Saturday, August 30, 2014

யோசிக்காதே? ஓடிக் கொண்டேயிரு!

4. து.மு  -  து.பி

என் அறையை விட்டு வெளியே வந்தேன். 25000  சதுர அடி கொண்ட பெரிய தொழிற்சாலையின் தொடக்கம் முதல் குறிப்பிட்ட பகுதி வரைக்கும் எந்திரங்கள் நேர்த்தியாக வரிசைக்கிரமமாக  இருந்தன.  பல எந்திரங்களில் தொழிலாளர்கள்  (TAILORS)இல்லை. 


அங்கே பணிபுரிந்து கொண்டிருந்தவர்களிடத்தில் அதிக அளவு சுறுசுறுப்பு இல்லாமல் தைத்துக் கொண்டிருப்பதை பார்க்க முடிந்தது.  

தொழிற்சாலையின் உள்ளே பரவியிருந்த  உஷ்ணக்காற்று என்னைத் தாக்கியது. எந்திரங்களின் சப்தமும்,  தொழிலாளர்களின் உழைப்பையும் கவனித்தப்படியே ஒவ்வொரு பகுதியாக நகர்ந்து கொண்டிருந்தேன்.  ஒவ்வொரு இடத்திலும் பெயர் பலகை மாட்டப்பட்டு இருந்தது. 

STITCHING SECTION. CHECKING SECTION, FINAL CHECKING, AQL AREA, IRON SECTION, PACKING SECTION என்று தனியாக இருந்தது. 

மற்றொரு பகுதியில் LOT SECTION, CUTTING SECTION, STORE ROOM செயல்பட்டுக் கொண்டிருந்தன.  SAMPLES SECTION மற்றொருபுறம் இருந்தது. அங்கிருந்த சிலர் என்னை சுட்டிக்காட்டி பேசிக் கொண்டிருந்தனர். 


அங்கே பணிபுரிந்து கொண்டிருந்த எவரும் என்னை கண்டு கொள்ளவில்லை.

ஒரு ஆய்த்த ஆடை உருவாக்கத்தில் தொடக்கம் முதல் இறுதி வரைக்கும் பலதரப்பட்ட துறைகள் சம்மந்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு துறையும் ஒரு உலகம். ஒவ்வொரு உலகமும் ஒரு நாடு போன்றது. அந்த நாட்டிற்கு ஒரு மன்னர், ஒரு மந்திரி, ஒரு சேனாதிபதி போன்ற படைபட்டாளங்கள் இருக்கும். அந்தந்த துறையில் பணிபுரியும் பெண்கள் பல சமயம் மகுடம் சூட்டாத ராணியாகவும் சிலரோ அந்தப்புற இளவரசியாக இருப்பார்கள். அவற்றை நாம் படிப்படியாக பார்க்கலாம்


ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள்.......

அத்தியாயம் 5  யோசிக்காதே?  ஓடிக் கொண்டேயிரு!

அப்போது தான் நான் பணியாற்றி வந்த பல நிறுவனங்களைப் பற்றி, அங்கு நடந்த சம்பவங்களைப் பற்றி யோசிக்கத் துவங்கினேன்.


தன் சுய விருப்பு வெறுப்புக்காக நிறுவனங்களை கவிழ்த்தவர்கள்,  குறுகிய காலத்திற்குள் நிறுவன பெருக்கிக் கொண்டவர்கள், உண்மையான உழைப்பாளிகளை உதாசீனப்படுத்தியவர்கள், தங்களது பலவீனங்களுக்காக வளர்ந்து கொண்டிருந்த நிவளர்ச்சியை விட தங்களது பொருளாதார வளர்ச்சியை நிறுவனத்தை வேரோடு வெட்டி சாய்த்தவர்கள் என்று பலவற்றையும் பார்த்த காரணத்தால் எல்லா நிகழ்வுகளுமே இயல்பான தொழில் வாழ்க்கையின் ஒரு அங்கமாக எனக்குத் தெரிய தொடங்கியது. 

காரணம் எல்லாநிலையிலும் எல்லோருக்கும் பணம் தான் பிரதானமாக இருந்தது. ஒருவர் பணத்தை முதலீடாக போட்டு விட்டு பெரிய லாபத்தை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றார். மற்றொருவர் குறுக்கு வழியில் பணத்தை துரத்திக் கொண்டிருக்கின்றார். மொத்ததில் இருவருக்குமே தூக்கம் தேவையில்லாமல் போய்விடுகின்றது. முதலீடு செய்தவர் முதலாளி. ஆனால் அவரின் லாபத்தை தவறான வழியில் அடையக் காத்திருப்பவர் பணியாளர். 

ஐம்பது ரூபாய் திருட்டு முதல் மாதம் ஐந்து லட்சம் திருட்டுத்தனம் வரைக்கும் அவரவர் பதவிக்கு தகுந்தாற் போல நடந்து கொண்டேயிருப்பதால் கடைசியாக பாதிக்கப்படுவது நிறுவனத்தின் வளர்ச்சியே.  கடைசியில் ஒரு நாள் நிறுவனம் வங்கியில் போய் சிக்கிவிடுகின்றது.  

இப்படி சிக்கிய நூற்றுக்கணக்கான நிறுவனங்களின் கதையென்பது அவலத்தின் உச்சமாக இருக்கும். வெளிநாட்டுக் கார்களில் பவனி வந்த பல முதலாளிகள் இன்று வெளியே தலைகாட்ட முடியாத நிலைக்கு வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். 


Sunday, August 17, 2014

தொட்டுப் பார்த்து விடவும்

மரங்கள் அமைதியாக இருந்தாலும் காற்று விடுவதில்லை. இலைகள் அசைந்தபடியே தான் இருக்கும். இதுவே தான் எழுதிக் கொண்டிருப்பவர்களும் நடக்கும் போல. கடந்த மாதத்தில் எழுதப்பட்ட கட்டுரைகளை இங்கே அதன் சுருக்கத்தையும், வெளியான தளத்தையும் இங்கே தந்து விடுகின்றேன். வேலைப்பளூ, கடினமான பணிச்சூழல் என்று எத்தனை காரணங்கள் சொன்னாலும் எழுதிய பின்பு கிடைக்கும் அங்கீகாரம் நம் சோர்வை துரத்தி விடுகின்றது.  

அப்படித்தான் எழுத்துலகம் இன்று வரையிலும் என்னை இயக்கிக் கொண்டிருக்கின்றது.  வாசிக்க விரும்புவர்கள் இணைப்பை தொட்டு பார்த்து விடவும்.

வலைத்தமிழில் தற்பொழுது  நான் தொடராக எழுதிக் கொண்டிருக்கும் "ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள்.............."


1. பஞ்சபாண்டவர்கள் 

“சார்… உங்களைப் பஞ்சபாண்டவர்கள் அழைக்கின்றார்கள்” 

என் அறையின் கண்ணாடிக் கதவை பாதித் திறந்தபடி உள்ளே நுழையாமல் தலையை மட்டும் நீட்டியபடி என் உதவியாளர் பெண் குறும்பாகச் சிரித்துக் கொண்டே ஆங்கிலத்தில் சொன்னபோது அந்த வாரத்தில் முடிக்க வேண்டிய கோப்புகளோடு போராடிக் கொண்டிருந்தேன். 

இருபது வயதுக்குரிய இளமையும், அழகும் உள்ள இளைஞிக்கு இயல்பாகவே குறும்புத்தனம் அதிகம். அவரின் இயல்பான கலாய்த்தல் என்பதாக எடுத்துக் கொண்டு அடுத்து முடிக்க வேண்டிய கோப்புகளை எடுக்கத் துவங்கினேன். 
“சார்… உண்மையிலேயே உங்களை அழைக்கின்றார்கள். இப்பொழுது தான் மேலேயிருந்து தகவல் வந்தது” என்றார். 

வாரத்தின் துவக்க நாளில் இதென்ன கொடுமை? என்று மனதில் நினைத்துக் கொண்டே புருவத்தைத் தூக்கி “ஏதும் பிரச்சனையா?” என்று சைகையால் கேட்டேன். அவரும் அதே புருவ மொழியில் “தெரியலையே?“ என்று சொல்லிவிட்டு “இன்றைக்கு மாட்டிக் கொண்டீர்களா?” என்று ஒரு விதமாகச் சுழித்துச் சிரித்தபடியே வேறுபக்கம் நகர்ந்தார். 

“பஞ்சபாண்டவர்கள்” என்றால் நான் பணிபுரிந்த நிறுவனத்தில் பலருக்கும் பேதி வரவழைக்கும் சமாச்சாரம்.   தொடர்ந்து வாசிக்க


2. என் கேள்விக்கு என்ன பதில்?

"அத்துவானக்காடு. ஆள்நடமாட்டம் கூட அதிகமாக இருக்காது. அந்த நிறுவனத்தைச் சுற்றிலும் உள்ள இடங்களை நாம் பார்க்கும் போது சுடுகாடு போலவே தெரியும். அந்தப் பகுதியில் அந்த நிறுவனத்தின் கட்டிடம் மட்டும் தனியாகத் தெரியும். ஊருக்குள் இருந்த கட்டிடத்தில் இருந்து மாறி இரண்டு வருடத்திற்கு முன் தான் அங்கே மாறியிருக்கின்றார்கள். ஒரு இறக்குமதியாளர் (BUYER) எதிர்பார்க்கும் அத்தனை வசதிகளும் உள்ளே உள்ளது. அந்த நிறுவனத்தின் பக்கத்தில் வீடுகள் கூட எதுவும் கிடையாது. இப்போது தான் ஒவ்வொன்றாக வந்து கொண்டிருக்கின்றது. தூரத்தில் சாலையில் இருந்து நாம் பார்த்தால் அந்த நிறுவனத்தின் மேலே உள்ள வடிவம் மட்டும் தெரியும். அந்த கூரை வடிவம் பச்சை நிறத்தில் இருக்கும். காரணம் இயற்கைக்கு தொந்தரவு இல்லாத அமைப்பில் உருவாக்க வேண்டும் என்ற நிலையில் அந்த நிறுவனத்தை அமைத்துள்ளனர்"

என் நண்பர் எனக்கு முதல்முறையாக பஞ்சபாண்டவர்கள் குறித்து அறிமுகம் செய்து வைத்த போது அந்த நிறுவனத்தைப் பற்றி அடையாளம் என்று இப்படித்தான் சொன்னார். அப்பொழுது திருப்பூருக்குள் இப்படிப்பட்ட நிறுவனமும் உள்ளதா? என்ற ஆச்சரியம் என் மனதில் உருவானது. 3. பணமே பயம் போக்கும் மருந்து

"நீங்கள் தொழிலாளர்கள் நலன் குறித்துச் சிந்திப்பது இருக்கட்டும். முதலில் உங்கள் நிறுவனத்தின் தற்போதைய நிதி சார்ந்த செயல்பாடுகள் திருப்திகரமாக இருக்கின்றதா?"

நான் இப்படியொரு கேள்வியைக் கேட்பேன் என்று அந்த அறையில் இருந்த பாஞ்ச் கூட்டம் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். வேலை தேடி வந்தவன் வேலை கொடுப்பவர்களிடமே தைரியமாகவே கேட்டு விட்ட போதிலும் எனக்குள் சின்னக் குறுகுறுப்பு இருக்கத்தான் செய்தது.

அதையும் மீறியும் கேட்கக் காரணம் ஒரு நிறுவனத்தின் நிர்வாக முறைகள் பாராட்டத்தக்கதாக இருக்கலாம். ஆனால் ஆதாரம் என்பது பணம் மட்டுமே. காசு தான் கடவுள். பணம் தான் எல்லாவற்றையும் தீர்மானிக்கும் வல்லமை கொண்டது. வாரச்சம்பளம், மாதச்சம்பளம், துணை மற்றும் சார்பு நிறுவனங்களுக்கு அந்தந்த சமயத்தில் கொடுக்க வேண்டியது என ஒவ்வொன்றும் சரியாக இல்லாவிட்டால் இரத்தம் இல்லாத உடம்பு போலக் களையிழந்து ஜீவனற்று இருக்கும். 

கோமா நிலையில் இருப்பவரை வைத்து என்ன செய்ய முடியும்? பலருக்கும் சுமையாகத்தான் தெரியும்.