Thursday, December 29, 2011

தினந்தோறும் மலரும் பூக்கள் 2011கடந்து போன வாழ்க்கையில் சென்னையில் ஒரு நள்ளிரவு மட்டும் இந்த ஆங்கில புத்தாண்டு வரவேற்பை மெரினா கடற்கரை கூட்டத்தில் கரைந்து போய் ரசித்தேன். ஆராவாரமும், ஆர்ப்பட்டமும் அள்ளித் தெளித்த கோலமாய் கடற்கரை மணலில் வரவேற்ற தலைகளின் எண்ணிக்கை கணக்கில் அடங்கா. 

அந்த கூட்டம் இன்று வரை கண்களுக்குள் நிற்கிறது. கடல் அலையில் கால் நனைத்து மச்சினன் கைபிடித்து வாழ்க்கையை தேடிக் கொண்டிருந்த போது அந்த இரவு இனம் புரியா மகிழ்ச்சியைத் தந்தது.  வாழ்க்கை நகர்ந்தது,

இயல்பான வாழ்க்கையின் சூத்திரங்களின் சூட்சமங்களை கற்றுக் கொள்ளத் தெரியாத வாழ்க்கை திருப்பூருக்கு நகர்த்தியது. 

வாழ்க்கை அதன் உண்மையான அர்த்தங்களை அறிமுகம் செய்ய ஆரவாரங்கள் பின்னுக்குச் சென்று அலையில்லா கடல் போல அமைதியும் வந்தது. ஒவ்வொரு வருடத்தின் கடைசி இரவும் வந்தபடியே தான் இருக்கின்றது.. அதற்கு பிறகு வந்த ஒவ்வொரு வருடமும் ஆழ்ந்த உறக்கத்தின் ஆழத்தை காட்டிக் கொண்டிருக்கும். விடிந்து பார்க்க நேற்றைய பொழுதுகள் மறந்து இன்றைய தேவைகளுக்காக மனம் ஓடத் தொடங்கி விடுகின்றது..
எந்த வருடத்தின் தொடக்கத்திலும் நான் எந்த சபதங்களையும் எடுப்பதில்லை.
காரணம் அதுவொரு சடங்காகத்தான் முடியும்.  மீனவனின் வாழ்க்கைக்கும் வெளிநாட்டு வர்த்தகத்திற்கும் பெரிதான வித்யாசங்கள் இல்லை. அங்கே தண்ணீர். இங்கே கண்ணீர்.

அங்கே எல்லைப் பிரச்சனை.  இங்கே அரசாங்கத்தின் கொள்கை பிரச்சனை.

ஆனால் இணையம் என்ற இந்த உலகம் அறிமுகமானதும் என்னுடைய வாழ்க்கை பலவிதங்களிலும் மாறியுள்ளது என்பதை ஒவ்வொரு கணமும் யோசித்து பார்த்துக் கொள்வதுண்டு. 

ஏன் எழுத வந்தோம்? என்பதும் எதற்காக எழுதிக் கொண்டிருக்கிறாய்? என்ற கேள்வியும் சக்களத்தி சண்டையாய் நடந்து கொண்டே தான் இருக்கிறது.

நள்ளிரவு தாமதமாக வந்தாலும் தூங்கிக் கொண்டிருக்கும் குழந்தைகளின் உருவங்களை விளக்கு போட்டு ரசிக்கும் போது மனதில் வார்த்தைகளாக வந்து மோதும். அப்பா ஏன் இன்னும் வரவில்லை? என்ற கேள்வியை கேட்டவளுக்கு அடுத்தவள் பதில் சொல்ல அவர்களின் இரவு உறக்கத்தின் தொடக்க சண்டைகள் தொடங்கும். 

வீட்டுக்குள் நுழைந்ததும், என்ன நடந்தது? என்று கேட்க எப்போதும் போல மனைவியின் விவரிப்பில் சிறிது புன்னகை என்னுள் எட்டிப் பார்க்கும். ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக் கொண்டு பெற்ற பொம்மைகள் தள்ளிக்கிடக்க கோட்டோவியமாய் வினோத வடிவில் சுருக்கிக் கொண்டு படுத்துறங்கும் அவர்களின் தூக்கத்தை பார்த்து மனதில் வார்த்தைகள் வந்து வந்து போகும். 

இந்த தலையணை தான் வேண்டும் என்று போராடிப் பெற்ற போராட்டங்கள் அர்த்தமில்லாமல் ஏதோவொரு மூலையில் கிடக்கும். அவர்களின் தலையைச் சுற்றிய போர்வைகள் மூச்சு முட்டுமே என்று நகர்த்த முற்படும் போது அவர்களின் அனிச்சை செயல்கள் நமக்கு ஆச்சரியத்தை வரவழைக்கும். 

அதுவே எழுதத் தூண்டும் காரணியாகவும் பல சமயம் அமைந்து விடும். 

பலசமயம் அதிகாலை விழிப்பு அவஸ்த்தையாய் வந்து விடும். காரணம் அருகில் படுத்தவள் புரண்டு வந்து நெஞ்சுக்குள் புதைந்து விட திரும்ப முடியாத உடம்பில் கோழிக்குஞ்சு சுகத்தை ரசித்துக் கொண்டே எழுந்து விடுவதுண்டு. 

பல சமயம் அலுப்பாக இருக்கும். அவர்களின் கலைந்த ஆடைகளை கவனித்து போர்வையை போர்த்தி விட்டு வெளியே வந்து கதவு திறந்தால் குளிர் காற்று வரவேற்கும். கூடவே பக்கத்து வீட்டு பஜனை சப்தம் காதில் வந்து மோதும். அடிவாங்கி திரும்பி வந்துகொண்டிருக்கும் தமிழர்களைப் பற்றி கவலைப்படாமல் ஐயப்பனை காண வாருங்கள் என்று பாடிக் கொண்டிருப்பவர் இப்போது எங்கே இருப்பார் என்று யோசிக்க வார்த்தைகள் வந்து வந்து மோதும்.
விடியாத பொழுதில் சாலையில் ஆள் அரவமிருக்காது.  பகலில் பணம் துரத்தச் செல்லும் பறவைகள் இப்போது பாதுகாப்பான வீட்டுக்குள் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும். 

நடமாட்டம் இல்லாத சந்தும், ஆய்த்தப்பணியில் இருக்கும் பறவைகளும் ஏதேதோ கவிதை சொல்லும். புலராத பொழுதுகள் புதிதாய் தெரியும். காணும் காட்சிகளை வார்த்தைகளாக கோர்ப்பதற்குள் பக்கத்து வீட்டு மனிதன் எப்போதும் போல தனது பயணத்தை தொடங்குவார். டாஸ்மாக் கடையை நோக்கி செல்லும் பயணம் அது. 

அவரின் பயணத்தை பார்த்துக் கொண்டே மதுவால் அழிந்தவர்களின் பலரின் வாழ்க்கை நினைவில் வந்து தாக்கும். அழிந்து போன பல கோடி வர்த்தக ஜாம்பவான்களின் கதைகளை நினைக்கச் சொல்லும்.  பள்ளிக்குச் செல்லாமல் பாரம் சுமக்கும் அவரின் மூத்த மகன் முகம் மனதில் வந்து மோதும். . 

உருவமாய், உணர்வாய் கோர்க்க முடியாத எழுத்துக்கள் உள்ளே ஓடிக் கொண்டேயிருக்கும்.   அதிகாலையில் மடிக் கணினி உயிர் பெற உள்ளூரைப் பார்த்த மனம் உலகத்திற்கு தாவும்.  மூகமூடிகளும் மூச்சு முட்டும் விவாதங்களுமாக இணையப் பெருவழியில் படம் காட்டிக் கொண்டு இருப்பவர்களையும் பலசமயம் மனம் இனம் கண்டு கொள்ளும்.

ஏதோவொன்றை தேட, என்ன நடக்கிறது என்பதை அறிய உதவும் இந்த இணைய மேய்ச்சல் எனக்கு ஏராளமான ஆச்சரியத்தை விதைத்துக் கொண்டேயிருக்கிறது. 

எத்தனை மனிதர்கள்? எத்தனை நிறங்கள்? 

பாசாங்கு, படப்டப்பு, வன்முறை, எரிச்சல், ஏமாற்றம், குரோதம், பொதுப்புத்தி என்று துப்பிய எழுத்துக்களை பார்க்க படிக்க அங்கங்கே பயரேகைகளும் உள்ளங்கையில் இருக்கும் ரேகை போலவே படிந்துவிடுகின்றது.  விவாதங்கள் வீபரீதமாகி தனிப்பட்ட நபர்களின் வினோத உருவங்களை உள்வாங்கிக் கொண்டேயிருக்கும். படிக்கும் வார்த்தைகள் நம் மனதின் வலிமையை உணர வைத்துக் கொண்டேயிருக்கிறது.

பால்காரரின் சப்தம் மனைவியின் அன்றாட கடமையை தொடங்கி வைக்கும்.  தேநீரை உறிஞ்சிக் கொண்டே உள்வாங்கும் செய்தித்தாள்களின் சார்புத்தனமான கட்டுரைகள், செய்திகளைப் பார்த்து சலிப்பைத்தந்தாலும் குழந்தைகளின் முழிப்பு கதையில் அடுத்த அத்தியாயம் போல மாறத் தொடங்கும்.  அவர்களின் அவசர ஓட்டத்தின் என் சிந்தனைகள் மாறி அவர்களுடன் நாங்களும் ஓடத் துவங்குகின்றோம். .

அவர்களின் அவசர ஓட்டங்கள் ஒவ்வொன்று ஒவ்வொரு புதுக்கவிதையை தந்து கொண்டு இருக்கும்.  நான் முந்தி, நீ முந்தி என்று குளியறையில் நடக்கும் கூத்தில் உலகத்தில் நாம் ஓட வேண்டிய அவசரத்தை அவர்களின் அவசரம் நமக்கு உணர்த்திக் கொண்டேயிருக்கும். இறுதியில் டார்வின் சொன்ன வலிமையானவர் குளித்துக் கொண்டிருக்க பக்கவாட்டில் அழுகை சத்தம் ஓங்காரமாய் ஒலிக்கும்.

வளர்ந்து கொண்டே இருக்கின்றோம் என்று உணர்த்தும் அவர்களின் துடுக்குத்தன பேச்சுகளில் உள்ளம் மகிழ்ந்தாலும் ஒரு மூலைக்குள் பேசியே நாட்டை ஆள வந்தவர்களின் தற்போதையை வாழ்க்கை நினைவலையில் நீந்தும். 

குளிக்க ஒரு போராட்டம், துவட்ட ஒரு போராட்டம் என்று அடுத்தடுத்து கதைக்களம் மாறிக் கொண்டேயிருக்கும். நடக்கும் பஞசாயத்தில் நான் தான் பலமுறை வாய் பேசதாக மன்மோகனாய் இருக்க வேண்டியதாக உள்ளது. அர்த்தப்பார்வையோடு எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டேயிருப்பேன்.

கவனிக்கும் எல்லாவற்றையும் ஒரு கணக்கில் வைத்துக் கொள்ள வேண்டியதாக இருக்கிறது.  அவசரத்தில் அவர்கள் மாற்றிப் போட்ட ஜட்டிகளின் வினோத வடிவம் வீட்டில் சிரிப்பலையை பரப்புகின்றது. . 

பவுடர் பூச்சு அதிகம் பெற்ற அவர்களின் முகத்தின் வழியே நான் பார்த்த பழைய நாடக அவதாரங்கள் வந்து போகும். பள்ளிக்கருகே வீடென்பதால் இவர்களுக்கு இப்போதெல்லாம் படிப்பதற்கு நேரம் கிடைக்கிறது. ஆனால் படிப்பதை விட்டு பலதையும் பேச சந்தைக்கடை போல உள்ளூர் முதல் உலகம் வரை மிதிபட்டு நசுங்குகின்றது.  

மடிக்கணினியில் இருக்கும் என் பார்வையும், அவர்களின் பேச்சுக்களை நோக்கியிருக்கும் என் காதுகளும் ஒரு கலவையான காலத்தை சுமந்து கொண்டு முன்னும் பின்னும் அலைந்து கொண்டேயிருக்கிறது. நான் செய்து கொண்டிருக்கும் வேலைகள் செக்கு மாட்டுத்தனமாய் மாறிவிடுகின்றது.  

அடங்க மாட்டீங்களா? என்ற சப்தம் சமயலறையில் இருந்து வரும்.  அடங்கி விட்டார்களோ? என்று ஆச்சரியமாய் பார்த்தால் அடுத்து அணுகுண்டாய் மாற்றி அவஸ்த்தையை உருவாக்குவார்கள்..

மாட்டிய சீரூடையில் மாறிப் போன ஷுக்களின் எண்கள் புதுக்கவிதை சொல்லும். கால் ஒரு பக்கம் ஷு ஒரு பக்கம் என்று கோணி நிற்க மூவரின் வாய்களும் சிரித்து நிற்க அவசரத்தில் நிற்கும் மனைவியின் வாயில் வார்த்தைகள் வசைமாறி பொழியத் தொடங்கும். குட்டிகள் உருவாக்கிய குட்டிப் பஞ்சாயத்தில் மீண்டும் நிறுத்தப்படுவேன். கத்திப்பார்த்த மனைவியின் சொல் காற்றில் பறக்க பல சமயம் மாட்டிக் கொண்டிருக்கும் ஷுக்களும் பறக்கத் தொடங்கும்.  

அலுத்துப் போனாலும் மனதில் வார்த்தைகளாக கோர்த்துக் கொண்டேயிருக்கின்றேன்.  ஆழ்மன அழுத்தங்கள் அகன்று விடுகின்றது.  குதுகலமாய் அவர்களின் கொண்டாட்டங்களில் .பங்கெடுத்து அதிகாலையில் பள்ளி நோக்கிய பயணம் தினந்தோறும் தொடங்குகின்றது.


அவர்களின் பயணங்கள் எனக்கு வாழ வேண்டிய அவசிய நம்பிக்கைகளையும் விதைத்தபடியே இருக்கிறது. தெரு முனையில் கொக்குபூ மரம். தொடர்ந்த வீடுகளில் மஞசள் பூக்கள் என்று சாலையில் ஏராளமாய் இறைந்து கிடக்க இவர்களின் இரைச்சல் சப்தத்தில் வழியெங்கும் மலர்வனத்தில் மூன்று பூக்களுடன் நடந்து கொண்டே இருக்கின்றேன்.  

நம்பிக்கை செடிகளை வளர்ப்பதும் முக்கியம். 

உரமிடுவது அதைவிட அவசியம். .

கவனிக்க பழகுங்கள். அவற்றை எழுதாக்க முயற்சித்துப் பாருங்கள். 

அவரவர் வளர்த்துக் கொண்டிருக்கும் நம்பிக்கைகள் நாளைய சரித்திரத்தை உருவாகக்கூடும்.
                           
                                                   +++++++++++++++++++++++++                            


அரசியல் பதிவுகளுக்கிடையே தமிழ்மண நட்சத்திர வாரத்தில் புதிய நடையில் எழுதிய ஆசைமரம் என்ற தலைப்பு அதிசயமாய் பக்கவாட்டில் மேலேறி வந்துள்ளது.

அதைப் போன்ற மற்றொரு தலைப்பு எழுத முடியுமா என்று முயற்சித்த தலைப்பு இது.

2011 வருடத்தின் இரண்டாவது நாள் எழுதிய பதிவு. தமிழ்மணம் 100 பதிவுகள் படுத்துக் கொண்டே ஜெயித்தவர். சர்ச்சையான பின்னூட்டங்கள்.


தொடரும் நண்பர்கள் அணைவருக்கும் எங்கள் இல்லத்தின் நன்றி.

28 comments:

 1. வணக்கம் ஜோதிஜி,
  கட்டுரையை மிகவும் ரசித்துப் படித்தேன். பலரது பதிவுகளை மேம்போக்காக வாசித்துவிட்டுச் செல்வதுண்டு. உங்கள் எழுத்துகள் என்னைக் கட்டிப்போட்டுவிட்டன. மழலையரின் மகிழ்வான தருணங்களை மனம் உங்கள் எழுத்துக்களோடு சேர்த்து அசைபோடத் தொடங்கிவிட்டது.

  ReplyDelete
 2. ரிஷி has left a new comment on your post "தினந்தோறும் மலரும் பூக்கள் 2011":

  வணக்கம் ஜோதிஜி,
  கட்டுரையை மிகவும் ரசித்துப் படித்தேன். பலரது பதிவுகளை மேம்போக்காக வாசித்துவிட்டுச் செல்வதுண்டு. உங்கள் எழுத்துகள் என்னைக் கட்டிப்போட்டுவிட்டன. மழலையரின் மகிழ்வான தருணங்களை மனம் உங்கள் எழுத்துக்களோடு சேர்த்து அசைபோடத் தொடங்கிவிட்டது.

  ReplyDelete
 3. ரிஷி

  உங்கள் பின்னூட்டம் ஏன் வெளிவரவில்லை என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் மின் அஞ்சலில் வருகின்றது. வவ்வாலும் இந்த பிரச்சனையைச் சொல்லியிருக்கின்றார். என்ன குழப்பம் என்று தெரியவில்லை. நன்றி ரிஷி. நான் நினைத்தபடி மனதை தொட்டுள்ளது.

  ReplyDelete
 4. நீங்கள் எழுதிய வாழ்க்கையை சற்று வாழ்ந்து பார்க்க முடிந்தது.அழகான வரிகளும் அர்த்தங்களும்...

  ReplyDelete
 5. அன்பின் ஜோதிஜி வழமைப்போலவே தங்களி்ன் எழுத்து ...வாழ்த்துகள்.

  ReplyDelete
 6. அனுபவங்களை எழுத்துக்களில் கோர்க்கும் போது ஒருவித ஈர்ப்பு ஏற்படும். நீங்களும் ஈர்த்துவிட்டடீர்கள். வாழ்த்துகள்.

  ReplyDelete
 7. அருமையான பதிவு.
  In this Blog you are in a 'relaxed mood' - not in serious mood. எனக்கு மிக்க மகிழ்ச்சி.
  எங்களது இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

  ReplyDelete
 8. இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

  ReplyDelete
 9. //கேட்பது தவறு. கொடுப்பது சிறப்பு.//

  பின்னூட்ட பெட்டிக்கு தலைப்பு இப்படி வெச்சிட்டீங்க.

  ஆனால் வந்து வாசிப்பவர்களுக்கு உங்கள் ‘அனுபவ’ பகிர்வை நீங்க தானே கொடுத்து அனுப்பறீங்க.

  வெறுங்கையோட வரும் நான் என்னத்த சிறப்பா கொடுக்கறது, சொல்லுங்க?

  வாழ்வை ரசிக்கக் கற்றுக்கொள்ளனும்.

  ReplyDelete
 10. புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
  எனது ப்ளாக்கில்:
  பாட்டைக் கேளுங்க பரிசு வெல்லுங்க
  புத்தாண்டு பரிசு ஒரு வாரம் கோவாவில் குடும்பத்தோடு தாங்கும் வாய்ப்பு
  A2ZTV ASIA விடம் இருந்து.

  ReplyDelete
 11. ஜீ....குட்டீஸ் அட்டகாசம் தாங்கமுடியாம பதிவாவே போட்டீங்களா.சந்தோஷம்.உங்களுக்கும் தேவியர்களுக்கும் என் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்.2012 அமதியாக சந்தோஷமாய் வந்தால் எல்லோருக்குமே நல்லது !

  ReplyDelete
 12. தங்களின் புத்தாண்டு வாழ்த்துச் செய்திக்கு நன்றி!

  புத்தாண்டு வாழ்த்துகளுடன்,
  ஊரான்

  ReplyDelete
 13. ஜோதிஜி,
  தேவியர் என்றால் உங்கள் குழந்தைகளைக் குறிக்கிறதா? எதுக்கு வீட்டுப் பேரெல்லாம் ப்ளாக் நேமா வச்சிருக்காரு இவர்னு நினைப்பேன். ஹேமாவின் பின்னூட்டம் பார்த்த பிறகுதான் கேட்கத் தோன்றியது. குழந்தைகளின் பெயர்களைத் தெரிந்து கொள்ளலாமா?
  அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

  ReplyDelete
 14. த்தாண்டு சிறப்புப் பதிவு அருமை
  அழகாக மனம் வருடிப் போனது
  பகிர்வுக்கு நன்றி
  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
  இனிய மனம் கனிந்த நல் வாழ்த்துக்கள்
  த.ம 7

  ReplyDelete
 15. அன்பு ஜோதி ஜி, உங்கள் அன்பு மனைவிக்கும் குழந்தைகளுக்கும் உங்களுக்கும்
  எங்கள் அன்பு புத்தாண்டு வாழ்த்துகள். என்றும் உங்கள் எழுத்து செழிக்க வாழ்க்கை செழிக்க எங்கலள் நினைவுகள் உங்களுடன் இருக்கும்.

  ReplyDelete
 16. கவிதை வரிகள்..வாழ்க்கையில் பிடிப்பு ஏற்படுத்தும் கவிதை.

  ReplyDelete
 17. வருக தாராபுரத்தான். நீண்ட நாளைக்குப் பிறகு. நலமா?

  வாங்க வல்லிசிம்ஹன். நன்றி.

  வருக ரமணி.

  நன்ற ரிஷி குழந்தைகளின் பெயர்களின் இறுதியில் தேவி என்று முடியும். இது போதுமா?

  வாழ்த்துகள் ஊரான். உங்கள் டெப்ளேட்டை மாற்ற முடியுமா என்று பாருங்க. தரவிறக்கம் நேரமாகின்றது.

  ஹேமா புத்தாண்டு கொண்டாட்டங்கள் எப்பூடி?

  நன்றி சார்வாகன், ரத்னவேல், சத்ரியன், தவறு, நண்டு

  சுந்தரபாண்டியன் நல்ல விமர்சனம்.

  ReplyDelete
 18. அனுபவிங்க ராசா... these moments will be gone in a fleeting snap in front of our time scale. பின்பு ஒரு முறை உட்கார்ந்து அசை போடும் நிகழ்வாக மாறிப்போய் விடும்.

  Enjoyed reading!

  ReplyDelete
 19. எல்லா தருணங்களையும் மிக நேர்த்தியாய் கடக்கின்றீர்கள். உங்களின் வாழ்வியல் நகர்வு மிக நேர்த்தி மற்றும் யதார்த்தம்.

  ReplyDelete
 20. இணையம் என்ற இந்த உலகம் அறிமுகமானதும் என்னுடைய வாழ்க்கை பலவிதங்களிலும் மாறியுள்ளது என்பதை ஒவ்வொரு கணமும் யோசித்து பார்த்துக் கொள்வதுண்டு.


  நுணுக்கமான கவனிப்புத்திறனுக்கு சான்று பகரும் அருமையான பகிர்வு.. பாராட்டுக்கள்..

  ReplyDelete
 21. வாழ்க்கையை சொட்டு சொட்டாக அனுபவிக்கிறீர்கள்.. புத்தாண்டு வாழ்த்துக்கள். தொடருங்கள் உங்கள் அனுபவிப்பை..

  ReplyDelete
 22. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...மறுபடி சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததில் சந்தோசம்..
  வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 23. வணக்கம்.... தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 24. இந்த தளத்தை எப்படி கவனிக்காமல் விட்டேன் என்று தெரியவில்லை- இரண்டு வருடங்கள் வாசகனாக இருந்த நாள் முதல்.

  முதல் பதிவிலிருந்து படித்துவிட்டு வருகிறேன்.

  ReplyDelete
 25. விருது பெற எனது பதிவிற்கு வாருங்கள் ஜோதிஜி.

  ReplyDelete
 26. வணக்கம்
  ஜோதிஜி

  உங்களின் வலைப்பக்கம் சென்று பார்த வேளையில் நல்ல எழுத்து எல்லா வரிகளுக்கும் நீங்கள் புத்துயிர் ஊட்டி எழுதியுள்ளீர்கள் அருமையான படைப்பு வாழ்த்துக்கள் உங்கள் வலைப்பக்கம் வருவது இதுதான் முதல்தடவை,


  இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்,

  -நன்றி-
  -அன்புடன்-

  ReplyDelete

கேட்பது தவறு. கொடுப்பது சிறப்பு.