Tuesday, August 31, 2010

புரட்சித்தலைவர்
                                                                 நல்ல கருத்து
                                                              சமூக சிந்தனை
                                                              தார்மீக கோபம்
                                                              ஒன்று சேர்த்து
                                                     எழுதியதில் பரமதிருப்தி.

                                                          எழுத உதவிய புத்தகம்
                                                                 கசங்கிகிடந்தது.

                                                                             அட.............
                                                                            தேடிய 
                                                                பொருத்தமான படங்கள்
                                                                 கூகுளில் சிரித்தது.

                                                                               எழுதி 
                                                                     வெட்டி ஒட்டி 
                                                                            மாற்றி.
                                                                          கோர்த்து 
                                                            பொருத்தியாகிவிட்டது.

                                                                    இடுகையை
                                                        திரட்டியில் சேர்த்துவிட்டு
                                                                    எழுத மறந்த 
                                                                 வார்த்தையை 
                                                      மறுபடியும் உள்நுழைந்து
                                                       மறக்காமல் எழுதினேன்.

                                                         அம்மா தாயே மகராஜா
                                                                    மறக்காதீங்க

                                                             ஓட்டுப் போடுங்க.....
                                                             ஓட்டுப் போடுங்க...

Sunday, August 29, 2010

துளசி கோபால் நியூசிலாந்து புத்தக விமர்சனம்

நடன இயக்குநர் பிருந்தா ஒரு வெகுஜன ஊடகத்தில் நியூசிலாந்து குறித்து பேட்டி கொடுத்து இருந்தார்.  படித்து முடித்து சிரித்துக் கொண்டு அடுத்த செய்திக்கு தாவி விட்டேன்.  அவர் சொன்னபடி பார்த்தால் இந்தியாவில் வாழ்வதற்கே லாயக்கில்லை என்பது போல் இருந்தது. 

அடுத்த விமானம் பிடித்து நியூசிலாந்து சென்று விட்டால் அங்கே ஓடிக் கொண்டு இருக்கும் பாலையும் தேனையும் அள்ளிக் கொண்டு வரலாம் போல் அளந்து விட்டுருந்தார். அதிகபட்சம் பத்து நாள் பயணத் திட்டத்தில் பாடல் காட்சிகள் எடுத்த பிறகு கிடைத்த இடைவெளியில் அங்கங்கே தயாரிப்பாளர் செலவில் சுற்றி ஒவ்வொரு மக்களும் இப்படித்தான் இன்று வரை திரைப்பட மக்கள் ஊதி தள்ளிக் கொண்டு இருக்கிறார்கள். 

பயணித்த நாடுகள் சில என்ற போதிலும் இன்று வரையிலும் இந்த ஐரோப்பா மற்றும் அதனைச் சுற்றியுள்ள கண்டத்துக்குள் செல்ல ஏதோ ஒரு கண்டம் என்னை தடுத்துக் கொண்டே இருக்கிறது.  துளசி கோபால் எழுதியுள்ள நியூசிலாந்து என்ற புத்தகத்தை வாசித்து முடித்த போது அங்கேயே கால் நூற்றாண்டு காலம் வாழ்ந்தது போலவே ஒரு எண்ணத்தை உருவாக்கியது.

அரு. நாகப்பன், சோலெ, இதயம் பேசுகிறது மணியன், லேனா தமிழ்வாணன் போன்றவர்களின் பல பயணக் கட்டுரைத் தொடர்களை படித்து இருந்தாலும் இவரின் எழுத்துக்கள் ஒரு வித்யாச அனுபவத்தை தந்தென்னவோ உண்மை. போகிற போக்கில் ஒவ்வொருவரும் பார்த்த பார்வைக்கும், உள்ளேயே வாழ்ந்து அந்த நாட்டைப் பற்றி எழுதும் போது படிப்பவருக்கு நம்பகத்தன்மை யை மேலும் அதிகப்படுத்துகிறது.  அதைத்தான் துளசி கோபால் தான் வாழ்ந்த நியூசிலாந்து நாட்டைப பற்றி முழுமையாக புரிய வைத்து வெற்றி பெற்று உள்ளார். 

ஏற்றுமதி நிறுவனங்களின் முதலாளிகள் வெளிநாடுகள் செல்லும் போது ஒரு மாதத்திற்கு முன்பு அந்த நாடுகள் குறித்து தகவல்களை திரட்டி, அங்கிருந்து மற்றொரு நாட்டுக்குச் செல்லும் வழித்தடங்கள் முதல் தங்குமிடம் வரைக்கும் வலையில் திரட்டிக் கொடுக்கும் வாய்ப்புக்கு பிறகு இப்போது தான் முழுமை யாக ஒரு நாட்டைப் பற்றி புரிந்து படிக்க முடிந்தது, வெறுமே இந்த புத்தக விமர்சனம் என்று ஒரே பார்வையாய் பார்ப்பதை விட சற்று விபரமாக பார்க்க லாம் 

மொத்தம் நான்கு பகுதிகளாக பிரித்துள்ளார். நியூசிலாந்து மண்ணின் மைந்தர்களைப் பற்றி, ஆங்கிலேயர்கள் படிப்படியாக நாட்டை ஆக்ரமித்தது என்ற இரண்டு பகுதிகளுக்குள் நீங்கள் பயணிக்கும் போது சற்று கடினமாக இருக்கலாம்.  ஆனால் நியூசிலாந்து நாட்டில் வாழ்பவர்களுக்கே இத்தனை விபரங்கள் தெரிந்து இருப்பார்களா? என்பது ஆச்சரியம்.  நம்மில் எத்தனை பேர்களுக்கு இந்தியாவின் முழுமையான சரித்திரம் தெரியும்?

இவருக்கென்று ஒரு நடை உள்ளது.  அதைத்தான் எழுத்தாளருக்கென்ற இருக்கும் நடையை உடைத்தெறிந்து எப்படி வேண்டுமானாலும் எழுதலாம்.  படிப்பவருக்கு புரிந்தால் சரி என்கிறார். அதைத்தான் இந்த புத்தகம் முழுக்க பாயச முந்திரிப்பருப்பு போல தூவிக்கொண்டே செல்கிறார்.

பார்த்த கேட்ட படித்த அத்தனையும் கலந்து அதன் மேல் நகைச்சுவைப் பொடியைத் தூவி நியூசிலாந்து என்ற சர்க்கரைப் பொங்கலைத் தந்துள்ளார். உண்மையிலேயே நியூசிலாந்து என்ற நாடு சர்க்கரை பொங்கல் தான். பொறாமையா இருக்கு.  யாருக்குத் தான் பிடிக்காது?

90 சதவிகிதம் அரசாங்க பள்ளிகள் மட்டுமே. மனப்பாடமா?  நோ, நோ,  சும்மா விளையாட்டு போல அப்படியே ஜாலியா..........நீங்கள் ஏழ்மை என்றால் உதவித்தொகை அரசாங்கமே கொடுத்து விடும்.  நம்ம மக்கள் அதிலும் மிச்சப் படுத்தி வந்து போகும் செலவிற்கு வைத்துக் கொள்ள முடியும் என்றால் தொகையின் அளவை உங்கள் யூகத்திற்கே விட்டுவிடுகின்றேன். ஆனால் இதையெல்லாம் விட ஒரு ஆச்சரியம்.  மக்கள் தொகையே 40 லட்சம்.  ஆனால் வளர்ப்பு ஆடுகளின் எண்ணிக்கை 480 லட்சம்.  எப்பூடி?
சிங்கப்பூர் மாதிரியே புள்ள குட்டிய பெத்துக்கிங்கன்னு அரசாங்கம் கெஞ்சாத குறை தான். அதுவும் எப்படி?  வயித்துப்புள்ள காரின்னா அரசாங்கம் கொடுக்கற ராஜமரியாதை ரொம்பவே அதிகம்.  உச்சகட்டமாய் புள்ளைக்கு ஆய் போனா கழுவி துடைச்சு விடுற வரைக்கும் அநியாயத்திற்கு வயித்தெரிச்சல் வர வழைக்கிற அரசாங்க அமைப்பு.

ஆனால் புருஷன் பொண்டாட்டிங்றதெல்லாம் கெட்ட வார்த்தை.  எல்லாமே பார்ட்னர் தான். நம்ம ஊரு கவுன்சிலருக்கு கட்டிங் வசூலிக்கிறது ஒரு தலையாய கடமை போல அங்குள்ள நகர கவுன்சிலுக்கு மண்டையிடி சமாச்சாரங்றது குளிர்காலத்துல உஷ்ணத்துக்காக கட்டைகளை எரிக்கும் போது வர்ற புகையை போக்க நடவடிக்கை எடுப்பது தான். 

விமான போக்குவரத்துக்கு இடைஞ்சலா இருக்க இப்பொழுதெல்லாம் ஹீட்டர் அந்த பிரச்சனையை போக்கிவிட்டது.  அந்த கவுன்சிலர் நிச்சயம் கூட ரெண்டு பெக் போட்டு ஓய்வு எடுத்துக்கிட்டு இருக்கக்கூடும்.

சிங்கப்பூர் மக்களின் ஆங்கில உச்சரிப்பு போல இங்கும் ஒரு வினோத ஆங்கிலம் புழங்குகிறது.   காரணம் பக்கத்தில் ஆஸ்திரேலியா. குளிர் காலத்துல உங்களுக்கு போற வாய்ப்பு இருந்தால் படங்களில் கதாநாயகன் பொறாமைபடுத்திய பனிச்சறுக்கு விளையாட்டு விளையாடிப் பார்க்க வாய்ப்புண்டு. என்னவொன்று அந்த குளிருக்கு தாக்குப்பிடிக்க வேண்டும்.  ச்சும்மா அதிகமில்லை.  மைனஸ் கீழே போய் நிற்கும்.  வெடவெடன்னு குளிரத்தாங்குவீங்களா இல்லை குளிர போக்க வைக்க பார்ட்டனர தேடுவீங்களா? 

மற்றொரு கொடுமை இந்த நாட்டில் உண்டு.  நம்மூரு காவல் நிலையத்திற்குள் உள்ளே நுழைந்தால் ஒரு வாசகம் உங்களை வரவேற்கும். " உங்கள் நண்பன் காவல் துறை" ,  உள்ளே போனா என்ன மரியாதை கிடைக்கும்ங்றது  உங்களுக்கேத் தெரியும்.  உண்மையிலே இங்குள்ள காவல் துறை அத்தனை பேர்களும் அரிச்சந்திர பரம்பரைபோலவே இருக்கிறார்கள். எழுதிய ஆசிரியர் தான் கண்டுபிடித்த மற்றொருவருடைய கடவுச்சீட்டை கொண்டு போய்ச் சேர்த்த ஒரு நகைச்சுவையை படித்தால் ஒன்று நீங்க நம்பமாட்டீங்க.  அல்லது பூகோள சொர்க்கம்ன்னு சொல்லத் தோன்றும்.

எந்த வாகனமும் பெரும்பாலும் ஹாரன் சப்தம் அடித்து காது சவ்வை கிழிப்ப தில்லை. சாலை விதிகளை மீறி நீங்கள் ஏதாவது டகால்டி வேலை செய்ய நினைத்தால் உங்கள் முகம் ஏதோ ஒரு புகைப்பட கருவியில் தெரிந்து உங்கள் கூலியை கொண்டு போய் கொட்ட வேண்டியது தான். சட்டம் தன் கடமையைச் செய்யத் தொடங்க எந்த வட்டம் சதுரமும் வந்து பரிந்து பேச முடியாது.   காரணம் அரசியல்வாதிகள் கூட கடைத் தெருவில் வந்து காய்கறி முதல் சாமான்கள் வாங்குவது வரை சர்வசாதரணம்.  உங்களுக்கு இந்திய சமையல் நன்றாகத் தெரியுமா?  அப்படியே விசாரித்து மெல்ல கிளம்பி விடுங்க.  அங்கே போய் கடைதிறக்க வாய்ப்பு இருந்தால் துட்ட அள்ளி குவித்து விடலாம்.  அந்த அளவிற்கு இந்திய உணவகங்கள் அட்டகாசமா பெருகிகிட்டுருக்கு.

ஆனால் குடும்பத்தோடு நீங்க வசிக்கனும்ன்னு நினைத்து போனா உங்க புள்ளையங்களை நீங்க மட்டுமல்ல சொல்லிக்கொடுக்கும் ஆசிரியர் கூட அடிக்க முடியாது.  பயபுள்ளைங்க ஊரக்கூட்டி சட்டத்துக்கு முன்னால நிறுத்தி விடுவாங்க.  பசங்க ஆறடி இருக்க வாத்தியார் என்ன செய்து விட முடியும்?  எட்டி எட்டி பார்த்து விட்டு எட்டிப் போய்விட வேண்டியதுதான். 16. 17 வயதில் தொலைக்காட்சியிலும் பசங்க மத்தியிலும் சூடான விவாதம் என்ன தெரியுமா?  பாதுகாப்பான உடலுறவு.  நாம மாத்ருபூதம் பேசிய போது அவர் சொல்ல வந்ததை விட்டுட்டு வேறு ஏதும் சொல்வாரான்னு பார்த்த நாம் இன்னும் போக வேண்டிய தூரம் ரொம்ப இருக்கு.
இதெல்லாம் விட ஆச்சரியம் துளசிகோபால் குடியிருந்த பகுதியில் குடியேறிய முதல் தமிழ் குடும்பமே இவங்க தான்.

தொடர்ந்து பயணிப்போம்.....................

வெளியீட்டாளர்கள் 

சந்தியா பதிப்பகம்
ப,எண் 57 53வது தெரு,
9 வது அவென்யூ,
அசோக் நகர்,
சென்னை 600 083
தொலைபேசி 044 24 89 69 79
விலை 200 ரூபாய்.
பக்கங்கள் 352

ஆசிரியர் வலைதள முகவரி 

Thursday, August 26, 2010

வேலை காலி இருக்கு

" உங்களை ரிலையன்ஸ் நிறுவனத்திற்காக தேர்ந்தெடுத்து உள்ளோம். தங்கள் தகுதியின் அடிப்படையில் அதிகபட்ச சம்பளம் கீழ் கண்டவாறு வழங்கப்படும். தங்களது கல்வித் தகுதி சான்றிதழ்களுடன் இந்த தேதியில் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளுமாறு அழைக்கின்றோம். சம்பளம் பன்னாட்டு சட்ட திட்ட  அடிப்படையின் கீழ் தங்களுக்கு வழங்கப்படும்."

இதற்கு கீழே கண்களுக்குத் தெரியாத சிறிய எழுத்துக்களில் பஞ்சப்படி பயணப் படி என்று நொந்தபடியாய் எழுதி நோகாமல் நோம்பி கொண்டாடியிருந்தார்கள்.

கருமாதி சடங்குக்கு அச்சடிக்கப்படும் அட்டை யைப் போன்ற ஒன்றை என்னுடைய அலுவலகத் திற்கே கொண்டு வந்த முருகேசு கொடுத்து விட்டு என் மூஞ்சியைப் பார்த்துக் கொண்டுருந்தான். எனக்கே சற்று குழப்பாக இருந்தது.  என்னடா?  நமக்குத் தெரியாமல் திருப்பூரில் ரிலையன்ஸ் ஏற்றுமதி நிறுவனம் ஆரம்பித்து உள்ளார்களா?

ஏற்கனவே ஒரு ரிலையன்ஸ் என்ற பெயரில் நிறுவனம் உண்டு. அதுவும் அந்த பெயர் முக்கியமாக சாயப்பட்டறைக்கு அல்லவா வைத்து இருந்தார்கள்.  அது வும் உள்ளூர் வாசிகள்.  ரொம்பவே குழம்பிப் போய் அதில் உள்ள முகவரியை முழுமையாக படித்த போது அதன் கேப்மாரித்தனம் புரிந்தது.

அமைச்சர் ப சிதம்பரம் ஒரு கூட்டத்தில் பேசும் போது " வேலையில்லை என்று சொல்லாதீர்கள்.  திருப்பூரில் சென்று பாருங்கள்.  எங்கு பார்த்தாலும் ஆட்கள் தேவை என்ற அட்டை கட்டி தொங்க விட்டுக் கொண்டுருக்கிறார்கள் " என்றார்.  அவரைப் பொறுத்தவரையில் உள்ளூர் பகுதியில் வேலை வாய்ப்புகளை உரு வாக்குவதை விட இப்படி துரத்தி அடித்து அனுப்பி விட்டால் போதுமானது என்று யோசிக்கிறார் போலும்.  அவர் சொன்னதைப் போலவே இந்த அட்டைக் கலாச்சாரம் இங்கு அதிகமாகவே உண்டு.

இங்குள்ள காசு புழக்கத்தை பார்த்து விட்டு, படிக்காத தற்குறிகள் கூட ஜெயித் துக் கொண்டுருப்பதை கண்டு கொண்ட போது பல முறை யோசித்தது உண்டு.  ஏன் பெரிய நிறுவனங்கள் எவருமே திருப்பூருக்குள் காலடி வைக்காமல் இருக் கிறார்கள்.  டாடா,பிர்லா,அம்பானி, கோயங்கா,தாப்பர்,மபத்லால் போன்ற அத்தனை பேர்களுக்கும் ஆடைத் தொழிலில் நல்ல அனுபவம் இருப்பவர்கள். தலைமுறைகள் தாண்டியும் இன்றும் ஜெயித்துக் கொண்டுருப்பவர்கள். ஆனால் எவருமே திருப்பூர் பக்கம் காலடி வைத்தது இல்லை.

இவர்களுக்கு கர்நாடக மாநில தாவண்கெரேவில் இருந்து தொடங்கி குஜராத், மகாராஷ்டிரம் டெல்லி வரைக்கும் மிகப் பெரிய ஆடைத் தொழில் நிறுவ னங்கள் உண்டு. அத்தனையும் பக்கா வடிவமைப்பு.  மேல்மட்ட நிர்வாகம் முதல் அடிம்ட்ட பணியாளர்கள் வரைக்கும்

அனுபவத்திற்கும் தகுதிக்கும் மதிப்பளிப்பவர்கள். அறைகுறையாய் ஞானம் பெற்றவர்கள் உள்ளே ஜல்லியடிக்க முடியாது. உள்ளுர் விற்பனை முதல் உலகளாவிய வியாபாரம் வரைக்கும் உள்ள திட்டமிடுதலுடன் கூடிய வியா பாரம் செய்து கொண்டுருப்பவர்கள்.

முக்கியமாக இவர்களின் லாப சதவிகிதமென்பது என்றுமே மூன்று இலக்க சதவிகிதமாகத்தான் இருக்கும்.  வெறுமனே ஐந்து பத்து என்றால் காத தூரம் ஓடிவிடுவார்கள்.

பி டெக் முதல் பேஷன் டிசைனிங் வரைக்கும் படித்த அத்தனை மேதாவிகளும் பெரும்பாலும் பெங்களூர், மும்பை,டெல்லி பக்கம் சென்று விடுகிறார்கள். அங்கிருந்தபடியே திருப்பூருக்குத் தான் ஓப்பந்தங்கள் வந்து சேரும்.  ஆனால் நிர்வாகம் முழுக்க அங்கிருந்தபடியே தான் செய்வார்கள். தரம் பார்ப்பவர்கள் மட்டுமே இங்கு வந்து போய்க் கொண்டுருப்பார்கள். அவர்களும் வார இறுதியில் ஓட்டமாய் ஓடி விடுவார்கள்.

இங்குள்ள ஒரே தாரக மந்திரம்.

" நீ உழைத்துக் கொண்டேயிரு.  இரவு பகல் பாராமல் உன்னால் உழைக்க முடியுமா? முழு இரவும் முழித்து வேலை பார்த்து விட்டு மறுநாள் டாண் என்று காலை எட்டு மணிக்கு வந்து நிற்க முடியுமா? நீ தான் முதல் தகுதி யாளன்.  நாளை செத்துவிடப் போகிறாயா?  நல்லது.  உன் தம்பி யைக் கொண்டு வந்து சேர்த்து விட்டு செத்துப் போ. நிர்வாக அமைப்பா? அது எதற்கு?  சொன்னதைச் செய்?  சட்ட திட்டங்கள்?  அவர்கள் கிடக்கிறார்கள் பன்னாடைகள்.  அவர்கள் வந்து இறங்கும் போது பார்த்துக் கொள்ளலாம்."

பணம்...பணம்...பணம்...

பணம் மட்டுமே குறி.வீட்டின் உள்ளே ஐந்து கார்கள் பயன்படுத்தாமல் நின்றா லும் நேற்று எந்த கார் சந்தையில் வந்துள்ளது என்ற ஆர்வம் தான் அதிகமாக இருக்கிறது.

15 வருடத்தில் ஒவ்வொருவரும் பெற்ற பணம் என்பது தமிழ்நாட்டில வேறெந்த மாவட்ட மக்களும் பெற முடியாத ஒன்று.  சேர்த்த பணம் இன்னும் மூணு தலை முறைக்கு போதுமானது.  ஆனாலும் வெளியே கொடுக்கும் காசோலை கழிவு துடைக்கக்கூட பயன்பட முடியாத காகிதமாய் இருக்கிறது.

தொடக்கத்தில் மானம் பெரிது என்று வாழ்ந்த பெரியவர்கள் மறைந்து இன்று பணத்திற்காக எந்த எல்லைக்கும் செல்லலாம் என்ற புதிய தலைமுறை பீடு நடை போட்டுக் கொண்டுருக்கிறது.

ஒவ்வொரு குழிபறித்தலையும் தாண்டி முன்னேறிக் கொண்டே இருக்க வேண் டும். பணம் என்பது மாயப் பேய் மட்டுமல்ல.  மயக்கும் பிசாசும் கூட.   வரும் வரைக்கும் ஆட்டம் காட்டும்.

 வந்து சிநேகமாக பழகிவிட்டால் பணம் படைத்தவர்கள் செய்யும் சின்னப்புத்தி களுக்குக்கூட சமூகம் சிறப்பாய் பெயர் சூட்டும். இப்படித்தான் ஒவ்வொருவரும் இன்று வரை இந்த தொழிலை குடிசைச் தொழில் போல நடத்திக் கொண்டு இருக்கிறார்கள்.

பணத்திற்கு அப்பாலும் ஒரு வாழ்க்கை உண்டு என்று வாழ நினைப்பவர்க ளுக்கு நகரமென்பது ஒரு வகையில் நரகம் தான்.

பணத்தை சாக்கு பையில் வைத்துக் கொண்டு கொட்டிக் கொண்டே இருக்க வேண்டும்.  கொட்டினாலும் ஒவ்வொரு நிமிடமும் உயிரை கையில் பிடித்துக் கொண்டு தான் இருக்க வேண்டும்.  மிகப் பெரிய தேசிய அளவில் உள்ள வளர்ந்த நிறுவனங்கள் குறிப்பிட்ட லாபத்தில் கண்ணாய் இருப்பார்கள்,

ஆண்டு அறிக்கையில் எண்கள் மாறி வந்தாலே பிரச்சனை என்று தெரிந் தாலோ குறிப்பிட்ட பக்கம் தலை வைத்துக் கூட படுக்க மாட்டார்கள்.  அப்படியே ஒப்பந்தங்கள் கையில் இருந்தாலும் அதை மற்றவர்கள் மூலம் செய்து அனுப்பத்தான் பார்க்கிறார்கள். துணி சந்தைக்கும், ஆய்த்த ஆடை உலகத்திற்கும் ரொம்பவே வித்யாசம்.

ஜெம் கிரானைட் அதிபர் வீரமணி கூட நிறுவனம் தொடங்கிப் பார்த்தார்.  கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த கூட சில ஆண்டுகள் வெற்றிகரமாக அலுவலகம் மூலமாக நடத்திப் பார்த்தார்.  ம்ம்ம்....நகர்த்த முடியவில்லை.  மண் ராசியா இல்லை வேறு எதுவும் தோஷமா? ஒன்றும் புரியவில்லை.

ஆனால் இந்தியாவில் உள்ள அத்தனை முக்கிய பிரபல்யத்திற்கும் இங்கு ஏதோ ஒரு வகையில் தொடர்பு இருக்கத்தான் செய்கிறது.  காஷ்மீர் முதல் கன்யா குமரி வரைக்கும் குலாம் நபி ஆசாத் முதல் இன்றைய தமிழ் நாட்டு பிரபல்யங் கள் வரைக்கும் அவர்களின் " உழைத்த " பணம் இங்கு பல வகையில் உழைத்துக் கொண்டுருக்கிறது.

இது அந்த நடிகரின் பினாமி நிறுவனம், இது இந்த அரசியல்வாதியின் நிறுவனம்.

இதில் அவருக்கும் பங்குண்டு என்று போகிற போக்கில் சொல்லிக் கொண்டே
செல்வார்கள்.  சிலருக்கு குறிப்பிட்ட நபர்கள் வந்து இறங்கும் போது நடு இரவு தரிசனம் கிடைக்கிறது.  பலருக்கும் பார்த்தவர்கள் சொல்லும் வெறும் வார்த்தைகளில் நம்பக்கூடியதாக இருக்கிறது.

வாழப்பாடி ஒருவரை வளர்த்தார்.  வாய்தா பார்ட்டி மற்றொருவரை உருவாக்கி னார். முதல் கட்ட ஆட்சியின் போது வந்து இறங்கிய பணமும், கோட்டையில் இருந்து போக்குவரத்தை கவனிக்க சொல்ல அவரின் போக்குவரத்து கோபி வரைக்கும் பாசனமாய் நீண்டது. அவரால் வளர்ந்தவர்கள் இன்று முதன்மை இடத்தில் இருப்பவர்கள். அன்றைய ஒரு நாள் மூதலீடு உயிர் இருக்கும் வரைக்கும் காப்பாற்றிக் கொண்டே இருக்கும்.

முந்தைய ஆட்சியில் மேலே நெடுஞ்சாலையுடன் இலவச இணைப்பாக பல துறைகளை வைத்து இருந்தவர். ஈழத்துக்கு தலைமையேற்றுச் சென்றவர்.  வெளியே விட்ட பணத்தில் முக்கால் வாசி கோவை மாவட்டத்தில் தான் புழங்கியது.  வட்டி வந்து சேர வேண்டும்.  இல்லாவிட்டால் இடத்தின் பத்திரங்கள் பெயர் மாறி விடும்.

பஞ்சாலை முன்னேற்றத் திட்டங்கள் என்று பஞ்சசை பராரியாக தவித்துக் கொண்டுருக்கும் நிறுவனங்களை அமைச்சர் உள் வட்டத்திற்குள் கொண்டு வந்து கொண்டுருக்கிறார்.  உங்கள் நிறுவனம் வங்கி கடன் சுமையில் மூழ்கிக் கொண்டுருக்கிறதா?

இது தான் டீல்.  இங்கே வா.  டீலா? நோ டீலா?  அடுத்த நிதி வாரிசு ராஜ நடை போட்டு சிகரத்தில் ஏறிக் கொண்டுருக்கிறார்.

இவர்கள் மேல் தவறில்லை.  மக்கள் ரொம்பவே மாறிவிட்டார்கள்.  எங்கள் ஊரில் இத்தனை பேர்கள்.  மொத்தமாக ஒரு ரேட் பேசிக்கலாம்.  தலைவரிடம் கொடுத்துடுங்க.  நாங்க பிரிச்சுக்கிறோம்.  அப்புறம் எப்போதும் போல கிடா வெட்டு பிரியாணி அது தனியா நடத்திடுங்க.  சிந்தமா சிதறமா வந்து குத்திட்டு வந்துடுறோம்.  அரிசி விலை உயருதோ இல்லையோ ஓட்டு விலை ரொம்பவே ஒசந்து போச்சு. மக்களுக்கு வழி காட்டியவர்கள் இப்போது முழி பிதுங்கிக் கொண்டுருக்கிறார்கள்.

இப்படித்தான் வாழ வேண்டும்.  இவ்வாறு தான் யோசிக்க வேண்டும் என்ற ஒரு நடுத்தர சமூக கட்டமைப்பு உருவாக்கி பல காலம் ஆகி விட்டது.  உண்ண இலவசம்.  உடுக்க இலவசம்.  உறங்க இலவசம் என்று சொல்லிக் கொண்டே வருபவர்கள் நீ தேர்ந்தெடுக்கும் கல்லூரி படிப்பும் இலவசம்ன்னு எவரும் சொல்ல மாட்டேன் என்கிறார்கள்.  இந்திய சரித்திரத்தில் மதுவை ஊற்றிக் கொடுப்பவர்களுக்கு காவல் காத்த பெருமை நம் தலைவர்களுக்குத் தான் சேரும்.

காரணம் சரியான முறையில் யோசிக்க கற்றுக் கொண்டால் கேள்வி கேட்ட ஆரம்பித்து விடுவீர்கள்?  பள்ளி இறுதி வரைக்கும் வருபவர்கள் எத்தனை பேர்கள் கல்லூரி செல்கிறார்கள்?  சென்றவர்களில் முறைப்படி தகுதியான வேலைக்கு எத்தனை பேர்களால் சென்றுவிட முடிகிறது?

சீனாவில் 15 ஆண்டுகளுக்கு முன்பே தொழிற்கல்வியில் கவனம் வைத்து வளர்த்த காரணங்களால் இன்று அத்தனை பேர்களுக்கும் வேலை வாய்ப்புகள் உருவாகி உலகை அச்சுறுத்திக் கொண்டுருக்கும் அத்தனை இறக்குமதிகளும் குடிசைத் தொழில் போலவே நடந்து கொண்டுருக்கிறது. இங்கு உள்ளுரிலும் வேலை வாய்ப்பில்லை.  பிழைக்கப் போகும் இடங்களிலும் வாய்ப்புகளைத் தேடி அலைய வேண்டிய நிலைமை.

அதனால் தான் ஊர் விட்டு ஊர் சென்று பிழைக்க வேண்டிய சூழ்நிலையை முறைமுகமாக உருவாக்கிக் கொண்டு இருக்கிறார்கள்,

திருப்பூரில் இருக்கிறாயா?  ஓட்டுப் போடும் சமயத்தில் வண்டி அனுப்புகி றோம்.  வந்து சேர்..  உள்ளேயிருந்தால் தான் பிரச்சனை.  ஊரை விட்டு வெளியேறி விட்டால் அத்தனையும் மறந்து விடுவாய்.

தொழிற் நகரங்களில் வந்து இறங்குபவர்களுக்கு தன்னைக் காப்பாற்றிக் கொள்ளவே நேரம் சரியாக இருக்கும். அப்படித்தான் வந்து இறங்கிக் கொண்டே இருக்கிறார்கள். ஒவ்வொரு தேர்தலின் போது ஒவ்வொரு மாவட்ட மக்கள் வசிக்கும் இடங்கள் பார்த்து வரிசையாக பேரூந்துகள் வந்து நின்று அழைத்துச் செல்லும் ஜனநாயக அமைப்பை நீங்கள் பாராட்டா விட்டால் நீங்கள் எதிரிக் கட்சிக்காரர் என்று அர்த்தம்.

திருப்பூர் பழைய பேரூந்து நிலையத்தில் வந்து இறங்கினால் புரியும்.  இனி அட்டை கட்ட இடமே இல்லை என்கிற அளவிற்கு எங்கெங்கு காணிணும் அட்டையடா என்று தொங்கிக் கொண்டுருக்கும்.

 ஓவர்லாக் பேட்லாக் டைலர் தேவை.  கைமடிக்க, பிசிர் வெட்ட ஆட்கள் தேவை, செக்கிங் பெண்கள் தேவை.  டையிங் நிறுவனத்திற்கு ஆட்கள் தேவை.  தங்குமிடம் உணவு இலவசம்.  வண்டி ஓட்டுநர் தொடங்கி மீட்டர் வட்டிக்கு கொடுத்து வராக்கடன்கள் வசூலிக்க தாட்டியான இளைஞர் பட்டாளம் வரைக்கும் இங்கு தேவை அதிகமாகத் தான் இருக்கிறது.

தொடக்கத்தில் இந்த வேலை வாய்ப்புகளைப் பார்த்து புற்றீசல் போல் நிறைய சேவை மையங்கள் உருவானது.  அதிகாலையில் வந்து இறங்குபவர்களை கப்பென்று பிள்ளைபிடிப்பவர் போல கவர்ந்து கரைத்து சம்பாரித்துக் கொண்டு இருந்தார்கள்.

சேர்க்க ஒரு காசு. சேர்க்கும் இடத்தில் ஒரு காசு.  இதுவே ஒரு சமயத்தில் ஒரு குழுவை வைத்துக் கொண்டு உள்ளே வெளியே என்று ஆடு புலி ஆட்டம் காட்டிக் கொண்டு பல நிறுவனங்களை கவிழ்த்துக் கொண்டுருந்தார்கள்,  இவையெல்லாம் தெரிந்தும் முருகேசு பொண்டாட்டிக்கு பயந்து போக்கு காட்ட
முடியாமல் போக வேண்டியதாகி விட்டது.

பாதியில் விட்ட படிப்பையும் தொடர முடியாமல் பெண் வேட்டையில் திரிந்து கொண்டுருந்தவனை பொட்டலமாய் கட்டி இங்கே அனுப்பிவிட்டார்கள். ஊரில் சுற்றிக்கொண்டுருந்த மச்சினன் தினந்தந்தியில் வந்த நடிகை படத்திற்கு பக்கத்தில வந்த கவர்ச்சிகரமான விளம்பரத்தைப் பார்த்து எழுதி போட்டு இருக்க அழைப்பு அட்டை சென்று விட்டது.

அமெரிக்கா விசா கிடைத்த சந்தோஷத்தில் கேட்ட தொடக்க தொகையையும் மெனக்கெட்டு மணியாடர் மூலமாக அனுப்பியாகி விட்டது. அதற்குப் பிறகு வந்தது தான் இந்த நேர்முக அழைப்பு அட்டை.

மச்சான் திருப்பூரில் இருக்க குடும்பத் தினர் வெளிநாட்டுக்கு அனுப்பி வைப் பது போல் ஒரு சுபயோக சுப தினத்தில் பையனை ஏற்றி அனுப்பி வைத்து விட் டார்கள்.  ராப்பகலா வேலைப்பார்த்துக் கொண்டுருப்பவனுக்கு பொண்டாட்டி கொடுத்த டார்ச்சர் தாங்க முடியாமல் என்னை தேடி வந்து விட்டான். அதில் உள்ள முகவரியைப் பார்த்து விட்டு கிளம்புவதற்கு முன்பே முருகேசிடம் சொன்னேன்.

"இது டூபாக்கூர் பார்டி.  நான் வந்தால் பிரச்சனையாகிவிடும்.  நீயே போய் பேசு.  அப்புறம் ஒம் பொண்டாட்டி என்னோட சண்டை வந்து நிற்கும்."

விதி யாரை விட்டது.  அதற்குள் அவன் பொண்டாட்டியிடம் இருந்து அழைப்பு வந்தது.

"அண்ணா நல்ல கம்பெனி போலிருக்கு.  சம்பளம் பத்தாயிரத்திற்கு மேல் இருக்கும் போல.  நீங்க தான் எப்படியாவது சேர்த்து விட வேண்டும்."

"ஏம்மா நான் வேண்டுமென்றால் வேறு நல்ல இடத்தில் சேர்த்து விடுகிறேனே.  ஏன் ஆயிரம் ரூபாயைக் கொண்டு போய் கட்ட வேண்டும்?"

"அடப் போங்கண்ணா.  மொத மாச சம்பளமே பத்தாயிரம்? " பட்டென்று பதில் வந்தது.

"ஏம்மா பத்தாவது படித்து முடித்து எந்த அனுபவமும் இல்லாமல் ஊர் மேய்ந்து கொண்டுருந்தவனுக்கு எந்த கிறுக்கன் பத்தாயிரம் போட்டு கொடுப்பான்.  ஒரு வேளை ரிலையன்ஸ் நிறுவனமே இருந்தாலும் அவர்கள் எதிர்பார்க்கும் அனுபவம் இல்லாவிட்டால் கழுத்தை பிடித்து தள்ளி விடமாட்டார்களா?"

தொலைபேசியில் பேசமுடியாமல் அடக்கிக் கொண்டு அவனை அழைதுக் கொண்டு சென்றேன்.

காரணம் ஊரில் மொத்த நபர்களும் என் பெயரைச் சொல்லி உசுப்பேத்தி வேறு அனுப்பி உள்ளார்கள்.  நான் தான் பொறாமைப்பட்டு கெடுத்து விட்டேன் என்று ஊர் முழுக்க தண்டோரா போட்டு நாஸ்தி செய்து விடுவார்கள் யோசித்தபடியே உடன் இருந்த அவன் மச்சினனையும் அழைத்துக் கொண்டு சென்றேன். சாந்தி திரையரங்கம் எதிரே மேல்மாடியில் அந்த நிறுவனம் இருந்தது.

பத்துக்கு பத்து அறையில் இரண்டு தடுப்புகள் வைத்து அந்த "பிரபல" வேலை வாய்ப்பு நிறுவனம் இருந்தது. வரவேற்பு அறை என்ற பெயருக்கு இருந்த லெக்கடா நாற்காலி அமரும் போது தான் பார்த்தேன்.  அம்பது பேர்கள் வரிசை கட்டி பணம் கட்டிக் கொண்டு இருந்தார்கள். எவரும் எந்த கேள்வியும் கேட்க வில்லை.  எங்கள் முறை வந்தது.  முருகேசு கேள்வி எதும் கேட்காமல் மீதி
பணத்தை கொடுக்க முயற்சிக்க அவனிடம் இருந்து பிடுங்கி வைத்துக் கொண்டு கேட்டேன்.

"எந்த கம்பெனின்னு தெரிஞ்சுக்கலாமா?"
"ரிலையன்ஸ் கம்பெனிங்க"
"எந்த இடத்தில இருக்குதுங்க?"
"பின்னால் சொல்வோம்."
"எப்ப சொல்வீங்க?"
"நீங்கள் பணம் கட்டி ஊருக்குச் சென்றவுடன் கடிதம் அனுப்புவோம்."

என்னால் பொறுமையாய் தொடர முடியவில்லை.

"ஏம்மா ரிலையன்ஸ் ங்றது திருப்பூர்ல ஏதும் இல்லையே?"

அப்போது தான் அந்த பெண் என்னைப் பற்றி விசாரித்தார். முழுமையாக கேட்டு விட்டு பக்கத்து தடுப்பு அறையில் இருந்த முதலாளி காதில் ஓத அவர் எங்களை வெளியே வந்து மொத்தமாக அரவனைத்து வேறு பக்கம் அழைத்துச் சென்றார்.

நிறுவனத்தை விட்டு வெளியே வந்த போது எனக்கு ஆயிரம் ரூபாயை காப்பாற்றிய திருப்தி.  முருகேசுக்கு பெரிய தலையிடி, மச்சினனுக்கு சாந்தி திரையரங்கத்தில் ஓடிக் கொண்டிருந்த படத்துக்கு பக்கத்தில் இருப்பரிடம் விசாரித்துக் கொண்டுருந்தான்.

இப்போது அத்தனையும் தலைகீழ்.

சமீபத்தில் தெருவோர மின்சார கம்பத்தில் தொங்கவிடப்பட்டுருந்த அட்டையில் படித்த விளம்பரம்.

"இந்த எண்ணுக்கு ஒரு மிஸ்டு கால் கொடுங்க.  முன் அனுபவம் இல்லாவிட்டாலும் பராவாயில்லை. நீங்கள் இருக்கும் இடத்தில் இருக்கும் இட்த்திற்கே வந்து அழைத்துச் செல்கிறோம். தரகர்கள் தவிர்கக வேண்டுகிறோம் எங்கள் நிறுவன முகவரி மற்றும் தொலைபேசி எண்கள்............................"

Wednesday, August 25, 2010

பழைய செய்திதாள்கள்

மனைவி
அலுத்துக் கொண்டாள்.

படிக்காத ஒரு மாத
செய்திதாள்களை
எப்போது
படிக்கப் போகிறீர்கள்?

நீ படித்ததில்
முக்கியமானதைச் சொல்?

அதிர்ஷ்டக்குலுக்கல்.
ஜோஸ்கோ நான்குபக்க
நகை விளம்பரம்

சிறப்புத் தள்ளுபடி
முழுப்பக்க சென்னை சில்க்ஸ்

ஸ்ரீதேவி சிறப்புத்தள்ளுபடி

மூணு சென்ட் இடத்தில்
15 லட்சத்தில் வீடு கட்டித் தருகிறார்களாம்.
புதிய மளிகைக்கடை திறப்பு விழா,
பக்கத்தில் வேறொரு
செட்டிநாடு
ஹோட்டல் வரப்போகுது.

வேறெதும் முக்கியமான செய்திகள்?

கண்காட்சி
கடைசிநாள்.

படித்துவிட்டேன்.
கட்டி மேலேற்றிவிடு.

முதுகு உணர்ந்த உஷ்ணப் பார்வை
முகம் வரைக்கும் தாக்குது.

Saturday, August 21, 2010

காமம் கடத்த ஆட்கள் தேவை

குளிரூட்டப்பட்ட அறையில் கூட்டம் முடிந்தும் மூவர் மட்டுமே அமர்ந்து இருந்தோம். ஒவ்வொரு துறையில் சார்பாக வரவழைக்கப்பட்டவர்கள் சென்று விட நாங்கள் மூவர் மட்டுமே உள்ளே இருந்தோம்.  பொது மேலாளர், நிறுவன நிர்வாகியின் உறவினர் இருவரும் என் முகத்தையே பார்த்துக் கொண்டு இருந்தனர். எனக்கு தர்மசங்கடமாக இருந்தது.  பாரபட்சம் இல்லாமல் பேச வேண்டும்.  எனக்கு முன்னால் இருவரும் முடிவுகள் எடுத்து இருக்கக்கூடும். 

ஆனால் சில விசயங்கள் என்னிடம் வந்து தான் வெளியே போகும்.  ஏதோ ஒரு நம்பிக்கை.  என்னுடைய துறைக்கும் அவர்கள் எதிர்பார்க்கும் மனித வளம் சம்மந்தப்பட்ட விசயங்களுக்கும் சம்மந்தம் இல்லாத போது கூட என்னை அழைத்து உட்கார வைத்து விடுவார்கள். 

நிறுவன முதலாளி பக்கத்து மாநிலத்தைச் சேர்ந்தவர்.  அவர் சார்பாக உள்ளே இருந்த உறவினரிடம் நிறுவனத்தின் மொத்த உற்பத்திப் பிரிவும் இருக்கிறது. பணியாளர்களின் நலன், சம்பளம், அரசாங்க சட்ட திட்டங்கள், உணவு விடுதி, பணியாளர்கள் தங்கியுள்ள அறைகள் போன்ற அத்தனை சமாச்சாரமும் அவரின் பொறுப்பில் தான் இருந்தது.  முக்கிய காரணம் தாய்மொழி மலையாளமாக இருந்தாலும் தமிழுடன் ஹிந்தியும் நன்றாக பேச எழுதக் கூடியவர்.

இப்போது இருவரும் சேர்ந்து பந்தை என் பக்கம் தள்ளி விட்டு உள்ளே இருந்த நெருக்கடியான சூழ்நிலையை மறந்து என்னை நையாண்டி செய்து கொண்டு இருந்தனர். மூவரும் சேர்ந்து விட்டால் இதுவொரு இயல்பான நிலைமை.  காரணம் ஒவ்வொரு நாளின் 12 மணி நேரமும் பிரச்சனைகளுடனே வாழ்ந்து கொண்டுருப்பவர்களுக்கு என்னுடைய எதார்த்த பேச்சு நகைச்சுவைப் பக்கம் நகர்த்தி விடும்.

வேறுவழி இல்லாமல் என் பதிலைச் சொன்னபோது இருவரும் கையைத் தட்டி ஆரவாரம் செய்தனர்.

" நாங்களும் இதையே தான் நினைத்தோம்.  நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்று எதிர்பார்த்தோம்?" என்றனர்.

காலையில் நிறுவனத்திற்குள் நுழையும் போது வரவேற்பறையில் நாலைந்து புதிய முகங்கள் தென்பட்டது.  சம்மந்தம் இல்லாதவர்கள்.  முகமெங்கும் கலவர ரேகைகள்.  அத்தனை பேர்களும் 50 வயதைக் கடந்தவர்கள்.  கவனித்துக் கொண்டே என் அறைக்கு வந்து விட்டேன்.  ஆனால் அதுவொரு பூகம்பத்தின் தொடக்கம் என்பது அப்போது புரியவில்லை.

நிறுவனத்தின் தணிக்கையாளர் சிபாரிசு செய்த பெண். எவருக்குமே சிபாரிசு செய் யாதவர். ஏதோ ஒரு பழக்கத்தில் அந்த குடும்பத்தின் பொருளாதார சூழ்நிலை பார்த்து உதவி செய்து அனுப்பி வைத்தார். சிபாரிசு கடிதத்துடன் பக்கத்து மாநிலத்தில் இருந்து உற்பத்தி பிரிவில் வந்து சேர்ந்தார்.  பள்ளி இறுதி வரைக்கும் படித்து இருக்க, அதுவே மேய்ப்பர் வேலைக்கு தகுதியாய் இருந்தது.

தினசரி கணக்கு ஒப்படைப்பு போன்றவைகளுடன் மொத்த பெண்களுக்கும் தலைவியாக போட்டு விட நாலைந்து மாதங்கள் அமைதியாகத் தான் சென்றது. நிறுவனத்தின் உள்ளே இருந்த தங்கும் விடுதியில் தங்கி இருந்தார். குடும்ப விசேடம் என்று விடுமுறை கேட்டு சென்றவர் திரும்பி வரவில்லை.  கூட்டம் நிறைந்த பணியாளர்கள் வரிசையில் அந்த பெண் குறித்து எவரும் அதிகம் அலட்டிக் கொள்ளவில்லை.  ஒரு வேளை பிடிக்காமல் வராமல் இருக்கலாம் என்று இயல்பாக எடுத்துக் கொண்டு மறந்து போயிருந்தனர்.  விடுதியில் பெட்டி படுக்கைகள் இருக்க எப்படியும் வந்து விடக்கூடும் என்ற நம்பிக்கையும் ஒரு காரணமாக இருந்தது.  ஆனால் ஊரில் இருந்து மொத்த குடும்பமும் வந்து  சொன்ன போது கதை வேறு விதமாக திரும்பத் தொடங்கியது.

விசேடம் முடித்து இரண்டாவது நாள் ஊரில் இருந்து கிளம்பி வந்தவர் நிறு வனத்திற்கு வந்து சேரவில்லை. நான் போய்ச் சேர்ந்ததும் பேசுகின்றேன் என்றவரின் அழைப்பு வராமல் போகவே நான்கு நாட்கள் காத்திருந்து குடும்பத்தினர் நிறுவனத்திற்கே வந்து விட்டனர்.  

நான் சொன்னபடியே பெண்கள் விடுதியில் ஒரு பெண்மணியை அனுப்பி குறிப்பிட்ட பெண்ணின் பெட்டியை துழாவிப் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டது.  வரவேற்பு அறையில் பெற்றோர்கள் பதை பதைப்பாய் காத்து இருந்தனர். பெட்டியை துழாவிய போது தான் மொத்தமும் புரிந்தது. நிறுவனத்திற்கு வரு வதற்கு முன்பு இருந்த தொடர்பு புரிந்தது.   பெட்டியில் கடிதங்களும் கலாச்சார சீரழிவுகளும் ஒன்று சேர்ந்து கிடைத்தது.  கொண்டு வந்த மேஜையில் கொட்டிய போது எங்கள் மூவருக்கும் வியப்பு மட்டுமல்ல அதிர்ச்சியும் கூட.  இந்தப் பெண்ணா?  இப்படியா?

கிளி இறக்கை முளைத்து பறந்து விட்டது.  எந்த திசை என்பதை இனிமேல் தான் கண்டு பிடிக்க வேண்டும்?

குடும்ப வளர்ப்பு, கற்ற கல்வி அத்தனையும் தாண்டி வரும் உணர்ச்சிகள் என்பது சூழ்நிலை உருவாக்குவது.  அதற்கு நாடு, மாநிலம், மொழி எதுவும் முக்கியமில்லை. காமம் என்பது பல சமயம் கண்களை மறைப்பது மட்டுமல்ல. கரைகளே இல்லாத பயணத்தைப் போன்றது. சிலருக்கு கரை தென்பட்டு விடும்.  பலர் சிதைந்து சின்னாபின்னமாகி சீரழிந்து செய்தித்தாளுக்கு பரபரப்புச் செய்திகளாக மாறிவிடுகிறார்கள்.

ஏற்றுமதி நிறுவன வாழ்க்கையின் தொடக்கத்தில் ஒரு சிறிய நிறுவனத்தில் அந்த நடு இரவு நேரத்தில் ஆட்கள் சரியாக வேலை செய்கிறார்களா என்பதை பார்க்க சுற்றி வந்த போது இருட்டுப் பகுதியில் இருந்த அந்த பெரிய மேஜை மட்டும் வினோதமாக ஆடிக் கொண்டுருந்தது. 

தரம் பிரித்து ஒதுக்கப்பட்ட ஆடைகள் மேஜையின் மேல் அடுக்கப்பட்டு இருக்கும்.  தரத்தை சோதிக்க வேண்டிய ஆடைகள் அதே மேஜையில் ஒவ்வொரு மூலைக்கும் கட்டப்பட்ட கயிற்றில் தொங்க விடப்பட்டுருக்கும். பல சமயம் நான்கு புறமும் தொங்கும் போது உள்ளே மறைவான இடம் கிடைத்து விடும்.  குறிப்பிட்ட பகுதிகளில் வேலையில்லாத போது மின்சார விளக்குகள் தேவையில்லாமல் இருட்டாக இருக்கும். இருட்டும் மறைவும் எளிதாக பயன்படுத்த அமைந்து விடும். உடம்பில் இருக்கும் உஷ்ணம் உருக்குலைத்து விடும். அதுவே பழக்கமாகி பாதை மாற வைத்து விடும். நெருங்கிப் பழகும் போது அத்தனையும் சுருங்கி விடும்.

முன்னும் பின்னும் ஆடிக்கொண்டுருந்த அந்த மேஜைக்கு அருகே சென்று விபரம் தெரியாமல் ஆடைகளை விலக்கி உள்ளே பார்க்க,  உள்ளே பொருந்தாக் காமம் அரங்கேறிக் கொண்டுருந்தது. நான் கவனித்ததைக் கூட காணாமல் அவர்கள் மும்முரமாக செயல்பட்டுக் கொண்டுருந்தனர். 

மகன் தாய் வயதைக் கொண்டுருந்த அவர்களின் அவசர அலங்கோலம் இரண்டு நாட்கள் மனதை பாதிக்க குறிப்பிட்ட பகுதிகளுக்குச் செல்ல தவிர்த்து விடுவதைத் தவிர வேறொன்றும் செய்ய முடியவில்லை.  

இது போன்ற விசயங்களில் எந்த இடத்தில் தொட்டாலும் நியூட்டன் விசை போலவே நம்மைத் தாக்கும். தைரியமாய கையாண்டால் கூட சில சமயம் கடைசியில் நம்முடைய தனிப்பட்ட வாழ்க்கையை அசிங்கமாய் மாற்றி விடுவார்கள். 

திரைப்படத்துறையைப் போலவே இங்கு எல்லாமே எளிதாக இருக்கிறது. முதலாளி முதல் தொழிலாளி வரைக்கும் இஷ்டம் போல உணர்ச்சிகளை ஆட்டிப்படைத்துக் கொண்டுருக்கிறது. திரைப்படம் மற்றும் அரசியல் சார்ந்த ஒழுக்கம் கெட்ட செய்திகள் அத்தனையும் இன்று இயல்பான படிக்கும் செய்தியாக மாறி விட்டது. ஊடகத்தால் முக்கியமாக்கப்பட்டடு பாமரன் முதல் படித்தவர் வரைக்கும் எந்த குற்ற உணர்வும் தோன்றாத அளவிற்கு சராசரி சிந்தனைகளுடன் கலந்து விட்டது. 
பாலூணர்வு என்பது பண்டமாற்று முறை போல் ஆகிவிட்டது. இதனால் தான்? என்று எதையும் குறிப்பிட்டு சொல்ல முடியவில்லை.  

தென் மாவட்டத்தில் இருந்து ஒவ்வொரு குடும்பங்களும் வந்து இறங்கிக் கொண்டே இருக்கிறார்கள். தொடக்கத்தில் இருக்கும் அவர்களின்  ஒற்றுமையும்,புரிந்துணர்வுகளும்,ஆதரவும், காலப் போக்கில் மறைந்து போய் விடுகின்றது.   குடும்ப பராம்பர்யம் கட்டுப்பாடு, அக்கறை, கலாச்சாரம் போன்றவை குறிப்பிட்ட காலத்திற்குள் காணாமல் போய் விடுகின்றது. 

சிலர் மட்டுமே எந்த பாதிப்பும் இன்றி கிராமத்து வாழ்க்கையாகவே கடைசி வரைக்கும் வாழ்ந்து கொண்டுருக்கிறார்கள்.  உருவாகும் தொடர்புகள், அறுந்து போய் விடுகின்ற உறவுகள், தகுதிக்கு மீறிய ஆசைகள் என்ற ஒவ்வொரு காரணங்களும் ஒரு குடும்ப பராம்பரிய சங்கிலியை வெட்டி எறிந்து விடுகின்றது.

பதினெட்டு வயதில் எதுவும் அறியாமல், உள்ளே வருகின்றவர்கள் தன்னை மாற்றிக் கொள்வதில் அதிக அக்கறையாய் செயல்படுகிறார்கள். உடம்புக்கு பொருந்த உடைகள் அணிவது முதல் கருத்த தேகத்தில் அப்பிக் கொள்ளும் கண் மை முதல் கண்றாவி கலாச்சாரம் அவர்களை கட்டுப்படுத்தி படாய் படுத்தி எடுக்கின்றது. 

அறிவுரைகளை கேட்க பொறுமை இல்லை.  குடும்பத்தினர் பொறுமையாய் உட்கார்ந்து பேச நேரமும் இருப்பதும் இல்லை.  கண்டதே காட்சி.  கொண்டே கோலம்.  கடைசியில் அலங்கோலத்தில் தான் போய் முடிகின்றது. 

நகர்புற வாழ்க்கையை அறியாத பெண்மணியாக அறிமுகமானவர் அடுத்த ஒரு வருடத்தில் அத்தனையும் அறிந்து அவசரமாய் முன்னேறிக் கொண்டு இருக்கிறார். பலசமயம் நமக்கே பாடம் நடத்துகிறார்கள்.  " இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி ஊருடன் ஒத்துப் போகாமல் வாழப் போகிறாய்?" என்கிறார். 

அந்தமான் தீவில் நிறுவனங்கள் தொடங்கலாம் என்று உருவான கலாச்சாரம் சிலரை வேறொரு கேடு கெட்ட கலாச்சாரத்தையும் வளர்க்க உதவ வைத்தது.  

பணத்தைக் கொண்டு போய் கொட்டினார்கள். கூட்டிக் கொண்டு சென்றார்கள். வளர்ந்தார்கள். அலுக்காத காமத்தை அங்குலம் அங்குலமாக சுவைத்தார்கள். வீழ்ந்தார்கள்.  கெட்டியாக பிடித்துக் கொண்ட பெண்மணிகள் கண்மணியாக மாறி சரிசமாக வளர்ந்து இன்னும் சவால் விடும் பிரபல தொழில் நிறுவனம்.  

இது அசிங்கமல்ல.  வளர்ந்த பிறகு அத்தனையும் சாதனைப் பெண்மணிகள் என்ற பட்டியலில் வந்து விடும்.  வேறென்ன வேண்டும்? 

வளர்ந்த நிறுவனங்களில் முறைப்படுத்தப்பட்டதாகவே இன்று பாலூணர்வு பல் இளித்துக் கொண்டு விகாரமாய் வெளியே தெரியாமல் இருக்கிறது. 

பத்து வருடங்களுக்கு முன்னால் பணிபுரிந்த பல பணியாளர்களை எங்குமே பார்க்க முடியவில்லை. இருக்கிறார்களா? இறந்தார்களா? யாருக்குத் தெரியும்?  பக்கத்து மாநிலத்தில் இருந்து வந்து இறங்கிக் கொண்டே இருக்கிறார்கள். கேரளா தொடங்கி இன்று நேபாளம் வரைக்கும் சென்றடைந்து விட்டது.  பீகாரி என்றாலே பயப்படும் அளவிற்கு வருபவர்களின் கலாச்சாரம் பயமுறுத்தி விடுகின்றது. 

ஏதோ ஒரு காரணம்.

வேலைவாய்ப்பின்மை, கம்யூனிச தாக்கம், தொழிற் சாலைகள் இல்லாத குறை.  ஆள்பவர்களின் அக்கறையின்மை.  எத்தனை காரணங்கள் சொன் னாலும் வந்து இறங்கும் வரைக்கும் ஒவ்வொருவரின் அடிப்படை குடும்ப வளர்ப்பும் பாதுகாப்பாய் இருக்கிறது. 

ஆனால் துணியின் உஷ்ணமும், பழக்க வழக்கங்களும் சேர்ந்து குறுகிய காலத் திற்குள் கரையக்கூடியதாய் மாற்றி விடுகின்றது.  நாம் மாறி விட வேண்டும் என்ற கொள்கையே ஒவ்வொருவரின் மொத்த வாழ்க்கையையும் மாற்றி தொலைத்து விடுகின்றது. 
நாம் நாகரிக வாழ்க்கை வாழ்ந்து கொண்டுருக்கிறோம் என்ற இந்த எண்ணமே ஒவ்வொருவரையும் நாதாரித்தனமான வாழ்க்கைக்கு அழைத்துச் செல்கிறது.

வீழ்ந்த நிறுவனங்களின் கணக்குகளை பட்டியலிட்டுப் பார்த்தால் இந்த கப்பு வாடை தான் மூக்கைத் துளைக்கின்றது. 

அடிப்படை தொழிலாள வர்க்கத்தின் அறிவற்ற தன்மையால் எய்ட்ஸ் வளர்க்கும் பெருநகரங்களில் கரூர், நாமக்கல் அடுத்து இன்று திருப்பூர் முன் னேறிக் கொண்டுருக்கிறது. ஆனால் நாம் நடிகை குஷ்பு சொன்ன எதார்த்த விசயத்திற்கு இதுவொரு கலாச்சார சீரழிவு என்று மல்லுக்கட்டி முண்டிக் கொண்டு முன்னால் நிற்கிறோம். 
தொழிற் நகரங்கள் வாழ்க்கையைத் தேடி வருபவர்களுக்கு காசு கொடுப்பதுடன் இந்த கலாச்சார கருமாந்திரங்களை தலைகீழ் விதிகளாக மாற்றிக் கொண்டு இருக்கிறது. 

என்ன சொன்னாலும் தொழிலாளர்களுக்கு அவசர நேரத்தில் புரியாது.  ஆனால் முதலாளிகளுக்கு எப்போதும் பணம் காட்டி பயமுறுத்தும் சமாச்சாரம்.

Wednesday, August 18, 2010

மாண்புமிகு அமைச்சர் (அஞ்சாப்பு பெயில்)

ஊர்லலேயிருந்து வந்த
ராசு சொன்னான்.

ஜெயக்குமார் ஒன்றியமாம்.
முத்துக்குமார் நகரமாம்,
சோனைமுத்து மாவட்டத்துக்கு
கைத்தடியாம்,

பட்டினியா பள்ளிக்கூட
வந்தவனுங்க
இப்ப
காபி குடிக்கக்கூட ஸ்கார்பியோவாம்.

அஞ்சு பாடத்லேயும்
கூட்டினா
அம்பது மார்க்கு கூட தேறாது,

சீக்கிரம்
அமைச்சரா வந்துடுவானுங்க.

இவனுங்கள உதைச்ச
சண்முகம் ஆசிரியர்
நடையா
நடந்துக்கிட்டுருக்காராம்.

பென்ஷன் வாங்க சிபாரிசு கடிதம் கேட்டு.

                                                                                    
நல்லோர் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லோருக்கும் பெய்யும் மழை,

Tuesday, August 10, 2010

பணம் துரத்திப் பறவைகள்

தினந்தோறும் அந்த குடியிருப்பை கடந்து தான் செல்ல வேண்டும். பொருந்தாத சட்டையின் அளவு போல சுற்றியுள்ள நவீன குடியிருப்புகளுக்கிடையே.  தனித் தனியாக கட்டப்பட்ட வீடுகளும், நவீன வசதிகள் அத்தனையும் பெற்ற தொழில் அதிபர்கள் வாழும் கூட்டத்திற்கிடையே தொழிலாளவார்க்கமும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.
அடுத்த சந்தின் வழியே வீட்டுக்குள் வந்து நிற்கும் போது கூட ஏதோவொரு சண்டை நடந்து கொண்டேயிருக்கும். இடைவிடாமல் நடுசாமம் வரைக்கும் ஒலிக்கும் அந்த சச்சரவில் அத்தனை செந்தமிழ் வார்த்தைகளும் தொடர்ச்சியாக கேட்டுக் கொண்டே இருக்கும்.

உரக்கப் பேசும் வார்த்தைகளில் ஒழுக்கம் இல்லாமல் மறந்து போன அத்தனை  வார்த்தைகளும் தீயாய் வந்து காதில் சுடும்.

ஆண் குரலில் தொடங்கி உள்ளேயிருக்கும் அத்தனை பெண்மணிகளும் கலந்து கடைசியில் அடிதடியுடன், ஒப்பாரிகளும் ஓலமுமாய் முடியும்.  வாகனத்தில் கடந்து போய்க்கொண்டுருப்பவர்களும், வெளியே நடந்து போய்க் கொண்டுருப்பவர்களுக்கு இதுவொரு இயல்பான நிகழ்ச்சி. 

பங்கெடுத்து கொள்ளாதவர்கள் எப்போதும் போல அவரவர் வேலையில் கவனமாய் இருப்பார்கள்.

நீள்வாக்கில் செவ்வகம் போல ஒரு பள்ளத்தை தூர்த்து கட்டப்பட்ட வரிசை யான ஓட்டு வீடுகள். கொங்கு பூமியில் பாறைக்குழி என்றொரு வினோத அமைப்பு உண்டு.  வெடிகுண்டி வைத்து தாக்கினாலும் தகர்க்க முடியாத நகராத இறுக்கமான பாறை அமைப்புகள். ஆனால் மனிதர்களின் ஆசையில் மண்ணால் மூடி அதன் மேல் கம்பியை இறக்கி தான் நினைத்ததை சாதித்து வீட்டு மனையாக்கியவர்கள் பல பேர்கள்.

வரிசைக்கு பத்து என்று கணக்கில் இரண்டு வரிசையில் மிக குறுகிய இடத்தில் கட்டப்பட்ட இருபது வீடுகள். வினோதமான வாஸ்து தேவைப்படாத பத்துக்கு பத்தில் ஒரே அறை உள்ள அந்த வீடுகள் ஏற்றுமதி நிறுவனங்களில் பணி புரியும் தொழிலாளர்களுக்கு சொர்க்கம்.

தட்டுக்கடை, வண்டிக்கடை, காய்கறி தள்ளுவண்டி என்று தொடங்கி நிறுவன காவல்காப்போர் வரைக்கும் மாதம் 5000 ரூபாய்க்குள் வருமானம் பார்க்கும் அத்தனை மனிதர்களுக்கும் உருவாக்கப்பட்ட காளான் வீடுகள்.
தொழில் நகரங்களில் வரைமுறையில்லாமல் வளர்ந்து கொண்டுருக்கும் புறநகர் குடியுருப்புகளில் எந்த அடிப்படை வசதிகளும் இருப்பதில்லை.  ஆள்பவர்களுக்கும் அது குறித்து அக்கறையும் உருவாவதும் இல்லை. ஒவ்வொருவரின் அரசியல் கணக்குகளும் முடிவுக்கு வரும் போது சில சமயம் முழித்துக் கொண்டு வந்து விசாரிப்பார்கள். வழிந்தோடும் சாக்கடைகளும், வந்து போய்க் கொண்டுருக்கும் தொற்று நோய்களையும் எவரும் பெரிதாக பொருட்படுத்துவதில்லை. மனம் என்பது அடுத்த போராட்டத்திற்கு தயாராய் இருக்கும் போது உடல் எதையும் ஏற்றுக் கொண்டு விடுகின்றது.

தொடக்கத்தில் மாத வாடகை 300ல் தொடங்கியது.  இப்பொதேல்லாம் 1500 கொடுத்தாலும் ஐந்து மாதம் கழித்து வா? என்றாலும் வீட்டு வரிசை போலவே வரிசை கட்டி நிற்கிறார்கள். கிராமங்களில் வாழ்ந்த பெண்மணிகளுக்கும், அவர்கள் நகர்புறங்களில் வாழத் தொடங்கும் போது அவர்களின் உழைப்புக்கும் பெரிதான எந்த வித்யாசங்களும் தெரியவில்லை. 

கணவனோ, அண்ணன்,தம்பி, மகள், மகன் என்று குடும்ப சகிதமாக உழைத்துக் கொண்டுருந்தாலும் ஆசையோ அக்கறையோ தினந்தோறும் 19 மணி நேரம் ஒவ்வொருவரையும் இயக்க வைத்துக் கொண்டுருக்கிறது.

ஒவ்வொரு நாளும் காலை எட்டு மணிக்குள் நிறுவனத்திற்குள் இருக்க வேண்டும். காலை ஐந்து மணிக்குள் சமையல் செய்தாக வேண்டும். இதற்கிடையே மற்றொரு வேலை. குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டும்.  அவசரமாய் டப்பாவில் காலைக்கும் மதியத்திற்கும் சேர்த்து அடைத்துக் கொள்ள வேண்டும். இரவு ஒரு மணிக்கு வேலை முடித்து வந்தாலும் இதே நேரத்தில் தான் எழுந்து வேலை செய்ய வேண்டும். இதற்கெல்லாம் மேல் ராத்திரி குடித்து விட்டு புரண்டு கிடக்கும் அந்த கண்வன் என்ற தெயவத்தை கண்டும் காணாமல் கடந்து செல்ல வேண்டும்.

கைபட்டு கால்பட்டு கண் முழித்து விடடால் அன்று பஞ்சாயத்து முடிய மதியம் ஆகிவிடும்.

நிறுவனங்களில் கூட்டிப் பெருக்குபவர்கள் முதல் தைப்பவர் வரைக்கும் கலந்து கட்டி அடிக்கும் கலாச்சார வாழ்க்கை.  இதற்குள் மொட்டுகளும் அரும்பு களுமாய் பள்ளிக்கூடத்தை பார்க்கும் பிஞ்சுகள்.  அம்மா சென்றதும் தனக்குத் தானே உதவியாய் பைக்கட்டை சுமந்து அருகே இருக்கும் அரசாங்கப் பள்ளி யில் எதிர்கால கனவுகளுடன் உள்ளே நுழைபவர்களுக்கு எந்த பிடிமானமும் இருக்காது. 

மாலை திரும்பி வரும் போது மறுபடியும் தனக்குத் தானே உதவியாய் கழுவாத பாத்திரங்களுடன் பார்த்து எடுத்து பசியாறி அம்மாவுக்காக காத்து இருக்க வேண்டும். அறிவை வளர்க்க உதவும் புத்தகங்கள் பல நாட்கள் ஏதோவொரு மூலையில் அனாதையாய் கிடக்கும்.  மொத்த குடும்பமும் ஏதோவொரு நிறுவனத்தில் துணியோடு துணிவோடு போராடிக் கொண்டு இருப்பார்கள்.

ஒன்பது மணிக்கு வேலை முடிந்து உள்ளே நுழையும் அம்மாவின் குரலை பாதி தூக்கத்தில் காதுகள் கேட்கும்.  மூளை உணராது.  12 மணி நேரமும் நின்று கொண்டே பார்த்த வேலையில் பாதி உயிருடன் வந்து நிற்கும் அம்மாவுக்கும் மூலைக்கொன்றாய் புரண்டு கிடக்கும் குழந்தைகளின் பாசத்தை விட அவரின் உயிர் கேட்கும் பசியே பிரதானமாய் இருக்கும். குழந்தைகள் கொட்டி கவிழ்த்து இருந்தால் திட்டக்கூட முடியாமல் இருப்பதை உண்டு ஓரமாய் சுருள வேண்டும். காலையில் எழும் போது காதுக்குள் கேட்கும் இரைச்சல் காணாமல் போயிருக்கும்.  பழகிவிட்டால் கட்டாந்தரை கூட பஞ்சு மெத்தை தான்.

இது போன்ற வீடுகளில் வந்து வசிப்பவர்கள் எவரும் வறுமைக் கோட்டுக்குள் இருப்பவர்கள் என்று அவசரப்பட்டு முடிவு செய்து விடவேண்டாம்.  வாழ்ந்த, வாக்கப்பட்ட ஊரில் காற்றோட்டமான வீடுகளும், வயலும் வரப்புகளுடன் வாழ்ந்தவர்கள். 

ஆனால் காலம் செய்த கோலத்தில், கட்டிய கணவன் உருவாக்கிய அக்கிரமத் தில் அவசரமாய் வந்து சேர்ந்தவர்கள். எஞ்சிய நாட்களையும் வாழ்ந்து தான் ஆகவேண்டுமென்று இந்த நரகத்தில் தினந்தோறும் சொர்க்கத்தை பார்த்ததுக் கொண்டுருப்பவர்கள்.

இது போன்ற வீடுகளை உருவாக்கியவர்களை எந்த வார்த்தைகள் கொண்டும் நிச்சயம் நீங்கள் பாராட்டலாம். குறுகிய இடத்துக்குள் உருவாக்கிய அவர்களின் சிக்கன புத்தி அவர்களுக்கு மாதம் மாதம் பணம் சுரக்கும் காமதேனு போல படியள்ந்து கொண்டுருக்கும். இதற்குள் வந்து வாழ விரும்புபவர்கள் பயன் படுத்தும் மின்சாரம் முதல் வைத்துள்ள சம்சாரம் வரைக்கும் சரியான முறையில் காபந்து செய்து வாழ பழகியிருக்க வேண்டும். காரணம் இப்போதெல்லாம் பத்திரிக்கைகளுக்கு அதிக தீனி போடுவதே இந்த கள்ளக்காதல் செய்திகள் தான்.

சென்னை கூவம் அருகே வாழ்ந்து கொண்டுருப்பவர்களை விட ஒரு படி மேல்.  அவ்வளவுதான்.  இது நொய்யல் ஊர். நொந்நு வாழ்ந்தாலும் தினந்தோறும் அடிப்படை தேவைகளை நிறைவேற்றும் திரு ஊர். பத்து வீடுகள் என்றாலும் ஒரே ஒரு கழிப்படவசதி.  பக்கத்தில் குளியல் அறை.  அவசரம் என்றாலும் ஆத்திரம் வந்தாலும் அடக்கி அடங்கி வாழ பழகுதலின் முதல் பயிற்சிக் களம் இங்கிருந்து தான் தொடங்குகிறது. ஒரு வாரத்திற்குத் தேவைப்படும் மொத்த தண்ணீரும் சேகரித்த டப்பாக்களில் அந்த குடியிருப்பு முழுமையும் இருக்கும். 

நாம் தவறி விழுந்தாலும் ஏதோ ஒரு தண்ணீர் டப்பாவில் தான் முட்டிக் கொள்ள முடியும்.  வாரத்தில் எந்த நாளில் பொதுக் குழாயில் குடிதண்ணீர் வரும்மென்று மேயருக்கும் தெரியாத ரகஸ்யம்.

உடைபட்ட குழாய்கள் தாண்டி, ஒழுகிய தண்ணீர் போக வாரம் என்பது சில சமயம் மாதம் கூட ஆகலாம்.  அதனால் என்ன நாலு சந்து தாண்டிப் போனால் நடு சாமத்தில் அமைதியாய் பிடித்து வர அவர்களுக்கும் தெம்பு இருக்கிறது. இவர்களிடம் ஓட்டு வாங்கி அடுத்து முறையும் ஆட்சியைப் பிடித்து விடலா மென்று ஊரெங்கும் கழுதை கூட திங்க முடியாத ப்ள்க்ஸ் போர்டு கட்ட அவர்க ளிடம் பணமும் இருக்கிறது. ஜனநாயகவாதிகள் என்பவர்கள் இங்கு கட்டப் பஞ்சாயத்து காப்பாளர்கள். அடித்தட்டு மக்கள் முதல் உழைத்து மேலே வரும் தொழில் அதிபர்கள் வரைக்கும் கடைசியில் வந்து சிக்குவது இவர்களிடம் தான். சிக்கல், முக்கல், முணங்கல் என்று அத்தனையும் தீர்த்து விடும் சர்வ ரோக நிவாரண மனிதர்கள்.

அடித்தட்டு மக்களுக்கு எப்போதும் எதுவும் தேவையில்லை. எதிர்பார்ப்பு இல்லாத வாழ்க்கை. அதிகபட்ச ஆசை என்பதே பல சமயம் நூறு ரூபாய்க்குள் கூட முடிந்து விடக்கூடும். நடுத்தட்டு மக்களுக்கோ முதலில் தன்னைக்  தங்கள் குடும்பத்தைக் காத்துக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம்..  

இது தன்னை நம்பி இருப்பவர் களுக்காகவே வாழ்ந்தாக வேண்டிய கட்டாய வாழ்க்கை.  அளவான வருமானம் வாழ்க்கை முழுக்க அமையப் பெற்ற அத்தனை பேர்களும் ஆயுள் முழுக்க ஒரு விதமான அடிமைகள் தான்.

எத்தனை காரணங்கள் தத்துவங்கள் சொன்னாலும் இந்த வாழ்க்கை என்பதை யாருக்காவோ ஒவ்வொருவரும் வாழ்ந்து தான் தொலைக்க வேண்டியுள்ளது. நாதாரிகள் நாடாள வேடதாரிகள் தத்துவம் பேச மௌன சாட்சியாய் நாம் அத்தனையையும் பத்திரிக்கைகள் தரும் செய்திகள் வைத்து புரிந்து படித்து விட்டு அடுத்த வேலைகக்கு அவசரமாய் செல்ல வேண்டியுள்ளது. 
நாட்டுக்கு ஜனநாயகமே சிறப்பு என்பதை அந்த குடியிருப்பில் ஞாயிறு தோறும் கேட்கும் கலகலப்பில் உணரமுடிகின்றது. பணம் துரத்தி உருவாகும் அத்தனை கவலைகளும் அவர்களின் வாழ்க்கையைப் பார்த்து மறைந்து போய்க் கொண்டு இருக்கிறது.

Saturday, August 07, 2010

இதுவொரு தனியுலகம் காணொளி


எந்திரத்திற்கு என்னுள் இருக்கும் சோக மொழி புரியுமா?. நாள் முழுக்க எனக்குள் பரவும் உஷ்ணத்தை அது அறியுமா?  என் உழைப்பின் நீள அகலம் குறித்து கவலைப்படப் போவதும் இல்லை.  உட்கார்ந்து நின்று, நகர்ந்து முயன்று எட்டு மணி நேரத்தில் எனக்கு இடப்பட்ட கட்டளைகளை நிறைவேற்றியே ஆக வேண்டும். அம்மா அடுத்த வரிசையில், அண்ணன் பக்கத்தில், கடைசி தம்பி படித்துக் கொண்டுருக்கின்றான்.  அவனுக்கும் சீக்கிரம் இங்கு ஒரு இடம் பார்க்க வேண்டும்.  எனக்கும் திருமண ஆசை இருக்காதா? 


பொம்பள புள்ளைக்கு ஒழுக்கம் முக்கியம்டின்னு சொன்ன செத்துப் போன எங்கம்மாவத்தான் நினைச்சுக்கிட்டு வேலை பாக்குறேன். உரசலும், தடவலும் தவிர்க்கப் பார்த்தாலும் நியூட்டன் விதி போல என்னோட வாழ்க்கை விதியையும் ஆட்டிப் படைக்குது. சிக்கித் தவிக்கும் துணியைப் போலவே என் உணர்ச்சிகளும் என்னை படாய் படுத்துதே?

அடிக்கி வைக்கச் சொல்லி அருகே வந்து நிற்பான்.  குனிஞ்சு நிமிர்ந்தால் குதுகலமாய் சிரிப்பான். என் மடியை பார்ப்பான், அவனுக்கும் அலுக்காது.   நாள் முழுக்க. தூசி தவிர்க்க முகத்தில கட்ட துணி,  ஐயாமாரு வாராங்கன்னு தலையில ஒரு குல்லா. வெள்ளைத் துணி அழுக்கு படக்கூடாதுன்னு கையுரை.  எல்லாம் தந்த மகராசா இந்த நாத்தம் புடுச்ச மனச எந்த துணி கொண்டு மறைக்கப் போறீங்க?                                                                                                                                       

Thursday, August 05, 2010

நீங்கள் பார்க்காத ஆடை உலகம் ஓலியும் ஒளியும் 123


இங்கு இன்னமும் பல நிறுவனங்கள் பணியில் இருக்கும் தொழிலாளர்களுக்கு  அமைதியான சூழ்நிலையை உருவாக்கி மன நலம் உடல் நலத்தில் அக்கறை கொண்டு தினந்தோறும் வேலை தொடங்குவதற்கு முன்பு கூட்டுப் பிரார்த்தனைகளின் மூலம் தங்களது உற்பத்தியை தொடங்குகிறார்கள்

பல்வேறு இடங்களில் இருந்து அரக்க பறக்க காலை எட்டு மணிக்குள் ஓடி வந்து சேர்பவர்களுக்கு ஏதோ ஒரு வகையில் ஆசுவாசம் அளித்துஅவர்களின் இழந்த நம்பிக்கைகளை ஒரு சேர மீட்டுத் தரக்கூடும் என்று நம்பிக்கையின் தொடக்கம்.நூலில் இருந்து துணியாக மாறுவது என்பது வரைக்கும் அதுவொரு தனியான உலகம்.  அலைச்சலும், வேதனையும், பயமுமாக மாறி மாறி இறுதியில் நம்பிக்கையை மட்டும் வைத்துக் கொண்டு துணிவோடு நடக்க வேண்டிய  சாகச பயணம். வெட்டப்பட் வேண்டிய துணியாக உள்ளே வந்து தேவைப்படும் உருவமாக மாற அதன் பயணத்தை இப்படித்தான் தொடங்குகிறது.வருடத்தில் 365 நாட்களா?  எங்களுக்குத் தெரியாதே?  ஞாயிறு தான் எப்போதும் எங்களுக்கு தீபாவளி.  காரணம் அன்று தான் தலைகுளிக்க ரெண்டு சொம்பு கூட ஊத்திக் கொண்டு அமைதியாய் குளிக்க முடியும்.  தைப்பது எந்திரங்கள் அல்ல.  எங்களின் மனமும் எந்திரமாகித் தான் போய்விட்டது.  உலகின் எந்தப் பகுதியில் இருப்பாரோ?  உடுத்தும் போது இந்த இடத்தில் பிடிக்கிறது என்று திட்டுவாரோ?  

தொடர்ந்து தைப்போம்.............. 

Monday, August 02, 2010

தரமே தராக மந்திரம் RELIANCE FRESH

ஒவ்வொரு முறையும் ஏதோ ஒரு பொருளை வாங்கச் செல்லும் போது மன உளைச்சலுடன் மகிழ்ச்சியையும் தொலைத்து விட வேண்டியுள்ளது.  இரும்பு சமாச்சாரங்களைத் தவிர பெரும்பாலான பொருட்களின் நிதி மூலம் ரிஷி மூலம் ஓரளவிற்கு தெரிந்து இருப்பதால் விற்பவர் எந்த அளவிற்கு தெளிவாக வியாபாரம் செய்கின்றார் என்பதை புரிந்து கொள்ள முடிகின்றது. 

அவர் பேசி முடித்ததும் எத்தனை சதவிகித கொள்ளை லாபம் என்று மனதிற்குள் படமாய் தெரிந்து விடும்..

இங்கு தொடக்கத்தில ரிலையன்ஸ் ப்ரெஷ் அவினாசி சாலையில் திறந்த போது மிகுந்த ஆர்வமாய குடும்பத் துடன் உள்ளே நுழைந்தோம்.  முழுக்க குளீருட்டப்பட்ட வசதியுடன், தேர்ந்தெ டுக்க எளிதான வகையில்,.  என்னு டைய அவசரத்திற்கும் ஈடு கொடுப் பதாய் இருந்தது. இரண்டு நாட்கள் கழித்து மெதுவாக அந்த பட்டியல் சீட்டைப் பார்த்த போது உள்ளே ஓடிக் கொண்டுருந்த மொத்த மொள்ளமாரித்தனமும் தெரிந்தது.

 ரிலையன்ஸ் நேரிடைப்பார்வையில் உள்ள கோதுமை மாவு, டீத்தூள்ள தவிர அத்தனையும் நாகரிக கொள்ளை விலை. இது போக சிறப்புக் கழிவு, அட்டை வசதி என்று அவர்களின் உறிஞ்சும் தந்திரம் புரிந்து அன்றோடு நிறுத்திக் கொண்டோம்.

ஒவ்வொரு வார கடைசியிலும் சிறப்புத் தள்ளுபடி என்று குறுஞ்செய்தியும் மின் அஞ்சலும் வரும். ஆனால் வாழ்க்கைக்கு தேவையில்லாத அத்தனை நாகரிக பொருட்களையும் தலையில் வைத்து கட்டிவிட அவர்கள் செய்யும் அத்தனை ஏற்பாடுகளையும் பார்த்த போது மொத்தமாகவே புறக்கணித்தே விட்டோம்.

தொடக்கத்தில் உள்ளே நுழைந்த போது கூட்டம் நிரம்பி வழிந்து கொண்டு இருந்தது.  மானத்தை மறைக்க தேவையில்லாத உடைகளும், பிசகி விழுந் தால் குறுத்தெலும்பு உடைந்து விடக்கூடிய ஹை ஹீல்ஸ் செருப்புமாய் நிறைய யுவதிகள் அக்கறை யாய் ஒவ்வொரு பொருட் களையும் தள்ளு வண்டியில் அள்ளிக் குவித்துக் கொண்டு இருப்பாரகள். 


அரிசி, பருப்பு, பொடி வகைகள்,எண்ணெய்கள்,காய்கறிகள் இவை மட்டுமே உள்ளே நுழையும் நடுத்தர மக்கள் தேர்ந்தெடுப்பதற்கான சாமான்கள். மீதி உள்ள 70 சதவிகிதம் பன்னாட்டு நிறுவனங்களின் விலை கொழுத்த ஆடம்பர சமாச்சாரங்கள். வெளிநாட்டில் இருந்து வந்த பெண்மணி உள்ளே நுழைந்து விலையை யூரோவில் பெருக்கி பார்த்து விட்டு பெருங்குரல் எடுத்து கத்தாத குறை தான். அவசரமாய் வெளியே அழைத்து வந்து விட்டேன்.

முகம் துடைக்கும் சிறிய கைத்தறி துண்டுகளை மூன்றாக கட்டி வைத்து அதற்கு ஒரு அலங்காரம் செய்து ரூபாய் 79 என்று போட்டு இருந்ததை பார்த்த போது இதையும் வாங்க ஆள் இருப்பார்கள் என்ற அவர்களின் நம்பிக்கை தான் தெரிந்தது..

தொடக்கத்தில் எல்லோருமே பயந்தார்கள்.  சிறு வியாபாரிகள் வாழ்வில் மண் விழுந்து விடுமோ என்று?  இந்த ஆரோக்கிய போட்டியை நான் தனிப்பட்ட முறையில் விரும்பினாலும் இவர்கள் கட்டும் மாயவலை என்பது மெதுமெது வாக நம்முடைய குரல்வளையை நெறிக்கத்தான் செய்கிறது.
                                                  
தொழில் நகரங்களில் வாழும் மக்களில் நடுத்தர வர்க்கம் என்பவர்கள் பல விதங்களிலும் சிறப்பாகத்தான் வாழ்ந்து கொண்டுருக்கிறார்கள்.  நேற்று  எதிர்பாரத விதமாக உள்ளே சென்ற போது வாங்க வந்தவர்கள் மூன்று பேர்கள்.  எடுத்துக் கொடுக்க இருந்தவர்கள் பத்து பேர்கள்.   உள்ளே இருந்தவர் மிகுந்த கவலையாய் சொல்லிய விஷயம். 

" ஏற்கனவே கூட்டம் இல்லாத காரணத்தால் மோர் என்ற வணிக அங்காடியை  மூடி விட்டார்கள்.  இதையும் விரைவில் மூடி விடுவார்கள் என்றே பயந்து கொண்டே தான் ஒவ்வொரு நாளும் வருகின்றோம்."

"விலை என்பது வாங்குபவர்களுக்கு வசதியாய் இருக்க வேண்டும்.  தரம் என்பது அடுத்த முறையும் வரவழைக்க வேண்டும்"

இன்றைய ஆடை உலகின் அவஸ்த்தைகளும் இங்கிருந்து தான் தொடங்கு கிறது. .. 

இன்று திருப்பூரில் பழைய பெருச்சாளிகள் பழங்கதைகளையே நினைத்துக் கொண்டு வங்கிக்கு பயந்து கொண்டு வாழும் வறட்டுக் கௌரவ வாழ்க்கை தான் சிறு தொழில்களிலும் கால் பதிக்கும் ரிலையன்ஸ்க்கும் எதிர்காலத்தில் பரிசாக கிடைக்கும். ஏற்கனவே ரிலையன்ஸ் பெட்ரோல் பங்க அனுபவம் பலருக்கும் பல பாடங்களைத் தந்தது என்பதை இங்கு குறிப்பிடலாம்?

இதுவரையிலும் என்னுடன் தொடர்ந்து பயணித்து வந்து, ஆடை உலகத்தின் நீள அகலங்களை வாசித்தவர்களுக்கு ஒலி ஒளி அனுபவமாக ஒரு ஆடை ஏற்றுமதி நிறுவனத்தின் செயல்பாடுகளை தனித்தனியாக கோப்பாக தரலாம் என்று நினைத்து உள்ளேன். 

உங்கள் புரிதல்களை தெரியப்படுத்துங்கள்.