Saturday, January 31, 2015

வளர நினைக்கும் இளைஞர்களின் கையேடு

எப்பேர்ப்பட்ட மோசமான குணாதிசயங்கள் கொண்டவருடன் பழகினாலும் தன் சுயபுத்தியை இழக்காமல் தன் நிலையை எந்தசூழ்நிலையிலும் கடைசி வரை மாற்றிக் கொள்ளாமல் அனைத்தையும் வேடிக்கை பார்க்கும் மனோநிலையில் இருக்கும் 22 வருட கடின உழைப்புடன் கூடிய அனுபவம் கொண்ட ஜோதிஜி எழுதியிருக்கும் “ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள்” என்ற தொடரை ஒரு அத்தியாயம் கூட விடாமல் கவனமாக வாசித்தேன். 

நான் வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கை, நான் சந்திக்கும் மனிதர்கள், நான் சார்ந்திருக்கும் தொழில் என்பதனை இந்த தொடர் மூலம் என்னால் மீள் ஆய்வு செய்து கொள்ள முடிந்தது.  இந்தத் தொடர் மூலம் தனிப்பட்ட முறையில் நான் கற்றதும் பெற்றதும் ஏராளம். என் பார்வையில் சில விமர்சனக் கருத்துக்களை மட்டும் இங்கே எழுதி வைக்க விரும்புகின்றேன்.

1. ஒரு தொழிற்சாலை நிர்வாகியின் அனுபவத்தொடர் என்பதா?  

2. ஒரு தொழிற்சாலை நிர்வாகியின் மனிதவளம் தொடர்பான அனுபவங்கள் மற்றும் ஆலோசனைகள் ;தொடர் என்பதா? 

3. மனிதர்களையும் அவர்களின் குணாதிசயங்களையும் அலசி ஆராயும் ஒரு சக மனிதரின் அனுபவக்குறிப்புகள் என்பதா? 

4. 22 வருடங்களுக்கும் மேலாக இருந்துவரும் தொழிலில் தான் கண்ட மனிதர்களின் ஏற்றஇறக்கங்களை பதிவு செய்யும் தொடர் என்பதா? 

5. ஆயத்த ஆடைத்தொழிலின் தலைநகரம் திருப்பூரைப் பிடித்துப் பார்த்த நாடித் தொடர் என்பதா? 

6. தான் கடந்து வந்த 22வருட திருப்பூர் வாழ்க்கையின் வாழ்வியல் தொடர் என்பதா? அல்லது

7. திருப்பூர் தொழிலதிபர்களின் வாழ்ந்த வீழ்ந்த கதையை சொல்லும் தொடர் என்பதா? 

8. வாழ்க்கையின் ஏற்ற இறக்கங்களைச் சொல்லி வாழ்க்கையை புரிந்துகொள்ளச் சொல்லும் வாழ்வியல் நன்னெறித் தொடர் என்பதா? 

9. எல்லாம் கலந்து கட்டிய சரம் என்பதா? 

என்று சத்தியமாக நம்மால் ஒரு முடிவுக்கு வர இயலவில்லை. அந்த அளவிற்கு வார்த்தைகளை வைத்து ஜோதிஜி விளையாடி இருக்கிறார்.

எழுதச்செல்லும் முன்பு எழுத வேண்டிய விசயத்தை மனதில் ஆழ்ந்து உள்வாங்கி அத்துடன் தனது கருத்துக்களையும் சரியான முறையில் எழுதியதால் இத்தொடர் ஒரு நாட்குறிப்பு போலவோ அல்லது ஒரு கட்டுரை போலவோ இல்லாமல் ஒவ்வொரு வார்த்தையையும் கவனத்துடன் படித்துச்செல்லும் அளவிற்கு அவரது எழுத்து நடை அமைந்திருப்பது மிகச்சிறப்பு. 

“வாழ்க்கை என்பதை புரிந்து வாழ்பவர்களுக்கு கொள்கையில் சமரசம் என்பதே இருக்காது. வாழ்க்கையின் மிகப்பெரிய சவால் என்பது தங்களுக்கான திறமையை அடையாளம் கண்டு கொள்வதே ஆகும். உங்களுக்கு உண்டான நேர்மை குறித்து உங்களுக்கே அக்கறை இல்லை என்றால் அது என்றாவது ஒரு நாள் மானங்கெட்ட மனிதர்களின் பட்டியலில் சேர்த்துவிடும் என்பதை நினைவில் வைத்திருக்கவும்” என்று வாழ்வியலை பதிவு செய்திருக்கும் விதம் அருமை.

“தர்மம் நியாயம் அறம் என்பதெல்லாம் அன்றும் இன்றும் பலரின் வாழ்க்கையில் வெறும் வார்த்தைகள் மட்டுமே. பணம் என்ற காகிதத்திற்காக இதன் சுகம் என்ற குறுகிய வட்டத்திற்காக எந்த எல்லைக்கும் போகலாம் என்பதாகத்தான் இங்கே பலரின் கொள்கைகளும் உள்ளது” என்று மனித மனங்களை வெளிப்படுத்தியிருக்கும் விதம் அருமை.

“ஓரு நிர்வாகத்தின் வெற்றி என்பது தனி மனித உழைப்பை மட்டும் சார்ந்தது அல்ல. அது பலருக்கு கொடுக்கப்படுகின்ற பயிற்சியினால் உருவாக்கப்படுகின்ற கூட்டுக்கலவை. அதன் மூலம் கிடைப்பதே மொத்த வெற்றி. ஒரு நிர்வாகத்தின் வளர்ச்சி வீழ்ச்சியடைய பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் முக்கியமான முதன்மையான காரணமாக இருப்பது மனித மனங்களை கையாளத் தெரியாத பட்சத்தில் வீழ்ச்சி விரைவாகும்”.

“அரசியலில் அவ்வப்போது பலியாடுகள் தேவைப்படுவதைப் போல நிர்வாகத்திலும் பலி கொடுத்தால் தான் நிர்வாகம் அடுத்த நிலைக்கு நகரும் என்றால் கொடுத்தே ஆக வேண்டும்.இது வெளியே சொல்லமுடியாத நிர்வாக விதிமுறை.ஒரு சிறந்த நிர்வாகி என்பவருக்கு முதல் தகுதியே நெருக்கடியான சூழ்நிலையில் உருவாகும் பிரச்சனைகளை எப்படிக் கையாள்கின்றார் என்பதை வைத்தே முதலாளி அவரைப்பற்றி முடிவுக்கு வருகின்றார்“ என்று நிர்வாகவியலை விளக்கியிருக்கும் விதம் அருமையிலும் அருமை..

“ஒருவர் வாழ்வில் தென்படும் சிறிய வெளிச்சம் தான் மிகப் பெரிய பாதையைக் காட்டுகின்றது. தன்னம்பிக்கையோடு உழைக்கத் தயாராக இருப்பவனுக்கு இங்கு ஏதோவொரு சமயத்தில் வழி கிடைக்கத்தான் செய்கின்றது” என்று நம்பிக்கையூட்டுகிறார்.

“நாம் எந்தப் பதவியில் இருந்தாலும் எந்த இடத்திலும் எந்தச் சூழ்நிலையிலும் நாம் இயல்பான மனிதராகக் கற்பனை செய்து கொண்டு வாழ்ந்தால் மட்டுமே நம் வாழ்க்கையை பதவியை நம்மால் காப்பாற்றிக் கொள்ள முடியும். சிறப்பான அங்கீகாரம் கிடைத்து விட்டது என்று இறுமாப்பில் நாம் நம்மை மாற்றிக் கொண்டால் அடுத்து ஒரு ஆப்புக் காத்திருக்கின்றது என்று அர்த்தம். இது தவிர ஒவ்வொரு சூழ்நிலையிலும் நாம் ஒவ்வொரு இடத்திலும் உள்ள மனிதர்களுடன் பேசினால் மட்டுமே அவர்களைப் பற்றிப் புரிந்து கொள்ள முடியும். நம் பதவி சார்ந்து ஒரு இறுக்கத்தை நாமே உருவாக்கிக் கொண்டே இருந்தால் அது பலவிதங்களில் நம்மைப் பல மனிதர்களிடத்தில் இருந்து அந்நியமாக வைத்து விடும் ஆபத்துள்ளது” என்று எச்சரிக்கவும் செய்கிறார்.

“ஒருவரின் தனிப்பட்ட பழக்கவழக்கம் மாறும் போது அவரால் எடுக்கப்படும் முடிவுகளும் மாறுகின்றது.'ஒழுக்கம் உயிரை விட மேலானது' என்று வள்ளுவர் சொன்னதன் காரணத்தை எவரும் யோசிப்பதே இல்லை.ஆனால் ஒரு மனிதனின் அனைத்து தோல்விகளும் அவனின் ஒழுக்கம் சார்ந்த நடவடிக்கை தொடங்கி வைக்கின்றது. அவனுடைய ஆசைகள் அதனை விரைவு படுத்துகின்றது. இது தான் சரியென்று அவனது பேராசை உறுதிப்படுத்துகின்றது. இதன் வழியே சென்று அழிந்தவர்கள் தான் இங்கே முக்கால்வாசி பேர்கள் உள்ளனர்”.

இவ்வளவுதான் திருப்பூர் என்று எளிமையாக புரிய வைத்துவிட்டீர்கள் ஜோதிஜி.

தொழிலையும் விளக்கி அதிலிருக்கும் மனித மனங்களையும் விளக்கி திருப்பூரில் உள்ள தொழில் நிறுவனங்கள் சார்ந்த செயல்பாடுகளை எழுதியுள்ள ஜோதிஜியின் “ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள்” என்பது வளர நினைக்கும் ஒவ்வொரு இளைஞரின் கைகளிலும் வைத்திருக்க வேண்டிய கையேடு ஆகும்.

தான் சாப்பிட்ட இட்லி சட்னி சாம்பாரையும் தான் பார்த்த சினிமாவையும் ரசித்து எழுதும் வலையுலகத்தில் வித்தியாசமாக ஒரு கனமான விசயத்தை இவ்வளவு அருமையாக எழுத முடியும் என்று எழுதிக்காட்டிய அன்புச்சகோதரர் ஜோதிஜி உங்களுக்கு என் அன்பான வாழ்த்துக்களும் வணக்கங்களும்.

“ஒரு நிறுவனத்தை விட்டு வெளியே வந்தவுடன் அவர்கள் பலமுறை மீண்டும் அழைத்தும் அந்தப்பக்கம் திரும்பிப் பார்ப்பதும் இல்லை என்ற கொள்கையைத் தொடக்கம் முதல் கடைபிடித்து வருகின்றேன்.ஒரு நிறுவனத்தை விட்டு நகர்ந்து வந்த பிறகு ஏதோவொரு இடத்தில் அடையாளம் தெரியாத தொழிலாளர் உண்மையான அக்கறையோடு என்னைப் பற்றி எங்கள் குடும்பத்தைப் பற்றி அக்கறையோடு விசாரிக்கின்றார்கள். "நீங்க இருந்த வரைக்கும் நாங்க நன்றாக இருந்தோம்" என்று சொல்கின்ற அவர்களின் அந்த வார்த்தைகள் தான் இன்னமும் என்னை இந்தத் துறையில் இயங்க வைத்துக் கொண்டேயிருக்கின்றது”. 

“கோடி கோடியாய் சேர்த்தவனும் இறுதியில் திருப்பூரில் மின் மயானத்திற்குத்தான் செல்லப் போகின்றான்.நானும் அங்கே தான் செல்லப் போகின்றேன்.கோடிகளைச் சேர்த்து வைத்தவனின் வாரிசு அவனை எளிதில் மறந்து விடக்கூடும்.ஆனால் என் கொள்கைகள் என் வாரிசுகளை வழி நடத்தும்.அவர்களும் பலரின் வாழ்க்கைக்கு உதவக் கூடியவர்களாக இந்தச் சமூகத்தில் எதிர்காலத்தில் செயலாற்றுவார்கள் என்ற ஆழ்ந்த நம்பிக்கை எனக்குள் உண்டு”

அன்புச்சகோதரர் ஜோதிஜி இதுதான் உங்களது 22 ஆண்டு கால உழைப்பிற்கான சம்பளம்.

ஆம். நம்பிக்கை தானே வாழ்க்கை. 

உங்கள் நல்ல எண்ணங்கள் எந்த அளவுக்கு நீங்கள் சார்ந்திருந்த தொழிலாளர்களுக்கு உதவியாய் இருந்துருக்கும் என்பதனை உங்கள் சத்தியமான வார்த்தைகள் மூலம் உணர்ந்து கொண்டேன். வாசிக்கும் எங்களைப் போன்றவர்களுக்கு நீங்கள் கடத்திய உணர்வுகள் என்பது இன்னும் சில மாதங்கள் அதன் தாக்கம் எனக்குள் இருப்பதைப் போல உங்களால் பலன் அடைந்தவர்களின் ஆசிர்வாதம் நிச்சயம் உங்கள் தலைமுறைகளை வாழ வைக்கும் என்று உறுதியாய் நானும் நம்புகின்றேன்.

நன்றி ஜோதிஜி

மாரியப்பன் ரவீந்திரன். மதுரை.

அலைபேசி எண் 944 27 38 002


தொடர்புடைய பதிவுகள்


பேசா பொருளை பேசு

இது மனிதர்களின் கதை

குறிப்புகளின் குறிப்புகள்

Wednesday, January 28, 2015

குறிப்புகளின் குறிப்புகள்


ஒருபுறம் பலகோடி ரூபாய்கள் புரளும் போட்டியும் சவாலும் நிறைந்த துறையில் மிக முக்கியப் பதவி, மறுபுறம் குடும்பத்தோடு போதிய நேரம் அளிக்கும் பொறுப்பான குடும்பத்தலைவன். மீதி இருக்கும் நேரத்தில் கடினமான பல விசயங்களை இணையத்தில் பகிர்ந்து கொள்ளும் ஒரு தீவிரமான பதிவர். இப்படிப் பல அவதாரம் எடுக்கும் நண்பர் ஜோதிஜியின் அடுத்த படைப்பு "ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள்" என்ற மின்னூல்.

ஜோதிஜி பொழுதுபோக்காக எழுதுவது இல்லை, அப்படிப் படிப்பவர்களுக்காக அவர் எழுதுவதும் இல்லை. அவர் எழுதுவது எல்லாம் மிகுந்த ஆராய்ச்சியும், கடுமையான உழைப்பையும் கேட்கின்ற களங்கள்.

அவருக்கு மிகவும் பழக்கப்பட்ட களம்தான் - திருப்பூரும், ஆயத்த ஆடைகள் சார்ந்த உலகமும். டாலர் நகரத்தின் தொடர்ச்சி என்றே இந்த நூலை எடுத்துக் கொள்ளலாம். குடிசைத் தொழில் போல ஆரம்பித்து, இன்று பல்லாயிரம் கோடி புழங்கும் அளவிற்கு வளந்த தொழில், அதோடு வளர்ந்த நகரம், பணப் பரிமாற்றம் நடக்கும் போது மாறும் மனித மனம், அதில் நடக்கும் நாடகங்கள் என்ற பலவிதப் பரிணாமங்களைக் காட்டிச் செல்கிறார் ஜோதிஜி.

அளவுக்கு மீறிய பணம் புழங்கும்போது, ஏற்படும் கலாசார அதிர்வுகள், வாழ்க்கைமுறையின் மாற்றங்கள், அதனால் ஏற்படும் உறவுச் சிக்கல்கள் இவை எல்லா இடத்திற்கும் எல்லா மனிதர்களுக்கும் பொதுவான பாதிப்பு. வளரும் பருவத்தில் சரியான முறையில் வளர்க்கப்படுபவர்கள் இந்தச் சிக்கல்களை எளிதாக எதிர்கொண்டு வென்று விடுகின்றனர். ஆனால் பலர் இந்தச் சூழலில் சிக்கி வரைமுறை இல்லாது மாட்டி சீரழிந்து சின்னாப்பின்னம் ஆகிவிடுகின்றனர்.

எத்தனை எத்தனை மனிதர்கள், அதில் அவர்கள் காட்டும் முகங்கள் - எல்லாப் பெருமையையும் தனக்கென ஆக்கி, எல்லாத் தோல்விக்கும் அடுத்தவர்களைப் பலிஆடாக்கும் மனிதர்கள், கிடைக்கும் இடத்தில எல்லாம் வழிமுறை பற்றிய சிந்தனையே இல்லாது பணத்தை மட்டுமே துரத்தும் ஆட்கள், எப்போதோ அடைந்த வெற்றியின் வரலாற்றில் வாழும் மனிதர்கள் - அநேகமாக நாம் தினம் தினம் காணும் மனிதர்கள் தான். இவர்களை ஆவணப் படுத்தும் முயற்சியில் வெற்றி அடைந்து இருக்கிறார் நூலாசிரியர்.

நான் அறிந்து தொழில் சாம்ராஜ்யங்களின் வரலாறு எழுதப்பட்டு இருக்கிறது. வெற்றி பெற்ற தொழிலதிபர்கள் வரலாறும் பதிவு செய்யப்பட்டு உள்ளது. ஆனால் ஒரு தொழில்நகரின் வரலாறு என்று பார்த்தால் அநேகமாக அதன் முதல் பெயராக ஜோதிஜியின் பெயர்தான் இருக்கும் போல.

வாழ்த்துகள் ஜோதிஜி

ramachandranwrites (பிகேஆர்)

Tuesday, January 27, 2015

எதிர்கால விருப்பம்

வணக்கம், 

புத்தாண்டு வாழ்த்துக்கள்.

ஆயத்த ஆடை சமூகத்தின் சிக்கல்களுக்கு விடை காண விழையும் தேடல் தாகத்துடன் இருக்கும்  தனிமனிதர்களின் பிரதிநிதியாக உங்கள் பதிவுகள் இருக்கின்றன.  இந்த சமூகத்தில்  பொருளாதார அடிப்படயிலாலான காரண காரிய உறவுகள் நிரந்தர வெற்றிக்கு வழிகோலுவதில்லை.

தேவைப்பட்ட மனிதர்களுக்கு பயனற்றவர்களாகி  வேரோடு பிடுங்கி எறியப்பட்ட மரண வலியினை உணர முடிகிறது. இங்கு அனைத்து சிக்கல்களுக்கும் தற்காலிகமாக நிவர்த்திக்கப்பட்டு புதிய பிரட்சினைகளுக்கு அடியெடுத்துக் கொடுத்துகொண்டிருக்கின்றன. இந்தத் தற்காலிக நிவாரணம் எச்சரிக்கை மணியை அனைத்து வைப்பது போலத்தான். 

இங்கு பெரும்பாலான முதலாளிகளும்  உழைப்பாளிகளும்  முடிவுகள் எடுப்பதில் கடந்த கால அனுபவ அறிவை மட்டும் நம்பிக்கொண்டு புதியனவற்றை ஏற்றுக்கொள்ளாத சமூகமாகத்தான் இன்னும் இருந்துகொண்டிருக்கின்றது. பழக்கத்தில் இருக்கக் கூடாதவற்றைப் பின்பற்றுவதால் தொழில் ரீதியான விபத்துகள் இழப்புகளை அதிகம் ஏற்படுத்துகின்றன. உற்பத்தி முறைகள் மரபு மாரதவைகளாக இன்னமும் இருக்கின்றன. இதனால் தொழில் மட்டும் வளர்ச்சி அடைந்திருக்கிறது தொழிற்சாலைகள் நீண்ட காலம் வாழ்வது இல்லை. 

சிறிய வேர்களை வைத்துகொண்டு பெரிய மரங்கள் வளர முடியாது. வலுவில்லாத வேர்கள் பெரிய மரங்களைச் சுமக்க முடிவதில்லை. நபர்களைச் சார்ந்து நிற்பதை தவிர்க்கமுடிவதில்லை. நபர்களைச்  சார்ந்த தொழிற்சாலைகளின் வளர்ச்சி பாகுபாடின்றி பரஸ்பர துரோகத்தில் வீழ்ந்து விடுகின்றன.

தொன்று தொட்டு ஒரு குறிப்பிட்ட விஞ்ஞானத்தில்  வரப்போகிற தலைமுறை முந்தைய தலைமுறையின் (கற்பித்தல் மூலமாக இல்லாமல்) அனுபவத்தினை  புலப்படாத தொடர்பில் பெற்றுக்கொண்டிருக்கிறது.  அந்த விஞ்ஞானம் முதிர்ச்சியடையாத ஒன்று. எதுவும் ஒரு குறிப்பிட்ட ஊருக்குச் சொந்தமானதல்ல. 

வானம் பார்த்த பூமியாக கார்காலத்தில் பருத்தி, எள், சோளம் கம்பு ராகி போன்ற பயிர்களை விதைத்து விவசாயத்தைத்  தொழிலாகக் கொண்டு சிரமப்பட்டு வாழ்ந்தது வந்த  மூதாதையர்களின் மண்தான்  திருப்பூரும்.  காவிரியும் தாமிரபரணியும் முல்லைபெரியாரும்  பாயும் ஊரில் வயலில் நடவு செய்துவிட்டு காலாற  இருந்தவர்கள்  அல்ல திருப்பூர் மக்கள். பஞ்சாலைகளில் இராப்பகலாக உழைத்தவர்களின் வாரிசுகள்தான் பெரும்பாலான பழைய முதலாளிகள். ஒவ்வொரு முதலாளியின் பின்னாலும் சிறந்த உழைப்பாளியின் அனுபவக் கதை இருக்கும்.  ஒவ்வொருவரும் உழைப்பாளியாகச் சுரண்டப்பட்டுத்தான் முதலாளியானார்கள். அவர்களுடைய உழைப்புதான் இங்கு வந்தாரை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது. 

நபர்களைச் சாராத  தொழில் நுட்பம் சார்ந்த புதிய அணுகுமுறை பின்பற்றப் பட வேண்டும். இந்த சமூகத்தில் தற்காலிக வெற்றியாளர்களின், புத்திசாலிகளின் அவநம்பிக்கை விஞ்யான ரீதியான அணுகுமுறைகளைத் தடைசெய்கிறது. பாரம்பரியமாக வந்த பல வற்றை நாம் மறு பசிசீலனை செய்ய வேண்டும். அனுபவத்திற்கும் புதுமைக்கும் எல்லை பிரிக்கப்பட வேண்டும். 

அனுபவத்தை ஆதரிக்கும் அதே வேளையில் பாரம்பரியத்தை துடைத்துப் போட்டு சுத்தப்படுத்தி காலத்திற்கு ஏற்ப புதுமையைப் புகுத்திக்கொண்டே இருக்கவேண்டும். 

இந்த சுழற்சி நடைபெறாத நிறுவனங்கள் சிறிய வேர்களைகொண்டு வளரும் மரங்கள் போன்றதுதான். 

தான் யாரென்று தெரியாமல் யாரைப் போலவோ எதுவாகவோ ஆகவேண்டும் என்று இலக்கு மட்டும் வைத்தவர்கள் ஒரு கட்டத்திற்கு மேல் தோல்வியில் தான் முடிந்திருக்கிறார்கள். நமது இருப்பைத் தெரிவதுதான் இந்த மாற்றத்தின் துவக்கம்.பல்வேறு நிறுவனங்களின் வெற்றி தோல்வி குறித்த பல்வேறு ஆதாரங்களை, தகவல்களைத் திரட்டி அது குறித்து ஆய்வுகள் செய்ய வேண்டும். உலகம் முழுவதும் பயன்படுத்தப்படும் ஆயத்த ஆடை உற்பத்தி முறையை ஒருங்கிணைத்து முற்றிலும் புதிய அணுகுமுறையைக் கொண்டுவரவேண்டும்.

அதை நோக்கிய பதிவுகள் எதிர்காலத்தில் உங்களிடம் இருந்து வரவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.

கடந்த காலஅனுபவங்களைச்  சுவாரசியமாகச்  சொல்வது போல் இதனையும் முயற்சி செய்தால்  உங்களால் திருப்பூரின் வருங்காலச் சந்ததி மேலும் பயன்பெறும்.

நன்றி, 

இப்படிக்கு 

சமகால திருப்பூர் பயணி





கம்யுனிச சித்தாந்தம் குறித்த மேலோட்டமான பார்வை கூட இல்லாமல் திரு. ராஜா அவர்கள் விமர்சனம் செய்துள்ளார் என்று படுகிறது. மிக சுருக்கமாக, கம்யுனிசம் என்பது உடல் உழைப்புக்கும் முளை உழைப்பிற்கும் சமமான பிரதிபலன் கிடைக்கச் செய்வது. ஏற்றத்தாழ்வுகள் இல்லாத மனித சமுதயத்தை உருவாக்குவது. திரு ஜோதிஜி எழுப்பியிருக்கும் கேள்விகளுக்கு கம்யுனிசத்தை குறை கூறுவது மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுபோட முனைவது போன்றது. 

திருப்பூரின் இன்றைய வளர்ச்சிக்கு கம்யுனிஸ்டுகள் முக்கிய பங்கு வகித்திருக்கிறார்கள் வகித்துக்கொண்டு இருக்கிறார்கள். திருப்பூரின் துவக்ககால தொழில் வளர்ச்சியின் பொழுது தொழிலாளர்களின் உரிமைக்காக பல போராட்டங்களைச் செய்து ஊதிய உயர்வு உள்ளிட்ட பல சலுகைகளை பெற்றுத் தந்து இருக்கிறார்கள். 

ஒருகாலத்தில் உள்ளூர் மக்களால் மட்டுமே செய்துவந்த இந்தத் தொழில் பல மாவட்டத்தினரையும் ஏன் பல மாநிலத்தவரையும் இங்கு வந்து பிழைப்பதற்கு நம்பிக்கை ஏற்படக் காரணமாய் இருந்தவர்கள் திருப்பூர் கம்யுனிஸ்டுகள். பல்வேறு ஊர் மக்கள் பல்வேறு அரசியல் கட்சிகளைச் சார்ந்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்ததன் விழைவு அவர்கள் இயக்க வளர்ச்சிக்குப் பாதகமாக ஆனது வேறு நிகழ்வு. 

கம்யுனிஸ்டுகள் அன்று விதைத்த விதை மரமாக வளராமல் பயிராக வளர்ந்து சுழற்சிமுறையில் இன்றும் வெவ்வேறு உருவங்களில் இன்று லட்சக்கணக்கான தொழிலாளர்களுக்கு குறைந்தபட்சம் அவர்கள் பிழைப்பிற்கு பயனளித்துக் கொண்டுதான் இருக்கின்றது. 

கம்யுனிசம் சிறு சிறு குழுக்களாக தொழிலாளர்கள் மத்தியில் இன்றும் உயிர்ப்புடன் இருக்கிறது. இன்று அவரவர்கள் அவர்களது உழைப்பிற்கான ஊதியத்தை அந்தந்த சிறு குறு நிறுவனங்களில் தாமாகவே போராடிப் பெற்றுக்கொண்டு கொண்டு இருப்பதற்கு கம்யுனிஸ்டுகள் விதைத்த போராடும் குணம், மன உறுதிதான் இதற்குக் காரணம். திரைப்படங்களில் வருவது போன்று ஒரே பாட்டில் வந்தது அல்ல. 

இயற்கையின் பரிணாமத்தில் வந்தது. நிச்சயமாக இது மீண்டும் ஒரு பேரியக்கமாக வளர்ந்து ஏற்றத்தாழ்வுகள் அற்ற மனித சமுதாயம் உருவாக காரணமாக இயற்கையின் தேர்வில் அமையும். 

தொழிலாளர்களை மதிக்காத அவர்களது உழைப்பை மட்டும் உறிஞ்சும் எந்த நிறுவனமும் நீண்டகாலம் வாழாது. 

ஜோதிஜி அவர்களின் கேள்விக்கு விடையை கம்யுனிசத்தை குறை கூறுவதை விட்டுவிட்டு உரிய இடத்தில் தேடுவது பொருத்தமாக இருக்கும்.



Monday, January 26, 2015

பேசா பொருளை பேசு

தொழிற்சாலையின் குறிப்புகளில் ஜோதிஜி எழுப்பியிருக்கும் முக்கியமான கேள்விகளை பார்ப்போம்.  

1. பஞ்சே ஆதாரம் என்றால் பஞ்சு உற்பத்திக்கும் விவசாயத்திற்கும் அரசு எந்த முனைப்பும் காட்டவில்லை

2. திருப்பூருக்கு அரசு எந்த உதவியும் செய்யவில்லை. உதவி செய்வதாக கூறி ஆட்டைய போட்டது தான் மிச்சம்

3.திருப்பூர் தொழிற்சாலைகள் ஒழுங்காக அமைப்புரீதியாக செயல்படுவதில்லை. சுரண்டல் ஏமாற்றல் அதிகம். 

4. இங்கே இயந்திரங்கள் பெரிதாக ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை, எல்லாமே இறக்குமதி தான்.  

இந்த நான்குமே அவரின் குறிப்புகளின் அடிநாதம். 

இவை ஏன் இருக்கின்றன என நண்பர் ஆராயவில்லை எனவே என்னுடைய கருத்துக்களை வைக்கலாம் என.  

இந்த நான்கிற்கும் அடிப்படையான காரணம் நம்மூரின் கம்யூனிச சோசிலிச சிந்தனை தான். அதுவும் ஒருவன் பணம் சம்பாதிக்கிறான் என்றாலே அவன் யாரையேனும் சுரண்டி ஏமாற்றியே சம்பாதிக்கிறான் எனும் கம்யூனிசத்தின் அடிப்படை கொள்கையே காரணம். அவை நம்மூரின் படித்தவர்கள், பல்கலைகழகங்கள், அரசியல்வாதிகள் என எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கும் போது அவர்கள் எப்படி ஒரு தொழில் முனைவோருக்கு உதவுவார்கள்?  

கம்யூனிஸ்டுகளை பொறுத்தவரையில் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரமே இலக்கு, மக்களை முன்னேற்றுவதோ அல்லது நல்ல விஷயங்களை செய்வதோ அல்ல. அவர்களை பொறுத்தவரை பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையே எவ்வளவு சீக்கிரம் சண்டை வருகிறதோ அவ்வளவு சீக்கிரம் நல்லது. அப்படியிருக்க எப்படி தொழிலை முன்னேற்ற உதவ முடியும். 

மேலை நாடுகளில் கல்லூரிகள், பல்கலைகழங்களுக்கும் தொழிற்சாலைகளுக்கும் இடையே நல்ல ஒத்துழைப்பு உண்டு. தொழிற்சாலைகளுக்கு தேவையான தொழில்நுட்பம், நிர்வாக வசதிகள் போன்றவற்றை கல்லூரிகள் ஆராய்ச்சி செய்து தருவதும் அதற்கு தொழிற்சாலைகளே பணம் கொடுத்து செய்ய சொல்வதும், பேராசிரியர்களை நிறுவனங்களில் முக்கிய பதவிகளில் வைத்திருப்பதும் சாதாரணமான விஷயம். 

அவர்கள் பகுதி நேரவேலையாக தொழிற்சாலைகளிலும் கல்லூரிகளிலும் வேலை செய்வார்கள். இப்படி இருப்பவர்களுக்கே மதிப்பு அதிகம் என்பதும் கவனிக்கவேண்டிய விஷயம். இப்போதைய ரிசர்வ் பேங்க் கவர்னர் ரகுராம் ராஜன் அமெரிக்க பல்கலைகழத்தில் இருந்து விடுப்பில் தான் இங்கே பணிபுரிகிறார் என்பதை பாருங்கள்.  

விவசாயத்திற்கும் இதே போல் கண்டுபிடிப்புகள், சந்தைப்படுத்தல் போன்றவற்றில் புதுமையை புகுத்துதல் என்பவற்றை பேராசிரியர்களும் மாணவர்களும் தொடர்ந்து செய்துகொண்டே இருப்பார்கள். இவர்களிடமே அரசுக்கு நெருக்கடிகளும் புதிய திட்டங்களும் போகும்.  

ஆனால் இங்கே அப்ப்டி ஏதும் உள்ளதா என்றால் கிடையாது. ஆர் ஏ மாஷால்கர் என்பவர் இந்திய விஞ்ஞான ஆராச்சி கழகத்தின் தலைவராக இருந்த பொழுது அவர் இப்படி கொண்டு வரமுயன்றதற்கே பெரும் எதிர்ப்பு கிளம்பியது. 

ஒரு மூத்த விஞ்ஞானி இதை விஞ்ஞானிகளை நடத்தை கெட்ட செயல்களை செய்ய சொல்வதற்கு சமானம் என்றார். 

அடுத்து பல்கலைகழங்களில் அறிவியல்துறைகள் அதிகாரம் ஏதுமில்லாத துறைகளாகவே இருக்கின்றன. இந்த கதை கட்டுரை எழுதுதல், கவிதை எழுதுதல் போன்ற துறைகளே அதிகாரம் பெற்றவையாக இருக்கின்றன. அப்புறம் நடிகர்களும் புனவு எழுத்தாளர்களுமே அறிவாளிகளாய் கொண்டாடப்படும் நாட்டில் வேறு எப்படி இருக்கும்?  

இங்கே இயந்திரங்கள் கண்டுபிடிக்க ஆள்கள் இருக்கிறார்கள் ஆனால் அதை நிர்வாகம், அரசு கண்டுகொள்ளுமா என்பது தான் கேள்வி. இங்கே இறக்குமதி செய்யப்படும் இயந்திரங்களை வடிவமைத்தவர்கள் யாரென தேடுங்கள் கண்டிப்பாக ஒரு இந்தியனாவது அல்லது தமிழனாவது இருப்பார்கள். 

இது அடிப்படை சிந்தனையிலேயே ஆகவேண்டிய மாற்றம்.. சும்மா  அரசை குறை சொல்வது அரசியல்வாதிகளை குறை சொல்வது என்பதெல்லாம் தீர்வை தராது.  

இதை நண்பர் ஜோதிஜி எழுதியிருப்பதே ஒரு முக்கியமான மைல்கல்லாக நாம் பார்க்கவேண்டி உள்ளது. எனக்கு தெரிந்த வரையில் இதுவே இப்படி பட்ட விஷயங்களில் முதலாவதாகவும் இருக்கக்கூடும்.  

பேசாப்பொருளை பேசிய நண்பருக்கு பாராட்டுகள். இதன் மூலமாகவேனும் தமிழ்நாட்டில் ஒருமாற்றம் வருமாயின் அதை ஆரம்பித்து வைத்த பெருமை ஜோதிஜியையே சாரும்.  

இதை இன்னும் விரிவாக எழுதினால் குருசரண் தாஸ் எழுதிய India Unbound எனும் புத்தகம் போல் வரும். நண்பர் செய்வாராயின் அதற்கு உதவவும் தயாராக இருக்கிறேன்.


(நண்பர் ராஜா சங்கர் எழுதியுள்ள இந்த விமர்சனத்திற்கு திருப்பூர் நண்பர் விஸ்வநாதன் எழுதிய விமர்சனத்திற்கு விமர்சனத்தை அவர் முகநூலில் நான் சற்று தாமதமாகத்தான் பார்க்க நேர்ந்தது. அடுத்த பதிவில் விஸ்வநாதன் அவர்களின் விமர்சனமும், விமர்சனத்திற்கு விமர்சனமும் வருகின்றது)

Sunday, January 25, 2015

இது மனிதர்களின் கதை

ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் – ஒரு அலசல் 

ஜோதிஜியின் திருப்பூர் பற்றிய மற்றுமொரு தொடர். இரண்டு தொழிற்சாலைகளில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை இங்கு தனது பாணியில் வழங்கியிருக்கிறார். எழுத்து என்பதை மிகத் தீவிரமாக எடுத்துக் கொண்டிருப்பவர் திரு ஜோதிஜி என்பது அவரது எழுத்தை தொடர்ந்து வாசிக்கும் அனைவருக்கும் தெரிந்த விஷயம். 

அதனால் அவரது எழுத்துக்களை வாசிக்க வரும்போது அவரது எழுத்துக்களை உள்வாங்கிக் கொள்ள தயாராக வர வேண்டும். மேலோட்டமாக வாசிப்பது என்பது இங்கு நடக்காத விஷயம். கவனச் சிதறல் இங்கு மன்னிக்க முடியாத ஒன்று.

இவரது முதல் அச்சுப் புத்தகம் டாலர் நகரம் என்னை மிகவும் கவர்ந்தது. அந்த புத்தகத்தைப் படித்த போது நாம் உடுத்தும் ஒவ்வொரு ஆடையின் பின்னாலும் எத்தனை சோகக்கதைகள்! அங்கு நாம் ஊகித்த கதைகளின் உண்மை மாந்தர்களை இந்த தொடரில் தோலுரித்துக் காட்டுகிறார், ஜோதிஜி. 

‘ஒரு தொழிற்சாலையின் குறிப்புகளு’க்குள் நுழைவோம், வாருங்கள்.

‘நீங்கள் உலகின் எந்தப் பகுதியில் வாழ்ந்தாலும் நீங்கள் விரும்புவது பிராண்ட் வகையான ஆடைகள் என்ற போதிலும் ஒவ்வொரு ஆடைகள் உருவாக்கத்திற்குப் பின்னாலும் ஓராயிரம் விசும்பல் மொழி மறைந்துள்ளது என்பதை உணர்ந்து இருப்பீர்களா? வெள்ளை ஆடைகள் என்றாலும், நீங்கள் விரும்பம் வண்ணம் என்ற போதிலும் ஒவ்வொரு ஆடை உருவாக்கத்திற்குப் பின்னாலும் வடியும் இரத்தக் கறையை நாம் பார்க்கப் போகின்றோம்’

முதல் அத்தியாயத்திலேயே இவ்விதம் எழுதி திருப்பூரின் ஆடைத்தொழிற்சாலையின் உள்ளே வாழும் மனிதர்களிடையே நடக்கும் ஒரு நிழல் யுத்தத்திற்கு நம்மை தயார் செய்வதுடன், இந்த குறிப்புகளில் நாம் என்ன எதிர்பார்க்கலாம் என்று ஒரு ‘டீசர்’ கொடுத்து விடுகிறார் ஜோதிஜி. அதனால் நாம் கொஞ்சம் நிமிர்ந்து உட்கார்ந்து கொண்டு அடுத்தடுத்த அத்தியாயங்களை வாசிக்கத் தயாராகிறோம். ஜோதிஜியின் எழுத்துக்களை படிக்க நீங்கள் மனதளவில் தயாராவது மிகவும் முக்கியம். 

இந்தக் குறிப்புகளில் அவரே நம்மை முதலிலேயே இப்படித் தயார் செய்துவிடுகிறார். ஒவ்வொரு துறையிலும் நடக்கும் கண்ணுக்குத் தெரியாத இந்த நிழல் யுத்தத்தில் பங்குபெறும் மாந்தர்களின் நடவடிக்கைகளில் ஒன்றிப் போய்விடுகிறோம்.  வெள்ளைத் துணிகளில் மட்டுமா சாயம் ஏற்றப்படுகிறது, இங்கே? மனிதர்களும் சமயத்திற்குத் தகுந்தாற்போல நிறம் மாறுவதை இந்தக் குறிப்புகளில் பார்க்க முடிகிறது.

முதலில் தனது முதலாளிகளாகிய ‘பஞ்ச பாண்டவர்களையும், அவர்களை தான் கையாண்ட விதத்தையும் சொல்லும் வேளையில், இந்த நிறுவனத்துக்குள் தாம் அடியெடுத்து வைத்த நிகழ்வையும் சொல்லுகிறார். அந்த நிறுவனத்தின் நிலைமையையும் சொல்லி, தான் அவற்றை மாற்ற எடுத்த முயற்சிகளையும் சொல்ல ஆரம்பிக்கிறார். அதற்கு அவர் பட்டபாடு எதிர்கொண்ட எதிர்ப்புகள் எல்லாமே விறுவிறுப்பான ஒரு நாவல் படிக்கும் அனுபவத்தை நமக்குக் கொடுக்கின்றன.

இங்கு நமக்கு ஒரு புதிய ஜோதிஜி அறிமுகமாகிறார். 

டாலர் நகரத்தில் நாம் சந்தித்த அந்த ‘ஒன்றும் தெரியாத அப்பாவி’ ஜோதிஜி இங்கு இல்லை என்பது இந்தக் குறிப்புகளைப் படிக்கும்போது புரிந்து கொள்ள முடிகிறது. இந்தத் தொழிலில் நீண்ட நாட்கள் பட்ட அனுபவத்தில் புடம் போடப்பட்ட ஜோதிஜியை சந்திக்கிறோம்.

தனது அனுபவம் பற்றி ஜோதிஜியின் வார்த்தைகளில்:

தன் சுய விருப்பு வெறுப்புக்காக நிறுவனங்களை கவிழ்த்தவர்கள்,  குறுகிய காலத்திற்குள் நிறுவன வளர்ச்சியை விட தங்களது பொருளாதார வளர்ச்சியை பெருக்கிக் கொண்டவர்கள், உண்மையான உழைப்பாளிகளை உதாசீனப்படுத்தியவர்கள்,  

தங்களது பலவீனங்களுக்காக வளர்ந்து கொண்டிருந்த நிறுவனத்தை வேரோடு வெட்டி சாய்த்தவர்கள் என்று பலவற்றையும் பார்த்த காரணத்தால் எல்லா நிகழ்வுகளுமே இயல்பான தொழில் வாழ்க்கையின் ஒரு அங்கமாக எனக்குத் தெரிய தொடங்கியது. 

அவர் கற்றது மட்டுமல்ல நமக்கும் பலவற்றையும் சொல்லிக் கொண்டு போகிறார். அந்தத் தொழிற்சாலையில் வேலைபார்க்கும் பல்வேறு விதமான மனிதர்களை நமக்கு அறிமுகப்படுத்துகிறார் மாடசாமியிலிருந்து தொடங்கி ராஜா வரை. ‘அவள் பெயர் ரம்யா’ என்ற தலைப்பில் ஜோதிஜி எழுதிய ஒவ்வொன்றும் மணிமணியானவை. ஒருவரிடம் இருக்கும் திறமையை எப்படி அவரை பயிற்று வைப்பதன் மூலம் வெளிக்கொணரலாம் என்று இங்கு சொல்லுகிறார். ஆனால் அதுவே அவரை இக்கட்டில் மாட்டி வைத்ததையும் சொல்லிப் போகிறார். சுவாரஸ்யமான அத்தியாயம்.

ஒவ்வொரு அத்தியாயத்திலும் தான் கண்டது, கேட்டது அனுபவித்தது என்று தனது ‘வெட்டு ஒன்று துண்டு இரண்டு’ என்கிற எழுத்துப்பாணியில் விவரிக்கிறார். நீங்கள் திருப்பூரிலோ அல்லது வேறு ஏதாவது ஆடைகள் உற்பத்தி செய்யும் நிறுவனத்தில் வேலை செய்பவராக இருந்தால் தான் இந்த ‘ஒரு தொழிற்சாலையின் குறிப்பு’களை ரசிக்க முடியும் என்றில்லை. யாராக இருந்தாலும், என்னைப்போன்ற இல்லத்தரசி ஆனாலும் ரசிக்கலாம். அதேபோல ஜோதிஜி இங்கு சொல்லியிருக்கும் மனிதர்களைப் போல நாம் வெளியிலும் பலரைப் பார்க்கிறோமே. 

அதனால் மனிதர்களை எடை போடவும் இந்தக் குறிப்புகள் நிச்சயம் உதவும்.

ஒரு சின்ன குறை: ஒவ்வொரு அத்தியாயமும் மிகவும் நீண்டுகொண்டே போகிறது. சிலசமயம் வேண்டுமென்றே வளர்க்கிறாரோ என்று கூடத் தோன்றுகிறது. அத்தியாயங்களின் நீளத்தைக் குறைத்திருக்கலாம். அல்லது இன்னும் இரண்டு மூன்று அத்தியாங்களாக கூட்டியிருக்கலாம் என்று தோன்றுகிறது. 

‘ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள்’ என்பதை ‘வாழ்க்கையில் நாம் சந்திக்கும் மனிதர்களைப் பற்றிய குறிப்புகள்’ என்று கூடக் கொள்ளலாம். 


வலைபதிவர், எழுத்தாளர்,



Saturday, January 10, 2015

உங்களுக்கு (மட்டும்) இந்தப் பரிசு

சென்ற வருடத்தில் (2014) சில சாதனைகள் செய்ய முடிந்தது. கூடவே அவசியம் கற்றுக் கொள்ள வேண்டிய பல பாடங்கள் மூலம் புதிய அனுபவங்களும் கிடைத்தது.

சென்ற வருடம் நான் எழுதிய டைரிக்குறிப்புகள் ஏராளமான பேர்களுக்கு போய்ச் சேர்ந்தது.  இன்று வாசித்தாலும் இயல்பாக உள்ளது.

2014 ஆம் ஆண்டு உடல் ஆரோக்கியம் படம் காட்டத் தொடங்கியது. அதிகமாக வேலை செய்து கொண்டே இருப்பவர்களும், செய்தே ஆக வேண்டிய நிலையில் இருப்பவர்களும் வாழும் பூமி திருப்பூர்.  ஆனால் இது நாள் வரைக்கும் பழக்க வழக்க கட்டுப்பாட்டில் ஆரோக்கியத்தை கட்டுக்குள் வைத்திருந்த காரணத்தால் இழுத்த இழுப்புக்கு வளைந்து கொடுத்துக் கொண்டிருந்தது. தற்போது "ராசா வேகத்தை குறைத்துக் கொள்" என்று அன்பான எச்சரிக்கை மணி அடிக்கத் தொடங்கியுள்ளது. "பணம் தான் வாழ்க்கையில் பிரதானம்" என்று வாழக்கூடியவர்களுடன் சேர்ந்து வாழும் போது நமக்கு உருவாகும் மன உளைச்சலை குறைக்க வலைபதிவு எழுத்து வாழ்க்கை அமைந்த காரணத்தால் இன்னமும் சில ஆண்டுகள் எழுத முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.

ன்ன தான் ஆரோக்கியமான பழக்கங்கள் இருந்தாலும், பொருளாதார ரீதியாக அடிப்படை விசயங்கள் சரியாக இருந்தாலும் நாற்பது வயது முதல் ஐம்பது வயது வரைக்கும் உண்டான உடல் சார்ந்த மனம் சார்ந்த பிரச்சனைகள் குறித்து "வயசு ஏறுது மனசு மாறுது" என்ற தொடர் மூலம் சிலவற்றை எழுதி வைக்க விரும்புகின்றேன்.  எப்போதும் போல என் வாழ்க்கையின் வழியாக நான் பார்த்த மனிதர்களின், அவர்களின் மாறிய பழக்க வழக்கங்கள், தடுமாறும் உள்ளங்கள், மாற்றங்களை ஏற்றுக்கொள்ள முடியாமல் தடுமாறுதல் போன்றவற்றை எழுத விரும்புகிறேன்.

விரைவில் அதைப் பற்றி எழுதுகின்றேன்.

சென்ற வருட மத்திம பகுதியில் எங்கள் குழந்தைகள் மூவரில் இருவரை பள்ளியில் படிப்பு மற்றும் பல திறமைகள் சார்ந்த விசயங்களுக்குத் தேர்ந்தெடுத்தனர். குழந்தைகள் படிக்கும் பள்ளியில் ஆயிரம் மாணவ மாணவியர்கள் படிக்கின்றார்கள். இதில் ஐந்து பெற்றோர்களைச் சில தகுதிகள் அடிப்படையில் தேர்ந்தெடுத்துச் சிறப்பு விருந்தினராக அழைத்து இருந்தனர்.

ள்ளியில் மொத்தமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 250க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்குப் பரிசு வழங்க அழைத்தனர். என்னையும் சிறப்பு விருந்தினராக அழைத்து இருந்தனர். எங்கள் குழந்தைகள் இருவரும் என் கையால் பரிசுகள் வாங்கும் அற்புத நிகழ்ச்சி நடந்தது. எனக்கே கொஞ்சம் ஆச்சரியம். கூடவே கூச்சம். 

டந்த ஒன்பது ஆண்டுகளில் இந்தப் பள்ளியின் வளர்ச்சிக்கென என்னாலான கருத்துக்களை ஒவ்வொரு முறையும் தயங்காமல் தெரிவிப்பதும், சண்டை பிடித்துப் பல விசயங்களை மாற்றியதில் எனக்கும் பங்குண்டு. பள்ளியின் நிர்வாகத்திற்கு எங்கள் குடும்பத்தின் மீது, எங்கள் குழந்தைகள் மீது தனிப்பட்ட அக்கறையுண்டு. 

ள்ளியின் தாளாருக்கு, அவர்களின் துணைவியாருக்கு நான் எழுதிக் கொண்டிருப்பது தெரியும் என்பதால் விழாவில் கலந்து கொள்ள வந்திருந்த மற்ற சிறப்பு விருந்தினருக்கு என்னை அறிமுகம் செய்து வைத்த போது என் தொழில் சார்ந்த பதவியைச் சொல்லிவிட்டு என் சிறப்புத்தகுதி என்பதை எழுத்தாளர் என்று அறிமுகப் படுத்தினார். தொழில் அதிபர்கள் என்ற நிலையில் வந்த மற்றவர்கள் எப்போதும் போல நீங்கள் இருக்கும் பதவியில் இருந்து கொண்டு எப்படி எழுத முடிகின்றது? என்று எப்போதும் நான் சந்திக்கும் கேள்வியை மறக்காமல் கேட்டனர்.

வீட்டில் ஒரு ஆங்கிலப் பத்திரிக்கையும் இரண்டு தமிழ் தினசரிகளும் வாங்குகின்றோம்.  இது தவிர வார இதழ்கள், குழந்தைகள் இதழ்கள் வாங்குகின்றோம்.  கடந்த நாலைந்து மாதமாக காலையில் எழுந்தவுடன் அவரவர்களும் பத்திரிக்கை படிக்க ஒரு போட்டியை உருவாக்கி வெற்றியடைந்துள்ளேன்.  நான் சிறுவயதில் படித்தது போல இவர்களும் பத்திரிக்கைகள் வாசிக்கத் தொடங்கியுள்ளனர். சமூகம் சார்ந்த அனைத்து விசயங்களையும் இயல்பாக உரையாட பழகியுள்ளனர். பத்தாம் வகுப்பு முடிப்பதற்குள் நிச்சயம் வெளி உலகத்தை புரிந்து கொண்டு விடுவார்கள் என்று நம்புகிறேன்.

துவரையிலும் ஐந்து மின் நூல்கள் வெளியிட்டுள்ளேன். எதிர்பார்க்காத அளவுக்கு ஆதரவு கிடைத்தது. விரைவில் காரைக்குடி உணவகம் என்ற பெயரில் மற்றொரு மின் நூல் வரப் போகின்றது. பலரும் மகிழ்ச்சியுடன் பாராட்டிய இஞ்சித்தேன், நெல்லித்தேன், சத்துமாவு போன்ற விசயங்கள் இந்த மின் நூலில் உள்ளது.  இது தவிர இன்று "ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள்" என்ற மின் நூல் வெளியிடப்படுகின்றது. தேவைப்பட்டவர்கள் எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு மின் நூல் ஆக்கத்தில் 90 சதவிகித வேலைகளை நான் முடித்து சீனிவாசனிடம் கொடுத்து விடுவதுண்டு. ஆனால் இந்த முறை மின் நூல் ஆக்கத்தை சீனிவாசன் தான் முடித்துக் கொடுத்துள்ளார். அவருக்கும் அட்டைபடம் வடிவமைத்துக் கொடுத்த நண்பர் மனோஜ்க்கும் என் நன்றி.

2014 ஆம் ஆண்டு அமெரிக்காவில் இருந்து செயல்பட்டுக் கொண்டிருக்கும் வலைத்தமிழ் இணையத் தளத்தில் திருப்பூர் தொழிலாளர்கள் மற்றும் ஆயத்த ஆடைத்துறை சார்ந்த நிர்வாக முறைகள், சிக்கல்கள், சவால்கள் போன்றவற்றை என் அனுபவம் வாயிலாக "ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள்" என்ற பெயரில் இருபது வாரங்கள் எழுத வாய்ப்புக் கிடைத்தது. 

ப்போது அவசரம் அவசரமாக இரவு நேரங்களில் எழுதி, அதனைப் பிழை திருத்த முடியாமல் வலையேற்றி பலரும் சுட்டிக்காட்டும் போது மனதளவில் சங்கப்பட்டுள்ளேன். இது தவிர எழுதிய கட்டுரைகளில் கோர்வையில் கவனம் செலுத்தாமல் இருந்துள்ளேன். இந்த முறை "ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள்" எழுதத் தொடங்கிய போது பலவற்றை மனதில் கொண்டு மூன்று முறை திருத்தி, சில அத்தியாயங்கள் நண்பரிடம் கொடுத்து, அவரின் விமர்சனங்களைக் கேட்டு, படிப்படியாக உணர்ந்து, உள்வாங்கி மூன்று நாட்கள் வைத்திருந்து செப்பனிட்டு வலைத்தமிழ் தளத்திற்கு அனுப்பி வைத்தேன். 

ஓ.தொ.கு. பலருக்கும் போய்ச் சென்று சேர்ந்துள்ளது. இதனை விட ஆச்சரியம் திருப்பூரில் இதே துறையில் வாழ்ந்து கொண்டிருக்கும் நண்பர்களின் அக்கறையும், விமர்சனமும், வாழ்த்துகளும் எனக்குக் கிடைத்துள்ளது. ஆச்சரியமாக இருந்தது. பலரும் வெளிப்படையாகப் பாராட்டினர்கள். 

"நாங்கள் பலவற்றை இந்தத் தொடர் மூலம் கற்றுக் கொண்டோம். ஒவ்வொரு நாளும் இதனைப் படித்தே ஆக வேண்டிய அளவுக்குப் பயன் உள்ள தகவல் உள்ளது" என்றனர். "நிர்வாகத்திறமையை வளர்த்துக் கொள்ளப் பல விசயங்கள் உள்ளது. கோப்பாக மாற்றிவிடுங்க" என்றனர். 

நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. 

வ்வொரு அத்தியாயத்தை எனது தளத்தில் வெளியிட்டு விட்டு அதற்கு வருகின்ற விமர்சனத்திற்குப் பதில் அளிக்க முடியாத அளவுக்குக் கடந்த நான்கு மாதங்கள் உடல் ரீதியாகப் பாதிப்பு (முதல் முறையாக) வருமளவிற்கு வேலைப்பளூ இருந்த போதிலும் மிகுந்த அக்கறையும் தொழிற்சாலை குறிப்புகளை எழுதியதற்குச் சில நண்பர்கள் காரணமாக இருந்தனர் என்பதனை இந்த இடத்தில் எழுதி வைக்க விரும்புகின்றேன். 


வர்கள் இருவரும் ஒவ்வொரு வாரமும் வலைத்தமிழ் தளத்தில் இவர்கள் கொடுக்கின்ற விமர்சனத்தைப் பார்த்து மிரண்டு போயுள்ளேன். ஆழ்ந்த வாசிப்புடன் அக்கறையுடன் வரிக்கு வரி படித்தால் மட்டுமே தெளிவான விமர்சனத்தைக் கொடுக்க முடியும் என்பதை நிரூபித்தனர். கடைசியாக மொத்தமாக இருவரும் விமர்சனம் தந்தனர். முரளி தனது தளத்தில் வெளியிட்டு எனது உழைப்புக்கு அங்கீகாரம் கொடுத்தார்.

நண்பர்களின் விமர்சனங்கள் படிக்க

துரையில் இருந்து ரவீந்திரன், மொத்தமாக ஒரே நாளில் பொறுமையாக விட்டுப் போன அத்தியாயங்களைப் படித்து விட்டு எனது தளத்தில் விமர்சனம் தந்த கிரி, நண்பர் சிவகுமார் கோபால்ராம், திருப்பூர் நண்பர்கள் விஸ்வநாதன், நிகழ்காலத்தில் சிவா, சாமிநாதன். இவர்களுக்கு என் நன்றி. 

கடுமையான வேலைப்பளூ இருந்த போதிலும் எங்கள் குடும்பத்தின் மேல் அதிக அக்கறை காட்டும் திருமதி ரஞ்சனி நாராயணன் அளித்த விமர்சனப் பார்வைக்கு என் நன்றி. 

திருப்பூரில் பணிபுரிந்து கொண்டிருக்கும் பலரும் இதனைப் படித்துக் கொண்டே வந்தனர் என்பதை அவர்களை அந்தந்த அத்தியாங்களில் கொடுத்த விமர்சனம் வாயிலாகக் கண்டு கொண்டேன். "டாலர் நகரம்" என்ற தொடர் 4தமிழ் மீடியா தளத்தில் வெளிவந்த போது எந்த அளவுக்கு ஆதரவு இருந்ததே அந்த அளவுக்கு உலகம் முழுக்கக் கொண்டு போய்ச் சேர்ந்த வலைத்தமிழ் குழுவினருக்கு என் நன்றி. 

ந்தத் துறை சார்ந்த எவருமே இந்தத் தொடர் குறித்து எவ்வித விமர்சனங்களையும் கொடுக்கவில்லை. "சரியாகத்தான் உள்ளது" என்றனர். ஆனால் பலரும் "நீளமாக உள்ளது, இழுத்துக் கொண்டே சென்றீர்கள், உங்களைப் பற்றிய தகவல்கள் அதிகம்" போன்ற பல விமர்சனங்களைத் தந்தனர். 

னக்கும் முதலில் குழப்பமாக இருந்தது. நெருங்கிய நண்பர்களிடம் கொடுத்து கேட்ட போது "இது போன்று துறை சார்ந்து எழுதும் போது உங்களை முன்னிலைப்படுத்தி எழுதித்தான் ஆக வேண்டும்" என்றனர். குறிப்பாக எழுத்தாளர் அமுதவன் இது குறித்த என் சந்தேகங்களை அழகாக நிவர்த்திச் செய்து உதவினார். சென்ற வருடத்தில் அவர் மூலம் எழுத்துலகத்தில் பல படிகள் ஏறியுள்ளேன்.

ந்தத் தொடரின் வெற்றிக்கு முக்கிய காரணம் இதில் வந்துள்ள புகைப்படங்கள்.  நானும் இந்தத் தொழிலில் இருந்தேன் என்பதை உணர்த்தும் அளவிற்கு இந்தத் துறையில் உள்ள ஒவ்வொரு துறை சார்ந்த விசயங்களையும் மிக அழகாக புகைப்படம் எடுத்தவர் சென்னையில் வசிக்கும் புகைப்படக்கலைஞர் நெருங்கிய நண்பர் அகலிகன்.  என் வலைபதிவு எழுத்தின் மூலம் அறிமுகமாகி என் நலம் விரும்பியாக மாறியவர்.  இந்தத் தொடர் மூலம் கிடைக்கக்கூடிய அனைத்து பாராட்டுகளும் அவருக்குத் தான் போய்ச் சேர வேண்டும்.  

லைத்தமிழ் நிர்வாகம் இதனைப் புத்தகமாகக் கொண்டு வரவும், இதனை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப் போவதாகவும் சொல்லியுள்ளனர். திருப்பூரில் உள்ள நெருங்கிய நண்பரின் வேண்டுகோளின் படி இதனை அவசரமாக மின் நூலாக மாற்றியுள்ளேன். காரணம் இது அவசியம் இங்குள்ள ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய புத்தகம் என்று வாழ்த்தியத்திற்கு இந்த மின் நூலை காணிக்கையாக அளிக்க விரும்புகின்றேன். 

மேலும் புத்தகமாகக் கொண்டு வரும் போது அது சார்ந்த நடவடிக்கைகளுக்காக நாம் குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்க வேண்டும். பல சட்ட திட்டங்களுக்குக் கட்டுப்பட வேண்டும். எழுதுகின்றவனுக்குச் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு வருமானம் வருவதும் இல்லை. ஒரு புத்தகத்திற்கு ராயல்டி என்று கிடைக்கும் தொகையைப் பார்த்து (நான் வாங்கிக் கொண்டிருக்கும் சம்பளத்தை ஒப்பிட்டு) சிரித்து விட்டேன். அடக் கொடுமையே? இதற்குத் தான் இத்தனை அடிதடியா? என்று. மேலும் படிக்க விரும்புவன் எதிர்பார்க்கும் விலையும் பல சமயம் அமைந்து விடுவதில்லை. இது போன்ற பல சிக்கல்கள் காரணமாக உருப்படியான எந்த விசயமும் விரும்பியவர்களின் கைக்குப் போய்ச் சேர்வதே இல்லை.  புத்தக சந்தைக்கு, புத்தகங்களுக்கு என்று இங்கே தனிப்பட்ட பெரிய மரியாதை இல்லை.

ற்ற மாநிலங்களில் எப்படி? என்று தெரியவில்லை.  நிச்சயம் தமிழ்நாட்டில் இல்லை. பதிப்பக மக்கள் பலவிதங்களில் போராடித்தான் தங்கள் முதலீடுகளை காப்பாற்றிக் கொள்ள முயற்சிக்கின்றார்கள். அவர்களை எந்த விதங்களிலும் குறை சொல்ல முடியாது.

ஏற்கனவே இதைப் பற்றி எழுதி உள்ளேன். 

ணைய தளம், ஜால்ரா கோஷ்டிகள், பரஸ்பரம் சந்தனம் தடவுதல், புகழ்ந்து எழுதுவது போன்ற பலதரப்படட விளம்பர யுக்தி மூலம் மட்டுமே இங்கே புத்தக விற்பனை நடக்கின்றது.  மற்றபடி அச்சடித்த புத்தகங்கள் அனைத்தும் (விற்பனையாக பட்சத்தில்) ஏதோவொரு குடோனில் பாதுகாப்பாக இருக்கும்.  இது தான் உண்மை. இது தான் எதார்த்தம். காகிதத்திற்காக வெட்டப்பட்ட மரங்கள் பாவம். ஒரு புத்தகம் என்பது உங்களை உங்கள் எண்ணங்களை மாற்ற உதவுவது.  அப்படி மாற்ற உதவாத புத்தகங்கள் என் பார்வையில் வெறும் காகிதமே. 

ணையம் என்றால் நினைத்த நேரத்தில் எங்கிருந்து வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ள முடியும். கணினியில் தொடர்ச்சியாகப் படிக்க முடியாதவர்கள் பிரிண்ட் அவுட் எடுத்துக் கொள்ள முடியும். கைபேசியில், டேப்லேட் பிசி மூலம் படிக்க என்று பல வாய்ப்புகள் இருப்பதால் மின் நூலாகக் கொண்டு வந்துள்ளேன். 

புத்தகமாக வரும் போது குறிப்பிட்ட சிலரின் கைக்குத்தான் போய்ச் சேரும். அதைப் பெறுவதில் பல சங்கடங்கள் உள்ளது. தனியார் மற்றும் அரசுத்துறை என்றாலும் அவர்களின் சேவை மனப்பான்மை என்பது மாறி காசு சார்ந்த நோக்கங்கள் என்பதால் ஒரு கொரியர் குறிப்பிட்ட ஆளிடம் போய்ச் சேர்ப்பதில் கூட இங்கே கடைசி வரைக்கும் பின் தொடர வேண்டியதாக உள்ளது. 

பகல் முழுக்க அலுவலகம் சார்ந்த வேலையில் இருப்பதால் புத்தகச் சந்தை சார்ந்த எந்த விசயத்திலும் என்னால் கவனம் செலுத்த முடியாத நிலையில் உள்ளேன். 

சென்ற வருடம் இரண்டு தொலைக்காட்சியில் இருந்து பேச அழைத்தனர். அதற்கென்று என்னைத் தயார் படுத்திக் கொள்வதும், அவர்கள் விரும்பும் நாளில் சென்று வருவதும் மிகுந்த சவாலைத் தரக்கூடியதாக இருப்பதால் தவிர்த்து விட்டேன். குடும்பம், தொழில் இந்த இரண்டுக்கும் பிறகு தான் மற்ற எனது விருப்பம் சார்ந்த துறை என்பதைக் கவனமாக வைத்துள்ளேன். 

ரு புத்தகத்தை மின் நூலாக வெளியிடும் போது உலகம் முழுக்கப் பரவியுள்ள தமிழர்கள் வாசிக்க விரும்பும் அத்தனை பேர்களின் கைக்கும் போய்ச் சேர்ந்து விடும் என்ற நம்பிக்கை எனக்குண்டு. 

இணையம் தான் எனக்கு எழுத கற்றுத் தந்தது. நண்பர்கள் தான் உதவினர். அவர்களுக்கு உதவுவது என் கடமையும் கூட. 

ய்த்த ஆடைத்துறை சார்ந்த விசயங்கள் மட்டுமல்ல. எளிய மற்றும் பணம் படைத்தவர்களின் மறுபக்க வாழ்வை அலசும் வாழ்வியல் தொடராக இருப்பதால் அனைவருக்கும் பயன்படும் என்று நம்புகின்றேன். 

புத்தாண்டு கொண்டாட்டங்கள், பிறந்த நாள் கொண்டாட்டங்கள், சடங்கு சார்ந்த சம்பிராதாய நிகழ்வுகள் போன்ற எதிலும் எனக்கு விருப்பமில்லை. பல முறை இது குறித்த எனது பார்வையை எழுதியுள்ளேன். ஒவ்வொரு நாளையும் நாம் கொண்டாடி வாழ வேண்டும் என்ற விருப்பத்தில் இருப்பவன் என்பதால் ஒவ்வொரு நாளும் எனக்குப் புத்தாண்டு தினமே.

மற்றபடி "எண்ணம் போல வாழ்வு" என்பதனை எப்போதும் மனதில் வைத்திருங்கள்.