னை எடுத்துக்கொண்டால், மற்ற சித்தாந்தங்களை விட திராவிட இயக்க சித்தாந்தத்தின் மீது எனக்கு அதிகமான ஈடுபாடு உண்டு. அதே நேரத்தில், திராவிட இயக்க சித்தாந்தத்தில் இருக்கிற கோளாறுகளையும், அதில் இருக்கிறவர்களின் தவறுகளையும் நான் விமர்சிக்கிறேன் அல்லவா? அதுதான் நடுநிலை என்று சொல்வேன். பெரியாரின் மீது எனக்கு விமர்சனங்கள் உண்டு. திராவிட இயக்கத்தின்மீது விமர்சனங்கள் உண்டு. இந்த ஐம்பது ஆண்டு கால திராவிட கட்சிகளின் ஆட்சியின்மீது மிகக் கடுமையான விமர்சனங்கள் உண்டு. ஆனால் இதை ஒரு இந்துத்துவா தரப்பு வைப்பதற்கும் நான் வைப்பதற்கும் வித்தியாசங்கள் இருக்கின்றன. அவர்கள் வைக்கும் விமர்சனங்கள் மேலோட்டமானவை. ஆனால் உண்மையான திராவிட இயக்க ஆதரவாளர்களும் சார்பாளர்களும் வைக்கிற விமர்சனங்கள் தீர்க்கமானவை. தன் சுயம், தன் சமூகம், தன் தந்தை, தான் சார்ந்த மதம், சாதி, நாடு, தவறு செய்யும்போது ஒருவருக்கு அதைப் பற்றிய விமர்சனம் எழுந்தால்தான் அவர் நடுநிலையாளர்.

அவை ஒரு உரிமையுடன் வைக்கப்படுகிற விமர்சனமாக இருக்கும்.

ஆம். நம் அடிப்படைக் கொள்கையிலிருந்து நீ விலகிவிட்டாய், என்று என்னைப் போன்றவர்கள் சொல்வது அக்கறையினால். ஆனால் கொள்கைகளை விட்டுவிட்டுப் பிழைப்புவாதியாக மாறிவிட்டாய், என்று இந்துத்துவா தரப்பு சொல்வது மகிழ்ச்சியில். “அண்ணா திராவிட நாடு கோரிக்கையைக் கைவிட்டார். அண்ணா தேர்தல் அரசியலுக்காக அடிப்படைக் கொள்கையை விட்டுக்கொடுத்துவிட்டார்”, என்பது திராவிட இயக்க ஆதரவாளர்களின் விமர்சனமாக இருக்கும். ஆனால் “அண்ணாவிற்கு எந்த விதமான நிலைப்புத்தன்மையும் கிடையாது, ஒரு பக்கம் அடைந்தால் திராவிட நாடு இல்லையேல் சுடுகாடு, என்று சொல்லிவிட்டு அவற்றை விட்டுக்கொடுத்துவிட்டுப் போய்விட்டார், அப்படிப்பட்ட ஆள்தான் அவர்”, என்று அண்ணாவைக் கொச்சைப்படுத்துவதன் மூலம் இந்துத்துவாவாதிகள் தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். ஆக நீங்கள் கேட்ட நடுநிலையான விமர்சனம் என்பது இதுதான். திராவிட இயக்க ஆட்சி மீதான என் விமர்சனங்கள் என்னைப் பொறுத்தவரை நடுநிலைமை.

இது மாற்றுக்கொள்கையோர்க்கும் பொருந்தும்தானே?

நிச்சயமாக! ஒரு விமர்சகருக்குப் பொதுவுடைமை இயக்க சார்பு நிலை இருக்கலாம், ஆர்.எஸ்.எஸ். சார்பு இருக்கலாம், திராவிட இயக்க சார்பு நிலை இருக்கலாம். அது அவரது சொந்த அரசியல் விருப்பு சார்ந்தது. ஆனால், தான் சார்ந்துள்ள அமைப்புகளையும் அந்த சித்தாந்தத்தில் உள்ள கோளாறுகளையும் விமர்சிக்கக்கூடியவராக அவர் இருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான், அவர் ஒரு நடுநிலையான ஆள் என்று கொள்ள முடியும்.

ஓமந்தூர் ராமசாமி to எடப்பாடி பழனிச்சாமி. இந்த 70 ஆண்டு கால தமிழக அரசியலை எப்படிப் பார்க்கிறீர்கள்?

முதலில் இந்த ஒப்பீட்டை நினைத்துப் பார்த்தாலே நாம் எவ்வளவு மோசமான காலகட்டத்திற்கு வந்திருக்கிறோம் என்பதை உணர முடிகிறது. பொதுவாக ஒரு நிலம் கரடுமுரடாக இருக்கும்; அதைப் பண்படுத்தித்தான் நல்ல நிலமாக ஆக்குவோம். ஆனால் நம்மூரில்தான் ஏற்கனவே நன்றாக இருந்த நிலத்தை நாசப்படுத்தி, ஒன்றுக்கும் உதவாத நிலமாக ஆக்கியிருக்கிறோம். இயற்கைக்கே முரணான வளர்ச்சி நம்முடைய அரசியல் வளர்ச்சி. பெரியாரின் உதாரணத்தை சொல்ல வேண்டுமென்றால், “கெட்டதிலிருந்து கழிசடைக்கு மாறுவதுதான் நம்முடைய வளர்ச்சி”. தனிமனித ஒழுக்கமாகட்டும், தத்துவங்களின் உள்வாங்கல் ஆகட்டும், கொள்கை சார்ந்த முடிவுகளாகட்டும், அறிவுப்பூர்வமான விவாதங்களாகட்டும், ஓமந்தூர் ராமசாமி காலத்து அரசியலுக்கும், எடப்பாடி பழனிச்சாமி காலத்து அரசியலுக்கும் ஒட்டோ உறவோ எந்த விதத்திலும் கிடையாது. இது மாதிரியான ஒப்பீட்டை வேறு ஒரு மாநிலத்தில் செய்தால், அது இந்தளவிற்குக் கேவலமாக இருக்குமா என்பதே சந்தேகம்தான். நம்முடைய அரசியல் சீரழிவு அப்படிப்பட்டது.

இதைப் பற்றிய பேச்சு வந்தால், ஐம்பதாண்டு கால திராவிட ஆட்சிதான் தமிழகத்தை மொத்தமாக சீரழித்துவிட்டது, என்று ஒரு வாதம் முன்வைக்கப்படுகிறதே?

இல்லை, இந்த வாதத்தை அப்படியே ஏற்றுக்கொண்டுவிட முடியாது. மேட்டுக்குடியினரிடம் இருந்த அரசியலையும் அதிகாரத்தையும் ஜனநாயகப்படுத்தியதுதான் திராவிட இயக்க அரசியலின் மிக முக்கியமான சாதனை. நிலச்சுவான்தார், தொழில் நிறுவனர், பணம் படைத்தோர், பேருந்து முதலாளிகள், இவர்கள் மட்டும்தான் அரசியல் செய்ய முடியும் என்று இருந்த காலத்தில், சாமானியர்களும் அரசியலுக்கு வர முடியும், அமைச்சராக முடியும், என்ற நிலையை உருவாக்கியது திராவிடக் கட்சிகளின் ஆட்சிதான். இரண்டாவது, திராவிடக் கட்சிகளின் ஆட்சியில்தான் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கல்வியும், வேலை வாய்ப்பும், பொருளாதார வளர்ச்சியில் முன்னுரிமையும் வழங்கப்பட்டன.

ஐம்பதாண்டு கால திராவிடக் கட்சிகளின் ஆட்சி என்று நோக்கும்போது, ஐம்பதாண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் வேறொரு மாநிலம் எப்படி இருந்தது, அது இப்பொழுது அடிப்படை உள்கட்டமைப்பு வசதியில், கல்வியில், சுகாதாரத்தில், பொருளாதாரத் தன்னிறைவில் எப்படி இருக்கிறது என்று அளவுகோல் வைத்து ஒப்பிட்டுப் பார்த்தாலே, தமிழகத்தின் வளர்ச்சிக்கு திராவிடக் கட்சிகளின் பங்களிப்பு எத்தகையது என்று தெரிந்துவிடும். மற்ற மாநிலத்தவர்கள் பொறாமைப்படும் அளவிற்குப் பல்வேறு துறைகளில் தமிழகம் முன்னேறியிருக்கிறது. இவையெல்லாம் திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் கிடைத்த பயன்கள்.

திராவிட இயக்க ஆட்சியின்போது நடந்த மிகப்பெரும் வீழ்ச்சி என்று நான் ஐந்து விஷயங்களைக் குறிப்பிடுவேன். தனிமனிதத் துதிபாடல்கள், கட்சியில் குடும்ப ஆதிக்கம், ஊழல், சர்வாதிகாரம், ஏகபோக அரசியல், இந்த ஐந்துதான் திராவிட இயக்க ஆட்சியைக் கெடுத்தது. ஆனால் திராவிட இயக்கம் தமிழகத்தில் இருந்ததால்தான் இவை ஐந்தும் தமிழகத்தில் நடந்தன, என்ற வாதம் மிகத் தவறானது. இவற்றிற்கெல்லாம் திராவிட இயக்கம்தான் காரணம் என்றால், தமிழ்நாட்டைத் தவிர பிற மாநிலங்களில் இந்த ஐந்தும் இருந்திருக்கக் கூடாது. ஆனால் கருணாநிதி, ஜெயலலிதாவைவிட மோசமான அரசியல் தலைவர்கள் ஆந்திராவைத் தாண்டி காஷ்மீர் வரை இருக்கிறார்களே? எனவே இதை திராவிடக் கட்சிகளின் குணமாகப் பார்க்க முடியாது. அரசியலின் குணமே அதுதான். இங்கே கருணாநிதியைத் துதிபாட ஒரு கூட்டமென்றால் உ.பி.யில் முலாயம் சிங்கைத் துதிபாட ஒரு கூட்டம் இருக்கிறது. மோடி எதை செய்தாலும் கேள்வி கேட்காமல் ‘ஆமாம்’ போட ஒரு கூட்டம் இருக்கிறது. சோனியா காந்தி, லல்லு பிரசாத், சரத் பவார், என இது எல்லா இடத்திலும் இருக்கிறது. அதனால் இப்பிரச்னைகளுக்கான வேராக திராவிட இயக்கத்தைக் கைகாட்டி, திராவிட இயக்கத்தின் பண்பே இதுதான் என்று அடையாளப்படுத்துவது தவறானது.

திராவிடக் கட்சிகள் தமிழகத்தில் வலுவிழந்தால், தேசியக் கட்சிகளின் தாக்கம் எவ்வாறு இருக்கும்?

திராவிடக் கட்சிகளின் செல்வாக்கு தமிழகத்தில் குறைந்துவிட்டது, என்ற வாதத்தை ஏற்க முடியாது. அது இன்றுவரை மெய்ப்பிக்கப்படவில்லை. ஒரு கோடியே இருபது லட்சம் பேர் திமுக-விற்கு வாக்களிக்கிறார்கள். ஒரு கோடியே எழுபது லட்சம் பேர் அதிமுக-விற்கு வாக்களிக்கிறார்கள். பிற கட்சிகளுக்கு அறுபதிலிருந்து எழுபது லட்சம் பேர் வரை வாக்களிக்கிறார்கள். தமிழகத்தில் நான்கு கோடி பேர் வாக்களிக்கிறார்கள் என்று வைத்துக்கொண்டால், திராவிடக் கட்சிகள் என்று அறியப்படும் திமுக-வும் அதிமுக-வும் மட்டும் மூன்று கோடி வாக்குகளைப் பெறுகின்றன. ஆக திராவிடக் கட்சிகள் வலுவிழந்துவிட்டன என்று சொல்ல முடியாது. அதேபோல் தேசியக் கட்சிகளின் செல்வாக்கு அதிகரிக்கிறது, என்ற வாதமும் இன்னும் நிரூபிக்கப்படவில்லை.

காங்கிரஸ், பாஜக, இரண்டும் தமிழகத்தில் தனியாகத் தேர்தலில் நின்று வெற்றி பெற வாய்ப்பில்லை. வரலாற்றைப் பார்த்தாலும் கூட, அகில இந்திய அளவில் ராஜீவ் காந்தியோ, மன்மோகன் சிங்கோ, சோனியா காந்தியோ ஒரு அரசியல் முகமாகத் தங்களின் கட்சிக்கு வாக்குகளைப் பெற்றபோது, அதே உத்தி தமிழ்நாட்டில் பலிக்கவில்லை. அகில இந்திய அளவில் நரேந்திர மோடியை முன்னிறுத்தி மிகப்பெரும் வெற்றியைப் பெற்ற பாஜக தமிழகத்தில் வென்ற தொகுதிகள் ஒன்றுதான். அதுவும் தேமுதிக, மதிமுக, பாமக போன்ற கட்சிகளின் உதவியுடன்தான் சாத்தியம் ஆனது. அதனால் இப்போதைக்கு தேசியக் கட்சிகளின் வளர்ச்சி என்பதைத் தமிழ்நாட்டில் பார்க்க முடியாது. திராவிடக் கட்சிகளின் வீழ்ச்சி, தேசியக் கட்சிகளின் வளர்ச்சி, இரண்டுமே நிரூபிக்கப்படவில்லை.

நான் கேட்க விரும்பியது, 1950-களில் தமிழகத்தில் காங்கிரஸ் வலுவிழந்தபோது ஒரு வெற்றிடம் உருவானது. அந்த வெற்றிடத்தைத் திமுக நிரப்பியதுபோல், வருங்காலத்தில் ஏதோ ஒரு திராவிடக் கட்சி வலுவிழக்கும்போது, வேறு எந்தக் கட்சி அந்த இடத்தைப் பிடித்துக்கொள்ளும், என்று நீங்கள் நினைக்கிறீர்கள் என்பதையே. திமுக ஆட்சியைப் பிடிக்க பதினெட்டு ஆண்டுகள் ஆயின‌. அதுபோல் இன்றிருக்கும் உதிரிக் கட்சிகள் மெதுவாக மக்களின் ஆதரவைப் பெறலாமே?

1950-களில் காங்கிரசுக்கு மாற்றாக தமிழகத்தில் கம்யூனிஸ்ட் கட்சிதான் இருந்தது. ஆனால் மதராஸ் ஸ்டேட் மொழிவாரியாகப் பிரிக்கப்பட்டதும் அவர்கள் ஆட்சியமைக்கும் செல்வாக்கை இழந்தார்கள். அப்போது அவர்கள் ஆந்திரப் பிரதேசத்தில்தான் அதிகளவில் இயங்கிக்கொண்டிருந்தார்கள். அதன் பிறகு சில ஆண்டுகள் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் வலம் வந்தது. பிறகு திராவிட இயக்கத்தின் எழுச்சி, காங்கிரசுக்கு மாற்றாக திமுக என்னும் கட்சியை முன்வைத்தது. அதன் பிறகு திமுக-விற்கு மாற்றாக அதற்குள்ளிருந்தே அதிமுக என்ற கட்சி வந்தது. அதுதான் இன்றுவரை தொடர்கிறது. நீங்கள் எதை வெற்றிடம் என்று சொல்கிறீர்கள்?

தமிழகத்தில் அரசியல் என்பது என்றுமே ஏதேனும் இரண்டு பெரும் தலைவர்களுக்குள்தான். தற்போது ஜெயலலிதா இறந்துவிட்டார், கருணாநிதி படுத்துவிட்டார். அரசியல் முகங்களுக்குப் பழகிப் போன தமிழ்நாட்டில் தற்போது அவற்றுக்குத் தட்டுப்பாடு நிலவுவதால், ஒரு வெற்றிடம் ஏற்பட்டதுபோன்ற தோற்றம் ஏற்படுகிறது, அவ்வளவே. திமுக-விற்கு ஸ்டாலின் ஒரு பலம். அதிமுக-விற்கு இரட்டை இலை என்ற சின்னம் பலம். இந்த இரண்டு பலத்திற்கு இடையேதான் தமிழ்நாட்டின் வருங்கால அரசியல் இருக்கும். ஜெயலலிதாவுக்கு நிகரான தலைவர் அதிமுக-வில் இல்லை, கருணாநிதிக்கு நிகரான தலைமையாக ஸ்டாலினால் வர முடியாது, ஆனால் திமுக-வில் கட்சிக் கட்டமைப்பு வலுவாக இருக்கிறது. தலைமையில் ஆரம்பித்து செயல்தலைமை வரை ஒரு தனிப்பட்ட உறவு இருக்கிறது.

மேலும் அதிமுக-வைவிட திமுக-வில் அதிகாரப்பரவல் அதிகம் அல்லவா?

ஆம். அது அந்தக் கட்சியைக் காப்பாற்றிவிடும். அதிமுக-வைப் பொறுத்தவரை, கிராமங்களில் இன்றும் எம்ஜிஆர், ஜெயலலிதா, இரட்டை இலை போன்ற பிம்பங்கள் உடையாமல் இருக்கின்றன. “லட்சக்கணக்கான பிரதிகள் விற்கும் பத்திரிகைகளில் கட்சிக்கு எதிராக எவ்வளவு எழுதினாலும், அந்தக் கட்சி கிராமங்களை அடைந்துவிட்டால், அந்தக் கட்சியை யாராலும் வீழ்த்த முடியாது”, என்று எழுதினார் எம்ஜிஆர். அதுதான் நடந்திருக்கிறது. அந்த இரட்டை இலை என்பது யாருக்கும் இல்லாமல் பிரிக்கப்பட்டால், அப்பொழுதுதான் அதிமுக இருந்த இடத்தில் நீங்கள் கேட்டதுபோல் ஒரு வெற்றிடம் உருவாகும். ஸ்டாலினுக்கு எதிராக யார் முன்னே நிற்கப்போகிறார், என்ற கேள்வி அப்பொழுதுதான் எழும். மாறாக, இரட்டை இலை பிரிக்கப்படாமல் இருந்தால், அதற்கான வாக்கு வங்கி என்பது அப்படியேதான் இருக்கும். இன்று பொதுவாகவே, ஒரு சட்டமன்றத் தேர்தலில் ஒரு கட்சிக்கு ஐம்பது லட்சம் வாக்குகளுக்கு மேல் குறைந்தாலோ கூடினாலோதான் அது வீழ்ச்சியோ வளர்ச்சியோ. இல்லையென்றால் வாக்கு வங்கி அப்படியேதான் இருக்கிறது என்று பொருள்.

இதுவரை இரண்டு கட்சிகளும் இந்த வாக்கு வங்கி வீழ்ச்சியை சந்திக்கவில்லை. வருங்காலத்தில் இரட்டை இலை என்பது கேள்விக்குறியானால், அதுதான் முதல் வெற்றிடமாக அமையும். அப்படி வெற்றிடம் அமைந்தால், அதைக் கைப்பற்றக்கூடிய பலம் இன்று யாருக்குமே இல்லை என்றுதான் சொல்வேன். ஒவ்வொரு கட்சிக்கும் ஐந்து லட்சம், பத்து லட்சம் என்ற வீதத்தில் அந்த வாக்கு வங்கி சிதறித்தான் போகுமே தவிர வேறொரு கட்சி அந்த வாக்குகளைப் பெரும்பான்மையாகப் பெறவே பெறாது. அந்த வாக்கு வங்கியைக் கைப்பற்றக்கூடிய, மக்களின் நம்பிக்கையைப் பெற்ற தலைமையாக வைகோவோ, விஜயகாந்தோ, காங்கிரஸோ, பாஜகவோ, சீமானோ இன்னும் உருவாகவில்லை. திமுக, அதிமுக - இரண்டு கட்சிகளுக்கும் ஓட்டுப் போட மாட்டேன் என்று நான் முடிவு செய்தால், வேறு யாருக்கு நான் ஓட்டு போடுவேன்? அதுதான் ஒரு சராசரி வாக்காளரின் குழப்பமாக இருக்கும்.

விஜயகாந்திற்கு ஆரம்பத்தில் அந்த வாய்ப்பு இருந்தது...

திமுக, அதிமுக-விற்கு மாற்றாக விஜயகாந்த் வந்தபோது ஒரு எதிர்பார்ப்பு இருந்தது உண்மைதான். 1990-களில் வைகோ வந்தபோதும் ஒரு எதிர்பார்ப்பு இருந்தது. தன்னை திமுக அதிமுக-விற்கான மாற்றாக முன்னிறுத்திக்கொள்பவர்கள், மீண்டும் அதே திமுக அதிமுக-வுடன் கூட்டணி அமைக்கும் அந்த கணத்தில், மக்களின் நம்பிக்கையை இழக்கிறார்கள். இதுதான் திமுக, அதிமுக-வின் தந்திரமே. தனக்கான மாற்று என்று அரசியல் செய்பவர்களைக் கூட்டணியில் இணைத்துக்கொண்டு காலி செய்வதுதான் அவர்களின் உத்தி. கருணாநிதியை எடுத்துக்கொள்ளுங்கள்; இவர்களால் தன் கட்சிக்கு ஒரு நன்மையும் இல்லை, என்று அவருக்கு நன்றாகவே தெரியும். இருந்தாலும் தன்னை நல்லவன் என்று சொல்வதற்காக ஒரு நான்கு பேரைக் கூட்டணியில் வைத்திருப்பார்.

ஒரு தேர்தலில் கருணாநிதிதான் முதலமைச்சர், ஜெயலலிதாதான் முதலமைச்சர் என்று வாக்கு கேட்டுவிட்டு, பிறகு நாங்கள்தான் மாற்று என்று மக்கள் முன்னால் போய் நின்றால் அவர்கள் கேலிப்பொருளாக ஆகாமல் வேறென்ன ஆவார்கள்? அதோடு அரசியலில் அவர்களின் அத்தியாயம் முடியும். இவ்வாறு மாற்று சக்திகளை வரவிடாமல் திமுக-வும் அதிமுக-வும் தடுத்துவிட்டன. அதனால்தான் கமல்ஹாசன் ஒன்று சொன்னதும் அவர்தான் அடுத்த முதலமைச்சர், என்று ஒரு கூட்டம் கிளம்புகிறது. ஹிப் ஹாப் தமிழா ஆதிதான் அடுத்த முதலமைச்சர், சகாயம் சி.எம் ஆகணும்...

ரஜினிகாந்த்...

நல்லவேளை அவரை இப்போது விட்டுவிட்டார்கள். மாற்று சக்திகள் இல்லாததால் தனக்கான தலைவனை மக்கள் இவ்வாறு அவசர அவசரமாகத் தேடுகிறார்கள்.

இன்றைக்கு தமிழ்ச் சமூகம் மறந்துவிட்ட, ஆனால் கட்டாயம் நினைவில் வைத்திருக்க வேண்டிய தலைவர் என்று யாரைக் குறிப்பிடுவீர்கள்?

நிச்சயமாக பெரியார்தான். வெறும் கடவுள் மறுப்பாளராகவும் பார்ப்பன எதிர்ப்பாளராகவும் மட்டுமே நாம் பெரியாரை அடையாளப்படுத்துகிறோம். அதையும் முழுமையாகப் புரிந்துகொள்ளாமல் விமர்சிக்கிறோம். பெரியார் பல்வேறு தளங்களில் இயங்கினார், அவற்றுள் இரண்டுதான் மேலே சொன்னது. அவரை அதற்குள் அடக்குவதே தவறான கற்பிதம். பெரியாரின் அடிப்படைக் கொள்கைகள் இரண்டு. ஒன்று சாதி ஒழிப்பு, மற்றொன்று பெண் உரிமை. இவற்றிற்கு எவையெல்லாம் தடையாக இருந்தனவோ அவற்றையெல்லாம் எதிர்த்தார். சாதியை எதிர்த்தார், அதை மதம் காப்பாற்றுகிறது என்றார்கள். மதத்தை எதிர்த்தார், மதம் தன் கொள்கைகளை வேதத்திலிருந்து எடுத்துக்கொள்கிறது என்றார்கள். வேதத்தை எதிர்த்தால் அது சாத்திரங்கள் என்றார்கள். அந்த சாத்திரத்தை யார் உருவாக்கியது என்று கேட்டால் கடவுள் என்றார்கள். சாதியை உருவாக்குகிற, மக்களைப் பிளவுபடுத்துகிற ஒரு கடவுளும் இருக்கமுடியுமா, என்று அப்போதுதான் அந்தக் கடவுளை எதிர்த்தார். பெரியாரின் கடவுள் மறுப்பை இப்படித்தான் நாம் நோக்க வேண்டும். இந்தப் படிநிலைகளையெல்லாம் விட்டுவிட்டு, அவர் கடவுள் இல்லை என்று சொல்லிவிட்டார் என்று விமர்சிப்பது மேம்போக்கானது.

‘Second Sex' என்ற புத்தகம்தான் இன்று உலகில் பெண்ணியத்திற்கான அறிக்கைபோல. அந்த புத்தகம் வருவதற்கு இருபது ஆண்டுகளுக்கு முன்பாகவே ‘பெண் ஏன் அடிமையானாள்’ என்ற புத்தகத்தை எழுதியவர் பெரியார். அவர் அன்று எதையெல்லாம் சொன்னாரோ அதுதான் இன்று நடக்கிறது. ஆண் பெண் வித்தியாசமின்றி வளர்க்க வேண்டும், என்றார். பெண்கள் நீளமாகத்தான் முடி வளர்க்க வேண்டுமா, என்று கேட்டார். யாரெல்லாம் பாப் கட்டிங் செய்கிறீர்களோ அவர்களுக்கு ஐந்து ரூபாய் தருகிறேன், என்றார். பெண்களும் லுங்கி அணியலாம் என்றார். அழகைவிட சவுகரியமே முக்கியம், என்றார். இன்று நைட்டி, மிடியெல்லாம் லுங்கியின் வடிவங்கள்தானே? நகையை மாட்டும் ஸ்டேண்டாக இருக்காதீர்கள், என்றார். பிள்ளைகளை வளர்ப்பதிலேயே உங்கள் வாழ்க்கை செலவாகிறது, அதனால் அதிகப்படியாகப் பிள்ளைகளைப் பெற்றுக்கொள்ளாதீர்கள், என்றார். இவை அனைத்துமே இன்று பேசப்படுகின்றன. தன் காலத்து சமூக விழுமியங்களோடு மற்றும் நின்றுவிடாமல், நூறாண்டு காலம் தாண்டிப் பார்க்கும் அந்தப் பார்வை இருக்கிறதே? அந்தப் பார்வைதான் பெரியார் என்ற தலைவனின் அடையாளம்.

பெரியார் மீது கொள்கை ரீதியாகப் பலருக்குப் பல்வேறு வேறுபாடுகளும் விமர்சனங்களும் இருக்கின்றன. ஆனால் அவற்றைத் தாண்டி, ஒரு தலைவன் என்றால் எப்படி இருக்க வேண்டும், ஒரு தத்துவத்தில் எவ்வாறு கடைசிவரை பிடிப்புடன் இருக்க வேண்டும், அந்தத் தத்துவத்தை எவ்வாறு பிரச்சாரம் செய்ய வேண்டும்,  அந்தத் தத்துவத்தின் வெற்றிக்காக எவ்வாறு இறுதிவரை போராட வேண்டும், அந்தத் தத்துவத்திற்கான இயக்கத்தை எவ்வாறு கட்டமைக்க வேண்டும், அந்த அமைப்பிலுள்ள ஆட்களை எவ்வாறு வழிநடத்த வேண்டும், கொள்கை ரீதியான எதிரிகளை எவ்வாறு மதித்து மரியாதையுடன் நடத்த வேண்டும், என்று பன்முக ஆளுமையும் தனிமனித ஒழுக்கமும் கொண்ட தலைவர் பெரியார். தமிழகத்தில் எல்லோராலும் பின்பற்ற ஏதுவான ஒரு தலைவராகவே நான் பெரியாரைப் பார்க்கிறேன்.

பார்ப்பன ஆதிக்கத்திற்கு எதிராக வெற்றிகரமான இயக்கத்தை திராவிட இயக்கம் நடத்தியது. ஆனால், இன்று இடைநிலை சாதிகள் தாழ்த்தப்பட்டவர்கள் மேல் நிகழ்த்தும் அடக்குமுறையை அது கண்டும் காணாதது போல் நடந்துகொள்வதாக ஒரு குற்றச்சாட்டு இருக்கிறதே? இன்றைய திராவிடக் கட்சிகளின் உட்கட்சி அரசியல் பெரும்பாலும் இடைநிலை சாதிகளால்தானே தீர்மானிக்கப்படுகிறது?

திராவிட இயக்கத்தின் சித்தாந்தம் என்பது தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் அனைவரும் இணைந்ததுதான். ஆனால் நடைமுறைச் செயல்பாடுகளில் அது சாத்தியம் ஆகவில்லை என்பது உண்மைதான். இடைநிலை சாதிகளைச் சார்ந்தவர்கள் திமுக-விலும் அதிமுக-விலும் கோலோச்சியதால், தாழ்த்தப்பட்ட மக்கள் அதிலிருந்து ஒதுக்கப்பட்டார்கள். தேர்தல் மையவாத நிலைப்பாடு அப்படித்தான் செயல்பட வைக்கும்.

'பறையன் பட்டம் போகாமல் சூத்திரப்பட்டம் போகாது', என்றவர் பெரியார். பிராமணர்களை விமர்சித்தது போலவே இடைநிலை சாதிகளையும் பெரியார் விமர்சித்தார். ஆண்ட பரம்பரை என்று சொல்லிக் கொள்பவர்களை, 'காவல்காரன் எல்லாமே ஆண்டபரம்பரை தான்' என்றவர் பெரியார். ஆனால் அதனை திராவிட இயக்கத்தின் மற்ற தலைவர்கள் பின்பற்றவில்லை. இதற்கு நிச்சயம் அவர்கள் பொறுப்பேற்கத்தான் வேண்டும்.

தமிழகத்திற்குத் தேவைப்படும் தலைவராக பெரியாரை முன்வைத்தீர்கள். ஒடுக்கப்பட்ட மக்களை இணைத்துக்கொள்ளாதது திராவிட இயக்கத்தின் தோல்வி என்றும் சொன்னீர்கள். இந்நிலையில், பெரியாரை மீட்டுருவாக்கம் செய்து, பெரியார் வெர்ஷன் 2.0 என்ற அடையாளத்துடன் 21-ம் நூற்றாண்டில் பெரியாரியத்தை முன்னெடுத்தால் எப்படி இருக்கும்? சமூக ஊடகத்தில் சிலர் அப்படி ஆரம்பித்திருக்கிறார்கள்.

நிச்சயமாக! அனைத்து அமைப்புகளிலும் இருக்கும் நல்ல விஷயங்களைத் தனதாக்கிக் கொள்வார் பெரியார். காலத்திற்கேற்றார்போல் பெரியாரியத்தைப் புதுப்பிக்கப்போகும் அந்த இயக்கம், பொதுவுடைமைக் கருத்துகளையும் தேசிய இயக்கத்தின் உணர்வுகளையும் ஒன்றிணைத்துக்கொண்டு போராடக்கூடிய அமைப்பாக இயங்க வேண்டும். ரஷ்யாவிற்குச் சென்று வந்து, கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை முதன்முதலாகத் தமிழில் மொழிபெயர்த்து, 1931-ல் குடியரசு பத்திரிகையில் வெளியிட்டார் பெரியார். 1932-ல் ‘காம்ரேட்’ என்ற சொல்லைத் தமிழ்ப்படுத்தி, இனி ஒருவரையொருவர் ‘தோழர்’ என்றே விளிக்க வேண்டும், என்று எழுதினார். மே தினம் கொண்டாடினார். எனவே பொதுவுடைமை இயக்கத்திற்கும் பெரியாரியத்திற்கும் பெரிதளவில் முரண்பாடுகள் கிடையாது. பெரியார் துவக்கத்தில் தேசிய இயக்கத்தில் இருந்தவர்தான். நாட்டு விடுதலை மட்டும் போதாது, சமூக விடுதலைக்கும் அதே அளவு முக்கியத்துவம் தரப்பட வேண்டும், என்றுதான் வேறுபட்டார். எனவே, தேசிய இயக்கத்தின் குணங்களையும், பொதுவுடைமை இயக்கத்தின் குணங்களையும், ஒடுக்கப்பட்ட மக்களின் குரல்களையும் இணைத்துக்கொண்டு அந்த இயக்கம் பயணிக்க வேண்டும்.

தாழ்த்தப்பட்டோருக்கும் பிற்படுத்தப்பட்டோருக்கும் மோதல் வந்தால், தாழ்த்தப்பட்டோரின் பக்கம் நின்றவர் பெரியார். அதை இந்த இயக்கமும் கடைபிடிக்க வேண்டும். 2.0 என்ற அடையாளத்துடன் பெரியாரை நிச்சயமாக இந்த நூற்றாண்டில் கொண்டுவந்து நிறுத்த வேண்டும். அதுதான் எதிர்காலத்திற்கு உகந்ததாக இருக்கும்.

அதே நேரத்தில், தமிழகத்தில் சாதியமும் வலுவடைந்து வருவதுபோல் தெரிகிறதே? பெரியாரின் தாக்கத்திலிருந்து விடுபட்டு சமூக நீதியில் நாம் மீண்டும் பின்னோக்கி செல்கிறோமோ?

அடிப்படையில் சாதி என்பது நிலத்தில் இருக்கிறது. நிலத்திலிருந்து மனதிற்கு குடிபெயர்ந்து சாதிப் பெருமையாக மாறுகிறது. “சாதியமைப்பைக்கூட ஒழித்து விடலாம், இந்த சாதிப் பெருமையை ஒழிப்பதுதான் கடினம்”, என்றார் பெரியார். ஒருவன் வேலையில்லாதவனாக இருப்பான், அவன் வீட்டில் எந்த வசதியும் இருக்காது, ஆனால் அந்த வீண் ஜம்பம் மட்டும் இருக்கும். “நாங்க இந்த ஆள் தெரியும்ல?”, என்ற ஒரு வீண் பெருமை இருக்கும். இந்த சாதியை அதிகம் காப்பாற்றி வருவது கிராமங்கள்தான். அதனால்தான் கிராம சீர்திருத்தம் பற்றிய விவாதம் வந்தபோது, கிராமங்களை ஒழிக்க வேண்டும் என்றார் பெரியார். காந்தி உட்பட இந்தியத் தலைவர்களில் பெரும்பாலானோர் கிராமத்தின் வளர்ச்சியைப் பற்றித்தான் அதிகம் பேசினார்கள். அந்த அமைப்பில் உள்ள அழுக்குகளை அம்பேத்கரும் பெரியாரும்தான் சுட்டிக்காட்டினர். 

சாதியைத் தற்போதைய கல்வியாலோ வேலையாலோ மட்டும் ஒழித்துவிட முடியாது. மனோபாவ ரீதியாக மக்களிடையே மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். இன்று முகநூலில் அதிகப்படியான வன்மம் சாதி சார்ந்ததாகத்தான் இருக்கிறது. அவர்கள் அனைவரும் படித்தவர்கள்தான். ஒரு கருத்தைப் பதிவிட்டால், அந்தக் கருத்தைப் பார்க்காமல், இந்த ஆள் என்ன சாதியைச் சேர்ந்தவனாக இருப்பான் என்று ஆராய்வதில்தான் புத்தி செல்கிறது. ஒரு தலைவரை விமர்சனம் செய்தால், ஒரு இயக்கத்திற்கு ஆதரவு தெரிவித்தால், சமூக விழுமியங்களைக் கேள்வியெழுப்பினால், இப்படி எதைச் செய்தாலும் முதலில் எழுகிற கேள்வி இந்தப் பதிவர் எந்த சாதியாக இருப்பார் என்பதுதான். இந்த மனோபாவத்தைக் கல்வியால் ஒழிக்க முடியவில்லையே? “அது அவங்க வீடு, அங்கே போகாதே”, என்று படித்த பெற்றோரே குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுக்கிறார்களே? காலம், வாழ்க்கைச் சூழல், தேவை, இவற்றிற்கேற்றவாறு நம்மிடம் இருக்கும் கற்பிதங்களை நாம் விலக்கியபடி இருக்க வேண்டும். சாதி மாதிரியான ஒரு சமூக நோய்க்கு 21-ம் நூற்றாண்டில் என்ன வேலை? அதை அனைவரும் தூக்கி எறிய வேண்டும்.

இது எனக்குள் குடைந்துகொண்டிருக்கும் கேள்வி. அடையாளம் இல்லாமல் ஒரு மனிதனால் வாழ்ந்துவிட முடியுமா? நான் சாதிக்காக கேட்கவில்லை.

புரிகிறது. அடையாளங்கள் இல்லாமல் ஒரு மனிதனால் வாழவே முடியாது, ஆனால் அடையாளங்கள் இல்லாத இல்லாத வாழ்க்கையை நோக்கி நாம் சென்றுகொண்டே இருக்க வேண்டும். நம்முடைய எழுத்தில் ஒரு அடையாளத்தை வலிந்து திணிக்கிறோம் என்றால், அதற்கு நாம்தான் பொறுப்பு.

எனக்கான அடையாளங்கள் நான் விரும்பியவாறு இருப்பதில்லை, அதனால்தான் கேட்கிறேன்.

அது நிச்சயமாக இருக்காது. சமூகம்தான் நம் அடையாளத்தை உருவாக்குகிறது. ஆனால் அந்த அடையாளத்தைப் புறம் தள்ளி வாழ நாம் கற்றுக்கொள்ள வேண்டும். ரஷ்யாவின் ஸ்டாலின் சொல்வதுபோல், “வெறுக்கப்படுபவனே வெற்றி பெறுவான்”. உன் சமூகத்தை நீ விமர்சித்தால், அந்த சமூகம் உன்னை வெறுக்கும். அந்தக் கணத்தில் நீ வெற்றி பெறுகிறாய், என்றார். வ.உ.சி.யை பிள்ளைவாள் சங்கம் எடுத்துக்கொள்கிறது. முதலியார் மாநாட்டில் அண்ணாவின் படத்தை வைக்கிறார்கள். இன்று பார்ப்பனர் சபைகளில் ராஜாஜி பேசப்படுகிறார். நாடார்கள் காமராஜரைத் தனதாக்கிக் கொள்கிறார்கள். ஆனால் தெலுங்கு மகாஜன சபை எங்காவது பெரியார் படத்தை வைக்கிறதா? அதுதான் ‘வெறுக்கப்படுபவனே வெற்றி பெறுவான்’. அதுதான் அடையாளத்தைப் புறம் தள்ளி வாழும் வாழ்க்கை.

பெரிய அளவில் செய்யப்படுகின்ற ஊழல்கள் கண்டுகொள்ளப்படுகின்றன. சிறிய அளவில் பொதுமக்களின் ஒத்துழைப்புடன் நடக்கும் கையூட்டுகள் ஏன் பேசப்படுவதில்லை? ஊழல் நம் வாழ்வின் அங்கமாக மாறிவிட்டதோ?

ஊழல்கள் கண்டுகொள்ளப்படுவதும், கண்டுகொள்ளப்படாமல் போவதும் அவரவர் தேவையைப் பொறுத்த விஷயமாக ஆகிவிட்டது. இன்று ஊழல் இல்லாத அரசு அமைப்பு என்று ஒன்று கிடையவே கிடையாது. அரசு மருத்துவமனை, ஆர்.டி.ஓ. அலுவலகம், தாசில்தார் அலுவலகம், அனைத்திலும் ஊழல் புரையோடிப் போயிருக்கிறது. “நான் பணம் தருகிறேன், வேலையை சீக்கிரம் முடித்துத் தாருங்கள்”, என்று பொதுமக்களே முன்வந்து லஞ்சம் கொடுக்கும் நிலை வந்துவிட்டது. அப்படி கொடுத்த காசுக்கு அவர் வேலை செய்தால் அவர் நல்லவர்! லஞ்சம் வாங்குவது தவறு என்பதெல்லாம் என்றோ மாறிவிட்டது. ஏன் சிறு சிறு ஊழல்கள் கண்டுகொள்ளப்படவில்லை என்றால், அதனால் யாருக்கும் எந்த அறம் சார்ந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை என்பதால்தான். தன் கடமையை செய்ய ஒருவர் லஞ்சம் வாங்குகிறார் என்றால் ஒரு அமைப்பாக நாம் எந்த அளவிற்கு சறுக்கியிருக்கிறோம்?

பலர், குறிப்பாக நடுத்தர வர்க்கத்தினர் நாட்டின் தலையாயப் பிரச்னையாக ஊழலைப் பார்க்கிறார்கள். அதை அரசியல்படுத்தி ஆம் ஆத்மி போன்ற கட்சிகளும் ஊழலை நாட்டின் மிகமுக்கியமான பிரச்னையாக முன்னிறுத்துகின்றன…

ஊழல் நிச்சயமாக இந்நாட்டில் ஒரு பிரச்னைதான். ஆனால் அது தலையாயப் பிரச்னை அல்ல. ஊழல்தான் நாட்டையே கெடுக்கிறது, என்று நாமாக உருவகம் செய்துகொள்கிறோம். ஆனால் இந்திய கிராமங்களில் இன்றும் அன்றாட வாழ்க்கை முறையே அவலமான நிலையில்தான் இருக்கிறது. வாழ்வாதாரம், கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, மின்வசதி, குடிநீர் போன்றவை இன்னும் முழுமையாக அவர்களுக்குக் கிடைக்கவில்லை. சாதியமைப்பு இன்னும் தளரவில்லை. இந்தப் பிரச்னைகளையெல்லாம் அரசியல் மேடையில் தீவிரமாகப் பேசுவதற்கு யாருமே இல்லை. அவர்கள் அனைவருக்கும் ஒரு கவர்ச்சிகரமான கோஷமாக ஊழல் மட்டுமே இருக்கிறது. நீங்கள் ஒரு கிராமத்திற்குச் சென்று கேட்டுப் பாருங்கள். ஊழலை ஒரு தலையாயப் பிரச்னையாக அவர்கள் சொல்ல மாட்டார்கள். ஐம்பது வருடங்களாக ஒரு ஆஸ்பத்திரி கூட இல்லையே, பதினான்கு நாட்களுக்கு ஒரு முறைதான் மோட்டர் போட முடிகிறது, இது போன்றவைதான் அவர்களின் குறையாக இருக்கும். ஆனால் ஊழல்தான் நாட்டின் தலையாகப் பிரச்னையாகக் காட்டப்படுகிறது. பிற பிரச்னைகளைப் பற்றிப் பேசிவிடக்கூடாது என்று அரசாங்கமும் தெளிவாக இருக்கிறது.

ஒரு துணைக் கேள்வி. கடந்த பத்தாண்டுகளாக ஓட்டுக்குப் பணம் வாங்குவது, என்பது நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு அதிகரித்திருக்கிறது. இந்த உளவியலை எப்படித்தான் சரி செய்வது?

மிகக் கடினமான வேலை! ஊழலில் தான் அடித்த பணத்தை மக்களுக்குப் பங்கு கொடுப்பது மாதிரியான காரியம்தான் அது. அதை வாங்குவதன் மூலம், தன் தொகுதி எம்.எல்.ஏவையோ எம்.பி.யையோ மந்திரியையோ தட்டிக் கேட்கும் தார்மீக உரிமையை மக்கள் இழக்கிறார்கள். ஒரு திருடன் தன் திருட்டுப் பணத்திலிருந்து பங்கு கொடுக்கிறான். ஏன் பங்கு கொடுக்கிறான்? “இனியும் நான் திருடுவேன், அதற்கு முன்கூட்டியே உனக்குப் பங்கும் கொடுத்துவிட்டேன், அதனால் என் திருட்டை நீ கேள்வி கேட்காமல் சும்மா இருக்க வேண்டும்”, என்று தர்க்கத்தின் அடிப்படையில் கொடுக்கிறான். நாளையே “நீ ஏன் தண்ணீர் சப்ளை தரவில்லை, ரோடு போடவில்லை, தெருவிளக்கு மாட்டவில்லை” என்று கேள்வி கேட்டால், “அதான் ஓட்டுக்குக் காசு வாங்கிட்டேல்ல, அதோட அமைதியா இரு”, என்று பதில் வந்தால், என்ன அறத்தோடு மக்களால் பதில் கேள்வி கேட்க முடியும்?

இந்த ஓட்டுக்குப் பணம் கொடுக்கும் கலாசாரம் இன்று நேற்று வந்ததல்ல. 1929, 30-களில் ஓட்டுக்குப் பணம் கொடுத்திருக்கிறார்கள் என்று ஆனந்த விகடனில் ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. 1962-ல் காஞ்சிபுரத்தில் அண்ணா தோற்கடிக்கப்பட்டு நடேச முதலியார் வென்றது ஓட்டுக்குப் பணம் கொடுத்துதான். அப்போது அது எவ்வாறு நடக்கும் என்றால், ஏதேனும் ஒரு குறிப்பிட்ட பகுதியில் கஷ்டப்படும் மக்களுக்குப் பணம் கொடுத்து, எங்களுக்கு ஓட்டுப் போடுங்கள் என்று வேண்டுகோள் விடுப்பார்கள்.

ஆனால் நீங்கள் சொன்னதுபோல், கடந்த பத்தாண்டுகளில் இந்தப் பழக்கம் நிறுவனமயப்படுத்தப்பட்டு, வெளிப்படையாக, கூச்சமின்றி நடக்கிறது. ரேஷன் அட்டையின் அடிப்படையில் இந்த வீட்டில் இத்தனை ஓட்டுகள் இருக்கின்றன என்று கணக்குப் போட்டு, அறிவியல்பூர்வமாகத் திட்டமிட்டு இன்று பணப் பட்டுவாடா நடைபெறுகிறது. மேலும், முன்பெல்லாம் ஓட்டுக்குப் பணம் கொடுக்கச் சென்றால், எதிர்கட்சிக்காரர்கள் சண்டைக்கு வருவார்கள். ஆனால் இப்போது அவர்களும் ‘இவ்வளவு தருவோம்’ என்று ஒரு ஒப்பந்தம் போட்டுக்கொண்டு சரிசமமாக இந்தத் தவறில் ஈடுபடுகிறார்கள்.

சமீபத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலிலும் அதற்கு முன்பு நடந்த பாராளுமன்றத் தேர்தலிலும் “நீ ஏன் பணம் கொடுக்கவில்லை?”, என்று மக்களே கேட்டதுதான் கொடுமையின் உச்சம். “இவர் நல்லவர், அதனால் இவருக்கு ஓட்டுப் போட்டால் பணம் கிடைக்காது”, என்ற மனநிலைக்கு மக்கள் வந்துவிட்டனர். இது ஜனநாயக சீரழிவு. இது குறித்து கவலை கொள்பவர்கள், ‘அந்நியர்கள் வரக்கூடாது, நாய்கள் ஜாக்கிரதை’ என்று போர்டு வைப்பதைப்போல், தேர்தல் நேரத்தில் அவர்களின் வீட்டின் வெளியே ‘ஓட்டுக்குப் பணம் வாங்க மாட்டோம்’, என்ற பிரச்சாரப் பதாகையை வைத்து, சக பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். தமிழகம் முழுக்க இது ஒரு பிரச்சாரமாக மாறினால் மட்டும்தான் நாம் இப்பிரச்னையில் தீர்வை நோக்கி நகர முடியும். இல்லையென்றால் இதை ஒழிக்கவே முடியாது.

அரசியல் போராட்டங்கள், இயக்கங்களின் போராட்டங்கள் பலவற்றை இன்றைய தலைமுறை கவனிக்கிறது. அதே நேரத்தில் அரசியல் சார்பற்ற ஒரு இளைஞர் போராட்டமும் இப்பொழுதுதான் நடந்து ஓய்ந்திருக்கிறது. அரசியல்வாதிகளை இறுதிவரை அவர்கள் உள்ளே விடவேயில்லை. இந்த இரண்டு போராட்டங்களிலும் உள்ள சாதக பாதகங்கள் என்னென்ன?

அரசியல் சார்பற்ற போராட்டம் என்று ஒன்று இருக்கவே முடியாது.

மன்னிக்கவும், அரசியல் கட்சிகளற்ற போராட்டம் என்று கேட்க நினைத்தேன்.

பரவாயில்லை. அவர்கள் அரசியல்வாதிகளை உள்ளே விடவில்லை; அரசியல் கட்சிகளை சேர்த்துக்கொள்ளவில்லை. ஆனால் அங்கே அரசியல் இருந்தது. அங்கே பன்னீர் செல்வம் விமர்சிக்கப்பட்டார், சசிகலா விமர்சிக்கப்பட்டார், நரேந்திர மோடி விமர்சிக்கப்பட்டார். இன்னும் சொல்லப்போனால் எதிர்கட்சிகள் கூட விமர்சிக்காத அளவிற்கு அவர்கள் மிகக் கடுமையாக விமர்சிக்கப்பட்டார்கள். அதிகப்படியான அரசியல் ஆர்வமும், அதிகப்படியான அரசியல் அறிவும் இருப்பவர்களால்தான் கட்சி அரசியலை ஒதுக்கி வைத்துவிட்டுப் போராடமுடியும். அவர்கள் அரசியல் தெரியாமலோ அரசியல் ஆர்வமில்லாமலோ போராடவில்லை. “இந்தக் கட்சிகளை உள்ளே விட்டால் நம்முடைய அரசியலை இவர்கள் கெடுத்துவிடுவார்கள்”, என்பது அவர்களுக்கு மிகத் தெளிவாகத் தெரிந்திருக்கிறது. இதைவிட ஒரு பண்பட்ட முடிவு வேறென்ன இருக்க முடியும்? இப்படிப்பட்ட இந்த மாணவர்கள் ஏதோ அரசியல் ஆர்வமில்லாமல், ஆர்வக் கோளாறுகளாய் போராட்டம் செய்தார்கள், என்று சொல்வதே இந்த மாணவர்களைக் கொச்சைப்படுத்துவதாகும். 

அரசியல் கட்சித் தலைவர்களையும் அரசியல் அமைப்புகளையும் அவர்கள் உள்ளே விடாமல் இருந்தது ஒரு நல்ல விஷயம்தான். ஆனால் அதே நேரத்தில் ஒரு போராட்டம் என்றால் அதற்கு ஒரு ஒழுங்கு இருக்க வேண்டும். அதற்கென்று ஒரு கட்டுப்பாடான தலைமை அல்லது கூட்டுத் தலைமை, போராட்டத்திற்கென்று ஒரு ஒன்றுபட்ட கோஷம், மையப்புள்ளி ஆகியவை இருக்க வேண்டும்.

அந்த மாணவர்கள் தங்களுக்கான தலைமையையும், போராட்டத்திற்கான மையப்புள்ளியையும் உண்மையில் கட்டமைத்திருந்தார்களானால், கடைசி நேரத்தில் களேபரங்கள் நடந்திருக்காது. அரசியல் இயக்கங்களின் போராட்டங்களில் ஒரு பெரிய சாதகம் என்னவென்றால், சரியோ தவறோ, ஒரு தலைமை முடிவெடுக்கும், அதற்கு அந்த இயக்கம் கட்டுப்படும். மாணவர் போராட்டத்தில் இந்தத் தலைமை இல்லை. குறைந்தபட்சம் ஒரு பத்து, பன்னிரண்டு மாணவர்களின் கூட்டுத்தலைமையையாவது உருவாக்கியிருக்கலாம். அரசியல் இயக்கப் போராட்டங்களில் தலைவன் கவிழ்ந்தால் போராட்டம் பிசுபிசுத்துவிடும். அதே நேரத்தில் இத்தனை பேர் ஆர்வமாக இருந்தாலும் அவர்களின் சக்தியை செலுத்துகிற ஒரு ஆள் அல்லது ஆட்கள் அமையவில்லை. அமைப்பு இல்லாமல் எந்த ஒரு போராட்டமும் முழுமையாக, நற்பெயருடன் வெற்றியடையாது.

மீண்டும் ஒரு துணைக்கேள்வி. முதன்முறையாக இன்றைய தலைமுறை தெருவில் இறங்கிப் பெருந்திரளாகப் போராடியிருக்கிறது. இந்த நிலையில் அவர்கள் அரசியல்வாதிகளிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டியவை என்னென்ன? அரசியல்வாதிகள் அந்த இளைஞர்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டியவை என்னென்ன?

ஒரு தேதி குறித்து, நேரத்தை அறிவித்து, மாலை போலீசார் விட்டுவிடுவார்கள் என்ற தைரியத்தில், அதற்கேற்றவாறு ஒரு ஐந்து மணிநேரம் திட்டமிட்டுப் போராடும் அரசியல்வாதிகள் இருக்கும் காலகட்டத்தில், எப்பொழுது போராட்டம் முடியும் என்றே தெரியாமல், குறிக்கோளை அடையும் வரை வீட்டிற்கு செல்ல மாட்டோம், என்ற மன உறுதியுடன் போராடினார்களே இளைஞர்கள், அதுதான் அரசியல்வாதிகள் இந்த இளைஞர்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய மிக முக்கியமான பாடம்.

உறுதியான கட்டமைப்புடன் ஒரு போராட்டத்தையோ இயக்கத்தையோ எவ்வாறு உருவாக்கி செயல்படுவது, என்பதை இந்த இளைஞர்கள் அரசியல்வாதிகளிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும்.

இந்த இளைஞர்கள் முதன்முறையாக அரசியலை சுவைத்திருக்கிறார்கள். அவர்களின் அரசியல் புரிதலை மேலும் ஆழப்படுத்த அவர்களுக்கு என்னென்ன புத்தகங்களைப் பரிந்துரைப்பீர்கள்?

1. பெண் ஏன் அடிமையானாள்? - தந்தை பெரியார்
2. சாதியை ஒழிக்க வழி - அண்ணல் அம்பேத்கர்
3. வாழ்க்கை குறிப்புகள் – திரு.வி.க
4. தென்னாட்டுப் போர்க்களங்கள் - கா.அப்பாத்துரை
5. தமிழக வரலாறு: மக்களும் பண்பாடும் - கே கே பிள்ளை

அப்படியே நீங்கள் படித்து வியந்த, உங்களின் மனதிற்கு நெருக்கமான புத்தகங்களையும் பகிர்ந்துகொள்ளலாம்.

மேலே குறிப்பிட்ட திரு.வி.க.வின் வாழ்க்கைக் குறிப்புகள்தான்! என்னுடைய வாழ்க்கையில் அதிக தாக்கத்தை ஏற்படுத்திய மிக முக்கியமான புத்தகம் அது. அதை பலமுறை மறுவாசிப்பு செய்திருக்கிறேன். 1920-கள் முதல் 1950-கள் வரை ஒரு பத்திரிகையாளராக, ஒரு அரசியல்வாதியாக, ஒரு சமுதாய சீர்திருத்தவாதியாக, ஒரு பெண்ணியவாதியாக, ஒரு தொழிற்சங்கவாதியாக, ஒரு தமிழாசிரியராக இயங்கிய திரு,வி.க.வைப்போல் ஒரு பன்முகத்தன்மை கொண்ட ஆளுமை தமிழக அரசியலில் அவருக்கு முன்பும் யாருமில்லை, பின்பும் இதுவரை வரவில்லை. அவர் விட்டுச்சென்ற எழுத்துகளை நாம் கட்டாயம் வாசிக்க வேண்டும். இப்புத்தகம் இரண்டு பாகங்களாகக் கிடைக்கும்.

உள்ளாட்சித் தேர்தலை மே 14-க்குள் நடத்த வேண்டும் என்று உயர்நீதிமன்றம் சொல்லியிருக்கிறது. சட்டமன்றத் தேர்தலுக்கு மக்கள் தரும் முக்கியத்துவத்தை ஏன் உள்ளாட்சித் தேர்தலுக்கும் தர வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

இந்திய ஜனநாயகத்தின் அடித்தளம் என்பது உள்ளாட்சித் தேர்தல்தான். நாடாளுமன்றம் சட்டமன்றம் என்ற இரட்டைக் கட்டமைப்பைத் தாண்டி, உள்ளாட்சி அமைப்பு என்று ஒன்று வந்ததால்தால் அடித்தட்டு மக்களும் மக்கள் பிரதிநிதிகளாகும் வாய்ப்பு உருவானது. உள்ளாட்சி அமைப்பால் கிடைக்கப் பெறும் அதிகாரத்தின்மூலம், தங்களின் இடத்தில் தாங்களே சில மாற்றங்களை செய்ய முடியும், என்ற சாத்தியம் பிறக்கிறது. என்னைப் பொறுத்தவரை இன்றைய இளைஞர்கள் முதல்கட்டமாக உள்ளாட்சித் தேர்தலில் பங்கெடுக்க வேண்டும். அவர்களின் எந்தக் கனவுகளும் உடனே நாடாளுமன்றத்திலோ சட்டமன்றத்திலோ நிறைவேறிவிடாது. ஆனால் அவர்கள் ஒரு கவுன்சிலராகவோ ஒரு பஞ்சாயத்து யூனியன் பிரசிடென்டாகவோ ஆகும்போது, ஒரு குறைந்தபட்ச அதிகாரம் அவர்களை வந்தடைகிறது; அந்த அதிகாரத்திற்கு உட்பட்டு அவர்களால் தங்களைச் சுற்றியுள்ள இடத்தை முன்னேற்ற முடியும். ஊரை சுத்தம் செய்ய முடியவில்லை என்றால் குறைந்தபட்சம் தன் தெருவை சுத்தம் செய்ய முடியுமல்லவா? ஒரு 20 கவுன்சிலர்கள் கொண்ட நகராட்சியில் பத்து கவுன்சிலர்கள் நல்லவர்களாக வந்துவிட்டால், அவர்கள் ஒன்று கூடி பலவற்றை சாதிக்க முடியும். 

மேலும் அரசியல் கட்சிகளின் தயவின்றி, அவற்றின் சின்னங்கள் இன்றி, உள்ளாட்சித் தேர்தலில் நிற்க முடியும். பெரும் செலவும் செய்ய வேண்டியதில்லை. ஒரு சட்டமன்றத் தேர்தலில் பெரும் பணபலத்துடன் களத்தில் இறங்கும் கட்சிகளுக்கு எதிராக ஒரு சாமானியரால் நடைமுறையில் நிற்க முடியுமா? அல்லது பாராளுமன்றத் தேர்தலில்தான் நிற்கமுடியுமா? ஆனால் ஒரு சிறிய வார்டு எலக்‌ஷனில் ஒரு இளைஞர் நிற்கும்போது, தன் கனவுகளை நிறைவேற்ற சிறு வாய்ப்பு கிடைக்கிறது. இன்று தமிழக மக்களின் அடிப்படைத் தேவைகளைக் கூட நிறைவேற்ற முடியாத நிலையில்தான் அரசு நிர்வாகம் இருக்கிறது. சாக்கடை, கொசு போன்ற தொல்லைகள், மருத்துவ, பள்ளிக்கூட வசதியின்மை போன்ற சின்னச் சின்ன பிரச்னைகளை சரிசெய்ய, அல்லது கட்டுப்படுத்த உள்ளாட்சி அமைப்பு தருகிற அதிகாரம் போதுமானவை. இவற்றை இளைஞர்கள் உடனடியாகக் கைப்பற்ற வேண்டும். வருங்காலத்தில் அவர்கள் சட்டமன்றத்திற்குள் நுழைய உதவும் பாலமாகவும் அவை இருக்கும். எதார்த்தத்தின் அடிப்படையிலேயே பார்த்தால்கூட, சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தலை விட உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு வென்று, தன் கனவுகளை நிறைவேற்றுவதுதான் நடைமுறையில் சாத்தியமாகக்கூடியது. எனவே இளைஞர்கள் அதை உதாசீனப்படுத்தாமல், அதற்கு முக்கியத்துவம் தந்து பங்கேற்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

கூடங்குடம் போராட்டம், மீத்தேன் எரிவாயு போராட்டம், இப்போது நெடுவாசல் போராட்டம் - விவசாய, மீனவ மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது என்பது ஒரு வாதமாகவும், எரிசக்தி கிடைக்கிறது என்பது மாற்று வாதமாகவும் வைக்கப்படுகிறதே? புதிதாக அரசியலைப் பார்க்கும் இளைஞர்கள் இதை நியாய அநியாய அடிப்படையில் எவ்வாறு அணுகுவது?

இல்லை. விவசாயிகள் மற்றும் மீனவர்கள் சார்பாகப் போராடுபவர்கள் எரிசக்தியை எதிர்ப்பவர்கள், என்ற பொருளை இக்கேள்வி தருகிறது. அப்படி அல்ல. இதுபோன்ற பெரிய திட்டங்களில் முதலில் அரசாங்கத்திடம் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும். ஏன் இந்தத் திட்டம் கொண்டு வரப்படுகிறது, இந்தத் திட்டத்தினால் என்ன பயன், இதனால் சுற்றியுள்ள மக்களுக்கு ஏற்படும் நன்மையும் இழப்பும் என்ன, அந்த இழப்பை அரசாங்கம் எவ்வாறு ஈடுசெய்யப்போகிறது, இவையெல்லாம் அங்கு வசிக்கும் மக்களிடையே எழும் நியாயமான கேள்விகள். அந்தக் கேள்விகளுக்கான பதிலை வெளிப்படையாக வழங்கி, அம்மக்களுக்கு இருக்கும் சந்தேகங்களைத் தீர்க்கும் பெரும் பொறுப்பு அரசாங்கத்திற்கு இருக்கிறது.

ஆனால் எந்தத் திட்டத்திலும் அரசாங்கம் பொறுப்புடன் மக்களை அணுகுவதில்லை என்பதே உண்மை. எல்லாவற்றையும் இவர்கள் இரகசியமாக, காதும் காதும் வைத்தது போல் செய்கிறார்கள். அரசாங்கம் செய்வது பல நூற்றாண்டுகளுக்கு நன்மை பயக்கும் விஷயமாகவே இருக்கட்டும்; எரிசக்தியோ வளர்ச்சியோ எங்களுக்கு வேண்டாம், என்று யாரும் சொல்லவில்லை. அசம்பாவிதம் ஏற்படுமாயின் பாதுகாப்பு ஏற்பாடுகள் என்னென்ன, என்பதுதான் கேள்வி. அதற்கு அரசாங்கம் வெளிப்படையாக பதில் சொல்ல வேண்டாமா? மிகப்பெரும் பங்களாக்கள் எல்லாம் பூட்டப்பட்டு வசிக்க ஆளின்றிக் கிடக்கின்றன, அந்த பங்களாவினால் ஒரு பயன் இருக்கிறதா? அதுபோல் நாடு என்பது மக்களுக்காகத்தான். அந்த மக்களே அழிந்துவிட்டால் அந்த நாட்டிற்கு என்ன உயிர் இருக்க முடியும்?

கூடங்குளத்தில் இருபது வருடங்களாகப் போராட்டம் நடந்துகொண்டிருக்கிறது. ஆரம்பத்திலிருந்தே அரசாங்கம் வெளிப்படையாக நடந்துகொள்ளவில்லை. மக்கள் என்று ஒரு முடிவு கிடைக்கும்வரை வெளியே போக மாட்டோம் என்று உட்கார்ந்தார்களோ, அப்பொழுதுதான் பக்கம் பக்கமாக தினமும் அறிக்கைகள் வெளியிட்டு, அப்துல் கலாமை அழைத்து வந்து, மக்களை சமாதானப்படுத்துகிறேன் என்று போலீசை வைத்து மிரட்டி, அத்தனையையும் செய்தது. அரசாங்கம் செய்வது சட்ட விரோதமான காரியம் இல்லையென்றால், அதை ஏன் சட்ட விரோதமான காரியம்போல் மூடி மறைக்க வேண்டும்? அறிவியல் இரகசியங்களையா கேட்டார்கள்? அவர்களுக்கு இருக்கும் அச்சத்தைப் போக்க வேண்டும், என்ற நியாயமான குரலின் வெளிப்பாடே அந்தப் போராட்டம்.

சுற்று வட்டார மக்களிடம் கருத்து கேட்க வேண்டும், என்பது அடிப்படை. ஆனால் நியாயப்பூர்வமாக எந்தத் திட்டத்திற்கும் அரசாங்கம் மக்களிடம் கருத்து கேட்டதே கிடையாது. இல்லையென்றால் கண்துடைப்பாக ஒரு இருபது பேரை வைத்துக்கொண்டு, ஒரு பந்தல் போட்டு, அதைப் புகைப்படம் எடுத்து, ஒரு மணிநேரத்தில் கூட்டத்தை முடித்துவிட்டு, கருத்துக்கேட்புக் கூட்டம் நடத்தினோம் என்று கணக்கு காண்பித்துவிடுகிறார்கள். 

எங்கோ நடக்கும் ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக சென்னையில் போராடியதுபோல் இதுபோன்ற விஷயங்களுக்கு ஏன் தலைநகரில் போராட்டம் நடப்பதில்லை?

அந்த போராட்டங்களின் உளவியல் என்ன? பீதியினால்தானே போராட்டம் செய்கிறார்கள்? கல்பாக்கம் அணுமின் நிலையத்தின் ஒரு கிளையை சென்னை மெரினா கடற்கரையில் இன்று துவக்குவோம்; அடுத்த நாளே மக்கள் போராட்டம் நடக்கும்! அப்பொழுதுதான் தெரியும் ஒரு அணுமின் நிலையத்தின் அருகே வாழ்வதென்பது நம் மனநிலையை எவ்வாறு பாதிக்கக்கூடியது என்று. கல்பாக்கத்தில் கடந்த முப்பது ஆண்டுகளாகப் பிறக்கும் குழந்தைகள் ஆண்மைக் குறைபாடு, புற்றுநோய், ஊனம் போன்றவற்றோடு இருப்பதற்கு என்ன காரணம், என்று அரசாங்கம் சொல்ல வேண்டும். அந்தக் குழந்தைகளும் இந்த நாட்டின் குடிமக்கள்தானே? அவர்களின் சுகாதாரத்தைப் பற்றிக் கவலைப்படாமல் ஒரு அரசாங்கத்தால் இருக்க முடியுமா? அப்படி இருக்க முடியுமென்றால் அது எப்படிப்பட்ட ஒரு அரசாங்கம்? சாதாரணமாகக் கடலில் எண்ணெய் கொட்டியதற்கே வாளியின் மூலமாகத்தான் வெளியேற்றினோம். இதே மாதிரியான பாதுகாப்பு ஏற்பாடுகள்தான் கூடங்குளத்தில் இருக்கிறது என்றால், மீத்தேன் குழாய்களிலும் நெடுவாசலிலும் இருக்கும் என்றால், எத்தனை லட்சம் மக்களை இந்தத் திட்டங்களுக்காக பலியிட முடியும்?

இந்த  சந்தேகங்களுக்கும் அச்சங்களுக்கும் பதில் சொல்லும் பொறுப்பு அரசாங்கத்திற்கு இருக்கிறது. அரசாங்கத்திற்கு வேண்டுமானால் இதுபற்றிக் கவலை இல்லாமல் இருக்கலாம்; ஆனால் தன்னார்வல அமைப்புகளுக்கும், சமூக அக்கறை கொண்ட தனிநபர்களுக்கும், அங்கே வசிக்கும் பொதுமக்களுக்கும் இந்த சந்தேகங்கள் வந்தால், அவர்கள் கேள்வி கேட்கக்கூடாதா? இவற்றிற்கெல்லாம் பதிலளிக்க இந்த அரசாங்கத்திற்கு என்ன தடை இருக்க முடியும்? இதில் வெளிப்படைத்தன்மை இல்லை, அதனால்தான் இந்தப் போராட்டங்களே நடக்கின்றன, அவ்வளவுதான். சொல்வதற்கு வேறொன்றும் இல்லை.

காவிரி பிரச்னை, முல்லை பெரியாறு அணை விவகாரம் போன்றவற்றில் நம்முடைய உரிமைகளை மீட்டெடுக்கப் போராடுவது என்பது ஒரு புறம். ஆனால் அப்படி அடித்துப்பிடித்துப் பெறும் தண்ணீரை நாம் சரியாகப் பயன்படுத்துகிறோமா? தமிழ்நாடு நீர்மேலாண்மையில் எந்த நிலையில் இருக்கிறது? 

வெளிப்படையாக சொல்ல வேண்டுமென்றால் நீர்மேலாண்மை குறித்த அக்கறையோ, விழிப்புணர்வோ தமிழகத்தில் கிடையவே கிடையாது. காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு, கிருஷ்ணா போன்ற பிரச்னைகளில் அண்டை மாநிலங்கள் சம்பந்தப்பட்டுள்ளன. ஆனால் நம்முடைய மாநிலத்திற்கு உள்ளேயே நீராதாரத்தைப் பெருக்குவதற்கான என்ன நடவடிக்கைகளை நாம் மேற்கொண்டோம்? மழை வரவில்லை என்று சாக்கு சொல்லாமல், அப்படி மழை வந்தால் அதை சேமிக்க கிராமங்களில் கண்மாய்களை, ஊரணிகளை, வாய்க்கால்களைத் தயார் நிலையில் வைத்திருக்கிறோமா? அதுவும் இல்லையென்றால் சொட்டு நீர் பாசனத்தின் மூலம் நீர்ப்பற்றாக்குறையை சமாளிக்கும் விதமாக தொழில்நுட்ப ரீதியாக சிந்திக்கிறோமா? அல்லது உற்பத்திப் பரப்பை அதிகப்படுத்துவதற்குத்தான் திட்டங்கள் ஏதேனும் வகுத்திருக்கிறோமா? அரசாங்கம் ஒன்று, மேலோட்டமான, ஒன்றுக்கும் உதவாத இலவசத் திட்டங்களை அறிவிக்கிறது. அல்லது, நதிகளை இணைப்பது, கடல்நீரைக் குடிநீர் ஆக்குவது போன்ற கனவுத் திட்டங்களைப் பற்றிப் பேசிக்கொண்டே இருக்கிறது. குறைந்த காலத்தில் நம் தேவையைப் பூர்த்தி செய்யக்கூடிய, நடைமுறைக்கு எளிதில் ஒத்துவரக்கூடிய திட்டங்கள் எவற்றையும் அரசாங்கம் இதுவரை முன்வைக்கவில்லை. நீர்மேலாண்மை என்னும் விஷயத்தைப் பற்றிய அடிப்படை அறிவே முதலில் அரசாங்கத்திற்கு இருக்கிறதா என்று சந்தேகமாக இருக்கிறது.

போலி மதச்சார்பின்மைவாதிகள் மீதுதான் எங்களுக்கு விமர்சனம், என்று பாஜக-வினர் சொல்கிறார்கள். அந்த விமர்சனத்தில் நியாயம் இருக்கிறதா?

மதச்சார்பின்மை பேசுபவர்கள் இஸ்லாமிய, கிறித்துவ விழாக்களில் கலந்துகொள்வது வாக்கு வங்கி அரசியல்தான். ஒருவர் நோன்புக் கஞ்சி குடித்துவிட்டு விநாயகர் சதுர்த்தியை விமர்சித்தால் அவர் போலி மதச்சார்பின்மைவாதியில்லாமல் வேறு யார்? என்னைப் பொறுத்தவரை எந்த மதத்தையும் சாராமல் இருப்பதுதான் மதச்சார்பின்மை, அனைத்து மதங்களையும் சமமாக மதிப்பது அல்ல. மற்றபடி சிறுபான்மையினரின் வாக்கை இவ்வாறு பெறுகிறார்களே என்பதுதான் பாஜக-வுக்கு இதில் பிரச்னை. மதச்சார்பின்மையிலோ, போலி மதச்சார்பின்மையிலோ உள்ள நியாய அநியாயங்களைப் பற்றிப் பேச பாஜக-விற்குத் தகுதி இல்லை, ஆனால் அது இரண்டாம்பட்சம்தான். பாஜக-வின் அந்த விமர்சனத்தில் நியாயமும் உண்மையும் இருக்கிறது என்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது. இதனால் அடிபட்டுப் போவது மதச்சார்பின்மை என்ற அந்த உயரிய கருத்தாக்கம்தான்.

டிரம்ப், ல பென், ஷின்சோ அபே, மோடி - உலகமே வலதுசாரிக் கொள்கையை நோக்கிச் செல்வதுபோல் இருக்கிறதே? 

ஒருவருடைய நோக்கம் பணம் சார்ந்ததாக மட்டுமே இருக்கும்போது, அவர் வலதுசாரியை நோக்கிதான் செல்வார். நாம் என்று நம்முடைய கொள்கைகளையும் அறத்தையும் விட்டுவிடுகிறோமோ, அப்போது நம்முடைய குறிக்கோள் வெறும் பணமாக மாறுகிறது. அப்படிப் பணம் என்ற நோக்கத்திற்காக ஒவ்வொருவருடைய மனோபாவமும் மாறும்போது, அங்கு டிரம்ப்தான் ஜெயிப்பார், இங்கு மோடிதான் ஜெயிப்பார்.

இல்லை நான் பொருளாதாரம் சார்ந்து மட்டும் கேட்கவில்லை... 

நான் பணம் என்று சுட்டிக்காட்ட விரும்புவது வளர்ந்து வரும் நம்முடைய சுயநலத்தைத்தான். அந்த சுயநலம்தான் பணத்தாசையாக வெளிப்படுகிறது. சுயநலம் பிரிவினைவாதத்திற்கு வழிவகுக்கும். அந்தப் பிரிவினைவாதத்தை இந்த வலதுசாரி சக்திகள் சாதியின் பெயரால், மதத்தின் பெயரால், இனத்தின் பெயரால், பழமைவாதத்தைப் புனிதப்படுத்துவதன் மூலம் ஊக்குவிப்பார்கள். நாம் ஒன்று சேர்ந்துவிடக்கூடாது, என்ற வலதுசாரிகளின் தந்திரம் அது. அனைவரும் ஒன்றுபடுவோம் என்பதே இடதுசாரி சிந்தனைதானே? சமூகத்தை ஒரு கார்ப்பொரேட் நிறுவனமாக மாற்றும் அந்த சூழ்ச்சியின் வெற்றிதான் டிரம்ப் மாதிரியான ஆட்கள் வெற்றி பெறுவது.

கடைசி கேள்வி. ஊடகத்துறையில் எத்தனையோ பேருக்கு நீங்கள் ஆதர்சம். உங்களுக்கு யார் ஆதர்சம்?

எனது பள்ளிப்பருவ காலத்தில் இவர்களது எழுத்துகளை முதன்முதலாகப் படிக்கிறேன். சொல்ல வேண்டிய கருத்தை எப்படி ஆதாரங்களுடன் சொல்ல வேண்டும் என்பது சின்னக்குத்தூசியிடம் இருந்தும், எப்படி அழுத்தமாகச் சொல்லவேண்டும் என்பதை இன்குலாப்பிடம் இருந்தும் கற்றுக் கொண்டேன்.

நன்றி. http://vishnuvaratharajan.blogspot.in/2017/03/blog-post_87.html?m=1

1 comment:

Rathnavel Natarajan said...

(அவசியம்) வாசிக்க வேண்டிய பேட்டி - விரிவான பேட்டி, நண்பர்கள் நேரம் ஒதுக்கி ஆழ்ந்து படிக்க வேண்டுகிறேன். எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி திரு ஜோதிஜி திருப்பூர்