Saturday, September 09, 2017

ஊர் காதல்


ஒவ்வொருமுறையும் முக்கியமான நிகழ்ச்சிக்காகப் பிறந்த ஊருக்குச் சென்று வரும் போது ஒன்றைக் கவனிப்பேன். மனதில் தோன்றும் கலவையான உணர்வுகள். ஒவ்வொரு ஊராகத் தாண்டி வரும் போது எத்தனையோ நினைவுகள். 25 வருடங்களில் உருவான மாற்றங்கள். மாற்றங்களின் ஊடாக மாறிய வாழ்க்கை. காரைக்குடியில் இருந்து கரூர் வரும் வரைக்கும் மனதில் இனம் புரியாத மகிழ்ச்சி உள்ளுற பிரவாகமாக ஊறிக் கொண்டேயிருக்கும். கரூர் எல்லையைத் தொட்டு, அந்த நகரைத் தாண்டி நகரும் போது மனத்தின் தன்மை மெதுமெதுவாக மாறிக் கொண்டேயிருக்கும். ஏன் இப்படி? ஒவ்வொரு முறையும் இப்படியிருக்கின்றதே?

இது நாமே கற்பனை செய்து வைத்திருக்கின்றோம் போல என்று என்னை நானே சமாதானப்படுத்திக் கொண்டிருந்தாலும் நான் பயணிக்கும் ஒவ்வொருமுறையும் இதே தான் அனுபவமாக எனக்குக் கிடைக்கின்றது. இதுவே அலுவலக வேலையாகச் சென்னை சென்று திருப்பூர் வரும் போது உருவான எண்ணங்களை யோசித்துப் பார்த்தால் வேறு விதமாக உள்ளது. ஊரிலே வாழும் உறவுகளுடன் நாம் முரண்பட்டு நிற்கலாம். முந்தைய தலைமுறை சேர்த்த சொத்துக்கள் நாம் வாழும் காலத்தில் இழந்ததாக இருக்கலாம். மாறிப் போன ஊரில் நமக்கென எந்த அடையாளமும் இல்லாமல் கூடப் போயிருக்கலாம். ஓடித்திரிந்த தெருக்களில் நடமாடும் மனிதர்களின் முகங்கள் அனைத்தும் அந்நியர்களாக இருக்கலாம். இது தான் நான் பிறந்த ஊரா? என்று கேள்விகள் ஆயிரம் உள்ளுக்குள் தோன்றினாலும் எவருக்கும் பிறந்த ஊர் நினைவென்பது சுகமானது. அது எப்போதும் நம் உணர்வுகளோடு சம்மந்தப்பட்டது.


நாம் வாழும் ஊரில் வசதியாக வாழ்ந்தாலும் அடிப்படையில் நாமும் ஒரு வந்தேறி தான். நாம் வாழும் ஊரில் நாம் பணிபுரிகின்ற தொழிலுக்கேற்ப ஒவ்வொரு நாளும் மனத்தின் தன்மை மாறிக் கொண்டேயிருக்கின்றது. பேச்சு, உடைகள், நடைமுறை பழக்கவழக்கங்கள் எல்லாமே மாறிக் கொண்டே வரும். நான் திருப்பூர் வந்து 25 வருடங்கள் முடிந்து விட்டது. மிச்சம் மீதி இல்லாமல் உள்ளும் புறமும் எல்லாமே மாறி விட்டது. ஆனாலும் என் சொந்த ஊர் காதல் இன்னமும் மாறவில்லை. நிறைவேறாத முதல்காதல் போல உள்ளேயே எங்கேயோ ஒரு ஓரத்தில் உள்ளது. குற்ற உணர்ச்சிகள் கலந்த இனம் புரியா ஏக்கத்துடன் மறக்க முடியாத நினைவுகளாய் அங்கங்கே உள்ளது.

உள்ளுற இருக்கும் அந்த ஏக்கத்தை ஏதோவொரு காரணத்தைச் சொல்லி துடைத்தெறிய வேண்டியதாக உள்ளது. இனி அங்கே வாழ வாய்ப்பில்லை. இங்குள்ள வசதிகள் அங்கே கிடைக்காது. குழந்தைகள் அவர்கள் வாழ்க்கையில் எல்லைகளைத் தாண்ட வேண்டுமென்றால் இங்கே தான் அதற்கான வாய்ப்புகள் உள்ளது. நம் தியாகம் தான் பெரிது என்று இதே போல ஏராளமான காரணங்களை நாம் நமக்குள்ளே அடுக்கி வைத்திருக்கின்றோம்.

பிறந்த ஊரை விட்டு வேறொரு ஊரில் வாழும் ஒவ்வொருவரும் அதற்கான காரணத்தை ஆராய்ந்தால் கடமைகளும் கடமைக்குப் பின்னால் உள்ள அழுத்தங்களும் தான் பதிலாக இருக்குமோ என்று தோன்றுகின்றது. பெற்ற மகள் திருமணமாகிச் சென்றபிறகு மனதிற்குள் உருவாகும் வெறுமையை வார்த்தைகளாக வாசித்துள்ளேன். இப்போது அந்த எண்ணங்கள் படிப்படியாக உள்ளே உருவாக்கிக் கொண்டிருக்கின்றது. ஒவ்வொரு வயது ஏறும் போது அந்த வருடங்களிலும் பல்வேறு சூழ்நிலைகளில் நான் எடுத்த புகைப்படங்களைச் சமயம் கிடைக்கும் போது எடுத்துப் பார்ப்பதுண்டு.

மாறிய முகங்கள் மௌனமாய்ச் சிரிக்கும். தோற்றப் பொலிவு மாறி இதுவும் நீயே தான் என்று கேலி பேசும். மாறிய முகங்களுடன் பெற்ற வெற்றியும் தோல்வியும் வரிசையாக எண்ணங்களில் வந்து மோதும். சேர்த்த பணமும், இழந்த பணமும் பக்கவாட்டில் வந்து நிற்கும். வாங்கிய வசவுகள் பலசமயம் எட்டிப்பிடிக்க முடியாத வசதிகள் என்று ஒவ்வொன்றாய் நம் மனக்கண்ணில் வந்து நிற்கும். ஆனால் எல்லாமே கடைசியில் கணக்கில் அடிப்படையில் மாறும்.


இங்கே வாழ்க்கை சிலருக்கு மட்டுமே வாழ அனுமதிக்கின்றது. பலருக்கும் உருளவைத்துக் கொண்டிருக்கின்றது. வேலை தேடுதல், வேலையின்மை, தகுதிக்கேற்ற வேலையில் இல்லாமல் தரமான மனிதர்களின் அறிமுகம் இல்லாமல் தடுமாறி, விழுந்து, எழுந்து, புரண்டு வெளியே சொல்லமுடியாத வார்த்தைகளை உள்ளே வைத்துக் கொண்டு நானும் வாழ்கிறேன் என்ற எண்ணத்தை மற்றவர்களுக்கு உருவாக்க வைத்துக் கொண்டிருக்கின்றது. அடிப்படை வசதிகளைத் தக்க வைப்பதில் 70 சதவிகித மக்கள் அன்றாடம் போராடிக் கொண்டிருக்கின்றார்கள். பெற்றதை இழந்து விடக்கூடாது என்ற கவனமும் பெற வேண்டியதை விரைவில் பெற்று விட வேண்டும் என்ற அவசரமும் கலந்த வாழ்க்கையைத் தான் இங்கே ஒவ்வொருவரும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.


வாழ்ந்த ஊருக்கும் வாழும் ஊருக்கும் உண்டான இடைவெளியே வெறுமனே 300 கிலோமீட்டர் தான் என்றாலும் கடல் தாண்டி வாழும் அனுபவங்கள் தான் எனக்குக் கிடைக்கின்றது. பேசும் மொழி, வாழும் கலாச்சாரம் என்று எல்லாவகையிலும் புதிய தேசத்தில் வாழும் வாழ்க்கை தான் என்பதாக எனக்குத் தோன்றுகின்றது. இது அவரவர் வாழும் ஊரை வைத்தே முடிவு செய்து கொள்ள முடியும். உடலும் மனமும் வாழ்ந்த ஊருக்குத் தகுந்தாற்போல மாற்றம் கொண்டாலும் ஆழ்மன எண்ணங்கள் இத்தனை வருடங்கள் ஆன போதும் இன்னமும் மாறாமல் அடம்பிடிக்கும் ஆச்சரியத்தை இந்த முறை ஊர் சென்று திரும்பி வரும் போது உணர்ந்தேன்.


திருப்பூரில் இருந்து திருச்சி வரைக்கும் தான் ரயிலில் விரும்பிய நேரத்தில் செல்ல முடியும். அதே போல வரும் போது இவ்வாறு இதே ரயிலில் வரமுடியும். ஆனால் நீண்ட தூர பேருந்துப் பயணம் என்பது உடம்புக்கு வெறுக்கக்கூடியதாக உள்ளது என்பது வெறுமனே வார்த்தையாகச் சொல்லிவிட முடியாது. நம் ஆரோக்கியத்தில் அளவுகோலாக எடுத்துக் கொள்ள முடியும்.


பொதுப் போக்குவரத்தில் பயணிக்கும் போது உடம்புக்குக் கிடைக்கும் அவஸ்தைகளை மீறி அரசு பேருந்தில் பயணிக்கும் கலவையான மனிதர்கள் மூலம் நமக்குக் கிடைக்கும் அனுபவங்கள் இன்னமும் மாறாமல் இருக்கின்றது. ஓரளவுக்கேனும் நம் உடம்புக்குச் சுகத்தைக் கொடுத்து பழக்கி விட்டோம் என்ற எண்ணம் ஒவ்வொருமுறையும் ஊருக்குச் சென்று வரும் அப்பட்டமாக உணர்த்துகின்றது. வயல்களையும், வரப்புகளையும், காடு, செடி, கொடி என்பதனை புகைப்படங்கள் பார்த்து ரசித்தே பழகிவிட்ட நியூரான்களுக்கு நிஜத்தை ரசிக்கமுடியாத நிலைக்குத் தள்ளிவிட்டதோ என்று இந்த முறை நினைத்துக் கொண்டேன்.


முன்பெல்லாம் குளித்தலையைத் தாண்டும் போது பக்கவாட்டில் தெரிந்த காவேரி ஆற்றைக் கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்த நினைவு வந்து போனது. இப்போது வாசித்த வார்த்தைகளின் அடிப்படையில் மணல் மாபியா குறித்தே யோசித்துக் கொண்டிருந்தேன். இயல்பாக அனுபவிக்க வேண்டிய அழகும் அங்கே இல்லாமல் போய்விட்டது. ஆற்றுக்குள் வரிசையாக நிற்கும் லாரிகளை எண்ணிக்கையாகப் பார்க்கத் தோன்றியது. கிராமத்து மனிதர்கள் இன்னமும் பல இடங்களில் மகிழ்ச்சியாகத் தான் இருக்கின்றார்கள். எதையும் காரணகாரியத்தோடு யோசித்துப் பழகாமல் இருப்பதே முக்கியக் காரணம் என்று நினைத்துக் கொண்டேன்.

அன்றாடம் நடக்கும் அரசியல் அசிங்கம் அவர்களைத் தாக்குவதில்லை. அது குறித்த அக்கறையும் அவர்களுக்கு இல்லை. தமிழ்நாட்டில் புழங்கும் செய்தித்தாள்களும், வாராந்திர பத்திரிக்கைகளும் அத்தனை பெரும்பாலான பேர்களைச் சென்றடைவதில்லை. இதற்குப் பின்னால் எத்தனையோ சமூகவியல் காரணங்கள் இருக்கலாம். ஆனால் அவர்களின் மகிழ்ச்சிக்கு இதுவே முக்கியமானதாக உள்ளது என்பதாகத்தான் எனக்குத் தெரிகின்றது. இணையதளங்களில் வரும் செய்திகள் குறித்து எவருக்கும் அக்கறையில்லை. பத்தில் எட்டு பேர்கள் அப்படியெல்லாம் இருக்கின்றதா? என்ற எண்ணத்தில் இருப்பதால் மன அழுத்தம் இல்லாமல் மகிழ்ச்சியாகவே வாழ்கின்றனர்.


இங்கே நாள்தோறும் லட்சக்கணக்கான பேர்கள் இணையத்தில் எழுதும் எந்தச் சிந்தனைகளும் சேர வேண்டியவர்களுக்கு இங்குச் சேரவே இல்லை. இங்குச் சிலருக்கு சிந்திப்பதே வாழ்க்கையாக உள்ளது. பலருக்கும் சிந்திக்கவே நேரம் இல்லாமல் இருப்பதால் இந்த வாழ்க்கையின் அர்த்தம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமாக உள்ளது. இதன் காரணமாகவே தமிழ்நாட்டில் பெரிய அசம்பாவிதங்கள் இன்னமும் நடக்காமல் இருக்கின்றது. அதற்கு உங்கள் பார்வையில் புரட்சி, எழுச்சி, மக்களின் அறியாமை என்று என்ன பெயர் வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம்.


திருச்சி வந்ததும் சதாப்தி ரயில் தடதடத்து திருப்பூர் நோக்கி போய்க் கொண்டிருந்த போது குழந்தைகள் (இப்போது அவர்கள் பெண்கள்) ஆசுவாசமாக இருந்ததைப் பார்த்து அவர்களிடம் இரண்டு கேள்விகள் கேட்டேன்.

"ஊர்ப்பயணம் பிடித்திருந்ததா?"

"பிடித்திருந்ததுப்பா."

"இந்தப்பக்கம் வந்துடலாமா?"

வேகமாக மூவரும் மறுத்துத் தலையாட்டினார்கள்.

(தொடர்ந்து பேசுவோம்............)


படம் (நன்றி) Henk Oochappan


தொடர்புடைய பதிவுகள்23 comments:

அது ஒரு கனாக் காலம் said...

நல்ல பதிவு ... அருமையான உவமை ( முதல் காதல் & சொந்த ஊர் ) - எங்களுக்கெல்லாம் சொந்த ஊர் என்று ஒரு ஊரே கிடையாது என்று சொன்னால் நீங்கள் நம்பத்தான் வேண்டும் . படித்து வளர்ந்தது திருச்சி - பின் டெல்லி , பின் ஈராக் , பெங்களூரு , மும்பை , துபாய் , தற்பொழுது ஷார்ஜா . ( வீடு இருப்பது திருவனந்தபுரம்) . திருச்சி போகும் போது , நீங்கள் சொன்ன அந்த எல்லா உணர்வுகளும் , எண்ணங்களும் வரும் . UAE போல் வசதி எங்குமே வராது , பாதுகாப்பும் கூட , இருந்தாலும் மனம் இந்தியாவை தான் நாடுகிறது . நிறய பேர் , கனடா , ஆஸ்திரேலியா என்று போய்விட்டார்கள் - எத்தனை பிரச்சனைகள் இருந்தாலும் , இந்தியா இந்தியா தான் .

கரந்தை ஜெயக்குமார் said...

சொந்த ஊரை நினைத்தாலே மனதில் இன்பம் ஊற்றெடுக்கிறது ஐயா
இளமைக்கால நினைவுகள் மனதில் வலம் வருகின்றன
நன்றி ஐயா

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

பிறந்த மண்ணைவிட்டு நிரந்தரமாகவோ தற்காலிகமாகவோ பிரிந்தவர்கள் படும் மன வேதனையையும், உள்ளக்கிடக்கையையும் பகிர்ந்த விதம் அருமையாக உள்ளது. அங்குள்ள அன்னினோன்யம் பிழைக்க வந்த இடத்தில் உள்ளதா என நினைத்துப் பார்த்தால் இல்லை என்ற மறுமொழியே வருகிறது. என்ன செய்வது?

'பரிவை' சே.குமார் said...

சொந்த ஊரை நினைத்தாலே இன்பம் பொங்கும் அண்ணா...
அந்த வாழ்க்கையை வாழ முடியாத சூழல் வாட்டத்தான் செய்கிறது, என்ன செய்ய...
பொருளாதாரத் தேடலே பிரதானமாகிறது....

வாசிக்க... வாசிக்க... ரசித்து மகிழ்ந்தேன் எழுத்தை...

Kalyankumar said...

பிறந்து வளர்ந்த ஊரைவிட்டு எந்த ஊரில் வாழ்ந்தாலும் மனதிற்கு அந்நியமாகவே படுகிறது??

G.M Balasubramaniam said...

நானாவது என் சொந்த ஊர் பற்றி நினைத்துப் பார்க்க முடியும் ஆனால் என் செல்வங்களுக்கு அதெல்லாம்கிடையாது தே ஹாவ் நோ மூரிங். இருந்தும் அவர்களுக்கு ஊரைக் காட்டவெம் அவர்களின் வேரைக் காட்டவும் அந்த ஊர்
தேரைக்காட்டவும் கூட்டிப் போயிருக்கிறேன்

Thulasidharan V Thillaiakathu said...

துளசிதரன்: சொந்த ஊர் என்பது தனிதான் ஜோதிஜி. என்னை எடுத்துக் கொண்டால் நான் பிறந்தது ராசிங்கபுரம் எனுமூர் தேனிக்கு அருகில் ஒரு கிராமம். படித்தது எல்லாம் தமிழ்நாட்டில்...முதுகலை வரை. அதன் பின்அம்மா அப்பாவின் ஊரான கேரளத்தில் நிலம்பூருக்குச் சென்றாயிற்று...இதோ இந்த நொடி வரை அங்குதான்...முதல் 25 வருடங்கள் தமிழ்நாட்டில் அவ்வப்போது கேரளத்து விசிட்டுடன்...இப்போது கேரளமே என்றாகிவிட்டது. அடிப்படையில் கேரளத்தவன் என்றாலும் ஏனோ தமிழ்நாடு தான் மனதில். இப்போதும் நேரம் வாய்க்கும் போது குழந்தைகளுடன் ராசிங்கபுரம் சென்று வருவதுண்டு மாறிவிட்டது எனக்கு அறிந்தவர் யாருமில்லை அங்கு...இருந்தாலும் ஊர் மண்ணை மிதித்துவிட்டு வருவது மனதிற்கு ஒரு சுகம். பதிவு மிக மிக அருமை மனதை இழுத்துக் கொண்டு சென்றுவிட்டது..

கீதா: பதிவு என்னையும் எங்கோ கொண்டு சென்றுவிட்டது ஜோதிஜி!!! திருமணத்திற்குப் பிறகு ஊர் ஊராகச் சென்றதால் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்றாகிவிட்டது. நீங்கள் சொல்லியிருப்பது போல் இப்போது வாழும் ஊரோடு பல வசதிகளுக்காகப் பிணைந்துவிட்டது. ஊருக்குப் போய் பல வருடங்கள் ஆகிவிட்டது. போனாலும் ஒரு நாள் ஊரைச் சுற்றி அங்கு விளையாடிய ஆறு, வாய்க்கால், என்று சுற்றிவிட்டு, வயல்களை அஸ்திவாரமாகக் கொண்டு எழும்பி நிற்கும் கட்டடங்களைப் பார்த்து எப்படி பச்சைப் பசேலென்று இருந்த ஊர் இப்படியாகிப் போனதே என்று விவேக்கின் குரலில் நகைச்சுவையை இங்கு சற்றுக்கண்ணீரோடு சிந்தித்துவிட்டு, ஹையோ அங்கு நம் வீட்டில் கேஸ்காரன் வந்திருப்பானோ, கூரியர் ஏதேனும் வந்திருக்குமோ, வீடு போய் இத்தனை நாள் பூட்டிக்கிடந்த வீட்டைச் சுத்தப் படுத்தணுமே, பால்காரருக்குப் பணம் கொடுக்கணுமே, துணிகள் எல்லாம் எல்லாரும் ஒழுங்கா தோய்த்தார்களா?, சமைக்கிறேன் பேர்வழி என்று சமையலறையை போர்க்களமாக மாற்றியிருப்பார்களே என்று நினைத்துக் கொண்டு கடமை அழைக்க ஊரை உதறிவிட்டு வர வேண்டியதை நினைக்கும் போது அட போ ஊர்ல என்னத்த இருக்கு? எல்லாம் மாறிப் போச்சு,,,,என்று சும்மானாலும் மனதைச் சமாதானப்படுத்திக் கொண்டு மீண்டும் நகரம் எனும் நரகத்துள் நுழைந்தால் அப்புறம் ஏது ஊர் நினைப்பு...??!!

அதனால்தான் ஜோஜிதி எனக்குக் கிடைக்கும் நேரத்தில் இருக்கும் இடத்தில் போகும் இடத்தில் என்ன இருக்கிறதோ அதை அனுபவித்து அந்த இயற்கையுடன் ஒவ்வொரு துளியையும் மகிழ்ந்து அனுபவிக்க நினைக்கிறேன்... அப்புறம் இந்த நகரம் எனும் நரகம் இனியும் நரகமாகிவிடும் முன் இந்த இயற்கை, மரங்கள் வண்ணத்துப் பூச்சிகள் என்று இருப்பனவற்றை எல்லாம் தேடித் தேடி காட்டுப் பூக்களையும் செடிகளையும் ரசித்து மனதினுளும் புகைப்படமாகவும் சேமித்து வைக்கிறேன்.......ஒரு வேளை நாளைய பேரன் பேத்தி களுக்குக் காட்டி என் தாத்தா பாட்டி கதை சொன்னது போல் சொல்ல உதவுமே என்று!!! எத்தனை கவலைகள், வேதனைகள் இருந்தாலும் அதை எல்லாம் புறம் தள்ளி ஒவ்வொரு மணித் துளியையும் மன அழுத்தம் இல்லாமல் அனுபவிக்கிறேன்!!! (எனக்கும் கேரளத்துடன் தொடர்புகள் நிறையவே உண்டு. கேரளத்தை விட தமிழ்நாட்டில் இயற்கை வேகமாக அழிந்து வருகிறது என்பதையும் வேதனையுடன் இங்குப் பதிகிறேன்...)

நல்ல பதிவு ஜோதிஜி...தொடர்கிறோம்...

Rathnavel Natarajan said...

ஊர் காதல் - அருமை.
எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி திரு ஜோதிஜி

தாராபுரத்தான் said...

ம்..சொல்லுங்க.

ஜோதிஜி said...

வெளிநாட்டில் நீங்கள் தொடர்ந்து இருப்பதால் உங்கள் பார்வையில் இந்தியா என்பதாகத் தெரிகின்றது. எங்களுக்கு தமிழ்நாடு என்ற எல்லைக்குள் சுருக்கிக் கொண்டோம் சுந்தர்.

ஜோதிஜி said...

1980 வாக்கில் வெளிவந்த எந்தப்படமும் பாடல்களைக் கேட்கும் போது அப்போது வாழ்ந்த சூழ்நிலை இப்போதும் மனக்கண்ணில் வந்து போகும். அதுவே ரசிக்கும் பாடலின் ரசனையை அதிகப்படுத்துகின்றது.

ஜோதிஜி said...

நூறு சதம் உண்மை.

ஜோதிஜி said...

நன்றி குமார்

ஜோதிஜி said...

நன்றி கல்யாண் குமார்

ஜோதிஜி said...

இங்கேயும் இப்படித்தான். நன்றி.

ஜோதிஜி said...

பதிவு போலவே எழுதியமைக்கும் உளப்பூர்வமான ரசனைக்கும் வாழ்த்துகள். இருவருக்கும்.

ஜோதிஜி said...

நன்றி

ஜோதிஜி said...

வாங்க அய்யா

Amudhavan said...

\\இங்கே நாள்தோறும் லட்சக்கணக்கான பேர்கள் இணையத்தில் எழுதும் எந்தச் சிந்தனைகளும் சேர வேண்டியவர்களுக்கு இங்குச் சேரவே இல்லை\\
இந்தப் பதிவிலேயே முக்கியமான வரிகளாக இதனைத்தான் சொல்லத் தோன்றுகிறது.

Paramasivam said...

பதிவு என்னைப் பற்றி எழுதியதாகவே உணர்ந்தேன். லால்குடி எனும் சிற்றூரில் பிறந்து, படித்து வளர்ந்தாலும், வேலை நிமித்தம், திருச்சி, சென்னை, கர்நாடகாவில் பங்களூர், தாவண்கரே, ஹூப்ளி என அலைந்து உத்திரபிரதேச நகரங்கள் மற்றும் டில்லி யில் வேலை செய்து, திரும்பிப் பார்த்தால், லால்குடியே மாறியுள்ளது. உங்கள் குழந்தைகள் போல், எனது குழந்தைகளும் சென்னையை விரும்பி வந்து விட்டோம். ஆயினும், மலைக்கோட்டை புகைவண்டியையோ, பாண்டியன் எக்ஸ்பிரஸ் கடக்கும் லெவல்கிராசிங்கில், 10 நிமிடம் ஓரமாக வண்டியை நிறுத்தி அனுபவிப்பேன். முதலில் வேடிக்கை செய்த என் குழந்தைகளுக்கும் இப்போது பழகி விட்டது.

ஜோதிஜி said...

நன்றி பரமசிவம். பலரையும் இந்தப் பதிவு கவர்ந்துள்ளது. ஆத்மார்த்தமாக உணர்ந்துள்ளார்கள்.

ஜோதிஜி said...

நீங்க சொன்னது தான் முற்றிலும் உண்மை. அரசியல் அறிவு தமிழ்நாடு பெற்று இருந்தால் இந்நேரம் என்னவெல்லாம் மாறியிருக்கும்?

Paramasivam said...

உண்மை சார். மிகவும் உணர்வுப் பூர்வமாக உணர்ந்தேன்(தோம்). அருமையான பதிவிற்கு நன்றி.