Wednesday, July 31, 2013

இன்று பிறந்த நாள்

"இன்றைக்கு எனக்கு பிறந்த நாள் சார்"

தட்டு நிறைய சாக்லேட்டும், வித்தியாசமான கேக் வகைகளையும் கையில் வைத்துக் கொண்டு என் அறையில் நுழைந்து நீட்டிக் கொண்டிருந்த பெண்ணுக்கு 22 வயது இருக்கக்கூடும். மென்மையாக சிரித்துக் கொண்டே ஒரே ஒரு சாக்லேட் மட்டும் எடுத்துக் கொண்டு "வாழ்த்துக்கள்" என்றேன்.

"சார் கேக் எடுத்துக்கங்க?  வீட்டில் உள்ள குட்டீஸ்களுக்கும் எடுத்துக்கிட்டு போங்க" என்றார்.

"இல்லம்மா போதும்" என்று சொல்லி விட்டு அனுப்பி வைத்தேன்.

அலுவலகத்தில் தினந்தோறும் யாரோ ஒருவர் பிறந்த நாள் என்று புதிய உடையில், கைநிறைய இனிப்புகளோடு வந்து கொண்டே இருக்கின்றார்கள். அலுவலகத்தில் உள்ள ஒவ்வொரு இருக்கைக்கும் சென்று மறக்காமல் கொடுக்கின்றார்கள்.  பெரிய பதவிகளில் இருப்பவர்கள் எவரும் கொண்டாடி நான் பார்த்ததில்லை. அவர்களின் கொண்டாட்டமெல்லாம் எப்போதும் போல தினந்தோறும் இரவு நேரத்தில் தான் தொடங்குகின்றது.

சாதாரண பதவிகளில் இருப்பவர்களுக்கும், எளிய மனிதர்களுக்கும் இங்கே ஏதோவொரு கொண்டாட்டம் தேவையாக இருக்கின்றது. 

குறிப்பாக பெண்களுக்கு இது போன்ற கொண்டாட்டங்களில் ஆர்வம் அதிகமாகவே இருக்கின்றது. மிகக்குறுகிய காலத்திற்குள் மாறிய சமூகத்தை நிறைய யோசிக்க முடிகின்றது.

பள்ளிப்பருவத்தில் மாலை வீட்டுக்குள் வரும் போது இலங்கை வானொலியில் ஒலித்த அந்த குரல் இன்னமும் நன்றாக நினைவில் உள்ளது.

பிறந்த நாள்... பிறந்தநாள்............
யாவரும் பிள்ளைகள் போல தொல்லைகள் எல்லாம் மறந்த நாள்.......

இதுவே இன்று ஹேப்பி பர்த்டே என்று மாறியுள்ளது,

கடந்த பத்தாண்டுகளுக்குள் தான் மிக அதிக அளவில் இந்த கொண்டாட்ட மனோநிலை உருவாகியுள்ளது.  ஆங்கில வருட புத்தாண்டு, காதலர் தினம், அப்பா தினம், அம்மா தினம் என்று ஏராளமான தினங்கள் வந்து கொண்டேதான் இருக்கின்றது.

ஆயா தினம் ஒன்று தான் இன்னும் தனியாக வரவில்லை. அதற்குப் பதிலாக முதியோர் தினமாக ஒரே கூரையின் கீழ் கொண்டு வந்து விட்டார்கள்.

பெற்றோர்களை காப்பகத்தில் கொண்டு போய் விட்டு வந்த ஆத்மாக்களும், அம்மாவிடம் பால் குடித்த மிருகங்களும் அன்று தான் நினைவுக்கு வந்து அவர்களை பார்த்து விட்டு வாழ்த்துகளை சொல்லிவிட்டு வந்து விட்டால் அன்றைய தின கொண்டாட்டமும் முடிவுக்கு வந்து விடும். 

அதற்குப் பிறகு அடுத்த வருடம் சென்று பார்த்தால் போதும்.

ஏறக்குறைய வருடத்தில் 365 நாட்களுக்கும் வியாபாரிகள் உருவாக்கிய கொண்டாட்டங்கள் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டுக் கொண்டிருக்கிறது. 

ஒவ்வொரு அட்சய திரிதியை தினத்தில் தங்கம் வாங்குபவர்கள் அடுத்த வருடத்திற்கு வாங்குபவர்கள் இருக்கின்றார்களோ இல்லையோ தங்கம் விற்பவன் மட்டும் அடுத்த வருடத்தில் அடுக்குமாடி கடையை கட்டுபவனாக இருக்கின்றான்.

இதற்குப் பின்னால் சமூக  உளவியல் காரணங்களை புரிந்து கொள்ள முடிகின்றது.

இன்று நகரங்களில் வசிக்கும் 80 சதவிகித மக்கள் அத்தனை பேர்களும் ஏதோவொரு சமயத்தில் கிராமத்திலிருந்தே இடம் பெயர்ந்தவர்களாகவே இருக்கின்றனர்.  

கிராமங்களில் கொண்டாட்டங்களுக்கு பஞ்சமில்லை. கோவில் விழாக்கள், தேர்த்திருவிழா, மஞ்சுவிரட்டு, பாட்டுக்கச்சேரி, கரகாட்டம், வாணவேடிக்கை என்று தொடங்கி வருடந்தோறும் நடக்கின்ற பல திருவிழாக்கள் மக்களை ஒன்று சேரவைத்தது. 

எளிமையான அந்த விழாக்களில் மனங்களை பறிமாறிக் கொள்ள முடிந்தது.  ஆனால் இன்று மனம் பின்னுக்குப் போய் பணம் முன்னுக்கு வந்து விட விழாக்களின் போக்கும் மாறிவிட்டது. ஒவ்வொரு கொண்டாட்டங்களும் வியாபாரிகளின் கைக்கு போய்விட்டது.

நகரங்களில் நடக்கும் விழாக்களின் தன்மை  தனிப்பட்ட மனிதர்களின் மனோநிலையை கவர்வதை விட கூட்டத்தையே முன்னிலைப் படுத்துகின்றது. இதுவே இன்று "வீக் எண்ட்" கலாச்சாரத்தை விரைவாக வளர்த்துக் கொண்டு வருகின்றது.  

வாரம் முழுக்க வேலை. வார இறுதியில் ஒய்வு என்பது மேலைநாட்டு கலாச்சாரம்.  அது இப்போது இந்தியாவில் குடித்து கும்மாளமிடுவர்களின் விழாவாக மாறியுள்ளது.

இங்கு எட்டு மணி நேர வேலையும் இல்லை. எந்த துறையிலும் வெற்றிகள் தொட்டு விடும் உயரத்திலும் இருப்பதில்லை. இதன் காரணமாகவே இந்திய வேலைகள் என்பது 24 மணிநேரமும் அலர்ட் ஆறுமுகமாகவே வாழ வேண்டியுள்ளது.

நான் பார்க்கும் பெரும்பாலான பிறந்த நாள் கொண்டாட்டங்கள் அனைத்தும் மிகுந்த ஆடம்பரமான விழா போலவே கொண்டாடப்படுகின்றது. அவரவர் (வருமான) தகுதிக்கு மீறியே கொண்டாடப்படுவதும், அதே போல நாமும் கொண்டாட வேண்டும் என்ற எண்ணம் மற்றவருக்கு உருவாகி அதன்படியே கடன் வாங்கி செலவளிக்கும் அளவுக்கு இன்று  கொண்டாட்டங்களில் முகமே மாறியுள்ளது.

மளிகைக்கடையில் உள்ள கூட்டத்தை விட கேக், ஐஸ்கீரிம் விற்கும் கடைகளில் ஒவ்வொருவரும் செலவளிக்கும் காந்தி தாளை பார்க்கும் போதெல்லாம் ஒவ்வொரு இந்தியனும் ஒரு ஐரோப்பியராகவே தெரிகின்றார்கள்.

எண்ண அளவில் ஐரோப்பியனாக இருந்தாலும் எலும்பு முழுக்க இந்தியனாகத்தான் இருக்கின்றான். அவர்களிடமிருந்து எதை எதை கற்றுக் கொள்ள வேண்டுமோ அதையெல்லாம் விட்டு உடுப்பதை குடிப்பதை கற்றுக் கொண்டு இன்று ஒவ்வொரு நடுத்தரவர்க்கமும் தன்னை ஒரு கணவானாகவே நினைத்துக் கொள்கின்றது. தங்களுடைய குழந்தைகளும் அவ்வாறே வளர வேண்டும் என்று விரும்புகின்றது..

மேலைநாடுகள் அவர்கள் விரும்பிய கல்வியை இந்தியாவில் கொண்டு வந்து திணித்து விட்டே நகர்ந்தார்கள்.  நம்மவர்களுக்கும் அவர்கள் உருவாக்கித் தந்த கல்வியை மாற்ற விரும்பவில்லை. காரணம் அப்படியே இருந்தால் தான் கல்வி கற்றாலும் கூமூட்டையாக இருக்கமுடியும் என்பதால் இன்று வரையிலும் அந்த கல்வி முறையைத் தான் நாம் கொண்டாடிக் கொண்டுருக்கின்றோம்.

குமாஸ்தாக்களை உருவாக்கும் கல்வியை கற்றவர்கள் தான் இது போன்ற புதிய கலாச்சாரத்தின் காவலர்களாக இருக்கின்றார்கள்.  படித்து முடித்தவுடன் எப்படியும் ஏதோவொரு வெளிநாட்டுக்குச் சென்று விட்டால்போதும் என்பதே ஒவ்வொருவருக்கும் கனவாக இருக்க ஆனால் கனவு தேசங்களோ இன்று கண்ணீர் தேசமாக மாறிக்கொண்டிருக்கின்றது.

இன்றைய ஐரோப்பா  பார்த்து பார்த்து செலவளிக்கும் இந்திய வாழ்க்கை முறைக்கு மாறிக் கொண்டிருக்க நாமோ அன்றைய வாழ்க்கை அன்றைய சந்தோஷம் என்ற ஐரோப்பிய வாழ்க்கையை வாழத் தொடங்கியுள்ளோம்.

அவ்வப்போது சில நம்பிக்கை நட்சத்திரங்கள் என் கண்ணில் படுவதுண்டு.

அன்று அலுவலகத்தில் இருக்கும் பெண்மணி இன்று மதியம் வீட்டுக்குச் செல்ல வேண்டும் என்று அனுமதி கேட்ட போது நேற்றே அவர் திருமண நாள் குறித்து சொல்லியிருந்தது என் நினைவுக்கு வந்தது.  

அலுவலகத்தில் முகப்பில் வரவேற்புத் துறை பணியில் இருப்பவர். கிராமத்தில் தான் விரும்பிய பையனை சாதி எதிர்ப்புகளையும் மீறி திருமணம் செய்து கொண்டு திருப்பூர் வந்தவர். முழுமையாக அவரைப் பற்றி தெரிந்த காரணத்தாலும், அவரின் தனிப்பட்ட பழக்கவழக்கங்கள் என்னை கவர்ந்த காரணத்தாலும் அவர் மேல் எப்போதும் ஒரு தனிப்பட்ட மரியாதை உண்டு.

அனுமதி கொடுத்து விட்டு எப்போதும் போல சிரித்துக் கொண்டே கேட்டேன்.

"என்னம்மா வீட்டில் மதுரை ஆட்சியா? இல்லை சிதம்பரம் ஆட்சியா?" என்றேன்.

யோசிக்காமல் பட்டென்று சொன்னார்.

"எங்கள் இருவரின் மனசாட்சி சார்".

இதற்குத்தானே ஆசைப்பட்டாய்?

Sunday, July 28, 2013

இதற்கு தானே ஆசைப்பட்டாய்?

இறுதியாக கேள்வி பதிலாக இந்த கல்வித்தொடர் பகுதியை முடிவுக்கு கொண்டு வருவோம். 

இந்த தொடரில் மாணிக்கம் கந்தசாமி மற்றும் நிரஞ்சன் போன்றவர்கள் சில கோரிக்கை வைத்துள்ளனர். வேறொரு சமயத்தில் அவற்றை என் பார்வையில் அனுபவ பகிர்வாக எழுதுகின்றேன்.

இந்த தொடர் நான் எழுத காரணமாக இருந்தவரும், இதைப் பற்றி அதிக அளவு என்னுடன் பல மணி நேரம் உரையாடி எனக்கு புரிதலை உருவாக்கியதோடு முக்கிய ஆவணங்களை அனுப்பிய பிகேஆர் என்கிற ராமச்சந்திரனுக்கு என் நன்றி.

மொழி என்றால் ?

ஒருவரின் அறிவு நிலைப்பட்டுள்ளது என்பதை நமக்கு உணர்த்துவதே மொழி தான். குழந்தை  பேசத் தொடங்கும் பொழுது  உறுப்புகள் வளர்வதைப் போல அதன் சிந்தனைகளும் வளர தேடலும் தொடங்கி விடுகின்றது. ஒன்றைத் தேடத் தொடங்கும் போது அறிவும் வளரத் தொடங்கி விடுகின்றது.

அறிவின் அடிப்படை தேடல். தேடலின் அடிப்படை சிந்தனை.  சிந்தனையின் அடிப்படை மொழி. 

மொழியின் முக்கியத்துவம்?

தனி மனிதனின் வளர்ச்சியை அவன் வாழும் சூழ்நிலைகள் தீர்மானிக்கின்றது. ஒருவன் எந்த இடத்தில் வாழ்கின்றானோ அதற்கு தகுந்தாற் போல அவனது எண்ணம், நோக்கம், செயல்பாடுகள் என்று ஒவ்வொன்றும் படிப்படியாக மாறிவிடுகின்றது.

கடல்புறப் பகுதியில் மலைப்பிரதேசங்களில்,கிராமப்புறங்களில், சிறிய மற்றும் பெரிய நகர்புறங்களில்,வெளிநாடுகளில் உள்ள வாழ்க்கை வெவ்வேறாக இருப்பதால் மொழி தொடர்பு ரீதியாக முக்கியத்துவம் பெறுகின்றது.   

ஒரு இடத்தில் பேசப்படும் மொழி வேறோரு அடுத்த இடத்தில் வேறொரு விதமாக உள்ளது. ஒரே மாநிலத்திற்குள் மாவட்டம் தோறும் வித்தியாசமான வட்டார வழக்கு மொழிகள் இதன் காரணமாகவே உருவாகின்றது.  குறிப்பிட்ட   பழக்கவழக்கங்கள், பண்பாட்டு கலாச்சார முறைகள் என அனைத்தும் புவியியல் அமைப்பின்படியே தோன்றிவிடுகின்றது.

மொழி என்பது வெறுமனே தொடர்பு சாதனம் மட்டுமல்ல. தலைமுறை தலைமுறையாக  ஒருவர் வாழ்ந்த வாழ்க்கையின் தடங்களை கடத்திச் செல்ல உதவுவதும் இந்த மொழியே.

தாய்மொழியின் சிறப்பு?

தாய்மொழியின் முக்கிய சிறப்பே குழந்தைகள் ஒன்றோடு ஒன்றை ஒப்பிட்டுக் கொள்ள உதவுகின்றது.  படித்த கல்வியின் மூலம் பார்க்கும் காட்சிகளை ஒன்றாக சேர்த்து பார்க்க உதவுகின்றது.அதன் மூலம் தோன்றும் கேள்விகளுக்கு பதில் தேடும் போது அது அறிவை விசாலமாக்குகின்றது. இதனால் எல்லாவற்றையும் எளிதில் கற்றுக் கொள்ள முடிகின்றது. தாய்மொழியில் கற்கும் போது குழந்தைகள் ஆசிரியர்களுடன் எளிதில் உரையாட முடிகின்றது.  உரையாடும் போது நம்பிக்கை உருவாகின்றது. பயம் நீங்க கல்வி என்பது ஆர்வத்துடன் செய்யப்படும் ஒரு இயல்பான கடமையாக மாறி விடுகின்றது.

தாய்மொழியின் முக்கியத்துவம்?

மொழியென்பது ஒரு தொடர்பு சாதனம் மட்டுமல்ல. அது அறிவுக்குரியது என்ற எல்லையோடு மட்டும் நிற்பதல்ல.  தாய்மொழி என்பது நாம் வாழும் சூழ்நிலையில் உள்ள பழக்கவழக்கங்கள்,கலாச்சார நடைமுறைகள் அனைத்தையும் அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்க உதவுகின்றது. ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு கலாச்சாரத்தை வைத்துத் தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றது.  

அது அங்குள்ள சூழ்நிலையின் அடிப்படையைக் கொண்டே உருவாகின்றது. வாழும் சூழ்நிலை வேறு. கற்பிக்கும் சூழ்நிலை வேறு என்பதாக வளரும் மாணவனின் அறிவு குழப்பத்தில் தொடங்கி குழப்பத்தோடு வாழ வேண்டியதாக உள்ளது. 

மாற்று மொழி சொல்லும் கலாச்சாரத்தை படிக்கும் மாணவனின் பெற்றோர்களின் வாழ்க்கை ஒரு விதமாகவும் மாணவனின் சிந்தனைகள் வேறுவிதமாகவும் மாறத் தொடங்கி விடுகின்றது.

இந்தியாவில் கல்வி?

இங்கே கல்வி என்பதை குழப்பதோடு தான் பார்க்கப்பட்டு வருகின்றது. கற்றுக் கொள்வதற்கும் சிந்திப்பதற்கும் இடையே உள்ள வித்தியாசங்களைப் பற்றி எவரும் புரிந்து கொள்ள தயாராக இல்லை.  அதை முறைப்படி புரியவைக்கவும் எவரும் விரும்பவும் இல்லை .  

கல்வியில் இரண்டு வகைகள் உள்ளது. 

ஒன்று தெரிந்து கொள்வதற்காக கல்வி.  மற்றொன்று சிந்திப்பதற்கான கல்வி.

ஒரு விசயத்தை  படித்து தெரிந்து கொண்டு அதை அப்படியே எழுதி விட்டால் ஆசிரியர் எதிர்பார்க்கும் மதிப்பெண்கள் மாணவர்களுக்கு கிடைத்து விடும். ஆனால் அந்த விசயத்திற்கு முன்னால் பின்னால் உள்ள எந்த புரிதலும் அந்த மாணவனுக்கு தேவையில்லை என்பதான கல்வி தான் இந்தியாவில் உள்ளது.

கல்வி கற்றும் சிந்திக்கத் தெரியாதவர்களை உருவாக்குவதில் தான் நாம் வெற்றியடைந்துள்ளோம்.

இந்தியாவில் ஆங்கில மொழிக்கல்வி வளர முக்கிய காரணமாக உள்ளதன் பட்டியல்.

1. இந்தியாவில் தொடக்கத்தில் இருந்த வறுமை பலரையும் கல்வி கற்க விடாமல் பெரும் தடையாக இருந்தது.

2. கல்வியென்பது குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே என்பது போன்ற காரணங்கள் இந்த தடைகளை மேலும் வளர்த்தது.

3ஆங்கிலேயர்கள் உருவாக்கிய நிர்வாக அமைப்பில் ஆங்கிலம் தெரிந்தவர்களுக்கு மட்டுமே வேலை என்ற காரணிகள் ஆங்கிலத்தை வளர்க்க முக்கிய காரணமாக இருந்தது.

4. ஆங்கிலத்தினால் வசதியான வாழ்க்கை பெற்றவர்கள் அதுவே சரியென்று சொல்ல ஆங்கிலேயர்கள் சென்ற பிறகும் இங்கே கல்வி முறையில் எவரும் மாற்றம் கொண்டுவர விரும்பவில்லை.  மேலும் மக்களின் வாழ்க்கை முறை ஒரு விதமாகவும் அந்த மக்களை ஆள்கின்றவர்களின் அலுவல் மொழி வேறொன்றாகவும் இருக்க மக்களுக்கும் ஆட்சியாளர்களும் மிகப் பெரிய இடைவெளி இயல்பாகவே உருவாகத் தொடங்க அதுவே ஊழல் முதல் எதிர்த்து கேள்வி கேட்ட முடியாது என்கிற நிலை வரைக்கும் கொண்டு வந்து நிறுத்திவிடுகின்றது.  

காலம் முழுக்க எளியவர்களுக்குண்டான உரிமைகள் மறுக்கப்படுவதென்பது இயல்பானதாகவும் மாறிவிடுகின்றது.  மறுக்கப்பட்டவர்கள் இந்த மொழிப் பிரச்சனையின் காரணமாக மருகிக் கொண்டே வாழ வேண்டியதாகவும் உள்ளது.

5. நாகரிகம் என்ற பெயரில் வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகள் அதிகமாக அடையக்கூடிய வசதிகளுக்கு எது உடனடியாக பயன்படுகின்றதோ அதுவே மக்களும் தேவையென கருதத் தொடங்க கல்வி முதல் பழக்கவழக்கங்கள் என ஒவ்வொன்றும் மாறத் தொடங்கியது. இதன் மூலம் தங்கள் குழந்தைகள் ஆங்கிலத்தில் கல்வி கற்றால் தான் வளமான வாழ்க்கை வாழ முடியும் என்ற நம்பிக்கை பெற்றோர்களின் மனதில் ஆழமாக பதியத் தொடங்கியது.

6. பொருளாதார ரீதியாக வளர்ச்சியடைந்த நாடுகளை மக்கள் வாழத் தகுந்த இடம் என்ற நம்பிக்கை உருவாக அந்தந்த நாடுகளின் மொழிகளை தங்கள் குழந்தைகள் கற்றால் எளிதில் அங்கே வேலை கிடைக்கும் என்ற எண்ணம் வலுப்பெறத் தொடங்கியது.

7.இன்று இந்தியாவில் ஒருவனது பொருளாதாரமே அனைத்தையும் தீர்மானிக்கக்கூடிய சூழ்நிலையில் இருப்பதால் ஒவ்வொருவரும் சூழ்நிலைக் கைதியாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.  மொழிக்கும் அறிவுக்கும் உள்ள வித்தியாசம் மறைந்து விட்டது. முந்தியவர்களுக்கு முன்னுரிமை என்பது இயல்பானதாக மாறிவிட்டதால் அவரவர் தாய்மொழி எண்ணம் பின்னுக்குப் போய்விட  பிழைக்க ஒரு மொழி என்கிற நிலைக்கு வந்துள்ளார்கள்.

8. இன்று வரையிலும் மேலைநாடுகளில் அருகாமைப் பள்ளி என்பது ஒரு முக்கியமான நடைமுறைக் கொள்கையாகவே வைக்கப்பட்டுள்ளது.  ஒரு குறிப்பிட்ட இடத்தில் வாழ்பவர் வேறொரு இடத்தில் கொண்டு போய் தங்கள் குழந்தைகளை சேர்கக வேண்டும் என்றால் அதற்கு சரியான காரணங்கள் இல்லாவிடில் வாய்ப்பு மறுக்கப்படும்.

இதன் காரணமாக அந்தந்த பகுதியில் இருப்பவர்களுக்கு முன்னுரிமையும், பள்ளியில் கூட்ட நெரிசலும் தவிர்க்கப்படும்.  இங்கே அந்த பழக்கம் இல்லை என்பதோடு அப்படியெல்லாம் உண்டா? என்கிற வினோத கேள்வி தான் நம்மை வந்து தாக்கும்?  இதே போல இங்கே உருவாகும் போது அரசாங்கம் கட்டாயம் குறிப்பிட்ட பகுதிகளில் தேவைப்படும் பள்ளிகளை திறந்தே ஆக வேண்டும். 

இங்கே சட்டம் என்பது பட்டம் போல பறந்து கொண்டிருப்பதால் வெறுமனே எழுதி ஆறுதல் பட்டுக் கொள்ளலாம். தவறில்லை.

தாய்மொழி வளர அரசாங்கம் செய்ய வேண்டிய முக்கிய கடமைகள்.

1. கிராமத்து பள்ளியில் படிப்பவர்களுக்கு உயர்கல்வி முதல் வேலைவாய்ப்பு வரைக்கும் ஒவ்வொரு இடங்களிலும் முன்னுரிமை.

இப்போதுள்ள இடஒதுக்கீடு போல ஒவ்வொரு துறையிலும் குறிப்பிட்ட சதவிகிதம் இவர்களுக்கே என்கிற சட்ட தீர்மானம் கொண்டு வந்து விட்டாலே பாதி பிரச்சனைகள் முடிவுக்கு வந்து விடும்.

2. அரசுப்பணி என்பது அரசுபள்ளியில் படித்தவர்களுக்கு மட்டுமே.

3 அரசியல்வாதிகளின் குழந்தைகள் அரசு பள்ளியில் படிக்க வைக்காவிட்டால் அவர்கள் பதவியில் இருக்க முடியாது என்கிற நிலை.

4. ஒருவர் அரசு ஊழியராக இருப்பவர்கள் தங்கள் குழந்தைகள் அரசு பள்ளியில் குறைந்தபட்சம் தொடக்க கல்வி வரைக்கும் படிக்க வைக்காவிட்டால் அவர்களின் வேலை பறிபோய்விடும்.

5.நகர்புறங்களில் உள்ள அரசு பள்ளிகளின் எண்ணிக்கையை குறைத்து புறநகர்களில், கிராமங்களில் அதிக அளவு உருவாக்குதல். நகர்புறங்களுக்கு குடும்பமே இடப்பெயர்வுக்கு இது முடிவு கட்டும். 

6.கல்வி அமைப்பு என்பதை தன்னாட்சி பெற்ற நிர்வாகமாக மாற்ற வேண்டும். இரண்டு வருடத்திற்கொரு முறை உலக மாறுதல்களுக்கேற்ப ஏற்ப பாடத் திட்டங்களை மாற்றுதல். இந்தியா முழுமைக்கும் பொதுக்கல்வி திட்டம் ஒன்றை உருவாக்குதல். அந்தந்த மாநில கல்விக்குழுக்கள் மூலம் ஒப்பு நோக்குதல். தொடக்க கல்வி என்பது அந்தந்த மாநில மொழிகளுக்கு மட்டுமே முக்கியத்துவம். 

7.பத்தாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரையில் உள்ள தற்போதையை சூழ்நிலையை முற்றிலும் மாற்றி விட்டு மூன்று வகுப்புகளையும் கல்லூரி போல மூன்றாண்டு கல்வித்திட்டமாக மாற்றுதல். ஒன்பதாம் வகுப்போடு மொத்த பாடங்களையும் கற்பிப்பதை நிறுத்தி விட்டு பத்து முதல்  அடுத்த மூன்றாண்டுகளுக்கு ஒரு மாணவன் எந்த துறையில் தனது மேற்கல்வியை படிக்க விரும்புகின்றானோ அந்த துறை சார்ந்ததை மட்டும் கற்பித்தல்.  இந்த மூன்றாண்டு பாடத்திட்டத்தில ஆங்கிலம் மற்றும் மாநில மொழியில் கற்க வாய்புகளை உருவாக்கிக் கொடுத்தல்.

வக்கீல் படிக்க விரும்புவனுக்கு கணக்கு தேவையிருக்காது.  மென்பொருள் துறையில் சேர விரும்புவனுக்கு வரலாறு தேவையிருக்காது. கல்லூரியில் நுழையும் பொழுதே அவனது துறை சார்ந்த கல்வி எளிதாக மாறி விடும். அன்றாட வாழ்க்கைக்கு தேவைப்படும் அத்தியாவஸ்யமான துறைகளை ஒரு பாடமாக வைக்கப்படும் போது எளிய குடும்பத்தில் இருந்து வருபவர்களுக்கு இந்த துறை வரப்பிரசாதமாக இருக்கும். கைத்தொழில் ஒன்றை கற்றுக் கொள் என்பது நிஜமாகவே சாத்தியமாகும்.

8 ஒவ்வொரு வருடமும் தனியார் அரசாங்க பள்ளிகள் என்று பாரபட்சமில்லாது ஆசிரியர்களின்  தகுதியை தேர்வு வைத்து சோதித்தல். தகுயில்லாதவர்கள் மீண்டும் ஒரு முறை வாய்ப்பளித்து அதிலும் தேர்ச்சியடையவில்லை என்கிற பட்சத்தில் எங்கும் கல்விப்பணி ஆற்ற தடைவிதித்தல். 

தற்போது தமிழ்நாடு அரசாங்கம் அரசுபள்ளியில் கொண்டு வந்துள்ள ஆங்கில வழிக்கல்வி?

உறுதியாக விரைவாக தோற்றுவிடும் சாத்தியக்கூறுகள் தான் அதிகமுள்ளது. நமது மக்கள் இலவச மனப்பான்மையை விரும்பும் காரணத்தால் இன்னும் சில ஆண்டுகள் அதனை விரும்புவார்கள்.இதற்கு மேலாக தகுதியற்ற ஆசிரியர்களால் தங்களின் குழந்தைகளின் வளர்ச்சியடையாத திறமைகளைக் கண்டு மீண்டும் தனியார் பள்ளி பக்கமே ஒவ்வொரு பெற்றோர்களும் வரத் தொடங்குவர்.

தற்போதைய சூழ்நிலையில் மாணவர்களுக்கு தேவையான மொழிகள்.

இந்தியாவிற்குள் எங்கு வேண்டுமானாலும் வாழ வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு நிச்சயம்  தமிழோடு ஹிந்தி ஆங்கிலம் அவசியம் தேவை. தமிழ்நாட்டிற்குள் மட்டும் வாழவேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்களுக்கு தாய்மொழியோடு ஆங்கிலமும் அவசியம் தேவை.

மொழியறிவை வளர்க்கும் காரணிகள்.

சூழ்நிலை தான் முக்கிய பங்கு வகிக்கின்றது. அரசு பள்ளியில் படித்தவர்கள் அமெரிக்காவிற்கு தங்கள் கல்வித்தகுதி அடிப்படையில் சென்ற போதிலும் அங்கு சென்றதும் இயல்பான் அமெரிக்க ஆங்கிலமென்பது அவர்களிடம் வந்து விடுவதில்லை. அங்குள்ள சூழ்நிலை நெருக்கிக் தள்ள இதுவொரு இயல்பான பழக்கமாக மாறிவிடுகின்றது.  

ஐந்து பரிச்சை எழுதி ஹிந்தியில் தேர்ச்சியடைந்தவர்கள் எவரும் நல்ல விதமாக ஹிந்தி பேச முடிவதில்லை. அதுவே மும்பையில் ஆறு மாதங்கள் கூலித் தொழிலில் சேர்ந்து ஹிந்தியை வெளுத்து வாங்கியவர்கள் அதிகம். என் பிள்ளை ஆங்கிலம் மட்டுமே பேச வேண்டும் என்று விரும்பும் பெற்றோர்கள் முதலில் செய்ய வேண்டியது வீட்டுக்குள் குழந்தைகளிடம் எளிய ஆங்கிலத்தில் பேசி பயிற்சியை தொடங் வேண்டும். படிப்பறிவு இல்லாத பெற்றோர்கள் அதற்கான சூழ்நிலையை தங்கள் குழந்தைகளுக்கு தனிப்பட்ட முறையில் உருவாக்க வேண்டும்.

இது செலவு பிடிக்கும் சமாச்சாரம் என்றால் மாணவன் கடைசியில் செல்லாக்காசாகி விடுவதை தவிர்க்க முடியாது. இன்று கல்லூரி வரைக்கும் ஆங்கில வழிக்கல்வியில் படித்த போதிலும் திக்கி திணறிக் கொண்டிருக்கும் மாணவர்கள் போலத்தான் ஆங்கிலம் என்பது பின்னங்கால் பிடறி தெறிக்க ஓட வைக்கும் பூச்சாண்டியாக இருக்கும். ஆங்கிலக் கல்விக் கூடத்தில் தங்கள் குழந்தைகள் படித்தால் ஆங்கிலத்தை நன்றாக பேச முடியும் என்பது விழலுக்கு இறைத்த நீரே.

என் குழந்தை அலுவலக வேலையில் மட்டுமே அமர வேண்டும் என்பவர்களுக்கு மட்டுமே இந்த ஆங்கில மொழி அவசியம் தேவை. ஆனால் இங்கே பிழைக்க ஆயிரம் வழிகள் உண்டு. பொருளீட்ட பல தொழில்கள் உண்டு என்பதையும் ஒவ்வொரு பெற்றோர்களும் உணர்ந்திருக்க வேண்டும்.

தாய்மொழியறிவு?

மூவாயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட மிகப்பழமையான தமிழ்மொழி ஒவ்வொரு காலகட்டத்திலும் வெவ்வேறு விதமாக பேச்சு எழுத்து மொழியில் மாறி வந்து கொண்டிருந்த போதிலும் இன்றைய நவீன விஞ்ஞான உலகத்திலும் இது அழிந்து போய்விடவில்லை.

ஆனால் ஒவ்வொரு சமயத்திலும் அழிந்து போய்விடப் போகின்றது என்று கூச்சலிட்டுக் கொண்டிருந்தவர்களும்,இன்றுவரையிலும் சொல்லிக் கொண்டு இருப்பவர்களும் இருந்த போதிலும் தமிழ்மொழியின் வளர்ச்சி நின்று போய் உள்ளதே தவிர ஆனால் அது அழிந்தே போய்விடும் என்ற எண்ணத் தேவையில்லை. 

500 வருடங்களில் உருவான ஆங்கில மொழியில் கூட ஷேக்ஸ்பியர் காலத்து ஆங்கிலமென்பது இன்று இல்லை.ஆனால் மாறுதல்களை கவனமாக ஆவணப்படுத்தி முறைப்படியான மாறுதல்களை ஏற்றுக் கொண்டே தான் ஆங்கிலம் இன்றும் வளர்ந்து கொண்டே இருக்கின்றது.  ஆனால் இங்கே தமிழ் மொழி வளர வேண்டும் என்பவர்கள் தான் தமிழுக்கு எதிரியாகவும் இருப்பதால் அதன் விசால வீச்சு இன்று குறுகிய சந்துக்குள் நிற்கும் அளவிற்கு மாறியுள்ளது.

தாய் மொழியை ஆதரிப்போம் சொல்கின்ற அத்தனை பேர்களும் வசதியான வளமான வாழ்க்கை கொண்டிருப்பவர்கள். கவனமாக இரட்டை முகமூடி அணிந்தவர்கள். அவர்கள் வாழும் வாழ்க்கை மேலைநாட்டு கலாச்சாரத்திலும் பேசும் வார்த்தைகள் மட்டும் இந்திய கலாச்சாரத்திலும் இருப்பதால் மக்களின் நம்பகத்தன்மை அடியோடு மாறி நாமும் பிழைக்க வேண்டும் என்று ஒவ்வொருவரும் பிழைப்புவாதிகளாக மாறிக் கொண்டேயிருக்கின்றனர்.

இப்போதைய சூழ்நிலையில் பேசும் மொழியை வைத்தே ஒருவனின் தகுதியை எடை போடும் சூழ்நிலையில் காலச் சக்கரம் நம்மை கொண்டு வந்து நிறுத்தியுள்ளது. பெரும்பான்மையான முட்டாள்களின் மத்தியில் வாழ வேண்டிய சூழ்நிலையில் அந்த முட்டாள்தனத்தையே ஏற்றுக் கொள்ள வேண்டிய சூழ்நிலையையும் இந்த காலச்சக்கரம் உருவாக்கியிருப்பது வினோத முரண்.

ஆட்சியில், அதிகாரத்தில் இருப்பவர்கள் பெரும்பான்மையினர் வறுமையைப் பற்றி அறியாத  தங்கஸ்பூன் கோமகன்களாக இருப்பதால் எளியவர்களின் வாழ்க்கை குறித்தோ, அவர்களின் அடிப்படை வசதிகள் குறித்தோ யோசிக்க முடியாத சூழ்நிலையில் வாழ்வதால் எளியவர்களுக்ககான கல்வி உரிமை மறுக்கப்பட்டுக் கொண்டே வருகின்றது.  அப்படியே உரிமை உருவானாலும் அதை அவர்கள் அடைய முடியாத உயர்த்தில் வைத்து தான் பாதுகாத்துக் கொண்டிருக்கின்றார்கள்.  

அடைய முடியாத லட்சியத்திற்கு இடையூறாக இருப்பது இந்த தாய்மொழியே என்று ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கையில் முதலில் பலிகொடுப்பது தமிழ்மொழியே.

நம்மால் செய்யக்கூடியவை?

குழந்தைகள் ஆசிரியரோடு இருக்கும் நேரமென்பது ஏறக்குறைய எழு மணிநேரம் மட்டுமே.

ஒரு நாளின் மற்ற பொழுதுகள் அனைத்தும் பெற்றோர்களுடன் தான் குழந்தைகள் இருக்கின்றார்கள்.  முதல் ஆசிரியரே பெற்றோரே. மொழியறிவு, தாய்மொழியறிவு, பழக்கவழக்கங்கள் போன்ற அனைத்துக்கும் காரணமாக இருப்பவர்கள் பெற்றோர்களே.  ஆனால் நடைமுறை வாழ்க்கையில் நகர்புற கணவன் மனைவியும் இருவரும் பொருள் ஈட்டச் செல்ல மாணவர்கள் கண்டதையும் கற்றுக் கொள்ளத் தொடங்கி விடுகின்றனர். 

இதற்கு மேலாக வாசிப்பு என்பது அது பள்ளிக்கூட பாடங்கள் மட்டுமே என்கிற பெற்றோர்கள் இன்று வரையிலும் அதிகமாக இருப்பதால் குறுகிய புத்தியுள்ள சமூகம் விரைவாக வளர்ந்து கொண்டேயிருக்கின்றது.

வெளிநாடுகளில் வாழ்பவர்களுக்கு தங்கள் குழந்தைகள் வெளியே வந்தால் பல நாட்டு குழந்தைகளுடன் பழக வேண்டிய சூழ்நிலையில் பத்து சதவிகிதம் கூட தாய்மொழியின் அவசியம் தேவைப்படாது.  தங்கள் மாநிலங்களை விட்டு மற்ற மாநிலங்களிலும் வாழ்பவர்களுக்கு அங்கே உள்ள மாநில மொழி தான் அவசியம் தேவையாக இருக்கும்.

ஆனால் தமிழ்நாட்டில் வாழ்பவர்களுக்கு என்ன குறைச்சல்?

அவரவர் வாழ முடியாத தன்மையை, அடைய முடியாத லட்சியத்தை, அனுபவிக்க முடியாத சந்தோஷத்தை மனதில் வைத்துக் கொண்டு உங்கள் அழுத்தங்களை குழந்தைகளின் மேல் காட்டும் போதும் அவர்கள் படித்த மேலைநாட்டு கலாச்சாரக்கல்வியின்படி உங்களை ஆதரவற்றோர் இல்லத்தில் கொண்டு போய் விடுவது தான் கடைசியாக நடக்கும்.......

தவறு அவர்கள் மேல் இல்லை.  நீங்கள் தொடங்கி வைத்தீர்கள். அவர்கள் முடித்து வைக்கின்றார்கள்.

இது முடிவே இல்லாத சுழற்சி.

-)(-

"நாம் ஆளுகின்ற லட்சக்கணக்கான மக்களுக்கும் நமக்கும் இடையே இணைப்பாகச் செயல்பட ஒரு வகுப்பினரை நாம் உருவாக்கிட வேண்டும். இந்த வர்க்கத்தினர் ரத்தத்தாலும் நிறத்தாலும் இந்தியர்களாகவும், ரசனையில், கருத்துக்களில், நெறிமுறைகளில், அறிவில் ஆங்கிலேயர்களாகவும் விளங்கவேண்டும்."     

 - 1835 ல் இந்தியக் கல்வித் திட்டத்தை உருவாக்கியபோது மெக்காலே எழுதியதில் இருந்து....

இந்த தொடரின் மொத்த பதிவுகள்
Friday, July 26, 2013

பிரபல்யம் எனப்படுவது யாதெனில்

அவர் ஒதுங்கி விட்டார் என்பதற்கும் அவரை ஒதுக்கி விட்டார்கள் என்பதற்கும் உண்டான வித்தியாசங்களை உணரத் தெரிந்திருந்தால் பிரபல்யம் என்பதற்கான உண்மையான அர்த்தம் உங்களுக்குத் தெரியக்கூடும். 

ஈசலை ஆயுள் குறைந்த உயிரினம் என்கிறார்கள். ஆனால் ஈசலை விட இன்று பிரபல்யங்களின் புகழ் என்பது மணிக்கணக்கில் என்கிற அளவுக்கு மாறியுள்ளது.

இங்கே புகழை வெளிச்சம் என்கிறார்கள். கூடவே அவர் அதிர்ஷ்டக்காரர். அதனால்தான் தாக்கு பிடிக்க முடிந்தது என்கிறார்கள். இந்த வெளிச்சத்திற்குள் வாழ்பவர்களின் உண்மையான வாழ்க்கையை அறியாத சராசரிகள்  தினமும் ஏக்கத்தில் பாதி தூக்கத்தில் பாதி என்று தான் jவாழ்கின்றார்கள்.  

இங்கே பிரபல்யம் என்பது இரண்டு துறைகளுக்கு அடங்கிப் போய்விடுகின்றது. 

ஒன்று திரைப்படம் மற்றொன்று அரசியல். 

நாட்டுக்குத் தேவைப்படும் வேறெந்த துறைகளில் உள்ளவர்களைப் பற்றி எவரும் பேசுவதில்லை.

இதற்கு முக்கிய காரணம் ஊடகங்கள் தரும் முக்கியத்துவம். 

மற்ற எந்த துறையைக் குறித்து ஊடகங்கள் எழுதினால் வெகுஜனம் வாசிக்கத் தயாராக இல்லை என்கிற நிலைக்கு வந்து விட்டது. மக்களுக்கு படிப்படியாக கொடுக்கப்பட்ட  போதையினால் விட்டில் பூச்சிகள் போலவே மாறி இவற்றைப் பற்றியே பேசுகின்றார்கள். ஒரே விசயத்தைப் பற்றியே பொய்யாக வெவ்வேறு விதமாக எழுதியபோதும் விரும்பியே படிக்கின்றார்கள். 

படிக்க வைப்பதும் படிப்பவர்கள் விரும்புவதை கொடுப்பதும் தான் ஊடக தர்மம். அது தான் இங்கே நடந்து கொண்டிருக்கின்றது. 

ஆனால் புகழ் என்பதன் அர்த்தத்தை எவராலும் இன்று வரையிலும் அறுதியிட்டு சொல்ல முடியவில்லை.  காந்தியின் புகழ் நேருவின்  புகழுக்கு சம்மந்தம் இல்லாதது.  காமராஜரின் புகழோடு அண்ணாவின் புகழை ஒப்பிடமுடியாது. ஆனால் இவர்களின் புகழ் இன்று வருடந்தோறும்  பிறந்த தினம், இறந்த தினம் என்ற இரண்டு நாட்களில் நினைவு கூறுதலோடு முடிந்து விடுகின்றது. 

ஆனால் திரைப்பட புகழில் இதையும் எதிர்பார்க்க முடியாது. 

தியாகராஜ பாகவதரைக் கொண்டாடிய தமிழ்நாடு கடைசி காலத்தில் அம்போ என்று விட்டது. சிவாஜிக்கு கிடைத்த பெருமை அவரை அரசியலில் அந்தர்பல்டி அடிக்க வைத்தது. எம்.ஜீ.ஆர். புகழ் என்பதையும் தாண்டி தமிழ்நாட்டை அரசடித்தது. பல சமயம் பலரையும் அச்சம் கொள்ளவும் வைத்தது. அவர் அமெரிக்காவில் இருந்து வந்ததும் பதவியை அவரிடம் கொடுத்து விடுகின்றேன் என்று கலைஞரை கெஞ்சவும் வைத்தது. 

மணி நேர புகழ் நிலையில் சமீபத்தில் இறந்த கவிஞர் வாலியின் மரணமும் நடிகை மஞ்சுளாவின் மரணம் அதிகமான செய்திகளை மறைமுகமாகச் சொல்லியது.

வெளிச்சத்தில் நடித்து வெளிச்சத்தை விரும்புவர்களின் வாழ்க்கையை பத்திரிக்கைகள் கொண்டாடும் அளவுக்கு அவர்கள் தனிப்பட்ட வாழ்க்கை இந்த சமூகத்திற்கு என்ன செய்தி சொல்கின்றது என்று பார்த்தால் ஒன்றுமே இல்லை என்று தான் தோன்றுகின்றது. 

நடிகராக நடிகையாக மாறத்தொடங்கியதும் அவர்கள் வாழ்க்கையும் பொது பந்தியில் பறிமாறக்கூடியதாகவே மாறி விடுகின்றது. 

இதுவொரு சிறைப்படுத்தப்பட்ட வாழ்க்கை என்றாலும் நாளுக்கு நாள் இதை விரும்புவர்கள் தான் அதிகமாகிக் கொண்டே தான் இருக்கின்றார்கள்.

இதுவே தான் துக்கடா வேடத்தில் நடித்தவரையும் பிரபல்ய நடிகர் மோசடியில் சிக்கினார் என்பதும் ஒரே ஒரு காட்சியில் வந்த நடிகையை சினிமா நடிகை ரெய்டில் கைது என்றும் மாறிவிடுகின்றது.

அதிக அளவு வெளிச்சமும் அது தரும் சூட்டைத் தாங்கியும் வளரும் நடிக நடிகைகள் முதல் சுவரொட்டிகளை சுவற்றில் ஒட்டி கட்டப்பஞ்சாயத்து வரைக்கும் வளர்ந்து கட்சியில் முக்கிய இடத்தை பிடிக்கும் அரசியல் பிரபல்யம் வரைக்கும் அத்தனை பேர்களுக்கும் உழைத்த உழைப்பும் எல்லா சமயத்திலும் புகழாக மாறுவதில்லை. மாற்றிக் கொண்டவர்கள் இங்கே நிலைத்ததும் இல்லை. அபூர்வமாக நிற்பவர்களை சமூகம் கொண்டாட அதுவே பலருக்கும் உந்து சக்தியாக மாறி நான் அவரைப் பார்த்து தான் இந்த துறைக்கு வந்தேன் என்கிற வரைக்கும் பேட்டியாக வருகின்றது. 

ஒவ்வொரு முறையும் பத்திரிக்கையில் பிரபல்யங்களின் சாவுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் வேறு சிலவற்றையும் உணர்த்தி விடுகின்றது.

கவிஞர் வாலியும், நடிகை மஞ்சுளாவும் இறப்புக்கு பின்னால் வந்த செய்திகள் பலவற்றையும் சுட்டிக்காட்டியது.ஆனால் இங்கே பத்திரிக்கைகள் சொல்லததும் கூட உண்மையாகவே இருக்கின்றது. 

தற்போது பிரபல்ய சாவு என்பது முகநூல் செய்திகளுக்கு முக்கியத்துவம் பெறுவதாக இருப்பதால் திடீர் புரட்சியாளர்கள் முதல் சிறப்பான சிந்தனையாளர்கள் வரைக்கும் நமக்கு எளிதாக கிடைத்து விடுகின்றார்கள்.

முகநூலில் கவிஞர் வாலிக்கு கிடைத்த அஞ்சலி கூட நடிகை மஞ்சுளாவுக்கு கிடைக்கவில்லை. மஞ்சுளா குடும்பத்தைப் பற்றி, அவரின் கடந்து வந்த வளர்ச்சியைப் பற்றி, அவரின் பங்களா குறித்த ஒவ்வொரு செய்திகளும், அவரால் வீழ்ந்த ஒவ்வொரு பிரபல்யமும் இன்றும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கின்றார்கள். அவரின் குடும்ப சச்சரவுகள் அனைத்தையும் கிசுகிசுவாக்கி படிக்க உதவிய பத்திரிக்கைகள் மூலம் பொதுப்புத்தியில் எத்தனை விதமான எண்ணங்கள் ஓடியிருக்கும் என்பதை யோசிக்க முடிகின்றது.

தூங்கும் போது கூட காலாட்டிக் கொண்டே தூங்க வேண்டும் என்று சொல்லப்படுகின்ற பிரபல்யங்களின் வாழ்க்கையில் வாலி கடந்து வந்த வாழ்க்கை சொல்லும் ஒரு வரிச் செய்தி என்னவென்றால் சமரசங்களுடன் வாழ்ந்தால் முடிந்தவரைக்கும் எந்த துறையிலும் நிலைத்து நிற்க முடியும் என்பதே.  

சமரசம் என்பதை அவர் கருத்து ரசமாகவும் காட்டினார். காலவெள்ளத்தில் நிற்க பலசமயம் காமரசமாகவும் மாற்றினார்.  

தமிழ் திரை இசையின் முதல் தலைமுறை சுப்பையா நாயுடு, கே.வி.மகாதேவன் என்று தொடங்கியது.  அதுவே எம்.எஸ்.விஸ்வநாதன், சங்கர் கணேஷ் கைகளுக்கு மாறி இளையராஜா கைக்கு வந்த போது அவரைத்தவிர வேறு எவரும் இல்லை என்கிற நிலைக்கு கொண்டு வந்து நிறுத்தியது. 

பிளக்க முடியாத மலையாக இருந்த இளையராஜாவை மணிரத்னம் புண்ணியத்தில் ஏ.ஆர். ரகுமானை அறிமுகம் செய்து வைக்க தொடர்நது ஹாரிஸ் ஜெயராஜ், யுவன்சங்கர் ராஜா வரைக்கும் கொண்டு சேர்த்து 

இன்று இந்த பட்டியலில் பலரும் இருக்கின்றார்கள்.  

ஆனால் வாலியின் திறமை இரண்டாம் தலைமுறையில் தொடங்கியது. இறக்கும் சில தினங்களுக்கு முன்பு வரைக்கும் இயங்க வைத்துக் கொண்டிருந்தற்கு காரணம் வாலிப கவிஞர் என்ற பெயர் பெற்றிருந்ததே முக்கிய காரணமாக இருந்தது. அவரின்  உடம்புக்குத்தான் 82 வயதானே தவிர வார்த்தைகள் 28 ஆக இருந்த காரணத்தால் இது சாத்தியமானது.

கண்ணதாசனுக்கும் எம்ஜிஆருக்கும் உருவான மனஸ்தாபம் வாலியை நிலை நிறுத்த வைத்தது.  இங்கு ஒருவர் மேல் கொண்ட வெறுப்பே அடுத்தவரை உருவாக்க வளர்க்க காரணமாகவும் இருந்து விடுகின்றது.எப்படி இளையராஜவுக்கு எஸ்பி. பாலசுப்ரமணியம் ஆகாத சமயத்தில் எப்படி மனோ என்ற பாடகர் வந்தாரோ அதைப் போலத்தான் இங்கே ஒவ்வொருவரின் தொடக்கமும் முடிவும் இருக்கின்றது.

வாழ்க்கையின் தொடக்கம் முதல் நேர்மையோடு வாழ்ந்த வாலி, ஏறக்குறைய 15000 பாடல்களுக்கு மேலே எழுதியதோடு, பல புத்தகங்களையும் எழுதி, நான்காம் தலைமுறையினரோடு பணிபுரிந்த வாலியின் இறுதி ஊர்வலத்தில் கவிஞர் வைரமுத்து மழையில் நனைந்தபடியே கடைசி வரைக்கும் நடந்து சென்றார் என்பது தொடங்கி இறுதி அஞ்சலி செலுத்திவிட்டு அவசரம் அவசரமாக ஓடிச்சென்று படப்பிடிப்பில் கலந்து கொண்டவர்கள் பற்றியும் நடிகர்கள்,தயாரிப்பாளர்கள் வரைக்கும் அத்தனை செய்திகளையும் படித்து முடித்த பிறகு மனதில் தோன்றிய வாசகம்.

பிரபல்யம் எனப்படுவது யாதெனில் வாழும் போது பந்தயக் (பண) குதிரையாக பலன் தருபவர். இறந்த பிறகு நினைவில் (மட்டும்) இருப்பவர்.

Thursday, July 25, 2013

அழிக்கப்பிறந்தவர்கள்

இந்த பதிவில் பேச வேண்டிய முக்கிய விசயங்களை அய்யா பழ. நெடுமாறன் எழுதியுள்ள வார்த்தைகள் மூலம் வாசிப்போம்.

 ""அன்னிய மொழியில் கல்வி என்பது நமது குழந்தைகளின் மூளையைச் சோர்வடையச் செய்யும். தேவையில்லாத பளுவினை அவர்கள் மீது சுமத்தி அவர்களை வெறும் உருப்போடுபவர்களாகவும் போலி நடத்தை உடையவர்களாகவும் ஆக்கிவிடும். சொந்தமாக சிந்திக்கவோ செயல்படவோ தகுதியற்றவர்களாக அவர்களை ஆக்கும். நமது சொந்த நாட்டிலேயே நமது குழந்தைகளை அன்னியர்களாக்கிவிடும். தற்போதைய கல்வி முறையின் மிகப்பெரிய சோகம் இதுதான்.

நமது தாய்மொழியின் வளர்ச்சிக்கு அன்னியக் கல்விமுறை பெரும் தடையாகும். எனக்கு மட்டும் ஒரு சர்வதிகாரியின் அதிகாரங்கள் அளிக்கப்படுமானால் அன்னிய மொழியில் கல்வி பயில்வதற்குத் தடை விதித்துவிடுவேன். நமது ஆசிரியர்களையும், பேராசிரியர்களையும் தாய்மொழிக் கல்விக்கு மாறச் செய்வேன். 

இதற்கான பாடப் புத்தகங்கள்  தயாரிக்க வேண்டுமே என நான் பொறுத்திருக்க மாட்டேன். அவை தன்னாலேயே இந்த மாற்றத்திற்கு ஏற்ப மாறிக்கொள்ளும்.

உடனடியாகப் பரிகாரம் தேடவேண்டிய மிகப்பெரிய தீமை அன்னிய மொழியில் கல்வி கற்பிப்பதாகும். அன்னிய ஆட்சியினால் விளைந்த பல தீமைகளில் மிகப்பெரிய தீமை நம் நாட்டு இளைஞர்களுக்கு அன்னிய மொழியில் கல்வி கற்பிப்பதாகும் என நமது வரலாறு பதிவு செய்யும். மக்களிடமிருந்து அவர்களை அன்னியப்படுத்திவிடும்.

கல்விக்கான செலவு தேவையில்லாமல் அதிகமாகிவிடும். இந்தக் கல்வி முறை தொடர்ந்து நீடிக்குமேயானால் தேசத்தின் ஆன்மாவை அவை அழித்துவிடும். எனவே அன்னியக் கல்விமுறை என்ற மாயையிலிருந்து தேசம் எவ்வளவு விரைவில் விடுதலை பெறுகிறதோ அவ்வளவுக்கு மக்களுக்கு நல்லதாகும்''. 

(தி செலக்டட் ஒர்க்ஸ் ஆஃப் காந்தி - வால்யூம் 6 "தி வாய்ஸ் ஆஃப் ட்ரூத்)

தமிழ்நாட்டில் தனியார் மற்றும் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் மொத்த எண்ணிக்கை பின்கண்டவாறு உள்ளன.

தொடக்கப் பள்ளிகள் 38,82,092.

நடுநிலைப் பள்ளிகள் 23,48,141.

உயர் நிலைப் பள்ளிகள் 19,15,409.

மேல்நிலைப் பள்ளிகள் 48,74,565.

ஆக மொத்தம் 1,30,20,207 மாணவர்கள் பயிலுகிறார்கள்.

தொடக்கப் பள்ளிகளில் உள்ள ஆசிரியர்களின் எண்ணிக்கை 1,15,568 ஆகும். 

உயர் தொடக்கப் பள்ளிகளில் இந்த எண்ணிக்கை 62,156 ஆகும்.

உயர்நிலைப் பள்ளிகளில் அரசு மற்றும் தனியார் துறை ஆகியவற்றைச் சேர்ந்த ஆசிரியர்களின் எண்ணிக்கை 71,794 ஆகும்.

மேல் நிலைப் பள்ளிகளில் அரசு மற்றும் தனியார்  பள்ளிகளில் உள்ள மொத்த ஆசிரியர்களின் எண்ணிக்கை 1,41,509 ஆகும்.

உலகெங்கும் ஆசிரியர், மாணவர் விகிதாசாரம் 1:20 ஆகும். 

தமிழ்நாட்டில் இந்த விகிதாசாரம் 1:80 ஆகும். 

இது எவ்வளவு கவலைக்கிடமானது என்பதை உணர்ந்து, இந்த விகிதாசாரத்தை உயர்த்தி மாணவர்களின் கல்வித் தகுதியை அதிகரிப்பதற்குப் பதில் அவர்களின் மேல் தாங்கமுடியாத சுமைகளைச் சுமத்துவதால் என்ன பயன்?

பெரும்பாலான பள்ளிகளில் கட்டடங்கள், விளையாட்டுத் திடல்கள், தேவையான கரும்பலகை போன்ற கல்வி உபகரணங்கள் போன்றவை பற்றாக்குறையாக உள்ளன.  சுகாதார வசதிகளும், குடிநீர் வசதியும் போதுமானவையாக இல்லை. கிராமப்புற பள்ளிகளின் நிலைமை மிகவும் மோசம். இவற்றை மேம்படுத்துவது மிகமிக அவசரமான முன்னுரிமையான வேலைத் திட்டமாகும். ஆனால், இவற்றில் கவனம் செலுத்தாமல் ஆங்கில வழிக் கல்வித் திட்டத்தைப் புகுத்துவது என்பது மாணவர்களின் படிப்பைப் பாழாக்குவதாகும்.

இவர்களில் ஆங்கில வழி கற்றவர்களானலும் தமிழ் வழி கற்றவர்களானாலும், கல்லூரிகளில் சேரும்போது அங்கு ஆங்கிலமே கல்விமொழியாக உள்ளபோதிலும், தமிழ் வழிக் கற்ற மாணவர்கள் அதன் காரணமாகப் பின் தங்கிவிடவில்லை. ஆங்கிலத்தை ஒரு பாடமாக மட்டுமே கற்றுவந்தபோதிலும் அவர்கள் கல்லூரியிலும் மிகச் சிறப்பாகப் பயின்று வருகிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

இன்னும் சொல்லப் போனால், ஆங்கில வழி கற்றுத் தேர்ச்சி பெற்றுவந்த மாணவர்களைவிட தமிழ்வழிக் கல்வி கற்று வந்த மாணவர்கள் ஒருபடி மேலாகவே விளங்குகிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

இந்த ஆண்டு நடந்து முடிந்த "பிளஸ்-2' தேர்வில் 100 அரசுப் பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சிபெற்று சாதனை படைத்திருக்கின்றன. மேலும் எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களின் தேர்ச்சி சதவிகிதமும் உயர்ந்துள்ளது. நடப்பாண்டில் எஸ்.சி. மாணவர்களில் 70.4 சதவீதம் பேரும் எஸ்.டி. மாணவர்களில் 71.5 சதவீதம் பேரும் தேர்ச்சிப் பெற்றள்ளனர்.

அதைப் போல் 90 சதவீதத்துக்கும் அதிகமான மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது. இந்த ஆண்டு 7,324 மாணவர்கள் 90 சதவீதத்துக்கும் அதிகமான மதிப்பெண்கள் பெற்றிருக்கின்றனர்.

கடந்த 3 ஆண்டுகளில் ஒட்டுமொத்த சராசரி தேர்ச்சிவிகிதம் 86 முதல் 88 விழுக்காடாக உயர்ந்துள்ளது. இவை சாதாரணமான சாதனை அல்ல. மிகவும் பின்தங்கிய வகுப்புகளைச் சேர்ந்த ஏழ்மை நிலையில் இருப்பவர்களின் பெற்றோர்கள் கற்றவர்கள் அல்லர். 

இத்தகைய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் சேர்ந்து படிப்பதைத் தவிர வேறுவழியில்லை. மெட்ரிக் பள்ளிகளில் உள்ள கல்வி வசதி கட்டமைப்புகள் அரசுப் பள்ளிகளில் இல்லை. இருந்தாலும் இந்த மாணவர்கள் பாராட்டத்தகும் வகையில் தேர்ச்சிப் பெற்றிருப்பது ஒரு உண்மையை எடுத்துக்காட்டுகிறது. அந்த உண்மை தாய்மொழியில் அவர்கள் கல்வி கற்றதுதான் என்பதாகும். இதே மாணவர்களை ஆங்கிலவழிக் கல்வி கற்க வைத்தால் நேர்மாறான விளைவுகள் ஏற்பட்டு அவர்களின் கல்வியும் எதிர்காலமும் பாழாகிவிடும்.

ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி வந்த 19 ஆயிரம் பேர்களில் 5 பேர் மட்டுமே "அரசுப் பள்ளியில் வேலை வேண்டாம்' என்று தெரிவித்திருக்கிறார்கள். இந்தச் செய்தி உணர்த்தும் உண்மை என்ன? தகுதித் தேர்வில் வென்றவர்கள் அரசுப் பள்ளிகளில்தான் பணியாற்றுகிறார்கள், தகுதித் தேர்வில் வெல்லாதவர்கள்தான் தனியார் பள்ளிகளில் பணியாற்றுகிறார்கள். 

அப்படியானால், தனியார் பள்ளிகளைவிட அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் சிறப்பானவர்கள் என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

ஒரு மொழியாக ஆங்கிலத்தைக் கற்றுக்கொள்வதை நான் எதிர்க்கவில்லை. ஆனால், அதுவே பயிற்று மொழி என்று கூறும் போதுதான் எதிர்க்க வேண்டியுள்ளது. விண்வெளி ஆராய்ச்சித்துறையின் தலைசிறந்த விஞ்ஞானிகளான அப்துல் கலாம், மயில்சாமி அண்ணாதுரை போன்றவர்கள் தமிழைப் பயிற்சி மொழியாகக் கொண்டு பள்ளிக் கல்வி பயின்றவர்கள் என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும்.

1930-ஆம் ஆண்டு முதல் தமிழ்நாட்டில் தாய் மொழி வழிக் கல்வியை வலியுறுத்திப் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன. இறுதியாக 1952-ஆம் ஆண்டு தமிழ் வழிக்கல்வி அறிமுகம் செய்யப்பட்டது. 1954-ஆம் ஆண்டு முதல் காமராஜர் முதலமைச்சராக பதவி வகித்த காலகட்டத்தில் உயர் நிலைப் பள்ளிவரை தமிழே பயிற்சி மொழியாக இருந்தது.

கல்வியமைச்சராக இருந்த சி. சுப்பிரமணியம் பல்கலைக் கழக மட்டத்திலும் தமிழே பயிற்சிமொழியாக வேண்டும் என்பதற்குரிய நடவடிக்கைகளை எடுத்தார். 1960-ஆம் ஆண்டில் அரசாங்கத்தின் அனுமதியுடன் கோவையில் உள்ள அரசுக் கல்லூரியில் வரலாறு, அரசியல், பொருளாதாரம், நிலவியல், மனவியல் போன்ற பாடங்களில் பட்டப்படிப்புகள் தமிழில் தொடங்கப்பட்டன. 1961-ஆம் ஆண்டில் மேலும் மூன்று கல்லூரிகளுக்கு இத்திட்டம் விரிவாக்கப்பட்டது

இத்திட்டத்தை மாநிலம் முழுவதிலும் கொண்டுவருவது குறித்தும் ஆராயப்பட்டது.

பட்டப்படிப்பை தமிழ் வழிக் கல்வியில் மேற்கொள்வோருக்கு கட்டணச் சலுகைகள் அளிக்கப்பட்டால் மட்டும் போதாது அவர்களுக்கு அரசுப் பணிகளில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தப்பட்டது. ஆனால், 1965-ஆம் ஆண்டு முதலமைச்சராக பக்தவத்சலம் பொறுப்பேற்றபோது இத்திட்டம் மெல்லமெல்லக் கைவிடப்பட்டது. 

பள்ளிகளில் தமிழே பாடமொழியாக இருந்ததை மாற்றும் வகையில் ஒவ்வொரு வகுப்பிலும் ஒரு பிரிவு ஆங்கில வழிப் பாடமொழியாக இருக்கும் என அவர் பிறப்பித்த உத்தரவு தமிழ் பாடமொழிக்குச் சாவுமணி அடித்துவிட்டது. முன்பு பக்தவத்சலம் அரசு செய்த தவறை இப்போதுள்ள அரசும் செய்யக்கூடாது. அரசுப் பள்ளிகளில் ஒவ்வொரு வகுப்பிலும் ஆங்கில வழிப் பிரிவு தொடங்குவது என்பது இறுதியாகத் தமிழ் பயிற்சி மொழி இல்லாது ஒழித்துவிடும்.

1967-ஆம் ஆண்டிற்குப் பிறகு திராவிடக் கட்சிகளின் ஆட்சி ஏற்பட்டது. பக்தவத்சலம் செய்தத் தவறை திருத்துவதற்குப் பதில் அதை இக்கட்சிகள் தொடர்ந்தன. இதன் விளைவாக ஆங்கில வழிக் கல்வியின் ஆதிக்கம் பரவியது.

1978-ஆம் ஆண்டுவரை மெட்ரிக் பள்ளிகள் மொத்தம் 34 மட்டுமே இருந்தன. 

அவையும் சென்னை, மதுரை, பல்கலைக் கழகங்களின் கட்டுப்பாட்டில் இயங்கி வந்தன. பிறகு இப்பொறுப்பை பல்கலைக் கழகங்கள் கை கழுவிய பிறகு இவற்றுக்காக மெட்ரிக்குலேஷன் போர்டு அமைக்கப்பட்டது. இப்போது உயர்நிலைப் பள்ளிகளில் மெட்ரிக் பள்ளிகளின் எண்ணிக்கை 2,053 ஆகும். மேல் நிலைப் பள்ளிகளில் இவற்றின் எண்ணிக்கை 1,421 ஆகும். ஆக மொத்தம் 3,474 மெட்ரிக் பள்ளிகள் உள்ளன. வெறும் 34 ஆக இருந்த இப்பள்ளிகளின் எண்ணிக்கை நூறு மடங்குக்கு மேல் பெருகிவிட்டது.

இப்பள்ளிகளில் போதுமான கட்டமைப்பு வசதிகள் கிடையாது. ஆசிரியர்களும் பற்றாக்குறை. பணியில் அமர்த்தப்பட்ட ஆசிரியர்களில் 57 சதவீதம் பேர் ஆசிரியப் பயிற்சி பெறாதவர்கள். கொத்தடிமை ஆசிரியர்களைப் போல மாதம் ரூ.2,000 அல்லது அதற்குக் குறைவான ஊதியம் பெற்று வேலை பார்த்துத் தீரவேண்டிய கட்டாயத்தில் பெரும்பாலான ஆசிரியர்கள் இருக்கின்றனர்.

இவற்றை ஒழுங்குபடுத்துவதற்காக அமைக்கப்பட்ட சிட்டிபாபு தலைமையிலான நிபுணர் குழு மெட்ரிக் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குவதற்கான விதிமுறைகளை அரசுக்குப் பரிந்துரைத்த போதிலும் இதுவரை அரசு ஆணை எதுவும் பிறப்பிக்கப்படவில்லை. இப்பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் ஆங்கிலத்தில் போதுமான தேர்ச்சியில்லாமலும், தமிழ் தெரியாமலும் வளர்ந்து வருகிறார்கள். 

இது எவ்வளவு பெரிய சமூகக் கேடு என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

தாய்வழிக் கல்வி நசிந்து வருவதைக் கண்டு மனம் பொறாத 101 தமிழறிஞர்கள், மூத்த தமிழறிஞர் தமிழண்ணல் தலைமையிலான சான்றோர் பேரவையின் சார்பில் 25-4-1998-ஆம் ஆண்டில் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார்கள். 

குறைந்தபட்சமாக முதல் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்புவரை தாய் மொழியிலேயே கல்வி கற்பிக்கப்படவேண்டும் என்பதுதான் அவர்கள் முன்வைத்த ஒரே கோரிக்கையாகும்.

அப்போது முதலமைச்சராக இருந்த மு. கருணாநிதி, அமைச்சர் தமிழ்க் குடிமகனை அனுப்பி அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதன் விளைவாக இக்கோரிக்கையை ஆராய்ந்து அரசுக்குப் பரிந்துரை செய்வதற்காக நீதிநாயகம் எஸ். மோகன், தலைமையில் ஒரு குழுவை அமைத்தார். அக்குழு அளித்தப் பரிந்துரையில் 1 முதல் 5 வரை உள்ள பள்ளிகளில் தாய் மொழிக் கல்வி அளிப்பதற்கான சட்டத்தை தமிழக அரசு பிறப்பிக்க வேண்டும் என திட்டவட்டமாகக் கூறியது.

ஆனால், சட்டம் கொண்டு வருவதற்குப் பதில் 1999-ஆம் ஆண்டு ஜனவரி 13-ஆம் தேதி அரசு ஆணை ஒன்றை தமிழக அரசு பிறப்பித்தது. இந்த ஆணையை எதிர்த்து ஆங்கில வழிப் பள்ளிகளின் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டு அரசு ஆணை செல்லாது என தீர்ப்பளிக்கப்பட்டது. 

இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு செய்த மேல்முறையீடு இன்னமும் விசாரிக்கப்படாமல் அப்படியே கிடக்கிறது.

மோகன் குழு அளித்த பரிந்துரையின்படி தமிழ்வழிக் கல்விக்கான சட்டத்தை கருணாநிதி கொண்டு வந்திருந்தால் அது நிலைத்து நின்றிருக்கும். ஆனால் அவ்வாறு செய்யாமல் அரசு ஆணை பிறப்பித்ததின் விளைவாக தாய்மொழிக் கல்வி குழி தோண்டி புதைக்கப்பட்டது.

தமிழக அரசின் கட்டுத் திட்டங்களுக்கு உட்படாமல் தப்புவதற்காக ஆங்கில வழிக் கல்வி பள்ளிகள் தங்களை மத்திய அரசின் கல்விக் கழகத்துடன் இணைத்துக் கொள்கின்றன. அங்கு ஆங்கில வழிக் கல்வி மட்டுமல்ல இந்தியும் கட்டாயப் பாடமாகக் கற்பிக்கப்படுகிறது. இப்பள்ளிகளில் தமிழ் கற்றுக்கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. தமிழ்நாட்டில் 200-க்கு மேற்பட்ட ஆங்கிலவழிப் பள்ளிகளில் தமிழ் கற்பிப்பதே இல்லை.

20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆங்கில வழிப் பள்ளிகள் மத்திய அரசின் கல்விக் கழகத்துடன் தங்களை இணைத்துக் கொண்டுள்ளன. பள்ளி வளாகத்திற்குள் குழந்தைகள் தங்களுக்குள் தமிழில் பேசினால் அதற்குத் தண்டனை விதிக்கப்படுகிற கொடுமையும் சில பள்ளிகளில் நடைபெறுகிறது.

தமிழ்நாட்டில் தமிழே புறக்கணிக்கப்படுகிற நிலை நீடிப்பது நமது குழந்தைகளின் எதிர்காலத்தைப் பாழ்படுத்திவிடும். உலகம் பூராவும் சிறிய நாடுகளாக இருந்தாலும் அந்தந்த நாடுகளில் தாய்மொழியில்தான் கல்வி கற்பிக்கப்படுகிறது.

இந்தியாவிலும் அண்டை மாநிலங்களான கர்நாடகம், கேரளம், ஆந்திரம் மற்றும் வங்கம், மராட்டியம், குஜராத் போன்ற பல மாநிலங்களில் பள்ளிப் படிப்பு என்பது தாய்மொழியில்தான் நடைபெறுகிறது. ஆங்கிலத்தை ஒரு பாடமாக அங்கெல்லாம் பயிலுகிறார்களே தவிர ஆங்கிலத்தையே பாடமொழியாகக் கொண்டு பிற பாடங்களையும் கற்பதில்லை.

அறிவியலிலும் பொருளாதாரத்திலும் மிக முன்னேறிய நாடுகளான சீனாவும், ஜப்பானும் தங்கள் குழந்தைகளுக்கு ஆங்கிலத்தை ஒரு பாடமாக மட்டுமே கற்றுக்கொடுக்கின்றனர்.

இதன் முந்தைய தொடர்ச்சி
Wednesday, July 24, 2013

சிக்கினாலும் கூட நாம் சிங்கம் தானே?

வளர்ந்த நாடுகளான மலேசியா,சிங்கப்பூர் நமக்கு அருகில் தான் உள்ளது.  நாம் இன்னமும் வளர்ந்து கொண்டே இருக்கின்றோம். அடுத்த பத்தாண்டுகள் கழிந்தும் இதையே தான் சொல்லப் போகின்றோம். மற்ற நாடுகளை இந்தியாவுடன் ஒப்பிட்டு பேசும் போது அனைவரும் ஒரு பதிலை தயாராக வைத்திருப்பார்கள்.  

சிறிய நாடுகள்  எளிதில் கட்டுப்பாடுகளை கொண்டு வந்து விட முடியும். நாம் பெரிய நாடு. நமக்கு அப்படி வாய்ப்பில்லை என்பதாக முடித்து விடுவர். ஆனால் கடந்த முப்பதாண்டு காலத்தில் சீனா வளர்ந்த வளர்ச்சி என்பது நாம் எட்டுவதற்கு இன்னும் 60 ஆண்டுகள் தேவைப்படும்.

வளர்ச்சியடைந்த நாடுகளுக்கும் இந்தியாவிற்கும் உள்ள முக்கிய பிரச்சனை என்ன தெரியுமா? 

துறைகள் சார்ந்த ஒருங்கிணைப்பு.

இந்தியாவில் உள்ள  அரசாங்கத்துறைகள் ஒவ்வொன்றும் இன்று வரையிலும் தனித்தனி தீவுகளாகத்தான்  உள்ளது.இதுவே வெளிப்படையற்றத் தன்மையை கெட்டியாக பாதுகாத்து மக்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடைவெளியை அதிகப்படுத்தி வைத்துள்ளது.

இந்தியாவில் கல்வி என்றால் அதுவொரு தனித்தீவு.  அதற்குள்ளும் பல பிரிவுகள்.

பாடத்திட்டங்களை உருவாக்குவது, அதற்கு அனுமதி வழங்குவது என்பது இரு வேறு நிலையில் தான் உள்ளது.  இதைப் போலவே அதை மாணவர்களுக்கு நடத்த வேண்டியவர் வேறொருவராக இருப்பர். 

இங்கே மாநில சமூகவியல், அந்தந்த மாநில கலாச்சாரத்தை விட குறிப்பிட்ட மாநிலத்தைப் பற்றியே தெரியாதவர்கள் உருவாக்குவது தான் நம்முடைய கல்வித் திட்டங்கள் என்றால் அது எப்படியிருக்கும்? 

நாம் இந்தியக்கல்வியைப் பற்றி பேசிக் கொண்டிருக்கும் போது ஏன் இந்த ஒருங்கிணைப்பை பற்றி பேச வேண்டும்.

ஒரு கல்விக்கூடம் ஒரு இடத்தில் உருவாகின்றது என்றால் அரசாங்கத்தின் எத்தனை துறைகள் அத்துடன் சம்மந்தப்படுகின்றது ?

பள்ளி கட்டப்பட தேர்ந்தெடுத்த இடம் குறிப்பிடப்பட்டுள்ள மாணவர்களுக்கு தேவையான அளவுக்கு இருக்கின்றதா?

2. கட்டப்பட்ட கட்டிடம் நிலைத்த உறுதித்தன்மையோடு இருக்கின்றதா?

3. வகுப்பறைகள் குறிப்பிட்ட அளவில் இருக்கின்றதா?

4. குழந்தைகள் விளையாட மைதானம் இருக்கின்றதா?

5. அவசர கால வழிகள் சரியான முறையில் உருவாக்கப்பட்டுள்ளதா?

6. மாடிப்படிகள் குழந்தைகள் ஏறிச்செல்ல வலுவான முறையில் சரியான அளவில் உருவாக்கப்பட்டுள்ளதா?

7.பள்ளிக்கருகே மாசுக்களை விளைவிக்கும் தொழிற்சாலைகள் ஏதும் உள்ளதா?

8.கல்விக்கூடங்கள் பயன்படுத்தும் வாகனங்கள் சரியாக உள்ளதா? முறைப்படி பராமரிக்கப்படுகின்றதா?

9கல்விக்கட்டணங்கள் அரசாங்கம் நிர்ணயித்த அளவின்படியே பள்ளியால் வாங்கப்படுகின்றதா?

10. நிர்ணயிக்கப்பட்ட பாடத்திட்டங்கள் தான் நடத்தப்படுகின்றதா?

இது போன்ற பல சமாச்சாரங்கள் உள்ளது.

இதில் என்.ஓ.சி. என்று சொல்லப்படுகின்ற தடையில்லாச் சான்று என்ற பல படிகளை கடந்து வர வேண்டும். அரசாங்கத்தின் பல துறைகள் ஒவ்வொரு இடத்திலும் சம்மந்தபபடுகின்றது.  

தமிழ்நாட்டில் கும்பகோணம் பள்ளிக்குழந்தைகள் தீயில் கருகியது முதல் நேற்று உங்கள் ஊரில் நடந்த பள்ளி வாகனத்தினால் நடந்த கொடுமைகள் வரைக்கும் ஒவ்வொன்றாக உங்கள் மனதில் கொண்டு வந்து நிறுத்திப் பாருங்கள்.

எப்படி குற்றவாளிகள் தப்பித்தார்கள்?

துறைகள் சார்ந்த ஒருங்கிணைப்பு இல்லாத காரணத்தால் குற்றத்திற்கு காரணமாக இருப்பவர்கள் மேலும் பள்ளிகளை திறந்து கல்வித்தந்தையாக சமூகத்தில் நடமாட முடிகின்றது.  இங்கே சட்டத்திற்கும் சாமானியனுக்கும் உள்ள தூரம் அதிகமாக இருப்பதால் போராட முடியாதவர்கள் தங்கள் சகிப்புத்தன்மையை வளர்த்துக் கொள்ளத் தொடங்கி விடுகின்றனர். அவர்வர் வாழ்க்கை குறித்த பயமே இங்கே பலரையும் பலவிதமான அக்கிரமத்தையும் தொடர்ந்து செய்ய வைத்துக் கொண்டிருக்கின்றது.

இதற்கு மேலாக தொடர்ச்சியான கண்காணிப்பு இல்லாத காரணத்தால் பலருக்கும் அசாத்தியமான தைரியத்தை தந்து விடுகின்றது. தமிழ்நாட்டின் கல்வித்துறை ஒவ்வொரு முறையும் தனியார் கல்விக்கூடங்களில் செய்யும் சோதனைகளை அரசு பள்ளிகளில் செய்கின்றார்களா?  ஆடிக்கொரு தரம் அம்மாவாசைக்கொருதரம் என்ற சோதனைகள் அனைத்தும் கண்காட்சி போலவே இருப்பதால் அது வருடந்தோறும் நடத்தப்படும் சடங்காகவே இன்று வரையிலும் உள்ளது.

அரசு பள்ளியின் வளர்ச்சி வீழ்ச்சி குறித்த வெள்ளையறிக்கை ஏதும் வெளியிட்டு பார்த்துள்ளோமா? இதன் காரணமாகத்தான் பலரும் தெரிந்தே தனியார் கல்வி என்ற குழிக்குள்  விழ வேண்டியுள்ளது. 

குறிப்பிட்ட பள்ளியில் தங்கள் குழந்தைகக்கு இடம் கிடைத்து விடாதா? என்று ஏக்கத்தில் இருக்கும் பெற்றோர்கள் அந்த பள்ளியின் கட்டுமானத்தைப் பற்றியோ தங்கள் குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும் ஆசிரியர்கள் குறித்தோ யோசிப்பதில்லை. பள்ளி வாங்கும் கட்டணத்திற்கும் அங்கே பணியாற்றும் ஆசிரியர்களுக்கு கொடுக்கப்படும் சம்பளத்திற்கும் பின்னால் உள்ள நுண்ணரசியலை எவரும் புரிந்து கொள்வதே இல்லை.

ஒட்டப்பட்ட லேபிளுக்குள் வைக்கப்பட்ட அழுகிய பண்டத்தினை சுவைக்கும் போது உண்டான அருவெறுப்பு தான் இங்கே உருவாகின்றது. பள்ளியின் பெயருக்கும் கற்றுக் கொடுக்கும் ஆசிரியரின் தரத்திற்கும் சம்மந்தமில்லாது போக என்ன உருவாகும்? 

வாந்தி எடுப்பவர் வாத்தியார்.  அதை வேடிக்கை பார்ப்பவர் மாணவர்.

இது தான் இங்கே நடந்து கொண்டிருக்கின்றது.

இது தவிர இங்கே மற்றொரு விசயமும் பேசு பொருளாக வைக்கப்படுகின்றது.

கடந்த 20 ஆண்டுகளில் ஆங்கிலம் தெரிந்த காரணத்தினால் மட்டுமே இங்கே பலருக்கும் வேலை கிடைத்துள்ளது.  பொருளாதார ரீதியாக தடுமாறிக் கொண்டிருந்த நடுத்தரவர்க்கம் இப்போது தான் சற்று மூச்சு விட முடிகின்றது. தமிழ் தமிழ் என்று சொல்லிக் கொண்டு தங்கள் குழந்தைகளை மட்டும் ஆங்கில வழியில் படிக்க வைத்து விட்டு நமக்கு அறிவுரையை வண்டி வண்டியாக வழங்க வந்து விடுகின்றார்கள்?

தமிழ் வழிக்கல்வியை ஆதரிப்பவர்கள் எவரோனும் தங்கள் குழந்தைகளை தமிழ் வழிக்கல்வியில் படிக்க வைத்து விட்டு அப்புறம் அறிவுரை சொல்ல வரட்டும்?

இது போல இன்னமும் பலப்பல விசயங்கள் தாய் மொழி குறித்து பேசும் போது நம்மை வந்து தாக்கும்.

இன்றைய போட்டி மிகுந்த வாழ்க்கை சூழ்நிலையில் ஒருவரிடம் உனக்கு மொழி முக்கியமா? வாழ்க்கை முக்கியமா? என்று கேட்டால் எவராயினும் வாழ்க்கையே முக்கியம் என்று சொல்வர்.  பொருளாதார ரீதியாக எந்த மொழி வாழ்க்கையில் உயர் உதவுகின்றதோ அந்த மொழியே தேவை என்பதாக ஒரு காலகட்டத்தில் தான் அனைவரும் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

ஆனால் இன்றைய நடுத்தரவர்க்கம் நம்பிக் கொண்டிருக்கும் ஆங்கிலக்கல்வி என்பது படிக்கும் அத்தனை மாணவர்களுக்கும் சிறப்பான எதிர்காலத்தை தந்து விடுமா?

மொழிக்கும் அறிவுக்கும் இடையே உள்ள வித்தியாசங்களை உணரத் வாய்ப்பில்லாத நடுத்தர வர்க்கத்தின் பல்லாயிரக்கணக்கான கோடிகள் வருடந்தோறும் கல்வி வியாபாரிகளிடம் கள்ளப்பணமாக மாறிக் கொண்டேயிருக்கின்றது.

இன்றைய சூழ்நிலையில் ஆங்கிலம் என்பது தேவை என்பதை மறுக்கமுடியாது என்பதைப் போல அதுவே அருமருந்து என்பது ஒரு மாயத்தோற்றமே. 

காரணம் ஆசைப்பட்டு ஆங்கிலப்பள்ளியில் சேர்த்து விட்டு, தங்களது தகுதிக்கு மீறிய பணத்தை வருடந்தோறும் கட்டி தங்கள் குழந்தைகளை படிக்க வைத்து ஒவ்வொரு நாளும்  கனவில் வாழ்ந்து கொண்டிருக்கும் பெற்றோர்கள் வேறு சில விசயங்களையும் அவசியம் புரிந்து இருக்க வேண்டும்.

தங்கள் குழந்தைகள் படிக்கும் கல்வியின் தரத்தைப் போல இதற்கும் மேம்பட்ட தரத்தில் இங்கே பல்லாயிரக்கணக்கான பேர்கள் வருடந்தோறும் படித்து மேலேறி சென்று கொண்டிருக்கின்றனர். பல படிகளுக்கு பின்னால் தான் நாம் இருக்கின்றோம் என்பதை உணர்ந்து வைத்திருக்க வேண்டும்.

ஆனால் எவரும் உணரத் தயாராக இல்லை என்பதோடு தங்களது அழுத்தங்களை தங்கள் குழந்தைகளின் மேல் திணித்துக் கொண்டிருப்பது தான் இங்கே நடந்து கொண்டிருக்கின்றது.  

சிலவற்றைப் பார்க்கலாம்.

மத்திய அரசாங்கத்தின் கீழே வரும் பள்ளிகள்


ஒவ்வொன்றாக நாம் பார்க்கலாம்.

கேந்திரியா வித்தியாலயா பள்ளிகளை கேள்விப் பட்டு இருப்பீர்கள்.  மத்திய அரசாங்கப் பணியில் இருப்பவர்களுக்காகவே உருவாக்கப்பட்ட பள்ளிகள். குறிப்பிட்ட பெருநகரங்களில் மட்டுமே உள்ளது. இந்தியா முழுக்க எங்கே வேண்டுமானாலும் மாறுதல் ஆகக்கூடிய மத்திய அரசு ஊழியர்களுக்காகவே உருவாக்கப்பட்டது.

சற்று விபரம் தெரிந்தவர்கள் சைனிக் பள்ளிக்கூடங்கள் பற்றி கூட தெரிந்திருக்க வாய்ப்புண்டு.

ஆனால் நவோதயா என்பது தமிழ்நாட்டிற்குள் வர விடாமல் செய்த புண்ணியம் நமது அரசியல் தலைகளுக்கே போய்ச் சேர வேண்டும்.  தமிழ் அழிந்து விடும் என்ற நல்லெண்ணத்தில் எடுத்த முடிவாம்.தமிழ்நாடு தவிர மற்ற மாநிலங்களில் உள்ள பள்ளிக்கூடங்கள் இது.  

அதே போல திபெத் அகதி என்ற சொல்லை வைத்துக் கொண்டு இந்தியர்களின் வரிப்பணத்தில் ராஜவாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் திபெத் அகதிகளுக்காக உருவாக்கப்பட்ட கல்விக்கூடங்கள்.

இவை அனைத்தும்  மத்திய அரசாங்கத்தால் நடத்தப்படுவது. இந்த சமயத்தில் இலங்கையில் இருந்து வந்து இங்கே வாழ்ந்து கொண்டிருப்பவர்களின் வாழ்க்கையை நினைக்கத் தோன்றுகின்றது.

மத்திய அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட கல்விக்கூடங்கள் அனைத்து சிபிஎஸ்சி பாடத்திட்டத்தின்படியே பாடங்கள் நடத்தப்படுகின்றது. அனைத்துப் பாடங்களும் ஆங்கிலவழிக்கல்வி என்ற போதிலும் ஹிந்தி என்பது முக்கியமான பாடமாக உள்ளது. இந்த பள்ளிக்கூடங்கள் தமிழ்நாட்டிற்குள் இருந்தாலும் அங்கே தமிழுக்கு வேலையில்லை.

மாநில அரசாங்கத்தின் கீழ்


இது இன்று பெரும்பாலும் தனியார் கல்வி நிறுவனங்கள் மூலமே நடத்தப்படுகின்றது.தொடக்கம் முதலே அரசுப் பள்ளியில் ஆங்கில வழிக்கல்வி இருந்த போதிலும் அது பெரிய அளவுக்கு வெற்றி பெறவில்லை. அது குறித்த புரிதலும் பெரும்பாலான பெற்றோருக்கும் இருக்கவில்லை என்பதும் உண்மையே.  தற்போதைய மாறிய சூழலில்தான் இந்த ஆங்கில மோகம் என்பது டைனோசார் மிருகம் போல பிரமாண்டமாய் எழுந்து நிற்கின்றது.


இது தமிழ்நாடு அரசாங்கத்தின் தமிழ்வழி அரசு பள்ளிக்கூடங்கள்.

மேலே நாம் பார்த்த அத்தனை பள்ளிக்கூடங்களைத் தவிர்த்த இந்தியா முழுக்க ஆயிரக்கணக்கான  சர்வதேச பள்ளிக்கூடங்கள் உள்ளது.

இதன் பாடத்திட்டம் என்பது ICSE and IICSCambridge International Certificate of Education (ICE)

இதைத்தான் இன்டர்நேஷனல் ஸ்கூல் என்கிறார்கள்.

அது பலருக்கும் தெரிவதில்லை.

சர்வதேச பாடத்திட்டங்கள் அடங்கிய ரெசிடன்ட் ஸ்கூல்.

இங்கே ஒவ்வொரு நாடும் அதன் பெயரில் நடத்துக்கின்றார்கள். பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் இந்தியாவில் உள்ள பிரபல தொழில் அதிபர்கள் தனியாக நடத்துகின்றார்கள். 

இங்கே இந்திய கல்வித்திட்டத்தில் ஒரு மாணவர் படிக்கும் எந்த பாடத்திட்டத்தையும் எந்த மேலைநாடுகளும் ஏற்றுக் கொள்வதில்லை. தகுதியான நபர்கள் என்ற போதிலும் குறிப்பிட்ட நாட்டுக்குச் செல்ல வேண்டும் என்றால் அதற்கென உள்ள சிறப்புத் தேர்வை எழுதி தேர்ச்சி பெற்றால் மட்டுமே அங்கே செல்ல முடியும்.  

ஆனால் சர்வதேச பள்ளிகளில் இயல்பாகவே குறிப்பிட்ட மேலைநாட்டு கல்வித்திட்டத்தில் பாடங்கள் நடத்துவதாலும், மேலைநாடுகள் போலவே செயல்வழிக்கல்வி திட்டத்தின்படி மாணவர்களை உருவாக்க அவர்களுக்கு தனிச் சிறப்பு உண்டு.

மேலைநாட்டு கல்லூரி பாடத்திட்டம் என்பது பள்ளி அளவில் குறைவாக கல்லூரி அளவில் மிக விரிவாக என்று படிப்படியான வளர்ச்சியில் கல்வி முறை இருக்கும். ஆனால் நமது கல்வித்திட்டம் என்பது தலைகீழானது. பத்தாம் வகுப்பு முடிப்பதற்குள் சுமத்தப்பட்ட அழுத்தத்தில் மாணவர்களின் சிந்தனைகளை கிழடு தட்ட வைப்பது.

இதைப் போலவே மத்திய அரசாங்கத்தின் நேரிடையான கண்காணிப்பில் உள்ள பள்ளிகளில் தகுதியான சூழ்நிலையில் பயிற்சி பெற்ற ஆசிரியர்களால் நடத்தப்படும். ஆனால் தனியார்கள் நடந்தும் ஆங்கிலவழிக்கல்வியில் வருடத்திற்கு ஒருவர் என்கிற ரீதியில் ஒவ்வொரு ஆசிரியர்களும் பல்வேறு காரணங்களால் மாறிக் கொண்டே இருப்பதால் வரும் ஆசிரியர்களும் பாடம் புரிவதில்லை. படிக்கும் மாணவர்கள் குறித்து நிர்வாகம் கவலைப்படுவதும் இல்லை.

ஆங்கிலவழிக்கல்வியே சிறந்தது என்ற வாதத்தை முன் வைப்பவர்கள் ஒரு முக்கிய உண்மையை புரிந்து வைத்திருக்க வேண்டும்.

இன்று தமிழ்நாட்டில் உள்ள 70 சதவிகித பள்ளிகளில் ஆசிரியர் பணியில் இருப்பவர்கள் அத்தனை பேர்களும் இயல்பான தமிழ்வழிக்கல்வியில் படித்து வந்தவர்களே. எவரும் தேவலோகத்தில் இருந்து வந்தவர்கள் அல்ல.

சில கல்விக்கூடங்கள் மட்டுமே ஆங்கிலோ இந்தியன் ஆசிரியர்களை வைத்து பாடம் கற்பிக்கின்றார்கள். மற்றபடி ஆங்கிலத்தை ஒரு மொழியாக நினைக்காமல் அறிவாக நினைத்து கற்பித்துக் கொண்டுருப்பவர்களிடம் தான் நம் குழந்தைகள் படித்துக் கொண்டிருக்கின்றது என்பதை நினைவில் வைத்திருக்க வேண்டும்.

காசுக்கேத்த பணியாரமும் கூலிக்கேத்த ஆசிரியர்கள் மூலம் தான் நமது குழந்தைகள் படித்துக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால் பல பள்ளிகளில் பெயர் பிரபல்யம் என்கிற ரீதியில் தான் கைநிறைய காசு கொண்டு வாங்க. உங்கள் குழந்தைகளின் மதிப்பெண்களுக்கு நாங்கள் பொறுப்பு என்று கூவிக்கூவி அழைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

நடத்தும் ஆசிரியர்களுக்கே புரியாத பாடத்தைப் போலவே இந்தியாவில் உள்ள பலதரப்பட்ட கல்வித் திட்டங்களும் வெகுஜனம் அறியாத ஒன்று.

சாதாரண மெட்ரிக் பள்ளிக்கூடங்கள் பெற்றோர்களிடம் பணம் பறிக்க என்ற நோக்கத்தில் அவசர கோலத்தில் கொண்டு வரும் சிபிஎஸ்சி பாட வகுப்புகள் என்பது கூட்டத்தில் சேர்ந்து கும்மியடி என்கிற கதை தான். சராசரி மாணவர்கள் ஏணி வைத்து ஏறும் நிலையில் இருப்பவர். ஆனால் சர்வதேச பள்ளியில் பயிலும் மாணவர்கள் ஒரே முயற்சியில் தாண்டி சென்று கொண்டு இருப்பார்கள்.

இது தான் எதார்த்தம்.

பெரும் பணம் கொண்டவர்களுக்கு மட்டும் சாத்தியமானது. 

இந்தியாவில் உள்ள பெரு நகரங்கள். தமிழ்நாட்டில் சென்னை,ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற ஊர்களைத்தவிர அருகே பெங்களூரில் அதிக அளவில் இது போன்ற பள்ளிக்கூடங்கள் உள்ளது.  தொடக்கத்தில் கிறிஸ்துவ மிஷினரிகள் இது போன்ற பல பள்ளிகளை இங்கே நடத்த தொடங்கினர்.

ஆனால் இன்று சர்வதேச உறைவிடப் பள்ளிகள் என்ற பெயரில் கடந்த ஐந்தாண்டுகளில் பல இடங்களில் உருவாகிக் கொண்டு இருக்கின்றது.

இப்போதைய கல்விச் சந்தையில் கிராக்கி என்பது இந்த சர்வதேச பள்ளிகளுக்கு மட்டுமே.  

எனக்குத் தெரிந்த ஒரு நண்பரின் இரண்டு பையன்களும் பெங்களூரில் ஜெயின் சமூகம் நடத்தும் சர்வதேச பள்ளியில் படிக்கின்றார்கள்.  வருடத்திற்கு உத்தேசமாக ஒருவருக்கு எல்லாவற்றையும் சேர்த்து 12 லட்சம்  செலவு செய்து கொண்டிருக்கின்றேன் என்றார்.

அதாவது மாதம் ஒரு லட்சம். ஒரு நாளுக்கு என்ன செலவு என்பதை போட்டுப் பார்த்துக் கொள்ளவும்.  

"என்ன சிறப்பு" என்று கேட்டேன்?  

அந்த பள்ளியின் முதலாளி எப்போதும் பெற்றோர்களிடம் சொல்லும் வாசகத்தை நண்பர் என்னிடம் சொன்னார்.

"எனது பள்ளியில் படிப்பவர்கள் வேலைக்குச் செல்பவர்கள் அல்ல. வேலைகளை உருவாக்கி நூற்றுக்கணக்கான பேர்களுக்கு வேலையை கொடுக்கக்கூடிய ஆற்றலை உருவாக்கும் அளவுக்கு ஒரு மாணவனை தயார் படுத்துகின்றோம். ஒரு வட்டத்திற்குள் வாழ வேண்டும் என்று விரும்பும் பெற்றோர்களும் தேவையில்லை.  அது போன்ற குறுகிய எண்ணம் கொண்ட மாணவர்களையும் நாங்கள் உருவாக்க விரும்பவில்லை" என்றாராம்.

இது போன்ற பள்ளிகளில் படித்து வருபவர்கள் தொழில் நிறுவனங்களை உருவாக்குகின்றார்களோ இல்லையோ நிச்சயம் உயர்வான நிலைக்குச் செல்லக்கூடிய அத்தனை சாத்தியக்கூறுகளும் இவர்களுக்கு இருப்பதை மறுப்பதற்கில்லை. மேலும் இதிலும் ஒரு பிரச்சனை உண்டு.

மேலைநாட்டு கல்வித்திட்டத்தில் படித்து வெளியே வருபவர்கள் இந்திய சூழல் சார்ந்த நிறுவனங்களில் ஜெயித்து வர முடியுமா? காரணம் வெளிநாட்டு நிர்வாகத்தைச் சார்ந்த விசயங்களை கரைத்துக் குடித்து வெளியே வருபவர்களுக்கு இங்குள்ள வினோத சூழ்நிலைகளை கையாள முடியுமா? என்று கேட்ட போது உடனடியாக பதில் வந்து விழுந்தது.

இந்தியாவில் இருப்பதற்காகவா இத்தனை செலவு செய்கின்றேன்? என்றார்.

முறைப்படுத்தப்பட்ட சர்வதேச பள்ளிகள் கல்வியை அதன் தரத்தை அளவுகோலாக வைத்து தான் நடத்திக் கொண்டு இருக்கின்றார்கள். இங்கே இட ஒதுக்கீடு, சாதி மதம் போன்ற எந்த பஞ்சாயத்தும் எடுபடாது.

பணம் இருந்தால் போதுமானது.  

அரசியல்வாதிகள், திரைப்பட பிரபல்யங்கள், அதிகாரவர்க்கத்தில் உயர்ந்த பதவிகளில் இருப்பவர்கள், பெரும் பணம் படைத்தவர்களின் குழந்தைகள் மட்டும் படிக்கின்றனர். இங்கும் மாநில மொழிகளுக்கு வேலை இல்லை. கதவுக்கு வெளியே நிற்க வேண்டியது தான்.

நடுத்தரவர்க்கத்தினரும், நடுத்தரவர்க்கத்தில் சற்று உயர்ந்த நிலையில் உள்ளவர்களும் இது போன்ற பள்ளியில் தங்கள் குழந்தைகளை படிக்க வைத்தாலும் குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் மூச்சு திணறி பணம் கட்ட முடியாமல் சிபிஎஸ்சி அல்லது மெட்ரிக் பள்ளிகளுக்கு மாற்றியுள்ளதை பலமுறை பார்த்துள்ளேன்.

இதே போல தங்கள் குழந்தைகளை மெட்ரிக் பள்ளியிலிருந்து நிறுத்தி விட்டு அவசரம் அவசரமாக சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் சேர்த்தவர்களும் குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் பணம் கட்ட முடியாமல் திணறுவதையும் பார்த்துக் கொண்டிருக்கின்றேன்.

ஆனாலும் தினந்தோறும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடம் புத்திசாலி கனவுகளை விதைப்பதிலேயே குறியாக இருக்கின்றார்கள்.

முந்தைய தொடர்ச்சி

Tuesday, July 23, 2013

காசுக்கேத்த கல்வி


முந்தைய தொடர்ச்சி


என்ன பாலர் பள்ளிக்கு கல்விக்கட்டணம் ஐம்பதாயிரமா? என்று கொண்டு போய் சேர்ப்பவரிடம் கேட்டுப் பாருங்கள்? டக்கென்று பதில் வந்து விழும்.

நல்ல பள்ளிக்கூடம் என்றால் செலவு செய்வதில் என்ன தப்பு?

உங்கள் கேள்விக்குறி உங்களையே கேலிக்குறியாக மாற்றி விடும்..

இதற்குப் பின்னால் உள்ள சில எளிமையான காரணங்களை மட்டும் இங்கே பார்த்து விடலாம்.

ஒரு குடும்பம் கிராமத்தில் வாழும் போது அவர்கள் சார்ந்திருப்பது பெரும்பாலும் விவசாயம் சார்ந்த தொழிலில் மட்டுமே.

தொடக்கத்தில் மழையை நம்பியதோடு கிணற்றுப் பாசனத்தை நம்பி விவசாயம் இருந்தது. தொடர்ந்து கண்மாய் பாசனம், ஏரிப்பாசனம், ஆற்றுப்பாசனம் என்பது வரைக்கும் தொடர்ந்தது. எளிமையான வாழ்க்கை, இயல்பான பழக்கவழக்கங்கள். மொத்தத்தில் ஆசைக்கும் அச்சத்திற்கும் இடையே வாழ்ந்த வாழ்க்கை. கனவுக் கோட்டைகள் ஏதும் தேவையில்லாத வாழ்க்கை.

இன்று எல்லாமே மாறி விட்டது.

இன்று தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கணக்குகளில் ஆற்றுப் பாசனமென்பது அதோகதியாகிவிட்டது. .

பருவமழையும் பெய்யென பெய்யும் மழை  நிலையில் இருந்து மாறிவிட்டது. உழைப்பால் உருவான ஆழ்குழாய் தண்ணீர் வற்றிப் போனதோடு மிச்சம் மீதி இருக்கும் நீரை எடுக்க முடியாத சூழ்நிலையில், வராத மின்சாரத்தை நினைத்து கருகும் பயிர்களைப் பார்த்து மனம் ஏங்கும் நிலைக்கு கொண்டு வந்து விட்டது.

கூடவே உடல் உழைப்பை விரும்பாத மக்களும், தங்களுடன் இந்த விவசாய வேலைகள் முடிந்து போகட்டும் என்ற எண்ணம் கொண்ட பெற்றோர்களும் சேர்ந்து இன்று அலுலவக வேலைகளை மட்டுமே விரும்பும் காலகட்டத்தில் வந்து நிற்கின்றோம்.

மிச்சமென்ன?

கிடைத்தவரைக்கும் லாபம் என்று எண்ணிக் கொண்டு விற்றுவிட விவசாய பூமிகள் வந்த விலைக்கு விற்கும் குடியிருப்பு நிலங்களாக மாறிக் கொண்டு வருகின்றது. கடைசியாக ஒவ்வொருவரும் நகர்புறங்களை நோக்கி நகரத் தொடங்கி விடுகின்றனர்.

கிடைத்த வேலையில் ஒட்டிக் கொண்டுவிட மாதம் தோறும் கிடைக்கும் பணம் அதிக நம்பிக்கைகளை தந்து விட நுகர்வு கலாச்சாரத்தின் 'குடி'மகனாக மாறி விடுகின்றனர்.நகரத்தில் கிடைத்த வாய்ப்புகளை முறைப்படி பயன்படுத்திக் கொண்டவர்கள் தங்களின் முதல் தலைமுறைகளை கல்வி ஏணியில் ஏற்றிவிட சமூகத்தில் அந்தஸ்து முதல் அதிகாரம் வரைக்கும் அத்தனையும் எளிதாக கிடைத்து விடுகின்றது.

அவரவர் வசிக்கும் நகரங்களில் கிடைக்கும் ஏராளமான வாய்ப்புகளில் இந்த கல்வி குறித்த சிந்தனைகள் அதிகமாக உருவாகி விட ஒவ்வொருவரும் சிறப்பான கல்வி என்ற எண்ணத்துக்கு வந்து விடுகின்றனர்.  இந்த இடத்தில் தான் கல்வி வியாபாரிகளின் சேவைகளுக்கும் அரசாங்க பள்ளிகளின் செயலற்ற தன்மைக்கும் போட்டி உருவாகின்றது.

இதற்கு மேலாக கல்வி என்பது அரசாங்கம் பொது மக்களுக்கு கொடுக்க வேண்டிய கடமை அல்ல.  தனியார் மூலம் கொடுக்கப்படும் போது  அரசுக்கு சுமை குறைகின்றது என்பதாக எடுக்கப்பட்ட முடிவினால் இன்று கல்வியின் நிலையே தலைகீழாக மாறியுள்ளது. இதன் காரணமாக படிக்காதவர்கள் மேதைகளாக மாறுவதும் படித்தவர்கள் பம்மிக் கொண்டு அடிமை வாழ்க்கை வாழ வேண்டியதுமானது சூழ்நிலை தான் இந்தியாவில் உள்ளது.

இன்று நடுத்தர வர்க்க பெற்றோர்களின் கனவென்பது தங்கள் குழந்தைகள் ஆங்கில வழிக்கல்வியில் படிக்க வேண்டும்.  காரணம் கேட்டால் படித்தால் போட்டி உலகத்தில் ஜெயிக்க முடியும் என்று நம்புகிறார்கள். ஆனால் ஒவ்வொருவருக்கும் இதையும் தாண்டி தற்போது வேறொரு ஆசையும் வளர்ந்து வந்து கொண்டு இருக்கின்றது.

சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் படிக்க வைத்து விட்டால் பம்பர் லாட்டரி தொகை கிடைத்த சந்தோஷத்தில் இருக்கின்றனர். இன்று ஒவ்வொரு தனியார் நடத்தும் கல்வி நிறுவனங்களும் சிபிஎஸ்சி பாடத்திட்டத்திற்கே முக்கியத்துவம் கொடுக்கின்றார்கள்.

எட்டாக்கனியாக இருந்த  மெட்ரிகுலேஷன் படிப்பென்பது இன்று நடுத்தரவர்க்கத்திற்கு இயல்பானதாககவே மாறியுள்ளது. எப்போதும் போல அரசாங்கப் பள்ளிகள் என்பது எந்த மாற்றமும் இன்றி  இருந்தாலும் இந்த பள்ளிக்கூடங்களிலும் ஜெயித்து வருபவர்களை அரசாங்கம் கூட ஆதரிக்க தயாராக இல்லை என்பது தான் கொடுமை.

நம்முடைய மனோபாவங்களின் உள்ளே நுழைந்து பார்த்தால் வண்டலாக சுயநலம் குவிந்து கிடக்கும்.  அரசாங்க மருத்துவமனைகள் தரமற்றது.  அரசு பள்ளிக்கூடங்கள் தகுதியற்றது. ஆனால் அரசு வேலை என்பது கிடைத்து விடாதா? என்று ஏக்கத்தில் வாழவைப்பது.

ஏன்  பெற்றோர்களின் மனோநிலை மாறியது?.

நகர்ப்புறத்தில் வசிப்பவர்கள் மட்டுமல்ல, வளர்ந்து கொண்டிருக்கும் கிராமப் பகுதிகளில் வசிப்பவர்கள் கூட தமது குழந்தைகள் ஆங்கில வழிப்பள்ளியில் படித்துவிட்டால் நிச்சயம் எதிர்காலம் சுபீட்சமாக இருக்கும் என்றே உறுதியாக நம்புகின்றார்கள்.  அரசுப் பள்ளிகளில் படிக்க வைத்த பெற்றோர்கள் கூட தங்களிடம் பணம் கட்ட வசதியிருந்தால் தனியார் பள்ளிக்கூடங்களில் சேர்த்து விடலாமே என்ற ஏக்கத்தில் தான் இருக்கின்றனர்.

ஆனால் தங்கள் அளவுக்கு தெரிந்த இந்த கல்வி குறித்த சிந்தனைகள் மட்டுமே அவர்களின் பார்வைக்குத் தெரிவதால் இந்த கல்வி குறித்த முழுமையான புரிதல்கள் எந்த பெற்றோருக்கும் இருக்கவில்லை என்பது தான் உண்மை.

இந்தியாவில் உள்ள சில கல்வி அமைப்பை முதலில் பார்த்து விடலாம்.

இந்தியாவில் கல்வி என்பது இரண்டாக பிரிகின்றது.

ஒன்று மத்திய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.

மற்றொன்று மாநில அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிக்கூடங்கள்.

இதிலும் மேலும் இரண்டு பிரிவுகள் பிரிகின்றது.

ஒன்று அரசாங்கத்தின் நேரிடையான கண்காணிப்பில் இருக்கும் பள்ளிகள்.

அடுத்து அரசாங்கத்தின் நிதி உதவியை மட்டும் பெற்றுக் கொண்டு தனியார் நிர்வாகத்தில் இருக்கும் பள்ளிகள்.

இது தவிர மற்றொன்றும் உண்டு.

சிறுபான்மையினரின் கல்விக்கூடங்கள்.

மேலே சொன்ன இரண்டுக்கும் இந்த சிறுபான்மையினர் கல்விக் கூடங்களுக்கும் உள்ள ஒரே வித்தியாசம் என்னவென்றால் அரசாங்கத்தின் எந்த கொள்கையும் இவர்களை கட்டுப்படுத்தாது.  ஆனால் அரசாங்கத்தின் அத்தனை பலன்களும் இவர்களுக்குப் போய்ச் சேர்ந்து கொண்டேயிருக்கும். வரம் வாங்கி வந்து கல்வியை சேவையாக செய்து கொண்டிருப்பவர்கள்.

இந்த சிறுபான்மை இனம் என்பது முக்கியமாக கிறிஸ்துவம், இஸ்லாம், இது தவிர மொழி ரீதியாக உள்ளவர்கள் என்று இதில் வருகின்றனர்.  உதாரணமாக சௌராஷ்டிர மொழி தொடங்கி பல மொழிகள் பேசுபவர்கள் போன்றவைகள் இதில் வருகின்றார்கள். பெரும்பான்மையாக மொழி பேசும் மாநிலங்களில் சிறுபான்மையினராக ஒரு குறிப்பிட்ட மொழி பேசுபவர்கள் இருக்கும் அத்தனை பேர்களுக்கும் இது பொருந்தும்.

அரசாங்கம் சொல்லும் இட ஒதுக்கீடு போன்ற எந்த சமாச்சாரமும் இது போன்ற நிறுவனங்களுக்குள் வராது, செல்லுபடியாகாது.

முதலில்  இந்தியாவில் உள்ள கல்வித் திட்டங்களை பார்த்து விடுவோம்.

அடுத்த பதிவில்.............