Wednesday, October 21, 2009

இலங்கை + அகதிகள் + கதிகள் = நிர்கதி

ஒவ்வொரு முறையும் இலங்கையில் பிரச்சனை, கலவரங்கள், கோரங்கள் என்று படித்து முடிக்கும் போது அப்போது உடனடியாக நினைவுக்கு 1980 வாக்கில் முந்தைய பிந்தைய, இலங்கையில் இருந்து இந்தியாவிற்குள் வாழ்ந்து கொண்டுருக்கும் அந்த இலங்கை தமிழர்களின் மனோநிலை எப்படி இருக்கும் என்று நினைத்துப் பார்ப்பதுண்டு.  எத்தனை வருடங்கள் என்றாலும் அவர்களின் " தொப்புள் கொடி உறவுகள் அங்கு எப்படி இருப்பார்கள்" ?  என்ற பதைபதைப்பு அவர்களிடம் இருக்குமா? என்று யோசிப்பதுண்டு.

ஆனால் பள்ளியின் தொடக்க நிலையில் ஒரு நாள் திடீர் என்று பசங்களும் பொண்ணுங்களும் திமுதிமுவென்று அத்தனை பெஞ்சுகளிலும் வந்து ஆக்ரமித்தனர்.  நல்ல உயரமும் வேகமான பேச்சும் இருந்த காரணத்தால் தேர்வு ஏதும் இல்லாமலே வகுப்புத் தலைவர்கள் ஆனார்கள்.  உச்சரிப்பு மட்டும் சற்று வித்யாசமாக தொடக்கத்தில் இருந்தது.  ஆனால் அவர்களில் கூட்டணியில் கலந்து விட்ட பிறகு நல்ல சுவாரசியமாக பள்ளி பருவம் அமைந்தது.  அவர்கள் உருவாக்கும் கற்பனை காட்சிகள், எம்.ஜி.ஆர் திரைப்பட சாகசங்கள் அத்தனையும் அவர்களின் பின்னால் செல்வதை சுகமாக கருதியது.  அத்தனை பேர்களுக்கும் அன்று எம்.ஜி.ஆர். தான் கடவுள்.

சிவாஜியைப்பற்றி பேசினால் பிடறி பேந்து விடும்.  அன்று அவர்கள் அத்தனை பேருக்கும் எம்.ஜி.ஆர். ஆதர்சன கடவுளாக ஏன் இருந்தார்? என்பது எனக்கு அன்று புரியவில்லை.  இன்று மொத்த இலங்கை வாழ் தமிழர்களின் பிரச்சனையான வாழ்வியலில் மக்கள் திலகத்தின் பங்களிப்பு என்பதும் அத்தனை ஆச்சரியமாக இருக்கிறது.

எங்கு பார்த்தார்கள்?  எப்படி தெரிந்து கொண்டார்கள் என்பதெல்லாம் தெரியாது?

" என்னடா இலங்கை அகதிகள் அதிகமாக பள்ளிக்கூடத்தில் வந்த சேர்ந்து இருக்கிறார்கள் போல" ?  என்று குடும்பத்தினர் கேட்ட போது கூட இலங்கை சம்மந்தபட்ட விசயங்கள் எதுவும் புரியவில்லை.  எப்போதும் போல இலங்கை என்றால் அப்துல் ஹமீது, ராஜா, திரைப்பாடல்களின் தொகுப்பு, நல்ல தமிழ், கரகரப்பு இல்லாத அலை சேவை என்று மிக உயர்வான எண்ணத்தில் வாழ்ந்த காரணமும் ஒன்று.

ஆனால் அப்போது பள்ளியில் சேர்ந்த எந்த மாணவ மாணவிகளும், இன்று வரையிலும் தமிழ்நாட்டு தமிழ் பெயரில் தான் இருந்தார்கள். இருக்கிறார்கள்.  இலங்கைத் தமிழர்கள் சூட்டிக்கொள்ளும் எந்வொரு ஆளுமையான தமிழ் பெயர்களையும் நான் பார்த்ததே இல்லை.  சோனைமுத்து, தங்கராஜ், லலிதா, சிதம்பரம் இது போன்ற பல பெயர்கள்.

கணிணியில் நேரிடையான தொடர்பு வழியே திடீர் என்று இலங்கை தொடர்பான தமிழர்கள் உள்ளே வரும் போது அறிமுகப்படுத்துவதற்கு முன்பே அவர்களின் பெயர் காட்டி கொடுத்து விடும்.  காரணம் அந்த மாதிரியான தமிழ் பெயர்கள்.

தமிழ்நாட்டில் தமிழர்கள் நினைத்தே பார்க்க முடியாத தமிழ்.

அலங்கோல வாழ்க்கை தந்த பயத்தில் பரிதாபமாய் உள்ளே வந்தவர்கள் இன்றைய சிவகெங்கை புதுக்கோட்டை மாவட்டத்திறகு நடுவில் கோடு பிரிக்கும் இடத்தில் பாகிஸ்தான் எல்லைக்கோடு போல இடத்தில் அவர்கள் வசிப்பிடம் அரசாங்கம் அமைத்து கொடுத்து இருந்தது.

அத்தனை பேர்களிடமும் காலணி என்றால் அடிக்க வருவார்கள். குறுகிய காலத்தில் அதற்கு சுதந்திரபுரம் என்று பெயர் சூட்டி இன்று அவசர உலகில் பேரன் பேத்தி கூட நாற்பது வயதிற்குள் எடுத்து விட்டு ஊரின் உள்ளேயே வாழ்ந்து கொண்டு வெளியே எங்கும் போக விருப்பம் இல்லாமல் உழன்று கொண்டுருக்கிறார்கள்.

வகுப்புத் தலைவனாக கடைசிவரையிலும் கோலோச்சிக்கொண்டுருந்த வை.சிதம்பரத்தை பார்த்த போது கேட்டேன்?

" என்னப்பா ?  எப்பவாவது தாத்தா ஊரை நினைத்து பார்ப்பதுண்டா" ?

ஊரில் இருந்து அரிசி லோடு ஏற்றி திருப்பூருக்கு அனுப்ப ஆவணங்களை சரி பார்த்துக்கொண்டுருந்தவன்,  "  அங்கு நாலு கடை தெரிஞ்சா அறிமுகப்படுத்துடான்னா இப்படி போட்டு அறுத்து எடுக்கிறியே" ?

இன்று அரிசியுடன் மரக்கட்டை தொழிலும் செய்து கொண்டு அத்தனை யூகப்லிட்ஸ் மரங்களுக்கும் மொத்த காட்டு குத்தகைதாரராக ஓரளவுக்கு வாழ்ந்து கொண்டுருக்கின்றான்.

நான் குறிப்பிட்ட சிதம்பரம் மட்டுமல்ல.  தெரிந்த நூற்றுக்கணக்கான இளைஞர்கள், பழக்கத்தில் இல்லாத ஐநூறுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் அத்தனை பேர்களும் அவர்களின் தினந்தோறும் உண்டான வாழ்க்கை போராட்டத்தில் தான் கவனம் கொண்டு வாழ்ந்து வருகிறார்கள்.  நூற்றுக்கும் மேற்பட்ட இருந்த அரிசி ஆலைகள் தொடக்கத்தில் அவர்கள் அத்தனை பேர்களுக்கும் வரம் தரும் காமதேனு பசுவாக இருந்தது.


வெளிவந்துகொண்டுருப்பது தொழிலுக்கான புகை மட்டுமல்ல.  நவீனங்கள் கொடுத்த அடிப்படை மக்களின் வாழ்வியலின் புகைமூட்டமும் கூட.

இன்று நவீன சாதனங்கள் உள்ளே வந்து 50 நெல்மூட்டைகள் மூலம் உள்ளே போய் வெளியேறிக்கொண்டுருந்த அத்தனை அரிசி ஆலைகளும் இன்றைய தினத்தில் வெளிநாட்டு இறக்குமதி சாதனங்கள் மூலம் சரக்கு வாகன புகைமூட்டத்தில் 24 மணிநேரமும் மாடர்ன் மில் என்ற நவீன சித்தாந்தத்தில் அவர்கள் அத்தனை பேர்களின் வாழ்க்கையையும் அழ வைத்துக்கொண்டு இருக்கிறது.

ஊரில் இருந்து நான்கு மைல்கள் தூரத்தில் சுதந்திரபுரம் இருந்தாலும், வேலைக்கு வரும் அத்தனை பேர்களும் அந்த அதிகாலையில் அவசர அவசரமாக வந்து ஆலைகளுக்கு முன்னால் வரிசையில் நிற்பதும், அன்றாட வேலையில் தன்னை தேர்ந்தெடுக்க பேசிக்கொண்டுருப்பதையும் பார்க்கும் போது கதைத்த கதைகள் போய் கண்ணீர் வாழ்வியலாகத் தெரியும்.

ஆனாலும் அவர்களுக்கு எந்த பிரச்சனையும் பெரிதாக இல்லை.  காரணம் பெரிதான ஆசைகளும் இல்லை.  அதே சுதந்திரபுரத்தில் இன்று எல்லா நடிகர்களுக்கும் ரசிகர் மன்றம் இருக்கிறது.  தொடக்கத்தில் வை.சிதம்பரம் " மக்கள் சக்தி இயக்க" தை அறிமுகபடுத்திய போது எழுந்த எதிர்ப்பு இன்னமும் நினைவில் இருக்கிறது.

அவர்களின் மொத்த வாழ்க்கை முறைகளும் மாறிவிட்டது.  மாற்றிக்கொண்டதை போல பிறந்த, பிறக்கின்ற குழந்தைகளின் பெயர்களும் மாறிக்கொண்டே வந்து இன்று த்ரிசா தொடங்கி ஸ்ரீ யில் முடியில் அத்தனை பெயர்களும்.

மூன்று வேளையும் நிம்மதியாக உணவு கிடைக்காதா? என்று ஏங்கும் வாழ்க்கை அமைந்தவர்கள் எங்கே போய் வாழ்வுரிமையைப் பற்றி யோசிக்க முடியும்?

இவர்களின் வாழ்வாதாரம் எவ்வளவோ ஆறுதல் பட்டுக்கொள்ளலாம்.  ஆனால் முகாம் என்ற பெயரில் தினந்தோறும் உள்ளே வெளியே என்று ஆட்டம் காட்டிக்கொண்டுருக்கும் அதிகார வர்க்கத்திற்குள் தன்னை தொலைத்து, வாழ்க்கையையும் தொலைத்துக்கொண்டுருக்கும் எத்தனையோ முகம் தெரியாத அவர்களின் வாழ்வாதாரம் குறித்து எவர் சிந்திக்க முடியும்?

அக்கரையில் இருப்பவர்களின் அழிவுக்கு அபூர்வ சகோதர்கள் காரணம் எனில் இங்கு நம்மைத் தேடி வந்தவர்களை காப்பாற்றவும் முடியாமல் கனிவான வாழ்க்கையையும் அமைத்துக்கொடுக்காத குற்றத்தை எந்த நீதிமன்றத்தில் போய் முறையிட முடியும்?

தமிழ்நாட்டுக்குள் வாழ்ந்து கொண்டுருக்கும் ஒவ்வொரு தனிப்பட்ட தமிழரின் சார்பாளனாகத் தான் சிதம்பரத்தைப் பார்க்கின்றேன்.  நம்முடைய வாழ்க்கையின் நிதர்சனத்திற்காகவே இதை குறிப்பிடுகின்றேன்.

இன்றைய உள்துறை அமைச்சர் எடுத்த முதல் நடவடிக்கை என்ன தெரியுமா?

" ஒரு லட்சம் பேர்கள் வங்க தேசத்தில் இருந்து இந்தியாவிற்கு வந்து போய்க்கொண்டுருப்பது தேவையில்லை.  அது அவஸ்யமும் இல்லை"    என்று அவர் அடித்த ஆப்பு பத்து வருடங்களுக்கு முன்னே ஆணி அடித்து இருந்தால் இன்றைய கல்கத்தா இன்னும் கூட சற்று சிறப்பாய் இருந்து இருக்கும் போல?
உள்ளே வந்தவர்கள் குடியுரிமை வரைக்கும் வாங்கி வைத்துக்கொண்டு வசதியாக வாழ்ந்து கொண்டு மொத்த இந்திய பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக இருந்து கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் மனிதர்கள்?
அவர்கள் காப்பாற்ற எத்தனை ஜீவாத்மாக்கள்.  ஆனால் இங்கு தமிழ்நாட்டில்?

ஓரு லட்சத்திக்குள் குறைவாக இருக்கும் எந்த அகதிகளுக்கும் இன்று வரையிலும் முறையாக வாழ்க்கை மற்றும் அட்டை இல்லை.  இவர்களும் அட்டை புழுவாகவே வாழ பழகிக்கொண்ட காரணத்தால்.
அகதிகளின் ஓப்பந்தம் இன்று வரையிலும் இந்தியா கையெழுத்து இடாமல் இழுத்துக்கொண்டு வந்து கொண்டுருக்கிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
காரணம் என்ன?


அரசியல், திரைஉலகம், எழுத்தாளர்கள், பத்திரிக்கை உலகம், பதிவு உலகம் என்று ஐந்து முனைகளும் இந்த இலங்கை பிரச்சனையை பற்றி அவரவருக்கு உண்டான காரண காரியங்களோடு, அக்கறையோடு, அக்கறையின்மையோடு அணுகிக்கொண்டுருந்தாலும் இன்று வரையிலும் எந்த நம்பிக்கை முனைக்கும் இந்தப் பிரச்சனை போய் சென்று அடையவில்லை.
ஒற்றுமையில்லை.  ஒன்றுபடவில்லை.
ஒரே அணியாய் மாறாத அத்தனைக்கும் பின்னாலும் அரசியல் பிணி மட்டும் தெளிவாக இருக்கிறது என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது?

வீரம் என்பது உண்மை.  அர்பணிப்பு என்பது கூட நூறு சதவிகிதம்.  தமிழீழம் என்ற நோக்கம் கொள்கை என்பதும் அத்தனை உனனதமானது.  சந்தேகம் என்பதே இல்லை. ஆயுதப்போராட்டம் என்பதை மேலோட்டமாக பார்ப்பவர்களுக்கும் அவர்களின் வாழ்வியலின் மொத்த அவலத்தை தொடக்கம் முதல் உள்வாங்கியவர்களுக்கும் நிறைய வித்யாசங்கள் வினோதமான எண்ணங்கள் உருவாகும்?  உருவாக்கும்?

ஆனால் இன்றுவரையிலும் முடியாத கன்னித்தீவு படக்கதை போலவே இந்த இலங்கைத்தீவின் மக்களின் வாழ்வியலின் முடிவும் தெரியமாட்டேன் என்கிறது.

ஏன்? என்ன காரணங்கள்?  யார் பின்னால் உள்ளவர்கள்? வெளியே தெரியாதவைகள் என்ன? புரிய வைத்தது என்ன?

இந்த ஐந்து புரியாத பூதங்களைப் பற்றி தெரிந்து கொள்ள பயணிப்பதே இதன் நோக்கம்.

இந்த தொடர் முடியும் தருவாயில் நான் விரும்புவது ஒரு " செய்தி " கிடைக்க வேண்டும்.  அல்லது ஒரு " தண்டணை " உருவாகி இருக்க வேண்டும்.

" உயர்சக்தி "  உலகில் உண்டு என்று நம்பிக்கை கொண்டு வாழ்பவர்களின் எண்ணங்களில் வேறு என்ன பெரிதாக தோன்றிவிடமுடியும்?

உலகத்தில் பரவியுள்ள தமிழர்களின் பிரச்சனைகள், மொத்த வாழ்வியலின் அவலநிலை.

இன்று நடந்து கொண்டுருக்கும் இலங்கை தமிழர்களின் சிதைக்கப்பட்ட கோர வாழ்க்கைச் சுவடுகளை ஆராய்ந்து தொட்டு தொடர்வது,

தமிழனின் தமிழ்மொழியும் தடுமாற்றமான வாழ்க்கை மொழியும் என்பதன் தொடர் ஓட்டம் இது.
இன்று உங்களுக்கும் எனக்கும் நல்லவர் யார்?  கெட்டவர் யார்? தமிழனத்தின் காவலர்கள் யார்? என்று உணர்த்திக்கொண்டுருப்பவர்கள் ?   புகைப்படம் போல இவர்களின் வாழ்வியலின் அவலமும் கூட?

மூலத்தில் இருந்து முகவரி இழந்து முள் கம்பிகளுக்கு பின்னால் வாழ்வது வரையிலும்

4 comments:

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

பலரும் தொடுவதற்கு அஞ்சும் ஒரு தொடரைக் கையில் எடுத்துள்ளீர்கள்.

1947ல் நடைபெற்ற சம்பவங்களை, உங்கள் எழுத்தின் மூலம் தெரிந்து கொண்ட நான், இந்தத் தொடரிலும் என் அறிவை வளர்த்துக்கொள்ள மிகவும் எதிர்பார்க்கிறேன். தொடருங்கள்.

ஈரோடு கதிர் said...

ஏன் நாம் இப்படி இருக்கிறோம்?

velji said...

துக்க வீட்டில் சம்மந்தப் பட்டவர்களின் கையை சிறிது நேரம் பிடித்துக்கொண்டு நிற்க முடியும்.இங்கே அதற்கும் வழியில்லை.
நீங்கள் சொன்ன ஐந்து பூதங்கள் மேலும் கொலுத்துப்போகும்..சம்காரம் செய்ய ஆளின்றி.

Jerry Eshananda said...

ஐயா, வேதனை ததும்பும் இந்த பதிவை எழுதியதற்காக "உங்கள் கரங்களை முத்தமிடுகிறேன்."