Friday, November 30, 2012

கம்பி மேல் நடந்து பழகு -திருப்பூர் அந்நிய முதலீடு


ஆழம் மாத இதழில் நவம்பர் 2012 ல் வெளியான கட்டுரையின் விரிவாக்கம்.


உறவினர் நிறுவனத்தில் பணியாற்றிக்கொண்ருந்தவர் வெளியே வந்து சொந்தமாக  ஒரு ஆய்த்த ஆடை ஏற்றுமதி நிறுவனத்தை தொடங்கினார்.  உறவினர் உதவியுடன் விரைவாகவே குறுகிய காலத்திற்குள் அவரின் நிறுவனம் உச்சத்தை தொட்டது.  ஒப்பந்தங்கள் கொடுத்துக் கொண்டுருந்த இறக்குமதியாளர்கள் தொடர்ச்சியாக பெரிய ஓப்பந்தங்களாக கொடுத்துக் கொண்டு வர நம்ப முடியாத அளவுக்கு வளர்ச்சி மேலேறியது. . 

திடீரென்று ஒரு நாள் நிறுவனம் மொத்தமாக தனது அத்தனை உற்பத்தியை நிறுத்தும் சூழ்நிலை உருவானது. இறுதியாக கடன் கொடுத்த வங்கிகள் கழுத்தில் கை வைக்க தற்போது அந்த நிறுவன சொத்துக்கள் அனைத்தும் ஏலத்திற்கு வந்து விட்டது.  பார்த்து பார்த்து அழகாய் உருவாக்கிய நிர்வாக கட்டிடமும், உற்பத்தித்துறை சார்ந்தவைகளும் விலைபேசியாகி விட்டது. கோபுரத்தின் உச்சியில் இருந்தவர் தற்போது அதளபாதளத்திற்குள் கிடக்கிறார்.

ஆடையில் பயன்படுத்திய ஒரு ஜிப் தான் காரணம்.  நம்ப முடியவில்லையா?

இறக்குமதியாளர் ஒப்பந்தங்கள் கொடுக்கும் போதே ஆடைகளில் இந்த ரக ஜிப் தான் பயன்படுத்த வேண்டும் என்று சொல்லியதோடு  அது எங்கே கிடைக்கும் என்பது வரைக்கும் சொல்லியிருந்தார்.  

ஆனால் இவர் அங்கே வாங்கவில்லை.  

உள்ளூர் தயாரிப்பு விலை குறைவாக இருக்கிறது என்பதோடு தனக்கான லாபம் அதிகமாக கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளூர் தயாரிப்புகளை வாங்கி பயன்படுத்தி விட்டார். ஒப்பந்தம் கொடுத்தவர் பலே கில்லாடி. 

அந்த ஜிப் தயாரிக்கும் நிறுவனத்திடம் இந்த நிறுவனம் வாங்கியுள்ள ஜிப் குறித்து கேட்க எதுவும் வாங்கவில்லை என்று பதில் வந்தது. ஒப்பந்தம் கொடுத்த இறக்குமதியாளர் இது எனக்கான தரமல்ல என்று மொத்த ஒப்பந்தத்தையும் வேண்டாம் என்று சொல்லிவிட பெரிய முதலீடு போட்டவர் மூச்சு கூட விட முடியாமல் இன்று முழிபிதுங்கி கிடக்கிறார்..

இது ஒரு மாதிரி தான். 

இது போல திருப்பூருக்குள் இருக்கும் ஒவ்வொரு நிறுவன கதையையும் நோண்டிப்பார்த்தால் ஓராயிரம் கண்ணீர் காவியங்கள் நம்மை யோசிக்க வைக்கும்.  

ஆமாம்,  

அந்நிய முதலீடு திருப்பூருக்குள் வந்தால் என்னவாகும் என்பதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம் என்ற உங்களுக்கு யோசனை வந்துருக்க வேண்டுமே?

இது தான் வேண்டும்.  இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதோடு இந்த பாதையில் தான் பயணிக்க வேண்டும் போன்ற அத்தனை நிர்வாக விசயங்களையும் கற்றுக் கொடுத்து நம்மை கற்றுக் கொள்ளவும் வைத்து தான் கார்ப்ரேட் நிர்வாகம் செயல்படத் தொடங்குகின்றது. 

ஆனால் திருப்பூரின் தொழில் சூத்திரமென்பது வேறு. 

பயத்தில் தொடங்கி, பயத்தில் தொடர்ந்து கடைசி வரைக்கும் எவர் மீதும் நம்பிக்கை வைக்க முடியாமல் தான் நினைப்பது சரிதான் என்கிற ரீதியில் திருப்பூர் ஏற்றுமதி நிறுவனங்கள் நடந்து கொண்டுருக்கிறது. 

வட மாநிலங்களில் இருந்து வருபவர்களின் கொள்கை வேறு. தனக்கான லாபத்தில் மட்டும் குறியாக இருப்பார்கள்.  ஆனால் இங்கே வேறுவிதம். வளர்வதைப் போல எளிதாக வீழ்ந்தும் விடுகிறார்கள். மாற்றங்கள் எதுவும் தங்களை பாதிக்கப்படாமல் மரபு என்ற சொல்லுக்குள் செக்கு மாடு போல உழன்று கொண்டுருக்கின்றார்கள்..

கார்ப்ரேட் நிர்வாகம் என்பது கண்கட்டி வித்தையல்ல. 

அந்நியர்கள் என்பவர்கள் ஆகாயத்திலிருந்து வந்து குதிக்கின்றவர்களும் அல்ல.  

ஆனாலும் இந்தியாவிற்குள் வரும் அந்நிய முதலீட்டுக்கு ஏனிந்த எதிர்ப்பு?

இரண்டு காரணங்கள். 

ஒன்று நம் நாட்டின் சட்டங்களை பணம் இருந்தால் எளிதில் வளைத்துவிட முடியும் என்ற சூழ்நிலை தற்போது உருவாகிக் கொண்டிருக்கின்றது.  இதன் காரணமாக அந்நிய முதலீடுக்கு என்று விதிக்கப்பட்ட அத்தனை கொள்கை ரீதியான விசயங்களும் வெறும் கண்துடைப்பாக போய்விடுமோ என்று அனைவரும் பயப்படுகின்றனர்.  

கடந்த காலத்தில் நடந்த பல சம்பவங்களும் அப்படித்தான் இருக்கின்றது.

மற்றொன்று,  நாம் எதிலும் போட்டி போடத் தயராய் இருப்பதில்லை.  ஒரு தொழில் அமைந்து விட்டால் அதை மாற்றத்திற்கு தகுந்தாற் போல் மாற்றிக் கொள்ள விரும்புவிதில்லை.  முடிந்தவரைக்கும் லாபம் என்பதில் மட்டும் குறியாக வைத்துக் கொண்டு கறவை பசு போலவே கறந்துவிட துடிக்கின்றோம்.  

புதிதான சவால்ளை நாம் சந்திக்க வேண்டிய தருணத்தில் சந்திக்க முடியாத அளவுக்கு நம் சிந்தனை பழமையானதாக இருப்பதோடு நம்மை மாற்றிக் கொள்ள முடியாத அளவுக்கு புலம்பத் தொடங்குகின்றோம்.

வியாபாரத்தில் உள்ளூர் சந்தை என்பது இப்போது உலக சந்தையாக மாறியுள்ளது.  ஆனாலும் நம்மை மாற்றிக் கொள்ள முடியவில்லை. எல்லா வசதிகளும் வேண்டும் ஆனால் எந்த போட்டியிலும் பங்கெடுக்க மாட்டேன் என்றால் அதற்கு பெயர் என்ன?

முன்னாள் பிரதமர் நரசிம்மராவ் ஆட்சிகாலத்தில் உருவான தடையற்ற பொருளாதார ஒப்பந்தங்கள் மற்ற துறையினருக்கு எப்படி பயன்பட்டதோ? ஆனால் திருப்பூர் தொழில்துறையினருக்கு புது ரத்தம் பாய்ச்சியது போலவே இருந்தது.  ஏற்றுமதியின் வளர்ச்சி நம்பமுடியாத அளவுக்கு மேலேறத் தொடங்கியது.  காரணம் வெளிநாட்டு தொழில் நுட்பங்கள் அணைத்தும் திருப்பூருக்குள் வரத்தொடங்கியது..

திருப்பூரில் உள்ள ஆய்த்த ஆடைத் தொழிலில் முக்கிய பிரிவாக ஐந்து பிரிவுகள் வருகின்றது. 

நூல், அறவு, சாயமேற்றுதல், உலர்சலவையகம்.  இதற்குப் பிறகு தான் துணி வெட்டி தைத்து ஆடையாக மாறி பெட்டிக்குச் செல்கின்றது. 

இருபது வருடங்களுக்கு முன் பஞ்சாலை தொழிலில் பயன்படுத்திய எந்திரங்கள் உள்நாட்டு தயாரிப்பு நிறுவனங்களை சார்ந்து தான் இயங்கிக் கொண்டுருந்தது.  ஒரு குறிப்பிட்ட எந்திரம் வேண்டுமென்றால் வருடக்கணக்கில் காத்திருக்க வேண்டும்.  குறிப்பிட்ட சில நிறுவனங்கள் மட்டுமே இந்த துறையில் ஆதிக்கம் செலுத்திக் கொண்டுருந்தது. அவர்கள் வைத்ததே சட்டம்.  

ஆனால் வெளிநாட்டு நிறுவனங்கள் உள்ளே வரலாம் என்றதும் இன்றைய சூழ்நிலையில் எவர் வேண்டுமானாலும் கையில் காசிருந்தால் எந்த நாட்டிலும் இருந்து தனக்கு தேவைப்பட்ட வசதிகளுடன் கூடிய நவீன ரக எந்திரங்களை இறக்குமதி செய்து கொள்ள முடியும். 

திண்டுக்கல், திருப்பூர், கரூர், ஈரோடு, சேலம், கோவை மாவட்டங்களில் செயல்பட்டுக் கொண்டுருக்கும் அதிக அளவு பஞ்சாலைகள் அனைத்தும் வெளிநாட்டில் இருந்து இறக்குமதியான எந்திரங்களைக் கொண்டு தான் இன்று அதிக அளவு நூல்களை உற்பத்தி செய்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சந்தையில் சக்கைப் போடு போட்டுக் கொண்டுருக்கிறார்கள்.

அறவுத்துறையில் தொடக்கத்தில் இருந்த எந்திரங்கள் பனியன் ஜட்டிக்கென்று வடிவமைக்கப்பட்டு கோவை மற்றும் லூதியானாவிலிருந்து தான் திருப்பூருக்குள் வந்து கொண்டுருந்தது.  இந்த எந்திரங்களை நம்பித்தான் தொடக்கத்தில் ஏற்றுமதி வர்த்தகமும் நடந்து கொண்டுருந்தது.  ஆனால் கால வெள்ளத்தில் இன்று எந்திரங்கள் காணாமல் போய்விட்டது.  

கொரியா, தைவான், ஜெர்மனி, ஸ்விட்சர்லாந்து என்று பல நாடுகளில் இருந்து வரவழைக்கப்பட்ட பல நவீன அறவு எந்திரங்கள் நம்ப முடியாத அளவுக்கு இந்த ஏற்றுமதி தொழிலை வளர்ச்சியடைய வைத்துள்ளது. திருப்பூரின் இன்றைய நம்பமுடியாத வளர்ச்சிக்கு இந்த நவீனரக அறவு எந்திரங்கள் தான் முக்கிய காரணமாக இருக்கிறது.

சாயமேற்றுதல் துறையென்பது அடிமைகளை வைத்து வேலைவாங்குதல் போல மரபுசார்ந்த விசயமாகத்தான் இருந்தது.  வின்ஞ் என்று சொல்லப்படும் எந்திரங்கள் வந்த போதும் கூட துணிகளில் உள்ள தரத்தை குறிப்பிட்ட அளவுக்கு மேல் மேம்பப்டுத்த முடியவில்லை.  

ஆனால் சாஃப்ட் ப்ளோ எந்திரங்கள் வந்த பிறகு ஒரு ராட்சச பூதத்திற்கு தீனி போடும் அளவுக்கு இந்த துறை வளர்ந்தது.  நினைத்த நேரத்தில் நினைத்த மாதிரி ஒவ்வொன்றையும் சாதிக்க முடிந்தது.  

தண்ணீரின் அளவைக்குறைத்து, அதிக சாயமின்றி லாபத்திற்கு வழிகோலும் பலவிதமான முன்னேற்றங்களை இந்த துறையில் பலராலும் சாதிக்க முடிந்தது.

தொடக்கத்தில் உலர்சலவைகள் என்று சொல்லப்படும் காம்பேக்ட்டிங் என்ற துறை ஸ்டீம் காலண்டிரிங் என்ற பெயரில் இருந்தது.  துணியை இந்த எந்திரத்தில் கொடுத்தால் சுருக்கமின்றி தரும்.  ஆனால் காம்பேக்ட்டிங் என்ற எந்திரம் வந்தபிறகு தேவைப்பட்ட அளவோடு தேவையான தரத்தோடு துணியை கொண்டுவர முடிகின்றது. இந்த துறையில் இருக்கும் பல நவீன தொழில் நுட்ப வசதிகள் உள்ள எந்திரங்களின் வேகம் மற்றும் தரம் என்பது ஆச்சரியமளிக்கும் விசயமாகும்.

கடைசியாக தைக்கும் துறையில் உருவான் எந்திர மாறுதல்கள் நம்ப முடியாத அளவுக்கு மாறுதல்களை சந்தித்தது. 

எத்தனை ஆடைகள் தைக்கலாம் என்ற கேள்வி மாறி இத்தனை லட்சம் ஆடைகள் இந்த வாரம் முடித்து விடலாம் என்ற நம்பிக்கை படியில் நடைபோட வைத்தது. கண்டெயினர் ரீதியான ஒப்பந்தங்கள் பலருக்கும் கைகூட உதவியது. உலகில் உள்ள அத்தனை இறக்குமதியாளர்களின் பார்வையும் திருப்பூர் மேல் பட்டது. 

40,000 கோடி இலக்கு என்று யோசித்து இதை நம்மால் எட்டிப்பிடித்து விட முடியும் என்று நம்பிக்கையை உருவாக்கியது. ஒரு ஆய்த்த ஆடை உருவாக்கத்தில் தேவைப்படும் அத்தனை எந்திரங்களும் உள்ள வரவர இறக்குமதியாளர்கள் விரும்பும் எந்த வடிவத்தையும் எளிதாக கொண்டு வர முடிந்தது.

அத்தனைக்கும் ஒரே காரணம் நம்மிடம் இல்லாத தொழில் நுடபம் அந்நியர்களிடம் இருந்தது.  

அவர்களும் தரத்தயாராய் இருந்தனர். நாம் தான் நம் எல்லையை விரிவு படுத்த மனமில்லாமல் இருந்தோம்.  நமக்கு நாமே கட்டியிருந்த சங்கிலிகளை உடைத்துக் கொண்ட போது நம்மால் விரைவாக உயர முடிந்தது. 

இது சாதகமான ஒரு பக்கம் என்பது போல பாதகமான மற்றொரு பக்கமும் உண்டு. 

வெளிநாட்டு தொழில் நுட்பங்களை உள்ளே கொண்டுவர விரும்பிய நம் அரசாங்கம் உள்ளூர் தொழிலை வளர்க்கவே விரும்பவில்லை என்பது தான் இன்றுவரையிலும் நாம் பார்த்துக் கொண்டுருக்கின்ற உண்மை.  

வெளிநாட்டில் இருந்து வரும் ஒரு நிறுவனத்திறகு கிடைக்கும் நம்பமுடியாத அரசாங்கத்தின் ஒத்துழைப்பு எதுவும் உள்நாட்டு தயாரிப்பு நிறுவனங்களுக்கு கிடைப்பதே இல்லை. எந்திரங்களை, பல்வேறு தொழில் நுட்பங்களை உள்ளே வர அனுமதிக்கும் அரசாங்கம் உள்ளே செயல்பட்டுக் கொண்டுருக்கும் தொழில் நிறுவனங்களை வளர்ப்பதில் கவனம் செலுத்துவதில்லை. 

அவரவர்களும் கரணம் தப்பினால் மரணம் என்பதாகத்தான் முன்னேறிக் கொண்டுருக்கிறார்கள். இது அரசாங்கத்தின் பக்கம் உள்ள குறைபாடுகளைப் போல நம் பக்கம் மற்றொரு பிரச்சனையும் உண்டு.

நாம் ஆர் அண்ட் டி என்று சொல்லக்கூடிய ஆராய்ச்சி மனப்பான்மை என்பது நம்முடைய தொழிலில் கிடையவே கிடையாது.  எந்த தொழிலையையும் நாம் குறுந்தொழில் பார்வையாகத் தான் நாம் பார்க்கின்றோம்.  

ஒவ்வொரு தொழிலையையும் குடும்பத் தொழிலாகத்தான் பார்க்க விரும்புகின்றோம்.  

பணியில் இருப்பவர்களை அடிமைகளாக வைத்திருக்கவே விரும்புகின்றோம். 

புதிய விசயங்களை ஏற்றுக் கொள்ள விரும்புவதே இல்லை என்பதோடு புதிய முன்னேற்றங்களை கண் கொண்டு கூட பார்க்க விரும்புவதே இல்லை.

தொழில் நுட்ப வளர்ச்சி வெள்ளமாக மாறி நம்மை அடித்துக் கொண்டு செல்லும் போது தான் கடைசி நேரத்தில் விழித்துக் கொள்கின்றோம். 

அதற்குள் நாம் நம் தொழிலை இழந்துவிட வேண்டிய சூழ்நிலைக்கு ஆளாகின்றோம்.  

ஒவ்வொருமுறையும் இந்தியாவில் இது தான் நடந்து கொண்டிருக்கின்றது.  திருப்பூரில் இது கொஞ்சம் அதிகமாகவே இருக்கிறது. 

இது தான் மேலைநாட்டினருக்கு சாதகமாக அமைந்து விடுகின்றது.

திருப்பூர் என்பது அந்நியர்களை நம்பி அந்நியர்களுக்காகவே உருவாக்கப்பட்டு இன்று வரையிலும் வளர்ந்து கொண்டுருக்கும் நகரம்.  இங்குள்ள பெரு, சிறு, குறு முதலாளிகளும் ஒரு விதமான நாகரிக அடிமைகளே. 


உலகில் ஏதோவொரு மூலையில் இருந்து கொண்டு ஆட்டிப்படைக்கும் அந்நியர் ஒருவரின் கட்டளையை நிறைவேற்றவே இங்குள்ள ஒவ்வொரு நிறுவனமும் விரும்புகின்றது.  இருபது வருடங்களுக்கு முன் நிறுவனங்கள் மெதுவாக வளர்ந்து கொண்டுருந்தது.  வளரத் தொடங்கிய போது கூட எவரும் முழித்துக் கொள்ளவில்லை.  தனக்கான அடையாளத்தை உருவாக்க விரும்பாமல் மற்றவர்களின் அடையாளத்தை அவர்களின் பிராண்ட் உருவாக்கத்தில் பங்கெடுத்த ஒவ்வொரு நிறுவனமும் இன்று முழிபிதுங்கிப் போய் கிடக்கின்றது. 

ஒற்றை பிராண்ட் என்பது ஒரு வகையில் மோகினிப் பிசாசு தான்.  இருட்டில் இருந்து பார்க்கும் போது மினுமினுப்பாய் பளபளப்பாய் கவர்ச்சியாக இருக்கும்.  ஆனால் சிநேகம் பிடித்துக் கொண்டு விட்டால் நாமும் ஒரு வகையில் அடிமையாக இருக்க வேண்டிய சூழ்நிலை தான் உருவாகும்.  

அவர்கள் சொன்னது தான் சட்டம்.  அதுவே தான் வேதவாக்கு. அப்படித்தான் இன்று திருப்பூர் தொழில் தேய்ந்து கொண்டுருக்கிறது. காரணம் நம்மிடம் சந்தைப்படுத்தும் திறமையும் இல்லை. அதை நோக்கி நகர்வதும் இல்லை. 

ஆனால் இந்த சந்தைப்படுத்தும் முறைக்கு அரசாங்கத்தின் கொள்கை ரீதியான ஒப்புதல் என்பதும் ஒத்துழைப்பும் இந்தியாவில்  கண்துடைப்பாகத்தான் இருக்கிறது. இதன் காரணமாகவே திறமையுள்ளவர்கள் கூட எதற்கு வேண்டாத வேலை என்று தன்னளவில் ஒரு பன்னாட்டு நிறுவனத்தை சார்ந்து தங்களை அடகு வைத்துக் கொண்டுவிடுகிறார்கள்.

ஒற்றை பிராண்ட நிறுவனங்களை நம்பி இங்குள்ள பெரும் முதலாளிகள் பல நூற்றுக்கணக்கான கோடிகளை கொண்டு அதற்கென்று சிறப்பு வடிவமைப்போடு தனியாக நிறுவனங்களை உருவாக்கினார்கள்.  

சிறப்பாகவே முன்னேறிக் கொண்டுருந்தார்கள்.  ஆனால் காலமாற்றத்தில் உன்னைவிட அவன் இன்னமும் குறைவாக கொடுக்கத் தயாராய் இருக்கின்றான்.  நீ ஏன் குறைத்துக் கொள்ளவதில்லை என்று சொல்லியே இன்று முதலீடு போட்டவர்களின் குரல்வளையில் கையை வைத்து பலரின் மூச்சையும் நிறுத்தி விட்டார்கள்.  இங்கே நம்பி முதலீடு போட்டவர்களுக்கு வேறு வழி இல்லை. 

செயல்பட முடியாத நிறுவனங்களை வைத்துக் கொண்டு வங்கி அதிகாரிகளுக்கு தினமும் பதில் சொல்லிக் கொண்டுருக்கிறார்கள். ஆனால் அவர்கள் அடுத்த நாட்டுக்கு தாவி போய் விட்டார்கள். 

இது தான் அந்நியர்களின் கொள்கை அதுவே தான் கார்ப்ரேட் நிர்வாகம்.  தரத்தில் சமரசம் எதுவுமில்லை என்பதைப் போலவே எழுதப்பட்ட ஒப்பந்தத்திற்கு மேல் ஒரு பைசா கூட கொடுக்க விரும்பாதவர்கள் தான் இன்றைய மேலை நாட்டு சமூகத்தினர்.

கட்டுரையின் தொடக்கத்தில் ஒருவரின் கதையை படித்தோம் அல்லவா?  இந்த கதை தான் அந்நிய முதலீடு திருப்பூருக்குள் அதிக அளவு நுழையும் போது நடக்கத் தொடங்கும்.  

நாம் மேலே பார்த்த ஆய்த்த ஆடை உருவாக்கத்தில் பங்கெடுக்கும் பிரிவுகளைப் போல இன்னும் பல பிரிவுகள் உண்டு.  அத்தனையும் துணை பிரிவுகளாக இருப்பவை.  ஆடைகளுக்கு தைக்க தேவைப்படும் நூல் முதல் பிற துறை சார்ந்த அத்தனை பிரிவுகளும் குறு சிறு தொழிலாக லட்சணக்கனக்கான தொழிலாளர்களை வாழ வைக்கும் தொழிலாக திருப்பூரிலும் இதனைச் சார்ந்த பிற ஊர்களிலும் இருக்கிறது.  இந்த சிறு குறு தொழில்கள் அத்தனையும் முடங்கி விடும் அபாயமுண்டு. 

உள்ளே வரும் எந்த அந்நியர்களும் தாங்கள் ஒரு நிறுவனத்தை எடுத்துக் கொண்டு நடத்த விரும்புவதில்லை.  ஆனால் அந்த நிறுவனம் தன்னுடைய கட்டுப்பாட்டில் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்வர்.  ஒரு நிறுவனம் ஒப்பந்தம் மூலம் தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து விட்டால் அந்த உற்பத்தி சார்ந்த அத்தனை விசயங்களுமே அவரின் கட்டுப்பாட்டுக்கே வந்து விடுகின்றது.

இந்த நூல் பயன்படுத்த வேண்டும் என்று தொடங்கி ஒவ்வொரு சின்னச் சின்ன விசயங்களிலும் ஆதிக்கம் செலுத்த முடியும்.  அதுவும் இந்தியாவிற்குள் இருக்கும் பொருட்களும் அதன் விலைகளை விட மற்ற நாடுகளில் இருந்து கொண்டு வரப்படுவதைத் தான் விரும்புவார்கள்.

மன்மோகன் சிங் உருவாக்கியுள்ள 30 சதவிகிதம் இந்தியப் பொருட்களையே பயன்படுத்தப்ட வேண்டும் என்ற கொள்கை எப்போதும் போல காற்றில் பறக்கவிடப்படும். தினந்தோறும் ஊடகங்களை பார்த்து படித்துக் கொண்டுருப்பவர் எனில் உங்களுக்கு சில விசயங்கள் தெரிய வாய்ப்புண்டு. 

தமிழ்நாட்டின் ஒவ்வொரு பகுதிகளில் இயங்கிக் கொண்டுருக்கும் பல பன்னாட்டு நிறுவனங்கள் உள்ளூர் பேருராட்சி நகராட்சிகளுக்குக்கூட தங்களது அடிப்படையை வரியைக் கூட கட்டாமல் டிமிக்கி கொடுத்துக் கொண்டுருப்பதை கேள்விப் பட்டிருக்கலாம்.  இது தான் இங்கே முக்கிய பிரச்சனை.  இந்திய சட்டங்கள் என்பது நடைமுறையில் சாமான்ய மக்களுக்கும் பணம் படைத்தவர்களுக்கும் வெவ்வேறு விதமாக செயல்படுவதை பல செய்திகளின் மூலம் நம்மால் உணரமுடியும்.

இப்போது கூட திருப்பூருக்குள் பாதிக்கும் மேற்பட்ட பொருட்கள் மற்ற நாடுகளில் இருந்து தான் இறக்குமதியாகிக் கொண்டுருக்கிறது.  ஆனால் இது போன்ற தொழில்களில் ஈடுபட்டவர்கள் அத்தனை பேர்களும் நம்மவர்கள். 

தொழில் ரீதியான உறவுகளுடன் மற்ற துறை சார்ந்த இணக்கமான உறவுகளுடன் இயல்பாக போய்க் கொண்டுருப்பது அந்நியர்கள் தலையிடும் போது நிச்சயம் மாறுதல்கள் உருவாகும். நம்பிக்கைச் சார்ந்த விசயங்களின் மூலம் நடந்து கொண்டுருக்கும் இது போன்ற துணை தொழில்களின் முகம் மாறும். 

ஆனால் அந்நியர் கைகளுக்கு வரும் போது கையில் காசு வாயில் தோசை என்று மாற்றப்படும். 

ஒரு ஏற்றுமதி நிறுவனத்தில் 50 பேர்கள் பணிபுரிகின்றார்கள் எனறால் அந்த எண்ணிக்கை குறைக்கப்படும். 

கார்ப்ரேட் நிர்வாகம் என்பது திறமையானவர்களைத் தவிர மற்ற அத்தனை பேர்களையும் தயவு தாட்சண்யம் இல்லாமல் வெளியே அனுப்பி விடுவர்.  மேலும் மேலும் தங்களது வேலையை உறுதிப்படுத்திக் கொள்ள தங்களது திறமைகளை வளர்த்துக் கொண்டே ஆக வேண்டும்.  

ஆட்களை குறைத்து பல இடங்களில் எந்திரங்கள் மூலம் ஒவ்வொரு வேலையும் எந்திரமயமாக்கப்படும். திறமை இருப்பவர்களும் கொடுக்கும் சம்பளத்தை வாங்கிக் கொண்டு நவீன அடிமை சாசனத்தில் கையெழுத்திடுவர். 

திருப்பூருக்குள் அந்நிய முதலீடு நுழையும் போது முதலாளி, தொழிலாளி என்ற பாகுபாடு இல்லாமல் முதலீடு போட்ட பெரிய அடிமை மற்றும் சொன்னதை செய்ய வேண்டிய சின்ன அடிமை என்கிற ரீதியில் அவரவர் வாழ்க்கையை வாழ்ந்து கொள்ள முடியும்.

மன்மோகன் சிங்கின் கனவுகள் அற்புதமானவை. தொழில் ரீதியாக போட்டி போட முடியவில்லையா?  அந்தத் தொழிலை ஒரு பன்னாட்டு நிறுவனத்திடம் ஒப்படைத்துவிடு! கனிம வளம் நிரம்பிய இடம் இருக்கிறதா? உடனடியாக ஒரு நிறுவனத்துக்கு தாரை வார்த்துவிடு! 

பொருளாதார சிறப்பு மண்டலம் உருவாகட்டும். மக்கள் பாதிக்கப்படுவதைப் பற்றிக் கவலைப்படாதே. வேலை வாய்ப்புகள் அதிகரிப்பதை நினைத்து மகிழ்ச்சி கொள். ஏழைமையை ஒழிப்பது என்றால் ஏழைகளை ஒழிப்பது என்று புரிந்துவைத்திருக்கும் ஒரு பிரதமரால் வேறு எப்படிச் சிந்திக்கமுடியும்?

Tuesday, November 27, 2012

தர்மபுரி - வன்முறையும் வன்மமும்


நீங்கள் யார் பக்கம்? 

இன்று நாடுகள் முதல் வீடுகள் வரைக்கும் கேட்கும் கேள்வியிது? 

யோசிக்கக்கூட அவகாசமில்லாமல் பதில் சொல்ல வேண்டியிருக்கிறது. பலசமயம் இது தான் எதார்த்தம் என்பதாக சமாதானபடுத்திக் கொண்டே பதில் சொல்ல வேண்டியிருக்கிறது.  ஆனால் சாதி குறித்து யாரிடமாவது கேட்டுப் பாருங்க. நேரிடையான பதில் வராது. அவர்களின் உண்மையான முகமே அப்போது தான் நமக்கு வெளியே தெரியும்.

ஒரு மனிதனின் உண்மையான ரூபம் எப்போது தெரியும்?

அவன் வேலையில் சேரும் போது தொடங்கும். அவன் திருமண வாழ்க்கை தொடங்கும் போது  உறுதிப்படும். குழந்தைகள் வளரும் போது மெருகேறும். குழந்தைகளின் திருமண வாழ்க்கைக்கு முயற்சிகள் தொடங்கும் போது தான் அவனில் உள்ள அத்தனை மிருகங்களும் வெளியே தெரியும்.

ஆனால் நடந்து முடிந்த தர்மபுரி சாதிக்கலவரத்தில் பெண்களும் கூட பங்கெடுத்து முடிந்தவரைக்கும் ஒவ்வொரு வீடாகச் சென்று சுருட்டியிருப்பதைப் பார்க்கும் போது தான் ஆதிக்கம் என்பதையும் தாண்டி அருவெறுப்பு என்கிற நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறது.

கடந்து வந்த தமிழர்களின் வரலாற்றில் இந்த சாதி என்ற ஒற்றை வார்த்தையினால் மட்டும் உருவான கலவரங்களும், வாழ்க்கை இழந்தவர்கள், இறந்து போனவர்கள், நிர்கதியாக்கப்பட்டு மூலைக்கு தள்ளப்பட்டவர்களின் பட்டியலின் நீளம் அதிகம். 

குறிப்பிட்டுச் சொல்லப்போனால் தமிழ்நாட்டில் கடந்த 50 ஆண்டுகளில் ஏராளமான சிறிய பெரிய கலவரங்கள் தோன்றினாலும் பத்து வருடத்திற்கு ஒரு முறை உருவாகும் அல்லது உருவாக்கப்படும் இந்த சாதி ரீதியான கலவரங்கள் அடக்குறையின் உச்சம் என்பதை விட ஆதிககம் செலுத்த முடியாதவர்களின் வன்மத்தின் வடிகாலாகத்தான் இருக்கின்றது. 

மலத்தை கரைத்து ஒரு மனிதனின் வாயில் ஊற்றி கொக்கத்தரிவர்களின் ஆழ்மனம் குறித்த பார்வையை நாம் எந்த வகையில் எடுத்துக் கொள்ள முடியும்.? பெற்ற மகள் என்றும் பாராமல் வேறு சாதியில் திருமணம் செய்து கொண்ட காரணத்திற்காகவே கொல்லத்துடிக்கும் அந்த மகாபாவியை எப்படி அழைப்பீர்கள்? 

உங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் வரையிலும் மனம் என்பது ஒரு பொக்கிஷம்.  ஆனால் கட்டுத்தளைகளை உடைத்து வெளியே திரியும் போது அதுவொரு புதைபொருள்.

உங்களால் முழுமையாக உங்கள் மனத்தை புரிந்து கொள்ள முடியாமல் போனால் சாகும் வரையிலும் மனித வடிவில் மிருகத் தன்மையோடு வாழ வேண்டியிருக்கும்.ஆதிக்கம் செலுத்த விரும்புவர்களும், வாய்ப்புகளை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருப்பவர்களுமென இங்கே பலரும் அப்படித்தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

சமூகத்தின் முக்கிய சீரழிவுக்கு இவர்களே முக்கிய காரணமாக இருக்கிறார்கள். பட்டங்கள், பதவிகள், கௌரவம் என்று எத்தனை விதமாக வெளியே தெரிந்தாலும் சற்று கூர்ந்து கவனித்துப் பாருங்கள். அவர்கள் வாயிலில் வடியும் ரத்தக்கறை சுவைத்தும் அடங்காதவர்களாகத்தான் சமூகத்தில் இருக்கிறார்கள்.

தொடக்கத்தில் உருவான தீண்டாமை என்பதன் முழு அர்த்தமும் இப்போது முற்றிலும் மாறிப் போயுள்ளது.  மாறியுள்ளதே தவிர உள்ளே உள்ள வன்மம் மட்டும் குறைந்தபாடில்லை.

ஒதுக்கப்பட்டவர்கள், ஒதுங்கி வாழ வேண்டியவர்கள் என்று அழைக்கப்பட்ட அத்தனை பேர்களின் சமூக வாழ்க்கையின் தன்மையும் இன்று மாறித்தான் வந்துள்ளது.  இது பெற்ற உரிமைகளினால் அல்ல. மாறி வரும் பொருளாதாரச் சூழ்நிலை. இதனோடு விரைவாக வளர்ந்து வரும் நகரமயமாக்கல் போன்ற காரணங்களினால் மட்டுமே இதன் எல்லைகள் உடைபட்டுக் கொண்டே போகின்றது. எந்த பன்னாட்டு நிறுவனங்களும் சாதி பார்ப்பதில்லை.  அந்த நிறுவனங்களில் பணிபுரிகின்றவர்களுக்கு உள்ளே அந்த எண்ணம் இருந்தாலும் எளிதில் உடைத்துவிட முடிகின்றது.  திறமை முக்கியம். அவர்கள் எதிர்பார்க்கும் சம்பளம் அதைவிட முக்கியம்.  பொருத்திக் கொண்டால் பொறுமைசாலியாக வாழ்ந்தால் வாழ்க்கையின் அடுத்தபடிக்கு எளிதாக நகர்ந்துவிடலாம்.

உண்மையான முழுமையான மாற்றங்கள் இன்னமும் எட்டப்படாத நிலையிலும் கூட பலருக்கும் உருவாகிக் கொண்டிருக்கும்  மாறுதல்களை ஏற்றுக் கொள்ள மனமில்லை என்பதும் உண்மையே.  

இவன் இந்த சாதியில் பிறந்தவன். இவன் இப்படித்தான் இந்த வட்டத்திற்குள் வாழ வேண்டும் என்ற எல்லைக்கோடு உடைபடத் தொடங்கிய போதே பலரின் வெறுப்பு அணையாத நெருப்பு போலவே உள்ளேயே புகையத் தொடங்கியது. சாதி என்ற வார்ததை என்பது அடித்தளமாகவும் பொறாமை என்பது அதன் மேல் இருக்கும் கொடூர பகுதியாகவும் மாறத் தொடங்கியது. 

தொடக்கத்தில் உருவான அடிமை முறைகள் உருவானதற்கு முக்கிய காரணம்  தீண்டாமை அல்ல. அடிமைகளை வைத்து தங்களை வளப்படுத்திக் கொள்ள என்பதற்காக மட்டுமே என்பதை நாம் நினைவில் வைத்திருக்க வேண்டும்.

பொன்னாசை, மண் ஆசை பொருள் ஆசை வளர வளர  ஒவ்வொருவரின் முகமும் பல்வேறு விதங்களில் வெளிப்படத் தொடங்கியது. 

அன்று அடிமை. இன்று சாதி.
அன்று உரிமை என்ற வார்த்தையே இல்லை. இன்று இருக்கிறது. ஆனால் அதை எதிர்பார்க்கக்கூடாது. மொத்தத்தில் குறிப்பிட்ட சிலரின் வளர்ச்சிக்காக குறிப்பிட்ட சமூகம் தன்னை மறந்து உழைத்துக் கொண்டே இருக்க வேண்டியது தான்.  இது தான் இதற்குள் இருக்கும் முழுமையாக அர்த்தம். பன்னாட்டு நிறுவனங்களுக்கு வளர்ந்து கொண்டிருக்கும் நாடுகள். பலதரப்பட்ட மனிதர்களுக்கு சேரியில் வாழும் மனிதர்கள். சேரிகள் உடைபட்டு சேதி என்ன தெரியுமா? என்று கேள்விகள் வரும்போது தான் கலவரமாக வெடிக்கின்றது. 

இது தான் நாம் பெற்ற வளர்ச்சிகளினால் கிடைத்த வித்தியாசம்.

மாறிவரும் நகரமயமாக்கல் வாழ்வின் சூத்திரத்தை முடிந்தவரைக்கும் உடைத்துக் கொண்டே வந்தாலும் மாறவே மாட்டேன் என்பவர்கள் இன்று வரையிலும் பெரும்பான்மையாக இருப்பதால் உருவாக்கும் ஆத்திரம் மட்டுப்படுவதே இல்லை.அதில் ஒரு காட்சி தான் சமீபத்தில் நாம் கண்ட தர்மபுரி கலவங்கள். ஒவ்வொருவரும் சாதியினால் பிரிக்கப்பட்டு வாழ்ந்தாலும் பொருளாதார முன்னேற்றங்கள் சாதியினால் வருவதல்ல. உழைப்பும் சேரும் போது தான் உருவாவது. 

இங்கே தான் பிரச்சனை தொடங்குகின்றது.

நம் முன் கை கட்டி நிற்க வேண்டியவர்கள் இப்படி வளர்ந்து விட்டார்களே என்ற ஆதங்கம் எரிச்சலாக மாறி, பொறுமையுடன் கூட வன்மமாக உருவாகி சமயத்திற்காக காத்திருக்க வைத்திருக்கின்றது.  தேடித்தேடி ஒவ்வொரு முறையும் இந்த மக்களின் வாழ்க்கை சூறைகாற்றில் சிக்கியதாக மாற்றப்பட்டுக் கொண்டே வருகின்றது.

பொருளாதார பார்வையில் நாம் பார்க்கும் ஏழைகள் பணக்காரன் என்ற இந்த இரு பிரிவைப் போல மற்றொரு பிரிவும் இயல்பாகவே ஒவ்வொரு காலகட்டத்திலும் தோன்றிக் கொண்டே தான் இருக்கிறது. 

சமூகத்தில் ஆதிக்கம் செலுத்துபவர்கள், செலுத்த முடியாதவர்கள்.

இந்த இரண்டு கோட்டுக்குள் தான் ஒவ்வொருவரும் வாழ வேண்டியிருக்கிறது. சாதி என்பது ஒரு முலாம் போல பூசப்பட்டு அதற்கு வெவ்வேறு காரணங்கள் கற்பிக்கப்பட்டுக் கொண்டே வரப்படுகின்றது. 

பாதிப்பு என்பது ஒரு பக்கம் மட்டும் உருவாவதல்ல. கலப்புத் திருமணங்கள் இது போன்ற கலவரத்திற்கு காரணம் என்று சொன்னாலும் சமூக சீர்கேட்டையும் இவர்கள் உருவாக்குகிறார்கள என்றொரு மறு பக்க காரணமும் நாம் ஆழமாக உள்வாங்க வேண்டும். 

மிரட்டியே வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருப்பவர்களும், மிரட்டித்தான் பார் பார்க்கலாம் என்ற சொல்லும் இந்த இரு பிரிவு மக்களும் முடிந்தவரைக்கும் தங்கள் பக்கம் உள்ள நியாயங்களை எடுத்து வைத்துக் கொண்டே தான் இருக்கிறார்கள்.

உண்மையான காரணங்கள் எதுவாக இருந்தாலும் உள்ளுக்குள் இருப்பது மொத்தத்தில் பொருளாதாரம் சார்ந்தது தான் என்று நமக்குத் தெரிந்தாலும் நம்மால் ஏற்றுக் கொள்ளமுடிவதில்லை. நன்றாக சமூகத்தை உற்றுக் கவனித்துப் பாருங்கள்.  பொருளாதார ரீதியாக வளர்ந்த மனிதர்கள் வீட்டில் நடக்கும் திருமணங்களில் ஆதிக்கம் செலுத்துவது சாதி அல்ல.

பணம் தான் பிரதானமாக இருக்கிறது. இந்த பணம் தான் கடைசி வரையிலும் அனைத்தையும் தீர்மானிக்கின்றது.

சாதிகள் குறித்து நீங்கள் யாரிடம் வேண்டுமானாலும் பேசிப் பாருங்கள்.  ஒரு இழுவையோடு தான் பதில் வரும். 

படித்தவர், பண்பாளர், நாலும் தெரிந்தவர், மதங்களை கடந்தவர், இறை மறுப்பு கொள்கையோடு வாழ்ந்து கொண்டிருப்பவர் என்று எத்தனை வட்டங்களை உடைத்து வாழ்ந்தாலும் உள்ளூர ஏதோவொரு முலையில் இந்த சாதி குறித்த எண்ணங்கள் ஒவ்வொருக்குள்ளும் இருக்கத்தான் செய்கின்றது.  சிலருக்கு ரணமாக, சிலருக்கு காயமாக. பலருக்கும் சீழ் பிடித்த புண்ணாக இருக்கிறது.  ஆற்றவும் தெரியாமல் அகற்றவும் முடியாமல் அவஸ்த்தையோடு தான் ஒவ்வொருவரும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

இங்கே ஒவ்வொரும் விரும்பியே தான் இந்த சாதி வளர்ந்தது, வளர்கின்றது.  வளர்ந்து கொண்டே இருக்கவும் போகின்றது. உண்மையான காரணங்களை நீங்கள் உரத்து பேச முடியாது. காரணம் நீங்கள் ஓரங்கப்பட்டப்படுவீர்கள் அல்லது ஒழிக்கப்படுவீர்கள்.

சமீபத்தில் தர்மபுரியில் நடந்த கலவரமென்பது நம்மைப் பொறுத்தவரையிலும் ஒரு நிகழ்வு. இன்னும் சில மாதங்கள் கழிந்தால் ஆமா.. அந்த காதல் திருமண தம்பதிங்க தானே... என்று அடுத்த செய்திக்கு தாண்டிவிடுவோம்.  

தமிழ்நாட்டில் கடந்த 50 ஆண்டுகளாக நடந்த ஒவ்வொரு சாதி ரீதியான கலவரங்களும் இப்படித்தான் மறக்கப்பட்டு மறைக்கப்பட்டுக் கொண்டே வருகின்றது. இந்த கலவரத்தினால் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டவர்கள் மீண்டு வருவதற்கு சிறிது காலம் தான் பிடிக்கும். ஆனால் உருவாக்கப்பட்ட மிரட்டல் தான் இங்கே முக்கியமாக பேசப்பட வேண்டும் என்று தோன்றுகின்றது. 

சாதிகள் குறித்து பேசும் போது இங்கு ஒவ்வொருவரும் உருவான வரலாற்றை, உருவாக்கியவர்களை மட்டும் தான் பேச விரும்புகிறார்கள்.  ஆனால் எவரெல்லாம் விரும்பி கடைபிடிக்கின்றார்கள் என்பதைப் பற்றி மறந்தும் கூட பேசுவதில்லை. இன்று வரையிலும் நீ இப்படித்தான் கடைபிடித்தே ஆக வேண்டும் என்று கட்டாயப்படுத்தி அதை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திக் கொண்டு வருபவர்கள் யார்?

இந்த சாதியைப் பற்றி பேசுபவர்கள் தவறாமல் குறிப்பிடும் ஒரு வார்த்தை தான் பிராமணியம்.

ஆனால் இந்த சாதி வேரை மரமாக்கி விழுதுகள் விடுமளவிற்கு வளர்த்தது யார்? இன்று காய் கனியாக பூத்துக் குலுங்குவதையும், கவனமாக தண்ணீர் ஊற்றி பாதுகாத்துக் கொண்டிருப்பதும் யார்?

வர்ணாசிரம்ம தத்துவங்கள் இந்த கொடுமைகள் உருவாக்கியது என்று சொல்பவர்களின் குடும்பத்தில் பார்த்தால் அந்த தத்துவம் சொன்ன பூஜை புனஸ்காரங்கள் என்று கனஜோராக ஒரு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருப்பது தெரியும்.

நமக்கு கிடைத்த வழிகாட்டிகள் அத்தனை பேர்களின் குடும்பப் பெண்கள் பின்பற்றும் இறையியல் தத்துவங்களை தடுக்க முடியாமல் சமூகத்தை திருத்த நினைக்கும் சமூகப் போராளிகளைத் தான் நாம் பெற்றுள்ளோம். அவர்களின் வார்த்தைகளை நம்பித் தான் இன்று பாதிக்கப்பட்டு வாழும் மக்களின் வாழ்க்கை அவல நிலைக்கு தள்ளப்படுகின்றது. அறிவுரைகள் என்பது காலம் காலமாக அடுத்தவர்களுக்கு மட்டும் தானே?

சாயங்கள் உதிர மூன்று துருவங்களை அலசி காயப்போட வேண்டும்.  

ஆன்மீகம், அரசியல், மாற்றம் வேண்டும் என்று ஒவ்வொரு காலகட்டத்திலும் போராடிக் கொண்டிருக்கும் சமூகப் போராளிகள்

இன்றைய சூழ்நிலையில் தமிழ்நாட்டில் உள்ள ஆன்மீகம் சம்மந்தபட்ட மடங்கள் அனைத்தும் பழமைவாத ஆன்மீகவாதிகளிடம் சிக்கி தானும் வாழத் தெரியாமல் மடங்கள் உருவாக்கிய கொள்கையை பின்பற்ற வழியும் தெரியாமல் அறக்கட்டளை என்ற பெயரில் தான் நடந்து கொண்டு இருக்கிறது.  ஒவ்வொரு மடங்களும் என்ன செய்தது? என்ன செய்து கொண்டிருக்கிறது என்று பார்த்தீர்களேயானால் கடைசியில் அது அசிங்க கதைகளின் உச்சகட்டமாகத்தான் இருக்கிறது.

மதம் என்ற பெயரில் உருவாக்கப்பட்ட பிரிவினைகளை மாற்ற வேண்டும் என்ற எண்ணம் இருப்பதில்லை. அடித்தட்டு மக்களின் வாழ்க்கை குறித்த அக்கறையில்லை. பணம் படைத்தவர்களின் பணத்தை கொண்டு வந்து கொட்ட வேண்டிய ஒரு கிட்டங்கியாகத்தான் தற்போதைய அனைத்து மடங்களும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.

ஒவ்வொரு மடத்திற்கும் ஒவ்வொரு கொள்கை. தின்று கொழுத்து ஏப்பத்தோடு வாழ்ந்து கொண்டுருக்கும் இவர்களின் வாழ்க்கையில் ஒடுக்கப்பட்டவர்களின் வாழ்க்கை என்பது மறைக்கப்பட்ட ஒன்று அல்லது மறந்து போன ஒன்று.
மக்களிடையே பிரிவினைகள் நாளுக்கு நாள் வளர வளர இது போன்ற மடங்கள் இன்று வரையிலும் வலுவிழந்து கொண்டிருப்பது கண்கூடு. ஆனால் அந்த மடத்தின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் எவருக்கும் இது குறித்த அக்கறையில்லை. பிரிவினைகள் வளரத்தானே செய்யும்.

வளர வளரத்தான் இவர்களின் வாழ்க்கையும் வசதியாக இருக்கும். . 

எல்லா மக்களும் மடத்திற்குள் நுழைந்து விட்டால் அதற்குப் பெயர் சந்தைக்கூடமாக மாறிவிடும் என்பது இவர்களின் அசைக்கமுடியாத எண்ணமாக இருப்பதால் இன்று வரையிலும் சமயத்தில் உள்ள அத்தனை மடங்களிலும் போடப்படுகின்ற சாம்பிராணி புகையில் பார்ப்பதைப் போல ஒவ்வொன்றும் மங்கலாகத் தெரிகின்றது. எல்லாமதங்களிலும் இப்படித்தான் இருக்கின்றது.

இன்று இதன் மூலம் ஆதாயம் தேடுபவர்கள் முதல் இதனை வைத்து அரசியல் செய்யும் அரசியல்வாதிகள் வரைக்கும் ஓங்கி முழங்கும் எந்த கொள்கைக்குப் பின்னாலும் ஆத்ம ரீதியான புரிதல் இருக்கிறது என்பதை நம்புகிறீர்களா? அரசியல் மூலம் வகுக்கப்பட்ட கொள்கையில் மூலம் கிடைக்க வேண்டிய உரிமைகளும் முழுமையாக கிடைத்தபாடில்லை. கிடைத்தாலும் வெறுமனே கண்துடைப்பாக இருப்பதால் உண்மையான நீதி கிடைப்பதற்குள் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரும் பரலோகம் செல்வது தான் நடந்து கொண்டிருக்கிறது.  

அரசியல் என்ற போர்க்களத்தில் ஒவ்வொரு முறையும் பகடைக்காய் போலவே இந்த இன மக்கள் நடத்தப்படுகிறார்கள். உரிமைகளைப் பற்றி பேசக்கூடாது. புரிந்து கொள்ளக்கூடாது என்பதாகத்தான் ஒவ்வொரு முறையும் கவனமாக காய் நகர்த்தப்படுகின்றது. அதற்குள் அடுத்த ஆட்சி வந்து விடும். மறுபடியும் பூஜ்யத்தில் இருந்து தொடங்கும்.

ஆனால் ராஜ்ஜியத்தை ஆள வந்தவர்கள் வாண வேடிக்கை நிகழ்த்திக் காட்டுவதோடு அவர்களும் ஒதுங்கி விடுகிறார்கள்.

ஆனால் இந்த இரண்டுக்கும் அப்பாற்பட்ட சமூகப் போராளிகள், சாதி சங்கங்கள், சாதி தலைவர்கள் என்று வருகின்ற, உருவாகின்ற அத்தனை பேர்களும் காலப் போக்கில் அரசியல் என்ற பள்ளத்தில் விழ வேண்டியவர்களாகத்தான் அவர்களின் பயணம் முடிகின்றது.

இருபது ஆண்டுகளுக்கு முன்னால் மறுக்கப்பட்ட பல உரிமைகள் குறித்து இப்போது பேசவாவது முடிகின்றது.  ஆனால் அந்த உரிமைகள் மறுக்கப்படும் போது குறிப்பிட்ட சிலரிடம் தான் இந்த இன மக்கள் தங்களை அடகு வைக்க வேண்டியிருக்கிறது.  அவர்களும் தங்களின் சுய லாப அரசியல் வளர்ச்சியை மனதில் கொண்டே ஒவ்வொரு முறையும் பந்தாடி இந்த மக்களை பாதாள குழியில் தள்ளிக் கொண்டேயிருக்கிறார்கள்.

பொருள் செய்ய பழகு என்றார்கள்.  

ஒருவனின் பொருளாதாரம் என்பது அது வெறுமனே பொருள் சார்ந்த விசயம் மட்டுமல்ல.

உங்கள் வாழ்க்கையை தீர்மானிக்ககூடியது.
உரிமைகளை உங்கள் அருகே வரவழைப்பது.
கண் அசைவில் காரியம் செய்ய முடியும் என்று உணர வைப்பது. எல்லைகளை தகர்த்து எறிய வைப்பது.

ஆனால் முறைப்படியான பொருளாதார வளர்ச்சி என்பது அது கல்வியோடு சேர்ந்த ஒரு கூட்டுக் கலவையாக இருக்கும் பட்சத்தில் தான் நீடித்து நிற்க முடிகின்றது.

தற்போதைய சமூகத்தில் உருவாக்கப்பட்டுள்ள சமூக பாதுகாப்பு சட்டங்களின் மூலம் எவரும் எந்த இடத்தையும் அடைய முடியும்.

வழியெங்கும் முள் பாதைகளால் இருந்த வாழ்க்கை இன்று மாறியுள்ளது. இன்னமும் புறக்கணிப்பு என்பது பல இடங்களில் இருந்த போதிலும் அது எத்தனை நாளைக்கு இருக்கும் என்பது ஒரு பெரிய கேள்விக்குறி. 

ஒருவன் முறைப்படியான பெற்ற கல்வி என்பது எந்த அளவுக்கு தன்னையும் தான் சார்ந்த சமூகத்தையும் உயர்த்தும் என்பதற்கு அண்ணல் அம்பேத்கார் தான் மிகச் சிறந்த உதாரணம்.  

தங்களுடைய வாழ்க்கையில் தாங்கள் அணியும் ஆடைகளை குறியீடாக மாற்றியவர்கள் இரண்டு பேர்கள்.

ஒருவர் மகாத்மா காந்தி.

அடித்தட்டு மக்களும் நானும் சமம் என்பதைப் போல கடைசி காலம் வரைக்கும் அவர் உடுத்திய உடைகள் மூலம் இந்த சமூகத்திற்கு குறியீடாக விளங்கினார். 

நாங்களும் கோட் சூட் போட்டு கணவான் போல வாழ முடியும் என்பதை உணர்த்திக் காட்டினார் அண்ணல் அம்பேத்கார்.

கடைசி வரைக்கும் அவர் பட்டபாடுகள் அதிகம் என்றாலும் இன்று இந்த இன மக்கள் அனுபவிக்கும் அத்தனை உரிமைகளும் அவர் தொடங்கி வைத்த பயணத்தில் கிடைத்த பலனே ஆகும்.

நாம் உரிமைகளைப் பற்றி மட்டுமே பேச விரும்புகின்றோம்.  ஆனால் அதற்கு எப்படி உழைக்க வேண்டும் என்பதைப் பற்றி மறந்தும் கூட பேச விரும்புவதில்லை.  

மூன்று தலைமுறைக்கு முன்னால்  நாடார் இன மக்கள் இன்று அடைந்துள்ள உரிமைகள் என்பது அவர்கள் பெற்ற கல்வி கொடுத்த பொருளாதார வளர்ச்சியே ஆகும்.

கேரளாவில் ஈழவா என்ற இனத்தை எப்படி நசுக்கி ஒதுக்கி வைத்திருந்தார்கள் என்பதை வரலாற்றை புரட்டிப் பார்த்தால் தெரியும். ஆனால் நாராயணகுரு உருவாக்கிய கல்விக்கூடங்கள், மறுமலர்ச்சிப் பாதைகள் இன்றைய வளர்ச்சியின் அச்சாரமாக இருக்கிறது.

உண்மையான அக்கறையான தலைவர்கள் தோன்றாதவரைக்கும் இங்கே எதுவும் மாறப்போவதில்லை.

காரணம் முறைப்படியான வளர்ச்சி என்பது கல்வி தொடங்கி வைப்பது. அதன் மூலம் உருவாகும் பொருளாதார வளர்ச்சியே நிலைப்படுத்தும். மொத்த ஒற்றுமையே  உலகத்தை கவனிக்க வைக்கும். 

இன்று ஒடுக்கப்பட்டவர்கள், தாழ்த்தப்பட்டவர்களின், பழங்குடியினர், சீர்மரபினர்களின் எண்ணிக்கை மட்டும் நூற்றுக்கும் மேலே. அதை விட முக்கியம் நான் உன்னை விட மேலானவன் என்ற தத்துவம் இதற்குள்ளும் இருக்கிறது.

ஆயிரத்தெட்டு பார்வைக்ள் அசிங்கமான பிரிவினைகள். 

இலக்கே இல்லாத பயண்த்தின் பாதையாகத்தான் தெரிகின்றது. ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட இனத்தில் இருந்து மேலேறி வந்தவர்கள் எவரும் தன்னை வெளிக்காட்டிக் கொள்ளவே விரும்புவதில்லை.

முடிந்தவரைக்கும் ஒதுங்கிவிடவே விரும்புகின்றார்கள்.

உருப்படியானவர்கள் ஒதுக்கி நிற்க ஒழுக்கமற்றவர்கள் தான் தலைவர்களாக உருவெடுக்கின்றார்கள். இவர்கள் மூலம் உருவாக்கப்டும் ஒவ்வொரு விசயங்களும் இறுதியில் சண்டை சச்சரவுகளில் தான் முடிகின்றது. அவனை நிறுத்தச் சொல். நானும் நிறுத்துகின்றேன் என்றே மேலும் மேலும் வன்மம் வளர்ந்து கொண்டே தான் இருக்கின்றது.

கடைசியாக பாதிக்கப்படுவதும் அப்பாவிகளே. 

ஆதிக்கம் செலுத்துபவர்களின் மனதில் உள்ள பிடிமானம் என்பது தங்களை விட்டு சென்று கொண்டிருக்கின்றதே என்பதன் வெளிப்பாடு தான் வன்மம்.  இந்த வன்மத்தை அடைகாத்து அடைகாத்து அடுத்தடுத்து நகர்த்திக் கொண்டே  வருகின்றார்கள்.   

2000 வருடங்கள் கொடுக்க விரும்பாமல் வைத்திருந்த உரிமைகளை 66 வருடங்களுக்குள் பெற்று விடுவது எளிதான காரியமா?

இன்றைய போராட்டங்களின் பலன்கள் இந்த தலைமுறைக்கு கிடைக்காமல் போகலாம். ஆனால் இன்று சிந்தக்கூடிய ரத்தமும் உழைப்பும் அடுத்த தலைமுறைக்கு உதவ வேண்டுமானால் உண்மையான கல்வியின் மூலம் பொருள் செய்ய பழகு. 

பொருள் இல்லையேல் இவ்வுலகம் உங்களுக்கு இல்லை. 

முன்னேற வேண்டும் என்பதும் எப்படியாவது தம்மை இந்த சமூகத்தின் பார்வையில் ஒரு கௌரவ மனிதனாக மாற்றிக் கொள்ள வேண்டும் என்றே ஒவ்வொருவரும் ஆளாய் பறந்து கொண்டேயிருக்கிறார்கள்.  

நேருக்கு நேர் நின்று போராடுவதை விட்டு பெரிய நாடுகள் கூட வெளியே வந்து விட்டது.  பொருளாதாரத்தில் கை வை என்ற நோக்கத்தில் தான் இன்று ஒவ்வொரு உரிமைகளும் பேசப்படுகின்றது.  

நாம் புழுதியில் வாழுவே விரும்புகின்றோம் என்னும் போது அவர்கள் நம்மை புரட்டி விளையாடவே விரும்புவார்கள்.

கல்வி என்பது கேள்வி கேட்க உதவும். ஆனால் எதையும் இவர்கள் கேட்டு விடக்கூடாது என்பதற்காகத்தான் கல்வியைத் தவிர மற்றவற்றைப் பற்றி இங்கே அனைவரும் பேசுகின்றார்கள்.

முட்டுக்கட்டைகள் தான் இங்கே பலருக்கும் படிக்கல்லாக மாறுகின்றது.

நாம் நம்மை சுயபரிசோதனை செய்ய வேண்டிய நேரமும் கூட.

Monday, November 26, 2012

வேலுப்பிள்ளை பிரபாகரன் --தமிழீழம் என்றொரு பிரதேசம் (26.11.2012)


 "தமிழர்களுக்கு இனி தனி ஈழம் தான் தீர்வாக இருக்கும்" என்று தீர்மானமாய் சொன்னது பிரபாகரன் அல்ல. 

இதன் வித்து இலங்கை என்ற நாடு ஆங்கிலேயர்களிடமிருந்து சுதந்திரம் பெறுவதற்கு முன்பே உருவானது.  தமிழர்களில் முதல் தலைமுறை தலைவரான அருணாச்சலம்  உருவாக்கியது ஆகும். 


அவர் தனி ஈழம் என்று தான் தொடக்கத்தில் சொன்னார். அதுவே தமிழீழம் என்று பின்னால் மாறியது.  

அருணாச்சலம் படித்தவர், பண்பாளர், சட்ட மேதை ஆனால் வெகுஜன ஆதரவு பூஜ்யம்.  அவர் வாழ்ந்த வாழ்க்கை முழுக்க கொழும்புவிலும் மேல்தட்டு மக்களுடன் இருந்த காரணத்தால் கடைசி வரைக்கும் மக்கள் ஆதரவென்பது அவருக்கு எட்டாக்கனியாக இருந்தது. இறுதியில் அவர் கொள்கைகளும் கொலையாகி வெகுஜன ஆதரவு இல்லாமல் மறைந்தும் போனது.

அருணாச்சலம் முதன் முதலாக உருவாக்கிய இலங்கை தேசிய காங்கிரஸ் சிங்களர்களின் கைக்கு போன போதே அச்சத்துடன் எதிர்காலத்தில் இனி சிங்களர்களுடன் தமிழினம் சேர்ந்து வாழ முடியாது என்றார்.  அப்போது இலங்கை சுதந்திரம் பெறுவதற்கு கால் நூற்றாண்டு காலம் இருந்தது. அவராலும் முடியாமல் அவர் சகோதரர் இராமநாதன் முயற்சியும் தோல்வியாகி கைகள் மாறி கடைசியில் 1972 ஆம் ஆண்டில் செல்வநாயகம் மனம் நொந்து போய் சொல்லும் அளவிற்கு வந்து நின்றது. இதையே பிரபாகரன் உரத்துச் சொன்ன போது மற்றவர்களால் வினோதமாக பார்க்கப்பட்டது. 

சர்வதேச அரசியல் புரியாமல் இதென்ன அடம் என்பதாக இன்று வரைக்கும் பேசப்படுகிறது. அருணாச்சலம் புத்தியால் ஜெயிக்க முடியாமல் செல்வநாயகம் சக்தியாலும் வெல்ல முடியாமல் கடைசியில் பிரபாகரன் பலத்தாலும் வெல்ல முடியாமல் கலவரங்களும், யுத்தங்களும்  தொடர்ச்சியாக வந்து மொத்த தமிழர்களின் உயிரும் உடைமையும் இழந்து இன்று நாங்களும் வாழ்ந்தால் போதும் என்கிற அளவிற்கு வந்து நிற்கின்றது. 

இதுவே இன்று இலங்கையில் உயிர்பிழைத்தவர்கள் நான் தமிழர் என்று சொல்ல பயந்து வாழும் நிலைமைக்கு கொண்டு வந்துள்ளது. தொடக்க காலத்தில் அருணாச்சலமும், இவர் சகோதரர் இராமநாதனும் எழுதியுள்ள புத்தகங்கள் தமிழர்களுக்கு மட்டுமல்ல இன்று வரைக்கும் சிங்களர்களுக்கே பாடபுத்தகங்கள். 

சிங்களர்களுக்கு அரசியலை கற்றுக்கொடுத்தவர்கள் மறைந்து கிடைத்து இருக்க வேண்டிய மரியாதையின்றி இறந்தும் போனார்கள். 

இவர்களிடம் கற்று கொண்ட மாணவர்கள் ஆட்சியாளர்களாகவும் மாறி சிங்கள இனவாதத்தின் ராஜாவாகவும் மாறிப் போனது சரித்திர ஆச்சரியங்கள். 

தங்களுக்கு சிறப்பாக கற்றுக்கொடுத்தவர்களின் பெயர்களை இன்று அவலமாய் வந்து நின்ற தமிழர்களுக்கு உருவாக்கப்பட்ட திறந்த வெளி முகாம்க்கு சூட்டப்படும் நன்றிக்கடனையையும் தீர்த்துள்ளார்கள். வாழ்ந்து சென்ற தமிழ் தலைவர்களின் அதிர்ஷ்டம் அவ்வளவு தான். 

அருணாச்சலம் முகாம், இராமநாதன் முகாம், ஆனந்த குமாரசாமி முகாம் என்று உருவாக்கப்பட்டது. மொத்த இலங்கை மக்களும் நினைவில் கொள்ளத்தக்க வகையில் வாழ்ந்தவர்களின் வாழ்க்கைப் பெயர்கள் இன்று நிர்க்கதியாய் நிற்பவர்கள் வாழ்க்கை உதவியாய் உள்ளது என்பது பெரும் சரித்திர சோகம்.

பிரபாகரன் இவர்களைப் போல படித்தவரோ, பட்டம் வாங்கியவரோ அல்லது புத்தகங்கள் எழுதியவரோ அல்ல.  அத்தி பூத்தாற் போல கொடுத்த ஊடக பேட்டிகளும் வருடந்தோறும் உரையாற்றிய மாவீரர் தின பேச்சுகளுமே அவரைப் பற்றி அவரின் கொள்கைகளையும் நம்மால் ஓரளவிற்கு புரிந்து கொள்ள முடியும். 

போர் வெறியர்,மன நோயாளி,புதிய தலைமுறைக்கு பயங்கரவாதத்தை கற்றுக்கொடுத்தவர், உலகத்திற்கு மனித வெடிகுண்டு என்பதை அறிமுகம் செய்தவர் என்று சொல்லப்படுவரின் நியாய வாதங்கள் எதுவும் இன்று எவர் காதிலும் போய் விழாது.

பிரபாகரன் செய்த சாதனைகள் ஒவ்வொன்றும் இவருக்கு முந்தைய தலைமுறை தலைவர்கள் எவரும் செய்யாதது மட்டுமல்ல.  நினைத்தே பார்க்க முடியாதது. 

அவர்கள் ஜனநாயகம் காட்டிய வழியில் சென்று தங்களை நம்பியிருந்த வழிகாட்டாமல் மறைந்தவர்கள்.  இவரோ தான் கொண்ட கொள்கை சரி என்று நம்பி அதையே செய்தும் காட்டியவர். தன்னுடைய தன்னம்பிக்கை மட்டுமே வழி காட்டும் என்று கடைசிவரையிலும் கொண்ட கொள்கையில் பிடிவாதமாய் உறுதியாய் நின்றவர் 


அரசியல் தெரியாதவர் என்று சொல்லப்படுபவர்கள் பிரபாகரனின் மாவீரர் தின உரைகளை படித்துப் பார்த்தாலே அவர் தன் வாழ்நாளில் நம்பிக்கைகளும், அவமானங்களுக்கும் இடையே போராடிப் பார்த்த அத்தனை நிகழ்வுகளையும் நமக்கு புரியவைக்கும். பிரபாகரன் உருவாக்கிய தமிழீழத்தின் சமூக கட்டமைப்பு வெளி உலகத்தால் அதிகம் பார்க்கப்படாத பார்வைகள்.,

நான்கு புறமும் நீர் என்பதான தீவில் எட்டு புறமும் எதிரிகளாக இருந்தவர்களுடன் வாழ்ந்தவர் உருவாக்கிய ஒவ்வொன்றும் கடைசியில் அவரைப் போலவே இன்று கேள்விக்குறியாய் சூன்யத்தில் நிற்கிறது?

1985 ஆம் ஆண்டு தமிழர் புனர்வாழ்வு கழகம் தொடங்கப்பட்டது.  போரினால் பாதிக்கப்பட்டு வறுமை நிலைமைக்குத் தள்ளப்பட்ட மக்களுக்கும், சொந்த இடங்களை விட்டு விட்டு வாழ்ந்து கொண்டுருப்பவர்களுக்கும், அகதி முகாமில் ஆதரவற்று இருந்தவர்களுக்கும், தற்காலிக குடிசைகளிலும் இருந்தவர்களை இனம் கண்டு அவர்களை அரவணைத்து வாழ்க்கை கொடுப்பது இதன் கடமையாக இருந்தது. இதன் உருவாக்கத்திறகு முன்னதாக புலிகளின் ஊடகப்பிரிவு செயல்படத் தொடங்கியது.  

முதலில் வானொலியில் ஆரம்பித்து இறுதியில் தொலைக்காட்சி சேவை வரைக்கும் கொண்டு வந்தார்கள்.  மிகுதியான பால் உணர்வை தூண்டும் காட்சிகளை தணிக்கை செய்யப்பட்டு அத்துடன் செய்தி அறிக்கைகள், நடப்பு நிகழ்வுகளை துல்லியமாக காட்டும் அளவிற்கு கடைசி வரைக்கும் தொடர்ந்து தமிழீழத்தில் ஒலிபரப்பு சேவை நடத்தப்பட்டது.  இந்திய அமைதிப்படை உள்ளே நுழைந்த போது முதலில் தாக்கப்பட்டது இந்த வானொலி சேவையே ஆகும்.

யுத்தத்தினால் பெற்றோரை, பாதுகாவலர்களை இழந்த பெண் பிள்ளைகளின் பராமரிப்புக்காக செஞ்சோலை சிறுவர் இல்லம். 1991 இல் தொடங்கப்பட்டது. அதனை தொடர்ந்து போரில் பெற்றோரை இழந்த ஆண் பிள்ளைகளை பாதுகாக்க 1993 ஆம் ஆண்டு. காந்த ரூபன் அறிவுச்சோலை தொடங்கப்பட்டது. வெற்றிமனை என்ற அமைப்பின் மூலம் நடந்த போர்கள் மூலம் கண் முன்னால் உறவுகளை பறி கொடுத்து அடைந்த மன அழுத்தங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், மனநிலை பாதிக்கப்பட்ட வர்களுக்கும் உயரிய சிகிச்சை அளித்து அவர்களை பராமரித்து மறுவாழ்வு அளிப்பதற்காக உருவாக்கப்பட்டது. 

மூதாளர் பேணகம் என்ற அமைப்பின் மூலம் போரினால் தமது பிள்கைளை இழந்து ஆதரவற்ற நிலைக்கு தள்ளப்பட்ட முதியோரையும், சொந்த பந்தம் இல்லாமல் இருப்பவர்களையும், உறவினர்கள் இருந்தும் கைவிடப்பட்ட முதியோர்களையும் பாதுகாக்க உருவாக்கப்பட்டது  1992 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் கலை பண்பாட்டுக் கழகம் என்ற அமைப்பின் மூலம் தமிழர்களின் தமிழ் மொழியையும் அழிந்து கொண்டுருக்கும் கலை மற்றும் பண்பாடுகளையும் மீட்டெடுப்பதற்காக உருவாக்கப்பட்டது. 


தியாகி திலீபன் மருத்துவ சேவையின் மூலம் அரசாங்கம் உருவாக்கிய தடைகளை மீறி ஒவ்வொரு கால கட்டத்திலும் உருவாக்கிய மருத்துவமனைகள் மூலம் அத்யாவஸ்யமான மருந்துப் பொருட்களை வரவழைத்தும், பயிற்சியளிக்கப்பட்ட போராளிகள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது.  தமிழீழ படைத்துறைப் பள்ளியின் மூலம் வளர்ந்து கொண்டுருக்கும் இளையர் கூட்டம் போரினால் அவர்களின் கல்வி பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக உருவாக்கப்பட்டது.

தமிழீழ பொருண்மிய மேம்பாட்டுக் கழகமும், இதனைத் தொடர்ந்து 1993 ஆம் ஆண்டு தமிழீழ சட்டக் கல்லூரி உருவாக்கப்பட்டது. இதே ஆண்டில் பொதுக்கல்வி தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களைப் பாராட்டி வருடந்தோறும் பரிசு வழங்க தமிழீழக் கல்வி மேம்பாட்டுப் பேரவை தொடங்கப்பட்டது.  1994 ஆம் ஆண்டு தமிழீழத்தின் பொருளாதாரக் கட்டமைப்பை வலுப்படுத்துவதற்காக வேளாண்மையும் கைத்தொழிலையும் உருவாக்கி சிறப்பானவர்களுக்கு பரிசு கொடுத்து சிறப்பிக்க உருவாக்கப்பட்டது. .

மக்களின் வங்கி சேவைக்காக தமிழீழ வைப்பகம் சட்டத் தேவைகளுக்காக தமிழீழ நீதி நிர்வாகத்துறை, நகர் நிர்வாகத்திற்காக தமிழீழ காவல் துறை இது போக மாணவர்களுக்கென்று விளையாட்டுத் துறையும் தொடங்கப்பட்டது.  மொத்தத்தில் தமிழீழ பகுதிகளில் வாழ்ந்த மக்களின் பொருளாதார சமூக கட்டமைப்புத் துறையில் அதிக கவனம் செலுத்தப்பட்டது.

பிரபாகரன் உரையாற்றிய மாவீரர் உரைகள் என்பது பல விதங்களில் பயன் உள்ளதாக இருந்தது. போரில் இறந்த வீரர்களுக்கு கௌரவம் செலுத்தும் விதமாக அதே சமயத்தில் தமிழ் மக்களுக்கு தமிழீழ விடுதலைப்புலிகளின் நோக்கத்தையும், சர்வதேச சமூகத்திற்கு புலிகள் இயக்கம் விடுக்கும் கோரிக்கை என்பதாக பல தளங்களில் விவாதப் பொருளாக அணைவராலும் உற்று கவனிக்கக் கூடிய வகையில் இருந்தது. 

பிரபாகரனின் நோக்கத்தையும் விருப்பத்தையும் தனிப்பட்ட கொள்கைகளையும் புரிந்து கொள்வதாகவும் இருந்தது.

சங்கர் இறந்த தினமாக நவம்பர் 27 என்பதை கணக்கில் கொண்டு மாவீரர் தினம் என்று உருவாக்கப்பட்டு முதன் முதலாக இந்திய அமைதிப்படை இலங்கையில் இருந்து கடைசிகட்ட உக்கிர தாக்குதல்கள் நடத்தப்பட்ட போது இனம் தெரியாத அடர்ந்த காட்டில் இருந்து கொண்டு உரையாற்றிய பிரபாகரனின் உரை என்பது 2008 வரைக்கும் 19 வருடங்கள் தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் குறிப்பிட்ட அதே தினத்தில் ஒலிபரப்பப்பட்டது.  

உலக ஊடகங்களும், உலகத்தமிழர்களும் ஏன் சிங்கள ஆட்சியாளர்களுமே இதை வைத்து தான் புலிகளின் அடுத்த கட்ட நகர்வை புரிந்து கொள்ளும் அளவிற்கு இருந்தது. 

மொத்த 19 வருட உரைகளின் மூலம் நம்பிக்கைகளுக்கும் விருப்பங்களுக்கும் இடையே போராட்டங்களும், ஒவ்வொரு கால கட்டத்திலும் தான் மாறத் தயாராய் இருந்த போதும் மதிக்காத சிங்கள ஆட்சியாளர்களின் மேல் இருந்த அவநம்பிக்கையின் ஊசலாட்டத்தையும் நமக்கு பல விதமாக புரிய வைக்கின்றது. பிரபாகரன் முதல் மாவீரர் உரை தொடங்கிய போது புலிகளின் அதிகாரப்பூர்வமான இறந்தவர்களின் எண்ணிக்கை 1207 பேர்கள்.. இதுவே 19 வருடங்களுக்குப் பிறகு 17,903 பேர்கள் இறந்ததாக மாவீரர் தின உரையில் குறிப்பிட்டார்.

"ஓர் இனத்தை பொறுத்தவரையிலும் வீரர்களை, பெண்களை, அறிவாளிகளையும் மதிக்காத இனம் காட்டுமிராண்டியாக அழிந்து விடும். எமது இயக்கத்தில் இப்போது வீரர்களுக்கு பஞ்சமாக இருக்கிறது. எமது போராளிகளை நினைவு கூறும் தினத்தை ஒரே நாளில் வைப்பதால் வீரச்சாவு அடைந்த மேல்மட்ட தலைவர்கள் முதல் அடிப்படையான வீரர்களை வரை ஒரே மாதிரி நினைவு கொள்ளப்படுகிறார்கள்.  காலப்போக்கில் குறிப்பிட்ட சில சில ஆட்களுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு அந்த மரியாதை சிலருக்கு மட்டும் போவதை தடுப்பதற்காக இதை வருடந்தோறும் கொண்டாடப் போகிறோம்."


"நான் உயிருக்கு உயிராய் நேசித்த தோழர்கள், என்னுடன் தோளோடு தோள் நின்று போராடிய தளபதிகள், நான் பல்லாண்டு காலமாக வளர்த்தெடுத்த போராளிகள் களத்தில் விழ்ந்த போதெல்லாம் எனது இதய்ம் வெடிக்கும்.  ஆயினும் சோகத்தால் நான் சோர்ந்து போவதில்லை.  இந்த இழப்புகள் எனது இலட்சிய உறுதிக்கு மேலும் மேலும் உரமூட்டி இருக்கின்றன"

"நாம் இனத்துவேசிகள் அல்லர். போர்வெறி கொண்ட வன்முறையாளர்களும் அல்லர்.  நாம் சிங்கள மக்களை எதிரிகளாவோ விரோதிகளாகவே கருதவில்லை. நாம் சிங்கள தேசத்தை அங்கீகரிக்கின்றோம்.  சிங்களப் பண்பாட்டை கௌரவிக்கின்றோம்.  சிங்கள மக்களின்  தேசிய வாழ்வில் அவர்களது சுதந்திரத்தில் நாம் எவ்விதமும் தலையிட விரும்பவில்லை".

"நாம் எமது வரலாற்றுத் தாயகத்தில் ஒரு தேசிய மக்களினம் என்ற அந்தஸ்துடன் நிம்தியாக சுதந்திரமாக கௌரவமாக வாழ விரும்புகிறோம்.  எம்மை நிம்மதியாக வாழவிடுங்கள் என்பது தான் எமது மக்களின் எளிமையான அரசியல் அபிலாஷைகள்.  இந்த நியாயமான நீதியான நாகரிகமான எமது மக்களின் வேண்டுகொளை சிங்கள அரசு எப்போது அங்கீகரிகரிக்கின்றதோ அப்போதுதான் ஒரு நிரந்தர சமாதானமும் தீர்வும் ஏற்பட வாய்ப்பு உண்டு."

"ஆயுத பலத்தால் தமிழீனத்தை அடக்கி ஆள வேண்டும் என்றும், சிங்கள பௌத்த பேரின வாதத்தின் ஆதிக்க மனோநிலையில் சிறிதளவேனும் மாற்றம் எதுவும் நிகழ்ந்து விடவில்லை.  இனத்துவேச அரசியல் சேற்றில் சிங்கள தேசம் மூழ்கிக் கிடக்கும் வரை தமிழரின் தேசிய அபிலாசைகள் பூர்த்தியாகது.  நீதியான நியாயமான அரசியல் தீர்வை நாம் சிங்கள ஆளும் வார்க்கத்திடம் இருந்தது எதிர்பார்கக முடியாது." 

"மனித நீதி எனும் அச்சில் இவ்வுலகம் சுழவில்லை என்பதை நாம் அறிவோம்.  இவ்வுலகில் உள்ள ஒவ்வொரு நாடும் தங்கள் பக்கமுள்ள நியாயங்களை முன் வைக்கிறது.  இவ்வுலகில் ஓழுங்கு அமைப்பை பொருளாதார மற்றும் வணிக நலன்களே தீர்மானிக்கின்றன.  இன்றோ சார் நீதியிலோ மக்களின் உரிமை சார்ந்தோ நிற்கவில்லை.  

நாடுகளுக்கிடையேயான சர்வதேச உறவுகளும் அரசியல் நெறிகளும் இத்தகைய நல்களைச் சார்ந்தே தீர்மானிக்கபடுகின்றன.  எனவே எங்களது அறம் சார்ந்த நியாயங்கள் உடனடியாக சர்வதேச சமகத்தான் அங்கிகரிக்கபடும் என் எதிர் பார்க்க முடியாது.  ஆனால் அதே நேரம் அந்த அங்கீகாரத்திற்காக போராடியே ஆக வேண்டும். உலகில் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன."

"சமாதானத்திற்கான போர் என்றும் தமிழரை விடுதலை செய்யும் படையெடுப்பு என்றும் பரப்புரை செய்து ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆக்கிரமிப்புப் போர் தமிழரின் அமைதியக் குலைத்து தமிழரை அகதிகளாக்கி தமிழரை அடிமைகளாக்கி தமிழரின் சமூக பொருளாதார வாழ்வைச் சீரழித்து தமிழருக்கும் என்றுமில்லாத பெரும் அவலத்தை கொடுத்து இருக்கிறது. 

சமாதானத் தத்துவம் பேசி உலகத்தை ஏமாற்றிய போதும் இது தமிழருக்கு எதிரான போர் என்பதை அரசு நடையில் காட்டியுள்ளது.  இராணுவ ஆட்சி நடைபெறும் தமிழ் பகுதிகளில் மிக மோசமான ஒரு இன அழிப்புக் கொள்கை மறைமுகமாக செயற்படுகிறது என்பதையே இது காட்டுகிறது."

"நாம் சமாதானத்திற்கான விரோதிகள் அல்லர். அன்றி சமாதான வழியில் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு எதிரானவர்களும் அல்லர்.  தாம் வேண்டுவது உண்மையான சமாதானத்தையே. எமது மக்கள் எமது மண்ணில் நிம்மதியாக சுதந்திரமாக அந்நியத் தலையீட இன்றி அமைதியாக வாழ்ந்து தமிழ் அரசியல் வாழ்வைத் தாமே தீர்மானிக்ககூடிய உண்மையான கொளரவமான நிரந்தரமான சமாதானத்தையே நாம் விரும்புகின்றோம். இந்த சமாதான வாழ்க்வை தமிழருக்கு வழங்க சிங்கள பெயத்த பேரினவாத சக்திகள் இனங்குமா என்பது சந்தேகத்திற்கு உரியதே."

"தமிழரின் தாயகம், தமிழரின் தேசியம், தமிழரின் தன்னாட்சி உரிமை ஆகியவற்றை அங்கீகரித்து அவற்றின் அடிப்படையில் ஒரு அரசியற் தீர்வுத் திட்டம் வகுப்பட வேண்டுமென்ற நாம் திம்புக் காலத்தில் இருந்து வலியுறுத்தி வருகிறோம்."

"சிங்களம் ஒரு பெளத்த நாடு.  அன்பையும் அறத்தையும் ஆன்மீக ஞானத்தையும் போதித்த காருணிய மகானை வழிபடும் தேசம்.  தர்மத்தின் தத்துவத்தில் தழைத்த பௌத்த சமகத்தில் இனக்குரோதமும் போர் வெறியும் விஸ்வரூபம் பெற்று நிற்பது எமக்கு வியப்பாக இருக்கிறது. தமிழர் தேசம் போதையும் வன்முறையையும் விரும்பவில்லை.  அமைதி வழியில் அகிம்சை வழியில் தர்மத்தை வேண்டி நின்ற எமது மக்கள் மீது வன்முறைத் திணித்தவர்கள் யார்?  

நாம் எமது உயிரையும் உடைமையும் பாதுகாக்க ஆயுதமேந்தி போராட வேண்டிய நிர்பபந்த சூழ்நிலையை உருவாக்கிய விட்டவர்கள் யார்? சிங்கள பௌத்த தீவிரவாதமே தமிழர்களை ஆயுதபாணிகளாக்கி தேச சுதந்திர போராட்டத்தில் குதிக்க வைத்தது."

"ஆட்பலம், ஆயுதபலம், இராணுவ பலம், மக்கள் பலம் என்கிற ரீதியில் சகல பலத்தோடு நாம் வலுப்பெற்று நின்ற போதும் எமது தாயகத்தை மீட்டெடுக்கும் போதிய சக்தி இருந்த போதும்  நாம் சமாதான பாதையை கைவிடவில்லை. உயிர் அழிவையும் இரத்தக் களரியையும் தவிர்த்து சமாதான வழியில் நாகரிகமான முறையில் தமிழரின் சிக்கலை தீர்ககவே நாம் விரும்புகிறோம்."

"தமிழர் தாயகத்தில் அமைதி நிலை தோன்றினாலும் இயல்புநிலை தோன்றவில்லை.  உயர் பாதுகாப்பு வளையங்கள் என்ற போர்வையில் எமது மக்களின் வாழ்விடங்களை சமூக பொருளாதர பண்பாட்டு மையங்களை சிங்கள ஆயுதப் படைகள் ஆக்கிரமித்து நிற்கின்றன. சிறிய அளவிலான புவியற் பரப்பில் குடிசன நெரிசலும் கொண்ட யாழ்பாணக் குடாநாட்டை 40 000 படைகள் ஆக்ரமித்து நிற்கின்றனர். எமது மக்கள் தமது இயல்பபு வாழ்க்கை நடத்த முடியாதவாறு மூச்சுத் திணறும் ஆக்கிரமிப்பு என்றுமே பதட்ட நிலையைத்தான உருவாக்குகின்றது.".

"பேச்சு வார்த்தைகளின் தொடக்கத்திலேயே எமது மக்களின் அடிப்படை பிரச்சனைகளை ஆரம்பித்தலேயே தீர்த்து விட வேண்டும் என்பதே எங்கள் தலையாய கோரிக்ககை."   

"முடிவில்லாத ஒரு துன்பியல் நாடகமாகத் தமிழரின் இனப் பிரச்சனை தொடர்கிறது. எமது பிரச்சினைக்குத் தீர்வு காண ஆளும் கட்சி முயற்சிப்பதும் எதிர்ககட்சி எதிர்பபதும் பின்பு எதிர்க்கட்சி ஆளுங்கட்சியாக மாறி மீண்டு அதே முயற்சியும் அதே எதிர்ப்புமாக இந்த சிங்கள அரசியல் வரலாற்று நாடகம் தொடர்ச்சியாக ஒரே பாணியில் கடந்த 50 வருடங்களுக்கு மேலாக மேடையேறி வருகிறது."

"இடைக்கால தீர்வுமின்றி நிரந்தர தீர்வுமின்றி நிலையான அமைதியும் இல்லாமல் நிம்மதியான வாழ்வும் இன்றி நாம் அரசியல் வெறுமைக்குள் தொடர்ந்தும் சிறைபட்டுக் கிடக்க முடியாது. சிங்கள தேசமானது தமிழனத்தை அரவணைத்து இணைத்து வாழவும் விரும்பவில்லை. அதே சமயம் அரவணைத்து இணைத்து வாழவும் விருப்பமில்லை. அதே சமயம் பிரிந்து சென்று தனித்து வாழவும் விடுவதாக இல்லை. 

இரண்டுங் கெட்டான் நிலையில் வீடின்றி விடுதலையின்றி எதிர்காலச் சுபிட்சமின்றி சூனியமாக அரசியல் இருட்டுக்குள் நாம் தொடர்ந்து வாழ முடியாது.  பொறுமைக்கும் எதிர்பார்ப்புக்கும் எல்லை கோடுகளுள்ளன. அந்த எல்லைக் கோடுகளை நாம் அடைந்து விட்டோம்."

"பண்டைய இதிகாசங்கள் புனைந்து விட்ட புரளிகளால் சிங்கள இனம் வழி தவறி சென்று கொண்டுருக்கிறது. தொடர்ந்தும் பேரினவாதச் சகதிக்குள் வீழ்ந்து கிடக்ககிறது.  இதனால் சிங்கள பௌத்த பேரினவாதம் இன்றோரு தேசியச் சித்தாந்தமாக சிங்கள தேசத்தில் மேலாதிக்கம் செலுத்தி வருகிறது. 

இந்த கருத்தாக்கம் பாடசாலைகள் பல்கலைக்கழங்களில் இருந்தும் பத்திரிக்கை துறை வரை ஊடுருவி நிற்கிறது. மாணவர்களோ, புத்திஜீவிகளோ, எழுத்தாளர்களோ அரசியல்வாதிகளோ சுயமாகச் சிந்திக்க முடியாதபடி சிங்கள மூலத்தை இந்த கருத்தாக்கம் சிறைப்பிடித்து வைத்து இருக்கிறது.  பௌத்த பேரினவாதக் கருத்துக்கள் சிங்கள மனிதனின் மன அமைப்பின் ஆழத்தில் அழியாத கோடுகளாக பொறித்து விடப்பட்டு இருக்கின்றன.  இதனால் சிங்கள தேசம் போர் வெறி பிடித்து போர் முரசு கொட்டுகிறது."

"பௌத்தம் ஒர் ஆழமான ஆன்மிகத் தரிசனம்.  அன்பையும் அறத்தையும் ஆசைகள் அற்ற பற்றற்ற  வாழ்வையும் தர்மத்தையும் வலியுறுத்தி நிற்கும் தார்மிகத் தத்துவம்.  இந்த தார்மீக நெறியை 2000 ஆண்டுகளுக்கு மேல் கடைபிடிப்பதாக கூறிக்கொள்ளும் சிங்களம் 2000 ஆண்டுகளுக்கு மேலாக இனவாத விசத்தினுள் மூழ்கிக் கிடக்கிறது. சிங்கள இனவாத விசம் இன்று மிருகத்தனமாக வன்முறையாகக் கோரத்தாண்வம் ஆடுகிறது. 

60 ஆண்டுகளாக வன்முறையற்ற அகிம்ச வழியிலும் ஆயுதவழியிலும் தமிழர் நீதிகேட்ட சிங்கள உலகிலே சிறிதும் மனமாற்றம் நிகழவில்லை.  எத்தனையோ இழப்புகள், அழிவுகள், எண்ணற்ற உயிர்பலிகள் நிகழ்ந்த போதும் சிங்கள தேசம் மனம் திருந்தவில்லை.  இதற்கு சர்வதேச சமூகத்தின் பொருளாதார இராணுவ உதவிகளும் அரசியல் தார்மீக ஆதரவும் இராஜதந்திர முண்டு கொடுப்புகளும் ஒரு பக்கச் சார்பாக தலையீடுகளும் தான் காரணம்."

"எத்தனை சவால்களுக்கு முகம் கொடுத்தாலும் எத்தனை இடையூறுகளை எதிர் கொண்டாலும் எத்தனை சக்திகள் எதிர்த்து நின்றாலும் நாம் தமிழரின் சுதந்திரத்திற்காக போராடுவோம். வரலாறு விட்ட வழியில் காலம் இட்ட கட்டளைப்படி சிங்கள ஆக்கிரமிப்பு அகலும் வரை நாம் தொடர்ந்து போராடுவோம்."

"எங்கள் காலத்தில் எங்கள் லட்சியத்தை அடைந்து விடுவோம் என்பதைவிட நியாயமான தீர்வுகள் எட்டப்படாதவரைக்கும் இந்த போராட்டம் அடுத்து வருபவர்கள் முன்னெடுத்து செல்வார்கள்."

தமிழீழம் பிரபாகரன் கதையா? என்று நான் எழுதியதில் இருந்து  எடுக்கப்பட்ட பகுதி இது. 

வேலுப்பிள்ளை பிரபாகரன் பேசிய மாவீரர் உரைகளை அடிப்படையாகக் கொண்டு தொகுக்கப் பட்ட கட்டுரை இது. 

பிரபாரகன் குறித்து அவரின் தனிப்பட்ட கொள்கைகள் குறித்து கடந்து வந்து பாதைகளில் பெற்ற அனுபவங்களின் தொகுப்புக்கு இங்கே சொடுக்கவும். 


வருடந்தோறும்  வே. பிரபாகரன் அவர்களின் பிறந்த தினமான (26 நவம்பர்) இந்த நாளில் வெளியிடப்படும் மீள் பதிவு இது.

Sunday, November 25, 2012

காரைக்குடி உணவகம் - விருந்தும் மருந்தும்

அறிவே தெய்வம். 

எனக்கு இணையம் அறிமுகமான பின்பு தான் எனது தொழில் வாழ்க்கை மேலேறத் தொடங்கியது. தமிழ் இணையம் அறிமுகத்திற்குப் பின்பே அறிவென்ற வீட்டின் ஜன்னல் கதவு என்று திறந்து வைக்க முடிந்தது. நல்லது கெட்டது, தேவையானது, தேவையற்றது என்று காற்றில் கலந்து வந்து கொண்டேயிருந்தாலும் எதை தேர்ந்தெடுக்க வேண்டும், எப்போது எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற சுதந்திரம் ஒவ்வொருவரும் அவரவர் அனுபவம் தான் தீர்மானிக்கின்றது.

தீர்மானிக்க முடியாமல்  வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் கவலைப்படத் தேவையில்லை.

உங்களை பிரச்சனைகளை உங்கள் தலைமுறையின் தோளில் இறக்கி வைத்து விட்டு மறைந்து விடுவீர்கள். தலைமுறைகளில் வாழ்க்கையில் உங்கள் பிரச்சனைகளை முடிவுக்கு கொண்டு வரும் போது அவர்களின் வாழ்க்கையும் முடிவுக்கு வந்திருக்கும்.

முடிவே இல்லாத சுழற்சி இது.  ஒரு தலைமுறை செய்யும் தியாகங்கள் தான் பல தலைமுறைகள் சிறப்பாக வாழ உதவுகின்றது.

பகிர்தல் நன்றே. 

தேடல் என்பது ஒரு பயணம் போன்றது.  அதுவும் சாதாரண பயணமா இல்லை சாகச பயணமா என்பதை நம் தேடலின் தீவிரம் தான் நமக்கு உணர்த்தும். உங்கள் தேடல் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் உங்கள் மனதை திறந்து வைத்திருந்தால் தான் மாற்றங்கள் உருவாகும். அல்லது உருவாக சூழ்நிலை உருவாகும். தமிழ் இணையம் என்பது இன்றைய பொழுதில் உலகமெங்கும் வாழக்கூடிய தமிழர்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதம்.

இங்கே தேடல் உள்ள பலருக்கும் அறிவு வாசல் என்பதன் நீளம் அகலம் என்ன என்பதையும் ஓரளவுக்கேனும் இணையம் மூலம் தற்போது உணரந்து கொள்ள முடிகின்றது.  பத்திரிக்கைகள் என்பது ஒரு குறுகிய வட்டத்திற்குள் குறிப்பிட்ட விசயங்களை குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே கொடுக்க முடிகின்ற ஒன்று.

பகிர்தலில் பத்திரிக்கைகள் செய்த, செய்து கொண்டிருக்கின்ற பாவச் சாமச்சாரங்களை விட தமிழ் இணையம் அந்த அளவுக்கு மோசமாக இல்லை.

கறை நல்லது. 

வாசிப்பனுக்கு ஒரு கருத்தில் மாற்றுக் கருத்து உருவானால் அதிகபட்சம் படித்த பத்திரிக்கைக்கு வாசகர் கடிதம் எழுதலாம். மாற்றுக் கருத்தில் உண்மையான விசயங்கள் சுட்டிக்காட்டப்பட்டிருந்தால்  அது எங்கே போகும் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. 

எழுதத் தெரிந்தவர்களுக்கு அந்த பத்திரிக்கையின் உள்ளடக்கத்திற்கேற்றவாறு எழுத கற்றிருக்க வேண்டும்.  நடை, உடை, அலங்காரம் என்று பார்த்துப் பார்த்து செதுக்கியிருக்க வேண்டும். அது மேலும் செதுக்கப்படும்.  தெளிவான கருத்துக்களை வாசிப்பவனுக்கு கொண்டு போய்ச் சேர்ப்பதை விட குறிப்பிட்ட பக்கத்திற்குள் பொருந்திப் போக வேண்டும்.  

குறிப்பாக அந்த விசயம் அந்த சமயத்தில் பேசப்பட வேண்டியதாக இருக்க வேண்டும். இது அத்தனையும் உடைத்து இன்று உலகமெங்கும் உள்ளக்கிடக்கைகளை அப்படியே கொட்ட உதவிக் கொண்டிருப்பது தமிழ் இணையமே. இணையத்தில் எழுத வாய்ப்பு அமைந்தவர்கள் ஒரு வகையில் பாக்கியவான்களே. தமிழ்நாட்டின் முதல் அமைச்சருக்கு எழுதிய கடிதத்தை படித்தவுடன் அழைத்துப் பேசிய நண்பர்கள் மூலம் நான் உணர்ந்து கொண்ட உண்மை இது.

தொட்டால் தொடரும்.

கடந்த பத்து பதிவுகளாக மின்சாரம் குறித்து நான் எழுதிய பிறகு அது சம்மந்தப்பட்ட விட்டுப் போன விசயங்கள் என்னவென்று பழைய பத்திரிக்கைகள், இணையம் சார்ந்த செய்திகள் என்று எல்லாநிலையிலும் பார்த்த போது தான் பல உண்மைகள் புரிய வந்தது.  நான் தேடிப்பார்த்த எந்த பத்திரிக்கைகளிலும் அரசின் கொள்கைகள், மின்சார ஒழுங்கு முறை ஆணையம் குறித்து மிகத் தெளிவான எந்த விசயங்களையும் குறிப்பிடப்படாமல் பிரச்சனைகளின் வெளியே நின்று தான் பலரும் பேசியிருக்கிறார்கள். எழுதியிருக்கிறார்கள்.  இன்று வரையிலும் வெளிவரும் அத்தனை கட்டுரைகளிலும் இப்படித்தான் இருக்கினறது.

இந்த மின்சாரம் குறித்து கவலைப்பட்டு எழுதும் எந்த பத்திரிக்கையிலும் முழுமையான தகவல்கள் ஏதும் இருந்ததாக தெரியவில்லை. ஏனிந்த அவலம்? எதனால் உருவானது? அரசாங்கம் உடனடியாக செய்ய வேண்டிய தீர்வு என்ன? என்று எவரும் உரத்துச் சொல்ல பயப்படுகிறார்கள்.

காரணம் என்னவாக இருக்கும்?

தமிழ் தலிபான்கள்

முகநூல் என்பதை நண்பர்கள் ஃபேஸ்புக் என்று தான் சொல்லவேண்டும் என்கிறார்கள். தமிழ் பிழைத்துப் போகட்டும். விட்டு விடுங்கள் என்று ஏகடியம் பேசுகிறார்கள். இணையம், பின்னூட்டம், பின்தொடர, வழித்தடம் போன்ற வார்த்தைகள் இதே போல தொடக்கத்தில் நொண்டியடித்தன.  இப்போது பயன்பாட்டில் உள்ளதைப் போல நண்பர்கள் சொன்ன இந்த மூஞ்சிபுக் என்ற வார்த்தையும் காலப்போக்கில் மாறும் என்றே நம்புகின்றேன். இணைய போராளிகள் போல இணைய தாலிபான்களையும் நிறைய பார்க்க முடிகின்றது. எழுதும் வார்த்தைகளில் ஆங்கிலத்தை வலிய திணிக்கும் லாவகத்தை கவனிக்கும் போது அவர்கள் சொல்லும் காரணம் பேச்சு மொழி இப்படித்தான் இருக்கின்றது என்கிறார்கள்.

ஆனால் கிராமவாழ்க்கையை அடித்தளமாகக் கொண்டு இன்று அலுவலக வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் எவருக்கும் என்னைத் தவிர என் வாழ்க்கையைத் தவிர வேறு எது குறித்தும் அக்கறைப்படத் தேவையில்லை என்பதை அவரவர் எழுத்தின் மூலமே புரிந்து கொள்ள முடிகின்றது.  அக்கறை என்பது காசு பணம் கொடுத்து உதவுவது மட்டுமல்ல

உணரத்தெரியாதவர்கள் வாசித்த வார்த்தைகள் கூட நல்ல வாழ்க்கையை இழந்தவர்களின் சோகம்  போலத் தான் தெரிகின்றது  அன்றாடம் ஒருவருக்கு தன் மன அழுக்கை துடைக்க நேரம் கிடைத்தாலே போதுமானது.

கற்றுக் கொண்டால் குற்றமில்லை.

சமூகம் நிறைய கற்றுத் தருகின்றது.  பார்த்தால் என்ன தருவாய்? பழகினால் என்ன லாபம்? சொன்னால் என்ன கிடைக்கும்? பகிர்ந்தால் பலன் உண்டா? என்று எல்லா நிலையிலும் பொருள் சார்ந்த அடிப்படையில் ஒவ்வொருவரும் நகர்ந்து கொண்டேயிருப்பதால் உள்ளூற எப்போதும் ஒரு நிச்சமற்ற நிலைமை இருந்து கொண்டே தான் இருக்கிறது. 

மொத்தத்தில் வியாபார உலகத்தில வியாபார தந்திரங்களோடு வாழ பழகியிருக்க வேண்டும். ஒவ்வொன்றையும் குறையோடு சுட்டிக்காட்ட எத்தனையோ விசயங்கள் நம்மிடம் உள்ளது.  ஆனால் நம் குறைபாடுகளை மறந்து விடுவதால் தான் மற்றவர்களின் குறைகளை கண்டு குதுகலிக்க முடிகின்றது.  ஒவ்வொரு உரையாடலின் முடிவிலும் ஓராயிரம் தரிசனங்கள் நமக்கு கிடைத்துக் கொண்டே தான் இருக்கிறது.  நாம் அதை எப்படி உணர்ந்து கொள்கின்றோம் என்பதில் தான் நமக்கான  வாழும் வாழ்க்கையும்  இருக்கிறது.எனபதை எளிதாக மறந்து போய் நகர்ந்து கொண்டேயிருக்கின்றோம்.

மனப்பாடமே கல்வி

கடந்த ஒரு மாதமாக தேவியர்களின் பாடங்களில் அதிக கவனம் செலுத்திக் கொண்டிருக்கின்றேன். ஆசிரியர்களை நிறையவே பிடிக்கும். துப்புரவுத் தொழிலாளர்கள் அத்தனை பேர்களும் இந்த சமூகத்தின் ஆரோக்கியத்தின் அஸ்திவாரம். 

ஆனால் பள்ளி, கல்லூரிகளின் ஆசிரியர்களோ நிகழ்கால எதிர்கால சமூக கட்டுமானத்தின் அஸ்திவாரம்.

ஆனால் எத்தனை பேர்கள் இந்த பணியை உணர்ந்து செய்கினறார்கள் என்பது கேள்விக்குறியே?

குழந்தைகள் ஐந்தாவது படிக்கும் வரையிலும் எந்த தொந்தரவும் செய்யாமல் அவர்கள் விருப்பப்படியே படித்து வர வேண்டும் என்று மனதில் வைத்து வீட்டில் இந்த பொறுப்பை ஒப்படைத்திருந்தேன். கடந்த இரண்டு வருடமாக குழந்தைகள் படிக்கும் பள்ளியின் தரம் அதளபாதாளத்திற்கு போய்க் கொண்டிருக்கினறது.

காரணம் நிர்வாக விரிவாக்கம், கட்டிட வளர்ச்சி, சிபிஎஸ்சி பாடத்திட்டம் அறிமுகம் என்று ஒரு கார்ப்ரேட் கலாச்சாரத்திற்கு சென்று கொண்டிருப்பதால் கவனம் செலுத்தியே ஆக வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டேன்.  மாலையில் வீட்டுப்பாடங்கள், தினந்தோறும்  வகுப்பறையில் எழுத வேண்டிய பரிட்சைகள் என்று அடிப்படைக்கடமைகள் முடிந்தவுடன் எனது பாடங்கள் தொடங்குகின்றது.  இது அடுத்த நாள் காலை ஒரு மணி நேரம் மேலும் மேலும் பாடங்களுக்கு அப்பாற்பட்ட புரிதலான வாழ்க்கையை தினந்தோறும் அறிமுகப்படுத்திக் கொண்டேயிருக்கின்றேன்.

தற்போது கல்வித்திட்டத்தில் உள்ள ஒவ்வொரு பாடமும், அதன் நோக்கமும், தற்போதையை ஆசிரியர்களின் நிலைப்பாடுகள், அவர்கள் தரம், உடன் பழகும் பள்ளிக் குழந்தைகள், குழந்தைகள் கற்றுக் கொள்ளும் பாடங்கள், பயம் தரும் மாற்றங்கள் என்று எழுத பகிர நிறைய உள்ளது.  பதிவுகளின் வழியே இது குறித்து விரைவில் பேசுவோம்.

தேடி வந்த இனிப்பு

கோவி கண்ணன் சிங்கப்பூரிலிருந்து தமிழ்நாட்டுக்கு வந்த போது சந்திக்க விருப்பம் தெரிவித்து இருந்தார். நிகழ்காலத்தில் சிவா மற்றும் என்னையும் சந்திக்க வந்திருந்தார்.  கோவி கண்ணன் மூலம் எனக்கு ஒரு நல்ல பஃபே ஸ்டார் வகையான விருந்து கிடைத்தது.

உணவு என்பது எவருக்கும் எப்போதும் வீட்டில் கொடுக்கப்பட வேண்டியது என்பதை  நான் கொள்கையாக வைத்திருப்பவன். ஆனால் கண்ணனின் பயணத் திட்டம் வேறு விதமாக இருந்து கடைசியில் அது மாறுதலாகி திருப்பூரில் உள்ள பாப்பீஸ் ஹோட்டலில் சிவா விருந்து கொடுத்தார். ஆனால் சிவாவும் கோவி கண்ணனும் கொத்தித் தின்றதை பார்த்த போது அவர்களின் கட்டுப்பாடு புரிந்தாலும் நமக்கு நாக்கு என்பது அடக்க முடியாத சமாச்சாரம் என்பதை மீண்டும் ஒரு முறை உணர்ந்து கொண்டேன்.  

கோவி கணணனின் தைரியமான எழுத்துக்கு நான் ரசிகன் என்பதைப் போல கோவி கண்ணன் கொடுத்து விட்டுச் சென்ற இனிப்பு வகைகளுக்கு தேவியர்களும் அடிமையாகி எங்கே அவர்? என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.  கோவி கணணனுக்கு தேவியர்கள் சார்பாக. சிவாவுக்கு என் சார்பாக.நன்றி.

பொருள் செய்ய பழகு

சமீபத்தில் அதிகம் பாதித்த சம்பவங்களில் ஒன்று தர்மபுரியில் நடந்த கலவரம். ஏற்கனவே இடஒதுக்கீடு குறித்து எழுதியிருந்தேன்.  இப்போது இந்த பிரச்சனையைக் குறித்து நிறைய யோசித்துக் கொண்டிருக்கின்றேன். பலதரப்பு நியாயங்களை, பல கட்டுரைகளை, செய்திகளை உள்வாங்கிக் கொண்டிருக்கின்றேன்.  எழுத வேண்டும். புதியதலைமுறை யில் திருமாவளவன் பேசிய பேச்சில் வெளியே சொல்லமுடியாத அளவுக்கு ஒரு விரக்தி மனப்பான்மையே மேலோங்கி நிற்கின்றது.

வருத்தங்களும், இழப்புகளுமே நம் வாழ்க்கை வாழ்ந்தாக வேண்டும் என்ற சபதத்தை எடுக்க வைக்கின்றது.  .

அறிவு சூழ் உலகு

புதுக்கோட்டையில் இருந்து செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஞானாலயா நூலகம் குறித்து, அங்கு சென்று வந்ததைக்குறித்து இன்னமும் முழுமையாக எழுதாமல் இருக்கின்றேன்.  இந்த வருடத்தில் நிகழ்காலத்தில் சிவா மூலம் அறிமுகமான மிகச் சிறந்த  மனிதர் புதுக்கோட்டை ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி அய்யா அவர்கள்.  மிகுந்த சிரமத்திற்கிடையேயும் தான் கொண்ட கொள்கையில் பின்வாங்காமல் எவரையும் அதிக அளவு தொந்தரவு செய்யாமலும் புதிய கட்டிட பணியை தொடங்கி தற்போது முடியும் தருவாயில் வந்து நிற்கின்றது.

இது குறித்து எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்கு மற்ற நண்பர்களுக்கு கடிதம் வாயிலாக தெரிவித்ததைப் போலவே அவருக்கும் ஒரு கடிதம் மூலம் தகவல் அனுப்பியிருந்தேன். நான் எதிர்பார்க்காத நிலையில்  எனது கடிதத்தை தயக்கம் ஏதுமில்லாமல் அப்படியே வெளியிட்டு இருந்தார்.  அவர் மூலம், அந்த கட்டுரையின் மூலம் பல நண்பர்கள் கிருஷ்ணமூர்த்தி அய்யா அவர்களை தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார்கள்.

உதவிக்கரங்களையும் நீட்டியிருக்கிறார்கள் . பாதை தூரம் என்றாலும் நம்பிக்கை கீற்று தெரிந்து கொண்டேயிருக்கின்றது.

திரு. ஜெயமோகன் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை இங்கே எழுதி வைக்கின்றேன்.  இது குறித்து நிறைய எழுத வேண்டியுள்ளது.
புதுக்கோட்டை திரு கிருஷ்ணமூர்த்தி அவர்கள்  ஒவ்வொரு முறையும் என்னிடம் பேசும் போது சொல்லும் வார்த்தைகளை இங்கே எழுதி வைக்க விரும்புகின்றேன்.

"உதவிக்கரம் என்பது இரண்டாம் பட்சமாக இருக்கட்டும்.  விரும்பும் நபர்கள் இந்த நூலகத்தை வந்து பார்க்க வேண்டும். எனது உழைப்பை இலவசமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். எனக்குப் பின்னாலும் பல இளைஞர்களுக்கு இந்த நூலகம் பயன்பட வேண்டும்.  தமிழ்நாட்டில் உள்ள மற்ற எந்த நூலகத்திலும் இல்லாத பல புத்தகங்கள் இருப்பதை புரிந்து கொள்ள வேண்டும்."

திரு. கிருஷ்ணமூர்த்தி (புதுக்கோட்டை ஞானாலயா) அலைபேசி எண்
99 65 63 31 40

Wednesday, November 21, 2012

அம்மாவுக்கு சும்மா ஒரு கடிதம்


தற்போது தமிழ்நாட்டில் நிலவிக் கொண்டிருக்கும் மின்வெட்டு மற்றும் மின்சாரத்திற்கு பின்னால் உள்ள அரசியல் நிலவரங்கள். படிக்க  சொடுக்க, 

அதன் பாதிப்பில் உருவானதே இக்கடிதம்.  
                                                                            •••••••••••

மாண்புமிகு முதல் அமைச்சர் அவர்களுக்கு

நலமாய் தான் இருப்பீர்கள் என்று நம்பும் வாக்காளன் எழுதும் கடிதம்.

ஏறக்குறைய 2000 வார்த்தைகள் உள்ள இந்த கடிதம் படிப்பவர்களுக்கே சற்று சலிப்பை தரக்கூடியது தான். ஆனால் 2000 வருடங்களுக்கும் அப்பாற்பட்ட தமிழர்களின் வரலாறு தாங்கள் ஆட்சி புரியும் இந்த காலகட்டத்தில், ஒவ்வொரு தொழில் வாழ்க்கையில் உள்ள தமிழனின் வாழ்க்கையும் ஒளியிழந்து போய்விட்டதே என்பதன் ஆதங்கமே இந்த கடிதம் என்பதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகின்றேன்.

இந்த கடிதம் உங்கள் பார்வைக்கு வருமா? என்பது குறித்து எனக்குத் தெரியாது. ஆனால் அரசாங்கத்தின் பார்வையென்பது இன்றைய சூழ்நிலையில் இணையத்தின் மேல் அதிகம் இருப்பதென்பது மட்டும் எனக்கு நன்றாகவே தெரிந்தும் இந்த கடிதத்தை அவசர அவசியம் கருதியே எழுதுகின்றேன்.


அரசியல்வாதிகளின் உடல் நலமென்பது அவரவர் இருக்கும் பதவியோடு சம்மந்தப்பட்டது என்பதை நான் அறிவேன். ஆனால் எங்களைப் போன்றவர்கள் நலமாய் இருக்கின்றோம் என்று தாங்கள் நம்புகின்றீர்களா?

நீங்கள் நலமாய் எந்நாளும் வாழவேண்டும் என்று தான் விரும்புகின்றேன். நீங்கள் மட்டுமல்ல உலகத்தில் உள்ள ஜீவராசிகளுமே  நலமாய் வாழ வேண்டும் என்பது தானே தாங்கள் பின்பற்றும் வைணவ மதமே சொல்கின்றது. மதங்கள் எத்தனை சொன்னாலும் பின்பற்ற வேண்டிய மனிதர்களின் மனம் என்பது பொதுவானது தானே. 

ஒவ்வொருவரும் கடைபிடித்தால் தானே வாழ்க்கை என்பது அர்த்தமுள்ளதாக இருக்கும்.

ஊடகங்களை அவதூறு வழக்கைச் சொல்லி பயத்தில் வைத்திருப்பது என் நினைவில் வந்தாலும்  இங்கே வெம்பிக் கொண்டிருக்கும் மக்களின் வாழ்க்கையை தினந்தோறும் நான் பார்த்துக் கொண்டேயிருப்பதால் இந்த கடிதத்தை உங்களுக்கு எழுதத் தோன்றியது.

தவறில்லை தானே?

எனது கல்லூரி படிப்பின் இறுதி வருடத்தின் கடைசி நாளன்று கல்லூரியின் முந்தைய ஆண்டின் பட்டமளிப்பு விழா நடந்தது. அன்று முன்னாள் அமைச்சர் (திமுக) துரைமுருகன் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். எங்கள் கல்லூரி முதல்வரும் அவரும் ஒரு வகையில் உறவு கொண்டவர்கள். அவர் நிகழ்ச்சி முடிந்து விடைபெறும் சமயத்தில் எங்கள் முதல்வருடன் பேசிக் கொண்டிருந்த மரத்தடிக்கருகே நானும் நின்று கொண்டிருந்தேன்.. அமைச்சர் துரைமுருகன் விடைபெற்ற போது எங்கள் முதல்வரிடம் சொல்லிச் சென்ற வார்த்தை இன்னமும் என் மனதில் இருக்கிறது.  

"நாளை சட்டமன்றத்தில் முக்கிய நிகழ்வு ஒன்று நடக்கப்போகின்றது" என்றார். அப்போது எனக்கு புரியவில்லை.  பத்திரிக்கையில் பார்த்த போது தான் “பாஞ்சாலி சபதம்”  அரங்கேறியிருந்தiதை புரிந்து கொள்ள முடிந்தது. 

அன்று நடத்தப்பட்டது பயமுறுத்தலா? நாடகமா? பழிவாங்கலா?  இல்லை மிகைப்படுத்தலா? ஆதாயம் தேடிக்கொள்வதற்கான ஆரம்பமா? 

இது போன்ற பல கேள்விகள் அப்போது என் மனதில் வந்து போனாலும் அன்று உங்களுக்கு கிடைத்த முழுபக்க விளம்பரங்களும், தமிழ்நாட்டு மக்களிடம் உருவான தாக்கமும் இன்று வரையிலும் இருக்கத்தான் செய்கின்றது. ஆணாதிக்க உலகில் உங்களின் இன்றைய வளர்ச்சி என்பது  பிரமிப்பாகவே உள்ளது. 

“இந்த உலகில்  வாழ்ந்து காட்டுதலை விட மிகச் சிறந்த பழிவாங்குதல் வேறெதும் இல்லை” என்பதாகத் தான் உங்கள் வாழ்க்கையில் இருந்து நான் கற்றுக் கொண்டேன். ஆனால் பழிவாங்குவது மட்டும் தான் உங்களிடம் முதன்மையாக இருக்கின்றதோ என்று என் எண்ணத்தில் தோன்றுவதையும் தவிர்க்க முடியவில்லை. 

விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இந்த உலகம் நேற்றும் ஆண்களிடம் தான் இருந்தது.  நாளையும் அப்படித்தான் இருக்கும்.

வளர்ந்து விடுவாயா? என்பவர்களுக்கும் நான் வளர்ந்து காட்டுகின்றேன் என்பவர்களுக்கும் இடையே நடந்து கொண்டிருக்கும் இந்த தர்மயுத்தம் எப்போது முடிவுக்கு வரும் என்பது குறித்து எனக்குத் தெரியாது.  ஆனால் ஆணாதிக்கம் என்பது தற்போது உடைந்து கொண்டே வருகின்றது என்பது மட்டும் சர்வ நிச்சயம்.

அன்று நீங்கள் என்ன சபதம் எடுத்தீர்களோ? 

ஆனால் நான் உடைத்து வந்து விட்டேன் பார் என்பதான உங்களின் இன்றைய அரசியல் வளர்ச்சியும், வளர்த்துக் கொண்ட ஆளுமையும் எவரும் பாராட்டக்கூடியதாக உள்ளது. ஆனால் உருவானது வளர்ச்சியா இல்லை வீக்கமா  என்பதையும் கணக்கில் வைத்து பார்க்க வேண்டியுள்ளது. 

எம்.ஜி.ஆர் வாள் கொடுத்து உங்களை அரசியல் களத்தில் அங்கீகரித்தார். அறிஞர் அண்ணா அமர்ந்த டெல்லி பாராளுமன்ற இருக்கையில் தாங்கள் அமர்ந்தது வரைக்கும் உங்களின் அரசியல் களமென்பது ஒற்றையடி பாதை தான்.  எம்.ஜி.ஆர் இறந்து அவர் சடலத்திற்கருகே தாங்கள் அமர்ந்து காட்டிய பிடிவாதம் முதல் அன்று உங்களை அவமானப்படுத்திய அத்தனை பேர்களின் அரசியல் முகத்தை  காணாமல் போகச் செய்தது வரைக்கும் உங்கள் பயணம் நீண்டதொரு முள்பாதை. 

நீங்கள் காட்டிய முனைப்பும், முயற்சிகளும் ஒவ்வொரு பெண்களும் தெரிந்து கொள்ள வேண்டிய பாலபாடம். ஆனால் ஆசிரியையாக இருந்து அற்புத பாடத்தை நடத்திக் காட்டூவீர்கள் என்று நம்பிய எங்களுக்கு இன்று அலங்கோல நிர்வாகத்தை அல்லவா காட்டிக் கொண்டு இருக்குறீங்க?.

ஜா அணி ஜெ அணி என்று பிரிந்து இரட்டை இலை சின்னத்தை நீங்கள்  கைப்பற்றியது முதல் தான் உங்கள் தார் சாலை பயணம் தொடங்கியது.  ஆனால் ராஜீவ் காந்தி என்ற மனிதரின் மரணம் தான் தமிழ்நாட்டு அரசியல் களத்தில் தேசிய நெடுஞ்சாலை பயணத்தை உங்களுக்கு அறிமுகப்படுத்தியது.

நினைவில் வைத்திருப்பீர்கள் தானே?  

கடந்து வந்த பாதையை அரசியல்வாதிகள் மறந்துவிடுவது இயல்பானது தான்.  அரசியலில் ஏணிகள் கிடைக்காதா என்று அலையும் மனிதர்கள் மத்தியில் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஏணிகளே உங்களைத் தேடி வந்தது தான் உங்களுக்குண்டான ராசி.  உங்களை மகராசி என்றழைத்த தமிழ்நாட்டின் மக்களின் ராசியைத் தான் இனி சுபமங்களம் என்று பாட வைத்துக் கொண்டு இருக்கீறீர்கள்.  

"திருவாரூரில் இருந்து வெறும் மஞ்சள் பையோடு கிளம்பி வந்த தீயசக்தி கருணாநிதி" என்று வயசு வித்தியாசம் கூட பார்க்காமல் ஒவ்வொரு முறையும் முழக்கம் செய்வீர்களே? உங்கள் அகராதியில் அரசியல் எதிரி என்பவர்கள் அழிந்து போகவேண்டியவர்களா? உங்களும் அவருக்கும் என்ன அங்காளி பங்காளிச் சண்டையா?  எத்தனை ஜென்மத்து பகையிது.  நடிப்பா? நாடகமா? இல்லை தாங்கள் தப்பிப்பதற்கான ஒரு வழியா?

அவர் செய்தார். அவர் செய்யவில்லை. அவர் தான் காரணம் 

இந்த மூன்றும் தான் உங்களின் அரசியல் தாரக மந்திரமா?

இது போன்ற கீறல் விழுந்த வார்த்தைகளை இன்னும் எத்தனை நாளைக்குத் தான் சொல்லிக் கொண்டு இருக்கப் போகின்றீர்கள். சிறிய நிறுவனம் கூட தேர்ந்தெடுக்கப்படும் ஒருவர் ஒவ்வொரு முறையும் காரணங்களைச் சொன்னால் கழுத்தை பிடித்து வெளியே தள்ளி விடுவார்கள். நிறுவனமே இப்படி என்றால் தமிழ்நாட்டின் மொத்த நிர்வாகத்தையும் உங்களிடம் கொடுத்து இருக்கின்றோமே? 

இனி நாங்கள் என்ன செய்ய முடியும்?

கலைஞரை குறித்து தமிழ்நாட்டில் உள்ள மக்களுக்கு மட்டுமல்ல. இந்திய அரசியலுக்கே நன்றாகவே தெரியும். சர்க்காரியா கமிஷன் முதல் இன்றைய அலைக்கறறை ஊழல் வரைக்கும் அவர் அரசியலில் கடந்து வந்த பாதை நீண்ட நெடியது. அவரின் குடும்பபாசத்தைப் பற்றி நீங்களே ஒரு பேட்டியில் கூட சொல்லியிருந்தீர்களே?

நீங்கள் மட்டுமல்ல?  

இன்னும் எத்தனை பேர்கள் தமிழ்நாட்டு அரசியலில் வந்தாலும் கலைஞருடன் அவர் காலம் முடியும் வரைக்கும் எவராலும் போட்டி முடியாது என்பது உங்களுக்குத் தெரியுமா? 

நீங்கள் அரசியலை புத்தகத்தில் தான் படித்திருப்பீர்கள்.  அவர் ஒவ்வொரு காலகட்டத்திலும் களத்தில் நின்று கற்றுத் தெளிந்தவர்.  அவர் ஒரு காட்டு மரம்   ஒரே ஒரு வாக்கியத்தில் தமிழ்நாட்டை கொந்தளிக்கவும் செய்வார். வேறொரு வார்த்தையில் ஊடகம் திரித்து எழுதி விட்டது என்பதாகவும் பேசுவார். 

குறைகளுடன் இருக்கும் அவரை அவர் குடும்பம் ஏற்றுக் கொண்டதைப் போல அவருக்காக, அவரை  நம்பியும் லட்சக்கணக்கான தொண்டர்களும், பொது ஜனமும் அவர் வார்த்தைகளை வேத வாக்காக ஏற்றுக் கொண்டு அவர் தான் எங்கள் தலைவர் என்று தான் வாழ்கிறார்கள்.  உங்களால் அவரை என்ன செயது விட முடியும்?   நட்ட நடு ராத்திரியில் அவரை கைது செய்தீர்கள்? என்ன நடந்தது?

அவர் ஊழல்வாதி என்றால் இப்போது கர்நாடக நீதிமன்றத்திற்கு அலைந்து கொண்டு இருக்கின்றீர்களே?  ஒரு வழக்கை எப்படியெல்லாம் இழுத்தடிக்க வேண்டும் என்ற வித்தையை எதிர்கால வக்கீல்கள் உங்களின் தற்போதைய அனுபவத்தை பாடமாக படித்துக் கொள்ள முடியும்.

அரசியல் என்பது ஒரு முதலீடு செய்யும் தொழில் போன்றது என்பதை தற்போது மக்களும் எதார்த்த சினிமாவை போலவே ஏற்றுக் கொள்ளத் தொடங்கி விட்டார்கள் என்பது உங்களும் தெரியும் தானே?

முதல் முறை நீங்கள் ஆட்சிக்கு வர .காரணம் அமரர் ராஜீவ் காந்தி. இந்த முறை வந்ததற்கு காரணம் கலைஞர் மு. கருணாநிதி. ஒவ்வொரு முறையும்  நல்லது செய்வார்கள்  என்ற நம்பிக்கையில் எவரும் ஓட்டுப் போடுவதில்லை. இவர் மீண்டும் வந்து விடக்கூடாது என்பதற்காகவே மட்டுமே மாற்றத்தை எதிர்பார்த்து தங்கள் ஒட்டுக்களை  குத்துகிறார்கள்.

ஆனால் இந்த முறை ஆட்சிக்கு வந்த தாங்கள் தமிழ்நாட்டின் மக்கள் முகத்தில் தொடர்ச்சியாக குத்திக் கொண்டேயிருக்கிறீர்களே இது நியாயமா?

இந்த முறை உங்கள் கட்சி ஜெயித்து வந்த போது திருப்பூர் தொழில் வளர்ச்சியில் தாங்கள் காட்டிய அக்கறை என்னை வியப்பில் ஆழ்த்தியது. எதிர்கால நம்பிக்கையை அதிகப்படுத்தியது.

பதவியேற்பு விழா நடப்பதற்கு முன்பே உங்களின் வேகம் என்னை திகைக்க வைத்தது.  திருப்பூரில் காட்டிய உங்கள் அக்கறை தமிழ்நாடு முழுக்க இருக்கும் என்று நம்பினேன். கடந்த கால அனுபவங்கள் உங்களை மாற்றியுள்ளது என்பதை மனதார நம்பினேன்.

ஆனால் நான் வைத்திருந்த நம்பிக்கையின் கை இழந்து அம்பி என்னை எப்போதும் நம்பாதே என்று தாங்கள் சொல்வது போல் இருக்கின்றது.  முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் உதவியாளர் பொன்ராஜ் உங்கள் அருகே இருப்பதாகவும், கற்று அறிந்த பல அறிஞர் பெருமக்கள் உங்களுக்கு உதவுகிறார்கள், திட்டங்கள் விரைவாக தீட்டப்படுவதாகவும், தகவல்கள் வந்தன.  ஆனால் தெளிய வைத்து தொடர்ச்சியாக அடித்துக் கொண்டுருப்பது தான் தற்போது நடந்து கொண்டிருக்கிறது.

நம்பமுடியாத அளவுக்கு தமிழ்நாட்டின் வளர்சசி செங்குத்தாக ஏறிவிடும் என்றும் ஊடகங்கள் செய்திகளை பரப்பின.  வராது வந்த மாமணியோ என்று யோசித்தேன். உண்மைதான் தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி செங்குத்தாகத்தான் ஏறியுள்ளது. இன்னும் நாலடி எடுத்து வைத்தால் கருட புராண காட்சிகளை பார்த்து விடலாம். 


இன்று இருட்டுக்குள் இருந்து தொழில் துறையினர் அழுது கொண்டு வாழும் இந்த வாழ்க்கையின் விசும்பல்கள் உங்கள் போயஸ் தோட்டத்திற்கு எட்டுமா? மிக குறுகிய காலத்திற்குள் தமிழ்நாட்டை இருண்ட உலகமாக மாற்றிய பெருமை உங்களையே சேரும். பதவியேற்றது முதல் பணிகளை தொடங்கி இருந்தால் கூட இன்று பாதி கிணறு தாண்டியுள்ளோம் என்று நம்பிக்கையில் காத்திருக்க முடியும். வடிவேல் சொன்ன கிணறே காணவில்லை என்பது போலத்தான் இருக்கிறது.

எத்தனை அதிகாரிகளின் மாற்றங்கள்?

எத்தனை அமைச்சர்களின் மாற்றங்கள்?

ஆனால் என்ன உருப்படியான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது என்பது தான் இன்று வரையிலும் புரியாமல் மர்மமாக இருக்கின்றது.


ஒரு அதிகாரி சீட்டில் உட்காரும் போதே இன்னும் எத்தனை நாளைக்கு இந்த பதவி? என்று யோசிக்கும் போது அவருக்கு என்ன தான் செய்யத் தோன்றும்?நாள் காட்டி தாளை கிழித்து மதிய சாப்பாட்டுக்கு காத்திருக்கத் தான் தோன்றும்.

அமைச்சர்கள் என்பவர்கள் தலையாட்டி பொம்மையா? இல்லை உங்கள் முன்னால் தலையை மட்டும் காட்ட வேண்டியவர்களா?  சட்டமன்றத்தில் உங்களைத் தவிர வேறு எவருமே பேசக்கூடாது என்பது போன்ற சட்டதிட்டங்கள் போடப்பட்டுள்ளதா? அப்புறம் எதற்கு துறை சார்ந்த அமைச்சர்கள்? 

அதென்ன உங்கள் முன்னால் பொத்தென்று விழுபவர்கள், பம்மிக் கொண்டு இருப்பவர்கள், பயத்தோடு பார்ப்பவர்கள் என்று மிகப் பெரிய அடிமை பட்டாளத்தை உருவாக்கி வைத்து இருக்கின்றீர்களே? இவர்களுக்கு ஏதும் பயிற்சி பட்டறை இருக்கின்றதா? உலக மகா நடிகனான சிவாஜி கணேசனையும் மிஞ்சி விடுவார்கள் போல.

யார் எந்த துறையில் இருக்கின்றார்கள் என்றே தமிழகத்திற்கு தெரியுமா? என்று யோசிக்கத் தோன்றுகின்றது.

பம்மிக் கொண்டுருப்பவர்களும், உங்களை வார்த்தைக்கு வார்த்தை அம்மா அம்மா அம்மம்மா என்று என்று அழைப்பவர்களும் தான் அமைச்சர்கள் என்றால் தமிழ்நாடு முழுக்க அம்மா என்றழைக்காத உயிரில்லையே என்ற பாடலையே மாநில கீதமாக அறிவித்து தினந்தோறும் பள்ளிக்குழந்தைகளை பாடவைத்து வகுப்புகளை தொடங்கச் சொல்லாமே?

எளிய மனிதர் காமராஜரை உங்களுக்குத் தெரியும் தானே? 

உங்களைப்போல கான்வென்ட் படிப்பு படித்தவர் அல்ல. பக்கா கிராமத்தான் என்பார்களே? அது போன்ற தோற்றம் தான்.

இன்று மூன்று வெள்ளூடைய மாற்றிக் கொண்டு வரும் அரசியல் தலைவரல்ல.

என்னவெல்லாம் இந்த தமிழ்நாட்டுக்குத் தேவை என்று பார்த்து பார்த்து செய்த பலனைத் தான் அவருக்குப் பினனால் வந்த திராவிட கட்சிகள் அனுபவித்தன.

உங்கள் தலைவர் எம்.ஜி.ஆரை இன்று வரையிலும் படித்தவர்கள் ஒரு தலைவராகக்கூட ஏற்றுக் கொள்ள தயாராயில்லை.  

ஆனால் அடித்தட்டு, ஒடுக்கப்பட்ட, கிராமத்து மக்கள் அத்தனை பேர்களும் அவரைத் தவிர வேறு எவரையுமே தலைவராக ஏற்றுக் கொள்ளவே விரும்பவில்லை என்ற உண்மை உங்களுக்குப் புரியுமா?

காமராஜர் தமிழ்நாடு முழுமையாக முன்னேற என்ன செய்ய வேண்டும் என்று யோசித்தார்.  அதையே சுயநலமின்றி செய்தும் காட்டினார். ஆனால் எம்.ஜி.ஆர் இய்லபான சாதாரண வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருப்பவர்களின் வாழ்க்கையில் அரசாங்க கொள்கைகள் எந்த பாதிப்பையும் ஏற்படுத்திவிடக் கூடாது என்பதில் மட்டும் அதிக கவனமாக இருந்தார் என்பதாவது உங்களுக்குத் தெரியுமா?. 

மக்களுக்குத் தேவையான அடிப்படை விசயங்களை எப்போதும் சிறப்பாகவே வைத்திருந்தார். அதனால் அல்லல்படுவோருக்கு ரட்சகராகத் தெரிந்தார். எம்.ஜி.ஆர் கலைஞர் அளவுக்கு மிகப் பெரிய புத்திசாலி இல்லை தான்.  கலைஞரின் தந்திரம் மறைமுகமானது. ஆனால் எம்.ஜி.ஆரின் பார்வை அவரது உதவிக் கரங்களைப் போலவே வெளிப்படையானது. இது அரசியலை கவனிக்கும் அத்தனை பேர்களுக்குமே தெரிந்த உண்மை தானே..

ஆனால் புத்திசாலிகளால் மட்டும் தான் ஆள முடியுமா? என்பதை உடைத்துக் காட்டி எம்.ஜி.ஆர் உயிருடன் இருக்கும் வரையிலும் கலைஞரால் கூட எழ முடியவில்லையே?  எனக்கு போடும் ஓட்டு அவருக்கு ஒப்படைக்க என்று கெஞ்சும் அளவுக்குத் தானே கொண்டு வந்து நிறுத்தியது. இதனால் அவரை மக்கள் தலைவர் என்று அழைக்கின்றார்கள்..

உங்களுக்கு கலைஞரைப் போல குடும்ப பாரங்கள் இல்லை. அழுத்தங்கள் இல்லை. பாசப் போராட்டத்தில் மதியிழக்க வேண்டிய அவசியம் கூட இல்லை. தொடக்கம் முதலே நீங்கள் தங்க ஸ்பூன் வாழ்க்கை வாழ்ந்தவர் தான். ஆசைக்கே ஆசைபடும் அளவுக்கு உங்களின் அழகும், அறிவும் குறித்து அனைவரும் அறிந்ததே.

ஆனால் ஆட்சி புரியத் தெரியவேண்டுமே? ஆட்சியினால் மக்களுக்கு பலன் சென்றடைய வேண்டுமே? கற்றுக் கொள்ள வேண்டும் என்று நினைத்திருந்தால் முதல் முறை ஆட்சிபுரிந்த அந்த ஐந்தாண்டுகளே போதுமானதே? 

முதல்முறை ஆட்சிக்கு வந்த போது உங்களைப் பார்க்க வந்தவர்கள், வரவழைக்கப்பட்டவர்கள், வந்தே ஆக வேண்டும் என்று கட்டளையிட்டு கோட்டைக்கு, வீட்டுக்கு வந்தவர்கள் அத்தனை பேர்களும் நனைந்த ப்ளாஷ் மழையை நானும் பத்திரிக்கையில் படித்துள்ளேன். கலைஞரும், எம்.ஜி.ஆரும் திரைப்படத்துறையில் இருந்து வந்தவர்கள் தான்.

ஆனால் அரசியலுக்கு வந்தவுடன் அது வேறு இது வேறு எளிதாக புரிந்து கொண்டார்கள். ஆனால் நீங்களோ எல்லாமே ஒன்று தான் மக்களுக்கு இன்று வரையிலும் உணர்த்திக் கொண்டே இருக்கிறீர்கள? 

சில மாதங்களுக்கு முன்பு உங்கள் ஆட்சியின் ஓராண்டு ஆட்சியின் நூறாண்டு சாதனை என்று மிகப்பெரிய செலவு செய்து இந்தியா முழுக்க தெரிவிக்கச் செய்தீர்கள்.  மிகச் சரியாகத்தான் செய்து இருக்கீங்க.  கடந்த ஓராண்டு காலத்தில் வாழ்ந்த அத்தனை தமிழ்நாட்டின் மக்களின் வாழ்வாதாரத்தை அடுத்த 99 ஆண்டுகள் வந்தாலும் மீட்டெடுக்க முடியாத அளவுக்கு செய்தது உங்களின் சாதனை தானே.?

விலைவாசி உயர்வு.  அதற்கு மத்திய அரசாங்கமே  காரணம்.
பால்விலை உயர்வு.  கலைஞர் செய்த தவறு. 
பேரூந்து கட்டணம் உயர்வு. கலைஞர் செய்த தவறு. 
மின்சாரப் பற்றாக்குறை. அதுவும் கலைஞர் ஆட்சியில் நிறைவேற்றாமல் வைத்திருக்கும்  திட்டங்கள் 

இதையே திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டு இருக்கின்றீர்களே? நடிகர் வடிவேலிடம் பயிற்சி எடுத்துக் கொண்டு இருக்கின்றீர்களோ?என்று சந்தேகமாக இருக்கின்றது. 


ஆனால் மதுக்கடைகளை கலைஞர் தானே அறிமுகப்படுத்தினார்.   அதையும் உங்கள் பாணியில் மூடுவிழா நடத்திவிட வேண்டியது தானே?

ஏனிந்த ஓரவஞ்சகம்?

வாழ முடியாதவர்களின் வாழ்க்கையில் இந்த மது அரக்கனும் நுழைந்து பெண்களின் வாழ்க்கையில் இருக்கும் கொஞ்ச மகிழ்ச்சியையும் பறித்துக் கொண்டிருப்பது உங்களுக்குத் தெரியுமா? பெண்ணுக்குத் தானே மற்றொரு பெண்ணின் துயரம் புரியும்?

குறைந்தபட்சம் இந்த மின் துறையிலாவது போடப்பட்ட அதிகாரிகளை மாற்றாமல் அவரை நம்பி பொறுப்பை கொடுத்து இருப்பீர்களா? எவரையாவது சுதந்திரமாக செயலபட அனுமதித்து இருப்பீர்களா? கொள்கை ரீதியான மாற்றுக் கருத்து இருந்தால் உங்களுடன்  உரையாடும் தைரியத்தை உங்கள் அதிகாரவர்க்கம் பெற்று இருக்கின்றதா என்று தனிமையில் இருக்கும் போது  யோசித்துப் பாருங்கள்.  

காரணம் நீங்கள் வாழும் வாழ்க்கை, நீங்கள் எடுக்கும் முடிவுகள் அத்தனையும் தமிழ்நாட்டு மக்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்க கூடியவை. 

யோசித்து இருப்பீர்களா?

உங்களுக்குத் தான் குட்டிக்கதை சொல்வது தான் ரொம்ப பிடிக்குமே?  நானும் ஒரு கதை உங்களுக்குச் சொல்கின்றேன்.

ஒரு ஊரில் ஒரு ராஜா இருந்தாராம். திடீரென்று மக்களுக்கு ஒரு உத்தரவு போட்டாராம். ஒவ்வொரு குடும்பத்திலும் இருந்து விளைச்சல் முடிந்த பிறகு ஒரு மூட்டை அரிசி கொண்டு வந்து கொடுத்து விட்டு அரண்மனையில் இருந்து ஒரு மூட்டை நெல் வாங்கிக் கொண்டு செல்ல வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தாராம். மக்கள் சொல்ல முடியாத துயரத்தில் மீற முடியாமல் தவித்தார்களாம். . ஆனால் ராஜா சாகும் தருவாயில் மகனை அழைத்து மக்கள் என்னை நல்ல ராஜா என்று சொல்ல வேண்டும் என்று விரும்பினாராம். 

நீங்க கவலைப்படாதீங்க மன்னா. நான் பார்த்துக் கொள்கின்றேன் என்று இளவரசன் சொன்னாராம்.  மன்னரும் இறந்து விட்டாராம்.  பட்டத்துக்கு வந்த இளவரசன் மக்களுக்கு ஒரு உத்தரவு போட்டானாம். ஒரு குடும்பத்தில் இருந்து ஒரு மூட்டை அரிசி கொண்டு வந்து கொடுத்து விட்டு அரண்மனையில் இருந்து ஒரு மூட்டை உமி வாங்கிக் கொண்டு செல்ல வேண்டும் என்றாராம்.  அப்போது மக்கள் ராஜாவே பரவாயில்லை போலும் என்றார்களாம்.

தற்போதைய உங்களின் ஆட்சியும் இப்படித்தான் இருக்கிறது முதல்வரே.

ஒரு ஆட்சிக்கு வருபவர்களிடம் இந்த மக்கள் என்ன எதிர்பார்க்கின்றார்கள்? 

ரேஷன் பொருட்கள், பொது சுகாதாரம், கல்வி, போக்குவரத்து வசதிகள், தொடர்ச்சியான பராமரிப்பு. கண்டிப்பான சட்டம் ஒழுங்கு.

ஆனால் தற்போது எப்படி இருக்கின்றது.

முக்கியமான சட்டம் ஒழுங்கே இன்று மக்களுக்கு சவாலாக இருக்கிறது.

கலைஞர் கொண்டு வந்தது என்பதற்காகவே அற்புத திட்டமான சமச்சீர் கல்வியை தற்கொலையே செய்ய வைத்து விட்டீர்கள். தாங்கள் அமைத்த குழுவில் இடம் பெற்ற ஆட்களைப் பார்த்த பொழுதே நீங்கள் ஒரு படுபயங்கர மேதை என்பதை புரிந்து கொண்டேன்.  

வெளியுலகத்திற்கு அதிகம் தெரியாமல் இருக்கும் உங்கள் வீட்டில் உள்ள நூலகத்தை பத்திரிக்கையில் படித்து இருக்கின்றேன். நீங்களே ஒரு (ஆங்கில) புத்தக வாசிப்பு பிரியர் என்பதையும் புரிந்துள்ளேன். ஆனால் சென்ற ஆட்சியில் கலைஞர் கொண்டு வந்த அண்ணா நூலககட்டிடத்தில் தாங்கள் காட்டிய பரிவும் பாசமும் தமிழ்நாட்டு மக்கள் என்றைக்குமே மறக்க மாட்டார்கள். உங்கள் தீர்க்கதரிசனமென்பது திடுக்கிடவைப்பது என்ற அர்த்தம் தானோ?

ஈழம் முதல் இன்றைய கூடங்குளம் வரைக்கும் உங்களின் கொள்கை என்ன என்பதை தமிழ்நாட்டில் உள்ள சின்ன குழந்தைக்கு கூட தெரியுமே? அரசியலில் அந்தர் பல்டி என்பது உங்களுக்கு பிடித்த வார்த்தையா? :மூவரின் தூக்குத் தண்டனை குறித்து நீங்கள் சொன்ன எனக்கு அதிகாரம் இல்லை என்பதன் பின்னால் உள்ள அர்த்தத்தை விபரம் தெரிந்தவர்கள் மட்டும் தங்களுக்குள் நகைத்துக் கொண்டது உங்களுக்குத் தெரியுமா?

தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர் போன்றவர்கள் நேரிடையாக, மறைமுகமாக தமிழ்நாட்டு மக்களிடம் உருவாக்கிய தாக்கங்கள், உருவான மறுமலர்ச்சி போன்றவை குறித்து உங்களால் புரிந்து கொள்ள முடியுமா? 

காமராஜரை பலமுறை பிரதமர் பதவி தேடி வந்தது.  ஆனால் இன்று உங்கள் கனவே அதுவாக இருப்பதால் முடிந்த வரைக்கும் முய்ற்சிப்போம் என்று நீங்களும் முன்னேறிக் கொண்டே இருக்கீங்க. உங்கள் ஆசை நிறைவேற என்னுடைய வாழ்த்துகள். உங்கள் நண்பர் குஜராத் மோடியைப் போல முதலில் மாநில மக்களின் அன்பை பெற முயற்சியாவது செய்யுங்க. 

ஆனால் பாதிக்கப்பட்டு அழுது கொண்டிருக்கும் தமிழ்நாட்டு மக்களின் கண்ணீரில் தான் நீங்கள் நடந்தபடி தான்  பிரதமர் பதவியை நோக்கி போய் கொண்டுருக்கீங்க என்பதையும் உங்கள் நினைவில் வைத்திருக்க வேண்டும் முதல்வரே.

கலைஞர் கொண்டு வந்த மற்றொரு அற்புதமான திட்டமான உழவர் சந்தையின் இன்றைய நிலைதான் என்ன? 

தமிழ்நாட்டை விவசாயிகளின் மாநிலமாக மாற்றுவேன் என்று சூளுரைத்தீர்களே? ஒரு விவசாயின் கண்ணீரை அறிய ஏழையாக பிறக்க வேண்டியதில்லை.  அவர்களின் வாழ்க்கையை ஒரு நாள் வாழ்ந்து பார்த்தாலே போதுமானது. 


உங்களுக்கென்ன? 

தடையற்ற மின்சாரம். நினைத்தால் கொடை நாடு.  அலுத்துப் போனால் பையனூர் பங்களா,  இதற்கு மேலும் இருக்கவே இருக்கும் சாமி,  பூதங்கள், ஆச்சாரங்கள், அனுஷ்டானங்கள், யாக வேள்விகள்.

ஆனால் தற்போது தமிழ்நாட்டில் வாழும் ஒவ்வொருவருமே தங்கள் வாழ்க்கையை தீயின் மேல் நின்று கொண்டு வாழ்வது போலத்தான்  வாழ்ந்து  கொண்டு இருக்கிறார்கள். ஆனால் இவர்களின் கருகல் வாடை எப்போது உங்களுக்கு புரியும் என்பதே தெரியவில்லை.

சேலத்துக்கருகே ஒரு நெசவாளார்கள் வாழும் கிராமத்தில் வீட்டுக்கு வீடு கருப்புக் கொடி கட்டி வைத்து தீபாவளி பண்டிகையை புறக்கணித்த காட்சியை தொலைக்காட்சியில் பார்த்திருந்தால் உங்களுக்கு உண்மையான மக்களின் அவலம் புரியும்.

“என் மகன் மற்ற பசங்க வெடிக்கின்ற பட்டாசு பார்த்து என்னிடம் வந்து அழுகின்றான்.  நான் என்ன செய்ய முடியும்?. இந்த மின் தடையில் வேலை செய்றதே மூணு நேரம் சாப்பிட போதல” என்றார்.  

கொண்டாட வேண்டிய என் பண்டிகையில் துக்கம் வந்து சூழ்ந்து விட்டது.  இன்னும் இரண்டு மூன்று வருடங்களில் என்னைப் போன்றவர்களின் கதியும் இப்படி வந்து விடுமோ என்று தான் யோசித்துக் கொண்டுருக்கின்றேன். .

ஒரே ஒரு முறை எம்.ஜி.ஆருக்கு அவரின் திரைப்பட வளர்ச்சிக்கு உதவிய பாடல் வரிகளை ஒரு தொகுப்பாக உருவாக்கி கோட்டைக்கு வரும் போது பயணிக்கும் காரில் கேட்டு வாருங்கள்.  மக்களின் நலத்தை மட்டுமே பிரதிபலித்த அந்த பாடல் வரிகளைத் தவிர வேறு ஏதும் தேவையா?

ஏன் அவரை ஏழை மக்கள் இன்றும் கொண்டாடுகின்றார்கள்?  என்பதை புரிந்து கொள்ள முடியும். அவர் உருவாக்கிய இரட்டை இலையே இன்றும் உங்களின் அரசியல் வாழ்க்கையை வாழ் வைத்துக் கொண்டிருக்கின்றது என்பதன் அர்த்தத்தை உணர்ந்து கொள்ள ஒரு வாய்ப்பாக இருக்கும்.

இங்கே படித்தவர்களுக்கும், பதவியில் இருப்பவர்களுக்கும் எது குறித்த அக்கறையும் இல்லை.  நடுத்தர வர்க்கத்திற்கோ தங்கள் வாழ்க்கையை காப்பாற்றிக் கொள்ளவே நேரம் போதவில்லை. எங்கே போய் சிந்திப்பது? ஆனால் படிக்காத, பாமர, கிராமத்து ஜனங்களுக்கு எந்த செய்திகளும் முழுமையாக போய்ச் சேர்ந்துவிடுவதில்லை. நாளுக்கு நாள் சமூகத்தில் இந்த மக்கள் ஒதுங்கி போய்க் கொண்டேயிருப்பதாவது தெரியுமா?

மாண்புமிகு தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் அவர்களே, இது உங்களுக்கு என்னுடைய அறிவுரைக்கடிதம் அல்ல.

எங்கள் வாழ்க்கைபாடுகளை தினந்தோறும் அறியும் போது. அழிந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில் உருவான கடிதம் என்பதை நீங்கள் புரிந்து கொள்ளும் பட்சத்தில் எனக்கு மகிழ்ச்சியே.

காரணம் இந்த உலகில் வாழ முடியாதவர்கள் விடுகின்ற கண்ணீர் இறுதியில் ஒரு சாம்ராஜ்யத்தையே மாற்ற வல்லது என்பதையும் தாங்கள் படித்த வரலாற்று புத்தகங்கள் சொல்லியிருக்குமே?இதை எப்போதும் தாங்கள் நினைவில் வைத்திருக்க வேண்டும் என்று விரும்புகின்றேன்.

வாழ்க நலமுடன் 

இப்படிக்கு

(வாக்கு மட்டுமே போடத் தெரிந்த) வாக்காளன்


ஈழம் தொடர் எழுதிய போது கலைஞருக்கு எழுதிய கடிதம்