Showing posts with label என் டைரிக்குறிப்புகள். Show all posts
Showing posts with label என் டைரிக்குறிப்புகள். Show all posts

Saturday, December 31, 2016

2016 -- தலைமைக் கொள்ளைக்காரன்


எந்த வருடமும் இல்லாத அளவிற்குப் புதிய புதிய சம்பவங்கள் 2016 ஆம் ஆண்டு நடந்தது. எப்போதும் போல ஏற்றமும் வீழ்ச்சியும் கலந்தே வரவேற்றது. "கற்றதும் பெற்றதும்" ஏராளம். ஆனால் நான் நினைத்தே பார்த்திராத பல விசயங்களை, குடும்பம், தொழில், சமூகம் உருவாக்கிய பாதிப்புகளை வருடத்தின் இறுதி நாட்களில் எழுதி வைக்க விரும்புகிறேன். 

எனது எட்டாவது மின் நூல் (பழைய குப்பைகள்) நாளை வெளிவருகின்றது. இதுவொரு சுய அலசல். இந்தப் புத்தகம் பதிவில் தொடர்ந்து எழுதி வந்த விசயமாக இருந்தாலும் மொத்தமாகக் கோர்த்துப் பார்த்தபோது என்னை நானே உணர்ந்து கொள்ள முடிந்தது. ஏற்கனவே வெளியிட்ட ஏழு மின் நூல்களும் 1,70,000 பேர்களைச் சென்றடைந்துள்ளது என்பது முதல் ஆச்சரியம். இன்று வரையிலும் யாரோ ஒருவர் வாசித்த மின் நூல் குறித்து மின் அஞ்சல் வழியாக அவர்களின் விமர்சனத்தை எழுதி அனுப்பியபடி தான் இருக்கின்றார்கள். படிக்க ஆள் இருக்கின்றார்கள் என்ற நம்பிக்கையில் தான் இந்த மின் நூலை உருவாக்க எண்ணம் உருவானது. 

இந்த வருடம் வாசித்த புத்தகங்களில் முக்கியமான இரண்டு புத்தகங்கள். ஒன்று. எழுத்தாளரும் நண்பர் என்ற சொல்லுக்கு அப்பாற்பட்டு என்னுடன் நெருக்கம் பாராட்டும் அமுதவன் எழுதிய சிவகுமார் என்னும் மானுடன். இவர் மூலம் தான் நடிகர் சிவகுமார் அவர்களின் தொடர்பும் கிடைத்தது. இரண்டு. நண்பர் ரவி எழுதிய வெட்டிக்காடு. இந்த இரண்டும் எனக்குள் உருவாக்கிய தாக்கத்தின் விளைவே "பழைய குப்பைகள்". இந்த மின் நூல் யாருக்குப் பயன்படுகின்றதோ இல்லையே என் குழந்தைகள் மற்றும் பேரன் பேத்திகளுக்கு என்னைப் பற்றிப் புரிந்து கொள்ள உதவும். 
பதிவில் எழுதுகின்ற நம் எழுத்து குறித்து நமக்கு நாமே எத்தனை முன்னேற்றம் கண்டுள்ளோம்? என்று நமக்கு நாமே சமாதானம் சொல்லிக் கொண்டாலும் நெருங்கிய நண்பர்கள் சொல்லும் சில விமர்சனங்கள். 

தொடர்பற்று இருக்கின்றது. அலைபாய்கின்றது. ஒரே விசயம் திரும்பத் திரும்ப வருகின்றது. கூர்மை இல்லை. ஆணித்தரம் விட்டுப் போகின்றது முடிக்கும் போது தெளிவு இல்லை போன்ற பல விமர்சனங்களை எடுத்துக் கொள்ள வேண்டியதாக உள்ளது. இது உண்மையும் கூட. எதனையும் கற்றுக் கொண்டால் குற்றமில்லை.

தொடக்கத்தில் எழுதும் போது பிழை திருத்த நேரம் இல்லாமல் அப்படியே வெளியிட்டு வந்தேன். இப்போது நீச்சல்காரன் உதவியினால் சந்திப்பிழை, வாணி பிழைதிருத்தி மூலம் அதனைச் சரி செய்ய முடிந்தது. மற்றபடி அன்றைய தின தாக்கத்தை அப்படியே வரும் வேகத்தில் எழுதி முடிக்கும் போது அதனை ஆராய்ந்து வெட்டி ஒட்டி மாற்றப் பொறுமை இருப்பதில்லை. சமீபத்தில் எழுதிய ஜெ. பதிவுகள் கூட நண்பர் சிவா தான் செப்பினிட்டுக் கொடுத்தார். ஒவ்வொரு முறையும் ஒருவரை தேடிக் கொண்டிருக்க முடியாது. ஆனால் எழுத்தே தொழிலாக மாறும் காலம் வரும் போது உள்ளே நுழைந்து அதனுடன் வாழும் போது இந்தக் குறைபாடுகளை நீக்க வழி கிடைக்கும் என்று நம்புகிறேன். 

"பழைய குப்பைகள்" மின் நூலை நெருங்கிய வட்டத்திற்குள் இருக்கும் நண்பர்களுக்கு அனுப்பி அது குறித்த அவர்களின் எண்ணங்களைக் கேட்டு வாங்கியுள்ளேன். நிச்சயம் படிப்படியாக ஒவ்வொன்றாக நேரம் கிடைக்கும் போது வெளியிடுவேன். நண்பர்கள் பொருத்தருள்க. என் குறைகளையும் தாண்டி எழுத்துலகில் என்னையும் நேசிக்க நிறைய நண்பர்கள் இருக்கின்றார்கள். ஒவ்வொருவரின் விமர்சனங்களையும் வாசித்த போது என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. எனக்குக் கிடைத்த அங்கீகாரமாகக் கருதுகிறேன். 

குழந்தைகள் பதின்ம வயதிற்குள் நுழைந்துள்ளார்கள். அவர்களின் முதல் பத்து வயதிற்குள் நடந்த சம்பவங்களைத் தொடர்ந்து பதிவாக மாற்றி எழுதியுள்ளேன். கடந்த சில வருடங்கள் அதிகம் எழுதவில்லை. இதுவரையில் 700 பதிவுகள் எழுதியுள்ளேன். ஆரோக்கியத்துடன் 1000 பதிவுகள் எழுதிவிட வேண்டும் என்ற எண்ணமுண்டு. இனியும் சில காலம் அதிகம் எழுத முடியாத சூழ்நிலையில் இருப்பதால் குழந்தைகளை அதிகம் கவனித்து வருகிறேன். 

அவர்களின் மாறிய நடவடிக்கைகள், தலைமுறை இடைவெளியை உருவாக்க நினைக்கும் அவர்களின் செயல்பாடுகள், கவனச் சிதறலின் காரணங்கள், சம காலக் கல்வி அவர்களைச் சிதைக்கும் காரணிகள், தகுதியில்லாத ஆசிரியர்களால் அவர்கள் இழக்கும் பொக்கிஷங்கள் என்று ஏராளம் உண்டு. 

இந்த வருடம் எனக்குப் புதிதாக அறிமுகமான தமிழ் திரைப்படத்துறை பல பாடங்களை, அனுபவங்களைத் தந்தது. இந்தச் சமயத்தில் அதனைப் பற்றி எழுதுவது சரியாக இருக்காது என்பதால் சமயம் வரும் போது விரிவாக எழுதும் எண்ணம் உண்டு. ஆறு மாதங்கள் அதற்குள் இருந்த போதிலும் பல ஆண்டுகள் இருந்த அனுபவங்கள் கிடைத்தது. பத்தாண்டுகளாக ஊடகத்துறை, திரைப்படத்துறையைக் கவனித்து வருபவன் என்ற முறையில் நடந்த எதுவும் எனக்கு ஆச்சரியமளிக்கவில்லை.

நம்பிக்கைத் துரோகம், பணம் படுத்தும் பாடு, விட்டில் பூச்சிகள் போன்ற தலைப்புக்கு பயன்படுத்தும் வார்த்தைகள் மூலமே பலருக்கும் புரிய வைக்க முடியும்.  நண்பர் எனக்குச் சொன்ன ஒரு அறிவுரை இப்போது நினைவுக்கு வருகின்றது.  "பணம் போட்டவரை மதிக்காத தொழில் ஒன்று உண்டு என்றால் அது திரைப்படத்துறை மட்டுமே" என்றார். அவர் ஒரு தீர்க்கதரிசி.  அவரும் இதை வாசித்துக் கொண்டிருப்பார். 

ஜெ. மறைவு எனக்கு ஆச்சரியமளிக்கவில்லை. தமிழ்நாடு என்ற மாநிலத்தின் "தலைமைச் செயலாளர்" என்ற மொத்த அதிகாரம் கொண்ட பதவியைத் "தலைமைக் கொள்ளைக்காரன்" என்கிற ரீதியில் இருந்த ராம் மோகன் ராவ் தொடங்கி நாள் தோறும் ஒவ்வொரு பத்திரிக்கையிலும் வந்து கொண்டிருக்கும் செய்திகளை வாசித்துக் கொண்டே வரும் போது மனதில் உருவாகும் வார்த்தைகளைப் பதிவுகளாக மாற்ற தற்போது நேரமில்லை என்ற வருத்தம் மேலோங்குகின்றது. 

காரணம் அடுத்தடுத்து தொடர் பயணங்கள் என்று நகர்ந்து கொண்டே இருப்பதால் எப்போதும் போல இணையத்தை விட்டு சில காலம் வெளியே இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. நிச்சயம் இது போன்ற விசயங்களை ஆவணப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் எனக்குண்டு. காரணம் சமகாலத்தில் அங்கங்கே சிதறிக் கிடக்கும் விசயங்களை மேலோட்டமாக வாசித்து விட்டு "எல்லாருமே திருடனுங்க தான்" என்கிற ஒற்றை வாக்கியத்தில் கடந்து சமூகக் கூட்டத்திற்கு ஊழல் என்பது ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றாகவே மாறிவிட்டது. 

ஜெயலலிதா என்ற பெண்மணி ஆட்சிப் பொறுப்புக்கு வந்தது முதல் இன்று வரையிலும் எத்தனை லட்சம் கோடி கொள்ளையடிக்கப்பட்டது என்பதனைக் கூட எவராலும் அறுதியிட்டு கூற முடியாத அளவிற்கு ஊழல் என்பது எல்லையெல்லாம் கடந்து மீறி விட்டது. காயங்களைக் கூட மறந்துவிடலாம். ஆனால் தழும்பு மாறாது. 

இதன் காரணமாகவே ஜெயலலிதா பதிவை விளக்கமாக எழுதி வைத்தேன். ஒரு வேளை இன்னும் நான்கு வருடங்கள் ஜெயலலிதா ஆட்சியில் இருந்திருந்தால் தமிழ்நாடு என்ற மாநிலமே பட்டா போட்டு இந்தக் கொள்ளைக்கூட்டம் மற்ற மாநிலத்திடம் விற்று இருக்கக்கூடும். இயற்கை விதி மாறாதது. கழிப்பதும் சேர்ப்பதும் அதன் அடிப்படை. 

ஆனால் தமிழ்நாட்டில் மாநில ஆளுநர் என்ற பெயரில் அலங்கோல கூத்து நடத்தி விட்டுச் சென்ற பீஷ்மநாராயணன் சிங், பாத்திமா பீவி, ரோசையா போன்றவர்களை எவரும் கண்டு கொள்ளவே இல்லை என்ற வருத்தம் எனக்குண்டு. 

ஒவ்வொரு துறையிலும் "திறமை இல்லாதவர்கள்" என்ற நிலையில் பலரையும் பார்க்க முடியும். ஆனால் இந்த வருடம் "நாங்கள் எங்கள் திறமையை வளர்த்துக் கொள்ளவே மாட்டோம்" என்கிற ரீதியில் நான் பார்த்த பலரும் எனக்கு ஆச்சரியமளித்தார்கள். அதனை விடத் தனக்கு என்ன தேவை? என்பதில் எந்த அளவுக்குக் கண்ணும் கருத்துமாக இருந்து தங்கள் சுயபாதுகாப்பை காப்பாற்றிக் கொள்கின்றார்கள் என்பதனைப் பார்த்த போது "நான் ஒரு முட்டாளுங்க" என்ற பழைய பாடல் நினைவுக்கு வந்தது. 

சாதகமற்ற சூழ்நிலை ஏன் நம்மை நோக்கி வருகின்றது என்று கேள்வியைக் கேட்டுக் கொண்டால் அதற்கு முக்கியக் காரணம் நம்முடைய நேர்மையாக அணுகுமுறை என்று தான் சொல்லத் தோன்றுகின்றது. 

குறுகிய மனமும், கொடூர குணமும் இயல்பான வாழ்க்கையாக மாற்றிக் கொண்டவர்களைப் பார்க்கும் போது பல பதிவுகள் எழுதும் அளவிற்குப் பல சம்பவங்கள் மனதில் வந்து போகின்றது. "வாழ முடியும் ஆனால் வளரமுடியாது" என்று தெரிந்த போதிலும் இது தான் வாழ்க்கை என்று ஒரு பெருங்கூட்டமே இப்படித்தான் இங்கே வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். "பணத்திற்கு அப்பாலும்  இங்கே பல மகிழ்ச்சிகளும் உண்டு" என்பதனை எவருமே ஏற்றுக் கொள்ளத் தயாராகவே இல்லை என்பது தான் வருத்தப்படும் செய்தியாக உள்ளது. 

"ராஜதந்திரங்களை நான் கரைத்துக் குடித்தவன்"  என்ற போர்வையில் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் கடைசியில் பலியாவது ஆரோக்கியம் சார்ந்த விசயங்களில் என்பதனை இந்த வருடம் அதிகம் பார்த்தேன். உடலை பாராமாகச் சுமந்து வாழ்பவர்கள் அநேகம் பேர்கள். ரசிக்க, ருசிக்க இவ்வுலகில் உள்ள அனைத்தும் அவர்களுக்குக் கசப்பாக இருக்கின்றது. 

அவர்களின் எண்ணங்கள் அனைத்தும் மற்றவர்களின் வாழ்க்கையை தாக்குகின்றதோ இல்லையோ அவசியம் அவர்களின் ஏதோவொரு உடல் உறுப்பை உள்ளும் புறமும் தாக்கிக் கொண்டேயிருக்கின்றது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொன்றை இழந்து வேறு ஏதோவொன்றைப் பெற்று நாங்கள் பொருளாதார ரீதியாக வெற்றிகரமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் என்கிறார்கள். பாவப்பட்டுப் பாரம் சுமப்பவர்களைக் கடைசியில் அவர்கள் சேர்க்கும் பணம் காப்பாற்றுமா? என்று யோசித்ததுண்டு. 

உங்களின் விடமுடியாத கொள்கைகள் காலப்போக்கில் கேள்வியாக மாறி கேலி செய்யும். மனைவியும், குழந்தைகளும் கேட்கும் கேள்விகள் அனைத்தும் உங்களின் அடிப்படை சித்தாந்த அஸ்திவாரத்தை ஆட்டம் காணவைக்கும். உறவுக்கூட்டம் உறங்க விடாமல் தவிக்கவிடும். மொத்தத்தில் “பொருள் இல்லாதவருக்கு இவ்வுலகம் இல்லை” என்பதனை மொத்த உலகமும் உங்களுக்கு கற்றுக் கொடுக்கும். 

வாழ்க்கையில் எனக்கு உருவாகும் சோர்வினை எழுத்துலகம் மூலமாக ஒவ்வொரு முறையும் கழுவி துடைத்துக் கொள்கிறேன். இதுவே காயங்களுக்கு மருந்து போடுவது போல உள்ளது. 

75 வயதுக்குண்டான அனுபவங்கள் எனக்குக் கிடைத்த காரணத்தினால் பழைய குப்பைகள் என்ற மின் நூலைப் படிக்கும் உங்களுக்கு உண்மையான பரவத்தைத் தரும் என்றே நம்புகிறேன். 

பணம் என்ற ஒற்றைச்சொல் உங்களின் இறுதிப் பயணம் வரைக்கும் படாய்படுத்தும். ஆனால் அதற்கு உங்களின் ஆரோக்கியம் என்பதனை விலையாக வைக்க வேண்டும் என்பதனை உணர்ந்தவர்கள் என்னைப் போல “ருசியான வாழ்க்கை” வாழத் தெரிந்தவர்கள். அளவான பணம் மூலம் நீங்கள் வாழ முடியும். ஆனால் அளவற்ற பணமென்பது எதனையும் ஆள முடியும் என்றாலும் முழுமையாக வாழ முடியுமா? என்று கேட்டுக் கொள்பவனின் காலடித் தடமிது. 

"கொள்கை ஏதும் தேவையில்லை. பொருளாதார ரீதியாக பெற்ற உயர்வே வாழ்வின் அங்கீகாரம். இறுக்கமாக எப்போதும் இருந்து விடு. எதனையும் எப்போதும் பகிர்ந்து கொள்ளாதே. இதனையே வாழ்வின் தத்துவமாக கொண்டு விடு" என்ற மாறாத பாடங்களை  புதிய சமூகம்  கற்றுக் கொடுக்கும் பாடத்தில் இன்று வரையிலும் சராசரி மதிப்பெண்கள் வாங்க முடியாமல் வாழ்ந்தால் நீங்களும் என் தோழனே?

"இப்படித்தான் வாழ வேண்டும்" என்ற கொள்கை கொண்டவனின் வாழ்க்கையை உலகம் ஏற்றுக் கொள்ளாமல் ஏளனப்படுத்தும் என்பது எத்தனை உண்மையோ அந்த அளவுக்குப் பிடிவாதமாக "இப்படியே வாழ்ந்து பார்த்து விட்டால் என்ன?" என்ற கேள்வியோடு ஒவ்வொரு நிகழ்வினையும் ரசனையோடு சுற்றியுள்ள சமூகப் பார்வையை பொருப்படுத்தாமல் என் பயணம் சோர்வின்றி இன்று வரையிலும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது. 


ஒவ்வொரு காலகட்டத்திலும் நானே உருவாக்கிக் கொண்ட காயங்களைக் கடந்த ஏழு ஆண்டுகளாக எழுத்து வழியாக மருந்திட்டு வந்துள்ளேன். தொழில் வாழ்க்கையில் உருவாகும் போட்டிகள் அதன் மூலம் உருவான எதிரிகள் என் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு காரணமாக இருந்துள்ளார்கள். இன்றைய என் ஆரோக்கியத்திற்கும் வளர்ச்சிக்கும் முக்கிய காரணம் இதுவே. என் "வாழ்நாள் கனவு" சாத்தியக்கூறின் முதல் படியில் காலடித்தடம் பதிக்கும் ஆண்டாக இந்த வருடம் முடிவுக்கு வந்துள்ளது.

ஒவ்வொரு சமயத்திலும் நான் கண்ட, அனுபவித்த, சந்தித்த நிகழ்வினை அதன் வெளிப்படைத் தன்மையை எல்லா இடங்களிலும் நீக்கமற விதைத்து வந்து உள்ளேன். எந்த சமயத்திலும் என் எண்ணங்களை மாற்றிக் கொண்டதே இல்லை. என்னுள் பகிர்ந்து கொள்ள வேண்டிய அனுபவங்கள் இருக்கும் வரையிலும் இந்த எழுத்துலகத்தில் என் தடம் மாறாமல் தொடர்ந்து கொண்டேயிருக்கும் என்றே நம்புகின்றேன். 

மத்திய அரசாங்கம் ஏன் சமஸ்கிருத திணிப்பை நடத்துகின்றது என்று விபரம் தெரிந்தவர்கள் புலம்புகின்றார்கள். இந்த வருடம் நான் சந்தித்த 90 சதவிகித குழந்தைகளின் பெயர்கள் அனைத்தும் சமஸ்கிருதம் கலந்ததாகவே இருந்தது. அதனைத்தான் பெற்றோர்கள் விரும்புகின்றார்கள் என்பது முதல் ஆச்சரியம். ஒவ்வொரு கணினி வேலைகள் சார்ந்த கடைகளில் ஜாதகம் என்பது வளம் கொழிக்கும் தொழிலாக உள்ளது. தெய்வ நம்பிக்கை என்பது கொடுக்கல் வாங்கல் போல மாறியுள்ளது. 

இந்த வருடம் ஏற்காடு சென்றோம். ஏன் சென்றோம்? என்கிற அளவிற்கு இருந்தது. தமிழ்நாடு அரசாங்கம் மட்டும் சுற்றுலாத்துறை மற்றும் அறநிலைத்துறையை மட்டும் சரியான அதிகாரிகள் வசம் ஒப்படைத்தால் வருட நிதிநிலை தொகையில் பாதி வருமானத்தை இந்த இரண்டு துறைகளில் இருந்து எடுக்க முடியும். ஆனால் செய்ய மாட்டார்கள். காரணம் இதனை வைத்து சம்பாரித்துக் கொண்டிருப்பவர்கள் வாயில் மண்ணு விழுந்துவிடுமே?

500,1000 ரூபாய் நோட்டு செல்லாது என்று பிரதமர் மோடி நவம்பர் எட்டாம் தேதி மாலை அறிவித்த அந்த நிமிடம் முதல் எழுதும் இந்த நேரம் வரைக்கும் எனக்கு என் குடும்பத்திற்கு எந்தப் பிரச்சனையும் உருவாகவில்லை. காரணம் என்னிடம் உள்ள ஒரு பெரிய கெட்ட பழக்கம் இந்தச் சமயத்தில் உதவியது. வீட்டில் வைத்திருக்கும் எந்தப் பெரிய தொகை என்றாலும் முதல் வேளையாக அதை உடைப்பது என் வாடிக்கை. மனைவி உடைக்காமல் காவல் காத்துக் கொண்டிருப்பார். நான் அவருக்கே தெரியாமல் உடைத்துப் புத்தகங்கள் வாங்கி வந்து விடுவதுண்டு. அப்படிச் சேர்த்த ரூபாய்கள் உதவியது. 

அதற்கு மேலாகத் திட்டமிட்ட வாழ்க்கையில் அதிகப்படியான செலவீனங்கள் இருக்க வாய்ப்பில்லை. தகுதிக்கு மீறிய ஆசைகள் இல்லை என்பதோடு திருப்பூரைப் பொறுத்தவரையிலும் தனியார் வங்கிகள் சிறப்பாகவே செயல்பட்டன. 

கடந்த ஒரு மாதத்தில் ஏறக்குறைய 2000 கிலோ மீட்டர் பயணம் செய்துள்ளேன். அடித்தட்டு மக்கள், அன்றாடம் வியாபாரம் செய்து பிழைப்பை நடத்த வேண்டிய மக்கள், வங்கி என்றால் தெரியாமல் வாழ்ந்த மக்கள் என்று அத்தனை பேர்களும் மொத்தமாக நடைப்பிணமாகத்தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் என்பதும் உண்மை. இனி அவர்களால் இழந்த இழப்பைச் சரி செய்ய முடியுமா? என்ற பெரிய கேள்வி உருவானது. வீட்டுக்குக் காய், பழம், மற்ற பொருட்கள் கொண்டு வரும் பெண்களின் வாழ்க்கை சோகங்களைக் கேட்ட போது அழ முடியாத சோகமாக இருந்தது. 

ஒவ்வொரு சமயத்திலும் யாரோ சிலரின் நலனுக்காக அவ்வப்போது உருவாக்கப்படும் போரினால் லட்சணக்கான அப்பாவிகள் எப்படிக் கொல்லப்படுகின்றார்கள் என்பதனை நேரிடையாகப் பார்க்கும் வாய்ப்பை 2016 பண மதிப்பு இழப்பு காட்டியுள்ளது. இதன் விளைவுகள் இன்னமும் எப்படியிருக்குமோ? என்று அச்சப்பட வேண்டியதாக உள்ளது. அரசாங்க கொள்கைகள் ஆமை வேகத்தில் உள்ளது. பாதிக்கப்படுவர்களின் வாழ்க்கை சுனாமி கோரத்தை விடக் கொடுமையாக உள்ளது. 

எந்தச் சமயத்திலும் முயற்சிகளையும் தொடர்ந்து கற்றுக் கொள்ள வேண்டிய பயிற்சிகளை நான் விட்டு விடுவதே இல்லை. தன்னம்பிக்கை என்பது மற்றொரு கை போல உள்ளதால் ஒவ்வொரு நிகழ்வும் அடுத்தக் கட்ட வளர்ச்சிக்கு உதவக்கூடியதாகவே இருந்து உள்ளது. காரணம் தற்போதைய சூழ்நிலையில் எங்கிருந்து? எப்போது? நமக்கான வாய்ப்பு வரும்? என்பதனை அறுதியிட்டுக் கூறமுடியாது. அப்படியான முயற்சிகள் பலிதமாகும் போது எப்போது போல நான் நினைத்துக் கொள்வது "வாழ்ந்து காட்டுவதை விடப் பழிவாங்குதல் வேறொன்றுமில்லை."

பழைய வருட டைரிக்குறிப்புகள் வாசிக்க



Sunday, September 18, 2016

படங்கள் காட்டும் பாடங்கள்


ஒவ்வொரு முறையும் சென்னை செல்லும் போதும் மற்றும் திரும்பி வந்த பிறகு வீட்டில் உள்ள ஒரு மகளிடம் திட்டு வாங்குவதுண்டு. காரணம் நான் அவரை விட்டுவிட்டு நான் மட்டும் போகின்றேன் என்ற வருத்தம். பள்ளிக்குச் செல்கிறாய்? நீ வளர்ந்த பிறகு நாம் சுற்றுவோம் என்றால் முறைப்பைப் பதிலாக தந்து விட்டு நகர்ந்து விடுவார். 

பயணம் தொடங்கியது முதல் சந்தித்த நபர்கள் மற்றும் வீட்டுக்கு வந்து சேர்ந்தது வரை நான்கு பெண்களையும் வைத்துக் கொண்டு கொஞ்சம் சுவராசியமாக உரையாடுவதுண்டு. தற்போது எங்கள் ஏற்றுமதி நிறுவனத்தின் துணை நிறுவனமான ஏசியன் சினி கம்பைன்ஸ் தொடர்பாகச் சந்தித்த திரைப்பட பிரபலங்கள், அது சார்ந்த உரையாடல்கள், எடுத்த புகைப்படங்களை அவர்களிடம் கணினி வழியே காட்டும் போது இன்னும் அவர்களின் கோபப் பார்வையை தாக்குப் பிடிக்க முடியாமல் தவிக்க வேண்டியதாக உள்ளது. 

@@@@@

கடந்த இரண்டு மாதங்களில் பல முன்னணி நடிகர்கள், வளர்ந்த, வளரும் மற்றும் வாய்ப்புக்காக  காத்திருக்கும் இயக்குநர்கள், தொழில் நுட்ப கலைஞர்கள், இசையமைப்பாளர்கள், படப்பிடிப்பு நடக்கும் இடங்கள், அது சார்ந்த திட்டமிடுதல், ஆலோசனைகள் என்று எனது இயல்பான வாழ்க்கை முறை மாறி விட்டதால் தினமும் நான் வாசிக்க வேண்டிய நேரங்கள் அனைத்தும் காணாமல் போய்விட்டது. ஏற்றுமதி நிறுவன வேலையுடன் இந்த வேலைச் சார்ந்த விசயங்களில் அதிக ஆர்வம் காட்டுவதால் தினசரி வாசித்தே ஆக வேண்டிய பத்திரிக்கைகள் கூட அடுக்கி வைக்கப்பட்டு என்னைப் பார்த்து நக்கலாகச் சிரிக்கின்றது. 

@@@@@

புத்தகங்களை வாசிக்க முடியாவிட்டாலும் பலதரப்பட்ட மனிதர்களை வாசிக்க முடிகின்றது. திரைப்படம் என்ற மாய உலகத்தில் வாழும் அத்தனை பேர்களையும் வாசிக்க முடிகின்றது. பணம் அதிகம் புழங்கும் இடத்தில் குற்றச்செயல்கள் அதிகம் நடக்கும். இது நிர்ணயிக்கப்பட்ட விதி. அதே போல பணமும் புகழும் மிக அளவில் கிடைக்க வாய்ப்புள்ள இடங்களில் பொறாமையும் சந்தேகமும் படபடப்பும் இருந்து கொண்டே இருக்கும் என்பதும் உண்மை தானே? 

அதைத்தான் கவனித்துக் கொண்டே வருகின்றேன். தங்கள் இடத்தைத் தக்க வைத்துக் கொள்ள ஒவ்வொருவரும் போராட்டமான வாழ்க்கையை தேர்ந்தெடுத்துக் கொண்டு வாழ்கின்றார்கள். கூடுதலாக வெளிச்சம் தங்கள் மேல் விழ அதைக் காப்பாற்றிக் கொள்ள உள்ளும் புறமும் நடிகராகவே தங்களை மாற்றிக் கொள்கின்றார்கள். அவர்களுக்கென சொந்த வாழ்க்கை எதுவும் இருக்காதா? என்று யோசிக்கத் தோன்றியது. அது நடைமுறையில் சாத்தியமே இல்லாதது என்ற எதார்த்தத்தையும் உணர்ந்து கொள்ள முடிந்தது. ஒன்றை இழந்தால் தான் மற்றொன்றைப் பெற முடியும் என்பது தானே உலக நியதி. 

@@@@@

உலக நியதியைத் தாண்டி சிலரால் வாழ முடியும்? என்பதற்கு நம் முன் வாழும் உதாரணம் நடிகர் சிவகுமார். முகநூலில் சில சமயம் நடிகர் சிவகுமார் குறித்து கார சார விமர்சனங்களைப் பல சமயத்தில் படித்துள்ளேன். பொதுப் பார்வை என்பதும் பொதுப்புத்தி என்பதும் இங்கே மாறாது. ஆனால் நடிகர் சிவகுமார் வீட்டில் இருந்த ஒரு மணி நேரமும் வீட்டு நிர்வாகத்தில் காட்டக்கூடிய நேர்த்தியும், அங்கே பணியாற்றும் பணியாளர்கள் மேல் அவர் வைத்துள்ள அன்பும், அங்குள்ள ஒவ்வொருவரும் தங்களுக்கு கிடைத்துள்ள சுதந்திரத்தை சரியான அளவில் பயன்படுத்தும் விதமும் அதிக ஆச்சரியத்தைத் தந்தது. 

நேரத்தை எந்த அளவிற்குத் திட்டமிட்டு பயன்படுத்துகின்றார்கள் என்பதை நடிகர் சிவகுமார் முதல் அங்குள்ள கடைநிலை ஊழியர்கள் வரைக்கும் எனக்குப் பல விதங்களில் உணர்த்திக் காட்டினார்கள். 

@@@@@

என்ன தான் நாம் தனிப்பட்ட முறையில் சிறப்பாக வாழ்ந்தாலும் காலமும் சூழ்நிலையும் நம்மை பல சமயம் கைமா போல கசக்கி பிழிந்து விடும் என்பதும் உண்மை தானே? இசையமைப்பாளர் சிற்பியின் இசை வாழ்க்கையை தமிழுலகமும் தமிழர்களும் கடந்த காலத்தில் கொண்டாடியதை எவருக்கும் மறுக்க இயலாது. அப்படிக் கொண்டாடிய பல பாடல்களை நானும் கேட்டுள்ளேன். 

ஆனால் தற்போது வாய்ப்பு இல்லாமல் இருக்கின்றார். அவருக்கான நேரம் மீண்டும் தொடங்கும் என்று நம்புகின்றேன். காரணம் தன் வாழ்க்கை, எதார்த்தம், இசையறிவு, நுணுக்கம், பதிகம், பாசுரம் குறித்த பார்வை, அவர் கோர்த்து வைத்துள்ள பல தனிப்பாடல்கள், அவர் வீட்டுக்குள் வைத்துள்ள ஒலிப்பதிவு கூடம், பழையவற்றை, நடந்து வந்த பாதையை மறக்காத தன்மை, தன் நிலைமையை எளிதாக எடுத்துக் கொண்ட விதம் என்று எல்லாவிதங்களிலும் ஆச்சரியப்படுத்தினார்.  அவர் வீட்டில் இருந்த மூன்று மணி நேரமும் இசையின் மற்றொரு பரிணாமத்தை புரிந்து கொள்ள முடிந்தது.

@@@@@

எழுத்தாளர் ஞாநி அவர்கள் எப்போதும் என் மரியாதைக்குரியவர். அவர் உடல் நலம் சற்று குன்றி இருக்கும் இந்தக் காலகட்டத்தில் அவரைச் சந்திக்க வேண்டும் என்ற எண்ணம் சென்ற முறை சென்னைப் பயணத்தில் நிறைவேறியது. சிங்கத்தை அதன் மாறிய குகையில் சந்தித்தேன். உடல் தளர்ந்தாலும் உள்ளம் தளரவில்லை. இன்னும் செய்ய வேண்டிய கடமைகள் குறித்து தான் அதிகம் பேசுகின்றார். அவரின் இறுதி மூச்சு நிற்கும் வரையிலும் அவர் எண்ணம், கம்பீரம், சமூக சிந்தனை எதுவும் மாறாது என்பதனை உணர்ந்து கொள்ள முடிந்தது.  

@@@@@

என் பிரியத்துக்குரிய தந்தி தொலைக்காட்சியில் பணிபுரியும் அதியமானுடன் சண்டை போட முடியாமல் திரும்பி வந்துவிட்டேன் என்ற ஆதங்கம் தான் மனதில் உள்ளது. எப்போதும் ஞாநி நான் அதியமான் மூவரும் சேர்ந்தாலே அதுவொரு காக்டெயில் கலவையாக ரணகளமாக இருக்கும்.

@@@@@

எப்போதும் நான் சென்னை சென்றாலும் குறிப்பிட்ட சிலரை அவசியம் சந்திக்க வேண்டும் என்று மனதிற்குள் நினைத்துக் கொள்வேன்.  நரேன் மற்றும் கேஆர்பி செந்தில்.  இருவரும் வெவ்வேறு துருவங்கள். ஆனால் இருவரிடமும் நான் கற்றுக் கொள்ள தெரிந்து கொள்ள நிறைய விசயங்கள் இருக்கும்.  இந்த முறை நரேன் அவர்களுடன் மட்டும் நான் தங்கியிருந்த விடுதியில் நீண்ட நேரம் உரையாட முடிந்தது.  

நீண்ட காலத்திற்குப் பிறகு டிஸ்கவரி புக் பேலஸ் வேடியப்பனை சந்திக்க வாய்ப்பு அமைந்தது. காலமும் சூழ்நிலையும் அவருக்குண்டான எதிர்கால கனவான திரையில் முத்திரை பதிக்க வாய்ப்பு அமைக்கும் என்று நம்புகிறேன். அப்போது வாங்க வேண்டிய சில புத்தகங்கள் வாங்கினேன். அதில் ஒன்று கார்டூனிஸ்ட் பாலா வின் நமக்கேன் வம்பு?

இந்த முறை கார்டூனிஸ்ட் பாலா வை சந்ததிக்க முடியாமல் போனதில் வருத்தமே? நெஞ்சுரம் மிக்கவர். சமகால நிகழ்வுகளை அஞ்சாமல் எடுத்துரைக்கும் அவரின் வரைகலை பணி பாராட்டக்கூடியது. எத்தனை இடர் வரினும் "என் கடன் பணி செய்து கிடப்பதே" என்பதோடு அவரின் சமூகப்பணி(எத்தனை ஆயிரம் பேர்கள் இரத்தம் பெற்று நல்வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கின்றார்களோ? என்பதை நினைத்து ஆச்சரியப்பட்டுள்ளேன். இது போன்ற அவரின் வெளியே தெரியாத செயல்கள் எண்ணிக்கையில் அடங்காதது) போற்றுதலுக்குரியது. 

@@@@@

எங்கள் நிறுவனத்தின் முதல் தயாரிப்பான "மாவீரன் கிட்டு" என்ற திரைப்படத்தின் முன்னோட்டக் காட்சி (டீசர்) அக்டோபர் 1ந் தேதி அன்று 1500 லயோலா கல்லூரி மாணவர்கள் மற்றும் மிக அதிக எண்ணிக்கையிலான பத்திரிக்கையாளர்கள் மத்தியில் வெளியிடப் போகின்றோம். படத்தின் குரல் பொருத்தம் (டப்பிங்) பணி விரைவாக நடந்து கொண்டு இருக்கின்றது. பாடல்கள் முழுமையடைந்து விட்டது. 

பாடல்கள் மற்றும் திரைப்பட வெளியீடு பற்றி இயக்குநர் சுசீந்திரன் விரைவில் வெளியிடுவார்.  

எங்கள் நிறுவன தயாரிப்பு என்பதனை விட இந்தப் படத்தின் குறிப்பிட்ட துண்டுக் காட்சியினை, ஒரு பாடலை டி இமான் இசைக்கூடத்தில் பார்க்க கேட்க வாய்ப்பு கிடைத்தது. நிச்சயம் வெற்றிப்படம் என்பதனை அப்பொழுதே என் மனம் சொல்லியது. 

ஆனால் இந்தப் படம் எந்த அளவுக்கு மக்களைக் கவரும்? என்பதனை, நம்ம "வஷிஷ்டர் வாயால் பிரம்மரிஷி" என்ற பட்டம் பெறுவது எப்படி என்பதனை "கறார் கந்தசாமி" நண்பர் சிவகுமார் விமர்சனத்தை தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளேன்.

@@@@@

இசையமைப்பாளர் டி இமான் அவர்களின் இசைக்கூடத்தில் மூன்று மணி நேரத்திற்கு மேல் இருக்க வேண்டிய வாய்ப்பு கிடைத்தது. ஒரு பாடல் பதிவு எப்படி நடக்கின்றது என்பதனை கவனிக்க முடிந்தது. தமிழ் மொழி என்பதனை அ ஆ கூடத் தெரியாமல் சம்மந்தப்பட்டவர்களின் குரல் வளத்திற்காக மட்டுமே அவர்களை தமிழில் பாட வைக்கும் போக்கு தமிழ்த் திரைப்பட உலகத்தில் கடந்த ஐந்தாண்டுகளில் அதிக நடக்கின்றது. குறிப்பாக ஏ.ஆர்.ரகுமான் வருகைக்குப் பிறகு தினமும் ஒரு பாடகர் அறிமுகமென்று திரை உலகமே வேறொரு பாதையில் பயணிக்கத் தொடங்கியது. 

அதன் விளைவுகளை டி இமான் இசைக்கூடத்தில் கண்டேன். டி. இமான் போன்ற பொறுமைசாலிகளுக்குக் காலம் தகுந்த அங்கீகாரம் கொடுக்கும் என்று நம்புகிறேன். 

@@@@@

நான் இருக்கும் நிறுவனத்தில் பத்து நாட்களுக்கு ஒரு முறை (வாரக்கூட்டம்) நடைபெறும். ஒவ்வொரு நிர்வாகத்திலும் சிலர் மட்டுமே அங்கீகாரத்திற்கு உரியர்வர்களாக வெளியே தெரிகின்றார்கள். என் பார்வையில் ஒரு நிர்வாகத்தில் உள்ள அத்தனை பேர்களும் அவரவர் திறமையின் பொறுத்துத் தெரியப்பட வேண்டும் என்று கருதுவேன். 

அதனைத்தான் இது போன்ற கூட்டத்தின் வாயிலாக வெளிப்படுத்துகின்றேன். இது போன்ற கூட்டங்கள் "சிந்தனை மாற்றங்களை" விதைக்கின்றது. "மாற்றி யோசி" என்பதன் ஆரம்பக்கட்டமாக இருக்கின்றது. 

Monday, December 30, 2013

உங்களுக்கு (ஒருவேளை) இது உதவக்கூடும்

இந்த வருடத்தின் கடைசிப் பதிவு. ஊர்ப்பக்கம் உள்ள வாழை இலை சாப்பாடு போல நிறையச் சமாச்சாரங்கள். ஏற்கனவே சொல்லியுள்ளபடி இடைவேளை விட வேண்டியதன் காரணமாகவும், இதை இரண்டு பதிவாக எழுதினால் படித்து முடியும் போது உருவாக வேண்டிய எண்ணங்கள் மாறிவிடக்கூடும் என்பதாலும் மெகா பதிவு. அவசரமாக உள்ளே வந்தவர்கள் மட்டும் அமைதியான சூழ்நிலையில் வருவீர்களாக. பிரிவோம் -சந்திப்போம்.

                                                                       o0o

நமக்குள் எப்போதும் ஒரு "பொதுப்புத்தி" வாழ்க்கை முழுக்க இருந்து கொண்டே தான் இருக்கின்றது. சில அனுபவங்களை நாம் சந்திக்கும் வரையிலும் இந்தப் பொதுப்புத்தி பார்வையைக் கொண்டே அனைத்து விசயங்களையும் நாம் பார்க்கின்றோம். அதன் வழியே சிந்திக்கின்றோம். 

அரசியல்வாதி என்றால்? மலையாளி என்றால்? பணக்காரன் என்றால்? நவநாகரிக உடைகள் அணிந்த பெண்கள் என்றால்? இரவில் ஒரு பெண் தனியாக நின்றால்? சினிமா நடிகை என்றால்? 

இந்தப் பட்டியல் நீளும் என்றாலும் இந்தப் பட்டியலில் தற்போது மென்பொருள் துறையில் பணியாற்றுபவர்கள் என்றால்? என்ற எண்ணம் என்னுள் இருந்த 'பொதுப்புத்தி' இந்த வருடம் கொஞ்சம் மாறியுள்ளது. 

இந்த வருடத்தில் நான் சந்தித்த, உரையாடிய சில நண்பர்கள் மூலம் இந்த மாற்றத்திற்கான விதையை என் மனதில் அவர்கள் ஊன்றியுள்ளனர். 

-0O0-

இந்த வருடத்தில் தாய்மொழி சார்ந்த மயக்கங்களும் அதன் எதார்த்த எதிர்கால மாற்றத்தையும், உருவாகப் போகும் சாத்தியக் கூறுகளையும் பலரும் புரியவைத்துள்ளனர். சுருக்கமாகச் சொல்லப்போனால் வரும் காலத்தில் வளர்ந்த தொழில் நுட்பத்தில் எது வேண்டுமானாலும் வாழும் வளரும். ஆனால் அதில் உள்ள சந்தைக்கான சாத்தியக்கூறுகளும், நிறுவனத்திற்கான லாபத்தைப் பொறுத்தே ஒவ்வொன்றும் மாறும். இல்லாவிட்டால் மறையும். 

இந்த வருடத்தின் கடைசி ஆறு மாதங்களில் தமிழ் கணினி சார்ந்த பலவற்றையும், அதன் தொழில் நுட்ப சவால்களையும், இருக்கும் வாய்ப்புகள், வேகமாக வளராமல் இருப்பதற்குப் பின்னால் உள்ள காரணங்களைப் புரிந்து கொள்ள முடிந்தது. மென்பொருள் துறையில் உருவாக்கும் நிறுவனம் செய்யும் கட்டுப்பாடுகளும் அதை எப்படிக் காசாக்குகின்றார்கள்?லாபமீட்டும் வித்தையைப் புரிந்து கொள்ள முடிந்தது. 

இதுவே தமிழ்மொழிக்காகத் தனியார் நிறுவனங்கள் மூலம் வெளியிடப்படும் மென்பொருள் அனைத்தும் ஏன் ஆங்கில மொழி போல அடுத்தக் கட்டத்திற்கு நகர்வதில்லை என்பதையும் அறிந்து கொள்ள முடிந்தது. ஒவ்வொன்றும் முதலீடு கணக்கில் பார்க்கப்பட்டு, எதிர்பார்த்த லாபம் கிடைத்த போதிலும், சிங்கப்பூர் போன்ற பல நாடுகளில் உள்ள மொழி ஆர்வமுள்ள தனியார் மற்றும் அரசு சார்ந்த நிதியளிப்பு கிடைத்தும் கூட நம்மவர்களின் அதீத விருப்பங்களை உணர்ந்து கொள்ள முடிந்தது. 

ஆனால் கடந்த காலக் கட்டத்தில் பலரால் இலவசமாக வழங்கப்பட்ட தமிழ்மொழி சார்ந்த மென்பொருட்களால் இன்று தமிழ் இணையத்தின வேகம் தேசிய நெடுஞ்சாலையில் பயணிக்கும் வேகத்தைப் போலவே உள்ளது. 

-0O0-

ஏற்கனவே நான் எழுதிய நண்பர் நீச்சல்காரன் குறித்த பதிவில் அவர் உருவாக்கிய நாவி மென்பொருள் குறித்தும், அவர் செய்து கொண்டிருக்கும் பணியைப் பற்றியும் எழுதியிருந்தேன். இந்த நாவியின் மேம்பட்ட அடுத்தப் பதிப்பு மிக விரைவில் வெளிவரப்போகின்றது என்பதை ஒரு உரையாடலில் அவர் தெரிவித்து உள்ளார். மேலும் தமிழ் கலைச்சொல் அகராதியில் உதவிக் கொண்டிருப்பவர்களைப் பற்றியும் விவரித்தார். 

தங்கள் சக்திக்கு முடிந்த தாங்கள் சார்ந்து இருக்கும் பணியோடு மொழி ஆர்வத்தோடு இங்கே பலரும் தங்களால் முடிந்த பங்களிப்பை இங்கே செய்து கொண்டே தான் இருக்கின்றார்கள். சிலர் நம் பார்வைக்குத் தெரிகின்றார்கள். பலர் இன்னும் சில வருடங்களில் நாம் அவற்றைப் பயன்படுத்தும் சமயங்களில் தெரியவரக்கூடும். 

-0O0-

பத்தாண்டுகளுக்கு முன்பு தமிழில் நூறு வலைபதிவுகளாக இருந்த போது எதிர்காலத் தமிழ் வலைபதிவுகள் தேசிய அளவில் முக்கியம் பெற்ற ஒரு கணினி மொழியாக மாறும் என்ற கற்பனைகள் எவரிடமாவது இருந்து இருக்குமா? இன்று தமிழ்மொழியில் நாம் பார்க்கும் எண்ணிக்கையில் அடக்க முடியாத வலைபதிவுகளும், தினந்தோறும் உருவாகிக் கொண்டேயிருக்கும் இணைய இதழ்களைப் பற்றியும் நினைத்துப் பார்த்து இருப்பார்களா? 

ஒரு சிறிய விதை. எவரோ குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கி தன்னால் முடிந்த பங்களிப்பை வழங்க இன்று வளர்ந்து ஆலமரமாகி உள்ளது. இன்னமும் வளரத்தான் போகின்றது.அங்கீகாரம் கிடைத்தாலும் கிடைக்காமல் இருந்தாலும் தங்களின் சுய ஆர்வத்தின் மூலம் தங்களின் கடமைகளைச் செய்து கொண்டு வருகின்றார்கள்.

-0O0-

சமீபத்தில் என் தொடர்பில் வந்த சீனிவாசன் என்ற இளைஞரும் இதைப் போன்றதொரு வேலையைச் செய்து கொண்டு வருகின்றார். மென்பொருள் துறையில் இருந்து கொண்டே, நாடு விட்டு நாடு பறந்து கொண்டே பணியாற்றும் சூழ்நிலையில் இந்தப் பணியைச் செய்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 

வலைபதிவுகளை, குறிப்பிடத்தக்க நிகழ்வுகளை, வலைபதிவில் எழுத முடியாத கட்டுரைகளை மின் நூலாக மாற்றி அதனை உலகத்தில் உள்ள தமிழர்களுக்குக் கொண்டு சேர்க்கும் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு வருகின்றார்.  இதனைப் பற்றி தெரிந்து கொள்வதற்கு முன்பு வேறு சில விசயங்களைப் பற்றி பேசி விடுவோம்.

-0O0-

வலைபதிவில் எழுதத் தொடங்கிச் சில வருடங்களில் ஒவ்வொருவருக்கும் உருவாகும் ஆசை புத்தகம் போட வேண்டும். நம்மை ஒரு எழுத்தாளராக அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதே. 

எனக்கும் அந்த ஆசை வந்தது. ஆனால் சற்றுத் தாமதமாக வந்தது. 

எனது இருபது வருட திருப்பூர் அனுபவங்களை மூன்று வருடமாக எழுதி அதனை ஒரு வருடமாக அடைகாத்து அதற்குப் பிறகே குஞ்சு பொறித்தது. 

இது எனக்கான வெற்றி என்பதை விட இதில் புத்தகத்திற்கான தகுதியுடைய விசயங்கள் உள்ளது. இதனை ஆவணப்படுத்தப்பட வேண்டும் என்று ஆறு மாத காலம் இதற்காக உழைத்த 4 தமிழ்மீடியா குழுமத்திற்கும் திரு. மலைநாடன் அவர்களுக்கும் அவர் என் மேல் வைத்த நம்பிக்கை சார்ந்த விசயங்களுமே அவரை முதலீடு போட வைத்துப் புத்தகம் வெளிவர காரணமாக இருந்தது. பலருக்கும் இதனைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற அவரின் எண்ணமே நடைமுறை செயலாக்கத்தில் கொண்டு வந்து நிறுத்தியது.

வெற்றியும் பெற்றுள்ளது.  எட்டில் ஒன்று (விகடன் இயர் புக் 2014

பலதரப்பட்ட விமர்சனங்கள் இந்தப் புத்தகத்திற்குக் கிடைத்த போதிலும் சில நாட்களுக்கு முன் ஒரு நண்பர் அழைத்தார். அவர் ஒரு பெரிய நிறுவனத்தின் தொழிலாளர் பயிற்சிப் பிரிவில் பணியாற்றுபவர். தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு தொழில் நகரத் தொழிலாளர்கள் குறித்தும் ஆய்வறிக்கையைத் தான் சார்ந்த நிறுவனத்திற்கு அளிப்பவர். "எங்களின் அடுத்த முயற்சி திருப்பூர் சார்ந்ததாக இருப்பதால் அங்குள்ள சூழ்நிலை மற்றும் தொழிலாளர்களின் நிலை குறித்து அறிந்து கொள்ளும் பொருட்டுப் புத்தகங்கள் தேடிக் கொண்டிருந்த போது என் நண்பர்கள் உங்கள் புத்தகத்தைக் குறிப்பிட்டுச் சொன்னார்கள். டாலர் நகரம் புத்தகம் எங்கே கிடைக்கும்?" என்று கேட்டார்.

-0O0-

தற்போதுள்ள புத்தகச் சந்தை குறித்துச் சுருக்கமாகப் பார்த்து விடலாம். 

இன்று இணையத் தள உதவியால் உங்களால் ஓரளவிற்குத் தமிழ்நாட்டில் உள்ள புத்தகக்கடைகள் மற்றும் பதிப்பாளர்கள், பதிப்பகங்கள் குறித்துத் தெரிந்து இருக்க வாய்ப்புண்டு. ஆனால் இங்கே நீங்கள் பார்க்கும் மற்றத் துறைகள் சார்ந்த கடைகளைப் போல நீங்கள் வாழும் பகுதிகளில் புத்தகக்கடைகள் இருப்பதில்லை. குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே உள்ளது. 

அங்கே சென்றாலும் நாம் விரும்பும் புத்தகங்கள் இருக்குமா? என்பது சந்தேகமே? காரணம் புத்தகங்களுக்கான தேவை என்பது இங்கே இல்லை. வாசிப்பு என்பது பாடப்புத்தகங்கள் மட்டுமே. தினசரிகள் கொஞ்சம் மீதி வாரப்பத்திரிக்கைகள்.  அதிலும் சினிமா சார்ந்த செய்திகள்.

இன்றைய பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு மீண்டும் மீண்டும் பாடங்களை "நன்றாக படி" என்றே வலியுறுத்துகின்றார்கள். கல்வி "நிறுவனங்களும்" அதனையே சொல்கின்றது. படித்து, வளர்ந்து, வருமானம் வரப்பெற்றவர்களுக்கும் இந்தப் புத்தக வாசிப்பு என்பதும் அவரவர் தேவைப் பொறுத்தே தமிழ்நாட்டில் உள்ளது.  ஆனால் 70 சதவிகிதம் படித்தவர்கள் கூட புத்தக வாசிப்பு தேவையில்லாதவர்களாகத்தான் வாழ்ந்து கொண்டு இருக்கின்றார்கள். இதைவிட வாசிப்பு பழக்கம் உள்ளவர்களை பைத்தியம் போல பார்க்கப்படும் பழக்கமும் நம்மவர்களிடமும் உண்டு.

புலம் பெயர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழர்களுக்குப் புத்தகங்களைப் பெறுவதற்கான நடைமுறை சிக்கல்களும், சாத்தியக்கூறுகளும் தமிழ்ப் புத்தகப் பரப்பை நாளுக்கு நாள் சுருக்கிக் கொண்டே தான் வருகின்றது. ஆன் லைன் வசதிகள் உருவாக்கிய தாக்கம் கூட தமிழ் புத்தக உலகில் மிகப் பெரிய வாசகர் வட்டத்தை இன்னமும் உருவாக்கவில்லை.

0o0

சிறுகதைகள், தொடர்கதைகள், கட்டுரைகள், இலக்கியம், வரலாறு, மொழிபெயர்ப்பு, வாழ்க்கை வரலாறு, புனைவுகள், கவிதைகள், கலைக் களஞ்சியம் என்று இது தொடர்பான பல பிரிவுகள் இருந்தாலும் என்ன மாதிரியான ஆதரவு இதற்கு உள்ளது என்பதை நீங்கள் தெரிந்து கொண்டால் உண்மைகள் கசக்கத்தான் செய்யும்? 

கவிதை என்றால் வெளியிடுபவர் அவரே வைத்துக் கொண்டு நண்பர்களைப் பார்க்கும் போது இலவசமாகக் கொடுக்க உதவும். கட்டுரைகளுக்கும் இதே நிலைமைதான். இதைப் போல ஒவ்வொரு பிரிவுக்கும் சொல்லிக் கொண்டே செல்லலாம். பிறகு எப்படித்தான் புத்தகங்கள் விற்கின்றது?  இதற்கு மேலும் தமிழ்நாட்டில் புத்தகங்களை சந்தைப்படுத்தி வெற்றி காண்பது என்பது ஏறக்குறைய சாக்கடையை தூர்வாரி அள்ளுவதற்குச் சமம். இன்றைய அலங்கோல ஆட்சியில் "அடிமைப்படை அம்மாவாசைகள்" அமைச்சர்களாக இருப்பதால் நூலகத்துறை என்பது ஒட்டடை படிந்து போயுள்ளது.

வருடந்தோறும் புத்தகச் சந்தைகள், விளம்பரங்கள், இணையத் தளங்களில் பலரும் "படித்ததும் பகிர்வதும்" என்று படம் காட்டுகின்றார்களே என்ற கேள்வி வர வேண்டுமே? 

குறிப்பிட்ட சிலரின் புத்தகத்திற்குக் குறிப்பிட்ட சாத்தியக்கூறுகள் மட்டுமே இங்குள்ளது என்பது தான் உண்மை. அதுவும் ஆங்கிலப் புத்தகச் சந்தைகள் போல மகத்தான வெற்றி என்றெல்லாம் கூற முடியாது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், தமிழ் நூல்களுக்கான சந்தை என்பது வாழும் ஜனத் தொகையை ஒப்பிடும் போது மிக மிகக் குறைவே. 

"தமிழ் மக்கள் ஒவ்வொருவரும் தாங்கள் இனி தெரிந்து கொள்ள வேண்டியது ஒன்றுமே இல்லை என்பதாகக்கூட இருக்கக்கூடும். அந்த அளவிற்கு இங்கே ஒவ்வொருவரும் மிகத் தெளிவாக வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்." 

"பெரும்பாலான மக்களுக்கு பணம் என்பது பிரச்சனையல்ல. அவர்களின் மாற்றிக் கொள்ள முடியாத மனோபாவம் தான் இங்கே சவாலாக உள்ளது".

0o0

உங்கள் கைகளில் மிக முக்கியமான சமூகத்திற்குத் தேவைப்படும் ஆவணம் ஒன்று உள்ளது. அதனை உங்களுக்குத் தெரிந்த ஒரு பதிப்பகத்தில் கொண்டு போய்க் கொடுத்துப் பாருங்கள். உங்களை மேலும் கீழும் தான் பார்ப்பார்கள். காரணம் இது காசாகுமா? என்ற சந்தை தான் இங்கே ஒவ்வொன்றையும் தீர்மானிக்கின்றது. 

ஒரு புத்தகம் போட குறைந்தபட்சம் முப்பதாயிரம் முதல் ஐம்பதாயிரம் வரைக்கும், அதன் தரம் பொருத்து, வடிவமைப்புக் கொண்டு முதலீடு செய்யப்படுகின்றது. அதுவும் குறைந்த பட்சம் 300 புத்தகங்கள் என்கிற ரீதியில் மட்டுமே. இங்குப் புத்தகங்களில் இருக்கும் கருத்துக்கள் குறித்து எவரும் கவலைப்படுவதில்லை. அது நம் கவலையைப் போக்குமா? என்கிற ரீதியில் பார்க்கப்படுவதால் இன்று வரைக்கும் தமிழ்நாட்டில் சினிமா சார்ந்த விசயங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கிடைக்கின்றது. 

இந்த 300 புத்தகங்கள் விற்பதே இங்கே குதிரைக்கொம்பாகத்தான் உள்ளது. இதன் காரணமாக "நீங்க முதலீடு செய்தால் நான் புத்தகமாகக் கொண்டு வருகின்றேன்" என்று பதிப்பகங்கள் சொல்லிவிடுகின்றார்கள். "விற்காத போது நீங்கள் வீட்டுக்கு எடுத்துச் சென்று விட வேண்டும்" என்கிறார்கள். காரணம் இடத்தை அடைத்துக் கொண்டிருந்தால் அவர்களுக்கு பலவகையில் பிரச்சனை தான் என்பதால்.

ஒரு வேளை உங்கள் விருப்பப்படி உங்களின் புத்தகமும் வெளிவந்த பிறகு உங்களின் நெருக்கமான/நெருக்கமற்ற நட்பு வட்டாரங்களை இந்த புத்தக விற்பனைக்கு பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்க வேண்டாம்.உறுதி அளித்தவர்கள் ஒதுங்கிவிடுவார்கள். பேச்சை நிறுத்திக்கொள்வார்கள். சிலர் உதவி என்ற பெயரில் உபத்திரத்தை உருவாக்குவார்கள். இவன் பிரபல்யம் ஆக நாம் ஏன் உதவ வேண்டும் என்ற பெரிய சிந்தனைகள் உள்ளவர்களை சந்திக்க நேரிடும்? மொத்தத்தில் உங்களின் உண்மையான நட்புக்கு உங்கள் புத்தகம் விலை பேசி விடும் ஆபத்துள்ளது.

மேலும் "உங்களுக்கு இதன் மூலம் எவ்வளவு தொகை கிடைக்கும்?" என்ற கேள்வியை பழகுபவர்களிடமிருந்து கட்டாயம் எதிர்கொள்ள வேண்டியதாக இருக்கும்.இதையெல்லாம் மீறி உங்களின் அசைக்க முடியாத தன்னம்பிக்கை மட்டுமே வெற்றிக்கான வழியைத் தேடும் என்பதை எப்போதும் நினைவில் வைத்திருங்கள்.

o0o

இன்று தங்களின் தனிப்பட்ட ஆசைக்காக பலரும் தங்கள் சொந்தச் செலவில் மட்டுமே தங்களின் புத்தகத்தைக் கொண்டு வருகின்றார்கள்? இதனால் என்ன லாபம்? 

"உங்களின் ஆசைகளுக்காக புத்தகம் கொண்டு வருவது பெரிதல்ல. ஆனால் நீங்கள் இங்குள்ள சந்தைக்குரிய தகுதியான நபராக இருக்க வேண்டும் அல்லது அந்தச் சந்தையை உருவாக்கத் தெரிந்தவராக இருக்க வேண்டும். "

முப்பதாயிரம் என்பது பெரிய தொகையோ சிறிய தொகையோ உங்கள் புத்தகங்கள் எங்கும் செல்லாமல் உங்கள் வீட்டுப் பரணில் வைக்கப்பட்டு இருந்தால் அதன் மூலம் உருவாகும் மன உளைச்சல் என்பது இழந்த பணத்தைவிட அதிகமாகவே இருக்கும்.

இந்த வருடத்தில் பலரையும் பார்த்துள்ளேன். பல கதைகளையும் கேட்டுள்ளேன். 

-0O0-

மற்றொரு வாய்ப்புள்ளது. 

தற்பொழுது நாம் அனைவரும் வலைபதிவுகளில் கட்டணம் செலுத்த தேவையின்றி இலவசமாகத் தான் எழுதிக் கொண்டு இருக்கின்றோம். இதைப் போலத் திரட்டிகள் நம்மிடம் எந்தக் கட்டணமும் வாங்காமல் நம் எழுத்தை உலகம் முழுக்கக் கொண்டு போய்ச் சேர்த்துக் கொண்டிருக்கின்றார்கள். இதுவே வலைபதிவுக்கு ஒரு கட்டணம். திரட்டிக்கு ஒரு கட்டணம் என்று காலச் சூழல் மாறினால் என்ன ஆகும். முக்கால்வாசிப் பேர்கள் எழுதுவதை நிறுத்திவிடுவார்கள். இது தான் உண்மை. 

இதில் நான் பார்த்த மற்றொரு ஆச்சரியம் என்னவென்றால் பல்வேறு இணையத் தளங்களில் எடுத்து, வெட்டி ஒட்டப்பட்ட கருத்துக்களையும் கொண்டு உருவாக்கப்பட்ட கட்டுரைகளைத் தங்கள் வலைபதிவில் போட்டு எழுத்துச் சேவை செய்து கொண்டிருப்பவர்கள் கூடக் காப்புரிமை பற்றிப் பேசுகின்றார்கள். இந்தச் சமயத்தில் மற்றொரு விசயத்தையும் நாம் யோசிக்க வேண்டும்.

o0o

எதிர்காலத் தொழில் நுட்பத்தில் இந்த வலைபதிவுகள் என்ன விதமான மாற்றங்களைச் சந்திக்கும்? இருக்கலாம்? இல்லாமல் கூட வேறுவழியில் மாறலாம். இதுவும் அப்போதுள்ள சந்தைப் பொறுத்தே கூகுள் நிறுவனம் முடிவு செய்யக்கூடும். 

காரணம் இந்த வருடத்தில் கூகுள் ப்ளஸ் வெற்றிப் பெற்றதாக மாறியது. ஏற்கனவே இருந்த கூகுள் பஸ் மறைந்தது. கூகுள் ரீடர் தனது சேவையை நிறுத்திக் கொண்டது. தற்பொழுது ஃபேஸ்புக் தவிர மற்ற அனைத்தும் பின் தங்கியே உள்ளது. இதை விட வேறொரு தொழில் நுட்பம் உருவானால் அதுவும் இலவசமாகக் கிடைக்கும்பட்சத்தில் நாம் அனைவரும் அங்குச் சென்று விடுவோம். 

-0O0-

என் நண்பர் இராஜராஜன் எப்போது என்னை நேரிடையாகச் சந்திக்கும் பொழுதும், அலைபேசியில் உரையாடும் பொழுதும்கேட்கும் முதல் கேள்வியே உங்க பதிவுகளைப் பேக்அப் எடுத்து விட்டீர்களா? என்பார். இந்த நிமிடம் வரைக்கும் அது போன்று நான் எடுத்ததும் இல்லை. அது குறித்துக் கவலைப்படுவதும் இல்லை. என் சார்பாக அவர் தான் இந்தப் பணியைத் தொடர்ச்சியாகச் செய்து கொண்டிருக்கின்றார். 

அவரும், இன்னும் சிலரும் கேட்ட ஈழம் சார்ந்த கட்டுரைகளைத் தொகுப்பாகக் கொண்டு வந்து விட வேண்டும் என்ற எண்ணம் மட்டும் என் மனதில் இருந்து கொண்டேயிருந்தது. பல சமயங்களில் நான் எழுதிய ஈழம் சார்ந்த கட்டுரைகள் என் வலைபதிவில் பக்கவாட்டில் மேலேறி வருவதைப் பார்ப்பதுண்டு. 

சிலர் இதன் தொடர்ச்சி அடுத்து என்ன? என்று மின் அஞ்சல் வழியே கேட்பதும் உண்டு. 

நான் முதலில் புத்தகமாகக் கொண்டு வர வேண்டும் என்று நினைத்ததே இந்த ஈழம் சார்ந்த விசயங்களுக்காக மட்டுமே. ஆனால் இதைக் காசாக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றாத காரணத்தினாலும், இணையம் வளர்த்த என்னை அந்த இணையத்தில் என்னைப் போன்று வந்து கொண்டிருப்பவர்களுக்காக இந்த நூலை திரு. சீனிவாசன் கொடுத்த உற்சாகத்தின் காரணமாக மின் நூலாகக் கொண்டு வந்துள்ளேன். முடிந்த வரைக்கும் பிழைகள் திருத்தி, விமர்சனங்களில் வந்தபடி சிலவற்றை மாற்றி, படிக்க எளிதான வகையில் உருவாக்கி உள்ளேன்.நண்பர்கள் அனைவரும் படித்து உங்கள் கருத்துக்களைச் சொல்ல வேண்டும் என்று எதிர்பார்க்கின்றேன். இந்த மின் நூல் மிகவும் பயன் உள்ள தகவல்களைக் கொண்டது என்று நீங்கள் கருதினால் உங்கள் தொடர்பில் உள்ள அனைத்து நண்பர்களுக்கும் அறிமுகம் செய்து வைக்க வேண்டுகின்றேன். 
-0O0-


அதற்குக் காரணம் உண்டு. 

இன்னும் சில வருடங்களில் உருவாகப் போகும் தொழில் நுட்ப மாறுதல்களின் காரணமாக இணையப் பயன்பாடுகள் அதிகரிக்கத்தான் போகின்றன. தனி மனிதர்களின் உரையாடல் குறைந்து எதையோ ஒன்றை நோண்டிக் கொண்டு வெறித்துப் பார்த்துக் கொண்டே தான் வாழ்க்கை அமையப் போகின்றது. அப்பொழுது நிச்சயம் மின் நூல்களின் பயன்பாடுகள் பல மடங்கு உருவாகப் போகும் சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளது. 

இதனை மனதில் கொண்டே நண்பர் சீனிவாசன் வலைபதிவுகளை மின் நூலாக மாற்றி ஒரே இடத்தில் சேர்த்து வைத்து பலருக்கும் கொண்டு சேர்த்துக் கொண்டிருக்கும் பணியைத் தொடர்ந்து செயல்படுத்திக் கொண்டு வருகின்றார். எவ்வித லாப நோக்கமும் இன்றி இதனைத் தனது சேவையாகக் கருதிக் கொண்டு நடத்தி வருகின்றார். 

-0O0-

இதன் மூலம் என்ன பலன்? 

உங்கள் வலைபதிவில் எழுதப்பட்ட விசயங்களை ஒரு மின் நூலாகக் கொண்டு வர முடியும். எதைப் பற்றி வேண்டுமானாலும் இருக்கலாம். இதற்குக் கணக்கீடு என்பதே இல்லை. மின் நூலாக மாறும் பட்சத்தில் அது உங்கள் வலைபதிவுக்கு வராதவர்கள் பார்வையில் பட்டு உலகம் முழுக்க வாழும் தமிழர்களிடத்தில் போய்ச் சேர்கின்றது. அந்தப் பணியைத் தனது தளத்தின் வாயிலாகச் செய்து கொண்டிருக்கின்றார். 

இந்தத் தளத்தில் உங்களின் மின் நூலை பதிவேற்றி வைத்து விட்டால் எவர் வேண்டுமானாலும் தரவிறக்கம் செய்து கொள்ள முடியும். கட்டணம் எதுவும் இல்லை. மின் நூலாக மாற்றிய பின்பு உங்கள் படைப்புக்கான அங்கீகாரமும், உங்கள் கருத்துக்கான ஆதரவும் உங்கள் காலத்திற்குப் பிறகும் எவரோ ஒருவரிடமிருந்து மற்றொருவருக்குப் பரவிக் கொண்டேயிருக்கும். 

தொழில்நுட்ப மாற்றத்தில் வலைபதிவுகளின் தன்மை மாறி உங்களால் பின்தொடர முடியாத சூழ்நிலையிலும் மின் நூலாக மாற்றி வைத்து விட்டால் உங்கள் படைப்புகளுக்கு அழிவென்பதே இருக்காது. திருச்சி என்ற நகரம் எப்படி இருந்தது என்று எவரோ ஒருவர் இன்னும் நூறு ஆண்டுகள் கழித்து வாழ்ந்து கொண்டிருப்பவர் தேடும் போது அவர் கையில் உங்கள் திருச்சி நகர அனுபவங்கள் கிடைக்கும் பட்சத்தில் எப்படியிருக்கும் என்பதை யோசித்துப் பார்க்கும் பொழுது உங்களால் இதனைப் புரிந்து கொள்ள முடியும். 

-0O0-

 ஈழம் - வந்தார்கள் வென்றார் (மின் நூல்)

நடந்து முடிந்த ஐந்து மாநிலத் தேர்தலில் தோற்றுப் போன ராகுலிடம் உங்கள் அப்பா இறந்த கதை? என்று பேசத் தொடங்கினால் அவர் என்ன சொல்வார்? 

"இப்ப எங்க நிலைமையே டப்பா டான்ஸ் ஆடிப்போய் கிடக்கு. உங்க விஜயகாந்த் டெல்லியில் வாங்கின ஓட்டு மாதிரி வரும் தேர்தல் ஆயிடுமோங்ற பயத்திலே நாங்க இருக்கோம். அப்பா ஆட்டுக்குட்டின்னு நீ வேற? "என்பார்.

காரணம் ராஜீவ் காந்தி படுகொலை என்பது அவர்கள் குடும்பமே மறந்து இன்று எந்த வகையில் எந்த இடத்தில் அறுவடை செய்ய முடியும்? என்று பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள். 

இன்று இந்திய ராணுவத்திடம் இலங்கைக்குச் சென்ற  அமைதிப்படை? என்று கேள்விக்குறியோடு போய் கேட்டுப் பாருங்கள். பலரும் ஓய்வு பெற்று, அது குறித்துத் தெரியாத புதிய தலைமுறைகள் தான் தற்பொழுது பணியில் இருப்பார்கள். 

காலம் அனைத்தையும் மாற்றிவிடும். 

ஆனால் ஒரு வரலாற்றை ஆவணமாக்கி அதனைக் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு படித்துப் பார்க்கும் போது பல உண்மைகள் நமக்குப் புரிய வரும் படித்துப் பாருங்கள். பல இடங்களில் திடுக்கிட்டு போவீர்கள். சில இடங்களில் உங்கள் கண்களில் ஆச்சரியம் அலையடிக்கும். என் பதிவில் உள்ள பெரும்பாலான கட்டுரைகளை இணையம் வழியே மட்டும் அனைவருக்கும் சென்று சேர வேண்டும் என்று நான் நினைத்துள்ள முக்கியமானவற்றை நேரம் கிடைக்கும் போது மின் நூலாக மாற்றும் திட்டமும் உண்டு.

-0O0-

உங்களுக்கு இந்த திட்டம் குறித்து முழுமையாக தெரிய வேண்டுமென்றால் சீனிவாசன் அவர்களைத் தொடர்பு கொள்ளுங்க. உங்களிடம் இது குறித்து பேசுவதற்கு முன்பாக நானே அதை தொடங்கி வைத்தவனாக உள்ளேன். உங்களையும் அழைக்கின்றேன்.உங்கள் தளங்களில் இதைப் பற்றி எழுதினால் பலருக்கும் இந்தத் தகவல் போய்ச் சேரும். 

இங்கிருந்தே ஒவ்வொன்றையும் பெற்றேன். இந்த வருட பரிசாக நண்பர்களுக்கு இதையே கொடுக்கின்றேன்  நிச்சயம் உலகம் முழுக்க பரவி வாழும் ஈழம் சார்ந்த நண்பர்களுக்கு இந்த மின்நூல் இணையத்தின் வாயிலாக வெளியிடப்படும் போது சென்று சேரும் என்று நம்புகின்றேன்.

ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் பின்னூட்டத்தில் கேளுங்க. பதில் அளிக்கின்றேன். காரணம் இந்தத் திட்டம் குறித்து, இதன் அடிப்படைத்தன்மை குறித்து முழுமையாக எழுத வேண்டுமென்றால் மேலும் இரண்டு பதிவுகள் எழுத வேண்டும்.  

உங்கள் மனதில் உள்ள கனவுகள் நிஜமாக மாற வருகின்ற 2014 ஆம் ஆண்டு உங்களுக்கு அதற்கான வாய்ப்புகளை வழங்க என் வாழ்த்துகளை இங்கே எழுதி வைக்கின்றேன். 

எனது படைப்புகளை புத்தகமாக மட்டுமே கொண்டு வர வேண்டும் என்று நினைக்கின்றேன் என்பவர்களை தவிர்த்து மற்றவர்களுக்கு வரப் போகும் 2014 ஆம் ஆண்டு உங்களின் படைப்புகள் மின் நூலாக மாற்றம் பெற்ற ஆண்டாக இருக்கட்டுமே?




Thursday, December 26, 2013

ஒரு அடியாளின் வாக்குமூலம்

ஒவ்வொரு முறையும் குழந்தைகள் படிக்கும் பள்ளிக்குச் செல்லும் போது அங்கே உருவாகிக் கொண்டிருக்கும் கட்டிடங்களைப் பார்க்கும் போது அடி வயிறு கலங்கிப் போகின்றது. வருகிற ஆண்டு எந்த அளவுக்குக் கட்டணத்தை உயர்த்தப் போகின்றார்களோ ?  மனதில் பயமும் வந்துவிடுகின்றது. 

கடந்த எட்டாண்டுகளில் நம்ம முடியாத வளர்ச்சி. ஏற்றுமதி நிறுவனங்கள் நினைத்தே பார்க்க முடியாதது. பள்ளி முடியும் சமயங்களில் அவசரமாய் வாகனங்களில் வந்து சேரும் அப்பாக்களும், பெருத்த உடம்பை சுடிதாருக்குள் திணித்து, வேர்வையுடன் ஒப்பனை கலைந்து, மூச்சு வாங்கியபடி அலுப்போடு வந்து சேரும் அம்மாக்களையும் பார்க்கும் போது  கவிதைகளாகத் தெரிகின்றார்கள். 

அங்கே நான் காத்திருக்கும் நேரத்தில் எதிரே வரும் ஃப்ரிகேஜி குழந்தைகளைப் பார்க்கும் பொழுது இவர்கள் பால்குடி மறந்திருப்பார்களா? என்று நினைக்கத் தோன்றுகின்றது. குட்டி தேவதைகள். குழந்தைகளுக்காகக் காத்திருக்கும் சில நிமிடங்களில் கூட அப்பாக்கள் ஹெட்போனில் பேசிக் கொண்டே குழந்தைகளை இழுத்துக் கொண்டு செல்கின்றார்கள். 

இந்த வருடம் பள்ளிக்கு இளமையான புதிய உடற்பயிற்சி ஆசிரியை ஒருவர் வந்திருப்பதைப் பார்த்து விட்டுக் குழந்தைகளிடம் அவர் பெயர் என்ன? என்று கேட்ட போது "நீங்க கேட்டதை அம்மாவிடம் சொல்கின்றோம்" என்றார்கள். பழகிய மிஸ்கள் எவரும் பள்ளியில் இல்லை. இந்த வருடத்தில் அறிமுகமானவர்களும் தூரத்தில் தெரிகின்றார்கள். பெற்றோர்கள் மாடிக்குச் செல்ல அனுமதியில்லை என்கிறார்கள். குழந்தைகளின் பள்ளிக்கூடப் பைகளைச் சுமந்து கொண்டு வந்த போது எங்கள் ஊரில் உள்ள ஆரிசி ஆலைகளில் பணிபுரியும் சுமைதூக்கும் தொழிலாளர்களின் ஞாபகம் வந்து போனது. 

மூவரில் ஒருவர் சொன்னார்.

 "அப்பா அந்த மிஸ்ஸை போய் என்னன்னு கேட்டுட்டு வாங்கப்பா?" என்றார்? 

"ஏனம்மா?" என்றேன். 

"பிடி கிளாஸ்லே விளையாட விடமாட்டுறாங்க. படிபடின்னு உயிரை எடுக்குறாங்க" என்றார். 

பலசமயம் இவர்களுக்காக அடியாள் வேடமும் போட வேண்டியுள்ளது. 

******************

சென்ற ஆண்டுத் திருப்பூரே சவக்களையாக இருந்தது. ஊரெங்கும் "வீடு வாடகைக்கு விடப்படும்" அட்டைகள் தென்பட்டது. இப்போது "அடுத்த ஆறு மாதத்திற்கு வீடே கிடைக்காது" என்கிறார் நண்பர். சீனாவும், பங்களாதேஷ் ம் பல காரணங்களால் பின்னுக்குப் போய்விட வந்திறங்கிய புதிய ஒப்பந்தங்கள் ஒப்பனை போல ஊரை மிளிர வைத்துக் கொண்டிருக்கின்றது. சென்ற வருட மின் தடையில் பாதிக்கப்பட்ட பலரையும் காணமுடியவில்லை. 

சிறிய நிறுவனங்கள் அழுத்தப்பட்ட காரணத்தினால் பலரும் தங்கள் நிறுவனங்களை வந்த விலைக்கு விற்று விட்டு வேலைக்குச் செல்பவர்களாக மாறியுள்ளனர். இந்த வருட மின் தடையும் அடுத்த வருடத்திற்கான "வேலையாட்களை" உற்பத்தி செய்து விடும் என்றே தோன்றுகின்றது. மனிதர்களையும், மனிதத்தையும் மதிக்காத பல பெரிய முதலாளிகள் ஆட்டத்திலிருந்து விலகி ஓய்வெடுக்கத் தொடங்கியுள்ளனர். வங்கியில் அடமானம் வைத்துள்ள சொத்துக்கள் ஏலம் விட எப்போது பத்திரிக்கையில் வருமென்று காத்துக் கொண்டிருக்கின்றார்கள். 

வங்கி அதிகாரிகள் முடிந்தவரைக்கும் மிரட்டிப் பார்த்து விட்டு அரசியல் "அழுத்தம்" அதிகமானதும் வேறு ஊருக்கு மாறுதல் வாங்கிக் கொண்டு செல்ல காத்துக் கொண்டிருக்கின்றார்கள். 

ஏமாற்றியே பிழைத்த அத்தனை பேர்களுக்கும் இன்று தொழிலாளர்கள் சவாலாக இருப்பதால் கையில் இருக்கும் சொத்து பெரிதா? காப்பாற்றிக் கொள்ள வேண்டிய மானம் பெரிதா? என்ற பட்டிமன்றத்திற்குப் பலரும் நடுவர்களைத் தேடிக் கொண்டு இருக்கின்றார்கள். 

**********************

கலைஞர் உருவாக்கியது தானே? என்ற எண்ணமில்லாமல் வெற்றிகரமாகச் சென்ற மாதத்தில் திருப்பூர் மாவட்டத்திற்கு காவல் துறை கமிஷனர் அலுவலகத்தை ஜெயலலிதா காணொளி காட்சியில் திறந்து வைக்க இப்போது முக்கியச் சாலைகளில் போக்குவரத்துக் காவலர்கள் அதிகமாகவே கண்களுக்குத் தெரிகின்றார்கள். 

பத்திரிக்கை நண்பரிடம் கேட்டேன். "இனி சட்டம் ஒழுங்கு கட்டுக்குள் வந்து விடும் தானே?" என்றேன். 

"ஆமாம். சட்டப்படி பிரித்துக் கொடுக்க வேண்டும். அதை ஒழுங்காகக் கொடுக்கப்பட வேண்டும்" என்றார். 

முந்தைய ஆட்சியில் எல்லாத்துறையிலும் ஏழரை சதவிகிதம் என்றார்கள். மக்களும் ஏழரை ராசியில்லை என்று வீட்டுக்கு அனுப்ப இப்போது கட்டிங் அளவு உயர்ந்து பதினைந்து சதவிகிதம் என்கிறார்கள். 

கொடுமையான தண்ணீர் பஞ்சம் ஒவ்வொரு சந்து மக்களையும் தடுமாற வைக்க மக்களும் இங்கேயும் ஒரு இடைத் தேர்தல் வந்து விடாதா? என்று ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றார்கள். 

*************************

சாலையில் செல்லும் பொழுது பார்த்த புதிய கட்டிடங்களை விட உள்ளே செய்யப்பட்டுள்ள அலங்கார வேலைகள் ரசிக்கும்படியாக உள்ளது. தரம் பின்னுக்குப் போய் அழகில் பொய்களைத் தேட மக்களும் பழகிவிட்டார்கள். "பிராண்ட் நேம்" பன்னாட்டு நிறுவனக் கடைகளும் இந்த வருடம் அதிகமாக வந்துள்ளது. 

கசாப்புக்கடை திறப்பு விழா முதல் தலைமுடி அலங்கார கடைகள் திறப்பு விழா வரைக்கும் பாரபட்சமில்லாது அரசியல்வாதிகள் திறந்து வைத்து மக்கள் "சேவை" செய்து கொண்டிருக்கின்றார்கள். ஒவ்வொரு நிலையிலும் கல்லா கட்டிக் கொண்டிருக்கின்றார்கள். "கட்டிங்" என்ற வார்த்தையை தேசிய முக்கியத்துவம் பெற்ற வார்த்தையாக விக்கிபீடியாவில் கொண்டு வந்து விடலாமா? என்று ஒவ்வொரு அரசு அலுவலகங்களிலும் விவாதம் நடந்து கொண்டிருக்கின்றது. 

"எனது அரசு","என் ஆணை",போன்ற வார்த்தைகள் தெருவில் கிடந்தவர்களைக் கோபுரத்தில் வைத்துள்ளதால் திருப்பூர் சுகாதாரம் நாறிப்போய்த்தான் கிடக்கின்றது. பேக்கரி,  பீட்சா, பர்கர் கடைகளில் கூட்டம் அதிகமானதால் நரம்புக்கு, மூளைக்கு, முட்டிக்கு, வயிற்றுக்கு  உருவான நவீன ரக மருத்துவ மனைகளைப் போலச் சந்துக்கு நான்கு மருந்துக்கடைகளும் இந்த வருடம் அதிகமாகியுள்ளது.

மனமே வசப்படு படங்கள் பெற 4 தமிழ்மீடியா சொடுக்க


தொடர்புடைய பதிவுகள்





Monday, December 23, 2013

கணக்குபுள்ள மமோ காரியவாதி நமோ

நினைவுகள் 

சிறு வயதில் விரும்பிய இனிப்பு, உடைகள், மிதிவண்டி, சாகசங்கள் பதின்மவயதில் விரும்பிய ஆசைகள், அலங்காரங்கள் எல்லாமே திருமணம் என்ற முற்றுப்புள்ளியோடு நின்றுவிடுகின்றது. திருமணத்திற்குப் பிறகு தேடியலையும் ஒவ்வொரு விசயங்களும், விரும்பியவைகள் அனைத்தும் குறிப்பிட்ட நிலையில் நமக்கு அலுப்பைத் தந்து விடுகின்றது. ஒவ்வொன்றும் மாறி மாறி நம்மை விட்டு விலகிச் சென்று எது ஆசை? எது வாழ்க்கை? என்று தேடல்களாக மாற்றம் பெறுகின்றது.

நாம் தேடிய அனைத்தும் நினைவுகளாகவே நின்று விடுகின்றது. கொண்டாட்ட மனோநிலை மாறி கொண்டாடப்படுவர்களை வேடிக்கைப் பார்ப்பவர்களாக மாறிவிடுகின்றோம். 

இந்த வருடத்தின் தொடக்கம் முதல் இன்று வரையிலும் ஒவ்வொன்றையும் யோசித்துப் பார்த்தால் மனதின் வலிமை என்ன? என்பதை உணர்ந்து கொள்ள முடிந்துள்ளது. சுக துக்கங்களை மனதின் உள்ளே அனுமதிக்காமல் வெளியே வைத்து வேடிக்கை பார்க்க முடிந்துள்ளது. சொல்லுக்கும் செயலுக்கும் சம்மந்தம் இல்லாது வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருப்பவர்களை புரிந்து கொள்ள முடிந்துள்ளது. நம்மை நாமே உணர்வது எப்படி? என்பதை இந்த வருட அனுபவங்கள் உணர்த்தியுள்ளது.

உணவின் ருசியைத் தவிர மற்ற அனைத்தும் நகர்ந்து போய்விட்டது. அடுத்த வருடம் இந்த ருசியின் தன்மை மாறிவிடக்கூடும். 

பரிசோதனை எலிகள் 

ஒரு வகையில் பார்க்கப் போனால் நாம் அனைவரும் யாரோ ஒருவரின் பரிசோதனைக்குரிய எலிகள் தான். ஒவ்வொரு சமயமும் நம்மை வைத்து ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமான பரிசோதனைகள் செய்து கொண்டே தான் இருக்கின்றார்கள். பல சமயம் பலரின் விருப்பத்திற்குரியவர்களாக மாற முடிவதில்லை. நாம் எதிர்பார்க்கும் நபர்களும் நாம் விரும்பும் அளவிற்கு மாறிவிடுவதில்லை. வருடந்தோறும் வாழும் சூழ்நிலையின் காரணமாக நம்முடைய சிந்தனைகளும் மாறும் என்பது தற்போது மாறி விட்டது. மாதம் தோறும் மாறிக் கொண்டேயிருக்கின்றோம். 

முக்கியக் காரணம் வளர்ந்து கொண்டிருக்கும் தொழில் நுட்பம். இல்லாத ஆசைகளை உருவாக்குகின்றது. இருக்கின்ற ஆசைகளை மேலும் வளர்க்கின்றது. சென்ற மாதம் நன்றாகத்தானே நம்மிடம் பேசினாரே? அதற்குள் ஏன் ஒதுங்கிச் செல்கின்றார் என்று யோசித்து மண்டையை உடைத்துக் கொள்ள வேண்டாம். பணம் மற்றும் பணம் சார்ந்த சிந்தனைகள் மட்டுமே இங்கே உறவை வளர்க்கின்றது பலசமயம் முறிய காரணமாக இருக்கின்றது.

மன்மோகன் சிங் 

இன்று நாம் அனுபவித்துக் கொண்டிருக்கும் தொழில் நுட்ப வசதிகளுக்கு முக்கியக் காரணம் 1990 ஆம் ஆண்டுக்கு பிறகு உருவான ஆட்சி மாற்றமும் பிரதமராக இருந்த நரசிம்மராவின் தீர்க்கதசரினமுமே ஆகும். இதனால் நல்லதும் கெட்டதும் அதிக அளவு நடந்துள்ளது. மொத்தத்தில் நாம் குடிநீரை காசு கொடுத்து வாங்க வேண்டிய பண்டமாக மாற்றியுள்ளோம். ஆனால் வெளிநாட்டு முதலீடுகள் உள்ளே வந்த பிறகே நடுத்தரவர்க்கத்தின் முகச்சாயல் மாறத் தொடங்கியது.

படித்தவர்களுக்குப் பலதரப்பட்ட வாய்ப்புகள் உருவாகத்தொடங்கியது. நரசிம்மராவின் மொழிப்புலமை, அறிவுக்கூர்வை, பழுத்த அரசியல் அனுபவம் பற்றி இந்திய அரசியலை தொடர்ந்து கவனித்து வருபவர்களுக்கு நன்றாகவே தெரியும்.  ஆட்சிக்கு வந்த நரசிம்மராவுக்கு அப்போது அவர் சொல்வதைச் செய்ய ஒரு கணக்குப்பிள்ளை தேவைப்பட்டது. அப்போது கிடைத்தவர் தான் இப்போதைய பிரதமர் மன்மோகன் சிங். நிதி அமைச்சராக மாறினார்.

இந்திய அரசியலில் ஒரு வினோதம் உண்டு. அரசியலில் பழம் தின்று கொட்டைபோட்டவர்களாக இருக்க வேண்டும்.அதிகாரிகளை வேலை வாங்கத் தெரிந்திருக்க வேண்டும். மாறிக் கொண்டேயிருக்கும் அரசியல் சூழலையும் சமாளித்து பதவியையும் தக்க வைத்துக் கொண்டாக வேண்டும். 

கம்பி மேல் நடக்கும் கதை தான். 

பம்பாயில் நடந்த பயங்கரக் கலவரத்தையும், பாபர் மசூதி இடிந்ததையும் வேடிக்கை பார்த்துக் கொண்டே தனது பிரதமர் பதவியைத் தக்க வைத்துக் கொண்டவர் நரசிம்மராவ். ஊர்கூடி உதிரிக்கட்சிகள் ஒவ்வொன்றும் தேர் இழுத்து இவரை பிரதமராக உட்கார வைத்தது அதிர்ஷடம் என்றால் இவரோ கடைசி வரைக்கும் சமாளித்து முழுமையாக ஆட்சி காலத்தையும் ருசித்தவர் என்கிற வகையில் ஆச்சரியப்படுத்திய அரசியல்வாதி.

ஆனால் இவரின் கடைசிக் காலம் கொடுமையானது. மகன்கள் உருவாக்கிய கேவலங்கள் ஒரு பக்கம். ஆந்திரப் பிரதேச பாடப்புத்தகங்களில் நரசிம்மராவ் குறித்து வந்த பாடங்களை நீக்கும் அளவிற்கு அவமானப்பட்டு இறந்தார். இப்போதுள்ள காங்கிரஸ் சூழ்நிலையில் "கணக்குபுள்ள" மன்மோகன் சிங்கின் கடைசிக் கால வாழ்க்கையும் இதே போலத்தான் மாறப்போகின்றது. 

நரேந்திரமோடி. 

பிரதமராக நரேந்திரமோடி வரக்கூடாது என்பவர்கள் அவர் மதவாதி என்றும், கோத்ரா கலவரத்தையும் உதாரணம் காட்டுகின்றார்கள். ஆனால் காங்கிரஸ் ஆட்சியில், ஆட்சி செய்த மாநிலங்களில் நடந்த மதவாத கலவரங்களின் பட்டியல் மிக நீளமானது.

இந்த வருடத்தில் என்னை மிகவும் கவர்ந்தவர் நரேந்திர மோடி. காரணம் அலட்டிக் கொள்ளாமல் தான் நினைத்தவற்றைப் படிப்படியாக அடைந்தவர். அவர் பிரதமர் வேட்பாளர் என்ற தகுதியை அடைவதற்கு அவரின் கட்சியான பாரதிய ஜனதா கட்சிக்குள்ளே இருந்த குழிபறித்தல்களை உடைத்து வந்தவர். 

பா.ஜ.க. கட்சியைத் தொடக்கம் முதல் தங்கள் கைக்குள் வைத்திருந்த லாபி மக்களைப் படிப்படியாக ஆட்டத்தில் இருந்து ஒதுக்கி வைத்து மேலே வந்தவர். நிதின் கட்காரியை ஓரே அடியாக அடித்துச் செல்லாக்காசாக மாற்றிய தந்திரசாலி.

அதன் பிறகே ஒவ்வொரு மாறுதல்களும் விரைவாக நடந்தேறத் தொடங்கியது. 

சமூக வலைதளங்களைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட தந்திரங்கள், மீடியாக்களின் பார்வையைத் தன் மேல் எப்போதும் இருக்கும்படி உருவாக்கிக் கொண்டது என்று ஒவ்வொரு படியாக ஏறிவந்துள்ளார். இவர் பிரதமராக வந்தால் ஆர்.எஸ்.எஸ் ன் கட்டுப்பாட்டில் தான் செயல்பட முடியும் என்கிறார்கள். 

நிச்சயம் அப்படியே இருந்தாலும் குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் அத்தனை லாபிகளையும் தன் வட்டத்திற்குள் கொண்டு வந்து விடுவார் என்றே நினைக்கின்றேன். சோனியாவின் 'அதிர்ஷ்ட வாழ்க்கைக்கு'ச் சரியான போட்டி இவரின் அதிர்ஷ்டமும். 

எப்படி என்று கேட்காதீர்கள்? 

சில வருடங்களில் இது நடந்தால் அப்போது இந்தப் பதிவில் வந்து மீண்டும் மறுமொழி வாயிலாக வந்து சொல்லுங்களேன்.  அதுவரையிலும் என்னையும் "அடிப்படை ஹிந்துவ மதவாதி" என்ற பட்டத்தையும் கொடுத்து விட்டு செல்பவர்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.

விஜயகாந்த்.

தமிழக அரசியல் சரியான இடத்திற்கு வந்து விடுவார், வளர்ந்து விடுவார் என்று சொல்லப்பட்ட வைகோ உணர்ச்சி பூர்வமான அணுகுமுறைகள் மற்றும் தெளிவற்ற கொள்கையினால் காணாமல் போனார். தொடக்கம் முதலே மருத்துவர் ராமதாஸ் என்றால் சாதீ என்ற கோரப்பல் துருத்திக் கொண்டு தெரிய குறுகிய வட்டத்திற்குள்ளே நிற்க வேண்டியதாக இருந்தது.  வன்னியர் சாதியில் இருப்பவர்களின் மொத்த ஆதரவும் அவருக்கு கிடைத்து இருந்தாலே அவர் பெரிய சக்தியாக வளர்ந்திருக்க முடியும்.

ஆனால் வன்னியர்கள் கூட தேர்தல் சமயத்தில் திமுக, அதிமுக என்ற ஏதோ ஒரு வட்டத்திற்குள் அடைக்கலமாகி விடுவதால் மருத்துவர் ராமதாஸ் இன்னமும் ஏதோவொரு கட்சியைச் சார்ந்தே இயங்க வேண்டிய சூழ்நிலையில் இருக்கின்றார். நடக்கப்போகும் பாராளுமன்றத் தேர்தலுக்கு பா.ஜ.க. தன்னைக் காப்பாற்றும் என்று வழி மேல் விழி வைத்து காத்துக் கொண்டிருக்கின்றார். வைகோ வும் பா.ஜ.க ஜீப்பில் நம்மை ஏற்றிக் கொள்வார்கள் என்றே நம்பிக் கொண்டிருக்கின்றார்.

திருமாவளவன், கிருஷ்ணசாமி மற்றும் ஓடுக்கப்பட்ட இனத்தைச் சேர்ந்த பலரும் ஒன்று சேர்ந்து ஒரு வலிமையான சக்தியாக ஒற்றுமையாக இருந்து தங்கள் இனத்திற்காக ஒன்று சேர்ந்து, கூட்டணி சக்தியாக மாறியிருந்தால் தமிழ்நாட்டில் பல ஆச்சரியங்களை நிகழ்த்தியிருக்க முடியும்.  3013 ஆனாலும் இதற்கு வாய்ப்பில்லை என்பதே எதார்த்தம்.

ஆனால் ஏற்கனவே விரிவாக சொன்னபடி இவர்களை விட விஜயகாந்திற்கு தமிழக அரசியலில் நிறைய வாய்ப்புகள் இருந்தது.  திமுக, அதிமுக விற்கு மாற்றாக ஒரு மாற்று அரசியல் உருவாகி விடும் என்றே பலரும் நம்பியிருந்தனர். ஆனால் இன்று கதாநாயகன் வில்லன் வரிசையில் தேவைப்படும் கோமாளி போலவே இவரை இன்று ஊடகங்கள் சித்தரிப்பதும், இவரும் தன்னுடைய வெளிப்படையான பேச்சால் செயல்பாடுகளால் அதையே உண்மையாக்கிக் கொண்டிருப்பதும் தான் நடந்து கொண்டு இருக்கின்றது.

"மாற்று அரசியல் பார்வை" என்பதற்கும் "மாற்றுக்கட்சி" என்பதற்கும் உண்டான வித்தியாசங்களை அர்விந்த் கெஜரிவால் பெற்ற வெற்றிக்குப் பின்னால் அவர் கட்சியினர் ஆற்றிய களப்பணிகளைப் பார்த்து இவர் இனியாவது கற்றுக் கொள்வாரேயானால் பிழைத்துக் கொள்வார் என்றே நினைக்கின்றேன். விகா வின் குடும்ப அரசியல் முக குடும்பம் கொடுத்த பரிசுகளைத் தான் கொடுக்கப் போகின்றது என்றே நினைக்கின்றேன்.

பழைய குப்பைகள் கழிந்து புதிய கொள்கைகள் தமிழ்நாட்டின் மறுமலர்ச்சி அத்தியாயத்தை தொடங்கி விடாதா? என்ற எண்ணத்தில் இருக்கும் எனக்கு இந்த வருடம் திமுக, அதிமுக கட்சியில் உள்ள இணைய நண்பர்கள் என்னை "கொலவெறி பட்டியலில்" சேர்த்து இருக்கின்றார்கள் என்பதே யான் பெற்ற பலன். நான் எழுதிய, பகிர்ந்த செய்திகளுக்கு, கருத்துக்களுக்கு அப்பாற்பட்டு என் தைரியத்தை ஆச்சரியத்துடன் கவனித்து வந்து அழைத்து பாராட்டிய கடிதம் வாயிலாக தெரிவித்த நட்புகளுக்கு என் நன்றியை இங்கே எழுதி வைத்து விடுகின்றேன்.

படங்கள்

கூகுள் கூட்டலில் தொகுத்து வெளியிடப்பட்ட 2013 கதைகள் சொல்லும் படங்களை சொடுக்க ரசிக்க  ரசிக்க 2

(அடுத்த வாரம் வெளியிடப்படும் இந்த மின் நூலை இலவசமாக இணையத்தில் இருந்து தரவிறக்கம் செய்து எல்லாவித நவீன தொழில் நுட்ப வசதிகளின் மூலமும் நீங்கள் வாசிக்க வாய்ப்புள்ளது.) http://freetamilebooks.com/

படித்ததும் யோசித்ததும்

தன்னைப் பற்றிய விமர்சனங்களையும் பாராட்டு மொழிகளையும் எல்லோரிடமும் சேகரித்து வைத்துக் கொண்டிருந்தாள் அந்தச் சிறுமி. அவற்றை ஒரு மூட்டையில் சேகரித்து வைத்திருந்தாள்.   

வளர வளர அதை மறந்தும் போனாள்.  வெற்றிமிக்க இளம் பெண்ணாய் வளர்ந்து சிறந்த பிறகு அந்த மூட்டை அவள் கண்களில் பட்டது.   எழுத்துக்கள் மங்கியிருந்தன. காகிதம் இற்றுப்போயிருந்தது.  

ஆனால்,  அவளுக்கு இப்போது தன்னைப் பற்றி நன்றாகத் தெரிந்திருந்தது. அடுத்தவர்களின் அபிப்பிராயங்கள் மங்கியிருந்தன.  

நம்மை உணர்வதே நல்லது.


தொடர்புடைய பதிவுகள்




Saturday, December 21, 2013

ஊரெல்லாம் மினுமினுப்பு 2013 .

கடந்த சில மாதங்களில் பல முறை ஊர்ப்பக்கம் சென்று வந்த போது இந்த வருட மாறுதல்களை உள்வாங்கிக் கொள்ள முடிந்தது. அதில் சிலவற்றை இங்கே எழுதி வைத்து விடுகின்றேன். 
தமிழ்நாட்டில் பொதுப் போக்குவரத்து என்பது முற்றிலும் சீர்குலைந்து போயுள்ளது. பேரூந்து நிலையத்திலிருந்து வண்டி கிளம்பும் வரைக்கும் ஓட்டுநரும், நடத்துநரும் கூவிக்கூவி அலைத்தாலும் மக்கள் கட்டணம் அதிகமென்றாலும் தனியார் பேரூந்துகளில் பயணம் செய்வதைத் தான் விரும்புகின்றார்கள்.  

திருப்பூர் முதல் திருச்சி வரைக்கும் செல்லும் வண்டிகளில் பாதித் தூரம் கடந்த பின்பு தனியார் பேரூந்துகள் நிறுத்தாத இடங்களில் நிற்கும் மக்கள் மூலம் அரசு வண்டிகளில் மக்கள் கூட்டம் சேர்கின்றது. கடந்த இருபது ஆண்டுகளில் ஆட்சியில் இருந்த ஒவ்வொரு போக்குவரத்துத் துறை அமைச்சர்களும் தற்போது தொழில் அதிபர்களாக மாறியுள்ளனர். 

தற்போது பயன்பாட்டில் உள்ள பொதுப் போக்குவரத்துத் துறை பேரூந்துகளை காயலான் கடையில் விற்றால் கூட ஐம்பதாயிரம் கூடத் தரமாட்டார்கள். பாதிக்கும் மேற்பட்ட வாகனங்கள் டயர் பழுதுபட்டு நின்று விடுகின்றது. வாகனங்களில் இருக்க வேண்டிய ஸ்டெப்னி, புது டயர்கள் இது போன்ற வசதிகள் எதுவும் இல்லை. பயணித்தவர்களை அடுத்து வரும் வண்டிகளில் ஏற்றி அனுப்பி விடுகின்றார்கள். மழை பெய்யும் போது பேரூந்தின் உள் பகுதி முழுக்க ஓழுக ஒட்டுநர் பகுதி மட்டும் கொஞ்சம் நனையாமல் இருக்கின்றது. 

திருச்சி முதல் காரைக்குடி வரை செல்லும் சாலைகள் அனைத்தும் புதுப்பெண் போல மினுமினுப்பாய் அழகாய் இருக்கின்றது. தேசிய நெடுஞ்சாலைத் திட்டத்தின் மூலம் புதுப்பொலிவு பெற்றுள்ளது. மக்கள் பயணிக்கும் பொதுப் போக்குவரத்துதுறை வாகனங்கள் மட்டும் மணிக்கு நாற்பது கிலோமீட்டர் வேகத்தில் செல்கின்றது. நாம் பார்க்கும் மற்ற வாகனங்கள் குறைந்தபட்சம் மணிக்கு என்பது கிலோமீட்டர்க்குக் குறைவில்லாமல் வேகத்தில் நம்மைக் கடந்து சென்று கொண்டிருக்கின்றது. 

ஒரு நகர்புறத்தில் தொடகும் உள்ளடங்கிய கிராமங்கள் பலவற்றுக்கும் சாலை வசதிகள் சிறப்பாகப் போடப்பட்டுள்ளது. இன்னும் சில வருடங்களில் தமிழ்நாட்டில் எந்தப் பகுதியில் பயணித்தாலும் சுங்கவரி கட்டணம் இல்லாமல் பயணிக்க முடியாது. கையில் காசிருந்தால் மட்டுமே இனி தனி நபர்கள் வைத்திருக்கும் வாகனங்களில் பயணிப்பது சாத்தியமாக இருக்கும். 
மரங்களே தேவையில்லாத தமிழ்நாடாக மாறியுள்ளது.தேசிய நெடுஞ்சாலை வசதிகளின் உபயத்தால் பயன்படாமல் கிடந்த நிலங்களின் விலைகளும் தாறுமாறாக ஏறியுள்ளது. விற்பவர்களைவிட இடைத்தரகர்கள் கடந்த சில வருடங்களில் கோடீஸ்வரர்களாக மாறியுள்ளனர். 

கர்நாடகாவில் மழை பெய்து உபரி நீராக அவர்களுக்குத் தேவையற்றதாக மாறும் போது மட்டும் திருச்சி பகுதிகளில் பல இடங்களில் தண்ணீரைப் பார்க்க முடிகின்றது. குளித்தலை பகுதிகளில் வாங்கும் வாழைப்பழத்தின் அளவு மிக மிகச் சிறியதாக மாறியுள்ளது. 

பயணித்த பாதையில் சாலையின் இருபுறத்திலும் பல இடங்களில் கட்டப்பட்டுள்ள தனியார் பொறியியல், தொழில் நுட்பக்கல்லூரிகள், மேல்நிலைப் பள்ளிக்கூடங்களின் எண்ணிக்கைகள் அதிகமாக இருந்தாலும் கடந்த சில வருடங்களில் கூட்டம் சேராத காரணத்தால் பணிபுரியும் ஆசிரியர்களை "ஆள்பிடிக்கும்" வேலைக்குப் பள்ளி நிர்வாகத்தின் மூலம் கட்டாயப்படுத்தப்படுகின்றார்கள். 
"நூறு நாள் வேலைத்திட்டம்" சமூகத்தில் வேறொரு புதிய தாக்கத்தை உருவாக்கியுள்ளது.கிராமத்தில் வசதியுள்ளவர்களை தடுமாற வைத்துள்ளது. அதிக நிலம் வைத்திருப்பவர்களுக்கு ஆள் கிடைக்காமல் தடுமாறுகின்றார்கள். பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய குறிப்பாகத் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இந்தத் திட்டம் மிகப் பெரிய வரப்பிரசாதமாக உள்ளது. கையில் காசு புழங்கியதும் அவர்களின் சிந்தனைகளும் மாறியுள்ளது. தங்களுக்கான உரிமைகள் முதல் உணர்வுகள் வரைக்குமுண்டான அத்தனை விசயங்களிலும் கவனம் செலுத்தி பேசத் தொடங்கியுள்ளனர். ஆதிக்கம் செலுத்தி வந்தவர்கள் விழி பிதுங்கி நிற்கின்றார்கள். 

தற்பொழுது உணவு, உடை இரண்டுக்கும் எவரும் கஷ்டப்படவில்லை. உறைவிடம் என்பதற்கு மட்டுமே "தங்களுக்கென்று ஒரு வீடு" என்ற கனவில் பலரும் இருக்கின்றார்கள். பஞ்சம் என்ற வார்த்தையின் தன்மை அறியாத புதிய தலைமுறைகள் வளர்ந்து கொண்டிருக்கின்றார்கள். வெகு விரைவில் தண்ணீர்ப் பஞ்சம் மட்டுமே பல புதிய திருப்பங்களை இங்கே உருவாக்கக்கூடும். 

"கூடி வாழ்ந்தால் கோடி நன்மை" என்ற பழமொழி பழங்கதையாகி விட்டது. தனித்த சிந்தனைகளில் ஒவ்வொருவரும் கவனம் செலுத்துகின்றார். தொழில் நுட்ப வசதிகளும், அலைபேசி, தொலைக்காட்சி வசதிகள் மிகப் பெரிய தாக்கத்தை மக்களிடம் உருவாக்கியுள்ளது. 
உறவுகளில் சிதைவு என்பது இயல்பான ஒன்றாக மாறியுள்ளது. மன அழுத்தமும், கவலைகளும் அதிகமானாலும் நுகர்வு கலாச்சாரத்தின் ஒரு அங்கத்தினராகவே ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்."தாங்கள் விரும்பியதை அடைய வேண்டும். அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம்" என்ற எண்ணம் மெதுமெதுவாக ஒவ்வொருவரின் மனதிலும் உருவாகிக் கொண்டிருக்கின்றது. 

பணம் தவிர்த்து வேறு எதையும் பேசுவது யோசிப்பது தவறென்ற எண்ணம் நடுத்தரவர்க்கத்தின் தகுதியான குணமாக மாறியுள்ளது. விளம்பரங்கள் தான் ஒவ்வொரு சந்தையையும் தீர்மானிக்கின்றது. வாங்கும் பொருட்கள் தரமில்லையென்றாலும் அடுத்த விளம்பரத்தின் மூலம் வேறொரு பொருளின் மூலம் உருவாகும் நாட்டம் நட்டத்தை உருவாக்கினாலும் எவரும் அதனை யோசித்துப் பார்ப்பதில்லை. அதற்கான நேரமும் இல்லை. 
சிறிய நகர்ப்புற பகுதிகள், கிராமங்களில் வாழ்ந்து கொண்டிருப்பவர்களால் "எம்.ஜி.ஆர் மேலிருக்கும் பாசத்தைத் தங்களால் மாற்றிக் கொள்ள முடியவில்லை" என்கிறார்கள். இரட்டை இலை சின்னம் என்பது அவர்களின் ஆழ்மனதில் நீக்கமுடியாத இடத்தில் உள்ளது. ஆனால் "ஜெயலலிதா தகுதியானவர் இல்லை" என்பதில் மட்டும் தெளிவாக இருந்தாலும் சின்னத்தின் தாக்கத்தால் அவர்களால் மாற்றுக்கட்சி குறித்து யோசிக்க முடியவில்லை. 
அடித்தட்டு,கிராமப்புற மக்களிடம் இன்று வரையிலும் கலைஞரால் எந்த நல்ல அபிப்ராயத்தையும் உருவாக்க முடியவில்லை. 
உள்ளடங்கிய கிராமங்களில் இன்னமும் அரசியலை வெட்டி அரட்டைக்காக விவாதிக்கின்றார்கள். இன்றைய உண்மையான நிலவரங்கள் எவருக்கும் தெரியவில்லை. தொலைக்காட்சி என்றால் சினிமாவுக்கு மட்டும் தான். 
சற்று விபரம் தெரிந்தவர்களும் அரசியல் குறித்துத் தங்களுக்கென்று ஒரு தனிப்பட்ட அபிப்ராயங்கள் வைத்துள்ளார்களே தவிர அரசின் ஊழல் குறித்தோ, அதிகப்படியான விபரங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் துளிகூட இல்லை. 
விலைவாசி உயர்வை கவலைப்பட்டு ஒவ்வொருவரும் பேசுகின்றார்கள். அதற்குப் பின்னால் உள்ள உண்மையான காரணங்கள் குறித்துக் கேட்டால் சொல்லத் தெரியவில்லை. 
மேலே என்றால் காங்கிரஸ் தான் என்ற எண்ணத்தை மாற்றிக் கொள்ளத் தயாராக இல்லை. ஆனால்  பீ சிதம்பரத்தைப் பற்றிப் பேசினால் கெட்ட வார்த்தைகளில் திட்டுகின்றார்கள். 
நரேந்திர மோடி குறித்து முழுமையாக கிராமம் அளவுக்கு வந்து சேரவில்லை. அரசியல்வாதிகளை எவரும் நம்பத் தயாராக இல்லை. ஆனால் நமக்கேன் வம்பு? என்று ஒதுங்கிப் போய்விடவே விரும்புகின்றார்கள். 

விதி என்பதை ஆழமாய் நம்புகின்றார்கள். அது தான் இன்றைய வாழ்க்கை என்பதை உணர்ந்து வைத்துள்ளார்கள். ஒவ்வொருவரின் மனதில் இறைபக்தி மாற்ற முடியாத இடத்தில் உள்ளது. அதை விட தான் சார்ந்துள்ள சாதிப்பற்று அதிகமாகவே உள்ளது. 
தாங்கள் எதிரே பார்க்கும் மிகப் பெரிய வித்தியாசங்கள் எவர் மனதில் எந்த மாறுதல்களையும் உருவாக்குவதில்லை. "தன் விதி தன்னை இப்படி வாழ வைக்கின்றது" என்ற கொள்கையே பணக்காரர்கள் மேலும் தவறான வழிகளில் செல்வம் சேர்க்கத் தூண்டுகின்றது. ஏழைகளை மேலும் மேலும் ஏழையாக மாற்றிக் கொண்டேயிருக்கின்றது. 
புதுக்கோட்டை ராஜவீதியில் காலையில் ஐந்து மணிக்கு ஒரு பெரிய டீக்கடையில் டீ குடித்து விட்டு அடுத்த ஒரு மணிநேரமும் அங்கு வருபவர்களை (ஏறக்குறைய 100 பேர்கள்) கவனித்தேன். அந்த ஒரு மணி நேரத்தில் அங்கிருந்த தினந்தந்தியை பார்க்கின்றார்கள். கவனிக்கவும் படிக்கின்றார்கள் அல்ல. குறிப்பிட்ட சிலர் படிக்கும் முக்கியமான விசயமாகத் துணுக்குச் செய்திகளும், சினிமா விளம்பரங்கள் மட்டுமே உள்ளது. அதையும் முழுமையாகப் படிப்பதில்லை. அப்படியே மடித்துக் கூட வைக்காமல் குப்பை போல அருகே போட்டு விட்டு சென்று கொண்டேயிருக்கின்றார்கள். இன்று வரையிலும் தெளிவான உண்மையான வாசிப்பு அனுபவம் இல்லாத தமிழ்நாட்டில் இன்னும் எத்தனை வருடங்கள் ஆனாலும் ஒவ்வொருவரும் எதிர்பார்க்கும் மாற்று அரசியல், மாற்றுச் சிந்தனைகள் வெறும் கானல் நீரே.
என் பார்வையில் சிவகங்ககை, புதுக்கோட்டை என்ற இரண்டு மாவட்டங்களில் நான் பள்ளிக்கூடத்தில் படித்த போது மக்கள் எப்படி இருந்தார்களோ இன்றும் சிந்தனையளவில் இருக்கின்றார்கள். கட்டிடங்கள், ஆட்கள், வண்டிகள், வாகனங்கள் என்று பல வகையில் ஒவ்வொரு பகுதியும் மாற்றம் அடைந்துள்ளது. மக்களின் ஆசைகளும் விருப்பங்களும் மாறியுள்ளது. மக்களின் வாழ்க்கை தரம் என்ற பெயரில் அவரவர் கட்டியுள்ள வீடுகளும், தாங்கள் வைத்துள்ள பொருளாதார வளர்ச்சியைக் கொண்டு அளவுகோலாகக் கொண்டு தங்களை வெற்றி பெற்ற மனிதராக முன்னிறுத்துகின்றார்கள். 
பொதுச் சுகாதாரம் என்ற வார்த்தையும், பொது இடங்களில் கடைபிடிக்க வேண்டிய ஒழுங்கு முறைகளும் தமிழ்நாட்டு மக்கள் கற்றுக் கொள்ள இன்னும் கால் நூற்றாண்டு காலம் ஆகலாம். வருகின்ற தலைமுறைகள் மூலம் இந்த மாற்றத்தின் தொடக்கம் இருக்கும் என்றே நம்புகின்றேன். 
"வாழ்வில் உயர மதிப்பெண்கள் மட்டுமே மிக முக்கியம்" என்ற கொள்கையினால் பாடப்புத்தகத்திற்கு அப்பாலும் ஒரு உலகம் உள்ளது என்பதையோ, மற்றப் புத்தகங்கள் மூலம் தங்களை வளர்த்துக் கொள்ள முடியும் என்ற எண்ணமோ எவர் மனதிலும் இல்லை. அப்படியே ஆசைப்படும் மாணவர்களை ஊக்குவிக்க எவரும் தயாராக இல்லை. எதிர்காலப் பயமே இங்கே ஒவ்வொருவரையும் படாய் படுத்திக் கொண்டிருக்கின்றது. 
ஒவ்வொரு தனியார் மருத்துவமனைகளிலும் கூட்டம் நிரம்பி வழிகின்றது. இதைப் போலப் பல மடங்கு அரசு மருத்துவமனைகளில் கூட்டம் உள்ளது. ஆனாலும் பலரும் சுகாதரமற்ற சூழ்நிலையில் வாழ்ந்தாலும் ஆரோக்கியமாகத்தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். தன்னைப் பற்றி உணராமலும், தன்னைச் சுற்றிலும் உள்ள சமூகத்தைப் பற்றி உணர வாய்ப்பில்லாமல் இருப்பதால் எந்தக் கவலைகளும் பெரிதாக அவர்களைத் தாக்குவதில்லை. கவலைகள் இல்லாத மனம் இயல்பான ஆரோக்கியத்தை அவர்களுக்கு வழங்குவதால் இருப்பதை வைத்து சிறப்புடன் வாழ கற்றுக் கொண்டிருக்கின்றார்கள். 
மாறிக் கொண்டே வரும் தொழில்நுட்பங்கள் தமிழ்நாட்டு மக்களிடம் சென்று சேர்ந்துள்ளது. ஆனால் அது சினிமா என்ற வடிவமாகத்தான் எடுத்துக் கொள்கின்றார்கள். சிந்திக்கவே பயப்படும் சமூகத்திலிருந்து நாம் உடனடி மாறுதல்களை எதிர்பார்ப்பது தவறு. 
ஒவ்வொரு குடும்பத்தில் உள்ள அறுபது வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தொலைக்காட்சியில் வருகின்ற நெடுந்தொடர்கள் உண்மையான சேவையை புரிந்து கொண்டிருக்கின்றது.  அவர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர்.  பேரன், பேத்திகளுடன் சண்டை போட்டுக் கொண்டே தாங்கள் விரும்பும் சேனல்களை மகன், மருமகள் உதவியுடன் பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள்.
தமிழகத்தில் மற்ற மாநிலங்களைப் போல சிந்தனை ரீதியான மாற்றம் நிச்சயம் வரும். தங்களால் இனி இங்கு வாழவே முடியாது என்கிற சூழ்நிலை வரும் போது மட்டுமே. அப்போது முதலில் பாதிக்கப்படப் போகும் சமூகம் நடுத்தரவர்க்கமே.

உங்கள் கவனத்திற்கு




வரும் வாரத்தில் நான் வலைபதிவில் எழுதிய ஈழம் சார்ந்த கட்டுரைகள் மின் நூலாக வெளிவரப்போகின்றது.  ஈழம் - வந்தார்கள் வென்றார்கள்.

இது குறித்து விபரங்கள் வரும் பதிவில் வெளியிடுகின்றேன்.

உங்களுக்கும் அது போன்ற எண்ணம் இருந்தால் இந்த இரண்டு தளங்களையும் பார்வையிடுங்கள். வரப் போகும் 2014 ஆம் ஆண்டு உங்களின் படைப்புகள் மின் நூலாக மாற்றம் பெற்ற ஆண்டாக இருக்கட்டுமே?