Friday, May 27, 2011

சமச்சீர் கல்வி வரமா சாபமா?

முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சியின் தொடக்கமே ஒரு விவாத பொருளாக மாறியுள்ளது. தற்போது நீக்கப்பட்டுள்ள சமச்சீர் கல்வி ஒரு விவாத அலையை உருவாக்கியுள்ளது. சென்ற கலைஞர் ஆட்சியில் உச்சநீதி மன்றம் வரைக்கும் சென்று வெற்றிக் கொடி நாட்டிய சமச்சீர் கல்வி அதோகதியாக மாறியுள்ளது. சென்ற வருடம் நீதிமன்றத்தில் தோற்றுப் போய் திரும்பிய தனியார் பள்ளிகள் காட்டில் இப்போது சரியான அடைமழை.

அரசியல் காழ்புணர்ச்சியால் தற்போதைய அரசு இந்த நல்ல திட்டமான சமச்சீர் கல்வியை நீக்கியது தவறு என்று சொல்ல வேண்டிய நடுத்தரவர்க்க மக்களின் குரல் ஒன்றும் மேலெழுந்தாக தெரியவில்லை.  எங்கள் பிள்ளைகளில் மாற்றுச் சான்றிதழ்களை எங்களைக் கேட்காமல் துரித அஞ்சலில் அனுப்பியுள்ளார்கள் என்று சென்னையில் உள்ள ஒரு பள்ளியின் நடவடிக்கை குறித்து பெற்றோர்கள் புலம்புகின்றார்களே தவிர அந்த பள்ளியை விட்டு வேறு பள்ளியில் கொண்டு போய்ச் சேர்க்கும் எண்ணமில்லை. காரணம் பெற்றோர்களின் மனோபாவம் ஒன்றே ஒன்று தான்.  என் பிள்ளையின் கல்வியென்பது நாளை வருமானத்திற்கான இன்றைய முதலீடு.  இவர்களின் கணக்கைப் போலவே தனியார் பள்ளிக்கூடங்களும் முடிந்தவரைக்கும் மூதலீட்டை வட்டியோடு உடனடியாக எடுத்துக் கொண்டிருக்கிறது.

உச்சநீதிமன்றம் வரைக்கும் சென்று கொடிநாட்டி வந்த இந்த சமச்சீர் கல்வி பிரச்சனை நிச்சயம் இந்த அரசுக்கு முதல் ஆப்பாகத்தான் இருக்கப் போகின்றது. ஆனால் இதனால் முழுமையாக பாதிக்கப்படப்போகும் நடுத்தரவர்க்க, கிராமப்புற பெற்றோர்கள் மத்தியில் எந்த அலையும் உருவாகவில்லை.  காரணம் என்ன?

கிராமப்புற மாணவன் படிக்கும் கல்வியும் நகர்புறத்தில் படிக்கும் மாணவனும் ஒரே பாடத்திட்டத்தின் படி படிக்கும் போது இருவருக்குண்டான இடைவெளி இருக்காது என்ற நோக்கத்தில் கொண்டுவரப்பட்ட இந்த சமச்சீர் கல்வியைப்பற்றி பேசுவதற்கு முன்பு நம் மக்களின் கல்வி அறிவு குறித்த தற்போதைய மனோபாவத்தை பார்த்து விடலாம்.


என் பார்வையில் கடந்த ஓராண்டாக பார்த்து வந்த நிகழ்வுகள் இது.

திருப்பூரில் உள்ள 90 சதவிகித முதலாளிமார்களுக்கு அருகே உள்ள குன்னூர், ஊட்டி இதைத்தவிர்த்து ஏற்காடு தான் முக்கிய கல்விக்கோயிலாக உள்ளது. பல புண்ணிய ஆத்மாக்கள் குழந்தையை மூன்று வயதிலேயே கொண்டு போய் தள்ளிவிட்டு வந்து விடுவதுண்டு.  காரணம் ஒழுக்கத்தை தொடக்கத்தில் இருந்தே கற்று கொடுத்து விடுவார்களாம். ஆய் போனால் கழுவத்தெரியாத குழந்தைகளை அங்குள்ள ஆயாம்மா கைபட்டு விடுதிகளின் கூண்டில் வளர்ந்து கடைசியில் கண்ணியவானாக வளர்ந்து வந்து நிற்பார்களாம்.

இது போல வளர்ந்து நிற்பவர்கள் பெரும்பாலும் அப்பா வளர்த்த நிறுவனத்தை வளர்க்கின்றார்களோ இல்லையோ நடிகைகளுக்கு ப்ளாங் செக் கொடுத்து மாட்டிக் கொள்ளும் அசமந்த மக்குப் பிள்ளையாகவே இருந்து தொலைந்து விடுகிறார்கள். மூன்று தலைமுறைகளுக்கு தேவையான சொத்துக்களை சேர்த்து வைத்திருக்கும் தகப்பன்மார்கள் எப்படியோ இவர்களை சகித்துக் கொண்டு பிள்ளைகள் படித்த கல்விக் கோயில்கள் கற்றுக் கொடுக்காத நல்லொழுக்கங்களை தங்களை சொத்துக்களை இழந்து கற்றுக்கொடுக்கும் அபாக்யவான்களா இருக்கிறார்கள். பிள்ளைகள் கரைத்துக் கொண்டிருக்கும் சொத்துக்களை ஆஞ்சியோகிராம அல்லது பைபாஸ் சர்ஜரி செய்து கொண்டு தேமே என்று பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த கண்ணியவான்கள் படித்த கல்விகோயில்கள் வாங்கிய பள்ளிக்கட்டணம் வருடத்திற்கு 1.50 லட்சம் முதல் அதிகபட்சம் 5 லட்சம் வரைக்கும் உள்ளது.
தான் வளர்த்து வைத்துள்ள நிறுவனத்தில் ஒரு சாதாரண பட்டதாரியாக வந்து உட்கார வைக்க வேண்டும் என்று நினைக்கும் தகப்பன் மகனின் கல்விக்கென்று செலவழித்த தொகை குறைந்தபட்சம் 20 லட்சம். காரணம் பெரும்பாலான உயர்தர வர்க்க மக்கள் படிக்கும் கல்விக்கூடங்கள் கல்விக்கு கொடுக்கும் மரியாதை மாணவனின் ஒழுக்கத்திற்கு கொடுப்பதில்லை. விதிவிலக்குகளை தவிர்த்து.

அடுத்து?

சென்ற கல்வியாண்டின் தொடக்கத்தில் அந்த நண்பரை அவரின் அச்சகத்தில் சந்தித்தேன். மிகுந்த மகிழ்ச்சியோடு என் கையை பிடித்து பலங்கொண்ட வரைக்கும் கைகுலுக்கினார்.

" நீங்க சொன்ன நண்பர் பள்ளித் தாளாளரிடமிருந்து போராடி ஒரு சீட்டு வாங்கி கொடுத்து விட்டார் " என்றார்.  காரணம் வேறொன்றுமில்லை.  காங்கேயம் சாலையில் இருந்த ஒரு பள்ளியில் அவர் குழந்தையை ப்ரிகேஜியில் சேர்த்து விட்ட மகிழ்ச்சி. அந்த பள்ளிக்கூடம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தான் தொடங்கப்பட்டது. அவர் கட்டிய கட்டணம் அதிகமில்லை.  நன்கொடையோடு ஒரு வருட கட்டணம் 40.000. குழந்தை படிப்பது ப்ரிகேஜி என்பதை நினைவில் வைத்துக் கொள்ளவும்.

"சர்வதேச தரத்தில் இருக்கிறது. என் குழந்தையை அங்கே தான் கொண்டு போய் சேர்க்க வேண்டும்" என்று முந்தைய ஆண்டில் இருந்து அந்த பள்ளி குறித்த நினைவாகவே இருந்தவர்.  நீச்சல் குளம் முதல் வகுப்பறை ஏசி வரைக்கு இருக்கிறது என்ற மகிழ்ச்சி வேறு. நண்பர் மிகுந்த வசதி படைத்தவர் அல்ல.  நடுத்தரவர்க்கத்திற்கு சற்று மேம்பட்ட வாழ்க்கை. ஆனால் இப்போதுள்ள திருப்பூர் வாழ்க்கையில் அவர் குழந்தைக்கு கட்ட வேண்டிய கட்டணத்திற்காக
படாதபாடு பட்டுக் கொண்டிருக்கிறார்.  ஆனால் அவர் எண்ணத்தில் எந்த மாற்றமும் இல்லை.  வேறு பள்ளியில் சேர்க்கும் எண்ணமுமில்லை. நண்பரின் குழந்தை பனிரெண்டாம் வகுப்பு முடிக்கும் போது உத்தேசமாக பத்து லட்சமாவது செலவு செய்ய தயாராக இருக்க வேண்டும்.

மற்றொருவர்?

அவர் உடன் பணிபுரிந்த நண்பர்.  இங்கு பெரிய நிறுவனத்தில் நல்ல பதவியில் இருந்தவர்.  ஒரு வருடமாய் அடித்த சுனாமியில் பதவியிழந்து, சிறிய நிறுவனங்களில் சேர முடியாமலும், தனக்கென்று ஒரு வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முடியாமலும் கடைசியாக சிறிய தொழிலை தொடங்கி அதிலும் இழந்து அதோகதியாக இருப்பவரின் ஒரே பையன் படித்த பள்ளிக்கூடமென்பது பணப்பிசாசு கூட்டம்.  அவர்கள் கேட்கும் கட்டணத்தை கட்ட முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறார். சென்ற வருடங்களில் இவருடன் பேசும் போது நீங்க தப்பு பண்ணிட்டீங்க? என் பையனோட பேசிப் பாருங்க.  அவன் பேசும் நுனிநாக்கு ஆங்கிலத்தை பார்க்கும் போது நான் படுற கஷ்டமெல்லாம் பெரிசா தெரியலை என்றார்.  இன்று அவர் பையன் நாக்கு இருக்கும் வாய் சாப்பிடுவது ஒரு ரூபாய் அரிசி.

இறுதியாக?

வீட்டுக்கு அருகே பெரிய குடியிருப்பு உண்டு.  அங்குள்ளவர்கள் பெரும்பாலும் தொழிலாளவர்க்கத் தோழர்கள். வாரம் முழுக்க வேலையிருந்தால் தான் ஞாயிற்றுக்கிழமை ஆட்டம் பாட்டம்.  இரவு முழுக்க டாஸ்மாக் கொடுக்கும் சந்தோஷம். குழந்தைகளை அருகே இருக்கும் ஆங்கில வழி கல்விகூடத்தில் தான் படிக்க வைத்துக் கொண்டிருந்தார்கள். இதில் பாதிப்பேர்கள் ஊரை காலி செய்து போய்விட்டார்கள்.  மீதியிருப்பவர்கள் பணம் கட்ட முடியாத காரணத்தால் இந்த வருடம் சற்று தொலைவில் உள்ள அரசாங்கப்பள்ளியில் சேர்த்து விட்டுள்ளார்கள்.

சம்ச்சீர் கல்விக்கும் மேலே உள்ள சம்பவங்களுக்கும் ஏதாவது தொடர்புள்ளதா?

மாறிவரும் சமூக சிந்தனையில் இப்போது கல்வி என்பது அறிவுக்குரிய விசயம் அல்ல.  அது குடும்ப கௌரவத்திற்குரிய விசயமாகவே மாறியுள்ளது. என் குழந்தை எப்படி படிக்கிறான்? என்பதை விட எந்த பள்ளியில் படிக்கிறான் என்பது தான் இப்போது பெற்றோர்களிடம் இருக்கும் முக்கிய பேசு பொருளாக உள்ளது. முந்தைய அரசு உருவாக்கிய சமச்சீர் கல்வியென்பது பெரும்பாலான பெற்றோர்களிடம் ஒரு விதமான எதிர்மறை சிந்தனைகளைத்தான் உருவாக்கியது. பெரும்பாலான பெற்றோர்கள் அரசாங்கம் கல்விக் கொள்கையில் தலையிடக்கூடாது என்கிறார்கள். அதிலும் சமீப காலமாக புற்றீசல் போலவே முளைத்து,  கல்வியை வியாபாரக்கும் கொழுந்துகள் கொடுக்கும் உத்திரவாதமென்பது இப்போது வேறு விதமாக உள்ளது.


எங்கள் பள்ளியில் அரசாங்க பாடத்திட்டம் அல்ல.  சர்வதேச தரத்திற்கு இணையாக போட்டி போடக்கூடிய வகையில் உள்ள பாடத்திட்டம் என்பதாக பெற்றோர்களை மூளைச்சலவை செய்து மொத்த முட்டாளாக மாற்றி இருக்கும் போது அரசாங்கம் உருவாக்கிய சமச்சீர் கல்வி என்ன தாக்கத்தை உருவாக்க முடியும்? இப்போது காசு வாங்கிக் கொண்டும் கமுக்கமாக குத்தி தள்ளிய மக்கள் விபரமாகவும் பேசத் தொடங்கி விட்டனர்.  சமச்சீர் கல்வி கொண்டு வந்த கலைஞர் குழந்தைகள் எங்கே படித்தார்கள்.  ஸ்டாலின் மகள் செந்தாமரை நடத்திக் கொண்டிருக்கும் பள்ளிக்கூடம் (பள்ளிக்கூடத்தின் பெயர் சன் ஷைன் என்னவொரு தமிழ்பற்று?) எந்த பாடத்திட்டத்தின் படி நடத்துகிறார்கள் என்று வக்கணையாக கேள்வி வேறு கேட்கிறார்கள். ஒவ்வொரு பெற்றோர்களுக்கும் இப்போது தங்கள் குழந்தைகள் குறித்து அவரவர் மனதில் உள்ளது ஒன்றே ஒன்று தான்.

என் குழந்தை நன்றாக ஆங்கிலம் பேச வேண்டும்.

இந்த ஆங்கில மோகமென்பது ஒவ்வொருவரையும் ஆட்டிப்படைக்க தனியார் கல்விக்கூடங்களும் முடிந்தவரைக்கும் லாபம் என்பதாக கல்லாகட்டிக் கொண்டு இருக்கின்றார்கள்.  இப்போது மெட்ரிக் சிலபஸ் என்பதிலிருந்து சிபிஎஸ்சி வரைக்கும் வந்து நின்று அடுத்த கட்டண கொள்ளையை வேறு தொடங்கியிருக்கிறார்கள். இதில் ஒரு மகத்தான் ஆச்சரியம் என்னவென்றால் பனிரெண்டாம் வகுப்பு முடிக்கும் போது கட் ஆஃப் மதிப்பெண்கள் என்பது எல்லாவற்றுக்கும் ஒன்றே தான்.  இந்த பாடத்திட்டத்திற்கு இத்தனை என்று எங்குமில்லை?

ஆனால் இதற்காக மொத்தமாக தனியார் கல்விகூடங்களை மட்டும் குறை சொல்ல முடியாது.

தற்போது மாநில அளவில் முதன்மை இடங்களில் வந்து கொண்டிருக்கும் மாணவர்களும், நூறு சதவிகிதம் தேர்ச்சி பெறும் பள்ளிகளில் சமீப காலமாக அரசாங்க பள்ளிக்கூடங்களும் அதிக அளவில் இருக்கத் தான் செய்கின்றது.  ஆனால் மாநில அரசாங்கம் கல்வி குறித்து உண்மையான அக்கறை கொள்ளாத பட்சத்தில் தான் பிரச்சனை உருவாக ஆரம்பிக்கின்றது.

தனியார் கல்விக்கூடங்கள் செய்வதோடு அதற்குண்டான கட்டணங்களையும் இரண்டு மடங்காக வசூலிக்கும் போது தான் பிரச்சனையின் தொடக்கமே உருவாகின்றது. அரசாங்கத்தின் கேவலமான நடவடிக்கைகள் ஒவ்வொன்றும் பெற்றோர்களை இந்த பாழுங்கிணற்றில் மறைமுகமாக கொண்டு போய் சேர்த்து கொண்டிருக்கிறது.


சென்ற ஆட்சியில் செம்மொழி மாநாடு என்று அதிகாரபூர்வமாக 380 கோடிகளை கொண்டு போய் கொட்டினார்கள்.  இப்போது சமச்சீர் கல்வியை மாற்றுவதால் 200 கோடி நட்டம் என்று தொடர்ந்து காட்டுக் கத்தலாய் ஊடகத்தில் கத்திக் கொண்டிருக்கிறார்கள்.  அந்த செம்மொழி மாநாட்டினால் யாருக்கு என்ன லாபம் வந்தது?  மாநாடு முடிந்த அடுத்த நாள் முதல் ஒரு தமிழ்ப்புரட்சி நடந்து மக்கள் என் மொழி என் இனம் என்று பேசியிருப்பார்களோ?

செம்மொழி மாநாடு குறித்து, தன்னைப் பற்றி அவசரமாய் பாடப் புத்தகத்தில் கொண்டு வந்த பதவியை இழந்த கலைஞர் அரசின் கல்வித் துறையின்  சாதனைகளை சிலவற்றை பார்த்துவிடலாம்.

இப்போதும் தமிழகத்தில் சுமார் 1500 அரசாங்கப் பள்ளிகள் ஓராசிரியரைக் கொண்டே செயல்படுகின்றது. இதில் கொடுமை என்னவென்றால் தமிழ்நாட்டில் 80 சதவிகித மாணவர்கள் அரசு பள்ளிக்கூடங்களை நம்பியே படித்து வருகின்றனர்.  தொடக்கக்கல்வி முதல் நடுநிலைக்கல்வி வரைக்குமான வகுப்புகளுக்குரிய 60 000 ஆசிரிய பணியிடங்கள் நிரப்பப்படாமலேயே உள்ளது. இது போலவே உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் சுமார் 10 000 காலியிடங்கள் உள்ளது.  இதையெல்லாம் விட மற்றொரு கொடுமையும் உண்டு.  ஏறக்குறைய 17 000 ஆசிரியர்களின் முக்கியப் பணியென்பது மக்கள் தொகை கணக்கெடுப்பு, வாக்காளர் அடையாள அட்டை விநியோகம், பஞ்சாயத்து யூனியன் வேலைகள் என்று வருட்ந்தோறும் வேறு வேலை செய்ய வேண்டும்.

கர்மவீரர் காமராஜர் காலத்தில் மாணவர்கள் ஆசிரியர்களின் சதவிகிதமென்பது இருபது மாணவர்களுக்கு ஒரு ஆசிரியராக இருந்தது.  இதுவே கழுதை தேய்ந்து கட்டெறும்பாகி தற்போது 49 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்கிற ரீதியில் வந்துள்ளது.  பள்ளிக்கூடங்களில் தான் இந்த குளறுபடியென்றால் கல்லூரியிலும் இதே நிலைமைதான்.

தமிழகத்தில் 62 கலைக்கல்லூரிகள் உள்ளது. இதில் ஷிப்டு முறையில் செயல்படும் சுயநிதிக்கல்லூரிகளும் உள்ளது. இவை அனைத்திலும் நிரப்பப்படாமல் இருக்கும் காலியிடங்களின் எண்ணிக்கை 3000.

பேராசிரியர்கள் இல்லாமலேயே நமது மாணாக்கர்கள் அப்துல் கலாம் சொன்ன கனவு காணுங்கள் என்ற பாடத்தை படித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் கடந்த 5 ஆண்டுகளில் தொடங்கப்பட்ட சுயநிதி பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை மட்டும் 500 ஆகும்.

ஏன் தனியாரைத் தேடி பெற்றோர்கள் செல்கிறார்கள் என்பதை இந்த கணக்குகள் நமக்கு உணர்த்தும். கல்விப்பானையே ஓட்டையாக இருக்கும் போது அதில் உள்ள தண்ணீர் குறித்து யாருக்கு அக்கறை?

முடிந்தவரைக்கும் கல்விக்கட்டணம் என்கிற ரீதியில் தனியார் பள்ளிகள் சுருட்ட, நாங்கள் உழைத்து சுடுகாடு போனாலும் போவோமே தவிர எங்க பிள்ளைங்க இங்கீலிஷ் படித்தே ஆகனும் என்கிற ரீதியில் இருக்கும் பெற்றோர்கள் இருக்கும் வரைக்கும் சமச்சீர் கல்வி என்பது சமாதிக்குரிய சங்கதிதான்.  எந்த அரசாங்கமும் இப்போதுள்ள தனியார் கல்விக்கூடங்களை அடக்கத் தேவையில்லை.  அவர்களின் கட்டணக் கொள்ளையைக் குறித்து கவலைப்பட வேண்டியதில்லை. இந்த சமச்சீர் கல்வியை அவர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்கிறார்கள் என்பது குறித்தும் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை.


தெரிந்தே சவக்குழியில் போய் விழுபவர்களை காப்பாற்றுவதை விட வேறு சிலவற்றை தற்போதைய அரசாங்கம் உடனடியாக செய்தாலே போதுமானது. இப்போது சமச்சீர் கல்வியை விட வேறு சில முக்கிய கடமைகள் தற்போதைய அரசாங்கத்திற்கு இருக்கிறது. இப்போதுள்ள அரசாங்கப் பள்ளிக்கூடங்களை தெளிவான முறையில், சரியான ஆசிரியர்கள் கொண்டு, முறையான வசதிகள் செய்து கொடுத்தாலே போதுமானது. இப்போதும் கூட பல பெற்றோர்களும் அரசாங்கப் பள்ளியில் இடம் கிடைக்காதா? என்கிற ரீதியில் தான் அலைந்து கொண்டிருக்கிறார்க்ள். முறையான கட்டிட வசதிகள் இல்லாமல் ஆட்டு மந்தைகளைப் போல மாணவர்களை அடைத்து எத்தனை நாளைக்குத் தான் அரசாங்க பள்ளிக்கூடங்கள் மாணவர்களின் அறிவுக்கண் திறக்கும் பணியில் ஈடுபட முடியும்?.

காரணம் பெரும்பான்மையான பெற்றோர்களுக்கு நன்றாகவே தெரியும்.  பிள்ளைகள் சரியான முறையில் படிக்காத வரைக்கும் அது அம்பானி பள்ளியில் சேர்த்தாலும் தறுதலையாகத்தான் வெளியே வரும்.

சமச்சீர் கல்வி குறித்து எழுதுங்க என்று உறுதுணையாக இருந்த ருவாண்டா நண்பர் சத்யகுமாருக்கு நன்றி.

Wednesday, May 18, 2011

வேலுப்பிள்ளை பிரபாகரன் --தமிழீழம் என்றொரு பிரதேசம்


 "தமிழர்களுக்கு இனி தனி ஈழம் தான் தீர்வாக இருக்கும்" என்று தீர்மானமாய் சொன்னது பிரபாகரன் அல்ல. 


இதன் வித்து இலங்கை என்ற நாடு ஆங்கிலேயர்களிடமிருந்து சுதந்திரம் பெறுவதற்கு முன்பே உருவானது.  தமிழர்களில் முதல் தலைமுறை தலைவரான அருணாச்சலம்  உருவாக்கியது ஆகும்.  அவர் தனி ஈழம் என்று தான் தொடக்கத்தில் சொன்னார். அதுவே தமிழீழம் என்று பின்னால் மாறியது.  அருணாச்சலம் படித்தவர், பண்பாளர், சட்ட மேதை ஆனால் வெகுஜன ஆதரவு பூஜ்யம்.  அவர் வாழ்ந்த வாழ்க்கை முழுக்க கொழும்புவிலும் மேல்தட்டு மக்களுடன் இருந்த காரணத்தால் கடைசி வரைக்கும் மக்கள் ஆதரவென்பது அவருக்கு எட்டாக்கனியாக இருந்தது. இறுதியில் அவர் கொள்கைகளும் கொலையாகி வெகுஜன ஆதரவு இல்லாமல் மறைந்தும் போனது.

அருணாச்சலம் முதன் முதலாக உருவாக்கிய இலங்கை தேசிய காங்கிரஸ் சிங்களர்களின் கைக்கு போன போதே அச்சத்துடன் எதிர்காலத்தில் இனி சிங்களர்களுடன் தமிழினம் சேர்ந்து வாழ முடியாது என்றார்.  அப்போது இலங்கை சுதந்திரம் பெறுவதற்கு கால் நூற்றாண்டு காலம் இருந்தது. அவராலும் முடியாமல் அவர் சகோதரர் இராமநாதன் முயற்சியும் தோல்வியாகி கைகள் மாறி கடைசியில் 1972 ஆம் ஆண்டில் செல்வநாயகம் மனம் நொந்து போய் சொல்லும் அளவிற்கு வந்து நின்றது. இதையே பிரபாகரன் உரத்துச் சொன்ன போது மற்றவர்களால் வினோதமாக பார்க்கப்பட்டது. 

சர்வதேச அரசியல் புரியாமல் இதென்ன அடம் என்பதாக இன்று வரைக்கும் பேசப்படுகிறது. அருணாச்சலம் புத்தியால் ஜெயிக்க முடியாமல் செல்வநாயகம் சக்தியாலும் வெல்ல முடியாமல் கடைசியில் பிரபாகரன் பலத்தாலும் வெல்ல முடியாமல் கலவரங்களும்யுத்தங்களும்  தொடர்ச்சியாக வந்து மொத்த தமிழர்களின் உயிரும் உடைமையும் இழந்து இன்று நாங்களும் வாழ்ந்தால் போதும் என்கிற அளவிற்கு வந்து நிற்கின்றது. 

இதுவே இன்று இலங்கையில் உயிர்பிழைத்தவர்கள் நான் தமிழர் என்று சொல்ல பயந்து வாழும் நிலைமைக்கு கொண்டு வந்துள்ளது. தொடக்க காலத்தில் அருணாச்சலமும், இவர் சகோதரர் இராமநாதனும் எழுதியுள்ள புத்தகங்கள் தமிழர்களுக்கு மட்டுமல்ல இன்று வரைக்கும் சிங்களர்களுக்கே பாடபுத்தகங்கள். 

சிங்களர்களுக்கு அரசியலை கற்றுக்கொடுத்தவர்கள் மறைந்து கிடைத்து இருக்க வேண்டிய மரியாதையின்றி இறந்தும் போனார்கள். 

இவர்களிடம் கற்று கொண்ட மாணவர்கள் ஆட்சியாளர்களாகவும் மாறி சிங்கள இனவாதத்தின் ராஜாவாகவும் மாறிப் போனது சரித்திர ஆச்சரியங்கள். 

தங்களுக்கு சிறப்பாக கற்றுக்கொடுத்தவர்களின் பெயர்களை இன்று அவலமாய் வந்து நின்ற தமிழர்களுக்கு உருவாக்கப்பட்ட திறந்த வெளி முகாம்க்கு சூட்டப்படும் நன்றிக்கடனையையும் தீர்த்துள்ளார்கள். வாழ்ந்து சென்ற தமிழ் தலைவர்களின் அதிர்ஷ்டம் அவ்வளவு தான். 

அருணாச்சலம் முகாம், இராமநாதன் முகாம், ஆனந்த குமாரசாமி முகாம் என்று உருவாக்கப்பட்டது. மொத்த இலங்கை மக்களும் நினைவில் கொள்ளத்தக்க வகையில் வாழ்ந்தவர்களின் வாழ்க்கைப் பெயர்கள் இன்று நிர்க்கதியாய் நிற்பவர்கள் வாழ்க்கை உதவியாய் உள்ளது என்பது பெரும் சரித்திர சோகம்.

பிரபாகரன் இவர்களைப் போல படித்தவரோ, பட்டம் வாங்கியவரோ அல்லது புத்தகங்கள் எழுதியவரோ அல்ல.  அத்தி பூத்தாற் போல கொடுத்த ஊடக பேட்டிகளும் வருடந்தோறும் உரையாற்றிய மாவீரர் தின பேச்சுகளுமே அவரைப் பற்றி அவரின் கொள்கைகளையும் நம்மால் ஓரளவிற்கு புரிந்து கொள்ள முடியும். போர் வெறியர்,மன நோயாளி,புதிய தலைமுறைக்கு பயங்கரவாதத்தை கற்றுக்கொடுத்தவர், உலகத்திற்கு மனித வெடிகுண்டு என்பதை அறிமுகம் செய்தவர் என்று சொல்லப்படுவரின் நியாய வாதங்கள் எதுவும் இன்று எவர் காதிலும் போய் விழாது.

பிரபாகரன் செய்த சாதனைகள் ஒவ்வொன்றும் இவருக்கு முந்தைய தலைமுறை தலைவர்கள் எவரும் செய்யாதது மட்டுமல்ல.  நிணைத்தே பார்க்க முடியாதது. 

அவர்கள் ஜனநாயகம் காட்டிய வழியில் சென்று தங்களை நம்பியிருந்த வழிகாட்டாமல் மறைந்தவர்கள்.  இவரோ தான் கொண்ட கொள்கை சரி என்று நம்பி அதையே செய்தும் காட்டியவர். தன்னுடைய தன்னம்பிக்கை மட்டுமே வழி காட்டும் என்று கடைசிவரையிலும் கொண்ட கொள்கையில் பிடிவாதமாய் உறுதியாய் நின்றவர் 

அரசியல் தெரியாதவர் என்று சொல்லப்படுபவர்கள் பிரபாகரனின் மாவீரர் தின உரைகளை படித்துப் பார்த்தாலே அவர் தன் வாழ்நாளில் நம்பிக்கைகளும், அவமானங்களுக்கும் இடையே போராடிப் பார்த்த அத்தனை நிகழ்வுகளையும் நமக்கு புரியவைக்கும். பிரபாகரன் உருவாக்கிய தமிழீழத்தின் சமூக கட்டமைப்பு வெளி உலகத்தால் அதிகம் பார்க்கப்படாத பார்வைகள்.,

நான்கு புறமும் நீர் என்பதான தீவில் எட்டு புறமும் எதிரிகளாக இருந்தவர்களுடன் வாழ்ந்தவர் உருவாக்கிய ஒவ்வொன்றும் கடைசியில் அவரைப் போலவே இன்று கேள்விக்குறியாய் சூன்யத்தில் நிற்கிறது?

1985 ஆம் ஆண்டு தமிழர் புனர்வாழ்வு கழகம் தொடங்கப்பட்டது.  போரினால் பாதிக்கப்பட்டு வறுமை நிலைமைக்குத் தள்ளப்பட்ட மக்களுக்கும், சொந்த இடங்களை விட்டு விட்டு வாழ்ந்து கொண்டுருப்பவர்களுக்கும், அகதி முகாமில் ஆதரவற்று இருந்தவர்களுக்கும், தற்காலிக குடிசைகளிலும் இருந்தவர்களை இனம் கண்டு அவர்களை அரவணைத்து வாழ்க்கை கொடுப்பது இதன் கடமையாக இருந்தது. இதன் உருவாக்கத்திறகு முன்னதாக புலிகளின் ஊடகப்பிரிவு செயல்படத் தொடங்கியது.  முதலில் வானொலியில் ஆரம்பித்து இறுதியில் தொலைக்காட்சி சேவை வரைக்கும் கொண்டு வந்தார்கள்.  மிகுதியான பால் உணர்வை தூண்டும் காட்சிகளை தணிக்கை செய்யப்பட்டு அத்துடன் செய்தி அறிக்கைகள், நடப்பு நிகழ்வுகளை துல்லியமாக காட்டும் அளவிற்கு கடைசி வரைக்கும் தொடர்ந்து தமிழீழத்தில் ஒலிபரப்பு சேவை நடத்தப்பட்டது.  இந்திய அமைதிப்படை உள்ளே நுழைந்த போது முதலில் தாக்கப்பட்டது இந்த வானொலி சேவையே ஆகும்.

யுத்தத்தினால் பெற்றோரை, பாதுகாவலர்களை இழந்த பெண் பிள்ளைகளின் பராமரிப்புக்காக செஞ்சோலை சிறுவர் இல்லம். 1991 இல் தொடங்கப்பட்டது. அதனை தொடர்ந்து போரில் பெற்றோரை இழந்த ஆண் பிள்ளைகளை பாதுகாக்க 1993 ஆம் ஆண்டு. காந்த ரூபன் அறிவுச்சோலை தொடங்கப்பட்டது. வெற்றிமனை என்ற அமைப்பின் மூலம் நடந்த போர்கள் மூலம் கண் முன்னால் உறவுகளை பறி கொடுத்து அடைந்த மன அழுத்தங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், மனநிலை பாதிக்கப்பட்ட வர்களுக்கும் உயரிய சிகிச்சை அளித்து அவர்களை பராமரித்து மறுவாழ்வு அளிப்பதற்காக உருவாக்கப்பட்டது. 

மூதாளர் பேணகம் என்ற அமைப்பின் மூலம் போரினால் தமது பிள்கைளை இழந்து ஆதரவற்ற நிலைக்கு தள்ளப்பட்ட முதியோரையும், சொந்த பந்தம் இல்லாமல் இருப்பவர்களையும், உறவினர்கள் இருந்தும் கைவிடப்பட்ட முதியோர்களையும் பாதுகாக்க உருவாக்கப்பட்டது  1992 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் கலை பண்பாட்டுக் கழகம் என்ற அமைப்பின் மூலம் தமிழர்களின் தமிழ் மொழியையும் அழிந்து கொண்டுருக்கும் கலை மற்றும் பண்பாடுகளையும் மீட்டெடுப்பதற்காக உருவாக்கப்பட்டது. தியாகி திலீபன் மருத்துவ சேவையின் மூலம் அரசாங்கம் உருவாக்கிய தடைகளை மீறி ஒவ்வொரு கால கட்டத்திலும் உருவாக்கிய மருத்துவமனைகள் மூலம் அத்யாவஸ்யமான மருந்துப் பொருட்களை வரவழைத்தும், பயிற்சியளிக்கப்பட்ட போராளிகள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது.  தமிழீழ படைத்துறைப் பள்ளியின் மூலம் வளர்ந்து கொண்டுருக்கும் இளையர் கூட்டம் போரினால் அவர்களின் கல்வி பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக உருவாக்கப்பட்டது.

தமிழீழ பொருண்மிய மேம்பாட்டுக் கழகமும், இதனைத் தொடர்ந்து 1993 ஆம் ஆண்டு தமிழீழ சட்டக் கல்லூரி உருவாக்கப்பட்டது. இதே ஆண்டில் பொதுக்கல்வி தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களைப் பாராட்டி வருடந்தோறும் பரிசு வழங்க தமிழீழக் கல்வி மேம்பாட்டுப் பேரவை தொடங்கப்பட்டது.  1994 ஆம் ஆண்டு தமிழீழத்தின் பொருளாதாரக் கட்டமைப்பை வலுப்படுத்துவதற்காக வேளாண்மையும் கைத்தொழிலையும் உருவாக்கி சிறப்பானவர்களுக்கு பரிசு கொடுத்து சிறப்பிக்க உருவாக்கப்பட்டது. .

மக்களின் வங்கி சேவைக்காக தமிழீழ வைப்பகம் சட்டத் தேவைகளுக்காக தமிழீழ நீதி நிர்வாகத்துறை, நகர் நிர்வாகத்திற்காக தமிழீழ காவல் துறை இது போக மாணவர்களுக்கென்று விளையாட்டுத் துறையும் தொடங்கப்பட்டது.  மொத்தத்தில் தமிழீழ பகுதிகளில் வாழ்ந்த மக்களின் பொருளாதார சமூக கட்டமைப்புத் துறையில் அதிக கவனம் செலுத்தப்பட்டது.

பிரபாகரன் உரையாற்றிய மாவீரர் உரைகள் என்பது பல விதங்களில் பயன் உள்ளதாக இருந்தது. போரில் இறந்த வீரர்களுக்கு கௌரவம் செலுத்தும் விதமாக அதே சமயத்தில் தமிழ் மக்களுக்கு தமிழீழ விடுதலைப்புலிகளின் நோக்கத்தையும், சர்வதேச சமூகத்திற்கு புலிகள் இயக்கம் விடுக்கும் கோரிக்கை என்பதாக பல தளங்களில் விவாதப் பொருளாக அணைவராலும் உற்று கவனிக்கக் கூடிய வகையில் இருந்தது.  பிரபாகரனின் நோக்கத்தையும் விருப்பத்தையும் தனிப்பட்ட கொள்கைகளையும் புரிந்து கொள்வதாகவும் இருந்தது.

சங்கர் இறந்த தினமாக நவம்பர் 27 என்பதை கணக்கில் கொண்டு மாவீரர் தினம் என்று உருவாக்கப்பட்டு முதன் முதலாக இந்திய அமைதிப்படை இலங்கையில் இருந்து கடைசிகட்ட உக்கிர தாக்குதல்கள் நடத்தப்பட்ட போது இனம் தெரியாத அடர்ந்த காட்டில் இருந்து கொண்டு உரையாற்றிய பிரபாகரனின் உரை என்பது 2008 வரைக்கும் 19 வருடங்கள் தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் குறிப்பிட்ட அதே தினத்தில் ஒலிபரப்பப்பட்டது.  உலக ஊடகங்களும், உலகத்தமிழர்களும் ஏன் சிங்கள ஆட்சியாளர்களுமே இதை வைத்து தான் புலிகளின் அடுத்த கட்ட நகர்வை புரிந்து கொள்ளும் அளவிற்கு இருந்தது. 

மொத்த 19 வருட உரைகளின் மூலம் நம்பிக்கைகளுக்கும் விருப்பங்களுக்கும் இடையே போராட்டங்களும், ஒவ்வொரு கால கட்டத்திலும் தான் மாறத் தயாராய் இருந்த போதும் மதிக்காத சிங்கள ஆட்சியாளர்களின் மேல் இருந்த அவநம்பிக்கையின் ஊசலாட்டத்தையும் நமக்கு பல விதமாக புரிய வைக்கின்றது. பிரபாகரன் முதல் மாவீரர் உரை தொடங்கிய போது புலிகளின் அதிகாரப்பூர்வமான இறந்தவர்களின் எண்ணிக்கை 1207 பேர்கள்.. இதுவே 19 வருடங்களுக்குப் பிறகு 17,903 பேர்கள் இறந்ததாக மாவீரர் தின உரையில் குறிப்பிட்டார்.

"ஓர் இனத்தை பொறுத்தவரையிலும் வீரர்களை, பெண்களை, அறிவாளிகளையும் மதிக்காத இனம் காட்டுமிராண்டியாக அழிந்து விடும். எமது இயக்கத்தில் இப்போது வீரர்களுக்கு பஞ்சமாக இருக்கிறது. எமது போராளிகளை நினைவு கூறும் தினத்தை ஒரே நாளில் வைப்பதால் வீரச்சாவு அடைந்த மேல்மட்ட தலைவர்கள் முதல் அடிப்படையான வீரர்களை வரை ஒரே மாதிரி நினைவு கொள்ளப்படுகிறார்கள்.  காலப்போக்கில் குறிப்பிட்ட சில சில ஆட்களுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு அந்த மரியாதை சிலருக்கு மட்டும் போவதை தடுப்பதற்காக இதை வருடந்தோறும் கொண்டாடப் போகிறோம்."

"நான் உயிருக்கு உயிராய் நேசித்த தோழர்கள், என்னுடன் தோளோடு தோள் நின்று போராடிய தளபதிகள், நான் பல்லாண்டு காலமாக வளர்த்தெடுத்த போராளிகள் களத்தில் விழ்ந்த போதெல்லாம் எனது இதய்ம் வெடிக்கும்.  ஆயினும் சோகத்தால் நான் சோர்ந்து போவதில்லை.  இந்த இழப்புகள் எனது இலட்சிய உறுதிக்கு மேலும் மேலும் உரமூட்டி இருக்கின்றன"

"நாம் இனத்துவேசிகள் அல்லர். போர்வெறி கொண்ட வன்முறையாளர்களும் அல்லர்.  நாம் சிங்கள மக்களை எதிரிகளாவோ விரோதிகளாகவே கருதவில்லை. நாம் சிங்கள தேசத்தை அங்கீகரிக்கின்றோம்.  சிங்களப் பண்பாட்டை கௌரவிக்கின்றோம்.  சிங்கள மக்களின்  தேசிய வாழ்வில் அவர்களது சுதந்திரத்தில் நாம் எவ்விதமும் தலையிட விரும்பவில்லை".

"நாம் எமது வரலாற்றுத் தாயகத்தில் ஒரு தேசிய மக்களினம் என்ற அந்தஸ்துடன் நிம்தியாக சுதந்திரமாக கௌரவமாக வாழ விரும்புகிறோம்.  எம்மை நிம்மதியாக வாழவிடுங்கள் என்பது தான் எமது மக்களின் எளிமையான அரசியல் அபிலாஷைகள்.  இந்த நியாயமான நீதியான நாகரிகமான எமது மக்களின் வேண்டுகொளை சிங்கள அரசு எப்போது அங்கீகரிகரிக்கின்றதோ அப்போதுதான் ஒரு நிரந்தர சமாதானமும் தீர்வும் ஏற்பட வாய்ப்பு உண்டு."

"ஆயுத பலத்தால் தமிழீனத்தை அடக்கி ஆள வேண்டும் என்றும், சிங்கள பௌத்த பேரின வாதத்தின் ஆதிக்க மனோநிலையில் சிறிதளவேனும் மாற்றம் எதுவும் நிகழ்ந்து விடவில்லை.  இனத்துவேச அரசியல் சேற்றில் சிங்கள தேசம் மூழ்கிக் கிடக்கும் வரை தமிழரின் தேசிய அபிலாசைகள் பூர்த்தியாகது.  நீதியான நியாயமான அரசியல் தீர்வை நாம் சிங்கள ஆளும் வார்க்கத்திடம் இருந்தது எதிர்பார்கக முடியாது." 

"மனித நீதி எனும் அச்சில் இவ்வுலகம் சுழவில்லை என்பதை நாம் அறிவோம்.  இவ்வுலகில் உள்ள ஒவ்வொரு நாடும் தங்கள் பக்கமுள்ள நியாயங்களை முன் வைக்கிறது.  இவ்வுலகில் ஓழுங்கு அமைப்பை பொருளாதார மற்றும் வணிக நலன்களே தீர்மானிக்கின்றன.  இன்றோ சார் நீதியிலோ மக்களின் உரிமை சார்ந்தோ நிற்கவில்லை.  நாடுகளுக்கிடையேயான சர்வதேச உறவுகளும் அரசியல் நெறிகளும் இத்தகைய நல்களைச் சார்ந்தே தீர்மானிக்கபடுகின்றன.  எனவே எங்களது அறம் சார்ந்த நியாயங்கள் உடனடியாக சர்வதேச சமகத்தான் அங்கிகரிக்கபடும் என் எதிர் பார்க்க முடியாது.  ஆனால் அதே நேரம் அந்த அங்கீகாரத்திற்காக போராடியே ஆக வேண்டும். உலகில் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன."

"சமாதானத்திற்கான போர் என்றும் தமிழரை விடுதலை செய்யும் படையெடுப்பு என்றும் பரப்புரை செய்து ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆக்கிரமிப்புப் போர் தமிழரின் அமைதியக் குலைத்து தமிழரை அகதிகளாக்கி தமிழரை அடிமைகளாக்கி தமிழரின் சமூக பொருளாதார வாழ்வைச் சீரழித்து தமிழருக்கும் என்றுமில்லாத பெரும் அவலத்தை கொடுத்து இருக்கிறது. சமாதானத் தத்துவம் பேசி உலகத்தை ஏமாற்றிய போதும் இது தமிழருக்கு எதிரான போர் என்பதை அரசு நடையில் காட்டியுள்ளது.  இராணுவ ஆட்சி நடைபெறும் தமிழ் பகுதிகளில் மிக மோசமான ஒரு இன அழிப்புக் கொள்கை மறைமுகமாக செயற்படுகிறது என்பதையே இது காட்டுகிறது."

"நாம் சமாதானத்திற்கான விரோதிகள் அல்லர். அன்றி சமாதான வழியில் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு எதிரானவர்களும் அல்லர்.  தாம் வேண்டுவது உண்மையான சமாதானத்தையே. எமது மக்கள் எமது மண்ணில் நிம்மதியாக சுதந்திரமாக அந்நியத் தலையீட இன்றி அமைதியாக வாழ்ந்து தமிழ் அரசியல் வாழ்வைத் தாமே தீர்மானிக்ககூடிய உண்மையான கொளரவமான நிரந்தரமான சமாதானத்தையே நாம் விரும்புகின்றோம். இந்த சமாதான வாழ்க்வை தமிழருக்கு வழங்க சிங்கள பெயத்த பேரினவாத சக்திகள் இனங்குமா என்பது சந்தேகத்திற்கு உரியதே."

"தமிழரின் தாயகம், தமிழரின் தேசியம், தமிழரின் தன்னாட்சி உரிமை ஆகியவற்றை அங்கீகரித்து அவற்றின் அடிப்படையில் ஒரு அரசியற் தீர்வுத் திட்டம் வகுப்பட வேண்டுமென்ற நாம் திம்புக் காலத்தில் இருந்து வலியுறுத்தி வருகிறோம்."

"சிங்களம் ஒரு பெளத்த நாடு.  அன்பையும் அறத்தையும் ஆன்மீக ஞானத்தையும் போதித்த காருணிய மகானை வழிபடும் தேசம்.  தர்மத்தின் தத்துவத்தில் தழைத்த பௌத்த சமகத்தில் இனக்குரோதமும் போர் வெறியும் விஸ்வரூபம் பெற்று நிற்பது எமக்கு வியப்பாக இருக்கிறது. தமிழர் தேசம் போதையும் வன்முறையையும் விரும்பவில்லை.  அமைதி வழியில் அகிம்சை வழியில் தர்மத்தை வேண்டி நின்ற எமது மக்கள் மீது வன்முறைத் திணித்தவர்கள் யார்நாம் எமது உயிரையும் உடைமையும் பாதுகாக்க ஆயுதமேந்தி போராட வேண்டிய நிர்பபந்த சூழ்நிலையை உருவாக்கிய விட்டவர்கள் யார்சிங்கள பௌத்த தீவிரவாதமே தமிழர்களை ஆயுதபாணிகளாக்கி தேச சுதந்திர போராட்டத்தில் குதிக்க வைத்தது."

"ஆட்பலம், ஆயுதபலம், இராணுவ பலம், மக்கள் பலம் என்கிற ரீதியில் சகல பலத்தோடு நாம் வலுப்பெற்று நின்ற போதும் எமது தாயகத்தை மீட்டெடுக்கும் போதிய சக்தி இருந்த போதும்  நாம் சமாதான பாதையை கைவிடவில்லை. உயிர் அழிவையும் இரத்தக் களரியையும் தவிர்த்து சமாதான வழியில் நாகரிகமான முறையில் தமிழரின் சிக்கலை தீர்ககவே நாம் விரும்புகிறோம்."

"தமிழர் தாயகத்தில் அமைதி நிலை தோன்றினாலும் இயல்புநிலை தோன்றவில்லை.  உயர் பாதுகாப்பு வளையங்கள் என்ற போர்வையில் எமது மக்களின் வாழ்விடங்களை சமூக பொருளாதர பண்பாட்டு மையங்களை சிங்கள ஆயுதப் படைகள் ஆக்கிரமித்து நிற்கின்றன. சிறிய அளவிலான புவியற் பரப்பில் குடிசன நெரிசலும் கொண்ட யாழ்பாணக் குடாநாட்டை 40 000 படைகள் ஆக்ரமித்து நிற்கின்றனர். எமது மக்கள் தமது இயல்பபு வாழ்க்கை நடத்த முடியாதவாறு மூச்சுத் திணறும் ஆக்கிரமிப்பு என்றுமே பதட்ட நிலையைத்தான உருவாக்குகின்றது.".

"பேச்சு வார்த்தைகளின் தொடக்கத்திலேயே எமது மக்களின் அடிப்படை பிரச்சனைகளை ஆரம்பித்தலேயே தீர்த்து விட வேண்டும் என்பதே எங்கள் தலையாய கோரிக்ககை."   

"முடிவில்லாத ஒரு துன்பியல் நாடகமாகத் தமிழரின் இனப் பிரச்சனை தொடர்கிறது. எமது பிரச்சினைக்குத் தீர்வு காண ஆளும் கட்சி முயற்சிப்பதும் எதிர்ககட்சி எதிர்பபதும் பின்பு எதிர்க்கட்சி ஆளுங்கட்சியாக மாறி மீண்டு அதே முயற்சியும் அதே எதிர்ப்புமாக இந்த சிங்கள அரசியல் வரலாற்று நாடகம் தொடர்ச்சியாக ஒரே பாணியில் கடந்த 50 வருடங்களுக்கு மேலாக மேடையேறி வருகிறது."

"இடைக்கால தீர்வுமின்றி நிரந்தர தீர்வுமின்றி நிலையான அமைதியும் இல்லாமல் நிம்மதியான வாழ்வும் இன்றி நாம் அரசியல் வெறுமைக்குள் தொடர்ந்தும் சிறைபட்டுக் கிடக்க முடியாது. சிங்கள தேசமானது தமிழனத்தை அரவணைத்து இணைத்து வாழவும் விரும்பவில்லை. அதே சமயம் அரவணைத்து இணைத்து வாழவும் விருப்பமில்லை. அதே சமயம் பிரிந்து சென்று தனித்து வாழவும் விடுவதாக இல்லை. இரண்டுங் கெட்டான் நிலையில் வீடின்றி விடுதலையின்றி எதிர்காலச் சுபிட்சமின்றி சூனியமாக அரசியல் இருட்டுக்குள் நாம் தொடர்ந்து வாழ முடியாது.  பொறுமைக்கும் எதிர்பார்ப்புக்கும் எல்லை கோடுகளுள்ளன. அந்த எல்லைக் கோடுகளை நாம் அடைந்து விட்டோம்."

"பண்டைய இதிகாசங்கள் புனைந்து விட்ட புரளிகளால் சிங்கள இனம் வழி தவறி சென்று கொண்டுருக்கிறது. தொடர்ந்தும் பேரினவாதச் சகதிக்குள் வீழ்ந்து கிடக்ககிறது.  இதனால் சிங்கள பௌத்த பேரினவாதம் இன்றோரு தேசியச் சித்தாந்தமாக சிங்கள தேசத்தில் மேலாதிக்கம் செலுத்தி வருகிறது. இந்த கருத்தாக்கம் பாடசாலைகள் பல்கலைக்கழங்களில் இருந்தும் பத்திரிக்கை துறை வரை ஊடுருவி நிற்கிறது. மாணவர்களோ, புத்திஜீவிகளோ, எழுத்தாளர்களோ அரசியல்வாதிகளோ சுயமாகச் சிந்திக்க முடியாதபடி சிங்கள மூலத்தை இந்த கருத்தாக்கம் சிறைப்பிடித்து வைத்து இருக்கிறது.  பௌத்த பேரினவாதக் கருத்துக்கள் சிங்கள மனிதனின் மன அமைப்பின் ஆழத்தில் அழியாத கோடுகளாக பொறித்து விடப்பட்டு இருக்கின்றன.  இதனால் சிங்கள தேசம் போர் வெறி பிடித்து போர் முரசு கொட்டுகிறது."

"பௌத்தம் ஒர் ஆழமான ஆன்மிகத் தரிசனம்.  அன்பையும் அறத்தையும் ஆசைகள் அற்ற பற்றற்ற  வாழ்வையும் தர்மத்தையும் வலியுறுத்தி நிற்கும் தார்மிகத் தத்துவம்.  இந்த தார்மீக நெறியை 2000 ஆண்டுகளுக்கு மேல் கடைபிடிப்பதாக கூறிக்கொள்ளும் சிங்களம் 2000 ஆண்டுகளுக்கு மேலாக இனவாத விசத்தினுள் மூழ்கிக் கிடக்கிறது. சிங்கள இனவாத விசம் இன்று மிருகத்தனமாக வன்முறையாகக் கோரத்தாண்வம் ஆடுகிறது. 60 ஆண்டுகளாக வன்முறையற்ற அகிம்ச வழியிலும் ஆயுதவழியிலும் தமிழர் நீதிகேட்ட சிங்கள உலகிலே சிறிதும் மனமாற்றம் நிகழவில்லை.  எத்தனையோ இழப்புகள், அழிவுகள், எண்ணற்ற உயிர்பலிகள் நிகழ்ந்த போதும் சிங்கள தேசம் மனம் திருந்தவில்லை.  இதற்கு சர்வதேச சமூகத்தின் பொருளாதார இராணுவ உதவிகளும் அரசியல் தார்மீக ஆதரவும் இராஜதந்திர முண்டு கொடுப்புகளும் ஒரு பக்கச் சார்பாக தலையீடுகளும் தான் காரணம்."

"எத்தனை சவால்களுக்கு முகம் கொடுத்தாலும் எத்தனை இடையூறுகளை எதிர் கொண்டாலும் எத்தனை சக்திகள் எதிர்த்து நின்றாலும் நாம் தமிழரின் சுதந்திரத்திற்காக போராடுவோம். வரலாறு விட்ட வழியில் காலம் இட்ட கட்டளைப்படி சிங்கள ஆக்கிரமிப்பு அகலும் வரை நாம் தொடர்ந்து போராடுவோம்."

எங்கள் காலத்தில் எங்கள் லட்சியத்தை அடைந்து விடுவோம் என்பதைவிட நியாயமான தீர்வுகள் எட்டப்படாதவரைக்கும் இந்த போராட்டம் அடுத்து வருபவர்கள் முன்னெடுத்து செல்வார்கள்.

தமிழீழம் பிரபாகரன் கதையா? என்று நான் எழுதியுள்ள புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட பகுதி இது. வேலுப்பிள்ளை பிரபாகரன் பேசிய மாவீரர் உரைகளை அடிப்படையாகக் கொண்டு தொகுக்கப் பட்ட கட்டுரை இது. 

பிரபாரகன் குறித்து அவரின் தனிப்பட்ட கொள்கைகள் குறித்து கடந்து வந்து பாதைகளில் பெற்ற அனுபவங்களின் தொகுப்புக்கு இங்கே சொடுக்கவும். பிரபாகரன் சர்வாதிகாரம் காரணம். 

Sunday, May 08, 2011

நூலாகிப் போனவர்கள் - நூறு நாட்கள்

"அம்மா திருப்பூருக்கு வருகிறாயா?" என்று கேட்டுவிட்டு தம்பி குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருக்க அம்மா "எத்தனை மணிக்குடா கிளம்பனும்?" என்ற போது எனக்கே சற்று ஆச்சரியமாக இருந்தது. 

எங்கும் கிளம்பாத மனுசி டக்கென்று சொன்னதும் எனக்கு சற்று வியப்பாக இருந்தது. கிளம்பும் வரைக்கும் பேசாமல் இருந்தவர் பேரூந்தில் அமர்ந்த போது தான் கேட்டார்.

"என்னடா திருப்பூர் கம்பெனியெல்லாம் மூடி விட்டார்களாமே?" என்றார்.
ஆமாம்..... என்று பொதுப்படையாகச் சொல்லிவிட்டு ஜன்னலின் வெளியே ஓடிக்கொண்டிருந்த காட்சிகளை ரசித்துக் கொண்டிருந்தேன்.  அதற்கு மேல் பேச்சை வளர்க்க விரும்பவில்லை என்பதை விட ஆர்வத்துடன் வந்தவரிடம் திருப்பூர் குறித்த விசயங்களை இந்த சூழ்நிலையில் சொல்லி பயமுறுத்த விரும்பவில்லை. . 

அவசரமாய் கிளம்பி வரவேண்டுமென்று ஊரிலிருந்து அழைப்பு வந்த போது அடுக்கடுக்கான ஆச்சரியங்கள் என்னை தாக்கிக் கொண்டிருந்தது.  

முன்பதிவு இருக்கை இருக்கிறதா? என்று நண்பரிடம் அழைத்து கேட்ட போது முதல் ஆச்சரியம் தொடங்கியது. காரணம் 15 நாளைக்கு முன் கேட்டாலே இல்லை என்று பதில் வரும்.  ஆனால் இப்போது 6 மணி நேர இடைவெளியில் இருக்கை இருக்கிறதா?  என்று கேட்டால் என்ன சொல்வார் என்று யோசித்துக்கொண்டு தொலைபேசியை காதில் வைத்திருந்த போது " அண்ணே ஒண்ணு போதுமா இல்லை நாலைந்து சீட்டு தேவைப்படுமா? என்றார்.  காரணம் கடந்த மூன்று மாதங்களாக அரசாங்க பேரூந்துகளே காத்தாடிக் கொண்டு தான் செல்கின்றது. .


திருப்பூர் பழைய பேரூந்து நிலையத்தில் அரைமணி நேர இடைவெளியில் திருச்சி, மதுரை மார்க்கத்திற்கு செல்லும் எந்த பேரூந்திலும் இடம் பிடித்து உட்காருவது என்பது அத்தனை சுலபமாக இருக்காது.  ஒவ்வொரு பேரூந்தும் பேரூந்து நிலையத்திற்குள் உள்ளே நுழையும் நேரத்தில் வழியில் காத்திருப்பவர்கள் ஓடும் வண்டியில் உயிர்பயம் மறந்து இடம் பிடித்து விடுவார்கள். முடியாதவர்கள் நின்று கொண்டே பயணிப்பதும் வாடிக்கையான காட்சியாகும். ஏதோவொரு வழியில் பேரூந்தின் உள்ளே இடம் கிடைத்தால் போதுமானது என்று பயணிக்கும் தொழிலாளர்கள் இன்று திருப்பூருக்குள் யாருமில்லை. 

திருப்பூருக்குள் தொழில் ரீதியாக வந்து போய்க் கொண்டிருக்கும் கூட்டமும் குறைந்து விட்டது. திருப்பூரை நம்பி இன்று பயணிப்பவர்கள் எவருமில்லை.   மதுரை திருச்சியிலிருந்து வரும் வாகனங்கள் கூட பல சமயம் பாதி காலி இருக்கையோடு வந்து போய்க் கொண்டிருக்கிறது. .

ஜனவரி 28 2011

உச்சநீதி மன்றம் 'மொத்த சாயப்பட்டறைகளையும் மூடி விடவும்' என்ற தீர்ப்பு வந்த நாள் திருப்பூர் என்ற ஊரின் அஸ்திவார முண்டுக்கல் உருவப்பட்டு இன்று மொத்த ஊரும் முக்காடு போடப்பட்ட ஊராக மாறிவிட்டது. 

திரைப்படங்களுக்கு மட்டும் தான் நூறு நாள் கொண்டாட்டம் கொண்டாட முடியுமா? இங்கும் நீதிமன்ற தீர்ப்பு வந்து நூறு நாளைக்கு மேல் ஆகிவிட்டது. ஆராவாரத்துடன் அடுத்தடுத்த இலக்குளை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தவர்களின் வாழ்க்கை அய்யோ பாவம் என்று முடிவுக்கு வந்து விட்டது. இனி இங்கே வாழ முடியாது என்று உணர்நத் உழைப்பாளர்களின் எண்ணிக்கை நூறில் தொடங்கி ஆயிரங்களில் தொடர்ந்து கடந்த மூன்று மாதங்களில் லட்சக்கணக்கான மக்கள் வெளியே சென்றுவிட்டனர். எங்கே சென்றார்கள்? கேட்பவர் யாருமில்லை என்பதோடு இவர்களை கிளப்பினால் போதும் என்ற நிறுவனங்களே அதிகம்.

மாறிவரும் விஞ்ஞான மாற்றத்தை தங்கள் தொழிலில் கொண்டு வர முடியாதவர்களும், விரும்பாதவர்களும் சேர்ந்து செயல்பட்ட திருப்பூர் உலகம் இப்போது திருட்டு உலகமாக மாறிக்கொண்டிருக்கிறது.  " வாகனங்களை வெளியே நிறுத்தும் போது கவனமாக பார்த்து சரியான இடத்தில் நிறுத்தி பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ளுங்க" என்றார் நண்பர்.  காரணம் தினந்தோறும் பத்து முதல் இருபது வாகனங்கள் கொத்து கொத்தாக திருட்டு போய்க் கொண்டிருக்கிறது.  பெரும்பாலான வீடுகளில் வாடகைக்கு விடப்படும் என்ற வாசகம் அடங்கிய அட்டை நிரந்தரமாக பல மாதங்கள் தொங்கிக் கொண்டிருக்கிறது.  ஆயிரம் ரூபாய் கூட குறைத்துக் கொள்ள மாட்டேன் என்று அடம் பிடித்த வீட்டு முதலாளிகள் காலியாக இருக்கும் வீடுகளுக்கு ஏதாவது ஒரு வழியில் ஆட்கள் வந்து விடமாட்டார்களா? என்று அலைந்து கொண்டிருக்கிறார்கள்.

முக்கிய சாலைகளில் பகல் நேரங்களில் ஊர்ந்து கொண்டு தான் போக்குவரத்து நெரிசலை கடந்து செல்ல வேண்டும்.  ஆனால் இப்போது அத்தனையும் தலைகீழ்.  பல சமயம் ஞாயிறு போலவே சில சாலைகள் வெறிச்சோடிக் கிடக்கின்றது.  ஓடாத நிறுவனங்கள், ஓட்ட முடியாத நிறுவனங்களின் பட்டியல்கள் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டிருக்க பெரிய நிறுவனங்களில் ஆள்குறைப்பு நடவடிக்கைகள் வெகு துரிதமாக நடந்து கொண்டிருக்கிறது. முப்பதாயிரம் சம்பளம் வாங்கி நடுத்தர வர்க்கத்திற்கு சற்று மேலாக வாழ்ந்து கொண்டிருந்தவர்களின் சமூக வாழ்க்கை இப்போது சங்கட வாழ்க்கையாக மாறிவிட்டது.  சிறு,குறு நிறுவனங்களை வைத்து வாழ்ந்த பெரு நிறுவனங்களின் வாழ்க்கை பெரும்பாடாகி விட்டது. இறக்குமதியாளர்கள் விரும்பியபடி உருவாக்கப்பட்டிருந்த நவீன வசதிகள் இன்று நாதியத்து கிடக்கின்றது. ஒவ்வொன்றுக்கும் வங்கியில் வாங்கிய வட்டி கட்ட முடியாத நிலைக்கு மாறி நிறுவனங்களிடமிருந்து வசூலிக்க முடியாத கடன் தொகைகள் வங்கி அதிகாரிகளை படுத்தி எடுத்திக் கொண்டிருக்கிறது. 

அரசாங்கம் நீதி மன்ற தீர்ப்பை காட்டி ஒதுங்கி விட வேறு வழியே தெரியாமல் எடுத்த ஒப்பந்தங்களை அனுப்பியே ஆக வேண்டும் என்று நடந்து கொண்டிருக்கும் நிறுவனங்களின் சாயமேற்ற வேண்டிய துணிகள் பாகிஸ்தான் அருகே உள்ள பஞ்சாப் மாநிலத்த்தில் உள்ள அந்த சிறிய கிராமங்கள் வரைக்கும் போய் வந்து கொண்டிருக்கிறது. தாமதமாய் தயாராகும் ஒப்பந்தங்கள் விமானம் வழியே பறக்க இருக்கும் நட்டத்தில் உருவாகும் நட்டங்கள் நடுத்தெருவுக்கு கொண்டு வந்து கொண்டிருக்கிறது. ஈரோடு, சேலம், என்று சுற்றுவட்டார பகுதியில் திருட்டுத்தனமாக சாயப்பட்டறைகளை உருவாக்கி செயல்பட்டுக் கொண்டிருந்தவர்களையும் அடக்கி ஒடுக்கிவிட ஒலமாய் ஒலிக்கும் குரல் பல இடங்களில் ஒப்பாரியாக மாறிக் கொண்டிருக்கிறது.

தமிழ்நாடடே வரப்போகும் தேர்தல் முடிவை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறது. ஆனால் திருப்பூர் முதலாளிகள் வந்து உட்காரப்போகும் ஆட்சியாளர்கள் எடுக்கப் போகும் கொள்கை முடிவுகளுக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள். கொள்கைகள் சரியான முறையில் அமையாவிட்டால் திருப்பூர் என்பது கொள்ளையர்களின் கூடாரமாக மாறிவிடும் போலிருக்கு.


சட்டம் முக்கியம்.  அதைவிட சமான்யர்களின் வாழ்க்கை முக்கியம் என்பதை உணராத அதிகார கூட்டம் எப்போதும் போல தங்களது பதவிக்கு அடித்துக் கொண்டு சாக இங்கே செத்துக் கொண்டிருக்கும் வாழ்க்கையை கவனிப்பவர் எவருமில்லாமல் எங்கே செல்லும் இந்தப் பாதை என்பதாக போய்க் கொண்டிருக்கிறது. ஒப்பாறி வீட்டில் கிடைத்தது வரைக்கும் லாபம் என்ற நோக்கில் இந்த சூழ்நிலையில் பெரும் பணம் படைத்த கூட்டம் மறைமுகமாக அடுத்த கட்ட நகர்வுக்காக பெரும் முதலீடுகளை தூத்துக்குடி கடலூர் பகுதிகளில் முடக்கி செயல்பட்டுக் கொண்டிருக்கும் வேகத்தைப் பார்த்தால் மொத்த திருபபூரையும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர இவர்களுக்கு என்னமோ திட்டமிருக்கு? என்று எண்ணத் தோன்றுகின்றது.  

நூலை நம்பி மட்டுமே வாழ்ந்தவர்களின் வாழ்க்கை இன்று நொந்து நூலாகிப் போனது தான் மிச்சம். திருப்பூருக்குளே இன்று கூட ஒற்றுமையில்லாமல்  தங்களது சொத்துக்கு பங்கம் வந்துவிடக்கூடாது என்கிற நோக்கில் எது குறித்தும் அலட்டிக் கொள்ளாதவர்கள் சங்கப் பொறுப்பில் இருக்கும் முதலாளி வர்க்கத்தினர் இருக்கும் வரைக்கும் இன்னும் நிறைய காட்சிகள் அரங்கேற இருக்கின்றது என்பதே எதார்த்தம்.

Friday, May 06, 2011

இந்த பக்தியை சாமி கேட்டதா?


கோவை குற்றலாம் செல்லும் வழியில் உள்ள சிறுபூலுவபட்டி என்ற ஊரில் மே 4ந் தேதி நடந்த திருவிழாவில் தெக்கிக்காட்டுப்பயபுள்ள தெகா எடுத்த புகைப்படங்கள்.

Tuesday, May 03, 2011

கல்வி -- பலமான ஆயுதம்

1899 ஜுன் 6

திட்டமிட்டபடி மறவர்கள் அதிகாலை வேலையில் சிவகாசியின் நான்கு புறமும் சூழந்து கொண்டனர். இப்படி ஒரு பெரிய கலவரம் நடக்கப் போகின்றது என்பதை எதிர்பார்த்து நாடார்களும் தயாராகவே இருந்தனர். முந்தைய நாட்களில் வெளிப்புறங்களிலிருந்து படுக்கை விரிப்புக்குள் சுற்றி முடிந்தவரைக்கும் பலவிதமான ஆயுதங்களை கடத்தி வந்திருந்தனர். அத்துடன் அதிக அளவில் துப்பாக்கிகளையும் கொண்டு வந்திருந்தனர். மறவர்கள் வரும் பாதையில் மரங்களை வெட்டி பல தடுப்புகளை உருவாக்கி வைத்திருந்தனர். சில இடங்களில் வருபவர்கள் தங்கள் கூட்டத்திற்குள் மாட்டிக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே வெறுமனே விட்டு வைத்திருந்தனர். 

தாழ்த்தப்பட்ட குலத்தில் பிறந்த என்றொரு பாவத்தை தவிர வேறொன்றும் அறியாத சமூகத்தின் ஒரு சான்று இந்த புகைப்படம். முட்டிக்கு மேல் அணிய வேண்டும். மேலாடை கட்டாயம் கூடாது.

வசதியாய் வாழ்ந்து கொண்டிருந்தவர்கள் முன்னேற்பாடாக தங்கள் பணம், நகை போன்றவற்றை வெவ்வேறு இடங்களில் கொண்டு போய் பதுக்கி வைத்தனர். ஏழை மக்களை, வயதானவர்களை நகரின் மத்திம பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டு பாதுகாப்பான வீடுகளில் தங்க வைக்கப்பட்டனர். ஒரு வாரத்திற்கு முன்பாகவே பெண்களையும், குழந்தைகளையும் பாதுகாப்பான் வெவ்வேறு இடத்திற்கு அனுப்பி வைத்தனர். உள்ளேயிருக்கும் மற்ற பெண்களுக்கு பாதுகாப்பாக தெற்கு ரத வீதியில் அரண் போன்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. 

அரண் போன்ற பகுதியில் உயரத்திலிருந்து கீழே பார்க்கும் மறவர்கள் மேல் வீசி எறிய வேண்டி மிளகாய்ப் பொடி, கற்கள், கொதிக்கும் எண்ணெய் போன்றவற்றையும் தயார் நிலையில் வைத்திருந்தனர். மறவர்கள் வருவதை தெரியப்படுத்த உயரமான பகுதிகளில் சிறுவர்களை அமர வைத்திருந்தனர். தொலைவில் இருந்து வருபவர்களை கண்காணிக்க தொலைநோக்கி கருவிகளும் வழங்கப்பட்டு இருந்தது. 

இது போன்ற ஒரு சம்பவம் நடக்கப் போகின்றது என்பதாக ஏராளமான புகார் மனுக்கள் அப்போது நெல்லை மாவட்ட ஆட்சியாளராகவும், மாவட்ட மாஜிஸ்ட்ரேட்டாகவும் செயல்பட்டுக் கொண்டிருந்த வெள்ளையர் ஸ்காட் அவர்களிடம் போய்ச் சேர்ந்தது.  அவரோ தேவைப்படும் அத்தனை முன்னேற்பாடுகளை செய்து வைத்துள்ளோம் என்று சொல்லிவிட்டு ஒதுங்கி விட்டார். இந்த இடத்தில் குறிப்பிடத்தக்க ஆச்சரியம் என்னவென்றால் திருநெல்வேலியைச் சுற்றிலும் இருந்த ஒவ்வொரு கிராமத்து தலைவர்களும் நாடார்களுக்கு எதிராகவே இருந்தனர். இவர்களைப் போலவே அதிகாரியாக இருந்த ஸ்காட் கூட நாடார்களின் கோரிக்கைகளை செவிமடுக்கவில்லை. நாடார்களை எதிர்த்த அத்தனை பேர்களும் ஆதிக்க சாதியாளராக இருக்க வெள்ளையர்கள் இவர்களிடம் பெயருக்கென்று உறுதிமொழி வாங்கிக் கொண்டு நகர்ந்து விட்டனர்.  மறவர்களின் ஆட்டம் மே மாதம் 23ந் தேதி ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து தொடங்கியது. அங்கிருந்த நாடார்களின் சொத்துக்களை கொள்ளையடித்து அவர்களை ஊரில் இருந்து வெளியேற்றியதோடு சிவகாசியை நோக்கி முன்னேறிச் சென்றனர். 

இப்போது நமக்கு ஒரு கேள்வி எழவேண்டும்.  ஏன் மறவர்களுக்கு இத்தனை ஆத்திரமும் கோபமும் நாடார்கள் மேல்? அதற்கு வெள்ளைச்சாமி தேவரைப் பற்றி இந்த இடத்தில் சுருக்கமாக தெரிந்து கொள்ள வேண்டியது அவஸ்யமாகும்.

இப்போது நாம் அடுத்து இராமநாதபுர மாவட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் முக்குலத்தோர் பிரிவில் வருகின்றவர்கள் இந்த இடத்தில் பார்க்க வேண்டும். இந்த நேரத்தில் இவர்கள் அறிமுகம் ஆகின்றார்கள். காரணம் இருக்கிறது.  இப்போது அரசியல்வாதிகள் மத்தியில், குறிப்பிட்ட அரசியல் கட்சியில் இவர்களின் ஆதிக்கம் அதிகம்.  இவர்களைப் பற்றிய தகவல்கள் வரலாற்றில் ஏராளமாய் கொட்டிக் கிடக்கின்றது.  வேகமும், வீரமும், கோபமுமாய் வாழ்ந்த இவர்களின் வாழ்க்கை தற்போது ஓரளவுக்கு சகஜநிலைக்கு மாறியுள்ளது என்பதை எடுத்துக் கொள்ளலாமே தவிர இன்றும் கிராமப்புறங்களில் இவர்களின் ஆதிக்கம் தான் அதிகம்.  முக்குலத்தோர் என்பது மூன்று பிரிவுகளைக் கொண்டது.  கள்ளர், மறவர், அகமுடையார் என்பதாகும்.  விலாவாரியாக பிறகு பார்ப்போம்.  இப்போது நாம் தேவரிடம் செல்வோம். 

வெள்ளைச்சாமி தேவர்.  

இப்போது ஜாதி அரசியல் வைத்து விளையாட்டு காட்டிக் கொண்டிருப்பவர்களுக்கு இவரை தெரிந்து இருக்குமா என்பது சந்தேகமே? 


இவர் தான் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் தாத்தாவின் பெயர் தான்  வெள்ளைச்சாமி தேவர். வெள்ளைச்சாமி தேவிரின் அப்பா பெயரும் முத்துராமலிங்கமே.  கமுதியில் உள்ள பசும்பொன் கிராமத்தில் வாழ்ந்து கொண்டிருந்தவர்.  தனது தந்தை முத்துராமலிங்கத் தேவர் உருவாக்கி வைத்திருந்த மிகப் பெரிய சொத்துக்கு சொந்தகாரர். மொத்தில் இந்த சுற்றுவட்டார பகுதிகளில் வாழ்ந்து கொண்டிருந்த மறவர் இன மக்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாக விளங்கிக் கொண்டிருந்தார். மறவர் இன மக்களைப் போலவே மற்ற இன மக்களும் தன்னை மதிக்க வேண்டும் என்ற வெள்ளைச்சாமி தேவரின் கொள்கையில் தான் நாடார்களும் மறவர்களுக்கும் உண்டான விரிசலின் தொடக்க அத்தியாயம் உருவானது.  

இதே காலகட்டத்தில் இவரைப் பார்க்கும் மற்ற இன மக்கள் தங்கள் தோள் துண்டை எடுத்து இடுப்பில் கட்டிக் கொண்டு அல்லது கீழே இறக்கி மரியாதை செய்வது வழக்கம். ஆனால் நாடார் இன மக்கள் இது போன்ற விசயங்களை கடைபிடிப்பதில்லை. இதன் காரணமாகவே நாடார் இனமக்களுக்கு வேலை செய்து கொண்டிருந்த வண்ணார் இன மக்களை நாடார்களுக்கு வேலை செய்யக்கூடாது என்று மறைமுக கட்டளை பிறபித்து இருந்தார். இதன் தொடர்ச்சியாக சுற்றியுள்ள கிராமத்து மக்கள் நாடார்களுடன் எந்த வரவு செலவும் வைத்துக் கொள்ளக்கூடாது என்பதிலிருந்து தொடங்கி பல நாடார்களுக்குண்டான எதிர்ப்பு சமாச்சாரங்களை உருவாக்கிக் கொண்டிருந்தார். உச்சகட்டமாக மறவர்கள் தாங்கள் தெருவில் பார்க்கும் நாடார்கள் அணிந்திருந்த பூணூலை அறுத்து அவற்றை இறந்தவர்களுக்கு கைவிரல்கள், கால் கட்டைவிரல்களில் கட்டுவதைப் போல கட்டி பழித்துக் காட்டினர். 

ஏறக்குறைய 16 மாதங்கள் இதுபோலவே நடக்க இறுதியில் எதிர்ப்பு வலுக்க வெள்ளைச்சாமி தேவர் கைது செய்யப்பட்டு ஐந்து வருடங்கள் சிறைத்தண்டனை பெற்ற பிறகே இந்த பிரச்சனை முடிவுக்கு வந்தது.. இவற்றைப்பற்றி மேற்கொண்டு பல விபரங்களை தொடர்ந்து வரும் அத்தியாயங்களில் பார்க்கலாம்.  

ஆனால் இப்போது நடக்கப் போகும் கலவரத்திற்கு காரணகர்த்தாவாக இருக்கும் மறவர்களை அடக்க வெள்ளைச்சாமி தேவருக்கு நாடார் சங்கத்திலிருந்து ஒரு வித்யாசமான கடிதம் அனுப்பப்பட்டது.

"4000 பேர்களுக்கு தலைவராக இருக்கும் வெள்ளைச்சாமி தேவர் உண்மையிலேயே மறவராக இருந்தால் நாடார்களை தாக்குவதற்கு மறவர் கூட்டம் பகலில் வர வேண்டும்.  எந்த இடம் என்பதையும் தெரிவிக்கவும். நாங்கள் தயாராக இருக்கின்றோம்" என்று கடிதம் எழுதி அனுப்பி வைத்தனர்.

இராமநாதபுரம் ராஜாவின் பெயர் ராஜா எம். பாஸ்கர சேதுபதி. இவர் ஆளுமைக்குள் இருந்த பகுதிகளில் கமுதியும் ஒன்று. இவரும் மறவர் இனத்தை சேர்ந்தவரே. 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இந்த ஊரில் வாழ்ந்தவர்கள் ஏழாயிரத்திற்கும் குறைவான பேர்களே இருந்தனர். கமுதியைச் சுற்றிலும் இருந்த கிராமங்களில் மறவர்களே அதிகமானோர் வாழ்ந்து வந்தனர். இந்த பகுதியில் செயல்பட்டு வந்த வியாபாரங்கள் பெரும்பாலும் முஸ்லீம் மற்றும் நாடார்களையே சார்ந்து இருந்தது. நாம் ஏற்கனவே சொன்ன மாதிரி இந்த கால கட்டத்தில் நாடார்கள் தங்களை பிராமணர்கள் போலவே மாற்றிக் கொண்டு செழிப்பான முறையில் வாழ்ந்து வந்தனர். மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ராஜாவின அறக்கட்டளையின் கீழ் செயல்பட்டு வந்தது. நாடார்கள் திருவிழா காலங்களில் வழிபாடு சம்மந்தமான விருந்தொன்றை கமுதி பகுதியில் வைக்க ராஜாவின் அறக்கட்டளைக்கு அனுமதி கேட்டு எழுதியிருந்தனர். 

நாடார்கள் ஆலய பிரவேசம் செய்யாமல் குறிப்பிட்ட விசயங்களுக்கு மட்டும் அனுமதி கிடைத்தது. ஆனால் இது போன்று ஒவ்வொன்றாக எல்லை மீறிக் கொண்டிருந்த நாடார்களின் பழக்கவழக்கங்களினால் வெள்ளைச்சாமி தேவர் நாடார்களுக்கு எதிர்ப்பு அணி ஒன்றை மெதுவாக உருவாக்கிக் கொண்டிருந்தார். காரணம் பொருளாதார ரீதியாக வளத்துடன் வாழ்ந்து கொண்டிருந்த நாடார் இன மக்கள் தனி ஆவர்த்தனம் செய்து கொண்டிருந்ததை ஏற்றுக் கொள்ள முடியாமல் வாய்ப்புகளை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தார் என்பதே உண்மையாகும். இதே வாய்ப்பு சிவகாசி கலவரம் மூலம் லட்டாக வந்து சேர்ந்தது.  நாடார்கள் அனுப்பி கடிதமும் வந்த சேர எறிகின்ற நெருப்பில் எண்ணெய் ஊற்றியது போல கலவரத்தீ கொளுந்து விட்டு எறியத் தொடங்கியது.

சிவகாசியில் நடந்த கலவரம் சுமார் இரண்டு மணி நேரம் மட்டுமே நடந்தது.  கொள்ளையிட்ட பொருட்களை எடுத்துச் செல்வதற்காக மறவர்கள் தங்களுடன் 12 மாட்டு வண்டிகளையும் கொண்டு வந்து இருந்தனர். 886 நாடார்களின் வீடு அழிக்கப்பட்டது. சுமார் 21 நாடார்கள் கொல்லப்பட்டு இருந்தனர்.  

கலவரம் முடிந்த பிறகே சொல்லிவைத்தாற் போல் வெள்ளையர் ஸ்காட் வந்து இறங்கினர். இந்த கலவரம் மேற்கொண்டு நகர்ந்து மறவர்களின் அடுத்த இலக்கு விருதுநகராக இருக்கக்கூடும் என்பதற்காக 50 சிப்பாய்களை அங்கு அனுப்பி வைத்தார். இதே ஸ்காட் தன்னுடைய பொறுப்புகளை தனக்கு கீழேயிருந்த அதிகாரியிடம் ஒப்படைத்துவிட்டு, சென்னை அரசாங்கத்தால் உருவாக்கப்பட்டு இருந்த விசாரனை கமிஷன் அதிகாரியிடம் மற்ற பொறுப்புகளை ஒப்படைத்துவிட்டு ஆளை விட்டால் போதுமென்று ஆஸ்திரேலியாவுக்கு சென்றுவிட்டார்.  

காரணம் மறுபடியும் மறவர்கள் சிவகாசியை மற்ற பகுதிகளை மீண்டும் வந்து தாக்குவார்கள் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தவர்களின் நம்பிக்கை பொய்த்துப் போகும் வண்ணம் தென்காசியில் தொடங்கி செங்கோட்டைப் பகுதியில் நுழைந்து தாக்கத் தொடங்கினர்.  ஒவ்வொரு தாக்குதல்களும் மிருகத் தனமாக இருந்தது. இந்த இடத்தில் ம்ற்றொரு ஆச்சரியம் மதம் மாறிய நாடார்களின் வீடு தாக்கப்படவில்லை. அடையாளம் வைத்து தாக்குவது அப்போதே இருந்து இருக்கிறது. ஜுலை மாதம் கலவரம் முடிவுக்கு வந்த போது 150 கிராமங்கள் கலவரத்தினால் பாதிக்கப்பட்டு இருந்தது. சென்னையில் இருந்து வரவழைக்கப்பட்ட இராணுவம் கட்டுக்குள் கொண்டு வந்தது.  கலவரம் நடந்த ஆறு வார காலத்தில் 2000 பேர்கள் கைது செய்யப்பட்டனர். விசாரிக்க தனியாக ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டது. 500க்கும் மேற்பட்டவர்கள் குற்றவாளி என்று தண்டிக்கப்பட்டனர்.  ஏழு பேர்களுககு மரண தண்டனை அளிக்கப்பட்டது.  குற்றவாளிகளில் ஒருவர் கூட நாடார்களின் பெயர் இல்லை என்பது இங்கு குறிப்பிடத்தக் விசயமாகும். இவர்கள் வைத்திருந்த பொருளாதாரம் காப்பாற்றியதா இல்லை தெளிவான திட்டமிடுதலா போன்ற குறிப்புகள் தென்படவில்லை.

ஏறக்குறைய 19 ஆம் ஆண்டு பிற்பகுதிகளில் அல்லாடிக் கொண்டிருந்த நாடார்களின் சமூக வாழ்க்கை இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஒரு முடிவுக்கு வந்தது போலிருந்தது.  காரணம் அரசாங்கத்தில் பின்தங்கிய வகுப்பினர் பெறக்கூடிய சலுகைகளை அனுபவித்து வந்தபோதிலும் மதம் மாறிய நாடார் இன மக்கள் பெற்றுக் கொண்டிருந்த கல்வி வசதிகளைப் பார்த்த நாடார் இன மக்கள் முதல் முறையாக தங்கள் இனமக்களின் கல்விக்கான விசயங்களில் கவனம் செலுத்தத் தொடங்கினர். 

கிறிஸ்துவ மதபோதகர்களின் சார்பாக பாளையங்கோட்டையில் உள்ள புனித யோவான் கல்லூரி போன்று பல இடங்களிலும் தொடங்க வேண்டும் என்று ஆரம்ப கட்ட ஏற்பாடுகளை செய்யத் தொடங்கினர்.

ஆனால் இராமநாதபுரத்தில் ஆறு நகர நாடார்கள் வியாபாரத்தில் முன்னேறிய பிறகு உறவின் மூலம் கிடைத்த மகமையின் மூலம் முதன் முதலாக திறந்தது தான் விருதுநகர் ஷத்திரிய வித்யாசாலை (1885) உயர்நிலை பள்ளியாகும். இதுவே தொடர்ந்து 1910 ஆம் ஆண்டு நாடார் மகாஜன சங்கம் உருவாக்கப்பட்டு கல்வி கூடங்களில் அணைத்து இடங்களிலும் நிறுவவதில் முழுமூச்சாக இறங்கி அடுத்தடுத்த முன்னேற்ங்களில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு செயல்பட ஆரம்பித்தனர்.

இராமநாதபுரம் மாவட்டத்தில் வாழ்ந்த நாடார் இனமக்களின் சமூக வாழ்க்கை குறிப்புகள் இத்துடன் முடிவுக்கு வருகின்றது.  இவர்களின் வேறு சில குணாதிசியங்களை, வெள்ளையர் ஆட்சி காலத்தில் இவர்கள் பொருளீட்ட உதவிய சாராய தொழில்கள், மற்ற தொழில்கள், இவர்களின் முரண்பட்ட நியாயங்கள், கோவில்களுக்கு அடித்துக் கொண்ட இவர்களின் வாழ்க்கையில் உள்ள ஏற்றத்தாழ்வுகளையும் இடையிடையே பார்க்க வேண்டிய அவஸ்யம் உள்ளது. 

அடுத்த பஞ்சாயத்து? விரைவில்.?