Sunday, February 26, 2017

கருத்து சொல்ல விரும்பவில்லை

சமீப காலமாகப் பொருளாதார ரீதியாக வெற்றியடைந்தவர்களின் வாழ்க்கை முறைகளை அதிகம் கவனித்து வருகின்றேன். அவர்கள் வாழ்க்கை முறை, எண்ணங்கள், அவர்களின் தனிப்பட்ட நிர்வாகத் திறமை போன்றவற்றை அதிகம் கவனிக்கும் போது "அதிர்ஷ்டம்" என்ற வார்த்தையின் அர்த்தத்தையும் இணைத்துப் பார்க்கின்றேன். 

நமக்கு வயதாகும் போது நமக்குள் இருக்கும் அனுபவமும், அதன் விளைவாக உருவான எண்ணங்களையும், வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கையும் ஒப்பிட்டுப் பார்த்த போது சில விசயங்கள் புரிந்தது. நாம் உழைப்பு என்பதனை மட்டும் கவனத்தில் எடுத்துக் கொள்கிறோம். ஆனால் இவ்வுலகில் கீழ்த்தட்டு முதல் மேலே உள்ளவர்கள் வரைக்கும் அனைவருமே ஏதோவொரு வகையில் அவரவருக்குத் தெரிந்த வரையில் உழைத்துக் கொண்டே தான் இருக்கின்றார்கள். 

ஆனால் எல்லோரும் பொருளாதார ரீதியாக வெற்றியடைவதில்லை. அப்போது தான் ஆன்மீகம், விதிப்பயன் போன்ற வார்த்தைகள் இங்கு அறிமுகம் ஆகின்றது. 

ஆனால் ஒரு விசயத்தை நாம் மறந்து விடுகின்றோம். நாம் என்ன தான் கடுமையான முறையில் உழைத்தாலும், அவரவர் பணியில் அதிகபட்ச திறமையைக் காட்டினாலும், நாம் செய்யும் செயல்கள் அனைத்தும் அந்தந்த சூழ்நிலையோடு பொருந்திப் போயிருக்கும் பட்சத்தில் அது சாதாரண வெற்றி, அதிகப்படியான வெற்றி என்ற இரண்டு விதமான விளைவுகளை உருவாக்கியுள்ளது என்பதனை உணர்ந்து கொள்ள முடிந்தது. 

"எண்ணங்கள் விளைவுகளை உருவாக்குகின்றது" என்ற வாசகம் எல்லா இடங்களிலும் பொருந்திப் போய்விடுவதில்லை. "உழைப்பதனால் மட்டுமே உயர்ந்த இடத்தை அடைந்து விட முடியும்" என்ற கொள்கையும் இந்த இடத்தில் அடிபட்டுப் போய்விடுகின்றது. 

சூழ்நிலைகள் மற்றும் சரியான நேரத்தில் சரியான விசயங்களைச் செய்வது, பலரின் ஆதரவு. இந்த மூன்றும் ஒன்றுடன் ஒன்று பொருந்திப் போகும் போது தான் மகத்தான வெற்றிக் கிடைக்கின்றது என்று முடிவுக்கு வர முடிந்தது. 

இதனை இந்த இடத்தில் சொல்வதற்குக் காரணம் உண்டு. ஆறு ஆண்டுகளுக்கு மேலோக 700 பதிவுகளுக்கு அப்பாற்பட்டு இன்னமும் எழுதிக் கொண்டிருக்கின்றேன். அரசியல் பதிவுகள் எழுதும் போது இரண்டு நாளில் அதிகபட்சம் 1500 பேர்கள் வந்து படிப்பார்கள். ஆறேழு மாதங்களில் குறிப்பிட்ட தலைப்புகள் 7000 பேர்களுக்கு மேற்பட்டவர்கள் படித்தார்கள் என்று புள்ளி விபரங்கள் சுட்டிக்காட்டும். 

ஆனால் சென்ற பதிவு பல ஆச்சரியங்களையும், நம்பவே முடியாத அதிர்ஷ்டத்தையும் எனக்கு உணர்த்தியது. சட்டத்தின் பிடியில் சிக்கி, இறந்து போன ஏ1 குற்றவாளி என்று அழைக்கப்படும் ஜெ. ஜெயலலிதா குறித்து எழுதப்பட்ட பதிவு இரண்டு நாளில் 3000 பேர்கள் வந்து படித்தார்கள். ஆனால் கடந்த ஏழு நாட்களில் 91 000+ பேர்கள் வந்து படித்துள்ளார்கள். 

இது எதிர்கால ஆவணம் போல இருக்க வேண்டும் என்ற கருத்தில் கொண்டு அதிக நேரம் செலவிட்டு, பலவற்றை ஒப்பிட்டு, சேகரிக்க வேண்டிய தகவல்களைச் சரிபார்த்து, ஆவணங்களை இணைத்து உறுதிப்படுத்திக் கொண்டே வெளியிட்டேன். 

அதற்குத்தான் கிடைத்த பலன் இது. 

என் உழைப்பு மட்டும் காரணமல்ல என்பதனை உறுதியாகச் சொல்ல முடியும். காரணம் சமூக வலைத்தளங்களின் மாற்றங்களை நாம் உள்வாங்கியே ஆக வேண்டும் என்பதனை இது எனக்கு மறைமுகமாக உணர்த்தியது. 

முகநூல் என்று அழைக்கப்படும் ஃபேஸ்புக் என்பதன் நீளம் மற்றும் அகலத்தை இதன் மூலம் என்னால் உணர்ந்து கொள்ள முடிந்தது. ஏறக்குறைய 25 பேர்களுக்குப் பகிர்ந்து இருந்தார்கள். கடந்த நாலைந்து வருடமாக இந்த முகநூலை நான் பயன்படுத்திக் கொண்டு வந்தாலும் அதன் மூலம் எனக்கு எவ்வித ஈர்ப்பும் உருவாகவில்லை. காரணம் 70 சதவிகித பேர்கள் தங்கள் குடும்பப் படங்களைப் பகிர்வதில் கவனம் செலுத்துகின்றார்கள். மீதி சாதி, மதம் போன்ற அக்கப்போர்களில் கவனம் செலுத்துகின்றார்கள். 

விரல் விட்டு எண்ணிக்கையுள்ள நபர்கள் மூலம் மட்டுமே ஊடகத்தின் மூலம் மறைக்கப்பட்ட பல விசயங்களை அந்தந்த துறைகளில் உள்ள நபர்கள் மூலம், நடைபெறும் விவாதங்கள் மூலம் தெரிந்து கொள்ள முடிகின்றது. 

சமீபத்தில் கேரளாவில் நடந்த நடிகை பாவனா விற்கு நிகழ்ந்த பாலியல் தொந்தரவு என்ற ஒரு வரிக்குப் பின்னால் பல செய்திகள் உள்ளது. குறிப்பாக முத்தூட் பைனான்ஸ் இயக்குநர் வெட்டிக் கொலை செய்யப்பட்டது எப்படி என்பது முதல் அந்தச் சமயத்தில் இந்த நடிகை எந்த நிலையில் இருந்தார் என்பது வரைக்கும் பல புதிர்கள் உள்ளது. அதற்குப் பின்னால் மறைக்கப்பட்ட பல உண்மைகள் யாரோ ஒருவர் போகிற போக்கில் தெளிவாக எழுதி வைத்து விட்டுச் சென்று விடுகின்றார்கள். 

இதே போலச் சமகால அரசியல் செய்திகளுக்குப் பின்னால் உள்ள பேரங்கள், மிரட்டல்கள், கூட்டல், கழித்தல் கணக்குகள் போன்ற அனைத்தும் வெளி வந்து கொண்டேயிருக்கின்றது. ஆனால் கைவிரல்களால் நகர்த்திக் கொண்டே செல்லும் பழக்கம் உள்ளவர்களால் இது போன்ற செய்திகள், நடைபெறும் விவாதங்களை எப்படி உள்வாங்குகின்றார்கள்? இதன் விளைவுகளை அவர்கள் பார்வையில் எப்படி அடுத்த முறை பகிர்ந்து கொள்கின்றார்கள் என்று யோசித்துப் பார்த்தால் "சுயபாதுகாப்பு" என்ற போர்வையில் ஒளிந்து கொள்கின்றார்கள். "நான் கருத்து சொல்ல விரும்பவில்லை" என்ற வாசகத்தைத் தேர்ந்து எடுத்துக் கொள்கின்றார்கள். 

பதவியில் இருப்பவர்கள், நல்ல சம்பளத்தில் பணியில் இருப்பவர்கள், ஆதாயம் கருதி அரசியல் தலைமையை ஆதரிப்பவர்கள் என இந்த மூன்று பிரிவுகளும் "காரியத்தில் மட்டும் கண்ணாக" இருக்கின்றார்கள். 

ஆனால் ஓட்டுப் போட்டு விட்டு அரசியலுக்கும் எங்களுக்கும் சம்மந்தம் இல்லை என்று வாழ்ந்து கொண்டிருக்கும் கோடிக்கணக்கான மக்களைப் போலச் சமூகவலைத்தளங்களில் எந்த எதிர்பார்ப்புமின்றித் தங்கள் கருத்துக்களை, தங்களுக்குத் தெரிந்த விசயங்களைப் பயம்கொள்ளாது எழுதி வைக்கின்றார்கள். இதன் மூலம் பல ஆக்கபூவர்மான விவாதங்கள், முன்னெடுப்புகள், கவன ஈர்ப்பு போன்றவை சமூக வலைத்தளங்களில் நடைபெற்று வருகின்றது. இதன் காரணமாகவே இன்று முகநூல் பக்கம் கவனம் செலுத்த வேண்டும் எண்ணம் பலருக்கும் மெதுமெதுவாக உருவாகிக் கொண்டே வருகின்றது. 

அரசியல்வாதிகள் மற்றும் பிரபல்யங்கள் மனதில் கிலியடிக்கின்றது. தங்கள் முகச் சாயம் வெளி வந்துடுமோ என்று பயப்படும் சூழ்நிலை உருவாகின்றது. முகநூல் என்ற வசதியை விட வாட்ஸ் அப் என்ற தொழில் நுட்பம் இன்னமும் ஆழமாக ஊடுருவுகின்றது. பலரையும் பல விசயங்களைப் பற்றி விவாதிக்க வைக்கின்றது. பத்திரிக்கைகளால் செய்ய முடியாத அத்தனை விவாதங்களையும் முன்னெடுக்கின்றது. 

சரியோ? தவறோ? பொய்யோ? அதீத கற்பனை என்று பலவகைகளில் செய்திகள் இருந்தாலும் ஒவ்வொரு மனிதர்களின் ஆழ்மனம் வரைக்கும் இழந்து போன போராட்டக்குணத்தை மெதுமெதுவாக முன்னெடுக்கக் காரணமாக உள்ளது. சமீப காலமாக உலகம் முழுக்கக் கவனத்தை ஈர்த்த "ஜல்லிக்கட்டு" போராட்டமும், மத்திய மாநில அரசாங்கங்கள் இறங்கி வந்தது அவசரச் சட்டம் கொண்டு வந்ததற்கும் முக்கியக் காரணமாக இருந்ததும் இந்த வாட்ஸ் அப் உருவாக்கிய தாக்கம் தான். 

50 வருடங்களுக்கு முன் என்ன நடந்தது? என்பதனை எவரும் இங்கே ஆதாரப்படுத்தி வைக்காமல் இருந்த இந்தச் சமூகத்தில் இன்று நல்லது, கெட்டது, தேவையானது, தேவையற்றது என்ற பாரபட்சம் இல்லாத அத்தனை விசயங்களையும் இப்போதுள்ள பல்வேறு தொழில்நுட்ப வசதிகளின் மூலம் சமானியன் கூட ஆவணப்படுத்தும் அளவிற்கு இங்கே தொழில் நுட்ப மாற்றங்கள் ஒவ்வொரு மனிதருக்கும் உருவாகியுள்ளது. முன்பு எதனை வைத்துக் கொண்டு எதிராளியுடன் பேசுவது என்ற எண்ணம் இருந்தது. இப்போது ஒரு விசயத்தைப் பல்வேறு கூறுகளாகப் பிரித்துப் போட்டு பேச அத்தனை வாய்ப்புகளும் இருப்பதால் இங்கு எல்லோரும் பேச முடியும். எவரும் இது நானில்லை? என்று சொல்ல முடியாது. இது மாற்றத்தின் அடிப்படை மட்டுமே. இன்னும் பல படிகள் கடக்க வேண்டும். 

காரணம் இங்கே ஜனநாயகம் என்ற பெயரில் குடும்பச் சர்வாதிகாரமும் குறிப்பிட்ட சிலருக்குமான வாழ்க்கை வசதிகளுக்காக மட்டுமே இங்கே அரசியல் அதிகாரம் உள்ளது. அவர்களைப் பார்த்து நாம் கேள்வி கேட்க நம்மிடம் ஆதாரப்பூர்வமான தகவல்கள் வேண்டும். அந்த வேலைகளைத்தான் நவீன தொழில் நுட்ப வசதிகள் நமக்கு உருவாக்கித் தந்து கொண்டிருக்கின்றது. இன்னும் சில காலம் கழிந்து நம் குழந்தைகள் வாழப் போகும் உலகில் அதிகாரத்தை வைத்துக் கொண்டு ஆட்டம் போட்டவர்கள் குறைந்தபட்சம் குற்றவுணர்ச்சியோடு மக்கள் முன்னிலையில் நிற்கும் சூழ்நிலையைப் புதிய மாற்றங்கள் கொண்டு வந்து சேர்க்கும் என்று நம்புகிறேன். 

இந்தப் புள்ளியின் தொடக்கத்தைப் புரிந்து கொண்டவர்கள் மட்டுமே இனி வரும் காலங்களில் பெரும்புள்ளி ஆக முடியும். மற்ற அத்தனை பேர்களின் முகமும் இப்போது சசிகலாவிற்கு நிகழ்ந்தது போலக் கரும்புள்ளியாக மாற்றப்படும்.

Sunday, February 19, 2017

A1 குற்றவாளி ஜெ. வின் உயில் சாசனம்


ஓரு குடும்பத்தின் தலைவர் என்றால் தங்கள் இறப்புக்குப் பின்னால் தங்கள் குழந்தைகளுக்கு உயில் எழுதி வைத்து விட்டு செல்வர். அதைப் போலவே அரசியலில் உள்ள தலைவர்களும் பலருக்கும் வழிகாட்டியாக இருந்து விட்டு செல்வர்.  காமராஜர், அண்ணாத்துரை அவர்களின் காலத்திற்குப் பின்னால் வந்த அத்தனை பேர்களும் சேர்த்து வைத்துள்ள சொத்துப்பட்டியல் குறித்து நாம் இங்கே பேசப் போவதில்லை. 

ஆனால் மாட்டிக்கொண்டு அவமானப்பட்டது ஜெயலலிதா மட்டுமே.  இனி வரும் காலங்களில் சிறிதளவேனும் மாற வேண்டும் என்ற நம்பிக்கை உருவாக வேண்டும். ஊழல் செய்த பணத்தில் கல்வித்தந்தையாக மாறியவர்கள், தொழில் அதிபர்களாக வலம் வந்து கொண்டிருப்பவர்கள் என அத்தனை பேர்களின் அடிமனதில் பயம் பரவ வேண்டும் என்பதே என் எதிர்பார்ப்பு.

ஆனால் ஜெயலலிதாவிற்கு கிடைத்த மரியாதையான உயில் சாசன வார்த்தைகள் இரண்டு நீதிபதிகள் தெரிவித்துள்ளதை சமூக வலைதளங்கள், பத்திரிக்கைகளில் வந்த தகவல்களின் அடிப்படையில் இங்கே தொகுத்துள்ளேன். காலம் கடந்தும் தெரிந்து கொள்ளவேண்டிய விபரங்கள் ஆகும். இன்னமும் ஜெயலலிதாவை உத்தமி போலவும் சசிகலாவை வில்லி போலவும் நம்பும் நண்பர்கள் இதனை படித்து தெரிந்து புரிந்து கொள்வார்கள் என்று நம்புகிறேன்.  "ஊசி ஒன்றும் செய்யவில்லை. செய்த நடந்த தவறுகள் அனைத்துக்கும் நூல் தான் காரணம்" என்று பேசுவது போலவே உள்ளது.  மீதி உங்களின் தனி மனித சுதந்திர பார்வைக்கு விட்டுவிடுகின்றேன்.

"ழல் என்பது ஆக்டோபஸ் மாதிரி பரவிக்கிடக்கிறது. இதனால் சமூகத்தில் அச்சம், மன உளைச்சல் போன்றவை மக்களுக்கு ஏற்படுகிறது. ஜெ. வை போன்ற குற்றவாளிகள் அதிகாரத்தையும் ஆட்சியையும் பயன்படுத்திக் கொண்டு பெரும் பணம் சேர்க்கிறார்கள். ஊழல் செல்ல வாய்பிபில்லாதவன் ஏழையாக இருக்கின்றான். பணம் சொத்து ஆகியவற்றைப் பெற வேண்டுமென்றால் ஊழல் செய்து சம்பாதிக்க வேண்டும் என்கிற மனோநிலை சமூகத்தில் உருவாகியுள்ளது. இது புற்றுநோய் நோயை விட மிகக் கொடிய நோய். இது ஏழை, பணக்காரன், ஏற்றத்தாழ்வை உருவாக்கி மக்களிடையே பிளவை உருவாகிறது. மக்களின் வாழ்க்கை நிலையை அழிக்கும் சுருக்கு கயிறு போன்றது இந்த ஊழல். 

ஜெ வும் சசிகலாவும் 36. போயஸ் கார்டன் என்கிற ஒரே வீட்டில் தங்கியிருந்தார்கள். அவர்கள் ஒரே வீட்டில் தங்கியிருந்ததன் நோக்கமே ஜெ. ஊழல் செய்து சம்பாதித்த சொத்துக்களை எடுத்துப் பல இடங்களில் பரவச் செய்து பாதுகாப்பதற்காகத்தான். இதை ஜான் மைக்கேல் டி குன்ஹா ஆராய்ந்து சாட்சிகளின் அடிப்படையில் நிரூபித்திருக்கிறார்கள். ஜெ. வை தனது உயிர்த் தோழி எனச் சசிகலா குறிப்பிடுகிறார். உயிர்த் தோழி என்கிற உறவுக்காக மட்டுமே சசிகலா போயஸ் கார்டனின் தங்கியிருக்க வில்லை ஊழல் செய்த பணத்தைக் கையாளவே சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் போயஸ் கார்டனின் தங்கியிருந்தார்கள் என்பதனை ஜான் மைக்கேல் டி குன்ஹா தெளிவாக நிரூபித்துள்ளார். அதை நாங்கள் ஏற்கிறோம். 

ஜெ தங்கியிருந்த வீட்டில் 32 நிறுவனங்கள் இயங்கிருக்கின்றன. அந்தக் கம்பெனிகள் என்ன நடவடிக்கைளில் ஈடுபட்டடன என்று எனக்குத் தெரியாது என ஜெ தெரிவித்தார். ஆனால் கோடிக்கணக்கான ரூபாய் பணம் ஒவ்வொரு நிறுவனத்திலிருந்தும் மற்றொரு நிறுவனத்துக்கு மாறியிருக்கிறது. போயஸ் கார்டனில் வேலை செய்யும் செயராமன் கத்தை கத்தையாகப் பணத்தைக் கார்டனிலிருந்து எடுத்துக் கொண்டு போய் ஒவ்வொரு நிறுவனத்தின் அக்கவுண்டிலும் போடுகிறார். சுதாகரன், இளவரசி, ஆகியோர் இயக்குநர்களாக உள்ள நிறுவனங்களில் லட்சக்கணக்கில் பணம் குவிகிறது. இந்தப் பணம் பெரும்பாலும் ஜெ., சசி, சுதாகரன் ஆகியோர் இயக்குநர்களாக இருக்கும் சசி எண்டர்பிரைசஸ் நிறுவனத்திலிருந்து மற்ற நிறுவனங்களுக்கு அளிக்கப்படுகிறது. 

முதலமைச்சராக ஜெ இருந்ததால் ஒவ்வொரு ஊரிலும் அடிமாட்டு விலைக்கு மொத்தம் 193 அசையா சொத்துக்களை ஜெ. , சசி, இளவரசி, சுதாகரன் வாங்கியுள்ளனர். இதில் நிலம் மட்டும் 3000 ஏக்கர் பரப்பளவை கொண்டிருக்கிறது. 

வாங்கிய நிலங்களில் புதிய கட்டிடங்களை கட்டியிருக்கிறார்கள். எந்திரங்கள் வாங்கியிருக்கிறார்கள். புதிய கார்கள், லாரிகள், பேருந்துகள் என ஏகப்பட்ட சொத்துக்களை வாங்கிக் குவித்திருக்கிறார்கள். 

ஆட்சியில் ஜெ இருந்ததால் அதிகாரிகளை அவரது வீட்டிற்கே வரவழைத்துப் பதிவு செய்திருக்கிறார்கள். சசிகலா இளவரசி சுதாகரன் ஆகியோருக்கு ஜெ மூலம் கிடைத்ததைத் தவிரத் தனிப்பட்ட வருமானம் எதுவுமில்லை. ஜெ சார்பாக வருமானவரித்துறையில் சமர்பிக்கப்பட்ட கணக்குகளில் ஒரு கோடி ரூபாயை சசி எண்டர்பிரையை நிறுவனத்திற்குக் கொடுத்ததை ஒத்துக் கொண்டுள்ளார். 

சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்குப் பல சந்தர்ப்பங்களில் செக் மூலமே ஜெ பணம் கொடுத்துள்ளார் எனவே மூன்று பேரின் நடவடிக்கைக்கும் ஜெ வுக்கும் எந்தத் தொடர்புமில்லையெனச் சொல்வதை ஏற்க முடியாது. 

பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஜான் மைக்கேல் குன்ஹா எழுதிய தீர்ப்பை ஏற்கிறோம். உயர்நீதிமன்ற நீதிபதி குமாரசாமி எழுதிய தீர்ப்பை நிராகரிக்கிறோம். ஜான் மைக்கேல் டி குன்ஹா அறிவித்தபடி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு தலா நான்காண்டுகள் தண்டனை ஒவ்வொருவருக்கும் பத்து கோடி ரூபாய் அபராதம் கட்ட வேண்டும் என்று அறிவிக்கின்றோம். ஜெ. மீதான னைத்துக் குற்றங்களும் நிரூபிக்கப்பட்டன. அவர் குற்றவாளி என்றாலும் மரணமடைந்த காரணத்தால் விலக்கு அளிக்கப்படுகின்றது. 

நீதிபதி பி.சி.கோஷ் மற்றும் நீதிபதி அமித்வராய்

பறிமுதலாகும் சொத்துப்பட்டியல், 

1. போயஸ் கார்டன்,
2. பையனூர் பங்களா
3. கொடநாடு தேயிலைத் தோட்டம்.
4. சிறுதாவூர் பங்களா
5. ஜெ. வின் தங்க நகைகள்.
6. ஜெ. வின் வெள்ளி நகைகள்
7. ஜெ. வின் பெயரில் வைக்கப்பட்டிருந்த வங்கி டிபாசிட்டுகள்.
8. ஜெ. வாங்கியிருந்த 193 வகைப்படும் 3000 ஏக்கர் நிலம்.
ஜெ. வின் சொத்துக்குவிப்பு வழக்கு என்கிற ரீதியில் 1996 ஆம் ஆண்டு போடப்பட்ட சொத்துக்குவிப்பு வழக்கில் இடம் பெற்ற சொத்துக்களின் இன்றைய மதிப்புப் பத்தாயிரம் கோடியைத் தாண்டுகிறது.

1964 ஆம் ஆண்டு முதல் 1996 வரை ஜெ. சம்பாரித்த சொத்துக்கள் மட்டுமே இனி இருக்கும். 

(ஜெயலலிதா என்ற தனி மனுஷி இந்தியாவில் உள்ள காவல்துறை, நிர்வாக அமைப்பில் உள்ள பல்வேறு பிரிவுகள், நீதி மன்றம், சட்ட திட்டங்கள் என்று கீழிருந்து மேல் மட்டம் வரைக்கும் அனைவரையும் விலைக்கு வாங்கமுடியும் என்று உறுதியாக நம்பினார். 1996 முதல் 2017 பிப்ரவரி வரைக்கும் 21 வருடங்கள் இந்த வழக்குக் காரணமாகத் தனிப்பட்ட ரீதியிலும், அலுவலக ரீதியிலும் மன உளைச்சல் அடைந்து ஒதுங்கியவர்கள் பலபேர்கள். 

பழிவாங்கப்பட்டவர்கள், மிரட்டப்பட்டவர்கள், வாங்கப்பட்ட விலையின் காரணமாகச் சோரம் போனவர்களின் பட்டியல் கணக்கில் அடங்காது. 

இந்த வழக்கை நீர்த்துப் போகச் செய்ய ஜெயலலிதா செய்த செலவுகள் என்பது எத்தனை ஆயிரம் கோடிகள் என்பதனையும் எவரும் அறிந்திருக்க முடியாது. ஆனால் எங்களை விலைக்கு வாங்க முடியாது என்பதனை உணர்த்தியதோடு தங்கள் கடமையைச் சரியாகச் செய்தவர்களை இந்தச் சமயத்தில் நாம் நினைவு கூற வேண்டும். இவர்கள் அத்தனை பேர்களும் நம் குழந்தைகள் வாழப்போகும் சமூகத்திற்காகத் தங்கள் பணியைச் சிறப்பாக நேர்மையாகச் செய்துள்ளார்கள் ஊழல் செய்தவர்கள் இறுதியில் எந்த நிலைக்கு ஆளாகக்கூடும் என்பதனை உணர்த்தி உள்ளார்கள். 

1. மரியாதைக்குரிய பேராசியர் க. அன்பழகன் (திமுக) 
2. திரு. ஆச்சார்யா அவர்கள் (கர்நாடகா அரசு வழக்குரைஞர்) 
3. திரு. நல்லம்ம நாயுடு (தமிழகக் காவல் துறை அதிகாரி) 
4. திரு. துக்கையாண்டி ( தமிழகக் காவல் துறை அதிகாரி) 
5. திரு. சந்தேஷ் சவுட்டா ( ஆச்சார்யா ராஜினமா செய்த பிறகு அவருக்குப் பதிலாகச் செயல்பட்டவர்) 
6. திரு. குமரேசன் (திமுக வழக்குரைஞர்) 
7. திரு. சரவணன் (திமுக வழக்குரைஞர்) 
8. திரு. சண்முகச் சுந்தரம் (திமுக வழக்குரைஞர். இவர் க. அன்பழகன் சார்பாக வாதிட்டவர். இவருக்கு உதவியாக இருந்தவர்கள் திரு, குமரேசன் மற்றும் திரு. சரவணன்) 

(இன்னும் பலபேர்கள் ஜெ. வின் அதிகார வெறிக்குப் பயந்து மறைமுகமாக இந்த வழக்கிற்கு உதவியிருக்கக்கூடும்.) 
.
ஆனால் இத்தனை பேர்களின் உழைப்பையும் அதில் உள்ள உண்மையை உணர்ந்து நீதி வழங்கிய பெங்களூர் சிறப்புக் நீதிமன்றம் நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா. ஆனால் இடையில் நுழைந்த உயர்நீதிமன்ற நீதிபதி குமாரசாமி நுழையாமல் இருந்து இருந்தால் ஜெயலலிதாவிற்கு நினைவிடம் கட்டியிருக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காது. அரசு மரியாதையுடன் கூடிய நல்லடக்கம் நடந்திருக்க வாய்ப்பும் அமைந்திருக்காது. 

 

காலம் என்பது பாரபட்சமற்றது. அதன் சல்லடையில் கழிவுகள் நீக்கப்படும்.

இனியாவது ஊழல் என்பதனை பொதுவான விசயமாகக் கருதும் ஒவ்வொரு அரசியல்வாதிகளின் ஆழத்தில் ஜெயலலிதாவுக்குக் கிடைத்த அவமானத்தைப் பாடமாக எடுத்துக் கொள்வார்கள் என்று நம்புவோம்.

வழக்கு குறித்த முழு விபரங்களை அறிந்து கொள்ள இந்த இணைப்பில் சென்று பார்க்கலாம். எச்சரிக்கை  570 பக்கங்கள் அடங்கிய ஆங்கில மர்மக்கதை போன்ற விபரங்கள் அடங்கிய தொகுப்பு இது.

ஜெ. செய்த ஊழல்களை முழுமையாக தெரிந்து கொள்ள இந்த மின் நூல் உதவக்கூடும்.

தொடர்புடைய பதிவுகள்


Friday, February 17, 2017

2017 தமிழ்நாடு - ஒரு கழுகுப் பார்வை


சமூக வலைதளங்கள் ஒரு பக்கம் வரமாகவும் மறுபக்கம் சாபமாகவும் உள்ளது. ஒரு தகவலை பல்வேறு கூறுகளாக அலசி ஆராய்ந்து போட படிப்பவர்களைத் திகைக்க வைத்து விடுகின்றது. வாட்ஸ் அப் வழியாக வந்து சேரும் தகவல்கள் பெரும்பாலும் பகிர்தல், வாசித்தல் என்ற நிலையிலேயே காணாமல் போய்விடுகின்றது. எதிர்காலச் சமூகத்திற்குச் சேமித்து வைத்து ஒப்பிட முடியாத இந்தத் தகவல்களால் என்ன பலன் உருவாகும்? என்பதனை யோசிக்க முடியவில்லை. கீழே உள்ள தகவல்கள் முக்கியமானது. தகவல் பிழை உள்ளது. இருந்தாலும் சேமித்து வைத்துக் கொள்ளலாம் என்று வாட்ஸ் அப் வழியாக வந்த கீழ்க்கண்ட விசயங்களை இங்கே தந்துள்ளேன். 

தமிழகத்தின் ஆட்சியும் மக்களும் 

இவர்கள் 8 சாராய ஆலை வைத்திருக்கிறார்கள். அவர்களும் 7 சாராய ஆலை வைத்திருக்கிறார்கள். 

இவர்கள் 12 தொழிற்சாலை வைத்திருக்கிறார்கள். அவர்களும் 26 தொழிற்சாலை வைத்திருக்கிறார்கள். 

இவர்கள் 6 சேனல் வைத்திருக்கிறார்கள். அவர்களும் 8 சேனல் வைத்திருக்கிறார்கள். 

இவர்கள் 4 பத்திரிக்கை நடத்துகிறார்கள். அவர்கள் 9 பத்திரிக்கை நடத்துகிறார்கள். 

இவர்கள் 7 மாத, வார இதழ்கள் நடத்துகிறார்கள். 
அவர்களும் 9 மாத, வார இதழ்களை நடத்துகிறார்கள். 

இவர்கள் 122 கல்லூரிகள் நடத்துகிறார்கள், அவர்களும் 186 கல்லூரிகள் நடத்துகிறார்கள். 

இவர்கள் 1870 பள்ளிகள் நடத்துகிறார்கள், அவர்களும் 1870 பள்ளிகள் நடத்துகிறார்கள். 

இவர்களின் ஆகப் பெரிய தலைவர் விட்டுவிட்டு 5 முறை முதல்வராக இருந்துள்ளார். 

அவர்களின் ஆகப் பெரிய தலைவர் 5 முறை முதல்வராக இருந்துள்ளார். 

இவர்களின் கணக்கில் பல லட்சம் கோடி சொத்துகள. 

அவர்களின் கணக்கிலும் பல லட்சம் கோடி சொத்துக்கள். 

தற்போதைய நிலவரப்படி உள்ளுக்குள் அடித்துக் கொண்டிருந்தாலும் இவர்களின் கூட்டணிக் கணக்கில் 136 சட்டமன்ற உறுப்பினர்கள். 

அவர்களின் கூட்டணிக் கணக்கில் 89 சட்டமன்ற உறுப்பினர்கள். 

இவர்களின் கணக்கில் 37 பாராளுமன்ற உறுப்பினர்கள் 3 மாநிலங்களவை உறுப்பினர்கள். 

அவர்களின் கணக்கில் 1 மாநிலங்களவை உறுப்பினர். 

இவர்களுக்கு அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்று பெயர். 

அவர்களுக்குத் திராவிட முன்னேற்றக் கழகம் என்று பெயர். 

தமிழ்நாட்டை 50 ஆண்டுகளாகத் தி.மு.க.வும், அ.தி.மு.க.வும்தான் மாற்றி மாற்றி ஆட்சி செய்து வருகின்றன. 

இதில் அ.தி.மு.க. 25 ஆண்டுகளும், தி.மு.க. 22 ஆண்டுகளும் தமிழகத்தை நிர்வாகம் செய்துள்ளன. 

ஒவ்வொரு முறை ஆட்சிக்கு வரும் போது தமிழகத்தை இந்தியாவின் முதன்மை மாநிலமாக மாற்றுவது தான் எங்களது குறிக்கோள் என்று இரு கட்சிகளும் முழங்குவது வாடிக்கை. 

2011ம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டின் மக்கள் தொகை 7 கோடி 21 லட்சத்து 88 ஆயிரத்து 958 ஆகும். (7,21.88,958). 

இதில் ஆண்கள் 3,61,58,871 பேர்; பெண்கள் 3,59,80,087 பேர். 
1000 ஆண்களுக்கு 995 பெண்கள் என்ற அடிப்படையில் பாலின விகிதம் உள்ளது. 

எழுத்தறிவு பெற்றவர்கள் சதவிகிதம் 80.33. 

24.10.2011 அன்று வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல்படி தமிழ்நாட்டில் மொத்த வாக்காளர் எண்ணிக்கை 4 கோடியே 73 லட்சத்து 58 ஆயிரம் ஆகும். 

இவற்றில் ஆண் வாக்காளர்கள் 2 கோடியே 38 லட்சத்து 8 ஆயிரம் ஆகும். பெண் வாக்காளர்கள் 2 கோடியே 35 லட்சத்து 49 ஆயிரமும், மற்றும் இதர வாக்காளர்கள் 1,568 பேர் ஆகும். 

மொத்த குடும்பங்களின் எண்ணிக்கை 1 கோடியே 42 லட்சத்திலிருந்து 1 கோடியே 85 லட்சம். 

கூரை வீடுகளின் எண்ணிக்கை தற்போது 15.8. கான்கிரீட் வீடுகளின் எண்ணிக்கை 43.7 விழுக்காடு. 

நகரப் பகுதிகளில் வாடகை வீடுகளில் குடி யிருப்போர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 

தமிழகத்தின் மொத்த குடும்பங்களில் 94 விழுக்காட்டினர் குழாய் நீர், ஆழ்துளை கிணறு, அடிகுழாய், மூடிய கிணறு உள்ளிட்ட நீராதாரங்களைப் பயன்படுத்துகின்றனர். 

80 விழுக்காட்டினர் குழாய் நீரை முக்கிய ஆதாரமாகப் பயன்படுத்துகின்றனர். 

35 விழுக்காடு குடும்பங்களுக்கு மட்டுமே வீட்டு வளாகத்திற்கு உள்ளேயே குடிநீர் வசதி உள்ளது. 

58 விழுக்காட்டினருக்கு ஓரளவு அருகிலும், 7 விழுக்காடு குடும்பங்களுக்குத் தொலைவிலும் குடிநீர் கிடைக்கிறது. 

93 விழுக்காடு குடும்பங்களில் விளக்கு வெளிச்சத்திற்காக மின்சாரம் பயன் படுத்தப்படுகிறது. 

64 விழுக்காடு குடும்பங்கள் வீட்டுக்குள் குளியல் வசதியைப் பெற்றுள்ளன. 

50 விழுக்காடு குடும்பங்கள் சமையலறை கழிவு நீரை வெளியேற்றும் இணைப்புக் கால்வாய்களைப் பெற்றுள்ளன. 

25 விழுக்காட்டினர் மூடிய கால்வாய் இணைப்பும், 25 விழுக்காட்டினர் திறந்தவெளி கால்வாய் இணைப்பும் பெற்றுள்ளனர். 

48 விழுக்காடு குடும்பங்கள் வீட்டில் கழிப்பிட வசதி பெற்றுள்ளன. இவர்களில் 41 விழுக்காட்டினர் நவீன – தண்ணீர் ஊற்றும் வசதியையும், 6 விழுக்காட்டினர் குழி கழிப்பிடத்தையும் அமைத்துள்ளனர். 

கழிப்பிட வசதி பெறாத குடும்பங்கள் 52 விழுக்காடு. இவர்களில் 6 விழுக்காட்டினர் மட்டுமே பொதுக் கழிப்பிடங்களைப் பயன்படுத்துகின்றனர். 

மற்றவர்கள் திறந்த வெளிகளையே கழிப்பறையாகப் பயன்படுத்தும் நிலைமை நீடிக்கிறது. 

தனிச் சமையலறை வசதி 77 விழுக்காடு குடும்பங்களில் உள்ளன. 

48 விழுக்காட்டினர் சமையலுக்கு எரிவாயுவையும், 44 விழுக்காட்டினர் விறகு, நிலக்கரி, எரித்த கரி, வைக்கோல், வரட்டி போன்றவற்றையும், 7 விழுக்காட்டினர் மண் ணெண்ணையையும் பயன் படுத்துகின்றனர். 

தொலைக்காட்சி பயன்பாடு 48 விழுக்காடாக உயர்ந்துள்ளது. 

ஆனால் வானொலி பயன்பாடு 21 புள்ளிகள் குறைந்துள்ளது. 

11 விழுக்காடு குடும்பங்கள் கணினி அல்லது மடிக் கணினி பெற்றுள்ளன. 

4 விழுக்காட்டினரே இணையத் தள வசதியை பெற்றுள்ளனர். இணையத் தள வசதி நகர்ப்புறத்தில் 8 விழுக்காடாக இருக்கிறது. கிராமப்பகுதியில் 1 விழுக்காடாக மட்டுமே உள்ளது. 

75 விழுக்காடு குடும்பங்களில் சாதாரணத் தொலைபேசி, கைப்பேசி வசதி உள்ளது. 

இது நகரப் பகுதிகளில் 84 விழுக்காடாகவும், கிராமங்களில் 66 விழுக்காடாகவும் உள்ளது. 

சாதாரணத் தொலைபேசி பயன்பாடு 13 விழுக்காடும், கைப்பேசி பயன்பாடு 69 விழுக்காடும் ஆகும். 

தமிழகத்தில் 45 விழுக்காடு குடும்பங்கள் போக்குவரத்துக்குச் சைக்கிள் பயன்படுத்துகின்றனர். 

32 விழுக்காடு குடும்பங்கள் ஸ்கூட்டர், பைக் போன்ற இரு சக்கர வாகனங்களைப் பயன்படுத்துகின்றனர். 

4 விழுக்காடு குடும்பங்கள் கார், ஜீ போன்ற 4 சக்கர வண்டிகளைப் பயன்படுத்துகின்றனர். 

வங்கி சேவையை 53 விழுக்காடு குடும்பங்கள் பெற்றுள்ளன. இது நகரத்தில் 60 விழுக்காடாகவும், கிராமத்தில் 45 விழுக்காடாகவும் உள்ளது. 

தமிழ்நாட்டில் நிலம் இல்லாமல் தினக்கூலி வேலையை மட்டுமே வாழ்வாதாரமாகக் கொண்டுள்ள ஊரகக் குடும்பங்களின் எண்ணிக்கை 56% ஆகும். 

இது தேசிய சராசரியான 38.27 விழுக்காட்டைவிட மிகவும் அதிகம் ஆகும். 

அதுமட்டுமின்றி, நிலமில்லாமல் கூலி வேலை செய்தே பிழைக்கும் ஏழைகள் அதிகமுள்ள மாநிலங்களில் தமிழகம்தான் முதலிடத்தில் உள்ளது. 

தமிழகத்தில் மாத வருமானம் ரூ.5 ஆயிரத்துக்கும் குறைவாக ஈட்டுவோர் உள்ள குடும்பங்களின் அளவு 78.08% ஆகும். இது தேசிய சராசரியான 74.5 விழுக்காட்டை விட அதிகமாகும். 

குறைந்த வருமானம் ஈட்டும் குடும்பங்கள் அதிகமுள்ள மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் ஐந்தாவது இடத்தில் உள்ளது. அதாவது இந்தியாவின் ஐந்தாவது ஏழை மாநிலம் தமிழகம் ஆகும். 

வேலைவாய்ப்பிலும் தமிழகம் மிகவும் பின் தங்கிய நிலையில் உள்ளது. 

ஊரகக் குடும்பத்தினரில் 4.58% அரசு வேலையிலும், 0.88% பொதுத்துறை வேலையிலும், 2.86% தனியார் வேலையிலும் உள்ளனர். 

இவை அனைத்திலுமே தேசிய சராசரியைவிடத் தமிழகம் மிகவும் பின் தங்கிய நிலையில் உள்ளது. 

ஒட்டு மொத்தமாகப் பார்த்தால் கூட ஊரகத் தமிழகத்தில் மாத ஊதியம் பெறுவோரின் அளவு 7.22% மட்டுமே. 

92.78% குடும்பங்கள் நிரந்தர வாழ்வாதாரமின்றித் தவிக்கின்றன. 

ஊரகத் தமிழ்நாட்டில் பட்டப்படிப்பு அல்லது அதற்கும் மேல் படித்தவர்களின் எண்ணிக்கை வெறும் 6.61% தான். 

பத்தாம் வகுப்பு படித்தவர்களின் எண்ணிக்கையும் 14.10 விழுக்காட்டைத் தாண்டவில்லை. 

அதேநேரத்தில் 26.38 விழுக்காட்டினர் பள்ளிக் கூடத்திற்குக்கூடச் செல்லாத பாமரர்கள் ஆவர். 

இந்தியாவில் 25.63% ஊரகக் குடும்பங்கள் பாசன வசதியுடன் கூடிய நிலங்களை வைத்துள்ளன. 

ஆனால், தமிழகத்தில் 12.10% குடும்பங்கள் மட்டுமே பாசன வசதி கொண்ட நிலங்களை வைத்துள்ளன. 

19.18% குடும்பங்கள் நிலங்களை வைத்துள்ள போதிலும், அவற்றுக்குப் பாசன வசதி செய்து தரப்படவில்லை. 

தென்னிந்தியாவிலேயே பாசன வசதி பெற்ற நிலங்கள் குறைவாக இருப்பது தமிழ்நாட்டில் மட்டும்தான். 

தமிழ்நாட்டில் ஐ.டி.ஐ.கள் எல்லாம் மூடப்பட்டு வருகின்றன. சேருவார் இல்லை. 

பிட்டர், வெல்டர், பிளம்பர், எலெக்ட்ஷியன், மேசன், கார்ப்பெண்டர் போன்ற தொழிலாளிகளுக்குப் பெரும் பஞ்சம் ஏற்பட்டிருக்கிறது. 

2012-13 நிதியாண்டில் மட்டும் தமிழக அரசுக்குச் சாராயம் விற்ற வகையில் வந்த வருமானம் ரூ 21,680 கோடிகள். 

இது மாநில அரசின் மொத்த வருவாயில் 20 சதவீதம். 

2013-14 ல் தமிழக அரசின் சொந்த வரிவருவாயான 96083 கோடியில் ரூ.29672 கோடி (31% ) டாஸ்மாக் விற்பனை மூலம் வருகிறது. 

ஆனால், மதுப் பழக்கத்தினால் வரும் விளைவுகள் பற்றி விழிப்புணர்வு பிரச்சாரம் செய்வதற்கு அரசு ஒதுக்கியுள்ள தொகை வெறும் ஒரு கோடி ரூபாய்! 

ஆண்டுக்கு 26 ஆயிரம் கோடி ரூபாய் வரி வருமானம் மட்டும் அரசுக்கு இதிலிருந்து வர வேண்டுமானால், தினசரி எத்தனை தமிழர்கள் தவறாமல் மது குடிக்கவேண்டும் என்று தெரியுமா? சுமார் ஒரு கோடி பேர் ! 

தமிழத்தில் குடிக்க ஆரம்பிக்கும் வயது 11 ஆகிவிட்டது. அரசின் கஜானாவை நிரப்பும் ஒரு கோடி குடியர்களில் டீன் ஏஜ் இளைஞர்கள். 

தமிழகம் முழுவதும் 6800 சாரயக் கடைகளையும் 4271 டாஸ்மாக் பார்களையும் திராவிட அரசுகளே நடத்தி வருகின்றன. 

பிறக்கும் குழந்தைகளுக்கும் மாணவப் பருவத்திலேயே சாராயம் கொடுத்துத் தமிழ் சாதிப் பெண்கள் இளம் வயதில் தாலி அறுக்கின்றனர். 

3000 கோடி ரூபாய் கூடுதல் வருவாயை இலக்கு வைத்து சாராயத்தின் விலை அதிகரிக்கப்படுகிறது. 

1971 ல் தமிழக முதல்வராகக் கருணாநிதி வருவதற்கு முன்பு தமிழகத்தில் குடிகாரர்களின் எண்ணிக்கை மிகச் சொற்பமானதே. 

1971ல் காமராஜர், ராஜாஜி, காயிதேமில்லத் போன்ற தலைவர்களின் வேண்டுதல்களையும் புறக்கணித்து விட்டு அன்று முதல்வராக இருந்த கருணாநிதி, அரசு சாராயக் கடைகளைத் திறந்தார். 

அன்று முதல் படிப்படியாகத் தமிழ் சமூகம் குடிகார சமூகமாகப் பரிணாமம் அடைந்து வந்துள்ளது. மதுவிலக்கை அமல் படுத்துவதில் எம்.ஜி.ஆர்.கூடத் தோல்வி அடைந்தார். 

1971 முதல் 2014வரை, இடையில் சில மாதங்கள் எம்.ஜி.ஆர் ஆட்சியில் மூடப்பட்டதைத் தவிர, தமிழகத்தில் சாராயம் பெரும் சாம்ராஜ்யம் கண்டுள்ளது. 

அன்று குடிக்காத நல் சமூகங்கள் கூட இன்று தப்பவில்லை. அன்று 20 சதவீதமாக இருந்த குடிகாரர்களின் எண்ணிக்கை இன்று 74.3 சதவீதமாக அதிகரித்து விட்டது. 

குடிகாரனின் குறைந்தபட்ச வயது 11 ஆகக் குறைந்திருக்கிறது. 

மதுரையில் ஒரு பள்ளிக் கூடத்தில் மாணவர்கள் உட்காரும் பெஞ்சை விற்று, “அரசு சாராயம்” வாங்கிக் குடித்தது பத்திரிக்கைகளில் வந்தது. 

குடியினால் இள வயது மரணங்கள் அதிகரித்துள்ளன. பாலியல் பலாத்காரங்கள், குழந்தைகள் மீதான வன்முறை, பெண்கள் சீண்டப்படுதல் அனைத்துக்கும் அரசு விற்கும் சாராயமே காரணம் என்று ஓர் அறிக்கை கூறுகிறது. 

அரசுதான் மக்களிடம் காலையில் பணப் புழக்கத்தைக் கொடுக்கிறது. பின்னர் மாலையில் சாராயத்தைக் கொடுத்து அரசே பணத்தைப் பறித்துக் கொள்கிறது. 

இவ்வாறுதான் தமிழ் நாட்டில் பொருளாதாரச் சுழற்சி நடைபெறுகின்றதாகப் பொருளியல் அறிஞர்கள் பலர் கூறுகின்றனர். 

இப்படியாக வளமார் திராவிடத் தமிழகத்தின் குடிமக்களின் வாழ்வியல் கணக்குகள் இலவசங்களோடு தொடருகிறது. 

Tuesday, February 14, 2017

குழந்தைகளே அப்பாவாகி


திருப்பூர் “தேவியர் இல்லம்” என்கிற வலைப்பதிவில் தொடர்ந்து எழுதிவந்த திரு ஜோதிஜி என்கிற ஜோதி கணேசன் இணையத்தின் மூலம் மனதை தொட்ட ஒரு நல்ல நண்பர் . பிறரின் எழுத்துக்களைப் பாராட்டி ஊக்கப்படுத்துவதில் அற்புதமான நண்பர் அவர். ஜோதி என்ற பெயருக்கேற்றவாறு தன் எழுத்துகளின் மூலம் பிரகாசிப்பவர் மட்டுமல்ல தன் கருத்துகளால் மற்றவர்களின் சிந்தனையில் வெளிச்சத்தை ஏற்படுத்துபவர்.. 

கத்தியைத் தீட்டாதே உன் புத்தியை தீட்டு என்பார்கள் ஆனால் இந்த அவசர உலகில் புத்தியை தீட்டதெரியாதவர்கள் பலர், அப்படிப்பட்டவர்களின் மழுங்கிய புத்தியை தன் சிந்தனை மற்றும் கருத்துளால் தீட்ட உதவுகிறார் . 

வலைத்தளம் மூலம் இணையமக்களால் அறியப்பட்ட இவர் பல நூல்களை எழுதி வெளியிட்டு இருக்கிறார் அதில் புத்தக வடிவில் வந்த டாலர் நகரம் விகடனில் புத்தக விமர்சனமாக வந்து சிறப்பான பெற்றதுமட்டுமல்லாமல் சிறப்பான பத்துப் புத்தங்களில் இதுவும் ஒன்று என்று நிலையைப் பெற்றுள்ளது.. 

மின் நூலில் மிக அதிக அளவு தரவிறக்கம் செய்யப்பட்ட நூலில் இவரது நூலும் ஒன்று என்பதே இவரின் எழுத்துக்குக் கிடைத்த அங்கீகாரம் எனலாம். 

இணையத்தில் நல்லவைகளை எழுதுகின்றோம் என்றுக் குப்பைகளை எழுதி குவித்துக் கொண்டிருக்கும் வேளையில் நன்றாக எழுதிப் பதிவிட்டு அதற்குப் பழைய குப்பைகள் எனப் பெயர் வைத்திருக்கிறார் ஜோதிஜி. பழைய குப்பைகள் என்ற பெயரில் கட்டுரைகளின் தொகுப்பாக வெளிவந்து இருக்கும் இந்நூலில் இவர் சொல்லும் கருத்துக்கள் மிகத் தெளிவாக எளிமையான சொற்களில் தர்க்க முறைக்கு மாறுபடாது தன் சொந்த வாழ்க்கை அனுபவத்துடன் பல உதாரணங்களோடு , படிப்பவர் உள்ளத்தில் ஊடுருவி அவர்கள் உணரும்படி இவர் எழுத்து அமைந்திருக்கிறது. 

பல்வேறு நிகழ்வுகளில் கூர்மையான பார்வைகளையும் கருத்துக்களையும் வைக்கும் நேர்மையாக வைக்கும் ஜோதிஜி அவர்களின் பல பதிவுகளில் பெரும்பாலான இத்தன்மைகள் வெளிப்படுமாறு இத்தொகுப்பு நூல் அமைந்திருக்கிறது.

படிக்கும் வாசகர்களின் உள்ளத்தில் சிறு உணர்வையாவது ஏற்படுத்த வேண்டும் அந்த வகையில் இந்தக் கட்டுரை தொகுப்பில் எல்லாக் கட்டுரைகளும் மனதை வருடி நமது நினைவுகளைக் கிளறிவிட்டு சிந்திக்க வைக்கிறது .

விரோதிபோலப் பார்த்த அப்பாவைப் புரிந்து கொள்ள வைத்து, அவரின் மீதான மரியாதை பிம்பத்தை ஏற்படுத்தியது குழந்தைகளின் காலடித்தடம் என்று சொல்லி செல்லும் இவரின் வரிகள் .அப்பாவைப் புரிந்து கொள்ளத் தான் அப்பாவாக மாறிய பிறகுதான் புரிந்து கொள்ள முடிகிறது என்று சொல்லி செல்வது மிக உண்மையாகவே இருக்கிறது. குழந்தைகளே அப்பாவாகிப் பல வாழ்க்கை பாடங்களை இவருக்குக் கற்று தந்து கொண்டிருக்கிறார்கள் இவருக்கு மட்டுமல்ல அனைவருக்கும் பிள்ளைகள்தான் உண்மையான பாடங்களைக் கற்றுத் தருகிறார்கள்.

சாதரண மனிதர்களியில்ருந்து சாதனைப் புரிந்துவர்களிடம் கேட்டால் தங்கள் சாதனைக்கு அம்மாகாரணமெனச் சொல்லும் அவர்கள் அந்தச் சாதனைக்கு விதையாகிய அப்பாக்கள் பற்றிச் சொல்லுவதில்லை என்று சொல்லுகிற போது மனதில் சுறுக்கென ஏதோ ஒன்றிக் குத்துவது போலத்தான் இருக்கிறது .
ஜோதிஜியின் கட்டுரைகள் தலைமுறை இடைவெளிகளால் சிக்கி கிடக்கும் குடும்ப உறவுகள், சாதி மத அரசியல் மற்றும் பண்பாட்டு மதிப்பீடுகளை எடுத்துரைக்கின்றன,

கடுமையான நடையோ, அலங்கார நடையோ, செயற்கையான மொழிநடையோ இல்லாமல் எளிய நடையில் அழகாகவும் இனிமையாகவும் இந்தக் கட்டுரை தொகுப்பு வந்திருக்கிறது, 

இந்தப் புத்தகத்தைப் படித்து என் மனதில் எழுவதை இங்கே சொல்லிவிட்டேன். நிச்சயம் இதைப் படிக்கும் பலரின் மனதில் சிந்தனைகள் கிளறப்படும் என்பதை என்னால் நிச்சயமாகச் சொல்ல முடியும்.

வாழ்க வளமுடன் 
அன்புடன் 
மதுரைத்தமிழன் ( http://avargal-unmaigal.blogspot.com/ )
U.S.A.Wednesday, February 08, 2017

இங்கே புனிதம் என்று ஏதுமில்லை.


நாற்பது வயது வரைக்கும் வாழ்க்கையை வாழ்கிறோம். அதன் பிறகு வாழ்ந்த அந்த வாழ்க்கையை அசைபோட்டபடி மீதமிருக்கும் வாழ்வை வாழ்ந்து முடிக்கிறோம் என்கிற தொனியே ஜோதியின் அனுபவப்பயணம் சொல்லிச்சொல்கிறது. தன் எழுத்துப் பயணத்தை ஆரம்பப்புள்ளியாய்க் கொண்டு ஆரம்பிக்கிறது கட்டுரையின் பயணம்.

அங்கிருந்து வாசிப்பு, எழுத்துவழி வாழ்வனுபவத்தைப் பின்னோக்கிப் பார்த்து நிகழ்காலத்துக்கும், எதிர்காலத்துக்குமாய் இயங்குவிதிகளோடு பொருத்திப்பாக்கிறது. வாசிப்பில், அன்றாட நிகழ்வுகளின் நிகழும் தன்மைகளில் அவர் மனதின் கேள்விகள் சமூக, சுயவிசாரணையாய், அரசியல், ஆன்மீகச் சிந்தனையாய் சிக்கலான முடிச்சுகளை அவிழ்த்துப்போட்டு மனம் நிர்வாணமாய் நிற்க முனையும் முனைப்பு அங்கலாய்க்கிறது.

துன்பங்களின் நடுவே நிர்க்கதிக்கும், அலைபோல அலையும் சிந்தனைகளின் நிதர்சனங்களுக்கும் நடுவே ஊடாடும் மனம் துடுப்பிழந்த படகு போன்றது. துயரங்கள் தொடர்வதில்லை. அனுபவங்களும் முடிவதில்லை. அவை ஒருவரை அனுபூதியாக்குகிறது. உழைப்பு, விடாமுயற்சி, வாசிப்பு, விவேகம் கஷ்டங்கள், விமர்சனங்கள் தாண்டி எல்லாக்கோணங்களிலும் யோசிக்கும், ஆராயும் பண்பு ஜோதியிடம் உள்ளதாய் நான் நினைப்பது. ஜோதிஜிக்கும் எனக்குமான அரசியல் கருத்துமுரண்பாடுகள் பெரும்பாலும் ஈழப்போராட்டம் சார்ந்தவை. அதுகுறிதான பேச்சில் சொல்லிக்கொண்டது,

போர்வாழ்க்கைச் சூழலில் வாழ்ந்து கற்றுக்கொண்டது என் அனுபவப் புரிதல். இரண்டாந்தரத் தரவுகளான வாசிப்பின் வழி பெற்றுக்கொண்ட வாசிப்பு அனுபவம் ஜோதியின் எழுத்து. இவ்வாறாக இரு வேறுபட்ட மனிதர்களின் வாழ்ந்துபட்ட அனுபவமும் வாசிப்பும் ஒரே நேர்கோட்டில் சந்திக்காத முரண்பாடுகள், தர்க்கங்கள் எங்களுக்குள் உண்டு. ஈழப்பிரச்சினை குறித்த ஜோதியின் அரசியல் எழுத்து எனக்கும் அவருக்குமான வெவ்வேறு தளங்களில் பேசப்படவேண்டிய கருப்பொருள். அரசியல் விமர்சனம் என்றால் ஜோதிஜி நடுநிலையில் எழுதவேண்டுமென நினைப்பவர் அவர் எழுத்து சார்ந்து.

குடும்பம் தவிர்ந்த மற்றைய விடயங்களான அரசியல், சமூகப்பார்வை குறித்த எழுத்தில் ஜோதிஜியின் பிரதிபலிப்பு எதிர்மறை அனுபவத்தொனியாக எதிரொலிக்கிறது! சந்தைப்பொருளாதார ஜனநாயகத்தில் மனமும் வாழ்வும் பொருள்சார் சிந்தனைகள், உடைமைகள் வழி கட்டியமைக்கப்படுகிறது. கண்ணாடி போல் கையாளப்படுகிறது. அது சில நேரங்களில் தேடல்களின் வழி அவரவர் சுயங்களாலும், சில நேரங்களில் நம்மை ஆளும் சமூக, அரசியல், பொருளாதாரக் கொள்கைகளாலும் உடைக்கப்படுகிறது. அல்லது அதுவே நம் வாழ்வின் அர்த்தப் பிரதிபலிப்பாகிறது. இதன் சாதகபாதங்களை ஏன் ஜோதிஜி அதனதன் அளவுகளில், தன்மைகளில் சொல்லவில்லை!

கருத்துகளானால் வாதிடலாம். அடுத்தவர் அனுபவத்தை விவாதிக்க முடியாது. புரிதல்கள் தவறென்றால் சுட்டலாம். இங்கே புனிதம் என்று ஏதுமில்லை. அவரவர் வாழ்க்கையை அவரவர் அனுபவவழி வாழ்ந்து முடிக்கப் பழகிக்கொள்வதே முடிந்த முடிவு.

தன்னைத்தானே புரிந்துகொள்ளும்  உள்மனத்தேடலில் இறையியல் ஆன்மீகத்தை வழிவகையாக்கிக் கொண்டுள்ளார். தன் குடும்பம் சார்ந்தும், தான் வாழும் சமூகம் சார்ந்து எழுதும்போதோ தக்கன பிழைக்கும் பொருளுலகம் சார்ந்து இயங்குகிறது சிந்தனை.

அக புற உலகங்களின் மெய்யுண்மைகள் ஆள்கிறது ஜோதிஜி மனதை, எழுத்தை என்பதாய் எனக்குப் புலப்படுகிறது.  

ரதி
கனடா