Showing posts with label இலங்கை. Show all posts
Showing posts with label இலங்கை. Show all posts

Monday, November 26, 2012

வேலுப்பிள்ளை பிரபாகரன் --தமிழீழம் என்றொரு பிரதேசம் (26.11.2012)


 "தமிழர்களுக்கு இனி தனி ஈழம் தான் தீர்வாக இருக்கும்" என்று தீர்மானமாய் சொன்னது பிரபாகரன் அல்ல. 

இதன் வித்து இலங்கை என்ற நாடு ஆங்கிலேயர்களிடமிருந்து சுதந்திரம் பெறுவதற்கு முன்பே உருவானது.  தமிழர்களில் முதல் தலைமுறை தலைவரான அருணாச்சலம்  உருவாக்கியது ஆகும். 


அவர் தனி ஈழம் என்று தான் தொடக்கத்தில் சொன்னார். அதுவே தமிழீழம் என்று பின்னால் மாறியது.  

அருணாச்சலம் படித்தவர், பண்பாளர், சட்ட மேதை ஆனால் வெகுஜன ஆதரவு பூஜ்யம்.  அவர் வாழ்ந்த வாழ்க்கை முழுக்க கொழும்புவிலும் மேல்தட்டு மக்களுடன் இருந்த காரணத்தால் கடைசி வரைக்கும் மக்கள் ஆதரவென்பது அவருக்கு எட்டாக்கனியாக இருந்தது. இறுதியில் அவர் கொள்கைகளும் கொலையாகி வெகுஜன ஆதரவு இல்லாமல் மறைந்தும் போனது.

அருணாச்சலம் முதன் முதலாக உருவாக்கிய இலங்கை தேசிய காங்கிரஸ் சிங்களர்களின் கைக்கு போன போதே அச்சத்துடன் எதிர்காலத்தில் இனி சிங்களர்களுடன் தமிழினம் சேர்ந்து வாழ முடியாது என்றார்.  அப்போது இலங்கை சுதந்திரம் பெறுவதற்கு கால் நூற்றாண்டு காலம் இருந்தது. அவராலும் முடியாமல் அவர் சகோதரர் இராமநாதன் முயற்சியும் தோல்வியாகி கைகள் மாறி கடைசியில் 1972 ஆம் ஆண்டில் செல்வநாயகம் மனம் நொந்து போய் சொல்லும் அளவிற்கு வந்து நின்றது. இதையே பிரபாகரன் உரத்துச் சொன்ன போது மற்றவர்களால் வினோதமாக பார்க்கப்பட்டது. 

சர்வதேச அரசியல் புரியாமல் இதென்ன அடம் என்பதாக இன்று வரைக்கும் பேசப்படுகிறது. அருணாச்சலம் புத்தியால் ஜெயிக்க முடியாமல் செல்வநாயகம் சக்தியாலும் வெல்ல முடியாமல் கடைசியில் பிரபாகரன் பலத்தாலும் வெல்ல முடியாமல் கலவரங்களும், யுத்தங்களும்  தொடர்ச்சியாக வந்து மொத்த தமிழர்களின் உயிரும் உடைமையும் இழந்து இன்று நாங்களும் வாழ்ந்தால் போதும் என்கிற அளவிற்கு வந்து நிற்கின்றது. 

இதுவே இன்று இலங்கையில் உயிர்பிழைத்தவர்கள் நான் தமிழர் என்று சொல்ல பயந்து வாழும் நிலைமைக்கு கொண்டு வந்துள்ளது. தொடக்க காலத்தில் அருணாச்சலமும், இவர் சகோதரர் இராமநாதனும் எழுதியுள்ள புத்தகங்கள் தமிழர்களுக்கு மட்டுமல்ல இன்று வரைக்கும் சிங்களர்களுக்கே பாடபுத்தகங்கள். 

சிங்களர்களுக்கு அரசியலை கற்றுக்கொடுத்தவர்கள் மறைந்து கிடைத்து இருக்க வேண்டிய மரியாதையின்றி இறந்தும் போனார்கள். 

இவர்களிடம் கற்று கொண்ட மாணவர்கள் ஆட்சியாளர்களாகவும் மாறி சிங்கள இனவாதத்தின் ராஜாவாகவும் மாறிப் போனது சரித்திர ஆச்சரியங்கள். 

தங்களுக்கு சிறப்பாக கற்றுக்கொடுத்தவர்களின் பெயர்களை இன்று அவலமாய் வந்து நின்ற தமிழர்களுக்கு உருவாக்கப்பட்ட திறந்த வெளி முகாம்க்கு சூட்டப்படும் நன்றிக்கடனையையும் தீர்த்துள்ளார்கள். வாழ்ந்து சென்ற தமிழ் தலைவர்களின் அதிர்ஷ்டம் அவ்வளவு தான். 

அருணாச்சலம் முகாம், இராமநாதன் முகாம், ஆனந்த குமாரசாமி முகாம் என்று உருவாக்கப்பட்டது. மொத்த இலங்கை மக்களும் நினைவில் கொள்ளத்தக்க வகையில் வாழ்ந்தவர்களின் வாழ்க்கைப் பெயர்கள் இன்று நிர்க்கதியாய் நிற்பவர்கள் வாழ்க்கை உதவியாய் உள்ளது என்பது பெரும் சரித்திர சோகம்.

பிரபாகரன் இவர்களைப் போல படித்தவரோ, பட்டம் வாங்கியவரோ அல்லது புத்தகங்கள் எழுதியவரோ அல்ல.  அத்தி பூத்தாற் போல கொடுத்த ஊடக பேட்டிகளும் வருடந்தோறும் உரையாற்றிய மாவீரர் தின பேச்சுகளுமே அவரைப் பற்றி அவரின் கொள்கைகளையும் நம்மால் ஓரளவிற்கு புரிந்து கொள்ள முடியும். 

போர் வெறியர்,மன நோயாளி,புதிய தலைமுறைக்கு பயங்கரவாதத்தை கற்றுக்கொடுத்தவர், உலகத்திற்கு மனித வெடிகுண்டு என்பதை அறிமுகம் செய்தவர் என்று சொல்லப்படுவரின் நியாய வாதங்கள் எதுவும் இன்று எவர் காதிலும் போய் விழாது.

பிரபாகரன் செய்த சாதனைகள் ஒவ்வொன்றும் இவருக்கு முந்தைய தலைமுறை தலைவர்கள் எவரும் செய்யாதது மட்டுமல்ல.  நினைத்தே பார்க்க முடியாதது. 

அவர்கள் ஜனநாயகம் காட்டிய வழியில் சென்று தங்களை நம்பியிருந்த வழிகாட்டாமல் மறைந்தவர்கள்.  இவரோ தான் கொண்ட கொள்கை சரி என்று நம்பி அதையே செய்தும் காட்டியவர். தன்னுடைய தன்னம்பிக்கை மட்டுமே வழி காட்டும் என்று கடைசிவரையிலும் கொண்ட கொள்கையில் பிடிவாதமாய் உறுதியாய் நின்றவர் 


அரசியல் தெரியாதவர் என்று சொல்லப்படுபவர்கள் பிரபாகரனின் மாவீரர் தின உரைகளை படித்துப் பார்த்தாலே அவர் தன் வாழ்நாளில் நம்பிக்கைகளும், அவமானங்களுக்கும் இடையே போராடிப் பார்த்த அத்தனை நிகழ்வுகளையும் நமக்கு புரியவைக்கும். பிரபாகரன் உருவாக்கிய தமிழீழத்தின் சமூக கட்டமைப்பு வெளி உலகத்தால் அதிகம் பார்க்கப்படாத பார்வைகள்.,

நான்கு புறமும் நீர் என்பதான தீவில் எட்டு புறமும் எதிரிகளாக இருந்தவர்களுடன் வாழ்ந்தவர் உருவாக்கிய ஒவ்வொன்றும் கடைசியில் அவரைப் போலவே இன்று கேள்விக்குறியாய் சூன்யத்தில் நிற்கிறது?

1985 ஆம் ஆண்டு தமிழர் புனர்வாழ்வு கழகம் தொடங்கப்பட்டது.  போரினால் பாதிக்கப்பட்டு வறுமை நிலைமைக்குத் தள்ளப்பட்ட மக்களுக்கும், சொந்த இடங்களை விட்டு விட்டு வாழ்ந்து கொண்டுருப்பவர்களுக்கும், அகதி முகாமில் ஆதரவற்று இருந்தவர்களுக்கும், தற்காலிக குடிசைகளிலும் இருந்தவர்களை இனம் கண்டு அவர்களை அரவணைத்து வாழ்க்கை கொடுப்பது இதன் கடமையாக இருந்தது. இதன் உருவாக்கத்திறகு முன்னதாக புலிகளின் ஊடகப்பிரிவு செயல்படத் தொடங்கியது.  

முதலில் வானொலியில் ஆரம்பித்து இறுதியில் தொலைக்காட்சி சேவை வரைக்கும் கொண்டு வந்தார்கள்.  மிகுதியான பால் உணர்வை தூண்டும் காட்சிகளை தணிக்கை செய்யப்பட்டு அத்துடன் செய்தி அறிக்கைகள், நடப்பு நிகழ்வுகளை துல்லியமாக காட்டும் அளவிற்கு கடைசி வரைக்கும் தொடர்ந்து தமிழீழத்தில் ஒலிபரப்பு சேவை நடத்தப்பட்டது.  இந்திய அமைதிப்படை உள்ளே நுழைந்த போது முதலில் தாக்கப்பட்டது இந்த வானொலி சேவையே ஆகும்.

யுத்தத்தினால் பெற்றோரை, பாதுகாவலர்களை இழந்த பெண் பிள்ளைகளின் பராமரிப்புக்காக செஞ்சோலை சிறுவர் இல்லம். 1991 இல் தொடங்கப்பட்டது. அதனை தொடர்ந்து போரில் பெற்றோரை இழந்த ஆண் பிள்ளைகளை பாதுகாக்க 1993 ஆம் ஆண்டு. காந்த ரூபன் அறிவுச்சோலை தொடங்கப்பட்டது. வெற்றிமனை என்ற அமைப்பின் மூலம் நடந்த போர்கள் மூலம் கண் முன்னால் உறவுகளை பறி கொடுத்து அடைந்த மன அழுத்தங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், மனநிலை பாதிக்கப்பட்ட வர்களுக்கும் உயரிய சிகிச்சை அளித்து அவர்களை பராமரித்து மறுவாழ்வு அளிப்பதற்காக உருவாக்கப்பட்டது. 

மூதாளர் பேணகம் என்ற அமைப்பின் மூலம் போரினால் தமது பிள்கைளை இழந்து ஆதரவற்ற நிலைக்கு தள்ளப்பட்ட முதியோரையும், சொந்த பந்தம் இல்லாமல் இருப்பவர்களையும், உறவினர்கள் இருந்தும் கைவிடப்பட்ட முதியோர்களையும் பாதுகாக்க உருவாக்கப்பட்டது  1992 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் கலை பண்பாட்டுக் கழகம் என்ற அமைப்பின் மூலம் தமிழர்களின் தமிழ் மொழியையும் அழிந்து கொண்டுருக்கும் கலை மற்றும் பண்பாடுகளையும் மீட்டெடுப்பதற்காக உருவாக்கப்பட்டது. 


தியாகி திலீபன் மருத்துவ சேவையின் மூலம் அரசாங்கம் உருவாக்கிய தடைகளை மீறி ஒவ்வொரு கால கட்டத்திலும் உருவாக்கிய மருத்துவமனைகள் மூலம் அத்யாவஸ்யமான மருந்துப் பொருட்களை வரவழைத்தும், பயிற்சியளிக்கப்பட்ட போராளிகள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது.  தமிழீழ படைத்துறைப் பள்ளியின் மூலம் வளர்ந்து கொண்டுருக்கும் இளையர் கூட்டம் போரினால் அவர்களின் கல்வி பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக உருவாக்கப்பட்டது.

தமிழீழ பொருண்மிய மேம்பாட்டுக் கழகமும், இதனைத் தொடர்ந்து 1993 ஆம் ஆண்டு தமிழீழ சட்டக் கல்லூரி உருவாக்கப்பட்டது. இதே ஆண்டில் பொதுக்கல்வி தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களைப் பாராட்டி வருடந்தோறும் பரிசு வழங்க தமிழீழக் கல்வி மேம்பாட்டுப் பேரவை தொடங்கப்பட்டது.  1994 ஆம் ஆண்டு தமிழீழத்தின் பொருளாதாரக் கட்டமைப்பை வலுப்படுத்துவதற்காக வேளாண்மையும் கைத்தொழிலையும் உருவாக்கி சிறப்பானவர்களுக்கு பரிசு கொடுத்து சிறப்பிக்க உருவாக்கப்பட்டது. .

மக்களின் வங்கி சேவைக்காக தமிழீழ வைப்பகம் சட்டத் தேவைகளுக்காக தமிழீழ நீதி நிர்வாகத்துறை, நகர் நிர்வாகத்திற்காக தமிழீழ காவல் துறை இது போக மாணவர்களுக்கென்று விளையாட்டுத் துறையும் தொடங்கப்பட்டது.  மொத்தத்தில் தமிழீழ பகுதிகளில் வாழ்ந்த மக்களின் பொருளாதார சமூக கட்டமைப்புத் துறையில் அதிக கவனம் செலுத்தப்பட்டது.

பிரபாகரன் உரையாற்றிய மாவீரர் உரைகள் என்பது பல விதங்களில் பயன் உள்ளதாக இருந்தது. போரில் இறந்த வீரர்களுக்கு கௌரவம் செலுத்தும் விதமாக அதே சமயத்தில் தமிழ் மக்களுக்கு தமிழீழ விடுதலைப்புலிகளின் நோக்கத்தையும், சர்வதேச சமூகத்திற்கு புலிகள் இயக்கம் விடுக்கும் கோரிக்கை என்பதாக பல தளங்களில் விவாதப் பொருளாக அணைவராலும் உற்று கவனிக்கக் கூடிய வகையில் இருந்தது. 

பிரபாகரனின் நோக்கத்தையும் விருப்பத்தையும் தனிப்பட்ட கொள்கைகளையும் புரிந்து கொள்வதாகவும் இருந்தது.

சங்கர் இறந்த தினமாக நவம்பர் 27 என்பதை கணக்கில் கொண்டு மாவீரர் தினம் என்று உருவாக்கப்பட்டு முதன் முதலாக இந்திய அமைதிப்படை இலங்கையில் இருந்து கடைசிகட்ட உக்கிர தாக்குதல்கள் நடத்தப்பட்ட போது இனம் தெரியாத அடர்ந்த காட்டில் இருந்து கொண்டு உரையாற்றிய பிரபாகரனின் உரை என்பது 2008 வரைக்கும் 19 வருடங்கள் தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் குறிப்பிட்ட அதே தினத்தில் ஒலிபரப்பப்பட்டது.  

உலக ஊடகங்களும், உலகத்தமிழர்களும் ஏன் சிங்கள ஆட்சியாளர்களுமே இதை வைத்து தான் புலிகளின் அடுத்த கட்ட நகர்வை புரிந்து கொள்ளும் அளவிற்கு இருந்தது. 

மொத்த 19 வருட உரைகளின் மூலம் நம்பிக்கைகளுக்கும் விருப்பங்களுக்கும் இடையே போராட்டங்களும், ஒவ்வொரு கால கட்டத்திலும் தான் மாறத் தயாராய் இருந்த போதும் மதிக்காத சிங்கள ஆட்சியாளர்களின் மேல் இருந்த அவநம்பிக்கையின் ஊசலாட்டத்தையும் நமக்கு பல விதமாக புரிய வைக்கின்றது. பிரபாகரன் முதல் மாவீரர் உரை தொடங்கிய போது புலிகளின் அதிகாரப்பூர்வமான இறந்தவர்களின் எண்ணிக்கை 1207 பேர்கள்.. இதுவே 19 வருடங்களுக்குப் பிறகு 17,903 பேர்கள் இறந்ததாக மாவீரர் தின உரையில் குறிப்பிட்டார்.

"ஓர் இனத்தை பொறுத்தவரையிலும் வீரர்களை, பெண்களை, அறிவாளிகளையும் மதிக்காத இனம் காட்டுமிராண்டியாக அழிந்து விடும். எமது இயக்கத்தில் இப்போது வீரர்களுக்கு பஞ்சமாக இருக்கிறது. எமது போராளிகளை நினைவு கூறும் தினத்தை ஒரே நாளில் வைப்பதால் வீரச்சாவு அடைந்த மேல்மட்ட தலைவர்கள் முதல் அடிப்படையான வீரர்களை வரை ஒரே மாதிரி நினைவு கொள்ளப்படுகிறார்கள்.  காலப்போக்கில் குறிப்பிட்ட சில சில ஆட்களுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு அந்த மரியாதை சிலருக்கு மட்டும் போவதை தடுப்பதற்காக இதை வருடந்தோறும் கொண்டாடப் போகிறோம்."


"நான் உயிருக்கு உயிராய் நேசித்த தோழர்கள், என்னுடன் தோளோடு தோள் நின்று போராடிய தளபதிகள், நான் பல்லாண்டு காலமாக வளர்த்தெடுத்த போராளிகள் களத்தில் விழ்ந்த போதெல்லாம் எனது இதய்ம் வெடிக்கும்.  ஆயினும் சோகத்தால் நான் சோர்ந்து போவதில்லை.  இந்த இழப்புகள் எனது இலட்சிய உறுதிக்கு மேலும் மேலும் உரமூட்டி இருக்கின்றன"

"நாம் இனத்துவேசிகள் அல்லர். போர்வெறி கொண்ட வன்முறையாளர்களும் அல்லர்.  நாம் சிங்கள மக்களை எதிரிகளாவோ விரோதிகளாகவே கருதவில்லை. நாம் சிங்கள தேசத்தை அங்கீகரிக்கின்றோம்.  சிங்களப் பண்பாட்டை கௌரவிக்கின்றோம்.  சிங்கள மக்களின்  தேசிய வாழ்வில் அவர்களது சுதந்திரத்தில் நாம் எவ்விதமும் தலையிட விரும்பவில்லை".

"நாம் எமது வரலாற்றுத் தாயகத்தில் ஒரு தேசிய மக்களினம் என்ற அந்தஸ்துடன் நிம்தியாக சுதந்திரமாக கௌரவமாக வாழ விரும்புகிறோம்.  எம்மை நிம்மதியாக வாழவிடுங்கள் என்பது தான் எமது மக்களின் எளிமையான அரசியல் அபிலாஷைகள்.  இந்த நியாயமான நீதியான நாகரிகமான எமது மக்களின் வேண்டுகொளை சிங்கள அரசு எப்போது அங்கீகரிகரிக்கின்றதோ அப்போதுதான் ஒரு நிரந்தர சமாதானமும் தீர்வும் ஏற்பட வாய்ப்பு உண்டு."

"ஆயுத பலத்தால் தமிழீனத்தை அடக்கி ஆள வேண்டும் என்றும், சிங்கள பௌத்த பேரின வாதத்தின் ஆதிக்க மனோநிலையில் சிறிதளவேனும் மாற்றம் எதுவும் நிகழ்ந்து விடவில்லை.  இனத்துவேச அரசியல் சேற்றில் சிங்கள தேசம் மூழ்கிக் கிடக்கும் வரை தமிழரின் தேசிய அபிலாசைகள் பூர்த்தியாகது.  நீதியான நியாயமான அரசியல் தீர்வை நாம் சிங்கள ஆளும் வார்க்கத்திடம் இருந்தது எதிர்பார்கக முடியாது." 

"மனித நீதி எனும் அச்சில் இவ்வுலகம் சுழவில்லை என்பதை நாம் அறிவோம்.  இவ்வுலகில் உள்ள ஒவ்வொரு நாடும் தங்கள் பக்கமுள்ள நியாயங்களை முன் வைக்கிறது.  இவ்வுலகில் ஓழுங்கு அமைப்பை பொருளாதார மற்றும் வணிக நலன்களே தீர்மானிக்கின்றன.  இன்றோ சார் நீதியிலோ மக்களின் உரிமை சார்ந்தோ நிற்கவில்லை.  

நாடுகளுக்கிடையேயான சர்வதேச உறவுகளும் அரசியல் நெறிகளும் இத்தகைய நல்களைச் சார்ந்தே தீர்மானிக்கபடுகின்றன.  எனவே எங்களது அறம் சார்ந்த நியாயங்கள் உடனடியாக சர்வதேச சமகத்தான் அங்கிகரிக்கபடும் என் எதிர் பார்க்க முடியாது.  ஆனால் அதே நேரம் அந்த அங்கீகாரத்திற்காக போராடியே ஆக வேண்டும். உலகில் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன."

"சமாதானத்திற்கான போர் என்றும் தமிழரை விடுதலை செய்யும் படையெடுப்பு என்றும் பரப்புரை செய்து ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆக்கிரமிப்புப் போர் தமிழரின் அமைதியக் குலைத்து தமிழரை அகதிகளாக்கி தமிழரை அடிமைகளாக்கி தமிழரின் சமூக பொருளாதார வாழ்வைச் சீரழித்து தமிழருக்கும் என்றுமில்லாத பெரும் அவலத்தை கொடுத்து இருக்கிறது. 

சமாதானத் தத்துவம் பேசி உலகத்தை ஏமாற்றிய போதும் இது தமிழருக்கு எதிரான போர் என்பதை அரசு நடையில் காட்டியுள்ளது.  இராணுவ ஆட்சி நடைபெறும் தமிழ் பகுதிகளில் மிக மோசமான ஒரு இன அழிப்புக் கொள்கை மறைமுகமாக செயற்படுகிறது என்பதையே இது காட்டுகிறது."

"நாம் சமாதானத்திற்கான விரோதிகள் அல்லர். அன்றி சமாதான வழியில் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு எதிரானவர்களும் அல்லர்.  தாம் வேண்டுவது உண்மையான சமாதானத்தையே. எமது மக்கள் எமது மண்ணில் நிம்மதியாக சுதந்திரமாக அந்நியத் தலையீட இன்றி அமைதியாக வாழ்ந்து தமிழ் அரசியல் வாழ்வைத் தாமே தீர்மானிக்ககூடிய உண்மையான கொளரவமான நிரந்தரமான சமாதானத்தையே நாம் விரும்புகின்றோம். இந்த சமாதான வாழ்க்வை தமிழருக்கு வழங்க சிங்கள பெயத்த பேரினவாத சக்திகள் இனங்குமா என்பது சந்தேகத்திற்கு உரியதே."

"தமிழரின் தாயகம், தமிழரின் தேசியம், தமிழரின் தன்னாட்சி உரிமை ஆகியவற்றை அங்கீகரித்து அவற்றின் அடிப்படையில் ஒரு அரசியற் தீர்வுத் திட்டம் வகுப்பட வேண்டுமென்ற நாம் திம்புக் காலத்தில் இருந்து வலியுறுத்தி வருகிறோம்."

"சிங்களம் ஒரு பெளத்த நாடு.  அன்பையும் அறத்தையும் ஆன்மீக ஞானத்தையும் போதித்த காருணிய மகானை வழிபடும் தேசம்.  தர்மத்தின் தத்துவத்தில் தழைத்த பௌத்த சமகத்தில் இனக்குரோதமும் போர் வெறியும் விஸ்வரூபம் பெற்று நிற்பது எமக்கு வியப்பாக இருக்கிறது. தமிழர் தேசம் போதையும் வன்முறையையும் விரும்பவில்லை.  அமைதி வழியில் அகிம்சை வழியில் தர்மத்தை வேண்டி நின்ற எமது மக்கள் மீது வன்முறைத் திணித்தவர்கள் யார்?  

நாம் எமது உயிரையும் உடைமையும் பாதுகாக்க ஆயுதமேந்தி போராட வேண்டிய நிர்பபந்த சூழ்நிலையை உருவாக்கிய விட்டவர்கள் யார்? சிங்கள பௌத்த தீவிரவாதமே தமிழர்களை ஆயுதபாணிகளாக்கி தேச சுதந்திர போராட்டத்தில் குதிக்க வைத்தது."

"ஆட்பலம், ஆயுதபலம், இராணுவ பலம், மக்கள் பலம் என்கிற ரீதியில் சகல பலத்தோடு நாம் வலுப்பெற்று நின்ற போதும் எமது தாயகத்தை மீட்டெடுக்கும் போதிய சக்தி இருந்த போதும்  நாம் சமாதான பாதையை கைவிடவில்லை. உயிர் அழிவையும் இரத்தக் களரியையும் தவிர்த்து சமாதான வழியில் நாகரிகமான முறையில் தமிழரின் சிக்கலை தீர்ககவே நாம் விரும்புகிறோம்."

"தமிழர் தாயகத்தில் அமைதி நிலை தோன்றினாலும் இயல்புநிலை தோன்றவில்லை.  உயர் பாதுகாப்பு வளையங்கள் என்ற போர்வையில் எமது மக்களின் வாழ்விடங்களை சமூக பொருளாதர பண்பாட்டு மையங்களை சிங்கள ஆயுதப் படைகள் ஆக்கிரமித்து நிற்கின்றன. சிறிய அளவிலான புவியற் பரப்பில் குடிசன நெரிசலும் கொண்ட யாழ்பாணக் குடாநாட்டை 40 000 படைகள் ஆக்ரமித்து நிற்கின்றனர். எமது மக்கள் தமது இயல்பபு வாழ்க்கை நடத்த முடியாதவாறு மூச்சுத் திணறும் ஆக்கிரமிப்பு என்றுமே பதட்ட நிலையைத்தான உருவாக்குகின்றது.".

"பேச்சு வார்த்தைகளின் தொடக்கத்திலேயே எமது மக்களின் அடிப்படை பிரச்சனைகளை ஆரம்பித்தலேயே தீர்த்து விட வேண்டும் என்பதே எங்கள் தலையாய கோரிக்ககை."   

"முடிவில்லாத ஒரு துன்பியல் நாடகமாகத் தமிழரின் இனப் பிரச்சனை தொடர்கிறது. எமது பிரச்சினைக்குத் தீர்வு காண ஆளும் கட்சி முயற்சிப்பதும் எதிர்ககட்சி எதிர்பபதும் பின்பு எதிர்க்கட்சி ஆளுங்கட்சியாக மாறி மீண்டு அதே முயற்சியும் அதே எதிர்ப்புமாக இந்த சிங்கள அரசியல் வரலாற்று நாடகம் தொடர்ச்சியாக ஒரே பாணியில் கடந்த 50 வருடங்களுக்கு மேலாக மேடையேறி வருகிறது."

"இடைக்கால தீர்வுமின்றி நிரந்தர தீர்வுமின்றி நிலையான அமைதியும் இல்லாமல் நிம்மதியான வாழ்வும் இன்றி நாம் அரசியல் வெறுமைக்குள் தொடர்ந்தும் சிறைபட்டுக் கிடக்க முடியாது. சிங்கள தேசமானது தமிழனத்தை அரவணைத்து இணைத்து வாழவும் விரும்பவில்லை. அதே சமயம் அரவணைத்து இணைத்து வாழவும் விருப்பமில்லை. அதே சமயம் பிரிந்து சென்று தனித்து வாழவும் விடுவதாக இல்லை. 

இரண்டுங் கெட்டான் நிலையில் வீடின்றி விடுதலையின்றி எதிர்காலச் சுபிட்சமின்றி சூனியமாக அரசியல் இருட்டுக்குள் நாம் தொடர்ந்து வாழ முடியாது.  பொறுமைக்கும் எதிர்பார்ப்புக்கும் எல்லை கோடுகளுள்ளன. அந்த எல்லைக் கோடுகளை நாம் அடைந்து விட்டோம்."

"பண்டைய இதிகாசங்கள் புனைந்து விட்ட புரளிகளால் சிங்கள இனம் வழி தவறி சென்று கொண்டுருக்கிறது. தொடர்ந்தும் பேரினவாதச் சகதிக்குள் வீழ்ந்து கிடக்ககிறது.  இதனால் சிங்கள பௌத்த பேரினவாதம் இன்றோரு தேசியச் சித்தாந்தமாக சிங்கள தேசத்தில் மேலாதிக்கம் செலுத்தி வருகிறது. 

இந்த கருத்தாக்கம் பாடசாலைகள் பல்கலைக்கழங்களில் இருந்தும் பத்திரிக்கை துறை வரை ஊடுருவி நிற்கிறது. மாணவர்களோ, புத்திஜீவிகளோ, எழுத்தாளர்களோ அரசியல்வாதிகளோ சுயமாகச் சிந்திக்க முடியாதபடி சிங்கள மூலத்தை இந்த கருத்தாக்கம் சிறைப்பிடித்து வைத்து இருக்கிறது.  பௌத்த பேரினவாதக் கருத்துக்கள் சிங்கள மனிதனின் மன அமைப்பின் ஆழத்தில் அழியாத கோடுகளாக பொறித்து விடப்பட்டு இருக்கின்றன.  இதனால் சிங்கள தேசம் போர் வெறி பிடித்து போர் முரசு கொட்டுகிறது."

"பௌத்தம் ஒர் ஆழமான ஆன்மிகத் தரிசனம்.  அன்பையும் அறத்தையும் ஆசைகள் அற்ற பற்றற்ற  வாழ்வையும் தர்மத்தையும் வலியுறுத்தி நிற்கும் தார்மிகத் தத்துவம்.  இந்த தார்மீக நெறியை 2000 ஆண்டுகளுக்கு மேல் கடைபிடிப்பதாக கூறிக்கொள்ளும் சிங்களம் 2000 ஆண்டுகளுக்கு மேலாக இனவாத விசத்தினுள் மூழ்கிக் கிடக்கிறது. சிங்கள இனவாத விசம் இன்று மிருகத்தனமாக வன்முறையாகக் கோரத்தாண்வம் ஆடுகிறது. 

60 ஆண்டுகளாக வன்முறையற்ற அகிம்ச வழியிலும் ஆயுதவழியிலும் தமிழர் நீதிகேட்ட சிங்கள உலகிலே சிறிதும் மனமாற்றம் நிகழவில்லை.  எத்தனையோ இழப்புகள், அழிவுகள், எண்ணற்ற உயிர்பலிகள் நிகழ்ந்த போதும் சிங்கள தேசம் மனம் திருந்தவில்லை.  இதற்கு சர்வதேச சமூகத்தின் பொருளாதார இராணுவ உதவிகளும் அரசியல் தார்மீக ஆதரவும் இராஜதந்திர முண்டு கொடுப்புகளும் ஒரு பக்கச் சார்பாக தலையீடுகளும் தான் காரணம்."

"எத்தனை சவால்களுக்கு முகம் கொடுத்தாலும் எத்தனை இடையூறுகளை எதிர் கொண்டாலும் எத்தனை சக்திகள் எதிர்த்து நின்றாலும் நாம் தமிழரின் சுதந்திரத்திற்காக போராடுவோம். வரலாறு விட்ட வழியில் காலம் இட்ட கட்டளைப்படி சிங்கள ஆக்கிரமிப்பு அகலும் வரை நாம் தொடர்ந்து போராடுவோம்."

"எங்கள் காலத்தில் எங்கள் லட்சியத்தை அடைந்து விடுவோம் என்பதைவிட நியாயமான தீர்வுகள் எட்டப்படாதவரைக்கும் இந்த போராட்டம் அடுத்து வருபவர்கள் முன்னெடுத்து செல்வார்கள்."

தமிழீழம் பிரபாகரன் கதையா? என்று நான் எழுதியதில் இருந்து  எடுக்கப்பட்ட பகுதி இது. 

வேலுப்பிள்ளை பிரபாகரன் பேசிய மாவீரர் உரைகளை அடிப்படையாகக் கொண்டு தொகுக்கப் பட்ட கட்டுரை இது. 

பிரபாரகன் குறித்து அவரின் தனிப்பட்ட கொள்கைகள் குறித்து கடந்து வந்து பாதைகளில் பெற்ற அனுபவங்களின் தொகுப்புக்கு இங்கே சொடுக்கவும். 


வருடந்தோறும்  வே. பிரபாகரன் அவர்களின் பிறந்த தினமான (26 நவம்பர்) இந்த நாளில் வெளியிடப்படும் மீள் பதிவு இது.

Sunday, January 03, 2010

இந்திய உழவும் (RAW) உலக உளவும் (CIA)

உழவு என்ற சொல் மனிதனை நாகரிக வாழ்க்கைக்கு விரைவாக மாற்ற உதவியதாகவும், அதே சமயத்தில் அவனை வேகமாக முன்னேறவும் வைத்தது. ஆனால் உளவு என்ற சொல் மொத்த நாகரிகத்தையும், தனி மனிதனின் வாழ்க்கையை மட்டுமல்ல மொத்த நாடுகளின் மறைமுக விரைவான வீழ்ச்சிக்கும் காரணமாக அன்றும் இன்றும் இருக்கிறது.

மன்னர்கள் ஆட்சிப் பொறுப்புக்கு வருவதற்கு முன்னால் வாழ்ந்த எந்த மனித கூட்டத்திற்கும் இந்த உளவு அவஸ்யமானதாய் இருக்கவில்லை.  உழவு அதன் தொடர்ச்சியாக உழைப்பு.  ஓய்வு அதன் பிறகு சிறப்பு என்று சிரித்து வாழ்ந்த கூட்டம்.  அவர்கள் வாழ்க்கையில் எந்த பொய்யும் இல்லை.  அடுத்தவரை கண்டு கொள்ள வேண்டிய அவஸ்யமும் தோன்றவில்லை.  வஞ்சகம் இல்லாமல் வாயாற உண்மையை மட்டும் சுவைத்து வாழ்ந்த கூட்டமது.  ஆனால் ஆட்சி, அதிகாரம், அதிகார வர்க்க சார்பாளர்கள் என்று ஒவ்வொன்றாக நாகரிக வாழ்க்கையில் உருவாக, மாற்றம் பெற இந்த உளவு என்ற சொல் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தது.  காலப்போக்கில் ஒவ்வொரு நாடும் இந்த உளவுத்துறை மூலமாகவே வளர்ச்சியும் வீழ்ச்சியும் பெற ஆரம்பித்து விட்டது.

" தன்னுடைய வளர்ச்சி முக்கியம்.  அதே சமயத்தில் சார்ந்தவர்களின் வளர்ச்சி முடக்கப்பட வேண்டுமென்பது அதைவிட முக்கியம்"


இன்று எல்லாவிதங்களிலும் மனித நாகரிகம் வளர்ந்து விட்டது என்று நமக்கு நாமே பாராட்டு பத்திரம் வாசித்துக்கொண்டுருக்கும் இந்த சூழ்நிலையில் ஒவ்வொரு நாடும் ஏன் இராணுவத்திற்கு இத்தனை கோடிகளைக் கொண்டு போய் கொட்டுகிறது.  ஏன் தினம் அச்சப்பட்டு அவஸ்த்தைப்பட்டுக்கொண்டு வாழ்ந்து கொண்டுருக்கிறார்கள்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் ஜனநாயக சக்திகள் என்பவர்களை மீறியும் ஒவ்வொரு நாட்டிலும் இந்த கண்களுக்கு தெரியாத நபர்கள் ஏன் ஆட்சி செலுத்துகிறார்கள்.  இன்றைய பாகிஸ்தான் பரிதாப நாடாக மாற்றம் பெற முக்கிய காரணம் என்ன?

அமெரிக்கா என்பது வெளியே இருந்து பார்க்கும் போது முதலாளித்துவ ஜனநாயக நாடு. இந்தியா ஜனநாயக நாடு என்று ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு மேல் உடையும் உள்ளே உள்ள வெளியே தெரியாத ஆடையும் எத்தனை பேர்களுக்குத் தெரியும்?

இலங்கையுடன் சம்மந்தப்பட்ட சில நாடுகளின் உளவுத்துறைகளையும், பிரிவுகளையும் வாசித்து பார்த்துவிடலாமே?  காரணம் இனி வரும் மொத்த இலங்கை தமிழர்களின் வாழ்வுரிமை போராட்டங்களும் இந்த உளவு திருவிளையாடலும், உள்ளே உள்ள தமிழர்களின் ஒற்றுமையின்மையும் என்று ஒன்றுக்கொன்று போட்டிபோட்டுக்கொண்டு வாழ்ந்த கதையைத் தான் பார்க்க வேண்டும்?

இலங்கை
Civil 
State Intelligence Service (SIS)


Military 
Directorate of Military Intelligence

இந்தியா
National Investigation Agency (NIA) என்ஐஏ


Central Bureau of Investigation (CBI) சிபிஜ


Intelligence Bureau (IB)  ஐபி


Research and Analysis Wing (RAW) ரா

இஸ்ரேல்
ha-Mossad le-Modiin u-le-Tafkidim Myukhadim (Mossad)  மொஸார்ட்

பாகிஸ்தான்
Inter-Services Intelligence (ISI)  ஐஎஸ்ஐ


Military Intelligence (MI) 


Intelligence Bureau (IB) 


Federal Investigation Agency (FIA) 


CIA -POLICE(Special Branch) (CIA)

இங்கிலாந்து
Secret Intelligence Service (SIS or MI6) 


Security Service (colloquially MI5) 


Government Communications Headquarters (GCHQ)

அமெரிக்கா
Central Intelligence Agency (CIA)  சிஜஏ


Defense Intelligence Agency (DIA) 


National Security Agency (NSA) 


Federal Bureau of Investigation (FBI)

சீனா
Ministry of State Security (MSS)

RAW ரா தலைமை அலுவலகம் புதுடெல்லி
அரசியல், வணிகம் என்று தொடங்கி இன்று ஆன்மிகம் மற்றும் தனிமனிதன் வரைக்கும் அத்தனை இடங்களிலும் நீக்கமற வியாபித்துள்ளது.  பில்கேட்ஸ் முதல் அம்பானி வரைக்கும், அமெரிக்கா முதல் ஆஸ்திரேலியா வரைக்கும், இங்கிலாந்து முதல் இந்தியா வரைக்கும், அமேசான் பழங்குடி போராட்டங்கள் முதல் மாவோயிஸ்ட் வரைக்கும் என்று பல திசைகளிலும் நீங்கள் பட்டியில் இட்டுக்கொண்டே போகலாம்.

சமூகநீதி, சமஉரிமை, பாரபட்சமில்லாத பங்களிப்பு என்று இன்று அத்தனை வளர்ந்த நாடுகளும் வளர்ந்து கொண்டுருக்கும் நாடுகளுக்கு போதனைகளை கற்றுக்கொடுத்துக் கொண்டே இருக்கின்றன.  ஆனால் அவர்களின் சுயபாதுகாப்பு என்பது அத்தனை பொக்கிஷமாய் போற்றி பாதுகாத்துக்கொண்டு பொய்மையாய் மாயக்கோட்டையாய் அத்தனை கெட்டியாக பாதுகாப்பது ஏன்?

இன்று உலகத்தின் எந்த மூலையில் நீங்கள் போய் நின்றாலும் அமெரிக்காவின் உளவு நிறுவனமான CIA என்ற வார்த்தை ஒன்று மந்திரம் போல் உசுப்பும்.  அல்லது விழியை மருளச் செய்யும்.  இரண்டே வழிமுறை.  "அடிபணிந்து விடு.  இல்லாவிட்டால் அழிந்து விடு".  கவிழ்த்த ஆட்சிகள், அழித்த தலைவர்கள் என்று தொடங்கி கொசு நுழைய முடியாத இடத்தில் கூட உள்ளே நுழையும் வல்லமை பெற்றவர்கள்.  ஒரே காரணம் அவர்களின் திறமை குறைவு.  ஆனால் விசுவாசமாய் மாற காத்துருப்பவர்கள் அதிகம்.

இஸ்ரேல் மொஸார்ட் முதல் இந்தியாவின் சிபிஜ,ஐ,பி,ரா என்று ஒவ்வொரு நாட்டுக்கும் ஒவ்வொரு உளவு நிறுவனம்.  கண்காணிப்பது மட்டுமல்ல, முடிந்தால் கலவரத்தையும் உருவாக்கு.  தொத்தல் நாடுகள் கூட விதிவிலக்கல்ல.

அமெரிக்கர்கள் என்றும் அமெரிக்கர்கள்.  ஆனால் பிற எந்த நாட்டினரும்,  எந்த நாட்டிற்குள் சென்றாலும் பிரிந்து நின்று தன்னை தனியாக காட்டிக்கொள்வதற்கு ஏராளமான காரணிகள் உண்டு.  மதம்,இனம்,பணம்,ஜாதி,ஆசைகள், பலவீனம் என்று தொடர்ச்சியாக போய்க்கொண்டே இருக்கும்.

மொத்த அரேபிய தேசமும் ஒன்றாக இணைந்தால்?  ஓரே நுழைவு வாயில் வழியாகத்தான் எண்ணெய் வர்த்தகத்தை அவர்களுக்கு இடையே உருவாக்கப்பட்ட புரிந்துணர்வு மூலம் கொண்டு வந்தால் என்ன நடக்கும்?  ஓரு வருடத்திற்குள் எவர் வேண்டுமானாலும் அமெரிக்காவிற்கு விசா இல்லாமல் வரலாம் என்று கடையை விரித்து வைக்கலாம்.

ஒருவர் மற்றொருவருடன் சேராத வரைக்கும், சேர முடியாத காரணிகளை உருவாக்கி வைத்திருக்கும் வரைக்கும் அமெரிக்கா மட்டுமல்ல தற்போது பாவ்லா காட்டிக்கொண்டுருக்கும் எந்த நாடும் வல்லரசு தான்.  இன்றும் என்றும்?  தான் வளர்வது எத்தனை முக்கியமோ அதைப்போல மற்றவர்களை வளர விடாமல் தடுத்து வைத்திருப்பதும், தனக்கு கீழே வைத்துருப்பதும் அத்தனை முக்கியம்.  அதனால் தான் ஒவ்வொரு நாடும் உளவு நிறுவனங்களையும், ஆள்காட்டிகளையும் உருவாக்கி மற்ற நாடுகளை முடிந்தவரைக்கும் உருக்குலைத்துக்கொண்டே இருக்கிறது.

வளர்ச்சி என்பது திறமை என்பதாக இருந்தால் ஏன் மற்ற நாடுகளின் மேல் இத்தனை அக்கறை?  ஆட்சிக்கு வருபவர்கள் என்பவர்கள் அந்த ஐந்து வருடங்கள்.  ஆனால் ஆட்சியாளர்களையும், என்றும் ஆண்டு கொண்டுருக்கும் அதிகார வர்க்கத்தையும் என்றுமே தங்களுடைய பிடியில் வைத்திருக்கும் கார்ப்ரேட் கணவான்களின் ஆசை, விருப்பம்,நோக்கம் என்பதில் தொடங்குவது தான் பல நாடுகள் பாதாளத்தில் போய் விழுவதும், பல வாழ்வுரிமைப் போராட்டங்கள் பள்ளத்தில் தள்ளி மூடப்படுவதும் என்பதில் முடிந்து விடுகின்றது.

நீங்கள் பருகும் ஒரு பாட்டில் கோக், விரும்பி தேய்த்து குளிக்கும் சோப், விரும்பும் வாசனை திரவியங்கள் அத்தனை முகம் தெரியாத உலகத்தை தங்கள் கைபிடிக்குள் வைத்துருக்கும் முதல் நூறு பணக்காரர்களுக்கு உங்களை அறியாமலே அவர்களின் சொத்துக்களையும் ஆசைகளையும் அதிகப்படுத்திக்கொண்டுருக்கிறீர்கள் என்பதை உங்களால் உணர முடியுமா?

ஒரு கோக் நீங்கள் வாங்கும் போது இங்கே உள்ள காளிமார்க் பானத்தின் தொழிற்சாலையின் செங்கல் மெதுமெதுவாக உருவப்பட்டுக் கொண்டு இருக்கிறது என்பதை யோசித்துப் பார்ப்பதுண்டா?.  அந்நிய மூதலீடு இல்லாமல், வளர்ச்சி அடைந்த நாடுகளின் உதவி இல்லாமல், அவர்களின் விஞ்ஞான கருவிகள் இல்லாமல் நாம் வாழ முடியுமா? என்ற உங்களின் குதர்க்கத்தனமாக கேள்வியும் கேலியும் புரிந்தாலும் அந்த கார்ப்ரேட் கணவான்களின் ஆசைக்காக, தேர்ந்தேடுக்கப்படும் ஜனநாயகவாதிகள், அதிகாரவர்க்கங்கள், ஆள்காட்டிகள், கைகூலிகள், என்று தொடங்கி உலகத்தில் உள்ள அத்தனை நாடுகளையும் தங்கள் கண் அசைவில் அவர்கள் வைத்துருக்கும் வித்தையை உங்களால் உணர வாய்ப்பு உள்ளதா?


அரசாங்கத்தின் உளவு என்பது நாட்டின் வளர்ச்சியை விட மற்றவர்களின் வீழ்ச்சியை விரைவு படுத்துவது.  தனி மனித கார்ப்ரேட் கண்வான்களின் அடியாள் பட்டாளங்கள் என்பது உலகமயமாக்கல் என்ற தத்துவத்தை பரப்பி தன் வலைக்குள் வீழ்ந்த நாடுகளை எழ முடியாமல் என்றும் வைத்துருப்பது.  இந்த இரண்டு தண்டவாளத்தில் தான் உலக உருண்டையில் உள்ள 70 சதவிகித நாடுகள் ஓடிக்கொண்டு இருக்கிறது.

1948 முதல் கடந்த 60 ஆண்டுகளில், இலங்கையில் இன்றைய சீனா போல் வேறு எந்த வெளிநாடுகளும் இப்போது போல அப்பட்டமாக ஆளுமை செலுத்தவில்லை.  மின்திட்டம், சாலைவசதி,இராணுவ உதவி என்று தொடங்கி காலவரையற்ற கடன் ஒப்பந்தங்கள் வரைக்கும் என்று தொடர்ந்து கொண்டே இருக்கிறது.  காரணம் என்ன?

அதே போல் நேரு தொடங்கி இன்று மன்மோகன் சிங் வரைக்கும் இன்று போல் இலங்கைக்கு இத்தனை ஆதரவாக இருந்தது இல்லை?

தனிமனிதர்கள் சேர்ந்த கூட்டமென்பது நாடாக நீங்கள் நினைத்தால் அது தவறு.  தகுதியானவர்களின் ஆசைப்படி ஆள நிணைப்பதன் தொடக்கம் தான் ஒரு நாட்டிற்கும் இன்னோரு நாட்டுக்கும் வெளியே தெரியாத, சொல்ல முடியாத, காட்டிக்கொள்ளாத புரிந்துணர்வு.

இத்தனை தமிழர்களை கொன்று குவித்தும் ராஜபக்ஷே மேல் ஏன் இன்று வரைக்கும் எந்த நாடும் மிகப் பெரிய அளவில் எதிர்ப்பை காட்டவில்லை.  நீங்கள் மேலாதிக்க சக்தி என்றால், உங்கள் மூலம் எதிர்ப்பு வருகிறது என்று தெரிந்தால் உங்களின் தேவையை அங்கு நிறைவேற்ற காத்துக்கொண்டுருப்பார்கள்.  வணிகம் சார்ந்த ஒப்பந்தங்கள்.  வா வா என்றழைக்கும் ஆசை சார்ந்த விசயங்கள் என்று ஏராளமான மறைபொருள் உண்டு.

தமிழ்நாட்டில் உள்ள சிமெண்ட ஆலை, ஊடகம், மென்பொருள் அதிபர்கள் அத்தனை பேர்களும் கடந்த ஐந்து ஆண்டுகளில் இலங்கையில் மூதலீடு செய்து இருப்பதும், அதற்கான பரஸ்பர நல்லெண்ண உடன்படிக்கைகள், பெற்ற ஆதாயங்கள், இடைத்தரகர்கள் என்று ஏராளமான பட்டியல் உண்டு.  இந்தியா என்ற நாட்டிற்கு இலங்கை அமைதியாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை விட இது என்றுமே இந்தியாவிற்கு விசுவாசமாக இல்லாவிட்டாலும் கூட விரோதியாக மாறிவிடக்கூடாது என்ற உள்ளார்ந்த அர்த்தம் தான் இத்தனை உதவிகளும்.

திம்பு பேச்சு வார்த்தை, ராஜிவ் ஜெயவர்த்னே ஒப்பந்தம் என்று மேம்போக்காக நாம் ஊடகத்தில் தலைப்பு செய்திகளில் வாசித்து விட்டு கேட்டு விட்டு நகர்ந்து விடுகிறோம்.  ஆனால் அதற்குப் பின்னால் உள்ள அசுரத்தனமான உளவுத்துறையின் உழைப்பும், மிரட்டலும், அச்சப்படுத்துதலும் என்று தொடங்கி மொத்த இலங்கை வாழ்வுரிமை போராட்டங்களை அல்லோகல்லப்படுத்திய விவகாரங்கள் அத்தனை முடைநாற்ற வகையைச் சேர்ந்தது.

இதையெல்லாம் ராஜதந்திரம் என்ற வார்த்தைகளுக்குள் அடக்கி விடுகிறார்கள்.  ராஜாவும் இல்லை.  ராஜ்யமும் இல்லை.  வெறும் தந்திரங்களை வைத்துக்கொண்டே இலங்கை ஆட்சியாளர்கள் இன்று வரைக்கும் வளர்ந்து மொத்த தமிழினத்தை மூடுகுழி போல் ஆக்கிவிட்டார்கள்.  ஆனால் இன்றும் இந்தியாவில் இலங்கை என்பது மிரட்டும் அன்புத்தம்பி.  இந்தியா என்பது பயந்த பெரியண்ணன்.

ஒவ்வொரு நாடும் தன்னுடைய மேலாதிக்கத்தை, பிராந்திய நலத்தை, வணிகம் சார்ந்த எதிர்கால முன்னேற்பாடு திட்டங்களை காரணத்தை பின்னால் வைத்துக்கொண்டு அத்தனை தந்திர வலைகளை வீசிக்கொண்டே முன்னேறி வந்து கொண்டே இருக்கிறார்கள். ஒரு பக்கம் இந்தியா, மறுபக்கம் சீனா.  இடையில் பாகிஸ்தான், ரஷ்யா,அமெரிக்கா என்று நீண்ட பட்டாளங்கள். நரி பஞ்சாயத்து செய்து கொடுத்த அப்பம் போல் கொடுத்துக்கொண்டுருக்கும் இலங்கை இன்னும் சில ஆண்டுகளில் முழிக்குமா? மூழ்கி விடுமா என்று தெரியவில்லை.

Monday, November 16, 2009

கண்டங்களும் கடக்கும் தூரம் தான்

"எண்ணங்கள் தான் வாழ்க்கை"

இந்த கருத்தை பகுத்தறிவாளர்களும், நம்பிக்கையாளர்களும்,சிந்தனையாளர்களும் ஒரு சேர மறுப்பேதும் சொல்லாமல் முன் மொழிவார்கள்.

குலம், இனம், ஜாதி இவற்றால் மனிதர்களின் எண்ணங்கள் உருவாகிறது என்பதில் தொடங்கி இன்றைய அத்தனை நவீன விஞ்ஞானமும் இதைத் தான் இறுதியாக உறுதி மொழி போல் சமூகத்திற்கு வழி மொழிகிறது.

உலகத்தில் உள்ள அத்தனை நாடுகளுக்கும், தலைவர்களுக்கும், முன்னோர்களைப்பற்றி நிறை குறைகளுடன் வரலாற்றுக் காவியங்கள் படைக்கப்பட்டு நம்மிடம் இன்று வந்து இருந்தாலும் இலங்கை தோற்றம் முதல் இன்று வாழ்ந்து கொண்டுருக்கும் அத்தனை தலைவர்களுடைய வழிமுறைகள் வரைக்கும், அவர்களின் வாழ்க்கை முறைகள் அவர்களின் "எண்ணங்கள்" மூலம் தெளிவாக புரிந்து கொள்ள முடிகின்றது.

அவலத்தை மட்டுமே எங்களால் தரமுடியும்? என்ற அத்தனை வழித்தோன்றலுக்கும் மத்தியில் எப்படி அஹிம்சை கொள்கைகள் எடுபடும்? எப்படி அவர்களால் மனிதர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள முடியும்?

அப்படி ஒன்று உள்ளே இருந்தால் தானே?

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் கண்டமாக பிரிந்து நிற்காத காலமாக இருந்த இந்த பூமிப்பந்தில், தகடுகள் நகர்த்திய நகர்வில் உருவானது தான் இந்திய, ஆஸ்திரேலியா,ஆப்பிரிக்கா,தென் அமெரிக்க நிலத்தகடுகள்.

இந்தியாவுடன் இலங்கை, மாலத்தீவு,லட்சத்தீவு,போன்ற தீவுகள்.

அப்போது கூட இந்த இலங்கை இந்தியாவில் இருந்து நீந்தி கடக்கும் தூரமாகத்தான் இருந்தது.  ஆனால் சிங்கள இனம் தொடக்கம் பெறுவதாக கூறப்பட்ட காலம் முதலே மிருக குணத்துடன் வாழ்ந்தவர்கள்.  காலப்போக்கில் தனக்கும் பகுத்தறிவு வந்து விட்டதாக நம்பியவர்கள், இவர்கள் தான் எதிர்காலத்தில் ஒரு இனத்தை தூர் வாருவது போல் துடைத்து ஒழிப்பார்கள் என்று இந்தியாவில் உருவாகியிருந்த எந்த ஞானியகள் கூட உணரந்து இருப்பார்களா என்பது தெரியவில்லை.

உள்ளே இயல்பாகவே உருவாகும் உருவாகி இருக்கும் எண்ணங்களை எத்தனை தூரம் தான் மாற்ற முடியும்? இந்த எண்ணங்கள் எத்தனை உருவது குறித்து உங்களுக்குள் எத்தனை விவாதம் இருந்தாலும் இந்த வரலாற்று சிங்கள தலைவர்களின் கடந்த, நடந்த, நடந்து கொண்டுருக்கும் அத்தனை நிகழ்வுகளுக்கும் மரபு வழியும் ஒரு காரணமோ என்று நிணைக்கத் தோன்ற வேண்டியிருக்கிறது.

நல்லவர்கள் வளர்க்கும் குழந்தைகள் நாசகார செயல்களில் ஈடுபடுவதும், தீயவர்களின் குழந்தைகள் நாடே போற்றும் நல்ல செயல்களில் ஈடுபட்டு புகழ் அடைவதும் இன்று வரையிலும் நாம் அணைவரும் பார்த்துக்கொண்டு இருப்பது தானே?

சந்தர்ப்பங்கள் சிலரை மாற்றுகிறது.
எண்ணங்கள்  சிலரை வழி நடத்துகிறது.
ஆனால் சிங்களர்களின் வாழ்வில் மொத்தமாய் எல்லாமே அதிசியமாய், ஆச்சரியமாய், ஆற்றாமையைத் தான் உருவாக்குகிறது.

ஆனால் அத்தனையிலும் விதிவிலக்காக தொடக்கம் முதல் சிங்களர்களின்  வாழ்வியல் பாடங்கள் நமக்கு பல விசயங்களையும்,  இந்த சமூகத்திற்கு உணர்த்துகிறது.  இவர்கள் தான் சிங்கம் புணர்ந்து உருவானவர்கள்.

திகைப்படையாதீர்கள்.  சிங்களர்களின் புனித நூலாக மதிக்கப்படும் தீபவம்சம், மகாவம்சம் தெளிவாக இதைப்பற்றி உணர்த்துகிறது.

உங்கள் வாயில் உள்ள எச்சிலை வீண் அடிக்க எனக்கு விருப்பமில்லை.

சிங்கள வம்சம் உருவான கதையே இப்படி இருக்கும் போது வல்லூறு போல் சதையை ருசி பார்த்த, இறந்தும் புணர்ந்த வக்கிரத்தைப் பார்த்தும் இவர்களை மனிதர்கள் என்பீர்களா?  மனித குணம் படைத்த சிங்கம் என்பீர்களா?

சிங்கம் கூட தனது இரை கிடைத்து பசி அடங்கியதும் அமைதியாகி விடும். அடுத்த இரை எதிரே வந்து நின்றாலும் அமைதியாகத் தான் இருக்கும் என்பது ஆய்வாளர்களின் கூற்று.

விஜயன் என்ற கப்பல் நீண்ட நாட்களாக இலங்கையில் இருந்தது.  இந்த விஜயன் என்ற மன்னரில் இருந்து தான் இவர்கள் வம்சம் தொடங்கியதாக நம்ப வைக்க முயற்சிக்கிறார்கள்.  சிங்களர்களின் சிங்கம் பொறித்த தேசிய கொடியும் உணர்த்தும் செய்தியும் இவை தான்.


கி.மு 5ம் நூற்றாண்டில் லாலா (வங்காளத்திற்கும் ஓரிஸாவிற்கும் இடைப்பட்ட) வில் வாழ்ந்த சிங்கபாகுவால் நாடு கடத்தப்பட்ட அவருடைய மகன் விஜயன், தன்னுடைய நண்பர்களுடன் மரக்கலங்கள் மூலம் இலங்கையை சென்று அடைந்தான்.  இவன் மூலம் வந்தவர்கள் தான் சிங்கள இன மக்கள்.

விஜயன் இலங்கையில் இறங்கிய போது வாழ்ந்த மக்கள் யக்சர்கள், நாகர்கள். ஆனால் சென்று இறங்கியதும் விஜயன் செய்த முக்கிய காரணம் யக்சர்களின் இளவரசியான குவேனியுடன் வலுக்கட்டாய உறவு வைத்து அவள் மூலமாக அங்கு தன்னை மன்னராக பிரகடனம் செய்ய வைத்தது.

மன்னராக ஆனதும் மனைவியை துரத்தி விட்டதும், மக்கள் விருப்பத்தின் படி தென் மதுரையை அப்போது ஆண்டு கொண்டுருந்த பாண்டு என்ற மன்னர் மகளை மணந்து அமைதியாக 38 வருடங்கள் ஆட்சி புரிந்தான்.  வயதான காலத்தின் இறுதியில் பதவிக்கு ஆசைப்பட்ட அமைச்சர்களை மீறி தனது சகோதரன் (இந்தியாவிலுள்ள கலிங்க நகர்) தனது சகோதரன் மகனை இலங்கை வரவழைத்து (பாண்டுவஸ்தேவா) ஒப்படைத்து சிங்களர்களின் முதல் வம்ச வரலாறு தொடங்குகிறது.


காரணம் முதல் மனைவியை துரத்திய போதே பிறந்து இருந்த இரண்டு குழந்தைகளையும் ராணி வெளியே அழைத்துச் சென்றுவிட்டாள். (இரண்டாவது மனைவி குழந்தைகள் குறித்து குறிப்பேதுமில்லை.)

கிமு 2ம் நூற்றாண்டில் பவுத்தம் உள்ளே நுழைந்து,. பாலி,சமஸ்கிருதம், தமிழ் மூன்றும் கலவையாய் சிங்கள மொழி உருவாகி வரி வடிவமாக மாற்றம் அடைந்த ஆண்டு கிபி 12ம் நூற்றாண்டு.

ஆனால் விஜயனுக்கு முன் தமிழ் மக்கள் அங்கு வாழ்ந்த வரலாற்று சான்றுகள் உண்டு.  கற்பனை அல்ல.  சிங்களர்களின் புனித நூலான மகா வம்சம் கூறுகிறது.

தமிழ்நாட்டில் உள்ள இராமேஸ்வரம் போல இலங்கையில் திருக்கேஸ்தீவரம், முன்னேஸ்வரம், நடலேஸ்வரம் போன்ற ஈஸவர திருக்கோயில்கள் இருந்ததாக கூறுகிறது. கிடைத்த சமஸ்கிருத ஒன்றிரண்டு கல்வெட்டுகள் மூலம் தான் சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் ஆளுமை செய்த எந்த விசயங்களும்  தொல்லை நோக்கில் உருவாக்கி இருந்ததால் மிகப் பெரிய ஆதாரங்கள் காணவில்லை.  ஏற்கனவே சொன்னது போல்

 ”போயாச்சு. வென்றாச்சு. சரி கிளம்புங்கப்பா".

கிமு 2ம் நூற்றாண்டில் (கிமு 161 / 117) மொத்தம் 44 ஆண்டுகள் எல்லாளன் என்ற தமிழ் மன்னன் இலங்கை முழுவதையும் ஆண்டான் என்பதையும் மகாவம்சம் தெளிவாக எடுத்துரைக்கிறது.  2000 ஆண்டுகளுக்கு முன் இருந்த கடைசி சங்கப் பாடல்களில் ஈழத்துப் புலவர் ஈழத்துப் பூததேவனாரின் பல பாடல்களில் நிறைய சான்றுகள் உள்ளது.

எல்லாளின் இறுதி காலத்தில் தான் துத்தகாமினி என்ற 25 வயது சிங்கள மன்னன் குறிப்பிட்ட பகுதியை கைப்பற்றினாலும் மொத்த தமிழ் பரப்புகளை கைப்பற்ற முடியவில்லை.

போர்த்துகீசியர்கள் உள்ளே வந்த (கிபி 1505) வந்து ஆளுமைபடுத்திய வரைக்கும் உள்ளே மாறி மாறி தமிழ் மன்னர்களும் சிங்கள மன்னர்களும் ஆண்டு வந்தாலும் சில குறிப்புகள் மட்டும்.

கிமு 48 முதல் 44 வரைக்கும் ஆண்ட விதவை ராணி அனுலாவின் முக்கிய பொழுது போக்கு உறவு கொள்வதும் முடிந்த வந்த ஆடவர்களை விசம் கொடுத்து கொல்வதும்.

கிபி 459ல் ஆண்டு தத்துசேனா என்பவரின் மாமா மகாசேனா என்பவர் தான் சிங்கள புனித நூலான மகாவம்சம் எழுதியது.  இவர் எழுதிய இந்த நூல் முன்னால் படைக்கப்பட்டு இருந்த தீபவம்சத்தை அடிப்படையாக வைத்து.

1017 ஆம் ஆண்டு சோழர்களான முதலாம் ராசராச சோழனும் அவரது மகன்  ராஜேந்திர சோழனும் மொத்த இலங்கையை தென் இந்தியாவின் கட்டுப்பாட்டில் 37 ஆண்டுகள் வைத்து இருந்தனர். பிடிக்கப்பட்ட ஐந்தாம் ஐந்தாம் மகிந்தா சிறையிலேயே இறந்து போனார்.

கிபி 1055 ஆண்டு முதலாம் விஜயபாகு சிங்களர்களை திரட்டி கைப்பற்றி அனுராதபுரத்திற்கு பதிலாக பொலனருவா என்ற புதிய தலைநகர் உருவாக்கி  ஆண்டார்.

இவரின் வழித்தோன்றல்கள் சிங்கள -பாண்டிய- கலிங்க வம்சமாக திருமண உறவுகள் மூலம், கலந்து அடித்து படிக்கும் போதே கலக்கி விட்டனர். கலங்கிய குட்டையில் வந்த கலப்பினர்கள்.

தொடக்கம் முதல் இன்றைய, பல சிங்கள தலைவர்கள் என அத்தனையும் இந்திய ரத்தமும், தமிழன் ரத்தமும் இணைப்பில் வந்த கலப்பின மக்கள். இன்று வரையிலும் உள்ள பல தலைவர்களின் பூர்வாசிரம வாழ்க்கையையே புடம் போட்டு தாத்தா பாட்டன் வரைக்கு நாம் பந்தியில் படைத்து விட முடியும்?  ஆனால் இடுகையின் தன்னை மாறி விடும்.  மேலும் மேலும் உணர்ச்சி தமிழர்களை வளர்ப்பதாகவே இருந்து தொலைத்து விடும்.

இந்தியாவுடன் பகைமை நட்பும், தமிழர்களை தவிக்க விட்ட வெஞ்சினமும் முழுமையாக நீங்கள் உள்ளே போனால் உங்களுக்கு ஏராள காரண காரியங்கள் புரியும்.  நல்ல மனிதர்களின் எண்ணங்களுக்கும் நாதாரி பிறப்பில் உருவான சிந்தனைகளுக்கும் உள்ள விளக்கங்கள் அது.

சிங்கம் என்ற சிங்களர்கள்,  கலப்பினத்தில் பாதியான தமிழ்வம்சம் பெற்ற புத்திரர்கள்.   இவர்களே உண்மைத்தமிழர்களை பரதேசியாக மாற்றம் அடைய வைத்தவர்கள்.

மொத்த வம்சமே இவ்வாறு தொடர்ந்து வந்த காரணம் ஒன்றினால் மட்டும் தானோ கலங்கடித்தவர்களை கண்டு வீரம் இல்லாமல் கண்ணீர் விட்டு கதறி கண்டவர்களை துணைக்கு அழைத்தார்களோ?

தமிழன் என்பவனுக்கு கண்டங்களும் கடக்கும் தூரம் தான் என்று அன்று நிரூபித்து சோழ பாண்டிய வம்சத்தின் மன்னர்களின் தொடக்க கால புலிக்கொடி அன்று மொத்த இலங்கையிலும் பறந்தது சிறந்தது இருந்தது.  2000 ஆண்டுகள் கழித்தும் கூட இன்றைய கால கட்டத்தில் கூட அந்த புலிக்கொடி மீண்டும் பறக்க முயற்சிக்கின்றது.

ஆனால் வீரம் இல்லாமல் இன்று வரைக்கும் தந்திர சிங்கள (?) தலைவர்கள் எந்திரமாய் வாழ்பவர்களோ, கண்டம் விட்டு கண்டம் பாயும் விஞ்ஞானத்தை மட்டும் வைத்துக்கொண்டு மொத்த தமிழனின் வீரத்தையும் வியந்து பார்த்த தீரமும் புரிகிறது.

Thursday, October 22, 2009

பின்னோக்கி

"எவ்வளவு அடிச்சாலும் இவன் தாங்குறான்டா? இவன் ரொம்ப நல்லவன்டா!" என்ற வசனம் எவ்வளவு நமக்கு சிரிப்பை தந்ததோ அந்த அளவிற்கு உலகத்தில் உள்ள தமிழன் என்ற இனத்திற்கும் இந்த "அடிவாங்குதல்" என்பது இன்று வரையிலும் நடந்து கொண்டு தான் இருக்கிறது,

இலங்கையில் நடந்து கொண்டுருக்கும் நிகழ்வுகள் தொடக்கத்தில் தலைப்புச் செய்தியாக இடம் பிடித்தது. பிறகு படிப்படியாக மாறி இன்று தினந்தோறும் துணுக்குச் செய்தியாக மாறிவிட்டது.

மலேசியா என்பது அன்று முதல் இன்று வரையிலும் உள்ளே "ஒருவிதமாக " நடந்து கொண்டு தான் இருக்கிறது.  ஆனால் தந்திர வலையில் மந்திரமாய் மாயமாய் எல்லாமே வெளியே வந்து விடுவதில்லை.

இந்தியாவிற்குள் உள்ளே மாநிலங்களுக்குள் அனைத்து இடங்களிலும் பண்டிகை கொண்டாட்டங்கள் போல வருடத்திற்கு ஒரு முறை இல்லாவிட்டாலும் " பழைன கழிதல் புதியன புகுதல்"  என்ற கோட்டிபாட்டின்படி மறைமுக கொண்டாட்டங்கள் நடந்து கொண்டே தான் இருக்கிறது.  இருக்கும்.  ஆனால் எதுவுமே முழுமையாக மொத்த பின்புலமும் நம்மிடமும் வந்து சேர்வதில்லை.

அதிகாரம், ஆளுமை, அரசியல் கணக்கு இத்தனைக்கும் மேல் சகோதரத்துவத்தை பேணி காக்க வேண்டிய அவஸ்யமான ஜனநாயகத்தின் மேல் உள்ள அக்கறை.

மென்பொருள் துறையில் அத்தனை இடங்களிலும் கோலோச்சிக் கொண்டுருப்பவர்கள் நம்முடைய தமிழர்கள் என்ற கணக்கு விந்தையானது.  காரணம் இந்தியா என்பதே சிறுபான்மையினரின் கணக்கு கொண்டு தானே அத்தனை ஆள்பவர்களின் அக்கறையும்?    வெளியே படம் காட்டிக்கொண்டு அத்தனை மத மக்களையும் ஏமாற்றிக்கொண்டு இருக்கிறார்கள்?

இன்றைய இலங்கை தமிழர்களின் வாழ்வியல் தடங்களை, பிரச்சனைகளை எந்த பாகுபாடும் இல்லாமல் அத்தனை ஊடகங்களும், சரித்திர சான்றுகளை, பட்டபாடுகள், கொண்ட ஒப்பந்தங்கள், அழிந்த கணக்கு என்று எல்லாவிதங்களிலும் தொடராகவே எழுதி வருகின்றன,

உணர்ச்சி வேக தமிழனாக இருப்பதால் படிப்பதை பாதியில் விட்டு விடுவோம் அல்லது உடனே மறந்து அடுத்த சுவாரசியத்திற்குள் நுழைந்து விடுவோம்.  எல்லா வரலாற்று பக்கங்களிலும் "எதிர்மறை நியாயங்கள்" இருக்கத்தான் செய்கின்றன.



உடனடியாக தவறு என்றோ சரி என்றோ உடனடி தீர்வுக்கு கொண்டுவர முடிவதில்லை.  பிரபாகரன் என்று ஆளுமை என்னைப் போன்ற எத்தனை இளைஞர்களுக்கு ஆதர்சணமோ அந்த அளவிற்கு உள்ளே இன்றுவரையிலும் இன்னல்பட்ட, பாதிக்கப்பட்ட அப்பாவி தமிழர்களின் வாழ்க்கையும் அத்தனை கொடுமையானது?  இன்று வரையிலும் இந்த கடுகு நாட்டுக்குள் நடக்கும் காரமான சமாச்சாரங்கள் கண்ணீரை வரவழைத்தாலும் "இப்படி எல்லாம் கூட மனிதர்கள் தற்போதைய நவீன வளர்ச்சி அடைந்த காலத்திலும் இருப்பார்களா?" என்று அத்தனை இலங்கையில் ஆளுமை செய்தவர்களையும் பார்த்து வியப்பாக இருக்கிறது.

ஆண்ட, ஆள்கின்ற வீபரித மனிதர்களை நாம் சுட்டிக்காட்டுவதற்கு முன் நம்முடைய தமிழ் இனம் என்பதன் தொடக்கம், வாழ்வியல், தடங்கள், ஏன் இன்று வரைக்கும் தொடர்ந்து கொண்ட இருக்கிறது?   என்ன காரணங்கள்?  என்பதை பார்க்க வேண்டும்.

நம்முடைய கைகள் அவர்களை சுட்டிக்காட்டும் ஒரு விரலைப் போல மூன்று விரல்கள் நம்மை நோக்கி பார்க்கின்றது என்பதையும் நாம் மறந்து விடக்கூடாது?



இலங்கை வரலாறு என்பது இந்தியாவின் சுதந்திர வரலாற்றைப் போல புதைக்கப்பட்ட ரகஸ்யங்கள் அல்ல.  இது இன்று வரையிலும் ரத்தமும் சதையுமாய் நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் ஏதோ ஒரு ஊடகத்தின் வழியே உங்களை வந்து தாக்கிக்கொண்டே தான் இருக்கிறது.  உங்களுக்கு அரசியல் ஈடுபாடு , தேவையில்லாத சமாச்சாரங்களில் தலையிட விரும்பாமை என்று எத்தனையோ காரணங்கள் இருந்தாலும்?   ஆனால் இப்போதைய இந்த கால கட்டத்தில் மொத்த தமிழர்களின் வாழ்வியலை நாம் தெரிந்து கொள்ளத்தான் வேண்டும்,

இந்த இடுகைக்காக ,  இலங்கை குறித்து, தலைவர்கள் குறித்து, வேதனைகள், கடிதங்கள், என்று எழுதிய அத்தனையும் மாற்றம் பெற்றுவிட்டது.  காரணம் வாழ்வியலை தெரிந்து கொள்ளவதை விட இது ஒரு பரபரப்புக்குண்டான வார்த்தைகளின் ஜலமாக இருந்து விடக்கூடாது என்பதற்காக.

வெறுப்போ, அச்சமோ. அவசரமோ இல்லை.  இதற்காக உழைத்த உழைப்பு வீணாகிப்போய்விடக்கூடாது என்பதற்காக.

ஆனால்?

"தமிழன் என்ற ஒரு இனம் உண்டு".
"தமிழன் என்று சொல்லடா"  
"வீழ்வது நாமாக இருந்தாலும்"
"முன் தோன்றா மூத்த குடி"
"உலகின் மூத்த மொழி"
 "வள்ளுவத்திற்கு பிறகு வேறொன்றா?"

இன்னும் எத்தனை எத்தனை மொழிகள், பகிர்தல்கள், வாய் மொழிகள்?

ரிஷிகள், ஞானிகள், கணக்குகள் நமக்கு உண்மையான ஞானத்தை முழுமையாக தந்து விடவில்லை. அமைதியாய் வாழ்வதே வாழ்வின் சிறப்பு என்று மட்டுமே சொல்லித்தந்து சென்றவர்கள், அடக்குமுறை நம் மீது திணிக்கப்படும் போது நாம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்?   என்பதைப்பற்றி சரியான புரிதல் ஏதும் அவர்கள் நமக்கு அளித்துச் செல்லவில்லை.

பண்பாடு, கலாச்சாரம், கண்ணியம், கட்டுப்பாடு, ஒழுக்கம் என்ற ஐம்பூதங்களையும் அக்கறையாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்று சொல்லிச் சென்றவர்கள் கரை தாண்டி சென்றவர்களின் வாழ்க்கை கண்ணீரில் மிதக்கும் போது?

அவர்களுக்கு கை கொடுக்க இன்றைய இந்திய தமிழ்நாட்டு தலைவர்கள் போல் யாரும் இருக்க மாட்டார்கள்.  அங்கே இருக்கும் ஒற்றுமையற்ற தலைவர்கள் போலவே, பாதி கடலில் நின்ற வணங்காமண் கப்பல் போல பரிதாபமாய் பாதியில் நிற்கும்.

ஆனால் இன்று எந்த மொழியிலும் காணாத சோகம் தமிழ் மொழியில், அதைப்போலவே உலகில் எந்த இனமும் இந்த அளவிற்கு கேவலம் அடைந்தது இல்லை என்று கூசிப்போகும் அளவிற்கு இலங்கையில் தமிழர்களின் வாழ்வியல் அவலங்கள் நம் கண்முன்னே காட்சியாய் தினந்தோறும் நம்மை வந்து அடைந்து கொண்டுருக்கிறது.

ஏன் என்பதை முதன் முதலில் பண்டையகாலத்து சோழ மரபு என்ற நம்முடைய முன்னோர்களின் பாதையில் இருந்து பயணிக்க வேண்டும்.  பின்னோக்கி பார்த்தால் தான் இன்று உங்கள் முன்னோக்கி விரிந்து பயம் காட்டிக்கொண்டுருக்கும்  காட்சிகளின் உண்மைகள் புரியும்?



ஈழப்பிரச்சனைகளுக்கும் பண்டைய தமிழ் மன்னர்களுக்கும் என்ன சம்மந்தம் என்று கேலி செய்கிறீர்களா?  உங்கள் அத்தனை கேள்விகளுக்கும் இந்த மன்னர்கள் தரும் பதில் மூலம் பிரபாகரன் வரைக்கும், இன்று நானும் சகிப்புத்தன்மையுடன் வாழ்ந்து கொண்டுருப்பது வரைக்கும் புரியும்.  உண்மை,

மூலத்தில் இருந்து முகவரி இழந்து முள் கம்பிகளுக்கு பின்னால் வாழும் வரைக்கும் உண்டான தமிழனத்தின் தொடர் நிகழ்வுகள்

Wednesday, October 21, 2009

இலங்கை + அகதிகள் + கதிகள் = நிர்கதி

ஒவ்வொரு முறையும் இலங்கையில் பிரச்சனை, கலவரங்கள், கோரங்கள் என்று படித்து முடிக்கும் போது அப்போது உடனடியாக நினைவுக்கு 1980 வாக்கில் முந்தைய பிந்தைய, இலங்கையில் இருந்து இந்தியாவிற்குள் வாழ்ந்து கொண்டுருக்கும் அந்த இலங்கை தமிழர்களின் மனோநிலை எப்படி இருக்கும் என்று நினைத்துப் பார்ப்பதுண்டு.  எத்தனை வருடங்கள் என்றாலும் அவர்களின் " தொப்புள் கொடி உறவுகள் அங்கு எப்படி இருப்பார்கள்" ?  என்ற பதைபதைப்பு அவர்களிடம் இருக்குமா? என்று யோசிப்பதுண்டு.

ஆனால் பள்ளியின் தொடக்க நிலையில் ஒரு நாள் திடீர் என்று பசங்களும் பொண்ணுங்களும் திமுதிமுவென்று அத்தனை பெஞ்சுகளிலும் வந்து ஆக்ரமித்தனர்.  நல்ல உயரமும் வேகமான பேச்சும் இருந்த காரணத்தால் தேர்வு ஏதும் இல்லாமலே வகுப்புத் தலைவர்கள் ஆனார்கள்.  உச்சரிப்பு மட்டும் சற்று வித்யாசமாக தொடக்கத்தில் இருந்தது.  ஆனால் அவர்களில் கூட்டணியில் கலந்து விட்ட பிறகு நல்ல சுவாரசியமாக பள்ளி பருவம் அமைந்தது.  அவர்கள் உருவாக்கும் கற்பனை காட்சிகள், எம்.ஜி.ஆர் திரைப்பட சாகசங்கள் அத்தனையும் அவர்களின் பின்னால் செல்வதை சுகமாக கருதியது.  அத்தனை பேர்களுக்கும் அன்று எம்.ஜி.ஆர். தான் கடவுள்.

சிவாஜியைப்பற்றி பேசினால் பிடறி பேந்து விடும்.  அன்று அவர்கள் அத்தனை பேருக்கும் எம்.ஜி.ஆர். ஆதர்சன கடவுளாக ஏன் இருந்தார்? என்பது எனக்கு அன்று புரியவில்லை.  இன்று மொத்த இலங்கை வாழ் தமிழர்களின் பிரச்சனையான வாழ்வியலில் மக்கள் திலகத்தின் பங்களிப்பு என்பதும் அத்தனை ஆச்சரியமாக இருக்கிறது.

எங்கு பார்த்தார்கள்?  எப்படி தெரிந்து கொண்டார்கள் என்பதெல்லாம் தெரியாது?

" என்னடா இலங்கை அகதிகள் அதிகமாக பள்ளிக்கூடத்தில் வந்த சேர்ந்து இருக்கிறார்கள் போல" ?  என்று குடும்பத்தினர் கேட்ட போது கூட இலங்கை சம்மந்தபட்ட விசயங்கள் எதுவும் புரியவில்லை.  எப்போதும் போல இலங்கை என்றால் அப்துல் ஹமீது, ராஜா, திரைப்பாடல்களின் தொகுப்பு, நல்ல தமிழ், கரகரப்பு இல்லாத அலை சேவை என்று மிக உயர்வான எண்ணத்தில் வாழ்ந்த காரணமும் ஒன்று.

ஆனால் அப்போது பள்ளியில் சேர்ந்த எந்த மாணவ மாணவிகளும், இன்று வரையிலும் தமிழ்நாட்டு தமிழ் பெயரில் தான் இருந்தார்கள். இருக்கிறார்கள்.  இலங்கைத் தமிழர்கள் சூட்டிக்கொள்ளும் எந்வொரு ஆளுமையான தமிழ் பெயர்களையும் நான் பார்த்ததே இல்லை.  சோனைமுத்து, தங்கராஜ், லலிதா, சிதம்பரம் இது போன்ற பல பெயர்கள்.

கணிணியில் நேரிடையான தொடர்பு வழியே திடீர் என்று இலங்கை தொடர்பான தமிழர்கள் உள்ளே வரும் போது அறிமுகப்படுத்துவதற்கு முன்பே அவர்களின் பெயர் காட்டி கொடுத்து விடும்.  காரணம் அந்த மாதிரியான தமிழ் பெயர்கள்.

தமிழ்நாட்டில் தமிழர்கள் நினைத்தே பார்க்க முடியாத தமிழ்.

அலங்கோல வாழ்க்கை தந்த பயத்தில் பரிதாபமாய் உள்ளே வந்தவர்கள் இன்றைய சிவகெங்கை புதுக்கோட்டை மாவட்டத்திறகு நடுவில் கோடு பிரிக்கும் இடத்தில் பாகிஸ்தான் எல்லைக்கோடு போல இடத்தில் அவர்கள் வசிப்பிடம் அரசாங்கம் அமைத்து கொடுத்து இருந்தது.

அத்தனை பேர்களிடமும் காலணி என்றால் அடிக்க வருவார்கள். குறுகிய காலத்தில் அதற்கு சுதந்திரபுரம் என்று பெயர் சூட்டி இன்று அவசர உலகில் பேரன் பேத்தி கூட நாற்பது வயதிற்குள் எடுத்து விட்டு ஊரின் உள்ளேயே வாழ்ந்து கொண்டு வெளியே எங்கும் போக விருப்பம் இல்லாமல் உழன்று கொண்டுருக்கிறார்கள்.

வகுப்புத் தலைவனாக கடைசிவரையிலும் கோலோச்சிக்கொண்டுருந்த வை.சிதம்பரத்தை பார்த்த போது கேட்டேன்?

" என்னப்பா ?  எப்பவாவது தாத்தா ஊரை நினைத்து பார்ப்பதுண்டா" ?

ஊரில் இருந்து அரிசி லோடு ஏற்றி திருப்பூருக்கு அனுப்ப ஆவணங்களை சரி பார்த்துக்கொண்டுருந்தவன்,  "  அங்கு நாலு கடை தெரிஞ்சா அறிமுகப்படுத்துடான்னா இப்படி போட்டு அறுத்து எடுக்கிறியே" ?

இன்று அரிசியுடன் மரக்கட்டை தொழிலும் செய்து கொண்டு அத்தனை யூகப்லிட்ஸ் மரங்களுக்கும் மொத்த காட்டு குத்தகைதாரராக ஓரளவுக்கு வாழ்ந்து கொண்டுருக்கின்றான்.

நான் குறிப்பிட்ட சிதம்பரம் மட்டுமல்ல.  தெரிந்த நூற்றுக்கணக்கான இளைஞர்கள், பழக்கத்தில் இல்லாத ஐநூறுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் அத்தனை பேர்களும் அவர்களின் தினந்தோறும் உண்டான வாழ்க்கை போராட்டத்தில் தான் கவனம் கொண்டு வாழ்ந்து வருகிறார்கள்.  நூற்றுக்கும் மேற்பட்ட இருந்த அரிசி ஆலைகள் தொடக்கத்தில் அவர்கள் அத்தனை பேர்களுக்கும் வரம் தரும் காமதேனு பசுவாக இருந்தது.


வெளிவந்துகொண்டுருப்பது தொழிலுக்கான புகை மட்டுமல்ல.  நவீனங்கள் கொடுத்த அடிப்படை மக்களின் வாழ்வியலின் புகைமூட்டமும் கூட.

இன்று நவீன சாதனங்கள் உள்ளே வந்து 50 நெல்மூட்டைகள் மூலம் உள்ளே போய் வெளியேறிக்கொண்டுருந்த அத்தனை அரிசி ஆலைகளும் இன்றைய தினத்தில் வெளிநாட்டு இறக்குமதி சாதனங்கள் மூலம் சரக்கு வாகன புகைமூட்டத்தில் 24 மணிநேரமும் மாடர்ன் மில் என்ற நவீன சித்தாந்தத்தில் அவர்கள் அத்தனை பேர்களின் வாழ்க்கையையும் அழ வைத்துக்கொண்டு இருக்கிறது.

ஊரில் இருந்து நான்கு மைல்கள் தூரத்தில் சுதந்திரபுரம் இருந்தாலும், வேலைக்கு வரும் அத்தனை பேர்களும் அந்த அதிகாலையில் அவசர அவசரமாக வந்து ஆலைகளுக்கு முன்னால் வரிசையில் நிற்பதும், அன்றாட வேலையில் தன்னை தேர்ந்தெடுக்க பேசிக்கொண்டுருப்பதையும் பார்க்கும் போது கதைத்த கதைகள் போய் கண்ணீர் வாழ்வியலாகத் தெரியும்.

ஆனாலும் அவர்களுக்கு எந்த பிரச்சனையும் பெரிதாக இல்லை.  காரணம் பெரிதான ஆசைகளும் இல்லை.  அதே சுதந்திரபுரத்தில் இன்று எல்லா நடிகர்களுக்கும் ரசிகர் மன்றம் இருக்கிறது.  தொடக்கத்தில் வை.சிதம்பரம் " மக்கள் சக்தி இயக்க" தை அறிமுகபடுத்திய போது எழுந்த எதிர்ப்பு இன்னமும் நினைவில் இருக்கிறது.

அவர்களின் மொத்த வாழ்க்கை முறைகளும் மாறிவிட்டது.  மாற்றிக்கொண்டதை போல பிறந்த, பிறக்கின்ற குழந்தைகளின் பெயர்களும் மாறிக்கொண்டே வந்து இன்று த்ரிசா தொடங்கி ஸ்ரீ யில் முடியில் அத்தனை பெயர்களும்.

மூன்று வேளையும் நிம்மதியாக உணவு கிடைக்காதா? என்று ஏங்கும் வாழ்க்கை அமைந்தவர்கள் எங்கே போய் வாழ்வுரிமையைப் பற்றி யோசிக்க முடியும்?

இவர்களின் வாழ்வாதாரம் எவ்வளவோ ஆறுதல் பட்டுக்கொள்ளலாம்.  ஆனால் முகாம் என்ற பெயரில் தினந்தோறும் உள்ளே வெளியே என்று ஆட்டம் காட்டிக்கொண்டுருக்கும் அதிகார வர்க்கத்திற்குள் தன்னை தொலைத்து, வாழ்க்கையையும் தொலைத்துக்கொண்டுருக்கும் எத்தனையோ முகம் தெரியாத அவர்களின் வாழ்வாதாரம் குறித்து எவர் சிந்திக்க முடியும்?

அக்கரையில் இருப்பவர்களின் அழிவுக்கு அபூர்வ சகோதர்கள் காரணம் எனில் இங்கு நம்மைத் தேடி வந்தவர்களை காப்பாற்றவும் முடியாமல் கனிவான வாழ்க்கையையும் அமைத்துக்கொடுக்காத குற்றத்தை எந்த நீதிமன்றத்தில் போய் முறையிட முடியும்?

தமிழ்நாட்டுக்குள் வாழ்ந்து கொண்டுருக்கும் ஒவ்வொரு தனிப்பட்ட தமிழரின் சார்பாளனாகத் தான் சிதம்பரத்தைப் பார்க்கின்றேன்.  நம்முடைய வாழ்க்கையின் நிதர்சனத்திற்காகவே இதை குறிப்பிடுகின்றேன்.

இன்றைய உள்துறை அமைச்சர் எடுத்த முதல் நடவடிக்கை என்ன தெரியுமா?

" ஒரு லட்சம் பேர்கள் வங்க தேசத்தில் இருந்து இந்தியாவிற்கு வந்து போய்க்கொண்டுருப்பது தேவையில்லை.  அது அவஸ்யமும் இல்லை"    என்று அவர் அடித்த ஆப்பு பத்து வருடங்களுக்கு முன்னே ஆணி அடித்து இருந்தால் இன்றைய கல்கத்தா இன்னும் கூட சற்று சிறப்பாய் இருந்து இருக்கும் போல?
உள்ளே வந்தவர்கள் குடியுரிமை வரைக்கும் வாங்கி வைத்துக்கொண்டு வசதியாக வாழ்ந்து கொண்டு மொத்த இந்திய பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக இருந்து கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் மனிதர்கள்?
அவர்கள் காப்பாற்ற எத்தனை ஜீவாத்மாக்கள்.  ஆனால் இங்கு தமிழ்நாட்டில்?

ஓரு லட்சத்திக்குள் குறைவாக இருக்கும் எந்த அகதிகளுக்கும் இன்று வரையிலும் முறையாக வாழ்க்கை மற்றும் அட்டை இல்லை.  இவர்களும் அட்டை புழுவாகவே வாழ பழகிக்கொண்ட காரணத்தால்.
அகதிகளின் ஓப்பந்தம் இன்று வரையிலும் இந்தியா கையெழுத்து இடாமல் இழுத்துக்கொண்டு வந்து கொண்டுருக்கிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
காரணம் என்ன?


அரசியல், திரைஉலகம், எழுத்தாளர்கள், பத்திரிக்கை உலகம், பதிவு உலகம் என்று ஐந்து முனைகளும் இந்த இலங்கை பிரச்சனையை பற்றி அவரவருக்கு உண்டான காரண காரியங்களோடு, அக்கறையோடு, அக்கறையின்மையோடு அணுகிக்கொண்டுருந்தாலும் இன்று வரையிலும் எந்த நம்பிக்கை முனைக்கும் இந்தப் பிரச்சனை போய் சென்று அடையவில்லை.
ஒற்றுமையில்லை.  ஒன்றுபடவில்லை.
ஒரே அணியாய் மாறாத அத்தனைக்கும் பின்னாலும் அரசியல் பிணி மட்டும் தெளிவாக இருக்கிறது என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது?

வீரம் என்பது உண்மை.  அர்பணிப்பு என்பது கூட நூறு சதவிகிதம்.  தமிழீழம் என்ற நோக்கம் கொள்கை என்பதும் அத்தனை உனனதமானது.  சந்தேகம் என்பதே இல்லை. ஆயுதப்போராட்டம் என்பதை மேலோட்டமாக பார்ப்பவர்களுக்கும் அவர்களின் வாழ்வியலின் மொத்த அவலத்தை தொடக்கம் முதல் உள்வாங்கியவர்களுக்கும் நிறைய வித்யாசங்கள் வினோதமான எண்ணங்கள் உருவாகும்?  உருவாக்கும்?

ஆனால் இன்றுவரையிலும் முடியாத கன்னித்தீவு படக்கதை போலவே இந்த இலங்கைத்தீவின் மக்களின் வாழ்வியலின் முடிவும் தெரியமாட்டேன் என்கிறது.

ஏன்? என்ன காரணங்கள்?  யார் பின்னால் உள்ளவர்கள்? வெளியே தெரியாதவைகள் என்ன? புரிய வைத்தது என்ன?

இந்த ஐந்து புரியாத பூதங்களைப் பற்றி தெரிந்து கொள்ள பயணிப்பதே இதன் நோக்கம்.

இந்த தொடர் முடியும் தருவாயில் நான் விரும்புவது ஒரு " செய்தி " கிடைக்க வேண்டும்.  அல்லது ஒரு " தண்டணை " உருவாகி இருக்க வேண்டும்.

" உயர்சக்தி "  உலகில் உண்டு என்று நம்பிக்கை கொண்டு வாழ்பவர்களின் எண்ணங்களில் வேறு என்ன பெரிதாக தோன்றிவிடமுடியும்?

உலகத்தில் பரவியுள்ள தமிழர்களின் பிரச்சனைகள், மொத்த வாழ்வியலின் அவலநிலை.

இன்று நடந்து கொண்டுருக்கும் இலங்கை தமிழர்களின் சிதைக்கப்பட்ட கோர வாழ்க்கைச் சுவடுகளை ஆராய்ந்து தொட்டு தொடர்வது,

தமிழனின் தமிழ்மொழியும் தடுமாற்றமான வாழ்க்கை மொழியும் என்பதன் தொடர் ஓட்டம் இது.




இன்று உங்களுக்கும் எனக்கும் நல்லவர் யார்?  கெட்டவர் யார்? தமிழனத்தின் காவலர்கள் யார்? என்று உணர்த்திக்கொண்டுருப்பவர்கள் ?   புகைப்படம் போல இவர்களின் வாழ்வியலின் அவலமும் கூட?

மூலத்தில் இருந்து முகவரி இழந்து முள் கம்பிகளுக்கு பின்னால் வாழ்வது வரையிலும்