Showing posts with label மின்நூல். Show all posts
Showing posts with label மின்நூல். Show all posts

Saturday, January 10, 2015

உங்களுக்கு (மட்டும்) இந்தப் பரிசு

சென்ற வருடத்தில் (2014) சில சாதனைகள் செய்ய முடிந்தது. கூடவே அவசியம் கற்றுக் கொள்ள வேண்டிய பல பாடங்கள் மூலம் புதிய அனுபவங்களும் கிடைத்தது.

சென்ற வருடம் நான் எழுதிய டைரிக்குறிப்புகள் ஏராளமான பேர்களுக்கு போய்ச் சேர்ந்தது.  இன்று வாசித்தாலும் இயல்பாக உள்ளது.

2014 ஆம் ஆண்டு உடல் ஆரோக்கியம் படம் காட்டத் தொடங்கியது. அதிகமாக வேலை செய்து கொண்டே இருப்பவர்களும், செய்தே ஆக வேண்டிய நிலையில் இருப்பவர்களும் வாழும் பூமி திருப்பூர்.  ஆனால் இது நாள் வரைக்கும் பழக்க வழக்க கட்டுப்பாட்டில் ஆரோக்கியத்தை கட்டுக்குள் வைத்திருந்த காரணத்தால் இழுத்த இழுப்புக்கு வளைந்து கொடுத்துக் கொண்டிருந்தது. தற்போது "ராசா வேகத்தை குறைத்துக் கொள்" என்று அன்பான எச்சரிக்கை மணி அடிக்கத் தொடங்கியுள்ளது. "பணம் தான் வாழ்க்கையில் பிரதானம்" என்று வாழக்கூடியவர்களுடன் சேர்ந்து வாழும் போது நமக்கு உருவாகும் மன உளைச்சலை குறைக்க வலைபதிவு எழுத்து வாழ்க்கை அமைந்த காரணத்தால் இன்னமும் சில ஆண்டுகள் எழுத முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.

ன்ன தான் ஆரோக்கியமான பழக்கங்கள் இருந்தாலும், பொருளாதார ரீதியாக அடிப்படை விசயங்கள் சரியாக இருந்தாலும் நாற்பது வயது முதல் ஐம்பது வயது வரைக்கும் உண்டான உடல் சார்ந்த மனம் சார்ந்த பிரச்சனைகள் குறித்து "வயசு ஏறுது மனசு மாறுது" என்ற தொடர் மூலம் சிலவற்றை எழுதி வைக்க விரும்புகின்றேன்.  எப்போதும் போல என் வாழ்க்கையின் வழியாக நான் பார்த்த மனிதர்களின், அவர்களின் மாறிய பழக்க வழக்கங்கள், தடுமாறும் உள்ளங்கள், மாற்றங்களை ஏற்றுக்கொள்ள முடியாமல் தடுமாறுதல் போன்றவற்றை எழுத விரும்புகிறேன்.

விரைவில் அதைப் பற்றி எழுதுகின்றேன்.

சென்ற வருட மத்திம பகுதியில் எங்கள் குழந்தைகள் மூவரில் இருவரை பள்ளியில் படிப்பு மற்றும் பல திறமைகள் சார்ந்த விசயங்களுக்குத் தேர்ந்தெடுத்தனர். குழந்தைகள் படிக்கும் பள்ளியில் ஆயிரம் மாணவ மாணவியர்கள் படிக்கின்றார்கள். இதில் ஐந்து பெற்றோர்களைச் சில தகுதிகள் அடிப்படையில் தேர்ந்தெடுத்துச் சிறப்பு விருந்தினராக அழைத்து இருந்தனர்.

ள்ளியில் மொத்தமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 250க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்குப் பரிசு வழங்க அழைத்தனர். என்னையும் சிறப்பு விருந்தினராக அழைத்து இருந்தனர். எங்கள் குழந்தைகள் இருவரும் என் கையால் பரிசுகள் வாங்கும் அற்புத நிகழ்ச்சி நடந்தது. எனக்கே கொஞ்சம் ஆச்சரியம். கூடவே கூச்சம். 

டந்த ஒன்பது ஆண்டுகளில் இந்தப் பள்ளியின் வளர்ச்சிக்கென என்னாலான கருத்துக்களை ஒவ்வொரு முறையும் தயங்காமல் தெரிவிப்பதும், சண்டை பிடித்துப் பல விசயங்களை மாற்றியதில் எனக்கும் பங்குண்டு. பள்ளியின் நிர்வாகத்திற்கு எங்கள் குடும்பத்தின் மீது, எங்கள் குழந்தைகள் மீது தனிப்பட்ட அக்கறையுண்டு. 

ள்ளியின் தாளாருக்கு, அவர்களின் துணைவியாருக்கு நான் எழுதிக் கொண்டிருப்பது தெரியும் என்பதால் விழாவில் கலந்து கொள்ள வந்திருந்த மற்ற சிறப்பு விருந்தினருக்கு என்னை அறிமுகம் செய்து வைத்த போது என் தொழில் சார்ந்த பதவியைச் சொல்லிவிட்டு என் சிறப்புத்தகுதி என்பதை எழுத்தாளர் என்று அறிமுகப் படுத்தினார். தொழில் அதிபர்கள் என்ற நிலையில் வந்த மற்றவர்கள் எப்போதும் போல நீங்கள் இருக்கும் பதவியில் இருந்து கொண்டு எப்படி எழுத முடிகின்றது? என்று எப்போதும் நான் சந்திக்கும் கேள்வியை மறக்காமல் கேட்டனர்.

வீட்டில் ஒரு ஆங்கிலப் பத்திரிக்கையும் இரண்டு தமிழ் தினசரிகளும் வாங்குகின்றோம்.  இது தவிர வார இதழ்கள், குழந்தைகள் இதழ்கள் வாங்குகின்றோம்.  கடந்த நாலைந்து மாதமாக காலையில் எழுந்தவுடன் அவரவர்களும் பத்திரிக்கை படிக்க ஒரு போட்டியை உருவாக்கி வெற்றியடைந்துள்ளேன்.  நான் சிறுவயதில் படித்தது போல இவர்களும் பத்திரிக்கைகள் வாசிக்கத் தொடங்கியுள்ளனர். சமூகம் சார்ந்த அனைத்து விசயங்களையும் இயல்பாக உரையாட பழகியுள்ளனர். பத்தாம் வகுப்பு முடிப்பதற்குள் நிச்சயம் வெளி உலகத்தை புரிந்து கொண்டு விடுவார்கள் என்று நம்புகிறேன்.

துவரையிலும் ஐந்து மின் நூல்கள் வெளியிட்டுள்ளேன். எதிர்பார்க்காத அளவுக்கு ஆதரவு கிடைத்தது. விரைவில் காரைக்குடி உணவகம் என்ற பெயரில் மற்றொரு மின் நூல் வரப் போகின்றது. பலரும் மகிழ்ச்சியுடன் பாராட்டிய இஞ்சித்தேன், நெல்லித்தேன், சத்துமாவு போன்ற விசயங்கள் இந்த மின் நூலில் உள்ளது.  இது தவிர இன்று "ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள்" என்ற மின் நூல் வெளியிடப்படுகின்றது. தேவைப்பட்டவர்கள் எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு மின் நூல் ஆக்கத்தில் 90 சதவிகித வேலைகளை நான் முடித்து சீனிவாசனிடம் கொடுத்து விடுவதுண்டு. ஆனால் இந்த முறை மின் நூல் ஆக்கத்தை சீனிவாசன் தான் முடித்துக் கொடுத்துள்ளார். அவருக்கும் அட்டைபடம் வடிவமைத்துக் கொடுத்த நண்பர் மனோஜ்க்கும் என் நன்றி.

2014 ஆம் ஆண்டு அமெரிக்காவில் இருந்து செயல்பட்டுக் கொண்டிருக்கும் வலைத்தமிழ் இணையத் தளத்தில் திருப்பூர் தொழிலாளர்கள் மற்றும் ஆயத்த ஆடைத்துறை சார்ந்த நிர்வாக முறைகள், சிக்கல்கள், சவால்கள் போன்றவற்றை என் அனுபவம் வாயிலாக "ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள்" என்ற பெயரில் இருபது வாரங்கள் எழுத வாய்ப்புக் கிடைத்தது. 

ப்போது அவசரம் அவசரமாக இரவு நேரங்களில் எழுதி, அதனைப் பிழை திருத்த முடியாமல் வலையேற்றி பலரும் சுட்டிக்காட்டும் போது மனதளவில் சங்கப்பட்டுள்ளேன். இது தவிர எழுதிய கட்டுரைகளில் கோர்வையில் கவனம் செலுத்தாமல் இருந்துள்ளேன். இந்த முறை "ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள்" எழுதத் தொடங்கிய போது பலவற்றை மனதில் கொண்டு மூன்று முறை திருத்தி, சில அத்தியாயங்கள் நண்பரிடம் கொடுத்து, அவரின் விமர்சனங்களைக் கேட்டு, படிப்படியாக உணர்ந்து, உள்வாங்கி மூன்று நாட்கள் வைத்திருந்து செப்பனிட்டு வலைத்தமிழ் தளத்திற்கு அனுப்பி வைத்தேன். 

ஓ.தொ.கு. பலருக்கும் போய்ச் சென்று சேர்ந்துள்ளது. இதனை விட ஆச்சரியம் திருப்பூரில் இதே துறையில் வாழ்ந்து கொண்டிருக்கும் நண்பர்களின் அக்கறையும், விமர்சனமும், வாழ்த்துகளும் எனக்குக் கிடைத்துள்ளது. ஆச்சரியமாக இருந்தது. பலரும் வெளிப்படையாகப் பாராட்டினர்கள். 

"நாங்கள் பலவற்றை இந்தத் தொடர் மூலம் கற்றுக் கொண்டோம். ஒவ்வொரு நாளும் இதனைப் படித்தே ஆக வேண்டிய அளவுக்குப் பயன் உள்ள தகவல் உள்ளது" என்றனர். "நிர்வாகத்திறமையை வளர்த்துக் கொள்ளப் பல விசயங்கள் உள்ளது. கோப்பாக மாற்றிவிடுங்க" என்றனர். 

நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. 

வ்வொரு அத்தியாயத்தை எனது தளத்தில் வெளியிட்டு விட்டு அதற்கு வருகின்ற விமர்சனத்திற்குப் பதில் அளிக்க முடியாத அளவுக்குக் கடந்த நான்கு மாதங்கள் உடல் ரீதியாகப் பாதிப்பு (முதல் முறையாக) வருமளவிற்கு வேலைப்பளூ இருந்த போதிலும் மிகுந்த அக்கறையும் தொழிற்சாலை குறிப்புகளை எழுதியதற்குச் சில நண்பர்கள் காரணமாக இருந்தனர் என்பதனை இந்த இடத்தில் எழுதி வைக்க விரும்புகின்றேன். 


வர்கள் இருவரும் ஒவ்வொரு வாரமும் வலைத்தமிழ் தளத்தில் இவர்கள் கொடுக்கின்ற விமர்சனத்தைப் பார்த்து மிரண்டு போயுள்ளேன். ஆழ்ந்த வாசிப்புடன் அக்கறையுடன் வரிக்கு வரி படித்தால் மட்டுமே தெளிவான விமர்சனத்தைக் கொடுக்க முடியும் என்பதை நிரூபித்தனர். கடைசியாக மொத்தமாக இருவரும் விமர்சனம் தந்தனர். முரளி தனது தளத்தில் வெளியிட்டு எனது உழைப்புக்கு அங்கீகாரம் கொடுத்தார்.

நண்பர்களின் விமர்சனங்கள் படிக்க

துரையில் இருந்து ரவீந்திரன், மொத்தமாக ஒரே நாளில் பொறுமையாக விட்டுப் போன அத்தியாயங்களைப் படித்து விட்டு எனது தளத்தில் விமர்சனம் தந்த கிரி, நண்பர் சிவகுமார் கோபால்ராம், திருப்பூர் நண்பர்கள் விஸ்வநாதன், நிகழ்காலத்தில் சிவா, சாமிநாதன். இவர்களுக்கு என் நன்றி. 

கடுமையான வேலைப்பளூ இருந்த போதிலும் எங்கள் குடும்பத்தின் மேல் அதிக அக்கறை காட்டும் திருமதி ரஞ்சனி நாராயணன் அளித்த விமர்சனப் பார்வைக்கு என் நன்றி. 

திருப்பூரில் பணிபுரிந்து கொண்டிருக்கும் பலரும் இதனைப் படித்துக் கொண்டே வந்தனர் என்பதை அவர்களை அந்தந்த அத்தியாங்களில் கொடுத்த விமர்சனம் வாயிலாகக் கண்டு கொண்டேன். "டாலர் நகரம்" என்ற தொடர் 4தமிழ் மீடியா தளத்தில் வெளிவந்த போது எந்த அளவுக்கு ஆதரவு இருந்ததே அந்த அளவுக்கு உலகம் முழுக்கக் கொண்டு போய்ச் சேர்ந்த வலைத்தமிழ் குழுவினருக்கு என் நன்றி. 

ந்தத் துறை சார்ந்த எவருமே இந்தத் தொடர் குறித்து எவ்வித விமர்சனங்களையும் கொடுக்கவில்லை. "சரியாகத்தான் உள்ளது" என்றனர். ஆனால் பலரும் "நீளமாக உள்ளது, இழுத்துக் கொண்டே சென்றீர்கள், உங்களைப் பற்றிய தகவல்கள் அதிகம்" போன்ற பல விமர்சனங்களைத் தந்தனர். 

னக்கும் முதலில் குழப்பமாக இருந்தது. நெருங்கிய நண்பர்களிடம் கொடுத்து கேட்ட போது "இது போன்று துறை சார்ந்து எழுதும் போது உங்களை முன்னிலைப்படுத்தி எழுதித்தான் ஆக வேண்டும்" என்றனர். குறிப்பாக எழுத்தாளர் அமுதவன் இது குறித்த என் சந்தேகங்களை அழகாக நிவர்த்திச் செய்து உதவினார். சென்ற வருடத்தில் அவர் மூலம் எழுத்துலகத்தில் பல படிகள் ஏறியுள்ளேன்.

ந்தத் தொடரின் வெற்றிக்கு முக்கிய காரணம் இதில் வந்துள்ள புகைப்படங்கள்.  நானும் இந்தத் தொழிலில் இருந்தேன் என்பதை உணர்த்தும் அளவிற்கு இந்தத் துறையில் உள்ள ஒவ்வொரு துறை சார்ந்த விசயங்களையும் மிக அழகாக புகைப்படம் எடுத்தவர் சென்னையில் வசிக்கும் புகைப்படக்கலைஞர் நெருங்கிய நண்பர் அகலிகன்.  என் வலைபதிவு எழுத்தின் மூலம் அறிமுகமாகி என் நலம் விரும்பியாக மாறியவர்.  இந்தத் தொடர் மூலம் கிடைக்கக்கூடிய அனைத்து பாராட்டுகளும் அவருக்குத் தான் போய்ச் சேர வேண்டும்.  

லைத்தமிழ் நிர்வாகம் இதனைப் புத்தகமாகக் கொண்டு வரவும், இதனை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப் போவதாகவும் சொல்லியுள்ளனர். திருப்பூரில் உள்ள நெருங்கிய நண்பரின் வேண்டுகோளின் படி இதனை அவசரமாக மின் நூலாக மாற்றியுள்ளேன். காரணம் இது அவசியம் இங்குள்ள ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய புத்தகம் என்று வாழ்த்தியத்திற்கு இந்த மின் நூலை காணிக்கையாக அளிக்க விரும்புகின்றேன். 

மேலும் புத்தகமாகக் கொண்டு வரும் போது அது சார்ந்த நடவடிக்கைகளுக்காக நாம் குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்க வேண்டும். பல சட்ட திட்டங்களுக்குக் கட்டுப்பட வேண்டும். எழுதுகின்றவனுக்குச் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு வருமானம் வருவதும் இல்லை. ஒரு புத்தகத்திற்கு ராயல்டி என்று கிடைக்கும் தொகையைப் பார்த்து (நான் வாங்கிக் கொண்டிருக்கும் சம்பளத்தை ஒப்பிட்டு) சிரித்து விட்டேன். அடக் கொடுமையே? இதற்குத் தான் இத்தனை அடிதடியா? என்று. மேலும் படிக்க விரும்புவன் எதிர்பார்க்கும் விலையும் பல சமயம் அமைந்து விடுவதில்லை. இது போன்ற பல சிக்கல்கள் காரணமாக உருப்படியான எந்த விசயமும் விரும்பியவர்களின் கைக்குப் போய்ச் சேர்வதே இல்லை.  புத்தக சந்தைக்கு, புத்தகங்களுக்கு என்று இங்கே தனிப்பட்ட பெரிய மரியாதை இல்லை.

ற்ற மாநிலங்களில் எப்படி? என்று தெரியவில்லை.  நிச்சயம் தமிழ்நாட்டில் இல்லை. பதிப்பக மக்கள் பலவிதங்களில் போராடித்தான் தங்கள் முதலீடுகளை காப்பாற்றிக் கொள்ள முயற்சிக்கின்றார்கள். அவர்களை எந்த விதங்களிலும் குறை சொல்ல முடியாது.

ஏற்கனவே இதைப் பற்றி எழுதி உள்ளேன். 

ணைய தளம், ஜால்ரா கோஷ்டிகள், பரஸ்பரம் சந்தனம் தடவுதல், புகழ்ந்து எழுதுவது போன்ற பலதரப்படட விளம்பர யுக்தி மூலம் மட்டுமே இங்கே புத்தக விற்பனை நடக்கின்றது.  மற்றபடி அச்சடித்த புத்தகங்கள் அனைத்தும் (விற்பனையாக பட்சத்தில்) ஏதோவொரு குடோனில் பாதுகாப்பாக இருக்கும்.  இது தான் உண்மை. இது தான் எதார்த்தம். காகிதத்திற்காக வெட்டப்பட்ட மரங்கள் பாவம். ஒரு புத்தகம் என்பது உங்களை உங்கள் எண்ணங்களை மாற்ற உதவுவது.  அப்படி மாற்ற உதவாத புத்தகங்கள் என் பார்வையில் வெறும் காகிதமே. 

ணையம் என்றால் நினைத்த நேரத்தில் எங்கிருந்து வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ள முடியும். கணினியில் தொடர்ச்சியாகப் படிக்க முடியாதவர்கள் பிரிண்ட் அவுட் எடுத்துக் கொள்ள முடியும். கைபேசியில், டேப்லேட் பிசி மூலம் படிக்க என்று பல வாய்ப்புகள் இருப்பதால் மின் நூலாகக் கொண்டு வந்துள்ளேன். 

புத்தகமாக வரும் போது குறிப்பிட்ட சிலரின் கைக்குத்தான் போய்ச் சேரும். அதைப் பெறுவதில் பல சங்கடங்கள் உள்ளது. தனியார் மற்றும் அரசுத்துறை என்றாலும் அவர்களின் சேவை மனப்பான்மை என்பது மாறி காசு சார்ந்த நோக்கங்கள் என்பதால் ஒரு கொரியர் குறிப்பிட்ட ஆளிடம் போய்ச் சேர்ப்பதில் கூட இங்கே கடைசி வரைக்கும் பின் தொடர வேண்டியதாக உள்ளது. 

பகல் முழுக்க அலுவலகம் சார்ந்த வேலையில் இருப்பதால் புத்தகச் சந்தை சார்ந்த எந்த விசயத்திலும் என்னால் கவனம் செலுத்த முடியாத நிலையில் உள்ளேன். 

சென்ற வருடம் இரண்டு தொலைக்காட்சியில் இருந்து பேச அழைத்தனர். அதற்கென்று என்னைத் தயார் படுத்திக் கொள்வதும், அவர்கள் விரும்பும் நாளில் சென்று வருவதும் மிகுந்த சவாலைத் தரக்கூடியதாக இருப்பதால் தவிர்த்து விட்டேன். குடும்பம், தொழில் இந்த இரண்டுக்கும் பிறகு தான் மற்ற எனது விருப்பம் சார்ந்த துறை என்பதைக் கவனமாக வைத்துள்ளேன். 

ரு புத்தகத்தை மின் நூலாக வெளியிடும் போது உலகம் முழுக்கப் பரவியுள்ள தமிழர்கள் வாசிக்க விரும்பும் அத்தனை பேர்களின் கைக்கும் போய்ச் சேர்ந்து விடும் என்ற நம்பிக்கை எனக்குண்டு. 

இணையம் தான் எனக்கு எழுத கற்றுத் தந்தது. நண்பர்கள் தான் உதவினர். அவர்களுக்கு உதவுவது என் கடமையும் கூட. 

ய்த்த ஆடைத்துறை சார்ந்த விசயங்கள் மட்டுமல்ல. எளிய மற்றும் பணம் படைத்தவர்களின் மறுபக்க வாழ்வை அலசும் வாழ்வியல் தொடராக இருப்பதால் அனைவருக்கும் பயன்படும் என்று நம்புகின்றேன். 

புத்தாண்டு கொண்டாட்டங்கள், பிறந்த நாள் கொண்டாட்டங்கள், சடங்கு சார்ந்த சம்பிராதாய நிகழ்வுகள் போன்ற எதிலும் எனக்கு விருப்பமில்லை. பல முறை இது குறித்த எனது பார்வையை எழுதியுள்ளேன். ஒவ்வொரு நாளையும் நாம் கொண்டாடி வாழ வேண்டும் என்ற விருப்பத்தில் இருப்பவன் என்பதால் ஒவ்வொரு நாளும் எனக்குப் புத்தாண்டு தினமே.

மற்றபடி "எண்ணம் போல வாழ்வு" என்பதனை எப்போதும் மனதில் வைத்திருங்கள்.