Wednesday, July 07, 2010

சந்தைக்கு போகலாம் வாரிங்களா?

காரைக்குடியில் ஐயப்பா டெக்ஸ்டைல்ஸ் என்றொரு நிறுவனம் இருக்கிறது. தினந்தோறும் காலை ஒன்பது மணிக்கு மேல் தான் வந்து கடையைத் திறப்பார்கள்.  முதலாளி உள்ளே நுழைந்து குளிர குளிர சாம்பிராணி புகையெல்லாம் போட்டு கல்லாப்பெட்டியில் உட்கார்வதற்குள் வெளியே எட்டு மணி முதல் காத்துக் கொண்டுருக்கும் கிராமத்து மக்கள் அத்தனை பேர்களும் திமுதிமுவென்று உள்ளே ஒவ்வொரு குறிப்பிட்ட பகுதிகளுக்குள்ளும் செல்வார்கள். இரவு கடை மூடும் வரைக்கும் கூட்டம் அம்மிக் கொண்டுருக்கும்.  கடையை மூடும் போது உள்ளே இருக்கும் அத்தனை பேர் களையும் கழுத்தை பிடித்து வெளியே தள்ளாத குறையாக கெஞ்சி வெளியேற்றுவார்கள். ஒவ்வொரு நாளும் இப்படித்தான்.  தீபாவளி மற்ற பண்டிகையென்றால் சொல்லவே வேண்டாம்.  தலையா இல்லை அலையா என்பது போல் இருக்கும். 
இந்த இந்த நிறுவனம் இப்போது காரைக்குடியில் மூன்று கடைகளாக மாற்றம் பெற்றுள்ளது.  சிறுவர்களுக்கு மற்றும் ரெடிமேட் ஆடைகளுக்கு ஒன்று தனித்தனியாக. எப்போது போல தலைமை நிறுவனம் அது பாட்டுக்கு தனியே என்று கலக்கிக் கொண்டு இருக்கிறார்கள்.  தமன்னா இல்லை.  சிநேகா இல்லை.  ஏன் முடிந்து போன சிம்மு கூட இல்லை. ஊடக விளம்பரம் தேவையில்லாமல் ஏன் பிட் நோட்டீஸ் கூட தேவையில்லாமல் குறைவான லாபத்தில் நிறைவான சேவை செய்து கொண்டுருந்தார்கள். இவர்களால் எப்படி இன்னமும் தாக்குப் பிடித்து முன்னேற முடிகின்றது? ஆனால் இன்றைய தமிழ்நாட்டு முக்கிய ஜவுளிக்கடையின் விளம்பரங்களை பார்த்துக் கொண்டு தானே இருக்கிறீர்கள்?  அவர்கள் தரும் தரமும் விலையும் நீங்கள் அறிந்தது தானே?

எனக்கெல்லாம் கல்லூரி முடிக்கும் வரையிலும் அந்த கடைக்குச் செல்ல வேண்டிய அவஸ்யமே உருவாகவில்லை.  வருடத்திற்கு ஒரு முறை எடுக்கும் ஆடைகள் என்பது மானத்தை மறைக்க என்பதாக வாழ்ந்த வாழ்க்கையது.  ஆடம்பரம், அழகு, விருப்பம் எதுவுமே நிறைவேற்ற முடியாத சூழ்நிலையில் சிக்கனம் மட்டுமே வாழ்க்கை என்பதை உணர்த்திக் காட்டியவர்களுடன் வாழ்ந்து கொண்டுருந்த வாழ்க்கையது. பணம் என்பது செலவளிக்க அல்ல. அது சேமிப்புக்கு உரிய ஒரு வஸ்து.  இது போன்ற பல கொள்கைகள் தான் மூன்று தலைமுறையானாலும் பல மாவட்ட குடும்பங் களையையும் மானம் மரியாதையை உயிருக்குச் சமமாக நினைத்து வாழும் வாழ்க்கையை நேர்மையாக வாழ வைத்துக் கொண்டுருக்கிறது.

ஐயப்பா டெக்ஸ்டைல்ஸ் கடைக்குள் நுழையும் எந்த கிராம மக்களும் ஏதோ ஒரு வகையில் முழுமையான திருப்தியுடன் தான் வெளியே வருவார்கள்.  அவர்கள் விரும்பும் தரம், விலை, உபச்சாரம் இதற்கெல்லாம் மேல் அந்த கடை ராசி என்ற ஒரு சொல் அவர்களை அங்கே இன்று வரையிலும் இழுத்துக் கொண்டு இருக்கிறது..  தமிழர்களிடம் உள்ள முக்கியப் பிரச்சனையே இது தான்.  தலைவரோ, கடையோ பிடித்து விட்டால் போதும்?  தலைகீழாக நின்றாலும் அந்த எண்ணத்தை மாற்றவே முடியாது.  சிறந்த இரண்டு உதாரணங்கள்.எம்.ஜி.ஆர் மற்றும் வேலுப் பிள்ளை பிரபாகரன்.

ஐந்தாம் வகுப்பு வரை உடன் படித்து பிரிந்து போன சொக்கலிங்கம் சென்னையில் இருந்து தாத்தா பாட்டியைப் பார்க்க ஊருக்கு வரும் போது ஒரு தடவை காரைக்குடிக்கு ஒன்றுமே சொல்லாமல் என்னை அழைத்துக் கொண்டு சென்றான். அவன் வாழ்ந்த வடலூரில் படிக்கும் போது பெற்ற காதல் சகவாசத்தால் பனிரெண்டில் கோடடித்து நான் கல்லூரிக்குச் சென்று கொண்டுருந்த போது சென்னையில் தோல் ஏற்றுமதி நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டுருந்தான். அவன் பார்த்துக் கொண்டுருந்த புதிய கலாச்சார வாழ்க்கையில் நான் அணிந்துருந்த உடைகள் எரிச்சலை தர ஐயப்பா டெக்ஸ்டைக்கு அருகே உள்ள பாம்பே டையிங் ஷோரூம் அழைத்துச் சென்றான். அவனும் தபால் பெட்டியோடு தான் என்னுடன் சுற்றியவன் தான். ஆனால் இப்போது அவன் சென்னைவாசி.

திட்டிக் கொண்டே ஒரு பேண்ட் சட்டை எடுத்துக்கொடுத்தான்.  வீட்டில் உதைப்பார்களே என்ற பயம் இருந்தாலும் அந்த துணி,நிறம்,தரம் அடுத்த பத்தாண்டுகள் விட முடியாமல் என்னுடனே இருந்தது. ஐயப்பா போல் மூன்று மடங்கு விலை.  ஆனால் உழைத்த காலத்தைப் பார்த்தால் பல மடங்கு விலை குறைவு.  இன்று வரைக்கும் நுஸ்லிவாடியா சொந்த நிறுவனத்தில் தயாராகும் துணிகளை விட வெளியே உள்ளே சிறிய நிறுவனங்களில் உற்பத்தி செய்து தரம் பார்த்து தங்களுடைய பெயர் வைத்து விற்பது தான் அதிகம். இது எப்படி முடிகிறது?

அவனுடன் சென்னை வந்த போது அமிஞ்சிக்கரையில் இப்போது இடிக்கப்பட்ட அருண் ஹோட்டல் பின்னால் உள்ள இடுக்குச் சந்தில் உள்ளே சென்ற போது சிறிய வீடுகளுக்குள் தையல் எந்திரங்கள் போட்டு நிறைய பேர்கள் உழைத்துக் கொண்டுருந்தார்கள். மலேசிய ஆண்கள் விரும்பி அணியக் கூடிய பேத்திக் பிரிண்ட் (BATIK PRINT) வகையிலான துணிகள். அத்தனையும் அப்போது பாம்பே டையிங் கடைகளில் சிறப்பாக விற்றுக் கொண்டுருந்தார்கள். அதைப் போட்டுக் கொண்டு சாலையில் நடந்தால் நாய் துரத்துமோ என்று பயமாக இருக்கும்.  ஆசை யாரை விட்டது?

காற்றுக் கூட புக முடியாமல் இருக்கும் அந்த சிறிய இடங்களுக்குள் தைத்துக் கொடுத்துக் கொண்டுருப்பது இந்திய அளவில் உள்ள பல முக்கிய (BRANDED LABELS) நிறுவனங்களுக்கு. துணியாக தேவைப்படும் அளவிற்கு வெட்டி உள்ளே வரும். தைத்து மட்டும் கொடுப்பார்கள். அவர்களுக்கு கிடைப்பது தையல் கூலி மட்டுமே.  சிலர் நிறுவனங்கள் விரும்பும் மொத்த வேலைகளையும் முடித்துக்கொடுப்பார்கள். ஆனால் அவர்களுக்கு இறுதியில் கூலியும் அந்த நிறுவனங்களில் விற்கப்படும் விற்பனை விலையைப் பார்த்தால் மலைக்கும் மடுவுக்கும் உள்ள தூரமாக இருக்கும். எதனால் இப்படி?

திருப்பூருக்குள் இரண்டு வகையிலான தொழில் வாழ்க்கை வாழ்பவர்கள் உண்டு. ஆடைத் தொழிலுக்குத் தேவைப்படும் அத்தனை விசயங்களை கட்டி மாரடித்துக் கொண்டு அவஸ்த்தைப்    படுபவர்கள் ஒரு பக்கம்.  வடநாட்டில் இருந்து இங்கு வந்து கொண்டு தொழிலுக்கு தேவைப்படும் அத்தனை துறைகளையும் பல்வேறு விதமாக பயன்படுத்திக் கொண்டு ஹாயாக பத்துக்கு பத்து அறையில் இருந்து கொண்டு பட்டையை கிளப்பிக் கொண்டுருப்பவர்கள் பல பேர்கள். எப்படி ஜெயிக்க முடிகிறது?

ஒரே ஒரு வார்த்தை தான் இதற்கு பதிலாக இருக்க முடியும்?

சந்தைப்படுத்துதல் (MARKETING) என்ற வார்த்தை தான் மந்திரச் சொல் போல் பல நிறுவனங்களையும் வாழ வைத்துக் கொண்டுருக்கிறது. இங்குள்ளவர்கள் இன்றுவரையிலும் எப்படி உழைக்க வேண்டும் என்பதைக் கூட கற்றுக் கொள்ளாமல் இருக்கிறார்கள்.  டெல்லியில் இருந்து இங்கு வந்து உட்காருபவர்கள் இவர்களையும் வேலைவாங்கி முடிந்த அளவிற்கு புத்திசாலித்தனமாய் தொழில் நடத்திக் கொண்டுருக்கிறார்கள். ஒரே காரணம் இந்தியா முழுக்க இருக்கும் தொடர்பும் இதற்கு மேலே வெளிநாட்டுத் தொடர்புகளுமே காரணம். 
கடந்த மூன்று வருடங்களாகத்தான் இந்த துறை இங்குள்ள வளர்ந்த நிறுவனங்களில் வேர் விட ஆரம்பித்து உள்ளது.  தொடக்கம் முதல் உள்ளே புழங்கிக் கொண்டுருந்த சொல் கணக்கு புள்ள.  எந்த பதவியில் போய் உட்கார்ந்தாலும் உள்ளே பணிபுரியும தொழிலாளர்களால் இந்த வார்த்தை கொண்டு தான் அழைப்பார்கள்.  கூறுகெட்ட முதலாளிகளும் இப்படித்தான் அழைத்தார்கள்.  கூலியாட்களைப் போலத் தான் நடத்துவார்கள்.  எப்படி வேலை வாங்க வேண்டும் என்பது கூட தெரியாமல் எப்போதும் ஏதாவது ஒரு வேலையை செய்ய வைக்க வேண்டும் என்ற நோக்கத்திலே பார்ப்பவர்கள் அத்தனை பேர்களும் திருடனாகத் தான் தெரிவார்கள். பொறுக்க முடியாதவர்களும் இறுதியில் திருடத்தான் செய்தார்கள்.

எப்படியோ ஏற்றுமதிக்கான ஒப்பந்தம் உள்ளே வரும்.  சரியாகச் செய்ய வேண்டும் என்று தோன்றாமல் கோட்டை விட்டவர்களும் அதிகம்.  இறக்கு மதியாளர்கள் போட்ட எல்லைக் கோடுகளைத் தாண்டி உதை பட்டவர்களும் உண்டு. கடைசியில் சொத்தை இழந்தது தான் மிச்சம். வந்த இறக்குமதி யாளர்கள் தொடக்கத்தில் எல்லோருமே அள்ளிக் கொடுத்தார்கள்.  இவர்களால் வளர்த்துக் கொள்ள முடியாத அறிவைப் பார்த்து பிறகு கிள்ளிக் கொடுக்க ஆரம்பித்தார்கள். 

இப்போது திருப்பூர் படித்த தலைமுறைகளின் கைகளில் வந்துள்ளது.  ஆனால் உள்ளே வரவேண்டிய பல வெளி நாட்டு நிறுவனங்கள் இன்றும் கூட தயங்கிக் கொண்டே தான் இருக்கிறார்கள்.  எதைச் செய்ய வேண்டும்?  எப்போது செய்ய வேண்டும்? எப்படிச் செய்ய வேண்டும்?  இந்த மூன்றும் கேள்வியாக எழுமானால் இங்கே வெற்றிடம் தான் மிஞ்சும்.  காரணம் சந்தைப்படுத்துதல் எப்படி என்பதை விட மற்றவர்களை சங்கடப்படுத்துதல் எப்படி என்பதில் தான் நம்மவர்களுக்கு கவனம் அதிகம்.  

கிராமம் சார்ந்த நிறுவனங்களுக்கு தரம் முக்கியம்.  அது மட்டுமே போதுமானது.  ஆனால் பெரிய நகரங்களில் தரத்தைத் விட கூவி அழைத்தல் முக்கியமானது.  அது ஏற்றுமதி நிறுவனமாக இருக்கட்டும்.  அல்லது ஜவுளிக்கடையாக இருக்கலாம். சந்தைப்படுத்துதலில் கவனம் இல்லாம் விட்டால் தொழில் விரைவில் சங்கடப்படப் போகிறது என்று அர்த்தம். கவனம் செலுத்த முடியாதவர்களும், தெரியாதவர்களும் இப்போது நிலவும் சந்தைப் பொருளாதாரத்தில் சிக்கி மாட்டிக் கொண்டு தவிக்கிறார்கள். 
கிராமங்களில் அதிக மக்கள் வாழ்கின்ற வரைக்கும் அவர்களின் அடிப்படை யான நம்பிக்கைகள் சிதையாத வரைக்கும் விளம்பரம் என்பது தேவை இல்லாமல் இருந்தது.  ஒரு சொல் போதும்.      " ஒரு தடவை செட்டியார் கடையில வாங்கிப்பாரு.  வருஷம் வருஷம் நகை எடுத்துக்கிட்டே இருப்பே."  "அந்தக் கடையில மளிகை சாமான் வாங்கினால் மூணு மாசம் ஆனாலும் புழு புடிக்காது.  நாத்தம் வராது. " இது போன்ற பல வாய் வழியே பரவும் விளம்பரங்களுக்கு எந்த செலவும் தேவை இல்லை. கிராம வாழ்க்கை சிதைய ஒவ்வொன்றும் மாற ஆரம்பித்து,. விவாசயம் செழிப்பாக இருந்தால் ஏன் வெளியே கிளம்பப் போகிறார்கள்?  வானம் பார்த்த பூமியே அவர்களை எங்கங்கோ விரட்டி இன்று திருப்பூர் முழுக்க கிராமத்து மக்களால் தான் வாழ்ந்து கொண்டுருக்கிறது.  எந்த அமைச்சரும் இது குறித்து கவலைப்பட மாட்டார்கள்.  காரணம் விவசாயிகளுக்கு உதவி செய்தால் எந்த பிரயோஜன மும் இருக்காது.  அதுவே வெளியே வரும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு உதவினால் பல வகையிலும் ஆதாயம்.  புரிந்தவர்கள் தலைவர்கள்.  இன்றும் புரியாதவர்கள் மக்கள்..

இன்று நீங்கள் எந்த தொலைக்காட்சி, வானொலி எதைப் பார்த்தாலும் யாரோ ஒருவர் ஆடிக்கொண்டு பாடிக்கொண்டு சில சமயம் கத்திக்கொண்டு நம்மை ஏமாற்றிக் கொண்டே இருக்கிறார்கள்.  நாமும் நாகரிகம், கவர்ச்சி, கௌரவம் போன்ற கண்ட கருமாந்திரத்தையும் வைத்துக் கொண்டு காசை மனங் கோணாமல் போய் கொடுத்து விட்டு வருகிறோம்.  எந்த காதிகிராப்ட் கடையில் விளம்பரம் செய்கிறார்கள்.  கண்றாவி ஷாம்புக்கு யாரோ ஒருவர் ஆடுகிறார்.  நாமும் தேடித்தேடி ஓடுறோம்.  சீயக்காய் தூளைப் பார்த்தால் ச்சீ என்று முகத்தை திருப்பிக் கொள்கிறோம். முடியெல்லாம் உதிர்ந்த பிறகு முடி ஒட்டும் வல்லுநரிடம் போய் தலையைக் கொடுக்க யோசித்துக் கொண்டுருக்கிறோம்.  ஒரு தனி மனிதனின் மனம் தான் தரமில்லாத அத்தனையையும் உருவாக்க, வளர்க்க, காரணமாக இருக்கிறது.

தொடக்கத்தில் மானத்தை மறைக்க இந்த ஆடை தேவையாய் இருந்தது.  அதுவே இன்று நாகரிகம் என்ற பெயரில் மனித நாகரிகத்தின் அடிப்படை விதிகளையே மாற்றிவிட்டது.  இன்று உலகம் முழுக்க இருக்கும் பன்னாட்டு நிறுவனங்கள் எத்தனை இருக்கிறது தெரியுமா?  விவசாய துறைக்கு அடுத்த முக்கியத்துவமே இந்த ஜவுளித் துறையே?  வால்மார்ட், கே மார்ட், பேமிலி டாலர், எஸ் ஆலிவர், ஹெச்.எம் என்று தொடங்கி பாகாசுர நிறுவனத்தின் ஆதிக்கம் இல்லாத நாடுகளே இல்லை என்கிற அளவிற்கு எங்கெங்கு காணினும் பல்வேறு பெரிய நிறுவனங்கள் இருக்கிறது.  ஆடைத் தொழிலில் முக்கியமான அத்தனையையும் தீர்மானிப்பவர்கள் இவர்களே. உங்கள் குடும்பம் என்ன மாதிரியான உடைகள் உடுத்த வேண்டும் என்று தொடங்கி உங்கள் நிற விருப்பம் போன்ற பலவற்றையையும் இவர்கள் தான் நேரிடை யாகவோ மறைமுகமாகவோ தீர்மானிக்கிறார்கள், 
பன்னாட்டு நிறுவனங்கள் போலவே இந்தியாவில் செயல்பட்டுக் கொண்டுருககும் பல்வேறு நிறுவனங்கள் மட்டும் தான் லாபகரமாக செயல்பட்டுக் கொண்டுருககின்றார்கள்.  அடி முதல் நுனி வரை உழைத்துக் கொண்டுருப்பவர்கள் எப்போதும் போல ஓடாய் தேய்ந்து கொண்டு இருககிறார்கள்.  இந்த லேபிள் உள்ள ஆடையை அணிந்தால் தான் சிறப்பு.   இந்த கதாநாயகி சொன்ன உடை இது என்று எப்போது உங்கள் மனதில் தோன்றிவிட்டதோ அன்றே நீங்கள் பலரின் வாழ்க்கையையும் மறைமுகமாக கெடுத்துக் கொண்டு இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.  காரணம் அவர்கள் சந்தையை நன்றாக புரிந்து கொண்டவர்கள்.  இவர்கள் சந்தையில் ஆட்டம் காட்டும் வித்தை இருக்கிறதே?  ஐயன் திருவள்ளுவர் வந்தால் கூட இவர்கள் ஒரு வருட ஒப்பந்தத்தில் ஒட்டுத் துணியோடு நடிக்க வைத்துவிடுவார்கள்? எப்போதும் போல உழைத்துக் கொண்டுருப்பவர்கள் கட்டிய துணியையும் இழந்து கொண்டுருக்கிறார்கள்,

33 comments:

 1. ஐயப்பா டெக்ஸ்டைல்ஸ் போல் ஊருக்கு இரண்டு கடைகள் விளம்பரமின்றியும் நிமிர்ந்து நிற்கினறன. பல கடைகள் விளம்பரம் செய்தும் படுத்து கிடக்கின்றன./////

  இந்த கதாநாயகி சொன்ன உடை இது என்று எப்போது உங்கள் மனதில் தோன்றிவிட்டதோ அன்றே நீங்கள் பலரின் வாழ்க்கையையும் மறைமுகமாக கெடுத்துக் கொண்டு இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.

  நான் ஒரு உடை வாங்க நடிகை வந்து எனக்கு சொல்ல வேண்டுமா.
  இது ஒரு வித போதை. இந்த போதையில் விழாதவாறு இருத்தல் நல்லது.
  நான் எப்போதும் சிறு கடைகளில் தான் பொருள் வாங்குவேன். அதை கொள்கையாகவும் வைத்துள்ளேன் - இரண்டு காரணத்திற்காக. ஒன்று. பெரு நிறுவனங்கள் மீது கோபம். மற்றது. நானொரு சிறுதொழில் செய்பவன். நானே சிறு தொழிலை ஆதரவிக்கவில்லை என்றால் என்னை யார் ஆதரிப்பார்.

  ReplyDelete
 2. இன்று நீ... நாளை நான் .. என்பது போல், அழிகின்றவர்களாக, அழிய போகின்றவர்களாக சிறு தொழில் நிறுவனங்கள்.

  என்று தணியுமோ- பெரிய நிறுவனங்களின் ஆதிக்க பசி.

  ReplyDelete
 3. மிக மிக விரிவான அலசல்கள்.. கை குடுங்கள் தோழரே..

  ReplyDelete
 4. பின்னூட்டம் போடக் கூட முடியாத அளவுக்கு எழுதித் தள்ளுறீங்களே?! எப்படி முடியுது?

  உங்க ஏரியாவுக்கு வந்து பின்னூட்டம் போடாததுக்குக் காரணம்... நீங்களாவது உருப்படியா எதையாவது தட்டுறீங்க. இங்க வந்து கும்மியை ஆரம்பிக்க வேணாம்னுதான்.

  ----

  அப்பாலிக்கு.. நானும் ஒரு வருசம் ஈரோடில் ஒரு கார்மெண்ட்ஸில், சூப்பர்வைஸரா (அப்படித்தான் சொன்னாங்க) வேலை பார்த்திருக்கேன்.

  நீங்க சொல்லும் கதைகள் நிறைய நேரில் பார்த்தேன். அந்த கம்பெனி முதலாளி மொத்த சொத்தையும் இழந்ததையும் சேர்த்து.

  ReplyDelete
 5. மேலும் ஒரு அருமையான பதிவு.
  நம்மிடம் இருக்கும் பல குறைகளை அப்படியே பட்டியல் இட்டிருக்கிறீர்கள்.சோகம் தான் மிஞ்சுகிறது.

  ReplyDelete
 6. //கேட்பது தவறு. கொடுப்பது சிறப்பு//

  அப்ப “கேளுங்கள் கொடுக்கப்படும்” -ன்னு இயேசு சொன்னது தப்புன்னு சொல்லுறீங்க!!

  அதாவது நீங்க ஒரு இந்து பாஸிஸிட் (இதுக்கு என்ன அர்த்தம்??).

  பாஸிஸிட் ஜோதிஜி ஒழிக ஒழிக.

  (பார்த்தீங்களா இதுக்குத்தான்... உங்க ஏரியாவை விட்டு வச்சேன்!! :) )

  ReplyDelete
 7. தந்திரமாக பிரபல ஆடை நிறுவனங்கள் (Brand Name) விளம்பர நிறுவனங்களிடம் வேலையை ஒப்படைத்து, விளம்பரப்படுத்தி வியாபாரம் செய்து நிறையவே லாபம் பார்க்கிறார்கள். ஏமாறுபவர்கள் கடன் அட்டைகளை (Credit Card)தேய்த்துக் கொண்டிருக்கிறார்கள்.


  //சிறந்த இரண்டு உதாரணங்கள்.எம்.ஜி.ஆர் மற்றும் வேலுப் பிள்ளை பிரபாகரன்.//

  தமிழினத்தலைவர் என்பதன் Gold Standard(s) யார் அல்லது எவை என்பதை ஈழத்தமிழர்கள் நன்றாகவே புரிந்துவைத்திருக்கிறார்கள், ஜோதிஜி.

  ReplyDelete
 8. உண்மை தான் ரமேஷ். ஐயப்பா எழுந்து விட்டார். ஆனால் அருகில் உள்ள சிறிய ஊர்களில் உள்ள ஜவுளிக்கடைகள் மொத்தமாக காணாமலே போய் விட்டது. உங்கள் தொழில் குறித்து அறிமுகத்துக்கு நன்றி. வளர்க.

  நெருப்பு உங்கள் முதல் வருகைக்கு நன்றி.

  செந்தில் விடாத உங்கள் அலைச்சலிலும் விடாமல் தொடர்வதற்கு நன்றி.

  ReplyDelete
 9. பாலா உங்கள் பெயரை பார்த்ததும் முதலில் நான் நம்பவில்லை. நம்பவில்லை. நம்பவில்லை.

  அப்பாலிக்கு.. நானும் ஒரு வருசம் ஈரோடில் ஒரு கார்மெண்ட்ஸில், சூப்பர்வைஸரா (அப்படித்தான் சொன்னாங்க) வேலை பார்த்திருக்கேன்.

  பரவாயில்லையே, நாங்களாவது கணக்குப்புள்ள. நீங்க சூப்பரவைஸ்ர்???? (கவண்டமணி சொன்ன டேய் நான் பத்தாங்கிளாஸ் பெயிலுடா.........)

  பாலா நீங்க உடனடியா செய்ய வேண்டியது

  ஈரோடு பாலா முதல் ஹாலிவுட் பாலா வரை.

  குதிரய தட்டிவிடுங்க...........

  அறிவு, கருந்தேள் ஜோரா கையத்தட்டுங்க.......

  நண்பர் சொன்னது போல் எழுதுறது பெரிய கம்பசூத்ரமில்லை. வேகமாக அடிக்கத் தெரியும். அதனால பலரையும் அடிச்சு தொவச்சுக்கிட்டுருக்கேன்.
  அடிக்கடி வாங்க பாலா. பாஸியோ பூச்சியோ எப்படியோ பின்னூட்டம் கொடுத்துட்டீங்க பார்த்தீங்களா? நன்றி.

  ReplyDelete
 10. குமார் தொடர்வாசிப்புக்கு நன்றி.

  வாங்க ரதி. உங்கள் முதல் வருகைக்கு நன்றி.

  அட நீங்க வேற. இந்த தமிழனத்தலைவர் என்ற வார்த்தையை கேட்டாலே கோபத்துல பத்து பதிவு எழுதனும்ன்னு போலிருக்கு. பாலா வந்து கொல்லப்போறாரு.

  இந்த தமிழனத்தை காப்பவர்களைவிட அவர்களை தாங்கிக் கொண்டுருக்கும் பல புத்திசாலிகளை பார்க்கும் போது அயர்ச்சியாக இருக்கிறது.

  இந்த தரங் கெட்ட அரசியல் வியாதிகளை காத்துக் கொண்டுருக்கும் ஊடகம் முதல் இடுகை வரைக்கும் உள்ள அதி புத்திசாலிகளை பார்க்கும் போது விளம்பர நிறுவனங்களும் தோற்று விடுவார்கள் போல.

  அடிக்கடி வாங்க.........

  ReplyDelete
 11. அன்பார்ந்த ஜோதிகணேசன்,
  உங்களின் முந்தைய ஒவ்வொரு இடுகையிலும் துவக்கம் என்பது மையமாக சொல்லவரும் கருத்தை முதலில் அழுத்தமாக தீர்மானித்துக் கொண்டு, எளிமையாக துவங்கி சிறப்பான நடையில் முத்தாய்ப்பாக முடிவுறும். ஆனால் இந்த முறை கணணியில் தொடர்ச்சியாக உட்கார முடியவில்லையே என்கிற எண்ணத்துடன் வேறு பணிகள் முடித்துவந்து அவசர கதியில் எழுதியது போலுள்ளது, ஏனெனில் இந்த இடுகையில் சொல்ல வரும் கருத்து என்ன என்பதை புரிந்து கொள்ள சற்று தடுமாற வேண்டியுள்ளது. (1)ஏதோ ஒரு வகையில் மக்களை கவர்ந்து அந்த கவர்ச்சியை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ளும் ஐயப்பா டெக்ஸ் முறை சரியா? (2) சந்தைப்படுத்துதலுக்கு விளம்பரமே வேண்டாமா? (3) அல்லது இன்று விளம்பரம் 3 பங்கு தரம் 1 பங்கு என சந்தைப் பொருளாதாரத்தால் அந்நியர்கள், பெரும் பணக்காரர்கள் நுழைந்ததால் சந்தைப்படுதல் தலைகீழாக மாறி சிறு வியாபாரிகளை அழிப்பதை முன்னிறுத்த முனைந்தீர்களா? என்பதை புரிய சிலருக்கு தாமதம் ஆகலாமென எண்ணுகிறேன்.
  நீங்கள் சொல்லுமிடம், சொல்லுவதையெல்லாம் நானும் பார்த்திருக்கிறேன் என சொல்வதுபோல் எதேச்சையாக அமைந்து விடுகிறது. மதுரையிலிருந்து தொழிற்சங்க நடவடிக்கைக்காக பழிவாங்கும் நடவடிக்கையாக ஊர்மாற்றம் செய்யப்பட்டு- காரைக்குடியில் பாச்சுலர் வாழ்வில் மருதுபாண்டியர் போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரிந்த போது கொப்புடையம்மன் கோவில் எதிர்புறம் சென்று மணிக்கூண்டு சந்தில் ஐயப்பா டெக்ஸ்க்கு நண்பர்களால் அழைத்துச் செல்லப்பட்டு பாண்ட், சட்டை பிட்டுகள் நானும் எடுத்திருக்கிறேன். சேட்டு வியாபாரத் தந்திரத்தை அன்றே புரிந்த செட்டிநாட்டு வியாபாரம் (குறைந்த லாபம், நிறைய விற்பனை என்பதே தந்திரம்)என்பதாலேயே அந்த கடைக்கு வாடிக்கையாளர் அதிகம் என எண்ணுகிறேன். செட்டிநாட்டு வீட்டு மெஸ்,செகண்ட் பீட் கார்னர் சிறிய கடை (பெயர் மறந்துவிட்டது) நைஸ் ஊத்தப்பம், சிறிய புரோட்டா, சில நேரம் அன்னபூர்ணா ஓப்பன் கார்டன் டிபன், ஊரைச்சுற்றி 4 தியேட்டர்களில் வாரம் 3 படம் என பழிவாங்கும் ஊர்மாற்றம் சிரமம் என்றில்லாமல் ஜாலியாக கழிந்த பசுமை நாட்கள் அவை.
  சரி இடுகைக்கு வருவோம் இந்த இடுகையில் நான் உணர்ந்தது சுண்டக்கா காப்பணம் சுமைகூலி முக்காப்பணம் என்பது போல் உற்பத்தி செலவைப் போல் பல மடங்கு விளம்பரம் என சந்தை மாறிப்போய் உழைப்பவனுக்கு உரியது கிடைக்காமல், வாங்குபவனுக்கும் சந்தை இலகுவாய் இல்லாமல் கொடுக்கும் காசில் பெரும்பகுதியை யாரோ விழுங்குகிறார்கள் என்பது மையக் கருத்து சரிதானே?
  தோழமையுடன் சித்திரகுப்தன்.

  ReplyDelete
 12. மிகச் சரியாக சொல்லிஉள்ளீர்கள்....! இன்று காலை எழுவது முதல் இரவு படுக்க போகும் வரை நாம் பயன்படுத்தும் பொருட்கள் அனைத்தும் பன்னாட்டு நிறுவனகளாலே முடிவு செய்யப் படுகிறது...குறிப்பாக இந்தியாவில் இந்துஸ்தான் லீவர் என்றும் பாகிஸ்தானில் பாகிஸ்தான் லீவர் என்றும் முகமூடி அணிந்து வரும் இந்த போக்கிரி பன்னாட்டு நிறுவனங்களின் நரித் தனத்தில் நம்முடைய சுயத்தை இழந்து கலாசாரத்தையும் இழந்து அடையாளமற்ற கூட்டமாக மாறிக்கொண்டிருக்கிறோம்...!

  ReplyDelete
 13. ஐயப்பா டெக்ஸ்டைல்ஸ் போல் ஊருக்கு இரண்டு கடைகள் விளம்பரமின்றியும் நிமிர்ந்து நிற்கினறன. பல கடைகள் விளம்பரம் செய்தும் படுத்து கிடக்கின்றன//

  உண்மை ஜோதிஜி.. நல்ல பகிர்வு..

  ReplyDelete
 14. நல்ல பதிவு சார், வேறு வழியில்லை, ...காலம் மாறுகிறது, யார் மாற்றத்தை உணர்ந்து தன்னை மாற்றிக்கொள்கிரார்களோ, பிழைத்தார்கள். நாம் எல்லாம் துணி தைத்து தான் உடுத்தினோம் ( எனக்கு சின்ன வயதில் அண்ணி தான் தைத்து தருவார் ) , இப்போ எந்த டைலர் தைத்து கொடுகிறார், எல்லாம் ரெடிமேட் சட்டை/ கால் சட்டை தான் இல்லையெனில் , திருப்பூர் டீ ஷர்ட் தான்...

  வாடியாவை எழுதிவிட்டு அம்பானியை எழுதாமல் இருந்ததுக்கு வன்மையாக கண்டிகிக்க்றேன் !!!!. ஒரு காலத்தில் பாம்பே டையிங் தான் பெரிது ... ஆர்கே என்று ஒரு மில் இருந்ததா ஞாபகம், ( மெஹ்ரா ) ... அப்பத்தான் நம்ம அம்பானி வந்து ..இன்னிக்கு ரொம்ப பெரிய கம்பெனியா இருக்கு. நடுவில் ராம் நாத் கோயெங்கா, நிறைய சுவாரசியமான தகவல்கள் இருக்கு

  ReplyDelete
 15. சித்ரகுப்தன்

  நீங்கள் சொல்லியுள்ள நைஸ் ஊத்தப்பக்கடையை நீங்கள் சொல்லிதான் மறுபடியும் ஞாபகத்திற்கே வந்தது. அடேங்கப்பபா......... இன்னமும் அந்த கடை இருக்கிறதா? உங்கள் மாறுபட்ட விமர்சனத்தையும் வரவேற்கின்றேன். லெமூரியன் கருத்தையும் கவனியுங்கள்.

  நன்றி லெமூரியன் தேனம்மை.

  ReplyDelete
 16. மிக அருமையான கட்டுரையின் தொடர்ச்சி.
  என்னமாய் ஃப்லோ சார்ட் எல்லாம் போட்டு கலக்கிவிட்டீர்கள்?!!!.

  ReplyDelete
 17. சுந்தர் என்னுடைய அனுபவத்தில் அம்பானியைப் பற்றி முழுமையாக தெரிந்து கொண்டதே கடந்த ஐந்து ஆண்டுகளாகத்தான். ஆஸ்திரேலிய நபரால் எழுதப்பட்ட பாலிஸ்டர் கிங் என்ற புத்தகத்தை (அம்பானி இந்தியாவிற்குள் கொண்டு வர முடியாமல் தடை செய்த புத்தகம்) தேடிக் கொண்டுருக்கின்றேன்.

  நீங்கள் சொன்ன பல தகவல்கள் இருக்கிறது. எனக்கு அது குறித்து முழுமையாக எழுதும் அளவிற்கு படிக்க வில்லை. இப்பத்தான் வரலாறு முடிந்துள்ளது. இனிமே அந்தப்பக்கம் போகலாம்.

  நிறைய விசயங்களை பகிர்ந்து கொண்டீர்கள்.

  ReplyDelete
 18. //ஈரோடு பாலா முதல் ஹாலிவுட் பாலா வரை.

  குதிரய தட்டிவிடுங்க...........//

  தட்டலாங்க. ஆனா... திருச்செங்கோடு தாண்டுறதுக்குள்ளவே குதிரைக்கு நுரை தள்ளிடும்.

  ஏங்க அதை வேற சொல்லிகிட்டு..............

  ReplyDelete
 19. பாலா நீங்க சொல்லாட்டி கூட ஆஞ்சநேயருக்கும் உங்கள் பிறந்த ஊருக்கும் சம்மந்தம் இருப்பது போல உள் மனம் சொல்கிறது.

  ஜோசியம் பார்த்த காசு எதிர்பார்த்து---------------------------------------

  ReplyDelete
 20. //ஆஸ்திரேலிய நபரால் எழுதப்பட்ட பாலிஸ்டர் கிங் என்ற புத்தகத்தை (அம்பானி இந்தியாவிற்குள் கொண்டு வர முடியாமல் தடை செய்த புத்தகம்) தேடிக் கொண்டுருக்கின்றேன்.//

  http://www.scribd.com/doc/3924530/Polyester-PrinceThe-Real-Story-of-Dhirubhai-AmbaniBanned-in-India

  பதிவு செய்யப்பட வேண்டிய தளம், உங்கள் களம். தொடர்ந்து அசத்த வாழ்த்துக்கள்.

  கண்டம் விட்டுக் கண்டம் பாய்கிறேன். brb. :)

  ReplyDelete
 21. ஆடைகளின் வாழ்க்கையில், இன்னும் ஒரு முக்கியமான பதிவு இது.

  ஐயப்பா டெக்ஸ்டைல்ஸ் மாதிரி, விளம்பரம் இல்லாமல், தரமானதைக் கொடுக்கும் பல நிறுவனங்கள் இருக்கிறது. விளம்பரங்கள் நெடுநாளைய வெற்றிக்கு உதவாது.

  ReplyDelete
 22. மிக அரிய கட்டுரைகள் உங்களுடையவை!
  அனைத்தையும் நிறைய படிக்கிறேன்!
  நன்றிகள்!

  ReplyDelete
 23. உங்கள் அக்கறைக்க நன்றி அண்ணாமலை.

  உண்மைதான் பின்னோக்கி யோசிக்கும் போது நமது தவறுகளைப் போலவே பல விசயங்களைப் புரிந்து கொள்ள முடிகிறது. தரம் இல்லாதது நிற்காது.

  தமிழ். கண்டம் நோக்கி கண்டம் பாய்வது நமது வெற்றிச் சரித்திரித்திற்காக என்பதை எப்போது மனதில் வைத்து இருங்கள். வாழ்த்துகள்.

  பாலா......................?


  அறிவுத்தேடல் கூகுளார் அள்ளித் தந்தது......... நன்றி கார்த்திக்.............

  ReplyDelete
 24. enjoyable post..

  ReplyDelete
 25. ஜோதிஜி

  கணக்குபுள்ளயாக வாழ்க்கையை தொடங்கி,
  செக்ஷ்ன் இன்சார்ஜ் ஆகி, பின்பு மெர்ச்சண்டைசர்,
  பையர் என வாழ்க்கை வாழ்ந்து விட்டு,உலகத்தின் வேறு கோடியில் இருந்தாலும், அவ்வப்போது திருப்பூர் வாழ்க்கையின் நினைவலைகளில் நீந்திக் கொண்டுதான் இருக்கிறேன்.

  திருப்பூர் என் வாழ்க்கையை துவக்கி வைத்தது.
  ஓடிக்கொண்டே இருக்கிறேன்.

  ReplyDelete
 26. பெருசு

  பாத்தீங்களா? உங்க பேரப் போலவே பெரிய ஆளா ஆகியிட்டீங்க.

  இருவருமே ஓடிக் கொண்டே தான் இருக்கிறோம் (?)

  இப்போது எந்த துறையில் இருக்குறீங்க?

  ReplyDelete
 27. ஜோதிஜி! காரைக்குடியில் ஜவுளின்னா ஐயப்பா! மளிகைன்னா சுப்பையா நாடார். இப்போ மளிகைன்னா ஜனப்பிரியாவாம். இளைய தலைமுறை கூட ஐயப்பாவை விட்டு விலக முடியா அள்வு காலத்திற்கேற்ற மாறுதலை செய்கிறார்கள். தொழில் என்பதே மாற்றங்களுக்கேற்ப அனுசரிப்பது தானே!

  ReplyDelete
 28. சாந்தி லெட்சுமணன்............

  இதை எழுதுவதற்கு முன்பு தங்கைகளிடம் பேசினேன். ஆனால் ஜனப்பிரியா என்பது அவர்களால் சொல்லப்படாத விசயத்தை உங்கள் மூலம் உணர்ந்து கொண்டேன்.

  உண்மை தான் மாற்றம் வாழ்வின் முக்கிய ஆதாரம். வருகைக்கு நன்றி சகோதரியே.

  ReplyDelete
 29. நல்ல விலாவாரியான கட்டுரை. ’அறிவுத்தேடலுடன்’ பழகாதீங்கன்னா கேட்டாத்தான? இப்பபாருங்க 2 பதிவா போடவேண்டியத ஒரே கட்டுரையா போட்டுடீங்க. காரைக்குடில என்னால ‘டிசோட்டா’ பேக்கரியே மறக்கமுடியாது!! இன்னும் நிறையா இருக்கு நண்பரே!

  ReplyDelete
 30. வாங்க மயில்

  சமீப சென்னைப் பயணத்தின் போது அறிவு உங்களைப் பற்றி சொன்னார்.

  வாழ்ந்த ஊரைப்பற்றி ஒவ்வொரு சொல்லச் சொல்ல ஒவ்வொன்றாக மனதில் வந்து போகின்றது.

  நீங்கள் டிசோட்டா ஞாபகத்தில் இருந்தாலும் ஒரு நாள் கூட அங்கு சென்றது இல்லை. வட்டியும் முதலுமாய் திருப்பூரில் அனுபவித்தேன்.

  அன்றே படிக்க வேண்டியதாய் இருந்தால் நீங்கள் சொன்ன அறிவுரை சரிதான் மயில்ராவணன். இந்த இடுகை என்பது எப்போது வேண்டுமானலும் வந்து படிக்கக்கூடியதாய் இருக்க வேண்டும் என்பதால் தான் ஒரு குறிப்பிட்ட விசயத்தை புரிய வைக்க இது போல் எழுத வேண்டியதாய் இருக்கிறது.

  ReplyDelete
 31. Hi .. Mr Jothig.. hope ur doing good there

  http://deviyar-illam.blogspot.com/2010/07/blog-post_07.html
  சந்தைக்கு போகலாம் வாரிங்களா?

  yr article is too good ya

  Keep rocking

  Regards

  Jayaprakash.M

  ReplyDelete
 32. அருமையான பதிவு.
  நன்றி.

  ReplyDelete
 33. ~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~

  Today Funnies | Largest Collection of Latest Funny Videos, Funny Pictures, Funny Girls, Funny Babies, Funny Wife, Funny Husband, Funny Police, Funny Students And Cartoon Plus Bizarre Pics Around The World.
  Just Visit 2 My Site...
  http://todayfunnies.com

  ~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~

  ~*~ Free Online Work At Home ~*~
  Here's Everything You Need to Know About Online Working At Home, Including Where to Find Work At Home Job Listings,
  The Best Sites For Finding Work At Home Jobs And How to Avoid Work From Home Scams.
  Visit...
  http://SooperOnlineJobs.blogspot.com/

  ~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~

  ReplyDelete

கேட்பது தவறு. கொடுப்பது சிறப்பு.