Tuesday, June 29, 2010

கருணா என்ற கூலி

அதிகாலை வேளையில் வந்து நின்றவனை பார்த்ததும் குழப்பமாய் இருந்தது. குரல் நினைவில் இருந்தாலும் முகம் மாறியிருந்தது.

"அண்ணே நாந்தான்னே கருணாகரன்" என்று உரிமையாய் என்னுடைய அழைப்பு இல்லாமல் வீட்டுக்குள் உள்ளே நுழைந்தான்.  எப்படி கண்டு பிடித்து உள்ளே வந்தானோ தெரியவில்லை? பரபரப்பாய் தான் கொண்டு வந்த மஞ்சள் பையில் இருந்து அவனின் திருமணப் பத்திரிக்கையை எடுத்து நீட்டினான்.

ஏற்கனவே எழுதி வைத்துருந்த பெயர். நான்கு புறமும் மஞ்சள் தடவி பவ்யமாய் திசை பார்த்து நின்று கொடுத்து வணங்கி நின்றான்.  திகைப்பாய் இருந்தது.  பத்து வருடத்திற்குள் மொத்தமும் மாறியிருந்தான்.  உற்பத்தித் துறையில் உயர் பொறுப்பில் இருந்த போது டவுசர் சட்டையோடு நிறுவனத்தின் வாசலில் வந்து நின்றவன்.  நிறுவன உள்நுழைவு வாயில் காவலாளியின் எச்சரிக்கையைம் மீறி திமிறலோடு உள்ளே வர முயற்சித்துக் கொண்டுந்தவனை தூரத்தில் இருந்து பார்த்து உள்ளே அழைத்தேன். பேசிய போது உள்ளே காஜா பட்டன் அடிப்பதற்காக வேலை கேட்டு வந்தவன் என்று புரிந்து கொள்ள முடிந்தது.  ஆய்த்த ஆடை ஏற்றுமதிக்கான வளர்ந்த மிகப் பெரிய நிறுவனங்களில் இது போன்ற சிறிய ஒவ்வொரு வேலைகளுக்கும் தனித்தனி நபர்கள் வெளியே இருந்து அழைக்கப்படுவார்கள்.  மாத, தினசரி சம்பளம் அல்லது ஒவ்வொரு ஆடைகளுக்கும் உண்டான கூலி என்பதாக பேசிக் கொள்வர்.  இதற்கென்று வருபவர்கள் தங்கள் படை பரிவாரங்களுடன் வந்து காரியத்தை கண்ணும் கருத்துமாய் முடித்துக் கொடுப்பர்.  சில நிறுவனங்கள் முறைப்படி அந்த வார சனிக்கிழமையில் வேலை முடிந்தவரைக்கும் கூலியை கொடுத்து விடுவர்.  பலர் இவர்களையும் ஏறி மிதிக்க எத்தனை திறமைகள் காட்ட வேண்டுமோ அத்தனையையும் காட்டுவர். 
ஒவ்வொரு துறைகளுக்கும் தேவைப்படும் எந்திரங்கள் ஒவ்வொன்றும் நிறுவனத்தில் உள்ளே வைத்து இருப்பார்கள். சொந்தமாக வைத்துக் கொள்ள முடியாதவர்கள் இதற்காக வெளியே தனியாக வைத்து இருப்பவர்களை நாடிச் செல்வர்.  ஓப்பந்த அடிப்படையில் இது போன்ற பல வேலைகளுக்கு நிறுவனத்திற்குள் ஒருவர் உள்ளே நுழைந்து விட்டால் அடுத்தவர் நுழைய முடியாத அளவிற்கு அத்தனை புரிந்துணர்வுகளையும் மிகத் தெளிவாக உருவாக்கி இருப்பார்கள். இது போன்ற பணிகளுக்கு உள்ளே வருபவர்களை கண்கொத்தி பாம்பாக நிறுவனங்கள் கவனித்துக் கொண்டு இருக்க வேண்டும். இல்லாவிட்டால் அதுவே மிகப் பெரிய பிரச்சனைகள் வரைக்கும் கொண்டு வந்து நிறுத்தி விடும்.  தொழில் வாழ்க்கை என்பது கத்தி போலத்தான். எப்படி எங்கு எவரை கையாள் கிறோம் என்பதை பொறுத்து தான் விளைவுகள் உருவாகும்.

குழந்தைகள் முதல் பெரியவர் வரைக்கும் போடக்கூடிய எந்த வகையான ஆடைகளாக இருந்தாலும் அந்த ஆடை முழுமையாக உருவாக பல இடங்களுக்குச் சென்று திரும்ப வேண்டும். இடையில் திருடப்பட்டு விடும். தவறாக உருவாக்கம் அடைந்து விடக்கூடாது. இதற்கெல்லாம் மேல் வெள்ளை ஆடை என்றால் அழுக்கு எண்ணெய் பிசுக்கு இல்லாமல் கற்பு மாறாமல் உள்ளே வந்து சேர வேண்டும்.  இல்லாவிட்டால் கற்பு இழந்த பெண் விடும் கண்ணீர் போல் நிறுவன முதலாளி பெட்டி போடும் சமயத்தில் குமைந்து கொண்டு குமுற வேண்டியதாய் ஆகிவிடும். நீக்கவே முடியாத பிரச்சனைகள் உள்ள ஆடைகள் இறுதியில் குறைபிரசவ குழந்தை போல் கேட்பார் இன்றி மூலையில் போய் முடங்கி நட்டக்கணக்கை அதிகப்படுத்தி விடும். 

இது போன்ற ஆடைகளுக்குண்டான தரத்தை கவனிக்க ஒவ்வொரு நிறுவனத்திலும் உழைக்க (QUALITY CONTROL) தனியாக ஒரு கூட்டம் உண்டு.  அவர்களின் பாடு இரண்டு பக்க மத்தளம் போலத்தான் இருக்கும். ஆடைகளின் சரியான எண்ணிக்கையும் இறுதியில் வந்து வேண்டும். அதே சமயத்தில் நிறுவனம் எதிர்பார்க்கும் அத்தனை அவசர கதிகளையும் சமாளிக்க வேண்டும்.  மொத்தத்தில் கடல் தாண்டி சென்றதும் அங்கிருந்து ஓலை வராமலும் இருக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் இதற்கென்று ஓராயிரம் மனிதர்கள் வெளியே தெரியாமல் ராத்திரி பகலாக உழைத்துக் கொண்டுருக்கிறார்கள். கூலி உலகத்தில் உள்ள முதலாளிகள் படும்பாடுகள் மொத்தத்திலும் கொடுமை யானது. தொழிலாளர்களை மேய்ப்பது முதல் பணத்துக்கு டிமிக்கி கொடுக்கும் நிறுவனங்கள் வரைக்கும் கடந்து வரவேண்டும். இவர்கள் இரவு பகல் பாராமல் முறைப்படி உழைத்தால் தான் மறுநாள் நிறுவனத்தில் மற்ற வேலைகள் நடந்து ஆடைகள் முழுமையடையும். தொடர் ஓட்டத்தில் ஓரே ஒரு இடத்தில் தவறி பின்தங்கியிருந்தாலும் மறுநாள் நிறுவனத்தில் குறிப்பிட்ட துறையில் பணிபுரியும் அத்தனை பேர்களுக்கும் வேலை இருக்காது. பணி நேரத்திற்கான சம்பளம் மீட்டர் வட்டி போல் ஓடிக்கொண்டுருக்கும்.

சமீப கால கட்டங்களில் பன்னாட்டு நிறுவனங்கள் விரும்பிய "மொத்தமும் ஒரே கூரையின் கீழ்" என்ற தத்துவம் வந்த பிறகு (VERTICAL SETUP) இந்த கூலி உலகமும் கலகலக்கத் தொடங்கியது.  வளர்ந்த பெரிய நிறுவனங்கள் அறவு எந்திரம் முதல் அட்டைப் பெட்டி முதல் எல்லாத் துறைகளையும் தாங்களே உருவாக்கி தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்து உள்ளார்கள்.

இறக்குமதியாளர்கள் இது போன்ற பெரிய நிறுவனங்களை தேர்ந்தெடுக்க ஒரே காரணம் விலையை எந்த அளவுக்கு வேண்டுமென்றாலும் குறைக்க முடியும்.  நூல் முதல் அட்டைப் பெட்டி வரைக்கும் ஒவ்வொரு இடத்திலும் உள்ள லாபங்கள் அறவே நீக்கப்படுகின்றது.  நிறுவனம் நடந்தால் போதும் என்று பெரிய நிறுவனங்கள் வேறு வழியே இல்லாமல் சகித்துக் கொள்ள வேண்டிய சூழ்நிலை.

அறவு எந்திரம் (KNITTING MECHINES), சாயப்பட்டறைகள்( DYEING & BLEACHING), துணிகளை விரும்பிய அளவிற்கு வெட்டி மட்டும் கொடுப்பவர்கள்(CUTTING UNIT) , வெறுமனே தைத்து கொடுப்பவர்கள்  (SITCHING UNIT) என்று தொடங்கி கப்பலில் (FREIGHT & FORWARDERS) ஏற்றுவதற்கு உதவுபவர்கள் வரைக்கும் கண்ணீர் விடும் சூழ்நிலையில் தான் வாழ்ந்து கொண்டுருக்கிறார்கள். தொழிலில் நிலவக் கூடிய ஆரோக்கியமற்ற போட்டியில் கடல் கடந்து இருப்பவர்களுக்கு இங்கு இருப்பர்களே பலவற்றையும் தாரை வார்த்துக் கொடுத்து விடுவதால் உட்கார்ந்த இடத்தில் அவர்களால் உல்லாச வாழ்க்கை வாழ முடிகிறது.  உழைப்பவர்களின் ஒவ்வொரு இரவுகளும் உளறல் மொழியில் முடிந்து விடுகிறது.

ஒவ்வொரு ஆடைக்கும் தேவைப்படும் அத்தனை உள் மற்றும் வெளி அலங்காரங்களையும் செய்து கொடுக்க கருணாகரன் போன்றவர்கள் தினந்தோறும் இங்கு உழைத்துக் கொண்டே இருக்கிறார்கள். ஒவ்வொரு ஆடைகளும் நூலில் இருந்து ஒரு நீண்ட பயணம் தொடங்கி ஒவ்வொரு படிகளும் கடந்து கடைசியில் அடைக்கப்பட்ட பெட்டியில் உள்ள ஆடைகளாக கடல் கடக்க தங்கள் பயணத்தை சாலை வழியாக தொடங்குகிறது. 

இங்குள்ள ஏற்றுமதி நிறுவனம் என்பது பத்துக்கு பத்து அறையில் இருந்து கொண்டு ஒரு கணிணி, ஒரு தொலைபேசி இணைப்போடு அலுவலகமாகவும் இருக்கலாம். அல்லது 50,000 சதுர அடி உள்ள வானளாவிய கட்டிடத்திற் குள்ளும் இருந்து கொண்டு ஒரு ராஜ்யமாகவும் நடத்தலாம்.  ஆனால் எந்த ஊர் ராஜாவாக இருந்தாலும் இந்தக் கூலிப்படை இல்லாமல் ஒன்றையும் நகர்த்த முடியாது.  தூத்துக்குடி கப்பல் துறைமுகமோ, சென்னை விமான நிலையமோ ஒவ்வொன்றுக்கும் ஏதோவொரு கூலி உலகம் தான் உதவிக் கொண்டுருக்கிறது.

தொடக்கத்தில் வண்ண வண்ண ஆடைகள் உருவாவதற்கு உண்டான வசதிகளை விட வெள்ளை நிறத்திற்கு அதிக மரியாதையும் செய்வதற்கு மிக எளிதாகவும் இருந்தது. இன்றைய நவீன எந்திரங்கள் எதுவும் இல்லாத போது வெள்ளை நிறத்திற்கென்று ஒரு தனியான வழிமுறை தான் இருந்தது.  தொட்டி மூலம் வெள்ளையாக்குதல்.  இன்னும் சுருக்கமாகச் சொல்லப்போனால் ஊரில் துவைத்துத் தருபவர்கள் வெள்ளாவி மூலமாக நமது ஆடைகளை மொட மொடவென்று கொண்டு வந்து தருவார்களே?  அதைப் போலத் தான் இங்கும் இருந்தது.  ஊருக்கு வெளியே துணிகளை வெள்ளை ஆடையாக மாற்றுவதற்கு தண்ணீர் நிரப்பப்பட்ட தொட்டிகள் வைத்து இருந்தார்கள். இதில் பணி புரிவ தெற்கென்றே தாழ்த்தப்பட்ட சமூக மக்கள் கோவணத்தோடு அந்த தொட்டித் தண்ணீரில் முழங்கால் அளவிற்கு வந்து இறங்கும் துணிகளை காலால் மிதித்து தங்களுடைய கடமைகளை செய்து கொண்டுருப்பார்கள். மூடப்பட்ட மிகப்பெரிய சூளையில் வேக வைக்கப்பட்டு, தண்ணீரில் கலந்த குளோரின் பொடிகள் முதல் கடைசியில் சல்பியூரிக் ஆசிட் வரைக்கும் இந்த ஆடைகள் கலந்துயடித்து அவர்கள் காலால் மட்டும் மிதிபட்டு உதைபட்டு கடைசியில் உஜாலா வெள்ளை போல் கொடியில் காய்ந்து கொண்டுருக்கும்.

பணிபுரிந்து கொண்டுருக்கும் நபர்களின் கால்களில் உள்ள முடிகள் உதிர்ந்து போயிருக்கும். கால் விரல்களில் சரியான கவனிப்பு இல்லாவிட்டால் புண்ணாகிப் போயிருக்கும்.  அவர்களுக்கு இருக்கும் ஒரே அருமருந்து சைபால் தான்.  பூசிக் கொண்டு உடம்பில் மொழுகிக் கொண்டு தினந்தோறும் இரவு பகல் பாராமல் வெள்ளை மனத்தோடு இந்த வெள்ளை ஆடைகளுக்காக உழைத்துக் கொண்டுருந்தார்கள்.  ஆனால் இன்று அந்தக்கூட்டம் எவருமே இல்லை.  இந்த முறையும் வழக்கொழிந்து விட்டது.  அத்தனைக்கும் இன்று நவீன எந்திரங்களின் பிடிக்கு வந்து விட்டது.  கிடைத்த குறைவான கூலியில் தினந் தோறும் குடித்தது போக கொண்டு போய்ச் சேர்த்த உழைத்துக் களைத்தவர் களின் தலைமுறைகளும் மாறிவிட்டார்கள். சமூக விழிப்புணர்வும், தலை       முறைகளுக்கு கிடைத்த படித்த வாய்ப்புகள் என்று எல்லாவிதங்களிலும் முன்னேறி உள்ளார்கள். 

துணியை சாயமேற்றுதல் என்பதில் தொடங்கிய இந்த கூலிகளின் உலகம், தைப்பது, தரத்தை சோதித்து தரம் வாரியாக பிரித்துக் கொடுப்பது வரைக்கும் உள்ள இந்த கூலி உலகத்திற்கு கிடைக்கும் நிரந்தர வருமானம் என்பது மிகக் குறைவே. சாறு முழுவதும் பிழியப்பட்டு கொடுக்கும் சக்கையைக் கூட கொடுக்க மனம் இல்லாமல் கொண்டாடி வாழ்பவர்களையும் தாண்டி தினமும் பலரும் முன்னேறிக் கொண்டு தான் இருக்கின்றனர். காரணம் இயல்பான இந்தியர்களின் வாழ்க்கை முறையே காரணமாகும்.  அதிக ஆசையை விட இந்த உலகத்தில் உள்ள அத்தனை பேர்களும் அதிக உழைப்புக்கு முன்னுரிமை கொடுப்பவர்கள்.  ஏதோவொரு சமயத்தில் கிடைக்கும் வாய்ப்புகளை கனகச்சிதமாக பயன்படுத்திக்கொண்டு மேலேறி வந்து விடுவார்கள்.  அதைப் போலத்தான் கருணாவின் வாழ்க்கையும்.

புதுக்கோட்டையில் இருந்து ஆலங்குடிக்கு செல்லும் வழியில் முக்கிய சாலையில் இருந்து கீழே பிரிந்து செல்லும் மண்சாலையில் மூச்சு வாங்க நடந்து சென்றால் கருணாவின் கிராமத்துக்கு செல்லமுடியும்.  படிக்க வேண்டிய பாடத்தில் ஆங்கிலம் என்பதை துரத்தும் பேய் போல் பார்த்து குடும்பத்தினரிடம் சொல்லாமலே குருட்டு நம்பிக்கையில் திருப்பூருக்கு ஓடி வந்தவன். வாங்கி வந்த நண்பர்களின் முகவரிக்கு கையில் காசு இல்லாமல் நடந்தே சென்று அந்த ஓண்டுக்குடித்தனத்தில் உள்ளே தன்னை அடைத்துக் கொண்டவன். வந்து இறங்கிய நேரத்தில் தொழில் குறித்து எதுவுமே தெரியாது.  டவுசர் போட்ட வயதின் காரணமே தையல் கடைக்கு கொண்டு போய் நிறுத்தினார்கள்.  இரண்டு மாதங்கள் கூட முழுமையாக எதையும் கற்றுக் கொள்ளவில்லை.  ஆனால் திருப்பூர் பற்றியும், உள்ளே உள்ள நிறுவனங்களின் சூட்சுமத்தையும் பற்றி வந்து போனவர்களுடன் பேசிப் பேசி எப்படியோ ஒரு நிறுவனத்தில் உள்ளே நுழைந்து விட்டான்.

அந்த நிறுவனத்தில் இருந்த உள்நாட்டு தயாரிப்பு எந்திரத்தின் மூலம் தினக்கூலிக்கு காஜா பட்டன் அடித்து கொடுத்துக் கொண்டுருந்தவரிடம் போய்ச் சேர ஆறு மாதத்தில் பெற்ற பட்டறிவும் அவமானங்களும் தனியாக வேறொரு நிறுவனத்தை தேட வைத்தது.  இரண்டு வருடங்களில் மாறிய நிறுவனங்களும் பெற்ற அனுபவங்களும் தனியாக கையூண்டி கரணம் போட வைக்க நிறுவன காவலாளியை தள்ளி விட்டு உள்ளே நுழைய தைரியம் தந்தது.  

ஊர் பாசமும் அவனின் முரட்டு சுபாவமும் ஒன்று சேர்த்துப் பார்க்க நினைத்தது எதுவும் வீணாகிப் போய்விடவில்லை.  காரணம் உழைப்பவர்களிடம் இருக்கும் முன்கோபம் இயல்பான ஒன்று.  சுய கௌவரம் அளவிற்கு இடைவிடாத உழைப்பும் ஒன்று சேர அவனை விட்டால் ஆளே இல்லை என்கிற அளவிற்கு அவனின் ராஜபாட்டை தொடங்கியது.  தொடக்கத்தில் ஒரு பட்டன் காஜா அடிக்க 16 பைசா.  ஆனால் பத்து வருட இடைவெளியில் இன்று அதுவே 40 பைசா அளவிற்கு இந்த துறை வளர்ந்துள்ளது. காஜா பட்டன் எந்திரங்கள் வைத்திருக்காத நிறுவனங்கள் அத்தனை பேருமே இது போன்ற தனி நபர்கள் வைத்திருக்கும் இந்த உலகத்தைச் சார்ந்தே இருந்தாக வேண்டிய சூழ்நிலை. 

சூட்டிகை என்று சொல்வார்களே அதற்கு மொத்த உதாரணமே இந்த கருணாகரன் தான்.  நிறுவனத்தில் உள்ளே நடக்கும் வேளைக்கு கூட்டிக் கொண்டு வந்த ஆளை வைத்து விட்டு வேலை தொடங்கியதும் அருகில் உள்ள நிறுவனங்களில் நுழைந்து அடுத்த வாய்ப்புகளை தேடத் தொடங்குவான்.  கொண்டு வந்த நபர்களால் வேலை எதுவும் தடைபடாத காரணத்தினால் இவனை எவரும் தேடுவதும் இல்லை. இன்றைய சூழ்நிலையில் அவனது கையில் சிறிய பெரிய 60 நிரந்தர நிறுவனங்கள் உள்ளது. தன்னிடம் வேலை செய்வதற்காகவே ஒவ்வொரு காலகட்டத்திலும் ஊரில் இருந்து அழைத்து வந்த மாமன்,மச்சான்,சகலை,பங்காளி,மைத்துனர் என்று தொடங்கி விட்ட குறை தொட்ட குறையாக பள்ளிப்பருவத்தில் காதலித்த பெண் வரைக்கும் திருப்பூர் கொண்டு வந்து சேர்த்து விட்டான்.

ஆனால் இதையெல்லாம் விட மற்றொரு மகத்தான் சாதனை ஒன்று உண்டு. இன்று கருணாகரனிடம் இன்றைய நவீன காஜாபட்டன் BROTHER. JUKI போன்ற எந்திரங்கள் பதினைந்து வைத்துள்ளான். ஒவ்வொன்றும் ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ளது.  தொடக்கத்திலேயே நகர் வளர்ச்சியை உணர்ந்து நல்ல புரிந்துணர்வோடு நகரின் வெளியே வாங்கிப்போட்ட ஆயிரம் சதுர அடி நிலத்தில் போடப்பட்ட எளிய கூரையாக இருந்த கட்டிடம் இன்று மாடிப்பகுதியில் அலுவலகம் போல் செயல்படும் அளவிற்கு வளர்க்க முடிந்துள்ளது. ஒவ்வொன்றையும் சொல்லச் சொல்ல வியப்பாய் இருந்தது.

வருடாந்திர வரவு செலவு 10 கோடி என்று முதல் வருடம் கணக்கு காட்டி விட்டு அடுத்த வருடம் போட்ட ஆட்டத்தில் அதோகதியாகப் போன எந்த நாதாரித்தனமும் அவன் வாழ்க்கையில் இல்லை. வாழ்க்கை என்பதை கிராமத்து கலாச்சாரமாக பார்த்தவன். கருணாவின் வாழ்க்கையில் வெளியுலகம் எப்படி இயங்கிக் கொண்டுருக்கிறது எதுவும் தெரியாத வாழ்க்கை. யார் ஆள்கிறார்கள்? எவர் என்ன செய்கிறார்கள்?  பதவியை வைத்துக் கொண்டு எத்தனை கோடி அடித்தார்கள்? எது குறித்தும் அக்கறையில்லை. தன்னுடைய வாழ்க்கை என்பது நம் கையில் தான் இருக்கிறது என்பதை உணர்ந்தவன்.  உழைப்பின் மூலம் கிடைத்த ஒவ்வொரு பைசாவையும் கிராமத்தில் முதலீடு செய்து விவசாயம் பார்த்துக் கொண்டுருக்கும் அண்ணனுக்கு உதவியாய் ஒரு பக்கம். மற்றொரு பக்கம் மாதச் சீட்டில் கவனம். உணர்ந்து வாழும் வாழ்க்கையை முழுமையாக உள்வாங்கி வாழ்ந்து கொண்டுருப்பவன். 
                                                                  (4 Tamil Media)
இந்தியா முழுக்க வாழ்ந்து கொண்டுருக்கும் கருணா போன்ற நபர்களால் தான் இன்றும் பணக்காரர்களால் ஆளப்படும் இந்திய ஏழை ஜனநாயகத்திற்கு உயிர் இருந்து கொண்டே இருக்கிறது.

Friday, June 25, 2010

ஆடைகளுக்குப் பினனால் என்ன இருக்கிறது?

திருப்பூரில் தனலெஷ்மி திரையரங்கத்திற்குப் பின்னால் உள்ள குறுகிய பகுதிகளுக்குள் பள்ளித் தோழன் பணிபுரியும் இடம் இருக்கிறது. அது உள்நாட்டுச் சந்தையை குறிவைத்து இயங்கும் அறவு எந்திர நிறுவனம். 24 மணிநேரமும் இடைவிடாமல் ஓடிக்கொண்டுருக்கும் நிறுவனத்தில் அவனுக்கு மேலாளர் பொறுப்பு. நிறுவனம் என்றதும் கற்பனையை பறக்க விடாதீர்கள்.  லூதியானா அல்லது கோவையில் இருந்து வாங்கப்பட்ட இரண்டாந்தரமான அறவு எந்திரங்கள்.  இது போன்று உள்நாட்டுச் சந்தையை குறிவைத்து இதை மட்டுமே நம்பி உள்ளுரிலும் வெளியூரிலும் வாழ்பவர்கள் அநேகம் பேர்கள். வாங்கி வரும் எந்திரங்களை சரி செய்து பராமரித்து குறுகிய முதலீட்டில் தொடங்குவார்கள். 

சில முதலாளிகள் தொடக்கத்தில் குடும்பத்தோடு முழுமையாக இரவு பகல் பாராமல் உழைப்பார்கள்.தங்கள் நிறுவனம் வளர்வதைப் பொறுத்து படிப்படியாக ஆட்களை சேர்த்துக் கொள்வதுண்டு.வெற்றி என்பது மொத்த வாழ்க்கையிலும் உழைப்பின் மூலம் மட்டுமே வருவதென்பதை அவர்கள் வாழ்க்கையின் மூலம் நாம் எளிதாக புரிந்து கொள்ள முடியும். பல நிஜ வாழ்க்கை சூத்திரங்களையும் நாம் உணர்ந்து கொள்ளமுடியும்.இந்த துறையில் மட்டுமல்ல இங்குள்ள ஒவ்வொரு துறையுமே உழைப்பு தான் முக்கிய மூலதனம்.  ஒவ்வொரு காலகட்டத்திலும் பணிபுரிய ஆட்களைச் சேர்த்து தன்னை சந்தையில் நிலைநிறுத்தத் தொடங்குவார்கள்.திருப்பூருக்கு 60 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் ஈரோட்டில் இதற்கென்று பிரபலமான சந்தையொன்று இயங்கிக் கொண்டு இருக்கிறது.  கோடிக்கணக்கான ரூபாய்கள் புழங்கும் இடம். இந்தியாவின் அத்தனை பகுதிகளிலும் இருந்து வந்து கூடுவார்கள்.  அவரவர்க்கு தேவைப்படும் மலிவான விலையில் உள்ள ஜட்டி முதல் குழந்தைகளுக்கு தேவைப்படும் பல்வேறு வண்ண ஆடைகள் வரைக்கும் வாங்கிக் கொண்டு செல்வார்கள். கை மேல் காசு. குறைந்த லாபம். சுமாரான தரம்.  தொடர்ச்சியான விற்பனை.  வாரம் ஒரு முறை கூடும் சந்தையில் இன்று வரைக்கும் சாதனை படைத்துக் கொண்டுருப்பவர்கள் பலர். தரமான ஆடைகள் கிடைத்தால் அது உங்களின் தனிப்பட்ட அதிர்ஷ்டம். அடித்தட்டு மக்களுக்கென்று உருவாக்கப்பட்ட அற்புத உலகமது.

ஈரோடு சந்தைக்குத் தேவைப்படும் ஜட்டி முதல் மற்ற அத்தனை உள்ளாடைகளுக்கும் தேவைப்படும் சாயம் ஏற்றப்படாத கோரத் துணியை பல்வேறு அளவுகளில் இது போன்ற சிறிய நிறுவனங்களில் ஓட்டிக் கொடுத்துக் கொண்டுருப்பார்கள்.  கோரத்துணியை மட்டும் வாங்கிக் கொண்டும் செல்வார்கள்.  பணம் இருக்கும் சிலர் சாயமேற்றிய துணியாகவும் விற்பனை செய்வதுண்டு.  சிலர் வெறும் இடைத்தரகராகவும் செயல்படுபவர்கள்.  மொத்தத்தில் வாழ்க்கையை தேடி வந்தவர்களை மிக எளிதாக முதலாளியாக மாற்றும் விந்தை உலகம் இது. 

இது போன்ற சிறிய அறவு எந்திர தொழிற் சாலையில் ஒரு வருடத்தில் அதிகபட்சம் ஐந்து நாட்கள் அதிகாரபூர்வ விடுமுறை கிடைக்கலாம்.  தமிழ்நாட்டின் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்தவர்களும்,இது போன்ற பல்வேறு தொழில்களை மட்டுமே நம்பி வந்து கொண்டு இருப்பவர்களும் ஒவ்வொரு நிறுவனத்திலும் நேரம் காலம் பார்க்காமல் பணிபுரிந்து கொண்டுருக்கிறார்கள்.  12 மணி நேரம் என்பது ஒரு வேலை நேரம்.  முதல் வாரம் பகல் பொழுது என்றால் அடுத்த வாரம் அவர்கள் இரவு வேலைக்கு மாற்றப்படுவார்கள்.  பல சமயம் ஆட்கள் வரவில்லை என்றால் இரண்டு பொழுதுகளும் ஒருவரே பார்க்க வேண்டும். மறுக்க முடியாது. 

நவீன வசதிகள் எதுவும் இல்லாமல் மின்சாரத்தில் இயங்குவதைத் தவிர வேறொன்றும் உள்நாட்டு சந்தைக்கென்று உருவாக்கப்பட்ட அந்த எந்திரங்களில் வேறெந்த புதுமையும் இருக்காது.  ஓடும் சப்தங்களும், காற்று வசதிகள் இல்லாத கொடுமையும் ஒருங்கே சேர்ந்த நரகம் அது. ஆனால் அது குறித்து பணிபுரியும் எவரும் கவலைப்பட்டுக் கொள்வதில்லை.  காரணம் நடுத்தர வர்க்கமாய் வாழ ஏதோவொரு நரகத்தை இயல்பாகவே ஏற்றுக் கொண்டே தான் ஆகவேண்டும்.  இல்லாவிட்டால் வாழ்கை முழுக்க நடுங்கும் வர்க்கமாகத் தான் வாழ்ந்தாக வேண்டும்.

ஒவ்வொரு எந்திரத்தின் கொண்டைப் பகுதியில் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட அளவுக்கு நூல் கண்டுகளை நிறுத்துவதற்கு பல்வேறு எண்ணிக்கைகளில் கம்பிகள் இருக்கும்.  ஒவ்வொரு கம்பியிலும் நூல் கண்டு நிறுத்தப்பட்டு நூலின் முனையை எந்திரத்தின் மையப் பகுதியின் உள்ளே உள்ள (CAMP SET) அமைப்பில் கோர்த்து விடுவார்கள். இந்த பகுதி தான் எந்திரத்தின் முக்கிய மூளை.  இந்த மூளைக்குள் அளவான ஊசிகள் வரிசைக்கிரமமாக அடுக்கப்பட்டு மூடியபடி இருக்கும். மேலே இருந்து வரும் நூலின் முனை ஊசிகளில் உள்ள காது ஓட்டை வழியாக கோர்க்கப்பட்டு கீழே இறங்கும், ஜாலவித்தைகள் தொடங்க துணியாக மாறி கீழே இறங்கத் தொடங்கும். எந்திரம் ஓடத் தொடங்கியதும் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட வடிவமைப்பான துணி கீழே இறங்க பத்து கிலோ இருபது கிலோவாக சேர ஒவ்வொரு முறையும் வெட்டி அருகே தரம் வாரியாக பிரித்து அடுக்கி வைத்து இருப்பார்கள்.  இரவு நேரங்களில் வரும் சாயப்பட்டறை வண்டிகள் வந்து எடுத்துக் கொண்டு செல்லும். 

துணிகளில் பல வகைகள் உண்டு.  ஆடைகளை கோடைகாலம், குளிர்காலம் என்று இரண்டு விதமாக பிரித்து வைத்து இருந்தாலும் ஒவ்வொன்றுக்குள்ளும் பல்வேறு கிளை நதிகள்.  மெல்லிய, கடினமான, என்று தொடங்கி பல்வேறான வடிவமைப்பு,  அத்தனையும் இந்த மூளைப்பகுதியில் உள்ள வடிவமைப்பு பொறுத்து மாற்றப்படுகின்றது. நீங்கள் விரும்பும் துணியில் வடிவமைப்பை சிறிய துண்டாக கத்தரித்துக்கொண்டு போய் காட்டினால் அதன் சூட்சமத்தை பார்த்தவுடன் புரிந்து கொண்டு அதற்கு தகுந்தாற் போல் எந்திர வடிவமைப்பை மாற்றி உங்கள் விருப்பத்தை நிறைவேற்றுவார்கள். 

ஒவ்வொரு முறையும் எந்திரங்களில் மாற்றிக் கொள்ள வசதியுண்டு. ஓரே எந்திரத்தில் பத்துக்கும் மேற்பட்ட வடிவமைப்புகளை உருவாக்கும் அத்தனை நவீனங்களும் வந்து விட்டது. நீங்கள் உடுத்தும் சில ஆடைகளில் உள்ளே கடினமாக சொர சொரப்பாக இருக்கும்.  ஆனால் அதே துணியின் வெளிப்புறம் முயலை தடவும் சுகமாக இருக்கும்.  அத்தனையும் ஊசிகள் உள்ள பகுதிகளில் செய்யப்படும் ஜாலவித்தை. ஊசி வழியாக வந்த நூல் துணியாக பின்னப்பட்டு பின்னலாடைத் துணியாக கீழே இறங்கும். கீழே உள்ள மிக நெருக்கமாக இருக்கும் இரண்டு உருளைச் சக்கரத்திற்குள் நுழைந்து கீழே உள்ள கம்பியில் வந்து சேரும். உருண்டுக் கொண்டே இருக்கும் அந்த கம்பி துணியை சேகரித்துக் கொண்டுருக்கும். கீழே உள்ள இரண்டு சக்கர உருளையைக் கடந்து இறங்கும் துணியின் மையப் பகுதியில் உள்ள மின்சார விளக்கின்  வெளிச்சத்தில் துணியின் தரமும் தராதரமும் நம்மால் புரிந்து கொள்ள முடியும்.

ஒவ்வொரு எந்திரத்திற்கும் ஒரு அளவு.  ஒவ்வொன்றும் மனிதர்களின் மார்பு அளவைப் பொறுத்து உள்ளேயிருக்கும் முக்கிய உருளைகள் உருவாக்கப்பட்டுருக்கும். துணிகள் இறங்கும் போதே தவறுகள் ஏதும் தெரிந்தால் பளிச்சென்று எறிந்து கொண்டும் மின்சார விளக்கு மூலம் மிக எளிதாக கண்டு பிடித்து விடலாம்.  தவறாக கோர்க்கப்பட்ட நூல், தரமில்லாத நூல் என்று தொடங்கி உள்ளே ஓடிக் கொண்டுருக்கும் உடைந்த ஊசியின் விளைவாக உருவாகும் விளைவுகள் வரைக்கும் கண்காணித்துக் கொண்டுருப்பவரால் எளிதாக கண்டு கொள்ள முடியும். பணிபுரியும் 12 மணி நேரமும் எந்திரத்தின் அருகே நின்று கொண்டு பணியில் இருப்பவர்கள் எந்தப் பக்கமும் நகர்ந்து விட முடியாது.

ஒவ்வொரு நொடியும் முக்கியமானது.  ஓடிக் கொண்டுருக்கும் எந்திரத்தில் உள்ளே உள்ள ஒரு ஊசி உடைந்து இருந்தாலும் உருவாக்கும் விளைவுகள் கண நேரத்தில் பல நூறு ரூபாய்களை காணாமல் போக்கிவிடும். சில சமயம் மொத்த எந்திரத்தையும் காயலான் கடைக்கு அனுப்ப வைத்துவிடும். அருகே இருப்பவரின் வேலைக்கும் ஆப்பு வைத்துவிடும். இறக்குமதி செய்யப்பட்ட எந்திரங்கள் என்றால் நிமிடத்தில் லட்சத்தை தின்று அமைதியாக நிற்கும்.  முதலீடு போட்டவர் அமைதியை குலைத்துவிட்டு.

இதற்கு மேலாக நூல் வேகமாக ஊசியை நோக்கி ஓடி வரும் போது பறக்கும் பஞ்சு துகள்கள் அந்த இருட்டு அறையை திரைப்பட கனவுக் காட்சி போல் மாற்றியிருக்கும்.  உள்ளே இருப்பவர்கள் பணி நேரம் முழுவதும் அந்த பஞ்சு துகள்களை சுவாசித்துக் கொண்டே தான் இருக்க வேண்டும்.  உள்நாட்டு சந்தை என்பது மிகக் குறைவான லாபத்தைக் கொண்டுள்ளதைப் போலவே எந்த முதலாளி வர்க்கமும் தொழிலாளிக்கு உண்டான அடிப்படை வசதிகளை செய்வதில் ஆர்வமும் காட்டுவதில்லை.  

ஆனால் ஏற்றுமதியாகும் ஆய்த்த ஆடைகள் தொடக்கத்தில் இது போன்ற உள்நாட்டு எந்திரங்களைச் சார்ந்தே இருந்தது.  ஆனால் இறக்குமதியாளர்களின் தேவை அறிந்து, உள்ளே வந்த நவீனங்களுக்கு பின்னால் போய் இன்று கணிணி கட்டுப்பாட்டில் இயங்கக்கூடிய அத்தனை அறவு (KNITTING MECHINES) எந்திரங்களும் திருப்பூரில் உள்ளது.  இன்றுவரையிலும் ஜெர்மன், ஸ்விட்சர்லாந்து,கொரியா, தைவான் போன்ற நாடுகளில் இருந்து ஒன்றை ஒன்று மிஞ்சம் அளவிற்கு வந்து இறங்கிக் கொண்டே இருக்கிறது. இந்த நாடுகளுக்கெல்லாம் ஆப்படிக்கும் அய்யா சீனாவின் கைங்கர்யமும் பாடாய் படுத்திக்கொண்டுருக்கிறது.  

இறக்குமதியாகும் நவீன அறவு எந்திரங்களில் பணிபுரிபவர்கள் ஒப்பீட்டளவில் வேலைப் பளூவும் குறைவு.  அவர்களின் ஆரோக்கியமும் சற்று மேம்பட்டதாய் இருக்கும். உள் நாட்டில் தயாராகும் எந்திரத்தில் நூல் திறந்த வெளி பயணத்தின் மூலமாகத் தான் நடுப்பகுதியில் உள்ள ஊசியை வந்து அடைகிறது.  அதுவே நவீன எந்திரங்களில் இந்த நூல் பயணம் செய்வதற்கு தனியாக சிறிய குழாய் போன்ற வசதிகள் உண்டு.  நூல் குழாய் வழியாக ஊசி இருக்கும் பகுதிகளுக்குள் வரும் போது பறக்கும் பஞ்சு துகள் அத்தனையும் ஒரே இடத்தில் சேர்க்கப்பட்டு விடும்.  சில நவீன எந்திரங்கள் குளிர் சாதன வசதிகளுக்குள் இருப்பதால் பணிபுரிபவர்களுக்கு இன்னும் சிறப்பாய் இருக்கும். 

15 வருடங்களாக இந்த உள்நாட்டு சந்தையை அடிப்படையாக வைத்து இயங்கிக்கொண்டுருக்கும் துறையில் பணிபுரியும் நண்பன் இப்போது வாரம் 4000 ரூபாய் வாங்கும் அளவிற்கு வளர்ந்துள்ளான். அறவு எந்திரம் தரும் சப்தத்தை வைத்தே என்ன பிரச்சனை என்று எளிதில் கண்டு கொள்ளக் கூடியவன். எந்திரத்தை முழுமையாக கழற்றி மாட்டி விடக் கூடியவன்.  வாழ்க்கையையும் எந்திரமாகவே மாற்றிக் கொண்டவன்.  ட வடிவில் உள்ள அந்த டொக்கு சந்தில் ஒரு பக்கத்தில் சாக்கடை கழிவுகள் மிதந்து போய்க் கொண்டுருக்கும்.  மற்றொரு மூலையில் நிறுவனத்தில் பணிபுரிபவர்கள் உபயோகிக்கும் கழிப்பறை.
மிக நெருக்கமாக உள்ளேயிருக்கும் 20 எந்திரங்கள் இருக்கும் பகுதிகளுக்குள் முறைப்படியான மின்சார பாதுகாப்பு சாதனங்களோ, உள்ளே அவசர வழிகளோ எதுவும் இல்லாமல் ஒரே உடைந்த அந்த பழைய கதவு.  காரணம் கதவுகளை மூட வேண்டிய அவஸ்யமில்லாமல் 24 மணிநேரமும் இயங்கிக் கொண்டுருக்கும் நிறுவனம்.  உள்ளே எப்போதும் போல இருட்டறை.  இருட்டை விரட்ட இடைவிடாமல் எறிந்து கொண்டு குழல் விளக்குகள் தந்து கொண்டுருக்கும் சூடு ஒரு பக்கம்.  பஞ்சு என்பது அடுத்த உஷ்ணம். காற்று இல்லாத இடம்.  உள்ளே சுற்றிக்கொண்டுருக்கும் பஞ்சுப் பொதிகள் வெளியேற வாய்ப்பில்லாத இடம். எந்திரத்தின் தொடர்ச்சியான சப்தங்கள். மொத்தத்தையும் சகித்துக் கொண்டு வாழப் பழகிவிட்ட தொழிலாளர் கூட்டம்.  இந்த உள்நாட்டு வெளிநாட்டு அறவு எந்திர உலகத்தில் எத்தனையோ தொழிலாளிகள், எத்தனையோ பேர்கள் விரும்பும் கவர்ச்சியை தந்து கொண்டுருக்கும் உள்ளாடைகளுக்காக தங்கள் வாழ்க்கை ச்ச்சீசீ என்று வாழ்ந்து கொண்டுருக்கிறார்கள். தொடர் மின் வெட்டு இருந்தால் இது போன்ற நிறுவனங்கள் இயங்காது.  ஜெனரேட்டர் வைத்து இயங்கும் அளவிற்கு லாபமும் இருக்காது.

தொடக்கத்தில் தனித்தனியான நபர்கள் எந்திரத்தின் அருகே நின்று கொண்டு இறங்கும் துணியை கவனித்துக் கொண்டுருப்பார்கள். இப்போது மூன்று எந்திரங்களுக்கு ஒருவரே பொறுப்பு.  அந்த அளவிற்கு ஒரு புறம் சர்வதேசம் ஜவுளித்துறைக்கு பல நெருக்கடிகளை உருவாக்கிக் கொண்டு இருக்கிறது. சரிசமமாக முதலாளிகளின் ஆசைகளும் வளர்ந்து கொண்டே இருக்கிறது. 

Wednesday, June 23, 2010

நம்பி கை வை

மதுரைக்கு தூங்கா நகரம், கோவில் நகரம் என்பது போலவே திருப்பூருக்கும் பல பெயர்கள் உண்டு.   நிட் சிட்டி (KNIT CITY), டாலர் சிட்டி (DOLLOR CITY), பின்னாலாடை நகர், பனியன் நகரம் என்று உங்களுக்கு பிடித்த எந்த பெயரில் வேண்டுமென்றாலும் அழைக்கலாம். முழுக்க முழுக்க ஆய்த்த ஆடைகளின் (HOSIERY GARMENTS) உற்பத்தியை நம்பி மட்டுமே இந்த நகர் இயங்கிக்கொண்டு இருக்கிறது.  வெளிநாட்டுக்கு ஏற்றுமதி அல்லது உள்நாட்டுக்கு தேவைப்படும் ஆடைகள்.  ஏதோ ஒன்றை பின்பற்றி உழைத்துக் கொண்டுருப்பவர்களுக்கு தினந்தோறும் தூக்கம் என்பது சற்று குறைவாகவே இருக்கும். பணம் சம்பாரிக்க என்பதெல்லாம் மீறி உழைப்பு என்பது ஏறக்குறைய ஒவ்வொரு  மனிதர்களுக்கும் போதையை போலவே உடம்பில் ஊறிவிடக்கூடியதாய் இங்குள்ள சூழ்நிலை உருவாக்கியிருக்கும்., தினந்தோறும் எட்டு மணி நேரம் தான் என்னால் உழைக்க முடியும்? என்பவர்கள் இந்த ஊர்ப்பக்கம் எட்டிப்பார்க்காமல் இருப்பது நலம்.  தினந்தோறும் 16 மணிநேர உழைப்பு என்பது சர்வசாதாரணம்.  இங்கு இன்றுவரையிலும் வேறு எந்த தொழிலுக்கும் வாய்ப்பும் இல்லை.  வளர்ந்ததாக தெரியவும் இல்லை. ஆடைகளைச் சார்ந்து, ஆடைகளுடனேயே பயணிக்கும் ஒவ்வொரு சார்பு தொழில்களும் ஏதோ ஒரு வகையில் சம்மந்தம் உள்ளதாக இருக்கிறது.   அவ்வாறு இருக்கும் தொழில் மட்டுமே இங்கு நீண்ட காலம் தாக்குப் பிடித்து நிற்க முடியும்.  

நூல் என்பது ஆடையாக மாறுவதற்குள் எத்தனை துறைகள்?.  ஒவ்வொன்றும் ஒவ்வொரு உலகம். இந்த ஒவ்வொரு துறைகளுக்குள் நூற்றுக்கணக்கான துறைகள். தினந்தோறும் ஆயிரம் ரூபாயை முதலீட்டை வைத்துக் கொண்டு தூங்கி எழுபவர்கள் முதல் லட்சத்தை வைத்துக் கொண்டு லட்சிங்களை துரத்தும் நபர்கள் வரைக்கும் இந்த தொழிலில் உண்டு. நூல் முதலில் துணியாக மாற (KNITTING MECHINES) அறவு எந்திரங்கள் உள்ள பகுதிக்கு செல்கிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரைக்கும் உள்ளவர்களின் மார்பு அளவிற்கு ஏற்றபடி ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட பல வித உருளைகள் (CYLINDERS) மூலம் துணியாக வெளியே வருகிறது.  இதுவொரு தனியுலகம். 

தொடக்கத்தில் நூல் பைகளை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்துச் செல்ல ஏராளமான மாட்டு வண்டி உலகம் ஒன்று இருந்தது.  காலச்சக்கர சுழற்சியில் அத்தனையும் மறைந்து போய் இன்று நவீன நான்கு சக்கரங்கள் தெரு முழுக்க அலைந்து கொண்டுருக்கிறது.  மாடுகளுக்கு உணவாக கொடுக்கக்கூடிய தட்டை என்ற பசும்தாவரம் என்பது அதுவொரு மிகப்பெரிய லாபத் துறையாக எளியவர்களுக்கு இருந்தது.  இன்று தட்டையும் இல்லை.  தட்டை விளைந்த பூமிகளும் இல்லை.

கோயமுத்தூரில் தயாராகும் உள்நாட்டு அறவு எந்திரத்தின் விலை 50,000 முதல் இவை தொடங்குகிறது.  அதுவே கால வளர்ச்சியில் ஜெர்மனியில் இருந்து வந்து இறங்கிக் கொண்டு இருக்கும் அதிகபட்ச நவீனங்களைக் கொண்ட இரண்டு கோடி ரூபாய் வரையில் வரைக்கும் இன்று இந்தத் துறை வளர்ந்துள்ளது. ஒவ்வொரு வகையான துணிக்கும் பல விதமான எந்திரங்கள். நீங்கள் உடுத்தும் ஆடையில் உள்ள காலர் (COLLOR) பகுதிக்கென்று ஒரு எந்திரம்.  அதுவே கையில் உள்ள சதைப்பற்றை தனியாக காட்டும் அளவிற்கு புடைப்பாக தெரியவேண்டும் என்று விரும்பும் மன்மதர்களுக்கென்று உடுத்திய ஆடையில் CUFF என்ற பகுதிக்குக்கென்று தனியான ஒரு எந்திரம்.

ஒரு ஆடையை முழுமையாக்க பல விதமான அறவு எந்திரங்கள் ஒன்று சேர்ந்து செயல்படுகின்றது. இங்கு 24 மணிநேரமும் இடைவிடாமல் இயங்கிக் கொண்டே இருக்கிறது.  பனியன் அல்லது ஜட்டி என்பதாக இருந்த இந்த தொடக்க கால திருப்பூரில் பெரிய தொகையிலான முதலீடும் எதுவும் தேவையாய் இருக்கவில்லை.  மிகப் பெரிய முதலீடு என்பது உழைப்பு மட்டுமே.  ஆனால் இன்று உழைப்பு சிறியதாகவும் கொட்டும் பணத்தின் அளவு மிகப் பெரிய அளவாகவும் இந்த துறை வளர்ச்சி அடைந்துள்ளது. தொடக்கத்தில் கையால் இயக்கப்பட்டுக் கொண்டுருந்த எந்திரங்கள் இன்று கணிணி கட்டுப்பாட்டில் இயங்கிக்கொண்டுருக்கிறது.  சாலையில் நடந்தால் கண்களை கவரக்கூடிய ஆடைகள், பெண்களை ஆச்சரியப்படுத்தும் ஆடைகள் என்று இன்று பலவிதமான வளர்ச்சி அடைந்த ஆடைகள் உலகமிது. விதவிதமான பல்வேறு நிற வண்ண ஆடைகளின் வடிவமைப்பில் துணியாக இறங்கும் அந்த நேரம் ஏறக்குறைய ஒரு குழந்தையின் பிரசவத்தை நீங்கள் காண்பது போலவே இருக்கும்.

அறவு செய்த துணியை கோராத் துணி ( CORA CLOTH ) என்கிறார்கள்.  உங்களுக்கு வெள்ளை வேண்டுமென்றாலும் அல்லது வானவில் நிற மென்றால் இந்த துணிகள் செல்லுமிடம் ( BLEACHING & DYEING) சாயப் பட்டறைகள்,  அன்றாடம் நீங்கள் படிக்கும் செய்தித்தாளில் இன்று துணுக்குச் செய்திகள் போலவே இன்று வரைக்கும் தொடர்ந்து கொண்டுருக்கும் இந்த பிரச்சனைகள் குறித்து தனியாக பார்க்கலாம். இவர்கள் எங்கள் மண்வளத்தை பாழக்கி விட்டார்கள் என்று விவசாயிகளும், அரசாங்கம் எங்களுக்கு ஒத்துழைப்பு தருவதில்லை என்று சாயப்பட்டறை முதலாளிகளும் இன்று வரையிலும் இரண்டு பக்க மஞ்சுவிரட்டு நடந்து கொண்டே இருக்கிறது.  முடிவு மட்டும் எட்டாமல் பல்லாயிரக்கணக்கான விவசாய பூமிகள் பாழானது தான் மிச்சம்.
வீட்டுக்காரம்மா துவைத்த ஆடை களை இஸ்திரி போடாமல் வைத்து இருந்தால் நாம் அதை உடுத்த மனம் வருமா?   சாயப்பட்டறைகளில் இருந்து வரும் இந்த ஆடைகளையும் இஸ்திரி செய்து விருப்பமான அளவிலும் தருகிறார்கள். அந்த துறைக்கு COMBACTING என்கிறார்கள்,  வெள்ளையோ அல்லது நீங்கள் விரும்பும் குறிப்பிட்ட நிறமோ துணியாக அளவு பார்த்து வெட்டித் தைக்க தொழிற் கூடங்களுக்குள்  உள்ளே வந்த பிறகு தான் இதன் மற்றொரு பரிணாம வளர்ச்சி உருவாகத் தொடங்குகிறது. குரங்கில் இருந்து வந்த மனிதன் போல துணிகளில் இருந்து ஆடைகள் வரைக்கும் தொழிற்சாலையின் ஒவ்வொரு பகுதிக்கும் சென்று இறுதியாக மனதை கவரும் ஆடைகளாக அட்டகாசமாக மாறுகிறது.  

இப்போது இந்த டாலர் சிட்டிக்கு பெருநகரகங்களைப் போலவே தனி மாவட்டம் என்பதுடன் மாநகராட்சி என்ற தனி அந்தஸ்த்தும் வந்துள்ளது. 6 நகராட்சி, 17 பேரூராட்சி, 73 கிராம ஊராட்சிகளை உள்ளடக்கிய இந்த உழைப்பாளர் மாவட்டத்தில் ஏறக்குறைய 19 லட்சத்து 33 ஆயிரம் மக்கள் (முந்தைய கணக்கின்படி) வாழ்கிறார்கள். கொங்கு மண் மக்களை விட வெவ்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் இங்கு வாழ்வது தான் மிக அதிகம்.  டெல்லி முதல் கன்யாகுமரி வரைக்கும் உள்ளே அத்தனை இந்தியர்களையும் உள்ளே வைத்திருப்பது இதன் மற்றொரு சிறப்பு.

தொழில் நகருக்கு இயல்பான மற்றொரு பிரச்சனையும் உண்டு.  தினந்தோறும் பிழைப்புத் தேடி உள்ளே வந்து கொண்டுருப்பவர்களுடன், எப்போதும் வந்து போய்க்கொண்டுருக்கும் மக்களால்(FLOATING POPULATION) என்று இரண்டு புறமும் அரசு நிர்வாகத்திற்கு சவாலாக இருக்கும்.  பணப்பட்டுவாடா முதல் வாரச் சம்பளம் வரைக்கும் நடக்கும் ஒவ்வொரு சனிக்கிழமை நாட்களிலும்  காலை முதல் நடு இரவு வரைக்கும் நசுங்கிக் கொண்டு தான் நகர வேண்டும். இத்தனை சிறப்புக்களைப் பெற்ற இந்த தொழில் நகரில் நாளுக்கு நாள் குற்றத்தின் குறியீடகளும் ஏற்றுமதி குறியீடுகளைப் போலவே ஏறிக்கொண்டே இருக்கிறது. 

சென்னையில் இப்போது உருவாகியுள்ள கோயம்பேடு சந்தை என்று உருவாவதற்கு முன்பு பாரிஸ் கார்னர் பகுதிகளில் காலை நேரம் முதல் இரவு வரைக்கும் உள்ளே உள்ள ஒவ்வொரு பகுதியையும் சுற்றி வந்தால் பல வித அனுபவங்கள் கிடைக்கும்.  சில பழங்கள் நாம் கேள்விபட்டுருக்கக்கூட மாட்டோம்.  அந்த பழங்கள் அங்கு விற்க்கப்பட்டுக் கொண்டுருக்கும்.  இந்தியாவில் உற்பத்தியாகும் எந்த பொருட்களும் கண நேரத்தில் அங்கு விற்பனைக்கு வந்து விடும்.  காரணம் வாங்கும் திறன் உள்ள பகுதிகளில் நடக்கும் அன்றாட நிகழ்வு இது.  அதைப்போலவே திருப்பூரிலும் எது தான் கிடைக்காது? என்கிற அளவிற்கு எல்லாமே கிடைக்கிறது.  எய்ட்ஸ் வரைக்கும்.

திருப்பூரில் இருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ள அவிநாசியை நீங்கள் தொட்டு விட்டால் தேசிய நெடுஞ்சாலையில் உங்களை இணைத்துக் கொண்டு ஊத்துக்குளி வெண்ணெய் போல் வழுக்கிக் கொண்டு கோயமுத்தூர் வழியாக கேரளாவிற்குள் ஒரு மணி நேரத்திற்குள் நுழைந்து விடலாம். பெரியாரை பார்த்தது இல்லை.  அவர் வாழ்ந்த ஈரோட்டுக்குள்ளாவது செல்ல வேண்டும் என்பவர்களுக்கு ஒரு மணி ஒதுக்கி ஒட்டமாக பறந்து விடமுடியும். சுற்றிலும் கடல் இல்லாத குறை மட்டும் தான். ஆனால் இத்துப் போன மாநகராட்சி பூங்காவில் கடலை போடுபவர்களையும் கண்டு களிக்கலாம். இங்கு காலை முதல் மாலை வரைக்கும் எங்கு பார்த்தாலும் உழைப்பாளர்களின் தலைகளையும், களைத்தவர்கள் கூடும் டாஸ்மார்க் கூட்டத்தை ஆசை தீர பார்த்துக்கொண்டு உபி வாலா தரும் சமோசாவை உண்டு மகிழலாம்.

உலக நாடுகளில் உன்னத இடத்தை பிடித்து இருக்கும் இந்த திருப்பூர் இன்று வரையிலும் இந்தியாவிற்கு தேவைப்படும் அந்நியச் செலவாணியை ஈட்டித்தரும் மரியாதையான ஊர்.  ஆனால் கால் நூற்றாண்டுகளுக்கு முன்பு பல்லடம் தாலூகாவில் இருந்த இந்த சிறிய கிராமம் தான் இன்றைய அசுர வளர்ச்சி பெற்றுள்ள ஏற்றுமதி நகரம். இன்றைய சூழ்நிலையில் அதிக பாதிப்பு அடைந்துள்ள இந்த திருப்பூர் இன்றைய சூழ்நிலையில் 11,500 கோடிகளை வெளிநாட்டுக்கும் 6000 கோடிகளை உள்நாட்டு வர்த்தகத்தின் மூலமாகவும் ஈட்டித்தந்து கொண்டுருக்கிறது.  தனி மனிதனுக்கு வாழ்க்கையில் இலக்கு மிகவும் முக்கியம் என்பது போல இந்த நகரத்திற்கும் மேதைகள் ஒரு இலக்கை தீர்மானித்து இருந்தார்கள். 2010 ஆம் ஆண்டு திருப்பூர் ஏற்றுமதியின் இலக்கு 20 ஆயிரம் கோடியை தாண்ட வேண்டும் என்றார்கள்.  ஆனால் தடை தாண்டிய ஓட்டப்பந்தயத்தில் குறிப்பிட்ட இலக்கை அடைய முடியாமல் இன்று மூச்சு வாங்கிக்கொண்டு இருக்கிறது.  இதற்குப் பிறகும் ஒரு இலக்கு உண்டு.  2015 ல் 40 ஆயிரம் கோடியை தொட வேண்டும் என்ற ஆசை நிராசையாக போகாதுருக்க அண்ணமார் சாமிக்கு படையல் வைத்து பிரார்த்தனை செய்து உழைத்துப் பார்க்கலாம் என்று ஓடிக்கொண்டுருக்கிறார்கள். 

சிறிதும் பெரிதுமான 2500 ஏற்றுமதி நிறுவனங்கள் உள்ள திருப்பூருக்குள் மாவட்ட ஆட்சியர் என்று பொறுப்புக்கு வந்தவர் முயற்சியால் உருவாக்கிய வலைதளம் இது.  15 ஆண்டுகளுக்கு முன்பு உறவினர்கள் உள்ளே வரும் போது ஒவ்வொரு முறையும் " இன்னோரு முறையும் இங்கு வரவேண்டும் போல் உள்ளது " என்பார்கள்.  காரணம் அவர்கள் வந்து இறங்கும் அந்த அதிகாலை வேலையில் குளிராக இருக்கும்.  அல்லது மனதில் கவிதைகளை உருவாக்கும் சாரல் போல பருவ நிலை அத்தனை கிளர்ச்சிகளைத் தூண்டும்.  பல மாதங்கள் இதே இந்த தட்பவெப்ப நிலை மதியம் வரைக்கும் இருக்கும்.  ஒவ்வொரு முறையும் கரூர் தாண்டி திருச்சியைத் தொடும் போதெல்லாம் அடிவரைக்கும் உஷ்ணம் படுத்தி எடுத்து விடும்.  அந்த அளவிற்கு குளிர்சாதன வாழ்க்கை போல இந்த திருப்பூர் இதமாக இருந்தது.  ஆனால் வளர்ந்த மக்கள் தொகையில் இப்போது சூடு வாட்டி வதக்கி எடுத்துக் கொண்டுருக்கிறது. பத்து கிலோ மீட்டர் சாலையில் கடந்து செல்வதற்குள் ஊரில் உள்ள அத்தனை தெய்வங்களையும் வேண்டிக் கொள்ள வேண்டியதாய் இருக்கிறது. புகையே வாழ்க்கையாய், புழுதியே சுவாசமாய் மாறி பல வருடங்கள் ஆகி விட்டது.  மூடாத சாக்கடைக்குழிகளும், முடிவே தெரியாமல் தொடர்ந்து கொண்டுருக்கும் சாலை மராமத்து பணிகள் என்று அத்தனையும் தாண்டி ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கையின் இருப்பை தக்க வைத்துக் கொள்ள வாகனங்களில் பறந்து கொண்டே இருக்கிறார்கள். 

ஒரு வகையில் இது வினோத கலவையான நகரம்.  கோயம்புத்தூர் என்றால் கல்விக்கு உள்ள முக்கியத்தும் போல் பணிபுரியும் வேலைவாய்ப்புகளும் முன்னால் நிற்கிறது. அதுபோலவே  மருத்துவம் என்று தொடங்கி கண்களுக்கு கருத்துக்கும் பிடித்த அத்தனை விசயங்களும் எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்து உள்ளது. தேர்ந்தெடுப்பவர்கள் பொறுப்பு. அடித்தட்டு மக்கள் முதல் அன்றாடங்காய்ச்சி வரைக்கும் கையில் உள்ள காசுக்கு ஏற்றபடி வாழ்க்கையை வாழ்ந்துவிட முடியும் ஆனால் இங்கு உழைப்பவர்களுக்கும் உழைப்பை வாங்கிக் கொண்டுருப்பவர்களும் ஒரே ஒரு வாய்ப்பு தான் இருக்கிறது. நடுசாமம் வரைக்கும் உழைக்க மட்டும் தான் முடியும்.  வேறு எந்த வசதிகளோ, வாய்ப்புகளோ இல்லை.  திரைஅரங்கம், டாஸ்மார்க்,இதையும் வேண்டா மென்றால் வீட்டுக்குள் வந்து தொலைக்காட்சி.  இந்த மூன்றுக்குள் ஏதோ ஒன்றுக்குள் தான் உங்களை பொருத்திக்கொள்ள வேண்டும்.  புத்தகங்கள் என்பது அவரவர் விருப்பத்தைப் பொறுத்தது. இங்கு அவ்வவ்போது நடக்கும் பொருட்காட்சிகளும், கூட்டம் கூடாத சர்க்கஸ் கூடாரங்களும் வந்து வந்து போய்க் கொண்டே இருக்கிறது.  

உழைப்பவர்களின் அன்றாட தேவைகளுக்கும் தள்ளுவண்டி கலாச்சரம் எல்லா துறைகளிலும் உள்ளது. சட்டி முட்டி பாத்திரம் விற்பனை முதல் சமோசா வரைக்கும் அத்தனையும் இங்கு உண்டு.  அத்தனையும் தொழிலாளர்களை குறிவைத்து இயக்கும் அடித்தட்டு விற்பனை. ஆனால் இதற்கெல்லாம் மேல் திருவாளர் நடுத்தர வர்க்கத்திற்கு இப்போது வயிற்றில் உள்ள அதிக சதையை உறிஞ்சி உங்களை அடுத்த உலக அழிகியாக/அழகனாக மாற்ற உதவும் கருவிகள் உள்ள கடை வரைக்கும் வந்து விட்டது. , கடன் வாங்கியாவது தங்கள் ஆடம்பரத்தை காட்டிக் கொள்ள விரும்பும் திருவாளர் நடுத்தர வர்க்கத் திற்காகவும் பல துறைகள் தினந்தோறும் முன்னேறிக் கொண்டே இருக்கிறது. முதலாளிமார்கள் மட்டும் எப்போதும் போல அன்றும் இன்றும் எப்போதும் போல் கோயம்புத்தூரை தான் தேடிச் சென்று கொண்டுருக்கிறார்கள்.  20 வருடமாக தினந்தோறும் 12 மணி நேரம் கால்கடுக்க நின்று உழைத்து மாதம் 6000 வாங்கும் உழைப்பாளர்கள் முதல் அதே ஒரு மாதம் 2,50,000 வரை வாங்கும் அலுவலகப் பணியாளர்கள் வரைக்கும் உள்ள கலவையான ஊர் இது. இருவரின் உழைப்பும் பொறுப்பும் வெவ்வேறு. 
வெளிநாட்டுக்கு வேலை தேடி சென்றவர்கள் கூட வாங்க முடியாத சம்பளம் இங்கு வெளியே தெரியாமல் வாங்கிக் கொண்டுருப்பவர்கள் அதிகம். தொழிலாளர் முதல் பணியாளர் வரைக்கும் நிறுவனத்தின் வளர்ச்சி செங்குத்தாக ஏறிக்கொண்டுருக்க உதவும் வரைக்கும் மட்டும் தான் இங்கு எல்லாமே நிரந்தரம். குறியீடு தலைகுப்புற விழத் தொடங்கினால் அடுத்த வேளைக்கு நான் சிங்கா நீ சிங்கி என்ற புதிய தத்துவம் தான்.  நம்பிக்கையுடன் உழைத்த முதலாளிகளைப் போலவே நம்பி இந்த தொழில் மேல் கை வைத்த நம்பிக்கையாளர்களும் வீழ்ந்து போனதாக தெரியவில்லை. அப்படி கீழே விழுந்து இருந்தா லும் காரணம் வேறாக இருக்கும். 

Saturday, June 19, 2010

இடைத்தங்கல் முகாம்

குறுகிய காலத்தில் நட்பையும் மரியாதையையும் பெற்ற தோழர் அழைத்து இருந்தார்.  சென்ற இடுகையில் கம்யூனிஸ்ட் தலைவர் வரதராஜன் படம் அந்த இடத்தில் தேவையா? என்றார்.  வில்லிவாக்கத்தில் மிக அதிக வித்தியாசத்தில் ஜெயித்து மக்கள் மனதில் இடம் பிடித்த அவரின் போராட்ட குணம் முதல் ஜெரி ஈசானந்தா கவிதையாய் அவரைப்பற்றி எழுதிய உண்மையான புரிதல் வரைக்கும் நான் உணர்ந்து கொண்டது பலப்பல. அவருக்கு மரியாதை செலுத்தக்கூடிய அந்த வாய்ப்பில் அந்த படத்தை அந்த இடத்தில் பொருத்தி இருந்தேன். 

திருப்பூரில் ஒரு தொழிலாளியின் அடிப்படை உரிமைகளுக்காக ஒரு சங்கத்தின் சார்பாக எவரோ ஒருவர் உள்ளே வந்துள்ளார் என்றால் தொடக்க காலத்தில் முதலாளி வர்க்கத்திற்கு சற்று ஜுரம் வந்தது போல் இருக்கும். காரணம் உரிமையையும் உணர்வுகளையும் ஒரே மாதிரி வைத்துப் பார்த்தவர்கள். ஆனால் இவை அத்தனையும் இன்று கடலில் கரைத்த பெருங்காயம் போல மாயமாகிவிட்டது.   எப்போதும் போல இங்கு சட்டசபை தேர்தலில் கம்யூனிஸ்ட் இயக்க தோழர்களின், மக்களின் தாக்கம் மிக அதிகமானது.  ஆனால் எல்லா கட்சிகளிலும் என்ன நடக்குமோ?  நடந்து கொண்டு இருக்கிறதோ அதுவே தான் இங்கும் நடந்து கொண்டுருக்கிறது.  இரண்டு பக்க உதாரணங்கள்.

அவரின் இலக்கியப் பேச்சை கேட்க இரவு நேரத்தில் வெகு நேரத்தில் காத்து இருந்த காலமெல்லாம் உண்டு.  கம்யூனிஸ்ட் தலைவராக இருந்தாலும் வெகுஜன ஆதரவை எல்லா பக்கங்களிலும் இருந்து ஒருங்கே பெற்று இருந்தார்.  நிறைய புத்தகங்களும் எழுதி உள்ளார். அவரின் போராட்ட குணம் பிரசித்தமானது.  வாரிசு ஆஸ்திரேலியா படிக்கச் சென்றது முதல் அவரின் பாதையும் திசை திரும்பியது. கேள்விகள் அத்தனையும் கேலியாகப் போனது.  இப்போதும் கட்சியில் வாழ்ந்து கொண்டுருக்கிறார்.  தோழராக அல்ல.  சராசரி மனிதனாக.

இவரைப் போலவே மற்றொருவரும் உண்டு. முதலாளிகளுடன் சேர்ந்து கொண்டு தொழிலாளிகளின் வேலை நேரத்தை எட்டு மணியில் இருந்து 12 மணிநேரமாக மாற்ற வேண்டும் என்று டெல்லிக்கு படையெடுத்தார்.  கட்சி கட்டுப்பாட்டை மீறியதாக என்று விமர்சனங்கள் வரத் தொடங்கியது. திருப்பூருக்கு அருகில் உள்ள ஊரில் 300 ஏக்கர் நிலம் வாங்கியதில் இருந்து ஊருக்கு வெளியே கட்டப்பட்டுக் கொண்டுருக்கும் ஆடம்பர மாளிகை முதல் அவரின் வாழ்க்கை மற்றவரின் விமர்சனத்திற்கு உள்ளானது. எதற்கும் அசராமல் அடித்த பந்தை திருப்தி அடித்து தன்னுடைய அடிப்படை பதவிகளை தக்க வைத்துக் கொண்ட மற்றொரு தோழர்.

இன்றும் தோழர் நல்லக்கண்ணு போல பல தலைவர்கள் இந்தியா முழுக்க இருந்து கொண்டும் இருக்கிறார்கள்.  உள்ளே இருப்பவர்கள் நல்லவர்கள் போல் நடித்துக் கொண்டும் இருக்கிறார்கள்.  இது அவர்களின் தவறல்ல.  மேலே இருப்பவர்கள் எடுக்கும் முடிவுகளும் நடக்கும் தேர்தலில் சேரும் கூட்டணிகள் மூலம் தான் அத்தனையும் இங்கு தீர்மானிக்கப்படுகிறது.   அரசியலில் கொள்கை என்பதை விட இருப்பு மிக முக்கியம்.  இருந்தால் தான் பேசவே முடியும்.  இருக்க வேண்டுமென்றால் ஏதோ ஒரு கட்சியுடன் உறவு வேண்டும்.  உறவு இருந்தால் தான் உளுத்தம் பருப்பு போன்ற கொள்கைகளை வேக வைக்க முடியும்.  

ஈழம் கடைசி கட்ட போராட்டத்தின் போல வெகுஜன ஊடகத்தில் வந்த அத்தனை நிகழ்வுகளையும் ஊன்றி கவனித்து படித்து இருப்பவர்களுக்கு ஒன்று புரிந்து இருக்கும்.  நாங்கள் ஆதரவு கொடுக்கக்கூடியவர்கள் என்றவர்கள் செய்த திரைமறைவு வேலைகளும், கட்சி கட்டுப்பாட்டை எதிர்க்க முடியாமல் அதே போலவே திரைமறைவில் முடிந்த வரைக்கும் நல்லவிதமாக ஒத்துழைப்பு கொடுத்த தலைவர்களும் உண்டு.  ஆனால் வெகுஜனம் தெரிந்து கொள்ள முடியாதவர்கள்.  கட்சி தலைவர்களும் அவர்களின் தன்னலமற்ற சேவைகளும் இங்கு ஒரு கட்சி முத்திரையாக பார்க்கக்கூடிய கேவல சூழ்நிலை தான் இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் இருக்கிறது. 

சமீபத்தில் நடந்த பெண்ணாகரம் இடைத்தேர்தல் நாம் அறிந்ததே.  ஒவ்வொரு கட்சியும் விளையாடிய கரன்ஸி கபடி ஆட்ட விளையாட்டுக்களை ஊடக வாசிப்பின் மூலம் ஒவ்வொருவரும் பாதியாவது தெரிந்து கொண்டு இருப்பீர்கள்.  ஆனால் இதே இந்த பெண்ணாகர மக்கள் குளிப்பதற்கும், தங்கள் உடைகளை துவைத்துக் கொள்வதற்கும் வாரத்தில் ஒரு நாள் அருகில் உள்ள ஓகேனக்கல் சென்று கொண்டு இருப்பவர்கள்.  காரணம் தண்ணீர் பஞ்சம்.  இடைத்தேர்தல் வந்த காரணத்தால் பெண்ணாகரம் பொன் நகரம் போல் ஆனது.  அடிப்படை வசதிகள் இல்லாத இது போன்ற எத்தனையோ கிராமங்கள் தமிழ்நாட்டில் உள்ளதோ?  தேர்தல் களத்தில் இருந்த எந்த கட்சித் தலைவர்களுக்கும் அது குறித்து அக்கறையில்லை.  காரணம் அன்றைய தினத்தில் உள்ளே வாழ்ந்த அத்தனை மக்களும் எந்த கட்சி எவ்வளவு பணம் தருவார்கள் என்ற நோக்கத்தில் இருந்த காரணத்தால் அவர்களின் கப்பு வாடை கூட கப்சிப் ஆனது. காரணம் கொடுத்து பழக்கிய கலாச்சாரத்தை உருவாக்கியவர்கள் கூட இனி வரும் தேர்தலில் தர முடியாது என்றாலும் மக்கள் விட மாட்டார்கள்.

நீங்கள் எவரை குற்றம் சாட்ட முடியும்? முறையற்ற வழியில் கட்சிகள் செலவழித்த பணத்தில் தொகுதிக்கு தேவையான அத்தனை வசதிகளையும் செய்து கொடுத்து இருக்க முடியும்.  ஆனால் மக்களும் அடிப்படைத் தேவைகள் குறித்து எதையும் கேட்கவில்லை. அன்றைக்கு கிடைக்கும் பணமே அவர்களுக்கு பிரதானமாக இருந்தது. மூவாயிரம் ரூபாய் கிடைத்த குடும்பங்களுக்கு ஒரு மாத அடிப்படை செலவினங்களுக்குப் போதுமானது.  ஓட்டு வாங்கியவர்கள் அடிக்கும் கோடிகள் குறித்து அவர்களுக்கு தெரிய வேண்டிய அவஸ்யமில்லை. அவர்களின் கடந்த கால கஷ்டங்கள் கூட எந்த மாற்றத்தையும் அவர்கள் மனதில் எதையும் உருவாக்கவில்லை.  இது தான் இன்றைய அரசியல்வாதிகளின் பலம். இல்லாவிட்டால் மிக குறுகிய காலத்தில் ஐந்து தொலைக்காட்சி ஒலிபரப்பை கலைஞரால் உருவாக்கியதோடு மிகச் சிறந்த ஊடகத் தலைவராக வியாபாரியாக வெளியே வந்து இருக்க முடியாது. தேர்தலில் நிற்கும் தனிப்பட்ட மனிதர்களின் குணாதிசியங்கள் செல்லுபடியாகாமல் கட்சி சார்பாகவே வேட்பாளர்களை பார்க்கும் மக்களின் மனோபாவத்தின் அடிப்படையே இவ்வாறு உருவாக்கப்பட்ட செய்தி தொடர்பு சாதனங்கள் தான் முக்கிய பங்கு  வகிக்கிறது.  திரும்ப திரும்ப சொல்லப்படும் பொய்கள் தான் மக்களிடம் வந்து சேர்கிறது. 

உனக்கு அவரைப் பிடிக்குமா?  அப்படி என்றால் நீ எனக்கு எதிரி என்பதாக அர்த்தம் கற்பிக்கப்பட்டு ஒவ்வொருவரையும் ஒதுக்கும் சூழ்நிலை. இதுவே இந்த இடுகை வரைக்கும் வந்து நிற்கிறது.  படிப்பறிவு இல்லாத பாமரனின் மூடத்தனம் இறுதியில் வேற வழியே தெரியாமல் பக்தியில் போய் முடிந்து விடுகிறது.  படித்தவர்களின் மூடத்தனம் என்பது மூர்க்கத்தில் கொண்டு போய் சமூக சீரழிவுக்கு மறைமுக காரணமாக இருக்கிறது. நான் விரும்புபவர்களை ஏதோ ஒரு வகையில் என் இடுகையில் அவர்களைப் பற்றி சிறு குறிப்பாக எழுத விரும்புகின்றேன் அத்தனையும் என்னுடைய பார்வை. அது எந்த கட்சி கட்டுப்பாடுகளுக்கும் அப்பாற்பட்டது.  நண்பர் சொல்லியிருந்தபடி அதிகபட்சம் தமிழ் வலையுலகத்தை பத்தாயிரம் பேர்கள் படித்தால் ஆச்சரியம் என்றார்.  ஆனால் வினவு எழுதிய ஒரு தலைப்புக்கு 13,000 பேர்கள் பார்வையிட்டு இருந்தார்கள்.  ஆறு கோடிக்கு மேல் அதிகம் உள்ள மாநிலத்தில் 15000 பேர்கள் என்பதும் அதில் நான்கில் ஒரு பங்கு கூட தமிழ்நாட்டில் இருப்பவர்கள் தொடர்ந்து படிப்பார்களா என்பது ஆச்சரியமே? இங்கு தேநீர் விடுதிகளில் பணிபுரியும் மலையாள மக்கள் கூட மொத்த வேலைகளுக்கு மத்தியிலும் அவர்கள் கையில் அன்றைய அவர்களின் செய்திதாள் இருக்கிறது. தமிழர்களுக்கு எப்போதும் ஒரு போதை தேவையாய் இருக்கிறது. ஊடகமும் வரிந்து கட்டும் திரைச் செய்திகளுக்குள்ளே உழன்று கொண்டுருக்க அதுவே மொத்த படிப்பவர்களின் விருப்பமாகவும் மாற்றப் பட்டு விடுகின்றது. அனுபவிப்பவர்களுக்கு எப்போது அதை முடித்துக்கொண்டு வெளியேற வேண்டும் என்ற எண்ணம் வருவதில்லை. மழுங்கடிக்கப்பட்ட சிந்தனையில் எத்தனை ஆணிகள் குத்தினாலும் ஒன்றும் ஆகிவிடப்போவது இல்லை.  இங்கு எந்த மாறுதல்களும் நடந்து விடாது என்று யோசிப்பதைப் போலவே ஏதாவது நடக்காதா? என்று எண்ணிப்பார்த்தால் தவறில்லை.

எழுதத் தொடங்கிய முதல் இடுகை முதல் இன்று வரையிலும் சர்ச்சையை உருவாக்கும் அளவிற்கு தரமில்லாமல் இகழ்ந்து எதையும் எழுதியது இல்லை. மாற்றுக் கருத்து என்றபோதிலும் அதை நாகரிகமாகத்தான் முன் எடுத்துச் செல்ல விரும்புகிறேன். கற்றுக் கொடுத்தவர்களும் விமர்சனம் மூலம் என்னை வளர்த்தவர்களும் அவ்வாறு தான் என்னை உரமூட்டி உள்ளார்கள்.  நண்பர் சொன்னது போல இது வெறும் திருப்பூர் குறித்தோ அல்லது ஜவுளித்துறை என்பதற்கான சாதக பாதகங்கள் குறித்தோ அல்ல.  ஜவுளித்துறை என்பது ஒரு குறியீடு.  நம் தலைவர்கள் இந்திய தொழில் துறைகளை எவ்வாறு தங்கள் சுயலாபத்துக்காக கெடுத்துக் கொண்டுருக்கிறார்கள் என்பதை பகிர்தல் தான் என்னுடைய நோக்கம்.  வளர நினைப்பவர்களுக்கு ஒரு விதமான மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றால் வந்து கொண்டுருக்கும் பெரும்பாலான ஊடக செய்திகளும் மறைமுகமாக எதிர்மறை எண்ணங்களைத்தான் உருவாக்கிக்கொண்டு இருக்கிறது. எல்லாமே இந்த நாட்டில் சிறப்பாக இருக்கிறது.  எல்லா வளமும் இங்கு உள்ளது என்பதைப் போலவே 120 கோடி உள்ள நாட்டில் 55 கோடி பேர்கள் இன்று வரைக்கும் ஒரு வேளை சோற்றுக்கு திண்டாடிக்கொண்டு தான் தங்கள் வாழ்க்கையை தினந்தோறும் வாழ்ந்து கொண்டுருக்கிறார்கள் என்பதும் உண்மை.  முக்கிய காரணம் சுயநல தலைவர்கள்.

சிந்திப்பது என்பது மனிதனுக்கு மட்டுமே உண்டான தனிப்பட்ட குணாதிசியம்.  ஆனால் விலங்குகள் கூட தங்களை காத்துக்கொள்வதற்காக எத்தனையோ வகையில் நம்மை விட சிறப்பாக நம் முன்னால் வாழ்ந்து காட்டிக்கொண்டு இருக்கிறது. அடிப்படை கட்டமைப்புகள் மெதுமெதுவாக செல்லரித்துக் கொண்டுருக்கும் இந்த ஜனநாயக அமைப்பில் ஏதாவது ஒரு நல்ல தலைவர் மூலம் இந்த நாடு சுபீட்சம் அடையாதா என்று ஏங்கிங்கொண்டுருக்கும் சராசரி மனிதனாகத்தான் இந்த வாழ்க்கை அமைந்துள்ளது.  இந்த நாடு வளரவில்லையா? என்று கேட்பவர்களுக்கு சந்தோஷப்படும் அளவிற்கு தெற்காசியாவில் உள்ள பணக்காரர்களின் எண்ணிக்கை சென்ற போர்ப்ஸ் பத்திரிக்கையின் அடிப்படையில் இரண்டு மடங்கு அதிகமாகி உள்ளது.  முந்தைய வருடத்தை விட கடந்த வருடத்தில் இந்திய பணக்காரர்களின் எண்ணிக்கையும் அவர்களின் சொத்து மதிப்பும் அதிகரித்து உள்ளது.  இதை விட வேறு என்ன பெருமை வேண்டும்? இவர்கள் அத்தனை பேர்களும் வேர்வை சிந்தி உழைத்து இந்த அளவிற்கு உழைத்தவர்கள். 

ஆனால் திருப்பூருக்குள் போர்ப்ஸ் பத்திரிக்கைக்கு தெரியாத பல மனிதர்கள் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.வங்கிகளில் வாங்கிய பணத்தை கட்டாமல்,கருப்பு பண பதுக்கல் இல்லாமல், வரி ஏய்ப்பு செய்யாமல் முழுமையான ஆடம்பர வசதிகள் எதையும் விரும்பாமல் தங்களாலும் நேர்மையுடன் வாழ முடியும் என்று இந்த சமூகத்திற்கு உணர்த்தி காட்டிக் கொண்டு  உழைப்பின் மூலம் வாழ்ந்து கொண்டு இருப்பவர்கள் அவருக்கு நீங்கள் திருவாளர் அப்பாவி பொதுஜனம் என்று கூட பெயர் வைக்கலாம்.  கோடிகளும் இல்லாமல் தெருக்கோடிக்கும் செல்லாமல் வாழந்து கொண்டுருக்கும் நடுத்தரவர்க்கம். உள்ளே இருக்கும் ஏற்றுமதி தொழில் தொடர்பான மற்ற விசயங்களுக்கு செல்வதற்கு முன் தனிப்பட்ட மிகச் சாதாரண மனிதர்கள் தங்கள் வாழ்க்கைக்காக போராடி ஜெயித்த விசயங்களையும், எந்த முறைப்படியான கட்டமைப்பு இல்லாத இந்த ஊரில் அத்தனையையும் தங்கள் வாழ்க்கைக்கு ஏற்றபடி சாதகமாக மாற்றிக் கொண்டவர்களையும் பார்க்கலாம்.  காரணம் நாம் முதலில் திருப்பூரைப்பற்றி புரிந்து கொள்ள வேண்டும். நூல் உள்ளே வருகிறது.  ஆடையாக பெட்டிக்குள் கப்பல் துறைமுகத்துக்கோ விமான நிலையத்திற்கோ செல்கிறது.  பல நூற்றுக் கணக்கான துறைகளும் உள்ளே இயங்கிக்கொண்டு தான் இருக்கிறது. எப்படியாவது வாழ்ந்து தான் ஆக வேண்டும் என்று வாழ ஆசைப்பட்டு தேடி வந்த மக்கள் இங்கு எப்படி வாழ்கிறார்கள்?   நூலுக்கும் ஆடைகளுக்கும் இடையே உள்ள சார்பு தொழில்கள்,  பலரையும் வாழ வைத்துக் கொண்டு தான் இருக்கிறது.

Tuesday, June 15, 2010

சின்ன நூல் கண்டா நம்மை சிறைபடுத்தும்?

உள்ளே நுழைந்த போது முதலில் அறிமுகமானது நூல் கடையே.  திருப்பூரைப் பற்றியோ நூல்களில் இருக்கும் எந்த வகைகளையும் தெரியாமல் பயணம் தொடங்கியது. அப்பொழுதெல்லாம் தெரிந்த அதிகபட்ச நூல்கள் என்பது,  படித்த நூல்களும் அவ்வவ்போது டவுசர் பின்னால் தபால் பெட்டி போல் கிழித்துக்கொண்டு வந்து நிற்கும் போது அக்காக்கள் திட்டிக் கொண்டு தைத்து கொடுக்க வாங்கி வரச் சொன்ன ஒரு ரூபாய வெள்ளை நூல் கண்டு மட்டுமே தெரியும்.  அழைத்து வந்தவருக்கு அசாத்தியமான தைரியம்.  மொத்த பொறுப்பையும் வழங்கி வானளாவ வாழ்த்தி மற்றொருமொரு புதிய வாழ்க்கையை தொடங்கி வைத்தார். புதிதாக பார்க்கத் தொடங்கிய சமூக வாழ்க்கையைப் போலவே இந்த நூல்களும் அதிக ஆச்சரியத்தை தந்தது.  ஒவ்வொன்றாக நூல் உலகம் பற்றிய புரிதல்கள் அன்று தான் தொடங்கியது.

இன்று திருப்பூரில் முதன்மையாக இருக்கும் பல நிறுவனங்களுக்கு சொந்தமாகவே நூற்பாலைகள் உண்டு.  அதிபர்கள் வைத்துருக்கும் வெளிநாட்டு வாகனங்களைப் போலவே அவர்கள் வைத்துருக்கும் நூற்பாலைகளில் உள்ள கதிர்கள் (SPINDLES) என்பது அவர்களின் தொழில் வாழ்க்கையில் உள்ள கௌரவம் சார்ந்த விசயம்.  5000 கதிர்கள் முதல் ஒரு லட்சம் கதிர்கள் வரைக்கும் அவரவர் வாங்கி இருக்கும் கடன்கள் பொறுத்து இருக்கும்.  இந்த நூற்பாலைகள் உற்பத்தி செய்யும் நூல்களை எவரும் நேரிடையாக விற்பனை செய்வது இல்லை.  இடையில் ஒருவர் இருப்பார்.  திண்டுக்கல் மாவட்டத்தில் அப்போது தான் நூற்பாலைகள் வளரத் தொடங்கிய நேரம்.  இது போக உடுமலைப் பேட்டையில் ஜீவிஜி மூலம் நூல் பைகள் வந்துகொண்டுருந்தது. விட்ட குறை தொட்ட குறையாக அங்கங்கங்கே இத்துப் போன மில்கள் என்று தனியாக இருந்தது. இன்றைய இறக்குமதியாளர்கள் எதிர்பார்க்கும் உச்சகட்ட தரம் என்பதெல்லாம் அன்று எவர் மனதிலும் இல்லை. கடனில் தொடங்கி கடனுக்கே வாங்கி செய்த வேலைகளையும் கடனுக்கே என்று செய்து காசு பார்த்த காலமது.

ஒவ்வொரு தொழிலுக்கும் இருக்கும் அங்கீகாரம் பெற்ற விற்பனையாளர்கள் போல் ஒவ்வொரு நூல் வியபாரிகளும் குறிப்பிட்ட நூற்பாலைகளின் பிரதிநிதிகளாக இருப்பார்கள்.  நூற்பாலையில் வாங்கும் பைகளுக்கு முன்னமே பேசியபடி மாதம் ஒரு முறை அல்லது இரு மாதம் ஒரு முறை என்று மொத்த பணத்தையும் வங்கி மூலமாக கட்ட வேண்டியிருக்கும்.  விற்பர்களுக்கு 60/50/40  கிலோ பைக்கு ஊக்கத் தொகையாக பத்து ரூபாய் நூற்பாலைகள் வழங்குவார்கள். இதில் தான் நடத்தும் அலுவலகம் முதல் பணியாளர் சம்பளம் வரைக்கும் எல்லாவற்றையும் சமாளித்துக்கொள்ள வேண்டும். ஒரு மாதத்தில் 3000 பைகள் விற்றால் கிடைக்கும் தொகை முப்பதாயிரம். ஆனால் சூழ்நிலையைப் பொறுத்து தினம் 500 பைகளை விற்பவர்களும் உண்டு.  மாதம் 5 கோடி சம்பாரிப்பவர்களும் உண்டு. உள்ளூர் முதல் வெளியூர் வரைக்கும் தேடி வந்து வாங்குபவர்களிடம் நம்பிக்கையைப் பொறுத்து முன் தேதியிட்ட காசோலையை அல்லது நம்பிக்கை அடிப்படையில் பேச்சின் மூலம் நூல் பைகள் ஏற்றி அனுப்பப்படும்.

வாங்கும் நூலை ஆடைகளுக்காக பயன்படுத்தும் உற்பத்தியாளர்களுக்கும நூற்பாலைகளுக்கும் எந்த தொடர்பும் இருக்காது.  நூலில் தரம் குறித்து எந்த பிரச்சனையாவது உருவானால் நூற்பாலைகளில் இருந்து வந்து பார்ப்பார்கள்.  பயன்படுத்திய பஞ்சில் கழிவுத் தரமான பஞ்சும் கலந்திருந்தால் அறவுத் துணியை (GREY CLOTH) உண்டு இல்லை என்று மாற்றி அவஸ்த்தைக்குள் தள்ளி விடும்.  அறவு எந்திரத்தில் (KNITTING MECHINE) இருந்து துணியாக வெளியே வந்து கொண்டுருக்கும் போதே கூர்ந்து கவனித்துப் பார்த்தால் பல் இளித்து சிரிப்பது தெரிந்து விடும். துணியை வெள்ளை நிறமாக மாற்றும் போது பெரிதான பிரச்சனைகள் வெளியே தெரியாது.  மற்ற வண்ண ஆடைகளுக்கு பயன்படுத்தும் போது அதன் முழுமையான பிரச்சனைகள் நமக்கு புரியக்கூடும். ஓரே நிறமென்பது இரண்டு வித நிறமாகத் தெரிந்து துணியை பயன்படுத்த முடியாத நிலைமைக்கு கொண்டு போய் தள்ளிவிடும். தவறு என்றால் வேறு நூல்கள் மாற்றிக் கொடுத்து விடுவார்கள்.  அத்தோடு முடிந்து விடும்.  ஆனால் இதில் மிகுந்த ஆச்சரியம் என்னவென்றால் எவரும் கையில் காசு வைத்துக்கொண்டு இந்த தொழிலில் இறங்குவதில்லை.  நூற்பாலைகள் ஆந்திராவில் வாங்கும் பஞ்சு முதல் உற்பத்தியாளர்கள் வாங்கும் நூல் வரைக்கும் கடனில் தான்.  முப்பது நாட்கள் முதல் அறுபது நாட்கள் வரைக்கும் சூழ்நிலையைப் பொறுத்து மாறுபடும். ஆனால் சில புண்ணியவான்கள் வாங்கியவுடன் மொத்தத்தையும் மறந்து தொலைத்து 90 நாட்கள் ஆனாலும் கொடுக்க மனம் இருக்காது.  சொந்த ஊர் வரைக்கும் துரத்திக் கொண்டு செல்லும் அவஸ்த்தையெல்லாம் நடக்கும். ஆனால் இன்றைய சூழ்நிலையில் வரைவு காசோலை எடுத்துக் கொடுத்தாலும் நூல்கள் கிடைப்பது இல்லை.  கிடைத்தாலும் அது தரமாக இருப்பது இல்லை.  காரணம் உள்ளூரில் கொடுத்தால் ஒரு லாபம் மட்டும் தான்.  வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்து விட்டால் வங்கி பரிவர்த்தனைகள் முதல் அரசாங்க ஊக்கத் தொகை வரைக்கும் எத்தனையோ வகைகளில் நூற்பாலைகளுக்கு லாபங்கள்.

இந்த இடத்தில் இந்திய ஜனநாயக காவல் தெய்வங்களை சற்று உணர்ந்து கொள்ளுங்கள்.  அரசாங்கம் வெளிநாட்டுக்கு பஞ்சை ஏற்றுமதி செய்யலாம் என்றவுடன் நூற்பாலைகளுக்கு திண்டாட்டம்.  எதிர்ப்பு அடங்க நாளானது.  பிறகு நூல் ஏற்றுமதி செய்யலாம் என்றவுடன் ஆடைத் தொழிலில் உள்ளவர்கள் பாடு திண்டாட்டமானது.  எதிர்ப்பு அதிகமாக அரசாங்கம் செய்த காரியம் என்ன தெரியுமா?  தடையை முற்றிலும் நீக்கவில்லை.  பல்வேறு போராட்டத்திற்குப் பிறகு நூல் ஏற்றுமதி செய்தால் முதலாளிகளுக்கு அரசாங்கம் கொடுக்கும் ஊக்கத்தொகையை சிறிது குறைத்தது மட்டுமே. ஊக்கத் தொகையை முற்றிலும் நீக்கி விடுங்கள் என்று நாயாக மக்கள் திருப்பூரில் இருந்து கத்திக்கொண்டுருக்கிறார்கள்.  பாவம் டெல்லி தூரத்தில் இருப்பதால் இந்த குறைப்பு மட்டும் எட்ட மாட்டேன் என்கிறது.  ஏற்றுமதி செய்தால் அந்நியச் செலவாணி இருப்பு அதிகமாகும் என்பது ஒரு பக்கம் இருப்பது போல உள்நாட்டில் வேலைவாய்ப்புகள் குறைந்தால் இருப்பவர்கள் அத்தனை பேர்களும் வேலையில்லா திண்டாட்டத்தினால் களவாணியாக மாறி விடுவார்களே என்று அந்த மேதைகளுக்கு எப்போது புரியும்?

ஊடகங்கள் நடிகையை அவர்களின் அவயங்களை எண்களால் சுட்டிக்காட்டுவதுப் போலவே நூல்களும் எண்களால் தான் வகைப்படுத்தப் படுகின்றன.  இரண்டு வகையாகப் பிரித்துக் கொள்ளலாம்.

முதல் பகுதி, எண்ணிக்கை 2 ல் தொடங்கி 20 ல் முடிந்து விடுகின்றது. சுருக்கமாக புரிய வேண்டுமென்றால் நூல் தடிமன் பொறுத்து எண்ணிக்கை ஏறி இறங்கிக் கொண்டே இருக்கும். எண்ணிக்கை ஏற ஏற பயன்படுத்தும் துணிகளில் தரம் மிளிரும். நூல் மெல்லிய கம்பி போல இருக்கும். போட்ட பனியன் சும்மா ஜம்முன்னு உடம்போடு ஒட்டியிருக்கிற மாதிரி இருக்கிறது என்றால் அது 40 வகை நூலில் செய்து இருக்கலாம்.  காசுக்கேத்த தோசை. உருவாகும் ஒவ்வொரு ஆடைக்கும் ஒவ்வொரு சூத்திரம்.  அத்தனையும் பயன்படுத்தும் நூலில் தான் தொடக்கம் பெறுகிறது. நீங்கள் போடும் ஜட்டி போர்வை போல கடினமாக இருந்தால் உங்கள் உறுப்புகள் உண்டு இல்லை என்று படுத்தி எடுத்தி விடாதா?  குளிர் காலத்தில் போடக்கூடிய ஆடைகள் உள் உறுப்புகள் தெரியும் அளவிற்கு இருந்தால் எப்படியிருக்கும்?  குளிர் நடுங்க வைத்து விடாதா? 

இருபது எண்ணிக்கைகளுக்குள் இருக்கும் நூல்கள் மொத்தமும் போர்வை, படுக்கை விரிப்புகள் முதல் தொடங்கி பள்ளி ஆடைகள், மற்ற கனமான ஆடை வகைகள் என்று வரிசையாக விதவிதமான உள் அலங்கார துணிகள் வரைக்கும் மாற்றம் பெறுகின்றது.  பெரும்பாலும் உள்நாட்டுச் சந்தையை சார்ந்து இருப்பதும், கைத்தறி, தறி ஓட்டுபவர்கள் என்று தொடங்கி இந்த நூல்களை நம்பி திருப்பூர், அவிநாசி, பல்லடம், அன்னூர், சோமனூர், ஈரோடு, பவானி, பள்ளிபாளையம், திருச்செங்கோடு,சென்னிமலை ,கரூர், குமாரபாளையம் மற்றும் இதைச் சார்ந்து சுற்றியுள்ள அத்தனை பகுதிகளும் என்று ஏறக்குறைய சேலம் வரைக்கும் பல லட்சக்கணக்கான குடும்பங்களின் ஜீவாதார வாழ்க்கையே இதை நம்பித்தான் இயங்கிக் கொண்டுருக்கிறது.  ஆய்த்த ஆடைகள் போல் இந்த உலகத்தில் மெத்தப் படித்தவர்கள் எவரும் இல்லை.  மேலாண்மை கல்வியைப் பற்றிக்கூட எதுவும் தெரியாது.  உழைத்தே ஆக வேண்டிய சூழ்நிலை.  டகடக என்ற சப்தம் அந்தியூர் வரைக்கும் நீங்கள் போனால் உங்கள் காதில் அந்த நடு இரவில் கூட ஒலித்துக் கொண்டே இருக்கும்.  

20 முதல் 60 எண்ணிக்கை வரைக்கும் உள்ள நூல்கள் ஆய்த்த ஆடைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.  20,24,25,30,34,40,45,50,60 வரைக்கும் என்று உங்கள் குடும்பத்தினர் விரும்பும் அத்தனை ரக ஆடைகளின் விருப்பங்களும் இங்கிருந்து தான் தொடங்குகிறது.  சமூகத்தில் உள்ள ஏழை மற்றும் பணக்காரன் என்பது போல் இந்த நூல்களிலும் CARDED மற்றும் COMED  என்று இரண்டு வகையாக பிரிக்கிறார்கள்.  குறைவான தரத்திலுள்ள பஞ்சின் மூலமாகவும், நல்ல தரமான பஞ்சின் மூலமாகவும் இந்த இரண்டு வகைகளும் நமக்கு கிடைக்கிறது.  திருவாளர் நடுத்தர வர்க்கம் போலவே இங்கும் ஒரு அரைக்கிறுக்கன் உண்டு.  அவர் பெயர் தான் SEMI COMED.  ஏறக்குறைய இடுகையில் உலவும் அனானியார்கள் போல. 

ஒரு வருடத்திற்கு முன்பு 20 வகை நூல் ஒரு கிலோ நூறு ரூபாய் இருந்தது.  இப்போது அதன் விலை 180 வரைக்கும் உயர்ந்து உள்ளது.  அப்படி என்றால் தயாரிக்கும் ஆடைகளின் விலையும் உயர்ந்து இருக்க வேண்டுமே? என்று நீங்கள் கேட்டால் விபரம் புரியாதவர் என்று அர்த்தம்.  அடுத்த நாடுகளின் அடிதடி போட்டிகளில் இறக்குமதியாளர்கள் கொடுக்கும் விலை என்பது வீழ்ச்சி என்ற வார்த்தையை விட வேறு எதுவும் இருக்குமா என்று தேடித் தான் கண்டு பிடிக்க வேண்டும்.  மற்ற நாடுகளுக்குச் செல்பவர்கள் அவர்கள் இறுதியாக கொடுக்கும் அல்வாவை வாங்கிக்கொண்டு மறுபடியும் அடுத்த பருவம் தொடங்கும் போது திருப்பூருக்கே வந்து விடுவார்கள்.  வந்து கொண்டும் இருக்கிறார்கள். உள் நாட்டில் உள்ள தலைவர்கள் செய்யும் அடாவடியால் பாதிப்படையும் இந்த தொழிலுக்கு மற்றொரு சவாலும் உண்டு.  புரியாத விளையாட்டான வெளிநாட்டு வர்த்தக பண மதிப்பு ஏற்ற இறக்கத்தினால் தற்கொலைக்கு அருகில் சென்றவர்கள் பல பேர்கள்.

ஏற்கனவே சொன்ன மாதிரி இந்த தொழிலில் எதுவும் வீணாகிப் போய்விடுவதில்லை.  நூற்பாலைகளுக்கு வரும் பஞ்சு நூலாக மாறும் போதும் உருவாகும் கழிவுப் பஞ்சுகள் வேறொரு பயணத்தை தொடங்குகிறது. குறைந்த எண்ணிக்கை உள்ள நூல்களுக்கு (LOW COUNTS) உதவுகின்றது.  இதை தயாரிக்கும் குறு ஆலைகளுக்கு ஓ.இ என்று (OPEN END MILLS) என்று அழைக்கிறார்கள். தறிகள் ஓடும் போது கவனித்துப் பாருங்கள்.  மேலே ஒன்று குறுக்கே ஒன்று என்று இரண்டு நூல்கள் நடத்தும் பரதநாட்டியத்தின் மூலம் ஒரு புதிய ஆடை கலையை அற்புதமாக அரங்கேற்றிக் கொண்டுருக்கும்.  அந்த நூல்களை வார்ப் (WARP) வெப்ட் (WEPT) என்கிறார்கள்.  தறியில் மாற்றி ஓட்டினால் ஓட்டுபவரின் ஜாதகமும் மாறிப்போய்விடும்.

தரமான பஞ்சை குறி வைத்த வெளிநாட்டினருக்கு இதன் மேலும் ஆசை வந்தது.  அப்புறமென்ன? இங்கு நிறைவேற்றி வைக்க ஆள் இருக்க கழிவுப் பஞ்சும் கடல் கடக்கத் தொடங்கியது.  விசைத்தறியாளர்களின் வாழ்க்கையும் ஜலதரங்கம் போட்டு நாட்டியமாடத் தொடங்கியது. இதனை மட்டுமே நம்பி வாழ்ந்து கொண்டுருக்கும் வெள்ளக்கோவில், உடுமலை, பல்லடம், சோமனூர் மக்கள் வாழ்க்கையும் திண்டாடத் தொடங்கியது. ஒரு ஆண்டுக்கு உள்நாட்டு உற்பத்திக்கு தேவைப்படும் நூல்களின் கணக்கு எத்தனை கிலோ என்ற கணக்கை தெரிந்து கொள்ள விரும்பாத மத்திய அரசாங்கம் செய்த வேலை என்ன தெரியுமா?   "ஐயாமாருங்களா.... யார் யாரெல்லாம் வெளிநாட்டுக்கு நூல் ஏற்றுமதி செய்ய விரும்புகிறீர்கள்?  உடனடியாக பதிவு செய்யுங்கள்" என்று அறிக்கை விட மொத்த வண்டவாளமும் தண்டவாளத்தில் ஏறத் தொடங்கியது.

பருத்தி விளைவித்தல், பயன்பாடுகளில் உள்ள வேலைகள், ஏற்றுமதி, இது தொடர்பான வர்த்தகம், பருத்தியை பதப்படுத்துதல் போன்ற இந்த துறைகளில் மட்டும் இந்தியாவில் நேரிடையாக மறைமுகமாக ஐந்து கோடி மக்கள் இருக்கிறார்கள். பருத்தியை வைத்து பயன்படுத்தும் தொழில் என்பதில் உலகளவில் இந்தியாவின் பங்களிப்பு மட்டும் 17 சதவிகிதமாக இருக்கிறது. ஆனால் பருத்தி முதல் நூல் வரைக்கும் உள்ள தொழிலில் இடைத்தரகர்கள் தான் அதிக வளமாய் வாழ்க்கிறார்கள். உழைத்தவன் எப்போதும் கிழக்கு பக்கமாக நின்று காலை சூர்யநமஸ்காரம் செய்ய வேண்டியது தான்.

1,596 கோடி ரூபாய் மதிப்புள்ள 1,10,885 மெட்ரிக் டன் ஏற்றுமதி செய்ய தயாராய் இருக்கிறோம் என்று முண்டியடித்துக்கொண்டு நூற்பாலை அதிபர்கள் வரிசையில் போய் நின்று பதிந்து காத்து இருக்கத் தொடங்கினர். இதற்காக மும்பையை தலையிடமாகக் கொண்டு அவசரம் அவசரமாக பத்து பதிவு மையங்கள் உருவாக்கப்பட்டது. உள்ளுரில் நூலை விற்று மொத்த பணமும் வருமா? இல்லை காந்தி கணக்கா என்று பயந்து காத்துக்கொண்டுருக்கும் நூற்பாலை முதலாளிகள் நாட்டுக்கு சேவை செய்கிறோம் என்று தயாராய் இருப்பார்களா? 

தொடர் மின் வெட்டால் ஏற்கனவே ஜெனரேட்டர் மூலம் உற்பத்தி செய்து இரண்டு மடங்கு செலவு செய்து அக்கப்போர் வாழ்க்கை வாழ்ந்து கொண்டுருப்பவர்களுக்கு மத்திய அரசாங்கம் காட்டியது பச்சை விளக்கென்பது கலங்கரை விளக்காக காட்சி அளித்தது. ஏற்கனவே பஞ்சு ஏற்றுமதியினால் பாதிப்பு ஒரு பக்கம்.  நூல் ஏற்றுமதியால் மறுபக்கம். நடுவில் திண்டாடி திக்குத் தெரியாத திசையில் மாட்டிக் கொண்டவர்கள் இந்த தொழிலை மட்டும் நம்பி வாழ்ந்து கொண்டுருக்கும் குறு சிறு முதலாளிகளும் தொழிலாளிகளும். இந்தியாவில் சிறிய பெரிய என்று ஏறக்குறைய 3,300 நூற்பாலைகள் இருக்கின்றன. தமிழ்நாட்டில் திண்டுக்கல், வேடசந்தூர், உடுமலை,  கோயமுத்தூர் பகுதிகளில் தான் மிக அதிக அளவில் இந்த நூற்பாலைகள் இருக்கின்றன.  கடன் மூலமாகவே நடத்தப்பட்ட பஞ்சு மற்றும் நூல் தொழில்கள் இப்போது காசோலை, வரைவோலைகள் என்பதெல்லாம் தாண்டி இப்போது வங்கி மூலமாக RDGS என்று நேரிடையான பணமாற்றம் வரைக்கும் கொண்டு வந்து விட்டுள்ளது.

கை நிறைய பணம் இருக்க வேண்டும்.  ஆனால் போட்ட முதல் திரும்பி கைக்கு வருமா என்று தெரியாது. காரணம் உற்பத்தி செய்து முடித்துருக்கும் வேலையில் என்ன மாறுதலை அரசாங்கம் உருவாக்கியிருக்கும்? சந்தைப் பொருளாதரத்தின் ஏற்ற இறக்கம் என்பது எவ்வாறு ஏற்றுமதியாளர்களுக்கு பாதிப்பை உருவாக்கியிருக்கும் என்பது எவருக்கும் தெரியாது. இதற்கெல்லாம் மேல் இறக்குமதியாளர்கள் இருக்கும் நாட்டில் எந்த அக்கப்போரும் நடக்காமல் இருக்க வேண்டும்.

தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா போன்ற தென் இந்தியப் பகுதியில் இயங்கும் நூற்பாலைகளுக்கு ஆண்டுக்கு 90 லட்சம் பேல் பருத்தி தேவை.  இருந்தால் தான் முழுமையான வேலை நேரத்தை தொழிலாளர்களுக்கு நூற்பாலைகளால் கொடுக்க முடியும். ஆனால் விளைந்த பருத்தியின் அளவு 25 லட்சம் பேல்கள் மட்டுமே. ஆனால் தமிழ்நாட்டில் விளைந்த பருத்தி தரமாகவும், அதிக அளவும் கிடைத்த காரணத்தால் விவசாயிகளுடன் நூற்பாலைகளும் மகிழ்ச்சியில் இருந்தனர். தேவை அளவுக்கு ஈடுகட்ட முடியாவிட்டாலும் ஏற்றுமதியை நிறுத்தியிருந்தால் எத்தனையோ நல்லது நடந்து இருக்கும்.

அரை நிர்வாண பக்கிரி என்ற பெயரைப் பெற்ற மோகன் தாஸ் கரம் சந்த் காந்தி  யை இங்கிலாந்து மன்னர் வரவேற்று உள்ளே அழைத்துச் செல்லும் அளவிற்கு அவருடைய ஆளுமை அன்று கடல் தாண்டி கொடி கட்டிப் பறந்தது.  அவர் அப்போது உடுத்தியிருந்த ஆடை என்பது மானத்தை மறைக்க மட்டுமே. இன்றைய அரசியல்வாதிகள் போல கொளுத்தும் வெயிலில் கூட கோட் சூட் போட்டுக் கொண்டு கணவான் போல் காட்சியளிக்கவில்லை.  அவரின் தரமே அங்கு ஒரு தராதரத்தை உருவாக்கியது. காந்தி கதர் கிராம சர்வோதய சங்கம் என்று சாலையில் செல்லும் வழியில் நீங்கள் பார்த்து இருக்கலாம்.  கதர் என்பது உங்களுக்கு வேண்டாத ஆடையாக, கௌரவம் குறைச்சலானதாக இருக்கலாம்.  ஏறக்குறைய அரசாங்கமும் இவர்களை அப்படித்தான் நடத்துகிறது.  மற்றவர்களின் மானத்தை மறைக்க உழைக்கும் நெசவாளிகளின் வாழ்க்கையை அரசாங்கம் கடந்து மூன்று ஆண்டுகளாக உண்டு இல்லை என்று படுத்தி எடுத்துக் கொண்டுருக்கிறது.  உற்பத்தி செய்யப்படும் கதர் துணிகளுக்கு 20 சதவிகிதம் தள்ளுபடி அரசாங்கத்தால் வழங்கப்பட்டு அந்த தொகையை மானியமாக வழங்கப்படும். ஆனால் இந்த மானியம் தேவையில்லை என்று மத்திய அரசாங்கம் முடிவு எடுத்ததோடு, 2007 ஆம் ஆண்டு முதல் வழங்க வேண்டிய மானியத் தொகையையும் தராமல் இழுத்தடித்துக்கொண்டு மெது மெதுவாக உழைப்பவர்களின் வாழ்க்கை நிலையை இருட்டுக்குள் தள்ளிக்கொண்டு இருக்கிறது. 

கடந்த மே மாதம் நம்முடைய நிதியமைச்சர் பிராணப் முகர்ஜி தலைமையில் கூட்டப்பட்ட உணவு பாதுகாப்புச் சட்டத்திற்கான கூட்டம் கூட்டப்பட்டது.  அப்போது சுரேஷ் டெண்டுல்கர் கமிட்டி சொன்ன ஒரு வாசகத்தைப் படித்து நாம் நல்ல தலைவர்களை பெற்ற இந்தியர்கள் என்ற விதத்தில் பெருமை கொள்ளலாம்.

2005 ஆம் ஆண்டு இந்திய நாட்டின் உள்ள ஏழைகளின் எண்ணிக்கை 37 கோடி.  இது 2011 ஆண்டு 40.5 கோடியாக உயரும்.

இவர்கள் மக்களுக்ககாக என்று சொல்லிக் கொண்டு புதிதாக எந்த திட்டங்களையும் கொண்டு வரத் தேவையில்லை, உள்ளே இருக்கும் அடிப்படை வளத்தை இவர்களின் சுயலாபத்துக்காக ஏற்றுமதி செய்யாமல் இருந்தாலே போதுமானது. இயல்பாகவே இந்தியா நிஜமான வல்லரசு ஆகி விடும். 

Saturday, June 12, 2010

பஞ்சு முதல் பஞ்சமாபாதகம் வரை

திருப்பூருக்குள் நுழைந்த புதிதில் உடன் பணிபுரிந்து கொண்டுருக்கும் உள்ளூர்வாசிகளுடன் பேசினால் " எங்கப்பா பஞ்சு மில்லில் வேலைபார்த்தவர்" என்பார்கள்.  எனக்கு அப்போது புரியவில்லை. அதென்ன பஞ்சுமில்?  அரசி ஆலைகளையும், எண்ணெய் ஆலைகளையும் பார்த்தவனுக்கு இந்த வார்த்தை புதிதாக இருந்தது.  பின்னால் புரிந்தது.  பல்லடம், ஊத்துக்குளி சாலைகளில் இருந்த நூற்பாலைகளில் பணிபுரிந்து நடந்த வேலை நிறுத்த பிரச்சனைகளினால் பணி இழந்தவர்கள். கடைசியில் அந்த ஆலைகளும் மூடுவிழா நடத்தப்பட்டு கட்டாய வெளியேற்றத்தால் நிர்கதியாய் போனவர்கள்.  கடந்த 15 ஆண்டுகளில் இது போன்ற எத்தனை ஆலைகள் மூடப்பட்டு அதன் முடிவு என்னவென்று தெரியாமல் காலம் கடந்தும் போய்விட்டது. 
ஒன்று தாமதிக்கப்பட்ட நீதியில் உழன்று கொண்டுருக்கும்.  அல்லது ஜனநாயகத்தை பணநாயகம் வென்று இருக்கும். இறுதியில் அந்த ஆலைகள் இருந்த இடம் இன்று வணிக வளாகமாக மாறிப் போயிருக்கும். நூற்பாலைகளை நம்பி வாழ்ந்தவர்கள்? அடுத்த தேர்தலுக்கு ஓட்டுப் போட தினசரி பத்திரிக்கைகளை டீக்கடையில் படித்து விவாதம் செய்து கொண்டுருப்பார்கள்.  இன்று வரையிலும் மக்கள் சிந்தனையிலும் எந்த மாற்றம் இல்லை.

ஒவ்வொருமுறையும் உருவாகும் அரசாங்கமும் இது குறித்து எந்த முன்னேற்பாடுகளிலும் அக்கறை செலுத்துவது இல்லை.ஆலைகள் மூட ஒரு பேரம். மூடிய ஆலைகளைத் திறக்க ஒரு பேரம். கடைசியில் பேரன் பேத்தி எடுத்தாலும் தீர்வு மட்டும் வந்தபாடாய் இருக்காது.   காரணம் நாம் ஜனநாயகத்திற்கு கொடுக்கும் விலை.

எப்போதும் இந்திய குடிமகனின் முதல் தகுதியே இந்த சகிப்புத்தன்மைதான். அதுவே இன்று பயமாக மாறி எல்லாவற்றையும் மாற்றி விட்டது.

தொடக்கத்தில் திருப்பூரில் ஏற்றுமதி நிறுவனங்கள் முன்னங்கால் பாய்ச்சலில் முன்னேறிக் கொண்டுருந்த நேரங்களில் ஒவ்வொரு வருட தீபாவளியின் முந்தைய நாட்களில் சாலைகளில் நடந்து சென்றால் விடாமல் ஒரு குரல் ஒலித்துக்கொண்டேயிருக்கும்.அற்புதமான குரல் வளத்தில் கேட்பவர்களின் நாடி நரம்புகள் முறுக்கேறும் அளவுக்கு ஒலிப்பெருக்கியில் இருந்து வரும் கணீரென்ற குரல் நம் செவியைத் தாக்கும். " உழைக்கும் வர்க்கமே ஒன்றுபடு.  தொழிலாளர்களே போனஸ் உடன்படிக்கையை இன்னமும் அமுல்படுத்தாமல் இழுத்துக் கொண்டுருக்கும் முதலாளி வர்க்கத்திற்கு பாடம் புகட்ட பேரணியில் பங்கெடுப்பீர்"

சிறிய, பெரிய தொழிற் சங்கங்கள் அங்கீகாரம் பெற்றவர்கள் முதல் சந்து முனையில் கீற்றுக் கொட்டகையில் சங்கம் என்று பெயர் வைத்துருப்பவர்கள் வரைக்கும் தீபாவளிக்கு முந்தைய ஒரு மாத காலகட்டத்தில் மிகுந்த சுறுசுறுப்பாய் தங்கள் கடமைகளில் கண்ணும் கருத்துமாய் இருப்பர்.  ஆனால் இப்போது? கடந்த இரண்டு மூன்று வருடங்களில் அது போன்ற குரல்கள் அதிகம் ஒலிப்பதாக தெரியவில்லை. 

தொடக்கத்தில் முதலாளிவர்க்கமும் ரொம்பவே பிகு பண்ணிக்கொண்டு "ஆரம்புச்ட்டானுங்கப்பா..."  என்று புலம்புவார்கள். அந்த ஒரு மாத காலமும் முட்டலும் மோதலுமாய் நகரும். இரண்டு பக்கமும் திகிலூட்டும் மஞ்சுவிரட்டு போலவே இருக்கும்.

தொழிற் சங்கங்களின் கடைசி அஸ்திரமான கால வரையற்ற வேலைநிறுத்தம் வந்து சேர இரண்டு பக்கமும் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகும். கண்ணும் காதுமாய் காரியங்கள் நடக்கும். மீண்டும் வேலைகள் எப்போதும் போலவே தொடங்கும்.

அன்று முதலாளிகளிடம் அள்ளிக் கொடுக்க காசு இருந்தது. மனம் மட்டும் இருட்டாய் இருந்தது. இன்றைய சூழ்நிலையில் சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு கிள்ளிக் கொடுக்கக்கூட முடியாமல் கடைசியில் கந்து வட்டியில் காணாமல் போய்க் கொண்டு இருக்கிறார்கள்.   

பனியன் தொழில் என்பது முதலில் தோன்றிய இடம் கல்கத்தா.  ஆனால் திருப்பூர் வளர்ச்சியில் அறுபது ஆண்டுகளில் கல்கத்தா கொல்கத்தா என்று கொல்லைப்புறமாக காணாமல் போய்விட்டது.  நம்மவர்கள் விடாமல் கெட்டியாக பிடித்துக்கொண்டு இன்று வரைக்கும் முன்னேறிக் கொண்டு இருக்கிறார்கள்.  இந்திய ஜவுளித்துறையில் மூன்று இடங்கள் தான் முக்கியமானது. அகமதாபாத் (குஜராத்), பம்பாய் (மகாராஷ்ட்ரா)  இதற்கு அடுத்தபடி நம்முடைய கோயமுத்தூர்.  ஒரு வரி கேள்வி பதிலில் எளிதாக தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று எழுதி மதிப்பெண்கள் வாங்கியதை இப்போதைக்கு நீங்கள் நினைவு படுத்திக்கொள்ளலாம்.  

இந்தியாவிற்கு உருவான நெருக்கடி தான் இந்த ஜவுளித் துறையை தொடக்கத்தில் உருவாக்கியது. 1931 ஆம் ஆண்டு நம்ம காந்தி தாத்தா வெளிநாட்டு ஆடைகளுக்கு எதிராக சுதேசி இயக்கத்தை பலப்படுத்திய நேரம்.  இதற்கு முன்னால் 30 ஆண்டுகளுக்கு முன்னால் இதன் வளர்ச்சி தொடங்கப் பெற்றாலும் இதே காலகட்டத்தில் தான் அங்கங்கே பஞ்சாலைகள் உருவாகத் தொடங்கியது.  1939 ஆம் ஆண்டு இரண்டாம் உலக யுத்தம் தொடங்க உள்ளுர் நூற்பாலைகள் முதல் மற்ற அத்தனை தொழில் சார்ந்த அமைப்புகளும், பிற சமூகங்களும் இந்த வாய்ப்பை கனகச்சிதமாக பயன்படுத்திக்கொண்டனர். உள்நாடு, வெளிநாடு என்று இரண்டு பக்கத்திலும் சந்தைக்கான நல்ல வாய்ப்பு.  அடித்தது பம்பர் லாட்டரி.

தொடக்கத்தில் நீராவி மூலம் உருவாக்கப்பட்ட, கிடைத்த சக்தியை வைத்துக் கொண்டு பஞ்சாலைகள் செயல்பட்டுக் கொண்டுருந்தன.  நீராவி சக்தியால் ஓடிக்கொண்டுருந்த பஞ்சாலைகள் மின்சாரம் மூலம் மாற சற்று வேகமாக இந்த பயணமும் மாறியது.

1940 ஆம் ஆண்டு பிரிட்டனின் இராணுவ தேவைகளுக்கு அதிகப்படியான ஜவுளிகள் தேவைப் பட அதே சமயத்தில் இங்கு நூற்பாலைகளின் நிர்வாகமென்பது கல்வி கற்றவர்கள் கைக்கு மாறியது. ஒற்றையடி பாதையில் இருந்து ஒழுங்கான சுமரான சாலைக்கு வந்து சேர்ந்தது.

உடனே இது போன்ற வளர்ச்சிக்கெல்லாம் காரணம் அரசாங்கம் தானே என்று அவசர தீர்மானத்தை மனதிற்குள் உருவாக்கிக் கொள்ளாதீர்கள்.   அன்றைய வெள்ளை அரசாங்கம் நேரிடையாக இந்திய வளத்தை கொள்ளை அடித்து, அடித்த கொள்ளையை கப்பல் மூலமாக இங்கிலாந்து கொண்டு சென்றது. இப்போது வரைக்கும் ஆண்டு கொண்டுருக்கும் ஜனநாயக அரசாங்கத்தில் உள்ள அரசியல் வியாதிகள் ஒன்று சேர்ந்து கொள்ளை அடிப்பதுடன் மற்றொரு காரியத்தையும் இன்று தைரியமாக செய்து கொண்டுருக்கிறார்கள். கொள்ளைப்புறமாக வர யோசித்தவர்களையும் முன் பக்கமாக கூவிக் கூவி அழைத்து உள்ளே வரவழைத்துக் கொண்டு இருக்கிறார்கள். அவர்களின் உழைப்புக்குண்டான கூலியும் வங்கிக் கணக்காக ஸ்விஸ்க்கு கடல் தாண்டி போய்க் கொண்டுருக்கிறது.

என்ன பெரிதான வித்யாசம்? 

இதுவே இறுதியில் மொத்த இந்திய தொழிற்துறைகளும் மூழ்க காரணமாக இருக்கிறது. தொடக்கத்தில் உருவான அத்தனை நூற்பாலைகளும் தனி மனிதர்களின் முயற்சிகள்.  அவர்களின் உழைப்பினால் உருவான சாதனைகள்.  பெரிய மனிதர்கள், பணம் வைத்திருந்தவர்கள் ஒன்று சேர பயந்தார்கள்.  பெரிதான எந்திரங்களைக் கண்டு யோசித்தார்கள்.  உள் நாட்டில் நிதி ஆதாரம் திரட்டித்தர ஆள் இல்லை. முட்டி மோதி ஜெயித்தார்கள்.

சங்கம் வைத்து தமிழ் வளர்த்தவர்கள் மதுரைப் பக்கம்.  முதலுக்கு பங்கம் வராமல் பணத்தை பெருக்கியவர்கள் இந்தப் பக்கம்.

அதனால் தான் இன்று வரையிலும் தமிழ்நாட்டின் அத்தனை பாடசாலைகளிலும் படித்து விட்டு இன்று வரைக்கும் கோவை பக்கம் படையெடுத்துக் கொண்டுருக்கிறார்கள்.  காரைக்குடியில் அழகப்பச் செட்டியார் கட்டியுள்ள அழகப்பா கல்விக்கூடங்கள் அத்தனையும் அவர் இந்த பஞ்சு தொழிலில் ஈடுபட்டு திரட்டிய சொத்துக்கள்.

கோடி கொடுத்து குடியிருந்த வீடும் கொடுத்த கொடைவள்ளல் அழகப்பர்
இந்தியாவில் ஒன்பது லட்சம் ஹெக்டர் நிலப்பரப்பில் 41 லட்சம் டன் பருத்தி விளைவிக்கப்படுகிறது. ஆனால் இன்று இந்த மொத்த நிலப்பரப்பையும் இன்று தங்கள் கைகளுக்குள் கொண்டு வந்து இருப்பவர்கள் யார் தெரியுமா?  அமெரிக்காவில் உள்ள மான்சாண்டோ. 

இவவர்கள் கொடுத்த மரபணு மாற்றப்பட்ட விதைகளே இந்தியா முழுக்க ஆட்சி செய்கிறது.  எப்படி பிடி கத்திரிக்காயைத் தான் நீங்கள் உண்ண வேண்டும் என்றார்களோ அதைப்போலவே இந்த ஜவுளித்துறையின் தொடக்க அஸ்திவாரமான பஞ்சில் கையை வைத்த அவர்களின் திறமையை பாராட்டுவதா?  இல்லை அவங்க நம்ம நல்லதுக்குத் தான் தருவாங்க. பயப்படாதீங்கப்பூ......... என்று பாராட்டுப் பத்திரம் வாசிக்கும் மத்திய அமைச்சர்களை பாராட்டுவீர்களா?

விதை முதல் உடை வரைக்கும் அத்தனை இடங்களிலும் மேலை நாட்டு கணவான்களின் விருப்பம் தான் இங்கு மேலோங்கி நிற்கிறது.  அவர்கள் சொல்வதை அட்சரம் பிறழாமல் கடைபிடித்து நிறைவேற்றிக் கொடுக்க நாம் ஓட்டுப்போட்டு தேர்ந்தெடுத்த களவாணிப் பய கூட்டம் அங்கங்கே பாரபட்சம் இல்லாமல் கை கோர்த்து நிற்கிறார்கள். ஒவ்வொரு தாவரத்திலும் மரபணு மாற்றம் செய்து காசு பார்க்கும் மேலைநாட்டினர்கள் இவர்களின் மரபணுகளை ஆராயந்து பார்த்தால் என்ன?  எந்த மூலக்கூறில் இந்த பண வெறி இருக்கிறதோ அதை மட்டுமாவது நீக்கச் சொல்லிப் பார்க்கலாம்.

பங்களாதேஷ் நாட்டில் நூற்பாலைகள் குறைவு.  சொல்லப்போனால் அவர்கள் எல்லாவிதங்களிலும் மற்ற நாடுகளைச் சார்ந்தே வாழவேண்டிய சூழ்நிலை.  அரசியல் ஸ்திரத்தன்மை இல்லாதது ஒருபுறம். இந்த நிமிடம் வரைக்கும் தன்னிறைவு என்ற வார்த்தைக்கு அர்த்தம் என்பதே தெரியாத தலைவர்களைப் பெற்ற நாடு ஆனால் இன்று அவர்கள் இந்திய ஜவுளித்துறைக்கு மிகுந்த சவாலாக இருக்கிறார்கள். அங்குள்ள தொழிற்சாலைகளில் வேலை செய்பவர்களும், நிறுவனங்கள் வைத்திருக்கும் முதலாளிமாருகளும்  போட்டுருக்கும் ஜட்டியே போதுமானது என்று நினைப்பார்களா?  இல்லை தினந்தோறும் கிடைக்கும் மூணு வேளை ரொட்டியே அதிகம் என்று யோசிப்பார்களா? என்பதை யோசித்துப் பார்க்கக்கூட முடியவில்லை.  இறக்குமதியாளர்களுக்கு அவர்கள் கொடுக்கும் விலை என்பது நமது லாபம் இல்லா அடிப்படை விலையை விட கீழானது.

காரணம் பங்களாதேஷ் அரசாங்கம் தாங்கிப் பிடித்து அவர்களை காத்துக்கொண்டுருக்கிறது.  இதற்கு மேல் அந்த நாட்டிற்கு மற்றொரு ஆதாயம்.  "பாவம்ப்பா ஏழை மக்கள்" என்று ஐரோப்பிய அமெரிக்க நாடுகள் கொடுத்துள்ள சலுகைகள். 

பக்கத்தில் உள்ள பாகிஸ்தான் மனித வெடிகுண்டுக்கு ஆள் தேவைப்படாத சமயத்தில் தொழிற்சாலைக்கு போவர்கள் போல.  அதை வைத்துக்கொண்டே இன்று கண்ணாமூச்சி காட்டுகிறார்கள்.  இவர் நமக்கு இரண்டாவது பங்காளி.   

வியட்நாம் பற்றி பெரிதாக சொல்லத் தேவையில்லை.  நிறையும் இல்லாமல் குறையும் இல்லாமல் தானூண்டு தாங்கள் பிழைக்க தொழில் உண்டு இலவசமாக உழைக்க தயாரான மக்களை உருவாக்கிய மேலாதிக்க சக்திகளைத் தான் பாராட்ட வேண்டும். இலங்கையை இதில் கணக்கில் சேர்த்துக் கொள்ளவே வேண்டாம். ஐரோப்பிய யூனியன் கொடுத்துள்ள ஆப்பு இப்போது ஆட்டிப் படைத்துக்கொண்டுருக்கிறது.  இத்துடன் இவர்கள் அத்தனை பேர்களையும் தூக்கி சாப்பிட்டு ஏப்பமிட்டதோடு இன்று இந்தியாவையும் எல்லாவிதங்களிலும் விழுங்க நினைக்கும் மொத்த பூதமான சீனா.

இந்த ஐந்து பேர்களுக்கும் தேவையான பஞ்சும் நூலும் பெரும்பான்மையாக எங்கிருந்து போகிறது?  வேறெங்கே? எல்லாம் காந்தி தேசத்தில் இருந்து தான்.  கிளையில் ஏறி அமர்ந்து கீழே உள்ள தூர் பகுதியில் சுடுதண்ணி ஊற்ற கட்டளை கொடுத்துக் கொண்டுருப்பது யார்?

 எல்லாமே நம்முடைய ஆக்ஸ்போர்டு, ஹாவார்டு பல்கலைக்கழக மேதைகள். நண்பர் எழுதிய வார்த்தைகள் மனதில் வந்து போகின்றது.  "ஏழைகளே இல்லாத இந்தியா நாடு" என்று உருவாக என்ன செய்ய வேண்டும்?.  ஏழைகள் அத்தனை பேர்களை துடைத்து ஒழித்து அழித்து விட வேண்டும்.  அதைத்தான் இப்போது சுருதி சுத்தமாக நம்முடைய தலைவர்கள் செய்து கொண்டுருக்கிறார்கள். 
பஞ்சை நம்பி வாழ்ந்து கொண்டுருப்பவர்களின் மொத்த மக்களின் தலைமுறைகளின் வாழ்க்கையையும் இந்த அரசியல் வியாதிகள் பஞ்சத்தில் கொண்டு போய் விட்டுத் தொலைச்சுருவாங்களோ? 

Wednesday, June 09, 2010

நானும் ஜெயித்துக் காட்டுகிறேன்

கல்லூரியில் படித்துக்கொண்டுருக்கும் போது "இந்தியா டுடே"  ஒரு சிறப்புக் கட்டுரை வெளியிட்டுருந்தார்கள்.  திருப்பூர் ஏற்றுமதி நிறுவன அதிபர்கள் ஜெயித்த கதைகளையையும், அவர்கள் மிக ஆடம்பரமாக கட்டியுள்ள வீட்டின் மேலே நின்று கொண்டு, உள்ளே உருவாக்கி வைத்திருந்த புல்தரையில் படுத்தபடி, கட்டியுள்ள நீச்சல் குளத்தில் என்று பல விதமாக தங்கள் "ஆளுமைத்திறமை" யை சுதந்திரப் போராட்டத் தியாகிகள் போல் பேட்டியாக கொடுத்துருந்தார்கள்.  அப்போது கூட அதை வெறும் செய்திகளாகத் தான் படித்து விட்டு நகர முடிந்ததே தவிர எதிர்காலம் குறித்து எந்த நோக்கமும் மனதில் எழவில்லை.  திருப்பூர் என்பது குறித்து எந்த மயக்கமும் உருவாக வில்லை.  மேலே மேலே படிக்கவேண்டும் என்ற முக்கிய எண்ணமே காரணம்.  சந்தர்ப்பவசத்தால் உள்ளே நுழைந்து ஏற்றுமதி நிறுவனத்தில் கால் வைத்த போது ஒவ்வொன்றாகப் புரியத் தொடங்கியது.

இந்த கொங்கு மண்ணில் தொடக்கத்திலிருந்தே உள்ளே  வாழ்ந்து கொண்டு இருந்தவர்களுக்கு மண்ணின் மைந்தர்கள் என்ற தகுதியைத் தவிர வேறொன்றும் இல்லை. வறப்பட்டிக்காடு என்று சொல்வோமே ஏறக்குறைய அப்படித்தான் இருந்தது. அப்போது வளர்ந்து கொண்டுருந்த நகரம் கோயமுத்தூர்.  இங்கு வளர்ச்சியடைந்து கொண்டு இருந்த நூற்பாலைகளே பிரதானம். முதல் நூற்பாலையின் பரிணாம வளர்ச்சி 1888 முதல் தொடங்குகிறது. இந்த மண்ணில் வாழ்ந்தவர்கள் அத்தனை பேர்களும் விரும்புவதும், வேறு வழியே இல்லாமல் ஏற்றுக்கொள்வதும் இந்த நூற்பாலை சார்ந்த பணிகளே,விட்டகுறை தொட்டகுறையாக வளர்ந்த மற்ற தொழில்கள். தொடக்கத்தில் திருப்பூரில் படித்தவர்கள் மிகக்குறைவு.  ஒவ்வொருவருக்கும் சொந்தமாக நிலங்கள்  மற்றும் பயன்படாத இடங்கள் இருந்தது. கூடவே மனம் முழுக்க ஆசைகளும் இருந்தது.  ஏற்றுமதி என்றால் என்னவென்று தெரியாதவர்களின் வாழ்க்கையும் வசதிகளும் எதிர்காலத்தில் இந்த டாலர் சிட்டி தங்கள் வாழ்க்கையை புரட்டி இறக்குமதியாகும் கார்களில் பயணிக்க வைக்கப் போகிறதென்பதை  எவராவது உணர்ந்து இருப்பார்களா?

திருப்பூரின் புராண கதைகளை நோண்டப் போனால் பனியன் ஜட்டி வியாபாரத் தையும் தலையில் சுமந்து அலைந்து திரிந்தவர்களின் அலைச்சலையும் விரிவாக விவரிக்க வேண்டும். அதன் தொடக்கத்தில் இருந்தது தான் தொடங்க வேண்டும்.  இப்போது அந்த தல வரலாறு அத்தனை முக்கிமில்லை.  கட்டியிருக்கும் கோவணமே அவிழ்ந்து கொண்டுருக்கும் இப்போதைய சூழ்நிலையில் அந்த உழைப்பை நினைத்து ஒரு பிரயோஜனமும் இல்லை. தட்டுத்தடுமாறி ஏற்றுமதி பக்கம் காலை வைத்தார்கள். அதற்கு இவர்கள் காரணமில்லை. வெளி மாநிலங்களில் இருந்து தேடி இங்கு உள்ளே வந்தவர்கள் உருவாக்கிய பாதையது.  ஆனால் உழைப்பை மட்டும் நம்பி வாழ்ந்து கொண்டு இருந்தவர்களை பம்பாயில் இருந்து வந்தவர்கள் ஸ்ட்ரா இல்லாமல் உறிஞ்சு கொழுத்து வாழ்ந்து கொண்டுருந்தார்கள். சுருக்கமாகச் சொல்லப்போனால் அவர்கள் மூலமாக கிடைத்த ஓப்பந்தங்கள். நிறைந்த லாபத்துடன் கூலிக்கு மாரடித்துக்கொண்டுருந்தார்கள்.  தயார் செய்து கொடுத்து விட வேண்டும். வந்தவர்கள் அவர்கள் பெயரில் ஏற்றுமதி செய்து கொண்டு ருந்தார்கள்.  அவர்கள் மறைமுக ஏற்றுமதி நிறுவன வாய்ப்புகளை கொடுத்த போது கிடைத்த லாபமே இவர்களுக்கு மயக்கத்தை தந்தது. அதுவே மாற்று வழியை யோசிக்க வைத்தது. தேடல் தொடங்க நல்ல சூழ்நிலைகளை உருவாக்கியது. பட்லர் இங்கிலீஸ் பயம் தந்தாலும் உள்ளேயிருந்த வேட்கை கடல் தாண்ட வைத்தது.

தரம் குறித்தோ, நவீன உபகரணங்கள் ஏதுமின்றி முழுக்க முழுக்க உடல் உழைப்பு ஒன்றே பிரதானமாக இருந்தது. இன்று எந்த வெளி மாவட்டங்களில் உள்ள எந்த தனி மனிதர்களும், அரசாங்க அதிகாரிகளும் திருப்பூர் என்றாலே உள்ளே பணம் காய்த்து தொங்கும் மரங்கள் இருப்பதாகத் தான் நினைக்கிறார்கள்.  திருப்பூருக்குள் வண்டியில் தள்ளிக்கொண்டு வாழைப்பழம் விற்பர் கூட ஒவ்வொரு குடியிருப்புக்கு தகுந்தப்படி விலையை வைத்து போணி செய்து தலையில் மிளகாய் அரைத்து விட்டுப் போகிறார். வசதியான வீடுகள் என்றால் அந்த இடத்தில் ஒரு விலை.  நடுவாந்திரமாக இருந்தால் அதற்கு தனி பேரம். பாவம் அமெரிக்கா டாலர் வியாபாரம் பற்றி தெரியாதவர் அவருக்குத் தெரிந்த வியாபார யுக்தியை செயல்படுத்துகிறார். பணம் படுத்தும் பாட்டில் அவர் தான் என்ன செய்ய முடியும்?

தொடக்கத்தில் திருப்பூருக்கு வட நாட்டில் இருந்து வருபவர்கள் வந்த வேலை முடிந்தவுடன் திரும்பி சென்று விடும் வழக்கத்திற்கு முக்கிய காரணம் இங்குள்ள சாலை வசதிகள், தண்ணீர் பஞ்சம். 15 ஆண்டுகளுக்கு முன் வாய்ப்பு இருந்தவர்கள் வீட்டில் இருந்து கொண்டு தண்ணீரை விற்று சம்பாரித்தே லட்சங்களை சர்வ சாதரணமாக பார்த்தவர்கள் பல பேர்கள்.  நிறுவனத்திற்கு தேவைப்படும் தண்ணீருக்கென்று ஓடிய வாகனங்கள் உருவாக்கிய பள்ள மேடுகள் இப்போது தான் மெதுவாக மறையத் தொடங்கியுள்ளது.   அதற்கு மேலாக வெளிநாட்டில் இருந்து வரும் இறக்குமதியாளர்கள் பம்பாய் டில்லிக்கு வந்து இறங்கும் போதே அவர்களை கவனமாக திரும்பி பார்சல் செய்து அனுப்பி கொண்டுருந்தவர்களின் ராஜபோக வாழ்க்கையை இங்கிருந்தவர்கள் உடைப்பது அத்தனை சுலபமாக இருக்கவில்லை.ஓடமும் ஒரு நாள் வண்டியில் ஏறித்தானே ஆகவேண்டும். திருப்பூரில் இருப்பவர்களுக்கு தங்களுடைய தொழில் வாழ்க்கை என்பது அப்போது மாய வலையாக இருந்தது. தமிழன் என்பவனுக்குத் தான் தனியாக குணம் உண்டே?

மாயவலையை உடைத்தார்கள், சற்று கற்றுக்கொண்டு மொத்தமாக கிழித்தும் எறிந்தார்கள்.உண்மைகளையும் புரிந்ததோடு கற்றுக் கொடுத்தவர்களே காதில் ஜிமிக்கி குத்தி அழகு பார்த்தார்கள்.  இடையில் இருந்தவர்களின் இடுப்பு முதல் அவர்கள் வேக வைத்துக் கொண்டுருந்த பருப்பு வரைக்கும் காணாமல் போனது.

இரண்டு நாடுகளுக்குள் நடக்கும் போர் என்பதில் மனிதாபிமானம் என்பது தேடிப்பார்த்தாலும் கிடைக்காது என்பது போலவே தொழிலில் கூட அதுவே தான் உண்மையாக இருக்கிறது.  ஒருவர் வசதியாக வளர்ந்த பிறகு எத்தனை கதைகள் கட்டுரைகள் வேண்டு மானாலும் சொல்லலாம் எழுதலாம். வந்த பாதையைப் பார்த்தால் மொத்தமும் அதுதான் ராஜதந்திரம் என்பதற்குள் முடிந்து விடும். வெற்றி பெற்றவர்களிடம் நீங்கள் எடுத்து வைக்கும் எந்த வெட்டிப் பேச்சும், விதாண்டாவாதமும் எடுபடாது.

பணம் என்பது விரும்புவர்களை விட வெறியாக இருப்பவர்களிடம் தான் வந்து சேரும்,  அந்த வெறியுடன் உழைத்தவர்கள் இன்றைய நூறு கோடிகளுக்கு மேல் சொத்துள்ள பிரபல நிறுவனங்கள்.  இன்றைய திருப்பூர் ஏற்றுமதியின் முதல் நிறுவன வருட கணக்கை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமானால் உத்தேசமாக 700 முதல் 800 கோடிக்குள் உங்களுக்கு பிடித்த எண்களை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.  அவர்கள் வருத்தப்படமாட்டார்கள்.  அப்படி என்றால் மொத்த திருப்பூர் ஏற்றுமதியின் அளவு???  அதை தனியாக பார்த்துக் கொள்வோம். இப்போதைய சூழ்நிலையில் இங்கு உழைப்பவர்களின் வயிறு எரிந்து கொண்டுருப்பதைப் போல உங்கள் வயித்தெரிச்சல் அடங்க சற்று அவசகாசம் எடுத்துக் கொள்ளுங்களேன். ? 

இன்றைய திருப்பூர் உத்தேசமாக ஐம்பது கிலோ மீட்டர் சுற்றளவு என்று எடுத்துக்கொண்டாலும் தொடக்கத்தில் இருந்த சாலை வசதிகளுக்கும் இன்றைக்கும் உள்ள நிலைமைக்கும் ஒரே வித்யாசம் மேல் பூச்சு பூசப்பட்ட தார் சாலைகள்.  அதுவும் மழை வந்தால் மணிச் சத்தம் போல் சிரிக்கும்.  கவனமாக செல்லாவிட்டால் விலா எழும்பு நோகும். சிரித்து அல்ல.  அன்றைக்கு சாலை போடும் குத்தகைக்காரர்களுக்கு வருமானம் அளிக்காத இந்த ஊர் இன்று மாநகர தந்தை வரைக்கும் வளர்ந்து மகத்தான வாழ்க்கையை வசதிகளை வழங்கிக் கொண்டுருக்கிறது.

புலம் பெயர்ந்தவர்களின் அறிவு பல நாடுகளை இன்று உச்சத்தில் அமர்த்தி வைத்துள்ளது.  வளர்ந்த நாடுகள் என்று பெயரைப் பெற்று வாழ உதவியவர்களுக்கும் இன்று நல்ல வசதியாக வாழ்க்கையையும் அளித்து அவர்களின் வாரிசுகளின் வாழ்க்கையையும் சிறப்படைய வைத்துள்ளது. இங்கும் பல கிராமங்களில் இருந்தும் வந்தார்கள்.  உயிர் வாழ வாழ்ந்தார்கள்.  இறந்தார்கள்.  ஒருவர் பின் ஒருவாராக உள்ளே வருவதும் உழைக்க முடியாதவர்கள் பின்னோக்கி சென்று விடுவதுமாய் இந்த பனியன் நகரம் பால் வடியும் பாலகன் வரைக்கும் விட்டு வைக்கவில்லை. உழைக்க வந்தவர்களுக்கு எத்தனையோ காரணங்கள்.  ஆனால் உழைப்பை உறிஞ்சியவர்களுக்கு ஒரே காரணம்.  மிகச் சிறந்த ஏற்றுமதி நிறுவனம்.  கௌரவம்.  அந்தஸ்து.  பணம்.  பதவி. புகழ்.  கடைசியாக விட்ட குறை தொட்டகுறையாக அரசியல்.  இதுவும் கைகூடா விட்டால் இறுதி அவதாரமான கல்வித் தந்தை.

இந்தியாவில் உள்ள இபிகோ சட்டம் முதல் நுகர்வோம் சட்டங்கள் வரைக்கும் எத்தனையோ தடிமனான புத்தகங்கள்.   சட்ட மேதை அம்பேத்கார் முதல் அறிவுஜீவு ராம்ஜெத்மலானி வரைக்கும் போட்டி போட்டு புரட்டி எடுத்து நம் மக்களுக்கு இன்று வரையிலும் புரிய வைத்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்.  எதற்காக? மக்களின் வாழ்க்கைக்காக, இந்திய ஜனநாயகத்திற்காக, இருக்கும் இறையாண்மைக்காக. எத்தனையோ சட்டதிட்டங்கள்.  குடித்துவிட்டு வண்டி ஓட்டுபவனை கண்டிக்கும் சட்டம் முதல் குடியிருப்போர் நலம் சார்ந்த வரைக்கும் இன்னமும் இந்தியாவில் உயிரோடு தான் இருக்கிறது. ஆனால்  அத்தனையும் ஏட்டுச்சுரைக்காய்.  இலவச கேஸ் சிலிண்டரில் வேக வைத்தாலும் வேகாது.  மலேசியாவில் மகாதீர் முகம்மது ஆட்சியில் இருக்கும் போதே எதிர்கால மலேசியா சந்திக்கக்கூடிய சவால்கள் என்று யோசித்து உருவாக்கிய இன்றைய புதிய பன்னாட்டு விமானம் முதல் அருகில் உள்ள சிங்கப்பூர் கட்டுமாணங்கள் வரைக்கும் எதுவும் இந்தியாவிற்குள் வந்து விடாது. மற்றவர்கள் பார்த்து நாம் திருந்துவதா?  நாம் தான் வல்லரசாச்சே?

ஒவ்வொரு தொழில் நகரமும் வளர்ச்சியடையும் போதே வந்து இறங்கிக் கொண்டுருக்கும் மக்களை குறி வைத்து சாக்கடை முதல் சுடுகாட்டு நிலம் வரைக்கும் வீடாக தொழிற்சாலைகளாக மாற்றியதைப் போலேவே இங்கும் புற்றீசல் வீட்டு மனைகள் துரித கதியில் உருவாக்கப்பட்டது.  எடுத்துக் கொண்டோரெல்லாம் பிழைத்துக்கொண்டார்.  கோட்டை விட்டவர்கள் குடிசையே போதுமென்று புறநகர் பகுதிகளில் ஒதுங்கிக் கொண்டார்கள். ஒவ்வொரு குறிப்பிட்ட புறநகர் பகுதிகளுக்கும் ஒரு ஜாதகம் உண்டு.  தஞ்சாவூர் பகுதி மக்கள் என்றால் அவர்களுக்குண்டான இடம் என்று தொடங்கி தமிழ்நாட்டின் ஒவ்வொரு பகுதிக்கும் இங்கு வெவ்வேறு பகுதிகளாக உழைப்பவர்கள் களைத்துப் போய் வாழ பழகிக்கொண்டார்கள்.

வாழை மரம் போலவே ஆடைகள் சார்ந்த தொழிலும்.  பஞ்சு முதல் இறுதியில் ஆடைகளாக மாறுவது வரைக்கும் எதுவுமே வீணாகிப் போய் விடுவதில்லை.  ஒன்றில் இருந்து மற்றொன்று.  மிச்சமானதில் இருந்து வேறொன்று.  இதுவொரு தொடர்பயணம்.  தொட்ட இடமெல்லாம் காசு.  குப்பையாக விழுந்தாலும் அது பண மேடு. இது தான் உண்மை. பஞ்சு என்பது விளைவிக்கும் இடத்தில் இருந்து தனது பயணத்தை தொடங்குவது முதல் அதுவே ஆடைகளில் பல வித ரூபங்களில் மாறும் வரைக்கும் உண்டான இறுதி நிலை வரைக்கும் இந்த தொழிலைச் சார்ந்து இந்தியாவில் நேரிடையாக மறைமுகமாக பத்து கோடி மக்கள் இருக்கிறார்கள். 

இவர்கள் அத்தனை பேர்களும் இந்த ஜவுளித்துறையில் தங்களை அடகு வைத்தவர்கள். தங்கள் வாழ்க்கைக்கு இந்த பஞ்சை நம்பித்தான் தங்கள் குஞ்சு கொழுவுகளை நம்பி வளர்த்துக் கொண்டுருக்கிறார்கள்.  இந்தியாவில் உற்பத்தியாகும் பஞ்சில் ஐம்பது சதவிகிதம் குஜராத்தில் தான் விளைவிக்கப்படுகிறது. கோடை விடுமுறைக்கு நீங்கள் செல்ல எந்த சீதோஷ்ண நிலையை விரும்புவீர்களோ அதைப் போலவே பருத்திக்கு பருவநிலை முக்கியம்.

இந்தியாவில் உள்ள தொழில் சார்ந்த துறைகளுக்கு அந்த வாரியம், இந்த அமைப்பு, கவுன்சில், சங்கம், தெருப்புழுதி, மண்ணாங்கட்டி என்று எப்போதும் போல் அரசு சார்ந்த சாராத ஏராளமான நலச்சங்கங்கள் உண்டு. இதற்கெல்லாம் மேல் கட்டுக்கோப்பான் நிறுவன அமைப்புகள் வேறு.  ஏற்றுமதியை மேம்படுத்த, இறக்குமதியை கட்டுப்பட்டுத்த, தொழில் வளர்ச்சிக் கழகம், நிதி உதவி நிறுவனங்கள் என்று தொடங்கி தலைமகன் ரிசர்வ் வங்கி வரைக்கும் ஆயிரமாயிரம் அமைப்புகள் கன்யாகுமரி முதல் டெல்லி வரைக்கும். 

ஆனால் என்ன செய்தார்கள்? கொண்டுருக்கிறார்கள்? செய்யப்போகிறார்கள்? என்று கேட்டால் கேட்டவர்களின் செவி கிழிந்துவிடும்.  காரணம் அவர்கள் மூன்று மாதத்திற்கு ஒரு முறை வெளிநாடு சுற்றுப்பயணம் செய்து கொண்டு இந்திய ஏற்றுமதிக்கான வளர்ச்சிக்கான மேம்பாட்டுக்கு உதவும் தகவல்கள் திரட்டிக்கொண்டுருக்கிறோம் என்று இங்குள்ளவர்களை வெறியேற்றிக் கொண்டுருப்பவர்கள்.  காரணம் இப்போது தான் ஜவுளித்துறை அமைச்சர் ஜப்பான் சென்று புதிதாக "கற்று"க் கொண்டு திரும்பி வந்துள்ளார்.  விரைவில் செயல்படுத்த ஆத்தா மங்கம்மாவை வேண்டிக்கொள்வோம்.

15 வருடங்களாக பல் வேறு நிறுவனங்களில் தொழிலாளியாக இருந்தவர்.  முயன்று இப்போது கேரளாவிற்கு காலர் சட்டைகள் தைத்துக் கொடுத்து வாழ்க்கையை நல்ல விதமாக வாழ்ந்து கொண்டுருந்த நண்பர் இப்போது உருவாக்கிய நிறுவனத்தை தொடர்ந்து நடத்த முடியாமல் தவித்துக்கொண்டு இருக்கிறார்.  காரணம் தமிழ்நாட்டில் நிலவும் தொடர் மின் வெட்டு.  கடன் சுமை தாங்க முடியாதவருக்கும் அந்த தகவல் வந்தது. போய் நின்றார்?

சிறுதொழில் வளர்ச்சிக் கழகத்தில் கடன் உதவிக்காக கேட்டு நின்ற போது அவர்கள் சொன்ன வாசகங்கள் மொத்ததிலும் நகைச்சுவையானது.  "எங்கள் நிதி உதவி என்பது நிறுவன அனுபவம் இல்லாமல், எந்த தொழிலும் இதுவரையிலும் தொடங்காமல், இப்போது தொடங்க முற்படுபவர்களுக்கு மட்டுமே"  வந்தவர் சொன்ன வார்த்தைகள்.... " போகும் போது கத்திரியை எடுத்துச் செல்ல மறந்து விட்டேன்!!!!!"  இவர்களின் சட்டதிட்டங்களின்படி தவித்துக் கொண்டுருப்பவர்களுக்கு தண்ணீர் இல்லை.  இது தான் இந்திய ஜனநாயகம் உருவாக்கியயுள்ள சட்ட திட்டங்கள். எங்கே போய் முட்டிக்கொள்வது?

பாமரன் முதல் படித்தவர்கள் வரைக்கும் தங்களை மட்டுமே நம்பி வாழவும், தங்கள் உழைப்பு மட்டுமே தங்கள் குடும்பத்தை காக்கும் என்ற உண்மையை உணர்ந்தவர்கள் நிச்சயமாக இந்தியர்கள் மட்டுமே.  அதிகார வர்க்கத்திடம் மோதும் சக்தி எந்த தொழில் அதிபர்களுக்கும் இருக்காது.  அவர்களும் என்ன செய்வார்கள்?  கேள்வி கேட்க முடியாது.  காரணம் அவர்கள் வாங்கியுள்ள, எதிர்பார்த்து காத்துக் கொண்டுருக்கும் வங்கிக் கடன்கள் பேசவும் விடாது. 

விவசாயம் சார்ந்துள்ள துறைக்கு இருக்கும் அமைச்சர் திருவாளர் சரத்பவார் எப்படி மட்டைப்பந்து வாரியத்தின் மேல் கண்ணும் கருத்துமாக இருந்து தன் மகளுக்கு பாடுபட்டுக் கொண்டுருக்கிறார்.  டெல்லி முதல் சென்னை வரைக்கும் அரசியல் வியாதிகள் செய்து கொண்டுருக்கும் அத்தனை விசயங்களும் பெரிய நிறுவனங்களுக்குத் தெளிவாகவே தெரியும். சம்மந்தப்பட்ட பல கருப்பு பக்கங்களும் தெரியும். ஆனால் வெளியில் சொல்ல முடியாது.   இன்றைய பிரச்சனைகள் எங்கிருந்து தொடங்கியது?

"உள்நாட்டில் வாழும் விவசாயிகளுக்கு தொழிலாளர்களுக்கு எதிரான கொள்கை முடிவுகளை எடுக்கும் உயர் அதிகார டெல்லி லாபியை பிரதமர் முதலில் துடைத்தொழிக்க வேண்டும். பன்னாட்டு நிறுவனத்திற்காக குறு சிறு நிறுவனங்களில் குரல்வளையை நெறித்துக்கொண்டுருக்கும் இவர்களை இப்படியே வளர விட்டுக் கொண்டுருந்தால் இந்தியாவின் எதிர்கால தொழில் வளர்ச்சியே கேள்விக்குறியாகி விடும்?"

இப்படி ஒரு கண்டன அறிக்கையை தமிழ்நாட்டில் இருந்து வெளி யிட்டுருப்பார்கள் என்று நினைத்தால் நீங்கள் இன்னமும் "கைப்புள்ள" தான். அநியாயத்திற்கு அப்பாவியாய் இருக்காதீங்க.  இதையெல்லாம் விட இங்குள்ளவர்களுக்கு முக்கிய ஜோலிகள் பல இருக்கிறது.

மொழி வளர்க்க வேண்டும். உள்ளே வந்துள்ள நடிகையின் கன்னிப் பேச்சை எண்ணிப் பார்க்க வேண்டும். அடுத்த பாராட்டு விழாவுக்கான ஆய்த்த ஏற்பாடுகளை கவனிக்க வேண்டும்.  இதற்கிடையே எங்கு போய் ஆய்த்த ஆடைகளை பார்க்க முடியும்? ஆனால் இது போன்ற பல கடினமான தனது அழுத்தமான வார்த்தைகளை அறிக்கையாக விடுத்தவர் குஜராத் முதல் அமைச்சர் நரேந்திர மோடி.. காரணம் என்ன?
பஞ்சில் இருந்து தொடங்கும் இந்த ஜவுளி வாழ்க்கை பயனாளிகளின் வாழ்க்கை இன்று கஞ்சித் தொட்டி அவலம் முதல் தற்கொலை என்ற நிரந்தர நிம்மதி வரைக்கும் கொண்டு வந்து சேர்த்துள்ளது. பெருவாரியான மக்கள் இன்னமும் இதை நம்பி வாழ்ந்து கொண்டு தானே இருக்கிறார்கள்?  எப்போதும் குற்றத்தை கண்டு பிடிக்கும் கண்களுக்கு எல்லாமே மஞ்சள் காமாலையாகத் தானே தெரியும் என்கிறீர்களா?

ஊரில் இருக்கும் இடத்தை விற்று விட்டு, பொண்டாட்டி புள்ளைகளை தவிக்க விட்டு பத்து வருசம் இதே திருப்பூரில் உழைத்து பல விசயங்களை நாம் கற்றுக்கொண்டுள்ளோம்.  நம்மால் இனி ஜெயிக்க முடியும் என்று தன்னுடைய திறமையை உழைப்பை மட்டும் நம்பும் ஒரு அப்பாவி திருவாளர் நடுத்தர வர்க்கம் எப்படியோ கையூண்டி ஒரு சிறிய நிறுவனத்தை தொடங்கி விடுகிறார். உழைக்க உழைக்க நெளிவு சுழிவுகளை ஓரளவுக்கு கற்றுக் கொண்டு ஓடவும் தொடங்கிறார். ஆனால் இவர் இந்த தொழிலை விட்டு ஓட வைக்க எத்தனை பேர்களை இந்த இந்திய ஜனநாயகம் உருவாக்கிக்கொண்டுருக்கிறது என்பதை அவர் அறிகிறாரோ இல்லையோ நீங்கள் அறிவீர்களா? ?

இந்தியாவில் வாழும் குடிமகன் எங்கும் வேண்டுமானலும் போகலாம் வாழலாம் என்பதை சமீப மராத்தியர்கள் அவர்கள் பாணியில் " செய்து " காட்டினார்களே அது போலத் தான் பல இந்திய அமைச்சக அதிகாரிகள் மறைமுகமாக செய்து கொண்டுருக்கிறார்கள்.  யாருக்காக?

உள்நாட்டில் உற்பத்தியாகும் பஞ்சை ஏற்றுமதி செய்யக்கூடாது என்று குஜராத் விவசாயிகளுக்கு இந்திய நிதி அமைச்சகம் கட்டுப்பாடு விதித்தது.  ஏற்றுமதி செய்யும் ஒரு டன் கச்சா பஞ்சுக்கு ரூபாய் 2500 போட கடந்த ஏப்ரல் ஒரு மாதத்தில் மட்டும் 2,000 கோடி ரூபாய் நஷ்டம்.  ஆகா இது நல்லது தானே?  உள்நாட்டு தொழிலுக்கு செய்யும் மகத்தான் சேவை என்கிறீர்களா? அதற்கு முன்பு ஒரு இந்த ஜனநாயகவாதிகளின் நாதாரித்தனத்தையும் புரிந்து கொள்ளுங்கள்.

இந்த வருடத்தின் தொடக்கத்தில் மற்ற நாடுகளை விட இந்தியாவில் பருத்தி விளைச்சல் அமோகமாக இருந்தது.  இந்தியாவில் பார்க்க வேண்டியவர்களை வெளிநாட்டில் இருந்து வந்த பல கணவானகள் வந்து பார்த்தார்கள். நூற்பாலைகளின் எதிர்ப்புகளையும் மீறி பஞ்சு ஏற்றுமதிக்கான கதவை அகல திறந்து வைத்தார்கள். இது போக பருத்தி ஏற்றுமதிக்கு தனிப்பட்ட ஊக்கம் கொடுத்து உற்சாகப் படுத்தினார்கள். சிகரம் வைத்தாற் போல ஆன்லைன் வர்த்தகமும் யுக பேரங்களும் சந்தி சிரித்தது.  பல லட்ச குடும்பங்களின் வாழ்க்கை நடுத்தெருவுக்கு வந்தது.  ஆன் லைன் வர்த்தகத்திற்கு எதிர்ப்பு உருவாக உடனடியாக மத்திய அரசாங்கத்திடம் இருந்து வந்தது ஆறுதல் அல்ல.  எச்சரிக்கை மட்டுமே.  என்ன பலன்?  

இந்திய பருத்தியை எதிர்பார்த்து காத்துக்கொண்டுருந்த பன்னாட்டு நிறுவனங்களும், இடைத்தரகர்களும் உண்டு கொழுத்து உச்சத்தில் இருந்தார்கள்.  16 ஆயிரத்து 500 ரூபாயாக இருந்த பஞ்சின் விலை படிப்படியாக உயர்ந்து 30 ஆயிரம் ரூபாய்க்கு வந்தது.  இன்றைய பஞ்சுத் தட்டுப்பாடு வரைக்கும் கொண்டு வந்து நிறுத்தியுள்ளது.  ஒழுங்காக உற்பத்தி செய்து கொண்டுருந்த நூற்பாலைகள் மூட பல லட்சம் தொழிலாளர்கள் தெருவுக்கு வந்தனர்.  முதலாளிகள் வேறு என்ன செய்ய முடியும்.  தமிழ்நாட்டில் உள்ள மின்வெட்டு மீறி எப்படி தொழிலை நடத்த முடியும்?  எத்தனை நாளைக்குத் தான் நட்டத்துக்கு நிறுவனத்தை நடத்த முடியும்? அவர்களும் முடிந்த வரைக்கும் காசு பார்க்க கிடைத்த வரை லாபம் என்று பஞ்சாக நூலாக ஏற்றுமதி செய்யத் தொடங்கினர்.

தொடக்கத்தில் பஞ்சு ஏற்றுமதி செய்ய ஊக்குவித்தவர்களுக்கு ஒரு காசு.  இப்போது நூலை ஏற்றுமதி செய்ய தூண்டுபவர்களும் மற்றொரு காசு.  வாழும் மக்களுக்கு சன் டிவி தரும் தங்கக் காசுக்காக காத்து இருக்க வேண்டியது தான்.  தங்கம் விலை போல நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் நூல் விலையும் கிடுகிடுவென்று ஏறத் தொடங்கியது.  கீற்றுக்கொட்டகையில் வாழ்ந்து கொண்டுருக்கும் அப்பாவி கைத்தறி தொழிலாளர்கள் முதல் ஆய்த்த ஆடை தொழிலாளர்கள் வரைக்கும் வெட்ட வெளிக்கு ஆடையின்றி அம்மணமாக வரத் தொடங்கினார்கள்.

ஒரு பொருளுக்கு ஏற்றுமதிக்கு தடை விதிக்கும் போது, அல்லது இறக்குமதி செய்ய அவஸ்யம் என்று கருதும் போது உள்நாட்டில் உள்ள அத்தனை மாநிலங்களின் குறிப்பிட்ட தொழில் சார்ந்த சாதக பாதகங்களையும் அலசி காயப் போட்டு முடிவு எடுப்பது யார்? கடந்த ஆறு மாதமாக திருப்பூரில் சாயப்பட்டறை முதல் மூடுவிழா நடத்திக்கொண்டுருக்க பெரிய சிறிய ஏற்றுமதி நிறுவனங்கள் வரைக்கும் "உங்களுக்கு என்னப்பா பிரச்சனை"? என்று தமிழ்நாட்டில் வந்து கேட்ட அமைச்சர் எவரெவர்?  

தமிழ்நாட்டில் ஜால்ரா சத்தத்தில் எதுவுமே வெளிவருவதில்லை.  டெல்லியில் ஜவுளி, வர்த்தகம்,விவசாயம்,நிதித்துறை அமைச்சகங்களுக்கிடையே நடக்கும் போட்டா போட்டியில் தாலியை அடகு வைத்து "நானும் ஜெயித்துக் காட்டுகிறேன்" என்று சிறிய அளவில் நிறுவனம் தொடங்கிய அந்த அப்பாவி திருவாளர் நடுத்தரவர்க்கம் இருப்பது ஆற்காட்டார் தந்த கும்மிருட்டில்.......

ஆனால் ஒரு விசயத்தில் மட்டும் சென்னை முதல் டெல்லி வரைக்கும் மிகுந்த ஒற்றுமையாய் இருப்பது தினசரி பத்திரிக்கைகளை படிப்பவர் என்றால் நீங்கள் புரிந்து கொள்ளலாம். ஒவ்வொரு நாளும் வந்து இறங்கிக் கொண்டுருக்கும் பன்னாட்டு நிறுவன புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு, கைகுலுக்கி, புகைப்படத்திற்கு போஸ் கொடுக்கிறார்களே அவர்களுக்கு இந்திய சுதந்திரம் பெற்றால் நாடு சிறப்பாக இருக்கும் என்று பாடுபட்ட சுபாஷ் சந்திர போஸின் "நெஞ்சுக்குள் வைத்திருந்த நெருப்பு" புரியவா போகின்றது....?

அவர்களுக்கு புரியவைக்க முயற்சித்தால்  வருங்காலம் பிழைத்துக்கொள்ளும். மோடியை நம்புவதா?  அல்லது இந்த மஸ்தான்கள் காட்டிக் கொண்டுருக்கும் குரளி வித்தையை வேடிக்கை மட்டும் பார்த்துக்கொண்டுருப்பதா? எப்படியோ இவர்கள் ஆடி விட்டு ஓயட்டும்.  ஜட்டி போடாமல் இப்போதே பழகிக் கொள்ளுங்கள். அது பின்னால் உங்களுக்கு உதவுக்கூடும்.