Monday, July 26, 2010

Sunday, July 11, 2010

நாம் உரமாகிப் போனோமா?

நண்பருக்கு அந்த அழைப்பு வந்த போது மிகுந்த மகிழ்ச்சியாய் இருந்தார்.  ஏதோ ஒரு பெரிய திமிங்கலம் சிக்கிவிட்டது என்ற நம்பிக்கை.  பல நாடுகளுக்கும் ஆய்த்த ஆடைகளை ஏற்றுமதி செய்து கொண்டுருக்கிறார்.  திருப்பூருக்கு வரும் எந்த நாட்டு இறக்குமதியாளர்களும் இங்குள்ள வேலன் என்ற நட்சத்திர விடுதியில் தங்குவர்.  அங்கிருந்து தான் நண்பருக்கு அழைப்பு வந்தது. 
"ஜெர்மனி நாட்டில் இருந்து உங்களை சந்திக்க ஒருவர் வந்துள்ளார். நாளை காலை பத்து மணிக்கு முகப்பு அறைக்கு வந்து சந்திக்க வாய்ப்பு இருந்தால் உங்கள் சம்மதத்தை தெரிவியுங்கள் "

நண்பருக்கு கசக்கவா செய்யும்.  மறுநாள் காலை அங்கே சென்று காத்திருந்த  போது தலைகீழ் விதிகள் அவரை சிரிக்க வைத்தது.  வந்தவர் ஜெர்மன் நாட்டில் உள்ள புகழ்பெற்ற பல்கலைக் கழகத்தில் பணிபுரிந்து கொண்டுருக்கும் ஒரு பேராசிரியை.  55 வயது பெண்மணி.  சமூக ஆர்வலர் அதற்கும் மேலாக இந்த ஆடைத் தொழிலில் புதிதாக பீதியை கிளப்பிக் கொண்டுருக்கும் "உரம் போடாமல் வளர்த்த பஞ்சில் இருந்து உருவாக்கிய ஆடைகள் " என்ற ஆராய்ச்சி கட்டுரையை தயாரித்துக் கொண்டு இருப்பவர்.  இதன் காரணமாக வளர்ந்து கொண்டுருக்கும் நாடுகளில் ஆடைத் தொழிலில் ஈடுபட்டுருக்கும் அத்தனை நகரங்களையும் பார்வையிட்டுக் கொண்டுருப்பவர். சந்தையில் கூவி விற்கும் இந்த முட்டாள் தனத்த்திற்குப் பிறகு உள்ள நதி மூலத்தை காண்பதற்காக ஒவ்வொரு நாடாக பயணம் செய்து கொண்டுருப்பவர். 

எளிமையாக நீங்கள் புரிந்து கொள்ள வேண்டுமென்றால் இயற்கை உரங்கள் மூலம் வளர்க்கப்பட்ட செடியில் கிடைத்த பஞ்சும், அதுவே இறுதியாக ஆடையாக உருவாக்கம் அடையும் வரைக்கும் எந்த வித ரசாயன கலவைகள் சேராமல்  சந்தைக்கு வந்தடைய வேண்டும்.   இதைத்தான் விற்பர்கள் பல்வேறு விதமான விளம்பரங்கள் மூலமாகவும் ஜாலக்கு வார்த்தைகள் சொல்லி  விற்றுக்கொண்டு கொள்ளை லாபம் சம்பாரித்துக் கொண்டுருக்கிறார்கள்.  அத்தனையும் டூப்பு........ ஆடைகளில் சாயம் ஏற்றும் போது ஏதோ ஒரு வழியில் செயற்கை சமாச்சாரங்கள் கலந்தே தான் தீரும். ஆனால் இதற்கென்று செய்யப்படும் விளம்பரங்கள்? 

இதற்கென்று தனியாக உருவாக்கப்பட்ட சந்தைகளும் அதைச் சார்ந்து பல பன்னாட்டு நிறுவனங்களும் இதற்கென்று தனியாக செயல்பட்டுக் கொண்டுருக்கிறது.  மேலைநாடுகளில் உள்ள கலாச்சாரம் என்பது நம்மால் புரிந்து கொள்ளவே முடியாது.  தீப்பிடித்த மாதிரி யோகா பின்னால் ஓடுவார்கள். அதற்குப் பிறகு வேறு ஒன்றைத் துரத்திக் கொண்டுருப்பார்கள்.  மொத்தத்தில் அவர்கள் செலவழிக்க ஏதோ ஒன்று தேவையாய் இருக்கும். அதன் ஒரு பகுதி இப்போது இந்த இயற்கை உரம் மூலமாக வளர்க்கப்பட்ட காய்கறிகள் முதல் ஆடைகள் வரைக்கும் சந்தையில் சக்கைப் போடு போட்டுக் கொண்டு இருக்கிறது.   இதை அடிப்படையாக வைத்து மேலை நாடுகளில் ஒரு கூட்டம் பல்வேறு விதமாக கூவி அழைத்துக் கொண்டு இருக்கிறது.  
" இயற்கை வழியின் மூலமாக உங்கள் குடும்ப ஆரோக்கியத்தை மேம்படுத்த உத்தரவாதம் அளிக்க " என்று பல விளம்பரங்கள் இப்போது மேலை நாடுகளில் கொடி கட்டி பறந்து கொண்டு இருக்கிறது.  ஆனால் இதற்குப் பின்னால் அத்தனையும் வடிகட்டிய முட்டாள் தனம்.  சிலரின் லாபத்துக்காக பல நாடுகளின் மொத்த வாழ்வாதாரமே பறி போய்க் கொண்டு ருக்கிறது என்பது தான் உண்மை.

நண்பர் அந்த பெண்மணியின் அழைப்பை ஏற்று ஆர்வமாய் சென்றது ஒரே ஒரு காரணத்துக்காக மட்டுமே.  ஜெர்மனியில் இருந்து வந்தவர் நமக்கு ஒப்பந்தம் தர வந்துள்ளார்.  எவர் மூலமாகவோ தொலைபேசியைப் பெற்று நம்மை அழைத்துள்ளார்.  எப்படியும் ஒப்பந்தம் கிடைத்து விடும் என்று எதிர்பார்ப்புடன் சென்றவருக்கு அவர் உரையாடத் தொடங்கிய போதே அத்தனையும் புரிந்து விட்டது.  வருத்தமாக இருந்தாலும் அவருடன் இரண்டு மணி நேரம் பேசி முடித்து அவர் கேட்ட அத்தனை தகவல்களையும் கொடுத்து விட்டு  சோர்வுடன் வெளியே வந்தார். அவர்கள் என்ன பேசினார்கள் என்பதை நாம் சில பட்டிக்காட்டு சமாச்சாரங்கள் மூலம் உணர்ந்து கொள்ளமுடியும். 

என்னுடைய ஒவ்வொரு வகுப்பு பள்ளி இறுதி ஆண்டு விடுமுறையின் போது கட்டாயமாக அந்த விடுமுறை முழுவதும் வயலுக்குச் செல்ல வேண்டும்.  கூட்டுக் குடித்தன வாழ்க்கையில் ஒவ்வொரு ஆளுக்கும் ஒவ்வொரு விதமான பணி.  மறுக்க முடியாது.  மறுத்தால் இரண்டு நாள் ஆனாலும் வீட்டுக்குள் நுழைய அனுமதி கிடைக்காது. இது போக அரேபிய நாட்டு தண்டனைகள் படுத்தி எடுத்து விடும். பத்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ள முப்பது ஏக்கர் பரப்பளவு உள்ள அந்த வயலில் எனக்குப் பிடித்த இடமே இரண்டு பெரிய கிணறு தான்.  கண்கள் முழுக்க பச்சை யாக மாறி விடுமோ என்கிற அளவிற்கு மொத்த பரப்பளவும் பச்சை பசேல் என்று இருக்கும்.  புத்தகங்கள் எடுத்துப் போனாலும் படிக்க முடியாது.  தொடர்ச்சியான வேலைகள் துரத்திக் கொண்டேயிருக்கும்.

மின்சாரம் இல்லாவிட்டாலும் கூட மற்றொரு டீசல் மூலமாக இயங்கும் பம்பு செட் என இரண்டு பக்கமும் இரண்டு மூலை யிலும் இருந்த காரணத்தால் வயலில் வருடம் முழுக்க ஏதாவது ஒரு வேலை இருந்து கொண்டே இருக்கும்.  வயலைச் சுற்றியுள்ள கிராமத்த பசங்களுக்கும், உள்ளே பணிபுரிபவர்களுக்கும் எங்களின் மிகப் பெரிய கிணறு வரப் பிரசாதம்.  கிணற்றுக்கு அருகே உள்ள உதியமரத்தின் கிளைகளில் ஏறி நின்று தொம் தொம் என்று குதித்து ஆழம் வரைக்கும் சென்று விளையாடுவார்கள்.  விதவிதமான அவர் களின் டைவ்களும், பல முயற்சிகளை யையும் நானும், சகோதர்களும் பம்பு செட் தொட்டியில் அமர்ந்து கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டு இருப்போம்.
உடற்பயிற்சி என்பது என்னவென்று தெரியாமலே வாழ்ந்த அவர்களின் உடம்பு சும்மா கிண்ணென்று இருக்கும்.  அவர்கள் வீட்டில் வளர்க்கும் ஒவ்வொரு நாய்களும் அவர்களின் சொன்ன பேச்சை கேட்கும். வயலில் உள்ளே திரியும் எலிகளை நாய்கள் கவ்விப் பிடித்து கொண்டு வர குளித்து முடித்து விட்டு சுடச்சுட சுட்ட இறைச்சியை திங்கும் போது காத தூரம் ஓடிவந்து விடுவோம்.  அவர்களின் நக்கலும் நையாண்டியும் நாள் முழுக்க கோபமாக இருந்தாலும் ரசிக்கக்கூடியதாய் இருக்கும். எங்களுடைய பயமெல்லாம் எந்த சித்தப்பா எப்போது உள்ளே வருவார்கள் என்பதிலேயே குறியாய் இருக்கும்.

அறுவடை முடிந்தவுடன் ஆடுமாடுகள் முதல் வெள்ளாடுகள் வரைக்கும் உள்ளே திரிந்து கொண்டுருக்கும்.  மாட்டுச்சாணி மற்றும் புழுக்கையும் இது போக ஊர் விட்டு ஊராக நகர்ந்து கொண்டு ஆட்டு மந்தைகளை வைத்து இருப்பவர்கள் வயலில் வந்து "கிடாப்பு" வந்து போடுவார்கள்.  அதிகபட்சம் பத்துநாட்கள் அவர்களின் மொத்த ஆடுகளும் உள்ளே மேய்ந்து கொண்டு இருக்கும்.  அடுத்த பயிர் செய்ய ஏற்பாடு நடப்பதற்குள் பல விதமாக அந்த மண்ணுக்கு இயற்கை உரம் சேர்ந்து இருக்கும்.  உழுவதற்கு முன்பு கொளஞ்சி இலைகளைப் போட்டு ஒரு வர உழுதல் என்பது நடக்கும். வயலின் உள்ளே வந்து கொட்டப்படும் இலைதலைகள் அத்தனையும் உரமாக மாற்றப்படும்.  இத்தனை முயற்சிகளுக்குப் பிறகு தான் அடுத்த கட்ட நகர்வு நகரும்.

ஏற்கனவே இழந்து போயிருக்கும் மண் சத்துக்களை மறுபடியும் ஓரளவிற்கு உருவாக்கி நாற்றுப் பருவத்தில் தேவைப்படும் சமயத்தில் மட்டுமே செயற்கை உரங்கள் போடப்படும்.  நான் பார்த்த அதிகபட்ச உரங்கள் பாக்டம்பாஸ், பாலிடால்,மற்றும் யூரியா.  ஒவ்வொன்றும் வயலில் உள்ள அறையில் பூட்டப்பட்டு தயாராக இருக்கும்.  தேவைப்படும் சமயத்தில் மட்டும் சித்தப்பாக்கள் மட்டுமே வந்து எடுத்து ஆட்களிடம் கொடுப்பார்கள்.  ஆனால் இன்று அத்தனையும் மாறிவிட்டது.
இன்று விவசாயத்தில் நான் காண்பது என்ன? ஒவ்வொரு அடிக்கும் ஏதாவது ஒரு உரத்தைப் போட்டு தான் விளைச்சல் நடந்து கொண்டு இருக்கிறது. விளைகின்ற நிலத்தில் நாம் உரம் என்பதை போடாவிட்டால்   மகசூல் என்பது இல்லவே இல்லை என்கிற அளவிற்கு எங்கெங்கு காணிணும் உரமயமாகிவிட்டது. செடி  உருவாக்க,உருவான பயிரை  வளர்க்க, செழிக்க, அதிக மகசூல் அதிகம் தர என்று ஒவ்வொரு அரிசியுமே ஒரு சயனைடு குப்பியாகவே இருக்கிறது.  நான் பார்த்தவரைக்கும் விதை நெல் என்பதற்கு வீட்டுக்குள் ஒரு குதிர் போன்ற மண்ணால் செய்யப்பட்ட 6 அடி உயர குடுவை இருக்கும்.  எப்போதுமே அதில் விதை நெல் நிறைந்து வழிந்து கொண்டுருக்கும்.  அதில் இருந்து தான் அடுத்த கட்ட விளைச்சலுக்கு உண்டான விதை எடுப்பார்கள்.  இப்போது நடந்து கொண்டு இருப்பதைப் போல விதைகளுக்காக எந்த வெளிநாட்டு நிறுவனங் களில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்ற விதைகளை வாங்காமல் அவரவர் மண்ணில் விளைந்த விதையே ஒவ்வொரு குடும்பத்தின் வாழ்க்கையையும் சிறப்பாக வாழ வைத்துக் கொண்டுருந்தது.

கதிர் அறுவடையாகும் சமயத்தில் தான் மதிய நேர உணவு வயலில் தயார் செய்து கொடுப்பார்கள்.  உழைப்பவர்கள் சாப்பிடும் சாப்பாடு என்பது நடிகர் ராஜ்கிரண் திரைப்படங்களில் சாப்பிடுவது போலவே இருக்கும். ஆனால் சாப்பாட்டைத் தவிர வேறு எந்த கண்ட கருமாந்திரங்களையும் சாப்பிடாமல் வளர்ந்தவர்கள் சாப்பிடும் சாப்பாடு என்பது மூன்று ஆள் சாப்பாட்டை ஒரு ஆள் சாப்பிடுவார்கள். அந்த உடம்புக்கு தினசரி சாப்பாடு என்பதெல்லாம் கஞ்சி, பச்சைமிளகாய், வெங்காயம்.  இது தான் அவர்களின் பரிபூரண திட்டமிட்ட உணவு.  அவர்கள் உழைப்புக்குத் தேவையான அத்தனை சக்தியும் இந்த சோற்றில் தான் இருந்தது.  அசைவ உணவு என்பது ஏதாவது விசேடம் அல்லது எதிர்பாராத விருந்தாளிகள் வரவு போன்ற சமயங்களில் தான் உள்ளே திரிந்து கொண்டுருக்கும் கோழிகள் குழம்பாக மாறும்.

இன்று உணவு என்றால் நோய் என்று அர்த்தம்.  அந்த அளவிற்கு செயற்கை உரங்கள் போடப்பட்டு நிலமும் பாழாகிவிட்டது.  உண்பவர்கள் உடம்புகளிலும் கண்ட கண்ட ஆச்சரியமான நோய்களும் வந்து கொண்டே இருக்கிறது.

இன்று நாம் விளைவிக்க தேவைப்படும் விதைகள் முதல் அதை வளர்க்க தேவைப்படும் உரங்கள் வரைக்கும் ஏதோ ஒரு பன்னாட்டு நிறுவனம் தான் நேரிடையாகவோ மறைமுகவோ இருக்கிறார்கள்.   வந்து கொட்டப்படும் அத்தனை உரங்களாலும் மண் முழுக்க மலடாகி விட்டது.  உழைத்துப் பார்த்தவர்களும் களைத்துப் போய்விட்டார்கள்.  இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் புகழ் உள் நாட்டுக்குள் ஒரு மாவட்டத்திற்குள் இருந்து அடுத்த மாவட்டத்திற்குள் நகர்வதை விட செயற்கை விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் புகழ் தான் இலங்கை வரைக்கும் பரவி இருக்கிறது. 

 நாமும் ஒரு காரணமாகத்தான் இருக்கிறது.  எல்லாமே அவசரம். எப்போதும் அவசரம். வாங்கி உண்ணும் உணவு கூட தொண்டைக்குழிக்குள் இலகுவாக இறங்க வேண்டும். கடித்து திங்கக்கூட நமக்கு இன்று நேரம் இல்லை.  இந்த ஒரு காரணமே இன்றை கோழி உணவில் சக்கைப் போடு போட்டுக் கொண்டுருக்கும் கெண்டகி அமெரிக்க நிறுவனம்.
அப்பனும், பாட்டனும், பூட்டனும் கற்றுக் கொடுத்த இயற்கை விவசாய உணவு முறையை இன்று வெளிநாட்டு மக்கள் மீண்டும் வந்து கற்றுத் தந்து கொண்டு இருக்கிறார்கள்.  நாமும் அவர்கள் விரும்பும் " இயற்கை உரத்தைப் போட்டு உருவாக்கப்பட்ட பொருட்கள் " என்று அவர்கள் விரும்பும்படி நடந்து கொண்டு ஏற்றுமதி செய்ய வேண்டிய சூழ்நிலை.  இந்த இடத்தில் சிரித்து நம்மை நாமே ஆற்றாமைபடுத்திக் கொள்ள வேண்டிய ஒரு சமாச்சாரமும் இருக்கிறது.

வெளிநாட்டில் இருந்து வரவழைக்கப்படும் விதைகள், அவர்கள் தரும் உரங்கள், அவர்கள் சொல்லிக்கொடுக்கும் வழிமுறைகள் என்று அத்தனையும் நாம் கடைபிடித்தால் கூட இங்கிலாந்து, நெதர்லாந்தில் இருந்து செயல்படும் இந்த பன்னாட்டு நிறுவனங்களின் சான்றிதழ்கள் வாங்கினால் இது செல்லுபடி யாகும். பஞ்சுக்கு, நூலுக்கு, சாயம் ஏற்றும் போது, இறுதியாக ஆடைகளுக்கு என்று ஒவ்வொரு கட்டத்திலும் ஒரு சோதனை.  ஒவ்வொன்றாக தடை தாண்டிய ஓட்டப்பந்தயம் போல் ஜெயித்து வந்தால் தான் இது இயற்கையில் விளைவிக்கப்பட்ட சமாச்சாரம் என்று அவர்கள் உலகத்திற்கு முரசறிவிப்பார்கள்..  ஒவ்வொரு கட்டத்திலும் மிகப் பெரிய தொகை கொடுத்து அவர்களிடம் நாம் சான்றிதழ் வாங்க வேண்டும். கதை எப்படி போகின்றது பார்த்தீர்களா? இல்லாவிட்டால் போடா போடா புண்ணாக்கு கதை தான். வளர்ந்து கொண்டுருக்கும் நாடுகளில் வாழ்பவர்களின் வாழ்க்கை முழுவதும் உரமாகவே மாறிவிட வளர்ந்த நாடுகள் விளைச்சலை அட்டகாசமாக அறுவடை செய்து கொண்டுருக்கிறார்கள்.

Wednesday, July 07, 2010

சந்தைக்கு போகலாம் வாரிங்களா?

காரைக்குடியில் ஐயப்பா டெக்ஸ்டைல்ஸ் என்றொரு நிறுவனம் இருக்கிறது. தினந்தோறும் காலை ஒன்பது மணிக்கு மேல் தான் வந்து கடையைத் திறப்பார்கள்.  முதலாளி உள்ளே நுழைந்து குளிர குளிர சாம்பிராணி புகையெல்லாம் போட்டு கல்லாப்பெட்டியில் உட்கார்வதற்குள் வெளியே எட்டு மணி முதல் காத்துக் கொண்டுருக்கும் கிராமத்து மக்கள் அத்தனை பேர்களும் திமுதிமுவென்று உள்ளே ஒவ்வொரு குறிப்பிட்ட பகுதிகளுக்குள்ளும் செல்வார்கள். இரவு கடை மூடும் வரைக்கும் கூட்டம் அம்மிக் கொண்டுருக்கும்.  கடையை மூடும் போது உள்ளே இருக்கும் அத்தனை பேர் களையும் கழுத்தை பிடித்து வெளியே தள்ளாத குறையாக கெஞ்சி வெளியேற்றுவார்கள். ஒவ்வொரு நாளும் இப்படித்தான்.  தீபாவளி மற்ற பண்டிகையென்றால் சொல்லவே வேண்டாம்.  தலையா இல்லை அலையா என்பது போல் இருக்கும். 
இந்த இந்த நிறுவனம் இப்போது காரைக்குடியில் மூன்று கடைகளாக மாற்றம் பெற்றுள்ளது.  சிறுவர்களுக்கு மற்றும் ரெடிமேட் ஆடைகளுக்கு ஒன்று தனித்தனியாக. எப்போது போல தலைமை நிறுவனம் அது பாட்டுக்கு தனியே என்று கலக்கிக் கொண்டு இருக்கிறார்கள்.  தமன்னா இல்லை.  சிநேகா இல்லை.  ஏன் முடிந்து போன சிம்மு கூட இல்லை. ஊடக விளம்பரம் தேவையில்லாமல் ஏன் பிட் நோட்டீஸ் கூட தேவையில்லாமல் குறைவான லாபத்தில் நிறைவான சேவை செய்து கொண்டுருந்தார்கள். இவர்களால் எப்படி இன்னமும் தாக்குப் பிடித்து முன்னேற முடிகின்றது? ஆனால் இன்றைய தமிழ்நாட்டு முக்கிய ஜவுளிக்கடையின் விளம்பரங்களை பார்த்துக் கொண்டு தானே இருக்கிறீர்கள்?  அவர்கள் தரும் தரமும் விலையும் நீங்கள் அறிந்தது தானே?

எனக்கெல்லாம் கல்லூரி முடிக்கும் வரையிலும் அந்த கடைக்குச் செல்ல வேண்டிய அவஸ்யமே உருவாகவில்லை.  வருடத்திற்கு ஒரு முறை எடுக்கும் ஆடைகள் என்பது மானத்தை மறைக்க என்பதாக வாழ்ந்த வாழ்க்கையது.  ஆடம்பரம், அழகு, விருப்பம் எதுவுமே நிறைவேற்ற முடியாத சூழ்நிலையில் சிக்கனம் மட்டுமே வாழ்க்கை என்பதை உணர்த்திக் காட்டியவர்களுடன் வாழ்ந்து கொண்டுருந்த வாழ்க்கையது. பணம் என்பது செலவளிக்க அல்ல. அது சேமிப்புக்கு உரிய ஒரு வஸ்து.  இது போன்ற பல கொள்கைகள் தான் மூன்று தலைமுறையானாலும் பல மாவட்ட குடும்பங் களையையும் மானம் மரியாதையை உயிருக்குச் சமமாக நினைத்து வாழும் வாழ்க்கையை நேர்மையாக வாழ வைத்துக் கொண்டுருக்கிறது.

ஐயப்பா டெக்ஸ்டைல்ஸ் கடைக்குள் நுழையும் எந்த கிராம மக்களும் ஏதோ ஒரு வகையில் முழுமையான திருப்தியுடன் தான் வெளியே வருவார்கள்.  அவர்கள் விரும்பும் தரம், விலை, உபச்சாரம் இதற்கெல்லாம் மேல் அந்த கடை ராசி என்ற ஒரு சொல் அவர்களை அங்கே இன்று வரையிலும் இழுத்துக் கொண்டு இருக்கிறது..  தமிழர்களிடம் உள்ள முக்கியப் பிரச்சனையே இது தான்.  தலைவரோ, கடையோ பிடித்து விட்டால் போதும்?  தலைகீழாக நின்றாலும் அந்த எண்ணத்தை மாற்றவே முடியாது.  சிறந்த இரண்டு உதாரணங்கள்.எம்.ஜி.ஆர் மற்றும் வேலுப் பிள்ளை பிரபாகரன்.

ஐந்தாம் வகுப்பு வரை உடன் படித்து பிரிந்து போன சொக்கலிங்கம் சென்னையில் இருந்து தாத்தா பாட்டியைப் பார்க்க ஊருக்கு வரும் போது ஒரு தடவை காரைக்குடிக்கு ஒன்றுமே சொல்லாமல் என்னை அழைத்துக் கொண்டு சென்றான். அவன் வாழ்ந்த வடலூரில் படிக்கும் போது பெற்ற காதல் சகவாசத்தால் பனிரெண்டில் கோடடித்து நான் கல்லூரிக்குச் சென்று கொண்டுருந்த போது சென்னையில் தோல் ஏற்றுமதி நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டுருந்தான். அவன் பார்த்துக் கொண்டுருந்த புதிய கலாச்சார வாழ்க்கையில் நான் அணிந்துருந்த உடைகள் எரிச்சலை தர ஐயப்பா டெக்ஸ்டைக்கு அருகே உள்ள பாம்பே டையிங் ஷோரூம் அழைத்துச் சென்றான். அவனும் தபால் பெட்டியோடு தான் என்னுடன் சுற்றியவன் தான். ஆனால் இப்போது அவன் சென்னைவாசி.

திட்டிக் கொண்டே ஒரு பேண்ட் சட்டை எடுத்துக்கொடுத்தான்.  வீட்டில் உதைப்பார்களே என்ற பயம் இருந்தாலும் அந்த துணி,நிறம்,தரம் அடுத்த பத்தாண்டுகள் விட முடியாமல் என்னுடனே இருந்தது. ஐயப்பா போல் மூன்று மடங்கு விலை.  ஆனால் உழைத்த காலத்தைப் பார்த்தால் பல மடங்கு விலை குறைவு.  இன்று வரைக்கும் நுஸ்லிவாடியா சொந்த நிறுவனத்தில் தயாராகும் துணிகளை விட வெளியே உள்ளே சிறிய நிறுவனங்களில் உற்பத்தி செய்து தரம் பார்த்து தங்களுடைய பெயர் வைத்து விற்பது தான் அதிகம். இது எப்படி முடிகிறது?

அவனுடன் சென்னை வந்த போது அமிஞ்சிக்கரையில் இப்போது இடிக்கப்பட்ட அருண் ஹோட்டல் பின்னால் உள்ள இடுக்குச் சந்தில் உள்ளே சென்ற போது சிறிய வீடுகளுக்குள் தையல் எந்திரங்கள் போட்டு நிறைய பேர்கள் உழைத்துக் கொண்டுருந்தார்கள். மலேசிய ஆண்கள் விரும்பி அணியக் கூடிய பேத்திக் பிரிண்ட் (BATIK PRINT) வகையிலான துணிகள். அத்தனையும் அப்போது பாம்பே டையிங் கடைகளில் சிறப்பாக விற்றுக் கொண்டுருந்தார்கள். அதைப் போட்டுக் கொண்டு சாலையில் நடந்தால் நாய் துரத்துமோ என்று பயமாக இருக்கும்.  ஆசை யாரை விட்டது?

காற்றுக் கூட புக முடியாமல் இருக்கும் அந்த சிறிய இடங்களுக்குள் தைத்துக் கொடுத்துக் கொண்டுருப்பது இந்திய அளவில் உள்ள பல முக்கிய (BRANDED LABELS) நிறுவனங்களுக்கு. துணியாக தேவைப்படும் அளவிற்கு வெட்டி உள்ளே வரும். தைத்து மட்டும் கொடுப்பார்கள். அவர்களுக்கு கிடைப்பது தையல் கூலி மட்டுமே.  சிலர் நிறுவனங்கள் விரும்பும் மொத்த வேலைகளையும் முடித்துக்கொடுப்பார்கள். ஆனால் அவர்களுக்கு இறுதியில் கூலியும் அந்த நிறுவனங்களில் விற்கப்படும் விற்பனை விலையைப் பார்த்தால் மலைக்கும் மடுவுக்கும் உள்ள தூரமாக இருக்கும். எதனால் இப்படி?

திருப்பூருக்குள் இரண்டு வகையிலான தொழில் வாழ்க்கை வாழ்பவர்கள் உண்டு. ஆடைத் தொழிலுக்குத் தேவைப்படும் அத்தனை விசயங்களை கட்டி மாரடித்துக் கொண்டு அவஸ்த்தைப்    படுபவர்கள் ஒரு பக்கம்.  வடநாட்டில் இருந்து இங்கு வந்து கொண்டு தொழிலுக்கு தேவைப்படும் அத்தனை துறைகளையும் பல்வேறு விதமாக பயன்படுத்திக் கொண்டு ஹாயாக பத்துக்கு பத்து அறையில் இருந்து கொண்டு பட்டையை கிளப்பிக் கொண்டுருப்பவர்கள் பல பேர்கள். எப்படி ஜெயிக்க முடிகிறது?

ஒரே ஒரு வார்த்தை தான் இதற்கு பதிலாக இருக்க முடியும்?

சந்தைப்படுத்துதல் (MARKETING) என்ற வார்த்தை தான் மந்திரச் சொல் போல் பல நிறுவனங்களையும் வாழ வைத்துக் கொண்டுருக்கிறது. இங்குள்ளவர்கள் இன்றுவரையிலும் எப்படி உழைக்க வேண்டும் என்பதைக் கூட கற்றுக் கொள்ளாமல் இருக்கிறார்கள்.  டெல்லியில் இருந்து இங்கு வந்து உட்காருபவர்கள் இவர்களையும் வேலைவாங்கி முடிந்த அளவிற்கு புத்திசாலித்தனமாய் தொழில் நடத்திக் கொண்டுருக்கிறார்கள். ஒரே காரணம் இந்தியா முழுக்க இருக்கும் தொடர்பும் இதற்கு மேலே வெளிநாட்டுத் தொடர்புகளுமே காரணம். 
கடந்த மூன்று வருடங்களாகத்தான் இந்த துறை இங்குள்ள வளர்ந்த நிறுவனங்களில் வேர் விட ஆரம்பித்து உள்ளது.  தொடக்கம் முதல் உள்ளே புழங்கிக் கொண்டுருந்த சொல் கணக்கு புள்ள.  எந்த பதவியில் போய் உட்கார்ந்தாலும் உள்ளே பணிபுரியும தொழிலாளர்களால் இந்த வார்த்தை கொண்டு தான் அழைப்பார்கள்.  கூறுகெட்ட முதலாளிகளும் இப்படித்தான் அழைத்தார்கள்.  கூலியாட்களைப் போலத் தான் நடத்துவார்கள்.  எப்படி வேலை வாங்க வேண்டும் என்பது கூட தெரியாமல் எப்போதும் ஏதாவது ஒரு வேலையை செய்ய வைக்க வேண்டும் என்ற நோக்கத்திலே பார்ப்பவர்கள் அத்தனை பேர்களும் திருடனாகத் தான் தெரிவார்கள். பொறுக்க முடியாதவர்களும் இறுதியில் திருடத்தான் செய்தார்கள்.

எப்படியோ ஏற்றுமதிக்கான ஒப்பந்தம் உள்ளே வரும்.  சரியாகச் செய்ய வேண்டும் என்று தோன்றாமல் கோட்டை விட்டவர்களும் அதிகம்.  இறக்கு மதியாளர்கள் போட்ட எல்லைக் கோடுகளைத் தாண்டி உதை பட்டவர்களும் உண்டு. கடைசியில் சொத்தை இழந்தது தான் மிச்சம். வந்த இறக்குமதி யாளர்கள் தொடக்கத்தில் எல்லோருமே அள்ளிக் கொடுத்தார்கள்.  இவர்களால் வளர்த்துக் கொள்ள முடியாத அறிவைப் பார்த்து பிறகு கிள்ளிக் கொடுக்க ஆரம்பித்தார்கள். 

இப்போது திருப்பூர் படித்த தலைமுறைகளின் கைகளில் வந்துள்ளது.  ஆனால் உள்ளே வரவேண்டிய பல வெளி நாட்டு நிறுவனங்கள் இன்றும் கூட தயங்கிக் கொண்டே தான் இருக்கிறார்கள்.  எதைச் செய்ய வேண்டும்?  எப்போது செய்ய வேண்டும்? எப்படிச் செய்ய வேண்டும்?  இந்த மூன்றும் கேள்வியாக எழுமானால் இங்கே வெற்றிடம் தான் மிஞ்சும்.  காரணம் சந்தைப்படுத்துதல் எப்படி என்பதை விட மற்றவர்களை சங்கடப்படுத்துதல் எப்படி என்பதில் தான் நம்மவர்களுக்கு கவனம் அதிகம்.  

கிராமம் சார்ந்த நிறுவனங்களுக்கு தரம் முக்கியம்.  அது மட்டுமே போதுமானது.  ஆனால் பெரிய நகரங்களில் தரத்தைத் விட கூவி அழைத்தல் முக்கியமானது.  அது ஏற்றுமதி நிறுவனமாக இருக்கட்டும்.  அல்லது ஜவுளிக்கடையாக இருக்கலாம். சந்தைப்படுத்துதலில் கவனம் இல்லாம் விட்டால் தொழில் விரைவில் சங்கடப்படப் போகிறது என்று அர்த்தம். கவனம் செலுத்த முடியாதவர்களும், தெரியாதவர்களும் இப்போது நிலவும் சந்தைப் பொருளாதாரத்தில் சிக்கி மாட்டிக் கொண்டு தவிக்கிறார்கள். 
கிராமங்களில் அதிக மக்கள் வாழ்கின்ற வரைக்கும் அவர்களின் அடிப்படை யான நம்பிக்கைகள் சிதையாத வரைக்கும் விளம்பரம் என்பது தேவை இல்லாமல் இருந்தது.  ஒரு சொல் போதும்.      " ஒரு தடவை செட்டியார் கடையில வாங்கிப்பாரு.  வருஷம் வருஷம் நகை எடுத்துக்கிட்டே இருப்பே."  "அந்தக் கடையில மளிகை சாமான் வாங்கினால் மூணு மாசம் ஆனாலும் புழு புடிக்காது.  நாத்தம் வராது. " இது போன்ற பல வாய் வழியே பரவும் விளம்பரங்களுக்கு எந்த செலவும் தேவை இல்லை. கிராம வாழ்க்கை சிதைய ஒவ்வொன்றும் மாற ஆரம்பித்து,. விவாசயம் செழிப்பாக இருந்தால் ஏன் வெளியே கிளம்பப் போகிறார்கள்?  வானம் பார்த்த பூமியே அவர்களை எங்கங்கோ விரட்டி இன்று திருப்பூர் முழுக்க கிராமத்து மக்களால் தான் வாழ்ந்து கொண்டுருக்கிறது.  எந்த அமைச்சரும் இது குறித்து கவலைப்பட மாட்டார்கள்.  காரணம் விவசாயிகளுக்கு உதவி செய்தால் எந்த பிரயோஜன மும் இருக்காது.  அதுவே வெளியே வரும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு உதவினால் பல வகையிலும் ஆதாயம்.  புரிந்தவர்கள் தலைவர்கள்.  இன்றும் புரியாதவர்கள் மக்கள்..

இன்று நீங்கள் எந்த தொலைக்காட்சி, வானொலி எதைப் பார்த்தாலும் யாரோ ஒருவர் ஆடிக்கொண்டு பாடிக்கொண்டு சில சமயம் கத்திக்கொண்டு நம்மை ஏமாற்றிக் கொண்டே இருக்கிறார்கள்.  நாமும் நாகரிகம், கவர்ச்சி, கௌரவம் போன்ற கண்ட கருமாந்திரத்தையும் வைத்துக் கொண்டு காசை மனங் கோணாமல் போய் கொடுத்து விட்டு வருகிறோம்.  எந்த காதிகிராப்ட் கடையில் விளம்பரம் செய்கிறார்கள்.  கண்றாவி ஷாம்புக்கு யாரோ ஒருவர் ஆடுகிறார்.  நாமும் தேடித்தேடி ஓடுறோம்.  சீயக்காய் தூளைப் பார்த்தால் ச்சீ என்று முகத்தை திருப்பிக் கொள்கிறோம். முடியெல்லாம் உதிர்ந்த பிறகு முடி ஒட்டும் வல்லுநரிடம் போய் தலையைக் கொடுக்க யோசித்துக் கொண்டுருக்கிறோம்.  ஒரு தனி மனிதனின் மனம் தான் தரமில்லாத அத்தனையையும் உருவாக்க, வளர்க்க, காரணமாக இருக்கிறது.

தொடக்கத்தில் மானத்தை மறைக்க இந்த ஆடை தேவையாய் இருந்தது.  அதுவே இன்று நாகரிகம் என்ற பெயரில் மனித நாகரிகத்தின் அடிப்படை விதிகளையே மாற்றிவிட்டது.  இன்று உலகம் முழுக்க இருக்கும் பன்னாட்டு நிறுவனங்கள் எத்தனை இருக்கிறது தெரியுமா?  விவசாய துறைக்கு அடுத்த முக்கியத்துவமே இந்த ஜவுளித் துறையே?  வால்மார்ட், கே மார்ட், பேமிலி டாலர், எஸ் ஆலிவர், ஹெச்.எம் என்று தொடங்கி பாகாசுர நிறுவனத்தின் ஆதிக்கம் இல்லாத நாடுகளே இல்லை என்கிற அளவிற்கு எங்கெங்கு காணினும் பல்வேறு பெரிய நிறுவனங்கள் இருக்கிறது.  ஆடைத் தொழிலில் முக்கியமான அத்தனையையும் தீர்மானிப்பவர்கள் இவர்களே. உங்கள் குடும்பம் என்ன மாதிரியான உடைகள் உடுத்த வேண்டும் என்று தொடங்கி உங்கள் நிற விருப்பம் போன்ற பலவற்றையையும் இவர்கள் தான் நேரிடை யாகவோ மறைமுகமாகவோ தீர்மானிக்கிறார்கள், 
பன்னாட்டு நிறுவனங்கள் போலவே இந்தியாவில் செயல்பட்டுக் கொண்டுருககும் பல்வேறு நிறுவனங்கள் மட்டும் தான் லாபகரமாக செயல்பட்டுக் கொண்டுருககின்றார்கள்.  அடி முதல் நுனி வரை உழைத்துக் கொண்டுருப்பவர்கள் எப்போதும் போல ஓடாய் தேய்ந்து கொண்டு இருககிறார்கள்.  இந்த லேபிள் உள்ள ஆடையை அணிந்தால் தான் சிறப்பு.   இந்த கதாநாயகி சொன்ன உடை இது என்று எப்போது உங்கள் மனதில் தோன்றிவிட்டதோ அன்றே நீங்கள் பலரின் வாழ்க்கையையும் மறைமுகமாக கெடுத்துக் கொண்டு இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.  காரணம் அவர்கள் சந்தையை நன்றாக புரிந்து கொண்டவர்கள்.  இவர்கள் சந்தையில் ஆட்டம் காட்டும் வித்தை இருக்கிறதே?  ஐயன் திருவள்ளுவர் வந்தால் கூட இவர்கள் ஒரு வருட ஒப்பந்தத்தில் ஒட்டுத் துணியோடு நடிக்க வைத்துவிடுவார்கள்? எப்போதும் போல உழைத்துக் கொண்டுருப்பவர்கள் கட்டிய துணியையும் இழந்து கொண்டுருக்கிறார்கள்,

Saturday, July 03, 2010

வலையை விரித்தது யாரடா?

அந்த நிறுவனம் அமெரிக்காவிற்கு பெண்கள் அணியும் உள்ளாடைகளை (பேண்டீஸ்,ஜட்டி மற்றும் கவர்ச்சிகரமான ஆடைகள்) அனுப்பிக்கொண்டுருந்தார்கள்.  இறக்குமதியாளருக்கும், நிறுவனத்திற்கும் இடையில் ஒரு பாம்பாயைத் சேர்ந்த ஒரு தரகர் இருந்தார்.  இவரிடம் பணி புரிந்தவர் என் சொந்த ஊரைச் சேர்ந்த லெஷ்மணன்.  நிறுவனத்திற்கு அமெரிக்காவில் இருப்பவர்களைப் பற்றியோ அவர்களின் எதிர்பார்ப்புகளைப் பற்றியோ முழுமையாகத் தெரியாது.  பல சமயம் இடுகையைப் போலவே தான் இந்த ஏற்றுமதி தொழிலும். மின் அஞ்சல், தொலைபேசி, இதற்கு மேல் வங்கி பரிவர்த்தனைகள். கடல் கடந்து இருந்தாலும் நம்பிக்கை ஒன்றே இணைத்து வைத்து இருக்கும்.   ஏதோ ஒரு வகையில் ஆங்கிலம் தெரியாத நிறுவன நிர்வாகியை தரகருக்குப் பிடித்துப் போய்விட்டது. அவர் எதிர்பார்த்த அத்தனை வசதிகளும் நிறுவனத்தில் இருக்க அவரின் சுய பாதுகாப்பும் அம்சமாய் அமைந்து விட அமெரிக்க ஒப்பந்தம் உறுதியானது. தரகருக்கு ஒவ்வொரு இரவும் ஜாலியான வாழ்க்கை.  காரணம் மூன்று வருட ஓப்பந்தம் கிடைத்த நிறுவனம் கவனித்த கவனிப்பு அது.

ஒரு வருடம் பட்டையைக் கிளப்பிக் கொண்டு இருந்தார்கள்.  ஒவ்வொரு வாரமும் வெள்ளிக் கிழமை அன்று தூத்துக்குடிக்கு 12 லட்சம் ஆடைகள் சென்று கொண்டுருந்தது. ஒரு ஆடையின் அதிகபட்ச எடையே நூறு கிராம் கூட இருக்காது. நிர்வாகிக்கு பாதிக்கு பாதி லாபம். இந்த பாதி லாபத்திற்குப் பின் முள் ஒன்று உண்டு.  ஆனால் அதை அப்போது நிர்வாகியும் உணரவில்லை. உணர வைக்க வேண்டிய தரகருக்கும் அது குறித்த அக்கறையும் இல்லை. மொத்தத்தில் இரு பக்கமும் ஜாலியோ ஜிம்கானா தான். இந்த வெற்றிக்கு முக்கிய காரணம் இன்றைய தொழில் போட்டிகள் இல்லாத உலகம் அது.

எல்லா பக்கமும் பலன் கிடைத்துக் கொண்டுருந்தது. நிறுவனத்தில் மாடிகள் மளமளவென்று ஏறிக் கொண்டு இருந்தது. பகவான் லேசாக கண் விழித்து பார்த்து விட்டு மறுபடியும் உறங்கத் தொடங்கினார்.  அமெரிக்காவில் இருந்து திடீர் என்று ஓலை வந்தது.  

" இந்த தேதி அன்று உங்கள் நிறுவனத்திற்கு எங்கள் தலைமை துணை அதிகாரியோடு எங்களின் வடிவமைப்பு குழுவென்று உங்கள் நிறுவனத்தை பார்வையிட வருகிறார்கள். புதிதாக சொல்ல ஒன்றுமில்லை. ஏற்கனவே நாம் போட்டுள்ள ஒப்பந்த வாசகத்தின்படி உங்கள் நிறுவனம் செயல் பட்டுக் கொண்டு இருக்கும் என்று நம்புகிறோம். அப்போது மீண்டும் மூன்று வருடத்திற்கான ஒப்பந்தம் அன்றே உறுதிப்படுத்தப்படும்". 

தகவல் கிடைத்த நாள் முதல் நிறுவன நிர்வாகிக்கு தலைகீழ் ஆட்டம் தான். தரகருக்கோ இரவும் பகலும் தூங்கினால் கிர்ர்ர்...... என்பது குறையவே மாட்டேன் என்கிறது.  வருவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு கூட இரண்டு புத்திசாலிகளும் ஒன்றை மறந்து விட்டார்கள்.  போட்டுள்ள ஒப்பந்தப்படி நிறுவனத்தை தயார் செய்ய மறந்து விட்டார்கள்.

உள்ளூர் தொழிற்சங்கத்தில் செல்வாக்கு.  அதிலும் நல்ல பொறுப்பு.  நிர்வாகத்தில் அதிக கண்டிப்பு. எப்போதும் களத்தில் நின்று உழைக்கும் நிர்வாகியின் அயராத உழைப்பு.  எல்லா வகையிலும் தினந்தோறும் இரவு ஒரு மணிநேரம் வரைக்கும் உழைத்துக் கொண்டுருந்த தொழிலாளர்களின் உழைப்பு என ஒவ்வொன்றும் நிறுவனத்தை உறுதியாக வளர்த்துக் கொண்டு இருந்தது.  குறிப்பிட்ட அதே நாளில் கோவை விமான நிலையத்தில் உயர்தர வெளிநாட்டு பென்ஸ் காத்துக் கொண்டுருந்தது.  புகைப்படத்தில் உள்ள துணை தலைமை அதிகாரியை மட்டும் காணவில்லை. உடன் வந்தவர்களுக்கும் குழப்பம். உள்ளுக்குள் பேசி வைத்து இருப்பார்களோ என்னவோ தெரியவில்லை. சற்று நேரம் காத்து இருப்பது போல் இருந்து விட்டு  ஒரு மணி நேரத்திற்குப் பிறகு வேறு வழி எதுவும் தெரியாமல் வந்து இறங்கியவர்களை அழைத்துக்கொண்டு தரகர் வந்து சேர்ந்தார். அந்த வெளிநாட்டு பென்ஸ அலுங்காமல் குலுங்காமல் நிறுவனத்திற்கு வந்து சேர்ந்தது,  ஆனால் அதற்குள் மொத்த நிறுவனமும் பூகம்பம் போல் குலுங்கி தடுமாறி நின்றது?

வெளிநாட்டு வாகனத்தில் வந்து இறங்க வேண்டிய துணை தலைமை அதிகாரி நிறுவன முகவரியை வைத்துக்கொண்டு விமான நிலைய டாக்ஸி மூலம் ஏற்கனவே நிறுவனத்திற்கு வந்து சேர்ந்து இருந்தார்.  வந்தவர் அலுவலகத்தின் உள்ளே போகாமல் உள்ளே ஒவ்வொரு பகுதிக்கும் சென்று ஆராய்ந்து கொண்டுருந்தார்.  500 பேர்கள் வேலை பார்க்கும் நிறுவனத்தில் இவரை எவரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அலுவலகம் என்பது மேல்மாடியில் இருந்தது. இப்படி ஒருவர் வந்து இருக்கிறார் என்பதை காவலாளியும சொல்ல மறந்து விட பகவான் சோம்பலுடன் எழுந்து உட்கார்ந்தார்.
வந்தவர் நிறுவனத்தில் உள்ள துறை சார்ந்த பகுதிகளை ஒவ்வொன்றாக பார்த்து விட்டு கடைசியில் சென்றது தொழிலாளர்கள் பயன்படுத்தும் பொது கழிப்பறைகள் உள்ள பகுதி.  அப்போது தான் அலுவலகத்தில் உள்ளவர்கள் கிடைத்த தகவலின்படி பதறியபடி இவரைத் தொடர ஆரம்பித்தனர். 

ஒரு வேளை கழிப்பறைக்குச் செல்ல விரும்புகிறார் என்றபடி பின்னால் இருந்தவர்கள் " ஐயா சுத்தமான கழிப்பறை மேலே இருக்கிறது.  அங்கே போகலாம்" என்றவர்களை பார்த்து சிரித்தபடியே உள்ளே நுழைந்து பார்த்தவிட்டு மேலே வந்தார்.  எவருக்கும் ஒன்றுமே புரியவில்லை.  

நிறுவன நிர்வாகியை விட தரகருக்கு உள்ளும் புறமும் ததிகிணந்தோம் நாட்டிய நாடகம் நடந்து கொண்டுருந்தது.  அப்போது தான் தரகருக்கு உள்ளே சற்று பலமாக உரைத்தது.  ஒப்பந்த வாசகங்கள் ஒவ்வொன்றாக ஓடிக் கொண்டுருந்தது.  

கடைசியாக உள்ளே குளிர்சாதன அறைக்கு வந்து நின்றவர் சொன்ன அமெரிக்க ஆங்கிலத்தை தரகர் மொழிபெயர்த்து நிறுவன நிர்வாகியிடம் சொன்னது இது.  

" உன்னிடம் வேலை செய்யும் தொழிலாளர்களுக்குத் தேவையான எந்த அடிப்படை வசதி களையும் நீ செய்யவில்லை.  என்னுடைய ஆடைகளைத் தைக்கும் எந்த எந்திரமும் சரியாக பராமரிக்கப்படவில்லை. ஒவ்வவொன்றிலும் எண்ணெய் பிசுக்கும் அழுக்கும் தான் மண்டிக் கிடக்கிறது. தொழிலாளர்களின் எவரின் கையிலும் கையுறை இல்லை. உடைந்த ஊசிகள் ஆடைகளுடன் தான் இருக்கிறதே தவிர அதற்கென்று எந்த ஏற்பாடும் இருப்பதாக தெரிய வில்லை.  துணியை வெட்டிக் கொண்டுருப்பவர்கள் பயன்படுத்தும் உயர்ரக அழுத்தம் வரும் மின்சார சாதனங்களுக்கு உரிய பாதுகாப்பு கூட எதுவும் இல்லை. ஒரு வருடமாக இதை தைத்துக் கொண்டுருக்கும் தொழிலாளர்களை சரியான முறையில் வழிநடத்துபவர்களும் எவரும் உள்ளே இல்லை.  எந்திரம் முதல் கழிப்பறை வரை அழுக்கு அசிங்கம் .................

இந்த நிமிடம் முதல் உன்னிடம் உள்ள அத்தனை ஒப்பந்தங்களும் ரத்து செய்யப்படுகிறது.  தயாரிப்பில் இருக்கும் ஆடைகளும் எங்களுக்குத் தேவையில்லை.  நன்றி. வணக்கம்.  டாடா பைபை..........."

கமல்ஹாசனுக்கு அபிராபி தந்த சுற்றல் வசனம் போல நிர்வாகியை சுற்ற வைத்தது ஆச்சரியமல்ல.  அசராத நிர்வாகி லஷ்மணனிடம் சொன்ன வசனம் தான் மொத்ததிலும் சிறப்பு.

" இவன் என்ன சுத்த மசக்காட்டானா இருப்பான் போல.  கக்கூஸ் போறவனுக்கெல்லாம் நானா போய் நின்னு கழுவிவிட்டுகிட்டு இருக்றது?  இத்தன மொதல போட்டுட்டு கழுவுறதையும் துடைக்றதையும் போய் நானா பார்க்க முடியும்?

உலகத்தில் அமெரிக்காவால் பாதிக்கப்படாத நாடே இல்லை.  அப்படி ஒரு நாடு இருக்குது என்றால் அங்கு எந்த அடிப்படை வளமும் இல்லை என்று அர்த்தம்.  அமெரிக்காவின் சர்வ தேச அரசியல் கொள்கைகள் என்பது வேறு. தொழில் அதிபர்களின் கொள்கைகள் என்பது வேறு.  இரண்டையும் போட்டுக் குழப்பிக் கொள்ள வேண்டாம். ஒரு ஆன்டர்சன் நடத்திய நிறுவனமும் தொங்கலில் விட்ட என்ரான் நிறுவனமும் இங்கு நமக்குத் தேவையில்லாதது.  காரணம் அதன் அத்தனைக்குப் பின்னாலும் நம்முடைய அடிவருடிகள் உண்டு என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.  திருப்பூரில் தொழில் மூலமாக கெட்டு அழிந்தவர்கள் மற்ற நாடுகளை ஒப்பிடும் போது அமெரிக்கர்களால் அழிந்தவர்கள் குறைவு.  அப்படி அழிந்தவர் இருந்தால் மேற்படி கொழுப்பு என்று அர்த்தம்.  பேசியபடி நடந்து இருக்கமாட்டார்கள். ஆசையினால் அத்தனை அக்கிரமத்தையும் செய்து இருப்பார்கள்.  ஆப்பு கழட்ட முடியாத அளவிற்கு சொருகப்பட்டுருக்கும்.
இரண்டு காரணங்கள்.  அமெரிக்க அரசாங்கம் உருவாக்கும் அணு ஆயுத ஒப்பந்தமாகட்டும் மற்ற தொழில் சார்ந்த எந்த ஒப்பந்தமாகட்டும். எல்லாவற்றிலும் வெளிப்படையான அவர்களின் அணுகுமுறையை நம்மால் எளிதாக கவனிக்க முடியும்.  நான் இப்படித் தான்.  இது தான் எனக்கு வேண்டும்.  உனக்கு என்ன தேவை?  அப்படியா?  இது தான் என்னால் முடியும்?  உனக்கு வாய்ப்பு இருக்கா இல்லையா?  சரி இதை வைத்துக் கொள்?  இது தான் இதற்கான சட்டதிட்டம்.  மாறாதே........ நீ மாறினால் நானும் வேறு பக்கம் மாற்றிக் கொள்வேன்.  எளிமையான சட்டதிட்டம். அதற்கு நீங்கள் சுயநலம், பொதுநலம் போன்ற எத்தனை பெயர்களை வைத்துக்கொண்டாலும் அவர்கள் கவலைப்படுவது இல்லை.


ஆமாய்யா நான் இப்படித்தான்.  நீ என்ன பண்ணுவ?

பிடித்தால் தொடரலாம்.  லாம் என்ன?  தொடர்ந்து தான் ஆக வேண்டும்.  அதிக வாங்கும் திறன் படைத்த அவர்களை விட்டால் வேறு ஆள் ஏது?  இந்தியாவில் உருவாக்கப்படும், உருவாகும் எந்த ஒப்பந்தத்தையும் அரசியலில் உள்ள முதல் தலைகளுக்கே தெரியுமா என்பது முதல் ஆச்சரியம்.  அதிகார வர்க்கத்திற்குள்ளேயே அத்தனை புரிந்துணர்வும் உருவாக்கப்பட்டு கையெழுத்து போடப்படும் சமயத்தில் தான் பத்திரிக்கைகளுக்கே தெரியும்.  இது இந்திய நிலவரம்.  ஆனால் அமெரிக்காவில் கூறு கிழிச்சு தொங்க விட்டு தான் அதிபரிடம் போய்ச் சேரும்.  விதிவிலக்குகளைத் தவிர. 
தொடக்கத்தில் எந்த வெளிநாட்டு நிறுவனங்களும் இங்கு மிகப்பெரிய கெடுபிடிகளை உருவாக்க வில்லை என்பதும் முக்கியமாக நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். பன்னாட்டு நிறுவனங்கள் உருவாக்கும் சட்டதிட்டங்கள் என்பது ஒரு கத்தி போலத்தான். பொதுநலமும் சுயநலமுமாய் சேர்ந்த சானை தீட்டப்பட்ட கத்தியது.  நீ தயார் செய்யப்போகும் ஆடைக்கான அடக்கவில்லை. உன்னுடைய நடைமுறை செலவீனங்கள். உன்னுடைய லாபம்.  அதற்கு மேல் தொழிலா ளர்களின் நல்வாழ்வு என்று பக்கம் பக்கமாக அடிக்கப்பட்ட ஒப்பந்த நடைமுறை வரைவு சாசனம் உருவாக்கப்பட்டு இருபக்கமும் கையெழுத்து இடப்படும்.  நம்மவர்கள் எப்போதுமே நல நிதி என்பதை நம்முடைய நிதியாக கருதுபவர்கள்.  இறுதியாக பொட்டக்காடுகள் முழுக்க வளைத்துப்போட்டது தான் மிச்சம்.  பத்துவருடம் தொடர்ந்து நடந்து லாபம் பார்க்க வேண்டிய தொழில்களை அப்படியே அள்ளிக்கட்ட வேண்டிய அவசரத்தினால் இறுதியாக அதோகதியாக ஆனது தான் மிச்சமாக இருக்கும்.

ஆனால் இதே இந்த பன்னாட்டு சட்ட திட்டங்கள் இன்று எத்தனை உள்ளது தெரியுமா? 

 ஐ.எஸ்.ஓ தரச் சான்றிதழ்கள், ராப்,     செடக்ஸ்,       எஸ்ஏ8000    என்று தொடங்கி ஒவ்வொரு நாட்டுக்கும் ஒவ்வொரு நிறுவனத்திற்கும் அவர்கள் விரும்பும் அளவிற்கு ஏராளமான சட்டதிட்டங்கள். ஒவ்வொரு தொழிலையையும் மிக சுத்தமாக அவர்கள் விரும்பும் ஒரு மாய வட்டத்திற்குள் கொண்டு வந்து நிறுத்தி விட்டார்கள்.  வெளிநாட்டில் உள்ள ஒரு நிறுவனத்திடம் தொழில் தொடர்பை உருவாக்க வேண்டுமென்றால் அவர்கள் விரும்பும் அடிப்படை வசதி களுடன் இந்த சான்றிதழ்கள் பெறும் அளவிற்கு ஒவ்வொன்றையும நிறுவனத்திற்குள் உருவாக்கியிருக்க வேண்டும்.  இதையெல்லாம் தடை தாண்டி ஓட்டப்பந்தயத்தில் நீங்கள் வென்று வந்தால் இறுதிக்கட்டம் ஒன்று உள்ளது.  தயாரித்த ஆடைகளை குறிப்பிட்ட நிறுவனம் தரம் பார்த்து அவர்கள் சரி என்று சொன்னால் தான் கப்பலில் ஏற்ற முடியும். 

சரி அவர்கள் விரும்பிய அத்தனையும் உருவாக்கியாச்சு. இதற்கென்று ஒவ்வொருவரும் போட்டி போட்டுக்கொண்டு ஏராளமான முதலீட்டையும் முடக்கியாச்சு.  தரத்திற்கேற்ற தகுதியான விலையாவது கிடைக்கும் என்கிறீர்களா? 
முதலும் போச்சு.  இப்போது மூச்சும் போய்க் கொண்டுருக்கிறது.

வலையை விரிக்க அனுமதித்ததும் நாமே.  அதில் வலியப்போய் மாட்டிக் கொள்வதும் நாமே.

ஏன் இத்தனை கெடுபிடி?  இத்தனை கெடுபிடிகள் இல்லாவிட்டால் அந்த தரத்தை நம்மால் கொடுக்க முடியாதா? இந்த இடத்தில் தான் வளர்ந்து கொண்டுருக்கும் நாடுகளை பண்டாரமாக மாற்றுவது தொடங்குகிறது?  பன்னாட்டு நிறுவனங்கள் அடிக்கும் ஒரு கல்லில் இரு மாங்காய் அல்ல.  ஒரு மரமே சாய்ந்து விடும்.