Sunday, February 27, 2011

வலையை கழட்டிவிட வாங்க?

நாடார் மக்கள் கோவிலுக்குள் நுழைவோம் என்று உரிமைப் போராட்டம் நடத்த தொடங்கும் இந்த நேரத்தில் வேறு சில விசயங்களையும் பார்த்து விடுவோம்.  வர்ணாசிரம வர்க்க பேதங்களை உருவாக்கியவர்கள் ஒவ்வொரு குலத்திற்கும் ஒரு குறிப்பிட்ட எல்லைக்கோடு வைத்திருந்தனர். அதை தாண்டி வர முடியாத அளவிற்கு தந்திரமாக அது சார்ந்த பல விசயங்களையும் உருவாக்கி வைத்து இருந்தனர். இதற்கு மேலும் அவ்ரவர் செய்து கொண்டிருந்த தொழில்களை அடிப்படையாக வைத்து இதை முன்னெடுத்துச் சென்றனர். தொழிலை அடிப்படையாக வைத்து அடுத்தடுத்த தலைமுறைக்கும் கட்டமைப்பு மாறிவிடாதபடி கடத்தவும் செய்தனர். ஆனால் இது போன்று உருவாக்கப்பட்ட சமூக கட்டமைப்பு மாறி விடாதபடி இந்த ஆலயங்கள் தான் பெருமளவில் ஒவ்வொரு சமயத்திலும் உதவிபுரிந்தன. 

உருவாக்கப்பட்ட கோவில்கள் மூலம் நம்முடைய முன்னார்கள் வாழ்ந்து கொண்டிருந்த சமூக கட்டமைப்பு பாதுகாக்கப்பட்டது என்பது ஆச்சரியமான விடயமே ஆகும். இந்து, கிறிஸ்துவம், இஸ்லாம் என்று ஏன் இத்தனை மதங்கள்? ஏன் இத்தனை தெய்வங்கள்?  ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு வழிமுறைகள். சடங்குகள், சம்பிரதாயங்கள். ஒன்றிலிருந்து ஒன்று பிரிந்து அதிலிருந்து மற்றொருன்று பிரிந்து அவரவர்களுக்கு தோன்றிய வகையில் சுயநலமாய் பொதுநலமாய் இந்த வலைபின்னல் உருவாகி இன்று வரையிலும் மிகப் பெரிய மாயவலை உருவாகி மனித மனங்களுக்குள் நீக்கமற நிறைந்து உள்ளது. இதற்கு மேலும் தொடர்ச்சியாக அது தவறு இது சரி என்பது போல பல கிளைநதிகள் ஒவ்வொரு காலகட்டத்திலும் உருவாக இந்த வலை பின்னல்கள் தனி மனிதர்களின் கழுத்தை நெறிக்கவும் தொடங்கியது. 

கோவில் என்பது தமிழர்களின் வரலாற்றில் ஏன் இத்தனை முக்கியமாக மாறியது?

நம்முடைய வரலாற்றுப் பக்கங்களில் இந்த கோவில்கள் உருவாக காரணம் என்று வேறு சில அவஸ்யமும் இருந்தது என்று சொல்கின்றது.  மக்கள் அணைவரும் மொத்தமாக ஒரே இடத்தில் கூடுவதற்கு மற்றும் போர்க்காலங்களில் மக்கள் அடைக்கலம் புக என்று சமூக நோக்கில்  உருவாக்கப்பட்டதாகவும் சொல்கின்றது. ஆனால் இந்த கோவில்களை உருவாக்க பாடுபட்டவர்கள் அத்தனை பேர்களும் சமூகத்தில் இருந்த அடித்தட்டு மக்களே ஆவர்ர்கள். இவர்களே முக்கிய உழைப்பாளர்களாக இருந்துள்ளனர். 

இன்றைய நவீன வசதிகள் ஏதுமில்லாத ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் உருவான தஞ்சை பெரிய கோவில் முதல் நாம் இன்று வரையிலும் கண்டு கொண்டுருக்கின்ற ஒவ்வொரு கோவில்களுக்குப் பினனாலும் முழுக்க முழுக்க மனித சக்தியே முக்கிய காரணமாக இருந்துள்ளது.  ஆதிக்க சாதியினர்களும், பிராமணர்களுமா இந்த கோவில் நிர்மாண பணிகளுக்காக தங்கள் உடலை உழைப்பை கொடுத்துருக்க முடியுமா?  உழைத்த அத்தனை பேர்களும் கோவிலுக்கு வெளியே நின்றனர்.  உழைப்பை வாங்கியவர்கள் உள்ளே நுழைந்து சாமியுடன் உறவாடிக் கொண்டு இருக்கின்றனர்.

இந்த இடத்தில் தான் தென்னிந்தியாவிற்குள் சமஸ்கிருதம் உருவாக்கிய மாற்றங்களும் பிராமணர்களின் புத்தியும் நமக்கு பல விசயங்களை புரியவைக்கின்றது.  உலகில் அன்று முதல் இன்று வரையிலும் புத்தியை மூலதனமாக வைத்து வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் ஜெயித்துக் கொண்டேதான் இருக்கிறார்கள்.  மீன்களும், மான்களும் கூட வலையில் இருந்து தப்பிவிடக்கூடிய வாய்ப்புண்டு.  ஆனால் இந்த மதம், சாதி, சடங்குகள் போன்ற வலைக்குள் விழுந்தவர்கள் தான் விழுவதோடு தன்னுடைய அடுத்து வரும் தலைமுறைகளையும் சேர்த்து விழ வைத்து விட்டு சென்று விடக்கூடிய சக்தி படைத்தது. இதைத்தான் நம்முடைய மன்னர்களின் வரலாறு மற்றும் அவர்களால் ஆளப்பட்ட மக்களின் சமூக வாழ்க்கையும் இதைத்தான் உணர்த்துகின்றது. மன்னர்களாக வாழ்ந்தவர்கள் இந்த கோவில்களுக்கு கொடுத்த முக்கியவத்தை அடுத்த மன்னர்களுக்கு கொடுக்காத காரணமும், ஒற்றுமையை விரும்பாத காரணங்களும் தான் பல சாம்ராஜ்யங்கள் மண்ணோடு மண்ணாக புதைந்து போக காரணமாக இருந்தது.  இதன் காரணமாக உருவான பிரச்சனைகள் தான் மக்களின் நல வாழ்வு என்பதை விட அடுத்தவனை ஜெயிப்பது எப்படி? என்று ஆள்பவர்களின் புத்தியும் மாறத் தொடங்கியது. வஞ்சமும் சூழ்ச்சியும் முன்னேறிச் செல்ல கடைநிலை மனிதன் வரைக்கு நாகரிகம் மறைந்து நரிக்குணம் மேலோங்கத் தொடங்கியது.


ஒவ்வொரு மன்னர்களின் ஆட்சி அதிகாரத்திலும் வந்தமர்ந்த பிராமணர்கள் மொத்த போக்கையும் மாற்றத் தொடங்கினர். முத்தாய்ப்பாக மன்னர்களுக்கு புனைப்பெயர் முதல் புழுகுணி கதைகள் வரைக்கும் சூட்டி அழகு பார்த்தனர்.  அவரவர் வம்சத்தையும் தெய்வ வம்சத்துடன் சேர்த்துக்கூறி அவரவருக்கு குலப்பெருமை என்றொரு வட்டத்தைக் கொண்டு வந்தனர். இம்மை, மறுமை, புண்ணியம், பாவம், முன் ஜென்ம பலன் என்று ஒவ்வொன்றும் சமூகத்தில் மிகப் பெரிய தாக்கத்தை உருவாக்கியது.  நாடார்களின் தொடக்க பாரம்பரிய தொழிலான இந்த பனைமரத்திற்கு ஒரு புருடா கதை ஒன்று இந்த சரித்திரத்தில் உள்ளது.   

பனைமரச்சாறு தேவர்களின் தேவாமிர்தமாக பூமியில் கொட்டிக் கொண்டிருந்தது. புனித மந்திரங்களைத் தொடர்ந்து ஜெபித்ததால் அப்புனிதச் சாறு அடங்கிய மரத்தின் தலைப்பாகம் பூமிக்கு நேராக விருப்பம்போல வளைந்து கீழே தயாராக வைக்கப்பட்டிருக்கும் பானைகளில் தாரளமாக வடியத் தொடங்கியது. ஆனால் ஷத்திரியன் ஒருவன் தெய்வங்களை அவமதித்து விட்டான். அதாவது பிராமணார்கள் உச்சரிக்க வேண்டிய மந்திரங்களை அவன் உச்சரித்த காரணத்தால் தெய்வ நிந்தனை ஆகிப் போனது. அன்று முதல் பூமிக்கு நேராகத் தலைவணங்கி அமுத்தத்தை தந்த வந்த மரங்கள் பிடிவாதகமாகச் செங்குத்தான் நிற்கத் தொடங்கின.  எனவே தான் அவைகளில் ஏறிச் சாறு எடுக்க வேண்டிய நிலை உருவானது.

கதை, திரைக்கதை வசனம் நல்லாயிருக்கா?  

இது போலத்தான் சூரிய வம்சம், சந்திர வம்சம் என்று ஒரு புதிய மூலக்கூற்றை உருவாக்கி மன்னர்களை சுதியேத்தி எப்போது தங்களைச்சுற்றி இருக்கும் அளவிற்கு ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்து கொண்டு வர காலப்போக்கில் பிராமணர்கள் உருவாக்கியது தான் சமூகச் சட்டம் என்ற நிலை வரைக்கும் வந்து சேரத் தொடங்கியது.  எல்லா மன்னர்களின் சபையிலும், ஆட்சி அதிகாரங்களிலும் இருந்தாலும் இவர்களுக்கென்று தனியான சட்டங்களும் சம்பிரதாயங்களும் இருந்த காரணத்தால் வேண்டும் போது உள்ளே வந்தனர். தேவையில்லாத போது அணைவரையும் விட்டு விலகி இருந்தனர்.  இவர்களே பல சமயம் மன்னர்களைக்கூட விலக்கி வைத்து இருந்தனர். 

இதுவே தான் தென்னிந்தியாவிற்குள் ஆங்கிலேயர்கள் உள்ளே வந்து போதும் முக்கிய பதவிகளில் இவர்களே இருந்தனர். எவரும் எதிரியுமல்ல அதே சமயத்தில் நண்பர்களும் அல்ல.  தங்கள் வாழ்க்கை முக்கியம்.  அதற்காக உருவாகும் சூழ்நிலையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளுதல் அதைவிட முக்கியமென்று ஒவ்வொரு காலகட்டத்திலும் இதை அடிப்படையாக வைத்தே செயல்பட்டனர்.

நாடார்கள் என்பவர்கள் சேர, பாண்டிய மன்னர்களின் வழித்தோன்றல்கள் என்பதற்கு இன்று வரைக்கும் பல ஆதாரங்களை சரித்திரம் வைத்துள்ளது.  தென் தமிழ்நாட்டில் நாடார்கள் என்பவர்கள் அசல் குடிகளாக இருந்தவர்கள் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. இவர்கள் இனத்தின் பரம்பரைக் கதைகளும் இதைத்தான் பல்வேறு விதமாகக் சொல்கின்றது.  ஆனால் பாண்டிய மன்னர்களின் வீழ்ச்சியென்பது ஆண்டு கொண்டிருந்த மன்னர்களுக்கு மட்டும் பாதிப்பாக அமைந்துவிடவில்லை. ஒரு மிகப் பெரிய சமூக இன மக்களின் வீழ்ச்சிக்கும் காரணமாக இருந்தது.  

பாண்டிய மன்னர்களுக்கு இருந்த உரிமைகள், சலுகைகள், பட்டங்கள், சொத்துக்கள் யாவும் பறிக்கப்பட்டு மீதியிருந்தவர்களை நிர்கதியாக்கப் பட்டனர்.  மதுரைப் பகுதிகளில் இருந்து நிர்ப்பந்தமாக வெளியேற்றப்பட்டனர்.  எல்லாவற்றையும் இழந்தவர்கள் நாடோடிகளாக தென் தமிழகத்தில் சுற்றி அலைய மொத்தத்தில் சமூகத்தில் தாழ்ந்த நிலைக்குத் தள்ளப்பட்டனர்.  விவசாயம், பனைஏறுதல் போன்ற தொழிலில் ஈடுபடுத்தப்பட்டனர்.  இதன் விளைவே மக்கள் வாழ முடியாத பகுதியாக இருந்த திருச்செந்தூர் பகுதியில் உள்ள தரிசு நிலங்களில் வாழ வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டனர்.

இவர்களால் மீண்டு வரமுடியாதபடி அடுத்து வந்த நாயக்கர்கள் பாண்டியர்களின் பெருமை மற்றும் அவர்கள் குறித்த அத்தனை தகவல்களையும் அழிக்க முற்பட்டனர். இலக்கியங்களில் உள்ள பல விசயங்களை மாற்றி திரிபு சேர்த்து திக்குமுக்காட வைத்தனர். இதன் தொடர்ச்சியின் காரணமாகத்தான் இவர்கள் சமூகத்தில் தாழ்ந்த நிலைக்கு வர வேண்டிய சூழ்நிலை உருவானது.

பிற்காலத்தில் பாண்டியர்களின் வழித்தோன்றல் என்று சொல்ப்படும் நாடார்கள் கோவிலுக்குள் நுழைய அனுமதியில்லை என்பதாக கொண்டு வரப்பட்டது. சரித்திர சான்றுகளின்படி நாடார்களின் முன்னோர்களான பாண்டியர்கள் கோவிலின் மேற்கு வாயில் வாயிலாக உள்நுழைந்த தான் தெய்வங்களை வழிபபட்டனர்.  இன்று வரை தென்மாவட்டங்களிலுள்ள கோவில்களின் மேலைக்கதவுகள் மூடிக் கிடக்கும் நிலையைப் பார்க்கலாம். மேற்கு வாயில் நிரந்தரமாக மூடப்பட்ட காரணத்தால் தங்கள் பெருமைக்கு உண்டான குறைவு என்பதாக கருதிக் கொண்ட நாடார்கள் கோயில்களின் ஏனைய வாயில்களின் வாயிலாக உள் நுழைய மறுத்தனர்.

ஒவ்வொரு தலைமுறையிலும் மனதில் பதிந்த போன இந்த கோவில் விவகாரம் தான் பின்னால் விகாரமான சமூக அமைப்பை உருவாக்கத் தொடங்கியது. இந்த கோவிலை வைத்து தான் பெரியவன், சிறியவன், தாழ்ந்தவன் போன்ற முரண்பாடுகள் உருவாகத் தொடங்கியது.  வெளியே நின்று வணங்க வேண்டும்.  பாதி அளவிற்கு உள்ளே வந்து வணங்கலாம்.  குறிப்பிட்ட மக்கள் அருகே வந்து வணங்கலாம்.  இதற்கு மேலே ஆகம விதிகள் என்ற போர்வையில் குறிப்பிட்ட சிலர் மட்டும் கருவறை வரைக்கும் வரலாம் என்று ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விதமான சட்டதிட்டங்களை சங்கடப்படாமல் அள்ளித் தெளிக்க அவரவரும் அடித்துக் கொண்டு சாக ஆரம்பித்தனர்.


பிராமணர்களை நாம் குறைசொல்வதை விட இப்போது இன்னோருவிதயத்தை யோசித்துப் பார்க்கலாம்.  மறுஜென்மம் எப்படி இருக்கும் என்றே தெரியாத மக்களுக்கு ஏன் அடுத்த ஜென்மத்தில் மேல் ஆசை வந்தது.  இதன் காரணமாகத்தானே நாடார்கள் பூணூல் அணியத் தொடங்கினர்.  இதைச் செய்தால் இது நிவர்த்தியாககும் என்று சொன்னவுடன் இன்று வரைக்கும் அத்தனை பேர்களும் அட்சரம் பிறழாமல் கடைபிடிக்க நினைப்பது ஏன்?  இதைத்தான் ஆசை என்றொரு சொல்லும் இறுதியில் அவஸ்த்தை என்றொரு முடிவும் கிடைக்கின்றது. மன்னர்களுக்கு பிராமணர்கள் உருவாக்கி வைத்த குலப்பெருமை முக்கியம்.  மக்களுக்கு தாங்களும் சமூகத்தில் சரியான சம உரிமைகளில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறோம் என்பதை நிலை நாட்ட வேண்டிய அவஸ்யமாக இருக்க ஒவ்வொருவருரின் தேவைகளும் அவரவரை உந்தித் தள்ளத் தொடங்கியது.

பிராமணர்கள் புள்ளி மட்டும் தான் வைத்தார்கள்.  அவரவர்களும் தங்களுக்கு பிடித்த வகையில் கோலம் போட்டுக்கொள்ளத் தொடங்கினர்.  சிலர் ஜெயித்து பெரும்புள்ளியாகத் தெரிந்தனர்.  ஜெயித்து வர முடியாதவர்கள் சிறு புள்ளியானதோடு வாழ்வில் கரும்புள்ளியாக மாறி தாழ்த்தப்பட்டோர் என்றொரு வரிசையில் இடம் பிடிக்கத் தொடங்கினர். கடைசிவரைக்கும் இநத மக்களை மேலே வரமுடியாத அளவிற்கு உருவாக்கிய சமூக முரண்பாடுகளின் காரணமாகவே தவிப்பான வாழ்க்கை வாழத் தொடங்கினர். 

குறிப்பிட்ட சாதி மக்களை தங்களுக்கு அடிமையாக வைத்திருக்கும் பட்சத்தில் ஆதிக்க சாதியினர்களுக்கு பல விதங்களிலும் நன்மை உருவானது.. இவர்களை வைத்தே தங்களின் பொருளாதார பலத்தை பெருக்கிக் கொள்ள முடியும். அதைக் கொண்டே மேன்மேலும் வளர்ந்து வருபவர்களை உயரவிடாமல் அழுத்தி வைத்திருக்கவும் முடியும். இலவசமாக வேலை வாங்கிக் கொள்ளலாம்.  எதிர்த்து பேச முடியாது.  பேசினால் தெய்வ குற்றம்.  அதற்கு மேலும் அரசாங்க எதிர்ப்பு என்ற வட்டத்திற்குள் கொண்டு வந்து ராஜதுரோகியாக மாற்றி விட முடியும். 


உன்னை விட நான் உயர்ந்த குலத்தில் பிறந்தவன் என்று சொல்லியே அவனை மழுங்கடித்த சிந்தனைகளுடன் வைத்திருக்கலாம்.  கடைசி வரைக்கும் போட்டிக்கு ஆள் இல்லாத இடத்தில் வெற்றிக் கோப்பையை வாங்குவது எளிதாகத்தானே அமைந்து விடும்.  இப்படித்தான் சமூகத்தில் ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட பிரிவினர்களை சுரண்டல் மனப் பான்மையில் ஒவ்வொருவரும் அமுக்கி வைத்திருந்தனர்.  

ஆனால் இப்போது கோவிலுக்குள் நுழைந்த ஆக வேண்டும் என்று பிடிவாதம் பிடித்துக் கொண்டிருக்கும் நாடார்களை சமாளிப்பது பெரும் பாடாக இருக்க ஆதிக்க சாதியினர் எடுத்த ஆயுதம் கலவரம் என்பதாகும்.

Thursday, February 24, 2011

பணம் வந்தால் பல்லாக்கு தேவைப்படும்

ஒருவரின் அல்லது ஒரு சமூகத்தின் செயல்பாடுகள் எப்போது மாறத் தொடங்கின்றது?  பொருளாதார ரீதியாக வளரும் போது அல்லது தன்னிறைவு நிலைக்கு அடையும் போது அவரவரின் சிந்தனைகளும் மாறத் தொடங்குகின்றது.  இதுவே தான் நாம் பார்த்துக் கொண்டிருக்கும் நாடார் இன மக்களின் எழுச்சிக்கு முக்கிய காரணமாக இருக்கிறது.

ஏறக்குறைய இவர்களின் வாழ்க்கை ஒவ்வொரு காலகட்டத்திலும் அத்தனைக்கும் ஆசைப்படு என்பதாக இருக்கிறது.  முதலில் பொருள் தேடி அலைய வேண்டிய நிலையில் இருந்தனர். பொருள் சேர்க்கத் தொடங்கிய போது அதை வளர்க்க வேண்டிய சூழ்நிலையில் இருந்தனர்.  தொழிலில் வளர்ந்த நிலைக்கு வந்த பிறகு சமூகத்தில் தங்களின் இழிநிலையை மாற்ற வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர்.  இந்த சமயத்தில் தான் இவர்களின் பொருளாதார பலம் பலவிதங்களிலும் உதவியது என்பதோடு அடுத்த கட்டத்திற்கு நகர்த்தவும் உதவியது என்பது குறிப்பிடத்தக்கது.  

செல்வத்தை சேகரிக்க ஒவ்வொரு இடமாக நகர்ந்து கொண்டிருந்த நாடார் இன மக்களுக்கு தங்களது இனப் பெருமை குறித்து கவலை ஏதும் வந்து விடவில்லை.  ஆனால் குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் செல்வந்தராக, மதிப்பு மிக்க வியாபாரிகளாக மாறிய போது தங்களுக்கான அடையாளங்களையும் அவரவர் பொருளாதார சூழ்நிலையைப் பொறுத்து மாற்றிக் கொள்ளத் தொடங்கினர்.  

தென்னிந்தியாவில் சமஸ்கிருதம் உருவாக்கிய மாற்றங்கள் இவர்கள் வாழ்விலும் பல அடிப்படை விசயங்களை மாற்றத் தொடங்கியது.எண்ணங்கள் மாறத்தொடங்க   பிணங்களை புதைத்துக் கொண்டிருந்தவர்கள் எறிக்கத் தொடங்கினர், கனமான உலோகப் பொருட்களை காதுகளில் அணிந்த பெண்கள் சிறிய அளவில் நாகரிகமாக தங்க ஆபரணங்களை அணியத் தொடங்கினர். 

தொடக்கத்தில் இந்த இன பெண்களின் காது மடல்கள் தோள்பட்டை வரைக்கும் நீண்டு தொங்கிக் கொண்டிருக்கும்.  இந்த நீட்சியின் அளவு பொறுத்து இதையும் ஒரு பெருமையாக சொல்லப்பட்டது. ஒவ்வொரு பழக்க வழக்கமும் வெவ்வேறு காலகட்டத்தில் மாறத் தொடங்க இவர்களின் பேச்சு, செயல்பாடுகளும் நாகரிகம் என்ற போர்வையில் மாறத் தொடங்கியது.

1860 ஆம் ஆண்டு பார்ப்பனர்களை போலவே வேட்டி கட்டவும், குடுமி வைத்துக் கொள்ளவும் ஆரம்பித்தனர். தலையில் எடுத்துக் கொண்டு செல்லும் தண்ணீர் பானைகளை இடுப்பில் கொண்டு செல்ல அதுவும் பல பிரச்சனைகளை உருவாக்கத் தொடங்கியது. ஆனால் இதிலும் இவர்களின் புத்திசாலித்தனம் ஆச்சரியமானதே.  தாங்கள் உருவாக்கிய குளம் மற்றும் கிணறுகளில் பெண்கள் எடுத்துச் செல்லும் பானைகள் இடுப்பில் வைத்து கொண்டு செல்கிறார்களா என்பதை கவனிக்க தனியாக ஒரு ஆளை நியமித்து கண்காணிக்கத் தொடங்கினர்.  இதுவும் பல பிரச்சனைகளை உருவாக்கத் தொடங்கியது.

பலரும் சைவத்திற்கு மாறத் தொடங்கினர். சமஸ்கிருத பெயர்களை தங்கள் குழந்தைகளுக்கு சூட்டத் தொடங்கினர். இந்த காலகட்டத்தில் முற்பட்ட சாதியினரைப் போல கோவிலுக்குள் செல்ல அனுமதியில்லாவிட்டாலும் கூட பல கோவில்களுக்கு செல்வந்தர்கள் தான தர்மங்களை வழங்கினர்.  இதன் அடிப்படையில் குறிப்பிட்ட மக்களுக்கு கோவில் சார்ந்த பணிவிடைகள் செய்ய அனுமதிக்கப்பட்டது. இதை மிகப் பெரிய கௌரவமாக கருதினர். இதன் தொடர்ச்சியாக பிராமணர்களைப் போலவே பூணுல் அணிந்து கொள்ளத் தொடங்கினர். 


இந்த பூணூல் இப்போது அழைத்துக் கொண்டிருக்கும் பெயரான ஷத்திரியர்களுக்கு உரிய கௌரவமாகவும், மறுபிறவி அடையக்கூடிய அம்சமாகவும் கருதிக் கொண்டனர். ஆனால் இந்த எண்ணங்கள் எங்கிருந்து வந்தது? எவரால் உருவாக்கப்பட்டது என்பதை சொல்லவும் வேண்டுமோ?

இந்த இடத்தில் மற்றொரு ஆச்சரியம் என்னவென்றால் பிராமணர்கள் இந்த நாடார்களின் வாழ்க்கையில் மதச் சட்ங்களுகள் செய்வதும், உபநயன நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பொருளீட்டுவதும் நடக்கத் தொடங்கியது. 

திருச்செந்தூர் பகுதிகளில் வாழ்ந்து கொண்டிருந்த பொருளாதார ரீதியாக உயர்ந்த நாடார் இனமக்கள் திருமண வைபோகங்களில் பல்லாக்குளை பயன்படுத்துவது வாடிக்கையாக இருந்தது. இது உயர்குலத்தில் பிறந்தவர்களுக்கு மட்டுமே என்பதாக இருந்தது. தங்கள் செல்வ நிலைப்பாடுகளை சமூகத்திற்கு காட்ட மறவர்களை பல்லாக்கு தூக்கியாக பயன்படுத்திக் கொண்டனர். 

இது போன்ற பல சமூக மாறுதல்கள் நாடார்கள் தங்கள் ஷத்திரியர்கள் என்று அழைக்கப்பட வேண்டும் என்பது மெதுமெதுவாக ஆலமர விழுதுகள் போல் பரவத் தொடங்கியது. இந்த மாறுதல்கள் எங்கே கொண்டு போயநிறுத்தியது தெரியுமா? 

1874 ஆம் ஆண்டு மதுரை நாடார்கள் தங்களது ஆலய நுழைவு உரிமைக்காக மீனாட்சி அம்மன் கோவிலில் பணிபுரியும் ஊழியர்கள் மேல் கிரிமினல் வழக்கொன்றை மூக்கன் நாடார் என்பவர் தொடர்ந்தார். கோவிலுக்குள் நுழைந்த என்னை பலாத்காரமாக வெளியே தள்ளிக் கொண்டு வந்து துணிக்கடை நிறைந்த பகுதியில் நிறுத்தி அவமானப்படுத்தினார்கள் என்று வழக்கில் சொல்லியிருந்தார். எங்களுக்கு ஆலயங்களில் உள்ளே நுழைய எழுத்துப் பூர்வ அனுமதி வேண்டும் என்றார். ஆனால் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி நாடார்கள் ஆலய உள் நுழைவுக்கு அனுமதி அளிக்கவில்லை. இதே போல 1876 ஆம் ஆண்டு ஸ்ரீவில்லிபுத்தூர் தாலூகாவில் திருத்தங்கல் என்ற இடத்திலும் நடந்தது.   இதுவும் தோற்றுப் போனது. 

முறைப்படி 1878 ஆம் ஆண்டு ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட முன்சீப் திருத்தங்கலில் உள்ள நாடார்கள் ஆலயங்களில் உள்ளே நுழைவதற்கும், தெய்வங்களுக்கு தேங்காய் உடைப்பதற்கும் தடை என்ற சட்டத்தை அமுல்படுத்தியது. ஆனால் வழங்கப்பட்ட தீர்ப்பின்படி நாடார் இன மக்கள் தெருக்களைச் சுற்றி ஊர்வலம் நடத்த அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. இதுவே சாத்தூர் பகுதியில் உள்ள நாடார்கள் தெருக்களில் ஊர்வலம் நடத்த அங்குள்ள உயர்சாதியினரும் ஜமீன்தாரர்களும் அனுமதி கொடுக்காமல் எதிர்த்து நின்றனர்.

இந்த கோவில் விவகாரம் தான் திருநெல்வேலியில் வடக்குப் பகுதியில் உள்ள நாடார்களுக்கும் மறவர்களுக்கும் பகைமையுணர்ச்சியை உருவாக்கிய கலவரமாக மாறியது. கலவரத்தில் (1887) நான்கு மறவர்களை ஒரு நாடார் கூட்டம் கொலை செய்ததாக காவல்துறை அறிக்கை தெரிவிக்க ஏராளமான நாடார்களை கைது செய்து குற்றவாளிக்கூண்டில் நிறுத்தியபோதும் வலுவான ஆதாரங்கள் இல்லாத காரணத்தால் வெளியே வந்தனர்.  ஆனால் மறவர்கள் மூன்று நாடார்களை கொலை செய்து கணக்கை நேர் செய்தனர்.

இது போன்ற பகைமையுணர்ச்சி இந்த மாவட்டத்தின் சகல இடங்களிலும் பரவி இருந்தது.  ஆனால் நாங்கள் உங்களை அங்கீகரிக்க மாட்டோம் என்றோம் என்றவர்களைப் போலவே நாடார் இன மக்களும் எங்களை சமஉரிமை மனிதர்களாக அங்கீகரிக்க வைக்கும் வரையிலும் ஓய மாட்டோம் என்று ஒவ்வொன்றாக செய்து கொண்டே வந்தனர். 

இதன் தொடர்ச்சியாக 1898 ஆம் ஆண்டு சிவகாசி நாடார்களின் தலைவர் செண்பகக்குட்டி இனி நாடார் இன மக்கள் அத்தனை பேர்களும் பூணூல் அணியுங்கள் என்றார். நாம் பிரமாணர்களின் தகுதிக்கு எந்த வகையிலும் குறைந்தவர்கள் அல்ல என்று புரியவைத்தார். இப்படி சொல்லியதோடு மட்டுமல்லாமல் நாடார்கள் ஒவ்வொருவரும் பிராமணர்களைப் போலவே தினந்தோறும் குளிக்க வேண்டும் என்று சொல்லியிருந்தார். கோவிலுக்கு அருகே குளியல் வசதியுடன் கூடிய நந்தவனம் உருவாக்கப்பட்டது. 

இத்துடன் ஆச்சரியப்படக்கூடிய சமாச்சாரம் தாங்கள் உருவாக்கிய அம்மன் ஆலயங்களில் பணிபுரிந்து கொண்டிருந்த நாடார் பூசாரியை நீக்கிவிட்டு சிவகாசி நாடார்களுக்கென்று பிராமணர் ஒருவரை திருச்சிக்கு அருகேயிருந்த கோவிலில் இருந்து வரவழைத்தார். 

1911 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுத்த அதிகாரியான மாலினி என்பவர் பின்வருமாறு கூறியுள்ளார்.

"நாடார்கள் மாட்டிறைச்சியை உணவாகக் கொள்ளாமையால் அவர்கள் ஷத்திரியர்கள் என் அழைக்கபடுகின்றனர்"


காரணம் 1860 ஆம் ஆண்டு தங்களை ஷத்திரியர்கள் என்று அழைக்க வேண்டும் என்றனர். 1891 கணக்கெடுப்பில் தங்களை ஷத்திரியர்கள் என்று பதிவு செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை வெறும் 24000 பேர்கள். ஆனால் இதுவே படிப்படியாக பல இன்னல்களைத் தாண்டி வந்து 1911 ஆம் ஆண்டு இராமநாதபுரம், திருநெல்வேலி, மதுரை போன்ற பகுதிகளில் வாழ்ந்த இந்த ஷத்திரியார்களின் எண்ணிக்கை 63 சதவிகிதமாக உயர்ந்து தாங்கள் விரும்பிய ஷத்திரியர் என்ற பெயரையே அரசாங்க குறிப்பேடுகளில் நிலைபெற வைத்தனர். இவர்களின் வாழ்க்கை பொருளாதார ரீதியாக முன்னேறி ஜனத் தொகையும் பலமடங்கு பெருகியிருந்தைப் போலவே தாங்கள் விருப்பப்டியே மாற்றிக் கொண்டதும் ஆச்சரியமே..

Tuesday, February 22, 2011

கோவில்கள் - முரண்பாடுகளின் தொடக்கம்

ஒரு சமூகம் அல்லது குறிப்பிட்ட இனத்தினர் முழுவதும் நல்ல நிலைமைக்கு உயர ஒற்றுமை முக்கியம் என்பதைப் போல அதை கடைசி வரைக்கும் கொண்டு செல்லப்பட வேண்டும். நாம் ஏற்கனவே நாடார்கள் படிப்படியாக தங்களை பொருளாதார ரீதியாக வளர்த்துக் கொண்டதை பார்த்ததைப் போலவே இதற்காக அவர்கள் உழைப்பிற்கு அப்பாற்பட்டு பல கொள்கைகள் மற்றும் உருப்படியான விசயங்களையும் கடைபிடித்து உள்ளனர் என்பதையும் இங்கே குறிப்பிட்டே ஆகவேண்டும்.

தாங்கள் வாழும் இடங்களில் அல்லது தொழில் செய்யும் இடங்களில் அந்தந்த உறவின்முறை உருவாக்கிய பேட்டைகள் மூலம் வசூலிக்கப்படும் நிதி தெளிவான முறையில் பாதுகாக்கப்பட்டது.  இது போக ஒவ்வொரு குடும்பமும் கொடுக்கும் நிதி ஆதாரம் எல்லாமே பொது நல நிதியாக மாறியது.  இந்த நிதி ஆதாரத்தை கவனிக்கும் குழுவில் ஒவ்வொரு குடும்பத்தின் தலைவரும் இருந்தனர். இதற்கு உறவின்முறை என்று பெயர். ஒவ்வொரு குடும்பத்திலும் மணமான குடும்பத்தலைவர்கள் இதில் இருந்தனர். இந்த குழுவில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் முறைகாரர் என்று பெயர். முக்கிய பொறுப்புகள் உள்ளவர்கள் வாரத்திற்கு ஒரு முறை மாறி மற்றவர்களுக்கு வழிவிட ஒவ்வொரு சுற்றிலும் ஒவ்வொருவரும் வந்தமர பிரச்சனைகள் உருவாகாமல் இந்த அமைப்பு முன்னேறத் தொடங்கியது 

இந்த இடத்தில் மற்றொரு ஆச்சரியம் என்னவென்றால் தொழில் ரீதியாக பொருளாதார ரீதியாக முன்னேறிக் கொண்டிருந்த நாடார் இன மக்களிடம் கல்வி அறிவு இல்லை. ஒவ்வொரு செயல்பாடுகளுமே அனுபவத்தின் அடிப்படையிலேயே உருவானது. இது போன்ற கணக்கு வழக்கு போன்ற சமாச்சாரங்களுக்கு நாடார் தவிர்த்து மற்ற இனமான வேளாளர் குலத்தில் உள்ளவர்களை கணக்கர்களாக தேர்ந்தெடுத்து மகமை தொகையை வசூலிக்க ஏற்பாடு செய்தனர். இது போன்ற சங்கங்களில் பெரும் செல்வந்தர்கள் பக்கபலமாக இருந்தனர். ஆனால் நடுத்தர வர்க்க வியாபார குடும்பத்தினர் முழு மூச்சில் செயல்பட்டனர். ஒவ்வொரு செயல்பாடுகளும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு மகமை செலுத்தாதவர்களுக்கு தண்டனை வழங்கப்படும் அளவிற்கு கெடுபிடியாக நடந்து கொண்டனர். 

ஒவ்வொரு கிராமத்தில் இவர்களால் உருவாக்கப்பட்டுள்ள கோவில்களை தாங்கள் கூடுமிடமாக பயன்படுத்திக் கொண்டனர்.  இந்த இடத்தில் இன்ன நேரத்தில் கூட்டம் கூட்டப்படுகின்றது என்பது அந்த ஊரில் உள்ள நாவிதர் மூலம் அழைப்பு அனுப்பப்படும். கலந்து கொள்ளாதவர்களுக்கு அபதாரத் தொகையும் உண்டு.

குடும்பம் மற்றும் பொதுவான அத்தனை பிரச்சனைகளும் இது போன்ற கூட்டத்தின் மூலமே தீர்க்கப்பட்டு வந்தது.  வெளி ஆட்களை இது போன்ற கூட்டத்திற்குள் அனுமதிக்கப்படுவதில்லை.பெண் சம்மந்தமான பிரச்சனைகளின் போது சம்மந்தப்பட்ட பெண்ணும் நிறுத்தப்படுவாள்.  இது போன்ற பிரச்சனைகளில் சம்மந்தப்பட்டவர்கள் மூன்று காவி நிற கோட்டின் மேல் நிறுத்தப்படுவார்கள்.  இது அவர்கள் உண்மையை மட்டுமே பேச வேண்டும் என்பதற்கான ஏற்பாடு. வாதம், பிரதிவாதம் என்று எத்தனை நடந்தாலும் இந்த சமூகத்தில் முக்கியமானவர்கள் சொல்லும் கருத்தின் அடிப்படையில் தான் இறுதி தீர்ப்பு வழங்கப்படும்.

கற்பழிப்பு போன்ற குற்றங்களுக்கு சம்மந்தப்பட்டவரை உறவின் முறையில் முன்னிலையில் நாவிதர் குற்றவாளியை செருப்பால் அடித்து தண்டனையை நிறைவேற்றுவார். களவு போன்ற குற்றங்களுக்கு குற்றவாளியை ஓடவிட்டு இருமருங்கிலும் உள்ள இளைஞர்கள் நின்று கொண்டு தொடர்ச்சியாக அடிப்பார்கள். கடைசியாக மண்ணில் சாஷ்டாங்கமாக விழுந்து தண்டத்தை கட்டி மன்னிப்பு கேட்க வேண்டும். குற்றவாளி அபராதத்தை கட்ட முடியாவிட்டால் அவர் வீட்டில் உள்ள பொருட்களை உறவின் முறை சென்று கைப்பற்றுவர்.  உறவின் முறை சங்க அமைப்பை எதிர்ப்பவர்களின் குடும்பத்தை மொத்தமாக ஊரை விட்டு ஒதுக்கி வைத்து விடுவார்கள். ஆனால் இந்த உறவின் முறை அமைப்பு திருநெல்வேலியில் ஒரு மாதிரியாகவும் சிவகாசியில் ஒரு மாதிரியாகவும் இருந்தது.  

தலைவர் பொறுப்பில் இருந்தவர்கள் சாகும் வரைகும் அந்த பொறுப்பில் இருந்தனர். தலைவர்களுக்கு சிறப்பான மரியாதை அளிக்கப்பட்டது.  குறிப்பாக கோவிலுக்குள் இவர்கள் நுழையும் போது தனது மேல் துண்டை இடுப்பில் எடுத்து கட்டிக் கொள்ளப்பட வேண்டும்.  19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தான் விருதுநகர் பகுதியில் ஜனத்தொகை காரணமாக ஆறு வெவ்வேறு உறவின்முறை அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. இது போன்ற அமைப்புகள் அந்தந்த பகுதியில் வியாபாரத்தை அடிப்படையாகக் கொண்டு தான் உருவாக்கப்பட்டது. பஞ்சு வியாபாரிகள், மளிகைக்கடை தாங்கள் செய்து கொண்டிருக்கும் வணிகம் பொறுத்து ஒவ்வொன்றுக்கும் பின்னாலும் வெவ்வேறு காரணங்கள் இருந்தது.. 


ஆனால் நாடார்களுக்குச் சம்மந்தமில்லாத மதுரையில் 1831 ஆம் ஆண்டு தங்களது வியாபார அபிவிருத்திக்காக கிழக்கு மாசி வீதியில் நிலம் வாங்கினர். இதுவும் விருதுநகர், அருப்புக்கோட்டை, பாலையம்பட்டி நாடார்கள் முன்னின்று செயல்பட்டனர். 1890 ஆம் ஆண்டு குறிப்பிட்ட சில நாடார்கள் தங்கள் இருப்பிடங்களை மதுரைக்கு மாற்றினர். 20 ஆண்டு தொடக்கத்தில் தான் மதுரைக்கு பலரும் நகர்ந்து வரத் தொடங்கினர்.  அதற்கும் ஒரு காரணம் உண்டு.  வெள்ளையர்கள் உருவாக்கிய ரயில் பாதைகள் முக்கிய காரணமாக இருந்தது.. மதுரையிலிருந்து விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடிக்கு ரயில் பாதைகள் மூலம் இணைப்பு உருவாக இரண்டு விளைவுகள் உருவாகத் தொடங்கியது. இராமநாதபுரத்தின் பல பகுதிகள் வியாபாரம் பாதிப்பாகத் தொடங்கியது.  வளர்ந்து கொண்டிருக்கும் விருதுநகர் வேகமாக முன்னேறத் தொடங்கியது. இதனால் மொத்தத்தில் சிவகாசி ரொம்பவே பாதிப்பானது. இதன் காரணமாக மதுரையில் குடியேறும் நாடார்களின் எண்ணிக்கை அதிகமாகத் தொடங்கியது.

1880க்கும் 1928 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் சிவகாசியும் ரயில் பாதை இணைப்பு மூலம் எளிதாக மதுரைக்கு குடியேறுபவர்களின் எண்ணிக்கைகள் இன்னமும் அதிகமாகத் தொடங்கியது. சிலர் தங்களது நிறுவனங்களின் கிளைகளை உருவாக்கி தங்களை ஸ்திரப்படுத்திக் கொண்டனர். எந்த இடத்திற்குச் சென்றாலும் தன் ஊரின் உறவுகளை விடாமல், மகமை, உறவின் முறை போன்ற அமைப்பை சிதைக்காமல் தங்களின் பொருளாதார வாழ்வோடு தங்களின் சமூகத்தையும் விட்டுக் கொடுக்காமல் முன்னேறத் தொடங்கினர்.

நாடார்களின் அடுத்த கட்ட வளர்ச்சியாக 1885 ஆம் ஆண்டு விருதுநகர் உறவின் முறையால் உருவாக்கப்பட்ட கூத்திரிய வித்தியாசாலை உயர்நிலை பள்ளியாகும். இது முழுக்க முழுக்க மகமை நிதியால் மட்டுமே உருவாக்கப்பட்டது.  முதல் முறையாக நாடார் சமூகத்தால் உருவாக்கப்பட்ட பள்ளிக்கூடமும் இது தான்.  இதனைத் தொடர்ந்து தான் 1889 ஆம் ஆண்டு கமுதியில், அதன் பிறகு அருப்புக்கோட்டையில் உருவானது. கல்வி அறிவு இல்லாமல் வளர்ந்தவர்களின் தலைமுறை கல்வி அறிவோடு வளர உருவான வளர்ச்சியைப் பற்றி சொல்லவும் வேண்டுமா?

ஆனால் இதுவரைக்கும் இவர்களின் அருமை பெருமைகளை பார்த்தது போல இவர்களின் சில வினோத செயல்பாடுகளையும் பார்த்துவிடலாம்.  பொருளாதார ரீதியாக வளர்ந்த பிறகு ஒவ்வொருவருக்கும் உருவாகும் கௌரவம் இவர்களுக்கு வந்து அதன் தொடர்பாக பல விசயங்களையும் செய்துள்ளார்கள்.  இவர்களின் அடிப்படை வாழ்க்கை முறை பனை மரங்களை அடிப்படையாகக் கொண்டு தான் இருந்தது.  ஆனால் காலம் செல்லச் செல்ல தங்களை பனையேறிகள், சாணார்கள் என்று மற்றவர்கள் அழைப்பதை கௌரவக்குறைவாக கருதினர்.  குறிப்பாக தங்களை ஷத்திரியர்கள் என்று அழைக்க வேண்டும் என்றனர்.  பனை ஏறுபவர் என்பதும், தங்களின் முன்னோர்கள் கருவாடு விற்று வளர்ந்தவர் என்பதையும் மிகப் பெரிய அவமரியாதையாக கருதினர்.  நாடார் என்ற பட்டப் பெயருடன் தான் அழைக்க வேண்டும் என்று சொல்ல ஆரம்பித்தனர். 


இதுவே பல பிரச்சனைகளுக்கு காரணமாக இருந்தது. இவர்கள் தங்களை தாங்களே உயர்ந்தவர்களாக கருதிக் கொண்டாலும் சமூகத்தில் மற்ற இனத்தினர் தங்களுக்கு கொடுக்க வேண்டிய மரியாதையைக் கூட அத்தனை சுலபமாக பெறமுடியவில்லை. 1872 ஆம் ஆண்டு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் நுழைந்த குற்றத்திற்காக ஏழு நாடார்கள் மீது பார்ப்பனர்களும், வேளாளர்களும் சேர்ந்து வழக்கொன்று தொடுத்தனர். இந்த ஏழு நாடார்களும் இறுதியில் குத்திக் கொல்லப்பட்டனர். மிகப் பெரிய கலவரம் உருவாகி ஊரட்ங்கு உத்திரவு வரைக்கும் அமலில் இருந்தது.

இது குறித்து (?)) தனியாக பார்க்கலாம்.

இவ்வாறு போராடியவர்கள் தான் தான் இன்று நிலைபெற்று சகலதுறையிலும் காலூன்றி வெற்றிக் கொடி நாட்டியுள்ளனர்.

Sunday, February 20, 2011

உழைப்புடன் கொஞ்சமல்ல நிறைய ஒற்றுமை

ஆங்கிலேயர்களுக்கு ஒரு சிறப்பம்சம் உண்டு. எந்த திட்டமானாலும் அவர்களுக்கு என்ன லாபம் என்பதைவிட அது நீண்ட காலதிட்டத்திற்கு பயன் உள்ளதாக இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருப்பர். காரணம் நம் இந்தியாவைப் போலவே பக்கத்தில் உள்ள ஈழத்திற்குள் நுழைந்த ஆங்கிலேயர்கள் வெறுமனே ஆட்சி அதிகாரம் என்பதில் மட்டும் கவனம் செலுத்தவில்லை. அங்கு ஏற்கனவே இருந்த டச்சு போர்த்துகீசியர்களைப் போல இல்லாமல் தொடக்கம் முதலே நீண்ட கால முன்னேற்பாடுகளில் கவனம் செலுத்தி காய் நகர்த்தினார்கள். ஆங்கிலேயர்கள் ஒவ்வொரு நாட்டுக்குள்ளும் வந்தார்கள் வென்றார்கள் இதைப் போலவே நீண்ட காலம் நிலைத்தும் நின்றார்கள்,  ஆங்கிலேயர்கள் இதன் அடிப்படையில் ஈழத்தில் உருவாக்கியதுதான் காபி மற்றும் தேயிலைத் தோட்டங்கள். இதைப் போலவே  தென் மாவட்டத்திற்குள் காலடி வைத்த போது பல அடிப்படை விசயங்களில் தான் முதன் முதலில் கவனம் செலுத்தினர்.

ஆங்கிலேயர்கள் உள்ளே நுழைந்த போது தென்மாவட்டங்களில் பல பகுதிகளின் சாலை வசதிகள் அந்த அளவிற்கு மோசமாக இருந்தது என்பதை விட அப்படி ஒரு வசதி உண்டா என்று தேடிப்பார்க்கும் நிலையில் தான் இருந்தது. . அதில் தான் முதலில் கவனம் செலுத்தினர். இது தான் இன்று நாம் காண்கின்ற நாடார்களின் தொழில் வாழ்க்கைக்கு தொடக்கத்தில் நலல ஆதார வசதிகள் உருவாக காரணமாக இருந்தது. இதே இந்த தென்மாவட்டங்களில் எல்லா இனங்களும் தான் இருந்தார்கள். ஆனால் மற்றவர்களை விட இவர்களுக்கு மட்டும் ஏன் இத்தனை சிறப்பம்சம்.  பின்னால் பார்க்கப்போகும் செட்டியார்கள் முடிந்தவரைக்கும் சிங்கப்பூர், மலேசியா, பர்மா போன்ற நாடுகளில் வட்டித் தொழிலில் கவனம் செய்து அங்கங்கே பொருளீட்டத் தொடங்கினர். ஆனால் நாடார் இனத்தை பொறுத்தவரையிலும் உள்ளூரிலேயே வெற்றிக் கொடி நாட்டினர். இன்று நாடார்கள் பொருளாதார ரீதியாக மிகப் பெரிய இடத்தை பெற்றுள்ளார்கள் என்று நாம் எளிதாக சொல்லிவிட்டு நகர்ந்து விடலாம்.  ஆனால் இவர்களின் உழைப்பு எங்கிருந்து எப்படி தொடங்கியது?


19 ஆம் நூற்றாண்டுகளில் திருநெல்வேலியின் கிழக்கு பகுதியில் வாழ்ந்த நாடார்கள் அனைவருமே பனைப் பொருட்கள் மூலமே தங்கள் வாழ்க்கையை படிப்படியாக வளமாக்கிக் கொண்டனர். கருப்பட்டி என்று சொல்லப்படுகின்ற கருப்பு கட்டிகளை சேகரித்து தங்களுடைய மாட்டு வண்டி மூலம் தங்கள் வணிகத்தை வளர்த்தனர்.  ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்க நகர நகர பல பொருளாதார வாய்ப்புகளும், தொழில் ரீதியான சிந்தனைகளில் பல மாறுதல்களும் உருவானது. தொழில் ரீதியான பல வாய்ப்புகள் உருவாகத் தொடங்கியது. இத்துடன் கருவாடு, உப்பு போன்றவற்றையும் சந்தைகளுக்கு கொண்டு சென்று விற்கத் தொடங்கினர்.  

ஆனால் இவர்களின் இந்த உழைப்புக்குண்டான பலன்கள் கூட அத்தனை எளிதாக கிடைத்துவிடவில்லை.  பெரும்பாலும் தாமிரபரணி ஆற்றின் வட பகுதியிலேயே இந்த வியாபார பரிவர்த்தனைகள் நடந்து கொண்டிருந்தது.  காரணம் படு மோசமான சாலைவசதிகள், அடிக்கடி சண்டை நடந்து கொண்டிருக்கும் பாளையக்காரர்கள் என்பதோடு கள்வர் பயம் படாய்படுத்திக் கொண்டிருந்தது.. ஒவ்வொரு பாளையக்காரர்களும் தங்கள் பகுதிகளுக்குள் வரும் வண்டிகளுக்கு அவரவர் உருவாக்கி வைத்திருக்கும் வரிகளை கட்டி விட்டுத்தான் நகர வேண்டும்.  இதன் காரணமாகவே உள்நாட்டு வர்த்தகம் முடங்க ஆரம்பித்தது. ஆனால் இந்த பிரச்சனைகள் அத்தனையையும் முடிவுக்கு கொண்டு வந்தவர்கள் ஆங்கிலேயர்கள்.  வரி விதிப்புகளை தடை செய்தனர். சாலை வசதிகளை மேம்படுத்தினர். 

ஒவ்வொரு பகுதியிலும் உள்ள நாடார்கள் தாங்கள் செல்லும் இடங்களில் காணும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொண்டனர்.  திருநெல்வேலியிலிருந்து நகர்ந்து அம்பாசமுத்திரம், தென்காசி என்று மெதுமெதுவாக பரவி தங்கள் ஆதிக்கத்தை உருவாக்க ஆரம்பித்தனர்.ஒவ்வொருவரும் பயன்படுத்தும் மாட்டு வண்டிகளின் எண்ணிக்கைகள் அதிகமானது. வாய்ப்புகளை தேடிப் போக ஆரம்பித்தனர். வெறும் பனைபொருட்கள் மட்டுமல்லாது திருச்செந்தூர் பகுதியில் வாழ்ந்து கொண்டிருந்த இஸ்லாமியர்கள் தயாரிக்கும் ஆடைவகைகள், இதற்கு மேலும் பருத்தி விதை, புகையிலை என்று ஒவ்வொன்றாக சேர்த்துக் கொண்டு தங்கள் வியாபாரங்களை பெரிதாக்கத் தொடங்கினர். 

பேட்டை என்றொரு வார்த்தை ஒவ்வொரு சிறிய நகர்புறங்கங்களிலும் உண்டு. கிராமப்பகுதியில் வாழ்ந்து வந்தவர்களுக்கு இது குறித்து நன்றாகவேநன்றாக்த் தெரியும்.  இந்த பேட்டைகளை இந்த நாடார் இன மக்கள் தங்கள் தொழில் ரீதியாக செல்லும் நகரங்களில் அங்கங்கே உருவாக்கியதற்கு வேறொரு முக்கிய காரணம் உண்டு. பின்னால் நாம் பார்க்கப்போகும் முக்குலத்தோரில் ஒரு பிரிவில் உள்ள மறவர்கள் அதிகம் வாழ்ந்து கொண்டிருந்த பகுதியில் எவரும் எங்கும் எளிதில் தொழில் செய்துவிடமுடியாது. வண்டி சென்றால் வண்டி மட்டும் தான் இருக்கும். சில சமயம் அதுவும் அவர்கள் கைவசம் போய்விடும். வண்டியில் உள்ள பொருட்களும் காணாமல் போய்விடும். அவர்களை எதிர்க்கவும் முடியாது.  இதன் காரணமாக அந்தந்த இடங்களில் நாடார்கள் பேட்டைகளை அமைத்தனர்.

தங்கள் மாட்டு வண்டிகளை பாதுகாப்பாக நிறுத்த ஒரு இடம் வேண்டும். இதே இடத்தில் தாங்கள் கொண்டு வரும் பொருட்களையும் விற்க இதனைச் சுற்றி அரண் போல் பல கடைகளையும் உருவாக்க புத்தியால் ஜெயிக்கத் தொடங்கினர். இது போல உருவாக்கப்பட்ட பேட்டைகள் தான் திருநெல்வேலி தொடங்கி தென்காசி என்று இறுதியில் இராமநாதபுரம் மாவட்டம் வரைக்கும் பரவலாக உருவாகத் தொடங்கியது. இப்படித் தொடங்கியது தான் நாடார் இன மக்களின் ஆறு நகரங்கள் என்றழைக்கப்படும் சிவகாசி, விருதுநகர், (இது தான் தொடக்கத்தில் விருதுப்பட்டி என்று அழைக்கப்பட்டது) திருமங்கலம், சாத்தங்குடி, பாலைய்ம்பட்டி, அருப்புக்கோட்டை ஆகிய நகரங்களை அடிப்படையாக் கொண்டு குடியேறினர்.

இதன் தொடர்ச்சியாக கமுதியைச் சுற்றியுள்ள சிறு நகர்புறங்களிலும் நாடார்கள் குடியேறத் தொடங்கினர். 19 ஆம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்திலேயே தங்களை பொருளாதார ரீதியாக முன்னேற்ற சமூகமாக மாற்றத் தொடங்கினர். வர்த்தகர்களாக, வட்டிக்கு கடன் கொடுப்பவர்களாக, தரகர்களாக என்று மேலே சொன்ன ஆறு நகரங்களிலும் சொத்து சேர்த்து தனிப் பெரும்பான்மையாக மாறத் தொடங்கினர். 1821 ஆம் ஆண்டு நாடார்கள் ஆதிக்கம் செலுத்தும் ஒரு நகராக சிவகாசி மாறத் தொடங்கியது.

வியாபாரத்தில் இரண்டு விசயங்கள் முக்கியமானது.  சந்தைப்படுத்துதல், லாபம்.  இதனைத் தொடர்ந்து அப்போது நிலவும் சூழ்நிலையில் தாக்குப் பிடித்து முன்னேற வேண்டும்.

கடைசியாக ஒவ்வொரு காலகட்டத்திலும் தொழில் விரிவாக்கம். சொல்லிவைத்தாற் போல நாடார்களுக்கு இது எல்லாமே சாதகமாக இருந்தது.  உள்ளூர் சந்தைகளை குறிவைத்து செயல்பட்டுக் கொண்டிருந்தவர்கள் அருகில் உள்ள திருவாங்கூர் மாநிலத்தில் தங்களின் புகையிலைப் பொருட்களை அனுப்ப ஏராளமான மாட்டு வண்டிகளை வைத்திருந்தனர். ஏறக்குறைய இந்த காலகட்டத்தில் 2000 மாட்டு வண்டிகள் இந்த வணிகத்திற்காகவே செயல்பட்டுக் கொண்டுருந்தன.ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை கூடும் சந்தையில் பருத்தி, நூல், நெல், கருப்புகட்டி, கருவாடு, மூங்கில் கூடைகள், நெய்,மீன்வலைகள், பழவகைகள் போன்ற ஏராளமான பொருட்கள் இதைத்தவிர பண்டமாற்று முறையில் மண்பானைகள் போன்றவைகளும் வியாபார பரிவர்த்தனைகளில் இருந்தது.

19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நாடார்களின் ஆறு நகரங்களில் பொருளாதார பலமிக்கவர்களாக வாழ்ந்து கொண்டிருந்தாலும் மறவர்கள் அதிகமாக வாழ்ந்து கொண்டிருந்த இராமநாதபுர மாவட்டத்தில் நாடார்களை எதிரிகளாக பார்க்கப்படும் சூழ்நிலையில் ஏராளமான பிரச்சனைகள் உருவாகத்தொடங்கியது.  கிறிஸ்துவர்களாக மாறிய நாடார்கள் தாங்கள் உருவாக்கிய சங்கங்கள் மூலம் ஒரே அணியில் நின்றனர்.  பொருள் சேர்க்கும் ஆர்வத்தில் வேகமாக முன்னேறிக் கொண்டுருந்தார்களே தவிர தங்களின் ஒற்றுமை இல்லாத காரணத்தால் உருவாகிக் கொண்டிருக்கும் பிரச்சனைகளை நீக்க வேண்டும் என்பதில் முனைப்பாக செயல்பட உருவானது  நாடார்களின் சங்கங்கள். நாடார்கள் பெரும்பான்மையாக வாழ்ந்து கொண்டிருந்த ஆறு நகரங்களை அடிப்படையாகக் கொண்டு சங்கங்களை உருவாக்கத் தொடங்கினர். தமது இன மக்களின் சமூக நலன்களை கருத்தில் கொண்டு அரசாங்க அதிகாரிகளோடு நல்ல புரிந்துணர்வை உருவாக்கி வளர்க்க அதுவே இவர்களின் பல புதிய செயல்பாடுகளை உருவாக்க காரணமாக இருந்தது..  மகமை என்று ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் வசூலிக்கப்படும் வரி மற்றும் உறவின் முறைகளும் பல திட்டங்கள் உருவாக  ஒவ்வொன்றும் இவர்களின் பொருளாதார வாழ்க்கையை மேன்மேலும் பலமுள்ளதாக மாற்றத் தொடங்கியது. .


தாங்கள் உருவாக்கிய பேட்டைகள் மூலம் வசூலிக்கப்படும் மகமைத் தொகை மூலம் புதிய பேட்டைகள் அமைத்தனர்.   ஒவ்வொரு வியாபாரியும் தங்களது வருமானத்தில் ஒரு பகுதியை அளிக்க பொதுநல நிதி உருவானது. நாடார்கள் கருவூலநிதியில் சேர்க்கப்பட்டு பல விசயங்களுக்கு உதவத் தொடங்க இவர்களின் முன்னேற்றம் முன்பை விட பலமடங்கு வேகமாகத் தொடங்கியது. இதுவே தமிழ்நாட்டிலும் திருவிதாங்கூரிலும் சேர்ந்து 96 நகரங்கள் கிராமங்களை உள்ளடக்கி சிவகாசி நாடார் குல மக்கள் பேட்டைகளை அமைத்தனர். இவர்களின் உறவின் முறை அமைப்பு 20 ஆம் நூற்றாண்டில் வலிமையானதாக மாறினாலும் இதன் அடித்தளம் 19 ஆம் நூற்றாண்டில் முடிவில் ஆழ அகலமாய் வலுவாய் இருந்தது என்பது இவர்களின் உழைப்பின் ஆதாரமே.

Friday, February 18, 2011

களம் இறங்கினால் கணக்குகள் மாற்றப்படும்

இந்த தோள் சீலை போராட்டமென்பது வெறுமனே நாடார் இன மக்களின் அடிப்படை வாழ்வியல் உரிமைக்கான முன்னேற்பாடுகளாக மட்டும் தெரியவில்லை.  இதன் மூலம் கண்களுக்கு தெரியாத பல வலைபின்னல்கள் உண்டு.  ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஒரு உரிமையைக்கூட அனுமதிக்கக்கூடாது என்பதில் ஆதிக்க சாதியினர் எத்தனை கவனமாக இருந்தார்களோ அதே அளவிற்கு நாங்களும் சரிசமம் என்று தான் போராடத் தயாராய் இருந்த நாடார் இன மக்களை இங்கே நினைவு கூர்ந்தே ஆக வேண்டும்.

உரிமையை நிலைநாட்டுதல் என்பது வெறும் எழுத்து பேச்சு என்பதோடு மட்டும் இருந்து விட்டால் அதற்குப் பெயர் வாய்ச்சொல்லில் வீரரடி. .  இந்த இடத்தில் வேறொன்றையும் நாம் பார்க்கலாம். இந்த காலகட்டத்தில் வாழ்ந்த பெரும்பான்மையான நாடார் இன மக்களுக்கு முறைப்படியான கல்வியறிவு கூட இல்லை.  ஆனால் 'கலகம் பிறந்தால் தான் நியாயம் பிறக்கும்' என்பதில் உறுதியாக இருந்தனர். பின்னால் நாம் பார்க்கப் போகும் இந்த மக்களின் சமூக வாழ்க்கை என்பது பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். எவர் ஒருவருக்கு பொருள் சேர்க்க வேண்டும் என்றும் அதற்காக நாம் முறைப்படியான உழைப்பை கொடுத்தே ஆக வேண்டும் என்று தோன்றுகிறதோ அவரின் ஜாதி என்பது இரண்டாம் பட்சமாகத் தான் ஆகிவிடுகின்றது என்பதை இவர்களின் வரலாற்று காலடித் தடங்கள் நமக்கு உணர வைக்கின்றது. 


இன்று வரைக்கும் நாயர், நம்பூதிரிகளின் ஆச்சாரங்கள் அனைவரும் அறிந்ததே. இப்போது உள்ள கேரளா மாநிலங்களில் அதிகப்படியாக வாழ்ந்து கொண்டிருக்கும் இவர்களின் வாழ்க்கையில் இன்று வரையிலும் கடைபிடிக்கும் தனிப்பட்ட கொள்கைகள் வித்யாசமானது.  இவர்களின் ஆதிக்கம் நிறைந்த பழைய திருவிதாங்கூர் பகுதியில் வாழ்ந்த நாடார்களின் வாழ்க்கை என்பது மிக அவலமாகத்தான் இருந்துள்ளது. ஆனால் இந்த அவல வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வர முக்கிய காரணமாக இருந்தது இந்த பகுதியில் ஊடுருவிய கிறிஸ்துவமே. மதமாற்றம் என்று எளிதாக சொல்லிவிட்டு நகர்ந்தாலும் இதுவே நாடார்களின் சமூக வாழ்வில் உருவாக்கிய மாற்றங்கள் எண்ணிலடங்காதது. அடிமைப்புத்தியும், முரட்டு சுபாவமும் கொண்ட நாடார் இன மக்களை அத்தனை எளிதாக மாற்றுவதும் அத்தனை சுலபமாய் இல்லை என்பதும் உண்மை தான். தாங்கள் வாழ்ந்து வந்த மூதாதையர்களின் வாழ்க்கையை விட்டு விட்டு வெளியே வர மனம் ஓப்பாமல் ஒவ்வொருவரும் தாங்கள் போட்டுக் கொண்ட கோட்டுக்குள் தான் வாழ்ந்து கொண்டிருந்தார்கள்.

கிறிஸ்துவம் உருவாக்கிய மாற்றத்தின் முக்கிய காரணிகளில் முதன்மையான விசயம் ஒன்று உண்டு.  ஒருவன் எந்த குலத்தில் பிறந்து இருந்தாலும் அவனின் மன ரீதியான அழுக்குகளை, தங்களது தாழ்வு மனப்பான்மையை விட்டு வெளியே வர தூண்டுதல்.  இதற்காகத்தான் தொடக்கம் முதல் பாடுபட்டனர்.  காரணம் மற்ற தாழ்த்தப்பட்ட மக்களைப் போலவே நாடார் இன மக்களை மேலாடை அணிவதற்க்கு திட்டவட்டமாக மறுப்பு தெரிவிக்கப்பட்டது. இந்த விசயத்தில் இப்போதுள்ள உள் ஒதுக்கீடு போலவே அப்போது வேறொரு வகையில் புதிய தத்துவத்தை உருவாக்கினார்கள். நாடார்களுக்கென்று பருமனான இழை கொண்ட தனித் துண்டொன்று ஒதுக்கப்பட்டு இருந்தது.   நாடார் சமூகத்தைச் சேர்ந்த ஆண்களும் பெண்களும் அம்மாதிரியான துண்டுகளை முழங்காலுக்குக் கீழ் வராதபடியும், இடுப்புக்கு மேலே போகாமலும் அணிய வேண்டும் என்று நிர்ப்பந்திக்கப்பட்டனர்.  

இது போன்ற சமயங்களில் கிறிஸ்துவம் உருவாக்கிய மாறற்ங்களினால் ஒன்றன் பின் ஒன்றாக மாறத் தொடங்கினர்.   மதம் மாறிய நாடார்களுக்கு கிறிஸ்துவ ஆலயங்கள் மூலம் பல விசயங்கள் கற்றுக் கொடுக்கப்பட்டன.  வெளி இடங்களில் ஒரு மனிதன் எப்படி தன்னை காட்டிக் கொள்ள வேண்டும் என்ற பாடங்கள் உருவாக்கிய புரிந்துணர்வு ஆதிக்க சாதியினரின் பார்வையில் தீயாய் கொழுந்து விட்டு எறிய ஆரம்பித்தது.. கிறிஸ்துவ பள்ளிக்கூடங்கள் மூலம் கல்வி அறிவு பெற்றவர்கள் வெளி இடங்களில் தங்களை சிறப்பாக வெளிப்படுத்த தலைப்பட பல மக்களின் அடிப்படை வாழ்க்கையில் மாறுதல்கள் உருவாக பிரச்சனைகளும் ஒன்றன் பின் வரத் தொடங்கியது.

உலகில் வாழும் மற்ற கிறிஸ்துவ மக்களைப் போல இங்குள்ள கிறிஸ்துவ பெண்களும் தங்கள் மார்பகங்களை ஆடைகளால் மறைத்துக் கொள்ளலாம் என்ற சட்டம் 1812 ஆம் ஆண்டு திருவிதாங்கூரில் வாழ்ந்து வந்த கர்னல் மன்றோ வழங்கினார். இதற்கான சுற்றறிக்கை 1814 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.  ஆனால் இந்த சட்டத்தை அத்தனை சுலபமாக நிறைவேற்ற முடியவில்லை.  இதற்கும் மாற்று ஏற்பாடுகளை கிறிஸ்துவ மதகுருமார்களின் மனைவியர் செய்தனர்.  இப்போது தான் தொள தொள ரவிக்கை அறிமுகமானது. இந்த மாற்றங்கள் நாயர்களின் ஒட்டு மொத்த கிளர்ச்சியை உருவாக்க 1822 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு தனிப்பட்டவர்களின் வாழ்விலும் ஏராளமான துன்பங்களை கொண்டு வந்து சேர்த்தது.  சாலையில் செல்லும் போது, சந்தையில், மற்ற பொது இடங்களில் கூடும் போது குறிப்பாக மதம் மாறிய கிறிஸ்துவ பெண்மணிகளை நோக்கி கிண்டலும் கேலியுமாக தொடங்கிய கிளர்ச்சி பெண்மணிகளில் ரவிக்கையை கிழித்து எறியும் வரையும் தொடர்ந்தது. 1823 ஆம் ஆண்டு பத்பநாபபுரத்தில் புறச்சமயத்தைச் சார்ந்த நாடார்கள் என்ற பெயரின் மீது கள்ளுக்கான வரிப்பாக்கி செலுத்தாதயும் நாடார் பெண்மணிகள் மேலாடைகள் அணிந்ததற்குரிய வரி செலுத்தாதையும் எதிர்த்துப் புகார்கள் செய்யப்பட்டன.

1828 ஆம் ஆண்டு கிறிஸ்துவ மதத்திற்கு மாறியவர்கள் மேல் முறைப்படியான வன்முறைகள் உருவாகத் தொடங்கியது. கிறிஸ்துவ ஆலயங்கள் அடித்து நொறுக்கப்பட்டன.  உருவாகியிருந்த கல்வி கூடங்களை தீயிடத் தொடங்கினர். பள்ளிகளின் உள்ளே நுழைந்து புத்தகங்களை கிழித்து எறிந்தனர். மார்புச் சேலை அணிந்து வந்தவர்களை குறி வைத்து தாக்கத் தொடங்கினர். பொதுவிடங்களில் பெண்கள் அவமானப்படுத்தப்பட்டனர். அச்சுறுத்தல்களும் அவமானங்களும் ஒவ்வொருவரின் தனிப்பட்ட வாழ்க்கையின் அன்றாட நிகழ்ச்சியாக மாறத் தொடங்கியது.  இந்த இடத்தில் மற்றொரு விசயத்தையும் பார்க்க வேண்டும்.  இது வெறுமனே மார்ப்புச் சேலை அணிவது சம்மந்தப்பட்ட விசயங்கள் மட்டுமல்ல.  இதற்குப் பின்னால் பொருளாதார விசயங்களும் உண்டு.  இது தான் இந்த கலவரத்தை உருவாக்க தொடர்ச்சியாக நடத்திச் செல்லவும் காரணமாக இருந்தது.  கிறிஸ்துவம் உருவாக்கிய மாற்றத்தினால் ஒவ்வொருவரும் கேள்வி கேட்க ஆரம்பித்தனர். உரிமைகளைப் பற்றி பேச் தொடங்கினர். சம்பளமின்றி வேலை செய்ய மறுத்தனர். வரி கட்ட மாட்டோம் என்றனர். கிறிஸ்துவம் துணை கொண்டு தங்களின் சமூக மதிப்புகளை உயர்த்திக் கொள்கின்றனர் என்ற ஆதிக்க சாதியினரின் கோபமே இது போன்ற அச்சுறுத்தல்கள் உருவாக காரணமாக இருந்தது.

1829 ஆம் ஆண்டு பிப்ரவரி 3 அன்று திருவிதாங்கூர் அரசாங்கம் ஒரு அறிக்கையை வெளியிட்டது.

நாடார்களுக்கும் நாயர்களுக்கும் சில குழப்பங்கள் உருவாகியுள்ளது.  நாடார் பெண்மணிகள் சட்டத்திற்குப் புறம்பாகவும் பழங்கால பழக்க வழக்கங்களுக்கு மாறாகவும் மேலாடை அணிந்ததாலும் நாடார்கள் ஏனைய நபர்களைப் போன்று பொதுவாக அரசாங்கத்திற்குத் தேவையான தொண்டு செய்ய மறுத்ததாலும் உருவாகியது. 

எனவே கீழ்க்கண்ட பேரறிக்கையை வெளியிடுகின்றோம்.

முதலாவதாக நாடார் பெண்மணிகள் மேலாடை அணிவது நியாயமற்றதாகும். இது தடை செய்யப்படுகின்றது. வருங்காலத்தில் மேற் குறிப்பிட்டப்படி நாடார் பெண்மணிகள் இடுப்பின் மேல் பகுதியை மேல் துண்டால் மறைப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

ஏற்கனவே 1814 ஆம் ஆண்டு நாடார்களின் உரிமைகள் என்று வெளிவந்த அறிக்கைக்கும் இப்போது வந்துள்ள முரணனான அறிக்கைக்கும் உள்ள வேறுபாடுகளைப் பார்த்த நாடார்கள் ஒன்று சேரத் தொடங்கினர். இதில் மற்றொரு தில்லாலங்கடி வேலையும் உண்டு.  கிறிஸ்துவ மத மாற்றத்தில் உள்ளவர்களும் தாங்கள் ஏற்கனவே இருந்த குல வழக்கப்படிதான் செயல்பட வேண்டும் என்று அந்த அறிக்கை எச்சரித்திருந்தது.

இந்த வர்க்கப்பேத வர்ணாசிரம பாகுபாடுகளால் உருவான கோபங்கள் கலவரமாக மாறத் தொடங்கியது.  தொடங்கியதும் நாடார்கள் அல்ல. 1859 ஆம் ஆண்டு கிராம சந்தையொன்றில் நின்று கொண்டுருந்த சிறிய நிலையில் உள்ள  அதிகாரி அங்கே வந்து போய்க் கொண்டிருந்த நாடார் பெண்மணிகளை குறிவைத்து அவர்கள் அணிந்திருந்த மேலாடைகளை அரசாங்கம் கிழிக்கச் சொல்லி உத்திரவு இட்டுள்ளது என்று கருமமே கண்ணாக செயலில் காட்டத்  தொடங்கினார். இது இருபது நாட்கள் தொடர்ச்சியாக கலவரக் காடாக மாற்ற உதவியது. மற்ற மாவட்டங்களுக்கும் பரவத் தொடங்கியது. 1858 ஆம் ஆண்டு நாகர்கோவில் அருகே உள்ள கிறிஸ்துவ ஆலயங்களை தீயிட கொளுந்து விட்டு பரவ ஆரம்பித்தது.  ஒன்பது கிறிஸ்துவ ஆலயங்களும், மூன்று பள்ளிகளும் முழுமையாக அழிக்கப்பட்டது. 1858 ஆம் ஆண்டு இராணுவம் வரவழைக்கப்பட்டது. இந்த போராட்டங்களின் விளைவால் கீழ்க்கண்ட அறிக்கை 1859 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 26ந் தேதி வெளிவந்தது.

மாட்சிமை தாங்கிய மன்னரின் கோரிக்கையை ஆங்கிலேய அரசாங்கம் ஏற்றுக் கொண்டது.  நாங்கள் இதனால் தெரிவிப்பது என்னவென்றால் கிறிஸ்துவ நாடார் பெண்மணிகளைப் போன்று ரவிக்கை அணிந்து கொள்வதில் அல்லது அனைத்து மதங்களையும் சார்ந்த நாடார் பெண்மணிகளைப் போன்ற பருமையான இழைய கொண்ட ஆடைகளை நாடார் பெண்மணிகள் இணிந்து கொள்வதில் எவ்வித ஆட்சேபணையும் இல்லை.  மேலும் அப் பெண்மணிகள் முக்குவச்சிகளைப் (கீழ் சாதி மீனவப் பெண்கள்) போன்று அல்லது வேறெந்த மாதிரியிலும் தங்கள் மார்பை மூடிக் கொள்ளுவதிலும் எவ்வித ஆட்சேபனையும் இல்லை.   ஆனால் உயர் சாதி பெண்களைப் போன்று மட்டும் ஆடைகள் அணியக் கூடாது.

இதிலிருந்து கிடைத்த படிப்படியான வெற்றி தான் நாம் இன்று கண்டு கொண்டிருக்கும் நாடார் இன மக்களின் பல சமூக மாறுதல்கள்.   மானத்திற்கு மறைக்க வேண்டிய ரவிக்கை இன்று தான் விகாரமாக மாறி சகல இனத்திலும் வேறு விதமாக மாறி வந்து நிற்கிறது.  நிலைப்படி, கதவு, ஜன்னல் மற்றும் முக்கால் நிர்வாண ரவிக்கைகள் வரை பெண்களின் சுதந்திரம் இன்றைய சூழ்நிலையில் கொடிகட்டி பறக்கிறது,

மற்றொன்றையும் இப்போது பேசியாக வேண்டும். சமூகத்தில் நாம் காணும் மதமாற்றம் என்பது ஒரு வகையில் வினோதமான மாறுபாடே ஆகும். முதல் நாள் இரவு வரைக்கும் தான் வணங்கிக் கொண்டிருக்கும் சாமி படங்களை தூக்கி எறிந்து விட்டு மறுநாள் காலையில் எல்லாமே ஏசு தான் என்று சொல்ல வைக்கும் ஆச்சரய நிகழ்வு. ஆனால் இப்போது படித்துக் கொண்டிருக்கும் கிறிஸ்துவ குருமார்களின் சேவையையும் தற்போது நடந்து கொண்டிருக்கும் மதமாற்றங்களையும் உங்கள் கணக்கில் கொண்டு வந்து விடாதீர்கள். தொடக்கத்தில் உருவான ஒவ்வொரு மதமாற்றத்திற்கும் பின்னாலும் ஒரு இனத்தின் நல்வாழ்வு ஏதோவொரு வகையில் பூர்த்தி செய்யப்பட்டது. குறிப்பிட்ட இன மக்களின் சமூக அந்தஸ்த்தை பொருளாதார வாழ்க்கையை உயர்த்த உதவியது. ஆனால் இப்போது நடந்து கொண்டிருக்கும் மதமாற்றம் என்பது தனிநபர்களின் ஆதாயத்திற்காக, வெளிநாட்டு நிதிகளுக்காக என்ற நோக்கத்தில் மேன்மேலும் இந்த ஒடுக்கப்பட்ட மக்களின் அவலவாழ்க்கையை பந்தயக்குதிரை போலவே மாற்ற உதவிக் கொண்டிருக்கிறது.  

காரணம் தொடக்க கால ஈழ வரலாற்றில் யாழ்பாணத்தில் வாழ்ந்து கொண்டிருந்த தமிழர்களை இந்த மதமாற்றம் எந்த அளவிற்கு சமூகத்தில் உயர்த்தி வைத்திருந்தது என்பதை ஈழவரலாற்றை முழுமையாக படித்தவர்களுக்கு புரிந்த ஒன்றாகும். இரண்டு தலைமுறை முடிவதற்குள் 80 சதவிகித மக்கள் இலங்கை அரசாங்கத்தின் முக்கிய பதவிகள் அத்தனையிலும் அமர்ந்திருந்தனர். ஏறக்குறைய அங்கு நிலவிய முன்னேற்றங்களைப் போலவே இந்த நாடார் இன மக்களின் வாழ்க்கையிலும் இந்த கிறிஸ்துவம் பல மாறுதல்களை உருவாக்கியது.  கிறிஸ்தவ மதகுருமார்கள் மதமாற்றத்தில் ஈடுபட்ட அளவிற்கு நாடார் இன மக்களின் சமூக வளர்ச்சியிலும் அதிக அக்கறை காட்டியுள்ளனர்.  மற்ற இந்துக்களுடன் கூடிய தொடர்பினை வளர்த்த காரணமாகவும், அவரவர் வியாபாரங்களுக்கு உதவக் கூடிய வகையில் உருவாக்கிய பல நல்ல திட்டங்களினாலும் ஒவ்வொரு கிறிஸ்துவ சபைக்குட்ட பல்வேறு கிராமங்கள் ஒன்றிணைக்கப்பட்டது.  இது போன்ற பல கிறிஸ்துவ சபையின் காரணமாக பல் வேறு இடங்களில் பரவியிருந்த நாடார்கள் ஒன்று சேர்க்கப்பட்டனர். ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் கூட்டங்கள் வழியாக பல புதிய மக்கள் கிறிஸ்துவத்திற்கு மாறத் தொடங்கினர். பல குடும்பங்களின் குழந்தைகள் கிறிஸ்துவ பள்ளிக்கூடங்களில் படிக்கத் தொடங்க அதுவும் மதமாற்றத்திற்கு பல்வேறு வகையில் உதவத் தொடங்கியது.

மேலாடை அணிவது குறித்து உண்டான எழுச்சியும் களத்தில் இறங்கிய போராடிய விதமுமே தான் இந்த நாடார் இனமக்களின் அடுத்த கட்ட சமூக வாழ்க்கையில் பெற வேண்டிய உரிமைக்கான வழித் தடத்தை அமைக்க காரணமாக இருந்தது. இந்த எழுச்சி இவர்களின் ஒற்றுமையை பேணிக்காத்தது போலவே தங்களது கலாச்சாரத்தின் மகிமையை உணர காரணமாகவும் இருந்தது.

ஒரு வெற்றி என்பது வெறும் ஒற்றுமையால் மட்டும் வந்துவிடுவதில்லை.எதற்காக ஒன்றுபடுகின்றோம் என்பதில் தான் தொடங்குகிறது.

Thursday, February 17, 2011

தோல் சேலை தொடக்க உரிமைப் போராட்டம்

இந்தியாவில் தொடக்கத்தில் சாதி என்ற பெயரால் எவ்வளவு பாரபட்சம் நிலவியதோ அந்த அளவிற்கு அந்த சாதியை வைத்துக் கொண்டே பல திருகுதாள வேலைகளும் நடந்து கொண்டுருந்தது. நீ இந்த சாதியில் பிறந்து இருக்கிறாயா?  இப்படித்தான் வாழ வேண்டும் என்பதில் தொடங்கி உன்னுடைய வட்டம் இதற்குள் தான் முடிகின்றது.  இதற்கு மேல் நீ வெளியே வரமுடியாது என்பதாக ஒவ்வொரு இன மக்களுக்கும் ஆதிக்க சாதியினர் கோடு கிழித்து வைத்திருந்தனர்.  தீண்டத்தகாதவர்கள் என்று சொல்லி இந்தியாவில் அடக்கி வைக்கப்பட்ட இன மக்களின் வாழ்வியல் சோகத்தை எந்த வார்த்தைகளாலும் எழுதி விட முடியாது. வாழ்க்கை முழுக்க மிருகங்களை விட கேவலமாக நடத்தப்பட்டவர்கள் தான் அதிகம். சங்ககால மன்னர்கள் காலம் முதல் இருந்து வந்த இது போன்ற கொடூரங்கள் இன்று வரைக்கும் அங்கங்கே இருந்து கொண்டு தான் இருக்கிறது.  மனிதர்களை மனிதர்களாக பார்க்காமல் அவனின் குலத்தை அடிப்படையாக வைத்து, ஒருவர் செய்து வந்த வேலைகளை வைத்தே இது போன்ற பிரிவினைகள் உருவாக்கப்பட்டது.


இன்று நாடார்கள் என்பவர்கள் சமூகத்தில் தங்களை மையப்புள்ளியாக மாற்றிக் கொண்டவர்கள்.  பொருளாதார ரீதியாக தங்களை வளப்படுத்திக் கொண்டவர்கள். இன்று இவர்களுக்குள்ளும் பல பிரிவுகள் இருந்தாலும் இவர்கள் தாங்கள் பெற வேண்டிய சமூக உரிமைகளை அத்தனை எளிதாகவும் பெற்றுவிட வில்லை. ஒவ்வொரு சமயததிலும் உருவான அத்துமீறல்களும், இதனால் உருவான கலவரங்களும் தான் இவர்களின் இன்றைய வளமான வாழ்க்கைக்கு அடித்தளமாக உள்ளது.  

முற்பட்ட சாதியினர், ஆதிக்க சாதியினர் என்ற நிலையில் உள்ளவர்கள் அத்தனை பேர்களும் இந்த நாடார் இனமக்கள் மேலே வந்து விடமுடியாதபடி உருவாக்கிய பல வலைபின்னல்களைப்பற்றி சரித்திரம் விலாவாரியாக சொல்லிக் கொண்டே செல்கிறது.  அதில் ஒன்று தான் இந்த 'தோள்சேலை' போராட்டம்.  நாடார் இன பெண்கள் ரவிக்கை அணியக்கூடாது என்பதாகும். ஆனால் இன்று வரையிலும் நடந்து கொண்டிருக்கும் ஒவ்வொரு கலவரத்தையும் நாம் கூர்ந்து கவனித்துப் பார்த்தால் மனித மனங்களில் உள்ள வக்கிரங்கள் தான் நாம் கண்கூடாக பார்க்கமுடியும். வெறும் சாதிக்கலவரம் என்று மேலோட்டமாக பார்த்தாலும் ஒவ்வொரு கலவரங்களின் அடிப்படை நோக்கமே பொறாமை என்ற வார்த்தையில் இருந்து தான் உருவாகின்றது.  

தங்களுக்கு கீழே வாழ வேண்டியவர்கள், தாங்கள் சொல்லும் செர்ல்லுக்கு கட்டுப்பட்டு வாழ வேண்டிய கடமைப்பட்டவர்கள் என்று கருதிக் கொண்டு வாழும் ஆதிக்க சாதியினர் மனதில் உருவாகும் பொறாமைத்தீயே இது போன்ற கலவரங்களை உருவாக்க காரணமாக இருக்கிறது.  தங்கள் உழைப்பால் உயர்ந்த நாடார் இன மக்களின் வாழ்க்கையில் ஒவ்வொரு காலகட்டத்திலும் அடைந்த பொருளாதார வளர்ச்சி ஏனைய சாதிக்காரர்களின் பார்வையில் விகாரமாகத் தெரிந்தார்கள்.  இத்துடன் நாடார்களின் வாழ்க்கையில் கிறிஸ்துவம் உருவாக்கிய மாற்றத்தினால் பல தாக்கங்கள் உருவானது. சமூகத்தில் தங்களின் சமூக பிடிமானங்களை ஆழ அகல ஊன்றி கிளை பரப்பி மேலேறி வந்த நாடார் இன மக்களை மற்றவர்கள் அத்தனை எளிதாக ஏற்றுக் கொள்ள எவருக்கும் மனமில்லை. 


தொடக்கத்தில் தென் திருவிதாங்கூர் பகுதியில் லண்டன் மதகுருமார்கள் உருவாக்கிய மாற்றங்கள் ஆச்சரியமானது.  பல காலமாக சிந்தனையாலும் செயலாலும் தாழ்ந்து கிடந்த இந்த இன மக்களின் வாழ்க்கையை புரட்டிப் போட ஆரம்பித்தனர். 1820 ஆம் ஆண்டு நாகர்கோவிலில் கிறிஸ்துவ ஆலயம் தொடங்கப்பட்டது.  அன்றைய சூழ்நிலையில் 3000 நாடார் இன மக்கள் இந்த கிறிஸ்துவ மதத்தை தழுவிக் கொண்டனர். நெல்லை மாவட்டத்தில் வாழ்ந்து கொண்டிருந்த மக்களைப் போலவே திருவிதாங்கூர் பகுதியில் வாழ்ந்து கொண்டிருந்தவர்களும் பனை தொழிலை நம்பியே வாழ்ந்து வந்தனர். ஆனால் இதற்குள்ளும் அவரவர் பெற்றிருந்த பொருளாதார வளர்ச்சியின் அடிப்படையில் இரண்டு பிரிவாக இருந்தனர். திருவிதாங்கூரில் தென் பகுதியில் வாழ்ந்து வந்தவர்கள் நாயர் நிலபிரபுகளின் நிலங்களை எடுத்து குத்தககைதாரர்களாக வாழ்ந்து வந்தனர். இவர்கள் மற்றவர்களை விட சற்று மேம்பட்ட பொருளாதார வளர்ச்சியை அடைந்து இருந்தனர்.  இதைப் போலவே நெல்லை மாவட்டத்தின் எல்லையோரமாக அதாவது தென் திருவிதாங்கூரின் கிழக்குப் பகுதியில் வாழ்ந்து வந்த நாடார்கள் வேளான் நிலபிரபுகளிடம் இருந்து பெற்ற நிலங்கள் மூலம் குத்தகைதாரர்களாக வாழ்ந்து வந்தனர். 

மொத்தத்தில் நாடார் என்பது ஒற்றைச் சொல்லாக இருந்தாலும் அவரவர் பெற்றிருந்த பொருளாதாரத்தைக் கொண்டு தான் நான் உயர்ந்தவன் நீ தாழ்ந்தவன் என்று கருதும் நிலையில் தான் இவர்களுக்குள்ளும் பல பிரிவுகள் இருந்தது.  

திருவிதாங்கூர் பகுதி மற்ற பகுதிகளை விட சற்று வளமாக இருந்த பகுதியாகும். மன்னர்கள் ஆட்சி புரிந்த 16 ஆம் நூற்றாண்டு முதல் குடியேறிய நாடார்கள் மற்ற இடங்களை விட சற்று அதிகமாக கூலி பெற்று வாழ்ந்து வந்த போதிலும் சமூக இழிநிலைகளை பொறுத்துக் கொண்டு இந்த பகுதியில் பனை தொழிலாளர்களாக வாழ்ந்தனர். இந்த பகுதியில் தீண்டாமை கொடுமை என்பது உச்சமானது. தாழ்ந்த சாதியினர், நாயர்களிடம் பேசும் போது 12 அடிகள் தள்ளி நின்று தான் பேச வேண்டும். குடைகள் பயன்படுத்தக்கூடாது. காலணிகள், தங்க ஆபரண்ங்கள் எதுவும் அணியக்கூடாது. கட்டும் வீடுகளில் மாடி வைத்து கட்டக்கூடாது. பசுக்களில் பால் கறக்க அனுமதியில்லை. தண்ணீர் குடங்களை இடுப்பில் வைத்து தூக்கிக் கொண்டு செல்லக்கூடாது. மேலாடைகளை அணிந்து கொள்ள போர்த்திக் கொள்ள அனுமதியில்லை. இது தவிர தாழ்ந்த சாதியினருக்கு கடுமையான வரிகள் என்று தனியாக உண்டு. பறையர்களுக்கு ஒரு படி மேலாக வாழ்ந்து கொண்டிருந்தாலும் நாடார்களையும் தள்ளி வைத்து தான் பார்த்தனர். உழைப்புக்கேற்ற ஊதியமின்றி நாட்டு நலன் என்ற போர்வையில் நாடார்களின் உழைப்பு ஊதியம் கொடுக்காமல் சுரண்டப்பட்டது.  

ஆனால் ஒவ்வொரு காலகட்ட வளர்ச்சியிலும், நெல்லை மாவட்டத்தின் மற்ற பகுதியில் வாழ்ந்து கொண்டிருந்தவர்களை பார்த்துக் கொண்டு வந்தவர்கள் தாங்கள் நாயர்களின் அடிமையாக வாழ்ந்து கொண்டிருப்பதை உடைக்கத் தலைப்பட்டனர். மற்ற இடங்களில் வாழ்ந்து கொண்டுருப்பவர்களிடம் சமூக ரீதியான தொடர்புகள் உருவாக அப்போது தான் கிறிஸ்துவ மத குருமார்களின் தொடர்பும் இவர்களுக்கு உருவாகத் தொடங்கியது.  இதுவே தான் இங்கிருந்த மதகுருமார் லண்டன் தலைமையகத்திற்கு எழுதிய கடிதத்தில் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் நாடார்கள் நம் பக்கம் இருக்கிறார்கள் என்று எழுதியிருந்தார்.  காரணம் ஒவ்வொருவரும் ஏதோவொரு வழியில் நாம் இந்த இழிவான நிலையில் இருந்து மேலே வந்து விட முடியாதா? என்று காத்துக் கொண்டிருந்தனர். 


கிறிஸ்தவ மதத்தை தழுவிய நாடார்களும், மத குருமார்களுடன் நெருங்கிய தொடர்பை உருவாக்கிக் கொண்டவர்களுக்கும் அரசாங்க ஆதரவு எளிதாக கிடைத்தது. பல வரிகளில் இருந்து தங்களை காத்துக் கொண்டனர். ஏராளமான பொருள் உதவிகளும் கிடைக்கத் தொடங்கியது.  நிலங்களும், வணிகத் தொடர்புகளும் உருவாக தங்களின் உழைப்புக்கேற்ற ஊதியம் சுய தொழில் மூலம் வரத் தொடங்கியது.  சமூகத்தில் விரைவாக முன்னேறத் தொடங்கினார்கள். ஆதிக்க சாதியினரின் கோபப்பார்வை நாடார்கள் மேல் திரும்பிய அளவிற்கு இந்த மத குருமார்களின் மேலும் திரும்பத் தொடங்கியது.  மற்றொரு அம்சம் மத குருமார்களின் ஆதரவுடன் கல்வி கற்றவர்களின் முயற்சியினால் அடுத்து வருபவர்களுக்கு வழிகாட்ட பல விதங்களிலும் இவர்களின் வளர்ச்சி பிரமிக்கக்கூடியதாக இருந்தது.  இந்த சூழ்நிலையில் 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வளர்ந்து விட்ட சமூகமாக நாடார்கள் தங்களை கருதிக் கொள்ள மேலாடை அணிவது பற்றிய வாக்குவாதத்தை எழுப்பத் தொடங்கினர்.

Sunday, February 13, 2011

கிறிஸ்துவம் உருவாக்கிய மாற்றங்கள்

இராமநாதபுர மாவட்டத்தைப் பற்றி பேசிக் கொண்டிருக்க ஏன் இந்த சாதி வேறுபாடுகளை விலாவாரியாக பேசிக் கொண்டிருக்கிறோம்?  காரணம் இன்று வரையிலும் ஆங்கிலேயர்கள் இந்தியாவிற்குள் வணிகத்திற்காக உள்ளே வந்து படிப்படியாக தங்களை ஆட்சியாளர்களாக மாற்றிக் கொண்டார்கள் என்பதை பார்க்கும் போது இது போன்ற பல காரணிகள் இவர்களுக்கு பலவிதங்களிலும் உதவியாய் இருந்தது.  ஒருவருடன் ஒருவர் ஒன்று சேராமல் இருந்ததற்கு காரணம் ஆங்கிலேயர்கள் அல்ல.  இந்த சாதி என்ற ஒரு வார்த்தையே காரணமாகும்..  

'சும்மா வரவில்லை சுதந்திரம்' என்றொரு வாசகத்தை படித்த நாம் மற்றொன்றையும் இப்போது கவனத்தில் வைத்துக் கொள்ளவேண்டும். ஆங்கிலேயர்களும் அத்தனை எளிதாக இந்த நாட்டை ஆண்டு விடவும் இல்லை.  காரணம் நம் மக்களிடம் இருந்த மூடநம்பிக்கைகள் மேலும் உள்ளே ஒவ்வொரு இன மக்களிடமும் இருந்த ஏற்றத்தாழ்வுகளை கணக்கில் கொண்டு மிகக் கவனமாகத்தான் கையாண்டிருக்கிறார்கள். இங்கு தொடக்கத்தில் பாளையக்காரர்களாக, ஜமீன்களாக பல்வேறு கூறுகளாக பிரிந்து ஓற்றுமையில்லாமல் இருந்தவர்களை விரட்ட எப்படி பிரித்தாளும் சூழ்ச்சியை பயன்படுத்தி வென்றார்களோ அதன் பிறகு பல சவாலான விசயங்களையும் இங்குள்ளவர்களை வைத்தே சாதித்து இருக்கிறார்கள்.  ஒவ்வொரு பகுதியிலும் அந்த வட்டார சமூக அமைப்பை முன்னிலைப்படுத்தி தான் அதிகார வரம்புகளை உருவாக்கி ஆட்சி செலுத்தி உள்ளனர்.   

இன்று நகரமயமாக்கல், புலம் பெயர்தல் என்ற இந்த இரண்டு காரணங்களால் சாதி மூலக்கூறுகளை எவரும் பொறுமையாக கண்டு கொள்ள வாய்ப்பும் இல்லை.  அதற்கான வசதிகளும் மிகக் குறைவு.  உனக்கு வேலை தெரியுமா? அனுபவம் இருக்கிறதா? என்று கேட்கும் இன்றைய பொருளாதார போட்டியுலகில் எவரும் நீ இந்த சாதியா? என்று கேட்பது குறைவு.  இன்றைய சூழ்நிலையில் நம் அரசாங்கம் மட்டுமே இதை ஒரு ஆயுதமாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறது.  அரசாங்கத்தை சார்ந்து வாழ வேண்டும் என்பவர்களுக்கு மட்டுமே இந்த பித்து தலைவரைக்கும் ஏறி இன்று வரைக்கும் பல வகையிலும் தடுமாற வைத்துக் கொண்டிருக்கிறது. அரசாங்கம் சாராத தனி நபர்களின் நிர்வாகத்தில் உள்ளவர்களின் பார்வையில் 70 சதவிகிதம் இன்று சாதி என்ற அமைப்பே தேவையில்லாமல் போய்விட்டது. 


ஆனால் தொடக்கம் முதல் ஒவ்வொருவரின் பொருளாதாரம் தான் இந்த சாதி மூலக்கூற்றை தீர்மானிப்பதில் முக்கிய காரணியாக இருந்தது என்பதையும் நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் உருவாக்கிய பிரச்சனைகள் தான் தொடக்கத்தில் பலரையும் மதம் மாற வைத்தது.  ஆனால் அதிலும் ஆயிரெத்தெட்டு பிரச்சனைகளை சந்தித்து எப்படியோ பலரும் மேலேறி வந்துள்ளனர்.

தமிழ்நாட்டில் உள்ள கடற்கரையோர மக்கள் தான் மத மாற்றத்திற்கு முதல் காரணமாக இருந்தனர்.  இப்போது நாம் பயணித்துக் கொண்டிருக்கும் இராமநாதபுர மாவட்டத்தில் தொடக்கத்தில் ஒன்று சேர்ந்திருந்த திருநெல்வேலியைச் சுற்றியுள்ள பகுதிகள் ஆகும். இங்கு ஆதிக்கம் செலுத்திய நாடார் இன மக்கள் மற்றும் அவர்கள் வாழ்வியலில் சந்தித்த சவால்களில் இருந்து நம்மால் பல பாடங்களை கற்றுக் கொள்ள முடியும்... தொடக்கத்தில் ஆங்கிலேயர்கள் இது போன்ற இடத்தில் இருந்து தான் தங்களின் புனிதப் பணிகளை தொடங்கினர். 

1600 ஆம் ஆண்டு இந்தியாவிற்குள் உள்ள வந்த ஆங்கிலேயர்கள் வணிகத்தில் எப்படி கவனம் செலுத்தி முன்னேறிக் கொண்டிருந்தார்களோ அதைப் போலவே 1680 முதல் கிறிஸ்துவ பாதிரியார்கள் ஒரு பக்கம் அவர்கள் வேலையை காட்டிக் கொண்டிருந்தார்கள். ஒரு கையில் கல்வி என்ற சேவை மனப்பான்மை.  மற்றொரு கையில் பைபிள் என்ற மதமாற்றம்.  இவர்களிடம் அடைக்கலம் புகுந்தவர்கள் சமூக வாழ்விலும் பல வகையிலும் முன்னேறத் தொடங்கினர். ஈழத்திலும் குறிப்பாக யாழ்பாணபகுதியில் வாழ்ந்த மக்கள் இப்படித்தான் இரண்டு தலைமுறைக்குள் முறையான இடத்தை பிடித்தனர்.  இது போன்ற சமயத்தில் தான் ஈழத்திற்கும் இந்த பகுதிகளுக்கும் மிக நெருக்க உறவு உருவானது. 

1830 முதல் ஈழத்தில் உருவாக்கப்பட்ட காபி தேயிலை தோட்டங்களுக்குத் தேவைப்படும் ஆட்கள் இந்த அகண்ட இராமநாதபுர மாவட்டத்தில் இருந்து தான் புலம் பெயரத் தொடங்கினர். 1843 முதல் 1867 முதல் ஏறக்குறைய 15 லட்சம் பேர்கள் ஈழத்திற்கு புலம் பெயர்ந்தனர். சம்பாரித்தவர்கள் திரும்பவும் வந்து பல இடங்களில் இடம் வாங்குதல், வீடு கட்டுதல் போன்றவற்றில் ஈடுபட்டு சமூகத்தின் பார்வையில் தங்களை மேம்பட்டவர்களாகவும் மாற்றிக் கொண்டனர். இதன் தொடர்ச்சி தான் 1833 ஆம் ஆண்டு மலேசியாவிற்கு ரப்பர் தோட்டம் அமைக்க ஆட்கள் இங்கிருந்து வலுக்கட்டாயமாக நகர்த்தப்பட்டனர்.

இலங்கை, மலேசியாவில் தொடக்கத்தில் குடியேறியவர்கள் அத்தனை பேர்களும் நாடார் இன மக்களே. குறிப்பாக வாழ வழியில்லாமல் இருந்த திருச்செந்தூர், நாங்குநேரி, ஸ்ரீவைகுண்டம் பகுதியில் வாழ்ந்தவர்கள் தான் அதிக அளவில் இது போன்ற வேலைக்கு நகரத் தொடங்கினர்.

நாடார் இன மக்கள் முறைப்படியான கல்வியறிவு இல்லாமல் உடல் உழைப்பை மட்டுமே நம்பி வாழ்ந்த காரணத்தால் வெள்ளையர்களின் பார்வையில் நாடார்கள் இன மக்கள் சற்று விகாரமாகத்தான் தெரிந்தார்கள். பனைமர தொழில்களை வைத்துக் கொண்டு வாழ்ந்து வந்த இந்த பகுதி மக்களின் கால் கைகள் போன்றவைகள் கூட வினோத வடிவில் இருந்தது.

ஏறக்குறைய நாடார் இன மக்களின் தொடக்க கால வாழ்க்கை என்பது  மற்றவர்களால் வெறுக்கப்பட்ட குணாதிசியங்கள் உள்ளவர்களாகத்தான் வாழ்ந்து இருக்கின்றனர். தங்கள் அன்றாட வாழ்க்கைப்பாடுகளுக்கு தேவைப்படும் திறமையைத் தவிர வேறு எதையும் கண்டு கொள்ளவும் இல்லை.  வளர்த்துக் கொள்ள ஆசையில்லாமல் ஒவ்வொருவரும் ஒரு சிறிய வட்டத்திற்குள் தான் வாழ்ந்து இருக்கின்றனர். கருப்பு நிறத்தோற்றமும், காதுகளில் கனமாக ஈயத்திலான ஆபரணங்களும் போட்டு பழகிய காரணங்களினால் பெண்களின் காதுகள் தோள் வரைக்கும் தொங்கிக் கொண்டு வினோத வடிவில் இருந்தது. இதைத்தவிர பெண்கள் ரவிக்கை அணியக்கூடாது என்றொரு சட்டம் வேறு. அதையும் திருவிதாங்கூர் பகுதிக்கு பொறுப்பாக இருந்த ஆங்கிலேயப் பெண்மணி தான் மாற்றி கடைசியாக தொள தொள ரவிக்கையை அறிமுகம் செய்து ஒரு மாற்றத்தை உருவாக்கினார்.  

19 ஆம் நூற்றாண்டில் தான் நாடார் இன மக்களின் சமூக வாழ்க்கை சற்று மேலேறத் தொடங்கியது.  காரணம் ஆங்கிலேயர்கள் இந்த பகுதிகளுக்குள் உள்ளே வருவதற்குள் ஆண்டு கொண்டிருந்த பாளையக்காரர்கள், ஜமீன்தாரர்கள் என்று ஒவ்வொருவருக்கும் நடந்து கொண்டிருந்த பகையும் விட முடியாத போர்களும் பல விதத்திலும் தொந்தரவாக இருந்தது.  இதற்கு மேலும் பாரபட்சமான அணுகுமுறைகள் பலதும் உண்டு. 

எந்த சாதியாக இருந்தாலும் பொருளாதார ரீதியாக மேலே இருந்தவர்களின் கெடுபிடிதனத்தை மீறி சாதாரணமக்கள் மேலே வரவேண்டும் என்பது நினைத்துப் பார்க்க முடியாத ஒன்றாக இருந்தது. சாதாரண மக்கள் தங்களின் வணிக மேம்பாட்டிற்காக ஒரு இடத்திலிருந்து அடுத்த இடத்திற்கு செல்லும் போது ஒவ்வொரு பகுதியிலும் இருந்த கொள்ளையர்களின் அட்டகாசம் போன்றவற்றை ஆங்கிலேயர்கள் உள்ளே வந்ததும் தான் கண்டதும் சுட உத்தரவு என்று உருவாக்கி ஒரு வழிக்கு கொண்டு வந்தனர்.  

கிறிஸ்துவ பாதிரிமார்கள் தூத்துக்குடியில் உள்ள முத்துக்குளித்தலைத் தொழிலாக கொண்டவர்களிடத்தில் தான் முதன் முதலாக கிறிஸ்துவத்தை பரப்ப ஆரம்பித்தனர்.  1680 ஆம் ஆண்டு இப்போது நாங்குநேரி தாலூகாவில் உள்ள வடக்கன்குளத்தில் தான் தொடங்கினர்.  முதல் முதலாக நாடார்  இனத்தில் ஒரு பெண்மணி தான் கிறிஸ்துவத்திற்கு மாறினார். இதைப் போல ராயப்பன் என்பவர் 1784 ஆம் ஆண்டு இரு குடும்பங்களை திருமுழுக்கு அளித்து திருச்செந்தூர் அருகே உள்ள கிராமமக்களை புரொட்டஸ்டான்ட் என்ற கிறிஸ்துவ மதப்பிரிவின் தொடக்கத்தை தொடங்கி வைத்தார். ஆனால் இந்த மதமாற்றம் அத்தனை எளிதாக நடக்கவில்லை. பணம் படைத்தவர்களின் அச்சுறுத்தல்கள் அந்த அளவிற்கு இருந்தது.  சாத்தான்குளத்தில் பிறந்த சுந்தரம் என்பவர் தான் தன்னுடைய பெயரை டேவிட் என்று மாற்றிக் கொண்டு நாடார் சமூகத்தில் முதல் மத போதகராக மாறியவர். இவரின் சாவும் மர்மத்தில் தான் முடிந்தது. 

1810 ஆம் ஆண்டு இராமநாதபுர மாவட்டத்தில் உருவான வெள்ளப்பெருக்கில் உருவான காலரா, மலேரியா நோய்க்குப் பிறகு உண்டான அழிவுகளைப் பார்த்த மதகுருமார்கள் பள்ளிக்கூடங்களை கட்ட கிறிஸ்துவம் இந்த பகுதியில் வேகமாக பரவத் தொடங்கியது. நிலங்களும், பனை மரங்களும் தராத வாழ்க்கையை இந்த கல்விக்கூடங்கள் கொடுக்க ஆரம்பித்தது. பலரும் மதம் மாறத்தொடங்கினர். 1877 ஆம் ஆண்டு உருவான பஞ்சத்திற்குப் பிறகு திருநெல்வேலி சுற்றியுள்ள பகுதிகளில் உள்ளவர்களின் மதமாற்றம் இரண்டு மடங்கு அதிகமாகி தங்களின் பராம்பரிய கலாச்சாரத்தை விட்டொழித்து முழுமையாக கிறிஸ்துவத்திற்கு அர்பணிக்கும் தலைமுறையாக மாறத் தொடங்கினர். இதில் மற்றொரு சிறப்பு அம்சமும் இருந்தது.  எவர் மதம் மாறுகின்றார்களோ அவர்களின் குலத் தாழ்ச்சி போன்றைவற்றை அறவே மறக்கடிக்கப்பட்டு புதிய மனிதராக சமூகத்தில் மாறத் தொடங்கினர். அவர்களின் எண்ணங்களில் ஆழமாக இந்த கிறிஸ்துவம் ஒன்றிப் போனதாக மாறத் தொடங்கியது..

Thursday, February 10, 2011

மரமேறி தாண்டி வந்த நாடார்கள்

திருநெல்வேலி என்றால் சமீபத்தில் வருமானவ்ரித்துறை நடத்திய இருட்டுக்கடை அல்வா வரைக்கும் உங்கள் நினைவில் வந்து போகும் ஆனால் இந்த திருநெல்வேலியின் உண்மையான அர்த்தம் 'புகழ்மிகும் நெல்லின் வேலி'.
இந்தப்பகுதி தொடக்கத்தில் ஆங்கிலேயர்களின் நிர்வாகத்தில் அகண்ட இராமநாதபுரம் மாவட்டத்திற்குள் இருந்ததால் இந்தப்பகுதி மக்களை முதலில் பார்த்துவிடலாம்.


சோழநாட்டிலுள்ள காவேரிப்குதி, மதுரை, தென் திருவாங்கூர் ஆகிய பகுதிகளில் இந்த நாடார் இன மக்கள் உருவானதாக கூறப்படுகிறது. ஈழத்து வரலாற்றில் தென்னிந்திய கடற்கரையோரப் பகுதிகளில் வாழ்ந்து கொண்டிருந்தவர்கள் எளிதாக புலம் பெயர்ந்து ஈழத்தை நோக்கி நகரத் தொடங்கினர்.  ஆனால் 'உள்ளே வெளியே' என்பதாக ஈழத்துக்குள் சென்றவர்களும் திரும்பவும் இங்கேயே வந்தவர்களும் உண்டு.  அது போல ஈழத்தில் வடக்கு கடற்கரையோரத்தில் வாழ்ந்து வந்தவர்களின் ஒரு பகுதியினர் தான் இவர்கள் என்றும் கூறப்படுகிறது.  தொடக்கத்தில் சான்றார் என்று அழைக்கப்பட்டு பிறகு சாணார் என்று மருவியது. யாழ்பாணத்தில் இருந்து வந்தவர்கள் இந்த பனைவிதைகளை கொண்டு வந்து இங்கே பனை மரங்களை உருவாக்கினார்கள் என்று நம்புகிறார்கள்.

நெல்லை மற்றும் குமரி மாவட்டத்திற்குள் நுழையும் போதே நம் கண்களுக்கு பனைமரம் ஏராளமாகத் தெரியும்.  கேரளாவைப் போலவே கண்களுக்கு குளிர்ச்சி தரும் பச்சைபசேலுக்குத் தேவையான சீதோஷ்ண நிலை எங்கும் நிலவும். இராமநாத புரத்தை வறப்பட்டிக்காடு என்பது போல மேற்கு தொடர்ச்சி மலையின் கிழக்குப் பகுதியில் உள்ள தென்மாவட்டங்கள் குறிப்பாக நாங்குனேரி, ஸ்ரீவைகுண்டம்,திருச்செந்தூர் போன்றவைகள் வறண்ட பூமியாக கண்ணுக்கு எட்டியவரையில் பொட்டல்காடாகவே தெரியும்.  

மக்கள் வசிப்பதற்கு தகுதியற்றதாக, கருங்கற்கள் நிறைந்த, செம்மண் நிறைய மொத்தத்தில் பனைமரங்கள் வளர்வதற்கு ஏற்ற பூமியாக இருக்கிறது. இந்த பகுதியில் உள்ள பூமியில் ஆழத்தில் சிவந்த களிமண் இருந்த போதிலும் மேல்மட்டத்தில் உள்ள தளர்ச்சியான மணல் ஒவ்வொரு காற்று வீசும் பருவத்திலும். தென் மேற்கு சுழற்சி காற்றால் கிழக்கு நோக்கி நகர்த்தப்படுகின்றது. இந்த காற்றும், நகரும் மணல் துகள்களும் மக்களுக்கு ஒவ்வொரு சமயத்திலும் ஏராளமான பிரச்சனைகளை உருவாக்குகின்றது. காலப்போக்கில் வயல்வெளிகள், கிராமங்கள் கூட அமிழ்ந்து போயுள்ளன.  இது போன்ற பூமியில் தான் இங்கு நாம் பார்க்கப்போகும் நாடார்களின் வாழ்க்கை அமைந்திருந்தது.

இந்தியாவில் உள்ள மொத்த சாதிகள் உருவான கதைக்கு ஆயிரத்தெட்டு புராண இதிகாச சம்பவங்களைக் கூறினால் இந்த சாதி என்ற மூலக்கூறு இன்று வரைக்கும் வளர்ந்து கொண்டு இருப்பதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் உண்டு.  பொருளாதாரம் மற்றும் அவரவர் செய்து கொண்டிருந்த தொழிலை அடிப்படையாக வைத்து தான் இந்த சாதி ஒவ்வொரு காலகட்டத்திலும் விடாப்பிடியாக நகர்ந்து கொண்டு வந்தது.  நாடார் என்று ஒரே வார்த்தையில் சொன்னாலும் இதற்குள்ளும் ஏராளமான கிளைநதிகள் உண்டு.  குறிப்பிட்ட சில பிரிவுகளை மட்டும் பார்க்கலாம்,

சுருக்கு பட்டையர்

பனைத் தொழிலை சார்ந்து வாழ்ந்தவர்கள். நாடார் சமூகத்தில் 80 சதவிகிதத்தினர் இந்த சுருக்கு பட்டையராகத் தான் இருக்கின்றனர்.

மேல் நாட்டார்,

தென் திருவாங்கூரிலும், நெல்லை மாவட்டத்தின் மேற்குப் பகுதியிலும் வசிக்கின்றனர். இந்த வகையினர் பெரும்பான்மையாக அம்பாசமுத்திர பகுதியிலும், சொல்லக்கூடிய வகையில் தென்காசி, சங்கரன்கோவில், ஸ்ரீவைகுண்டம்,,நாங்குநேரி போன்ற பகுதிகளிலும் வசிக்கின்றனர்.

நட்டாத்தி

நெல்லை மாவட்டத்தில் சாயர்புரத்திற்கருகில் நட்டாத்தி கிராமத்தைச் சுற்றிலும் இந்த நாடார்கள் அதிகமாக வசிக்கின்றனர். ஆனால் எண்ணிக்கையில் சொற்பமாகவே இருக்கின்றனர். வட்டிக்கு பணம் கொடுப்பது, மற்ற வாணிபம், விவசாயம் போன்றவை இவர்களின் தொழிலாகும். ஆனால் காலப்போக்கில் இந்த வகையில் உள்ளவர்கள் கிறிஸ்துவத்திற்கு மாறிவிட்டனர்.

கொடிக்கால்

வெற்றிலை பயிரிட்டு வாழ்க்கை வாழ்ந்தவர்கள். அம்பாசமுத்திரம், தென்காசி போன்ற இடங்களில் அதிகமாக வாழ்பவர்கள்.


இவர்களின் தொடக்க வாழ்க்கை பாலைவனத்தில் வாழ்பவர்களை விட சற்று மேம்பபட்ட வாழ்க்கை என்பதாகத் தான் தொடங்கியது. இந்த வெப்ப பூமியில் வாழ்ந்து கொண்டு இந்த பனை மரங்களை நம்பியே தங்கள் வாழ்க்கையை வாழ்ந்து இன்று சமூகத்தில் ஜெயித்தும் காட்டியுள்ளனர்.  தென்னிந்தியாவில் சமஸ்கிருதம் ஆட்சி புரிய தொடங்கிய போது வாழ்ந்து கொண்டிருந்த ஒவ்வொரு மன்னர்களும் தங்களின் குலப்பெருமையை மேம்படுத்திக் காட்ட ஒவ்வொருவிதமான புரூடா கதைகளை எடுத்துவிடத் தொடங்கினர். இதன் காரணமாகவே பலருடைய பரம்பரை புண்ணாக்கு கதைகள் இன்று வரைக்கும் நம் மனதில் ஊறிக் கொண்டிருக்கிறது.  இதைப்போலவே நாடர்களின் தொடக்க பாரம்பரிய கதைகளிலும் ஒரு சம்பவத்தை குறிப்பிடுகிறார்கள்.

ஏழு தேவகன்னிகைகள் பூமியில் வந்து குளித்துக் கொண்டிருக்கும் போது இந்திரன் ஒளிந்து இருந்து பார்த்துக் கொண்டிருந்தார்.  இறுதியில் "எல்லாமே" சுபமங்களமாக முடிய ஏழு ஆண் குழந்தைகள் உருவானது.  இந்த குழந்தைகளை பூமியில் விட்டு விட்டு கன்னிகையர்கள் தேவலோகத்திற்கு சென்றுவிட பெண் தெய்வமான பத்ரகாளி இந்த குழந்தையை வளர்த்து வந்தாள். மதுரை நகரில் வைகைநதி பெருக்கெடுத்து ஓட பாண்டிய மன்னர் ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு நாள் வந்து கூடையில் மண் சுமந்து வர வேண்டும் என்று உத்திரவிட ஏழு பயபுள்ளைங்களும் "நாங்கள் ஆளப் பிறந்தவர்கள்.  கூடை சுமக்கமாட்டோம்" என்று எதிர்த்து நின்றனர்.  மன்னர் கோபமடைந்து ஏழு பேர்களையும் தலைமட்டும் மண்ணுக்கு வெளியே தெரியும்படி புதைத்து யானையை விட்டு தலையை இடறச் செய்தார். யானை கால் கொண்டு எத்தித்தள்ள முதலாவரின் தலை உருண்ட போது விடாதும் கோஷம் போட்டுக் கொண்டே நகர்ந்தது. இரண்டாவது தலையும் அதே போல் பேச பேசியதைக் கண்ட மன்னன் மற்ற ஐந்து இளைஞர்களை விடுவித்து மரியாதை செய்தான்,


இந்த ஐந்தில் தொடங்கியது தான் நாடார் இனம் என்று கதை திரைக்கதை வசனம் ஒன்று சரித்திரங்களில் இருக்கிறது. ஆனால் பெண்கள் ரவிக்கை போடக்கூடாது,  நாடார் இன மக்கள் ஆலயங்களில் நுழையக்கூடாது போன்ற பல கேவலங்களைத்தாண்டி இன்று இந்த சமூக மக்கள் வந்துள்ள உச்சம் மெச்சத்தகுந்ததே.

Tuesday, February 08, 2011

புதிய தலைமுறை' யில் எனது ( COVER STORY) கட்டுரை

கடந்த பிப்ரவரி 4 2011 'புதிய தலைமுறை'யில் வந்த அட்டைபடக்கட்டுரையின் விரிவாக்கம் இது.  புதிய தலைமுறை ஆசிரியர் திரு. மாலன் மற்றும் ஆசிரியர் குழுவினருக்கு என்னுடைய நன்றிகள்.

திருப்பூரில் உள்ள மொத்த சாயப்பட்டறைகளை மூட உச்ச நீதி மன்றம் உத்தரவு.  

ஜனவரி 28 2010 செய்தித்தாளில் வந்த செய்தி பலரும் படித்துவிட்டு எளிதாக மறந்திருப்போம். ஆனால் இந்த செய்திக்குப் பின்னால் உள்ள விசயம் மிக எளிமையானது. தொழில் வளர்ச்சியில் அக்கறையில்லாத அரசாங்க கொள்கைகளும், சுயநலத்தை மட்டுமே கொண்டிருக்கும் முதலாளித்துவமும் உருவாக்கிய புரிந்துணர்வால் இன்று லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரமே கேள்விக்குறியில் வந்து முடிந்துள்ளது. இந்த தொழிலை நம்பி வாழும் நாலு லட்சத்திற்கு மேல் உள்ள எளிய மக்களின் வாழ்க்கையே திசை திரும்பப் போகின்றது என்பதை எத்தனை பேர்கள் உணர்ந்திருப்பார்கள்?

தொடக்கத்தில் பல்லடம் தாலூகாவில் ஒரு சிறிய கிராமமாக திருப்பூர் இருந்தது.  ஆனால் கல்கத்தாவில் இருந்து  இங்கு அறிமுகமான பனியன் தொழில் முன்னங்கால் பாய்ச்சலில் முன்னேறி இன்று திருப்பூர் மாநகராட்சி என்கிற நிலைவரைக்கும் வளர்ந்துள்ளது. பிழைக்க வாய்ப்பு தேடி வரும் கிராமத்து மக்களுக்கு வாழ்க்கையை அளித்த இந்த திருப்பூர் இன்று கேள்விக்குறியில் வந்து நிற்கின்றது..


இங்குள்ள ஆய்த்த ஆடைகள் ஏற்றுமதி மூலமாக மத்திய அரசாங்கத்திற்கு வருடத்திற்கு பத்தாயிரம் கோடிகளுக்கு மேல் அந்நியச் செலவாணியாக வருமானத்தை தந்து கொண்டிருக்கிறது.  இதைவிட அதிகமாக மாநில அரசாங்கத்திற்கு டாஸ்மார்க் மூலமாக வாரி வழங்கிக் கொண்டிருக்கிறது.  ஆனால் சாயப்பட்டறை முதலாளிக்கு உச்ச நீதி மன்றம் கொடுத்துள்ள தீர்ப்பால் இந்த தொழிலை மட்டுமே சார்ந்துள்ள அத்தனை பேர்களையும் டாஸ்மார்க் செல்லாமலே மயங்கி விழ வைத்திருக்கிறது. 

இந்த பிரச்சனை வெறும் சாயப்பட்டறை சார்ந்தது மட்டுமல்ல.  திருப்பூரில் உள்ள ஏற்றுமதி தொழிலுடன் நேரிடையாக மறைமுகமாக பல நூறு தொழில்களுடன் சம்மந்தப்பட்டது. இங்குள்ள ஒவ்வொரு துறையும் ஏற்றுமதிக்கு முக்கியமானது. ஒன்றில் அடி விழுந்தால் அதன் சுற்று முடியும் போது மொத்தமும் அடிவாங்கி மூச்சு வாங்கி நின்றுவிடும். ஒரு தொழில் முடங்கினாலும்  பாதிக்கப்படுவது முதலாளி மட்டுமல்ல சார்ந்துள்ள ஏழை எளிய மக்களுமே.

இங்குள்ள ஏற்றுமதி தொழில் சூடுபிடிக்காமல் இருந்த 1985ல் ஏறக்குறைய 50க்கும் மேற்பட்ட சாய சலவைப்பட்டறைகள் இருந்தது.  இந்த காலகட்டத்தில் திருப்பூரில் ஓடிக் கொண்டிருக்கும் நொய்யல் ஆற்றில் மக்கள் குளிக்கும் அளவுக்கு அன்றாட பயன்பாட்டுக்கு பயன்படுத்தும் நிராகத்தான் இருந்தது.  ஆனால் ஏற்றுமதி அதிகரிக்க நொய்யல் ஆறு நொந்து போய் இன்று வறண்டு போனதோடு மட்டுமல்லாமல் சாய நீரை சுமந்து செல்லும் ஆறாக மாறியுள்ளது.

இன்றைய நவீன யுத்திகள் எதுவுமில்லாமல் 20 ஆண்டுகளுக்கு முன்பு சாயக்கழிவு நீரை சுத்திகரிப்பு எதுவும் செய்யாமல் அப்படியே ஆற்றில் கலந்து விட்டுக் கொண்டுடிருந்தார்கள்.  இப்போது மாசுக்கட்டுப்பாட்டுத் துறை பார்த்துக் கொண்டிருக்கும் பணியை தொடக்கத்தில் தாசில்தார் வசமிருந்தது. வெளியாகும் சாய நீரின் நிறத்தை போக்குவதற்காக  சுண்ணாம்பு மற்றும் பெரஸ் சல்பேட் கலந்து வெளியேற்றிக் கொண்டிருந்தார்கள். சுண்ணாம்பு நீரை வெள்ளையாக மாற்றிவிடும். பெரஸ் சல்பேட் என்பது கழிவை வண்டலாக மாற்றி கீழே தங்க வைத்துவிடும். நூறு சதவிகிதம் நச்சுத் தன்மையுள்ள இந்த கழிவு சமாச்சாரங்களை அந்தந்த நிறுவனங்கள் ஒரு மூட்டையில் கட்டி தனியாக உள்ளே வைத்து விடுவார்கள். மழை வந்து ஆற்றில் நீர்வரத்து அதிகமாக இருக்கும் போது இந்த சாக்கு மூட்டையை நீரில் தூக்கிப் போட்டு விட பிரச்சனை முடிவுக்கு வந்து விடும்.

தொடக்கத்தில் 50 எண்ணிக்கையில் தொடங்கிய இந்த சாயப்பட்டறைகள் திருப்பூரின் ஏற்றுமதியின் அளவு அதிகமாக வேகமாக முன்னேறி 1300 என்ற எண்ணிக்கை வந்த போது தான் சாய நச்சின் விர்யம் தனது கோர முகத்தை காட்டத் தொடங்கியது. அதுவும் இந்த சாய நீர் காங்கேயம் வட்டத்தில் உள்ள ஓரத்துப்பாளையம் அணையில் போய்ச் சேர பல்லாயிரக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிப்படையத் தொடங்கியது.


சுத்திகரிக்கப்படாத சாய நீர் இந்த அணையை நோக்கி வந்து சேர அணையில் வாழும் உயிரினங்கள் செத்து மிதக்கத் தொடங்கியது.  மொத்த அணையில் உள்ள நீரும் பயன்படுத்த முடியாத சூழ்நிலை உருவாக விவசாயிகள் நலச்சங்கம் அமைத்து சாயப்பட்டறை முதலாளிகளுக்கு எதிராக நின்று போராடத் தொடங்கினர். நாளுக்குள் நாள் அதிகரித்துக் கொண்டிருந்த சாய நீரைப் பார்த்து விவசாயிகள் இந்த பிரச்சனையை நீதிமன்றத்திற்கு எடுத்துச் சென்றனர். சென்னை உயர்நீதி மன்றத்தில் அப்போது பணியில் இருந்த நீதியரசர் கற்பக வினாயகம் பார்வைக்குச் சென்றது.

அவர் கொடுத்த தீர்ப்பில் மற்றொரு சாராம்சத்தையும் சேர்த்து இருந்தார்.  சுத்திகரிக்கப்படாமல் சாய நிர் எவர் வெளியேற்றுகின்றார்களோ அவர்களிடம் ஒரு லிட்டருக்கு ஏழு பைசா வசூலிக்க உத்தரவிட்டார். இந்த ஏழு பைசா என்பது சாய நீர் சேரும் அணையை சுத்தப்படுத்திக் கொள்ளவும், பாதிப்படையும் விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு வழங்கவும் என்று தீர்ப்பு வழங்கினார்.  ஆனால் அவரையும் பதவி உயர்வு என்ற போர்வையில் டெல்லிக்கு அனுப்பி விட பழைய குருடி கதவைத் திறடி என்ற கதையாக திருட்டுத்தனமாக சாயநிர் கழிவு மீண்டும் வெளியேறத் தொடங்கியது. இதில் மற்றொரு கொடுமையும் உண்டு..

ஒரு சாயப்பட்டறை முதலாளி எத்தனை ஆயிரம் லிட்டர் வெளியேற்ற அனுமதி வாங்கியிருக்கிறாரோ அந்த அளவு மட்டும் வெளியேற்றுவதில்லை. திருட்டுத்தனமாக இரண்டு மடங்கு அளவு சாய நீரை வெளியேற்றுவதும் நடக்கத் தொடங்கியது. அதிக வீர்யம் உள்ள நச்சுக் கலவைகள் கலந்த சாய நீர் திருப்பூரிலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரத்துப்பாளையம் அணைக்கு செல்வதற்குள் இடையில் உள்ள அத்தனை நிலவள ஆதாரங்களையும் அழித்து முடித்து எப்போதும் போல அமைதியாக அணையில் உள்ள விவசாயிகள் பயன்படுத்தும் நீரைச் சென்றடைகின்றது.


பிரச்சனை சூடுபிடிக்க பொது சுத்திகரிப்பு நிலையம் உருவானது. குறிப்பிட்ட பகுதிகளில் உள்ள அந்தந்த நிறுவனங்கள் அங்கே உருவாக்கப்பட்ட பொது சுத்திகரிப்பு நிலையத்திற்கு தாங்கள் வெளியேற்றும் சாயநீரை அனுப்ப வேண்டும்.  அதன் நிர்வாகத்தை அந்தந்த சாயப்பட்டறை உரிமையாளர்கள் கவனித்துக் கொள்ள வேண்டும் என்று கொள்கைத்திட்டம் உருவாக்கப்பட்டது. அரசாங்க நிதி உதவியோடு உரிமையாளர்களும் கைகோர்க்க மொத்தம் 20 பொது சுத்திகரிப்பு நிலையங்கள் செயல்படத் தொடங்கியது. 

வசதியுள்ளவர்கள் தங்கள் நிறுவனத்திற்குள் தாங்களாகவே உருவாக்கி செயல்படத் தொடங்கினர். ஒவ்வொரு பொது சுத்திகரிப்பு நிலையமும் அந்தந்த நிறுவனத்திற்கு ஒரு குறிப்பிட்ட லிட்டர் என்றொரு வரையறை உருவாக்கியிருந்தது.  ஆனால் இதனை மதிக்காமல் மனம் போன போக்கில் செயல்படத் தொடங்கிய முதலாளிகளின் கழிவு நீர் இந்த சுத்திகரிப்பு நிலையத்திற்கு வராமலேயே திருட்டுத்தனமாக வெளியேறத் துவங்க பிரச்சனை அடுத்த கட்டத்திற்கு நகரத் தொடங்கியது. 

மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துடன் உருவாக்கப்பட்ட கண்காணிப்பு குழுவும் கைகோர்த்து திடீரென்று நடுஇரவில் சோதனைக்குச் சென்றபோதிலும் ஆற்றில் கலக்கும் நச்சுநீர் குறைந்தபாடில்லை. இடையே குறைபாடுகள் இருந்த பொது சுத்திகரிப்பு நிலையங்கள் மூடுவதும், பேச்சுவார்த்தையின் மூலம் மீண்டும் திறப்பதுமாக கண்ணாமூச்சி விளையாட்டு போலவே போய்க்கொண்டிருக்க விவசாயிகளின் கோபம் மாசுக்கட்டுப்பாட்டுத்துறையின் மேல் திரும்பியது.

உள்ளே வருகின்ற அதிகாரிகள் முறைப்படி கவனிப்பு பெற்று இவர்கள் எங்கள் எதிர்காலத்தை பாழாக்கி விட்டார்கள் என்று நீதிமன்றத்திற்குச் செல்ல 2006ல் ஜீரோ டிஸ்சார்ஜ் என்றொரு புதிய வார்த்தை அறிமுகமானது.  அதாவது வெளியாகும் சாய நீரில் ஒரு துளி அளவு கூட நச்சத் தன்மை இருக்கக்கூடாது. நீதிமன்ற உத்திரவு எப்போதும் போல உத்திரவாகவே இருந்தது. சாய நீர் எப்போதும் போல அதன் பயணத்தை தொடர்ந்து கொண்டேதான் இருந்தது.  ஆனால் இடைவிடாத பணியில் இருந்தாலும் சாயப்பட்டறை முதலாளிகள் இந்த பிரச்சனையை டெல்லி உச்ச நீதி மன்றத்திற்கு எடுத்துச் செல்ல அவர்கள் ஒரே வார்த்தையில் முடித்து விட்டார்கள்.

"சென்னை உயர்நீதிமன்றம் வழிகாட்டலின்படி நடந்து கொள்ளுங்கள். "

முதலாளிகள் தொழில் செய்ய வேண்டும்.  விவசாயிகள் நாங்கள் வாழ வழி செய்ய வேண்டும் என்று இரண்டு பக்கமும் மஞ்சுவிரட்டு போல வாய்தா மேல் வாய்தாவாக இழுத்துக் கொண்டே செல்ல இன்று உள்ளதும் போச்சு நெர்ள்ளக் கண்ணா என்கிற கதையாக மொத்த சாயப்பட்டறைகளையும் இழுத்து மூடிவிட்டு தரம் பார்த்து அனுமதி வழங்க வேண்டும் என்கிறரீதியில் வந்து முடிந்துள்ளது.

இந்த இடத்தில் சங்கடப்பட வேண்டிய விசயம் என்னவென்றால் இப்போது கொடுத்துள்ள தீர்ப்பு சாய்ப்பட்டறை முதலாளிகளும் மட்டுமல்ல.  2006 ஆம் ஆண்டு முதல் திருப்பூர் மாசுக்கட்டுப்பாட்டு துறையில் பணியாற்றக் கொண்டிருந்த அத்தனை அதிகாரிகளுக்கும் சேர்த்து நீதி மன்றம் ஒரு பெரிய ஓலையை அனுப்பி உள்ளது. முதலாளிகள் கொடுத்த பணத்தை மட்டும் வாங்கிக் கொண்டு பல்லைக்காட்டிய அதிகாரிகளின் வண்டவாளம் இனிமேல் ஒவ்வொன்றாக வெளியே வரக்கூடும்.

நீங்கள் திருபூருக்குள் உள்ளே வரவேண்டுமென்றால் தாராபுரம், பல்லடம், மங்கலம் அவினாசி போன்ற ஊர்களில் ஏதோவொன்றின் வழியாகத் தான் உள்ளே வரமுடியும்.  ஆனால் அவினாசி சாலையைத் தவிர மற்ற மூன்று வழிகளிலும் இன்று சாய்ப்பட்டறைகள் நீக்கமற நிறைந்துள்ளது. நெருக்கடி நிறைந்த இன்றைய திருப்பூர் வாழ்க்கையில் இந்த சாயப்பட்டறையைச் சுற்றி தான் சராசரி மக்களும் பணிபுரிந்து கொண்டு வாழ்ந்து கொண்டும் இருக்கிறார்கள். குழாய் வழியாக செல்ல வேண்டிய சாயநீர் மக்கள் பயன்படுத்தும் குடிநீரில் கலக்கும் போது இதன் வீபரீதம் இன்னமும் கொடுமையாய் இருக்கும் தானே?

திருப்பூர் நகரை வெளியே இருந்து பார்ப்பவர்களுக்கு டாலர் புழங்கும் நகரம் என்று அண்ணாந்து பார்க்க வைத்துக் கொண்டிருக்கிறது.  ஆனால் எத்தனையோ நவீனங்கள் சமகாலத்தில் வந்திருந்த போதிலும் இங்குள்ள முதலாளிகளின் அம்மாஞ்சித்தனம் மட்டும் மாறுவதாகத் தெரியவில்லை.  ஒரு தொழில் அடுத்த கட்டத்திற்கு எப்படி நகரும்

தங்களை எப்படி தயார் படுத்திக் கொள்ள வேண்டும்? என்பது குறித்து ஆய்த்த ஆடை ஏற்றுமதியாளர்களும் கவலைப்படுவதில்லை.  சார்புத் தொழிலாக இருக்கும் சாயப்பட்டறை முதலாளிகளும் கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை. இதற்கு மேலும் ஒற்றுமையில்லாமல் அவரவர் அவருக்குண்டான கணக்கில் மட்டும் குறியாக இருப்பதால் இந்த துறையில் உள்ள வளர்ந்து வருபவர்களின் பாடு பெரும் திண்டாட்டமாக போய்விடுகின்றது.

பெருநகர வளர்ச்சியை கணக்கில் எடுத்துக் கொண்டு விரைவான திட்டங்களை ஆட்சிக்கு வரும் எவரும் உடனடி தீர்வை கொண்டுவருவதில்லை.  அதன் பாதிப்பு இன்றைய திருப்பூர் போக்குவரத்து நெரிசல். இதைப்போலவே இந்த சாயப்பட்டறைகளுக்கு 2006 ஆம் ஆண்டு நெருக்கடி உருவாக இங்குள்ள எந்த முதலாளிகளும் விழித்துக் கொள்ளாமல் அரசியல் கட்சிகள் அடிக்கும் கூத்துகளுக்கு உறுதுணையாக இருக்க இப்போது மொத்தமாக பாதிக்கப்பட்டதும் இந்த முதலாளிகள் தான்.

ஆனால் இப்போது வந்துள்ள நீதிமன்ற உத்திரவை பார்த்ததும் எங்களுக்கு கால அவகாசம் கொடுங்க. உடனடியாக மின்சார துண்டிப்பு வேண்டாம் என்று கெஞ்சும் சூழ்நிலையில் உள்ளார்கள்.  ஆனால் இந்த ஜீரோ டிஸ்சார்ஜ் என்று ஆப்பை தானாகவே முதலில் சொறுகிக் கொண்டதும் இந்த சாயப்பட்டறை முதலாளிகள் தான்.  பணம் படைத்த சில முதலாளிகள் இந்த பிரச்சனை விஸ்ரூபமாக எடுக்க நாங்கள் சாதித்துக் காட்டுகிறோம் என்று அவரவர் சாயப்பட்டறைகளில் இந்த ஜீரோ டிஸ்சார்ஜ் என்கிற வழிமுறையை கடைபிடித்து விருதும் வாங்கிக் கொண்டார்கள்.  ஆனால் நடைமுறையில் பொருளாதார ரீதியாக சாத்யமில்லாத இந்த ஜீரோ டிஸ்சார்ஜ் தான் இன்று பாடாய் படுத்திக் கொண்டிருக்கிறது.

திருப்பூருக்கு சவாலாக இருக்கும் பங்ளாதேஷ் மற்றும் சீனாவில் அரசாங்கமே இந்த சுத்திகரிப்பு வேலையை கையில் எடுத்துக் கொண்டு முடிந்து வரைக்கும் சாய நீரை சுத்திகரிப்பு செய்து மீதி உள்ள நீரை கடலில் கலந்து விட்டுக் கொண்டிருக்கிறது. சென்கைக்கு வந்து திருப்பூர் முதலாளிக்ளுக்கு அழைப்பு விடுத்த குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கூட 24 மணி நேரத்தில் உங்களுக்குத் தேவையான அத்தனை வசதிகளை செய்து தருவோம் என்றார். ஆனால் தமிழ்நாட்டு அரசாங்கம் எப்போது விழிக்கும் என்பது மட்டும் தெரியவில்லை.

திருப்பூரில் தொடக்கம் முதல் குடிநீர் தட்டுப்பாடு எனப்து மிகப் பெரிய சவாலாக இருந்தது. மூன்றாவது குடிநீர் திட்டம் என்று முந்தைய அரசாங்கம் உருவாக்கிய புரிந்துணர்வில் திருப்பூருக்குள் எல் அண்ட் டி நிறுவனம் உள்ளே வர பாதிப் பிரச்சனை முடிவுக்கு வந்தது, சாயப்பட்டறைகளுக்குத் தேவைப்படும் தண்ணிரையும் இவர்கள் வழங்க சாலைகளில் ஓடிக் கொண்டிருந்த பல சாயப்பட்டறை லாரிகள் இன்னும் அடியோடு காணாமல் போய்விட்டது.. 

இதே எல் அண்ட் டி நிறுவனம் இந்த சாய கழிவு நீரை கடலில் கலக்கும் திட்டத்திற்க்காக தொடக்கத்தில் ஒரு திட்டத்தை வடிவமைத்து கொடுத்தது. தூத்துக்குடி கடலில் கொண்டு போய் சேர்த்து கலக்கும் திட்டமாகும்.  அதாவது 100 லிட்டர் சாய கழிவு நீரை சுத்திகரிக்கும் போது கடைசியாக 30 லிட்டரை அதில் உள்ள நச்சு அமில காரத் தன்மையை ஓர் அளவுக்கு மேல் சுத்திகரித்துவிட முடியாது.  உலகளவில் நூறு சதவிகித வெற்றியைத் தராத இந்த தொழில் நுட்பத்தை கடைபிடிக்க வேண்டும் என்பது தான் இப்போதுள்ள சவாலான விசயமாககும். அப்படியே செய்ய வேண்டுமென்றால் அது செலவு பிடிக்கும் சமாச்சாரம், உங்களுக்கு இப்போது ஒரு கேள்வி வருமே?

அதென்ன கடல் என்பது கழிவுகளை கொண்டு போய் இடமா என்றுநன்றாக யோசித்துப் பாருங்கள்.

இன்று ஒரு சாய்ப்பட்டறை என்பது வளர்ந்துள்ள நவீன மாற்றத்தில் பல கோடிகளை விழுங்கினால் தான் ஒரு நிறுவனமாக சந்தையில் நிற்க முடியும். எவரும் முழுத் தொகையும் கையில் வைத்துக் கொண்டு இந்த தொழிலில் இறங்க முடியாது. வங்கி முதல் வைத்துள்ள நகைகள் மற்றும் இடங்கள் மூலமாகத்தான் இவ்வளவு பெரிய முதலீட்டுக்காக வங்கியை நாடிச் செல்கிறார்கள். ஒரு சாயப்பட்டறை நிறுவனத்திற்கு ஆதாரமாக இருப்பது சாப்ட் புளோ என்ற ராட்ச எந்திரம்.  லட்சத்தில் தொடங்கிய பல கோடிகள் வரைக்கும் ஒவ்வொரு எந்திரமும் விழுங்கி தின்று விடும். 

எப்போது எனக்கு துணியைத் தந்து என் பசியை போக்கப் போகின்றாய் என்று மிரட்டிக் கொண்டிருக்கும். முதலாளிகளும் வசூலிக்க முடியாத கடன்களை மனதில் கொண்டு துணியை துணிவோடு சந்தையில் தேடிக் கொண்டு வந்து சேர்க்க வேண்டும். இல்லாவிட்டால் வங்கி கடன்கள் வட்டி குட்டி போட்டு முதலாளியை தலைமறைவாக வாழ வைத்துவிடும். நிறுவனத்தை நடத்த சாப்ட் புளோ எந்திரத்தின் தொடர்ச்சியாக சாயமேற்றிய துணியை உலர வைக்க ட்ரையர் என்ற எந்திரம் தேவை. மொத்த நிறுவனத்திற்கும் தேவைப்படும் தண்ணீர்.  சரி இதெல்லாம் ஒரு நிறுவனத்திற்குரிய கட்டுமான செலவு தானே என்கீறீர்களா

முதலீடு இத்துடன் முடிந்தால் பரவாயில்லையே? மாசுகட்டுப்பாட்டு வாரியம் சொல்லியுள்ள கழிவு நீரை சுத்தப்படுத்துதல்.  இதற்கு பணம் இருப்பவர்கள் தனியாக தங்கள் நிறுவனத்திற்குள்ளேயே ஆரோ என்றொரு அமைப்பை உருவாக்கி இருப்பார்கள்.  வாய்ப்பில்லாதவர்கள் பொது சுத்திகரிப்பு நிலையத்துடன் சார்ந்து இருப்பார்கள்.  இதற்கு உண்டான நடைமுறை மூலதன செலவு என்பது என்பதை விட இத்தனை பெரிய நிர்வாகத்தை நடத்திச் செல்ல முக்கியமானது மின்சாரம்.

தற்போதுள்ள தமிழ்நாட்டில் நிலவும் மின் வெட்டு காரணமாக ஒவ்வொரு முதலாளிகளும் எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்பதாக முழி பிதுங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஆடைத் தொழிலில் இருப்பவர்களை விட சாயப்பட்டறை முதலாளிகளுக்கு இந்த மின்சார பற்றாக்குறை என்பது தினந்தோறும் உயிர்போய் உயிர் வந்து கொண்டிருக்கும் சமாச்சாரமாகும்.  ஒரு வளர்ந்த சாய நிறுவனத்திற்கு 350 குதிரைதிறன் மோட்டார்கள் இருக்கிறதென்று வைத்துக் கொள்வோம்.  ஆனால் இவர்கள் இப்போது தமிழ்நாட்டு மின்சார வாரியம் உத்தரவின்படி இந்த முழுமையான குதிரைத்திறனை பயன்படுத்த முடியாது. 

எந்த அளவிற்குண்டான அனுமதி பெற்று குதிரைத்திறன் வைத்திருக்கிறார்களோ அதில் 30 சதவிகிதத்தை பயன்படுத்தக்கூடாது. மீதி உள்ள 70 சதவிகிதத்தை பயன்பாட்டுக்குள் வைத்துக் கொண்டு மிச்சம் மீதி தேவைப்பட்டால் ஜெனரேட்டர் வைத்துக் கொள்ள வேண்டியது தான். மீறிப் பயன்படுத்தினால் பயன்படுத்தும் ஒவ்வொரு யூனிட்டிற்கும் ரூபாய் 300 அபராத தொகையாக வசூலிக்கப்படுகின்றது. இது தவிர தினந்தோறும் இரண்டு மணி நேரம் நிரந்தர மின் தடை. அடுத்து பீக் அவர்ஸ் என்று சொல்லப்படும் மாலை நேரத்தில் எந்த பெரிய நிறுவனங்களும் தங்களின் மின்சாரத்தை பயன்படுத்தக்கூடாது. அந்த சமயத்தில் மின்சாரம் இருந்தாலும் ஒவ்வொரு நிறுவனங்களும் ஜெனரேட்டர்களைத்தான் பயன்படுத்த வேண்டும். மாதம் ஒரு முறை அந்தந்த பகுதியில் உள்ள மின்சார வாரியம் நடைமுறை பழுது பார்த்தல் என்ற போர்வையில் ஒவ்வொரு நிறுவனமும் குறிப்பிட்ட நாளில் ஜெனரேட்டர்களைத்தான் பயன்படுத்த வேண்டும்.  இதற்கெல்லாம் மீறி அறிவிக்கப்படாத மின்சாரத்தடை. 

இன்னும் பிரச்சனை முடிந்தபாடில்லை. சரி நிறுவனங்கள் பயன்படுத்தும் மின்சாரத்தில் இத்தனை குளறுபடி என்றால் சாய்பபட்டறைக்கு தேவைப்படும் தண்ணீர் பிரச்சனை வேறொரு ரூபத்தில் பலரின் கல்லாபெட்டிகளை காலி செய்து கொண்டிருக்கிறது. வராது வந்த மாமணியாய் திருப்பூருக்குள் இருக்கும் எல் அண்ட் டி நிறுவனம் சாயப்பட்டறை நிறுவனங்களுக்கு தொடக்கத்தில் தான் வழங்கிக் கொண்டிருந்த நீருக்கு ஒரு லிட்டருக்கு 3 பைசா என்று விலை நிர்ணயம் செய்திருந்தது. ஒவ்வொரு சாயப்பட்டறை நிறுவனத்துடனும் தொடக்கத்திலேயே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கெட்டிக்காரத்னமாக வாங்கி வைத்திருந்தது. எல் அண்ட் டி நிறுவனம் உருவாக்கிய ஒப்பந்தம் மற்றொன்றையும் சுட்டிக் காட்டுகின்றது.  ஒவ்வொரு சாயப்பட்டறையும் தினந்தோறும் தேவைப்படும் மொத்த லிட்டர் அளவையும் தெரிவித்து விட வேண்டும்.

சாயப்பட்டறை செயல்படுகின்றதோ இல்லையோ அது குறித்து எல் அண்ட் டி நிறுவனத்திற்கு கவலையில்லை.  போட்ட ஒப்பந்தத்தின் படி அந்த தண்ணீரை வாங்கியாக வேண்டும். அப்படி முழுமையாக பயன்படுத்திக் கொள்ளாத பட்சத்தில் சாயப்பட்டறை நிறுவனம் போட்ட ஒப்பந்தத்தின் படி மூன்றில் ஒரு பங்கான தண்ணீருக்குண்டான கட்டணத்தை ஒழுங்கு மரியாதையா எடுத்து வைத்து விட வேண்டும்.  ஒரு நிறுவனம் தினந்தோறும் எங்களுக்கு ஒரு லட்சம் லிட்டர் வேண்டும் என்று சொல்லியிருந்தால் பயன்படுத்தா சூழ்நிலையில் இருந்தாலும் 30 000 லிட்டருக்கு உண்டான பணத்தை எடுத்து வைத்து விடவேண்டும். இதிலும் எல் அண்ட் டி நிறுவனத்தின் தில்லாலங்கடி வேலை ஒன்று உண்டு. தொடக்கத்தில் ஒரு லிட்டர் மூன்று பைசா என்று போடப்பட்ட ஒப்பந்தம் இப்போது ஆறரை பைசாவாக உயர்த்தி உள்ளனர்.  எவரும் ஏன் என்று கேட்பதும் இல்லை?

மொத்தத்தில் ஒரு நிறுவனம் தன்னை சந்தையில் நிலைப்படுத்திக் கொள்ள இத்தனை தடைகளைத் தாண்டி வரவேண்டியுள்ளது. முதலில் இந்த ஜீரோ டிஸ்சார்ஜ் என்ற பஞ்சாயத்தை நாட்டாமையிடம் கொண்டு போய் நிறுத்தி ஒரு தீர்ப்பை வாங்கி விடுவோம்.

அதென்ன ஜீரோ டிஸ்சார்ஜ்.?

ஒரு லிட்டர் சாய கழிவு நீர் வெளியாகின்றது என்றால் அதில் ஒரு துளி கூட விஷத்தன்மை இருக்கக்கூடாது. இதற்குப் பெயர் தான் ஜீரோ டிஸ்சார்ஜ்.  இது சாத்தியம் தானாஇந்த இடத்தில் சில குறிப்பிட்ட சாயப்பட்டறை முதலாளிகள் தங்களுக்குத் தாங்களே சொருகிக் கொண்ட ஆப்பையும் நாம் பார்க்க வேண்டும்.  தனியாக தங்கள் நிறுவனத்திற்குள் இந்த சுத்திகரிப்பு நிலையத்தை உருவாக்கி வைத்திருந்தவர்கள் இது முறை சாத்தியமானதே என்று தப்பட்டம் தட்டி பசுமை நாயகன் விருது வரைக்கும் வாங்கிக் கொண்டார்கள்.  ஆனால் எப்படி சாத்தியம் என்பது அப்போது யாருக்கும் புரியவில்லை.  இன்று அவரவர் செய்து பார்க்கும் போது அதன் வண்டவாளம் முழுக்க இன்று தண்டவாளத்தில் ஏறிக்கொண்டிருக்கிறது. கழிவுநீரில் மிச்சமாகும் வண்டலை என்ன செய்வது தான் இதன் முக்கிய பிரச்சனையே.  சாயமேறிய நூறு லிட்டரை சுத்தம் செய்தால் மீதம் இருக்கும் சுத்தப்படுத்த முடியாத  30 லிட்டரில இருந்து தான் இந்த பஞ்சாயத்தே தொடங்குகின்றது. 

சுத்திகாரிப்பு என்பது பல தடங்களை தாண்டி வருவது.  முதலில் நிறத்தை நீக்க வேண்டும்.  அதற்குப் பின்னால் அந்த நீரில் உள்ள விஷத்தன்மையை நீக்க பாக்டீரியாவை வளர்க்க வேண்டும். இதன் தொடர்ச்சியாக சி.ஓ.டி, (பயோ கெமிக்கல் ஆக்ஸிஜன் டிமாண்ட்) பி.ஓ.டி (பயோ கெமிக்கல் ஆக்ஸிஜன் டிமாண்ட்) மூலம் வளர்க்கப்பட்டுக் கொண்டிருக்கும் பாக்டீரியாவுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டு அவற்றை கவனித்துக் கொண்டு வரவேண்டும். . எம்.எல்.எஸ்.எஸ் (மிக்சர்டு லிக்யூடு சஸ்பெண்டேடு சாலிட்) என்ற பாயாலாஜி முறைப்பாடுகளை கூர்மையாக கவனித்துக் கொண்டிருக்கவேண்டும்.

ஒவ்வொரு நிகழ்வுக்கும் பிரிக்கப்பட்ட முதல் இரண்டாவது மூன்றாவது தொட்டி என்று ஒரு நிலையாக இந்த சாய கழிவு நீர் பயணித்துக் கொண்டே வந்தாலும் இத்தனை தொழில் நுட்ப விசயத்திலும் தப்பித்து வரும் கழிவு நீர் சில சமயம் உள்ளே இருக்கும் பாக்டீரியாகளிடமிருந்து தப்பித்து வந்து நமக்கே இந்த விஷ நீர் தண்ணீ காட்டி விடக்கூடியது. இத்தனை பஞ்சாயத்துகளை தாண்டி வர முக்கிய இந்த சுத்திகரிப்பு நிலையம் முறைப்படி தொடர்சிசியாக ஓடிக் கொண்டிருக்க வேண்டும். இதற்கு தேவைப்படும் மின்சாரம்?. சுத்திகரிப்பின் ஒவ்வொரு அடியிலும் இந்த மின்சாரம் தேவை.  சுத்திகரிப்பு நிலையத்தில் குறைந்தபட்சம் 15 நாட்களுக்கு ஒரு முறை படிந்த உப்புக்களை நீக்கவேண்டும்.  இந்த சுத்திகரிப்பு சுழற்சியில் மொத்தமாக ஏறக்குறைய 12 மோட்டார்கள் செயல்பட்டுக் கொண்டிருக்க வேண்டும். ஒரு மோட்டார் இயங்காமல் இருந்தாலும் மொத்தமும் பெரிய அக்கப்போரை உருவாக்கிவிடும்.

மின்வெட்டில் தத்தளித்துக் கொண்டிருக்க எத்தனை நாளைக்கு ஜெனரேட்டர் போட்டு ஒவ்வொருவரும் ஓட்டிக் கொண்டிருப்பார்கள். முறைப்படி சமூக அக்கறையுடன் செயல்பட்டுக்கொண்டிருக்கும் சில முதலாளிகளுக்கிடையே  பல பவாத்மாக்களும் இருக்கிறார்கள்.  ஒரு நாள் சேரும் பத்து லட்சம் லிட்டர் கழிவுநீரை 300 குதிரைத்திறன் கொண்ட மோட்டாரால் நள்ளிரவு 1 மணி முதல் 3 மணிக்குள் ஆற்றில் வெளியேற்றி விடும் ஆகாய சூரர்களை எவரும் தட்டிக் கேட்க தயாராக இல்லை என்ற காரணமே இன்றைய இந்த தீர்ப்பு வரக் காரணமாக அமைந்தது.