Thursday, October 31, 2013

கழிவாகிப் போகின்றோமா?

குழந்தைகள் பள்ளிக்குச் சென்றதும் வீட்டை கவனித்தால் மிகப் பெரிய அமைதி தெரியும்.  இது வெறுமனே அமைதி என்று மட்டும் சொல்லி விட முடியாது.  நாம் கதைகளில் படிக்கும் போர்க்களம் முடிந்து அங்கே நிலவும் அமைதியைப் போலத்தான் இருக்கின்றது.

இரைந்து கிடைக்கும் புத்தகங்களும், ஒழுங்கற்ற மேஜையில் ஓரத்தில் கிடக்கும் புத்தகங்களுமென எங்கெங்கு காணினும் ஏதோவொரு புத்தகங்கள். தொடக்கத்தில் அலுவலகத்தைப் போல ஒரு ஒழுங்கை வீட்டுக்குள் கொண்டு வந்துவிட வேண்டும் என்று முயற்சித்த போது முட்டி பெயர்ந்து முகம் முழுக்க காயம் பட்டது தான் மிச்சம்.

புத்தகங்களை சொத்து என்கிறார்கள்.  ஆனால் வீட்டுக்குள் புத்தகங்கள் மட்டுமே சொத்தாக இருக்கின்றது.

பள்ளி விட்டு வரும் பொழுதே சுமந்து வந்த பைகளை மூலையில் தூக்கி எறிந்து விட்டு அப்படியே உடைகளைக் கூட மாற்றாமல் தரையில் படுத்துக் கொண்டு இரண்டு காலையும் அருகே உள்ள நாற்காலியில் தூக்கி வைத்துக் கொண்டு முழு வேகத்தில் சுழலும் மின் விசிறிக் காற்றை அனுபவித்துக் கொண்டிருந்தவர்களைப் பார்க்கும் போது கோபத்தில் கத்தியிருக்கின்றேன். 

சென்ற ஆண்டு, "அப்பா, கொஞ்ச நேரம்" என்றார்கள்.

ஆனால் இப்போது "ஏம்ப்பா டென்சன் ஆகுறீங்க.பாத்ரூம் ஓடியா போகப்போகுது? அது அங்கே தான் இருக்கும்" என்கிறார்கள்.

இது போன்ற சமயத்தில் அமைதியாய் இருந்தால் தான் நம் ஆரோக்கியத்தை நாம் காப்பாற்றிக் கொள்ள முடியும்.

இதனைத் தொடர்ந்து வரும் நேரிலைக்காட்சிகள் தான் திகில்படம் போல நகரத் தொடங்கும். ஒருவர் மேல் ஒருவர் படுக்க முயற்சிக்க அடுத்தவர் அலற அருகே உள்ள மேஜை நகர, வைத்திருக்கும் பாத்திரங்கள் உருள, உள்ளேயிருந்து வரும் மிரட்டல் சப்தம் என நடந்து கொண்டிருக்கும் ரணகளத்தை கிளுகிளுப்பாய் ரசிக்க கற்றுக் கொண்ட பிறகே என் பிபி குறையத் தொடங்கியது.

இது போன்ற சமயங்களில் தான் சமீப காலத்தில் அதிகம் பரவியுள்ள "ஒரு பிள்ளை கலாச்சாரத்தை" நினைத்துக் கொள்வதுண்டு. 

கிராமத்திலிருந்து நகர்ந்து வந்தவர்களும், நகரமயமாக்கலும், இடப்பெயர்வும் தனி மனிதர்களுக்கு பலவிதமான சுதந்திரங்களை வழங்கியுள்ளது. ஓரளவுக்கேனும் சாதி வித்தியாசத்தை மாற்றிக் கொண்டு வருகின்றது என்பதைப் போல அவரவர் விரும்பும் சுதந்திரத்தை முழுமையாக அனுபவிக்க வைத்துள்ளது. விரும்பிய உடைகள், விரும்பிய நேரத்தில் உணவு என உருவான காலமாற்றங்கள் கலாச்சாரம் என்ற வார்த்தையை காவு வாங்கி விட்டது.

அடுத்த வீட்டுக்கு தெரிந்து விடுமோ? என்ற பயம் மாறி விட்டது. சந்து முழுக்க பரவி விடுமோ என்ற அச்சம் போய்விட்டது. ஊர் முழுக்க காறித்துப்பி விடுவார்கள் என்ற எண்ணம் மாறி எண்ணிய அனைத்தையும் இயல்பான வாழ்க்கையாக மாற்றிக் கொள்ள முடிந்துள்ளது. இப்போது கூட்டுக்குடித்தனம் என்றால் கணவன், மனைவி, குழந்தைகள் ஒரு வீட்டுக்குள் இருந்தாலே அதுவே பெரிய சாதனையாக மாறியுள்ளது.

ஆனால் நாம் இழந்த கூட்டுக்குடித்தனங்கள் உருவாக்கிய அளவான சிந்தனை நீடித்த ஒற்றுமை என்பது மாறிப் போனாலும் தனி நபர்களின் சுதந்திரமும், விரும்பியவற்றை அனுபவிக்க கிடைத்த வாய்ப்புகளும் அதிகரித்துள்ளன.

நாகரிக சமூகமாக மாற்றியுள்ளது.இதன் தொடர்ச்சியாக பெரும்பாலான வீடுகளில் ஒரு பிள்ளை கலாச்சாரம் என்பது இயல்பான ஒன்றாக மாறியுள்ளது.   இதற்குப் பின்னால் சமூக, பொருளாதார, உடல் ரீதியான என்று பல காரணங்கள் இருந்தாலும்  ஒரு பிள்ளை மட்டும் வைத்திருப்பவர்கள் அனுபவிக்கும் துன்பங்கள் சொல்லி மாளாது.

குறிப்பாக குழந்தைகளின் உடல் ஆரோக்கியம் என்கிற ரீதியில் திடீர் பிரச்சனைகள் உருவாகும் போது வீட்டில் உருவாகும் பதட்டமும், அதனால் பெற்றோர்கள் அடையும் மன அழுத்தத்தை பல குடும்பங்களில் பார்த்துக் கொண்டு தான் இருக்கின்றேன்.

சில மாதங்களுக்கு முன் நள்ளிரவில் நண்பன் அழைத்த போது தூக்க கலக்கத்தில் கைபேசியை எடுத்த போது அவனின் அழுகுரல்தான் முதலில் கேட்டது. பள்ளித்தோழன் என்பதால் அவனின் குடும்ப விபரங்கள் அனைத்தும் தெரியும். மனைவியுடன் சண்டை போட்டு முடிவே இல்லாமல் போகும் போது அழைப்பான். ஆனால் இந்த முறை அவன் பையன் மருத்துவனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்த்திருப்பதாக சொன்ன போது அவசரமாக ஓடினேன். 

அந்த பெரிய மருத்துவமனையின் வாசலில் இருவருமே நின்று கொண்டிருந்தார்கள். இருவர் கண்ணிலும் நிற்காமல் கண்ணீர வழிந்து கொண்டிருந்தது. இவர்களைப் பொருட்படுத்தாமல் குறிப்பிட்ட பகுதியில் உள்ள நர்ஸ்ஸைப் போய் பார்த்து பேசிய போது இவர்களின் முட்டாள் தனத்தை புரிந்து கொள்ள முடிந்தது.

மூன்று நாட்களாக மலம் கழிக்காமல் இருந்த பையனை இருவருமே கண்டு கொள்ளாமல் இருந்தன் விளைவு இப்போது இங்கே கொண்டு வந்து நிறுத்தியுள்ளது. ஏற்கனவே பத்து வயது பையன் நோஞ்சானாக இருக்கின்றானே? ஒரு புள்ளையை வளர்க்குற லட்சணமா இது? என்று பலமுறை திட்டியுள்ளேன்.  "டேய் சின்ன வயசுல நாமும் இப்படித்தானே இருந்தோம்" என்று சப்பைக்கட்டு கட்டியிருக்கின்றான். ஆனால் இன்று தான் அதற்கான முழுமையான விடை எனக்கு கிடைத்தது.

இது பையனின் ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல.

நாம் தேர்ந்தெடுத்துள்ள வாழ்க்கை முறையும் சேர்த்து அடங்கியுள்ளது. விஸ்தாரமான வீடுகள் மறைந்து தீப்பெட்டி வீட்டுக்குள் வாழ வேண்டிய சூழ்நிலையும், ஆதரவற்ற அண்டை வீடுகள் என் எல்லாமும் சேர்ந்து வீட்டுக்குள் முடங்க வைக்க உருவாகும் மனஅழுத்தத்தை போக்க இன்று உதவிக்கொண்டிருக்கும் ஒரே சமாச்சாரம் இந்த டிவி பெட்டிகள் தான்.

பேச முடியாத பொரணிகளை நெடுந்தொடர் கொண்டு வந்து விடுகின்றது. ஆட முடியாத ஆட்டங்களை திரைப்படங்கள் காண்பிக்க, பத்து முறை பார்த்த காட்சியென்றாலும் கண் இமைக்க மறந்து குடும்பமே பெட்டிப்பாம்பாய் அடங்கி விடுகின்றது.

நண்பன் இரவு வேலை முடித்து அதிகாலை வந்தாலும் அவன் பார்க்கும் காட்சிகள் தொடங்கி, அவன் மனைவி பார்க்க விரும்பும் சீரியல் என்று நாள் முழுக்க ஏதோவொரு காட்சிகள் ஓடிக்கொண்டேயிருக்கின்றது. பாவத்தின் சாட்சியாய் வீட்டில் குழந்தைகள் இருக்க குடும்பத்தின் அடிப்படை ஆரோக்கியம் அதோகதியாகிவிடுகின்றது. கவனிக்க ஆளில்லை. கவனித்து சொல்லவும் இருப்பவர்களுக்கு நேரமும் இல்லை.

இதற்கு மேலாக பள்ளிகளில் கொடுக்கப்படும் வீட்டுப்பாடங்கள் என்றொரு பெரிய கொடுமை ஒன்று உண்டு.  பாலர் பள்ளி படிக்கும் குழந்தைக்கு வயது அதிகபட்சம் நான்கு வயது கூட முடிந்து இருக்காது.  கைவலிக்க இரண்டு மணி நேரம் எழுத வைக்கும் கொடுமை தான் இப்போதுள்ள நவீன கல்வி. 

"மிஸ் வெளியே நிறுத்திடுவாங்க" என்ற பயம் பாதி. வெறுப்பு மீதி என்கிற ரீதியில் கழிவுகளை உடம்புக்குள் அடக்க, அதுவே பழக்கமாகி விட குறிப்பிட்ட நாட்களுக்குள் சமன்நிலை மாறிப் போய்விடுகின்றது.  காலையில் அவசரமாய் ஓட வேண்டும். மாலையில் வந்தது முதல் எழுத உட்கார வேண்டும்.

குழந்தைகளுக்கு விளையாட நேரமில்லை.  விளையாட விடுமுறை கிடைத்தாலும் வெளியே சென்று வர இடமும் இருப்பதில்லை. ஒரு நகர்புற நடுத்தரவர்க்கம் என்றால் இழப்பை பொருட்படுத்தாமல் இயல்பாக வாழ கற்று இருக்க வேண்டும்.

தினந்தோறும் வீட்டை விட்டு நகர்ந்தால் தான் அப்பாவுக்கு காசு.  அத்தனை பேர்களும் வீட்டை விட்டு கிளம்பினால் அம்மாவுக்கு நிம்மதி.

எங்கே கொஞ்ச முடியும்? எப்போது பேச முடியும்?

இருப்பதை வைத்து வாழ நினைப்பவர்களை இயலாமையின் வெளிப்பாடு என்கிறார்கள்.எல்லாவற்றையும் பெற்றவர்களின் வாழ்க்கையை  உழைப்பின் பலன் என்கிறார்கள். ஆனால் இருவருமே சுதந்திரத்தின் வெளிப்பாடாக தங்களை மாற்றிக் கொள்ளத் தொடங்கும் போது தான் இங்கே பலருக்கும் வாழ்க்கையே மாறிவிடுகின்றது.

முந்தைய பதிவு

போரும் அமைதியும்

மதிப்பெண்கள் என்றொரு கிரீடம்

தொடர்புடைய பதிவுகள்

சிக்கினாலும் நாம் சிங்கம் தானே?


Wednesday, October 30, 2013

மதிப்பெண்கள் என்றொரு கீரிடம்

"அப்பா வர்ற சனிக்கிழமையன்று பள்ளிக்கு செல்ல வேண்டும்" 

மூவரும் ஒரே குரலில் சொன்னார்கள்.

ஒருவர் உடனே சுவற்றில் மாட்டியிருந்த காலண்டரில் அடுத்து வரும் சனிக்கிழமை நாளை பெரிதாக சிவப்பு கலரில் வட்டம் போட்டு வைத்தார். மற்றொருவர் கைபேசியில் அலாரத்தில் அந்த தேதியை தயார் செய்து வைத்தார்.  உசாரான பா(ர் )ட்டீங்க?

அன்று தான் காலாண்டு பரிட்சைக்கான மதிப்பெண்கள் (RANK CARD) தருவார்கள்.  பெற்றோர்கள் பள்ளிக்குச் செல்ல வேண்டும்.  முன்பு பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கூட்டமொன்றை வருடந்தோறும் நடத்தினார்கள். கடந்த மூன்றாண்டுகளாக அது நிறுத்தப்பட்டு விட்டது. 

முக்கிய காரணம் பெற்றோர்களின் மனோபாவம். நிர்வாகத்தால் ஈடுகொடுக்க முடியவில்லை. அதற்குப் பதிலாக காலாண்டு, அரையாண்டு பரிட்சை ரேங்க் அட்டை கொடுக்கும் போது ஒவ்வொரு பெற்றோர்களையும் பள்ளிக்கு நேரிடையாக வரவழைத்து விடுகின்றார்கள்.  மாணவர்களின் தரம் குறித்து, குறைபாடுகளைப் பற்றி பேச முடியும். இந்த சமயத்தில் பெற்றோர்களின் பார்வையில் பள்ளி குறித்த அவரவர் எண்ணங்களை எழுதித்தர ஒரு விண்ணப்ப படிவம் போல ஒன்றை கொடுக்கின்றார்கள். 

அந்த தாளில் சகல விபரங்களும் கொடுக்கப்பட்டிருக்கும். எந்த பாடம் பிரச்சனையாக இருக்கின்றது? எந்த ஆசிரியர் பாடம் நடத்துவது புரியவில்லை? போன்ற பல கேள்விகள்.  கடைசியாக நம் எண்ணங்களை அதில் பதிவு செய்ய முடியும். ஒவ்வொரு கேள்விக்கும் நான்கு பதில்கள். ஏதோவொன்றை டிக் செய்ய வேண்டும். அதன் பிறகு குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட அறையில் இருக்கும் வகுப்பாசிரியரை சந்திக்கச் செல்ல வேண்டும்.  

முழுமையாக பேச முடியும். நமக்குரிய அத்தனை சந்தேகங்களையும் கேட்கலாம். 

சென்ற வருடம் சென்றிருந்த போது நடந்த சம்பவங்கள் நினைவுக்கு வந்தது. சென்ற வருடம் பணியாற்றிய சில ஆசிரியைகள் தாக்கு பிடிக்க முடியாமல் சென்று விட்டார்கள்.  நானும் ஒரு வகையில் காரணம். இரண்டு நாளைக்கு ஒரு முறை பள்ளியில் நடக்கும் அத்தனை விசயங்களையும் கேட்டு தெரிந்து கொள்வதுண்டு.  அந்தந்த வகுப்பாசிரியர்களின் தரம் நமக்கு புரிந்து விடும். திருத்தப்படாத வீட்டுப்பாடங்கள், திருத்திய போதும் தாமதமாக வழங்கிய நோட்டுகள். உடனே பரிட்சை வைக்கும் அவசரங்கள் என்று அனைத்தையும் ஆசிரியையின் பார்வைக்கு எடுத்துச் செல்வதோடு பலன் இல்லையெனில் உடனடியாக பள்ளிக்கூட நிர்வாகியின் பார்வைக்கு எடுத்துச் சென்று விடுவதுண்டு.  

என்னால் பாதிக்கப்பட்ட ஒரு ஆசிரியை வீட்டிலிருந்து நான்கு சந்து தாண்டி தான் இருக்கின்றார். இன்று வரையிலும் சாலையில் என்னை சந்தித்தாலும் தலையை திருப்பிக் கொண்டு தான் செல்கின்றார்.

ஆசிரியர் தொழில் என்பதே மன அழுத்தம் மிகுந்த தொழில் தான். மத்தளத்திற்கு இரண்டு பக்கம் இடி போலத்தான் செயல்பட வேண்டும். சந்தேகமே இல்லை.  ஆனால் ஆசிரியர்களுக்கு தகுந்த திட்டமிடுதல் இல்லையெனில் பாதிக்கப்படுவது வகுப்பில் உள்ள மொத்த குழந்தைகளுமாக இருப்பதால் பலருக்கு இந்த திட்டமிடுதலை சொல்லி புரியவைத்தாலும் எடுத்துக் கொள்வதில்லை.  சித்தம் போக்கு சிவன் போக்கு என்கிற ரீதியில் தான் செயல்படுகின்றார்கள்.  

ஒரு வாரம் முழுக்க திருத்தப்படாமல் வைத்திருந்து ஒரே நாளில் வழங்கப்படும் போது அணையை திறந்தவுடன் வெளிப்படும் வேகமான தண்ணீரில் மாட்டிய ஜந்து போல மாணவர்கள் மலங்க மலங்க முழிக்கின்றார்கள்.  

சரியான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை தயார் படுத்தி விடுகின்றார்கள். சராசரி பெற்றோர்கள் தடுமாறி பிள்ளைகளை படுத்தி எடுக்கத் தொடங்கி விடுகின்றார்கள்.  

உடனடியாக வகுப்புத் தேர்வு என்கிற பெயரில் வைக்கப்படும் பரிட்சையில் குறைந்த மதிப்பெண்கள் பெறும் போது மாணவர்கள் படும் பாடு சொல்லி மாளாது.  காரணம் தாமதமாக வழங்கப்படும் நோட்டுக்கள் என்பதை சற்று தாமதமாகத்தான் கண்டு கொண்டேன். இவர்கள் புத்தகங்களை வைத்து படித்த போதிலும் பல சமயம் தடுமாறி விடுகின்றார்கள். அழுத்தப்பட்ட சுமையை தாங்க முடியாமல் அவர்களின் தவிப்பு என்பது எழுத்தில் எழுத முடியாது.

காரணம் இந்திய கல்வி முறையென்பது எழுதியதை படித்து வாந்தி எடுப்பது தான் நடைமுறையாக இருக்கிறது. சொந்தமாக எழுதும் போது மதிப்பெண்கள் குறைவாக வழங்கப்படுவதை பார்த்துக் கொண்டேயிருப்பதாலும் உண்டான மன உளைச்சலை ஒரு நாள் சென்று கொட்டிய விளைவால் அந்த வருடம் சில ஆசிரியைகளின் தலைக்கு மேல் கத்தி தொங்கத் தொடங்கியது.  வருட இறுதியில் அதுவே அவர்களை பதம் பார்க்கவும் தொடங்கி விட்டது.  

காரணம் அவர்களுக்கு வழங்கப்பட்ட எந்த வாய்ப்புகளை பொருட்படுத்த தயாராக இல்லை என்பதோடு மாணவர்களை குறை சொல்வதையே வழக்கமாக கொண்டிருந்தனர்.

இந்த முறை வகுப்புவாரியாக பிரித்து வைத்து, ஒவ்வொரு வகுப்பிற்கும் குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கியிருந்தார்கள்.  

காலையில் இருவருக்கும். மதியம் ஒருவருக்கும் என்று பிரித்து வைத்திருந்த காரணத்தால் முழுமையாக வீட்டில் இருக்க வேண்டிய சூழ்நிலை. இவர்களைப் பொறுத்தவரையிலும் மகத்தான மகிழ்ச்சி. 

காரணம் மதிப்பெண்கள் குறித்த பயமில்லை என்பதோடு அந்தந்த வகுப்பாசிரியர்களிடம் பெற்றுள்ள சிறப்பு சலுகைகள்.  

நன்றாக படிப்பவர்கள் தான் வகுப்புத்தலைமை. இது தவிர ஸ்மார்ட் போர்ட்டு கிளாஸ் நடக்கும் சமயத்தில் கணினி இயக்க முன்னுரிமை. ஆசிரியர் சொல்ல முழு பாடத்தையும் மாணவர்களுக்கு வாசித்துக் காட்டுதல் போன்ற பல சலுகைகள்.  இது இவர்களுக்கு வகுப்பில் கௌரவம் சார்ந்த விசயங்கள். வீட்டில் இரண்டு பேர்கள் இந்த வேலைகளை செய்வதால் அவர்களுக்கு தாங்க முடியாத பெருமை. ஒருவருக்கு அது குறித்த கவலை மனதிற்குள் இருந்தாலும் அதிகமாக அலட்டிக் கொள்வதில்லை. 

"நீ ஏண்டா முயற்சி செய்யவதில்லை?" என்றால் டக் கென்று பதில் வரும்.

"ஃபர்ஸ்ட் ரேங்க் எடுக்குறவுங்க தான் இந்த வேலை செய்யனும்ன்னா மத்தவங்க எல்லாம் முட்டாளாப்பா? மொதல்ல மிஸ்களை நல்லாப் பேசச் சொல்லுங்கப்பா?  யாருமே பாடத்தைத் தவிர வேறு எதையுமே பேச மாட்டுறாங்க. எங்களையும் உள்ளே பேச விட மாட்டுறாங்க."

உடனே மற்ற இரண்டு பேரும் இது போன்ற சமயத்தில் சேர்ந்து கொண்டு ரவுண்டு கட்டத் தொடங்கி விடுவார்கள்.

"இவளுக்கு எப்பப் பார்த்தாலும் கிளாஸ் ரூம்ல கதையளக்கனும்ப்பா.  மிஸ் பாடத்தை நடத்தும் போது அதை கவனிக்காமல் மற்ற எல்லா வேலைகளையும் பார்த்துக் கொண்டிருப்பாள்."

உடனே சிறிய போர்க்களம் உருவாகும். அமளி வெள்ளத்தில் நாங்கள் இருவரும் அடித்துச் செல்ல நான் தான் இவளை கரை சேர்த்தாக வேண்டும். வாய் வார்த்தைகள் கை கலப்பில் தொடங்கி பாயத் தொடங்கும் போது அவளுடன் வெளியே ஓடி தப்பிக்க வேண்டும். 

தெரிந்தோ தெரியாமலோ குழந்தைகளின் அறிவை கற்பூர புத்தி, கரிப்புத்தி, வாழைமட்டை என்று என்று என் ஆசிரியர்கள் சொன்னது இப்போது நினைவுக்கு வருகின்றது.  

இது சரியா தவறா என்று தெரியவில்லை.  

ஆனால் குழந்தைகளின் இயல்பில் இருக்கும் அறிவுத்திறனையும் இவர்களைச் சந்திக்க வரும் மற்ற தோழிகளின் குணாதிசியங்களையும் பார்க்கும் போது பல சமயம் இது சரியோ? என்று தோன்றுகின்றது.

ஒருவர் பாடப் புத்தகங்களை வீட்டில் வந்து தொடுவதே இல்லை.  வீட்டுப் பாடங்களைக் கூட பள்ளியிலேயே அவசரஅவசரமாக முடித்து விட்டு வந்து விடுவார்.  படிக்க வேண்டியது எதுவும் இல்லையா? என்றால் அதெல்லாம் நான் பார்த்துக்குறேன் என்று தெனாவெட்டாக பதில் அளித்த போது தொடக்கத்தில் சற்று குழப்பமாகவே இருந்தது.  

இதென்ன வினோதமான பழக்கமென்று?   

ஆனால் பாடத்திட்டத்திற்கு அப்பால் அவள் வளர்ந்து நிற்பதை உணர்ந்து கொண்ட போது அதற்குப் பிறகு அவளை தொந்தரவு செய்ய முடியவில்லை. வீட்டுக்குள் இறைந்து கிடக்கும் புத்தகங்களில் ஏதோவொன்றில் மூழ்கி கிடப்பாள். சிறுவர் மலர், வார மலர், நீதிக்கதைகள், குழந்தைகள் கதைகள் என்று ஏதோவொன்று.  

படிக்க ஏதுமில்லை என்றால் பழைய பத்திரிக்கைகள்.  காரணம் தினந்தோறும் காலையில் வரும் பத்திரிக்கைகளையும் ஒரு கை பார்த்து விடுவதுண்டு.  

சென்ற ஆண்டு இவரைப் பற்றி வகுப்பாசிரியர் ஒரு வினோதமான குற்றச்சாட்டை வைத்தார்.  

ரொம்ப செல்லம் கொடுக்குறீங்களோ? என்றார்

குழப்பத்துடன் ஏனுங்க என்றேன்?

மொத்த மதிப்பெண்கள் 800. வாங்கியிருப்பது 780.  அவ தான் ஏ ஒன் கிரேடு அதாவது முதல் ரேங்க்.  அவ நினைச்சுருந்தா இன்னும் பத்து மார்க் கூட வாங்கியிருக்க முடியும்.  ஆனால் அதைப் பற்றி கண்டு கொள்ளவே மாட்டுறா? நாங்க சொல்லும் போது தலையாட்டுறா? அப்புறம் மறுபடியும் அவ போக்குல தான் போய்க்கிட்டு இருக்கா? என்றார்

வகுப்பாசிரியருக்கு மகளின் மதிப்பெண் என்பது அவரது கீரிடத்தில் வைக்கப்படும் வைரக்கல். எனக்கோ அது முக்கியமென்றாலும் அது மட்டுமே முக்கியமல்ல என்பதை அவரிடம் எப்படி சொல்ல முடியும்?

சிரித்துக் கொண்டு அமைதியாக இருந்தேன்.

தொடர்புடைய பதிவுகள்

Monday, October 28, 2013

வவ்வால் - தெரியாத உண்மைகள்

மொய் விருந்து பற்றி கேள்விபட்டுருப்பீர்கள் தானே? இன்னமும் தஞ்சாவூர் மாவட்டங்களில் பல இடங்களில் இந்த முறைமை நடந்து கொண்டேதான் இருக்கின்றது. நம் வலையுலகில் மொய் என்பது பிரசித்தமானது.

சென்ற வாரத்தில் நம் "வீக்கிபீடியா புகழ்" பதிவர் வவ்வால் அவர்கள் என் டாலர் நகரம் புத்தகத்திற்கு ஒரு இலவச விளம்பரத்தை கொடுத்து இருந்தார். அவர் வெளியிட்ட சிறிது நேரத்தில் உலகம் முழுக்க இருக்கும் தமிழர்களின் பார்வையில் பட்டு அந்த புத்தகத்திற்கான கிராக்கி பல மடங்கு அதிகரித்தது என்று விகடன் குழுமம் என்னிடம் நடு ராத்திரியில் அழைத்து தெரிவித்தார்கள்.

சமூக வலைதளங்களில் அவர் எழுதிய அந்த விபரத்தினை எடுத்துப் போட்டபிறகு என் புகழ் வானத்தின் எல்லையை தொடப்பார்த்து அப்படியே ரிவர்ஸ் கியர் போட்டு திருப்பூருக்கே திரும்பி வந்ததை என் தொடர்பில் இருக்கும் அத்தனை நண்பர்களும் பார்த்துவிட்டு ஆச்சரியத்துடன் என்னுடன் பகிர்ந்து கொண்டார்கள்.

நமக்கு வரலாறுச் சம்பவங்கள் முக்கியம் தானே?

இதன் காரணமாக அந்த குறிப்பிட்ட விபரங்களை இந்த இடத்தில் எழுதி வைப்பது முக்கியமானது என்பதற்காக மட்டுமே சுய (பீத்தல்) புராணம்.

# விகடன் வெளியீடு கடையில சுஜாதா, மதன் எழுதிய நூல்கள், விகடனில் தொடரா வந்தது எல்லாம் போட்டு கடைய ரொப்பி வச்சிருக்காங்க, பிரபல எழுத்தாளரும்,பத்திரிக்கையாளரும், பதிவருமான அமுதவன் அவர்கள் சமீபத்தில் எழுதிய " என்றென்றும் சுஜாதா" என்ற புத்தகத்தினை விகடன் வெளியிட்டு இருக்குனு சொன்னாரேனு தேடு தேடுனு தேடினேன் ஆனால் இல்லவே இல்லை , போட்ட புக்குலாம் வித்து தீர்ந்து போச்சூ போல. ஆனால் அங்கே இன்னொரு புக்கு கண்ணில் சிக்கியது,

திருப்பூரின் பிரபல தொழிலதிபதிவரான 'ஜோதிஜி" எழுதிய டாலர் நகரம் தான் ஆனால் விலை தான் டாலரில் சம்பாதிக்கிறவங்களுக்கு ஏத்தாப்போல வச்சிட்டாங்க , சரி போட்டாவாச்சும் எடுத்துப்போம்னு எடுத்துக்கிட்டேன்.

டாலர் நகரம் பக்கத்தில சோடிப்போட்டாப்போல அம்மையாரின் புகைப்பட ஆல்பம்னு ஒரு புக்கு இருந்துச்சு,அட்டையில இருந்த ரெண்டுப்படமும் பார்த்தால் "டாலர் நகரம்" படிக்கும் முன்,படித்த பின் காட்டும் ரியாக்‌ஷன் போலவே இருந்துச்சு ! நல்லாத்தான் சோடிப்போட்டு வச்சிருக்காங்க அவ்வ்!

முழுமையாக விபரம் படிக்க

•••••••••••••••••••••••••••••••••••••••••
இதற்கு என்ன கைமாறு செய்வது என்று யோசித்துக் கொண்டு கடந்த சில நாட்களாக புரண்டு படுத்து தூக்கம் தவிர்த்து, துயரமாய் யோசித்து வவ்வால் குறித்து தேடியலைந்த போது தமிழகத்தின் உண்மையான விக்கிபீடியாவாக இருந்த எழுத்தாளர் சுஜாதா எழுதிய இந்த விபரங்களை வலைபதிவின் அறிவுச்சுடருக்கு  சமர்பிக்கின்றேன். 

இந்த படம் எடுக்க நடிகை அசின் அவர்களிடம் கால்ஷீட் கேட்ட போது அவர் மறுத்த காரணத்தால் திருப்பூருக்கு வந்த வெளிநாட்டு அம்மிணியை வைத்து எடுத்தோம்.


வௌவால் ஒரு பறவையல்ல. அதுவொரு ராத்திரி மிருகம்.  அப்போது தான் அதற்கு தேவைப்படும் உணவான பூச்சி மற்றும் கொசுக்கள் கிடைக்கின்றன. பகல் நேரத்தில் தலைகீழாகத் தொங்கிக் கொண்டு தூங்கும்.  குட்டி போட்டுப் பால் தரும்.  இரண்டு மாதங்கள் வரை குட்டிக்கு அம்மாதன் ஏரோப்ளேன். வௌவாலுக்குக் கண் உண்டு.  ஆனால் கண் பார்வை அதற்கு அதிகம் தேவையில்லை.  இந்த திறமைமிக்க ஜந்து சவுண்ட் ரேஜ்சிங் என்னும் ஒரு முறைப்படி இருட்டில் அமர்ந்து கொள்ளாமல் தன் இஷ்டத்துக்குப் பற்க்கிறது. இதற்கு உதவுவது அல்ட்ரா சவுண்ட்,

அப்படி என்றால்?

மனிதர்களால் ஒலி அலைகளைச் சுமார் என்பது சைக்கிளிருந்து பதினையாயிரம் அல்லது இருபதாயிரம் சைக்கிள்கள் வரை தான் உணர முடியும். (நம்ம ரெண்டு சக்கர சைக்கிள் அல்ல.  மீட்டர், கிலோ மாதிரி ஒலிகளுக்கான அளவு).  பாடகி எஸ்.ஜானகி தன் அதி கீச்சுக்குரலில் பாடினால் சுமார் ஆயிரம், அது கணக்கீடு அளவில் நூறு சைக்கிள் இருக்கலாம்.  எனவே இருபதாயிரத்துக்கு அப்புறம் நம்மால் உணர முடியாது.  ஒரு வௌவாலின் தொண்டை ஒரு விசில் போல. ப்ஹா என்று இயங்கும் போது ஒரு லட்சத்து ஐமதபதாயிரம் சைக்ளி கீச்சில் சவுண்டு வெளிப்படுகிற்து.

நமக்கெல்லாம் கேட்கவே கேட்காது.  தொடர்ந்து அதால் இந்த லட்சத்து சொச்சத்தை ஊதிக் கொண்டிருக்க முடியாது.  அவ்வப்போது விட்டு விட்டு தான் கீறீச்சிட்டுக் கொண்டிருக்கும்.  இதற்காக காற்றழுத்த தேவையைக் கணக்கிட்டுப் பார்த்திருக்கின்றார்கள். தொண்டையில் ஒரு நீராவி பாய்லருக்கு உண்டான அழுத்தமாம்.

பரவாயில்லையல்லவா?

இந்த மாதிரி சின்ன துடிப்பலைகளாக செகண்டு அஞ்சிலிருந்து அறுபது வரை, சில வகை வௌவால்கள் இருநூறு வரை கூட வெளியிடுகிற்து. ஒவ்வொரு துடிப்பும் மிகக் குறைந்த கால அளவே நீடிக்கும்.  ஒரு செகண்டில் ஐயாயிரம் பாகம்.

இப்போது பதினேழு மீட்டர் தூரத்தில் ஏதாவது தடை இருந்தால் வௌவால் வெளிப்படுத்தும் அல்ட்ரா ஒளி அதைப் போல அடைந்து திரும்புவதற்குச் சுமார் ஒரு செகண்டில் பத்து பாகம் ஆகும்.  சவுண்டுக்கும் உள்ள நேர வித்தியாசத்திலிருந்து அந்தப் பொருள் எவ்வளவு தூரத்தில் இருக்கிறது என்று கண்டுபிடித்துவிடலாம்.  இது தான் வவ்வாலின் சமார்த்தியம்.

ஒரு வவ்வால் சுவரை நோக்கி வேகமாக பறக்கிறது என்று வைத்துக் கொள்வோம்.  முதலில் ஒரு ஒலித் துடிப்பை அனுப்பும்.  சுவரில் பட்டு எதிரொலித்து அதன் காதில் விழுந்தததும் அடுத்த துடிப்புகளின் எண்ணிக்யும் ஜாஸ்தி பண்ணிக் கொண்டே போக்கும்.  ரொம்ப கிட்டத்தில் வந்துவிட்டால் துடிப்பை அனுப்பின மாத்திரத்தில் பதிலும் வந்துவிடும்.  உடனே டேஞ்சர் என்று சட்டென்று பறக்கும் திசையை வெவ்வால் மாற்றிக் கொண்டு விடும்.

ஆகவே வவ்வாலுக்கு காதுதான் கண்

இதை முதலில் கண்டுபிடித்த லாஸரோஸ் பாஸ்லான்ஸானி என்னும் விஞ்ஞானி.  வௌவாலின் இரண்டு காதுகளையும் துணியால் கட்டிப் பறக்கவிட்டார்.அவர்.  தூண் கதவு சுவர் மேலேலெல்லாம் டங்கு டக் கென்று மோதிக் கொண்டு தொப்பென்று விழுந்து விட்டது வவ்வால். 

மிக மிக விந்தையான மிருகம் இது.

ஒரு மில்லி மீட்டருக்கும் குறைவான ஒல்லியான கம்பிகளைக் குறுக்கும் நெடுக்கும் ஒரு அறையில் கட்டி இருட்டில் அதை விட்டுப் பாருங்கள்.  கம்பி மேல் படாமல் அழகாக ஊடே பறக்கும். வவ்வாலின் ஒலித்துடிப்புகள் ஒரு கொசு (எடை ,002 கிராம்) அது வந்து விட்டால் போதும்.  அது எங்கே போனாலும் கும்மிருட்டிலும் துரத்திச் சாப்பிட்டு விடும். இப்படிப் பறந்து கொண்டே நிமிஷத்துக்கு பத்து கொசுக்கள் பிடிக்கும்.

மீன் சாப்பிடுகிற, பழம் சாப்பிடுகிற, தேன் சாப்பிடுகிற என்ற சமத்து வெவால்களை தவிர ரத்தம் சாப்பிடுகிற வெவாலும் உண்டு. டிராகூலாகவுக்கு ஐடியா கொடுத்தவர் இவர்.

தென் அமெரிக்காவில் உள்ள இந்த வவ்வால் தூங்கிக் கொண்டிருக்கிற ஒருவரைக் கடி,த்தால் கடிபட்டவர் துளிக்கூட வலி தெரியாமல் தொடர்ந்து குறட்டைவிட்டுக் கொண்டிருப்பார்.  ரத்தத்தை இது காபி கூல்டிரிங்ஸ் சாப்பிடுவது போல உறிஞ்சிக் குடிப்பதில்லை.  பாயசம் ஸ்டைல்தான். பல்லால் ஒரு சின்னகட்.  பிறகு நாக்கினால் குடிக்க வேண்டியது.  ரத்தம் கெட்டிப்பட்டு விடுமே என்பீர்கள்.  நோ ப்ளிஸ்.  வெவாலின் எச்சிலுக்கு ஒரு ஸ்பெஷல் சக்தியுண்டு. தொடர்ச்சியாக ரத்தம் உறையாமல் வந்து கொண்டே இருக்கும்.

••••••••••••••••••••••••••••••

2013தீபாவளி (02.11.2013) பண்டிகையை முன்னிட்டு நம் தமிழ்நாடு அரசு தாயுள்ளத்தோடு எடுத்த இரண்டு நடவடிக்கைகள்.

முதல் படம் சென்னையில் ஷாப்பிங் மாலில் திறக்கப்பட்ட புதிய மதுக்கடையின் படம். இரண்டாவது படத்திற்கு விளக்கம் தேவையில்லை.ஜனநாயகத்தை போற்றுவோம். வளர்ச்சியை பாராட்டுவோம்.  

Saturday, October 26, 2013

போரும் அமைதியும்


அலுவலகத்தில் எந்த வேளையிருந்தாலும் தினந்தோறும் மதியம் மூன்று மணிக்கு வீட்டில் இருப்பது போல பார்த்துக் கொள்வது வழக்கம். அந்த நேரம் பள்ளி விட்டு மூவரும் வீட்டுக்கு வரும் நேரம்.  ஒருவர் மட்டும் சிலசமயம் தாமதமாக வருவார். காரணம் பள்ளி விட்டதும் நேராக விளையாட்டு மைதானத்திற்குச் சென்று களைத்துப் போகும் அளவுக்கு விளையாடி விட்டு வர மற்ற இருவரும் வந்து விடுகின்றார்கள். 

பள்ளியில் ஆறாவது வகுப்புக்கு மேல் தான் மாணவர்களை விளையாட்டு மைதானம் பக்கம் அனுப்புகின்றார்கள்.  

கீழே உள்ள வகுப்பிற்கு பெயருக்கென்று ஏதோவொரு விளையாட்டை விளையாடச் சொல்லிவிட்டு கண்காணிப்போடு வகுப்பறைக்கு அனுப்பி விடுகின்றார்கள். ஆனால் வீட்டில் மூத்தவருக்கு படிப்பைப் போல விளையாட்டிலும் அதீத வெறி. பன்முகத் திறமைகள் கொண்ட குழந்தைகள் உருவாவது இயற்கை தந்த வரம்.

ஒவ்வொரு முறையும் ஆச்சரியமாக இருக்கும். பயிற்சி இல்லாமலேயே அவர் காட்டும் ஆர்வமும், முயற்சியும் வியப்பில் ஆழ்த்தும். தடை சொல்லாமல் அனுமதிப்பதால் அவராகவே உருண்டு புரண்டு கொண்டிருக்கின்றார். 

அருகாமைப் பள்ளியென்பது குழந்தைகளுக்கு மட்டுமல்ல பெற்றோர்களுக்கும் ஆயிரமாயிரம் சந்தோஷத்தை தரக்கூடியது. பள்ளியிலிருந்து தொலைவில் இருந்து வருபவர்கள் படும் பாட்டையும், பள்ளி வாகனங்களில் வந்து போகும் குழந்தைகளின் அவஸ்த்தைகளையும் பார்த்துக் கொண்டிருப்பதால் நகர்புற வாழ்க்கையில் இது போன்ற அனுபவங்கள் ஏறக்குறைய நரகத்திற்கு சமமானதே. 

எங்கள் வீட்டிலிருந்து பள்ளிக்கு கூப்பிடு தொலைவு தான். ஐந்து நிமிடத்திற்குள் நடந்து போய் விடலாம். ஆனால் அவர்கள் வீட்டுக்குள் நுழையும் போது அவர்களின் அலுப்பை பார்க்கும் போது தொடக்கத்தில் பாடச் சுமையின் தாக்கமோ என்று நினைத்துக் கொண்டதுண்டு. ஆனால் நாள்பட அவர்களின் சுகவாசி தன்மையை உணர வைத்தது. 

கிராமத்து பள்ளிகளில் ஐந்து கிலோ மீட்டர் மிதிவண்டி மூலம் பள்ளிக்கு வந்தவர்களும், நீண்ட தொலைவை நடந்தே வந்தவர்களையும் பார்த்த வாழ்க்கையில் அருகே உள்ள பள்ளியின் தொலைவை கணக்கீடும் போது பெரிய தூரமில்லை தான். ஆனால் இன்று குழந்தைகளின் உடல் வலுவின் தன்மை மாறியுள்ளது. ஓடி விளையாடிய காலம் மலையேறிவிட்டது. வீடு தான் மைதானம். கணினியும், தொலைக்காட்சியும் தான் விளையாட்டுப் பொருட்கள். இதுவே குழந்தைகளின் கண்களையும், கவனத்தையும் திருடிக் கொள்ள அடிப்படை ஆரோக்கியமும் அதோகதியாகிவிட்டது. 

நடுத்தர வாழ்க்கையில் குறுகிய வீடுகளும், போராட்ட வாழ்க்கையும் ஓட வைத்துக் கொண்டிருக்க நாம் விரும்பிய வாழ்க்கையை விட கிடைத்த வாழ்க்கையை தக்க வைப்பதே பெரும்பாடாக உள்ளது. 

ஒரே இடத்தில் உட்கார்ந்து பழகி விட்ட குழந்தைகளிடத்தில் ஆரோக்கிமென்பது அளவாகத்தானே இருக்கும். 

"அடைகோழியாட்டாம் என்னடா வீட்டுக்குளே?" என்று கேட்டு வெளியே விரட்டிய கிராமத்து வாழ்க்கையென்பது தற்போது "வெளியே போகாதே. கண்ணு மணணு தெரியாமா வர்றவன் மோத போறான்" என்று பயந்து வாழும் வாழ்க்கையில் சிலவற்றை இழந்து தான் குழந்தைகள் வளர வேண்டியதாக உள்ளது. 

நாம் தான் காரணம். 

இதுவும் ஒருவகையில் நாம் உருவாக்கி வைத்துக் கொண்ட வசதிகளை யோசிக்க வைக்கின்றது. எது நமக்குத் தேவை? என்பதை விட நம் குழந்தைகள் ஆசைப்படுகின்றார்கள் என்பதற்காக ஒவ்வொன்றாக சேர்த்து வைக்க அதுவே குறிப்பிட்ட காலத்திற்குள் தேவையாகவும் மாறிவிடுகின்றது. 

காலை எழுந்தது முதல் எப்போதும் போல பரபரப்பு தொற்றிக் கொள்ளும். பல சமயம் கரையை கடக்கப் போகும் புயலைப் போல ஒவ்வொரு நிமிடமும் திகிலாக நகரும். ஆனால் வீட்டுக்குள் நடக்கும் பஞ்சாயத்துக்களில் நான் கலந்து கொள்வதில்லை. காரணம் நாம் தான் கடைசியில் ப்யூஸ் போன பல்பு போல மாறிவிடும் அபாயமிருப்பதால் தள்ளி நின்று வேடிக்கை பார்ப்பதோடு சரி. 

வீட்டுக்குள் மூன்று பேர்கள் இருக்கின்றார்கள் என்று தான் பெயரே தவிர முப்பது பேர்கள் இருப்பதைப் போலவே ஒவ்வொரு முறையும் களேபரபடுத்துகின்றார்கள். ஓயாத பேச்சும், நிறுத்த முடியாத சண்டைகளும், விடாத கேள்விகளுமாய் காலையில் இரண்டு மணி நேரத்திற்குள் வீட்டுக்குள் ஒரு போர்க்கள சூழலை கொண்டு வந்து விடுகின்றார்கள். 

பத்து வயதில் நாமெல்லாம் இப்படியா இருந்தோம்? என்ற வயதானவர்கள் எப்போதும் சொல்லும் கேள்விகள் மனதிற்குள் வந்து போனாலும் வெளியே காட்டிக் கொள்ளாமல் அவர்களின் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் கவனித்துக் கொண்டே வருவதுண்டு. 

என்ன செய்கின்றார்கள்? ஏன் செய்கின்றார்கள்? என்ற இரண்டு கேள்விகளுக்கும் தினந்தோறும் ஏராளமான பதில்களும் உடனடியாக கிடைத்து விடுகின்றது.

மூவரும் காலை எழுந்தது முதல் பள்ளிக்குச் செல்வது வரைக்கும் உண்டான ஒவ்வொரு அடியிலும் எவரோ ஒருவரின் சப்தம் ஓங்கியிருக்கும். தேவையிருக்கின்றதோ இல்லையோ எவரோ ஒருவர் மற்றொருவருடனும் வம்பிழுப்பதும் வாடிக்கையாகவே உள்ளது.  

நிறுத்தவும் முடியாது.

அறிவுரையாகச் சொன்னாலும் எடுபடவும் செய்வதில்லை.  


"வலுத்தவான் வாழ்வான்" என்று  நினைத்துக் கொண்டு கவனித்தாலும் கடைசியில் அதுவும் தோற்றுப் போய்விடுகின்றது.  சண்டைகள் உக்கிரமாகி என்னவோ நடக்கப் போகின்றது என்று யோசிக்கும் தருணத்தில் சம்மந்தமில்லாமல் வெள்ளைக்கொடி பறப்பதும், எதிர்பாராத சமயத்தில் வாள சண்டையின் ணங் டங் என்ற சப்தம் கேட்பதும் வாடிக்கை என்றாலும் ஒவ்வொரு முறையும் நம் உயிரை கையில் பிடித்துக் கொண்டு பார்க்க வேண்டியதாக உள்ளது. 

எதிர்பாராத சமயத்தில் கைகுலுக்கிக் கொள்கின்றார்கள். உள்ளே நுழைந்த நாம் தான் பல்பு வாங்க வேண்டியதாக உள்ளது.

"என் பென்சிலை பார்த்தீங்களா?"
"என்னுடைய ஹோம் ஒர்க் நோட்டை காணல"

என்று தொடங்கி கடைசியில் "என் ஜட்டியை இவள் போட்டுக்கிட்டாள்" என்பது வரைக்கும் நகைச்சுவைக்கு பஞ்சமில்லாமல் ஒவ்வொரு நாளும் நகர்ந்து கொண்டேயிருக்கின்றது.

வெறும் கேள்விகளாக வந்துகொண்டிருக்கும் அவர்களின் ஒவ்வொரு எதிர்பார்ப்புகளுக்கும் நாம் கண்டும் காணாமல் இருந்தாலும் திட்டுக்கள் வரும். நான் கண்டு பிடித்து தருகின்றேன் என்றாலும் "ஆமா நீங்க கண்டு பிடித்து தருவதற்குள் எங்க பள்ளிக்கூடம் ஆரம்பிச்சுடுவாங்க" என்று நோ பால் ஆக்கும் தந்திரமும் நடக்கும்.

அவர்கள் தேடுகின்ற அனைத்தும் அருகே தான் இருக்கும். ஆனால் செயல்களின் அவசரமும், பொறுமையின்மையும் களேபரப்படுத்த நமக்கு அதிக கோபத்தை உருவாக்கினாலும் மூவரும் பள்ளிக்குச் சென்றதும் வீட்டைக் கவனித்ததால்  வீட்டுக்குள் நிலவும் அமைதியென்பது நமக்கு தாங்க முடியாத வெறுமையை உருவாக்குகின்றது.

Wednesday, October 23, 2013

சுப. உதயகுமார் - அறியாத தகவல்கள்


அவன் ஒரு கைக்கூலி. வெளிநாட்டிலிருந்து பணம் வாங்கியவன். ஒரு ட்ரஸ்ட் அமைத்து வெளிநாட்டுப் பணத்தை அபகரித்தவன். மக்களை மிரட்டுபவன். பல கோடி ரூபாய் சொத்துக்களை வைத்துள்ளவன். அயோக்கியன். அமெரிக்க கைக்கூலி. இவ்வாறெல்லாம் மத்திய அரசு மந்திரிகளும், மாநில அரசின் காவல்துறையும் சொல்கின்றன. விஷயத்தை விசாரித்தால், அவை அத்தனையும் உண்மை என்றே தெரிய வருகிறது.

நாகர்கோயில் அருகே, கோட்டாரில் உள்ள இசங்கன் விளையில் பிறந்தான் ஒருவன். அவன் தந்தை பெயர் பரமார்த்தலிங்கம். அவன் தந்தை திராவிடர் கழகத்திலும் பின்னர் திமுகவிலும் தீவிர ஈடுபாடு கொண்டவர். போராட்டம் என்பது அவனுக்கு புதிதல்ல. வளரும் பருவத்திலேயே அவன் தந்தை காங்கிரசின் கோட்டையாக இருந்த அந்த ஊரில் திராவிடர் கழக கொள்கைகளைப் பேசிக்கொண்டிருந்ததால், அவர் தாக்கப்பட்டதை பல முறை தன் தங்கைகளோடு நின்று தடுத்திருக்கிறான். அதனால் போராட்டங்கள் அவனுக்கு புதிதல்ல.

அவன் அம்மா கல்லுப்பட்டியில் உள்ள காந்திய ஆசிரமத்தில் படித்தவர்கள் அவர்களின் சொந்த ஊர் நாகர்கோவில். அவர் அப்பா திமுக என்றால் அம்மாவோ தீவிர காங்கிரஸ் ஆதரவாளர். 

நேரெதிரான அரசியல் கோட்பாடுகளைக் கொண்டிருந்தாலும், அவனின் தாய் தந்தையரின் சிறப்பான வாழ்வில் அரசியல் பிடிப்புகள் பிளவை ஏற்படுத்தவில்லை. இரண்டு அரசியல் சிந்தனைகளுக்கும் அந்த வீட்டில் இடம் இருந்தது. அவன் தந்தையின் விருப்பப்படி வீட்டில் பெரியார் அண்ணாவின் படங்கள் இருந்தன. அவன் தாய் விருப்பப்படி, காமராஜர் படமும் வீட்டில் இருந்தது. அவன் குடும்பம் இந்துக் குடும்பம். ஆனாலும் அவன் அம்மா சமூக நலத்துறையில் செய்து வந்த பணியின் காரணமாக பால்வாடி மற்றும் பல வீடுகளுக்கு சென்று வந்ததால் அந்த வீடுகளில் கிறித்துவ மதத்தினர் பிரார்த்தனை செய்வதைப் பார்த்து, தனது பிள்ளையையும் பிரார்த்தனை செய்யச் சொல்வார்.

அவனுக்கு கிறித்துவ மதத்தின் மீது மரியாதை உண்டு. அவன் அம்மா கிறித்துவ மதத்தினர் போல பிரார்த்தனை செய்தாலும் அவன் வீட்டின் அருகிலிருந்த சுடலைமாடன், இசக்கியம்மன் கோயிலுக்குச் செல்வதையும் தவிர்த்ததில்லை. திராவிடர் கழகக் கொள்கைகளை உடைய அவன் தந்தை இந்த வழிபாடுகளில் கலந்து கொள்வதில்லை.

நாகர்கோயிலில் உள்ள டிவிடி மேல்நிலைப் பள்ளியில் படித்தான். அவன் படித்தது தமிழ் மீடியம் என்றாலும், ஆங்கில மொழி மீது இருந்த ஆர்வம் காரணமாக ஆங்கில மொழியை ஆர்வத்தோடு கற்றான். அவன் தந்தை அவனை இன்ஜினியர் ஆக்க விரும்பினாலும், அவன் தனக்கு விருப்பமான, சமூக அறிவியலைப் படித்தான். சமூக அறிவியலை படித்ததாலோ என்னவோ சமூகத்தின் மீது தீராத காதல் கொண்டவனாக மாறினான். 

கேரளாவில் ஆங்கில இலக்கியம் படித்தான். பின்னர் புதுதில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் அவன் அறிவை விசாலமாக்கியது. மார்க்சியம் கற்று, மார்க்சியத்தின் மீது ஆர்வம் இருந்தாலும், மார்க்சியம் அமல்படுத்தப்பட்ட எத்தியோப்பியாவின் யதார்த்த நிலைமைகள் அவனை மார்க்சியம் மீது நம்பிக்கை இழக்கச் செய்தது. 

ஆசிரியர் வேலை கிடைத்து எத்தியோப்பியாவுக்கு பயணம் செய்த அவன், அப்போது எத்தியோப்பியாவை ஆட்சி செய்து கொண்டிருந்த மெங்கிஸ்டு ஹெல்மெரியம் என்பவர் கம்யூனிசம் என்ற பெயரில், சோவியத் ரஷ்யா துணையோடு தனி மனித சுதந்திரத்தை ஒடுக்கியதையும், பார்த்து மனம் வெறுத்தான். 1987 வரை எத்தியோப்பியாவில் பணியாற்றினான் அந்தக் கைக்கூலி. யுனெஸ்கோ துணையோடு, எத்தியோப்பியாவிலும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக பணியாற்றினான். 

அவன் பணியை எதியோப்பிய அரசாங்கம் நட்பாக பார்க்கவில்லை. எத்தியோப்பிய அரசாங்கத்தின் உளவுப்படை அவனை கண்காணிப்புக்குள்ளாக்கியது. 

யுனெஸ்கோ அமைப்பின் மூலமாக, எத்தியோப்பிய அரசாங்கத்துக்கு எதிராக அவன் செயல்படுகிறான் என்று அந்த அரசாங்கம் சந்தேகித்தது. நிம்மதியாக பணியாற்ற முடியாத சூழல். அந்தச் சூழலில், அவன் மேலும் பணியாற்ற விருப்பம் தெரிவிக்காமல் திரும்பி வந்தான்.

எத்தியோப்பியாவில் பணிக்குச் செல்வதற்கு முன்பே, இந்துமகா சமுத்திரத்தில் அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ் ஆகியவற்றின் அணுசக்திக் கப்பல்கள் நிலை கொண்டிருப்பதை எதிர்த்து, இந்துமகா சமுத்திர அமைதிக் குழு என்ற ஒரு அமைப்பை தன்னுடைய 21வது வயதில் ஏற்படுத்தினான். வளர்ந்த நாடுகளுக்கிடையிலான பனிப்போர், இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்பதை சுட்டிக்காட்டும் வகையில் அந்தக் குழு பணியாற்றியது. அணு ஆயுதம் தாங்கியுள்ள அந்தக் கப்பல்கள் தங்கள் ஆயுதத்தைப் பயன்படுத்தினால், இந்தியாவுக்கு நேரும் பேரழிவைப் பற்றி பேசியது அந்தக் குழு.

அந்த சமயத்தில்தான் அவனுக்கு அணு ஆயுதங்கள், அணு சக்தி தொடர்பான விழிப்புணர்வு பெருமளவில் ஏற்பட்டது. அணு சக்தியும், அணு ஆயுதங்களும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்துள்ளது அணு ஆயுதத் தயாரிப்புக்காகவே அணு சக்தி என்ற சிந்தனையே உருவானது என்பதை புரிந்து கொண்டான்.

எத்தியோப்பியாவிலிருந்து வெளியேறி, அமெரிக்காவில் உள்ள நாட்டர்டாம் பல்கலைக்கழகத்தில் தன் மேற்படிப்பை தொடர்ந்தான். அங்கே மேற்படிப்பு முடிந்ததும், ஆஸ்திரேலியா சென்று உதவித்தொகையோடு படிப்பை தொடர்ந்தான். அங்கே ஒரு பேராசிரியரின் உதவியாளராக வேலை பார்த்துக் கொண்டே, முனைவர் படிப்பையும் அவன் முடித்தான். பின்னர் அமெரிக்காவில் உள்ள ஹவாயில் வேலை கிடைத்தது. அங்கும் பணியாற்றி விட்டு, 2001ல் முழு நேரமாக இந்தியாவுக்கு திரும்பினான்.

இந்தியாவில் பிஜேபி அரசு செய்த அணு ஆயுதச் சோதனையின் விளைவுகள் இதற்கு எதிராக பணியாற்ற வேண்டிய கடமையை அவனுக்கு உணர்த்தியது. வலதுசாரி தீவிரவாதிகளாக இருந்து அப்பாவி முகமூடி போட்டுக்கொண்டு வலம் வரும் ஆர்எஸ்எஸ், பிஜேபி, விஎச்பி ஆகிய அமைப்புகளைப் பற்றியே அவன் முனைவர் படிப்புக்கான ஆய்வு செய்திருந்ததால், இது பற்றி எழுதுவதும், விவாதிப்பதும் அவனுக்கு எளிதாக இருந்தது.

பிஜேபி அரசாங்கம் இந்தியாவில் பதவியேற்றதும், இந்தியா சந்திக்கப்போகும், ஆபத்துக்கள் குறித்து அவன் தொடங்கிய பிஜேபி அரசு கண்காணிப்புக் குழுவில் இந்து ராம், கே.எம்.பணிக்கர், ரொமிலா தாப்பர், ஏ.ஜி.நூராணி, அஸ்கர் அலி இன்ஜினியர் ஆகியோர் அதில் இணைந்தார்கள். பாரதீய ஜனதா கட்சி பதவியிழக்கும் வரை அந்த அமைப்பு தொடர்ந்தது. அந்த அரசு வீழ்ந்ததும், இந்த அமைப்பை கவர்மென்ட் வாட்ச் என்ற அமைப்பாக மாற்றி தொடர்ந்து அதில் செயல்பட்டு வந்தான்.

2001ல் பழவிளை என்ற இடத்தில் ஒரு நிலத்தை வாங்கி தன் மனைவியோடு சேர்ந்து, அங்கே ஒரு பள்ளியைத் தொடங்குகிறான். பழவிளை என்பது ஒரு கிராமம். அவனின் கல்வி பின்புலத்திற்கும், அறிவாற்றலுக்கும், திருநெல்விலியில் நல்ல கல்விக்கு இருந்த வற்றாத தேவைக்கும் ஏற்ப, அவன் நெல்லை நகரத்தில் இந்தப் பள்ளியைத் தொடங்கயிருந்தானென்றால், இன்று ஜேப்பியார் போலவோ, ஏ.சி.சண்முகம் போலவோ ஒரு கல்வித்தந்தை ஆகியிருப்பான். ஆனால் கிராமப்புற மக்களுக்குத்தான் கல்விக்கான தேவை இருக்கிறது என்பதற்காக அந்தக் கிராமத்திலேயே அந்தப் பள்ளியை தொடங்கினான். 

வழக்கமான பள்ளிக் கல்வித் திட்டத்தோடு, விவசாயம், இயற்கை விவசாயம், சுற்றுச் சூழல், போன்றவற்றையும் அவன் பள்ளியில் அந்தப் பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுத்தான். பெற்றோர்களிடத்தில் பத்து ரூபாய் கூட நன்கொடை வாங்காமல் பள்ளியை நடத்தினான். அவன் தொடங்கிய பள்ளியின் பெயர் சாக்கர். (SOCCER) சவுத் ஆசியன் கம்யூனிட்டி சென்டர் ஃபார் இடிகேசன் ரிசர்ச் என்பதுதான் அதன் விரிவாக்கம். அவன் இருந்த பகுதியில், மத மோதல்களுக்குப் பஞ்சமே இல்லை. வலதுசாரி இந்து அமைப்புகள் எப்போது பிரச்சினையைக் கிளப்பலாம் என்று காத்துக் கொண்டிருக்கும். ஒருவன் நல்ல பள்ளியை நடத்தி, சுற்றுப்புற மக்களிடத்தில் நல்ல பெயர் வாங்கினால் மதவாதிகளுக்குப் பொறுக்குமா என்ன ?

அந்தப் பள்ளிக்கான ஆதரவை குலைக்க வேண்டும் என்பதற்காக, சாக்கர் என்பது கிறித்துவ அமைப்பு. அந்தப் பள்ளியில் படிக்கும் பிள்ளைகளை மதமாற்றம் செய்கிறார்கள் என்ற விஷப் பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விட்டார்கள். ஆனால் இந்தப் பிரச்சாரங்கள் அந்தத் தரமான பள்ளியின் புகழை குலைப்பதில் வெற்றி பெறவில்லை. வழக்கமான பள்ளியாக இருந்தால் ஒரு வேளை புகழ் குறைந்திருக்கும். ஆனால் அந்தப் பள்ளியில் கல்வி வித்தியாசமாக அல்லவா வழங்கப்பட்டது ...!!! 

கல்லூரி மாணவர்களுக்குப் பாடம் எடுத்த ஓய்வு பெற்ற பேராசிரியர்கள் அந்தப்பள்ளிப் பிள்ளைகளுக்கு பாடம் எடுத்தார்கள். கல்லூரிகளில் நடத்துவது போன்ற செமினார்கள் பள்ளியில் நடத்தப்பட்டன.

இயல்பாகவே சுற்றுச் சூழல் குறித்து இருந்த அவனது ஆர்வம், கூடங்குளம் அணு உலை நோக்கி அவனது கவனத்தை திருப்பியது. அணு உலையை எதிர்க்கும் அவனது பொதுநலத்தில் சுயநலமும் கலந்திருந்தது. அவனது தாத்தா பாட்டிகளில் நான்கு பேர் புற்றுநோயால் இறந்திருந்தனர். அவனது அப்பாவின் அம்மாவை அவனுக்கு ரொம்பப் பிடிக்கும். பாட்டி என்றால் உயிர். அந்தப் பாட்டி, அவனுக்கு ராமாயணம், மகாபாரதம் என்று பல்வேறு கதைகளைச் சொல்லி அவன் அறிவை விரிவாக்கியிருந்தார். அந்தப் பாட்டி கதை சொல்லும் அழகும் திறமையுமே பின்னாளில் அவன் பேச்சுத்திறனுக்கு உந்துசக்தியாக அமைந்தது.

அந்தப் பாட்டிக்கு புற்று நோய் வந்தது. அந்த நோயை, உரிய நேரத்தில் கண்டுபிடிக்காமல் விட்டதால் நோய் முற்றிய நிலையில் கண்டுபிடிக்கப்படுகிறது. புற்றுநோயால் பாட்டியின் கன்னத்தில் ஓட்டை விழுகிறது. எந்தப் பாட்டி தனக்கு கதை சொல்லி அவன் அறிவை விரிவாக்கினார்களோ, அந்தப் பாட்டிக்கு அன்போடு ஒரு முத்தம் கூட கொடுக்க முடியாத கொடுமையை அவன் அனுபவித்தான். அவன் சொந்த ஊரான இசங்கன்விளையில் பலர் புற்றுநோயால் அவதிப்பட்டதை பார்த்துப் பார்த்து, அணு உலை மற்றும் அணு சக்திக்கு எதிரான அவனது உணர்வுகள் பலப்பட்டன.

அவன் சொந்த ஊருக்குப் பக்கத்தில் இருந்த சின்னவிளை, பெரியவிளை, மண்டைக்காடுப் புதூர், கொட்டில்பாடு போன்ற கடற்கரை கிராமங்களில் புற்றுநோய்க்கு பலியானோரின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. 

இது குறித்து அவன் ஆய்வில் இறங்கியபோது, அக்கடற்கரைப் பகுதியில் தோரியம் கிடைப்பதைக் கண்டறிந்தான். தோரியம் கதிரியக்கம் கொண்டது என்பதையும் கண்டு கொண்டான். அந்த மணலை தோண்டியெடுத்து ஏற்றுமதி செய்யும் ஆலைகள் அந்தக் கதிரியக்கத்தை அதிகப்படுத்துவதையும் கண்டுபிடித்தான். அந்தப் பகுதியில் வசிக்கும் ஆண்களுக்கு விரைப்பையில் புற்றுநோய் அதிகமாக வருவதற்கான காரணம், அந்த மணல் மீதே அமர்ந்து வலைப்பின்னுதல், சீட்டாடுதல் போன்ற வேலைகளில் ஈடுபடுவதால் அவர்களுக்கு புற்றுநோய் அதிகமாக வருகிறது என்பதைக் கண்டறிந்தான். உலகிலேயே நார்வே, துருக்கி மற்றும் இந்தியாவில் மட்டும்தான் தோரியம் கலந்த மணல் இருக்கிறது என்பதையும், அந்த மணலை ஜெர்மனிக்கும், ஜப்பானுக்கும், இந்தியா ஏற்றுமதி செய்கிறது என்பதை கண்டுபிடித்தான்.

2001ல் இந்தியா வந்தபிறகு, கூடங்குளம் அணு உலையைப் பற்றிய விரிவான ஆய்வை மேற்கொள்கிறான்.

20 நவம்பர் 1988ல், இந்தியாவுக்கும், அப்போதைய சோவியத் ரஷ்யாவுக்கும் இடையே கூடங்குளம் அணு உலைக்கான ஒப்பந்தம் கையெழுத்தாகிறது. இரண்டு வருடங்களுக்கு முன்னால் நடந்த செர்னோபில் விபத்தைப் பற்றித் துளியும் கவலையில்லாமல் சோவியத் யூனியனோடு இந்த ஒப்பந்தத்தைப் போடுகிறது இந்தியா. சோவியத் யூனியன் உடைந்ததும் இந்த ஒப்பந்தம் காலாவதியாகிறது. 

1997ல், அப்போதைய பிரதமர் தேவகௌடாவும், ரஷ்ய அதிபர் போரிஸ் எல்ட்ஸினும் மீண்டும் ஒரு கூடுதல் ஒப்பந்ததைப் போட்டு, அணு உலைக்கு மீண்டும் உயிர் கொடுக்கிறார்கள். முதன் முதலில் 1988ம் ஆண்டு இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகும்போது கூடங்குளம் அணு உலைக்கு ஆவதாக மதிப்பிடப்பட்ட செலவு 6000 கோடி. இதே தொகை 1997ல் 17,000க கூடுகிறது. முதலில் அணு உலைக் கழிவுகளை திருப்பி எடுத்துக் கொள்வதாக வாக்குறுதி கொடுத்திருந்த ரஷ்யா, பின்னாளில் திருப்பி எடுத்துக்கொள்ள முடியாது என்று மறுத்து விட்டது.

கூடங்குளம் அணு உலைக்கான ஒப்பந்தம் 20 நவம்பர் 1988ல் கையெழுத்தான உடனேயே அடுத்த மாதமே, 19 டிசம்பர் 1988 அன்று சமத்துவ சமுதாய இயக்கம் ஒன்ற ஒரு இயக்கத்தை அணு உலைக்கு எதிராக தொடங்குகிறார் டேவிட் என்பவர். இந்த அமைப்பில் பல்வேறு தன்னார்வ அமைப்புகள் சேருகின்றன.

1989ல் கூடங்குளம் அணு உலைக்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் நடக்கின்றன. தொடர்ந்து நடந்து வந்த இந்தப் போராட்டங்கள் 1989ல் சோவியத் யூனியன் வீழ்ச்சிக்குப் பிறகு நின்று போகின்றன. அணு உலையின் எதிர்காலம் சோவியத் யூனியனின் வீழ்ச்சியோடு முடிந்துவிட்டது என்ற அடிப்படையிலேயே போராட்டங்கள் நிறுத்தப்படுகின்றன.

1998ல் ரஷ்யாவோடு மீண்டும் ஒப்பந்தம் போடப்பட்ட பிறகு, போராட்டங்கள் மீண்டும் தொடங்குகின்றன. மக்கள் கூட்டமைப்பு என்ற அமைப்பு கூடங்குளம் அணு உலையின் ஆபத்து குறித்து மாநாடு நடத்துகின்றது. பேச்சிப்பாறை அணையிலிருந்து நீர் அணு உலைக்கு எடுக்கப்பட்டால், எப்படி அம்மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பது விரித்துரைக்கப்படுகிறது.

இதற்கிடையே அணு உலைக்கான வேலைகள் தீவிரமாக மத்திய அரசால் தொடங்கப்படுகின்றன. 2001 நவம்பர் 10 அன்று அணு சக்திக்கு எதிரான மக்கள் கூட்டமைப்பு மதுரையில் உருவாக்கப்படுகிறது. அந்தக் கூட்டமைப்பு உருவானதில் முக்கியப் பங்கு வகிக்கிறான் அவன்.

2002 ஜனவரி முதல் கூடங்குளம் அணு உலைக்கு எதிராக கருத்தரங்குகள், உண்ணாவிரதங்கள், ஆர்ப்பாட்டங்கள், என்று பல்வேறு வடிவிலான போராட்டங்கள் நடத்தப்படுகின்றன. அத்தனையும், இவன் ஒருவனின் முன் முயற்சியால் நடைபெறுகின்றன. கிராமம் கிராமமாகச் சென்று, அணு உலைக்கு எதிராக தெரு முனைக் கூட்டங்களையும், பிரச்சாரங்களையும் மேற்கொள்கிறான்.

ஆனால், இவன் சொல்வதை யாருமே காது கொடுத்துக் கேட்கத் தயாராக இல்லை. அந்த அணு உலையால் கடுமையாக பாதிக்கப்படும் கூடங்குளம் மக்களே கூட இவன் சொல்வதை காது கொடுத்துக் கேட்கத் தயாராக இல்லை. ஒரு கட்டத்தில், மத்திய உளவுத்துறையின் ஆதரவில், சில போக்கிலிகள் இவன் கூட்டம் நடத்தும் இடங்களுக்கு வந்து இவனையும், இவனோடு இருந்தவர்களையும் விரட்டி அடிக்கின்றனர்.

2001 முதல் இவன் மேற்கொண்ட பிரச்சாரத்திற்கான பலன், 2007 முதல் லேசாகத் தெரியத் தொடங்குகிறது. கூடங்குளம் அணு உலைக்கு எதிராக இவன் பிரச்சாரம் செய்தபோதெல்லாம், அம்மக்கள், சிங்கப்பூராக மாற இருக்கும் கூடங்குளத்தை கெடுப்பதற்காக வந்திருக்கிறான் என்றே நினைத்தார்கள். அணு உலை வந்தால், தேனாறும் பாலாறும் ஓடும், பேச்சிப்பாறை அணையிலிருந்து குடிநீர் வரும், தங்கும் விடுதிகளைக் கட்டி வாடகைக்கு விட்டால், இங்கே தங்க வருபவர்களின் மூலம் ஏராளமான வருமானம் வரும் என்றே நம்பினார்கள். இந்த நம்பிக்கையால் கூடங்குளம் ஊருக்குள்ளே அவன் அனுமதிக்கப்பட்டதேயில்லை.

அந்தப் பகுதியில் பெரும்பாலாக இருந்த நாடார் இன மக்கள் இவனை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. நாம் சம்பாதித்து பெரிய ஆளாக ஆவதை தடுப்பதற்காக பிரச்சாரம் செய்கிறான் என்றே நினைத்தார்கள். 2007ல் தான் லேசான மாற்றம் ஏற்படத் தொடங்குகிறது. அணு உலை வேலைகள் தீவிரமாக நடைபெற்ற வருகிறது, இவர்கள் சொன்ன மாற்றத்தில் ஒன்றுமே நடக்கவில்லையே என்பதை அம்மக்கள் உணரத் தொடங்குகின்றனர்.

அதன் பிறகு பெரிய அளவில் ஆதரவு கிடைக்கவில்லை என்றாலும், எல்லா இடங்களுக்கும் பயமின்றி சென்று பிரச்சாரம் செய்ய முடிந்தது. இந்த புதிய உத்வேகத்தில், நண்பர்களின் உதவியோடு துண்டுப் பிரசுரங்கள் போடுவது, தெருமுனைக் கூட்டங்கள் நடத்துவது என்று தன் பணியை வேக வேகமாகச் செய்யத் தொடங்கினான்.

கெட்டிக்காரன் புளுகு எத்தனை நாளைக்கு செல்லுபடியாகும் ? கூடங்குளம் அணு உலை ஆபத்தில்லாதது, கூடங்குளத்தை சிங்கப்பூராக்கும் என்ற அவர்களின் பிரச்சாரத்துக்கு அவர்களே வேட்டு வைத்தார்கள். 2011ல் மார்ச் 11 அன்று ஜப்பானின் புக்குஷிமா அணு உலையில் ஏற்பட்ட விபத்து இந்திய அணு சக்தியாளர்களுக்கு நடுக்கத்தை ஏற்படுத்தியது. 

என்னடா இது.. ஏற்கனவே இந்தப் பயல்கள் அணு உலை என்றால் ஆபத்து என்று பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார்கள். இந்த நேரத்தில் இந்த விபத்து வேறு நடந்திருக்கிறது. விட்டால் இதை வைத்தே இவர்கள் மக்களைத் திரட்டி விடுவார்கள். அவனுக்கு முன்னால் நாம் முந்திக் கொள்ளலாம் என்று மத்திய அணு விஞ்ஞானிகள் களம் இறங்கினார்கள்.

ஜப்பானில் ஏற்பட்ட அணு உலை விபத்துப் போல விபத்து ஏற்பட்டால், அனைவரும் வீட்டுக்குள் புகுந்து கொள்ள வேண்டும். வானொலி மற்றும் தொலைக்காட்சிகளில் அறிவிப்பு வெளியாகும். வேகமாக மூச்சு விடக் கூடாது. இந்த இடத்திலிருந்து உங்களை அப்புறப்படுத்த அரசு வாகனங்கள் வரும். 30 கிலோ மீட்டர் சுற்றுப்பரப்பில் உள்ள மக்கள் அப்புறப்படுத்தப் படுவார்கள். ஆறு மாதத்துக்கு ஊருக்குள் வரக்கூடாது. அரசு உத்தரவிட்ட பிறகே ஊருக்குள் வர வேண்டும் என்று அறிவிப்பு வெளியிட்டார்கள்.

அத்தனை நாள் அரசு சொல்லும் அத்தனை விஷயங்களையும் கண் மூடித்தனமாக நம்பிக் கொண்டிருந்த அப்பகுதி மக்களுக்கு அடடா, உதயக்குமாரும் அவரோடு இருக்கும் மற்றவர்களும் இத்தனை நாட்களாக சொல்லி வந்த விஷயத்தை தற்போது அரசு அதிகாரிகளே சொல்லுகிறார்களே என்பது உறைக்கத் தொடங்கியது.

அதுவும் புக்குஷிமா விபத்து நடந்து அது தொடர்பான விவகாரங்களை மக்கள் டிவியில் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். 

அதன் பிறகு மக்களிடம் விபத்துக்கான ஒத்திகையும் நடத்தியாயிற்று. இந்த நேரத்தில் அணு உலையைத் திறந்தால், மக்களிடம் எதிர்ப்பு வலுக்கும் என்பது புரிய வேண்டாமா… ? நாராயணசாமி போன்றவர்கள் பிரதமர் அலுவலக அமைச்சராக இருந்தால் அரசு எப்படி செயல்படும்… இப்படித்தான்.. புக்குஷிமா விபத்து நடந்து முடிந்து, ஒத்திகையும் நடத்தி முடித்த ஒரு சில வாரங்களில், கூடங்குளம் அணு உலை தொடங்கப்போகிறது என்று அறிவிப்பு வெளியிடுகிறார்கள். 

ஜுன் 1, 2011ல் கூடங்குளம் அணு உலையில் பரீட்சார்த்த ஓட்டம் நடைபெறும் என்று அறிவிக்கிறார்கள். அணு உலை புகைப்போக்கியிருந்து வெள்ளை நிறப்புகை வெளியேறுகிறது. அந்தப் பாமர மக்கள், அந்தப் புகையே நம்மைக் கொன்று விடும் என்று அஞ்சுகிறார்கள். ஏற்கனவே உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்த மக்களுக்கு சொல்ல வேண்டுமா ? இத்தனை நாட்களாக இந்த அணு உலையின் ஆபத்துக்களை விளக்கிச் சொன்ன அவனைக் கடவுளாகப் பார்க்கிறார்கள். அய்யா, எங்களைக் காப்பாற்று, எங்கள் உயிரைப் பறிக்க வருகிறார்கள் அணு விஞ்ஞானிகள் என்று அவனிடம் தஞ்சம் புகுகிறார்கள்.

2001 முதல் தொடர்ச்சியாக அணு உலைக்கு எதிராக பணியாற்றிக் கொண்டிருந்த அவனுக்கு மக்கள் திரளாக வந்து, எங்களுக்காக போராடு என்று கோரிக்கை வைத்தால் கசக்குமா என்ன..? ஒரு படைத் தளபதியைப் போல களத்தில் இறங்கினான். வாருங்கள் நான் இருக்கிறேன்… மோதிப் பார்த்து விடுவோம் என்று போர் முரசறைந்தான். ஊழல் செய்து சொத்து சேர்த்து, அதைக் காப்பாற்றுவதற்காக தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கும் அரசியல்வாதிகளைப் போன்றவனா அவன் ? அவனிடம் இழப்பதற்கு என்ன இருக்கிறது…. அவன் உயிரினும் மேலாக நேசிக்கும் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதை விட அவனுக்கு வேறு என்ன பேறு அமைய முடியும் ?

இறங்கினான் களத்தில். அவன் ஒலித்த போர் முரசம் டெல்லியை நடுநடுங்க வைத்தது. மக்கள் அவன் பின்னால் திரண்டார்கள். ஆகஸ்ட் 16ம் தேதி இடிந்தகரையில் நடந்த உண்ணாவிரதத்தில் 20 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.

நாளுக்கு நாள் போராட்டம் வலுத்தது. அத்தனை நாள் வரை அவனை எதிரியாகப் பார்த்தவர்கள், அவனோடு சேர்ந்து அணு உலைக்கு எதிராக குரல் கொடுக்கத் தொடங்கினர். சிறு ஓடையாக இருந்த போராட்டம் நதிப்பிரவாகமாக பெருக்கெடுத்தது.

அது வரை டெல்லியின் சந்து பொந்துகளில் அலைந்து திரிந்து இரை தின்றுக் கொண்டிருந்த பாண்டிச்சேரியைச் சேர்ந்த ஒரு நரி, அவனைப் பார்த்து ஊளையிட ஆரம்பித்தது. அந்த நரியின் கட்டுப்பாட்டில் இருந்த மத்திய உளவுத்துறை, சிபிஐ போன்றவற்றை அவன் மீது கட்டவிழ்த்து விட்டது.

நேரடியாக அவனோடு பேரம் பேசியது அந்த நரி. குடும்பத்தோடு அமெரிக்காவில் செட்டிலாகிவிடு. அதற்கு ஏற்பாடு செய்கிறோம் என்றார்கள். அவன் நான் இந்தியாவுக்கு விபச்சாரம் செய்ய வரவில்லை என்று திருப்பியடித்தான். அவனைக் கடத்தி வைத்து விட்டு, அவன் மக்களை நிர்கதியாக்கிவிட்டு ஓடி விட்டான் என்று பிரச்சாரம் செய்ய முயற்சித்தார்கள். அது பலிக்கவில்லை.

அவனுக்கு வெளிநாட்டிலிருந்து நிதி வருகிறது என்று அந்த நரி, ஒவ்வொரு பத்திரிக்கையாளர் சந்திப்பிலும் ஊளையிட்டது. அவன், அதற்கான ஆதாரத்தை கொடுத்தால், நான் பொதுவாழ்விலிருந்து விலகுகிறேன். கொடுக்கவில்லையென்றால், நரி விலகுமா என்று கேட்டான். அது குறித்து அந்த நரி வாயே திறக்கவில்லை. அவன்தான் பேரத்திற்கு படியவில்லை. அவனோடு இருப்பவர்களை விலைக்கு வாங்கலாம் என்று அந்த நரி முயற்சித்தது. அவர்களோடு இருப்பவர்கள், அவனை விடத் தீவிரமாக இருந்தனர்.

அந்த நரிதான் அப்படி ஊளையிடுகிறது என்றால், அந்த நரிக்கும் மற்ற நரிக்கூட்டத்திற்கும் தலைவனாக தலைப்பாகை அணிந்த ஓநாய் ஒன்று இருந்தது. அந்த ஓநாய் ஒரு நாள், அவன் வெளிநாட்டில் பணம் வாங்குகிறான் என்று வெளிநாட்டு பத்திரிக்கை ஒன்றுக்கு பேட்டியளித்தது. அவன் அந்த ஓநாய்க்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினான். அன்று பம்மிய அந்த ஓநாய் இன்று வரை வாய்த் திறக்கவில்லை.

அவன் வெளிநாடுகளில் சொத்து சேர்த்துள்ளான். கருப்புப் பணம் பதுக்கியுள்ளான் என்றது அந்த நரி. ஆனால் அந்தக் குற்றச்சாட்டுகள், கண்ணப்ப நாயனார் சிவபெருமானை கல்லால் வழிபட்டது போல, மலர்களாக அவன் மீது விழுந்தன.

அவன் போராட்டத்துக்கு எதிர்பாராத இடத்திலிருந்து ஆதரவு வந்தது. தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா, உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரத்தின் போது, தூத்துக்குடியில் வந்து, கூடங்குளம் மக்களோடு நான் ஒருத்தி. உங்கள் கவலைகள் தீர்க்கப்படும். பயங்கள் கவனத்தில் கொள்ளப்படும் என்று அறிவித்தார். அவனும் அவனோடு சேர்ந்த மக்களும் மகிழ்ந்தனர். ஆர்ப்பரித்தனர்.

அந்த மக்கள் கருப்பாக இருக்கிறார்கள். ஜெயலலிதா சிகப்பாக இருக்கிறார். அவர் எப்படி அம்மக்களில் ஒருத்தியாக முடியும். உள்ளாட்சித் தேர்தல் முடிந்த மறுநாளே, காவல்துறையை இறக்கினார். காவல்துறையின் பெரும்படை நீண்ட நாட்களாக இரையின்றி கட்டி வைக்கப்பட்டிருந்த வேட்டை நாயாக காத்திருந்தது. அந்த “உங்களில் ஒருத்தி” பாண்டிச்சேரி நரியின் சதிக்குப் பலியானார். அந்த நரி என்ன நடக்கவேண்டுமென்று விரும்பியதோ, அதை முழு வீச்சோடு நடத்தினார்.

அவனை மிரட்ட அடுத்து என்ன செய்வதென்று, அவன் மீதும், அவனோடு இருந்த தோழர்கள் மீதும் தேசப்பாதுகாப்புக்கு ஊறு விளைவித்தார்கள் என்று வழக்கு தொடுக்கப்பட்டது. ஒரு வழக்கு இரு வழக்கு அல்ல. இருநூறுக்கும் மேற்பட்ட வழக்குகள். கலவரம் ஏற்படுத்தியது, வன்முறையைத் தூண்டியது. தேசத்திற்கு எதிராக போர்த் தொடுத்தது, என்று சரமாரியாக வழக்குகளை பதிவு செய்து கொண்டிருந்தனர். .

அது மட்டுமா… ? 

அவன் தன் வாழ்நாள் லட்சியமாகக் கருதி நடத்திய பள்ளியை அடித்து நொறுக்கினர். சிபிஐ மற்றும் வருமான வரித்துறை மற்றும் அமலாக்கப்பிரிவு அதிகாரிகளை வைத்து, அவன் பள்ளி மற்றும் ட்ரஸ்டுகளில் சோதனை நடத்தினர். மடியில் கனம் இருந்தால்தானே அவன் பயப்படுதவற்கு… ? சோதனை நடத்துவதை பிரபலமாக விளம்பரப்படுத்திய அரசு நிர்வாகம், சோதனையில் எதுவும் கிடைக்காத விவகாரத்தை வெளிப்படுத்த மறுத்தது. அவன் நடத்திய போராட்டத்தில் ஜெர்மனியைச் சேர்ந்த ஒருவர் வந்த கலந்து கொண்டார். 

அந்த ஜெர்மானியரை இரவோடு இரவாக நாடு கடத்தி, அவனை வெளிநாட்டு உளவாளி என்று சித்தரிக்க முயற்சி செய்தனர். அதுவும் வெற்றி பெறவில்லை. அடுத்ததாக மாவட்ட ஆட்சியரோடு பேச்சுவார்த்தை நடத்தி, அந்த பேச்சுவார்த்தைக்கு செல்லும்போது, சங் பரிவாரக் கும்பல்களால் அவனும் அவன் குழுவினரும் தாக்கப்பட்டனர். அவதூறான வார்த்தைககள் அவனை நோக்கி வீசப்பட்டன. ஆனால் அவன் கலங்கவில்லை.

தான் எடுத்த போராட்டத்திலிருந் பின் வாங்குவதில்லை என்பதில் தீர்மானமாக இருந்தான். ஆரம்ப காலத்திலிருந்து அவனோடு உடன் இருந்த பிரஜாபதி அடிகளார், போன்றவர்களை பாண்டிச்சேரி நரி சதி வேலையால் அவனுக்கு எதிராக திருப்பியது. பிரஜாபதி அடிகளார் அவனுக்கு எதிராக பேட்டியளித்தார் அவர். அவன் மன உறுதியை குலைக்க பல வேலைகளில் ஈடுபட்டனர் அவன் எதிரிகள்.

அவன் மீது தொடுக்கப்பட்ட பல்வேறு தாக்குதல்களை அவன் சமாளித்தான். ஆனால் வெளிநாட்டிடமிருந்து பணம் வாங்கிக் கொண்டு போராட்டம் நடத்துகிறான் என்ற குற்றச்சாட்டை அவனால் பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை. இந்தாருங்களடா… பார்த்துக் கொள்ளுங்கள். என்னிடம் இருக்கும் சொத்துக்கள் இவ்வளவுதான் என்று பகிரங்கமாக அறிவித்தான்.

அடுத்ததாக அவன் மீது தாக்குதல் தொடுக்க ஊடகத்தை கட்டவிழ்த்து விட்டனர்.

எழுத்து விபச்சாரம் செய்யும் ஒரு நாளிதழை வைத்து, அவனது உண்ணாவிரதப் போராட்டத்தை கொச்சைப்படுத்தியது அந்த நாளிதழ். அவனும் அவன் கூட்டாளிகளும் திருட்டுத்தனமாக தின்று விட்டு உண்ணாவிரதம் என்று நடிக்கிறார்கள் என்று எழுதியது அந்த நாளிதழ். காலையில் இட்லியும் பூரியும் தின்கிறார்கள் என்று பச்சைப் பொய்யை கூசாமல் எழுதியது. அறிவில்லா அரசு என்ற மண் தொலைக்காட்சியின் நிருபர், காவல்துறை வீசிய எலும்புகளை பொறுக்கிய விசுவாசத்தில் அவனுக்கு எதிராக விஷத்தைக் கக்கினார். 

அதே தொலைக்காட்சியின் நாம செல்வராஜ் என்ற நிருபர், அவனுக்கு நக்சலைட்டோடு தொடர்பு உள்ளது என்று அவர் பங்குக்கு அவன் மீது அவதூறை அள்ளி வீசினார். ஆனால், மக்களுக்கான போராளி மீது இது போன்ற அவதூறுகள் வீசப்படத்தானே செய்யும். அவன் அந்த அவதூறுகளை புறந்தள்ளி விட்டு தனது போராட்டத்தைத் தொடர்ந்தான்.

தங்கள் முயற்சி இப்படிக் கேவலமாக தோல்வியிடைந்து விட்டதே என்று பாண்டிச்சேரி நரியும், டெல்லி ஓநாயும் மனம் வெதும்பின. ஆனாலும் விட்டு விடுவார்களா என்ன ? எங்கள் வேலை முடிந்து விட்டது, நீங்கள் உங்கள் வேலையைத் தொடங்குங்கள் என்று ஜெயலலிதாவுக்கு உத்தரவிட்டனர். சிகப்பு ஜெயலலிதாவுக்கு உண்மையில் கொஞ்சமாவது அறிவோ அரசியல் ஞானமோ இருந்திருந்தால், நான் ஏன் அம்மக்களை விரட்ட வேண்டும்… நான் ஏன் அம்மக்களுக்கு விரோதியா வேண்டும்.. அது பாண்டிச்சேரி நரி செய்ய வேண்டிய வேலை என்று சொல்லியிருக்க வேண்டும். ஆனால் கருணாநிதி விரிக்கும் வலையில் எப்போதும் விழுந்து விழுந்து பழக்கப்பட்ட ஜெயலலிதா, நரி வலையிலும் விழுந்தார்.

கூடங்குளம் அணு உலையில் எரிபொருள் நிரப்ப வேண்டும் என்று நரி சொன்னதும் சிகப்பு ஜெயலலிதா துடித்தார்… போராடும் மக்களை உடனே விரட்ட வேண்டுமே என்று பதறினார். காத்திருந்த காவல்துறையை ஏவினார்.

மக்கள் அடித்து விரட்டப்பட்டனர். தடியால் தாக்கப்பட்டனர். துப்பாக்கியால் சுடப்பட்டனர். வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. அந்த வன்முறை அம்மக்களை அச்சப்படுத்தும், அவர்களை அவனிடமிருந்து அந்நியப்படுத்தும், அம்மக்கள் வன்முறையை கண்டு பயந்து, அவனை வெறுத்த ஒதுக்குவார்கள் என்று எதிரிகள் நம்பினர்.

ஆனால் அம்மக்களை அவன் ஆடு மாடுகளாக வைத்திருக்கவில்லை. அம்மக்கள் ஒவ்வொருவரையும் கற்றறிந்த போராளியாக மாற்றி வைத்திருந்தான். போராட்ட களத்தில் இருக்கும் போராளிக்கு வேண்டிய உத்வேகத்தோடு அவர்கள் அவன் பின்னால் திரண்டனர். 

அவனைக் கைது செய்யப் போகிறோம் என்று அரசாங்கம் மிரட்டியது. தம்மக்கள் உயிரைப் பாதுகாப்பதற்காக அவன் சரணடைய முன் வந்தான். ஆனால், அவனை உயிராக நேசிக்கும் மக்கள் அவனைச் சரணடைய விடவில்லை. நீ சரணடையாதே… எங்களுக்கு தலைமையேற்று போராட்டத்தை நடத்து… இறுதி வெற்றி நமதே என்று முழக்கமிட்டார்கள். அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ்… ? அவன் அம்மக்களின் அன்புக்கு கட்டுப்பட்டான்.

போராட்டத்தை தொடர்ந்து நடத்த இசைந்தான். அவனைத்தான் துரோகி என்கிறார்கள். அவனைத்தான் வெளிநாட்டின் கைக்கூலி என்கிறார்கள்.

அவன் வேறு யாருமல்ல தோழர்களே… கூடங்குளம் போராட்டத்தை முன்னெடுத்து நடத்தும் சுப.உதயக்குமார்தான் அந்தக் கைக்கூலி. நான் 

அந்தக் கைக்கூலியை என் உயிரினும் மேலாக நேசிக்கிறேன். இப்படி ஒரு கைக்கூலி வாழ்ந்த காலத்தில் வாழ்கிறோமே என்று பெருமைப்படுகிறேன். அந்தக் கைக்கூலியைப் பாராட்டி என் உயிர் இருக்கும் வரை எழுதுவேன், பேசுவேன். நீங்கள்... .. ?

நன்றி  சவுக்கு

தொடர்புடைய பதிவுகள்


Monday, October 21, 2013

சங்கு சுட்டாலும் வெண்மை தரும்

இது நடந்து முடிந்து இரண்டு வருடம் இருக்கலாம்.  

அந்த நண்பர் மற்ற நண்பர்கள் மூலம் அறிமுகமாகி உரையாடும் போது தான் அவரும் இணையத்தில் தீவிரமாக செயல்பட்டுக் கொண்டிருப்பவர் என்று எனக்குத் தெரிந்தது. 

ஆனால் அவர் எழுதுவாரா? என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் என்னுடைய பெரும்பாலான கட்டுரைகளை தொடர்ந்து படித்து வருபவர் என்று அவர் பேச்சின் மூலம் தெரிந்து கொள்ள முடிந்தது. பொதுவான விசயங்களைப் பற்றி பேசிக் கொண்டிருந்த போது தெரியாத்தனமாக ஒன்றை அவரிடம் கேட்டு விட்டேன்.  

"எந்த இடத்திலும் உங்கள் விமர்சனங்களைப் பார்த்ததே இல்லையே?" என்றேன்.

அதற்கு அவர் சொன்ன பதில் தான் இன்று வரையிலும் காதில் ஒலித்துக் கொண்டேயிருக்கின்றது.

"எல்லாவற்றையும் படிப்பேன். எதற்கும் விமர்சனம் எழுதி வைக்க மாட்டேன்" என்றார்.  இவர் வாசிப்பில் மட்டும் தான் ஆர்வம் காட்டுவார் போல என்று நினைத்துக் கொண்டிருந்த போது அவரின் அடுத்த பதில் ணங்கென்று காதில் கடப்பாறையை வைத்து அடித்தது போல இருந்தது.

"நாம் ஏங்க இவனுங்களுக்கு விமர்சனம் எழுதி வைக்கனும். தேவையில்லாம லைக் பட்டனை தட்டி இவனுங்களை பெரிய ஆளா ஆக்கனும்" என்றார்.

ஒரு தலைசுற்றலே எனக்கு வந்தது.

அந்த சமயங்களில் வலைபதிவுகளைத் தவிர வேறு தளங்களில் எனக்கு பெரிதான எந்த அறிமுகமும் இல்லை. ஆனால் இன்று பலதளங்களில் பயணிக்கும் போதும், ஒவ்வொருவரின் செயல்பாடுகளையும்,  அவர்களின் முகமூடிகளை நன்றாகவே உணர்ந்து கொள்ள முடிவதால் இன்று அவர் பேசிய வார்த்தைகள் பெரிதான அதிர்ச்சியை உருவாக்கவில்லை.  ஆனால் அன்றைய தினத்தில் உருவான ஆச்சரியம் கலந்த அதிர்ச்சி இன்றும் என் மனதில் உள்ளது.

ஒரு விசயத்தை விமர்சிக்காமல் இருப்பதோ, அது குறித்து பாராட்டு மற்றும் எதிர்கருத்து தெரிவிக்காமல் இருப்பதொன்றும் பெரிய கொலைக்குற்றமல்ல. இது அவரவர் சார்ந்த பணிச்சூழல், இருக்கும் நிலைப்பாடுகள் சம்மந்தப்பட்டது.  ஆனால் இதற்கான காரணத்தை தெரிந்த போது தான் இதுவும் ஒரு விதமான மனநோயின் தாக்கம் என்பதையும் உணர்ந்து கொள்ள முடிந்தது.  

நான் இவரை நண்பர் பட்டியலில் இருந்து நீக்கி வைத்து விட்டேன் என்ற வாசகத்தை இணையத்தில் இன்று நீங்க சர்வசாதரணமாக பார்க்கலாம்.  ஒரு வாரம் வெளியூர் செல்கின்றேன். என்னைத் தேட வேண்டாம் என்று தன் ஃபேஸ்புக் கணக்கை மறைத்து வைத்து செல்பவர்கள் தொடங்கி இங்கே ஏராளமாக வினோதமான புரட்சியாளர்களையும் பார்க்க முடியும்.   

நீ என் கூகுள் பள்ஸ் ல் விமர்சனம் செய்ய முடியாது, நீ என் பக்கமே வந்து விடாதே என்பது போன்ற பல கூத்துக்கள் அடங்கிய இந்த "பொய் நிகர் உலகில்" தான் எல்லோருமே இந்த உலகத்திற்கான அறத்தை போதித்துக் கொண்டேயிருக்கின்றார்கள்.

"கீழான விசயங்களை நோக்கியே ஒவ்வொரு காலகட்டத்திலும் சமூகம் நகர்ந்து கொண்டேயிருக்கும்.  இது போன்ற சமூகத்திலும் மேலானவர்களைக் கொண்டது தான் இந்த உலகம்" என்ற எதார்த்தத்தை உணர்ந்தவர்கள் புரிந்து வைத்திருப்பவர்கள் எதைக் கண்டும் அஞ்சாமல், எது குறித்தும் யோசிக்காமல் தன்னளவில் தோன்றும்  கருத்துக்களை இணையத்தில் பதிந்தபடியே தான் இருக்கின்றார்கள்.  

எதிர்க்கருத்துக்களை எழுதியவரை எதிரிகளாக கருதுபவர்களின் மன முதிர்ச்சியை சற்று யோசித்துப் பார்த்தால் நிச்சயம் அவர்கள் வளர்ந்த சூழ்நிலையும், வாழ்க்கையை அவர்கள் எடுத்துக் கொண்டவிதமும் நமக்குத் தெரியவரும்.   ஆனால் வலைபதிவில் தனக்கென்று ஒரு பாணியை வைத்துக் கொண்டு, அதிலும் எந்த காலத்திலும் பலருக்கும் பயன்பட வேண்டும் என்ற எண்ணத்தில் தீவிர கொள்கை கொண்டவர்களின் பல தளங்கள் என் எண்ணத்தில் இருந்தாலும்,  சமீபத்தில் நான் பார்த்த தளம் முக்கியமானது.

என் அனுபவத்தில் வலைபதிவில் எழுதிபவர்களை விட விமர்சிப்பவர்களைத் தான் கூர்மையாக கவனிக்கின்றேன்.  மொய் வைப்பவர்களை விட குறிப்பிட்ட விசயங்களைப் பற்றி கட்டுரை எழுதியவரை விட இது தான்யா விமர்சனம் என்பது போன்ற நச் சென்று கொடுப்பவர்களைப் பார்த்து பல முறை அசந்து போயுள்ளேன்.

சமீபத்தில் உண்மைத்தமிழன் எழுதிய பதிவில் நம்ம நந்தவனம் கொடுத்த காணொளி இணைப்பின் மூலம் அரிச்சந்திரா (1913) போன்ற படங்கள் கூட உள்ளது. இன்று ஆதாரமாக உதவுகின்றது.

நமக்கு என்ன பிரயோஜனம்? என்பதற்கும் பிறருக்கு உதவட்டும் என்கிற மனோநிலைக்கும் உள்ள வித்தியாசங்களை சிலரால் மட்டுமே உணர்ந்து கொள்ள முடியும்.

ரு ஞாயிற்றுக் கிழமை அதிகாலையில் என் மின் அஞ்சலுக்கும் வந்திருந்த இன்ட்லி மின் அஞ்சலை பார்த்துக் கொண்டிருந்த போது ஒரு ஈழப் பதிவரின் தலைப்பு வித்தியாசமாக இருக்க உள்ளே நுழைந்தேன்.  அதில் திரைக்கதை எழுதுவது குறித்து நண்பர் கருந்தேள் ராஜேஷ் அவர்களின் தளத்திற்கு இணைப்பு கொடுத்திருந்தார்.

தினகரன் பத்திரிக்கையில் தற்போது பணிபுரியும் சிவராமன் கூகுள் ப்ளஸ்ல் இவரின் தொடரைப்பற்றி எழுதியிருந்த போதிலும், இவரின் தளத்தை ஏற்கனவே எனக்கு தெரிந்திருந்த போது அதிக கவனத்தை காட்டியதில்லை. காரணம் படங்களில் அதிக ஈர்ப்பு இல்லை என்பது ஒரு பக்கமும், குறிப்பாக ஹாலிவுட் படங்களில் உண்மையிலேயே ஆர்வம் இல்லை என்பதால் கண்டு கொண்டதில்லை.

கடந்த சில மாதங்களாக யூ டியூப் ல்  சர்வதேச தீவிரவாத குழுக்களின் செயல்பாடுகள், நவீன உலகம் மற்றும் அறிவியல் முன்னேற்றத்தால் கண்டு பிடித்துக் கொண்டேயிருக்கும் நவீன ரக ஆயுதங்கள், குறிப்பிட்ட தலைப்புகளைப் பற்றி பொருளாதார ரீதியாக வெற்றி வெற்றி பெற்றவர்களின் ஆங்கிலப் பேச்சுகள் என்று தொடங்கி பல விதமான நாடுகள் சார்ந்த டாக்குமெண்ட்ரி என்று வாசிப்பனுபவம் போல ஒவ்வொரு பகுதியாக நகர்ந்து கொண்டே வந்த போது ஹாலிவுட் படங்கள் மேல் பார்வை திரும்பியது.

யூ டியூப் ல் குறிப்பிட்ட பல படங்கள் முழுநீளமாக இருப்பதும், என் இணைய இணைப்பு வேகம் என்ற காரணத்தினால் அவ்வப்பொழுது குழந்தைகளுடன் குறிப்பிட்ட டாக்குமெண்ட்ரிகளை ஒன்றாக உட்கார்ந்து பார்க்கும் பழக்கம் உருவானது. அதன் பிறகே தொலைக்காட்சியில் ஆங்கில படங்களை குறிப்பிட்டு பார்க்க வேண்டும் என்ற எண்ணமும் உருவாகத் தொடங்க பல படங்களை இரவு நேரத்தில் பார்க்க முடிந்த போது தான் தமிழ் சூழலுக்கும் தற்போதுள்ள நவீன உலகத்திற்குள் உண்டான தொழில் நுட்ப வசதிகளைப் பற்றி புரிந்து கொள்ள முடிந்தது. 

மேலும் ஆர்வம் உருவாக என் வலைபதிவில் எழுதத் தொடங்கியது முதல் நட்பு வட்டத்தில் உள்ள கார்த்திக்கிடம் சிறந்த ஹாலிவுட் படங்களின் பட்டியல் தாருங்கள் என்ற போது அவர் பங்குக்கு பத்து படங்களை அனுப்பி வைத்தார்.  அது முழுக்க முழுக்க சர்வதேச அரசியல், மற்றும் அவர்களின் உளவுத்துறை சார்ந்த விசயங்கள் அடங்கிய படங்கள்.   

அவர் படங்களை தரவிறக்கம் செய்வது எப்படி? என்பதை கற்றுத் தர தயாராக இருந்த போதிலும் அதில் எனக்கில்லாத ஆர்வத்தின் காரணமாக மெதுவாக கற்றுக் கொள்கின்றேன் என்று சொன்ன மறுநாள் தான் கருந்தேள் ராஜேஷ் எழுதிய திரைக்கதை எழுதுவது இப்படி என்ற நீண்டதொரு தொடர் என் கண்ணில் பட்டது.

ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் படிக்கத் தொடங்கிய இந்த தொடரை அடுத்த மூன்று மணி நேரத்தில் தொடர்ந்து வாசித்ததோடு அதில் உள்ள பின்னூட்டங்கள் அனைத்தையும் முழுங்குவது போல வாசித்து முடித்த போது எனக்கு உண்டான பிரமிப்பு நீங்களும் (இதில் ஆர்வம் இருக்கும்பட்சத்தில்) உணரக்கூடும்.

ஒரு இடத்தில் கூட நானும் பின்னூட்டமிடமில்லை. முதல் காரணம் இது குறித்து அச்சரம் கூட எனக்குத் தெரியாது.  

இந்த இடத்தில் மற்றொரு விசயம் நினைவுக்கு வருகின்றது.  

அடிமைகள் குறித்து ஒரு புத்தகம் எழுத வேண்டும் என்று இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நண்பர் என்னிடம் பொறுப்பு கொடுத்து மெனக்கெட்டு சில ஆங்கிலப் புத்தகங்களை அனுப்பியும் வைத்தார். நான் படிக்க வேண்டிய புத்தகங்கள் என்று ஒரு பட்டியல் கொடுத்து இதையெல்லாம் படித்து விட்டு எப்படி எழுதப் போறீங்க? என்று முன் வரைவு எழுதி அனுப்புங்க என்றார்?

எனக்கு சற்று குழப்பாக இருந்தது.  அதென்ன முன்வரைவு? என்றேன்.  

எது குறித்து எழுதப் போகின்றேன்? எப்படி எழுதப் போகின்றோம்? அதன் ஒவ்வொரு பகுதியிலும் எதெது வரும்? போன்றவற்றை நாம் கனகச்சிதமாக பிரித்து வைத்துக் கொண்டால் புத்தக வடிவத்திற்கு சிறப்பாக வரும் என்றார்.

நானும் ஓகோ... புத்தகமெல்லாம் இப்படித்தான் எழுத வேண்டும் போல என்று நினைத்துக் கொண்டு அவர் சொன்ன மாதிரி பிரிக்கத் தொடங்கினால் பிரி பிரியென்று நம்மை குழப்பம் கிழிக்கத் தொடங்கியது.  இரண்டு மூன்று முயற்சித்துப் பார்த்தும் அதன் கட்டுமானத்திற்குள் என்னை பொருத்திக் கொள்ள முடியவில்லை.  

ஆனால் நான் படித்த மற்ற புத்தகங்களை வைத்து அடிமைகள் தொடர் ஒன்றை எழுதி பதிவாக மாற்றிய போதும் புத்தக முயற்சிக்கு என்னால் தயார் படுத்த முடியாது என்று தெரிந்து கொண்டேன்.  

காரணம் என் அடிப்படைத் தொழில் வேறு. நான் ஆர்வம் செலுத்தும் துறை வேறு. 

பத்து வரிகள் எழுதிக் கொண்டிருக்கும் போது வரும் அலைபேசி செய்தி அப்படியே போட்டு விட்டு வேறு பக்கம் நகர்த்தி விடும்.  எழுதிக் கொண்டிருக்கும் போது குழந்தைகள் அருகே வந்து நின்றால் அதுவும் பாதியில் நின்று விடும். 

ஆசைக்கும் அவசரத்திற்குமிடையே ஊசலாட்டத்தில் வந்து விழும் கட்டுரைகள் முழுமையானதாக இல்லாவிட்டாலும் கூட இந்த முயற்சி இன்னும் சில ஆண்டுகளில் முழுமையடையக்கூடும் என்று நம்புகின்றேன்.

இன்று வரையிலும் எழுத உட்காரும் வரையிலும் என்ன எழுதப் போகின்றேன் என்பதே தெரியாத நிலையில் குழந்தைகள் தூங்கியதும் எழுதத் தொடங்கினால் ஏதோவொன்றை எழுத முடிகின்றது.

சில நாட்களுக்கு முன் மழை பெய்த்து கொண்டிருந்தது.  

மழையை வேடிக்கையை பார்த்துக் கொண்டிருந்த போது வெளியே இரண்டு பேர்கள் விஜயகாந்த் உண்மையிலேயே அதிர்ஷ்டசாலிப்பா? என்று பேசிக் கொண்டே சொல்ல சட்டென்று மடிக்கணியை திறந்து துல்லியமாக 30 நிமிடத்திற்குள் அதிர்ஷ்டத்தை அலறவைக்கும் விஜயகாந்த் என்ற கட்டுரையை எழுதி முடித்தேன்.  பிழை திருத்தி அடுத்த அரை மணி நேரத்தில் பதிவேற்றி விட்டு தூங்கப் போய்விட்டேன்.

ஒரு கட்டுமானத்திற்குள் எப்போதும் என்னை பொருத்திக் கொண்டதே இல்லை. ஒரு திட்டமிட்டு ஒரு காரியத்தைத் பற்றி எழுதத் தொடங்கினால் அது கடைசியில் திருதிரு வென்று முழிப்பது போலவே முடிந்து விடுகின்றது.

இது வரமா? சாபமா? என்று தெரியவில்லை. ஆனால் ராஜேஷ் எழுதிய தொடரை படித்த போது வாசிப்பனுபவமும், திட்டமிடுதலும், பொறுமையும் இருக்கும் பட்சத்தில் நிச்சயமான அங்கீகாரத்தை பெற முடியும் என்பதை உணர்ந்து கொள்ள முடிந்தது. 

என்னுடன் தொடர்பில் இருந்த ஹாலிவுட் பாலா, இன்று வரையிலும் தொடர்பில் இருக்கும் கார்த்திக் இவர்கள் எழுதும் ஆங்கில படங்களின் விமர்சனங்களை படித்த போதிலும் எனக்கு எந்தவித தாக்கத்தையும் உருவாக்கியது இல்லை.  ஆனால் இன்று ராஜேஷ் எழுதிய தொடரைப் படித்து முடித்த போது  அவர்கள் எழுதிய பல கட்டுரைகள் என் நினைவில் வந்து போனது.

இந்த தொடரை விமர்சிக்கக் கூட நமக்குத் தகுதியில்லை.  காரணம் நம்மைப் போன்ற ஜல்லியடிப்பது என்பது வேறு.  உண்மையிலேலே ஜல்லி, மணல், சிமெண்ட் வைத்து ஒழுங்கான கட்டிடம் கட்டுவதென்பது வேறு என்பதை புரிந்து கொள்ள முடிந்தது.

காரணம் இந்த தொடரில் ராஜேஷ் சொல்லியுள்ள விசயங்கள் மிகவும் ஆச்சரியமாக இருந்தது.  இதை ஒரு திரைப்படம் அல்லது திரைக்கதைக்கு திட்டமிடல் என்கிற ரீதியாக என்னால் பார்க்க முடியவில்லை.  எத்தனை விதமான உழைப்பும், ஒவ்வொரு காட்சிக்கும் உண்டான அசுரத்தனமான அர்ப்பணிப்பும் கலந்து இருப்பதாகவே எனக்கு தெரிகின்றது.  ஆனால் இதை எளிமையாக இப்படி இந்த மனிதரால் பொறுமையாக எழுத முடிந்தது என்பது தான் எனக்கு ஆச்சரியமாக இருந்தது.  

இது ஈழம், மணல் கொள்ளை, காவேரி, மோடி குறித்த  பிரச்சனைகளைப் பற்றி பேசுவதல்ல. எவருக்கும் பிடிக்கும், எல்லோருடைய மனதிலும் ஏதோவொரு ஓரத்திலாவது இருக்கும் சினிமா பற்றி, அதன் பாலபாடங்களைப் பற்றி எழுதியிருப்பதால் நான் சினிமாவில் ஜெயிக்கப் பிறந்தவன் என்ற எண்ணம் கொண்டவர்களுக்கு இந்த தொடர் நிச்சயம் பயன்படும்.

இவர் நினைத்திருந்தால் புத்தமாக போட்டு காசிருந்தால் வாங்கி படிங்க என்று போயிருக்க முடியும். ஆனால் இணையம் இருக்கும் வரையிலும் இந்த துறையில் ஆர்வம் இருப்பவர்களுக்கு இதுவொரு அரிச்சுவடி.

மேன்மக்கள் எப்போதுமே பெருந்தன்மை எண்ணங்கள் கொண்டவர்கள் என்பதால் வாசிக்க நினைப்பவர்களை வழிநடத்தும் என்று நினைக்கத் தோன்றுகின்றது.

திரைக்கதை எழுதுவது இப்படி

தமிழ் வலைப்பூக்களில் மென்பொருட்கள் குறித்து அதிகம் எழுதிய நண்பர் எஸ். கே எழுதியது.

எழுத்தாளர்களுக்கான மென்பொருள்கள்: 

தமிழுக்கு யாரும் எழுத்தாளர் மென்பொருள்களை உருவாக்கவில்லை அதனால் ஆங்கில எழுத்தாளர்களுக்கு

Friday, October 18, 2013

அதிர்ஷ்டத்தை அலறவைக்கும் விஜயகாந்த்

வைகோவின் திறமையைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. மணிக்கணக்கான பேச்சாற்றலும், எது குறித்து வேண்டுமானாலும் பேசக்கூடிய திறமையும், நாடாளுமன்ற அனுபவங்கள், களப் போராட்டங்கள் என்று எதற்கும் பஞ்சமில்லை. 

தனிமனித ஒழுக்கம், ஊழல் இல்லாத மனிதர். வாஜ்பாய் அரசில் காபினெட் அந்தஸ்து உள்ள அமைச்சர் பதவி கிடைத்த போதிலும் வேண்டாம் என்று ஒதுக்கியவர். சரியோ தப்போ இன்று வரையிலும் ஈழம் சார்ந்த கொள்கையில் தன்னை மாற்றிக் கொள்ளாதவர். 

இதற்கு மேலாக எவரும் எளிதில் அணுகக்கூடியவர் என்று நீங்கள் எத்தனையோ கூட்டல்களை போட்டுக் கொண்டே போகலாம்.

வலது, இடது சாரிகள் தமிழ்நாட்டில் பெரும்பாலும் சாரிப்பா.... என்கிற நிலைமையில் தான் உள்ளது.  தா.பா ஒருவர் தான் சூறாவளி என்றாலும் பிழைத்துக் கொள்வதும், டெல்லி உயர்மட்ட காம்ரேட்கள் ஒதுக்க நினைத்தாலும்  தப்பிப்பிழைப்பது எப்படி? என்றும் டெல்லியில் உள்ள காம்ரேட்டுகளுக்கே கற்றுக் கொடுத்துக் கொண்டிருப்பவர். 

ஒரு வேளை ஜெயலலிதா தலைமையில் கூட்டஞ்சோறு கிண்டி பந்தி பாறிமாறும் சூழ்நிலை அமைந்தால் அதிமுகவின் கொ.ப.செ பதவி கிடைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

ராமதாஸ் அப்பழுக்கற்றவர் என்று சொல்லப்போனால் அடிக்க வருவார்கள். அவரின் தனிப்பட்ட தமிழ்நாடு சார்ந்த அத்தனை அக்கறையும், அவரின் சாதிய கொள்கைகளால் வெறுப்புக்கு ஆளானாலும் கூட தமிழைச் சொல்லி பிழைப்பு வாதம் நடத்தியவர்கள் மத்தியில் இன்று வரையிலும் தமிழ்நாட்டில் குழந்தைகளுடன் குடும்பத்தோடு அமர்ந்து பார்க்கும் தொலைக்காட்சியாக மக்கள் தொலைக்காட்சி மட்டுமே இருக்கின்றது. 

தமிழ்நாட்டு இளைஞர்கள் மதுவுக்கு அடிமையாவதை உண்மையிலேயே அக்கறையோடு தொடக்கம் முதல் தனது எதிர்ப்பை பதிவு செய்து கொண்டு வருபவர்.

அவரின் கருத்துக்கள் தடாலடியாக இருந்தாலும் பலரின் பார்வையில் தரமற்ற கொள்கைகளாகவே இன்று வரையிலும் பார்க்கப்படுவதால் அவரும் என் வழி தனி வழி என்று ஆதிக்க சாதித் தலைவர்களை கூட்டுவதும் பீதியைக் கிளப்புவதும் என்று என் கடன் பணி செய்து கிடப்பதே என்று போய்க் கொண்டேயிருக்கின்றார்.

சமீப காலத்தில் நரேந்திர மோடியின் புண்ணியத்தால் தமிழ்நாட்டில் உருவான அலையினால் இப்போது தான் பாரதிய ஜனதா கட்சி ஒன்று தமிழ்நாட்டில் உள்ளது என்பதே தெரியவந்துள்ளது. தற்போது மோடி அலை வீசுவது பா.ஜ.க. ஜெயிக்க உதவுமோ இல்லையோ இவருடன் கூட்டணி அமைத்தால் நமக்கு எதிர்காலத்தில் பலன் இருக்குமோ? என்று இங்குள்ளவர்களை யோசிக்க வைத்துக் கொண்டிருக்கின்றது. 

நாற்பது ஆண்டுகள் கடந்து விட்டது.  தமிழ்நாட்டில் காங்கிரஸ் என்றொரு கட்சி இருக்கின்றது என்கிற அளவுக்குத் தான் இருக்கின்றது.  தலைவர்கள் அதிகமாகவும் தொண்டர்களை தேடிக் கொண்டிருந்த போதிலும் இதே காங்கிரஸின் பொருளாதார மேதைகள் தான் நமக்கு பாடம் கற்றுத் தந்து கொண்டிருக்கின்றார்கள்.  

தேர்தல் சமயத்தில் சுமக்க, சுமக்க வைக்க தில்லாலங்கடி வேலைகள் தெரியுமென்ற காரணத்தினால் அவர்களும் கட்சி குறித்து கவலைப்பட்டுக் கொள்வதில்லை.

நேற்று வந்த நடிகர் சரத்குமார் குமார் கூட தேறிவிட்டார்.

சிறந்த ஒட்டுண்ணியாக மாறுவது எப்படி என்று பாலபாடம் கற்றுக் கொண்டதால் அவரின் எந்த திறமையும் வெளியே தெரிய வேண்டிய அவசியமில்லாத அளவுக்கு தன்னை அதிமுக உறுப்பினர் அட்டை தேவைப்படாத ரர வாக மாற்றிக் கொண்டுள்ளார். 

அவரின் டெல்லி வாழ்க்கை, கர்நாடகத்தில் வாழ்ந்த வாழ்க்கை, படித்த கல்லூரி என்று பன்மொழித் திறமையை வளர்த்துக் கொண்டிருந்த போதிலும் தமிழ்நாட்டில் அரசியல் செய்ய திறமை தேவையில்லை. வசதியான இடத்தில் ஒட்டிக் கொண்டாலே போதும் என்ற மரத்திற்கு மரம் தாண்டி வந்து இன்று இதுவே போதும் என்கிற அளவுக்கு நினைத்த போது மாநாடு நடத்தி தன்னையும் ஒரு ஆளாக காட்டிக் கொண்டிருக்கின்றார். 

ஆனால் எந்த இடத்தில் கால் வைக்கின்றாரோ அத்தனை இடங்களிலும் ஊழல் ஆர்ட்டீசியன் ஊற்று போல பெருக்கெடுத்து பொங்குகின்றது. புத்திசாலி பிள்ளை எங்கிருந்தாலும் பிழைத்துக் கொள்ளும் என்பதற்கு இவரே நல்ல உதாரணம்.

திமுக மற்றும் அதிமுக தவிர்த்து தமிழ்நாட்டில் உள்ள இத்தனை திறமைசாலிகளின் மத்தியில் விஜயகாந்த் இன்றுவரையிலும் வித்தியாசமானவராக வினோதமாகத் தான் தெரிகின்றார். 

தொடக்கத்தில் வந்த படங்களை தவிர்த்து பிற்பாடு வந்த விஜயகாந்த் படங்களைப் பார்த்தால் இன்றும் ஆச்சரியமாகவே உள்ளது. உண்மையிலேயே எதிர்காலத்தில் அரசியலுக்கு வர வேண்டும் என்று காட்சிகளை, வசனங்களை அமைக்கச் சொன்னாரா? இல்லையா? என்று தெரியவில்லை.  

அநீதிக்கு எதிராக போராடுபவனாக, கூர்மையான எளிமையான வசனங்கள் மூலம் சராசரி தமிழனுக்கு போய்ச் சேரக்கூடிய வகையில் மிகத் தெளிவாகவே அமைத்துள்ளார்.பலரும் ஒவ்வொரு படத்திலும் உதவியிருப்பதை பார்க்க முடிகின்றது.  

திருப்பூரில் சாயப்பட்டறைகள் மொத்தமும் செயல்பட்டுக் கொண்டிருந்த போது அதில் பணிபுரிந்த பல்வேறு மாவட்டத்தைச் சேர்ந்த சிறிய, பெரிய, வயதான அத்தனை பேர்களுக்கும் விஜயகாந்த் படமென்றால் அது முக்கியமானது.  பழைய படமென்றாலும் திரையரங்கில் கூட்டம் நிரம்பி வழியும்.  சனி, ஞாயிறு என்றால் சொல்லவே வேண்டாம்.  திருவிழா கூட்டம் தான்.  

ஆனால் மாறிப் போன திருப்பூர் சூழ்நிலையில் விஜயகாந்த் படங்கள் எந்த திரையரங்கிலும் போடுவதாக தெரியவில்லை.  ஏறக்குறைய மூன்று லட்சம் பேர்கள் கடந்த நான்கு ஆண்டுகளில் திருப்பூரை விட்டு வெளியே சென்று விட்டதால்  பல திரையரங்கில் இன்று எந்த படங்கள் என்றாலும் மூன்றாவது நாளே தூக்கி விட்டு வேறு படங்களை மாற்றி விடுவதும் நடந்து கொண்டு தானிருக்கிறது. இப்போது கூட சாயப்பட்டறைகளில், பல இடங்களிலும் பணிபுரியும் பலதரப்பட்ட கிராமத்து இளைஞர்களிடம் பேசும் போது விஜயகாந்த் மேல் உள்ள பிரியம் குறைந்தபாடில்லை.  

ஏதோ ஒரு ஈர்ப்பு.  எப்படி ஒரு காலத்தில் ராமராஜனின் சிவப்பு பச்சை நிறத்திற்கு ஒரு மதிப்பு இருந்ததைப் போல விஜயகாந்தின் கருப்பு நிறத்தை களையான முகம் அண்ணே என்று தான் சொல்கின்றார்கள்.

சிங்கத்தின் குகையிலே சென்று பிடறியை உலுக்கியவராக விருத்தாச்சலத்தில் நின்று ஜெயித்து வந்த போது அடித்தட்டு மக்கள் அவரை திராவிட கட்சிகளுக்கு ஒரு மாற்றாக கருதுவதாகத் தோன்றியது. தமிழ்நாட்டில் தேமுதிக விற்கு மொத்தமாக கிடைத்த பத்து சதவிகிதமென்பது சிலருக்கு ஆச்சரியத்தை தந்ததைப் போல பலருக்கு எரிச்சலையும் உருவாக்கியது. அந்த எரிச்சல் தான் அதிமுகவுடன் கூட்டணி அமைக்கவும் உதவியது. நம்பமுடியாத எதிர்க்கட்சி பதவியையும் கொண்டு வந்து சேர்த்தது. 

தனிப்பட்ட திறமையைவிட அசராத நம்பிக்கையும் ஆச்சரியப்படும் அதிர்ஷ்டமும் கைகோர்க்க தமிழ்நாட்டில் கலைஞரின் அனுபவங்கள் தோற்று விஜயகாந்த் எதிர்க்கட்சி தலைவர் என்ற அந்தஸ்த்தையும் பெற முடிந்தது. 

எல்லாமே சரி தான்.

வளர நம்பிக்கைத் தேவை.  அந்த நம்பிக்கை கனவாக இல்லாமல் நிஜமாக மாற அதிர்ஷ்டமும் தேவைத்தான்.  

ஆனால் மேலும் வளர பயிற்சியும் உழைப்பும் தேவை தானே?

கலைஞர் அளவுக்கு திறமையில்லாத எம்.ஜி.ஆருக்கு கிடைத்த வாய்ப்புகளை கனகச்சிதமாக பயன்படுத்திக் கொண்டு மேலேறினார்.  ஆனால் அவருக்கு இயல்பாகவே இருந்த மக்கள் செல்வாக்கு என்பது அவரை உச்சத்தில் கொண்டு போய் நிறுத்த உதவியது.

எம்.ஜி.ஆர் அளவுக்கு விஜயகாந்திற்கு முழுமையான மக்கள் செல்வாக்கு இல்லாவிட்டாலும் கூட சரியான சந்தர்ப்பங்கள் அவரை நகர்த்திக் கொண்டே வந்தது. ஆனால் திறமையில்லாமல் வரும் அதிர்ஷ்டம் என்பது என்னவாகும்? என்பதற்கு விஜயகாந்த் உதாரணமாக இருக்கின்றாரோ என்று நினைக்கத் தோன்றுகின்றது. 

எந்த அரசியல்வாதிகளும் முழுமையான புத்திசாலிகள் அல்ல. 

கலைஞருக்கு இன்று வரையிலும் அறிக்கைகள் தயார் செய்வது முதல் பலதரப்பட்ட வகையில் உதவியாய் இருப்பதில் முதன்மையாக இருப்பவர் சண்முகநாதன்.  எவர் கதை, திரைக்கதை, வசனம் எழுதினாலும் கலைஞரின் எடிட்டிங் உழைப்பு இல்லாமல் அறிக்கை வெளியே வராது. அவரின் அபார உழைப்பும், ஞாபக சக்தியும் சுட்டுப்போட்டாலும் தமிழ்நாட்டில் எவருக்கும் வராது. அதே போல ஜெயலலிதாவுக்கு புலவர் மற்றும் அவர் மகன் (தற்போது யாரோ?) என்று பெரிய படைபட்டாளமே இருக்கின்றார்கள்.  

ஆனால் விஜயகாந்த் பின்னால் மூன்று அல்லக்கைகளும், மனைவி, மச்சினன் என்ற கிச்சன் காபினெட் குழுவும் இருப்பதால் கட்சியில் இருந்தவர்களை ஓட வைத்தது தான் மிச்சம்.

இவர் மேடையில் பேசும் பேச்சு முதல் பொது இடங்களில் உளறிக் கொட்டும் விசயங்களையும் பார்க்கும் போது வியப்பாகவே உள்ளது.  கற்றுக் கொள்ள பொறுமையில்லையா? இல்லை கற்றுக் கொள்ளும் "சூழ்நிலை"யில் இல்லாமல் இருக்கின்றாரா? என்று எண்ணவே தோன்றுகின்றது.  

உருவாகப் போகும் கூட்டணி தர்மத்தின் படி புதிய தலைமுறை தொலைக்காட்சியில் விஜயகாந்தின் பேச்சுக்களை நேரிலையாக ஒளிபரப்பி பீதியை கிளப்புகின்றார்கள்.  இத்தனை விசயங்கள் நடந்து கொண்டிருந்தாலும் ஒரு பக்கம் ராகுல் விஜயகாந்திற்கு பிறந்த நாள் வாழ்த்துச் செய்தி அனுப்பி தூண்டில் போட மறுபக்கம் நாங்க வந்து பார்க்கலாமா? என்று பா.ஜ.க. முயற்சித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

கலைஞர் கூட ஏற்காடு இடைத்தேர்தலுக்கு ஆதரவு கேட்டு கடிதம் அனுப்புகின்றார்.

அதிர்ஷ்டத்திற்கு கண்ணில்லை என்பது உண்மைதானோ?

தொடர்புடைய பதிவுகள்


Thursday, October 17, 2013

கூடையே கடையாகி


"சாமி பழம் வாங்றீங்களா........."

வீட்டுக்கு வெளியே குரல் கேட்க ஆர்வமாய் எட்டிப்பார்த்தேன். 

"அந்த கிழவிக்கிட்ட ஏதுவும் வாங்காதீங்க. வரவர விலையை அதிகமாக்கிக்கிட்டே போகுது" என்ற மனைவியின் குரலையும் மீறி வேகமாக வாசலை நோக்கிச் சென்றேன்.

பாட்டி வாசலுக்கு வெளியே தலையில் கூடையோடு நின்று கொண்டிருந்தார். காலை வெயில் மெதுவாக ஏறிக்கொண்டிருந்தது.

உள்ளே வாங்க பாட்டி என்றாலும் வரமாட்டார்.  நாம் வாங்குவோம் என்று தெரிந்தால் மட்டுமே கூடையை வாசல்படியில் இறக்கி வைப்பார்.  வேண்டாம் என்று சொல்லிவிட்டால் அடுத்த வீட்டை நோக்கி நகர்ந்து விடுவார்.  ஒரு பதில் வார்த்தை இருக்காது.

ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் காலை வேளையில் தவறாமல் வந்து விடுவார்.  மெலிந்த  ஒல்லியான உடம்பு. பொக்கை வாய் நிறைய வெற்றிலைச் சாறு உதட்டு ஓரம் வழிந்து கொண்டிருக்கும். சுருங்கிய புடவையும் கசங்கிய ஜாக்கெட்டுமாய் கருப்பு நிறத்தில் அவரின் களையான முகம் தனித்து தெரியும்.  காந்தி நகர் முழுக்க சுற்றி வருவதை பார்த்துள்ளேன். தொடக்கத்தில் இவர் மேல் எந்த ஈர்ப்பும் உருவாகவில்லை. 

ஒவ்வொரு நாளும் காலை முதல் மாலை வரைக்கும் எத்தனையோ பேர்கள் எங்கள் சந்தில் ஏராளமான பொருட்களை வந்து விற்றுக் கொண்டே தான் இருக்கின்றார்கள். தொடக்கத்தில் காய்கறிகள் மூன்று சக்கர வண்டியில் வந்து தள்ளிக் கொண்டு வந்து விற்றுக் கொண்டிருந்தார்கள். தற்போது டிவிஎஸ் 50 ல் மேலே ஒரு கூடை, பக்கவாட்டில் இரண்டு புறமும் தொங்கிக் கொண்டிருக்கும் சாக்குப் பைகள் மூலம் கொண்டு வந்து ஒரு இடத்தில் நிறுத்தி கத்தி ஒவ்வொருவரையும் வரவழைத்து விடுகின்றனர். 

மீன்களை கொண்டு வருபவர்கள் அங்கேயே அறுத்து  தண்ணீர் வாங்கி சுத்தம் செய்தும் கொடுத்து விடுகின்றனர். சிலர் கீரைகளை மட்டும்.  

மொத்த வியாபாரம், சில்லறை வியாபாரம் என்பதையெல்லாம் தாண்டி இது தனிமனித வியாபாரம். இன்று பெரிய நிறுவனங்கள் கடைபிடிக்கும் 'டோர் டெலிவரி'என்பதை நம்மவர்கள் பல நூற்றாண்டுகளாகவே செய்து கொண்டிருக்கின்றார்கள். 

எளிய மனிதர்கள் வாழ இங்கே ஏராளமான தொழில்கள் இருந்து கொண்டே தான் இருக்கின்றது. ஏராளமான உழைப்பும் அளவான நம்பிக்கையும் இவர்களை இயக்கிக் கொண்டிருக்கின்றது. 

ஒவ்வொருவிதமான சந்தைக்குப் பின்னாலும்   ஓராயிரம் நம்பிக்கைகள். 

கொட்டும் மழை கொளுத்தும் வெயில் எதுவும் இவர்களுக்கு பொருட்டல்ல. அதிகாலையில் குளிருக்கு பயந்து போர்த்திக் கொண்டு படுக்கும் மனிதர்களுக்கு இவர்களின் உழைப்பு தெரியாது. ஆனால் இவர்களிடம் பேரம் பேசி வாங்கும் போது தான் பலரின் சிக்கனம் என்ற பெயரில் ஒளிந்துள்ள சின்னப்புத்தி வெளியே தெரிய வரும்.

ஆனால் பாட்டி கொஞ்சம் கெட்டி.  அதற்கு மேல் உசாரான பார்ட்டியும் கூட. வாய் வார்த்தைகள் பட்டாசாக வெடிக்கும்.  தயவு தாட்சணயம் இருக்காது. பலருக்கும் உடனே கோபத்தை வரவழைத்து விடும்.  

"நீங்கெல்லாம் கடையிலே போய் தூசியையும் தராசுல எடை போட்டு வாங்குறவுங்க. நல்லது சொன்னா உங்களுக்கு புரியாது" என்பார்.

ஆனால் எனக்கு அவரின்  வியாபார அணுகுமுறைகளை விட அவரின் அளவு கடந்த நம்பிக்கைகள் தான் அதிக ஆச்சரியத்தை தந்தது. அதுவே தான் அவர் மேல் ஈர்ப்பை உருவாக்கியது. இந்த வார்த்தைகள் என் மனைவிக்கு எப்போதும் எரிச்சலை உருவாக்கும்.

"இப்படி வாய் பேசுனா யார் வாங்குவா?" என்றால் அதற்கும் பதில் உடனே வந்து விழும்.

"மனசுல சுத்தமா இருக்குறவுங்க வார்த்தைகள் எப்போதுமே அப்படித்தான் வரும் சாமி" என்பார். 

 "இல்லை பாட்டி காலம் மாறிக்கிட்டே இருக்கு.  நீங்களும் மாற வேண்டாமா" என்றால் "காலம் மாறினாலும் இன்னமும் வாயில தானே சாப்புடுறோம்" என்று பட்டென்று தெறித்து வரும் வார்த்தைகளைக் கண்டு நான் சிரித்து விடுவேன். 

வாசலுக்கு வெளியே நின்று கொண்டிருந்த அவர் தலையில் சுமந்திருக்கும் அந்த கூடை தான் எனக்கு அதிக ஆச்சரியத்தை தரும். 

பெரிய அகன்ற கூடை. அந்த கூடையின் பலத்திற்காக சாணியால் மெழுகப்பட்டு கெட்டியாக மாற்றப்பட்டு இருந்தது. சாணி நன்றாக உலர்ந்திருந்த காரணத்தால் எந்த வாடையும் இருக்கும்.  கூடையின் எந்த பின்னலும் வெளியே தெரியாது.  

மொத்தத்தில் மேலேயிருந்து கீழே போட்டாலும் உள்ளேயிருக்கும் பொருட்கள் சிதறி விழுமே தவிர கூடைக்கு எந்த சேதாரமும் உருவாகாத அளவுக்கு பலமாக இருந்தது.  அதுவே தான் அந்த கூடைக்கு அதிக கனத்தை உருவாக்கியும் இருந்தது.

"கொஞ்சம் இறக்கி வை சாமி" என்றார்.

எனக்கு மூச்சு வாங்கியது. ஏறக்குறைய 25 கிலோ அளவுக்கு உள்ளே பழங்கள் இருந்து.  ஆப்பிள், சப்போட்டா, சோளக்கதிர் என்று ஒவ்வொன்றும் தனித்தனி பைகளில் கட்டப்பட்டு இருந்தது.

கூடையை இறக்கிய எனக்கு மூச்சு பிடிப்பு வந்து விடுமோ? என்று பயமாய் இருக்க, பாட்டி வியர்வையை துடைத்துக் கொண்டு "எதை சாமி எடுத்துக்குறீங்க" என்றார்?

அவர் முகத்தில் எந்த களைப்பும் தெரியவில்லை. கொஞ்சம் நேரம் ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கூட தோன்றாமல் கொண்டு வந்த பழங்களை நம்மை வாங்க வைக்க வேண்டும் என்பதிலேயே அவரின் தொடர்ச்சியான வார்த்தைகள் வந்து விழுந்து கொண்டிருந்தன.  

பழங்களை விட அவர் பேச்சைத் தான் கவனித்துக் கொண்டிருந்தேன்.

பெரிய கடைகளில் உள்ள பழ விலைகளை விட ஒவ்வொன்றுக்கும் ஐந்து முதல் பத்து ரூபாய் வரைக்கும் அதிகம் வைத்திருந்தார். எனக்கு அவர் விலைகள் பெரிதாக தெரியவில்லை. அவரின் இந்த வயதின் உழைப்பும், அந்த உழைப்பு குறித்த எந்த பெருமிதமும் இல்லாத தன்மையும் தான் அதிக யோசனைகளை உருவாக்கியது.

மெதுவாக பேச்சைச் தொடங்கினேன்.  ஆனால் வெட்டி வார்த்தைகளை அவர் விரும்பவில்லை என்பதை நறுக்குத் தெறித்தார் போல் வந்து விழும் வார்த்தைகளில் இருந்து உணர முடிந்தது.

நம்பியூரில் இருந்து அதிகாலையில் பேரூந்து வழியே திருப்பூரில் பெரியார் காலணி நிறுத்தத்தில் வந்திறங்கி அவரின் வியாபாரம் தொடங்குகின்றது. சிறிய வீடுகள், பெரிய குடியிருப்புகள் தொடங்கி ஒவ்வொரு சந்து என இந்த பெருஞ்சுமையை சுமந்து கொண்டு வந்தவரின் உழைப்பு எனக்கு ஆச்சரியமல்ல.  

ஆனால் ஓய்வெடுக்கவேண்டிய வயதில் உழைத்து வாழ வேண்டியிருக்கிறதே என்ற அங்கலாய்ப்பு அவரிடம் கொஞ்சம் கூட இல்லை என்பது தான் எனக்கு வியப்பைத் தந்தது.

கூடை நிறைய பழங்கள் இருந்தாலும் எப்போதும் போல இப்படித்தான் தொடங்குவார்.

"கொண்டு வந்த ஆப்பிள் முடிந்து விட்டது.  சப்போட்டா கொஞ்சம் தான் இருக்கு. அடுத்த சந்துக்கு போனா இதுவும் முடிந்து விடும்" என்று சொல்லிக் கொண்டே நாம் வாங்க விரும்புகின்றோமா இல்லையா என்று ஆழம் பார்ப்பதிலே அவரின் குறி இருக்கும்.

நிச்சயம் ஒரு நாளைக்கு அவருக்கு எல்லாச் செலவும் போக இருநூறு ரூபாய் அளவுக்கு கிடைக்கும்.  பாட்டியிடம் எதையும் வாங்காமல் பேசினால் வார்த்தைகளை பிடுங்க முடியாது என்பதற்காக சப்போட்டா பழத்தை எடுத்துக் கொண்டு "உங்க பசங்க என்ன செய்றாங்க?" என்றேன்.

"நம்பியூர்ல மில்லில் வேலைக்கு போறாங்க சாமி" என்றார்.

"அப்புறம் எதுக்கு உங்களுக்கு இந்த வேண்டாத வேலை. வயசான காலத்திலே வீட்லே இருக்க வேண்டியது தானே?" என்றேன்.

"மகன் சாம்பாத்தியம் சாப்பாட்டுக்கு சரியாப் போகுது. பேரனுங்க படிப்புச் செலவை நான்தான் பாத்துக்குறேன்"  என்றார்.

***************

(இந்த பதிவுக்கு இணையத்தில் படம் தேடிக் கொண்டிருந்த போது தலையில் சுமந்து விற்கும் மனிதர்களைப் பற்றி ரெங்கசாமி எழுதிய மின்நூல் கண்ணில் தென்பட்டது.  அவர் எழுதிய தலைப்பையே இதற்கும் வைத்துள்ளேன்.  இந்த புனைவு அல்லது சிறுகதை திருப்பூரில் பத்திரிக்கை துறையில் இருக்கும் நண்பர் திரு மணி அவர்கள் சமீபத்தில் தொடங்கியுள்ள வணக்கம் திருப்பூர் என்ற உள்ளூர் பத்திரிக்கைக்காக எழுதப்பட்டு பிரசுரமானது)