Thursday, February 08, 2018

உணவு அரசியல்


புத்திசாலிகள் ஒரு விசயத்தில் கவனமாக இருப்பார்கள். உனக்குச் சோறு முக்கியமா? இல்லை உன் கொள்கை முக்கியமா? என்று கேள்வியை நம் முன் வீசுவார்கள். நமக்கு வேறு வழி என்ன? எனக்குச் சோறு தான் முக்கியம் என்போம். நம்மிடம் உள்ள கொள்கைகள் காலப் போக்கில் நீர்த்துப் போய்விடும். குடும்பம், குழந்தைகள் என்று ஆன பின்பு கொள்கையா? அது எங்கே தூத்துக்குடி, காரைக்குடி பக்கம் உள்ளதா? என்று கேட்கும் நிலைக்கு வாழ்க்கை கொண்டு வந்து நிறுத்தும்? 

இவர் எழுதும் விசயங்களைப் படிக்கும் போது அப்படித்தான் எனக்குத் தோன்றியது. காரணம் மரபணு மாற்றப் பயிர்கள் குறித்துப் பாராளுமன்றத்தில் நடந்த விவாதங்களை நாலைந்து தொடர் பதிவுகளாகப் பின்னால் உதவும் என்பதற்காக அதை எழுதி வைத்தேன். பல அரசியல்வாதிகளின் உண்மையான சொரூபம் அதில் தெரிந்தது. பல பன்னாட்டு நிறுவனங்களின் கொள்ளை லாப கொள்கைள் புரிந்தது. 

ஆனால் இவர் எழுதுவதை வாசித்த பின்பு எனக்கே சற்றுக் குழப்பம் வந்தது. உணர்ச்சி வேகத்தில் நாம் யோசிக்கின்றோமோ? என்று பல முறை இவரின் நீண்ட பதிவுகளை ஷேர் செய்து வைத்துக் கொண்டு இரவு வந்து பொறுமையாகப் படித்து உள்வாங்குவதுண்டு. 

பல சமயம் நம் மனதைக் குலைத்து விடுவார். நம் எண்ணங்கள் தவறு என்றே கொண்டு வந்து நிறுத்தி விடுவார். இவரும் தனி மனிதர்கள் தங்களின் அடையாளம் எனக் கருதும் சாதி சார்ந்த விசயங்களை நக்கலாக நையாண்டியாகக் கிண்டி கிளங்கெடுப்பதில் சூராதி சூரர். வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல வார்த்தைகள் கதம்பமாக மாட்டி வைத்து விடுவார். 

என் இது அடையாளம் என்று கருதிக் கொண்டவர்கள் விமர்சனம் வழியாக இவரை வந்து தொடர்ந்து விளாசி தள்ளிக் கொண்டேயிருப்பார்கள். அதற்கு இவர் அளிக்கும் பதில் இன்னும் சுவராசியமாகவே இருக்கும். எழுத்துச் சித்தர் என்று பட்டம் சூட்டலாம். 

ஆனால் சொல்ல வந்த விசயத்திற்குப் பின்னால் உள்ள சாதகப் பாதக விசயங்களை அலசி விட மனமில்லாது பொத்தாம் பொதுவாக அடித்து விட்டு நகர்ந்து விடுவார். எது சரி? எது தவறு? என்பதனை வாசகர்கள் தான் சுய சிந்தனை மூலம் தீர்மானித்துக் கொள்ள வேண்டும். 

இந்த வருடத்தில் எனக்குப் பிடித்த முகநூல் பதிவர்கள் இவரும் ஒருவர். வாழ்த்துகளும், நன்றியும், அன்பும். @Rs Prabu 

(This account has been deactivated. Only you can see RS on your friends list. ) 

மக்களின் பசி குறித்து அதிகம் யோசித்த காரணத்தால் தற்போது வனவாசம் போயிருக்கின்றார் என்றே நினைக்கின்றேன். 


Wednesday, February 07, 2018

மதம் மீறும் மனிதர்கள்


எனக்குத் தெரிந்தவரையில், நான் அறிந்தவரையிலும் இந்து மதத்தில் மதம் ஆட்சி செய்வதில்லை. சாதி தான் ஆதிக்கம் செலுத்துகின்றது. ஆனால் இன்றைய அரசியல்வாதிகள் மூலம் மதம் முன்னுக்கு வந்து கொண்டிருக்கின்றது. குழந்தைகள் படிக்கும் பள்ளியில் இந்த ஆண்டு முதல் முறையாகக் கிறிஸ்துவம், முஸ்லீம் மாணவ மாணவியர்கள் ஒவ்வொரு வகுப்பிலும் எத்தனை பேர்கள் படிக்கின்றார்கள் என்று கணக்கெடுத்தார்கள் என்று வந்து சொன்ன போது மனதிற்குள் பல விசயங்கள் வந்து போனது.

வலைபதிவில் பல இஸ்லாமிய நண்பர்கள் விமர்சனங்கள் வாயிலாக அறிமுகம் ஆனாலும் குறிப்பிட்ட சிலர் மட்டுமே மதங்களைத் தாண்டி யோசிக்கத் தெரிந்தவர்களாக இருக்கின்றார்கள். அவர்களை அறியாமல் அவர்களின் மதம் தான் முன்னுக்கு வந்து நிற்கின்றது. இது அவரவர்களின் தனிப்பட்ட கொள்கைகள் என்று நான் கண்டு கொள்ளாமல் கடந்து சென்று விடுவதுண்டு.

தன்னை உணராமல் தனக்கான அடையாளம் இது தான் என்று கடைசி வரைக்கும் நிரூபித்துக் கொண்டேயிருப்பது அவஸ்தையான வாழ்க்கை. அந்த வாழ்க்கையை என்றும் நான் வாழ விரும்புவதில்லை.

இவரின் எழுத்துக்கள் மிதவாதம் இல்லை. அதே சமயத்தில் தீவிரவாதமும் இல்லை. சக இஸ்லாமிய நண்பர்கள் இவரை அவ்வப்போது இப்படி எழுதாதீர்கள் என்று விமர்சனங்களில் வாயிலாகச் சுட்டிக் காட்டுவதையும் கவனித்து வந்துள்ளேன். ஆனால் இவர் தன் கொள்கைகளை மாற்றிக் கொண்டதே இல்லை.

ஒரு முறை பேசியுள்ளேன். நிச்சயமாக என்னால் சொல்ல முடியும். உண்மையான இஸ்லாம் சொல்லும் கொள்கையின்படி தான் வாழ்ந்து கொண்டிருப்பார் என்று நம்பிக்கை வரும் அளவிற்கு அவரின் உரையாடல் இருந்தது.

தன் குடும்பத்தை அதிக அளவு நேசிப்பவர். அதே அளவுக்குச் சமூகத்தைப் பாரபட்சமின்றி நேசிப்பவர் என்பதனை அவரின் எழுத்துக்கள் வாயிலாகப் புரிந்துள்ளேன். ஆனால் சொந்த வாழ்க்கையில் சுதாரிப்பு இல்லாதவர் என்பதால் பலருக்கும் உழைத்துக் கொடுப்பவர் என்ற நிலையில் அவர் மாற முடியாமல் தடுமாறிக் கொண்டேயிருக்கின்றார் என்பதனை யூகிக்க முடிகின்றது.

பணம் என்ற விசயத்தில், தன் உழைப்புக்குக் கிடைக்காத அங்கீகாரம் அதுவும் தான் சார்ந்த இன மக்களே சொல் ஒன்று செயல் ஒன்று வாழும் போது அதன் ஆதங்கத்தையும் அவ்வப்போது எழுத்தில் வாயிலாக வடிகாலாக மாற்றிக் கொண்டு திருப்தி பட்டுக் கொண்டு விடுகின்றார்.

திமுக என்பது இஸ்லாமியர்களின் விருப்பக்கட்சியாக இருந்தாலும் அதன் கொள்கைகள் மீதும், மாறிக் கொண்டே வரும் எண்ணங்கள் மீதும் விமர்சனத்துடன் தன் கருத்தைப் பதிய வைக்கின்றார். அதே போலச் சக இஸ்லாம் சார்ந்த தவறுகளையும் சுட்டிக் காட்டிவிடுகின்றார். சற்று மென்மையாக.

வாழ்த்துகளும் அன்பும் சற்று கூடுதல் பிரியங்களுடன். Jamesha Habib

https://www.facebook.com/home.planners.5?fref=mentions&pnref=story

Tuesday, February 06, 2018

மனிதம் பேசும் மனிதர்



இந்த வருடம் அழகிய மரம், பிரெஞ்ச் இந்தியா என்ற இரண்டு புத்தகங்கள் மட்டுமே வாசிக்க முடிந்தது. கடந்த 200 ஆண்டுகளில் நம் நாட்டில் கல்வி சார்ந்த நடைமுறைகள், வளர்ச்சிகள் எப்படி இருந்தது என்பதன் தேடுதலின் விளைவாக நண்பர் பரிந்துரைத்த புத்தகமிது.

ஆனால் கடந்த காலத் திராவிட வரலாற்றைத் தெரிந்து கொள்ள முயற்சித்து நேரம் கூடி வராத காரணத்தால் அதிக அளவு வாசிக்க முடியவில்லை. ஆனால் சுப.வீரபாண்டியன் ( Suba.Veerapandian ) காணொலி பேச்சுகளை அதிக நேரம் கேட்டேன்.

தினமும் இரவில் ஒரு மணி நேரம் என்று கணக்கு வைத்து அவரின் பல தலைப்புகளில் அடங்கிய பேச்சுகளைக் கேட்டேன். திமுக ஆதரவு ஏன்? என்பதற்கு ஒரு பேச்சில் பதில் அளித்துள்ளார்.

மற்றபடி பேராசியர், சிந்தனையாளர், நிதானமானவர் என்று பட்டியலிட்டுக் கொண்டே சென்று கொண்டேயிருக்கலாம். சில இருட்டுகள் அகன்றது. மனக் கதவு திறக்கக் காரணமாகவும் இருந்தது. ஒரு பேச்சில் அனுமன் ஜெயந்தி யை முன்னெடுக்கும் சன்டிவி குறித்துப் பேசினார். தமிழர்களின் வாழ்க்கையில் சன்டிவி முக்கியமானது. ஆனால் அவர்களின் கொள்கை எளிமையானது. கொள்கை தேவையில்லை. வியாபாரத்தில் லாபம் முக்கியம். தமிழர்களுக்கு எது தேவை? எப்போது தேவை? என்பதனை அவர்களின் ஒவ்வொரு வீட்டுக்குள் புகுந்து நாடிபிடித்துப் பார்க்காத குறையாக அவர்களின் தொழில் நிறுவன கொள்கைகளை எப்போதும் வியந்து பார்ப்பதுண்டு. இன்று தமிழர்கள் சன்டிவி யில் காலை நேரத்தில் வரும் ஜோதிட நிகழ்ச்சியைப் பார்க்காமல் தங்கள் வேலையைத் தொடங்குவதே இல்லை என்கிற நிலைக்கு பெரியார் கொள்கைகள் தமிழகத்தில் பரவியுள்ளது.

இதனை அப்படியே தற்போது இது திராவிடப் பூமி என்று சிலாகிப்பவர்களை, அவர்களின் எழுத்துக்களையும் மற்றொரு தட்டில் வைத்துப் பார்த்தால் தட்டுக் காலியாக இருப்பதை உணர முடியும். கொள்கை பின்னுக்குப் போய்விட்டது. கொள்ளை முன்னுக்கு வந்து விட்டது. நீர்த்துப் போன கொள்கைகளை இன்னமும் தொங்கிக் கொண்டிருப்பதை விமர்சித்தால் யாருக்கு முதலில் கோபம் வரும். அந்தக் கொள்கைகளை முன்னிறுத்தி தங்களை வளப்படுத்திக் கொண்டவர்கள், வளப்படுத்திக் கொள்பவர்களின் அருகே இருப்பவர்கள், நமக்கும் அந்த வாய்ப்பு வரும் என்று வரிசைப் பட்டியலில் காத்திருப்பவர்கள் அத்தனை பேர்களுக்கும் இவர் எதிரியாகத் தெரிகின்றார்.

இவரை மனநலம் குன்றியவர், மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் சொல்கின்றார்கள். இந்த வருடம் புதிதாக இஸ்லாமிய பெயரையும் சூட்டியுள்ளனர்.

மிகப் பெரிய வாசக பரப்பைக் கொண்டிருப்பவர்களி்ல் இவரும் ஒருவர். இவர் கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்படுகின்றார் என்ற அந்தச் சின்னத் தகவலை படித்ததும் மனதில் இனம் புரியா சோகம். வெளியே வந்த போது மனம் முழுக்க மகிழ்ச்சியாக இருந்தது. அந்தச் சில நாட்களில் இவரைப் பற்றி எழுதிய மாற்றுக் கருத்துக்களை ஒவ்வொன்றாக உள்வாங்கிக் கொண்டேயிருந்த போது ஒற்றை வார்த்தையில் மகிழ்ச்சி என்று கொண்டாடினார்கள்.

கொள்கைவாதிகளின் மனநலத்தை அவரவர் வார்த்தைகளின் மூலம் என்னால் அளவிட முடிந்தது.

இவர் நோக்கம் வெறுமனே விருப்பக்குறியீடு என்பதனை மட்டும் நோக்கமாகக் கொண்டு செயல்பட்டிருந்தால் மற்ற சமூகச் செயல்பாடுகளில் கவனம் செலுத்தாமல் பிழைப்பு வாதியாக இருந்திருக்கக்கூடும்.

எல்லோருக்குமான பொறுப்பு, கடமைகள் அனைத்தும் உண்டு. உலகை நேசிக்கப் பணத்திற்கு அப்பாலும் ஒரு உலகம் உள்ளது என்பதனை தீர்மானமான கொள்கையாகக் கொண்டிருப்பவர்களைப் பெரும்பான்மையினர் பொறாமையின் வடிவமாகப் பார்ப்பார்கள். வெளியே பாராட்ட மனமில்லாது வன்மத்தைக் கொட்டுவார்கள். ஏனைய பிற பட்டங்களையும் சமயம் பார்த்துத் தந்து உதவுவார்கள்.

அனைத்தையும் கடந்து வந்து கொண்டேயிருக்கின்றார். ஒரு முறை சந்தித்துள்ளேன். சில முறை பேசியுள்ளேன். நெருக்கமாக உணர்ந்துள்ளேன். இவரின் செயல்பாடுகள் எனக்கு எப்போதும் ஆச்சரியம் அளிக்கும். பிடிவாதக் கொள்கைகளைக் கரைத்து விட்டு ஏன் சராசரி வாழ்க்கைக்கு இவர் திரும்பி விடக்கூடாது? என்ற எளிய நடுத்தர வாழ்க்கை ஆசை எனக்கும் உண்டு.

அந்த வாழ்க்கை வாழும் நாம் என்ன பெரிதான சாதனைகள் செய்ய முடிந்தது? என்ற கேள்வியும் உடனே வரும். நிச்சயம் இந்த வருடம் இவருக்கும் ஏராளமான கேள்விகளுக்குப் பதிலும், உண்மையான நட்புகளையும் அடையாளம் காட்டியிருக்கும்.

உறவுகளை, நட்புகளை மதிக்கும் இவர் சமரசமில்லா கொள்கைவாதியாக இருப்பது என்னளவில் பெரிய ஆச்சரியமே? பெருநகரம் இன்னமும் விழுங்காமல் கிராமத்து வாசி எண்ணங்களுடன் வாழும் இவரின் குடும்ப உறுப்பினர்களுக்கு என் வாழ்த்துகள்.

வரும் ஆண்டுப் பொருளாதார ரீதியாக உயர்ந்த நிலைக்கு, பாதுகாப்பு வட்டத்திற்குள் செல்ல வேண்டும் என்ற வாழ்த்துகளுடன்.

#2017 மனிதத்தை நேசிக்கத் தெரிந்தவர். கொள்கை என்ற பெயரில் உள்ள கொள்ளைவாதிகளை அடையாளம் காட்டியவர். Bala G

Saturday, February 03, 2018

நட்பை வளர்க்கும் நண்பன்



நான் யாருக்கெல்லாம் விசுவாசமாக இருக்க முடியும்? என்று பட்டியலிட்டால் குடும்பம் முதல் இடத்தில் வந்து நிற்கும். அதன் பிறகு சூழ்நிலை பொறுத்து மாறும். அதில் முக்கியமாகச் சுயநலமே இடம் பிடிக்கும். தொழில் நகரம் என்பது புலி மான் வாழும் வேட்டைக்காடு. வேட்டையாடுதல் என்பது வளர்ச்சியின் அறிகுறி. பாவம், பரிதாபம், கருணை என்பது போன்ற வார்த்தைகள் தடை செய்யப்பட்டதாகவே எல்லா இடங்களிலும் இருக்கும்.

ஆனாலும் முடிந்தவரைக்கும் நேர்மை என்பதற்கு மதிப்பு இருப்பதில்லை. 90 பேர்களின் சிந்தனை ஒரு மாதிரியாகவும் 10 பேர்களின் சிந்தனை நல்லொழுக்கம் சார்ந்ததாகவும் இருந்தால் அது கிண்டலுக்கும் கேலிக்கும் உரியதாகவே இருக்கும். இது தான் தற்போதைய சமூகத்தின் நிலை. ஆனால் ஒத்த சிந்தனைகள் கொண்ட நட்புகள் அறிமுகம் ஆவதும் அது தொடர்ந்து இருப்பதும் நாம் செய்த புண்ணியம் என்றே நினைத்துக் கொள்வதுண்டு. அப்படிப்பட்டவர் இவர்.

ஆனால் இவர் ஒரு அக்மார்க் கொள்கைவாதி. ஈழம் சார்ந்த விருப்பங்கள் எங்கள் இருவரையும் ஒன்றிணைத்தது. தொடர்ந்து இயங்க வைத்தது. உரையாட வைத்துச் சந்திக்க வைத்தது. நம்பிக்கை பரஸ்பரம் வளர்த்தெடுத்தது. அவருக்காக நான் செய்தது இதுவரையிலும் எதுவுமே இல்லை. ஆனால் அவர் எனக்காகச் செய்தது என்பது பட்டியலிட முடியாத அளவுக்கு நீளம்.

இந்த வருடத்தின் தொடக்கத்தின் என் நீண்ட நாள் கனவான பன்னாட்டு நிறுவன வாய்ப்பு என்னைத் தேடி வந்தது. புறக்கணித்துத் திரும்ப வந்த போது முதல் முறையாக என் மேல் நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டு வந்தார். சரி, பிறகு ஆறுதல் படுத்திக் கொண்டுவிடலாம் என்று காத்திருந்தேன். மீண்டும் ஆசுவாசம் அடைந்து அடைகாக்கும் முட்டை போல என்னைப் பாதுகாத்தார்.

இருவரும் உணர்ச்சிப் பூர்வமான சிந்தனைகளில் இருந்து இந்த வருடம் தான் வெளியே வந்துள்ளோம். ஒவ்வொரு அரசியல் நிகழ்வுக்குப் பின்னாலும் உள்ள கள எதார்த்தம், எவரெல்லாம் திட்டமிடுகின்றார்கள்? எப்படிச் செயல்படுத்துகின்றார்கள்? எங்கே தொடங்குகின்றார்கள்? எப்படி வெகுஜன பார்வைக்குக் கொண்டு வருகின்றார்கள்? தருணத்தை எப்படி உருவாக்குகின்றார்கள்? எதற்காகக் காத்திருக்கின்றார்கள்? அடையக்கூடிய லாபங்கள்? வாங்கும் சக்தி உள்ள மக்கள் கூட்டத்தின் இழப்புகள் என்ன? போன்றவற்றை உரையாடும் அளவுக்கு இப்போது தான் இந்த வருடம் தான் எங்கள் இருவரின் எண்ணங்கள் மாறியுள்ளது.

உதவி என்பதனை செய்து விட்டு மறந்து விடும் இயல்பு உள்ளதால் இவர் நண்பர்கள் கூட்டத்தின் மூலம் இவர் கற்றதும் பெற்றதும் ஏராளம். நன்றாக எழுதுவார். ஆனால் உலக மகா சோம்பேறி. காரணங்களை அடுக்குவார். நான் கடந்து சென்றுவிடுவதுண்டு.

ஞாயிறு கூட வேலையிருக்கும் திருப்பூர் வாழ்க்கையில் வீட்டுக்கு வந்ததும், இன்று எழுதியே ஆக வேண்டும் என்ற சூழலில், எழுதும் கடமையில் மூழ்கி விடும் எனக்கும், அப்புறம் பார்த்துக்கலாம் ஜி என்று உரையாடும் இவருக்கும் அவ்வப்போது ஏட்டியும் போட்டியும் உருவானாலும் கூடப் பாம்பன் பாலம் (தொடக்கத்தில்) கட்ட உதவிய அந்தச் சிமெண்ட் போல ஏதொவொரு பந்தம் போட்டு கட்டியிருப்பதால் எட்டு ஆண்டுகளாக என்னை அவரும் கடல் தாண்டி வாழும் அவரை நானும் பரஸ்பரம் மாயக் கயிற்றால் கட்டி இழுத்துக் கொண்டு நகர்ந்து கொண்டிருக்கின்றோம்.

2017 வாழ்த்துகள் சொல்ல மாட்டேன். இறுக்கி அணைத்து ஒரு உம்மா. சரியா. இராஜ ராஜன்




Thursday, February 01, 2018

விதைகள் விதைக்கும் மனிதர்கள்


சிலருக்கு அறிமுகம் தேவைப்படும். சிலரை அறிமுகம் செய்து வைக்கும் போது அவரின் பிரபல்ய வெளிச்சத்தில் நாமும் குளிர்காய்கின்றோமோ? என்று வாசிப்பவர்களுக்கு எண்ணத் தோன்றும். ஆனாலும் அவர் குறித்த பார்வை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக இருக்கும். என் பார்வை என்ன? என்பதனை எப்போதும் வெளிப்படையாக அவ்வப்போது எழுதி வைத்து விடுவதுண்டு.

1990 க்குப் பிறகு தான் சுயசம்பாத்தியம் என்ற வாழ்க்கை அறிமுகமானது. அன்று முதல் காசு கொடுத்து வாரப் பத்திரிக்கைகள் வாங்கிக் கொண்டு வருகின்றேன். இரவல் மூலம் பெறுவதும், நூலகத்தில் சென்று படிப்பது என்பது பிடிக்காது. காரணம் அந்த இதழின் அத்தனை விசயங்களையும் படிப்பதோடு முக்கிய நிகழ்வுகள் என்றால் அதனைக் கத்தரித்து வைத்துக் கொள்வதும், மீண்டும் அதனைத் தகவலுக்காக எடுத்து ஒப்பு நோக்குவதும் உண்டு.

அரசியல்வாதிகளின் வாழ்க்கையில் அவர்களின் அறிக்கைகளைத் தொடர்ந்து சேமித்து வைத்திருந்தால் அவர்களின் சுயம் முழுமையும் நமக்குப் புரிய வரும். அவர்களின் மாறிய கூட்டணிக் கதைகளை எடுத்து வைத்திருந்தால் அவர்கள் சொல்லும் கொள்கைகளில் எத்தனை திருப்பங்கள் உருவானது என்பதனையும் நம்மால் புரிந்து கொள்ள முடியும்.

ஆனால் இவரின் வளர்ச்சியும், வளர்ந்த ஒவ்வொரு நிலையிலும் உழைத்த உழைப்பும், அரசியல் முதல் சமூகம் வரைக்கும் இவர் எழுத்துக்கள் மூலம் உருவாக்கிய தாக்கத்தை நண்பர் ஒருவர் இப்படிச் சொன்னார்.

"அறிவாலயத்தில் இவரைப் பற்றி ஒரு முறை பேச்சு வந்த போது கலைஞர் ஆட்சியைப் பிடிக்க இருக்கச் சமயத்திலும் இவர் எழுதிய கட்டுரைகளை அனைத்தும் பலருக்கும் வயிற்றில் புளியைக் கரைக்கக்கூடியதாக இருந்தது " என்றார்.

சலிக்காமல் எழுதுவது, பலவிசயங்களைப் பற்றி எழுதுவது, நம்ப முடியாத அளவிற்கு உழைப்பைக் கொட்டி ஆதார தகவல்களுடன், புள்ளி விபரங்களுடன் தொடர்ந்து எழுதுவது என்பது எத்தனை பேர்களால் முடியும்? என்று யோசித்துப் பார்த்தால் வியப்பாகவே உள்ளது. அதுவும் அரசியல் கட்டுரைகள் என்றால் பத்தோடு பதினொன்றாகக் காகிதமாக மாறிவிடும் வாய்ப்புள்ளது. இவரின் எழுத்துக்கள் கத்தரித்து வைத்த தாள்களும், அதே கட்டுரைகள் புத்தக வடிவில் வந்ததையும் சேகரித்து வைத்துள்ளேன். எப்போது படித்தாலும் அப்போது நடந்த நிகழ்வுகளின் தாக்கங்கள் இப்போது நம் முன் நிறுத்துவதாக உள்ளது.

ஈழப் போராட்டத்தில் முதலைக் கண்ணீர் வடிக்காத அரசியல்வாதிகளே இல்லை. ஆனால் இவரின் எழுத்துக்கள் தான் அந்தப் போராட்டத்தின் பல பரிணாமங்களை எவரும் வாசிக்கக்கூடியதாக இருந்தது என்றால் மிகையல்ல. மகாத்மா முதல் மன்மோகன் வரைக்கும் உள்ள நிகழ்வுகளின் சாராம்சங்களை நிச்சயம் பாடப்புத்தகங்களில் வைத்தாலே போதும். மாணவர்களுக்கு இதுவரையிலும் சொல்லப்படாத அரசியல் பற்றிப் புரிந்து கொள்ள முடியும்.

இதே போல ஒவ்வொரு புத்தகமும் பள்ளி, கல்லூரி மாணவர்களால் படிக்கப் பட வேண்டிய புத்தகம். பெரியோர்களே தாய்மார்களே தொடர் போல மற்றொரு எழுத முடியுமா? அதன் பேச்சுக் கோர்வையாக மாற்றிப் பலரின் காதுக்கும் கொண்டு சேர்த்த விதம் ஆச்சரியமளித்தது. எளிய வார்த்தைகள், இயல்பான நடை. உணர்வுகளைச் சீண்டிப் பார்க்கும் லாவகம் என எனக்குப் பிடித்த எழுத்தாளர்களின், ஆளுமைகளில் இவருக்கு எப்போதும் முக்கிய இடமுண்டு.

இன்னமும் உடன்பிறப்புகளால் வைகோ ஆதரவாளர் என்று முத்திரை குத்தப்பட்டாலும் பொறாமையும், அசூயையும் நிறைந்த ஊடக வெளிச்சத்தை முழுமையாகத் தன் மேல் பாய்ச்சி கொள்ளாமல், அடுத்தத் தலைமுறைகளை வளர்த்தெடுப்பதில் முக்கியப் பங்காற்றுவதில் இருந்தே சொல்லும் செயலும் ஒரே மாதிரியாக வாழும் வாழ்க்கையைப் புரிந்து கொள்ள முடியும்.

அறுபது வயதுக்கு மேலே தோன்றக்கூடிய ஞானம், எழுதக்கூடிய விசயங்கள் அனைத்தையும் பாதி வயதில் முடித்து விட்டார். என் கடன் பணி செய்து கிடப்பதே என்று வாழும் இவரின் வாழ்க்கையில் இனி எதிர்காலத்தில் எழுத எண்ண இருக்கும் என்று நினைத்துக் கொள்வதுண்டு.

இந்த வருடம் முழுக்க என்னைத் தன் எழுத்துக்களால், பேசிய ஒலித் தொகுப்பு பேச்சுக்களால் என்னை ஆக்கிரமித்தவர்.

ஒரு நிறுவனத்தின் பதவியை அடைந்ததும் பலருக்கும் செல்லும் பாதை குறித்த எண்ணங்கள் மாறிவிடும். ஆனால் ஒவ்வொரு வாரமும் புதிதாகப் பிறப்பது போல ஏறக்குறைய 34 வருடங்கள் தன்னை நிரூபித்துக் கொண்டேயிருப்பது என்பது வாங்கி வந்த வரமாகத் தெரிகின்றது. நாம் இவரைப் போல எழுத முடிவதில்லை என்று பலமுறை யோசிக்க வைத்தவர். சில சமயம் அவசரகதியில் வந்து விழும் கட்டுரைகளைத் தவிர்த்து நிச்சயம் 90 சதவிகித கட்டுரைகள் எந்தக் குறையும் இல்லாமல் வாசிக்க, சிந்திக்கத் தூண்டுவதாகவே உள்ளது.

முகநூல் பதிவுகளில் எதைப் பதிவேற்ற வேண்டும்? எப்படிக் கையாள வேண்டும்? என்பதனை இவர் மூலமாகவும் பலவற்றை இந்த வருடம் கற்றுக் கொண்டேன்.

எந்நாளும் நலமாய் வாழ வாழ்த்துகள்.

#2017 அடுத்து வரும் தலைமுறைகளுக்கு விதைகளை ஊன்றிக் கொண்டிருப்பவர் Thirumavelan Padikaramu🙋‍♂️