"தமிழர்களுக்கு இனி தனி ஈழம் தான் தீர்வாக இருக்கும்" என்று தீர்மானமாய் சொன்னது பிரபாகரன் அல்ல.
இதன் வித்து இலங்கை என்ற நாடு ஆங்கிலேயர்களிடமிருந்து சுதந்திரம் பெறுவதற்கு முன்பே உருவானது. தமிழர்களில் முதல் தலைமுறை தலைவரான அருணாச்சலம் உருவாக்கியது ஆகும்.
அவர் தனி ஈழம் என்று தான் தொடக்கத்தில் சொன்னார். அதுவே தமிழீழம் என்று பின்னால் மாறியது.
அருணாச்சலம் படித்தவர், பண்பாளர், சட்ட மேதை ஆனால் வெகுஜன ஆதரவு பூஜ்யம். அவர் வாழ்ந்த வாழ்க்கை முழுக்க கொழும்புவிலும் மேல்தட்டு மக்களுடன் இருந்த காரணத்தால் கடைசி வரைக்கும் மக்கள் ஆதரவென்பது அவருக்கு எட்டாக்கனியாக இருந்தது. இறுதியில் அவர் கொள்கைகளும் கொலையாகி வெகுஜன ஆதரவு இல்லாமல் மறைந்தும் போனது.
அருணாச்சலம் முதன் முதலாக உருவாக்கிய இலங்கை தேசிய காங்கிரஸ் சிங்களர்களின் கைக்கு போன போதே அச்சத்துடன் எதிர்காலத்தில் இனி சிங்களர்களுடன் தமிழினம் சேர்ந்து வாழ முடியாது என்றார். அப்போது இலங்கை சுதந்திரம் பெறுவதற்கு கால் நூற்றாண்டு காலம் இருந்தது. அவராலும் முடியாமல் அவர் சகோதரர் இராமநாதன் முயற்சியும் தோல்வியாகி கைகள் மாறி கடைசியில் 1972 ஆம் ஆண்டில் செல்வநாயகம் மனம் நொந்து போய் சொல்லும் அளவிற்கு வந்து நின்றது. இதையே பிரபாகரன் உரத்துச் சொன்ன போது மற்றவர்களால் வினோதமாக பார்க்கப்பட்டது.
சர்வதேச அரசியல் புரியாமல் இதென்ன அடம் என்பதாக இன்று வரைக்கும் பேசப்படுகிறது. அருணாச்சலம் புத்தியால் ஜெயிக்க முடியாமல் செல்வநாயகம் சக்தியாலும் வெல்ல முடியாமல் கடைசியில் பிரபாகரன் பலத்தாலும் வெல்ல முடியாமல் கலவரங்களும், யுத்தங்களும் தொடர்ச்சியாக வந்து மொத்த தமிழர்களின் உயிரும் உடைமையும் இழந்து இன்று நாங்களும் வாழ்ந்தால் போதும் என்கிற அளவிற்கு வந்து நிற்கின்றது.
இதுவே இன்று இலங்கையில் உயிர்பிழைத்தவர்கள் நான் தமிழர் என்று சொல்ல பயந்து வாழும் நிலைமைக்கு கொண்டு வந்துள்ளது. தொடக்க காலத்தில் அருணாச்சலமும், இவர் சகோதரர் இராமநாதனும் எழுதியுள்ள புத்தகங்கள் தமிழர்களுக்கு மட்டுமல்ல இன்று வரைக்கும் சிங்களர்களுக்கே பாடபுத்தகங்கள்.
சிங்களர்களுக்கு அரசியலை கற்றுக்கொடுத்தவர்கள் மறைந்து கிடைத்து இருக்க வேண்டிய மரியாதையின்றி இறந்தும் போனார்கள்.
இவர்களிடம் கற்று கொண்ட மாணவர்கள் ஆட்சியாளர்களாகவும் மாறி சிங்கள இனவாதத்தின் ராஜாவாகவும் மாறிப் போனது சரித்திர ஆச்சரியங்கள்.
தங்களுக்கு சிறப்பாக கற்றுக்கொடுத்தவர்களின் பெயர்களை இன்று அவலமாய் வந்து நின்ற தமிழர்களுக்கு உருவாக்கப்பட்ட திறந்த வெளி முகாம்க்கு சூட்டப்படும் நன்றிக்கடனையையும் தீர்த்துள்ளார்கள். வாழ்ந்து சென்ற தமிழ் தலைவர்களின் அதிர்ஷ்டம் அவ்வளவு தான்.
அருணாச்சலம் முகாம், இராமநாதன் முகாம், ஆனந்த குமாரசாமி முகாம் என்று உருவாக்கப்பட்டது. மொத்த இலங்கை மக்களும் நினைவில் கொள்ளத்தக்க வகையில் வாழ்ந்தவர்களின் வாழ்க்கைப் பெயர்கள் இன்று நிர்க்கதியாய் நிற்பவர்கள் வாழ்க்கை உதவியாய் உள்ளது என்பது பெரும் சரித்திர சோகம்.
பிரபாகரன் இவர்களைப் போல படித்தவரோ, பட்டம் வாங்கியவரோ அல்லது புத்தகங்கள் எழுதியவரோ அல்ல. அத்தி பூத்தாற் போல கொடுத்த ஊடக பேட்டிகளும் வருடந்தோறும் உரையாற்றிய மாவீரர் தின பேச்சுகளுமே அவரைப் பற்றி அவரின் கொள்கைகளையும் நம்மால் ஓரளவிற்கு புரிந்து கொள்ள முடியும்.
போர் வெறியர்,மன நோயாளி,புதிய தலைமுறைக்கு பயங்கரவாதத்தை கற்றுக்கொடுத்தவர், உலகத்திற்கு மனித வெடிகுண்டு என்பதை அறிமுகம் செய்தவர் என்று சொல்லப்படுவரின் நியாய வாதங்கள் எதுவும் இன்று எவர் காதிலும் போய் விழாது.
பிரபாகரன் செய்த சாதனைகள் ஒவ்வொன்றும் இவருக்கு முந்தைய தலைமுறை தலைவர்கள் எவரும் செய்யாதது மட்டுமல்ல. நினைத்தே பார்க்க முடியாதது.
அவர்கள் ஜனநாயகம் காட்டிய வழியில் சென்று தங்களை நம்பியிருந்த வழிகாட்டாமல் மறைந்தவர்கள். இவரோ தான் கொண்ட கொள்கை சரி என்று நம்பி அதையே செய்தும் காட்டியவர். தன்னுடைய தன்னம்பிக்கை மட்டுமே வழி காட்டும் என்று கடைசிவரையிலும் கொண்ட கொள்கையில் பிடிவாதமாய் உறுதியாய் நின்றவர்
அரசியல் தெரியாதவர் என்று சொல்லப்படுபவர்கள் பிரபாகரனின் மாவீரர் தின உரைகளை படித்துப் பார்த்தாலே அவர் தன் வாழ்நாளில் நம்பிக்கைகளும், அவமானங்களுக்கும் இடையே போராடிப் பார்த்த அத்தனை நிகழ்வுகளையும் நமக்கு புரியவைக்கும். பிரபாகரன் உருவாக்கிய தமிழீழத்தின் சமூக கட்டமைப்பு வெளி உலகத்தால் அதிகம் பார்க்கப்படாத பார்வைகள்.,
நான்கு புறமும் நீர் என்பதான தீவில் எட்டு புறமும் எதிரிகளாக இருந்தவர்களுடன் வாழ்ந்தவர் உருவாக்கிய ஒவ்வொன்றும் கடைசியில் அவரைப் போலவே இன்று கேள்விக்குறியாய் சூன்யத்தில் நிற்கிறது?
1985 ஆம் ஆண்டு தமிழர் புனர்வாழ்வு கழகம் தொடங்கப்பட்டது. போரினால் பாதிக்கப்பட்டு வறுமை நிலைமைக்குத் தள்ளப்பட்ட மக்களுக்கும், சொந்த இடங்களை விட்டு விட்டு வாழ்ந்து கொண்டுருப்பவர்களுக்கும், அகதி முகாமில் ஆதரவற்று இருந்தவர்களுக்கும், தற்காலிக குடிசைகளிலும் இருந்தவர்களை இனம் கண்டு அவர்களை அரவணைத்து வாழ்க்கை கொடுப்பது இதன் கடமையாக இருந்தது. இதன் உருவாக்கத்திறகு முன்னதாக புலிகளின் ஊடகப்பிரிவு செயல்படத் தொடங்கியது.
முதலில் வானொலியில் ஆரம்பித்து இறுதியில் தொலைக்காட்சி சேவை வரைக்கும் கொண்டு வந்தார்கள். மிகுதியான பால் உணர்வை தூண்டும் காட்சிகளை தணிக்கை செய்யப்பட்டு அத்துடன் செய்தி அறிக்கைகள், நடப்பு நிகழ்வுகளை துல்லியமாக காட்டும் அளவிற்கு கடைசி வரைக்கும் தொடர்ந்து தமிழீழத்தில் ஒலிபரப்பு சேவை நடத்தப்பட்டது. இந்திய அமைதிப்படை உள்ளே நுழைந்த போது முதலில் தாக்கப்பட்டது இந்த வானொலி சேவையே ஆகும்.
யுத்தத்தினால் பெற்றோரை, பாதுகாவலர்களை இழந்த பெண் பிள்ளைகளின் பராமரிப்புக்காக செஞ்சோலை சிறுவர் இல்லம். 1991 இல் தொடங்கப்பட்டது. அதனை தொடர்ந்து போரில் பெற்றோரை இழந்த ஆண் பிள்ளைகளை பாதுகாக்க 1993 ஆம் ஆண்டு. காந்த ரூபன் அறிவுச்சோலை தொடங்கப்பட்டது. வெற்றிமனை என்ற அமைப்பின் மூலம் நடந்த போர்கள் மூலம் கண் முன்னால் உறவுகளை பறி கொடுத்து அடைந்த மன அழுத்தங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், மனநிலை பாதிக்கப்பட்ட வர்களுக்கும் உயரிய சிகிச்சை அளித்து அவர்களை பராமரித்து மறுவாழ்வு அளிப்பதற்காக உருவாக்கப்பட்டது.
மூதாளர் பேணகம் என்ற அமைப்பின் மூலம் போரினால் தமது பிள்கைளை இழந்து ஆதரவற்ற நிலைக்கு தள்ளப்பட்ட முதியோரையும், சொந்த பந்தம் இல்லாமல் இருப்பவர்களையும், உறவினர்கள் இருந்தும் கைவிடப்பட்ட முதியோர்களையும் பாதுகாக்க உருவாக்கப்பட்டது 1992 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் கலை பண்பாட்டுக் கழகம் என்ற அமைப்பின் மூலம் தமிழர்களின் தமிழ் மொழியையும் அழிந்து கொண்டுருக்கும் கலை மற்றும் பண்பாடுகளையும் மீட்டெடுப்பதற்காக உருவாக்கப்பட்டது.
தியாகி திலீபன் மருத்துவ சேவையின் மூலம் அரசாங்கம் உருவாக்கிய தடைகளை மீறி ஒவ்வொரு கால கட்டத்திலும் உருவாக்கிய மருத்துவமனைகள் மூலம் அத்யாவஸ்யமான மருந்துப் பொருட்களை வரவழைத்தும், பயிற்சியளிக்கப்பட்ட போராளிகள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது. தமிழீழ படைத்துறைப் பள்ளியின் மூலம் வளர்ந்து கொண்டுருக்கும் இளையர் கூட்டம் போரினால் அவர்களின் கல்வி பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக உருவாக்கப்பட்டது.
தமிழீழ பொருண்மிய மேம்பாட்டுக் கழகமும், இதனைத் தொடர்ந்து 1993 ஆம் ஆண்டு தமிழீழ சட்டக் கல்லூரி உருவாக்கப்பட்டது. இதே ஆண்டில் பொதுக்கல்வி தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களைப் பாராட்டி வருடந்தோறும் பரிசு வழங்க தமிழீழக் கல்வி மேம்பாட்டுப் பேரவை தொடங்கப்பட்டது. 1994 ஆம் ஆண்டு தமிழீழத்தின் பொருளாதாரக் கட்டமைப்பை வலுப்படுத்துவதற்காக வேளாண்மையும் கைத்தொழிலையும் உருவாக்கி சிறப்பானவர்களுக்கு பரிசு கொடுத்து சிறப்பிக்க உருவாக்கப்பட்டது. .
மக்களின் வங்கி சேவைக்காக தமிழீழ வைப்பகம் சட்டத் தேவைகளுக்காக தமிழீழ நீதி நிர்வாகத்துறை, நகர் நிர்வாகத்திற்காக தமிழீழ காவல் துறை இது போக மாணவர்களுக்கென்று விளையாட்டுத் துறையும் தொடங்கப்பட்டது. மொத்தத்தில் தமிழீழ பகுதிகளில் வாழ்ந்த மக்களின் பொருளாதார சமூக கட்டமைப்புத் துறையில் அதிக கவனம் செலுத்தப்பட்டது.
பிரபாகரன் உரையாற்றிய மாவீரர் உரைகள் என்பது பல விதங்களில் பயன் உள்ளதாக இருந்தது. போரில் இறந்த வீரர்களுக்கு கௌரவம் செலுத்தும் விதமாக அதே சமயத்தில் தமிழ் மக்களுக்கு தமிழீழ விடுதலைப்புலிகளின் நோக்கத்தையும், சர்வதேச சமூகத்திற்கு புலிகள் இயக்கம் விடுக்கும் கோரிக்கை என்பதாக பல தளங்களில் விவாதப் பொருளாக அணைவராலும் உற்று கவனிக்கக் கூடிய வகையில் இருந்தது.
பிரபாகரனின் நோக்கத்தையும் விருப்பத்தையும் தனிப்பட்ட கொள்கைகளையும் புரிந்து கொள்வதாகவும் இருந்தது.
சங்கர் இறந்த தினமாக நவம்பர் 27 என்பதை கணக்கில் கொண்டு மாவீரர் தினம் என்று உருவாக்கப்பட்டு முதன் முதலாக இந்திய அமைதிப்படை இலங்கையில் இருந்து கடைசிகட்ட உக்கிர தாக்குதல்கள் நடத்தப்பட்ட போது இனம் தெரியாத அடர்ந்த காட்டில் இருந்து கொண்டு உரையாற்றிய பிரபாகரனின் உரை என்பது 2008 வரைக்கும் 19 வருடங்கள் தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் குறிப்பிட்ட அதே தினத்தில் ஒலிபரப்பப்பட்டது.
உலக ஊடகங்களும், உலகத்தமிழர்களும் ஏன் சிங்கள ஆட்சியாளர்களுமே இதை வைத்து தான் புலிகளின் அடுத்த கட்ட நகர்வை புரிந்து கொள்ளும் அளவிற்கு இருந்தது.
மொத்த 19 வருட உரைகளின் மூலம் நம்பிக்கைகளுக்கும் விருப்பங்களுக்கும் இடையே போராட்டங்களும், ஒவ்வொரு கால கட்டத்திலும் தான் மாறத் தயாராய் இருந்த போதும் மதிக்காத சிங்கள ஆட்சியாளர்களின் மேல் இருந்த அவநம்பிக்கையின் ஊசலாட்டத்தையும் நமக்கு பல விதமாக புரிய வைக்கின்றது. பிரபாகரன் முதல் மாவீரர் உரை தொடங்கிய போது புலிகளின் அதிகாரப்பூர்வமான இறந்தவர்களின் எண்ணிக்கை 1207 பேர்கள்.. இதுவே 19 வருடங்களுக்குப் பிறகு 17,903 பேர்கள் இறந்ததாக மாவீரர் தின உரையில் குறிப்பிட்டார்.
"ஓர் இனத்தை பொறுத்தவரையிலும் வீரர்களை, பெண்களை, அறிவாளிகளையும் மதிக்காத இனம் காட்டுமிராண்டியாக அழிந்து விடும். எமது இயக்கத்தில் இப்போது வீரர்களுக்கு பஞ்சமாக இருக்கிறது. எமது போராளிகளை நினைவு கூறும் தினத்தை ஒரே நாளில் வைப்பதால் வீரச்சாவு அடைந்த மேல்மட்ட தலைவர்கள் முதல் அடிப்படையான வீரர்களை வரை ஒரே மாதிரி நினைவு கொள்ளப்படுகிறார்கள். காலப்போக்கில் குறிப்பிட்ட சில சில ஆட்களுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு அந்த மரியாதை சிலருக்கு மட்டும் போவதை தடுப்பதற்காக இதை வருடந்தோறும் கொண்டாடப் போகிறோம்."
"நான் உயிருக்கு உயிராய் நேசித்த தோழர்கள், என்னுடன் தோளோடு தோள் நின்று போராடிய தளபதிகள், நான் பல்லாண்டு காலமாக வளர்த்தெடுத்த போராளிகள் களத்தில் விழ்ந்த போதெல்லாம் எனது இதய்ம் வெடிக்கும். ஆயினும் சோகத்தால் நான் சோர்ந்து போவதில்லை. இந்த இழப்புகள் எனது இலட்சிய உறுதிக்கு மேலும் மேலும் உரமூட்டி இருக்கின்றன"
"நாம் இனத்துவேசிகள் அல்லர். போர்வெறி கொண்ட வன்முறையாளர்களும் அல்லர். நாம் சிங்கள மக்களை எதிரிகளாவோ விரோதிகளாகவே கருதவில்லை. நாம் சிங்கள தேசத்தை அங்கீகரிக்கின்றோம். சிங்களப் பண்பாட்டை கௌரவிக்கின்றோம். சிங்கள மக்களின் தேசிய வாழ்வில் அவர்களது சுதந்திரத்தில் நாம் எவ்விதமும் தலையிட விரும்பவில்லை".
"நாம் எமது வரலாற்றுத் தாயகத்தில் ஒரு தேசிய மக்களினம் என்ற அந்தஸ்துடன் நிம்தியாக சுதந்திரமாக கௌரவமாக வாழ விரும்புகிறோம். எம்மை நிம்மதியாக வாழவிடுங்கள் என்பது தான் எமது மக்களின் எளிமையான அரசியல் அபிலாஷைகள். இந்த நியாயமான நீதியான நாகரிகமான எமது மக்களின் வேண்டுகொளை சிங்கள அரசு எப்போது அங்கீகரிகரிக்கின்றதோ அப்போதுதான் ஒரு நிரந்தர சமாதானமும் தீர்வும் ஏற்பட வாய்ப்பு உண்டு."
"ஆயுத பலத்தால் தமிழீனத்தை அடக்கி ஆள வேண்டும் என்றும், சிங்கள பௌத்த பேரின வாதத்தின் ஆதிக்க மனோநிலையில் சிறிதளவேனும் மாற்றம் எதுவும் நிகழ்ந்து விடவில்லை. இனத்துவேச அரசியல் சேற்றில் சிங்கள தேசம் மூழ்கிக் கிடக்கும் வரை தமிழரின் தேசிய அபிலாசைகள் பூர்த்தியாகது. நீதியான நியாயமான அரசியல் தீர்வை நாம் சிங்கள ஆளும் வார்க்கத்திடம் இருந்தது எதிர்பார்கக முடியாது."
"மனித நீதி எனும் அச்சில் இவ்வுலகம் சுழவில்லை என்பதை நாம் அறிவோம். இவ்வுலகில் உள்ள ஒவ்வொரு நாடும் தங்கள் பக்கமுள்ள நியாயங்களை முன் வைக்கிறது. இவ்வுலகில் ஓழுங்கு அமைப்பை பொருளாதார மற்றும் வணிக நலன்களே தீர்மானிக்கின்றன. இன்றோ சார் நீதியிலோ மக்களின் உரிமை சார்ந்தோ நிற்கவில்லை.
நாடுகளுக்கிடையேயான சர்வதேச உறவுகளும் அரசியல் நெறிகளும் இத்தகைய நல்களைச் சார்ந்தே தீர்மானிக்கபடுகின்றன. எனவே எங்களது அறம் சார்ந்த நியாயங்கள் உடனடியாக சர்வதேச சமகத்தான் அங்கிகரிக்கபடும் என் எதிர் பார்க்க முடியாது. ஆனால் அதே நேரம் அந்த அங்கீகாரத்திற்காக போராடியே ஆக வேண்டும். உலகில் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன."
"சமாதானத்திற்கான போர் என்றும் தமிழரை விடுதலை செய்யும் படையெடுப்பு என்றும் பரப்புரை செய்து ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆக்கிரமிப்புப் போர் தமிழரின் அமைதியக் குலைத்து தமிழரை அகதிகளாக்கி தமிழரை அடிமைகளாக்கி தமிழரின் சமூக பொருளாதார வாழ்வைச் சீரழித்து தமிழருக்கும் என்றுமில்லாத பெரும் அவலத்தை கொடுத்து இருக்கிறது.
சமாதானத் தத்துவம் பேசி உலகத்தை ஏமாற்றிய போதும் இது தமிழருக்கு எதிரான போர் என்பதை அரசு நடையில் காட்டியுள்ளது. இராணுவ ஆட்சி நடைபெறும் தமிழ் பகுதிகளில் மிக மோசமான ஒரு இன அழிப்புக் கொள்கை மறைமுகமாக செயற்படுகிறது என்பதையே இது காட்டுகிறது."
"நாம் சமாதானத்திற்கான விரோதிகள் அல்லர். அன்றி சமாதான வழியில் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு எதிரானவர்களும் அல்லர். தாம் வேண்டுவது உண்மையான சமாதானத்தையே. எமது மக்கள் எமது மண்ணில் நிம்மதியாக சுதந்திரமாக அந்நியத் தலையீட இன்றி அமைதியாக வாழ்ந்து தமிழ் அரசியல் வாழ்வைத் தாமே தீர்மானிக்ககூடிய உண்மையான கொளரவமான நிரந்தரமான சமாதானத்தையே நாம் விரும்புகின்றோம். இந்த சமாதான வாழ்க்வை தமிழருக்கு வழங்க சிங்கள பெயத்த பேரினவாத சக்திகள் இனங்குமா என்பது சந்தேகத்திற்கு உரியதே."
"தமிழரின் தாயகம், தமிழரின் தேசியம், தமிழரின் தன்னாட்சி உரிமை ஆகியவற்றை அங்கீகரித்து அவற்றின் அடிப்படையில் ஒரு அரசியற் தீர்வுத் திட்டம் வகுப்பட வேண்டுமென்ற நாம் திம்புக் காலத்தில் இருந்து வலியுறுத்தி வருகிறோம்."
"சிங்களம் ஒரு பெளத்த நாடு. அன்பையும் அறத்தையும் ஆன்மீக ஞானத்தையும் போதித்த காருணிய மகானை வழிபடும் தேசம். தர்மத்தின் தத்துவத்தில் தழைத்த பௌத்த சமகத்தில் இனக்குரோதமும் போர் வெறியும் விஸ்வரூபம் பெற்று நிற்பது எமக்கு வியப்பாக இருக்கிறது. தமிழர் தேசம் போதையும் வன்முறையையும் விரும்பவில்லை. அமைதி வழியில் அகிம்சை வழியில் தர்மத்தை வேண்டி நின்ற எமது மக்கள் மீது வன்முறைத் திணித்தவர்கள் யார்?
நாம் எமது உயிரையும் உடைமையும் பாதுகாக்க ஆயுதமேந்தி போராட வேண்டிய நிர்பபந்த சூழ்நிலையை உருவாக்கிய விட்டவர்கள் யார்? சிங்கள பௌத்த தீவிரவாதமே தமிழர்களை ஆயுதபாணிகளாக்கி தேச சுதந்திர போராட்டத்தில் குதிக்க வைத்தது."
"ஆட்பலம், ஆயுதபலம், இராணுவ பலம், மக்கள் பலம் என்கிற ரீதியில் சகல பலத்தோடு நாம் வலுப்பெற்று நின்ற போதும் எமது தாயகத்தை மீட்டெடுக்கும் போதிய சக்தி இருந்த போதும் நாம் சமாதான பாதையை கைவிடவில்லை. உயிர் அழிவையும் இரத்தக் களரியையும் தவிர்த்து சமாதான வழியில் நாகரிகமான முறையில் தமிழரின் சிக்கலை தீர்ககவே நாம் விரும்புகிறோம்."
"தமிழர் தாயகத்தில் அமைதி நிலை தோன்றினாலும் இயல்புநிலை தோன்றவில்லை. உயர் பாதுகாப்பு வளையங்கள் என்ற போர்வையில் எமது மக்களின் வாழ்விடங்களை சமூக பொருளாதர பண்பாட்டு மையங்களை சிங்கள ஆயுதப் படைகள் ஆக்கிரமித்து நிற்கின்றன. சிறிய அளவிலான புவியற் பரப்பில் குடிசன நெரிசலும் கொண்ட யாழ்பாணக் குடாநாட்டை 40 000 படைகள் ஆக்ரமித்து நிற்கின்றனர். எமது மக்கள் தமது இயல்பபு வாழ்க்கை நடத்த முடியாதவாறு மூச்சுத் திணறும் ஆக்கிரமிப்பு என்றுமே பதட்ட நிலையைத்தான உருவாக்குகின்றது.".
"பேச்சு வார்த்தைகளின் தொடக்கத்திலேயே எமது மக்களின் அடிப்படை பிரச்சனைகளை ஆரம்பித்தலேயே தீர்த்து விட வேண்டும் என்பதே எங்கள் தலையாய கோரிக்ககை."
"முடிவில்லாத ஒரு துன்பியல் நாடகமாகத் தமிழரின் இனப் பிரச்சனை தொடர்கிறது. எமது பிரச்சினைக்குத் தீர்வு காண ஆளும் கட்சி முயற்சிப்பதும் எதிர்ககட்சி எதிர்பபதும் பின்பு எதிர்க்கட்சி ஆளுங்கட்சியாக மாறி மீண்டு அதே முயற்சியும் அதே எதிர்ப்புமாக இந்த சிங்கள அரசியல் வரலாற்று நாடகம் தொடர்ச்சியாக ஒரே பாணியில் கடந்த 50 வருடங்களுக்கு மேலாக மேடையேறி வருகிறது."
"இடைக்கால தீர்வுமின்றி நிரந்தர தீர்வுமின்றி நிலையான அமைதியும் இல்லாமல் நிம்மதியான வாழ்வும் இன்றி நாம் அரசியல் வெறுமைக்குள் தொடர்ந்தும் சிறைபட்டுக் கிடக்க முடியாது. சிங்கள தேசமானது தமிழனத்தை அரவணைத்து இணைத்து வாழவும் விரும்பவில்லை. அதே சமயம் அரவணைத்து இணைத்து வாழவும் விருப்பமில்லை. அதே சமயம் பிரிந்து சென்று தனித்து வாழவும் விடுவதாக இல்லை.
இரண்டுங் கெட்டான் நிலையில் வீடின்றி விடுதலையின்றி எதிர்காலச் சுபிட்சமின்றி சூனியமாக அரசியல் இருட்டுக்குள் நாம் தொடர்ந்து வாழ முடியாது. பொறுமைக்கும் எதிர்பார்ப்புக்கும் எல்லை கோடுகளுள்ளன. அந்த எல்லைக் கோடுகளை நாம் அடைந்து விட்டோம்."
"பண்டைய இதிகாசங்கள் புனைந்து விட்ட புரளிகளால் சிங்கள இனம் வழி தவறி சென்று கொண்டுருக்கிறது. தொடர்ந்தும் பேரினவாதச் சகதிக்குள் வீழ்ந்து கிடக்ககிறது. இதனால் சிங்கள பௌத்த பேரினவாதம் இன்றோரு தேசியச் சித்தாந்தமாக சிங்கள தேசத்தில் மேலாதிக்கம் செலுத்தி வருகிறது.
இந்த கருத்தாக்கம் பாடசாலைகள் பல்கலைக்கழங்களில் இருந்தும் பத்திரிக்கை துறை வரை ஊடுருவி நிற்கிறது. மாணவர்களோ, புத்திஜீவிகளோ, எழுத்தாளர்களோ அரசியல்வாதிகளோ சுயமாகச் சிந்திக்க முடியாதபடி சிங்கள மூலத்தை இந்த கருத்தாக்கம் சிறைப்பிடித்து வைத்து இருக்கிறது. பௌத்த பேரினவாதக் கருத்துக்கள் சிங்கள மனிதனின் மன அமைப்பின் ஆழத்தில் அழியாத கோடுகளாக பொறித்து விடப்பட்டு இருக்கின்றன. இதனால் சிங்கள தேசம் போர் வெறி பிடித்து போர் முரசு கொட்டுகிறது."
"பௌத்தம் ஒர் ஆழமான ஆன்மிகத் தரிசனம். அன்பையும் அறத்தையும் ஆசைகள் அற்ற பற்றற்ற வாழ்வையும் தர்மத்தையும் வலியுறுத்தி நிற்கும் தார்மிகத் தத்துவம். இந்த தார்மீக நெறியை 2000 ஆண்டுகளுக்கு மேல் கடைபிடிப்பதாக கூறிக்கொள்ளும் சிங்களம் 2000 ஆண்டுகளுக்கு மேலாக இனவாத விசத்தினுள் மூழ்கிக் கிடக்கிறது. சிங்கள இனவாத விசம் இன்று மிருகத்தனமாக வன்முறையாகக் கோரத்தாண்வம் ஆடுகிறது.
60 ஆண்டுகளாக வன்முறையற்ற அகிம்ச வழியிலும் ஆயுதவழியிலும் தமிழர் நீதிகேட்ட சிங்கள உலகிலே சிறிதும் மனமாற்றம் நிகழவில்லை. எத்தனையோ இழப்புகள், அழிவுகள், எண்ணற்ற உயிர்பலிகள் நிகழ்ந்த போதும் சிங்கள தேசம் மனம் திருந்தவில்லை. இதற்கு சர்வதேச சமூகத்தின் பொருளாதார இராணுவ உதவிகளும் அரசியல் தார்மீக ஆதரவும் இராஜதந்திர முண்டு கொடுப்புகளும் ஒரு பக்கச் சார்பாக தலையீடுகளும் தான் காரணம்."
"எத்தனை சவால்களுக்கு முகம் கொடுத்தாலும் எத்தனை இடையூறுகளை எதிர் கொண்டாலும் எத்தனை சக்திகள் எதிர்த்து நின்றாலும் நாம் தமிழரின் சுதந்திரத்திற்காக போராடுவோம். வரலாறு விட்ட வழியில் காலம் இட்ட கட்டளைப்படி சிங்கள ஆக்கிரமிப்பு அகலும் வரை நாம் தொடர்ந்து போராடுவோம்."
"எங்கள் காலத்தில் எங்கள் லட்சியத்தை அடைந்து விடுவோம் என்பதைவிட நியாயமான தீர்வுகள் எட்டப்படாதவரைக்கும் இந்த போராட்டம் அடுத்து வருபவர்கள் முன்னெடுத்து செல்வார்கள்."
தமிழீழம் பிரபாகரன் கதையா? என்று நான் எழுதியதில் இருந்து எடுக்கப்பட்ட பகுதி இது.
வேலுப்பிள்ளை பிரபாகரன் பேசிய மாவீரர் உரைகளை அடிப்படையாகக் கொண்டு தொகுக்கப் பட்ட கட்டுரை இது.
பிரபாரகன் குறித்து அவரின் தனிப்பட்ட கொள்கைகள் குறித்து கடந்து வந்து பாதைகளில் பெற்ற அனுபவங்களின் தொகுப்புக்கு இங்கே சொடுக்கவும்.
வருடந்தோறும் வே. பிரபாகரன் அவர்களின் பிறந்த தினமான (26 நவம்பர்) இந்த நாளில் வெளியிடப்படும் மீள் பதிவு இது.
7 comments:
மிக அருமையான பதிவு
தினபதிவு திரட்டியில் இன்று அட்ராசக்க -சி.பி. செந்தில்குமார் சிறப்பு பேட்டி
http://www.dinapathivu.com/
தினபதிவு திரட்டி
ஜோதிஜி,
மீள்ப்பதிவா,நான் இப்போழுது தான் முதன் முறையாகப்படிக்கிறேன்.
ஈழப்பிரச்சினையை நீங்களும் உணர்வுப்பூர்வமாக தான் புரிந்து கொண்டிருக்கிறீர்கள் எனத்தெரிகிறது.
இலங்கையில் தமிழர்கள் இந்நிலைக்கு ஆளாக முதல் காரணம் இலங்கை தமிழர்களே, அவர்கள் இந்திய தமிழர்கள்,இலங்கை தமிழர்கள் எனப்பிரித்து, இலங்கை சுதந்திரம் அடைந்த போது இந்திய தமிழர்கள் எனப்பட்டோருக்கு குடியுரிமை கொடுக்க்க்கூடாது என சொன்னதில் இருந்தே , சரிவு துவங்கிவிட்டது.
இப்பொழுதும் இலங்கை தமிழர்கள் ,ஈழத்தமிழர்கள் என இரண்டாக நிற்கிறார்கள்.தொப்புள் கொடி உறவு என்பதெல்லாம் ஒரு பேச்சுக்கு தான்.
இலங்கைல் உள்ள தமிழர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்தே வருகிறது , அப்படி இருக்க தனி ஈழம் எப்படி சாத்தியம் ஆகும், வெளிநாட்டுக்கு குடிப்போன மக்கள் எல்லாம் இலங்கைக்கே மீண்டும் வந்தால் தான் தனி ஈழக்கோரிக்கை வலுப்பெறும்,ஆனால் அப்படி செய்ய மாட்டார்கள்.
இருக்கும் சொற்ப மக்களுக்கு தனி ஈழம் கொடுக்கவும் மாட்டார்கள்.தனி மாநிலம், இந்தியா போல கூட்டாட்சி எனத்தான் போக முடியும்.
வருத்தமான உண்மைகள்.
எல்லாமே எனக்கு புதிய செய்தியாகவே தெரிகிறது. அத்தினையும் உண்மைகளானால் இதற்கிடையில் மாபெரும் விளையாட்டை நடுத்தி வருகிறார்கள்.
சில செய்திகள் மனதுக்கு வருத்தமளிக்கிறது.
அருமையான பகிர்வுக்கு நன்றி சார்.
இன்றைய நிதர்சனம் - ஈழத்தமிழர்கள் வாழ்விழந்து நிற்கிறார்கள். அவர்கள் வாழ்வார்களா அல்லது அழிவார்களா என்பதை வருங்காலம்தான் சொல்லும். ஒன்று மட்டும் புரிகிறது. அவர்களுக்கு நம்பிக்கை கரம் கொடுக்க யாருமில்லை.
எதார்த்தம் சுடுகின்றது.
ஈழத் தமிழர்களின் வாழ்க்கை முழுக்கவே வருத்தங்கள் தானே.
Post a Comment