Showing posts with label சீமான். Show all posts
Showing posts with label சீமான். Show all posts

Sunday, March 27, 2011

63 நாயன்மார்களுக்கு சீமான் உருவாக்கியுள்ள ஆப்பு

காங்கிரஸ் கட்சி. 

இந்திரா காந்தி அம்மையார் குறித்த பல விமர்சனங்கள் இருந்தாலும் அத்தனையும் தாண்டி அவருக்குள் இருந்த தீர்மானமான கொள்கை முடிவுகள் இந்தியாவை பல படிகளேனும் முன்னேற்றப்பாதையில் அழைத்துச் சென்றது என்பதும் உண்மை. திடீர் தலைவராகவோ, திட்டமிடுதல் இல்லாமல் வந்த அமரர் ராஜீவ் காந்தி போலவோ இல்லாமல் முன்னாள் பிரதமர் ஜவர்ஹலால் நேருவின் உதவியாளர் போலவே செயல்பட்டு அரசியலின் ஒவ்வொரு படியையும் கடந்து மேலே வந்தவர். 

வாரிசு என்றொரு குற்றச்சாட்டு எத்தனை உண்மையோ அதையும் உடைத்து தன்னுடைய ஆளுமையை நிரூபித்த மகா பெண்மணி.  இந்திரா காந்தி இருந்த போது அவருடன் இருந்த மற்ற முக்கிய தலைவர்கள் யாரெல்லாம் இருந்தார்கள் என்பதை அரசியல் நோக்கர்களைத் தவிர இப்போது போல அவ்வளவு சீக்கீரம் நம்மால் புரிந்து கொள்ள முடியாது. காரணம் இந்திரா ப்ரியதர்ஷிணி சகலவிதங்களிலும் வியாபித்திருந்தார். 

குறிப்பாக வெளிநாட்டுக் கொள்கைகளில் பங்களாதேஷ் முதல் ஈழம் வரைக்கும் சுயமாக சிந்தித்து முடிவு எடுத்த சாதனைப் பெண்மணி.  

நான் வாழ்ந்த பகுதியில் எந்த தேர்தல் வந்தாலும் மாநிலத்திற்கு இரட்டை இலை.  மத்தியில் கைச் சின்னம்.  இதுதான் தராக மந்திரமாகவே இருந்தது.  காங்கிரஸை தூற்றுவதும் பழிப்பதும் ஏறக்குறைய ஒரு பாவச் செயல் போலவே கருதப்பட்டது. 

ஆனால் காலங்கள் உருண்டோடி காவுகள் பல வாங்கி வந்து நிற்கும் இன்றைய காங்கிரஸ் கட்சியின் நிலைமை?  அந்தோ பரிதாபம்? 

ஈழம் சார்ந்த கொள்கைள் முதல் இன்றைய வெட்கக்கேடான வெளியுறவுக் கொள்கைகள் வரைக்கும் அத்தனையும் சிக்கல் மேல் சிக்கலாகி சின்னாபின்னமாக்கி சிதறுண்டு போய்க்கிடக்கிறது. டம்மி பிரதமரை வைத்துக் கொண்டு கும்மியாட்டம் நடத்திக் கொண்டிருக்கும் இந்த மத்திய காங்கிரஸ் கட்சியை சீமான் எதிர்ப்பது ஈழத்தில் நடந்த அக்கிரமத்திற்காக மட்டுமே.  ஆனால் என்னுடைய பார்வையில் இந்த காங்கிரஸ் கட்சி, ஆட்சிக்கு வந்த பிறகு நடந்த சில நிகழ்வுகளையும் பார்த்து விடலாம். 

சாய்நாத் ஹிந்து பத்திரிக்கையில் எழுதிய இந்த விபரங்கள் இன்றைய சாதனை காங்கிரஸ் கட்சியின் சாதனைப் பட்டியல் சிலவற்றை மட்டுமே கொடுத்துள்ளேன்?

2005-06 ஆம் ஆண்டிலிருந்து ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி, பன்னாட்டு தொழில் நிறுவனங்களுக்கு தள்ளுபடி செய்துள்ள வரி - 3,74,937 கோடி ரூபாய். (இது, 2ஜி அலைக்கற்றை ஊழல் தொகையைவிட 2 மடங்கு)

இப்போது நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தாக்கல் செய்துள்ள நிதி நிலை அறிக்கையில் பெரும் தொழில் நிறுவனங்களுக்கு தள்ளுபடி செய்துள்ள வரி - ரூ.88,263 கோடி.

இப்படி பெரும் தொகையை தொழில் நிறுவனங்களுக்கு ரத்து செய்த பிரணாப் முகர்ஜி, விவசாயத் துறைக்கான ஒதுக்கீட்டில் ரூ.5568 கோடியை வெட்டி விட்டார். பயிர்ப் பாதுகாப்புக்காக, விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட தொகையில் மட்டும் குறைக்கப்பட்ட நிதி ரூ.4,447 கோடி.

பெரும் தொழில் நிறுவனங்கள் செலுத்த வேண்டிய தொகையை தள்ளுபடி செய்தது மட்டுமல்ல, இனி எதிர்காலத்தில் செலுத்த வேண்டிய சுங்கவரியைக் கட்டத் தேவையில்லை என்று அறிவிக்கப்பட்ட தொகை - ரூ.48,798 கோடி!                (நாடு முழுதும் பொது விநியோகத் துறையான ரேஷன் கடைகளுக்கு ஓராண்டுக்கு செலவிடப்படும் தொகையில் இது பாதி)

அப்பல்லோ போன்ற ‘நட்சத்திர ஓட்டல்’ தரத்தில் நடத்தப்படும் தனியார் மருத்துவமனைகளுக்கு வெளிநாடுகளிலிருந்து நவீன மருத்துவக் கருவிகளை இறக்குமதி செய்ய, இந்த நிதி நிலை அறிக்கையில் விலக்காக அளிக்கப்பட்டுள்ள சுங்கவரித் தொகை ரூ.1,74,418 கோடி.

இந்த மருத்துவமனைகளில் 30 சதவீத படுக்கைகளை ஏழைகளுக்கு இலவசமாக வழங்கி, சிகிச்சை அளிப்பதாக இந்த நிறுவனங்கள் பொய் கூறி அரசிடமிருந்து சலுகைகளைப் பெறுகின்றன. உண்மையில் அப்படி எந்த இலவச சிகிச்சையும் இங்கே வழங்கப்படுவது இல்லை.

இந்த நிதிநிலை அறிக்கையில் பெரும் தொழில் நிறுவனங்களுக்கு சலுகைகளாக அறிவிக்கப்பட்டுள்ள தீர்வை வரி - ரூ.1,98,291 கோடி.                (கடந்த ஆண்டு - ரூ.1,69,121 கோடி)

தொழில் வருமான வரி, சுங்க வரி, தீர்வை வரி - ஆக பன்னாட்டு தொழில் நிறுவனங்கள் செலுத்தத் தேவையில்லை என்று 2005-2006 ஆம் ஆண்டிலிருந்து இதுவரை மொத்தமாக வழங்கப்பட்ட வரிச் சலுகை - ரூ.21,25,203 கோடி. (21 இலட்சத்து 25 ஆயிரத்து 203 கோடி. 2ஜி அலைக்கற்றை ஊழலைவிட 12 மடங்கு அதிகம்)

இப்படி கோடிகோடியாக தொழில் திமிங்கலங்களின் வயிற்றில் கொட்டும் இந்த காங்கிரஸ் ஆட்சி தான். ஏழை மக்களுக்கு குறைந்த விலையில் உணவுப் பொருள்களை வழங்க நிதி இல்லை என்று கை விரிக்கிறது. உணவுக்காக வழங்கப்படும் நிதி உதவியை குறைக்கிறது.

பன்னாட்டு நிறுவனங்களை வரவேற்கும் மத்திய மாநில அரசுகள் உள் கட்டமைப்புகளில் கவனம் செலுத்துவதில்லை. 

மற்ற ஊர்களில் எப்படியோ? திருப்பூரில் தொடக்கத்தில் மின்சாரத்தடை இரண்டு மணி நேரமாக இருந்தது.  இப்போது ஒரு நாளைக்கு சராசரியாக 6 மணி நேரமாக மாறியுள்ளது. உள்ளே இருக்கும் நிறுவனங்களுக்கே மின்சாரம் வழங்க முடியா சூழ்நிலையில் இருப்பவர்கள் தான் பன்னாட்டு நிறுவனங்களை ரத்தினக்கம்பளம் போட்டு வரவேற்கிறார்கள்.வருகின்ற பன்னாட்டு நிறுவனங்களுக்கு தடையில்லா மின்சாரம்.அத்துடன் குறிப்பிட்ட வருடங்களுக்கு வரிவிலக்கு. 

காரணம் என்ன?  

எச்சில் பொறுக்கிகள் தங்கள் மேல் விழும் எலும்புத் துண்டுகளை கவ்வ தயாராக இருப்பதால் நம் இந்தியாவை இன்று பன்னாட்டு நிறுவனங்களின் வேட்டைக்காடாகவே இப்போதுள்ள மத்திய அரசாங்கம் மாற்றியுள்ளது, இந்த பட்ஜெட்டில் உள்நாட்டு தயாரிப்பாளர்களுக்கு நிதியமைச்சர் பிரணாப் கொடுத்த மற்றொரு அன்புப் பரிசு கலால் வரி பத்து சதவிகிதம். 

ஜட்டி, பனியனை தயாரித்து நிறுவனத்தை விட்டு வெளியே கொண்டு வர வேண்டுமென்றால் 100 ரூபாய்க்கு பத்து ரூபாயை வரியாக கட்டி ரசீது வாங்கி விட்டு தான் வெளியே கொண்டு போக வேண்டும். இது போன்று ஒவ்வொரு துறைக்கும் இவர்களின் அன்புப் பரிசு உண்டு.

கற்பனை செய்து பாருங்க. நம்மை ஆளும் அரசாங்கம் நம் மக்களை வாழவைக்கவா?  இல்லை அழித்து முடித்து அடுத்த நாட்டு கையில் ஓப்படைக்கவா?

இந்த 2011 தேர்தலில் நிறுத்தப்பட்டுள்ள 63 நாயன்மார்களை ஒழித்துக் கட்ட சீமானின் நாம் தமிழர் இயக்கம் உருவாக்கிய காணொளி தமிழ்நாடு முழுக்க சென்றடையுமா? என்று தெரியவில்லை. நல்ல வேளை மொத்த பிரச்சனைகளுடன் ஈழப்பிரச்சனைகளையும் சேர்த்து இடையிடையே சீமானின் பேச்சும் கலந்துள்ள இந்த 20 நிமிட காணொளியை பார்க்கின்ற இளைஞர்களுக்கு, குறிப்பாக முதன் முறையாக ஓட்டுப் போடுகின்றவர்களை பாதிப்படைய வைத்தாலே முழு வெற்றி தான். 

நிச்சயம் இது போன்ற இளைஞர்கள் மற்றும் முடிவெடுக்க யோசித்துக் கொண்டிருப்பவர்கள், ஒவ்வொரு முறையும் வாக்குச் சாவடிக்குச் செல்லாமல் இருப்பவர்கள் என்று குறிப்பிட்ட சதவிகிதம் யோசித்தாலே போதுமானது.

ஆனாலும் சீமான செய்ய வேண்டிய வேலையின் பாதி அளவை ஏற்கனவே தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் தங்கபாலு செய்து முடித்து விட்டார். 

காரணம் காந்திஜியின் தண்டி யாத்திரையில் கலந்து கொண்ட வழித்தோன்றலான தங்கபாலு மனைவி ஜெயந்திக்கு இந்த முறை சீட்டு கிடைத்துள்ளது. தங்கபாலூவின் கைபேசியை தூக்கிக் கொண்டு வரும் தாமோதரனுக்கும், கார் கதவை திறந்து விடும் சிவலிங்கம் போன்ற தியாகச் செம்மல்களுக்கு சீட்டு கிடைத்துள்ள காரணத்தால் இப்போது தங்கபாலு வசிக்கும் வீட்டு சந்துக்கே கூட காவல் போட வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறார். 

ஆனால் இவர்களை விட முக்கியமான ஒரு பிரமுகர் உண்டு. 

கிருஷ்ணகிரி வேட்பாளர் ஹசீனா சையத்.  இவர் செய்து கொண்டிருந்த தொழில் தங்கபாலுவின் தொலைக்காட்சியில் அழகுக்கலை நிகழ்ச்சியை வழங்குவது.  

ஆகா புல்லரிக்குது. 

தங்கபால் காங்கிரஸ்க்கு பால் ஊற்றியதற்கு நன்றிங்கோ.

இந்த காணொளியை பகிர்ந்து கொண்ட தெகா மற்றும் ராஜாகீர்த்திக்கு நன்றி.



Tuesday, December 21, 2010

சீமான் தேறுவாரா? தடம் மாறுவாரா?

2000 ஆண்டு தொடக்கத்தில் திருமணம் ஆவதற்கு முன்பு பெரிய வீட்டில் தனி ஆளாக புதிய வாழ்க்கையை தொடங்கினேன். மொத்த குடியிருப்பில் நான் மட்டுமே பேச்சுலர். தனி ஆளுக்கு ஏன் இத்தனை ரூபாய் வாடகை கொடுத்து ஏன் இவன் இங்கே இருக்கின்றான்? என்பதை மனதில் கொண்டு "கழுகுப் பார்வை"யால் மற்றவர்கள் என்னை பார்த்துக் கொண்டுருந்தனர். 

ஏறக்குறைய தினந்தோறும் கைபேசியில் 500க்கும் குறையாத அளவிற்கு வந்து கொண்டுருக்கும் அழைப்புகளுடன் நிறுவன பதவிகளில் வாழ்ந்து கொண்டுருந்த வாழ்க்கையது.

என்னைத் தேடி வந்த எதிர்கால மாமனார் கூட நான் உள்ளே வைத்திருந்த குடும்பத்திற்கு தேவையான அத்தனை வசதிகளையும் பார்த்து அசந்து விட்டார். சமையல் கலை என்பது நான் ரசித்து செய்யும் ஒரு விசயம்.  அதுவும் அந்த சமயத்தில் நான் புகுந்து விளையாடிக் கொண்டுருந்த அசைவ உணவு வகைகளைப் பார்த்து அவருக்கும் மேலும் இன்ப அதிர்ச்சியாய் இருந்தது.  பொதுவாக பேச்சுலர் வாழும் வாழ்க்கையில் மற்றவர்கள் "கண் கொத்தி பாம்பாக" பார்க்கும் பல விசயங்கள் இல்லாமல் இருந்ததை கண்டு என்னை வினோத ஜந்தாகவே பார்த்தார்.  

அலுவலக நேரம் தவிர மற்ற பொழுதுகள் அத்தனையும் வீட்டுக்குள் இருந்த ஒலி நாடாக்கள் என்னை அடைகாத்தது. பள்ளிப்பருவம் முதல் நான் மனதில் வைத்திருந்த அத்தனை ஆசைகளையும் முடிவுக்கு கொண்டு வரும் பொருட்டு உள்ளே நான்கு புறமும் விலை உயர்ந்த ஓலிவாங்கிகளை பொருத்தி மிகத் துல்லியம் என்பதற்காக அதன் தொடர்பான பல சமாச்சாரங்களை பொருத்தி கதவை சார்த்திக்கொண்டு கேட்டுக் கொண்டுருப்பேன்.  

பலரும் பேசிய இலக்கியப் பேச்சுகள் என்று தொடங்கி அதன் தொடராக ஆன்மிகத்தை விட்டால் அரசியல் பேச்சுகள் போன்ற பலதையும் கலவையாக கேட்டுக் கொண்டுருப்பேன். சராசரி நபர்களால் ஜீரணிக்க முடியாத  கேசட்டுகள் ரகம் வாரியாக உள்ளே அடுக்கி வைக்கப்பட்டுருக்கும்.

குறிப்பாக அப்போது வைகோ மேல் அதீத காதல் கொண்டுருந்தேன். அவரின் ஒவ்வொரு ஒலிநாடாக்களையும் நூற்றுக்கணக்கான முறைகள் கேட்டுக் கொண்டேயிருந்தாலும் சலிக்கவே சலிக்காது.  வார்த்தை பிரயோகங்கள், கம்பீர, உதாரணங்கள், தடுமாற்றம் இல்லாத பேச்சு என்று ஆச்சரியமனிதராக எல்லாவிதங்களிலும் தெரிந்தார்.  நடைபயணத்தில் இறுதியில் சென்னையில் பேசிய பேச்சை அடுத்த நாலைந்து வருடங்கள் வைத்திருந்தேன். 

ஆனால் இப்போது அவரைப் பார்க்கும் போது?

தமிழ்நாட்டு அரசியலில் உருப்படியாக அமைந்த ஒரு புத்திசாலி தன்னுடைய தவறான கொள்கைகளால், எதிர்காலம் குறித்து அக்கறைபட்டுக்கொள்ளாமல் இந்த நிமிடம் வரைக்கும் தான் கொண்ட ஈழம் குறித்த கொள்கைகளில் ஆச்சரியமனிதராக வாழ்ந்து கொண்டுருக்கிறார். அவரின் பல புத்தகங்களை படித்துள்ளேன்.  ராஜீவ் காந்தியுடன் நேருக்கு நேராக .நின்றவிதம், அசாத்தியமான துணிச்சல், நம்ம சூனாபானாவை (அதாங்க சுப்ரமணியசாமி) பாராளுமன்றலாபியில் மிரட்டிய கம்பீரம் என்று எல்லாவிதங்களிலும் சிங்கமாகத் தான் வாழ்ந்தார். 

ஆனால் இன்று?

தமிழ்நாட்டில் இரண்டு கழகங்களுக்கு எதிராக குறிப்பிடத்தக்க வகையில் மேலே வந்த ராமதாஸ் மற்றும் திருமாவளவன் குறித்து இங்கு என்ன எழுத முடியும்?

என்னுடைய பார்வையில் மருத்துவர் ராமதாஸ் மேல் அவரின் அரசியல் கொள்கையின் மேல் ஏராளமான காழ்புணர்ச்சி விமர்சனங்கள் இருந்தாலும் அவர் உருவாக்கிய "மக்கள் தொலைக்காட்சி" ஆச்சரியமானதே. 

ஈ மொய்க்கவில்லையே என்று தன்னுடைய பாதையை மாற்றிக் கொள்ளாமல் அதே பிடிவாதத்தோடு தனித்தமிழிலில் கொண்டு போய்க் கொண்டுருப்பதற்கு தனியான பாராட்டுரையை வழங்க வேண்டும்.

திருமாவளவனும் வைகோவுடன் இருந்தார். வளர்ந்தார்.  ஆனால் இவர் பிடிக்க வேண்டிய இடத்தை இன்று பிடித்துருப்பவர் சீமான் அவர்கள். 

தமிழ்நாட்டில் உள்ள இரண்டு கழகங்கள் சரியில்லை. ஊழல் குற்றச்சாட்டு, சுயநல ஆதிக்கம், குடும்ப அரசியல் என்று கருத்து சொல்பவர்கள் திருமாவளவன், ராமதாஸ் இருவரும் கடந்து வந்த பாதையில் தான் சார்ந்த இனத்திற்கு என்ன கொடுத்து இருக்கிறார்கள்? என்ன சாதித்து இருக்கிறார்கள்? என்று தெரிந்தவர்கள் சொன்னால் எனக்கும் கொஞ்சம் இவர்களின் அரசியலை புரிந்து கொள்ள வாய்ப்பாக இருக்கும். 

காரணம் இவர்கள் தான் ஆதிக்க சாதிகளை எதிர்த்து போராடுகின்றோம் என்கிறார்கள்.   ஈழத்தில் நடத்த கடைசி யுத்தப் போராட்டத்தின் போது அன்புமணி ராமதாஸ் கெட்டிக்காரத்னமாக கடைசி வாய்ப்புள்ள வரைக்கும் தன்னுடைய மந்திரிப்பதவியை விட்டு இறங்கத் தயாராக இல்லை என்பது போன்ற விசயங்கள் பெரும்பாலான மக்களால் மறக்கப்பட்ட ஒன்றாகும். திருமாவளவன் எந்த நோக்கத்தில் இலங்கைக்கு சென்ற குழுவுடன் சென்றார்? என்பதே இன்று வரையிலும் ஆச்சரியம் அளிக்கும் விசயமாகும்?  

கடைசியாக நான் உங்களை திட்டிப்பேசவில்லை என்று சோனியாவின் வாசலில் நுழைய தவமாய் தவமிருப்பது வரைக்கும் வைகோவுக்கு அடுத்தபடியாக அந்தர்பல்டி அகாய சூரனாக இருக்கிறார்.

மொத்தத்தில் எதிர்க்கட்சி ஆளுங்கட்சி என்று இரு துருவங்களுக்குள் சிக்கியவர்களாக இவர்களின் தயவை எதிர்பார்ப்பவர்களாகத்தான் ஒவ்வொருவரும் இருக்கிறார்கள்.  

ஆனால் எல்லாவிதங்களிலும் சீமான் சற்று வித்யாசமாக இருக்கிறார்.  

பேச்சு, செயல்பாடு, கொள்கை.  

ஆனால் இவரின் உணர்ச்சிவசப்பட்ட பேச்சுகள் இவரின் எதிர்கால பாதையை எந்த அளவிற்கு தீர்மானிக்கும் என்பது தான் இங்கே மில்லியன் டாலர் கேள்வி.  ஈழம் குறித்து பேசுவது போல இங்குள்ள மாற்று ஏற்பாடுகள், கண் எதிரே நடக்கும் மற்ற விசயங்களையும் பேச வேண்டும். 

எப்படி இருந்தவர் இப்படி ஆனார் என்று இவர் முன் உதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டியவர் வைகோ.  

தொழில் நிறுவனங்களைப் போலவே அரசியலுக்கும் முன் எச்சரிக்கை தேவை. 
காரணம் தன்னுடைய இருப்பு தெளிவான முறையில் இருந்தால் தான் தான் வைத்திருக்கும் கொள்கைகளை ஓரளவுக்கேனும் வெளிப்படுத்த முடியும்.  இல்லாவிட்டால் நானும் கத்திப்பார்த்தேன்.  தொண்டை வற்ண்டுபோனது தான் மிச்சம் என்று ஒதுங்க வேண்டியது தான். 

சீமானின் பல ஊடகப் பேட்டிகளை பார்த்து படித்து இருக்கின்றேன்.  அவரின் தீவிர ஆதவாளர்கள் என்னுடைய நெருங்கிய நட்பு வட்டத்தில் இருக்கிறார்கள்.  அவரின் எண்ணங்கள் சரியானதே என்றபோதிலும் அதை எடுத்து வைப்பதில் முரண்பட்டு நிற்கிறார்.  இந்திய இறையாண்மை என்ற ஒற்றைச் சொல்லில் இது போன்று வளர்ந்து வருபவர்களை துடைத்தொழிக்கவென்றே ஓராயிரம் நபர்கள் கண்களுக்கு தெரிந்தும்,  தெரியாமல் இருப்பார்கள். 

இது தமிழினத்தில் மட்டுமே நடக்கும் சாபக்கேடு.

சமகாலத்தில் சீமான் தமிழ்நாட்டு அரசியல் களத்தில் பலவிதங்களிலும் அதிர்வை ஏற்படுத்திக் கொண்டுருப்பவர். ஆனால் அத்தனையும் வீணாகிப் போய்விடுமோ என்பது போல் இருக்கிறது.. புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்களால் மரியாதையான பார்வையில் கவனிக்கப்படுபவர். வளர்ந்து வரும் இளைய சமூகத்தின் சார்பார்ளர்களில் முதன்மையான இடத்தில் இருக்கிறார். சிறையில் இரண்டு நாட்கள் சந்திக்க மட்டுமே அனுமதி என்ற போதிலும் கூட படித்த இளைஞர்கள் வரிசை கட்டி நின்றது ஆச்சரியமே.  சென்றவர்கள் எவரும் பிரியாணிக்கும் குவாட்டருக்கும் ஆசைப்பட்டு போனவர்கள் அல்ல.

இவரைப் போன்றவர்கள் தெளிவான கொள்கைகளால் முன்னேறிச் செல்லவேண்டும். வெகு விரைவில் உருவாகப்போகும் இரண்டு வெற்றிடங்களை நிரப்புவதற்கு கண்ணுக்கு தெரிந்த வகையில் எவரும் தென்படவில்லை என்பதே தற்கால தமிழ்நாட்டு அரசியல் நிதர்சனம். சீமான் போன்றவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.  மாற்று அரசியல் பார்வையில் விஜயகாந்த ஒரு பக்கம்.  சீமான் ஒரு பக்கமும் இருக்கிறார்கள்.  ஆனால்  சீமான் அரசியல் கட்சியாக மாற்ற இன்னமும் காலம் இருக்கிறது என்பதில் உறுதியாகவே இருக்கிறார். 

தமிழ்நாட்டு மக்கள் எந்த பக்கம் இருப்பார்கள் என்பதை வரும் தேர்தல் ஓரளவுக்கேனும் சூசமாக காட்டிவிடும்.

இந்த காணொளியில் ஒரு கட்சியின் சார்பாக கேள்விகேட்கும் ரவிபெர்ணார்ட் பற்றி சொல்வதற்கு பெரிதாக ஒன்றுமில்லை. இவர் வருகின்ற தேர்தலிலாவது ஓட்டுப் போட செல்ல வேண்டும். 

குறிப்பாக கலைஞர் அரசியல் குறித்து சீமான் பேசும் இடங்களில் கடைபிடித்த நாகரிகம் என்னை வியக்க வைத்தது. ஆனால் பளிச்சென்று மிகத் தெளிவாக இருந்தது.

தன் மனதில் தோன்றியவற்றை வெளிப்படையாக எப்போதும் போல உணர்ச்சிபூர்வமாக பேசும் சீமான பிறந்த ஊருக்கு அருகே நானும் பிறந்தவன் என்கிற வகையில் என்னைப் போன்றவர்களுக்கு பெருமையாகத்தான் இருக்கு.