Saturday, April 27, 2013

கடந்து போன நாட்கள்எனக்கு நேரமில்லை என்று யாராவது என்னிடம் சொன்னால் வியப்புடன் அவர்களைப் பார்பபதுண்டு. காரணம் தொடர்ச்சியாக 18 மணி நேரம் வேலை செய்துவிட்டு மறுநாள் அதே சுறுசுறுப்புடன் அதே வேகத்துடன் பணிபுரிபவர்களுடன் கடந்த 20 வருடங்களாக ஓடிக் கொண்டுருப்பதால் + பார்த்துக் கொண்டிருப்பதால் சொல்பவரின் இயலாமையை மனதிற்குள் குறித்துக் கொள்வதுண்டு.  

ஆனால் கடந்த இரண்டு வாரத்தில் எழுத வேண்டும் என்று நினைத்து வைத்திருந்த ஏராளமான விசயங்களை சற்று கோடிட்டு காட்டவே இந்த பதிவு.

வரலாறு முக்கியம் அமைச்சரே.

++++++++++++++++++++++++++++++++++++++++++++

சென்னையில் மத்திய அரசு பணியில் உள்ள பள்ளித் தோழன் என்னுடைய டாலர் நகரம் புத்தகத்தை படித்து முடித்தவுடன் முக்கியமான ஒரு அறிவுரையைச் சொன்னான். 

"உனது புகைப்படம் போட்டு புத்தகம் வந்துவிட்டது.  இனி தான் நீ கவனமாக இருக்க வேண்டும்.  குறிப்பாக எதிரிகளை வளர்த்துக் கொண்டு விடாதே" என்றான்.  எனக்கு அப்போது அது பெரிதாக தெரியவில்லை.  

அவன் சொன்னதன் உள்ளர்த்தம் ஒவ்வொரு சமயத்திலும் ஒவ்வொருவரின் மூலமும் பாடங்களாக கிடைத்துக் கொண்டிருக்கின்றது. 

கடந்த நாலைந்து வருடங்களாக என் மனோநிலையில் ஏராளமான மாறுதல்கள் வந்துவிட்டதால் வேகம் குறைந்து, மற்றவருடன் பேசக் கூடிய வார்த்தைகள் கூட அளவோடு தான் வருகின்றது.  

விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப்போவதில்லை.

+++++++++++++++++++++++++++++++++++++++++++

எது நடக்கக்கூடாது என்று நினைத்து இருந்தேனோ அது நடந்தே விட்டது. 

இந்த புத்தகம் வெளியீட்டு விழா தொடர்பாக அழைப்பு விடுக்க பலரையும் சந்தித்த போது தான் நான் எழுதுவது என்பது திருப்பூரில் தொழில் சார்ந்த நண்பர்கள் பலருக்கும் தெரிய வந்தது.  ஆனால் தற்போது எனது அலுவலகம் வரைக்கும் என் புத்தகம் குறித்த தகவல்கள் வந்து சேர்ந்து விட்டது. முதலில் என்னிடம் கேட்க தயங்கிக் கொண்டு அலுவலகம், தொழிற்சாலை என்று சுற்றி வந்ததை பலரின் மூலம் என் காதுக்கு வந்த போது ஏதும் எதிர்வினையை கொண்டு வந்து சேர்க்குமோ? என்று யோசித்துக் கொண்டிருந்தேன். ஆனால் இதன் மூலம் புதிய பொறுப்புகள் வந்து சேர்ந்தது தான் ஆச்சரியம்.

நம்மிடம் உள்ள மற்ற கலையார்வங்கள் எந்த பணியில் நாம் இருந்தாலும் அது பயன் உள்ளதாக இருக்கும் என்பதை கடந்த ஒரு வாரத்தில் நடந்த பல சம்பவங்கள் எனக்கு உணர்த்திக் காட்டியுள்ளது.

நம் கலையார்வம் நம்மை வளர்க்கும். 

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

இவனிடம் கிரியேட்டிவிட்டி இருக்கிறது என்பதை உணர்ந்து கொண்ட நிர்வாகம் ஆடைத் தொழிலின் அடி முதல் கடைசி வரைக்கும் உள்ள நிகழ்வுகளை ஆவணமாக்கும் பொறுப்பை வழங்கியது. 

கடந்த 20 வருடங்களாக இந்த தொழிலில் இருந்தாலும் முழுமையாக ஒரே சமயத்தில் தற்போது எனக்கு கிடைத்த வாய்ப்பு போல வேறு ஒருவருக்கு அமையுமா? என்று தெரியவில்லை.  ஒவ்வொரு நிலையிலும் (பஞ்சு முதல் ஆடைகளை பெட்டி போட்டு ஏற்றுவது வரைக்கும்) என்னை நானே ஆவணமாக்கிக் கொண்ட வாய்ப்பு எதிர்பாராத நிலையில் அமைந்தது.  நானும் இந்த தொழிலில் இருந்தேன் என்பதற்கு ஒரு சாட்சியாக ஒரே ஒரு படத்தை இந்த இடத்தில் பகிர்ந்து கொள்கின்றேன்.

ஆடைத் தொழிலின் தொடக்கம் என்பது வெளிநாட்டுக்காரனுடன் பேசி ஒப்பந்தம் உருவாக்குவ்து.  இது தான் ஷோரூம் அல்லது பையர் ஹால் அல்லது மீட்டிங் ஹால் என்று பலவாறு அழைக்கப்படுகின்றது.  

நேயர்களின் விருப்பத்திற்கேற்ப ஒவ்வொரு படமும் சில ஆடைத் தொழில் சார்ந்த செய்திகளும் விரைவில் வெளிவரும்.  

கூடவே நம்மோட மொகறையும்.

வவ்வால் போன்றவர்கள் ஒப்பனை அதிகமோ என்று பொறாமைப்பட வேண்டாம்.  

எல்லாமே லென்சு தான் காரணம்.

புண் பட்ட மனதை தண்ணீர் விட்டு ஆற்று.

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

இவர்களுக்கு புத்தக வாசிப்பு என்பது சாத்யமில்லை என்று கருதிக் கொண்டவர்கள் பலரின் பார்வையிலும் டாலர் நகரம் புத்தகம் பட்டுள்ளது என்பது ஆச்சரியமாக உள்ளது. 

அலுவலகத்தில் என்னுடன் பணிபுரிபவர்கள், தொழிற்சாலையில் உள்ளவர்கள் என்று எப்படியோ இந்த புத்தகம் கண்ணில் பட்டு சற்று தயக்கத்துடன் நீங்க தானே ஜோதிஜி என்று கேட்கும் போது உள்ளூற உருவாகும் படபடப்பு மற்றும் இனம் புரியாத நடுக்கம் தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை.

இவர்கள் படிக்க மாட்டார்களா? என்று யோசித்த பலரும் ஏமாற்றத்தை தந்துள்ளனர். ஆனால் டைலர் படித்து விட்டு கை குலுக்கும் போது சற்று வியப்பாக உள்ளது. தற்போது இருக்கும் பதவிக்கும் புத்தகத்தில் உள்ள முரண்பட்ட தகவல்களையும் ஒன்றாக வைத்துக் கொண்டு எப்படி இவர்கள் நம்மை பார்ப்பார்கள்? என்ன மாதிரியான உள்வாங்கல் இவர்களுக்குள் இருக்கும் என்று பலவிதமான யோசனைகள் குறுக்கும் நெடுக்கும் தினந்தோறும் ஓடிக் கொண்டேயிருக்கின்றது. 

கண்ணை நம்பாதே, உன்னை ஏமாற்றும்.

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

பிரபல்யம், புகழ்ச்சி போன்றவற்றை கடந்த இரண்டு மாதமாக பலவாறாக  யோசித்துக் கொண்டு இருக்கின்றேன்.  பலரின் நடவடிக்கைகளையும் கூர்ந்து கவனித்துக் கொண்டு இருக்கும் போது இந்த பதிவு எதார்த்தமாக என் கண்ணில் பட்டது.  என் மனதில் உள்ள பலவற்றை அப்படியே படம் பிடித்து காட்டியுள்ளது.

சில கல்லூரிகளில் பேச வாய்ப்பு வந்த போது மறுத்த காரணங்கள் இதை படித்த போது சரியெனவே பட்டது.

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

கடந்த இரண்டு மாதங்களில் என்னைச் சுற்றிலும் நடக்கும பல சம்பவங்களின் மூலம் நடுத்தரவர்க்க மக்களின் மனோபாவங்களை அதிகமாக உள்வாங்கிக் கொண்டிருக்கின்றேன். தற்கால வாழ்க்கை முறைகளில் மாறிப் போன பல விசயங்கள் கண்ணில் உறுத்தலாகவே தெரிகின்றது.  நிச்சயம் இதைப் பற்றி எழுதுவேன்.

வயதின் கோளாறா? இல்லை ஒத்துப் போகாதா தன்மையா?
++++++++++++++++++++++++++++++++++++++++++++

எனது பள்ளிக்கூட தினங்களில் ஒவ்வொரு வருட கோடை விடுமுறை தொடங்கும் போது சட்டையை அப்படியே கழட்டி போட்டு விட்டு வெற்று உடம்போடு பொட்டை வெயிலில் டவுசரோடு ஓடிதிரிந்த நாட்கள் இப்போது நினைவுக்கு வந்து போகின்றது.  காரணம் தேவியர்கள் கடைசி பரிட்ச்சை எழுதி முடிந்து வீட்டுக்குள் நுழைந்த அந்த மதியம் நேரம் இன்னும் மனதில் நிழலாடிக் கொண்டு இருக்கின்றது.  வந்த மூவரும் அப்படியே தனது பைகளை தூக்கி எறிந்து விட்டு அப்பாடா என்றார்கள்.  

களைப்பா? வெறுப்பா? .
+++++++++++++++++++++++++++++++++++++++++

எனக்கு 33 வயதில் தான் முறைப்படியான கணினி சார்ந்த அறிமுகம் உருவானது.  அப்போது தான் தொழில் ரீதியான அவசிய தேவைகளும் ஏற்பட்டது.  ஆனால் தேவியர்களின் வாழ்க்கையில் கணினி என்பது எட்டு வயதில் அறிமுகம் ஆனது.  கடந்த இரண்டு வருடத்தில் என்னுடைய மடிக்கணினியை சமயம் கிடைக்கும் போதெல்லாம் தொடத் தொடங்கியவர்கள் படிப்படியாக அவர்களாகவே ஒவ்வொன்றாக கற்றுக் கொண்டு என்னை கதிகலக்க வைத்துக் கொண்டிருந்தார்கள்.  

எதையும் நான் கற்றுக் கொடுத்ததே இல்லை. மடிக்கணினியில் அவர்கள் விருப்பப்படி சேமித்து வைத்திருந்த விளையாட்டுச் சமாச்சாரங்களில் அவர்களின் பயணம் தொடங்கியது.  

திடீரென்று ஒரு நாள் கூகுளில் கேம்ஸ் என்று அடித்துப் பார்க்கச் சொன்னேன்.  வந்து விழுந்ததில் ஏதோவொன்றில் நுழைந்து தடம்புரிந்து இன்று விதவிதமான ஆன் லைன் கேம்ஸ் ல் தங்கள் திறமையைக் காட்ட என் நிலமை அதோகதியாகி விட்டது.  

பொறுத்தாள்வார் பூமி ஆள்வார் என்று சொன்னதை நான் நம்பவில்லை.  

காரணம் மூன்று பேர்களின் வரிசை முடிந்து என் கைக்கு வரும் போது நான் பாதி தூக்கத்தில் ஜீவசமாதி ஆகியிருப்பேன்.  ஆகா நம்மோட வாழ்க்கையை இவர்கள் பணயம் வைக்கின்றார்களே என்று கிடைக்கும் பணத்தை சேமித்து வைங்க.  இந்த விடுமுறையில் ஒரு டெக்ஸ் டாப் வாங்கித் தருகின்றேன் என்று எதார்த்தமாக சொல்லி வைக்க அதுவும் எனக்கே எதிராக திரும்பியது.  நான் கொண்டு வந்து வைக்கும் பணமெல்லாம் உரிமையுடன் கேட்டு வாங்கி அவரவர் உண்டியலில் போட்டு நிரப்ப ஆரம்பித்தனர்.  அவர்கள் நினைத்தபடியே நண்பரிடம் சொல்லி கணினியர் ஆகிவிட்டனர்.

இப்போது பெரிய திரை வசதியுள்ள டெஸ்க்டாப் ல் விளையாட்டுடன், அறிவியல் சார்ந்த யூ டியூப் சமாச்சாரங்களை பார்த்துக் கொண்டிருப்பவர்களிடம் ஏதோவொன்றை கேட்க நினைத்தாலும் "உங்களுக்கு அலுவலகத்திற்கு நேரமாகி விட்டது. கிளம்புங்க" என்கிறார்கள். 

இந்த அனுபவத்தை விரைவில் எழுதி வைத்துவிட வேண்டும்.

வயதாகும் போது சூதனமாக இருக்க வேண்டும் போல.

Sunday, April 14, 2013

வரலாறு கிலோ என்ன விலை?

இலங்கையின் தொடக்க கால சரித்திர நிகழ்வுகளை இதுவரையிலும் ஆங்கிலேயர்கள் உள்ளே நுழைந்து அவர்களின் ஆட்சி தொடங்கிய காலம் வரைக்கும் உண்டான நிகழ்வுகளை 11 தொடர்கள்  மூலம் பார்த்து உள்ளோம்.  மீதி உள்ள தொடர்களை ஒரு சிறிய இடைவெளி விட்டுத் தொடர்வோம்.


+++++++++++++++++++++++++++++++++++++++++++

சென்றவாரத்தில் என் மூத்த அக்கா அவர்கள் பள்ளியில் நடந்த ஒரு உரையாடரை என்னுடன் பகிர்ந்து கொண்டார்.  

அவர்கள் பள்ளியில் அவர் தலைமையாசிரியாக இருப்பதால் அந்த பகுதியில் உள்ள ஒரு முக்கியமான தமிழ் ஆசிரியரை வரவழைத்து ஒரு நிகழ்ச்சிக்காக உரையாற்றி வரவழைத்து இருந்தார்.  

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி பற்றி வந்த ஆசிரியர் உணர்ச்சி பூர்வமாக உரையாற்றி முடித்து விட்டு மாண்வர்களைப் பார்த்து உங்களுக்கு கேள்விகள் ஏதும் கேட்கத் தோன்றினால் தாராளமாக எழுந்து நின்று என்னிடம் கேட்கலாம் என்றாராம்.  தயங்காமல் ஒரு மாணவன் எழுந்து நின்று கேட்ட கேள்வி இது.

நான் கப்பலோட்டிய தமிழன் பற்றி தெரிந்து கொண்டு என்ன ஆகப் போகின்றது? என்னுடைய நிகழ்கால வாழ்க்கையில் எந்த வகையில் இவர் உதவ முடியும்? பழைய வரலாற்றுகளை கேட்பதால் படிப்பதால் என்ன லாபம்? என்று கேட்க வந்த ஆசிரியர் சிரித்துக் கொண்டே மீண்டும் பத்து நிமிடம் அது குறித்து பேசினாராம்.  

அவர் சொன்ன இறுதியான உரையின் சுருக்கமான வரிகள் இது.

உன்னுடைய கடந்த காலம் பற்றி யோசித்தால் என் எதிர்காலத்தை திட்டமிட முடியும்.  உன் நிகழ்காலத்தைப் பற்றி புரிந்தால் தான் உன் கடந்த கால நிகழ்வுகளை எப்படி உள்வாங்கி இருக்கின்றாய் என்பது உனக்கு புரியும்.  

இது போலத்தான் நாட்டுக்கும், நாடு சார்ந்த செய்திகளுக்கும்.  

மாணவனுக்கு புரிந்ததோ இல்லையோ அக்கா ஆச்சரியமாக சொன்ன விசயம் அந்த ஆயிரம் பேர் கூட்டத்தில் அவன் எழுந்து நின்று தைரியாமாக பேசிய விதம் எனக்கு ரொம்ப பிடித்து இருந்தது என்றார்.

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

அவசரமாக ஓடிக்கொண்டிருக்கும் உலகில் வாசிக்க நேரம் இருப்பதில்லை. பெரும்பாலும் லைட்ரீடிங் என்ற ஆங்கில வார்த்தைக்கு பலரும் அங்கீகாரம் கொடுத்து இது தான் இப்போதைக்கு சரி என்பதாக ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றாக ஆகிவிட்டது.

1992 ஆம் ஆண்டு சமயத்தில் என்னால் புத்தகங்கள் படிக்க முடியாத சூழ்நிலையில் வாழ்ந்து கொண்டிருந்த போது ஏராளமான கேசட் வாங்கிக் கொண்டு வந்து நான் தனியாக இருந்த வீட்டில் சமயம் கிடைக்கும் போதெல்லாம் அரசியல், ஆன்மீகம், இலக்கியம் சார்ந்த பலரின் பேச்சுக்களை நள்ளிரவு வரைக்கும் கேட்டுக் கொண்டே தூங்குவதுண்டு.  ஒவ்வொருவரின் உண்மையான முகங்களும், நோக்கங்களும், கொள்கைகளும் தெரியத் தெரிய நாம் நேரத்தை வீணடிக்கக்கூடாது என்று அந்த பழக்கமும் போய்விட்டது.

கடந்த ஒரு மாதமாக எனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஞானாலயா திரு. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தற்போது பல்வேறு கூட்டங்களில் உரையாற்றும் ஒலிக் கோப்புகளை கேட்டுக் கொண்டே இருக்கின்றேன். பல ஆச்சரியமான தகவல்கள்.  எளிமையான விசயங்கள் ஆனால் உண்மையான தகவல்கள்.  

நீங்கள் ஏதோவொரு வேலையில் இருக்கும் போது திரு. கிருஷ்ணமூர்த்தி உரையை கேட்டுக் கொண்டே பணியாற்ற முடியும்.

வலையேற்றிய சிவாவுக்கு என் நன்றிகள்.

ஆர்வம் இருப்பவர்களுக்கு டாக்டர் மு.வ  குறித்து பேசியதை கேட்டுப் பாருங்கள்.

 
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

சிறுபத்திரிக்கைகளுக்குப் பின்னால் உள்ள பெரும் சரித்திரம் பற்றி ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி தஞ்சாவூர் பாரதி சங்கத்தில் தமிழறிஞர்களும் வாக்கும் என்ற பொருளில் சி.சு.செல்லப்பாவின் நூற்றாண்டு விழாவை ஒட்டி ஆற்றிய  உரை....

  (இடம்:-சுப்பையா நாயுடு உயர்நிலைப்பள்ளி, தஞ்சை)

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

டாலர் நகரம் நூல் வெளியீட்டுவிழாவில் திருப்பூர் தாய்த்தமிழ்ப் பள்ளிக் குழந்தைகள் பாடிய பாடல்களின் மொத்த தொகுப்பு இது. நெருங்கிய நண்பரின் வேண்டுகோளுக்கிணங்க.

மொழி, கல்வி, கலாச்சாரம், நமது வாழ்க்கையை பிரதிபலிக்கும் வரிகளும் சவுக்கடிகளும்.

Friday, April 12, 2013

11. மன்னர்களும் மாட்சிமை தாங்கியவர்களும்கண்டி என்பது இலங்கையின் மத்திய மலைநாட்டுப் பகுதி. கிபி 14 ஆம் நூற்றாண்டு காலம் முதல் தனி ராஜ்யமாகவே மன்னர்களால் ஆளப்பட்டு வந்தது. ஆண்டு கொண்டுருந்தவர்கள் சிங்கள தமிழ் மன்னர்களாக இருந்தாலும் இரு இன மக்களும் ஒன்றாகத்தான் வாழ்ந்தார்கள்.  

இதே நிலைமை தான் மொத்த தீவுப் பகுதியிலும் இருந்தது.  பெரும்பான்மை சிறுபான்மை என்ற வார்த்தைகள்  பின்னால் வந்தவர்கள் தங்கள் வசதிகளுக்காக உருவாக்கியது.  

ஆதிக்கம் செலுத்த விரும்பியவர்கள், இறுதியில் அதில் ஜெயித்து வருவர்களும் தானே ஆட்சியில் அமர முடியும். 

சிங்களர்களின் கடைசி மன்னராக கண்டிப்பகுதியில் இருந்தவர் ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கே. இவருடைய உண்மையான பெயர் கண்ணுச்சாமி.  சிங்களராக மாறியவர்.

இவர் மன்னராக வருவதற்கு முன்பு முந்தைய மன்னராக இருந்தவர் ஸ்ரீ ராஜாதி ராஜசிங்க.  இவரும் தென்னிந்தியாவிலிருந்து சென்றவர்.  ஆழ்ந்த புலமையும், சிறந்த அறிவுடன் இருப்பவர்களுக்கு ஏதோ ஒரு குறை இருப்பது தானே உலக நியதி.  குழந்தை பாக்யம் இல்லாத ஸ்ரீ ராஜாதி ராஜசிங்கேவின் மரணம், எப்போதும் ராஜா ராணி கதைகளில் வருவது போல் அங்கு அதிகாரப் போட்டியும் ஆரம்பமாகியது. 

மன்னர் இறக்கும் தருவாயில் தனக்குப் பிறகு வரவேண்டியவரை தேர்ந்தெடுக்கும் பொறுப்பை தலைமை அமைச்சராக இருந்த பிலிமத்தலாவிடம் ஒப்படைத்திருந்தார்..

வாரிசு யாரென்று தேர்ந்தெடுக்கும் படலம் ஆரம்பமான போதே உள்ளே குடுமிபிடி சண்டையும் தொடங்கியது.  இறந்த மன்னரின் மனைவி உபேந்திரம்மாவின் சகோதரர் கோதாவில் குதித்தார்.  

ஆனால் தலைமை அமைச்சர் இறுதியாக மன்னராக தேர்ந்தெடுத்தது கண்ணுச்சாமி என்ற மேலே சொன்ன ஸ்ரீ விக்கிரம ராஜ சிங்கேவை.  

இவர் தென்னிந்தியாவில் இருந்த நாயக்கர் இனத்தைச் சேர்ந்தவர். எப்போதும் போல பட்டம் சூட்டியதும் தனது பெயரை மாற்றிக்கொண்டு முழுமையான சிங்களராக மாறினார்.

இவரின் அதிர்ஷ்ட கதவுகள் திறந்த போதே அவஸ்த்தைகளும் ஜன்னலின் வழியாக சூறைக்காற்றாக உள்ளே வரத் தொடங்கியது.  

ஆட்சி காலம் முழுக்க சதிகளுடன் ஓரே ஓயாத போராட்டங்கள் தான்.  

வாய்ப்பு கிடைக்காதவர்கள் ஒரு பக்கம்.  இவரின் வம்சக் கோளாரை ஆராய்ந்து அவஸ்த்தை கொண்டவர்கள் மறுபக்கம். 

கல்வி முதல் கலை வரைக்கும் மொத்தத்தில் புத்திசாலியாகவே வாழ்ந்த இவருக்கும் சதிகாரர்களை வெல்லும் அளவிற்கு சந்தர்ப்ப சூழ்நிலைகள் சாதகமாக அமையவில்லை.  போதாத குறைக்கு அப்போது பிரிட்டிஷ் வேறு முடியாட்சியை முடித்துக் கட்டும் நோக்கத்தில் அலைந்து கொண்டுருந்தனர்..  

இவரை கவிழ்த்தே ஆக வேண்டும் என்று கங்கணம் கட்டிகொண்டுருந்த எலப்போலா என்பவரின் பின்னால் இருந்த சிங்கள கூட்டங்களை வேறு சமாளிக்க வேண்டும். 

மன்னரை முடித்துக்கட்ட வேண்டும் என்ற வாய்ப்புக்காக காத்துக் கொண்டுருந்தவர்களின் வாசல் கதவின் அருகே வந்து நின்றார்கள் ஆங்கிலேயர்கள். 

ஆங்கிலேயர்களுடன் எலப்போலா கூட்டணி அமைக்க மன்னர் தலைமறைவாகி கண்டி காடுகளுக்குள் தஞ்சம் புகுந்தார்.  

எலப்போலாவின் நாசகாரப்படைகள் மன்னரின் மனைவியை கண்டு கொள்ள இறுதியில் மன்னரும் சரண் அடைய தமிழ்நாட்டு வேலூர் சிறையில் சாகும் வரைக்கும் அடைக்கப்பட்டார். இவர் உருவாக்கிய சிங்கம் பொறித்த கொடி தான் இன்று வரையிலும் இலங்கை அரசாங்கத்தின் தேசியக் கொடி.  

பின்னாளில் இலங்கை சுதந்திரம் பெற்ற போது எந்தக் கொடியை இலங்கைக்கு பயன்படுத்துவது என்ற கேள்வி எழுந்த போது இந்தக் கொடியை சிங்களத் தலைவர் பிரதமராக வந்த சேனநாயகா சுட்டிக் காட்டினர்.

மூன்று இனங்களுக்கும் பொதுவான சின்னம் பொதித்த கொடி வேண்டுமென்ற ஆலோசனையை புறக்கணித்ததோடு,இப்போது இந்தக் கொடியை ஏற்றிக்கொள்வோம்.  பிறகு மற்ற வேண்டியதைப் பற்றி யோசிப்பபோம் என்றார்.  அதற்கு அப்போது ஒரு சப்பைக்கட்டு வேறு சொன்னார்கள்.  

கடைசி கண்டி மன்னர் சிங்களராக வாழ்ந்தாலும் அடிப்படையில் அவர் ஒரு தமிழர் தானே என்பதாகச் சொல்லி விரும்பியதை சாதித்துக்கொண்டார்கள்.

கண்டி மன்னர் மீது பிரிட்டிஷ் இராணுவ நடவடிக்கை எடுக்க காரணமாக இருந்த பத்து பேர்களில் நம்மால் அடையாளம் காணக்கூடிய ஒருவர் உண்டு.  அவர் பெயர் ரத்வட்டே

பின்னாளில் சிங்கள தலைவராக வரப்போகும் சந்திரகா குமார துங்காவின் கணவர் வழி பாட்டனார்.  ஆங்கிலேயர்களுக்கு உதவும் போதே இந்த நேசக்கூட்டணி கொடுத்துருந்த நாசகார பத்து கட்டளைகள் மறைமுக புரிந்துணர்வை சிங்களர்களுக்கும் ஆங்கிலேயர்களுக்கும் உருவாக்கியதாக இருந்தது. 

ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கேவை கண்டி மன்னர் பதவியில் இருந்து நீக்கப்படுவது, 

அவருக்குப் பின் யாரும் அந்த உரிமை கோராமல் இருப்பது, 

மன்னர் சார்ந்த அத்தனை பேர்களையும் நாடு கடத்தப்படுவது, 

இதற்கெல்லாம் மேல் கண்டியின் உள்ளே வாழ்ந்து கொண்டுருக்கும் மொத்த தமிழர்களை வெளியேற்றுவது, 

அவர்கள் மறுபடியும் திரும்பி உள்ளே வந்தால் அபதாரம் விதிப்பது 

என்று ஏசுநாதரின் கட்டளைகள் போல் போய்க்கொண்டுருக்கிறது.  

ஆனால் இதற்கெல்லாம் மேலாக இவர்கள் கட்டளைகளுடன் சொல்லியிருந்த புத்தமதத்தை அரசாங்க மதமாக அங்கிகரிப்பது என்ற கருப்பு வார்த்தைகள் தான் பின்னாளில் இலங்கை என்பது நிலமெல்லாம் ரத்தமாக மாற்றப்போகிறது என்பதை அன்று உணர்ந்தவர் யாருமில்லை.  

அன்றைய தினம் ஆங்கிலேயர்களின் பார்வையென்பது இனி இலங்கைக்குள் முடியாட்சி என்று எவரும் வாய் திறக்கக்கூடாது.  

சிங்களர்களுக்கோ ஆங்கிலேயர்கள் ஆண்டாலும் பரவாயில்லை. இந்த நாடு சிங்கள நாடு. மதம் என்பது எப்போது பௌத்தம் என்பதாக இருக்க வேண்டும் என்ற அக்கறை.  

வினை விதைத்தவன் எதை அறுக்கமுடியும்?  

புத்திசாலி ஆங்கிலேயர்களுக்கு உதவிய எலப்போலா எதிரியாக மாற்றம் பெற உள்ளேயே அப்போது உருவான ஒரு கலவரம் காரணமாக இருந்தது. 

உருவான கலவரத்தால் இந்த எலப்போலா நாடு கடத்தப்பட்டு மொரிஷியஸ் தீவில் அடைக்கப்பட்டு, கடைசியில் மீளாத் துயரில் போய் சேர்ந்தார். 

ஏற்கனவே உள்ளே வந்த போர்த்துகீசியர்களும், ஹாலந்து ஆட்சியாளர்களும் உள்ளேயிருந்த செல்வ வளத்தை தங்கள் நாட்டுக்கு கொண்டு போகத்தான் நினைத்தார்களே தவிர ஆங்கிலேயர்கள் போல் நீண்ட கால திட்டங்கள் எதுவும் வைத்திருந்தார்களா என்பது தெரியவில்லை. 

ஆனால் வெள்ளையர்கள் அப்போது பிடித்த நாடுகளில் எழுதிக்கொண்டுருந்த கருப்பு பக்கங்களை இங்கேயும் முயற்சிக்க உருவானது தான் பிரித்தாளும் சூழ்ச்சிகளும் பின்னால் உருவான இனங்கள் சார்ந்த எழுச்சியும். 

அந்நியர்கள் எவரும் இல்லை. 

உள்ளே இருந்தது கடைசி சிங்கள முடியாட்சியையும் முடித்தாகி விட்டது.  

காட்டிக் கொடுப்பதற்கும், கவிழ்த்து விடுவதற்கும் வேறு தீவிலா போய்த் தேட வேண்டும்?  

கடைசியில் காட்டிக்கொடுத்தவர்களும் கண்ணீர் விட்டுக்கொண்டே தனிமைச் சிறையிலிருந்து போய்ச் சேர்ந்தார்கள்.  

சிங்கள பக்கங்களுக்கு மங்களம் பாடியாகி விட்டது.  

அடுத்து மூத்தகுடி ஒன்று பாக்கி உள்ளதே? அவர் தான் தமிழ் மன்னர் பண்டார வன்னியன்.  

இலங்கையில் உள்ள வன்னிப்பகுதியின் மற்றொரு பெயர் அடங்காப்பற்று, நல்ல மாப்பாணான் (1790) என்ற மன்னனுக்குப் பிறகு ஆட்சிக்கு வந்தவர் தான் பண்டார வன்னியன். 

வெள்ளையர்கள் (1803) கண்டி சிங்கள மன்னரின் மேல் படையெடுத்த போதே இவர் மேலேயும் தங்கள் படையெடுப்பை நிகழ்த்தினர்.  

ஆனால் அந்த சமயத்தில் படையெடுப்பை சமாளித்து வெற்றி கொண்டதோடு மட்டுமல்லாமல் அப்போது ஆனையிறவு,இயக்கச்சிபைல், வெற்றிலைக்கேணி ஆகிய கோட்டைகளையும் கைப்பற்றி மொத்தத்தில் வந்தவர்களுக்கு பீதியூட்டி வைத்துருந்தார்.  

ஆங்கிலேயர்களுக்கு முன்னால் வந்தவர்களுக்கும் இந்த கதிதான் நடந்தது. 

ஆளைவிட்டால் போதும் என்ற நோக்கத்தில் அன்று அவர்கள் காத்த அமைதி, இப்போது உள்ள ஆங்கிலேயர்களிடம் செல்லுபடியாகுமா? 

தமிழர்களின் மொத்த வரலாற்றில் கடைசி பாண்டிய ராஜ்யங்கள் வரைக்கும் ஆள்காட்டி தானே மொத்த தமிழன சரித்திர பக்கங்களை தரித்திர பக்கமாக மாற்றியுள்ளது. 

காக்கை வன்னியன் என்பவனால் காட்டிக்கொடுக்கப்பட்டு (1811) உடையாவூர் நேரிடைப் போரில் பண்டார வன்னியன் கொல்லப்பட்டார்.

ஆட்டம் இப்போது முடிவுக்கு வந்து விட்டது.  

எதிர்ப்பவர்கள் யாருமில்லை.  எதிரிகளைக்கூட ஏறக்குறைய ஒழித்தாகி விட்டது. 

இப்போது முடியாட்சி இல்லை.  முனங்குபவர்கள் கூட யாருமில்லை.  ராஜா, ராணி, மந்திரி என்று மொத்தப் பொறுப்பும் சூரியன் அஸ்தம்பிக்காத நாட்டின் ஆளுமைக்குள் வந்து விட்டது. 

ஆனாலும் இவர்கள் தொடக்கத்தில் கோட்டை அரசு, யாழ்பாண அரசு, கண்டி அரசு என்று பிரித்து வைத்துக்கொண்டு அப்போதைய சென்னையின் மகாண கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து ஆட்சி புரிந்தனர்.  

தமிழர்கள் வாழ்ந்த பகுதியில் (1797)ஆங்கிலேயர்களுக்கு எதிராக ஒரு கலகம் உருவானது. 

ஒவ்வொன்றும் சென்னை மகாண கவர்னர் உத்திரவுக்காக காத்துருப்பது பல பிரச்சனைகளுக்கு காரணமாக அமைந்துவிட இலங்கையை காலணி நாடு என்ற அந்தஸ்து கொடுத்து தனி ஆளுநரைக் கொண்டு ஆள்வது என்று முடிவெடுத்தனர்.

இலங்கையின் முதல் ஆளுனராக (1798) பிரைடெரிக் நார்த் என்பவர் கீழ் தென்னைத்தீவின் வாழ்க்கை முறை முற்றிலும் மாறத் தொடங்கியது.

தொடக்க அத்தியாயங்கள்

10. வெந்து தணிந்தது தீவு


ஸ்பானீஷ், டச்சு, போர்த்துகீசியர்கள் என்று ஒவ்வொருவரும் தங்கள் வணிக நோக்கத்திற்காக ஒவ்வொரு நாட்டிற்குள் சென்றாலும் சூரியன் அஸ்தம்பிக்காத நாடு என்ற பெருமையை பெற்று இருந்த பிரிட்டன் மட்டும் மற்றவர்களிடம் இருந்து வேறுபட்டு இருந்தது இங்கே குறிப்பிட்டே ஆக வேண்டும்.  

மற்றவர்கள் வணிக நோக்கத்தையும் மீறி,  சரியான விலை கொடுக்காமல் ஏமாற்றியதோடு மட்டுமல்லாமல், எதிர்த்தவர்களை நடுக்கடலில் கொண்டு போய் தள்ளி அழிப்பது  வரைக்கும் அத்தனை அக்கிரமத்தோடு மதம் சார்ந்த அத்தனையையும் மக்கள் மீதி திணிக்கத் தொடங்கினார்கள். 

ஆனால் ஆங்கிலேயர்கள் வணிகம் முக்கியம்.  அத்துடன் மதம் என்பது அதுவொரு கிளைநதி.  உள்ளே அதுபாட்டுக்கு தனியாக நடந்து கொண்டுயிருக்கும். வெளிப்படையாக தெரியாது. 

உலகத்திற்கே இன்று வரை அவர்கள் மிகச் சிறந்த ராஜதந்திரிகளாக ஏன் இருந்துகொண்டுருக்கிறார்கள்? என்பதற்கு இதை விட வேறு உதாரணம் நமக்குத் தேவையா?

தொடக்கத்தில் இலங்கையின் உள்ளே ஆங்கிலேயர்கள் நுழைந்த போது அப்போது பிரிட்டனுக்கு ஹாலந்துக்கும் போர் நடந்து கொண்டுருந்தது.  இதன் (1782) எதிரொலியாக ஆங்கிலேயர்கள் சென்னையில் இருந்து அனுப்பப்பட்ட படையின் மூலம் திருகோணமலையில் இறங்கி கைப்பற்றினாலும் மீண்டும் 1795 ஆம் ஆண்டு தான் உள்ளே நுழைந்தனர்.  

இலங்கையில் இருந்த பொக்கிஷ புதையலை இறைவன் மற்றவர்களுக்காகவா படைத்தான்?  

அது போக இயற்கை கொடையாக படைத்து இருக்கும் திருகோணமலை துறைமுகம். யோசித்தவர்கள் செயலில் இறங்கினர்.

1796 ஆம் ஆண்டு பிரிட்டிஷார் இலங்கையில் டச்சுக்காரர்கள் பிரித்து வைத்திருந்த மூன்று பகுதிகளையும் கைப்பற்றியதோடு, மற்ற பகுதிகளையும் (கிபி 1776 பிப்ரவரி) முழுமையாக கைப்பற்றினார்கள்.  

கைப்பற்றப்பட்ட பகுதிகளை கிழக்கிந்திய கம்பெனியின் சென்னையில் கவர்னராக இருந்த ஹோபர்ட்  பிரபு என்பவரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது..  ஆங்கிலேயர்கள் தங்களுடைய ஆளுமைக்குள் மொத்த இலங்கையையும் கொண்டு வந்தாலும் முறைப்படியான நிர்வாக அமைப்பை கொண்டு வருவதில் அவசரம் காட்டவில்லை.

அப்போது ஐரோப்பாவில் பிரெஞ்ச் மாவீரன் நெப்போலியன் படையெடுப்பென்பது அன்றைய சூழ்நிலையில் பீதியை கிளப்பிக் கொண்டுருந்து. 

பெரிய நாடுகள் தங்களை காப்பாற்றிக் கொள்ள பகீரப்பிரயத்தனத்தில் இருந்தன. 

தங்களுடைய ஆளுமையில் இருந்த நெதர்லாந்தை பெற்றுக்கொண்டு இலங்கையை கொடுத்து விடலாம் என்ற எண்ணம் இருந்தது.  இது தொடர்பாக உருவாகும் செலவினங்களுக்காக முறைப்படி ஆட்சி அதிகாரம் ஆளுமையை உருவாக்காத ஆங்கிலேயர்கள், தேவைப்படும் நிதிக்காக இலங்கையின் உள்ளே ஒரு நிர்வாக அமைப்பை ஏற்படுத்தினார்கள். 

ஏதோ ஒரு வகையில் உள்ளே இருந்து நிதியை திரட்டுவது. 

பசுமைப்பூமியில் வேறு என்ன இருக்க முடியும்.  

அன்றைய சூழ்நிலையில் தென்னை மரங்கள் தான் அதிகமாக இருந்தது.  

காரணம் தொடக்க சங்ககால பாடல்களில் ஈழத்தவர் என்றால் தென்னை மரம் ஏறுபவர்கள் என்ற அர்த்தத்தை குறிப்பதால் அதுவே காலப்போக்கில் ஈழம் என்பதும் தென்னை சார்ந்ததாகவே மாறிவிட்டது என்பது வரலாற்றுப் பக்கங்கள் சொல்வதைப் போல தென்னை வைத்திருந்தவர்கள் மேல் மரத்திற்கு வரி (1796) என்று ஒரு புதிய கணக்கை தொடங்கி வைத்து கடைசியில் தோல்வியில் முடிந்து ஒரு வருடத்தில் அதை திரும்பப் பெற்றனர். 

இலங்கையின் மொத்த ஆளுமைப் பொறுப்பையும் இங்கிலாந்து மன்னர் வசம் (1798) ஓப்படைக்கப்பட்டது. 

நிர்வாகமென்பது மன்னரின் பிரதிநிதிகள் வசம் ஒப்படைக்கப்பட்டாலும், வர்த்தகம் தொடர்பாக தேவைப்படும் மேற்கொண்டு செயல்பட வேண்டிய அதிகாரங்களை சென்னையில் இருக்கும் கிழங்கிந்திய கம்பெனி மூலம் பெற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

ஹாலந்து நாட்டுடன் (1802) ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்த உடன்படிக்கையின் படி டச்சு ஆதிக்கத்தில் இருந்த மற்ற அத்தனை பகுதிகளும் பிரிட்டன் குடியேற்றப்பகுதியாக அறிவிக்கப்பட்டு ஆங்கிலேயர்களின் ராஜபாட்டை தொடங்கியது. 

தொடக்கத்தில் ஆங்கிலேயர்களால் (1803) உருவாக்கப்பட்ட வரைபடத்தின் படி அன்றே ஈழத் தமிழர்களின் தாயகம் என்பதை வடக்கில் சிலாவ், கிழக்கில் மடாவ்ச்சி, தெற்கில் படவில்குளத்தில் இருந்து திருகோணமலை  மாவட்டம், மட்டக்கிளப்பு மாவட்டம் என்பது வரைக்கும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களுடன் புத்தளக் கரையோரப் பகுதியையும் உள்ளடக்கிய பகுதியாகும்.  இது இலங்கையின் மொத்த நிலப்பரப்பில் 32 சதவிகிதம் ஆகும்.  மேலும் இலங்கையின் மொத்தக் கடற்பரப்பில் 60 சதவிகிதம் இந்த தமிழர் தாயகத்தில் அடங்கியிருந்தது.

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் கும்புக்கன் ஆறு, வடமேற்கு மாகாணத்தின் மகா ஓயாவும், அதன் இரு எல்லைகளாக் காட்டப்பட்டு மகாவலி கங்கை, படிப்பனை ஆறு, கந்தளாய்க்குளம், ஜான் ஓயா, அருவி ஆறு போன்ற ஆற்றுப் படுகைகளும் அதன் எல்லைப் பிரதேசமாகக் காட்டப்பட்டுள்ளது.   

இது தான் பின்னாளில் சிங்களர்கள் கையில் ஆங்கிலேயர்களால் ஓப்படைக்கப்பட்டது.

ஆனால் ஆங்கிலேயர்கள் ஆளுமைக்குள் மொத்த இலங்கையும் வந்துவிட்டாலும் கூட உள்ளே அப்போதும் கூட உள்ளே முடியாட்சி இருந்தது முதல் ஆச்சரியம் என்றால் சிங்கள மன்னராக இருந்த அவர் உண்மையிலேயே தமிழர் என்பது அடுத்த மகத்தான அதிசயம் 

ஹாலந்து படைகளுடன் மோதி அவர்களை வென்று, ஆங்கிலேயர்கள் ஆட்சிக்கு வந்த போதும் அவர்களுக்கு சிம்ம செப்பமனமாக இருந்த (1790) குலசேகர வைரமுத்து பண்டார வன்னியன் என்ற தமிழ் மன்னன் சிறப்புடன் இருப்பதும் மொத்தத்திலும் மறுக்கமுடியா வரலாற்றுத் தடங்கள். 

இவர் தான் பின்னால் வந்த கொரில்லா போர்த் தந்திரங்களின் பிதாமகன்.


Wednesday, April 10, 2013

09 வந்தவர்களும் வீழ்ந்தவர்களும்
இலங்கைத் தீவில் ஆங்கிலேயர்கள் பதினேழாம் நூற்றாண்டின் முடியும் தருணத்தில் தான் உள்ளே நுழைந்தனர்.  

தொடக்கத்தில் கிழக்கிந்திய நிறுவனம் தான் உள்ளே நுழைகின்றது.  இந்தியாவிற்குள் வந்தது போல் எதிர்பாரதவிதமாய் அல்ல.  

சொர்க்கத்தீவின் வளமையை புரிந்து கொண்டவர்கள் காத்திருந்து கச்சிதமாக காய் நகர்த்தி உள்ளே வந்தார்கள். 

இந்தியாவின் அருகேயிருந்த பசுவைத்தீவில் நடந்துகொண்டுருந்த ஒவ்வொரு நிகழ்வையும் கவனித்துக்கொண்டுருந்தனர்.  உள்ளே நுழைந்தாலும், முறைப்படி இலங்கை என்பது பிரிட்டனின் மன்னரின் சாம்ராஜ்யத்திற்குள் உண்டான ஒரு பகுதி என்பதாக அவர்கள் அறிவிக்க உள்ளே இரண்டு ஆண்டுகளை எடுத்துக்கொண்டனர்.  

இவர்களுக்கு முன்னால் இலங்கைத் தீவின் அந்நிய முதல் வருகையாளர் என்ற பெருமையை தட்டிக்கொண்டு செல்வபவர்கள் போர்த்துகீசியர்கள்.  

பதினைந்தாம் நூற்றாண்டின் (1505) தொடக்கத்தில்  போர்த்துகீசியர்கள் இலங்கையில் கால் வைத்தது ஒரு எதிர்பாரத திருப்புமுனை. 

டான் லுரன்கோ டி அல்மெடியா தலைமையில் வந்த அந்த கப்பல், எதிர்பாரதவிதமாக அடித்த புயல்காற்றில் சிக்கி தவித்து 

இந்திய பெருங்கடலுக்குள் நுழைந்தது.  அவர்கள் செல்ல வேண்டிய பயணத் திட்டத்தை முற்றிலும் மாற்றிய சம்பவம் இது.  அப்போது அவர்கள் பயணம் செய்து வந்த கப்பல் இலங்கைத் தீவு இருந்த பக்கம் நகர போர்த்துகீசியர்களின் வணிக பயணம் என்பது இலங்கையின் வரலாற்றுப் பக்கங்களில் இடம் பிடிக்கத் தொடங்கியது.  

இவர்களின் கப்பல் வந்து நின்ற இடம் இலங்கை வரைபடத்தின் கீழ்பகுதியில் நெற்றிப்புருவம் போலிருக்கும் காலி என்ற பகுதி. 

வரலாற்று ஆசிரியர் மார்கோ போலா என்பவர் வர்ணித்த வார்த்தைகளின் படி இலங்கை என்பது பூமியின் சொர்க்கத் தீவு. ஆனால் இவர்களின் நுழைவுக்குப் பிறகு வழிபாடுகளை, அன்றாட வாழ்க்கைப் பாடுகளையும் பார்த்துக்கொண்டு வாழ்ந்த மொத்த இனக்குழுவும், அவர்களை ஆளுமையில் வைத்திருந்த குறுநில மன்னர்களின் வாழ்க்கையும் வேறு திசையில் பயணிக்கத் தொடங்கியது.

எட்டாயிரம் மைல்களுக்கு அப்பாலிருந்து வந்தவர்களுக்கு இதுவொரு எதிர்பாராத திருப்புமுனை,  

உள்ளேயிருந்த அத்தனை பேர்களின் அடிப்படை வாழ்க்கை முறைகளையே இவர்கள் திசை திருப்பப் போகின்றார்கள் என்பதை அன்று உணர்ந்தவர் எவரும் இருந்துருப்பார்களா என்பது சந்தேகமே?  

சிங்களர்கள், தமிழர்கள் என்று இரு வேறு திசையாக, வெவ்வேறு கலாச்சாரங்களுடன் முகத்தை திருப்பிக்கொண்டு ஒற்றுமையில்லாமல்  குழுக்களாக வாழ்ந்து கொண்டுருந்தவர்களைப் பார்த்ததும், பாதி பயணத்தில் இவர்கள் உள்ளே வந்து இறங்கியதும் போர்த்துகீசியர்களின் அதிர்ஷ்ட நாட்கள்.  

தங்கள் நாட்டில் இருந்து கிளம்பியவர்களின் தூர தேச வணிக நோக்க பயணத்தில் இந்த தீவு பட்டியலில் இல்லை. 

1498 ஆம் ஆண்டு கடல்பயணத்தின் மூலமாக வாஸ்கோடகமா கண்டுபிடித்த இந்தியாவை இனம் கண்டு கொண்டதற்குப் பிறகுதான் உலகமெங்கம் அன்றைய காலகட்டத்தில் தேசங்களின் வணிக வரலாறு வேறு திசையில் சென்றது. 

எவரிடமிருந்தோ வாங்கி விற்பவர்களின் வணிக நோக்கங்களின் அடுத்த கட்டமாக நேரிடையான கொள்முதல் என்ற நோக்கத்தில் ஒவ்வொரு நாட்டினரையும் கடல் கடக்க வைத்தது.  முடிந்தவர்கள் கடல் கடந்து சென்று தாங்கள் விரும்பியதை சாதித்துக்கொண்ட காலகட்டமிது.  

கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவிற்குள் வந்ததும் இதைப்போல நேரிடையான வர்க்கத்திற்கே.  

ஆனால் போர்த்துகீசியர்களுக்கு அதிர்ஷ்ட பரிசு போல் எதிர்பாரதவிதமாய் அமைந்து விட அப்போது இலங்கையில் பிரபல்யமாக இருந்த லவங்கப்பட்டை உற்பத்தி செய்து கொள்ள  கொழும்புவை ஆண்டு கொண்டுருந்த சிங்கள மன்னரான வீர பராக்கிரமபாஹ உடன் ஒரு ஒப்பந்தத்தை உருவாக்கிக் கொண்டனர்.  

மொத்தமாக உள்ளேயே இதற்கென்று ஒரு தொழிற்சாலையை உருவாக்கிக்கொள்வது.  அதே சமயம் உள்நாட்டுக்கு தேவைப்படும் இலவங்கப்பட்டையையும் அளிப்பது என்பது தான் இருவர் போட்டுக்கொண்ட ஒப்பந்தத்தின் சராம்சம்.  

அதிர்ஷ்டக் காற்று இன்னும் பலமாக மன்னர் இறப்பு மூலம் உருவானது.  

மன்னருக்கு பிறகு யார் ஆள்வது என்பதில் மன்னரின் இரண்டு மகன்களுக்குத் தோன்றிய வாரிசுப் போரை போர்த்துகீசியர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டனர்.

ஏற்கனவே போட்டுருந்த ஒப்பந்தத்தை மறுபடியும் மாற்றி அமைத்து உள்ளே நுழைந்து 13 ஆண்டுகளுக்குப் பிறகு (1518) இலங்கையின் கடலோரப்பகுதி மொத்தத்தையும் தங்கள் ஆளுமையில் கொண்டு வந்தனர். 

வர்த்தக மேலாண்மைக்கு என்று சொல்லிக்கொண்டு கொழும்புவில் ஒரு கோட்டையையும் கட்டிக் கொண்டனர்.  

உள்நாட்டு குழப்பங்களை மிகத் தெளிவாக புரிந்து கொண்டு தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட போர்த்துகீசியர்களின் கவனம் யாழ்பாணத்தின் மேல் விழுந்தது. 

முதலில் கிறிஸ்தவ கத்தோலிக்க மதத்தை பரப்புவதற்காக கிபி 1544 ஆம் ஆண்டு தென்னிந்தியாவில் இருந்து பிரான்சிஸ் சேவியர் என்ற பாதிரியாரை யாழ்பாணத்திற்கு வரவழைத்தனர்.   முதலில் இவர்கள் யாழ்பாணத்தில் உள்ள மன்னாரில் பல குடும்பங்களை மதம் மாற்றத் தொடங்க அப்போது ஆண்டு கொண்டுருந்த சங்கிலி மன்னன், மாறிய அத்தனை பேர்களுக்கு மரண தண்டணை விதித்தான்.   

இதைக் காராணமாக வைத்துக்கொண்டு கோவாவில் இருந்து வந்த படைகளின் துணையோடு மன்னார் பகுதியையும், இறுதியாக யாழ்பாணம் முழுமையையும் தங்களுடைய ஆளுமைக்குள் கொண்டு வந்தனர். 

1591 ஆம் ஆண்டு அண்ட்ரே பர்டாடோ தலைமையில் நடந்த போரின் இறுதியில் தங்கள் சார்பாக ஒரு பொம்மை சிங்கள மன்னனை உருவாக்கி ஆட்சி புரிய வைத்து மொத்தமாக தைரியமாக கிறிஸ்துவ மத மாற்றத்தை செயல்படுத்தினார்கள்.  

இதைப் பார்த்துக்கொண்டுருந்த சிங்களர்களுக்கு இரண்டு விதத்தில் பயத்தை உருவாக்கியது.  

சிங்களர்களை பௌத்த மதத்தில் இருந்தது கிறிஸ்துவத்திற்கு மாற்ற என்ற காரணங்களை வைத்துக் கொண்டு துன்புறுத்தத் தொடங்கினர்.  மேலும் இவர்களிடம் இருந்த நவீன ரக ஆயுதங்களைப் பார்த்து வேறு பயந்து கொண்டு இனி இவர்களை இங்கிருந்து எப்படி நகர்த்துவது என்று யோசிக்கத் தொடங்கினர். 

அவர்களின் முழுமையான சக்தியை உணராமலிருந்தவர்கள், வானத்தில் இருந்து யாராவது வந்து குதித்து நம்மை காக்க வரமாட்டார்களா? என்று காத்துக்கொண்டுருந்தவர்களுக்கு அந்த நாளும் வந்தது.  வந்தது 

தேவகுமாரன் அல்ல.  டச்சு கடற்படை தளபதி வடிவில்.

போர்த்துகீசியர்கள் இலங்கையின் உள்ளே நுழைந்த போது உள்ளே ஆண்டு கொண்டுருந்த தமிழ் மன்னரின் பெயர் சங்கிலி குமரன்

அந்நியர்கள் உள்ளே வருவதற்கு முன்பே இலங்கை என்பது கப்பல் மூலம் செய்யும் வாணிபத்தில் அட்டகாச பாதையில் பயணித்துக்கொண்டுருந்தது. 

கிபி 1344 பயணியாக வந்த மேல்நாட்டு பயண அறிஞர்கள் அப்போது இலங்கையின் உள்ளே வெகு சிறப்பாக நடந்து கொண்டுருந்த கப்பல் வணிகத்தை பாராட்டி எழுதியுள்ளனர்.  அவர் எழுதிய பயணக்குறிப்புகளின்படி 100 கப்பல்கள் அணிவகுத்து வந்து போய்க்கொண்டுருப்பதாக குறிப்பிடும் அளவிற்கு இலங்கையின் ஒவ்வொரு கால கட்ட வளர்ச்சிக்கும் கடல் வணிகம் பல சிறப்புகளை உருவாக்கிக் கொடுத்துக் கொண்டு இருந்தது. 

இறுதியில் வண்ணார் பொன்னை என்ற இடத்தில் நடந்த போரில் கைக்கூலியின் காட்டிக்கொடுப்பு காரணமாக சங்கிலி குமரன் போர்த்துகீசியர்களிடம் தோற்றார்.  

உள்ளே வந்து இறங்கியது முதல் ஏறக்குறைய 150 ஆண்டுகள் போர்த்துகீசியர்கள் இலங்கையை தங்கள் ஆளுமைக்குள் வைத்து இருந்தனர்.  

இங்கே ஆட்சி புரிந்த கரிகாற்பெருவளத்தான் தொடங்கி, ராஜராஜசோழன், அதற்குப் பின்னால் பாண்டிய மன்னர்கள் என்ற மொத்த தமிழ் மன்னர்கள் இலங்கையில் உருவாக்கிய காலத்தால் அழிக்க முடியாத கலைப் பொக்கிஷங்களையும், ஆலயங்களையும் போர்த்துகீசியர்கள் அழித்ததோடு மட்டுமல்லாமல், அழிக்கப்பட்ட இடிபாடு பொருட்களை வைத்து தங்கள் நிர்வாகத்திற்கு தேவையான கோட்டைகளையும் உருவாக்கிக் கொண்டனர். 

வரலாற்றுச் சுவடுகள் இருந்தால் வந்த பாதையை நினைத்து ஏங்குவார்கள் அல்லவா?  வீணாக ஏன் பழையவற்றை நினைக்க வைக்க வேண்டும் என்ற நல்லெண்ணமாக இருந்துருக்கலாம். 

உள்ளே வந்த மன்னர்கள் கஷ்டப்பட்டு கப்பல் மூலம் கொண்டு வந்து சேர்த்த பொருட்களால் உருவாக்கப்பட்ட ஒவ்வொரு கலைச்சின்னங்களையும் இவர்கள் இஷ்டப்பட்டு அழித்து சிக்கனமாய் சிறப்பாய் தங்களுக்கு தேவையானவைகளை உருவாக்கினார்கள்.  

சிங்களர்களர்களின் பௌத்த ஆலயங்களும் அழிக்கப்பட்டது.  

தொடர்ச்சியாக மற்றொருபுறம் கட்டாய மத மாற்றம்.  

கிறிஸ்துவ கத்தோலிக்க மதத்திற்கு மாறாதவர்களை துன்புறுத்த தொடங்க சொர்க்கத்தீவின் மக்கள் வாழ்க்கை முறையில் நரகம் எட்டிப்பார்க்கவும் தொடங்கியது. 

இந்த மத மாற்றத்திற்கு மற்றொரு காரணம் அப்போது இந்தியாவில் கோவா பகுதியில் போர்த்துகீசியர்கள் ஆட்சி புரிந்து கொண்டுருந்தனர்.  

அங்கு நடந்து கொண்டுருந்த மதமாற்றங்கள் இங்கும் வரத் துவங்க தமிழர், சிங்களர், பின்னாளில்  வர்த்தகம் மூலம் வந்த இஸ்லாமியர்கள் என்ற மூன்றாவது இனத்திற்குப்பிறகு கிறிஸ்துவம் என்பது நான்காவது திசையாக மாறத் தொடங்கியது.

மக்களின் வாழ்க்கையும் நாறத் தொடங்கியது.

பெரும்பான்மை இனக்குழுவான சிங்கள தமிழர்கள் என்று இரண்டு வேறு கூறாக அவரவர் திசையில் அப்போது பிரித்து வாழ்ந்து கொண்டுருந்தாலும், இந்த இரண்டு கூறுகளையும் பல கூறுகளாக வைத்து விளையாடிக் கொண்டுருந்த போர்த்துகீசியர்களை வெளியேற அடுத்து உள்ளே நுழைபவர்கள் டச்சு.  

இவர்களை இன்று வரைக்கும் இலங்கையின் வரலாற்றுப் பக்கங்கள் ஓக்லாந்தர் (ஹாலாந்து) என்று அழைக்கின்றது. 

1602 ஆம் ஆண்டு டச்சு நாட்டு கப்பல் படைத்தளபதி ஜோரிஸ் ஸ்பில்பெர்க் தான் கொழும்பு கடற்கரையின் உள்ளே நுழைந்தவர்,  

இவர்கள் நுழைந்த போது யாழ்பாணம் மற்றும் கோட்டை அரசு முழுமையாக போர்த்துகீசியர்களின் வசம் இருந்தது.  அதனை உணர்ந்து கொண்டு அப்போது அவர் நேரிடையாக கண்டி வந்து ஆண்டு கொண்டுருந்த மன்னரை சந்தித்தனர்.

கண்டி மன்னர் விண்ணப்பத்தின் பேரில் டச்சுப் படைகள், உள்ளே இருந்த போர்த்துகீசியர்களுடன் மோதத் தொடங்கினர். போர்த்துகீசியர்களின் மோதி வென்ற பகுதிகளை ஒப்பந்தப்படி கண்டி மன்னரிடம் கொடுக்காமல் தாங்களே வைத்து ஆளத் தொடங்கினர்.  

ஏறக்குறைய 138 ஆண்டுகள் (கிபி 1658 முதல் கிபி 1796 வரை) யாழ்பாண கோட்டையை ஹாலந்து தங்கள் வசம் வைத்து இருந்தனர். 

இவர்களுக்கு முன்னால் போர்த்துகீசியர்களால் கட்டப்பட்ட சதுர வடிவ கோட்டைகளை இடித்து விட்டு ஐங்கோண வடிவில் கோட்டைகளை யாழ்பாணத்தில் கட்டினார்கள்.  இந்த காலகட்டத்தில் இந்தப் பகுதி முழுவதும் தமிழர்களின் ஆளுமையில் இருந்தது.  

குறிப்பாக வன்னிப் பகுதியில் வன்னியன் என்ற தமிழ் மன்னனின் ஆட்சி நடத்திக் கொண்டுருந்தார்..  போர்த்துகீசியர்களும், டச்சக்காரர்களும் தங்களை இந்த மண்ணில் நிலைநாட்டிக்கொள்ள சண்டையிட்டுக் கொண்டார்களே தவிர தங்கள் நாட்டுக்கு அனுப்பிக்கொண்டுருந்த இயற்கை வளங்களும், சூறையாடப்பட்ட செல்வங்களும் நாளுக்குக் நாள் அதிகமாகத் தான் இருந்தது.

அப்போது கூட இலங்கையின் உள்ளேயிருந்த முடியாட்சிக்கு உயிர் இருந்தது என்பது ஆச்சரியமே..

பதினேழாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் (1799) ஆங்கிலேயர்கள் உள்ளே வரும் வரைக்கும் டச்சு மக்கள் இலங்கையின் மொத்த மக்களையும் பிச்சு பந்தாடினார்கள். 

இவர்கள் உருவாக்கிய மதமாற்றம் ஒரு பக்கம். போர்த்துகீசியர்களை அடக்கவென்று தொடுக்கப்பட்ட போர்களின் கோரச்சுவடுகள். 

இறுதியில் டச்சுப் படைக்கு போர்த்துகீசியர்களே பரவாயில்லை என்கிற அளவிற்கு கொடூரமாக நடந்து கொண்டனர்.

தங்கள் மதத்தை தவிர வேறு எந்த மதத்தையும் இவர்களும் அனுமதிக்க தயாராய் இல்லை.  பௌத்த, இந்து, முஸ்லீம் மக்கள் மீது இதற்கென்று சிறப்பு வரிகள் என்று போட்டனர்.  

பேய்க்கு பயந்து பிசாக்கு வாக்கப்பட்ட சூழ்நிலை.  

ஆனால் இவர்கள் காலத்தில் நடந்த மற்றொரு சிறப்பு, 

ஏற்கனவே இறு வேறு கலாச்சாரத்தின், மொழியின் அடிப்படையில் வாழ்ந்து கொண்டுருந்த சிங்கள தமிழ் மக்களை (இனக்குழுக்கள்) எந்த வகையிலும் அடிப்படை கட்டுமாணத்தின் மேல் கை வைக்கவில்லை.

இவர்கள் உருவாக்கிய ஆட்சி முறைகள் கூட இரு வேறு மக்களுக்கென்று தனித்தனியாக உருவாக்கப்பட்டதாகவே இருந்தது.  தங்களுடைய வணிகத்திற்காக, தங்கள் ஆளுமையை நிலைநாட்டிக்கொள்ள என்று அவர்களை வாட்டி வைத்தனரே தவிர அவர்களின் அடிப்படை உரிமைகளை எந்த வகையிலும் சீர்குலைக்கும் நடவடிக்கைகளில் இறங்கவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

அப்போது இவர்கள் உருவாக்கியது தான் இலங்கையின் மொத்த கடற்கரை ஓரப் பகுதிகளை ஆறு மாவட்டங்களாக பிரித்தது. 

யாழ்பாணம், திருகோணமலை, மட்டக்கிளப்பு என்ற மூன்று பகுதிகள் தமிழர்களுக்கென்றும், கொழும்பு, புத்தளம், கற்பிட்டி என்ற இந்த மூன்று பகுதிகள் சிங்களர்களுக்கென்றும் பிரித்து வைத்து ஆண்டனர்.  

முதல் மூன்றுக்கும் தலைநகரம் யாழ்பாணம். 

சிங்களப் பகுதிகளுக்கு கொழும்பு.

அப்போது இவர்கள் உருவாக்கியது தான் யாழ்பாணம் பகுதிக்கு மட்டும் தனியாக ஒரு கவர்னர், மற்றும் அதற்கென்று வித்யாசமான அரசியல் அமைப்பு.  

இலங்கையை ஒட்டு மொத்தமாக நிர்வாகம் செய்ய கடலோரப் பகுதிகளை மூன்று பகுதிகளாக பிரித்தனர்.  

கொழும்பு, யாழ்பாணம், கல்லெ என்று பிரித்து அதற்கென்று மூன்று துணை நிலை கவர்னர்களை நியமித்தனர். 

யாழ்பாணத்திற்கென்று உருவாக்கப்பட்ட சட்டங்கள் கொண்டு அந்த கவர்னர் தனியாக ஆளுமை செய்து கொண்டுருந்தார்கள்.

Tuesday, April 09, 2013

08 சிங்களர்களும் தமிழர்களும்
ஆறாம் நூற்றாண்டின் இறுதிக்குப்பின்னால் தான் இலங்கையில் மிகப்பெரிய மாற்றங்கள் உருவாகத் தொடங்கியது. 

இந்தியாவில் இருந்த பல்லவ பேரரசுவின் எழுச்சியினால் வணிக ரீதியான மாற்றங்கள் மொத்தமும் இலங்கைக்கு சென்றடைந்தது.  அப்போது இருந்த கடல் வணிகம் அதனை சாத்தியப்படுத்தியது. தென்னிந்திய வணிகர்கள் மூலம் இலங்கைக்கு தென்கிழக்காசியா, மேற்கிழக்காசியாவுடனும் நெருங்கிய வணிக உறவுகள் ஏற்பட்டன.  

இந்த காலகட்டத்தில் உருவான கருத்துப் பறிமாற்றங்கள் தான் உள்ளே உள்ள சமூக அமைப்பையும் புரட்டிப்போட்டது. நீர்பாசன வளர்ச்சிகளும், விவசாய முன்னேற்றங்களும் தொடங்கி புதிய முன்னேற்றத்தை உருவாக்கியது. 

ஒவ்வொரு காலகட்டத்திலும் வணிகம் என்ற நோக்கத்தினால் உள்ளே வந்து சேர்ந்தவர்களால் தமிழ் இனக்குழு ஆதிக்கம் செலுத்தத் தொடங்கி வளரவும் தொடங்கியது. 

ஒவ்வொரு காலகட்டத்திலும் இலங்கையில் ஆண்டு கொண்டுருந்த இனக்குழுவின் ஆளுமையில் இருந்தவர்கள் (சிங்கள தமிழ்) பாரபட்சமில்லாமல் தங்களை, தங்கள் ஆளுமையை, தன் சமய கொள்கைகளை, சொத்துக்களை பாதுகாக்க தென்னிந்தியாவில் இருந்து பாதுகாப்பாளர்கள், பிராமணர்கள், ஒவிய சிற்பக் கலைஞர்களளை கொண்டு வந்து சேர்த்துக் கொண்டே இருக்க தமிழ் இனக்குழுவின் எண்ணிக்கை மிக அதிகமாகிக்கொண்டே போனது.  

ஒரு கட்டத்தில் கட்டுபடுத்த முடியாத சூழ்நிலையும் உருவாக தமிழ் இனக்குழு எங்கும் ஆதிக்கம் செலுத்த தொடங்கினர். 

மற்றொரு சிறப்பம்சம் பௌத்த ஆளுமையில் இருந்தவர்கள் உருவாக்கி வைத்திருந்த உயர் பதவிகளில் கூட தமிழ் இனக்குழு இடம் பெற்று இருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இனக்குழுவாக இருந்து கொண்டும், அவவ்வபோது தங்களுக்கு தேவையான உதவிகளை, படைபலங்களை தென்னிந்தியாவில் பெற்றுக்கொண்டு தங்கள் ஆளுமையை நிலைநாட்டிக்கொண்டுருந்தவர்களின் அரசியல் உள் விவகாரங்களில் ஏழாம் நூற்றாண்டின் முற்பாதியில் தொண்டை மண்டலத்தில் ஆட்சிபுரிந்த பல்லவ பேரசு உருவான போது மகேந்திர வர்மன் முதல், முதலாம் நரசிம்மவர்மன் தொடர்ந்து என இலங்கையின் உள் விவகாரங்களின் கலந்து கொள்ள சூழ்நிலை உருவாக,  முதன் முதலாக உதவி புரியும் நோக்கத்தோடு (680/720) படையெடுத்து இறுதியில் வந்த மானவர்மன் அநுராதபுரத்தின் மன்னராக முடிசூட்டப்பட என்று தொடக்கம் பெற்ற இந்த சரித்திர பக்கங்கள் மாறி மாறி அலைக்கழித்து உலகப் பேரரசுக்கு வழிகாட்டியாக இருந்த இராஜராஜ சோழன் வரைக்கும் தொட்டு தொடர்ந்து கொண்டு பயணம் செய்கிறது.

சங்க காலம் என்று வழங்கப்படும் வரலாற்றுப்பக்கங்களில் மூன்று நூற்றாண்டுகளைக் கொண்ட சேர, சோழ, பாண்டிய பேரரசுகளின் எழுச்சியும், வீழ்ச்சியும் என்று எல்லாவிதங்களிலும் இலங்கையை பாதிக்க, பரவலாக்கம் இல்லாமல் அங்கங்கே ஆதிக்கம் செலுத்திக் கொண்டுருந்த தனித்தனி இனக்குழுக்களின் ஆளுமையிலும் மாற்றம் வந்தது.  

ஆறாம் நூற்றாண்டுக்கும் பத்தாம் நூற்றாண்டுக்கும் இடையே வணிகர்கள் மூலம் உருவான கலாச்சாரங்கள்,உருவாக்கிய கோவில்கள், பாதுகாப்பாளர்கள், பிராமணர்கள், பெளத்த பிக்குகள் என்று மொத்தமாக ராஜராஜன் நுழையும் வரைக்கும் இனக்குழுக்கள் என்பதையும் தாண்டி வேறொரு புதிய பரிணாமத்திற்கு வந்து இருந்தனர். இந்த காலகட்டத்தில் நடந்த முக்கிய மாறுதல்கள் அத்தனையும் பின்னாளில் பத்தாம் நூற்றாண்டு காலத்தில் தமிழ் இனக்குழுவும் சிங்கள இனக்குழு என்றழைக்கபடும் ஹௌ இனக்குழுவும் எதிர்காலத்தில் உருவாக்கப்படும் நிலைமை எவ்வாறு இருக்கப்போகின்றது என்பதை உணர்த்துவதாக இருந்தது.

ஆறாம் நூற்றாண்டு முதல் ஒன்பதாம் நூற்றாண்டு வரைக்கும் தமிழ்நாட்டில் ஆளுமையில் மேலோங்கியிருந்த பல்லவரையும், பாண்டியப் பேரரசையும் முடிவுக்கு கொண்டு வந்தது திருப்புறம்பியத்துப் போர்.  

இது தமிழ்நாட்டில் திருப்புமுனையை உருவாக்கிய சோழப் பேரரசை உருவாக்க காரணமாக இருந்தது.  ஓன்பதாம் நூற்றாண்டில் உறையூர் பிரதேசத்தில்  இருந்து தொடங்கிய விஜயாலாய சோழன் தஞ்சாவூரைக் கைப்பற்றி ஒரு புதிய சாம்ராஜ்யத்தை உருவாக்கினார்

இவரது மகன் ஆதித்த சோழன், அதற்குப் பிறகு (907) முதலாம் பராந்தகச் சோழன் ஆட்சியில் அரியணையில் அமர்ந்த போது உருவான எதிர்ப்பு வடக்கில் ராஷ்டிரர், சேரர் இவர்களுடன் இணைந்த சிங்கள மன்னர்கள்.  சூழ்ந்திருந்த சூழ்ச்சியையும், வலிமையில்லாத சோழப்பேரரசின் மொத்த புகழையும் மீட்டு எடுத்த ராஜகேசரி அருள்மொழிவர்மன் என்றழைக்கபடும் ராஜராஜசோழன் காலத்தில் உலகப்பேரரசு என்கிற அளவிற்கு தமிழ்நாட்டில் தொடங்கிய அவரது ஆளுமை மாலத்தீவு, லட்சத்தீவு, இலங்கை, என்று தொடங்கியது 

அவரது மகன் ராஜேந்திர சோழன் (1012/1044) கிழக்கு கடற்கரையோரமாக, கங்கை கரை வரை வென்று வெற்றியுடன் கங்கை கொண்ட சோழன் என்ற வரலாற்றுப் புகழை பெற்றார்.  அதுவே அன்றைய காலகட்டத்தில் சீனா வரைக்கும் வணிக நோக்கங்களை சாத்தியப்படுத்தியது.

இவர்கள் காலத்தில் இலங்கையில் வணிகம் முதல் சமயம் வரைக்கும் மொத்தமாக மாற்றம் பெற்றது.  குறிப்பாக நீர்ப்பாசன நோக்கங்கள் அத்தனையும் இந்த காலகட்டத்தில் புதிய பாதையை அடைந்து புத்தொளி பெறத்தொடங்கியது. 

50 ஆண்டுகளாக தங்களின் ஆளுமைக்குள் வைத்திருந்த இவர்களின் இலங்கை ஆட்சி என்பது பின்னாளில் வந்த சிங்கள ஆதிக்கத்தால் கூட அன்று இவர்களால் உருவாக்கப்பட்ட நிகழ்வுகளை பின்னாளில் முழுமையாக மாற்றமுடியவில்லை என்பதும் சரித்திரப்பக்கங்கள் தரும் ஆச்சரியமான தகவல்கள். 

ஆனால் நீண்ட கால நோக்கம் எதுவும் இல்லாத சோழ அரசின் நோக்கங்கள் இலங்கையின் முழுமையையும் தங்களுடைய ஆதிக்கத்தில் கொண்டு வராத காரணத்தால் அங்கங்கே சிங்கள இனக்குழுவின் ஆளுமை இறுதிவரைக்கும் இருந்து இதுவே சோழப்பேரரசு வீழ்ச்சி அடையும் வரைக்கும் பின்னாளில் பல விபரீதங்களையும் உருவாக்கியது.

சோழப் பேரரசின் ஒரு அங்கம் தான் இலங்கை என்பதாக திருப்திபட்டுக் கொண்டார்கள். 

இவர்கள் காலத்தில் தங்கள் ஆளுமையில் இருந்த இலங்கையை சோழ நிர்வாக மண்டலமாக வைத்துக்கொண்டு ஆட்சிபுரிந்தனர்.  இதற்கென்று சோழ இளவரசர்களை அங்கங்கே அனுப்பி வைத்தனர்.  இவ்ர்கள் உருவாக்கிய சிவன் கோவில் (மாதோட்டத்து திருக்கேதீஸ்வரம்) திருகோணமலையின் கோணேஸ்வரமும் பின்னாளில் வந்த 17 ஆம் நூற்றாண்டியல் உள்ளே வந்த போர்த்துகீசியர்களால் உடைக்கப்பட்டு அவர்கள் நிர்வாக பரிபாலனத்திற்காக உருவாக்கப்பட்ட கோட்டைக்கு உதவியது.

மேற்காசியாவிலிருந்து வணிக ரீதியாக உள்ளே வந்த (பாரசீகம், ஈரானியம், அரேபியா) இஸ்லாமியர்களின் வருகையும், அவர்களின் கடற்கரைக்கு அருகே உள்ளே குடியிருப்புகளை உருவாக்கினார்கள்.  

இதுவே இறுதிவரையிலும் மொத்த முஸ்லிம் மக்களும் கடற்கரை ஓரமாகவே தங்கள் வாழ்க்கையை அமைத்து வாழ்ந்து வந்தனர். இவர்களைப் பற்றிய மொத்த புரிதல்களும் ஒன்பதாம் நூற்றாண்டுகளுக்குப் பிறகு தான் சரித்திரம் பதிவு செய்துள்ளது.  ஒவ்வொரு காலகட்டத்திலும் இடப்பெயர்ச்சியாய் பல்வேறு நோக்கத்திற்காக உள்ளே சென்றவர்கள் எந்த இனக்குழுவுடன் கலந்து சேர்கிறார்களோ காலப்போக்கில் அவர்களே பின்னாளில் சிங்கள மொழி பேசிய சிங்களர்களாக மாற்றம் பெற்று விடுகின்றனர்.  

அதுவே தான் தமிழ் இனக்குழுவுடன் வந்து சேர்பவர்கள் தமிழ் மக்களாக இறுதி வரைக்கும் வாழ்கின்றனர். 

இந்த சூழ்நிலை ஐரோப்பியர்கள் உள்ளே நுழையும் 1505 வரைக்கும் இப்படித்தான் இருக்கிறது.

15 ஆம் நூற்றாண்டில் போர்த்துகீசியர்கள் உள்ளே நுழைந்த போது, அதுவே அவர்கள் ஆளுமைக்குள் இலங்கையை கொண்டு வந்த போது கத்தோலிக்க கிறிஸ்துவ மதத்திற்கு மாற்ற கட்டாயப்படுத்தியதும், மாறாதவர்கள் துன்புறுத்தி சாகடிப்பதும் என் இலங்கையின் வரலாற்றுப் பக்கங்களில் கிறிஸ்துவம் ஆதிக்கம் செலுத்த தொடங்கியது  

அதுவே பின்னாளில் டச்சு அதைத் தொடர்ந்து ஆங்கிலேயர்கள் என்று உள்ளே வந்தவர்கள் வணிக நோக்கத்தையும் தாண்டி கலாச்சார சீரழிவு தொடங்கி பல கண்ணீர் வரவழைக்கும் வாழ்க்கை முறையையும் உருவாக்கி இன்றைய பெரும்பாலான இலங்கை ஆட்சியாளர்கள் அத்தனை பேர்களும் கிறிஸ்துவத்தில் தொடங்கி, அதன் உட்பிரிவில் மாறி, இறுதியில் சிங்கள காப்பாளராக அங்கிட்டும் இங்கிட்டும் இல்லாத ஒரு புதிய பிறப்பாக தங்களை பிரகடனப்படுத்திக் கொண்ட பாக்யசாலிகளை பெற்றது தான் இலங்கை அரசாங்கம்.

சோழர்கள் மொத்தமாக 1070 ஆம் ஆண்டு வரைக்கும் வட இலங்கையை தங்களுடைய ஆளுமையில் முழுமையாக வைத்திருந்தனர்.  

இறுதி ஆண்டுகளில் சரிந்து கொண்டுருந்த சோழப்பேரரசை, வீழ்ச்சிகளில் இருந்தவர்களை வெற்றி கொண்டு விஜயபாகு என்ற சிங்கள மன்னர் ஆட்சிக்கு வந்த (1053) பொலன்னறுவையில் நிறுவினார்.  

மத மாச்சரியம் இல்லாத மக்கள் தலைவனாக இவரது ஆட்சி சிறப்புடன் இருப்பது மற்றொரு மகத்தான் ஆச்சரியம்.  

இன்றைக்கு பிரபல்யமாக இருக்கும் மத நல்லிணக்கத்தை அன்றே சாத்யப்படுத்தி செயலாக்கத்தில் காட்டியவர். இவர் காலத்தில் சிங்கள தமிழர் இணைப்பு சாத்யமானது எந்த அளவிற்கு என்றால் வலுவிழந்த சோழர்களுடன் சேர விரும்பாத இவன் தனது தங்கை மித்திராவை பாண்டிய இளவரசனுக்கு மனம் முடித்தான்.  

இவர்களுக்குப் பிறந்த முதலாம் பராக்கிரமபாகு விஜயபாகு காலத்தில் தான் சிங்கள தமிழ் இனக்கலப்பும் உருவாகத் தொடங்கியது.. இந்த இனக்கலப்பு என்பது சமீப கால இலங்கை ஆட்சியாளர்கள் வரைக்கும் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது, ஆட்சியில் இருந்த பண்டாரா நாயகா, ஜெயவர்த்னே வரைக்கும் தொட்டு தொடர்ந்து தமிழ் மரபில் வந்தவர்கள் தான் என்பதை ஆதாரங்கள் மூலமாக அற்புதமாக நமக்கு புரியவைக்கின்றது.

தமிழ் மற்றும் சிங்கள என்று வெவ்வேறு இனக்குழுக்களாக இருந்தாலும், மொழி, கலாச்சாரம், வழிபாட்டு முறைகள் என்று எல்லாவிதங்களிலும் வேறுபட்ட வாழ்க்கை வாழ்ந்து கொண்டுருந்தாலும் வடக்கு தெற்கு என்று மொத்த இலங்கையையும் இயற்கையாக உருவாகியிருந்த மிகப் பெரிய காடு இவர்களைப் பிரித்து வைத்திருந்தது முதல் ஆச்சரியம். 

14 ஆம் நூற்றாண்டில் வர்த்தகம் வளர்ச்சியடைந்த போது லவங்கம் என்ற பட்டையை உரிக்க காடுகளில் கூடுதலாக தொழிலாளர்கள் தேவைப்பட்டனர்.  சிங்கள மன்னர்கள் தமிழ்நாட்டில் வாழ்ந்த சாலியர் (நெசவுத் தொழில்) என்ற சமூகப் பிரிவைச் சேர்ந்தவர்களை அழைத்து வந்தனர்.  

இவர்கள் சிங்கள இனக்குழுவில் ஐக்கியமாக, இவர்களே காலப்போக்கில் தனியாக தனி சமூகப் பிரிவாக சேர்த்துக் கொள்ளப்பட்டு இறுதியில் சிங்கள இனக்குழுவாக மாறினர். இறுதிகாலம் வரையிலும் இவர்கள் சிங்கள சமூகத்தில் தாழ்த்தப்பட்ட சமூகப்பிரிவாகவே உருவாகியிருந்தனர்.

வடக்கு ஆதிக்கம் என்பது தமிழர்களிடத்திலும், தெற்குப் பகுதி சிங்களர்  என்றும் உருவாக்கியது. .  ஆனால் இதில் மற்றொரு குறிப்பிடத்தக்க மற்றொரு அம்சம் அந்தந்த இனக்குழுவும், ஆளுமையில் இருந்தவர்களும் மொத்தத்தில் அமைதியாகத் தான் வாழ்ந்தார்கள்.  

ஐரோப்பியர்கள் உள்ளே நுழையும் வரைக்கும் இந்த இரண்டு இனக்குழுவிற்கிடையே உருவான பரஸ்பர போர்கள் என்பதெல்லாம் தங்களுடைய ஆளுமையை நிலைநாட்டக்கூடிய வகையில் தான் இருக்கின்றது.

இரண்டு இனக்குழுவாக இருந்தவர்கள் தவிர்த்து உள்ளே வந்த மலாய், (பின்னால் வரும் தந்தை செல்வா மலேசியாவில் ஈப்போவில் பிறந்து இலங்கையில் வந்து கத்தோலிக்க கிறிஸ்துவ மதத்திற்கு மாறி தமிழர்களின் தந்தையாக மாற்றம் பெற்றவர்) ஐரோப்பியர்கள் என்று தங்களுடைய குடும்பங்கள் தவிர்த்து இங்கேயும் மணம் புரிந்து புதிதான குழுக்களை உருவாக்கினர். 

பின்னால் வரும் தமிழ்த் தலைவர்கள் வந்து ஆண்டு கொண்டுருந்த ஐரோப்பியர்களை திருமணம் செய்து சிறப்பு சலுகைகள் பெறும் அளவிற்கு புதிய மேல்தட்டு கலாச்சார வாழ்க்கையையும் தொடங்கி வைத்தனர். இலங்கையின் தொடக்க கால தமிழ் தலைவர்கள் பெரும்பாலோனோர் ஐரோப்பிய பெண்மணிகளை மணந்து மேல்தட்டு வாழ்க்கையும் தமிழ் பெயர்களையும் கொண்டு வாழ்ந்தவர்கள்.

போர்த்துகீசியர்கள் எதிர்பாராத விதமாக இலங்கைக்கு எந்த நோக்கமும் இல்லாமல் உள்ளே வந்தனர். உள்ளே வந்தவர்கள் சூழ்நிலையை புரிந்து கொண்டு, ஒற்றுமை இல்லாமல் இருந்தவர்கள் தங்கள் ஆதிக்கத்திற்குள் கொண்டு வந்து தங்கள் வணிக நோக்கத்தை தொடங்கி வைத்தனர்கள்.  

அந்த வணிக நோக்கமே அடிப்படை மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் அளவிற்கு மொத்த தங்கள் ஆளுமையையும் உருவாக்கினர். மொத்த மக்களின் வாழ்க்கையை மாற்றவும் செய்தனர். இலங்கையில் இந்த காலகட்டங்களில் தான் கிறிஸ்துவம் அதிகமாக ஆழமாக ஊடுருவியது அதுவே இறுதி வரைக்கும் கவனமாக பாதுகாத்து உள்ளே இருப்பதும் சம கால இலங்கை வரலாற்றுப் பக்கங்கள் வரைக்கும் இருப்பதும் மொத்தத்திலும் ஆச்சரியமான ஒன்று.  

தமிழராக பிறந்து, கலப்பினத்தில் உருவாகி, கிறிஸ்துவ பிரிவில் நுழைந்து,பௌத்த காப்பாளராக மாறியும் கலந்து கட்டிய சமத்துவபுரங்களாக ஒவ்வொரு சிங்கள தலைவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை மொத்தத்திலும் அதிகாரத்தை பிடிக்க எந்த அளவிற்கு வேண்டுமானாலும் செல்வோம் என்பதாகத்தான் இருக்கிறது. 

ஆனால் புத்தரின் கொள்கைப்படி வாழ்கிறோம் என்று சொன்ன அத்தனை சிங்கள தலைவர்களும் மறந்தும் கூட புத்தரின் கொள்கைகளை பின்பற்றவில்லை.  ஆசையின் எல்லை எது என்பது உணர்ந்து வாழ்ந்து காட்டிய அவர்களின் வரலாறு எந்த வார்த்தைகளாலும் வர்ணிக்க முடியாது. புத்தரின் ஆசையைத் துற என்ற போதனை இன்று தென்னை மரக் கூட்டங்களுக்கிடையே காற்றில் அலைந்து கொண்டுருக்கிறது.

கிறிஸ்துவ சிங்களரும் மன்னிக்க தயாராய் இல்லை. இனவாதத்தை பௌத்த சிங்களரும் மறக்க விரும்பாத காரணத்தால் இன்று பாவமன்னிப்பு தரும் ஆலயத்தின் அத்தனை சுவர்களிலும் ரத்தக்கறை படிந்துள்ளது. 

கொள்கையில்லாத இனவெறி தந்த இன்றைய ஆட்சியாளர்களின் வெற்றி என்பது இலங்கையில் வாழ்ந்து மடிந்த மொத்த அப்பாவி சிங்கள தமிழர்களின் சமாதியின் மேல் கட்டப்பட்டுள்ளது. 

தொடர்ந்து பயணிப்போம்.


Monday, April 08, 2013

07 சிங்கம் புணர்ந்து வந்தவர்கள்


தென்கிழக்கு ஆசியா முதல் இந்தியா, தென்னிந்தியா வரைக்கும் சமஸ்கிருதம் ஆட்சி புரியத் தொடங்கிய போது மொத்த வரலாற்றின் போக்கும் வேறொரு திசையில் பயணிக்கத் தொடங்கியது. 

ஒவ்வொரு ஆட்சியாளர்கள் தங்களுடைய வம்சத்தை உயர்ந்ததாக காட்டிக்கொள்ள பல் வேறு புனைக்கதைகளை உருவாக்கி பரப்பத் தொடங்கினர்.    

இதன் தொடர்பாக உருவானது தான் சிங்களர்கள் "சிங்கம் புணர்ந்து வந்தவர்கள் " என்றொரு அசிங்கக் கதையும் நிலைபெறத் தொடங்கியது.

சிங்களர்களின் புனித நூல் என்ற சொல்லப்படும் மகாவம்சத்தில் சொல்லப்படும் அந்த புனைவு கதையின்படி விஜயன் என்ற இளவரசன் தற்போதை மேற்கு வங்க மாநிலம் பகுதியிலிருந்து இலங்கைக்கு உள்ளே சென்றதில் இருந்து தொடங்குகிறது.  அப்போது இந்தியாவில் இதில் குறிப்பிடப்படும் வங்க மாநில பகுதியில் ஆண்டு கொண்டுருந்த மன்னரின் மகள் பெயர் சுபதேவி.  இவளை வனராஜா சிங்கம் கடத்திக்கொண்டுச் சென்று குகையில் அடைத்து வைத்துருந்தது. சிங்கம் சுபதேவியுடன் குடும்பம் நடத்தி ஆண் குழந்தை, பெண் குழந்தை என்று இரண்டு குழந்தைகள் பிறந்தன.  பிறந்த ஆண் குழந்தை கால்களும் கைகளும் சிங்கத்தை போன்று தோற்றத்தை பெற்று சின்ஹபாஹ என்ற பெயராலும், பெண் குழந்தை சின்ஹவலி என்றும் அழைக்கப்பட்டனர்.

குகைக்குள் அடைக்கப்பட்ட தனது தாயையும் தங்கையையும் அழைத்துக் கொண்டு தப்பித்து வெளியேறிய சின்ஹபாஹ, தன்னுடைய சகோதரியான சின்ஹவலியையே திருமணம் செய்து கொண்டு சின்ஹபுரம் என்ற நகரை உருவாக்கிக்கொண்டு ஆட்சி புரியத் தொடங்கினான்.

சினஹவலிக்கு பிறந்த இரட்டையரான ஆண் குழந்தைகளில் மூத்த ஆண் குழந்தையின் பெயர் விஜயன்.  இரண்டாவது சுமித்தா. வளர்ந்து கொண்டுருந்த விஜயனின் தீய குணங்களை அடக்க முடியாமல் மன்னர் சின்ஹபாஹ, விஜயனையும் துணையாக இருந்தவர்களையும் நாடு கடத்தினார். இவர்கள் மரக்கலத்தின் வாயிலாக இலங்கையில் வந்து இறங்கினர்.  

இவர்கள் வந்த போது இலங்கையின் அப்போதைய பெயர் தம்பப்பன்னி.  இவர்கள் குறிப்பிடும் மொத்த இந்த கதையின் மூலக்கூறு இந்தியாவின் ஓரிஸ்ஸா மற்றும் மேற்குவங்காளத்தில் (கலிங்கம், வங்கதேசம்) இருந்து தொடங்குகிறது.  

இவர்கள் உள்ளே வந்த போது புத்தர் மரணமடைந்தார் என்றும் புத்தரின் வாரிசாக தங்களை அறிவித்துக்கொண்டு ஆட்சி புரியத் தொடங்கினார் என்று இதன் அசிங்கம் நிறைந்த பல சம்பவங்கள் இன்னமும் தொடர்ந்து கொண்டு செல்கிறது.

இன்றைக்கு 2300 ஆண்டுகளுக்கு முன்னால் கூட இன்றைய இலங்கையில் பிரதேச எல்லைகள் என்று எதுவும் இல்லை. 

அன்று உருவாகியிருந்த வணிகத் தொடர்புகள் தான் எல்லாவகையிலும் ஆட்சி புரியத் தொடங்கியது. அதுவே ஒரு அளவிற்கு மேல் கடந்து தமிழ்நாட்டில் ஆண்டு கொண்டுருந்த குறுநில மன்னர்கள் இலங்கையில் இருந்த சிறு இனக்குழுக்களின் மேல் ஆதிக்கம் செலுத்த முற்பட்டு பரவலாக்கமாக மாறத் தொடங்கியது.  அங்கொன்றும் இங்கொன்றுமாக தமிழர்களின் மொத்த ஆதிக்க இனக்குழுக்கள் வளரத் தொடங்கியது.  சிங்களர்களின் தீபவம்ச நூலில் தொடக்க தமிழ் மன்னர்கள் என்று குறிப்பிடப்படும் ஸேன,குத்தக என்ற அநுராதபுர ஆட்சியாளர்களையும்,  தமிழர்கள் அதிகமாக வாழ்ந்த  வவுனியா ( பெரிய புளிங்குளம்), மட்டக்களப்பு (ஸேருவில), அம்பாறை (குடுவில்) மாவட்ட விபரங்கள் மூலம் வாழ்ந்து கொண்டுருந்த இனக்குழுக்களையும், அங்கு வாழ்ந்து கொண்டுருந்த மற்ற இனக்குழுக்களின் மேல் இவர்கள் செலுத்திய ஆதிக்கங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. .

மூன்றாம் நூற்றாண்டின் மத்திம பகுதியில் வட இந்தியாவில் பாடலிபுரத்தை ஆட்சி புரிந்து கொண்டுருந்த கலிங்க பேரரசுவின் மன்னரான (இன்றைய பாட்னா) அசோக பெருமன்னன் தன்னுடைய சார்பாளராக மஹிந்த மகாதேரர் என்ற புத்தபிக்குவை அனுப்பி வைத்தார். 

காரணம் அப்போது நடந்துருந்த கலிங்கப்போர் மன்னனை முழுமையாக மாற்றியிருந்தது. போருக்குப் பின்னால் பௌத்த மத தாக்கத்தினால் அமைதி வழியே செல்ல விரும்பிய அசோக மன்னரின் சார்பாக சென்றவர்,  ஆண்டு கொண்டுருந்த திஸ என்ற (திசையன்) மன்னன்  வந்த தூதுக்குழுவினரை வரவேற்று அசோக மன்னரின் ஆளுமையை ஏற்றுக்கொண்டதும் நடந்தேறியது. 

அசோக மன்னரின் சார்பாக செயல்பட்டு ஆட்சி புரிந்தவர்களுக்குப் பின்னால் வந்த தமிழ் மன்னர்களின் பெயர் என்று தீபவம்சம் கூறுவது எளார என்றழைக்கப்படும் தமிழ் மன்னனாகிய எல்லாளன்.  ஏறக்குறைய 44 ஆண்டுகள் நீதி வழுவாது ஆட்சி புரிந்து இந்த மன்னரின் தயாள, ஈகை குணங்களைப்பற்றி உச்சமாக புகழ்ந்து எழுதி உள்ளனர், 

உச்சகட்டமாக எல்லாளன் என்ற தமிழ்மன்னரைப் பற்றி, அவரது ஆட்சியில் பெய்த மழைகூட இரவில் மட்டும் பெய்தது என்கிற அளவில் எழுதி வைத்துள்ளனர். 

பயம் என்பதை பயம் கொள்ள வைத்தவர்களின் மரபில் வந்தவர்களை இன்றைய இலங்கை அரசு கடைசி வரைக்கும் நேருக்கு நேர் நின்று போரிடமுடியவில்லை..

இறுதியில் எல்லாளன்,  துட்டகாமிணி என்றழைக்கப்படும் காமணீ அபய என்ற தெற்கு இலங்கை சிங்கள மன்னரால் தோற்கடிக்கப்பட்ட போது எல்லாளன் என்ற தமிழ் மன்னரின் வயது 73,  

போரிட்ட சிங்கள மன்னனோ இளைஞன். ஆனால் அன்றைய சூழ்நிலையில் எல்லாளன் ஆட்சியினால் பலனடைந்த சிங்கள தமிழ் தரப்பினர்கள் வைத்திருந்த மதிப்பை மாற்ற விரும்பாத சிங்கள மன்னன் எல்லாளன் சார்பாக நினைவு ஸ்தூபி ஒன்றை உருவாக்கி வழிபடுவதன் மூலம் அனைவரையும் திருப்திபடுத்தினான்.  இதுவே இலங்கை சுதந்திரத்திற்குப் பிறகு பின்னாளில் ஆட்சிக்கு வந்த ஜெயவர்த்னே இந்த ஸ்தூபியை சிங்கள இனவாத அடையாளமாக காட்டப்பட்டு, அமைச்சராக இருந்த அதுலத் முதலி தொல்லியல் ஆராய்ச்சியாளர்களுக்கு மிரட்டல் விடும் அளவிற்கு அவரின் தமிழர் எதிர்ப்பு உச்சத்தில் இருந்தது.

ஆனால் மொத்தமாக சிங்கள வரலாற்று ஆசிரியர்களால் தரப்படும் மொத்த சான்றுகளும் அநுராதபுரத்தை வைத்தே கொடுக்கப்படுவதால் அந்த நகரின் சிறப்பு தொடக்கம் முதல் மேம்பட்டு இருப்பதை உணரலாம்.  

இதைத் தொடர்ந்து வரும் ஆட்சியாளர்களில் பலர் வந்து போய்க்கொண்டுருந்தாலும் சிங்கள அனுலா என்ற அரசியின் ஆட்சியும், அவரது ஒழுங்கங்கெட்ட நடவடிக்கைகளும், கணவர், காதலன் என்ற பெயரில் தன்னுடன வாழ்ந்தவர்களை நஞ்சு கொடுத்து கொன்ற காட்சிகளும் இருக்கிறது.  

இதுவே காலப் போக்கில் ஒவ்வொரு இனக்குழுவும் ஆதிக்கம் செலுத்தி  இலங்கையின் வடக்கில் தமிழ்மொழியின் செல்வாக்கும் சைவ சமயமும், தெற்கில் சிங்கள மொழியும் பௌத்தமும் என்று மாற்றம் பெற்றது. 

மொத்தமாக நாகர்கள் வாழ்ந்த நாகத்தீவு என்றே பாலி மொழி வரலாறு தெரிவிக்கின்றது.  

பின்னால் உருவான சிங்கள மொழி என்பது ஒரு இயல்பான மொழியல்ல.   கலிங்கப் பேரரசை அசோக மன்னன் ஆண்ட போது, அவரின் சார்பாளர்கள் இலங்கைக்குச் சென்ற போது வழக்கில் இருந்த சமஸ்கிருதத்தில் தொடங்கி, பாலி, கலிங்கம், தமிழ் என்பது வரைக்கும் பல மொழிகள் கலந்து உருவாக்கிய கூட்டுக் கலவை அது. 

அசோக மன்னரது இலட்சினையான சிங்கமும் எலு என்பதன் எச்சமாக கருதப்படுவதும் சேர்ந்து சிங்களம் என்று மாற்றம் அடைந்ததாக வரலாற்றுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. 

தமிழ்நாட்டில் ஆறாம் நூற்றாண்டுக்குப் பிறகு உருவான சமய மாற்றங்களும், வீழ்ச்சியடைந்து கொண்டுருந்த பௌத்தமும் கரையேறி பயணிக்கத் தொடங்கியது,  அப்போதைய தமிழர்களும், தமிழ் மன்னர்களும் சைவ, வைணவ என்ற பிரிவின் பக்கம் சாயத் தொடங்கியதால் மகாநாம தேரர் என்பவரால் பௌத்த வீழ்ச்சியை தடுக்கும் பொருட்டு எழுதப்பட்ட நூலே இன்றைய சிங்களர்களின் புனித நூலாக மதிக்கப்படும் மகாவம்சம். 

காலமும் சூழ்நிலையும் திரிபுகளையும் இத்துடன் கொண்டு வந்து சேர்க்க  கிபி 972 ஆம் ஆண்டு நான்காம் மகிந்தன் என்ற சிங்கள மன்னரால் இதை தமிழர் எதிர்ப்புணர்ச்சி என்ற நோக்கத்தில் எடுத்துச் செல்லப்பட்டது.

தொடர்ந்து பயணிப்போம்....................


Sunday, April 07, 2013

கோடி கொடுத்து குடியிருந்த வீட்டையும் கொடுத்தவர்

இதுவரையில் இந்த தளத்தில் எல்லாவிசயங்களையும் பற்றியும் எழுதியுள்ளேன். இதுவரையிலும் எழுதாமல் இருந்தது வள்ளல் அழகப்பர் பற்றியே.

நீண்டதொரு ஆராய்ச்சிக்கும் ஆச்சரியத்திற்கும் உரியவர் அழகப்பச் செட்டியார் அவர்கள். நினைத்துப் பார்க்க முடியாத சாதனைகள் செய்தவர்.  இந்த சமயத்தில் காரைக்குடி மக்கள் மனற்ம் தங்களது முகநூலில் வெளியிட்டுள்ள அவரைப் பற்றிய விபரங்களை இந்த பதிவில் அவர் நினைவு நாள் நினைவாக இங்கே பதிவாக்கி வைக்கின்றேன்.


கோடி கொடுத்த கொடைஞன்
குடியிருந்த வீடும் கொடுத்த விழுத்தெய்வம்
தேடியும் அள்ளிக் கொடுத்த அழகன்
அறிவூட்டும் வெள்ளி விளக்கே விளக்கு!"

என்று பாடப் பெற்ற வள்ளல் அழகப்பரின் நினைவு நாள் MARCH 5

காரைக்குடி இன்று பெற்றிருக்கும் அத்துணை வளர்ச்சிக்கும் வள்ளல் அழகப்பர் தான் காரணம் என்றால் அது மிகையில்லை. காரைக்குடியை கல்விக் குடியாக மாற்றியதோடு, மத்திய மின் வேதியியல் ஆய்வகம் உருவாகவும் காரணமாக இருந்தவர் அழகப்பர்.

அடிப்படைக் கல்வி முதல், ஆராய்ச்சிக் கல்வி வரை படித்து முடிக்கும் பெருவாய்ப்பு காரைக்குடி மண்ணில் உருவாகிட முழு முதற் காரணமான வள்ளல் அழகப்பர்

வள்ளலின் வரலாறு சில வரிகளில்:

1909-ல் செட்டி நாட்டின் முக்கியமான பகுதியாக விளங்கும் கோட்டையூரில் பிறந்தார் அழகப்ப செட்டியார். அவர் தந்தையார் ராமநாதன் செட்டியார், மலேசியாவில் ரப்பர் தோட்டம் வைத்திருந்தார். மகன் அழகப்பன் வளர்ந்து பெரியவனாகி இந்த ரப்பர் தோட்டத்தை நிர்வாகம் செய்ய வேண்டும் என்பதுதான் தந்தையின் ஆசை. ஆனால் மகனுக்கோ, பிரசிடென்ஸி கல்லூரியில் படித்தபிறகு லண்டனுக்குச் சென்று பாரிஸ்டர்-அட்-லா படிக்க வேண்டும் என்று ஆசை.

தந்தையின் சொல்லைத் தட்ட முடியாமல், மலேசியாவுக்கு கப்பல் ஏறினார் அழகப்பன். அப்போது அவருக்கு அடித்த காய்ச்சலைக் கண்டு கப்பலிலிருந்து இறக்கிவிட்டு விட்டார் கப்பல் அதிகாரி. உயர்படிப்பு படிக்கிற ஆசையை தன் பெரியப்பாவிடம் எடுத்துச் சொல்ல, 'கவலைப்படாதே, நான் உன்னை படிக்க வைக்கிறேன்’ என்றார் அவர். ஆனால், அவரும் அடுத்த சில மாதங்களிலேயே இறந்துவிட, அழகப்பன் நிலைகுலைந்து போனார். மகனின் ஆர்வத்தை உணர்ந்த தந்தை, அழகப்பனை லண்டனுக்கு அனுப்பி பார்-அட்-லா படிக்க வைத்தார். அழகப்பர் இலண்டனில் படித்துக்கொண்டே சார்ட்டர்டு பாங்கில் வேலை பார்த்தார். அதன் மூலம் கிடைத்த வருவாயைக் கொண்டு வாழ்க்கையை நடத்தினார். 

இதற்கிடையில் அவர் விமானம் ஓட்டும் தொழிலிலும் பயிற்சி பெறத் தொடங்கி இரண்டாண்டில் சிறந்த விமானியாகவும் ஆனார். இங்கிலாந்தில் கல்வி கற்று மூன்றாண்டுகளுக்குப் பிறகு விமானி, பாங்குத் தொழிலாளி, வழங்கறிஞர் என்ற பல சிறப்புகளுடன் அழகப்பர் தாய்நாடு திரும்பினார்.

லண்டனில் சட்டப் படிப்பை படித்தபிறகு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பதிவுசெய்து கொண்டார். சில ஆண்டு காலம் வழக்கறிஞர் வேலையை வெற்றிகரமாகச் செய்து வந்தார் எனினும், அதையே தொடர்ந்து செய்ய அவருக்கு இஷ்டமில்லை. காரணம், அவர் உடம்பில் ஓடியது பிஸினஸ் ரத்தம். அவர் படித்தது ஆங்கில இலக்கியமும் சட்டமும் என்றாலும் நிதி நிர்வாகத்தை ஏறக்குறைய கரைத்துக் குடித்திருந்தார். சட்டப் பணியை விட்டுவிட்டு, பிஸினஸ் உலகில் இறங்கினார்.

அழகப்ப செட்டியார் முதல் முயற்சியாக கேரள மாநிலம் திருச்சூருக்குப் பக்கத்தில் ஒரு நூற்பாலையைத் தொடங்கினார். ஆரம்பத்தில் அவருக்குக் கொஞ்சம் இழப்பையே தந்தது அந்த நூற்பாலை. எந்த பிஸினஸையும் கொஞ்சம் காலஅவகாசத்தில் கரை கண்டுவிடுகிற திறமை அவருக்கு உண்டு. எனவே, நஷ்டத்தில் இருந்த ஆலையை லாபத்திற்குக் கொண்டு வந்தார். அந்த ஆலையில் வேலைபார்த்த தொழிலாளர்களுக்கு வீடுகளை கட்டித் தந்தார். அந்த பகுதி இன்றும் அழகப்பா நகர் என்கிற பெயரிலேயே இருக்கிறது.

இதன்பிறகு மும்பை பங்குச் சந்தையில் ஈடுபட ஆரம்பித்தார். மும்பை பங்குச் சந்தை வர்த்தகம் அவர் விரலசைவுக்கு கட்டுப்பட்டு நிற்பதைக் கண்டு மனம் புழுங்கிப் போனார்கள் அங்கிருந்த பல பெரும் டிரேடர்கள். அவர்கள் எல்லோரும் சேர்ந்து அழகப்ப செட்டியாருக்கு எதிராக ரகசியத் திட்டம் போட, சில நாட்களிலேயே நாற்பது லட்ச ரூபாய்க்குமேல் அவருக்கு நஷ்டம் ஏற்பட்டது. 1940-களில் நாற்பது லட்ச ரூபாய் என்பது கொஞ்சநஞ்சமல்ல.

நஷ்டத்தைப் பற்றி கவலைப்படாமல் தொடர்ந்து நாட்டின் வளர்ச்சியில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். கை நிறைய பணம், மலேசியாவில் ரப்பர் தோட்டம், பர்மாவில் டின் சுரங்கம், கேரளாவில் நூற்பாலை, கொல்கத்தாவில் இன்ஷூரன்ஸ் பிஸினஸ், சென்னையில் விமான சர்வீஸ் நிறுவனம் என லாபத்தை அள்ளித்தர பலவிதமான தொழில்கள் இருந்தபோதும், அவர் மனம் தனது சொந்த மக்களுக்கு நன்மை செய்வதிலேயே முனைப்பாக இருந்தது.

1940-களில் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் மேற்படிப்பு படிக்க வேண்டும் என்றால் மதுரைக்கோ,திருச்சிக்கோதான் போக வேண்டியிருந்தது. இதனாலேயே பலரும் மேற்படிப்பு படிக்க முடியாத நிலை. இதற்கொரு தீர்வாக, காரைக்குடியில் பல கல்வி நிலையங்களை அமைத்தார்.

1947-ஆம் ஆண்டு ஜுலை மாதம் அழகப்பர் சென்னை அடையாற்றில் நடந்த அன்னிபெசண்ட் அம்மையார் நூற்றாண்டு விழா மாநாட்டில் கலந்து கொண்டார்.

அக்கூட்டத்தற்குச் சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தரும், அழகப்பரின் சிறந்த நண்பருமாகிய, திரு. இலட்சுமணசாமி முதலியார; தலைமை வகித்தார். அவர் தமது தலைமையுரையில், தமிழகத்தின் கல்வித்தேக்கம் பற்றிக் குறிப்பிட்டு, செல்வர்கள் கல்வி வளர்ச்சிக்குப் பாடுபட முன்வரவேண்டும் என்றும், கல்லூரிகளை ஏற்படுத்த ஒத்துழைக்க வெண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். அவரது வேண்டுகோளைக் கேட்ட அழகப்பர் உடனே மேடைக்குச் சென்று, காரைக்குடியில் தான் ஒரு கல்லூரி ஏற்படுத்த முன்வருவதாக அறிவித்தார்.

இதனை அங்கு வந்திருந்த அனைவரும் வரவேற்றனர். பல்கலைக்கழகத் துணைவேந்தர் என்ற முறையில் திரு. இலட்சுமணசாமி முதலியார் காரைக்குடி அழகப்பா கல்லூரிக்கு மேடையிலேயே அனுமதி வழங்கினார். மறுநாள் காரைக்குடிக்கு வந்த அழகப்பர் காரைக்குடி நகர்மன்றத்திற்குச் சொந்தமான, காந்தி மாளிகையை வாடகைக்குப் பெற்று, பேராசிரியர்கள் பலரை அதிகச் சம்பளம் கொடுத்து அழைத்து வந்து 15.8.1947 இந்தியா சுதந்திரம் பெற்ற நாளன்று அழகப்பா கல்லூரியைத் தொடங்கினார். இதனையடுத்து அங்கு பல கல்வி நிலையங்கள் தோன்றின.

காரைக்குடியில் அழகப்பர் நிறுவிய ‘‘மின்-இரசாயன ஆராய்ச்சிக்கூடமே அவரின் மேலான சாதனையாகும். 

இவ்வாராய்ச்சிக் கூடத்தைக் காரைக்குடியில் நிறுவுவதற்காக வள்ளல் அழகப்பர் 15 இலட்சம் ரூபாயும், 300 ஏக்கர் நிலமும் கொடுத்து, 1948-ஆம் ஆண்டு அதற்குரிய அடித்தளக்கல்லினை, முன்னாள் பாரதப் பிரதமர் ஜவகர்லால் நேரு அவர்களைக் கொண்டு நாட்டச் செய்தார். அதன்பின் அதனை முன்னாள் குடியரசுத் தலைவர் திரு இராதாகிருஷ்ணன் அவர்களைக் கொண்டு தொடங்கி வைத்தார்.

தமிழகத்தில் மட்டுமல்லாது கேரளத்திலும் உயர்நிலைப்பள்ளி, தொழில் நுணுக்கப்பள்ளி உள்ளிட்டவற்றை நிறுவியதுடன் பல்வேறு கல்வி நிலையங்களுக்கும் ஏராளமாகப் பணத்தை வாரி வழங்கினார். சென்னைப் பல்கலைக் கழகத்தார் கிண்டியில் அழகப்பச் செட்டியார் பொறியியற் கல்லூரியை நிறுவுவதற்கு  5,00,000 ரூபாயும்,அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பொறியியற் கல்லூரி தொடங்குவதற்கு 5,00,000 ரூபாயும், கொடுத்தார்.

காரைக்குடியில் அழகப்பா பொறியியல் கல்லூரி தொடங்குவதற்கும் ஆவன செய்தார். இங்ஙனம் தமிழக்த்தின் பொறியியற் கல்வி வரலாற்றில் மூன்று பொறியியற் கல்லூரிகள் முதலில் தோன்றுவதற்கு வித்தூன்றியவர் அழகப்பர் ஆவார். 1948-ஆம் ஆண்டு கணிதமேதை இராமாநுசத்தின் பெயரால் சென்னையில் பெரும் பொருட்செலவில் அழகப்பர் கணித அறிவுக்கூடத்தைத் தொடங்கினார். டெல்லியில் உள்ள தென்னிந்தியக் கல்விக் கழகத்திற்கும், மதுரை லேடிடோக் கல்லூரிக்கும் நன்கொடைகள் வழங்கினார்.

அழகப்பர், தமது மகளிர் கல்லூரிக்குத் தாம் குடியிருந்த சொந்த மாளிகையையே மனமுவந்து கொடுத்தார்.

காரைக்குடி மக்கள் மன்றம் தமக்கு ஆண் குழந்தை இல்லாதததை அழகப்பர் குறையாகக் கருதியதே இல்லை. எனினும் அவரது உறவினர்கள் சில சமயம், ‘‘உங்களுக்கு ஆண் வாரிசு வேண்டாமா? யாராவது ஒரு பையனைத் தத்து எடுத்துக் கொள்ளுங்களேன்’’ என்று வலியுறுத்துவா.

அதற்கு அழகப்பர்,

‘இதோ.கல்லூரியில் கல்வி கற்றுச் செல்லும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் என் வாரிசுகள் தானே. இவர்கள் இத்தனைபேர் இருக்கும்பொழுது நான் ஏன் குறிப்பிட்ட ஒரு பையனைத் தத்து எடுத்து வளர்க்கவேண்டும். அது தேவையில்லை. என் சொத்து எல்லோருக்கும் பயன்படட்டும்’’ என்றாராம். அனைத்துக் குழந்தைகளையும் தமது குழந்தையாகக் கருதிய அழகப்பர் உள்ளம் போற்றுதற்குரியது.