நாம் வாசிக்கும் சில புத்தகங்களுக்கு விமர்சனம் எழுதலாம். சில புத்தகங்களுக்கு விமர்சனம் எழுத முடியாமல் நாமே தடுமாறிப் போய் விடக்கூடும். இந்தப் புத்தகத்திற்கு விமர்சனப் பார்வையை எழுதி வைத்து விடலாம் என்று மீண்டும் வாசிக்கத் தொடங்கியதும் ஏன் நாம் இந்தப் புத்தகம் குறித்து சிவகுமார் அவர்களுக்கு எழுதிய கடிதத்தையே விமர்சனமாக இங்கே தந்து விடலாமே? என்ற எண்ணம் உருவானது.
காரணம் கடந்த ஆறு ஆண்டுகளாக என் சுயத்தை என் பலகீனத்தை வெளிப்படையாகப் பல சமயங்களில் எழுத்தாக மாற்றி அனைவரின் பார்வைக்கும் தந்துள்ளேன். இப்போதும் அதையே செய்ய விரும்புகின்றேன்.
முதல் பதிவு எழுதியதும் நண்பர்கள் காட்டிய ஆதரவு ஆச்சரியமானது. வலைப்பதிவு என்பது ஃபேஸ்புக் வந்ததும் காலாவதியாகி விட்டது என்பது பொய் என்றே தெரிகின்றது. ஒவ்வொன்றுக்கும் அதற்குத் தகுந்தாற் போல உயிரோட்டம் கடைசி வரைக்கும் இருக்கக்தான் செய்யும் என்பதனை உணர்ந்து கொள்ள முடிந்தது.
விமர்சனத்தின் வாயிலாகத் தனி மடல் வாயிலாக ஆதரவு அளித்த நண்பர்கள் அனைவருக்கும் என் அன்பு.
+++++++++
திரு. சிவகுமார் அவர்களுக்கு வணக்கம்.
நான் இப்போது ஏற்று இருக்கும் தொழில் வாழ்க்கைப் பணியின் காரணமாகக் கடந்த சில நாட்களாக இந்தப் புத்தகத்திற்காக அதிகாலைப்பொழுதை ஒதுக்கி படித்துக் கொண்டு வருகின்றேன். மொத்தமாக ஒரு முறை மேலோட்டமாக உள்வாங்கி விட்டுக் குறிப்பிட்ட சிலர் சொல்லியுள்ள விசயங்களைப் படித்தேன். அதிலும் குறிப்பாக உங்கள் குடும்ப உறுப்பினர்களின் பார்வை எப்படியுள்ளது என்பதை அதிக கவனம் செலுத்தினேன்.
"ஒரு மனைவிக்குத்தான் முழுமையாகத் தெரியும். தன்னுடைய கணவர் எந்த அளவுக்கு நல்லவர் அல்லது பலகீனமானவர்". கணவர் சமூகத்தில் எந்த அளவுக்கு கொண்டாடப்பட்டுக் கொண்டிருந்தாலும் அதற்கு அவர் முழுமையாகத் தகுதியானவரா? என்பதை மனைவிமார்கள் அத்தனை பேர்களும் உணர்ந்தே வைத்திருப்பார்கள்.
சிலர் நேரிடையாக சுட்டிக் காட்டுவார்கள். பலர் "நமக்கேன் வம்பு?" "பேய்க்கு வாக்கப்பட்டாயிற்று. நாம் வாழ்ந்து தான் ஆகனும்" என்று சகிப்புத்தன்மையோடு வாழ்க்கை நடத்துவார்கள். அதனால் புத்தகத்தில் லஷ்மி அம்மா உங்களைப் பற்றி என்ன சொல்லியுள்ளார்கள் என்பதனைத் தான் நேற்று அதிகாலையில் வாசித்தேன்.
கடந்த 25 ஆண்டுகளாக நான் ஆறாவது படிக்கும் காலத்தில் இருந்து இன்று வரையிலும் வார, மாத, தினசரி பத்திரிக்கைகள் அனைத்தையும் வாசிக்கின்றேன். ஆயிரக்கணக்கான புத்தகங்கள் வாசித்து முடித்துள்ளேன். எழுத்தாளர் என்ற பாத்திரத்தில் உள்ளே நுழைந்து கடந்த ஆறு ஆண்டுகளாக பதினைந்து ஆண்டுகள் ஒருவர் எழுத வேண்டிய விசயங்களை வலைப்பதிவில் எழுதியுள்ளேன்.
புத்தகமாக மின் நூலாக அனைவரின் பார்வைக்கும் சென்றுள்ளேன். ஆனால் இந்தப் புத்தகத்தை வாசிக்கும் போது எனக்குள் உருவான உணர்ச்சிகளை விவரிக்க வார்த்தைகள் இல்லை.
காரணம் சிவகுமார் என்ற தனிமனிதனை ஊடகங்கள் வாயிலாகச் சமீபகாலமாக நண்பர் மூலமாக நெருக்கமாகக் கவனித்து வந்தவன் என்ற முறையில் இதில் பல விசயங்கள் என்னை அப்படியே புரட்டிப் போட்டுள்ளது என்றால் அது மிகையில்லை.
அதிலும் குறிப்பாக லஷ்மியம்மா தன் கணவரைப் பற்றி சொல்லியவற்றை வாசிக்கும் போது என்னால் தொடர்ந்து வாசிக்க முடியவில்லை.
நான் எழுத்துத்துறையில் இருப்பதால் நடையோட்டம், தவறுகள், குறைந்த அழகியல் போன்ற பலவற்றைக் கவனிக்கும் எனக்கு லஷ்மியம்மா மனதோடு பேசிய விசயங்களை வார்த்தைகளாகச் சொன்னதும் அதை அமுதவன் கச்சிதமாகச் செதுக்கியதும் இந்தப் புத்தகத்தின் முத்தாய்ப்பு என்றால் அது முற்றிலும் உண்மை.
தமிழில் நெகிழ்ந்தேன் என்றொரு வார்த்தையுண்டு. லஷ்மியம்மா சொல்லியவற்றை வாசித்துக் கொண்டிருந்த போது அந்த அதிகாலை வேலையில் என் மனைவி உணவு தயாரித்துக் கொண்டிருக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். என் நடவடிக்கைகளைப் பார்த்து என்ன ஆக்டிங் கொடுக்குறீங்க? என்றார். காரணம் அந்த அளவுக்கு நான் ஆணாதிக்கம் நிறைந்தவன் என்பதும் எதையும் கடுகளவு கூட விட்டுக் கொடுக்காதவன் என்ற குற்றவுணர்ச்சியும் என்னை வாட்டி வதைத்தது. வரிகளை திரும்பத் திரும்ப வாசிக்கும் நான் உள்ளே அந்த வார்த்தைகளுக்குள் இருப்பதாகவே எனக்குத் தெரிந்தது. இனி எப்படி வாழ வேண்டும்? என்ற வைராக்கியத்தை எனக்குள் உருவாக்கியது.
ஒவ்வொரு கால கட்டத்திலும் நான் எப்படி ஆக வேண்டும் என்பதனை இந்தச் சமூகத்தில் உயிருடன் மற்றும் இறந்து போனவர்களை மானசீகமாக வைத்து என்னைச் செதுக்கி வந்துள்ளேன். அதில் அவர்கள் சமூகத்தில் பிரபலமாக இருப்பார்கள், அல்லது நான் வாழும் வாழ்க்கையில் சந்திக்கும் சாதாரண மனிதர்களாகக்கூட இருந்து இருப்பார்கள். பிரபலமாக இருப்பவர்களைப் பற்றி நாம் வைத்துள்ள பிம்பங்கள் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு மாறி விடும். காரணம் அவர்களின் வாழ்க்கை என்பது "சொல்லுக்கும் செயலுக்கும்" உள்ள பெரிய வித்தியாசத்தை எளிதில் கண்டு கொள்ள முடியும். அந்தப் பிம்பம் மறைந்து விடும்.
இதே போல என் வாழ்க்கையில் பலரும் வந்து போயிருக்கின்றார்கள். ஆனால் கடந்த 25 வருடங்களாக சிவகுமார் என்றொரு தனிமனிதனை நடிகராக, ஓவியராக நான் என்றுமே பார்த்தது இல்லை. என் வாழ்க்கைக்குத் தேவையான நான் கற்றுக் கொள்ள வேண்டிய நல்லதொரு குடும்பத் தலைவராகவே பார்த்து வருகின்றேன். எத்தனைப் பெரிய புகழ் வாய்ந்த மனிதராக இருந்தாலும் அவர் குடும்ப வாழ்க்கையில் தோற்றுப் போயிருந்தால் என் பார்வையில் முழுமையான தோல்வி பெற்ற மனிதராகத்தான் பார்க்கின்றேன். அதன் காரணமாகவே என் குடும்ப வாழ்க்கையில் முடிந்த வரைக்கும் என் ஈகோவை அவ்வவ்போது குறைந்து என் குறைகளை தெரியப்படுத்தி மனைவியைச் சமாதானப்படுத்தி விடுகின்றேன். குழந்தைகளிடம் இன்னமும் நெருங்கிப் பழகுகின்றேன்.
இவை அனைத்தும் சிவகுமார் என்ற மனிதரிடம் நான் கற்றுக் கொண்டே விசயங்கள்.
குறிப்பாக சூர்யாவும் கார்த்திக்கும் சொல்லியுள்ள பலவிசயங்களை ஏற்கனவே பல சந்தர்ப்பங்களின் வாயிலாக அறிந்து கொண்டிருந்த போதிலும் அவர்கள் சிவகுமார் என்ற மனிதரை உள்வாங்கி விதம் தான் என்னை ஆச்சரியப்படுத்தியுள்ளது. ஆங்கிலத்தில் உள்ள "மெச்சூரிட்டி" என்ற வார்த்தையை சிவகுமார் என்ற மனிதர் தனது தலைமுறைக்குக் கடத்தியுள்ளார். அவர் சேர்த்துள்ள புகழ், அதிகாரம், அந்தஸ்து, சொத்து, பிரபல்யம் என்ற மாயை போன்ற அத்தனையையும் விட இது தான் சிவகுமார் என்ற மனிதரை இன்னும் அடுத்த 50 ஆண்டுகளுக்குப் பேசு பொருளாக வைக்கப் போகின்றது என்பதனை இந்தப் புத்தகத்தின் வாயிலாக உணர்ந்துள்ளேன்.
என் பலம் பலவீனம் எனக்கு நன்றாகவே தெரிகின்றது. இந்தப் புத்தகம் எனக்கு மட்டுமல்ல, என் மூன்று குழந்தைகளுக்கும் என் மனைவிக்கும் கீதை.
என் பலவீனத்தை சிவகுமார் என்ற மனிதரின் வாழ்க்கை மூலமாக மறைமுகமாக எனக்குச் சுட்டிக்காட்டிய அத்தனை நல் இதயங்களையும் வாழ்த்துகிறேன். காலம் முழுக்க போற்றக்கூடிய பணியை அமுதவன் செய்துள்ளார். அவருக்கும் காலம் முழுக்க சொல்ல வேண்டிய என் குடும்பத்தினரின் அன்பை இங்கே எழுதி வைக்க விரும்புகின்றேன்.
மாறாத பிரியங்களுடன்
ஜோதிஜி திருப்பூர்
தேவியர் இல்லம்.
31 comments:
நடிப்பு என்பதைத் தவிர அவர் ஏற்கெனவே ஓவியர் என்கிற வகையிலும் (அதுதான் முதன்மையானது) புகழும், பெயரும் அடைந்திருந்தார். இப்போது ஆன்மீகச் சொற்பொழிவுகள் மூலமாகவும், நற்பணிகள் மூலமாகவும், அதைவிட தன் மகன்களை வடிவமைத்தது மூலமும் அவரின் உயரம் தெரிகிறது. இந்தப் புத்தகம் அவசியம் வாங்குவேன்.
மனிதப் பிறவியன் நோக்கம்
மனிதனாக வாழ்வதுதான்
மனிதனாய் முழுமையாய் வாழ்ந்து காட்டி வருபவர் சிவக்குமார் அவர்கள்
அவசியம் வாங்கிப் படிப்பேன்
நன்றி ஐயா
சிவக்குமார் அவர்கள் மிகச் சிறப்பான மனிதர் என்பதை நாம் அறிவோம்.
ஓவியனாய்... நடிகனாய்... ஆன்மீகச் சொற்பொழிவாளராய் வாழும் மனிதர்.\
நல்லதொரு குடும்பத் தலைவன்...
புத்தகம் வாங்கிப் படிக்க வேண்டும் அண்ணா...
சிறப்பாக எழுதியிருக்கிறீர்கள்.
அருமை.
மதுரையில் புத்தகத் திருவிழா தொடங்கிவிட்டது. இந்தமுறை என்ன புத்தகம் வாங்கலாம் என்று யோசித்து கொண்டிருக்கும்போது தங்களின் பதிவு என் கண்ணில் பட்டது. சிவகுமாரை எனக்கு நடிகர் என்பதைக்கடந்து பலவகைகளில் பிடிக்கும். இந்தப் புத்தகத்தை கட்டாயம் வாங்குவேன்.
அருமையான விமர்சனம். நெகிழச் செய்தது.
எனது கட்டுரை ஒன்றை நாளிதழில் படித்துவிட்டு அதில் வந்திருந்த எனது செல்பேசிக்கு அழைத்து, பாராட்டிப் பேசிவிட்டு, தனது பேச்சுத் தகடுகளை அனுப்பிய பெருந்தன்மையாளர். தக்கார் தகவிலர் என்பது அவரவர் எச்சத்தால் காணப் படும்” எனில் அவர் தக்காரேதான்.முன்னர் “கம்பன் என் காதலன்” பேச்சு மாதிரி தற்போது மகாபாரதம் பற்றிய தயாரிப்பில் இருப்பதாக அறிகிறேன். அப்படியானதொது நல்லவரை, வாழ்க்கையைத் திட்டமிட்டு, அதன்படியே வாழும் ஒரு தூயவரைப் பற்றிய நூலறிமுகத்திற்கு நன்றி அய்யா.
அவரைப் பார்த்து வாழ்வின் பாடம்
கற்கின்றப் பல்லாயிரக்கணக்கான ஏகலைவன்களில்
நானும் ஒருவன் எனச் சொல்லிக் கொள்வதில்
மிக்க பெருமிதம் கொள்கிறேன்
தலைவர்கள் மற்றும் முன்ன்ணியில் இருக்கிற
பிரமுகர்கள் எல்லாம் நான் சொல்வதைப் போல் வாழ்
நான் வாழ்வதைப் போல வாழ்ந்துவிடாதே எனச்
சொல்லுகிற வகையில் ஒரு செயற்கையான வாழ்வு
வாழுகின்ற இந்த நாளில் சொல்லுக்கும் செயலுக்கும்
சிறு மாறுபாடு இல்லாது வாழுகிற சிவக்குமார் அவர்கள்
வாழ்வும், அவர்தம் சமூகப்பணிகளும்ம்
மேலும் மேலும் சிறக்க அருளவேணுமாய் அன்னை
மீனாட்சியை வேண்டிக் கொள்கிறேன்
மனம் கவர்ந்த பயனுள்ள பகிர்வுக்கு
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
நன்றி ஜோதிஜி.
சிறப்பாக எழுதியிருக்கிறீர்கள்.
அருமை.
#லஷ்மியம்மா தன் கணவரைப் பற்றி சொல்லியவற்றை வாசிக்கும் போது என்னால் தொடர்ந்து வாசிக்க முடியவில்லை#
அப்படியென்ன சொல்லியிருப்பார்கள் என்பதை புத்தகத்தை வாங்கித் தெரிந்து கொள்ளும் ஆவலைத் தூண்டி விட்டீர்கள் !
வாங்கி படிக்க வேண்டும் !
//"சிவகுமார் எனும் மானிடன்"// புத்தகத்தின் தலைப்பில் மானுடன் என்றே உள்ளது, மானிடன் அல்ல. இரண்டு வார்த்தைகளும் ஒன்றுக்கொன்று மாற்றாக பயன்படுத்த இயலாது, நிறைய வேறுபாடு உள்ளது.
//"சிவகுமார் எனும் மானிடன்"// புத்தகத்தின் தலைப்பில் மானுடன் என்றே உள்ளது, மானிடன் அல்ல. இரண்டு வார்த்தைகளும் ஒன்றுக்கொன்று மாற்றாக பயன்படுத்த இயலாது, நிறைய வேறுபாடு உள்ளது.
// இந்தப் புத்தகம் எனக்கு மட்டுமல்ல, என் மூன்று குழந்தைகளுக்கும் என் மனைவிக்கும் கீதை //
இவ்வரிகளின் வாயிலாக இப்புத்தகத்தின் சிறப்பை அழகாய் உரைத்தீர் சகோ. புத்தகத்தை படிக்கும் ஆவல் மிகுந்து விட்டது.
அடுத்த பதிவுக்கு ஆவலுடன்....
தலைவனுக்கழகு தானே உவமையாதல். அவ்வகையில் திரு. சிவக்குமார் அவர்கள் மிகச்சிறந்த உதாரணபுருசர் என்பதனை அறிகிறேன். நிச்சயம் இந்த புத்தகத்தை வாசிக்க விரும்புகிறேன்
வாங்கி படிக்க வேண்டிய நூல்! நன்றி!
நல்ல ஒரு கலைஞனை, ரசிகனை, மனிதம் போற்றும் உத்தமனைப் பற்றிய அருமையான பகிர்வு. நேரிடையாக அவருடன் பேசுவதுபோல அமைந்துள்ள உங்களது எழுத்து எங்களை அந்நூலைப் படிக்கும் ஆவலைத் தூண்டிவிட்டது. நன்றி.
நன்றி உமையாள். நலமா?
எப்போது? படித்தவுடன் அழைக்கவும்.
நன்றி சுரேஷ்
அவசியம் வாங்கிப் படிக்கவும். நன்றி.
மாற்றி விட்டேன். நன்றி தாஸ்
நன்றி
இன்னமும் தொடர்பில் இருப்பதற்கு நன்றி சிவா
நான் தான் உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்.
நான் வாழ்வதைப் போல வாழ்ந்துவிடாதே எனச்
சொல்லுகிற வகையில் ஒரு செயற்கையான வாழ்வு
வாழுகின்ற இந்த நாளில் சொல்லுக்கும் செயலுக்கும்
சிறு மாறுபாடு இல்லாது வாழுகிற சிவக்குமார்
நன்றி ரமணி
பலருக்கும் இது போன்ற அனுபவம் உண்டு. நன்றி .
சிவகுமாரை எனக்கு நடிகர் என்பதைக்கடந்து பலவகைகளில் பிடிக்கும்
இதே தான் என் பார்வையும். நன்றி.
நன்றி குமார்
மனிதனாய் முழுமையாய் வாழ்ந்து காட்டி வருபவர் சிவக்குமார்
நிச்சயமான உண்மை. நன்றி.
நன்றி ராம்.
Post a Comment