இதன் முந்தைய தொடர்.
தொடரப்போகும் அடுத்த பகுதியுடன் இந்த தொடர் நிறைவடைவதால் இந்த பதிவு சற்றே நீள்பதிவு.
எங்களை நோக்கி வந்துகொண்டுருந்த ரயில் நிலைய காவல் அதிகாரியைப் போலவே நாங்கள் இருந்த சிமெண்ட் பெஞ்சை நோக்கி மற்றொரு நபரும் எங்களருகே வந்து நின்றார். எனக்கு படபடப்பாய் இருந்தது. நடைமேடையில் கண்ணுகெட்டிய வரைக்கும் யாருமில்லை. எறிந்து கொண்டுருந்த குழல் விளக்கு வெளிச்சத்தில் நாங்கள் இருவரும் பளிச்சென்று தெரிந்தோம். எங்களருகே சுமை தூக்கும் தொழிலாளர்கள் சிலர் நின்று கொண்டுருந்தனர். நாங்கள் அங்கிருந்த நிலையை எவர் பார்த்தாலும் எளிதில் புரிந்து கொள்ள முடியும். காரணம் அடுத்த ரயில் வருவதற்கு நீண்ட நேரம் இருந்தது. நான் சூழ்நிலையை புரிந்து கொண்டது போலவே அம்மாவும் புரிந்து கொண்டு தயாராகயிருந்தார். இந்த இரவு நேரத்தில் ரயில் நிலையத்தை விட்டு எங்களுக்கு வேறெங்கும் செல்லவும் வாய்ப்பில்லை.
எங்களருகே வந்து நின்றவருக்கு நாறபது வயது இருக்கலாம். கதர் வேஷ்டி கதர் சட்டை அணிந்து அந்த நடு இரவிலும் அப்போது தான் குளித்து வந்தவர் போலிருந்தார். அவரின் பணக்காரத் தோற்றத்தை என்னால் எளிதில் புரிந்து கொள்ள முடிந்தது. எங்களருகே வேறு எவரும் இல்லாததால் அம்மாவிடம் வந்து நின்றார். வரவேண்டிய ரயிலைப்பற்றி கேட்டுக் கொண்டுருந்தார். அம்மாவுக்கு அது குறித்து தெரியாது என்பதைக் காட்டிக் கொள்ளாமல் அறிமுகமானவர் போலவே அவருடன் சற்று தள்ளி நின்று உரையாடிக் கொண்டுருந்தார்.
அம்மாவை நோக்கி வந்த காவல்துறையினர் என்னருகே வந்து நின்றனர். சற்று நேரம் என்னைப் பார்த்து விட்டு "எங்கம்மா போறீங்க" என்றார் அதோ அம்மா என்று பொதுப்படையாக நான் கையை காட்ட சரிசரியென்றபடி நகர்ந்தார். . என மூச்சே அப்போதுதான் மீண்டும் சீரானது.. இயல்புக்கு மாறாக அம்மா அந்த கதர்சட்டையுடன் நீண்ட நேரம் பேசிக் கொண்டுருப்பதை பசி மயக்கத்திலும் தூக்க கலக்கத்திலும் கவனிக்கும் ஆர்வமில்லாமல் அருகே இருந்த சிமெண்ட் பெஞ்சில் சோர்வாக சாய்ந்திருந்தேன். கடைசியில் அவர் ஒரு அட்டையை அம்மாவிடம் கொடுத்து விட்டு நகர்ந்தார். அம்மா சிரித்தபடியே என்னை நோக்கி வந்து கொண்டுருந்தார்.
பேசி விட்டு சென்றவர் எங்களின் மொத்த வாழ்க்கையையும் திசை திருப்பப் போகின்றார் என்பதை அறியாமல் என்னருகே வந்தமர்ந்த அம்மாவிடம் "தூக்கம் வருதும்மா" என்றேன்.
விடியும்வரையிலும் அம்மா என்னை படுக்கவைத்துக் கொண்டு முழித்துக் கொண்டுருந்தார். அருகில் இருந்த கழிப்பறையில் சுத்தம் செய்து கொண்டு கதர்ச்சட்டை கொடுத்துச் சென்ற நிறுவனத்திற்கு காலை பத்துமணிக்கு சென்ற போது அந்த நிறுவனத்தின் பிரமாண்டம் பயமுறுத்துவதாக இருந்தது. ஏறக்குறைய ஆயிரம் பேர்களாவது பணிபுரிந்து கொண்டுருக்கக்கூடும். வரவேற்பறையில் அம்மா கொடுத்த அட்டையைப் பார்த்த போது ஒருவர் உடனடியாக அந்த கதர்ச்சட்டை அறைக்கே அழைத்துச் சென்றார். ஏற்கனவே சொல்லிவைத்திருப்பார் போல.. என்னை வரவேற்பரையில் உட்கார வைத்து விட்டு அம்மா மட்டும் உள்ளே சென்றார்.
எங்களது வாழ்வில் அதிர்ஷ்ட கதவுகள் திறந்தது. அதே சமயத்தில் துயரத்தின் சூறைக்காற்றும் ஜன்னல் வழியே புகத் தொடங்கியது.
வெளியே வந்த அம்மா சிரித்துக் கொண்டே வந்தாலும் "அனுபவம் இல்லாமல் வேலையில் சேர்க்க முடியாது" என்ற செய்தியோடு வந்த போது எனனுடைய பயம் அதிகமானது. அம்மாவின் தன்னம்பிக்கையை நான் அறிந்திருந்த போதிலும் அப்போதுள்ள சூழ்நிலையில் எங்கள் கையில் அதிகப்படியான பணமேதுமில்லை. ஆனால் அம்மாவின் அசாத்தியமான துணிச்சலில் அன்றே ஒரு தங்கும் விடுதி அமைந்தது...வேலைக்கு சென்று கொண்டுருக்கும் பெண்களுக்கான விடுதி.
அம்மா சில தொலைபேசி எண்களை வைத்துக்கொண்டு தொடர்ச்சியாக யாருடனோ பேசிக்கொண்டுருந்தார். எனக்கு எதிலும் ஆர்வமில்லாமல் அறைக்கு தூங்கப் போய்விட்டேன். இரவு நேரத்தில் அறைக்கு வந்த அம்மா கையில் சாப்பாடும் மற்ற அத்யாவ்ஸ்ய பொருட்களும் இருந்தது.
மூன்று மாதங்கள் கடந்த போது அம்மா எனக்குச் சொன்ன அறிவுரைகள் அத்தனையும் அவருக்கும் சொல்லும் அளவிற்கு மாறிப் போகத் தொடங்கியது. இடையே சற்று வசதியான வீட்டுக்கு குடி புகுந்தோம். அம்மா தொடக்கம் முதலே என்னை வேலைக்கு அழைத்துச் செல்ல விரும்பவில்லை என்பதை புரிந்து கொண்டேன்.
சில சமயம் நடுஜாமத்தில் வந்து சேருவார். அரைத்தூக்கத்தில் இருக்கும் எனக்கு அம்மாவின் செயல்பாடுகள் ஒவ்வொன்றும் புதிதாக இருந்தது. அதை வேறு விதமாக எனக்கு புரியவைத்தார்
"இரண்டு வருடங்கள் உனக்கான வாய்ப்புகளை உருவாக்கித் தருகின்றேன்.. அதற்குள் விட்டுப் போன படிப்பை முடித்து விடு.. மற்ற திறமைகளையையும் கற்றுக் கொள், அம்மாவைப்பற்றி கவலைப்படாதே. நீ என்னுடன் நிறைய பேச வேண்டும் என்று நினைப்பது எனக்குப் புரிகிறது. அதற்கான சமயங்கள் வரும் போது பேசுவோம். இப்போது உன் வாழ்க்கை எனக்கு ரொம்ப முக்கியம். அதை விட நீ உன் காலில் தனித்து நிற்பது அதை விட முக்கியம் " என்றார். .
என்னால் அம்மாவை எதிர்க்கமுடியவில்லை.
வீட்டுக்கு அருகில் இருந்தவர்களோடும் பழக முடியவில்லை. பெரும்பாலும் குடும்பத்துடன் காலையில் அவசரமாக வேலைக்குச் சென்று விட்டு இரவு வீட்டுக்கு திரும்புபவர்களாக இருந்தார். எவர் தலையாவது தென்பட்டால் சிரித்துக் கொண்டே அறிமுகம் செய்து கொள்ள முயற்சித்தாலும் அவர்கள் பேச விரும்பும் திரைப்படம் நெடுநதொடர்களைப் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாத காரணத்தால் ஒதுங்க வேண்டியதாக இருந்தது.
வேறுவழியில்லை என்பதாக மறுபடியும் புத்தகமும் கையமுமாக மாறத் தொடங்கினேன். இப்போது அம்மா கூட என்னுடன் அதிகம் பேசுவதில்லை. அம்மாவின் வேறுபட்ட நடவடிக்கைகளையைம் கேள்விகளாக கேட்க மனமில்லாமல் என்னை மாற்றிக் கொண்டேன்.
ஆனால் எனக்குள் இருந்த உறுத்தல்கள் வெறும் கேள்விகளாகவே இருந்தது.
அம்மா சொன்னபடியே தவறவிட்ட படிப்பை அஞ்சல் வழியே படித்தபடியே திருப்பூருக்குள் இருந்த "கார்மெண்ட் டெக்னாலஜியை" சான்றிதழ் படிப்பாக படித்து முடித்தபோது முழுமையாக இரண்டு வருடங்கள் கடந்துபோயிருந்தது. இடையே கணினி சார்ந்த தொழில்நுட்பங்கள், ஆங்கிலப்பயிற்சி என்று அம்மா சொன்னபடியே என்னை வளர்த்துக் கொண்டுருந்தேன்.
ஒரு நாள் அந்த பூகம்பம் எங்கள் வீட்டைத்தாக்கியது.
எப்போதும் அம்மா வேலைக்குச் சென்றபிறகு தான் நான் வெளியே செல்வதுண்டு. நான் பயின்றுகொண்டுருந்த வகுப்புகள் முடித்து வீட்டுக்கு வர மாலை நேரமாகிவிடும். அன்று காலை வகுப்புகளை முடித்துவிட்டு வயிற்று வலியின் காரணமாக மதியமே வீட்டுக்குள் திரும்பிய போது வீட்டுகள் அம்மாவுடன் அந்த கதர்ச்சட்டை நபரும் இருந்ததை பார்த்த போது நான் தேடிக்கொண்டுருந்த பல கேள்விகளுக்கும் அம்மா எனக்காக செலவழித்துக்கொண்டு பணத்திற்கான விடைகளுக்கும் அர்த்தம் புரிந்தது.
இரண்டு நாட்கள் அம்மாவுடன் நான் பேசவில்லை.
எதுவும் கண்டு கொண்டதாக காட்டிக் கொள்ளவில்லை. அன்று ஞாயிற்றுக் கிழமை. அம்மா இரவு நேரங்கழித்து வந்த காரணத்தால் உள்ளே தூங்கிக் கொண்டுருந்தார். மனம் வெறுமையாயிருக்க அருகேயிருந்த பூங்காவிற்கு செல்ல விரும்பி எங்கள் வீட்டுக்கு அருகே இருந்த சந்தின் வழியே நடந்து கொண்டுருந்தேன்.
தூரத்தில் ஒரு வெளிநாட்டுப் பெண்மணி தான் வந்த டாக்ஸிகாரருடன் சண்டை போட்டுக் கொண்டுருந்தார். பலரும் சுற்றிலும் நின்று வேடிக்கைப் பார்த்துக் கொண்டுருந்தனர். நான் அவர்களை கடந்து செல்ல முற்பட்ட போது அங்கு நடந்து கொண்டுருந்த உரையாடல்களை ஓரளவுக்கு என்னால் புரிந்து கொள்ளமுடிந்தது. குறிப்பிட்ட இடத்திற்கு அழைத்துச் செல்லாமல் அந்த பெண்மணியை அலைக்கழித்துக் கொண்டுருந்த ஓட்டுநருடன் சண்டை போட்டுக் கொண்டுருந்தார்..
ஆனால் ஆண்டவன் எனக்கென்றே அனுப்பி வைத்த ஜீவன் என்பதை அறியாமல் ஏதோவொரு துணிச்சலில் அந்த பெண்மணி அருகில் சென்று "நான் ஏதும் உங்களுக்கு உதவுமுடியுமா என்று பார்க்கின்றேன்" என்று கேட்டேன். சண்டை போட்டுக் கொண்டுருந்தவர் என்னுடைய ஆங்கிலப் பேச்சைக் கேட்டு மொத்தமாக இந்தியாவைப்பற்றி ஒரு பாட்டு பாடித்தீர்த்தார்.
அவர் ஸ்வீடனிலிருந்து இந்தியா வந்திருந்தார். அவர் ஸ்வீடீஸ் கலந்து பேசிய ஆங்கிலத்தை புரிந்து கொள்ள தனிப்பயிற்சி தேவைப்பட்டது. ஓட்டுநரை அனுப்பிவிட்டு அவருக்கு வேறொரு வாகனத்தை ஏற்பாடு செய்து கொடுத்து நகர்ந்த போது என் கையை பிடித்துக் கொண்டார்.
"இன்று ஒரு நாள் மட்டும் என்னுடன் இருக்க முடியுமா?" என்றார்.
காரணம் அந்த அளவிற்கு நொந்து போயிருந்தார் என்பதோடு மொழிப் பிரச்சனை வேறு அவரை பயமுறுத்திக் கொண்டுருந்தது. அவர் பேசும் ஸ்வீடீஸ் கலந்த ஆங்கிலம் கேட்பவர்களுக்கு புது தேவபாஷை போலவேயிருந்தது. காரில் சென்று கொண்டுருந்த போது என்னைப் பற்றி விசாரித்தார். குறிப்பாக நான் வாங்கியுள்ள "கார்மெண்ட் டெக்னாலஜி" படிப்பை மனதில் குறித்துக் கொண்டு அவர் செல்ல வேண்டிய நிறுவனங்களுக்கு என்னையும் சேர்த்து அழைத்துக் கொண்டு சென்றார். இரவில் அவர் தங்கியிருந்த நட்சத்திர விடுதியில் என்னை தங்க முடியுமா? என்று கேட்ட போது முதல் முறையாக அம்மாவை விட்டு தங்க வேண்டுமென்று எனக்குத் தோன்றியது.
அவருக்கு ஏதோவொரு வகையில் என்னை பிடித்து விட்டது. என்ன காரணம் என்று தெரியவில்லை. அதிர்ஷ்டமா? அல்லது எனக்கு வரவேண்டிய வாய்ப்புக்கான நேரமா என்று புரியாமல் அன்று இரவு முழுவதும் அவருடன் உரையாடிக் கொண்டுருந்தேன். அப்போது தான் அவரைப் பற்றி முழுமையாக புரிந்து கொண்டேன். ஒரு முழநீள பெயருடன் இறுதியில் மரியா என்று முடிந்த அவரின் பெயரை சுருக்கமாக மரியா என்று அழைக்கச் சொன்னார்.
மரியா சமீபத்தில் இந்த துறையில் நுழைந்ததும், அறிமுகம் இல்லாமல் திருப்பூர் வந்ததும் போன்ற பலவிசயங்களை பகிர்ந்து கொண்டார். ஸ்வீடனின் ஒரு தங்கும் விடுதியில் வரவேற்பாளர் பதவியில் இருந்த மரியா கணவர் இறந்த பிறகு ஏதாவது சாதிக்க வேண்டுமென்று நோக்கத்தில் இந்த ஆடைத்தொழிலை தேர்ந்தெடுத்து இறுதியாக இந்தியா வந்து சேர்ந்திருக்கிறார்.
பங்களாதேஷ், பாகிஸ்தான் என்பதை மத நாடாக புரிந்துகொண்டு சீனாவுக்கு சென்று தரமில்லாத விசயங்கள் பரிசாக கிடைக்க "போதுமடா சாமி" என்று பலரிடம் கேட்டு திருப்பூர் பற்றி கேட்டு வந்து இருப்பதை புரிந்து கொண்டேன். ஸ்வீடனில் அவர் இருந்த குறிப்பிட்ட பகுதியில் ஆடைக்கான சந்தை நல்ல விதத்தில் இருந்தாலும் சரியான நபர்கள் இல்லாத காரணத்தால் பக்கத்து நாடுகளில் இருந்தது வாங்கி கொள்ளை லாபத்திற்கு விற்றுக் கொண்டுருப்பதையும் அவர் பேச்சின் மூலம் புரிந்து கொண்டேன்.
ஆனால் இந்தியாவைப்பற்றி அவருடைய நண்பர்கள் பலரும் சொல்லக்கேட்ட பயங்கர கதைகள் பயமுறுத்துவதாக இருக்க தள்ளிப்போட்டுக் கொண்டுருந்த பயணம் சில நாட்களுக்கு முன் இங்கே கொண்டு வந்து சேர்த்துள்ளது. அதுவே இன்று என்னுடனான பாதிவழி சந்திப்பு வரைக்கும் நடந்து முடிந்து விட்டது.. அவர் தங்கியிருந்த விடுதியில் அறிமுகமான அத்தனை நிறுவனங்களும் மரியா போன்ற தொடக்க முயற்சிகளை ஏளனப்படுத்திவிட விடுதியில் இருந்த சிலரை தொடர்பு கொண்டு கேட்டுள்ளார்.
வெளிநாட்டுப் பெண்மணியாக இருந்தாலும் ஒவ்வொரு காசையும் பார்த்து பார்த்து செலவழிக்கும் குணாதிசியம் விடுதியில் இருந்தவர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. கண்டும் காணாமல் ஒதுங்கி விட்டனர். மனம் தளராத விக்கிரமாதித்தியாய் தனிப்பட் முறையில் வெளியே வந்து வண்டி பிடித்து வந்துள்ளார் எனபதைக் கேட்ட போது அவரின் துணிச்சல் என்னை வெகுவாக கவர்ந்தது.
அதுவே என் தொடர்பை அவருக்கு உருவாக்கிக் கொடுக்க "தெய்வமே நன்றி" என்று என்னை கட்டிப் பிடித்துக் கொண்டார்.
நானும் அதே சூழ்நிலையில் தான் இருந்தேன். ஆனால் நான் காட்டிக் கொள்ளவில்லை.
நான் அவருடன் விடுதியில் தங்கியிருந்த போது அம்மா என்னை தேடிக் கொண்டுருப்பதை புரிந்து கொள்ள முடிந்தது. என்னுடைய அலைபேசி விடாமல் அடித்துக் கொண்டுருந்த போதும் நான் எடுக்கவில்லை. மரியா கேட்ட போது நண்பர்களின் அழைப்பு என்று மாற்றிப் பேசிய பொய் என்பது கடைசி வரைக்கும் பல விதமாக மாற்றி சொல்லி வைத்தேன். என்னுடைய குடும்பத்தினர் வெளியூரில் இருக்கிறார்கள் என்பதாக அவரை நம்ப வைத்து ஜெயித்தேன்.
காரணம் அம்மாவுக்கும் எனக்கும் இடையே இவர் நுழைந்து என் மனதை மாற்றிவிடுவோரோ என்று பயம் எனக்குள் இருந்தது. நள்ளிரவு வரைக்கும் விட்டு விட்டு அம்மா அடித்துக் கொண்டுருந்த அலைபேசி நான் இரண்டு முறை தவிர்த்த போதும் கூட மறுபடியும் அடித்துக் கொண்டுருந்தார். இறுதியாக அந்த நள்ளிரவில் "என்னைத் தேடாதே. நான் இனிமேல் வரமாட்டேன்" என்று குறுஞ்செய்தி கொடுத்த பிறகே நின்றது.
என் மனதில் அம்மா மேலிருந்த வன்மத்தை அன்று தான் புரிந்து கொண்டேன். அவருக்கும் எனக்கும் இருந்த இடைவெளியை நான் பேசிக்கொண்டுருந்த வெளிநாட்டு பெண்மணியின் எதிர்கால திட்டங்கள் நிரப்பக்கூடியதாக இருந்தது.
மொத்தத்தில் மரியாவுக்கு திருப்பூர் தவிர இந்தியாவில் மற்ற பகுதிகளுக்கும் செல்லக்கூடிய நம்பிக்கையான ஆள் ஒருவர் தேவையாக இருந்ததை புரிந்து கொண்டேன். அம்மா எனக்கு கற்றுக் கொடுத்திருந்த அசாத்தியமான மனதைரியம் அன்று கை கொடுத்தது. நீங்கள் எதிர்பார்க்கும் எல்லா விசயங்களையையும் என்னால் சாதிக்க முடியுமென்று மரியாவை நம்ப வைத்து அதிலும் வெற்றி பெற்றேன்.
அம்மாவை பல விதங்களிலும் வெறுத்த அளவிற்கு என்னால் மனதளவில் மறக்க முடியாமல் மறுகிக் கொண்டுருந்தேன். ஆனால் என் பிடிவாதமே முன்னால் நின்றது. நான் எடுத்து வைத்த ஒவ்வொரு அடியிலும் அம்மாவின் குணாதிசியமே மேலோங்கி நின்றது. நான் ஈடுபட்ட ஒவ்வொரு முயற்சிகளையும் அம்மாவை நினைத்துக்கொண்டே ஈடுபட்டேன்.
அடுத்த மூன்று நாட்களும் மரியாவுடன் விடுதியில் தங்கியிருந்தேன். மரியா மூலம் நான் கற்றுக் கொண்ட பல விசயங்கள் ஏராளமான புதிய நம்பிக்கையை உருவாக்கியது. அதுவே, அடுத்த ஒரு வருடத்திற்கு எனக்கு உதவியாய் இருந்தது. மரியா எனக்கு அளித்த பொறுப்புகளுடன் அவர் கொடுத்து விட்டுச் சென்ற பணத்தை வைத்துக் கொண்டு அலுவலகமும் வீடுமாய் இருந்த அமைப்பில் திருப்பூரில் மீண்டு என் புதிய இரண்டாவது வாழ்க்கையை தொடங்கினேன்.
இடையே ஒரு முறை அம்மா நான் இருக்கும் இடத்தை தெரிந்து கொண்டு வந்து அழைத்தார். தவிர்க்கப் பார்த்தேன். என்ன காரணமென்றே எனக்குத் தெரியவில்லை. மொத்தத்தில் என் அம்மாவாக இல்லாமல் வேறொரு ஜீவனாகத் தெரிந்தார். .
"உன்னுடன் ஒரு மணி நேரம் மட்டும் பேச வேண்டும்" என்றார். நான் மறுத்து விட்டேன். ஆனால் அம்மா என்னை திட்டாமல் நகர்ந்தது இயல்புக்கு மாறாய் இருந்தது. அம்மா கெஞ்சிய வார்த்தைகளுக்கு எந்த பதிலும் கொடுக்கவில்லை. மொத்தத்தில் நான் அவரை பொருட்படுத்தவேயில்லை. கடைசியாக செல்லும் போது ஒன்றைச் சொல்லிவிட்டு சென்றார்.
"என் மனப்பாரம் குறைந்தது. இனி நீ ஜெயித்து விடுவாய்" என்றார்.
அப்போது அதன் அர்த்தம் எனக்குப் புரியவில்லை.
உலகில் மிக வலிமையான ஆயுதமென்பது புறக்கணித்தல். வார்த்தைகளும் ஆயுதங்களும் கொடுக்காத வலியை புறக்கணித்தல் என்பது பல மடங்கு வலிமையானதாக இருக்கும் என்பதை புரிந்து கொண்டேன். ஆனால் நான் எத்தனை தவறான முடிவை எடுத்தேன் என்பதை அம்மா இறந்த பிறகு என் கைகளுக்கு வந்த அவரின் கடித மரண சாசனம் என்க்கு உணர்த்தியது.
ஒவ்வொரு சமயத்திலும் நான் கற்றுக் கொண்ட தொழில் அனுபவங்கள் என்னை அடுத்தபடிக்கு எளிதாக நகர்த்திக் கொண்டுருந்தது. மொத்ததில் என்னுடைய தொழில் வாழ்க்கையின் முதல் வருடம் மரியா என்னிடம் எதிர்பார்த்ததை விட அற்புத பாதைக்கு கொண்டு செலுத்தியது. மரியாவிற்கு என் அசாத்தியமான உழைப்பு கொடுத்த லாபங்கள், நான் தனிப்பட்ட வாழ்க்கையில் கடைபிடித்த ஓழுக்க விதிகள், நிறுவனங்களை கையாண்ட விதங்கள் என்று ஏராளமான ஆச்சரியக்குறிகள் ஒவ்வொரு காலகட்டத்திலும் மரியாவுக்கு உருவாக்கிக் கொண்டுருந்தது.
என்னுடைய கேள்விக்குறியான வாழ்க்கை சூத்திரத்தை மொத்தமாய் மாற்றியது. குறிப்பபிட்ட காலகட்டத்திற்குள் மரியா என்னுடன் தொழிலுக்கு அப்பாற்பட்டு மிகவும் நெருங்கியிருந்தார்..
நான் ஸ்வீடன் நிறுவனத்தில் மூன்றாவது ஆண்டாக பணியில் இருந்த போது என்னைச் சுற்றியிருந்த ஆள் அம்பு சேனைகள் வளர்ந்த போதிலும் கூட என் தனிமை கூட்டை உடைத்துக் கொண்டு வரவில்லை. எவர் மீதும் அன்பில்லாமல் எந்த இலக்குமில்லாமல் அன்றாட கடமைகளும் வாழ்க்கையின் அதன் போக்கிலேயே போய் கொண்டுருந்தேன்.
எனக்கு வந்து கொண்டுருந்த எந்த வசதிகளையும் நான் அனுபவிக்க விரும்பவில்லை. ஒவ்வொன்றும் வங்கியில் தூங்கிக் கொண்டுருந்தது. ஓய்வு நேரத்தில் கோவையில் மாலை நேர எம்பிஏ படிப்பில் சேர்ந்து அதன் மூலம் என்னை மாற்றிக் கொள்ள முயற்சித்தேன். ஆர்ப்பாட்டமில்லாத என் வாழ்க்கையின் ஆணி வேராக இருந்த அம்மாவிற்குப் பிறகு ஸ்வீடன் பெண்மணி ஆழமாக ஊடுருவினார்.
தொழிலுக்கு அப்பாற்பட்டு என்னை மகள் போலவே பாதுகாக்க அவரின் சாதாரண தொழில் வாழ்க்கையை என்னால் சாம்ராஜ்ய வாழ்க்கையாக மாற்ற முடிந்தது. ஓய்வில்லாத எனது ஒவ்வொரு நாளும் என் வயதின் அதிகரிப்பை உணர்த்தாமல் உருண்டோடிக் கொண்டுருந்தது.
2009 25 செப்டம்பர்
அவசர வேலையென்று மரியா அழைத்திருந்தார். நான் ஸ்வீடன் சென்றபிறகு தான் மரியா வாழ்வின் இறுதிக்கட்டத்தில் இருப்பதை புரிந்து கொண்டேன். அவருக்குள் இருந்த புற்று நோய் அவரை முழுமையாக மாற்றியிருந்தது. தலைமுடிகள் உதிர்ந்து எலும்பும் தோலுமாய் விகாரமாய் இருந்தார்.
அவருக்கு இருந்த நோய்கள் குறித்து எனக்குத் தெரியுமே தவிர இந்த அளவிற்கு கேன்சர் நோயின் தாக்கம் இருக்குமென்பதை அன்று தான் முதன் முதலாக புரிந்து கொண்டேன். எதற்காக நம்மை அழைத்தார்? என்பதை யோசித்துக் கொண்டு மருத்துவமனையில் அவரருகே அமர்ந்திருந்தேன்.
அவரால் அதிகம் பேசமுடியவில்லை. கண்களில் இருந்து நீர் தொடர்ச்சியாக வழிந்து கொண்டுருந்தது. தலையணைக்கு கீழே இருந்து ஒரு ஒட்டப்பட்ட கவரை எடுத்து கையில் கொடுத்து விட்டு என் உள்ளங்களையில் முத்தமிட்டார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. என்னவென்று கண்களால் கேட்ட போது சைகையில் "நீ ஊருக்குச் சென்றதும் பிரித்துப் பார்" என்றார். அதேநாள் இரவில் என் மின் அஞ்சலுக்கு சென்னையிலிருந்த மற்றொரு நபரிடம் இருந்து செய்தி வந்தது.
சென்னையில் ஒரு குறிப்பிட்ட மருத்துவமனையின் பெயரைப் போட்டு என் அம்மா இறுதிக் கட்டமாக உயிருக்கு போராடிக் கொண்டுருப்பதாக செய்தி வந்தது. ஆனால் ஸ்வீடனில் உள்ள சூழ்நிலையில் அங்கேயே ஒரு வாரம் இருக்கும்படி உருவாக அம்மா குறித்த விசயங்களை மறந்து போனேன்.
செப் 27 அன்று மரியாவின் ஜீவன் மரண்த்தை தழுவியது.
அடுத்த மூன்று நாட்கள் என்னால் நகரமுடியவில்லை. காரணம் மரியா இறக்கும் தருவாயில் பல விசயங்களை செய்து இருப்பதை நான் சென்னை வந்த போது தான் புரிந்து கொண்டேன். மரியா இறந்து போன துக்கத்தை மனம் ஏற்றுக் கொள்ளாமல் தவித்தது.
அவர் கொடுத்த கவர் கூட பிரிக்கப்படாமலேயே இருந்தது.
வேலைகள் அத்தனையையும் முடித்து ஸ்வீடனிலிருந்த சென்னைக்கு வந்து அம்மா இருப்பதாக தகவல் வந்த மருத்துவனைக்குக் சென்று பார்த்த போது அம்மா இறந்து மூன்று நாட்களாகிவிட்டது என்றனர்.
ஒரு சேவை மையம் அடக்கம் செய்துள்ளார்கள் என்பதையும் புரிந்து கொண்டேன். அந்த மையத்தைத் தேடிச் சென்றபோது அம்மா கொடுக்கக் சொன்னதாக ஒரு கடிதத்தை என்னிடம் கொடுத்தனர்.
மரியா இறந்த செப் 26 அன்றே என் அம்மாவும் இறந்து இருப்பதை அப்போது தான் புரிந்து கொண்டேன். அழக் கூட தெம்பில்லாமல் தங்கியிருந்த விடுதிக்கு வந்த போது இப்போது என் கையில் இரண்டு கவர்கள் இருந்தது. மரியா, அம்மா இருவரும் எழுதி வைத்திருந்த கவர்களை அப்போது தான் அடுத்தடுத்து பிரித்தேன்.
முதலில் மரியா கொடுத்த கவரை.பிரித்து படித்து முடித்த போது அழுவதா சிரிப்பதா என்று தோன்றாமல் எதிரேயிருந்த சுவ்ற்றை வெறித்துக் கொண்டுருந்தேன்.
ஐரோப்பிய யூனியனில் வளர்ந்து கொண்டுருக்கும் மரியாவின் நிறுவனத்தில் 40 சதவிகித பங்குதாரராக என்னை நியமித்திருந்தார். இறுதி முடிவென்பது என்னுடைய ஒப்புதல் இல்லாமல் இருக்கக்கூடாது என்பதாக அவர் மகனுக்கு தனிப்பட்ட குறிப்பாக எழுதியிருந்தார். அது தொடர்பாக பல வித ஆவணங்கள் உள்ளேயிருந்தது. .
அடுத்து அம்மாவின் கடிதத்தை எடுத்த போது குற்ற உணர்வில் என் கைகள் நடுங்கிக் கொண்டுருப்பதை என்னால் நன்றாகவே உணரமுடிந்தது.
பிரிந்துப் போன மகளுக்கு இறந்து போன உன் அம்மா எழுதியது என்று அந்த கடிதத்தை தொடங்கியிருந்தார்.