Monday, December 30, 2013

உங்களுக்கு (ஒருவேளை) இது உதவக்கூடும்

இந்த வருடத்தின் கடைசிப் பதிவு. ஊர்ப்பக்கம் உள்ள வாழை இலை சாப்பாடு போல நிறையச் சமாச்சாரங்கள். ஏற்கனவே சொல்லியுள்ளபடி இடைவேளை விட வேண்டியதன் காரணமாகவும், இதை இரண்டு பதிவாக எழுதினால் படித்து முடியும் போது உருவாக வேண்டிய எண்ணங்கள் மாறிவிடக்கூடும் என்பதாலும் மெகா பதிவு. அவசரமாக உள்ளே வந்தவர்கள் மட்டும் அமைதியான சூழ்நிலையில் வருவீர்களாக. பிரிவோம் -சந்திப்போம்.

                                                                       o0o

நமக்குள் எப்போதும் ஒரு "பொதுப்புத்தி" வாழ்க்கை முழுக்க இருந்து கொண்டே தான் இருக்கின்றது. சில அனுபவங்களை நாம் சந்திக்கும் வரையிலும் இந்தப் பொதுப்புத்தி பார்வையைக் கொண்டே அனைத்து விசயங்களையும் நாம் பார்க்கின்றோம். அதன் வழியே சிந்திக்கின்றோம். 

அரசியல்வாதி என்றால்? மலையாளி என்றால்? பணக்காரன் என்றால்? நவநாகரிக உடைகள் அணிந்த பெண்கள் என்றால்? இரவில் ஒரு பெண் தனியாக நின்றால்? சினிமா நடிகை என்றால்? 

இந்தப் பட்டியல் நீளும் என்றாலும் இந்தப் பட்டியலில் தற்போது மென்பொருள் துறையில் பணியாற்றுபவர்கள் என்றால்? என்ற எண்ணம் என்னுள் இருந்த 'பொதுப்புத்தி' இந்த வருடம் கொஞ்சம் மாறியுள்ளது. 

இந்த வருடத்தில் நான் சந்தித்த, உரையாடிய சில நண்பர்கள் மூலம் இந்த மாற்றத்திற்கான விதையை என் மனதில் அவர்கள் ஊன்றியுள்ளனர். 

-0O0-

இந்த வருடத்தில் தாய்மொழி சார்ந்த மயக்கங்களும் அதன் எதார்த்த எதிர்கால மாற்றத்தையும், உருவாகப் போகும் சாத்தியக் கூறுகளையும் பலரும் புரியவைத்துள்ளனர். சுருக்கமாகச் சொல்லப்போனால் வரும் காலத்தில் வளர்ந்த தொழில் நுட்பத்தில் எது வேண்டுமானாலும் வாழும் வளரும். ஆனால் அதில் உள்ள சந்தைக்கான சாத்தியக்கூறுகளும், நிறுவனத்திற்கான லாபத்தைப் பொறுத்தே ஒவ்வொன்றும் மாறும். இல்லாவிட்டால் மறையும். 

இந்த வருடத்தின் கடைசி ஆறு மாதங்களில் தமிழ் கணினி சார்ந்த பலவற்றையும், அதன் தொழில் நுட்ப சவால்களையும், இருக்கும் வாய்ப்புகள், வேகமாக வளராமல் இருப்பதற்குப் பின்னால் உள்ள காரணங்களைப் புரிந்து கொள்ள முடிந்தது. மென்பொருள் துறையில் உருவாக்கும் நிறுவனம் செய்யும் கட்டுப்பாடுகளும் அதை எப்படிக் காசாக்குகின்றார்கள்?லாபமீட்டும் வித்தையைப் புரிந்து கொள்ள முடிந்தது. 

இதுவே தமிழ்மொழிக்காகத் தனியார் நிறுவனங்கள் மூலம் வெளியிடப்படும் மென்பொருள் அனைத்தும் ஏன் ஆங்கில மொழி போல அடுத்தக் கட்டத்திற்கு நகர்வதில்லை என்பதையும் அறிந்து கொள்ள முடிந்தது. ஒவ்வொன்றும் முதலீடு கணக்கில் பார்க்கப்பட்டு, எதிர்பார்த்த லாபம் கிடைத்த போதிலும், சிங்கப்பூர் போன்ற பல நாடுகளில் உள்ள மொழி ஆர்வமுள்ள தனியார் மற்றும் அரசு சார்ந்த நிதியளிப்பு கிடைத்தும் கூட நம்மவர்களின் அதீத விருப்பங்களை உணர்ந்து கொள்ள முடிந்தது. 

ஆனால் கடந்த காலக் கட்டத்தில் பலரால் இலவசமாக வழங்கப்பட்ட தமிழ்மொழி சார்ந்த மென்பொருட்களால் இன்று தமிழ் இணையத்தின வேகம் தேசிய நெடுஞ்சாலையில் பயணிக்கும் வேகத்தைப் போலவே உள்ளது. 

-0O0-

ஏற்கனவே நான் எழுதிய நண்பர் நீச்சல்காரன் குறித்த பதிவில் அவர் உருவாக்கிய நாவி மென்பொருள் குறித்தும், அவர் செய்து கொண்டிருக்கும் பணியைப் பற்றியும் எழுதியிருந்தேன். இந்த நாவியின் மேம்பட்ட அடுத்தப் பதிப்பு மிக விரைவில் வெளிவரப்போகின்றது என்பதை ஒரு உரையாடலில் அவர் தெரிவித்து உள்ளார். மேலும் தமிழ் கலைச்சொல் அகராதியில் உதவிக் கொண்டிருப்பவர்களைப் பற்றியும் விவரித்தார். 

தங்கள் சக்திக்கு முடிந்த தாங்கள் சார்ந்து இருக்கும் பணியோடு மொழி ஆர்வத்தோடு இங்கே பலரும் தங்களால் முடிந்த பங்களிப்பை இங்கே செய்து கொண்டே தான் இருக்கின்றார்கள். சிலர் நம் பார்வைக்குத் தெரிகின்றார்கள். பலர் இன்னும் சில வருடங்களில் நாம் அவற்றைப் பயன்படுத்தும் சமயங்களில் தெரியவரக்கூடும். 

-0O0-

பத்தாண்டுகளுக்கு முன்பு தமிழில் நூறு வலைபதிவுகளாக இருந்த போது எதிர்காலத் தமிழ் வலைபதிவுகள் தேசிய அளவில் முக்கியம் பெற்ற ஒரு கணினி மொழியாக மாறும் என்ற கற்பனைகள் எவரிடமாவது இருந்து இருக்குமா? இன்று தமிழ்மொழியில் நாம் பார்க்கும் எண்ணிக்கையில் அடக்க முடியாத வலைபதிவுகளும், தினந்தோறும் உருவாகிக் கொண்டேயிருக்கும் இணைய இதழ்களைப் பற்றியும் நினைத்துப் பார்த்து இருப்பார்களா? 

ஒரு சிறிய விதை. எவரோ குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கி தன்னால் முடிந்த பங்களிப்பை வழங்க இன்று வளர்ந்து ஆலமரமாகி உள்ளது. இன்னமும் வளரத்தான் போகின்றது.அங்கீகாரம் கிடைத்தாலும் கிடைக்காமல் இருந்தாலும் தங்களின் சுய ஆர்வத்தின் மூலம் தங்களின் கடமைகளைச் செய்து கொண்டு வருகின்றார்கள்.

-0O0-

சமீபத்தில் என் தொடர்பில் வந்த சீனிவாசன் என்ற இளைஞரும் இதைப் போன்றதொரு வேலையைச் செய்து கொண்டு வருகின்றார். மென்பொருள் துறையில் இருந்து கொண்டே, நாடு விட்டு நாடு பறந்து கொண்டே பணியாற்றும் சூழ்நிலையில் இந்தப் பணியைச் செய்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 

வலைபதிவுகளை, குறிப்பிடத்தக்க நிகழ்வுகளை, வலைபதிவில் எழுத முடியாத கட்டுரைகளை மின் நூலாக மாற்றி அதனை உலகத்தில் உள்ள தமிழர்களுக்குக் கொண்டு சேர்க்கும் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு வருகின்றார்.  இதனைப் பற்றி தெரிந்து கொள்வதற்கு முன்பு வேறு சில விசயங்களைப் பற்றி பேசி விடுவோம்.

-0O0-

வலைபதிவில் எழுதத் தொடங்கிச் சில வருடங்களில் ஒவ்வொருவருக்கும் உருவாகும் ஆசை புத்தகம் போட வேண்டும். நம்மை ஒரு எழுத்தாளராக அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதே. 

எனக்கும் அந்த ஆசை வந்தது. ஆனால் சற்றுத் தாமதமாக வந்தது. 

எனது இருபது வருட திருப்பூர் அனுபவங்களை மூன்று வருடமாக எழுதி அதனை ஒரு வருடமாக அடைகாத்து அதற்குப் பிறகே குஞ்சு பொறித்தது. 

இது எனக்கான வெற்றி என்பதை விட இதில் புத்தகத்திற்கான தகுதியுடைய விசயங்கள் உள்ளது. இதனை ஆவணப்படுத்தப்பட வேண்டும் என்று ஆறு மாத காலம் இதற்காக உழைத்த 4 தமிழ்மீடியா குழுமத்திற்கும் திரு. மலைநாடன் அவர்களுக்கும் அவர் என் மேல் வைத்த நம்பிக்கை சார்ந்த விசயங்களுமே அவரை முதலீடு போட வைத்துப் புத்தகம் வெளிவர காரணமாக இருந்தது. பலருக்கும் இதனைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற அவரின் எண்ணமே நடைமுறை செயலாக்கத்தில் கொண்டு வந்து நிறுத்தியது.

வெற்றியும் பெற்றுள்ளது.  எட்டில் ஒன்று (விகடன் இயர் புக் 2014

பலதரப்பட்ட விமர்சனங்கள் இந்தப் புத்தகத்திற்குக் கிடைத்த போதிலும் சில நாட்களுக்கு முன் ஒரு நண்பர் அழைத்தார். அவர் ஒரு பெரிய நிறுவனத்தின் தொழிலாளர் பயிற்சிப் பிரிவில் பணியாற்றுபவர். தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு தொழில் நகரத் தொழிலாளர்கள் குறித்தும் ஆய்வறிக்கையைத் தான் சார்ந்த நிறுவனத்திற்கு அளிப்பவர். "எங்களின் அடுத்த முயற்சி திருப்பூர் சார்ந்ததாக இருப்பதால் அங்குள்ள சூழ்நிலை மற்றும் தொழிலாளர்களின் நிலை குறித்து அறிந்து கொள்ளும் பொருட்டுப் புத்தகங்கள் தேடிக் கொண்டிருந்த போது என் நண்பர்கள் உங்கள் புத்தகத்தைக் குறிப்பிட்டுச் சொன்னார்கள். டாலர் நகரம் புத்தகம் எங்கே கிடைக்கும்?" என்று கேட்டார்.

-0O0-

தற்போதுள்ள புத்தகச் சந்தை குறித்துச் சுருக்கமாகப் பார்த்து விடலாம். 

இன்று இணையத் தள உதவியால் உங்களால் ஓரளவிற்குத் தமிழ்நாட்டில் உள்ள புத்தகக்கடைகள் மற்றும் பதிப்பாளர்கள், பதிப்பகங்கள் குறித்துத் தெரிந்து இருக்க வாய்ப்புண்டு. ஆனால் இங்கே நீங்கள் பார்க்கும் மற்றத் துறைகள் சார்ந்த கடைகளைப் போல நீங்கள் வாழும் பகுதிகளில் புத்தகக்கடைகள் இருப்பதில்லை. குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே உள்ளது. 

அங்கே சென்றாலும் நாம் விரும்பும் புத்தகங்கள் இருக்குமா? என்பது சந்தேகமே? காரணம் புத்தகங்களுக்கான தேவை என்பது இங்கே இல்லை. வாசிப்பு என்பது பாடப்புத்தகங்கள் மட்டுமே. தினசரிகள் கொஞ்சம் மீதி வாரப்பத்திரிக்கைகள்.  அதிலும் சினிமா சார்ந்த செய்திகள்.

இன்றைய பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு மீண்டும் மீண்டும் பாடங்களை "நன்றாக படி" என்றே வலியுறுத்துகின்றார்கள். கல்வி "நிறுவனங்களும்" அதனையே சொல்கின்றது. படித்து, வளர்ந்து, வருமானம் வரப்பெற்றவர்களுக்கும் இந்தப் புத்தக வாசிப்பு என்பதும் அவரவர் தேவைப் பொறுத்தே தமிழ்நாட்டில் உள்ளது.  ஆனால் 70 சதவிகிதம் படித்தவர்கள் கூட புத்தக வாசிப்பு தேவையில்லாதவர்களாகத்தான் வாழ்ந்து கொண்டு இருக்கின்றார்கள். இதைவிட வாசிப்பு பழக்கம் உள்ளவர்களை பைத்தியம் போல பார்க்கப்படும் பழக்கமும் நம்மவர்களிடமும் உண்டு.

புலம் பெயர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழர்களுக்குப் புத்தகங்களைப் பெறுவதற்கான நடைமுறை சிக்கல்களும், சாத்தியக்கூறுகளும் தமிழ்ப் புத்தகப் பரப்பை நாளுக்கு நாள் சுருக்கிக் கொண்டே தான் வருகின்றது. ஆன் லைன் வசதிகள் உருவாக்கிய தாக்கம் கூட தமிழ் புத்தக உலகில் மிகப் பெரிய வாசகர் வட்டத்தை இன்னமும் உருவாக்கவில்லை.

0o0

சிறுகதைகள், தொடர்கதைகள், கட்டுரைகள், இலக்கியம், வரலாறு, மொழிபெயர்ப்பு, வாழ்க்கை வரலாறு, புனைவுகள், கவிதைகள், கலைக் களஞ்சியம் என்று இது தொடர்பான பல பிரிவுகள் இருந்தாலும் என்ன மாதிரியான ஆதரவு இதற்கு உள்ளது என்பதை நீங்கள் தெரிந்து கொண்டால் உண்மைகள் கசக்கத்தான் செய்யும்? 

கவிதை என்றால் வெளியிடுபவர் அவரே வைத்துக் கொண்டு நண்பர்களைப் பார்க்கும் போது இலவசமாகக் கொடுக்க உதவும். கட்டுரைகளுக்கும் இதே நிலைமைதான். இதைப் போல ஒவ்வொரு பிரிவுக்கும் சொல்லிக் கொண்டே செல்லலாம். பிறகு எப்படித்தான் புத்தகங்கள் விற்கின்றது?  இதற்கு மேலும் தமிழ்நாட்டில் புத்தகங்களை சந்தைப்படுத்தி வெற்றி காண்பது என்பது ஏறக்குறைய சாக்கடையை தூர்வாரி அள்ளுவதற்குச் சமம். இன்றைய அலங்கோல ஆட்சியில் "அடிமைப்படை அம்மாவாசைகள்" அமைச்சர்களாக இருப்பதால் நூலகத்துறை என்பது ஒட்டடை படிந்து போயுள்ளது.

வருடந்தோறும் புத்தகச் சந்தைகள், விளம்பரங்கள், இணையத் தளங்களில் பலரும் "படித்ததும் பகிர்வதும்" என்று படம் காட்டுகின்றார்களே என்ற கேள்வி வர வேண்டுமே? 

குறிப்பிட்ட சிலரின் புத்தகத்திற்குக் குறிப்பிட்ட சாத்தியக்கூறுகள் மட்டுமே இங்குள்ளது என்பது தான் உண்மை. அதுவும் ஆங்கிலப் புத்தகச் சந்தைகள் போல மகத்தான வெற்றி என்றெல்லாம் கூற முடியாது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், தமிழ் நூல்களுக்கான சந்தை என்பது வாழும் ஜனத் தொகையை ஒப்பிடும் போது மிக மிகக் குறைவே. 

"தமிழ் மக்கள் ஒவ்வொருவரும் தாங்கள் இனி தெரிந்து கொள்ள வேண்டியது ஒன்றுமே இல்லை என்பதாகக்கூட இருக்கக்கூடும். அந்த அளவிற்கு இங்கே ஒவ்வொருவரும் மிகத் தெளிவாக வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்." 

"பெரும்பாலான மக்களுக்கு பணம் என்பது பிரச்சனையல்ல. அவர்களின் மாற்றிக் கொள்ள முடியாத மனோபாவம் தான் இங்கே சவாலாக உள்ளது".

0o0

உங்கள் கைகளில் மிக முக்கியமான சமூகத்திற்குத் தேவைப்படும் ஆவணம் ஒன்று உள்ளது. அதனை உங்களுக்குத் தெரிந்த ஒரு பதிப்பகத்தில் கொண்டு போய்க் கொடுத்துப் பாருங்கள். உங்களை மேலும் கீழும் தான் பார்ப்பார்கள். காரணம் இது காசாகுமா? என்ற சந்தை தான் இங்கே ஒவ்வொன்றையும் தீர்மானிக்கின்றது. 

ஒரு புத்தகம் போட குறைந்தபட்சம் முப்பதாயிரம் முதல் ஐம்பதாயிரம் வரைக்கும், அதன் தரம் பொருத்து, வடிவமைப்புக் கொண்டு முதலீடு செய்யப்படுகின்றது. அதுவும் குறைந்த பட்சம் 300 புத்தகங்கள் என்கிற ரீதியில் மட்டுமே. இங்குப் புத்தகங்களில் இருக்கும் கருத்துக்கள் குறித்து எவரும் கவலைப்படுவதில்லை. அது நம் கவலையைப் போக்குமா? என்கிற ரீதியில் பார்க்கப்படுவதால் இன்று வரைக்கும் தமிழ்நாட்டில் சினிமா சார்ந்த விசயங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கிடைக்கின்றது. 

இந்த 300 புத்தகங்கள் விற்பதே இங்கே குதிரைக்கொம்பாகத்தான் உள்ளது. இதன் காரணமாக "நீங்க முதலீடு செய்தால் நான் புத்தகமாகக் கொண்டு வருகின்றேன்" என்று பதிப்பகங்கள் சொல்லிவிடுகின்றார்கள். "விற்காத போது நீங்கள் வீட்டுக்கு எடுத்துச் சென்று விட வேண்டும்" என்கிறார்கள். காரணம் இடத்தை அடைத்துக் கொண்டிருந்தால் அவர்களுக்கு பலவகையில் பிரச்சனை தான் என்பதால்.

ஒரு வேளை உங்கள் விருப்பப்படி உங்களின் புத்தகமும் வெளிவந்த பிறகு உங்களின் நெருக்கமான/நெருக்கமற்ற நட்பு வட்டாரங்களை இந்த புத்தக விற்பனைக்கு பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்க வேண்டாம்.உறுதி அளித்தவர்கள் ஒதுங்கிவிடுவார்கள். பேச்சை நிறுத்திக்கொள்வார்கள். சிலர் உதவி என்ற பெயரில் உபத்திரத்தை உருவாக்குவார்கள். இவன் பிரபல்யம் ஆக நாம் ஏன் உதவ வேண்டும் என்ற பெரிய சிந்தனைகள் உள்ளவர்களை சந்திக்க நேரிடும்? மொத்தத்தில் உங்களின் உண்மையான நட்புக்கு உங்கள் புத்தகம் விலை பேசி விடும் ஆபத்துள்ளது.

மேலும் "உங்களுக்கு இதன் மூலம் எவ்வளவு தொகை கிடைக்கும்?" என்ற கேள்வியை பழகுபவர்களிடமிருந்து கட்டாயம் எதிர்கொள்ள வேண்டியதாக இருக்கும்.இதையெல்லாம் மீறி உங்களின் அசைக்க முடியாத தன்னம்பிக்கை மட்டுமே வெற்றிக்கான வழியைத் தேடும் என்பதை எப்போதும் நினைவில் வைத்திருங்கள்.

o0o

இன்று தங்களின் தனிப்பட்ட ஆசைக்காக பலரும் தங்கள் சொந்தச் செலவில் மட்டுமே தங்களின் புத்தகத்தைக் கொண்டு வருகின்றார்கள்? இதனால் என்ன லாபம்? 

"உங்களின் ஆசைகளுக்காக புத்தகம் கொண்டு வருவது பெரிதல்ல. ஆனால் நீங்கள் இங்குள்ள சந்தைக்குரிய தகுதியான நபராக இருக்க வேண்டும் அல்லது அந்தச் சந்தையை உருவாக்கத் தெரிந்தவராக இருக்க வேண்டும். "

முப்பதாயிரம் என்பது பெரிய தொகையோ சிறிய தொகையோ உங்கள் புத்தகங்கள் எங்கும் செல்லாமல் உங்கள் வீட்டுப் பரணில் வைக்கப்பட்டு இருந்தால் அதன் மூலம் உருவாகும் மன உளைச்சல் என்பது இழந்த பணத்தைவிட அதிகமாகவே இருக்கும்.

இந்த வருடத்தில் பலரையும் பார்த்துள்ளேன். பல கதைகளையும் கேட்டுள்ளேன். 

-0O0-

மற்றொரு வாய்ப்புள்ளது. 

தற்பொழுது நாம் அனைவரும் வலைபதிவுகளில் கட்டணம் செலுத்த தேவையின்றி இலவசமாகத் தான் எழுதிக் கொண்டு இருக்கின்றோம். இதைப் போலத் திரட்டிகள் நம்மிடம் எந்தக் கட்டணமும் வாங்காமல் நம் எழுத்தை உலகம் முழுக்கக் கொண்டு போய்ச் சேர்த்துக் கொண்டிருக்கின்றார்கள். இதுவே வலைபதிவுக்கு ஒரு கட்டணம். திரட்டிக்கு ஒரு கட்டணம் என்று காலச் சூழல் மாறினால் என்ன ஆகும். முக்கால்வாசிப் பேர்கள் எழுதுவதை நிறுத்திவிடுவார்கள். இது தான் உண்மை. 

இதில் நான் பார்த்த மற்றொரு ஆச்சரியம் என்னவென்றால் பல்வேறு இணையத் தளங்களில் எடுத்து, வெட்டி ஒட்டப்பட்ட கருத்துக்களையும் கொண்டு உருவாக்கப்பட்ட கட்டுரைகளைத் தங்கள் வலைபதிவில் போட்டு எழுத்துச் சேவை செய்து கொண்டிருப்பவர்கள் கூடக் காப்புரிமை பற்றிப் பேசுகின்றார்கள். இந்தச் சமயத்தில் மற்றொரு விசயத்தையும் நாம் யோசிக்க வேண்டும்.

o0o

எதிர்காலத் தொழில் நுட்பத்தில் இந்த வலைபதிவுகள் என்ன விதமான மாற்றங்களைச் சந்திக்கும்? இருக்கலாம்? இல்லாமல் கூட வேறுவழியில் மாறலாம். இதுவும் அப்போதுள்ள சந்தைப் பொறுத்தே கூகுள் நிறுவனம் முடிவு செய்யக்கூடும். 

காரணம் இந்த வருடத்தில் கூகுள் ப்ளஸ் வெற்றிப் பெற்றதாக மாறியது. ஏற்கனவே இருந்த கூகுள் பஸ் மறைந்தது. கூகுள் ரீடர் தனது சேவையை நிறுத்திக் கொண்டது. தற்பொழுது ஃபேஸ்புக் தவிர மற்ற அனைத்தும் பின் தங்கியே உள்ளது. இதை விட வேறொரு தொழில் நுட்பம் உருவானால் அதுவும் இலவசமாகக் கிடைக்கும்பட்சத்தில் நாம் அனைவரும் அங்குச் சென்று விடுவோம். 

-0O0-

என் நண்பர் இராஜராஜன் எப்போது என்னை நேரிடையாகச் சந்திக்கும் பொழுதும், அலைபேசியில் உரையாடும் பொழுதும்கேட்கும் முதல் கேள்வியே உங்க பதிவுகளைப் பேக்அப் எடுத்து விட்டீர்களா? என்பார். இந்த நிமிடம் வரைக்கும் அது போன்று நான் எடுத்ததும் இல்லை. அது குறித்துக் கவலைப்படுவதும் இல்லை. என் சார்பாக அவர் தான் இந்தப் பணியைத் தொடர்ச்சியாகச் செய்து கொண்டிருக்கின்றார். 

அவரும், இன்னும் சிலரும் கேட்ட ஈழம் சார்ந்த கட்டுரைகளைத் தொகுப்பாகக் கொண்டு வந்து விட வேண்டும் என்ற எண்ணம் மட்டும் என் மனதில் இருந்து கொண்டேயிருந்தது. பல சமயங்களில் நான் எழுதிய ஈழம் சார்ந்த கட்டுரைகள் என் வலைபதிவில் பக்கவாட்டில் மேலேறி வருவதைப் பார்ப்பதுண்டு. 

சிலர் இதன் தொடர்ச்சி அடுத்து என்ன? என்று மின் அஞ்சல் வழியே கேட்பதும் உண்டு. 

நான் முதலில் புத்தகமாகக் கொண்டு வர வேண்டும் என்று நினைத்ததே இந்த ஈழம் சார்ந்த விசயங்களுக்காக மட்டுமே. ஆனால் இதைக் காசாக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றாத காரணத்தினாலும், இணையம் வளர்த்த என்னை அந்த இணையத்தில் என்னைப் போன்று வந்து கொண்டிருப்பவர்களுக்காக இந்த நூலை திரு. சீனிவாசன் கொடுத்த உற்சாகத்தின் காரணமாக மின் நூலாகக் கொண்டு வந்துள்ளேன். முடிந்த வரைக்கும் பிழைகள் திருத்தி, விமர்சனங்களில் வந்தபடி சிலவற்றை மாற்றி, படிக்க எளிதான வகையில் உருவாக்கி உள்ளேன்.நண்பர்கள் அனைவரும் படித்து உங்கள் கருத்துக்களைச் சொல்ல வேண்டும் என்று எதிர்பார்க்கின்றேன். இந்த மின் நூல் மிகவும் பயன் உள்ள தகவல்களைக் கொண்டது என்று நீங்கள் கருதினால் உங்கள் தொடர்பில் உள்ள அனைத்து நண்பர்களுக்கும் அறிமுகம் செய்து வைக்க வேண்டுகின்றேன். 
-0O0-


அதற்குக் காரணம் உண்டு. 

இன்னும் சில வருடங்களில் உருவாகப் போகும் தொழில் நுட்ப மாறுதல்களின் காரணமாக இணையப் பயன்பாடுகள் அதிகரிக்கத்தான் போகின்றன. தனி மனிதர்களின் உரையாடல் குறைந்து எதையோ ஒன்றை நோண்டிக் கொண்டு வெறித்துப் பார்த்துக் கொண்டே தான் வாழ்க்கை அமையப் போகின்றது. அப்பொழுது நிச்சயம் மின் நூல்களின் பயன்பாடுகள் பல மடங்கு உருவாகப் போகும் சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளது. 

இதனை மனதில் கொண்டே நண்பர் சீனிவாசன் வலைபதிவுகளை மின் நூலாக மாற்றி ஒரே இடத்தில் சேர்த்து வைத்து பலருக்கும் கொண்டு சேர்த்துக் கொண்டிருக்கும் பணியைத் தொடர்ந்து செயல்படுத்திக் கொண்டு வருகின்றார். எவ்வித லாப நோக்கமும் இன்றி இதனைத் தனது சேவையாகக் கருதிக் கொண்டு நடத்தி வருகின்றார். 

-0O0-

இதன் மூலம் என்ன பலன்? 

உங்கள் வலைபதிவில் எழுதப்பட்ட விசயங்களை ஒரு மின் நூலாகக் கொண்டு வர முடியும். எதைப் பற்றி வேண்டுமானாலும் இருக்கலாம். இதற்குக் கணக்கீடு என்பதே இல்லை. மின் நூலாக மாறும் பட்சத்தில் அது உங்கள் வலைபதிவுக்கு வராதவர்கள் பார்வையில் பட்டு உலகம் முழுக்க வாழும் தமிழர்களிடத்தில் போய்ச் சேர்கின்றது. அந்தப் பணியைத் தனது தளத்தின் வாயிலாகச் செய்து கொண்டிருக்கின்றார். 

இந்தத் தளத்தில் உங்களின் மின் நூலை பதிவேற்றி வைத்து விட்டால் எவர் வேண்டுமானாலும் தரவிறக்கம் செய்து கொள்ள முடியும். கட்டணம் எதுவும் இல்லை. மின் நூலாக மாற்றிய பின்பு உங்கள் படைப்புக்கான அங்கீகாரமும், உங்கள் கருத்துக்கான ஆதரவும் உங்கள் காலத்திற்குப் பிறகும் எவரோ ஒருவரிடமிருந்து மற்றொருவருக்குப் பரவிக் கொண்டேயிருக்கும். 

தொழில்நுட்ப மாற்றத்தில் வலைபதிவுகளின் தன்மை மாறி உங்களால் பின்தொடர முடியாத சூழ்நிலையிலும் மின் நூலாக மாற்றி வைத்து விட்டால் உங்கள் படைப்புகளுக்கு அழிவென்பதே இருக்காது. திருச்சி என்ற நகரம் எப்படி இருந்தது என்று எவரோ ஒருவர் இன்னும் நூறு ஆண்டுகள் கழித்து வாழ்ந்து கொண்டிருப்பவர் தேடும் போது அவர் கையில் உங்கள் திருச்சி நகர அனுபவங்கள் கிடைக்கும் பட்சத்தில் எப்படியிருக்கும் என்பதை யோசித்துப் பார்க்கும் பொழுது உங்களால் இதனைப் புரிந்து கொள்ள முடியும். 

-0O0-

 ஈழம் - வந்தார்கள் வென்றார் (மின் நூல்)

நடந்து முடிந்த ஐந்து மாநிலத் தேர்தலில் தோற்றுப் போன ராகுலிடம் உங்கள் அப்பா இறந்த கதை? என்று பேசத் தொடங்கினால் அவர் என்ன சொல்வார்? 

"இப்ப எங்க நிலைமையே டப்பா டான்ஸ் ஆடிப்போய் கிடக்கு. உங்க விஜயகாந்த் டெல்லியில் வாங்கின ஓட்டு மாதிரி வரும் தேர்தல் ஆயிடுமோங்ற பயத்திலே நாங்க இருக்கோம். அப்பா ஆட்டுக்குட்டின்னு நீ வேற? "என்பார்.

காரணம் ராஜீவ் காந்தி படுகொலை என்பது அவர்கள் குடும்பமே மறந்து இன்று எந்த வகையில் எந்த இடத்தில் அறுவடை செய்ய முடியும்? என்று பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள். 

இன்று இந்திய ராணுவத்திடம் இலங்கைக்குச் சென்ற  அமைதிப்படை? என்று கேள்விக்குறியோடு போய் கேட்டுப் பாருங்கள். பலரும் ஓய்வு பெற்று, அது குறித்துத் தெரியாத புதிய தலைமுறைகள் தான் தற்பொழுது பணியில் இருப்பார்கள். 

காலம் அனைத்தையும் மாற்றிவிடும். 

ஆனால் ஒரு வரலாற்றை ஆவணமாக்கி அதனைக் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு படித்துப் பார்க்கும் போது பல உண்மைகள் நமக்குப் புரிய வரும் படித்துப் பாருங்கள். பல இடங்களில் திடுக்கிட்டு போவீர்கள். சில இடங்களில் உங்கள் கண்களில் ஆச்சரியம் அலையடிக்கும். என் பதிவில் உள்ள பெரும்பாலான கட்டுரைகளை இணையம் வழியே மட்டும் அனைவருக்கும் சென்று சேர வேண்டும் என்று நான் நினைத்துள்ள முக்கியமானவற்றை நேரம் கிடைக்கும் போது மின் நூலாக மாற்றும் திட்டமும் உண்டு.

-0O0-

உங்களுக்கு இந்த திட்டம் குறித்து முழுமையாக தெரிய வேண்டுமென்றால் சீனிவாசன் அவர்களைத் தொடர்பு கொள்ளுங்க. உங்களிடம் இது குறித்து பேசுவதற்கு முன்பாக நானே அதை தொடங்கி வைத்தவனாக உள்ளேன். உங்களையும் அழைக்கின்றேன்.உங்கள் தளங்களில் இதைப் பற்றி எழுதினால் பலருக்கும் இந்தத் தகவல் போய்ச் சேரும். 

இங்கிருந்தே ஒவ்வொன்றையும் பெற்றேன். இந்த வருட பரிசாக நண்பர்களுக்கு இதையே கொடுக்கின்றேன்  நிச்சயம் உலகம் முழுக்க பரவி வாழும் ஈழம் சார்ந்த நண்பர்களுக்கு இந்த மின்நூல் இணையத்தின் வாயிலாக வெளியிடப்படும் போது சென்று சேரும் என்று நம்புகின்றேன்.

ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் பின்னூட்டத்தில் கேளுங்க. பதில் அளிக்கின்றேன். காரணம் இந்தத் திட்டம் குறித்து, இதன் அடிப்படைத்தன்மை குறித்து முழுமையாக எழுத வேண்டுமென்றால் மேலும் இரண்டு பதிவுகள் எழுத வேண்டும்.  

உங்கள் மனதில் உள்ள கனவுகள் நிஜமாக மாற வருகின்ற 2014 ஆம் ஆண்டு உங்களுக்கு அதற்கான வாய்ப்புகளை வழங்க என் வாழ்த்துகளை இங்கே எழுதி வைக்கின்றேன். 

எனது படைப்புகளை புத்தகமாக மட்டுமே கொண்டு வர வேண்டும் என்று நினைக்கின்றேன் என்பவர்களை தவிர்த்து மற்றவர்களுக்கு வரப் போகும் 2014 ஆம் ஆண்டு உங்களின் படைப்புகள் மின் நூலாக மாற்றம் பெற்ற ஆண்டாக இருக்கட்டுமே?




26 comments:

த. சீனிவாசன் said...

தங்களது நூலிற்கும் அதை கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமையில் தந்தமைக்கும் நன்றிகள்.

Thekkikattan|தெகா said...

கூகுளின் புதுப் புது முயற்சிகளின் போது பழயவைகளைக் கழித்து புதிதாக நமக்கு வழங்கும் பொழுது பேக் அப் செய்யப்படாமல், சில நேரங்களில் நம்முடைய அத்தனை உழைப்பும் காணாமல் போய் விடும் அபாயமிருக்கிறது.

சீனிவாசன் அவர்களின் இந்த முயற்சி மிக்க பாராட்டுக்குறியது. முண்டாசு, வும்முடைய உழைப்பு எல்லாருக்கும் சென்றடைய வேண்டியதற்கான உழைப்பும் பிரமிக்க வைக்கிறது. வாழ்க வளர்க!

Amudhavan said...

இணையத்தில் உலா வரும் எல்லாரையும் ஒரு புள்ளியில் இணைத்துவிட வேண்டும் என்ற உங்களின் நல்ல நோக்கத்திற்கு எனது வாழ்த்துக்கள். அதுவும் 'சும்மா எது எதற்கோ எழுதி பொழுதை வீண்டித்துக்கொண்டு இருக்காதீர்கள். நீங்கள் இப்போது எழுதுவதை உங்களுக்குப் பின்னால் வரும் தலைமுறைகளும் படிக்கும்படியான ஏற்பாடுகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. அதற்கேற்ப எழுதி வையுங்கள்' என்ற எச்சரிக்கையும் உங்கள் எழுத்தில் இருக்கிறது.

இதற்காகச் செயல்படும் திரு சீனிவாசன் நிச்சயம் பாராட்டுக்குரியவர். இது தொடர்பாக அவர் எனக்கு அனுப்பியிருந்த மெயிலுக்கும் சில பணிகள் காரணமாக உடனடியாக அவர் கேட்டிருந்த இணைப்புக்களைத் தரமுடியவில்லை. தரவேண்டும்.
2013 ஐ ஒரு நல்ல சிந்தனையுடன் முடித்து, எல்லாரையும் ஒன்றிணைக்கும் அரிய பணியைத் துவக்க 2014ஐ வரவேற்கத் தயாராகும் உங்களுக்கும் மற்றும் அனைவருக்கும் புதுவருட வாழ்த்துக்கள்.

திண்டுக்கல் தனபாலன் said...

வரும் காலத்தில் புத்தகம் போட நினைத்தாலும் முடியாது என்கிற நிலை வரப்போகிறது என்பதும் உண்மை... வருங்கால குழந்தைகளும் மூட்டை சுமக்கப் போவதில்லை... காரணம் இதை விட பெரிய பதிவாக சொல்ல வேண்டும்...!

வரும் 2014 ஆண்டு மேலும் சிறப்பாக அமைய எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்...

saidaiazeez.blogspot.in said...

மது இல்லாமல் புத்தாண்டை இனிதே கொண்டாடுவோம்.
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

கரந்தை ஜெயக்குமார் said...

,இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

Gujaal said...

ஈழ யுத்தம். இறுதி நாட்கள். விறுவிறுப்பு தளத்தின் தொடர். I think it gives alternate perspective and backround of the failure of LTTE.

http://viruvirupu.com/category/7-eelam-war/2-final-days/

வரதராஜலு .பூ said...

சீனிவாசனின் சேவை மிகப் பெரியது. ஈழம் வந்தார்கள் வென்றார்கள் புத்தகத்தை மின்னூலாக வெளியிட சம்மதித்த உங்களுக்கும், சிறப்பான சேவைவை வழங்கும் சீனிவாசன் அவர்களுக்கும் நன்றி.

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் சார்.

Unknown said...

புத்தகம் வாசிப்பவரை குறுகுறுஎன்றுபார்ப்பதுபோய்விட்டது;இணையத்தில்இருந்தால்இணையஅடிமைபட்டம்வரலாம்.

ஆறுமுகம் அய்யாசாமி said...

தகுதியான, தரமான புத்தகங்களை நூலகங்களுக்காக அரசு கொள்முதல் செய்தால், எழுதியவர்களுக்கோ, பதிப்பாளர்களுக்கோ, மன உளைச்சல் வராது. தரமானது எது, தரம் வாய்ந்தவர் யார் என்பதே பிரச்னையாக இருக்கும் வரை, தரம் கெட்டவர்கள் தேர்வுக்குழுக்களில் இருக்கும் காலம் வரை, பதிப்பாளர்களும் எழுத்தாளர்களும் புலம்பிப் பெருமூச்சு விடுவதை தவிர்க்கவே முடியாது.

தி.தமிழ் இளங்கோ said...

ஜோதிஜி திருப்பூர் அவர்களுக்கு காலை வணக்கம்! வலையுலகில் வரும் கட்டுரைகளில், எனது கருத்துரையைத் தந்தாலும், தராவிட்டாலும், நான் சிலரது பதிவுகளை மட்டும் தொடர்ந்து வாசிக்கும் பதிவுகளில் உங்களது “தேவியர் இல்லம்” வலைத்தளமும் ஒன்று! இந்த பதிவில் // பிரிவோம் -சந்திப்போம். // என்று தாங்கள் சொன்னபோது சற்று நெருடல்தான். இருந்தாலும் சந்திப்போம் என்பதனை நினைத்து ஆறுதல்.

தமிழ் இணையத்தைப் பற்றி நிறையவே சொன்னீர்கள்! ஒவ்வொருவரும் ஓடிக் கொண்டே இருக்கிறோம். ஒரு கட்டத்தில் தானாக அல்லது சூழ்நிலையின் காரணமாக ஓட்டம் நின்று விடும். ஓடும் வரை ஓட்டம்! ஆடும்வரை ஆட்டம்!

// கவிதை என்றால் வெளியிடுபவர் அவரே வைத்துக் கொண்டு நண்பர்களைப் பார்க்கும் போது இலவசமாகக் கொடுக்க உதவும். கட்டுரைகளுக்கும் இதே நிலைமைதான். இதைப் போல ஒவ்வொரு பிரிவுக்கும் சொல்லிக் கொண்டே செல்லலாம். //

என்ற கருத்தினை நன்றாகவே சொன்னீர்கள். எங்கள் அப்பாவுக்கும் கவிஞர்கள் எல்லோருக்கும் வரும் அந்த புத்தக வெளியிடும் ஆசையும் வந்தது. நல்லவேளை அதைச் செய்ய வில்லை. அப்படி செய்து இருந்தால் கடன்தான் மிஞ்சி இருக்கும்.

// தற்பொழுது நாம் அனைவரும் வலைபதிவுகளில் கட்டணம் செலுத்த தேவையின்றி இலவசமாகத் தான் எழுதிக் கொண்டு இருக்கின்றோம். இதைப் போலத் திரட்டிகள் நம்மிடம் எந்தக் கட்டணமும் வாங்காமல் நம் எழுத்தை உலகம் முழுக்கக் கொண்டு போய்ச் சேர்த்துக் கொண்டிருக்கின்றார்கள். இதுவே வலைபதிவுக்கு ஒரு கட்டணம். திரட்டிக்கு ஒரு கட்டணம் என்று காலச் சூழல் மாறினால் என்ன ஆகும். முக்கால்வாசிப் பேர்கள் எழுதுவதை நிறுத்திவிடுவார்கள். இது தான் உண்மை. //

என்ற தங்களது வரிகள், இத்தனை நாள் தாங்கள் கண்ட அனுபவத்தைச் சொல்கிறது.

சிறிது நேர பயணத்திற்காக, நமக்குச் சொந்தமில்லாத பஸ்ஸில் இடம் பிடிப்பதற்காகத்தான் எத்தனை போட்டி? அடிதடி? இங்கு தமிழில் இணையத்தில் ஜாதியின் பெயரால் .... மதத்தின் பெயரால் .... கட்சியின் பெயரால் .... நடக்கும் கூத்துக்களச் சொல்ல வேண்டியதில்லை!

வரப் போகும் 2014 ஆம் ஆண்டு தமிழ் மொழிக்கு மின்நூல் ஆண்டாக இருக்க வேண்டும் என்ற உங்கள் கனவு வெல்லட்டும். இதற்கான முயற்சியில் இருக்கும் சீனிவாசன் என்ற இளைஞருக்கு எனது வாழ்த்துக்கள்!

உங்களுக்கும் உங்கள் குழந்தைகளுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது உளங்கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்!

Yaathoramani.blogspot.com said...

வரப் போகும் 2014 ஆம் ஆண்டு தமிழ் மொழிக்கு மின்நூல் ஆண்டாக இருக்க வேண்டும் என்ற உங்கள் கனவு வெல்லட்டும். இதற்கான முயற்சியில் இருக்கும் சீனிவாசன் என்ற இளைஞருக்கு எனது வாழ்த்துக்கள்!

உங்களுக்கும் உங்கள் குழந்தைகளுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது உளங்கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்!

அபயாஅருணா said...

விரிவான பதிவு ஆனால் விவரமான பதிவு. .புத்தாண்டு வாழ்த்துக்கள்!

M.Thevesh said...

Very many thanks for your e-book. Year 2014 should bring Prosperity and happiness in your life.May God
shower his blessings on you and your family.
M.Thevesh.

எம்.ஞானசேகரன் said...

தங்களின் அனைத்து முயற்சிகளுக்கும் வாழ்த்துக்கள். வழக்கம்போலவே பிரமிப்புதான் மிஞ்சுகிறது. பெரிய பதவிகளில் பொறுப்புக்களில் இருந்துகொண்டு இப்படி இடைவிடாத ஆர்வத்தோடு எழுத்தில் ஈடுபடுவது இயலாத காரியம். நீங்கள் இதை சிறப்பாகவே செய்கிறீர்கள். எதற்கெடுத்தாலும் காசு பார்க்கும் உலகில் தங்களின் அரிய தொகுப்பை இப்படி மின் நூலாக மாற்றி அடுத்த தலைமுறைக்கும் பயன்பட வழி செய்திருப்பது பாராட்டுக்குரிய செயல். உங்களின் உத்வேகத்தால் இனி வரும் ஆண்டில் இப்படி எனது பதிவுகளை மின்நூலாக்கும் தகுதியோடு உருவாக்க , எழுத முயற்சிக்கிறேன். தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எனது உளம்கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்.

டிபிஆர்.ஜோசப் said...

உங்களுடைய மின்னூலை தரவிறக்கம் செய்துள்ளேன். முழுமையாக படித்துவிட்டு என் கருத்து கூறுகிறேன். இப்போதெல்லாம் பதிப்பகத்தாரின் ஆதிக்கம்தான். தரமான நூல்களை தாங்களாகவே முன்வந்து வெளியிட்டு வந்த காலம் போய் இந்த நூல் விற்குமா விற்காதா என்ற பொருளாதார கோணத்திலேயே பிழைப்பு நடத்துகின்றனர். எனக்கும் ஒரு நூல் வெளியிட்ட அனுபவம் உள்ளது. அது காலத்திற்கும் போதும் என்கிற அனுபவம். இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

ezhil said...

புத்தக வெளியீட்டு அனுபவம் நிதர்சனம்... என் கணவரும் எப்போதுமே கூறுவார் இந்த இலவச இணைய தளப் பயன்பாடு என்று வேண்டுமானாலும் நிறுத்திவைக்கப்படலாம் அதனால் உன் பதிவுகளை சேகரித்துக்கொள் என்பார். அதையே சொல்வதாகப்பட்டது உங்கள் பதிவு... உங்கள் மின் நூலைப் படிக்கிறேன் இந்தச் செய்தியை கண்டிப்பாகப் பகிர்கிறேன் நன்றி

Rathnavel Natarajan said...

புத்தக வெளியீடு, பதிவுகள் மின் நூலாக மாற்றுதல் பற்றி சற்று பெரிய, ஆழ்ந்து படிக்க வேண்டிய பதிவு. எனது பக்கத்தில் பகிர்கிறேன்.
நன்றி & வாழ்த்துகள் திரு ஜோதிஜி.

அருள்நிதி .கிருஷ்ணமூர்த்தி said...

2013 ஆம் வருடத்திர்க்கு விடை கொடுக்கும் பதிவு .ஆனால் கனமான சிந்தனை முன் வைத்த்து முடித்து இருக்கிறீர்கள் .

sivakumarcoimbatore said...

ஜோதிஜி திருப்பூர் அவர்களுக்கு வணக்கம்! வலையுலகில் வரும் கட்டுரைகளில், எனது கருத்துரையைத் தந்தாலும், தராவிட்டாலும், உங்களது பதிவுகளை தொடர்ந்து வாசிக்கும் “தேவியர் இல்லம்” வலைத்தளமும் ஒன்று!

எம்.ஞானசேகரன் said...

தங்களுக்கும், குடும்பத்தாருக்கும் எனது இதயங்கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Ranjani Narayanan said...

மின்னூல் என்ற ஒரு புதிய கருத்தை முன்வைத்து இந்த ஆண்டின் கடைசிப் பதிவை போட்டிருக்கிறீர்கள். வழக்கம்போல நிறைய யோசிக்க வைத்திருக்கிறீர்கள். பல விஷயங்களை தைரியமாக சொல்லியிருக்கிறீர்கள்.
திரு ஸ்ரீநிவாசனுக்கு வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.
வரும் ஆண்டில் இன்னும் பலபல சிகரங்களை நீங்கள் தொட வாழ்த்துக்கள், ஜி!

உங்கள் துணைவிக்கும், தேவியர் மூவருக்கும் உங்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

Amudhavan said...

விகடன் இயர்புக்கில் டாலர் நகரம் சிறப்புப் பெற்றிருப்பதற்கு வாழ்த்துக்கள். அதைவிடவும் மேன்மையான சிறப்பு உங்களின் எழுத்துக்கள் விகடனிலோ விகடன் பதிப்பகம் மூலமோ வரும்போது வெளிப்படும் என்றே நினைக்கிறேன். அந்த நாள் விரைவில் வர வாழ்த்துகிறேன்.

'பரிவை' சே.குமார் said...

வழக்கம் போலவே நிறைய யோசிக்க வைத்து இருக்கிறீர்கள் அண்ணா...
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் அண்ணா....

kavirimainthan said...



ஜோதிஜி,

இன்று தான் படிக்க முடிந்தது.
அற்புதமான, மிகவும் பயனுள்ள பதிவு.

ஆர்வத்துடன், ஆழ்ந்த உழைப்புக்கும்
சொந்தக்காரர் நீங்கள்.

நீங்கள் இதுவரை எழுதி இருப்பதை வைத்தே
பல மின்நூல்களை உருவாக்கலாம்.

மிக்க நன்றியும், வாழ்த்துக்களும்.

அன்புடன்,
காவிரிமைந்தன்

திண்டுக்கல் தனபாலன் said...

Visit : http://thillaiakathuchronicles.blogspot.com/2014/01/Pulampeyarnthathamizar-thaaygamkadanthavathamizhar-thaayagamkadanthathamizh.html