Sunday, November 11, 2012

மின்சாரக் கனவு --7 லாபம் Vs கொள்ளை



தொடக்கம்

ஒன்று இரண்டு மூன்று நான்கு ஐந்து ஆறு

தமிழ்நாட்டில்  ஆட்சி மாறி முதல்வராக ஜெயலலிதா பதவியேற்றதும் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. அதற்கு கடந்த பத்தாண்டுகளாக  கட்டணத்தை உயர்த்தவில்லை. 

ஆண்ட கலைஞர் ஆட்சியின் அலங்கோலம் என்று பரப்புரை செய்யப்பட்டது. இந்த அரசியல் விவகாரங்களை தனியாக தொடர் முடியும் போது பார்க்கலாம். எல்லா விலையும் ஏறியிருக்கும் போது மின்சாரத்தின் விலையையும்  ஏற்றித் தானே ஆக வேண்டுமெனறு திருவாளர் பொதுஜனம் தமக்கு தாமே சமாதானம் செய்து கொண்டனர். ஆனால் இதற்கு பின்னால் மலிந்திருக்கும் ஊழலும் பொறுப்பற்ற தன்மையும் அளவிடமுடியாதது. 

இதைவிட இதனால் தமிழ்நாட்டின் மின்சார எதிர்காலம் எதிர்கொள்ளப் போகும் சவால்களும் நம் முன்னால் ஏராளமாக உள்ளது.

மின்சாரத் துறையில் தனியார்கள் வந்த போது இனி மலிவான மின்சாரம் பொதுமக்களுக்கு கிடைக்கும் என்றார்கள். தனியார்மயமாக்கப்பட்ட பின்னர் தான் நாட்டில் தொலை தொடர்புத்துறை அபரிமிதமாக வளர்ச்சியடைந்தது. கட்டணமும் குறைந்தது என்பதைப் போலவே இந்த மின்சார விசயத்திலும் நடக்குமென்றே பலரும் நம்பினார்கள். 

ஆனால் மின்சாரத் துறையில் தனியார்கள் வந்த பின்பு மின்சார கட்டணம் நடுத்தர, அடித்தட்டு மக்களின் கழுத்தை நெறித்தது.  ஏன் குறையவில்லை? என்பதற்கு முதலில் பதில் சொல்லக் கடமைப்பட்டவர்கள் மின்சார ஒழுங்கு முறை ஆணையம் என்ற அமைப்பே.  

மின்சார கொள்முதல், மின்கட்டண நிர்ணயம் போன்ற. மொத்த லகானும் அவர்கள் கையில் தானே இருக்கின்றது. ஆனால் அவர்களின் செயல்பாடுகள் ஒவ்வொன்றும் மக்களின் தேவைக்கு அப்பாற்பட்டது என்பதை சொல்லாமல் புரியவைத்தார்கள். ஆணையத்தின் ஒவ்வொரு கடந்த கால செயல்பாடுகளும் "இருட்டறைக்குள் உள்ளதடா உலகம்" என்பதாக விபரம் தெரிந்வர்களுக்கு உணர வைத்தது. 

இத்துடன் மற்றொரு கூத்தும் நடந்தது. 

இந்த சமயத்தில் நீங்கள் மீண்டும் ஒன்றை நன்றாக மனதில் நினைவில் வைத்திருக்க வேண்டும்.  

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் கடன் 53,298 கோடி ரூபாய். இன்றைய தேதியில் தமிழ்நாடு அரசிற்கு இருக்கும் மொத்த கடனில் இது பாதித் தொகையாக வந்து விடுகின்றது. 



இந்தியாவில் அலைக்கற்றை ஊழல் ஒரு பிரளயத்தையே உருவாக்கியது.  ஆனால் பலன்?  

அவர் செய்தார், அவரும் செய்தார் என்று கைகள் மாறிக் கொண்டே சென்றது.  

ஆனால் முடிவு? 

இப்போது நீதிமன்றத்தில் இருக்கின்றது.  ஊழல் வெளிவந்த கதைகள் இப்படி இருக்கும் போது மின்சாரத் துறையில் தனியார்களின் ராஜ்ஜியத்தை அவர்களின் திரைமறைவு வேலைகளை, உதவும் அதிகாரவர்க்கம், ஆணையங்கள், பலன் பெற்றவர்கள் என்று பக்கம் பக்கமாக எழுத வேண்டிய பல விசயங்கள் இருந்தாலும் சில விசயங்களை மட்டும் இங்கே பார்த்து விடலாம்.

குறிப்பாக ஒரு தொழிலில் முறைப்படி கிடைத்தே ஆக வேண்டிய லாபம் என்பது வேறு.  ஆனால் லாபம் என்ற பெயரில் கொள்ளை அடிப்பது என்பது வேறு.

மின்சாரத் துறையில் கோடிக்கணக்கான ரூபாய்கள் கொள்ளையாகத்தான் மக்களின் வரிப்பணம் கடந்த பல ஆண்டுகளாக தனியார் கைகளுக்கு போய்க் கொண்டேயிருக்கின்றது. 

பலருக்கும் தெரிந்தே போவது தான் மகத்தான ஆச்சரியம்.

காரணம் தனியார்கள் ஒரு துறைக்கு வரும் போது தான் உண்மையான போட்டிகளும், சேவைகளும் கிடைக்கும் என்று எண்ணம் கொண்டவர்களுக்கு நாம் எந்த அளவுக்கு ஏமாளியாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றோம் என்பதையும் நமது அரசியல்வாதிகள் எந்த அளவுக்கு நேர்மையானவர்கள் என்பதையும் உணர வைக்கும். காரணம் இன்று தமிழ்நாடு மின்சார வாரியம் சுமக்கும் கடன் தொகை அத்தனையும் தனியார்களுக்கு தாரை வார்த்த பணம் என்பதை நாம் நம் நினைவில் வைத்திருக்க வேண்டும். 

சுருக்கமாகச் சொல்லப் போனால் அவர்களிடமிருந்து மின்சாரம் வாங்கினாலும் காசு. வாங்காவிட்டாலும் காசு கொடுக்கத்தான் வேண்டும்.  காரணம் நம்முடைய சிற்பிகள் வடிவமைத்த ஒப்பந்தங்கள் அப்படித்தான் செப்புகின்றன.

தனியார்கள் நஷ்டம் என்று சொல்லிக் கொண்டு வெளியே சென்றுவிடக்கூடாது என்பதற்காக மத்திய அரசு 2003 ஆம் ஆண்டு மின்சாரச் சட்டம் என்று ஒன்று கொண்டு வந்ததை ஏற்கனவே பார்த்தோம். .

இந்த நிலையில் மத்திய மின் துறை அமைச்சகம் 21.1.2011 அன்று மின்சார மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்திற்கு கடிதம் ஒன்றை எழுதியது.

"2011 - 2012 ஆம் ஆண்டில்  நாட்டிலுள்ள அனைத்து மின் விநியோக நிறுவனங்களும் ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 89 கோடி நஷ்டத்தை ஈட்டும்.  அதனால் மின் விநியோக நிறுவனங்கள் தனியாருடன் செய்து கொண்ட கொள்முதல் ஒப்பந்தங்களின்படி பணத்தை உடனே தருவதற்கான வழிகள் இல்லாது போகும்.  எனவே இந்த ஒரு தொகையை மின் பயனீட்டாளர்கள் மீது சுமத்தத் தேவையான உத்தரவுகளை அனைத்து மாநில ஒழுங்குமுறை ஆணையங்களும் வழங்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டது.

இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் மின் விநியோக நிறுவனங்கள் மின் கட்டண உயர்வு வேண்டும் என்று  கேட்கவில்லை. ஆனால் மத்திய தீர்ப்பாயமே முடிவு எடுத்து வருடந்தோறும் தனியார் பலன் பெறும் வகையில் மின் கட்டணத்தை உயர்த்த வழிவகை செய்தது. 

இதன்படி அனைத்து ஓழுங்குமுறை ஆணையங்களும் மின் விநியோக றிறுவனங்கள் மின் கட்டண உயர்வைக் கேட்டாலும் கேட்காவிட்டாலும் ஆண்டு தோறும் கட்டண விகிதத்தை ஒவ்வொரு ஏப்ரல் மாதத்திலும் அறிவித்தாக வேண்டுமென்று அது உத்தரவிட்டது. இதன் மூலம்  மொத்த இந்தியாவின் ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 89 கோடி ரூபாயை மத்திய மின் தொகுப்பு ஆணையம் கேட்டுக் கொண்டபடி மக்கள் தலையில் சுமத்த அது உத்தரவிட்டது.

இந்தியாவில் மொத்த 85 மின் விநியோக நிறுவனங்கள உள்ளது.  ஒவ்வொன்றிடமும் தனிப்பட்ட முறையில் மத்திய தீர்பபாயம் எநத  கருத்தையும்  கேட்கவில்லை. 

"நான் சொல்கின்றேன் நீ செய்" என்பதாக முடிவு எடுக்கப்பட்டது.  

இதிலும் குறிப்பிடப்ட வேண்டிய விசயம் என்னவென்றால் இந்த தண்டத்தொகையில் கிட்டத்தட்ட பாதி அளவு தொகை அதாவது 53,298 கோடி ரூபாய் நஷ்டத்திற்கு சொந்தகாராக விளக்கும் தமிழ்நாடு மினச்ர வாரியத்தின் கருத்தைக் கூட கேட்கவில்லை. எதனால் இந்த நஷ்டம் என்பது குறித்து அதன் மூல காரணத்தை ஆராய விரும்பவில்லை. 

அது சரி? 

தனியாருக்கு இந்த துறையில் என்னென்ன சலுகைகள் கிடைக்கின்றது? இதனால் அரசாங்கத்திற்கு என்ன லாபம்? இல்லை இவர்கள் உற்பத்தி செய்யும் மின்சாரத்தினால் பயன்படுத்துவோருக்கு என்ன பலன்? போன்ற கேள்விகள் நமக்கு இயல்பாக தோன்ற வேண்டும்.

ஒரு மின் நிலையம் உருவாகக வேண்டும் என்றால் ஒரு தனியாரிடம் மொத்த முதலீட்டுத் தொகையில் 30 சதவிகிதம் மட்டும் இருந்தால் போதும்.  மீதியுள்ள நிதிகள்,  நிதி நிறுவனங்கள் மற்றும் அரசாங்கத்தின் மூலம் வந்து விடும்.

இது தவிர மின் நிலையத்திற்குத் தேவையான மின் உற்பத்தி எந்திரங்களின் இறக்குமதி, சுங்க வரி போன்ற சலுகைகள் அரசால் அளிக்கப்படுகின்றது. இதிலும் பல நிறுவனங்கள் ஏற்கனவே மேலைநாட்டில் பயன்படுத்தப்பட்ட கருவிகளை புதிய கருவிகள் என்ற பெயரில் கணக்கு காட்டி இறக்குமதி செய்து ஒரு பெரிய தொகையை லவட்டி விடுகின்றன. உள்ளே வரும் இந்த உபயோகமற்ற கருவிகளால் மொத்த மின் உற்பத்தியும் பாழாகிவிடுவது தான் மிச்சம். தனியாருக்கு இரண்டு வகையில் லாபம். அரசாங்கம் தருகின்ற வரிச்சலுகைகள் ஒருபக்கம். மற்றொன்று  ஒப்பந்தம் போட்டபடி அவர்களுக்கு வழங்கவேண்டிய தொகைகளை அந்தந்த மின்சார வாரியங்கள் கப்பம் போல கட்டியாக வேண்டும். 

இதற்கு மேலும் தமிழ்நாட்டில் உள்ள எரிவாயுகளை தனியாருக்குத்தான் மத்திய அரசாங்கம் பாதிக்கு மேற்பட்ட அளவு கொடுத்து அவர்களை வாழ வைத்துக் கொண்டிருக்கின்றது.

முதலில் தமிழகத்தில் கிடைக்கும் அரிய வகை எரிவாயுக்களை அனுபவித்துக் கொண்டிருக்கும் தனியார் நிறுவனங்களின் பட்டியலை நாம் பார்த்து விடலாம்.   

1. ARKAY ENERGY (RAMESHWARAM) LTD  
2.  OPG POWER GENERATION LTD  
3. KAVERY GAS LTD. 
4. SAI REGENCY  
5. CORAMANDEL CEMENTS 
6. SAHELI LTD. 
7. SOUTHERN ENERGY DEVELOPMENT CORPORATION 
8. MM STEELS LTD 

ஆனால் தமிழ் நாடு மினவாரியத்திற்கு இந்த வளத்தில் 50 சத அளவு தான் ஒதுக்கீடு செய்யப்படுகின்றது.

மீதமுள்ள எரிவாயுவினை மத்திய அரசு நிறுவனமான கெயில் (GAIL) தனியாருக்கு சொந்தமான சுய மற்றும் இதர தனியார் மின் உற்பத்தி நிலையங்களுக்கும் தாரை வார்த்து விட்டது.


இதன் மூலம் தமிழ்நாடு மின்வாரியத்திற்கு கிடைக்க வேண்டிய பெரும்பகுதி வருவாயையும் தனியாருக்கு போய் விடுகின்றது. 

மின் நிலையம் இயங்குவதற்கான எரிவாயு ஒதுக்கீடு பெறுவதில் முன்னுரிமை என்பது தான் இவர்களுக்கு அளிக்கப்படும் சலுகைகளில் மிகப் பெரும் சலுகையாகும்.


ஒரு தனியார் உற்பத்தியாளர்களுக்கு அளிக்கும் பல சலுகைகளைக் கொண்டே அரசாங்கம் தனியாக ஒரு மின் உறபத்தி  நிலையமே உருவாக்கி விட முடியும்.  மிக குறைந்த விலையில் மக்களுக்கு மின்சாரம் வழங்க முடியும்.  ஆனால் செய்ய மாட்டார்கள். காரணம் ஏற்கனவே கையெழுத்திட்ட புதிய பொருளாதாரக் கொள்கை என்று பூச்சாண்டி காட்டுவார்கள்.



தமிழகத்தில் முதல் முதலாக நாகூருக்கு அருகில் உள்ள நரிமணம் என்ற இடத்தில் தான் 1980களின் கடைசியில் இயற்கை எரிவாயு கண்டறியப்பட்டது. இந்த எரிவாயுவினைப் பயன்படுத்தி 10 மெகாவாட் திறனுடைய மின் நிலையம் ஜனவரி 1992 ல் தன் மின் உற்பத்தியைத் தொடங்கியது.  ஜெட் விமானங்களில் பயன்படுத்தப்படும் எந்திரங்களை உபயோகிக்கத் துவங்கப்பட்ட இந்த மின் நிலையம் தமிழ்நாடு மின் வாரியத்த்துக்கு சொந்தமானது.  இது 2001 ஆம் ஆண்டு வரை இயங்கியது.

அதன் பிறகு மன்னார்குடி மற்றும் மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள குத்தாலம் ஆகிய இடங்களில் எரிவாயு கண்டறிய்பட்டது.  மூன்றாவதாக ராமநாதபுரம் மாவட்டத்தில் வழுதூர் என்ற இடத்திலும் எரிவாயு கண்டறியப்பட்டது.  இவ்வாறு தமிழகத்தில் கண்டறியப்பட்ட அரிய எரிவாயு வளம் ரசாயன உர உற்பத்திக்கு உபயோகிக்க வாய்ப்பில்லை. முழுக்க முழுக்க மின் உற்பத்திக்காகவே அது உபயோகிக்கப்பட்டது.   மக்கள் சேவையில் ஈடுபட்டுள்ள இந்த தனியார் மின் நிறுவனங்களைப் பற்றி ஒவ்வொன்றாக சற்று விபரமாக பார்த்து விடலாம்.



ராமநாதபுரம் மாவட்டத்தில் உளள வழுதூர் இரண்டாவது மின் நிலையத்தை பிஜிஆர் எனர்ஜி யானது ஒப்பந்த காலமான மார்ச்சிற்குள் ( 2009 ) தன் பணியை முடிக்கவில்லை.  இந்த நிறுவனம் இதற்கு முன்னால் ஜிஈஏ  என்ற பெயரில் வயரிங் போன்ற இரண்டாம் கட்டப் பணிகளை செய்து வந்த நிறுவனமாகும். வழுதூர் இரண்டாம் மின் நிலையத்தில் தான் மின் நிலையத்திற்கான முழு ஒப்பந்தகாரராக உருவெடுத்தது.  இந்த நிறுவனத்திடம் தான் மேட்டூரின் 600 மெகாவாட் மின் நிலையத்தில் ஈபிசி பணியும் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

2011 ல் மின் உற்பத்தியைத் துவங்கியிருக்க வேண்டிய இந்த மின் நிலையமானது இன்று வரை தொடங்கப்படவில்லை.

இதே நிறுவனம் தான் கடலூர் பவர் புராஜெக்ட் என்ற 1220 மெகாவாட் அனல் மின் நிலையம் ஒன்றைத் தனது சொந்த செலவில் நிறுவுவதாக 28.9.2006 ஆம் தேதியன்று மின் வாரியத்துடன மின் கொள்முதல் ஒப்பந்தத்தினை செய்து கொண்டது.  மின் ஒழுங்குமுறை ஆணையமும் இதற்கு அனுமதி வழங்கியது.  ஏனிந்த தாமதம்? என்று கேள்வி எதுவும் கேட்காமல் இந்த நிறுவனத்திறகு வருடந்தோறும் அனுமதியை ஆணையம் நீட்டித்துக் கொண்ட வருகின்றது.  இதன் காரணமாகத்தான் பங்குச் சந்தையில் இதன் மதிப்பு (6202 கோடி ரூபாய்). சரியாமல் இருக்கிறது.

இந்த ஒப்பந்தகார நிறுவனமானது பிஜிஆர் எனர்ஜி யின் தொழில் நுடப்த் தவறால் ஒன்னரை ஆண்டு காலம் மின் உற்பத்தியை செய்ய முடியவில்லை.  மின் உற்பத்தி இல்லாத இந்த காலகட்டத்தில் ஏற்கனவே கேஸ் அத்தாரிட்டி ஆப் இண்டியா லிமிட் (கெயில்) உடன் ஒப்பந்தம் செய்து கொண்டிருந்த மின் நிலையத்திறகான எரிபொருளான இயற்கை எரிவாயுவிற்கான கட்டணத்தில் 80 சதவிகிதத்தை தமிழ்நாட்டு மின்சார வாரியம் செலுத்தவேண்டி வந்தது. இதனால் வாரியத்துக்கு கிட்டத்தட்ட 500 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது.

2008 ஆம் ஆண்டில் உருவான கடுமையான  மின் பற்றாகுறையில் தனியார் மின் உற்பத்தியாளர்களிடம் விலை கேட்ட போது  யூனிட் 6,70 என்றார்கள். மின்சாரக் கொள்முதலை அனுமதிக்கும் அதிகாரம் ஒழுங்கு முறை ஆணையத்து மட்டும் தான் உண்டு.  அப்போது தமிழ்நாட்டில் ஆட்சியில் இருந்த அரசாங்கமும் (?)  ஏற்றுக் கொண்டபடி யூனிட் ரூபாய் 6.70 என்று இவர்களிடம் கொள்முதல் செய்ய ஆணையத்திடம் மின்வாரியம் அனுமதி கேட்டது.  

மீண்டும் உங்கள் நினைவுக்கு கொண்டு வர வேண்டிய விசயம் இந்த நிறுவனங்கள் அனைத்தும் தமிழகத்தின் இயற்கை வளமான எரிவாயுவை பய்னபடுத்துபவை. இவர்கள் உற்பத்தி செய்யும் மின்சாரம் அடிப்படை விலை மற்றும் லாபத்தோடு ரூ 2.30க்கு மேல் இருக்க முடியாது. 

இந்த உண்மை ஒழுங்குமுறை ஆணையத்திற்கு, அதிகாரத்தில் இருந்த அனைவருக்கும் வெகு நன்றாகவே தெரியும் எனறாலும் கூட இது ஆணையத்தின் கட்டளையாக முடிக்கப்பட்டு வெகுஜனத்தின் பணம் இந்த தனியார் உற்பத்தியாளர்களுக்கு தாரை வார்க்கப்படுகின்றது.

இந்த அளவுக்கு சலுகைகள் அளித்த போதிலும் நாம் ஏற்கனவே பார்த்த ஐந்து தனியார் மின் உற்பத்தி நிறுவனங்கள் தமிழ்நாடு மின் வாரியத்திற்கு பாக்கித் தொகையாக ரூ 2500 கோடி செலுத்த வேண்டியுள்ளது. 

இந்த தொகையை அவர்களிடமிருந்து வசூலித்தாலே இன்று தமிழ்நாட்டு மக்களுக்கு மானிய விலையில் மினச்ரத்தை வழங்க முடியும்.

ஆக ஏழைக்கு எல்லாருமே எதிரிகள் தான் என்பது உண்மைதானே.

தற்போது நடுத்தரவர்க்கமாய் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களை ஏழையாக மாற்றி விட்டால் கேள்விகள் ஏதும் வராது. அன்றாட வயிற்றுப் பாட்டுக்கு மட்டும் ஓடி உழைக்க வேண்டியதாக மட்டுமே வாழ முடியும். 



11 comments:

எம்.ஞானசேகரன் said...

படிக்கப்படிக்க வயிறு எரிகிறது நண்பரே! இந்த அரசியல்வாதிகளும் மக்களில் ஒருவர்தானே! விலகிப்போயா வாழ்க்கை நடத்த முடியும்?

ஜோதிஜி said...

உங்கள் விமர்சனத்திற்கு நீண்ட ஒரு கட்டுரையே எழுத முடியும். தற்கால இந்திய அரசியல்வாதிகளின் பிறழ்வு மனோ நிலை குறித்து. இப்போதைக்கு அது வேண்டாம் என்பதாலும் எழுதிக் கொண்டிருக்கும் கட்டுரையின் நோக்கத்தை சிதைத்து விடக்கூடாது என்பதால்.

வவ்வால்ன்னு ஒருத்தர் கொடுத்த சூட்டில் தான் கொஞ்சம் நோண்டி நொங்கெடுத்துக் கொண்டிருக்கேன்.

வருவாரு பாருங்க டாண்ண்ணண்னு............

வவ்வால் said...

ஜோதிஜி,

//ஆனால் தமிழ் நாடு மினவாரியத்திற்கு இந்த வளத்தில் 50 சத அளவு தான் ஒதுக்கீடு செய்யப்படுகின்றது.

மீதமுள்ள எரிவாயுவினை மத்திய அரசு நிறுவனமான கெயில் (GAIL) தனியாருக்கு சொந்தமான சுய மற்றும் இதர தனியார் மின் உற்பத்தி நிலையங்களுக்கும் தாரை வார்த்து விட்டது.


இதன் மூலம் தமிழ்நாடு மின்வாரியத்திற்கு கிடைக்க வேண்டிய பெரும்பகுதி வருவாயையும் தனியாருக்கு போய் விடுகின்றது. //


ரொம்ப குழப்பிட்டீங்க.

இயற்கை வளம் தனியாருக்கு கொடுக்கப்பட்டிருப்பது உண்மையே, ஆனால் அதனால் தமிழ் நாடு அரசின் மின் உற்பத்தி குறைந்தது , தமிழ்நாடு மின்வாரியத்திற்கு 50% தான் எரிவாய்யு கிடைக்கிறது என சொல்வதால் என்ன பயன் , ஏன் எனில் இன்று வரை நிறுவப்பட்ட எரிவாயு மின் உற்பத்தி திறனின் மொத்த அளவே வெறும் 516 மெ.வாட்கள் மட்டுமே.

Thirumakotai GTPS(107மெவா)
Kuttalam GTPS(101 மெவா)
Valuthur GTPS Phase I(95.மெவா)
Valuthur GTPS Phase II(92 மெ.வா)
Basin Bridge (4x30 MW)(120 மெ.வா)

மொத்தம்- 516 மெ.வா.


இது அனைத்தும் தனியார் திட்டங்களே அரசு 50% எரிவாயு உரிமம் பெற்றும் எதுவும் துவக்கவில்லை. எனவே எரிவாயு அளவை வைத்து மின்சார உற்பத்தியை பேசுவது சரியல்ல, மேலும் குறைவான எரிவாயு மின் திறன் தான் இருக்கிறது , அதற்கும் மேலும் எரிவாயு கிடைக்கிறது ,பயன்ப்படுத்தாத எரிவாயுவை மத்திய அரசே பயன்ப்படுத்திக்கொள்கிறது.

இந்த 516 மெ.வா என்பது மொத்த மினுற்பத்தி/தேவையில் பெரிய தாக்கத்தையும் ஏற்படுத்த போவதில்லை. தனியாருக்கு கூடுதல் விலை கொடுப்பது தான் பிரச்சினை,எரிவாயுவின் அளவல்ல.

இந்த தொடர் முழுக்க எல்லாம் ஆணையம் செய்துவிடுவதாகவே சொல்ல முற்ப்படுகிறீர்கள், ஆனால் ஆணையத்தினை இப்படி செய்ய சொல்வது அரசியல்வாதிகள்/ஆள்வோர் தான்.ஆனால் ஆள்வோருக்கு கெட்டப்பெயர் வராமல் இருக்க எல்லாம் ஆணையம் முடிவு செய்கிறது என ஆள்வோர் சொல்வதை அப்படியே நீங்களும் சொல்கிறீர்கள்.

டிராய் பரிந்துரையை ஆ.ராசா பின்ப்பற்றினாரா என்ன,அதே போல தான் மின்வாரியத்திலும் அமைச்சர்கள் லாப நோக்கு கருதி இன்னாரோடு , இப்படி ஒப்பந்தம் போட்டு இருக்கோம், அதற்கு ஏற்றார் போல செயல்படுங்கள் என உத்தரவிடுவதே வழக்கம்.

மேலும் மின்வாரியம் டிராய், எலெக்‌ஷன் கமிஷன் போல அதிக அதிகாரம் கொண்டதும் இல்லை, அமைச்சர்,முதல்வரின் கீழ் தான். எல்லாம் மக்களை ஏமாற்றி காரணம் சொல்ல ஆணையம் என்பது ஒரு சாக்கு.

வவ்வால் said...

ஜோதிஜி,

டான்னு வந்திட்டேன் போல இருக்கே ...

ஹி...ஹி இதை போய் சூடுண்ணு சொல்லுறிங்களே, எனக்கு எல்லாம் ஒரே இடத்தில கிடைச்சிடணும்னு நினைப்பேன், பாகம் ,பாகமாக போகிறது அதில் மொத்தமாக பாயிண்ட் என பார்த்தல் கொஞ்சமே தேறுச்சு அதனால் டல்லா இருப்பதாக நினைத்து சொன்னேன்.

நீங்க தொடர் கதை எழுத்தாளர் ,நாம ஒரே கதை மொத்தமாக படிக்கும் நபர் அஃதே :-))

ஜோதிஜி said...

இந்த எரிவாயு ஒதுக்கல் குறித்து இன்னோரு பதிவு எழுத வைத்து விடுவீங்க போலிருக்கே. நிறைய தகவல்களை தேடிப்பார்த்து அவர் எழுதிய விசயங்களோடு பொருத்திப் பார்த்து நிறையவே இந்த விடுமுறை ஓய்வு நாட்கள் முழுங்கிக் கொண்டிருக்கின்றது.

எனக்குத் தெரிந்து பெரிய பதிவுகளை விரும்பி முழுக்க வாசிப்பது ராஜ நடராஜன், சென்ஷி, அதுக்குப் பிறகு நீங்க சொன்ன விதத்தில் நீங்களும் என்பதை மனதில் குறித்துக் கொண்டேன்.

ஜெயமோகன் தளத்தில் என்னைப்பற்றி அவர் வெளியிட்ட கடிதத்தின் வாயிலாக அலைபேசி என் பார்த்து இந்த தொடர் குறித்து பலரும் பேசினார்கள்.

இந்த விசயங்கள் எந்த அளவுக்குச் சேரும் என்ற குழப்பம் தீர்ந்து விட்டது.

ஜோதிஜி said...

தொடர் முடிவதற்குள் உங்களை திருப்தி படுத்த முடியுமா? என்று யோசிக்கின்றேன். இந்த ஆணையத்தில் பணிபுரிநது ஓய்வு பெற்றவர் 6000 கோடி ஊழல் குறித்து ஒரு பொதுநல வழக்கு குறித்து கூட தகவல் உண்டு. எப்போதும் போல காத்தோடு போச்சு. ஆணையம் என்று திரும்ப எழுத காரணம் பின்னால் உள்ள சக்திகள் என்றாலும் ஆணையத்திற்கு இருக்கும் கொடுககப்படட அதிகாரத்தில் டிஎன்பிசி யில் இருந்து இப்போது மாற்றப்பட்ட உதயசந்திரன் போன்ற அதிகாரிகள் இருந்தால் இன்றைக்கு தமிழ்நாடடுக்கு இம்மாம் பெரிய மின்வெட்டு வந்துஇருக்காது. ஆள்வோர், ஆதாயம் பெறுவோர் என்பது அரசியல்வாதிகள் என்பது எல்லோருக்கும் தெரிந்தது தானே? அதிகாரிகள் நினைத்தால் மாற்றத்தை குறிப்பிட்ட அளவாவது நிச்சயம் உருவாக்க முடியும் என்பதும் உண்மை தானே?

வவ்வால் said...

ஜோதிஜி,

நீங்க நிறைய படித்து உழைத்து இத்தொடரை எழுதுகிறீர்கள் என்பதனை அறிவேன் ,பாராட்டுக்கள்.

ஆனால் பிரச்சினையை மாற்றிப்போட்டு வேறுவிதமாக கருத்து உருவாக்குவதை தான் சுட்டி காட்டினேன்.

50% எரிவாயு கிடைக்கிறது ஆனால் தமிழ்நாடு மின்வாரியம் அதை வைத்து உற்பத்தி செய்யவில்லை, அப்படி இருக்கும் போது 50% தானே கிடைக்குது என்றால் என்ன 100 % கிடைத்தால் என்ன?

தனியாரிடம் மின் கொள்முதல் செய்வதில் அதிக விலை நிர்ணயம் செய்யப்படுவதே வருமான இழப்பிற்கு பெரிய காரணம், பின்னர் அதனை தனியார் தொழிற்கூடங்களுக்கு மலிவு விலையில் விற்பது இன்னொரு வருமான இழப்பு.

இது தான் முக்கியமான நிர்வாக கொள்கை முடிவின் விளைவு.

7 பாகம் போட்டு இருக்கிறீர்கள் இன்னும் காற்றாலை வரவில்லை, ஆனால் காற்றாலை மின் கொள்முதலில் தான் அரசு அதிக பணம் தனியாருக்கு தாரை வார்க்கிறது.

அனல் மின், எரிவாயு மின் வகையில் 1100 மெ.வாட் அளவுக்கே த.நா.மி.வா கொள்முதல் செய்கிறது.

ஆனால் சராசரியாக 3000-4000 மெ.வா காற்றாலை மின்சாரம் சராசரியாக 8-12 ரூ விலையில் கொள்முதல் செய்கிறது.


வருமான இழப்பின் மிக பெரும் காரணி தனியார் காற்றலை மூலமே ஏற்படுகிறது.

மத்திய ஆணையம் கட்டாயப்படுத்தி சொன்னது அதான் மாநில ஆணையம் செய்தது அரசு கொடுக்கும் விளக்கம் போல இருக்கிறது.

அப்படி மாநில ஆணையம் செய்ய வேண்டிய கட்டாயம் எனில் பிகார் மின்வாரியமும் செய்யாதா?

பணம் இருந்தால் தானே தனியாரிடம் வாங்க முடியும்.

தமிழ் நாட்டின் மாநில வருவாய் இருக்கிறது ,அதனை மக்களுக்கு மின்சாரம் கொடுக்க செலவிடுகிறோம் , மக்கள் சேவை தானே என சொல்லி தனியாருக்கு அள்ளிவிடுவது மாநில அரசின் சுய ஆவல் என்றே சொல்ல வேண்டும்.

மாநில அரசு காற்றாலை திறனை சுயமாக அதிகரிக்காமல் தனியாரை ஊக்குவித்து விட்டு காற்றாலை மின் உற்பத்தி நிறைய நடக்கிறது என போலியாக பெருமை பட்டுக்கொள்கிறதே ஏன்?

பெரும்பாலான காற்றாலைகள் அரசியல்வாதிகள் ,பெரும்புள்ளிகளின் மூல தனம் ஆகும்.

தனியாரிடம் போடும் மின்கொள்முதல் ஒப்பந்தங்கள் அனைத்தும் பேரத்தின் அடிப்படையிலேயே, அதிக கொள்முதல் ,அதிக கமிஷன் அவ்வளவு தான் அரசின் கொள்கை ,இதற்கு ஆணையம் , அது, இது என ஒரு முகமூடி :-))
--------

குறிப்பிட்ட காலத்தில் முடிக்காத திட்டத்தினை எப்படி தொடர்ந்து எக்ஸ்டெண்ஷன் கொடுக்கிறார்கள் எல்லாம் தட்சணையின் அடிப்படையிலேயே.

ஒரு திட்டத்தினை குறிப்பிட்ட காலத்தில் முடிக்கவில்லை எனில் ஒப்பந்ததாரரிடம் அபராதம் வசூலிக்கலாம் என்று ஒப்பந்தத்தில் இருக்கிறது,ஆனால் அதன் அடிப்படையில் என்றாவது ஆணையமோ, அல்லது அரசோ அபராதம் வசூலித்து இருக்கிறதா?

ஜோதிஜி said...

இடையில் ராத்திரி நேரத்தில் எவரோ நேரங்கெட்ட நேரத்தில் அழைக்கும் போது முழிப்பு வர இங்கே வரும் போது எனக்கான ஒரு பதில் உங்களிடம் இருந்து தயாராக காத்துக் கொண்டிருக்கின்றது (?)

விமர்சனத்தில் முழுமையாக பேசுவதை விட முடிந்தால் இது குறித்து எழுத முயற்சிக்கின்றேன். ஆக மொத்தம் நீங்க என்னை ஒரு வழி பண்ணாம ஓயப் போறதில்லன்னு முடிவே செஞ்சுட்டீங்கன்னு நினைக்றேன்.

சுருக்கமாக ஆத்து தண்ணின்னா அய்யா குடி அம்மா குடி இன்னும் கொஞ்சம் அள்ளிக்குடிங்ற பழமொழி என் நினைவுக்கு இப்ப வருது வவ்வால்ஜி

Avargal Unmaigal said...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் மற்றும்
உங்களது நண்பர்கள் அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
"தீப ஒளியினிலே தீயன மறைந்து நல்லன பிரகாசிக்கட்டும்"
இனித்திடும் இந்த இனிய தீபாவளித் திருநாளில் உங்கள் விருப்பங்கள்
எல்லாம் கைகூடி வந்து
என்றென்றும் சந்தோசமாக இருக்க வாழ்த்துக்கள்..
தித்திக்கட்டும் இனிய தீபாவளி உங்கள் வாழ்க்கையில்

Anonymous said...

அவங்க வீடலேல்லாம் மின் வெட்டு கிடையாது சார்...

Rathnavel Natarajan said...

அருமையான பதிவு.
சென்னையில் இரண்டு மணி நேரம் தான் மின்வெட்டு. சென்னை தவிர எல்லா இடங்களும் இரண்டு மணி நேரங்கள் தான் மின்சாரம் இருக்கிறது. ஏன் இந்த பாகுபாடு? எல்லோரும் செத்துக் கொண்டிருக்கிறார்கள். இருண்ட காலத்தில் இருக்கிறோம்.
இந்த பதிவை எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
நன்றி திரு ஜோதிஜி.