Saturday, October 03, 2009

மக்கள் திலகம் காட்டிய வழி

புதைக்கப்பட்ட தெரியாத ரகஸ்யங்களின் தொடர்ச்சி 39

சுதந்திரம் வாங்கியதுமே உருவான டெல்லி கலவரத்தை எப்படியும் உடனடியாக கட்டுக்குள் கொண்டு வரவேண்டும் என்று எல்லா வகையிலும் பிரதமர் நேரு முயற்சித்தார். எந்த சந்தேகமும் வேண்டாம். பதவி ஆசையை விட மக்கள் மேல் கொண்ட உண்மை நலன் என்று கூட அதை எடுத்துக்கொள்ளலாம். அத்தனை முயற்சிகளுமே விழலுக்கு இறைத்த நீராக தன்னுடைய கையை விட்டு போய்க்கொண்டுருப்பதை தௌிவாக மவுண்ட் பேட்டன் பிரபுவிடம் உண்மையை எடுத்துரைத்தார். தன்னுடைய கையை விட்டு போய்க்கொண்டுருப்பத்தை பார்த்த நேரு வேறு வழியே இல்லாமல் மவுண்ட்பேட்டன் பிரபுவை அழைத்தார்.

"நீங்கள் விரும்பது போல் மறுபடியும் என்னிடமே மொத்த பொறுப்பையும் ஒப்படைத்தால் உங்களைப்பற்றிய வெகு ஜன அபிப்ராயம் பாதிக்கப்படும் " என்றார் மவுண்ட் பேட்டன் பிரபு.

ஆனால் நேரு எந்த வித உள்நோக்கமும் இல்லாமல்,

" அனுபவம் என்பதே எங்கள் யாரிடமும் இல்லை. வேறு வழி என்பதும் எங்களுக்குத் தெரியவில்லை. எல்லாவகையிலும் பல போர்க்களங்ளிலும் எத்தனையோ நெருக்கடியிலும் பணியாற்றியாற்றியவர் நீங்கள். உங்கள் பின்னால் நாங்கள் நிற்கிறோம். உங்கள் உத்தரவுபடி நாங்கள் அனைவரும் செயல்படுகிறோம் " என்று பலவாறு நிர்ப்பந்திக்க நேருவின் விருப்பத்தை நிறைவேற்றும் பொருட்டும் உடனடியாக ஒரு அவசர கமிட்டி அமைத்தார் மவுண்ட் பேட்டன் பிரபு.

" மந்திரி சபை முழுவதையுமே நீங்கள் உபயோகித்துக்கொள்ளலாம் " என்றார் பிரதமர் நேரு.

" அவர்களால் பயனிருக்காது. பெரிய குழப்பமும் சிக்கலும் ஏற்படும். மந்திரிகளால், என்ன செய்ய முடியும்? எனக்கு வேலை செய்பவர்கள் வேண்டும். தங்களது பணி என்ன என்பதை உணர்ந்தவர்கள் வேண்டும். நான் குறிப்பிடும் ஆட்களை உடனே இங்கு வரும்படி ஏற்பாடு செய்யுங்கள் " என்றார் மவுண்ட் பேட்டன் பிரபு.

அமைக்கப்பட்ட அவசர கமிட்டியில் சிவில் போக்குவரத்து, ரெயில்வே தலைவர், மெடிக்கல் மற்று ரெட் கிராஸ் அமைப்பின் தலைவர்கள், அங்கங்ககே சிறிது மூச்சு விட்டுக்கொண்டுருந்த உளவுத்துறை அமைப்புகள். ஓவ்வொருவருக்கும் உறுதியான கட்டளைகள். நிறைவேற்றுகின்றனரா என்பதை இடையில் பரிசோதிக்க குறிப்பிட்ட அமைப்பு. வழிகாட்ட மவுண்ட் பேட்டன் பிரபு நியமித்த உதவியாளர்கள். ஆலோசனை மற்றும் ஆலோசிக்க வௌ்ளை அதிகாரிகள்.

எந்த தயவும் சாக்கு போக்கும் இல்லை. ரிசல்ட் மட்டுமே முன் நிறுத்தப்பட்டது.

இதை ஏன் இங்கு குறிப்பிடக் காரணம்? தலைவன் என்ற பதவிக்கு இந்திய ஜனநாயத்தில் கடைக்கோடி கிராமத்தான் வரைக்கும் உரிமையிருக்கிறது. எந்த பின்புலமும் இல்லாமல் கூட மேல் வட்டம் வரைக்கும் நகர்ந்து வந்து குப்பை கூட கோபுரத்தில் அமர்ந்து விடக்கூடிய வாய்ப்பு அதிகம். ஆனால் தலைவன் என்பவன் நெருக்கடியில் எவ்வாறு செயல்படுகின்றான். நாட்டை மறுபடியும் எப்படி பழைய சகஜ நிலைமைக்கு கொண்டு வருகின்றான் என்பதைப் பொறுத்தே அவன் குப்பையாக உதிர்ந்து விடக்கூடியவனா அல்லது கோபுரத்தில் இருக்கக்கூடிய கலசமாக எந்த காலத்திலும் வணங்கக்கூடிய நிலைமையில் இருப்பவனா என்பதை மவுண்ட் பேட்டன் பிரபு நிர்வாகத்திறமையை வைத்து புரிந்து கொள்ள முடியும்.

இந்தியா அகன்ற வல்லரசு. அதிகமான மனிதவளம். இல்லாத கனிம வளமே இங்கு இல்லை என்ற பொக்கிஷ பூமி. அரசாங்கம் என்பது வெறும் கடமை. ஆனால் நம்முடைய அன்றாட கடமைகள் என்பது நம்முடைய அதிகமான முயற்சிக்குப் பிறகே இந்தியாவில் கை கூடுகின்றது.

மற்ற வௌிநாடுகளில் தனி மனிதனின் மீது உண்டாக அக்கறை என்பது நம்முடைய இந்தியாவில் என்று கைகூடுமோ? காலம் காலமாக இதற்கு சொல்லப்பட்டு வரும் காரணம் மிகப் பெரிய நாடு?

ஆனால் நீங்கள் இங்கு மற்றொன்றையும் கவனிக்க வேண்டும். மற்றவர்கள் எங்களைப் பற்றி கேவலமாக நினைத்தாலும் பராவாயில்லை. உங்கள் அனுபவம் தான் எங்களுக்கு முக்கியம் என்று இரு புறமும் நேருவும், படேலும் முடிந்தவரை உதவி செய்து கொண்டுருக்க அன்றைய தினத்தில் மவுண்ட் பேட்டன் பிரபு உழைத்த உழைப்பை நாம் அனைவரும் தெரிந்து கொள்ளத்தான் வேண்டும்.

அவர் வார்த்தைகளால் சொன்னதைப் போல. " எல்லாவற்றையும் கட்டுப்படுத்த வேண்டும். தீர்மானமான முறையில் திட்டமிட்டுச் செயலாற்ற வேண்டும் "

திட்டமிடுதல் என்பதன் முழு அர்த்தத்தை நேருவும் படேலும் அன்று தான் முழுமையாக உணர்ந்தார்கள். போர்க்ககால நடவடிக்கை என்பதை அன்று தான் உணர்ந்தார்கள். மவுண்ட் பேட்டன் அமைத்திருந்த பிரும்மாண்டமான சார்ட் ரூம் சுத்தமான மடிப்புக் கலையாத உடையணிந்த ராணுவ அதிகாரிகள், உளவுத்துறை இன்னும் பல துறை அதிகாரிகளால் 24 மணி நேரமும் இயங்கிக்கொண்டுருந்து. எந்த அதிகாரியும் அரை மணி நேரம் கூட ஓய்வு எடுக்க முடியவில்லை.

தவறு?

எவரையும் மவுண்ட் பேட்டன் பிரபு விட்டு வைக்கவில்லை. மொத்தக் கதையும் தெரிந்தால் சிரித்து வயிறு புண்ணாகி விடும். காரணம் எந்த உயர் அதிகாரிகளும் அன்று வெறும் மனிதர் தான். பதவி என்பது இரண்டாம் பட்சம் தான். வேலை மட்டும் முக்கியம் மவுண்ட் பேட்டன் பிரபுக்கு.

இந்த ஒரு சம்பவத்தை மட்டும் பார்த்து விடலாம்.

நேருவின் உதவியாளார் எச்.வி.ஆர். அய்யங்களார் (விமானப் போக்குவரத்து இயக்குநர்) விமானம் மூலம் அனுப்பவேண்டிய முக்கியமான மருந்துக்களை அனுப்ப மறந்து விட்டார். மவுண்ட் பேட்டனுக்கு வந்ததே கோபம்.

"மிஸ்டர் அய்யங்கார். நீங்கள் இங்கிருந்து உடனே விமான நிலையத்திற்கு போகிறீர்கள். நீங்களே அருகிலிருந்து குறிப்பிட்ட மருந்துகளுடன் அந்த விமானம் கிளம்பும் வரையில் அங்கேயே இருக்கப் போகிறீர்கள். விமானம் கிளம்பிச் சென்று விட்டது என்று என்னிடம் மறுபடியும் அறிவிக்கும் வரை நீங்கள் சாப்பிடவோ, தூங்கவோ மாட்டீர்களே தானே? " என்றார் மவுண்ட் பேட்டன் பிரபு.

இவர் ஒருவர் மட்டுமல்ல. அன்று டெல்லியில் நடந்து கலவரத்தை ஒரு கட்டுக்குள் கொண்டு வர முயற்சித்த முயற்சியில் பங்கெடுத்த அத்தனை அதிகாரிகளுமே மவுண்ட் பேட்டன் பிரபுவின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியவில்லை.

மொத்த அகதிகளின் இடப்பெயர்ச்சிகளை விட டெல்லி நிலவரத்தை ஒரு கட்டுக்குள் கொண்டு வர அதிக முயற்சி எடுத்தார். காரணம் டெல்லி என்பது மொத்த உடம்புக்கு தண்டு வடம் மாதிரி. பல இடங்களில் பணியாற்றிக்கொண்டுருந்த அத்தனை முக்கிய இராணுவ அதிகாரிகளும் டெல்லிக்கு வரவழைக்கப்பட்டனர். ரோட்டில் கிடப்பாறு அற்று கிடந்த அத்தனை பிணங்களையும் நீக்க சுத்தப்படுத்த அதிக கவனம் எடுத்துக்கொண்டார். தன்னுடன் தன்னுடைய மனைவியையும் இணைத்துக்கொண்டார். சிகிச்சைக்குண்டான அத்தனை முன்னேற்பாடுகளையும் எட்வினா கவனித்துக் கொண்டார்.

டெல்லிக்கு வௌியே உடனடி அகதி முகாம். மவுண்ட் பேட்டன் அமைத்து இருந்தார். சார்ட் ரூமில் ஒரு தடவை நேருவும், படேலும் உள்ளே நுழைந்த போது தலை சுற்றி கீழே விழாத குறைதான். மொத்தமாக பஞ்சாபிலும், டெல்லியும் கலவரத்தின் கோரத்தை உணர்ந்து இருந்தாலும் மொத்தத்தையும் ஒரே இடத்தில் ஒரு மேப்பின் வழியே கண்டபோது அதிர்ச்சியில் உறைந்து விட்டனர்.

ஒரு அகதிகள் கூட்டத்தில் மட்டும் எட்டு லட்சம் பேர். நடுவில் ரவி, சட்லெஜ், பியாஸ் ஆகிய நதிகள். மற்ற கிளைநதிகள், பெரிய கால்வாய்கள் இவற்றை கடக்க விசைப்படகோ, பாய்மர படகோ கிடைக்காமல் நாள் கணக்கில் வாரக்கணக்கில் கொத்து கொத்தாய் மனித கூட்டங்கள்.

ஆமாம். நேற்று வரையில் குடியும் குடித்தனமுமாக செழிப்பான விவசாயிகளாக, வியாபாரிகளாக, தொழிலாளர்களாக, செல்வந்தர்களாக வாழ்ந்தவர்கள். அத்தனை பேரும் எல்லவாற்றையும் இழந்து விமானத்தின் வழியாக வீசி எறியப்பட்ட உணவுப் பொட்டலங்களுக்காக மிருகங்களைப் போல ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்டு ஓலமிடும் அவலம்.

இந்திய சுதந்திரத்திற்கும் மவுண்ட் பேட்டன் பிரபு பெருமையை இத்தனை விலாவாரியாக விளக்குவதற்கும் என்ன பொருத்தம்?

பம்பாய் (பாம்பாய்) வெடிகுண்டு கலவரம், பாபர் மசூதி கலவரம், பம்பாய் கலவரங்கள், வட கிழக்கு மாநில ஆயுத புரட்சிகள் அத்தனையும் நினைவுக்கு கொண்டு வாருங்கள். ஆண்ட, ஆண்டு கொண்டுருக்கும் அத்தனை தலைவர்களையும் அவர்களின் பங்களிப்புகளையும் நினைவில் கொள்ளுங்கள். நம்முடைய தலைவர்கள் அத்தனை பேருமே நடந்த நிகழ்வுகள் மூலம் கற்றுக் கொண்டவர்களா? இல்லை இன்றுவரையிலும் நமக்கு கற்று கொடுத்துக்கொண்டுருப்பவர்களா?

கற்றுக்கொடுப்பவர்கள் என்றால் இளவரசி டயானா இறந்த இடத்தில் இரண்டு மணிநேரத்திற்குள் சராசரி போக்குவரத்தை உருவாக்கிய ஆளுமைப்பண்பும் அதிகார வர்க்க பங்களிப்பும் இருக்க வேண்டும். கற்றுக் கொடுத்துக் கொண்டுருந்தால் புயல் மழை வந்தால் முடிந்தவரை உங்களை உடமையை எடுத்துக்கொண்டு மேடான பகுதிக்குச் சென்றுவிட வேண்டும். கலவரம் என்றால் முடியும் வரையில் வீட்டுக்குள்ளே முடங்கிக்கொள்ளுங்கள்.

காரணம் ஜனநாயம் தந்த அருமைப்பண்பு இது. மொத்தத்தில் சகிப்புத்தன்மையுடன் கூடிய "சகோதரத்துவம் ".

ஆமாம் நீங்கள் தான் சரிபார்த்துக்கொள்ள வேண்டும்?

இப்போது நீங்கள் உணரக்கூடும் தலைவன் என்பவன் எந்த தகுதியில் இருக்க வேண்டும்?

அச்சத்தை பரிசாக தரத் தயாராய் இருக்கும் சீனா ஒரு பக்கம். பரிகாசகத்தையும் பயத்தையும் தந்து கொண்டுருக்கும் பாகிஸ்தான் ஒரு பக்கம். நட்பா? வெறுப்பா என்பதை உணர்த்தாமலே மற்றொரு பக்கம் வங்காளம், பர்மா. ஆனால் இவர்களை விட எப்போதுமே இன்னலைத் தவிர வேறு ஒன்றையும் உங்களுக்குத் தரத் தயாராய் இல்லை என்று கங்கணம் கட்டிக்கொண்டு ஒரு இனத்தையே கரு அறுத்துக்கொண்டுருக்கும் இலங்கை.

ஆனால் நம் தலைவர்கள்?

தலை இல்லா முண்டம். தடுமாற்றம் இல்லை. தன்னலம் மட்டுமல்ல ஒவ்வொரு அடியிலும். மொத்தமாய் சுயநலம். இருக்கட்டுமே. 2000 கோடியில் சிலை எழுப்புவோம். சில்லறை சுகங்களையும் அனுபவிப்போம். சகிப்புத்தன்மை உங்களுக்கு. உங்களை சாகடிக்க வரம் கொண்டுவந்த அவதாரம் எங்களுக்கு.

தேன் கூடு thamizmanam.com/bloglist.php?id=5625

No comments: