Saturday, October 24, 2009

அது ஒரு கனா காலம்

தமிழர்களின் வரலாற்றில் தொடக்கத்தில் இடம் பிடித்த அத்தனை மன்னர்களும் சமய மாற்றத்தை உருவாக்கியவர்களாகவும், தன்னம்பிக்கையின் உருவகமாகவும் சிறந்த புத்திசாலிகளாகவும் தான் காட்சியளிக்கிறார்கள்.

"கிமு 5 ஆம் நூற்றாண்டில் புத்தரின் சமகாலத்தில் சோழ நாட்டு தலைநகராம் பூம்புகாரில் இருந்து கிளம்பி ஆயிரக்கணக்கான மைல்கள் விரிந்து கிடக்கும் 16 வட இந்திய அரசுகளின் மேல் படை எடுத்து நடத்திச் சென்றான் கரிகாற்பெருவளத்தான்.

எதிர்த்தவர்கள் அனைவரையும் வழி எங்கும் வென்று காட்டினான்.  அவனை அடிபணிந்த வஞ்சிர, மகத, அவந்தி நாடுகள் முறையே கொற்றப்பந்தர், பட்டிமண்டபம், தோரண வாயில்,

இவற்றை அவன் காலடியில் காணிக்கையாக்கி சமரசம் செய்து கொண்டனர். ஆண்டு கொண்டுருந்தவர்கள்  இறுதியில் இமயத்தின் உச்சி வரையில் சென்று அங்கு தமிழர் இலச்சினையை பொறித்து திரும்பினான்.

கரிகாலனின் இந்த இமாலாய வெற்றியை சிலப்பதிகாரம், பட்டினப்பாலை, கலிங்கத்துப்பரணி ஆகிய இலக்கியங்கள் விரிவாக காட்டுகின்றன.  இவனே உலகத்தின் முதன் அணைக்கட்டாகிய கல்லணையை காவிரிக்கு குறுக்கே கட்டியவன்.

பாண்டிய நாட்டை 2000 ஆண்டுகளுக்கு முன்னால் தன்னுடைய ஆளுமைக்குள் கொண்டுவர இரண்டு பேரரசர்களும் ஐந்து சிற்றரசர்களும் ஒரே சமயத்தில் படையெடுத்து வந்தனர்.  ஆனால் அப்போது அரியனையில் வீற்று இருந்தவன் இளைஞனுக்கும் சிறுவனுக்கும் இடைப்பட்ட வயதில் உள்ள நெடுஞ்செழியன். அவனுடைய அறைகூவலை படித்துப் பாருங்கள்?                    

"நாடு பிடிக்க வந்த பகைவரை நான் சிதறடிக்காவிட்டால் என் குடிமக்கள் என்னைக் கொடுங்கோலன் என்று தூற்றட்டும்.  யாசிப்போர்க்குத் தானம் செய்ய முடியா வறுமை என்னைச் சூழட்டும்"                                                            

சேரன்,சோழன் இரண்டு பேரரசுகளையும், தித்தியன், எழினி,எருமையூரன்,இருங்கோவண்மான்,பொருநன் ஆகிய ஐந்து சிற்றரசர்களையும் சிதறடித்து பாண்டிய ராஜ்யத்தை காப்பாற்றினான்.  2000 ஆண்டுகளுக்கு முன் இளைய வயதுக்கு கீழ் இருந்த அவனை "தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்"  என்று வர்ணித்த சங்கத்தமிழ் இலக்கியத்தில் உள்ள நெடுநல்வாடை, மதுரைக்காஞ்சி இரண்டுக்கும் "பாட்டுடைத்தலைவனாக" புகழடைந்தான்.

ஆனால் இந்த சங்ககாலத்து சோழ மரபு கி.பி.250க்குப் பிறகு வரலாறு சுவடின்றி மறைந்து போனது. அதற்குப்பிறகு, 600 ஆண்டுகள் அந்நியர்களின் ஆட்சி.  இறுதியில்  300 ஆண்டு கால பல்லவர் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்து 96 விழுப்புண்களை மார்பில் பெற்ற விஜயாலன் (கிபி 850 )சோழர் காலத்தை உருவாக்கி போட்ட ராஜபாட்டை தான் பின்னால் வந்த இராஜராஜ சோழனும், இராசேந்திரனும், குலோத்துங்கனும் வந்து சோழப் பேரரசை உலக வல்லரசாக்க சாத்தியமானது.

புதிய கட்டிடக்கலை நுட்பத்தை அன்றே உலகிற்கு படைத்த தஞ்சை பெரிய கோவில் தந்தவர் யார் தெரியுமா?  இந்த விஜயாலனின் பேரன் ராஜராஜன்.(கிபி 985 /1014)

நவீன உபகரணங்கள் இல்லாமல் உருவாக்கிய கலைசிற்பத்தையும், கொண்டு வந்து சேர்த்த அந்த கற்களின் வினோத வடிவங்களையும் எந்த மேல் நாட்டு படிப்பு மூலம் இவர்கள் கற்றார்கள்?   இன்றைய நவீன கட்டிடக்கலை நுட்பத்தை அன்றை உலகிற்கு பறைசாற்றியவன் ராஜராஜன். விஞ்ஞான அறிவு ஏதும் தேவையில்லை.  எங்கள் மெய்ஞான அறிவுக்கு  நிகர் ஏது? என்று பறைசாற்றியவன்.  விஞ்ஞானம் வளராத காலத்திலும் தன்னை நிரூபித்தவன்.

இந்த ராஜராஜனின் புதல்வன் இராஜேந்திரன் 1000 ஆண்டுகளுக்கு முன்னால் 3000 கடல் மைல்கள் தாண்டி பிடித்த அத்தனை தேசங்களிலும் புலிக்கொடி பறக்க வைத்த வீர மன்னன்.  வீரம் என்றே என்னவென்று தெரியாமல் வெளியில் வராமல் சாதனங்களை வைத்து சாகசம் காட்டும் இன்றைய அறிவீலிகளின் செயல்பாடுகள் உங்களைப் பொறுத்த வரையிலும் புத்திசாலித்தனம் என்பதாகவே இருக்கட்டும்.  ஆனால் வீரம் என்ற ஒரு வார்த்தை தந்த ஆளுமையில் அவன் வென்ற நாடுகளின் பட்டியல் என்பது ஒரு நீள பட்டியல்.  படிக்கும் போது பரவசமாய் இருக்கிறது. கடல் பயணம், சென்ற நான்கு வகையான படைகள், ஆள், அம்பாறை, சேனை, எடுப்பு தொடுப்புகள் என்று மொத்த முன்னேற்பாடுகளையும் உங்கள் நினைவில் கொண்டு வாருங்கள்.

வாழ்க்கை என்பது வீரம்.  வீரம் என்பது அர்பணிப்பு.  அர்பணிப்பு என்பது மொத்த ஆளுமை.

உள்ளே படையெடுத்து வந்த ஔரங்கசீப் தில்லி பாதூசாவாக கோலோச்சிக்கொண்டுருந்த சமயம் அது.  தான் இருந்த இடத்தில் இருந்து கொண்டே தன்னுடைய ஒரு பாதுகையை மட்டும் ஒரு பல்லாக்கில் ஏற்றி அனுப்புவார்.  அந்த பாதுகை ஒவ்வொரு மன்னரின் ஆளுகைக்குள் போய் வரும். அங்கு ஆண்டு கொண்டுருக்கும் மன்னன்  அந்த பாதுகையை தொட்டு வணங்க வேண்டும்.  அதன் அர்த்தம் "நான் உங்களுக்கு அடிமை".

அந்த பாதுகை நாயக்கரின் அரசவைக்கும் வந்தது.  மங்கம்மா பெற்றெடுத்த வீரன் மூத்து வீரப்பன் வந்த பாதூகையை ஒரு காலில் மாட்டிக்கொண்டு "மற்றொன்று எங்கே?" என்று வினவ ஓளரங்கசீப் அவனின் வீரத்தையும் தன்மானத்தையும் பார்த்து தன்னுடைய பாதுகை பயணத்தை நிறுத்திக்கொண்டார்.

முத்து வீரப்பன் இளமையிலேயே இறந்து போய்விட அடுத்து பட்டத்துக்கு வர வேண்டிய அவன் மகனோ 3 மாதக்குழந்தை.  ஆனால் பாட்டி மங்கம்மா அந்த 3 மாதக்குழந்தையை அரியணையில் ஏற்றி, அந்த கால விதவை என்ற கொடுமையையும் மீறி 18 வருடங்கள் மிகத் திறமையாக ஆட்சி புரிந்தார்.  ஓளரங்கசீப் விழுங்கத் துடித்துக்கொண்டுருப்பதையும் மீறி?

மேலே சொன்ன உதாரணங்கள் வீரம் என்பதன் குறியீடாக வைத்து வாழ்ந்து தமிழர்களின் வரலாற்றில் சாதனை சிகரம் படைத்தவர்களின் சில உதாரணங்கள்.

தன்னம்பிக்கை வழியே வாழ்ந்து வரலாறு படைத்த ஒரு உதாரணம் இது.

குலோத்துங்கச் சோழனிடம் அரசவைப்புலவராக இருக்கும் தன்னுடைய தந்தையின் சோர்வைக்கண்டு மகன் கலக்கமுற்று காரணம் கேட்டான்?

மன்னன் தன்னிடம் கேட்ட மூன்று கேள்விகளுக்கு தன்னால் பதில் அளிக்கமுடியவில்லை என்றதும் நான் நாளை வந்து சொல்கிறேன் என்று  சென்றான் அந்த சிறுவன். இறுதியில் திருக்குறள் மூலமே அதை வென்றான்.

வானத்தை விட பெரிது?

செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது

உலகத்தை விடப் பெரியது?

காலத்தினால் செய்த நன்றி சிறிது எனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது

கடலை விடப் பெரியது?

பயன்தூக்கர் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலிற் பெரிது

சிறுவன் மந்திரியாக பதவியேற்றான்.  தன்னுடைய 63ம் வயதில் பெரிய புராணம் எழுதிய சேக்கிழார் தான் இவர்.

கற்கோவில் மூலம் சிற்பக்கலையை பறைசாற்றியவன்  அருள் மொழி என்ற இராஜராஜ சோழன்.  தமிழர்களின் இலக்கிய கலைசிறப்பை மேம்படுத்த புதிய சொற்கோவில் கட்டியவர் தான் இந்த  சேக்கிழார்.

9 comments:

பிரபாகர் said...

வரலாற்று சம்பவங்களுடன் மிக அருமை அய்யா. நம் முன்னோர்களின் பெருமைகளை படிக்கும் பொது மனம் பெருமையுறுகிறது. நடப்பு நிகழ்வுகளை மறந்து உங்களோடு தொடர உத்தேசம்... அருமை அய்யா, தொடருங்கள்...

பிரபாகர்.

நிகழ்காலத்தில்... said...

//தமிழர்களின் வரலாற்றில் தொடக்கத்தில் இடம் பிடித்த அத்தனை மன்னர்களும் சமய மாற்றத்தை உருவாக்கியவர்களாகவும், தன்னம்பிக்கையின் உருவகமாகவும் சிறந்த புத்திசாலிகளாகவும் தான் காட்சியளிக்கிறார்கள்.//

படிக்க படிக்க உற்சாகமாக இருக்கிறது..

அது ஒரு கனாக் காலமாக இருந்தாலும் அதுதான் நம்மை வாழ வைத்துக் கொண்டு இருக்கிறது..

ஷண்முகப்ரியன் said...

"நாடு பிடிக்க வந்த பகைவரை நான் சிதறடிக்காவிட்டால் என் குடிமக்கள் என்னைக் கொடுங்கோலன் என்று தூற்றட்டும். யாசிப்போர்க்குத் தானம் செய்ய முடியா வறுமை என்னைச் சூழட்டும்"

மக்கள் கொடுங்கோலன் என்று தூற்றுவதற்கு ஆளுபவர்கள் எவ்வளவு அஞ்சினார்கள் என்ற ஒன்று போதும்,இன்றைய அவலங்களைப் புரிந்து கொள்ள.

காலத்துக்குத் தேவையான தொடர்,ஜோதிஜி.உங்கள் ஆராய்ச்சி பிரம்மிக்க வைக்கிறது.

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

ஜோதிஜி.. உங்கள் எழுத்தும் நடையும் உணர்ச்சி பொங்கச் செய்கிறது.

இதையெல்லாம் படிக்கும் பொழுது நாம் எவ்வளவு மழுங்கிக்கிடக்கிறோம் என்று புரிகிறது. வெட்கமாகவும் இருக்கிறது.

ஜோதிஜி said...

மூன்று முருகன்களும் சேர்ந்து பிரபாகரன் குறித்து அவரின் வீரம் ஏன் இன்று தோற்றுப்போனது குறித்து ஆராய்ந்து செல்வதையும், பேசுவதும் அந்த பிரபாகரன் தொடர்கிறோம் என்று சொல்வதும் விடியல் வரும் என்று நம்பிக்கைக்கு இட்டுச் செல்கிறது.

ஜோதிஜி said...

ஆனால் காலவெள்ளத்தில் அக்கரையில் தவித்துக்கொண்டுருப்பவர்களை போல் அக்கரையுடன் கவனித்துக்கொண்டுருப்பவரையும் இந்த கனா காலம் நிகழ்காலத்தில் கொண்டு வந்து சேர்க்கும் என்று நம்பிக்கையுடன் பயணிக்கின்றேன்.

அது ஒரு கனாக் காலம் said...

தமாதத்திற்கு மன்னிக்கவும், .... அறிமுகமே , அருமையா இருக்கு. தொடர்ந்து வருகிறோம் .

ஜோதிஜி said...

அக்கரையில் வாழ்ந்து கொண்டுருப்பவர்களின் கலக்கம் போல என்னை கலங்க வைத்து விட்டீர்கள்? பாதையை புரிந்து கொண்டமைக்கு நன்றி. பயணிப்பது விவேகத்துடன் தான்.

பின்னோக்கி said...

வீரத்தில் குறைந்தவர்கள் இல்லை மன்னர்கள். ஆனால், ஆளுக்கு 10 பேர் என கைபர்-போலன் கணவாய்களை காக்க அனுப்பியிருந்தால் இந்தியாவின் நிலைமை வேறாகி இருக்கும். மாமன் - மச்சான், சாதி சண்டை இந்த மன்னர்களுக்கு முக்கியமானது, இந்தியா இரண்டாம் பட்சமானது.