Sunday, March 31, 2013

அகலிகன்


வணக்கம் 

இது டாலர் நகரம் பற்றி என் பார்வை. 

அகலிகன். சென்னை. 

 “டாலர் நகரம்” அடிப்படையில் பெயரே சரியானதாய் அமைந்துவிட்டிருக்கிறது 

அமெரிக்க டாலரைப்போலவே வெளிப்பார்வைக்கு மிக கவர்ச்சியானதாகவும் பலம் வாய்ந்ததாகவும் இருக்கும் டாலருக்குப்பின்னால் பல கோரங்களும், கொடுமைகளும், அத்துமீறல்களும், அவலங்களும், சுரண்டல்களூம் இருப்பதுபோலவே திருப்பூர் பின்னலாடை தொழில் வளர்ச்சி வெளிப்பார்வைக்கு கவர்ச்சியானதாக இருந்தாலும் அது தன்னுள் பல குறைகளையும் ஏற்ற இறக்கங்களையும் கொண்டுள்ளது. 

பாலகுமாரனின் வெள்ளைத்தாமரை பேப்பர் வியாபாரத்தை அக்குவேறுறாகவும், நெல்லுச்சோறு நிலக்கடலை வியாபாரத்தை ஆணிவேறாகவும், தண்ணிர்துறை மைலாபூர் தண்ணிதுறை மார்கெட்டையும் என கதாபாத்திரங்களின் தொழில் சார்ந்த விவரங்களையும் விளக்கங்களையும் மிகத்தெளிவாய் முன்வைக்கும். அதுவே அவர் படைப்புக்களின் வெற்றியும்கூட. அந்த வகையில் டாலர் நகரம் ஒரு தொழில் சார்ந்த விவரங்களை மிகத்தெளிவாக முன்வைத்திருக்கிறது. 

(தாங்கள் இதையே கதாபாத்திரங்களை அதிகம் பயன்படுத்தி பல கதைகளாகவும் முயற்சிக்கலாம் அல்லது ஆரம்ப அத்தியாங்கள் பொல் மற்ற அத்தியாங்களிலும் உங்கள் பங்களீப்பு சார்ந்ததுபோலவே விவரித்திருக்கலாம், ஒரு நாவலுக்கான வடிவம் கிடைத்திருக்கும்). கோட்டா சிஸ்டத்தில் பெற்றுள்ள கோட்டாவின் அளவிற்குத்தான், நாட்டிற்குத்தான் ஏற்றுமதி செய்யவேண்டும் என்ற சட்டத்தில் உள்ள ஓட்டை காரணமாய் இந்தியா முழுவதும் பரவிய கோட்டா தரகர்கள் பற்றி கொஞ்சம் அறிந்திருக்கிறேன். 

சில ஏற்றுமதி நிறுவனங்களே தன் தேவைக்கு அதிகமான கோட்டாக்களை பெற்றுவைத்துக்கொண்டு இந்த கோட்டா தரகர்களுடன் கூட்டுகளவாடி லாபம் பார்த்தகதை சில கேள்விபட்டிருக்கிறேன். மற்றபடி தொழில் சார்ந்த தரவுகள் எனக்குள் மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தவில்லை. 

ஏற்கனவே ஒரு தொழிலில் 15 ஆண்டுகளாக இருப்பதனாலும் இது ஏற்பட்டிருக்கலாம். ஆனால் புதிதாய் தொழில்களை முனையப்போகிறவர்கள் அல்லது புதிதாய் ஓரு துறையில் பணிபுரிய விழைபவர்களை இப்படியான தரவுகள் கவரும் என்பதொடல்லாமல் அவர்களுக்கு இத்தரவுகள் உதவவும் செய்யும். ஆனால் இத்தொழில் சார்ந்த சமூக பிரச்சனைகளை துளியும் மறைகாமல் அரசு மற்றும் அதிகாரிகள் செய்யும் அத்துமீறல்களையும் அலட்சியத்தையும் துணிவுடன் சொல்லியிருப்பது பாரட்டத்தக்கது. 

தொடக்க சில அத்தியாங்களைத்தவிர மற்றவை பெரும்பாலும் தொழில்சார்ந்த மற்றும் நகர்சார்ந்த பிரச்சனைகளை பேசியிருப்பதால் இயல்பாகவே வாசிப்பதில் ஒரு ஈர்ப்பு வந்துவிடுகிறது. ( கூடவே அக்கறையில்லா அரசுகளின் கொள்கை முடிவுகளீன்மீதும் கோபமும் வெறுப்பும்). திருப்பூரைச்சுற்றி உருவாகிவரும் புறநகர் பற்றியும் அதன் அடிப்படைவசதியின்மை பற்றியும் ஆதங்கப்பட்டுள்ளீர்கள் ஆனால் உலகெங்கும் அடித்தட்டு மக்கள் எல்லா அரசுகளாலும் புறந்தள்ளப்படுகிறார்கள் என்பது நிதர்சனம். 

சென்னையிலுமேகூட சிங்க்காரச்சென்னை என்ற கான்செப்ட் அடிப்படையில் அன்றாடம் நகரைச்சார்து உழைத்து பிழைக்கும் அப்படியான மக்கள் சென்னைக்கு வெகுதூரம் மிகமிக மோசமான சூழ்நிலையில் குடியமர்த்தப்படுகிறார்கள். உண்மையில் நகரங்கள் வசதிபடைத்தவர்களுக்கு மட்டுமே என சொல்லாமல் சொல்லப்படும் செய்தி இது.  

ஆடை தொழில் சார்ந்த புத்தகமாக இருந்தாலும் மனிதர்களின் மனஉணர்வுகளையும் பதிவு செய்திருப்பது சிறப்பு. (அதிக இடங்களில் இல்லையென்றாலும் சாத்தியப்படக்கூடிய இடங்களில்) அதே சமயம் அன்றைய விவசாயமும் அதன் இயற்கை வழி உர சுழற்சியும் பற்றிய தகவல் இன்றய விவசாய முறைகளையும் விவசாயின் நிலையையும் ஒப்பிட்டு காண்கையில் ரத்தக்கண்ணீர்தான். 

அ. முத்துக்கிருஷ்ணனின் “உழவின் திசைவழியே” என்ற ஆய்வு கட்டுரை ஒரு சிறந்த படைப்பு. முயற்சிக்கவும். கூடங்குளம் அனு உலை தொடர்பான அரசின் அத்தனை பொய் பிரசாரங்களையும் தொலுரித்துக்காட்டும் “கூடங்குளம் விழித்தெழும் உண்மைகள்” என்ற பெயரில் மக்களுக்கான விழிப்புணர்வு பதிப்பாக வெளிவந்திருப்பதைப்போல் (உயிர்மைபதிப்பகம் அ. முத்துக்கிருஷ்ணன்) சாயமே இது பொய்யடா தொகுப்பும் சாயப்பட்டறை கழிவுகளின் பாதிப்பு பற்றிய விழிப்புணர்வுக்கான  மக்கள் பதிப்பாய் வெளியிடக்கூடிய முக்கிய பகுதி.

நான் மிகவும் ரசித்தது.

எல்லா காலங்களிலும் திறமையானவர்களை உதவிசெய்து வழியனுப்புவது மாதவன்போன்ற பள்ளித்தோழர்கள்தான். அந்தவகையில் மாதவன், முருகேஷ் கவர்ந்தார்.

 (நம் ‘+’ ‘-’ களை அறிந்த பால்யகால நட்பு கடைசிவரை உடன்பயனிக்கும்) நம் ஆறாவது வயதில்தான் முதல் முதலாய் பள்ளிக்கு சென்றோம் இன்று 3 வயது எப்படாமுடியும் எனகாத்திருக்கிறார்கள் 

பெற்றோர்கள் கொத்திக்கொள்ள PLAY SCHOOLஸும் வலைவிரித்து காத்திருக்கின்றன. எல்லாவற்றிலும் தன் குழந்தை முதலாவதாய் வரவேண்டுமென ஆசை அத்தனை பெற்றோர்க்கும் உண்டு ஆனால் அதற்கான வயது குழந்தைக்கு இல்லை என்பதை மறந்துவிடுகிறார்கள். இந்நிலையில் தன் குழந்தை முதல் ரேங்க் எடுத்திருந்தாலும் ஏற்கனவே முதல் ரேங்க் வாங்கிய குழந்தை இப்ப என்ன ரேங்க் என்ற அக்கறை எல்லா குழந்தைகளுமே குழந்தைகள்தான் என்பது புரிந்த கேள்வி, 

மகிழ்ச்சியும் ஆச்சரியமும் அளித்தது.

பணம் துரத்திப்பறவைகள் மற்றும் காமம் கடந்த ஆட்கள் வேண்டும் அத்தியாயங்கள் மக்களின் வறுமையும் அதன் விளைவான விட்டுக்கொடுத்தல்கள் மற்றும் ஏற்றுக்கொள்ளுதல்கள் பற்றி மிகமிக தெளிவாக எடுத்துக்காட்டுகிறது. 

கொடிது கொடிது வறுமை கொடிது அதனினும் கொடுமை இளமையில் வறுமை. வறுமை காரணமாய் இளமையிலேயே பணிச்சூழலுக்கு தள்ளப்பட்டு அங்கெ தன் குடும்பசூழலிலிருந்து மெல்ல விலகி தன் வாழ்க்கைப்போக்கை தானே தெர்ந்தெடுக்கும் நிலையை ஏற்படுத்தும் பொருளாதார வளர்ச்சி அதன் விளாய்வாய் ஏற்படும் கூடா நட்பு 

இவை சார்ந்த ஆட்களை என் உடனிருந்தவர்களிடமே கண்டிருப்பதால் உங்கள் பதிவுகள் புரிந்துகொள்ளமுடிந்தது.

உண்மையில் எல்லோராலும் படிக்கப்படவேண்டியவை.

தொடர்புடைய பதிவுகள்

புத்தகம் வாங்க


Tuesday, March 26, 2013

500


வணக்கம் நண்பர்களே

இது என்னுடைய 500 வது பதிவு.  

எனக்கு இந்த வலையுலகம் வேர்ட்ப்ரஸ் மூலம் அறிமுகம் ஆன நாள் மே மாதம் 2009

2002 முதல் என் ஆய்த்த ஆடை ஏற்றுமதி துறை தொழில் வாழ்க்கையில் இணையம் என்பது தினந்தோறும் 12 மணி நேரத்திற்கும் மேலாக என் வாழ்க்கையில் ஒன்றாக கலந்து இருந்த போதிலும்  2009 ஆம் ஆண்டு தான் தமிழ் இணையம் என்பது எனக்கு அறிமுகம் ஆனது. 

என்னுடைய முதல் பதிவு வேர்ட்ப்ரஸ் ல் ஜுலை 3 2009 அன்று எழுதி வெளியிட்டேன். நண்பர் நாகாவின் வேண்டுகோளுக்கினங்க அவர் உருவாக்கித் தந்த இந்த ப்ளாக்கர் என்ற தளத்தின் மூலம் செப்டம்பர் 26 2009 முதல் எழுதி வருகின்றேன்.

இரண்டு தளத்தின் வாயிலாகவும் இதுவரையிலும்  500 பதிவுகளை எழுதியுள்ளேன். 

பதிவின் நீளம், அகலம், உயரம், எழுத்துப்பிழைகள், வாக்கியப் பிழைகள், புரியாத தன்மை, விவரிக்கும் பாங்கு என்று தட்டுத்தடுமாறி ஒவ்வொன்றாக கற்றுக் கொண்டு இன்று இந்த நிலை வரைக்கும் உயர்ந்து வந்துள்ளேன். திருப்பூரில் எனக்கு முன்னால் எழுதியவர்கள் அநேகம் பேர்கள். பலருக்கும் தொழில் வாழ்க்கையின் காரணமாக படிப்படியாக தங்களை சுருக்கிக் கொண்டார்கள்.

இன்று வரையிலும் எனக்குத் தெரிந்தவகையில் சோர்வடையாமல் என்னைப் பாதிக்கும் ஒவ்வொன்றையும் பதிவுகளாக மாற்றிக் கொண்டே வருகின்றேன். 

என்னுடைய எழுத்தின் மூலம் அறிமுகம் ஆனவர்கள் எனக்கு நெருக்கமான உறவுகளாகவும் மாறியுள்ளனர். ஒவ்வொரு நாட்டிலும், ஒவ்வொரு இடத்திலும் யாரோ ஒருவர் எனக்கு நெருக்கமான சொந்தமாக மாறியுள்ளனர். அனைத்து கட்சிகளிலும் கொள்கைகளுக்கு அப்பாற்பட்டு நெருக்கம் பாராட்டுபவர்கள் அநேகம் பேர்கள். ஊடகத் துறையிலும் அதிகம் பேர்கள் அறிமுகமாகி உள்ளனர். பலதரப்பட்ட இயக்கம் சார்ந்த கொள்கைகள் கொண்டவர்களுடன் நட்பு  கொள்ளவும் முடிந்துள்ளது. பிரபல எழுத்தாளர்கள், பதிப்பக மக்கள், பத்திரிக்கை ஆசிரியர்கள் என்று பல தரப்பட்ட நிலையில் பலரையும் தொடர்பில் வைத்திருக்க முடிந்துள்ளது. 

ஒவ்வொரு அனுபவமும் தினந்தோறும் நூற்றுக்கணக்கான பாடங்களை கற்றுத் தந்து கொண்டேயிருக்கின்றது. ஒவ்வொரு நிலையிலும் எண்ணம் போல வாழ்வு என்பதனையும், தீதும் நன்றும் பிறர் தர வரா என்ற முதுமொழியையும் மனதில் வைத்துக் கொண்டே நகர்ந்து கொண்டு இருக்கின்றேன்.

நான் கடந்து வந்த இந்த நான்கு வருடத்தில் என் தளத்தை தவிர்த்து வினவு தளம், சிறகு தளம், தமிழ்ப் பேப்பர் போன்ற தளங்களில் என் கட்டுரைகள் வந்துள்ளது. வெகுஜன பத்திரிக்கையான புதிய தலைமுறையில் எனது சாய்ப்பட்டறை குறித்து மூடு என்ற தலைப்பில் அட்டைப்பட கட்டுரையாக (கவர் ஸ்டோரி) வந்துள்ளது.  ஆழம் பத்திரிக்கையில் இதுவரையிலும் மூன்று கட்டுரைகள் வெளியாகி உள்ளது.  அதிக அளவு 4 தமிழ் மீடியா குழுமத்தில் எனது கட்டுரைகள் வெளியாகி உள்ளது.


வலைச்சரத்தில் இதுவரையிலும் இரண்டு முறை சீனா அவர்கள் என்னை வலைச்சரம் ஆசிரியர் பணியில் அமர்த்தி வைத்து அழகு பார்த்ததோடு முழுமையான சுதந்திரத்தையும் அளித்து ஊக்கப்படுத்தினார். சிலருக்கும் ஊக்கத்தையும் பலருக்கு தாக்கத்தையும் இதன் மூலம் ஏற்படுத்த முடிந்தது.

நான் சார்ந்திருக்கும் ஏற்றுமதி தொழில் வாழ்க்கைச் சூழலில் இந்த எழுத்து வாழ்க்கையில் முனைப்பாக செயல்பட வாய்ப்பில்லாத காரணத்தால் பத்திரிக்கையில் தொடர்ந்து எழுத வாய்ப்பில்லாது நகர்ந்து கொண்டேயிருக்கின்றேன்.

ஐந்தாம் ஆண்டில் பயணிக்கப் போகும் என் எழுத்து வாழ்க்கையில் ஜனவரி மாதம் 27ந் தேதி 2013 அன்று என்னுடைய முதல் நூலான டாலர் நகரத்தை ஸ்விஸ் ல் இருந்து செயல்படும் 4 தமிழ்மீடியா இணைய தள குழுமம் கொண்டு வந்துள்ளனர். எனக்கு நல்ல அங்கீகாரத்தை பெற்றுத் தந்துள்ளது. நூல் விற்பனையும் திருப்தியை தந்துள்ளது.

நாங்கள் நிர்ணயித்த இலக்கை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றோம். 

தேவியர் இல்லம். திருப்பூர் என்ற இந்த வலைதளத்தை முகநூல், கூகுள்ப்ளஸ், ட்விட்டர், ஆர்க்குட், மின் அஞ்சல் வழியாக, கூகுள் ரீடர் ( இந்த சேவையை விரைவில் நிறுத்தப் போகின்றார்கள்), ஹாட் மெயில், யாகூ மெயில், இந்த தளத்தில் இணைத்துக் கொண்டவர்கள்  போன்றவற்றின் வாயிலாக தொடர்பர்களின் எண்ணிக்கை ஏறக்குறைய  4000 க்கும் மேற்பட்டவர்கள். எனது கருத்துக்களை ஏதோவொரு வழியில் உலகம் முழுக்க சென்றடைய இது வாய்ப்பாக உள்ளது.

தற்போது கூகுள் தளத்தின் வாயிலாக நேரிடையாக தளத்திற்கு வருபவர்களின் எண்ணிக்கையும் இந்த ஆண்டில் உயர்ந்துள்ளது. ஒவ்வொரு சமயத்திலும் கூகுள் தேடுதல் சேவையின் வாயிலாக குறி சொற்கள் மூலம் தேடிக் கொண்டுருக்கும் பலருக்கும் எனது தளம் அறிமுகமாகிக் கொண்டே இருக்கின்றது. ஒரு வட்டத்திற்குள் இல்லாத எனது சிந்தனைகள் பல விதங்களில் என் எழுத்துலக பயணத்திற்கு உரமாக உள்ளது. 

எனது தள தொழில் நுட்பம் மற்றும் வடிவமைப்பில் நாகாவைத் தொடர்ந்து சுடுதண்ணி பல உதவிகளை செய்துள்ளார்.  ஆனால் இன்று வரையிலும் எனது தளம், ஞானாலயா தளத்தின் வடிவமைப்பு, திருப்பூர் தாய்த்தமிழ்ப் பள்ளிக்கான பணி மற்றும் எனக்குத் தேவைப்படும் பிற வடிவமைப்பு சார்ந்த அத்தனை வேலைகளையும் எனக்கு செய்து கொடுத்துக் கொண்டு இருப்பவர் அவர்கள் உண்மைகள் என்ற வலைதளத்தில் எழுதிக் கொண்டிருக்கும் அமெரிக்காவில் உள்ள நண்பர். அசாத்தியமான உழைப்பாளி. எந்நாளும் அவருக்கு கடமைப்பட்டுள்ளேன்.

இன்று வரையிலும் பழைய பதிவுகளை படித்து விட்டு கடிதம் எழுதுபவர்களும், என்னை சந்திக்கும் தருணத்தில் மகிழ்ச்சியுடன் அதனைப் பற்றி பகிர்ந்து கொண்டவர்களும் அதிகம்.  

இந்த தளத்தை நாற்பது வயதை தொட இருப்பவர்களும், கடந்தவர்களும் என்று தொடங்கி 70 வயது வரைக்கும் இருக்கும் பலரின் விருப்பமான தளமாக உள்ளது.  நான் எழுதத் தொடங்கிய பிறகே வாழ்க்கையை அதிக அளவு ரசிக்கவும், அன்றாட வாழ்க்கையை அனுபவித்து வாழவும் கற்றுள்ளேன். 

வலைதளத்தில் முதன் முதலாக தொடர் போல பலவற்றை எழுதத் தொடங்கியதும், ஈழம் மற்றும் திருப்பூர் குறித்தும் அதிகம் எழுதியுள்ளேன். ஐந்தாம் ஆண்டில் பயணிக்கப் போகும் இந்த வலையுலக பயணத்தில் எழுத்துப் பயணத்தோடு சில உருப்படியான களப்பணிகளையும் செய்ய முடிந்துள்ளது. 

புதுக்கோட்டையில் இருந்து செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஆய்வு நூலகமான ஞானாலயாவை தமிழ் இணையத்தில் அதிக அளவுக்கு கொண்டு சேர்த்துள்ளேன். திருப்பூரில் இருந்து செயல்பட்டுக் கொண்டிருக்கும் தாய்த்தமிழ்ப் பள்ளி குறித்து அதன் நிதி ஆதாரங்களைக் கண்டு நண்பர்களிடத்தில் பகிர்ந்து சிறிய அளவு நிதி ஆதாரங்களை பெற்றுக் கொடுத்துள்ளேன். இந்த பள்ளியின் வளர்ச்சியில் தேவைப்படும் நிதிக்காக பல முயற்சிகளை எடுத்துக் கொண்டு வருகின்றேன்.

நான் பிழைக்க வந்த ஊரான திருப்பூரைப் பற்றி டாலர் நகரம் என்ற புத்தகத்தின் வாயிலாக கொண்டு வந்ததைப் போல நான் வாழ்ந்த காரைக்குடியை, இராமநாதபுரம் மாவட்டத்தை (தற்போது சிவகங்கை மாவட்டம்) இதே போல ஒரு ஆவணமாக உருவாக்க வேண்டும் என்று மனதில் வைத்துள்ளேன். இது தொடர்பாக வலைபதிவில் எழுதி இருந்தாலும் புத்தக வடிவில் முழுமை பெற், ஏராளமான வரலாற்று தகவல்களை திரட்ட வேண்டும் என்கிற நிலையில் நிச்சயம் அதற்கான நேரம் வரும் என்று நம்பிக்கையோடு இருக்கின்றேன்.  

வலைதளத்தில் மின் நூல் தொகுப்புக்கென்று தனியாக ஒரு தளம் உருவாக்க வேண்டும் என்பதை மனதில் வைத்துள்ளேன்.  அது தமிழ் நூல்கள் சார்ந்த, நூலகம் சார்ந்த, மின் நூல் தொகுப்பின் மொத்த இடமாக இருக்கும் அளவுக்கு இருக்க வேண்டும் என்பதை கவனத்தில் வைத்து ஒரு தளத்தை உருவாக்க வேண்டும் என்று நினைத்துள்ளேன். எதிர்வரும் காலத்தில் மின் நூல்கள் மூலம் வாசிக்க விரும்புவர்களுக்கு அது பயன் உள்ளதாக இருக்கக்கூடும். சமய சந்தர்ப்பங்கள் உருவாகும் போது இதை நிச்சயம் முயற்சிப்பேன்.

வலைதளத்தில் எழுதத் தொடங்கிய போது குழப்பமான சிந்தனைகளை அதிகம் பெற்றிருந்த போது தேவியர்கள் பள்ளிக்கு செல்லத் தொடங்கியிருந்தார்கள். இன்று நான்காம் வகுப்பு முடிந்து அடுத்த வகுப்புகக்கு செல்ல தேவியர்கள் கல்வியில் முதல் தரத்திலும், தமிழ் வாசிப்பு எழுத்துப் பயிற்சியில் முதன்மை தரத்திலும் இருக்கின்றார்கள். மனைவியின் ஆதரவு எப்போதும் போல இயல்பாக இருப்பதால் இந்த வாழ்க்கையை ரசனைக்குரியதாக தினந்தோறும் உருவாக்கிக் கொள்ள முடிகின்றது.

எனது தளத்தை தமிழ்மணம், தமிழ்வெளி, இன்ட்லி திரட்டிகள் அதிக அளவு கொண்டு சேர்த்துள்ளார்கள். இதுவரையிலும் வந்துள்ள 

விமர்சனங்களின் எண்ணிக்கை 


Published comments 7228 

பார்வையிட்ட பக்கங்களின் எண்ணிக்கை


Page views all time history  4 56,582


(வேர்ட் ப்ரஸ் தளம் நீங்கலாக)


ஒவ்வொரு பிரபல்ய எழுத்தாளர்களும் வாசகர் கடிதம் என்று ஒன்றை வெளியிட்டு அதற்கு அவர்களும் பதில் அளித்துருப்பதை நீங்கள் படித்து இருக்கக்கூடும். அது குறித்த முரண்பட்ட தகவல்கள் நிறைய உண்டு.  எனக்கும் வலைபதிவில் விமர்சனம் கொடுக்காமல் தனிப்பட்ட முறையில் மின் அஞ்சல் வழியே தங்கள் அன்பை, ஆச்சரியத்தை வெளிப்படுத்தியவர்கள் அநேகம் பேர்கள். அவர்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டது உண்டு. 

ஆனால் இந்த 500 வது பதிவில் கடந்த மார்ச் 23 ந் தேதி அன்று வந்த ஒரு நண்பரின் கடிதத்தை பெயர் தவிர்த்து அவர் எழுதிய மொழியிலேயே இங்கு வெளியிடுகின்றேன். இதுவும் ஒரு வகையில் அங்கீகாரம் தான். 

மொழி பெயர்ப்பு செய்யாமல் வெளியிட காரணம் சில பதிவுகளுக்கு முன்பு நண்பர் ஒருவர் மூச்சுக்கு மூச்சு தமிழ் என்று ஏன் புலம்புகின்றீர் என்றார். அவருக்கு இதை டெடிகேட் செய்கின்றேன்.  போதுமா நண்பா?

ஆதரவளித்த ஆதரவளிக்கும் அத்தனை வாசிப்பாளர்களுக்கும் என் நன்றிகளை இங்கே எழுதி வைக்கின்றேன்.

Dear Jothi Ganesan,

Well and wish the same. You may be surprised to receive this e-mail after a long interval.

Due to my personal health problems I discontinued posting my writings in the web and stayed away from the web for some time.

Very recently I had the chance to read some of your article on Eelam Tamil issue.  Those articles forced me to write this e-mail.

Dear Jothigy your investigative journalism have exposed many influential people to the web readers.   You have touched very sensitive nerves of the higher ups. Exposing their design  and their manipulations to amesh wealth and fame have angered many of them. Due to this I fear for your safety and well being. Anything can happen to anyone in India.

Please show some restraint in exposing those elements. I have personal bitter experience in this type of matter in SriLanka. That is why I am requesting you to be cautious. Your personal safety is very important to your family. Particularly to your wife and children.

I hope that you can understand my fear as a co writer in the web. I have preserved many of your article in a separate external hard disc.

So far no one has written with facts and proof in their articles. I am proud of you. I am living in Toronto, Canada. After serving in the Royal Bank of Canada

I am retired now. I have only one daughter who is married and settled here. I am  enjoying my retired life by visiting distance land in the globe. If I come to India I wish to meet you.

Please be cautious and alert. My best wishes and blessings to your wife and children.

My best wishes and blessing for all your future endeavor.

Take care.

வாருங்கள் நண்பரே. அவசியம் சந்திப்போம்.


நான் எழுதிய தலைப்புகளை அறிய உதவும் இடம்.

உங்கள் மனதில் உள்ள பாரங்களை இறக்கி வைக்க இந்த காணொளி காட்சி

Monday, March 25, 2013

04 மூத்த குடிப் பெருமை

இந்த தொடரின் முந்தைய பகுதிகள்

மொத்த இந்தியர்களுக்கும் இந்திய வரைபடத்தின் கீழே இருக்கும் குமரி முனையைப் போலவே, தமிழ்நாட்டில் உள்ள இராமேஸ்வரம், மொத்த இந்துக்களுக்கும் ஒரு நம்பிக்கை முனை.  இலங்கை தமிழனத்திற்கு இந்த நூற்றாண்டின் மறக்க முடியாத முள்ளிவாய்க்கால் போல் வாழ்ந்த மொத்த நூற்றாண்டு காலத்திலும் மற்க்க முடியாத இடம் இராமேஸ்வரத்தில் உள்ள மண்டப முகாம்.

வாழச் சென்ற இலங்கைக்கு வழி அனுப்பிய இடமாகவும், வாழ்க்கையை தொலைத்து வந்து இறங்கிக் கொண்டுருபவர்களுக்கு வரவேற்கும் இடமாகவும் இருக்கும் இந்த இராமேஸ்வரம் போல் வேறு எந்த இனத்திற்கும் ஒரே இடம் இருக்குமா? என்பது சந்தேமே. 

இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன் தமிழ்நாட்டில் உருவான பஞ்சத்தில் வாழ வழியில்லாமல் போனவர்களின் காலடித்தடங்களை பதிவு செய்து கொண்டதைப் போலவே வந்து இறங்குபவர்களின் அவலங்களையும் உள் வாங்கிக்கொண்ட இந்த கடல் அலைகள் வந்து மோதும் இராமேஸ்வரம் விஞ்ஞான கால மாற்றத்தில் ரொம்பவே மாறியுள்ளது..  ஆனால் எந்த கால மாற்றமும் இலங்கைத் தமிழர்களின் அவல வாழ்க்கையையும், அவர்களின் வாழ்வுரிமைப் போராட்டங்களை முடிவுக்கு கொண்டு வரவில்லை. 

ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக முடிவு இல்லாமல் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது.  

தமிழ்நாட்டிலிருந்து பெயர்ச்சியாய் இலங்கைத்தீவை நோக்கி நகர்ந்தவர்கள், அங்கேயே தலைமுறையாய் வாழ்ந்தவர்கள் என அத்தனை பேர்களும், ஒவ்வொரு குறிப்பிட்ட காலகட்டங்களிலும் பாதி உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு இன்று வரையிலும் இங்கே வந்து இறங்கிக்கொண்டேயிருக்கிறார்கள்.

இந்தியாவில், தமிழ்நாட்டில் 1980க்கு முன் நீங்கள் பிறந்து இருந்தால் இலங்கையில் இருந்து ஒலிபரப்பான தமிழ் திரை இசை பாடல்களை கேட்டுக்கொண்டு சிறிய செய்திகளாக வந்து கொண்டுருந்த இந்த இலங்கைத் தமிழர்களின் வாழ்வுரிமைப் போராட்ட பிரச்சனைகளை இடையில் படித்து இருக்கலாம்.. காலப்போக்கில்  துண்டு துண்டாக சிதைக்கப்பட்ட தமிழர்களின் உடம்பை ரத்தமும் சதையுமாக தாங்கி வந்த ஊடகச் செய்திகள் மொத்தமும் உங்களை உருக்குலைத்துருக்கும். 

அன்றும் இன்றும் தமிழ்நாட்டில் இது வெறும் செய்திகள் மட்டுமே.  ஆனால் தங்களது வாழ்க்கையை, சொந்தங்களை, சொத்துக்களை இழந்து வந்தவர்கள், வல்லத்தில், படகில்,தோணியில் வரும் போதும் தண்ணீரில் மூழ்கி இறந்தவர்கள், சுடப்பட்டு இறந்தவர்கள் என்று எத்தனையோ கண்களுக்கு தெரியாத சோகங்கள் இன்று வரைக்கும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது.. 

உருவான நவீன விஞ்ஞான மாற்றத்தில், மனித உரிமை என்ன என்பதே தெரியாமல் இன்று வரை தமிழ்நாட்டின் கரையை நோக்கி வந்து கொண்டுருக்கிறார்கள். வாழப்போன இடத்தில் வாழ்வாதார உரிமைகள் மறுக்கப்பட்டு அகதியாகவும், வாழ்க்கையைத் தேடி வந்த தமிழ்நாட்டிலும் அகதியாகவே மாற்றம் பெற்ற இவர்களின் கண்ணீர் எந்த தெய்வங்களுக்கும் இன்று வரை எட்டவில்லை?

செய்திகள், அறிக்கைகள், போராட்டங்கள் என்று தொடங்கி, தொடர்ந்து வந்த இறுதிக்கட்ட தாக்குதலான முள்ளிவாய்க்கால் (மே 2009) கோரச்சுவட்டின் இறுதியில் வந்து நிற்கிறது.  ஆனால் ஏதோ ஒரு வழியில் இன்னமும் தொடர்ந்து கொண்டுருக்கத்தான் போகின்றது..

ஒரு இனத்தின் வீழ்ச்சியை, அழிவை, தங்களது வெற்றியாக கருதிக்கொண்டு இந்த நாளை கொண்டாடித் தீர்க்க வேண்டும் என்று விடுமுறை கொடுத்த ஜனநாயக அரசாங்கம் உலகத்தில் இலங்கையைத் தவிர வேறு எங்கும் இருக்குமா?  

வெற்றிக் கொண்டாட்டங்களாக கொண்டாடிய சிங்களர்களைப் பற்றி அவர்கள் வாழ்ந்து வந்த வரலாற்றை நீங்கள் உணர வேண்டுமென்றால் சிங்கம் புணர்ந்து வந்த அந்த சிங்களர்களின் கதையை தெரிந்து கொள்ள வேண்டும்.  

இது தமிழர் என்றொரு இனத்தின் கதையோ, அவர்களின் கண்ணீர் வரலாற்றுச் சுவடுகள் மட்டுமல்ல. தற்போதைய சர்வதேச சமூகத்தில், தங்களது அரசியல் வெற்றிக்காக, ஆளுமையை நிலைநாட்டுவதற்காக ஒவ்வொருவரும் எத்தனை தூரம் பயணிப்பார்கள் என்பதை நாம் உணர்வதற்காக தங்கள் வாழ்க்கையை இழந்து உலகத்திற்கென்று வாழ்ந்து காட்டிய இனம் தான் இலங்கையில் வாழ்ந்த தமிழினம்.

25, 332 ச கி மீ  பரப்பளவும் நான்கு புறமும் நீர் சூழ்ந்த இந்த குட்டித் தீவை பண்டைய தமிழ் இலக்கியங்கள் சொக்கதேசம் என்று அழைத்தது என்று சொன்னால் நம்புவீர்களா? 

தொடக்க வரலாற்றில் தம்பப்பண்ணி என்றும், பின்னாளில் ஈழம், இலங்கை, என்று மாறிய பெயர்கள் போர்த்துகீசியர்கள் உள்ளே வந்து சிலோன் (ஸீலான்) என்று மாறி, இறுதியில் சமஸ்கிருத கலப்புடன் ஸ்ரீலங்கா என்று மாற்றம் பெற்ற இன்றைய இந்த இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசை  ( Democratic Socialist Republic of Sri Lanka) )அழிந்து கொண்டுருக்கும் தனுஷ்கோடி போய் நின்று கொண்டு தூரத்தில் கண்களுக்கு சிறு புள்ளியாக தெரியவாய்ப்பு இருக்குமா? என்று ஆராய்ந்து பார்க்க நினைத்தால் சுற்றி வரும் ரோந்து கப்பல்களுக்கு நீங்கள் தீவிரவாதியாக தெரிய வாய்ப்புண்டு. 

இலங்கை என்ற நாட்டின், சிங்களர் தமிழர் என்ற இனங்களின் அடிப்படைப் பிரச்சனைகள், மொத்த அரசியல் மற்றும் அவர்களின் வரலாறு என்பதெல்லாம் தாண்டி இந்த கண்ணீர்த் தீவின் கதையை நாம் தெரிந்து கொள்ள ஒவ்வொரு ஒவ்வொரு சதுர அடியாக நடந்து பாதுகாப்புடன்   முன்னேறிச் செல்ல வேண்டும்.

இன்று வரையிலும் சிங்களர்கள் நாங்கள் தான் பூர்வகுடி என்கிறார்கள்? இங்கு வாழ வந்தவர்களே தமிழர்கள். தமிழர்கள் எப்போதும் சிங்கள மரத்தில் பற்றிப் படரும் ஒட்டுண்ணிகள் என்று அகம்பாவத்துடன் பேசுகிறார்கள். அதுவே இன்று பெரும்பான்மையினர் சிங்களர்களின் விருப்பங்களோடு சிறுபான்மையினராக தமிழர்களின் நலன் குறித்து சிந்திப்போம் என்கிற அளவில் சரித்திர பக்கங்கள் மொத்தமாய் மாற்றம் பெற்றுள்ளது.  

இந்த சிங்களர்கள் சொல்லும் அவர்களின் பூர்வகுடிகளை நாம் ஆராயத் தொடங்கினால் அவர்களின் பூர்வாசிரமத்தையும் பார்க்கத்தானே வேண்டும்?

உலக சரித்திர வரலாற்றில் ஹிட்லருக்குப்பிறகு கோரத்தை மொத்தமாக குத்ததையெடுத்து ஆட்சி நடத்தி இலங்கை தமிழனத்தை கல்லறையாக மாற்றிய மகிந்த ராஜபக்ஷே வரைக்கும் வந்து சேரும் போது தான் இன்றைய ஈழ மக்களின் கதியும், பின்னால் உள்ள மொத்த அரசியல் சதிகளையும் உணர முடியும்.  

உலகில் அழிந்தே விட்டது என்று கருதப்பட்ட யூதர் இனம் கூட இன்று தலை நிமிர்ந்து வாழ்வதோடு பல நாடுகளின் தலையெழுத்தை நிர்ணயிப்பவர்களாக இருக்கிறார்கள்.  முன் தோன்றா மூத்த குடி என்ற பெருமை பெற்ற மொத்த தமிழன வரலாறு தொடங்கிய சரித்திர பக்கங்களின் கடைசி கால கட்டத்தில் வந்தவர்கள் தான் அமெரிக்கர்கள் இன்று மொத்த உலகையும் தங்கள் ஆளுமைக்குள் வைத்துள்ளார்கள்.

மேல் நாட்டு கலாச்சாரங்களும் அவர்களின் ஆதிக்கமும் இன்று உலக அரங்கில் பீடுநடை போட்டுக் கொண்டுருக்கிறாது, அத்துடன் வளர்ந்து கொண்டுருக்கும் நாடுகளையும் தங்களின் ஆதிக்கத்தில் வைத்துக் கொண்டு அவஸ்த்தை படுத்திக்கொண்டுருக்கிறார்கள்.

இந்த மூத்த குடி மட்டும் புலம்பும் குடியாகவே இருக்கின்றது. புலம் பெயர்ந்து வாழ்ந்து கொண்டுருக்கும் ஒவ்வொரு நாட்டிலும் மூழ்கிக்கொண்டுருக்கும் குடியாக இருக்கிறது, இந்த புலம் பெயர்ந்தவர்களை முறைப்படியாக நாம் புரிந்துகொள்ள வேண்டுமென்றால், 175 ஆண்டுகளுக்கு முன் ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆண்டு கொண்டுருந்த போது உருவான உருவாக்கப்பட்ட பஞ்சத்தில் இங்கு வாழ முடியாமல் பல்வேறு நாடுகளுக்கு வாழ்ச் சென்றதை பார்க்க வேண்டும். 

அப்போது இலங்கைக்கு போய்ச் சேர்ந்தவர்கள் இந்திய வம்சாவளித் தமிழர்கள். 

அதற்கு முன்னால் அங்கே வாழ்ந்து கொண்டுருப்பவர்கள் பூர்வகுடி தமிழர்கள்.

இந்த தொடரின்  முந்தைய பகுதிகள்

Sunday, March 24, 2013

3. இலங்கைக்கு நடந்தே போயிடலாம்


இலங்கை சுதந்திரம் பெற்றதும் முதல் பிரதமராக பதவியில் அமர்ந்த சேனநாயகா உருவாக்கிய அரசாங்கத்தை நடத்திக் கொண்டுருந்தவர்கள் தோட்ட முதலாளிகளும், வெள்ளை துரைமார்களுமே., 

ஆனால் உள்ளே இருந்த கம்பூனிஸ்ட்டுகளும், தமிழ் தலைவர்களும் பதவியில் இருந்தார்களே தவிர அரசாங்கத்தை ஆண்டு கொண்டுருந்தது வெள்ளையர்களும் அவர்களின் சார்பாளர்களும். 

இவர்களுக்கு பதவி ஒரு பொருட்டல்ல.  

மேற்கித்திய நாடுகளுக்கு அன்றும் இன்றும் என்றும் செயல்படுத்திக்கொள்ள வேண்டிய ஆட்கள் மட்டுமே போதுமானது. அதுவே தான் இன்று ராஜபக்ஷே அரசாங்கம் வரைக்கும் தொட்டு தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. 

சிங்கள இனவாதம், தமிழர் சிறுபான்மை போன்ற வார்த்தைகளெல்லாம் வியாபாரிகளுக்கு தெரியவேண்டிய அவஸ்யமில்லை, இவர்கள் உருவாக்கும் சர்வதேச அரசியலும் அதன் கொள்கைகளும் சாதாரண பொதுமக்களுக்குத் தெரிந்தால் என்ன தெரியாவிட்டால் தான் என்ன?  

சுதந்திரம் பெற்ற போது இருந்த 33 சதவிகித தமிழர்கள் இப்போது சிறு புள்ளியாக மாற்றப்பட்டுள்ளனர். இனக்கலவரத்திற்கு புதிய அத்தியாயம் வகுத்துக்கொடுத்தவர் ஜே.ஆர். ஜெயவர்த்னே, முதல் தடவை பிரதமராகவும் இரண்டாவது முறை ஆட்சிக்கு வந்த போது அதிபராகவும் இருந்து உருவாக்கிய ஆட்டம் மொத்தமாக இன்று முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. 

இலங்கை தமிழர்களின் வாழ்வுரிமைகளும், ஆயுதம் ஏந்தி போராடியவர்களின் ’தனித் தமிழீம்’ என்பதும் ஏன் இன்று சூன்யமாய் போய் முடிவு தெரியாமல் நிற்கிறது. 

இலங்கை சுதந்திரம் பெறுவதற்கு முன்னால் உருவான இனவாத சிங்கள அரசியலின் இன்றைய வயது 200 ஆண்டுகள்.  

அனாரிகா தர்மபாலா

1810 அன்று உருவாக்கிய சிறு புள்ளியது. 

அதுவே இன்று படிப்படியாக வளர்க்கப்பட்டுள்ளது. ஒவ்வொருவரும் ஆட்சிக்கு வரும் போது தங்கள் பதவியைக் காப்பாற்றிக் கொள்ள செய்யப்பட்ட ஒவ்வொரு காரியங்களுக்குப் பின்னாலும் பாதிக்கப்பட்டது தமிழினமே. 

"இலங்கை என்பது தமிழர் சிங்களர் இருவரும் சேர்ந்து வாழ வேண்டிய நாடு.  நாம் அணைவரும் சேர்ந்து ஆங்கிலேயர்களை வெளியேற்ற வேண்டும்" என்பதற்காக முதல் தலைமுறை தமிழ் தலைவர்கள் போராடினார்கள். 

அரசியல் அரிச்சுவடியை தமிழர்களிடத்தில் பெற்று கற்றுக்கொண்ட சிங்களர்களே இறுதியில் தங்களை ஈழத்தின் மண்ணின் மைந்தர்களாக ஆட்சிக்குரியவர்களாக மாற்றிக்கொண்டார்கள். 

அன்று முதல் இன்று வரைக்கும் தமிழர்களால் புரிந்து கொள்ளப்பட முடியாத  ஒன்றாகவே இந்த அரசியல் இருந்து தொலைக்கின்றது, 

ஆனால் இலங்கை சுதந்திரம் பெற்ற போதே சிங்கள தலைவர்களால் அவர்களின். தந்திரங்களால், விலைக்கு வாங்கப்பட்ட தமிழ் தலைவர்களை வைத்தே முதல் அரசாங்கத்தை உருவாக்கிய சேனநாயகா காட்டிய வழி இது. 

தொடக்கத்தில் சிங்கள தலைவர்கள் வாய் வார்த்தைகளாக இனவாதத்தை வளர்த்துக் கொண்டுருந்தார்கள், அப்போது ஆதரவு கொடுத்த தமிழ் தலைவர்களை வைத்தே கடைசியில் அதிகாரபூர்வமாக சட்டமாக உருவாக்கினார்கள். சட்டம் உருவாக உதவி புரிந்த தமிழ்த் தலைவர்கள் முரண்பட்டு பிரிந்து நின்றார்கள்.

ஒவ்வொருவருக்கும் தனித்தனி கண்க்கு.

ஜீஜீ பொன்னம்பலம், தந்தை செல்வா வரைக்கும் அரசியல் சக்தியாக வளர்ந்தார்கள். 

தமிழ் மக்கள் கொடுத்த வாக்குகளையும், பெற்ற பாராளுமன்ற பதவிகளையும் ஆதரவுகளையும் சிங்களர்களுக்கே தாரை வார்த்தார்கள். சிங்கள தலைவர்கள் வசதியாக அமர்ந்து கொண்டார்கள். குனிய வைத்து குத்தவும் செய்தார்கள்.  குனிந்து இருந்த போதும் கூட வெட்கப்படாமல் கையேந்தி பார்த்தார்கள். ஒவ்வொரு காலகட்டத்திலும் இறுதியில் ஜெயித்தது சிங்களர்களின் தந்திர அரசியலே.

இலங்கையின் தேச அரசியல் போய் இன்று சர்வதேச அரசியலாக மாறி விட்டது. இன்று சர்வதேச அரசியலே பிரதான பங்காகி இலங்கையை நாகரிக பிச்சைக்கார நாடாக மாற்றி உள்ளது. 

அதனால் என்ன?  

விரும்பியபடி 3000 ஆண்டுகள் பாரம்பரியமுள்ள ஒரு இனத்தையே அழித்து முடித்தாகி விட்டது. 

பௌத்த நாட்டை சிங்களர்கள் ஆண்டால் என்ன? சீனா ஆண்டால் என்ன? 

மொத்தத்தில் இலங்கை என்பது தமிழர்களுக்கான நாடல்ல. 

இலங்கைக்குள் இருந்த சிங்கள தமிழர் அரசியல் என்பது மாறி சீனா அரசியல், இந்தியா அரசியல் என்று தொடங்கி உலக அரங்கில் பாவமாய் நிற்கும் பாகிஸ்தான் அரசியல் வரைக்கும் உள்ளே நுழைந்து இந்த குட்டித் தீவை கெட்டியாக பிடித்து வைத்து இருக்கிறது.  

இயல்பாகவே உணர்ச்சி பெருக்கில் உலகமெங்கும் வாழும் தமிழனத்திற்கு சர்வதேச அரசியலின் வலை பின்னல்களை இப்போதாவது உணர்ந்தே ஆகவேண்டும். விடுதலைப்புலிகளின் ஆயுதப் போராட்டத்தை வெறுப்பவர்களைப் போலவே சொர்க்க தேசம் என்று பண்டைய தமிழ் இலக்கியங்கள் வர்ணித்த இந்த ஈழத்திற்குள் ஏன் இத்தனை தீராத பிரச்சனைகள்.?  

காபிக்கொட்டையும், பச்சை தேயிலைச் செடிகளுமாய் பசுமையாய் போர்த்தியிருந்த இந்த இலங்கைத் தீவை இன்று கண்ணிவெடி சூழ்ந்த கதையையும் உணர்ந்து கொள்ள வேண்டும். பின்னோக்கி பாரபட்சம் இல்லாமல் பார்க்கும் போது இனவாத அரசியல் உருவாக்கிய பாதைகளும், கிடைத்த வாய்ப்புகளை நழுவ விட்ட மொத்த தமிழ் தலைவர்களையும் நாம் புரிந்து கொள்ள முடியும்.  

ஒற்றுமையில்லாமல் வாழும் எந்த இனத்திற்கும் இறுதியில் கிடைக்கும் அடிமை வாழ்க்கையை அப்போது தான் முழுமையாக உணர்ந்து கொள்ள முடியும். 

ஆனாலும் அருகில் உள்ள இந்த கண்ணீர்த் தீவுக்கு ஒரு காலத்தில் நடந்தே போயிடலாம்ன்னு சொன்னா நீங்க நம்புவீங்களா?


மேலும் அறிய

ஈழ வரலாறு பகுதி 1 மொத்தமும்  இங்கே சொடுக்கவும்.

ஈழ வரலாறு பகுதி 2 மொத்தமும் இங்கே சொடுக்கவும்

ஈழ வரலாற்றில் இந்திய அமைதிப்படைப் பற்றி அறிய சொடுக்கவும்

Saturday, March 23, 2013

02 சர்வதேச கழுகுகள்


இலங்கை சுதந்திரம் பெறுவதற்கு முன்பும், பெற்ற பின்பும் சிங்கள குடியேற்றங்களை பெருவாரியான பகுதிகளில் நீக்கமற உருவாக்கிக்கொண்டிருந்த சிங்களர்களின் தந்தை டான் ஸ்டீபன் சேனநாயகா தன்னை முதலாம் பராக்கிரமபாகு என்று அழைப்பதைப் பெருமையாகக் கருதினார்.  

தமிழர்களை வீழ்த்தி, சிங்கள ராஜியத்தை உருவாக்கி உருவாக்கிய மன்னனாக இருந்தவனை தன்னுடைய குருவாக கருதி செயல்பட்டார்.  அப்போதும் வெள்ளை சால்வை அணிந்து பௌத்த சின்னங்கள் முன் வணங்கி, புனித சின்னங்கள் அடங்கிய பெட்டியை சுமந்து சென்று புத்தபிக்குகளிடம் ஆசி வாங்கினார்.

52 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது ராஜபக்ஷே.  

கண்டியில் தலதா மாளிகை.கண்டி ராஜ்யத்தை ஆண்ட மன்னர்களின் அரண்மணை வளாகத்தில் அமைந்து இருக்கும் இந்த பௌத்த ஆலயத்தில் புத்தரின் பல் இருப்பதாகவும், புனித சின்னமாகவும் கருதப்படுகிறது. பதவியேற்கும் ஒவ்வொரு சிங்கள ஆட்சியாளர்களும் தங்களுடைய புனித பயணத்தை இங்கிருந்தே தொடங்குகிறார்கள். ஆனால் அவர்களின் அரசியல் விளையாட்டின் முடிவு மட்டும் வேறு எங்கேயோ முடிந்து விடுகிறது. 

ஆனால் இந்த விருது வாங்கவும், விருந்தில் கலந்து கொள்ளவும் ராஜபக்ஷே கொடுத்த விலைக்கான பட்டியல் சற்று நீளமானது. 

மொத்தத்தில் முள்ளிவாய்க்கால் என்றொரு இடம் இலங்கை தமிழனத்தின் செங்குருதி ஓடி நந்திக்கடல் பகுதியை ரத்த வாய்க்கால் போல் மாற்றி விட்டது. உலக சரித்திர பக்கங்களில் இரண்டாம் ஹிட்லர் என்ற பட்டத்தை பெற்றுக் கொண்டு தான் நினைத்து வைத்திருந்த குறிக்கோளைத் அடைந்தே விட்டார். இதைத்தவிர வேறு எதிலும் சிந்தனை செலுத்த முடியாத அளவிற்கு தொடக்கம் முதல் அத்தனை முன்னேற்பாடுகளையும் உருவாக்கியிருந்தார்.  

நவம்பர் 2005 அன்று மகிந்த ராஜபக்ஷே ஆட்சிப்பொறுப்புக்கு வந்த போது அப்போதே ராணுவ செலவு திமிறிக்கொண்டுருந்தது. இது இலங்கையில் இயல்பான நிகழ்ச்சி. சர்வதேச உலகில் இன்று பாகிஸ்தான் எப்படி பாவமாகத் தெரிகிறதோ இலங்கையும் ஏறக்குறைய அப்படித்தான் இருக்கிறது. ஆனாலும் இலங்கைக்கு வேறொரு வகையில் இயற்கை ஒரு அதிர்ஷ்ட வாய்ப்பை உருவாக்கியிருந்தது. 

மேலாதிக்கம் செலுத்த விரும்பும் வளர்ந்த நாடுகள் தாங்கள் விரும்பக்கூடிய முதல் பத்து துறைமுக வரிசையில் திருகோணமலை இயற்கை துறைமுகம் இருப்பதால் எப்போது ஒரு கனிவான பார்வை இலங்கையின் மேல் உண்டு. உள்ளே எந்த அக்கப்போர் நடந்தாலும் அது குறித்து கவலையில்லை.  அடுத்தவர் உள்ளே நுழையாத வரைக்கும் நீ ஆடு ராஜா ஆடு என்ற உசுப்பேத்தல் தான்.  பங்களாளிகளும், சகலை நாடுகளும் தீவுக்கு வெளியே நின்று விசில் அடித்து ரசிப்பதோடு சரி.  

இந்த இடத்தில் இந்தியாவுக்கு எப்போதுமே தீராத பிரச்சனை. வயித்து பிள்ளைக்காரி அடிவயிற்று மேட்டை தடவிப்பார்ப்பது போல் ஒரு கவலை. 

நாடு திவால் என்ற நிலைமை குறித்தோ, உள்ளே செய்ய வேண்டிய வளர்ச்சித் திட்டங்கள் குறித்தோ ஆட்சிக்கு வந்த ராஜபக்ஷேவுக்கு முக்கியம் இல்லை.  காரணம் சந்திரிகா ஆட்சியின் போது இதைவிட கேவலமெல்லாம் நடந்து முடிந்து இருந்தது. அரசாங்க அடிப்படை செலவீனங்களுக்கே ததிங்கிணத்தோம் போட்டுக்கொண்டுருந்தார்கள். ஆனால் அதைவிட வந்து அமரும் சிங்கள தலைவர்களுக்கு கொள்கை ஒன்று இருக்கிறதே?  விட்டுக்கொடுக்க முடியுமா?  

அமைதிக்கான முயற்சி எடுப்பேன் என்று உள்ளே வந்த ராஜபக்ஷே முயற்சித்து ஆரம்பித்தது தான் இறுதிப்போர் என்றழைக்கப்படும் இந்த யுத்தம். இதற்கான ஆயுத கொள்முதல் காரணமாக மேலும் மேலும் ராணுவச் செலவு வீங்கி பெருக்கத் தொடங்கியது.  

குறிப்பாகச் சொல்லப்போனால் 2006 இலங்கை ராணுவத்திற்கான செலவிடு 700 மில்லியன் அமெரிக்கா டாலர்.  ஆனால் இதுவே 2007 ஆம் ஆண்டு 1 பில்லியன் அமெரிக்கா டாலரானது. 

உள்ளே வாழ்ந்து கொண்டுருக்கும் மக்கள் நல்வாழ்வு இரண்டாம் பட்சமானது.  

அன்று ஜே.ஆர். ஜெவர்த்னேவுக்கு பாதுகாப்புக்கு, ஆட்சிக்கு என்று  அமைந்திருந்த அவரது சகோதரர்  போலவே ராஜபக்ஷேவுக்கு தனது குடும்ப கூட்டணியை வெற்றிகரமாக அமைத்த பிறகு ஆயுதக் கொள்முதல் அதிகாரபூர்வமாக கோத்தபாய ராஜபக்ஷே நேரிடைப் பார்வையில் நடந்தேறத் தொடங்கியது. மற்றொரு சகோதரர் பசில் ராஜபக்ஷே. . விட்டதையும் தொட்டதையும் இறுதி வடிவத்திற்கு கொண்டு வருவது.  முக்கோண கூட்டணி.  

விடுதலைப்புலிகளின் வீரத்தை மட்டுமே நம்பிய போராட்டங்கள் இவர்களின் விவேகத்திற்கு முன் நொறுங்கத் தொடங்கியது. கண்ணில் விழுந்த தூசியாக உறுத்திக் கொண்டுருந்தவர்களை நீக்கமுடியாமல் தவித்தவர்கள் கண்களையே நோண்டி விடலாமென்று முடிவெடுத்தது ஆச்சரியமல்ல.

ஹிந்துஸ்தான் டைம்ஸில்  பத்திரிக்கையாளர் பி.கே. பாலச்சந்திரன் குறிப்பிட்டுள்ளபடி, 

"தெற்காசியாவிலேயே இலங்கையில் உள்ள இராணுவ வீரர்களின் எண்ணிக்கை நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு அதிகமாகி விடுதலைப்புலிகளின் அச்சுறுத்தலை சமாளிக்க வேண்டிய நெருக்கடியான நிலைமையில் அரசாங்கம் இருந்தது ". 

ஆனால் சகோதர கூட்டணி மிகத் தெளிவாக இருந்தனர்.  முடிவுக்கு கொண்டு வந்து விடவேண்டும்.  முற்றிலும் துடைத்து விட வேண்டும். சொன்னபடியே செய்து காட்டியும் விட்டார்கள்.  

அரசியல் என்பது ஒரு கலை.  கற்றுக்கொடுத்து வருவதல்ல.  கற்று வைத்திருப்பதை, தருணம் பார்த்து நடத்திக் காட்டுவது. ஏணியின் தொடக்கமா? இல்லை பாம்பின் வாயிலா என்பது ஆட்ட களத்தில் இருப்பவர்கள் மட்டுமே அறிந்த ரகஸ்யம்.

மற்ற நாடுகளில் இருந்து வாங்கும் ஆயுத கொள்முதலை மற்றவர்களுக்கு கொடுத்து விடமுடியுமா?  ராஜபக்ஷே குடும்ப லங்கா லாஜிஸ்டிக்ஸ் நிறுவனமே கையாளத்தொடங்கியது.  

2006 ஏப்ரல் முதல் போணி சீனாவிடம் இருந்து. 37.6 மில்லியன் டாலர். அதனைத் தொடர்ந்து பாகிஸ்தான். லண்டனில் இருந்து வெளியாகும் ஜேன்ஸ் டிபென்ஸ வீக்லி இலங்கை கொள்முதல் செய்து கொண்டுருக்கும் பட்டியலை வெளியிட்ட போது அன்று சர்வதேச தமிழர்கள் மத்தியில் எப்போது போலவே விடுதலைப்புலிகள் மேல் அசைக்க முடியாத நம்பிக்கை.  

எத்தனையோ பேர்கள் வந்து விட்டார்கள்.  அதில் ராஜபக்ஷேவும் ஒருவர். இவரின் முடிவு இன்றோ நாளையோ?  

படித்து விட்டு மறந்து போயிருப்பர்.  

ஆனால் தமிழனம் மற்க்க முடியாத கோரங்களை இந்த உலகமே அமைதியாய் பார்க்கப்போகின்ற நாள் வந்து சேரும் என்று எவரும் நினைத்துருப்பார்களா?

ஆடிக்காற்றில் பறந்த அம்மியைப் போலவே பறந்து வந்து விழுந்த நவீன கண்டு பிடிப்பு குண்டுகள்.  ரசாயனக் குண்டுகள், கொத்துக் குண்டுகள், பல்குழல் எறிகணைகள், 33 மாதங்களாக தினந்தோறும் நிகழ்த்தப்பட்ட வான்வெளித் தாக்குதல்கள், வந்து விழுந்து கொண்டேயிருந்த குண்டு மழைகள். கண்ணீர் வற்றிப் போகும் அளவிற்கு நினைத்துப் பார்க்க முடியாத கோரங்களை உருவாக்கியிருந்தது. 

இரண்டு புறமும் வாழ்வா சாவா என்று முட்டிக்கொண்டு முடிவே இல்லாமல் போய் கொண்டே இருந்தது. 

ஐ.நா வின் சார்பாக பணிபுரிந்தவர்களும்  செஞ்சிலுவைச் சங்க அதிகாரிகளும் கூட, தப்பித்தோம் பிழைத்தோம் என்று நாட்டை விட்டு ஓடத் தொடங்கினர், இலங்கை நாட்டின் அச்சுறுத்தல்களையும் மீறி ஆஸ்திரேலியாவில் இருந்து வந்த அறிக்கை மூலம் தான உள்ளே என்ன நடந்து கொண்டுருக்கிறது என்பதை தமிழர்கள் அறிந்து கொள்ள முடிந்தது,  உள்ளே நடந்து கொண்டுருந்த கோரத்தை அதன் மூலம் தான் பலருக்கும் புரியத் தொடங்கியது,  

காரணம் கோத்தபாய நிர்வாகம் என்பது அந்த அளவிற்கு அச்சுறுத்தல்களை தீவு முழுக்க உருவாக்கியிருந்தது. 

’கடைசி கட்ட  போரினால் 40,000 மக்கள் உயிர் இழந்திருக்கக்கூடும்’ வெளியே தப்பித்து வந்த ஊடகம் மற்றும் செஞ்சிலுவை சங்கத்தை சேர்ந்தவர்வக்ள் சொன்ன கணக்கு இது. . 

இலங்கைத் தீவின் நான்கு புறமும் நீர் என்பது போல தீவைச் சுற்றிலும் அணிவகுத்து நின்ற நாடுகளின் கப்பல்களும், உள்ளே, முடிந்தவரையிலும் முற்றுகையை நெருக்கிக்கொண்டே உள்ளே வந்தது. இந்த போர் முடிவுக்கு வந்தே ஆக வேண்டும்!  

வராமல் இருந்தால் எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பது ராஜபக்ஷேவுக்கும் தெரியும்! 

விடுதலைப்புலிகளைப் போலவே வேறொரு புதிய எதிரி சர்வதேச சமூகத்தில் இருந்து உருவாகக்கூடும்.  

அவரே சொன்னது போல் ஆறடி மண்ணுக்குள் கொண்டு போகக்கூட அவரது உடல் கிடைத்து இருக்காது.  முடிவுக்கு கொண்டு வந்தால் மட்டுமே கழுகுப் பார்வையாய் பார்த்துக்கொண்டுருக்கும் வணிகம் சார்ந்த நாடுகளின் பேராவல் நிறைவேறும்.

இறுதிக்கட்ட நாட்களில் வன்னிப் பகுதியில் மட்டும் 20,000 அப்பாவி பொதுமக்கள் வீதியெங்கும் இறந்து கிடந்தனர். 

போருக்கு எப்போது தர்ம நியாயங்கள் முக்கியமல்ல. வெற்றி மட்டுமே முக்கியம். 

குழந்தைகள் முதல் மொத்த குடும்பங்கள் வரைக்கும் அத்தனை பேர்களும் அனாதை பிணமாக காணும் இடங்களிலெல்லாம் சிதறிக் கிடந்தார்கள். எந்த பாரபட்சமும் இல்லை. இலங்கை இராணுவத்தின் நோக்கமென்பது விடுதலைப்புலிகளை அழிப்பது என்பதாக இருந்தாலும் வான்படை தாக்குதல்கள் மூலம் தொடர்ச்சியாக வீசப்பட்ட கொத்து குண்டுகள் குடியிருப்பு பகுதிகளை சர்வநாசப்படுத்தியது. பூமியை துளைத்து ஊடுருவிய ரசாயன குண்டுகள் மொத்த இடத்தையும் அழிவுப் பிரதேசமாக்கியது. 

சர்வதேசம் பார்த்து விடக்கூடாது என்பதற்காக உடனடியாக ஒவ்வொரு கட்டத்திலும் உருவான தடயங்களையும் அழித்து முன்னேறிக் கொண்டுருந்தார்கள்..

தடைசெய்யப்பட்ட பகுதி என்பதோ, பயன்படுத்தக்கூடாத ஆயுதங்கள் என்பதோ இறுதிக்கட்ட பரபரப்பில் இலங்கை ராணுவத்திற்கு பொருட்டே அல்ல.

கடைசிக்கட்ட தாக்குதல்களில் ஈடுபட்ட வீர்ர்களுக்கு வழங்கப்பட்ட போதைவஸ்துகளைப் போலவே அவர்களின் நடவடிக்கைகளும் மிக்க் கொடூரமாக இருந்த்து. அப்பாவி மக்கள் கதறக்கூட நேரமின்றி கண நேரத்தில் பிணமாக மாற்றினர். 

விடுதலைப்புலிகளின் கரும்புலி தாக்குதல்களினால் உயிர் இழந்த சிங்கள இராணுவ வீரர்களின் கணக்கை எப்போதும் அவர்கள் வெளியிடப்போவதில்லை.  

வெற்றி ஒன்று மட்டுமே குறிக்கோள்.  இறந்தவர்களின் கணக்கு என்பது  போருக்கு தேவையில்லாதது.

ஈழத்தில் இலங்கை இராணுவம் பயன்படுத்தும் பல்குழல் எறிகணைகள் நிமிடமொன்றுக்கு சுமார் 40 எறிகணைகள் வெடிக்கும் தன்மை உடையது. மழை போல் பொழிந்து கொண்டே சென்றனர்.  இரசாயனக்குண்டுகள், விழும் ஒவ்வொரு இடத்திலும் துளைத்து உள்ளே நுழைந்து 50 சதுரமீட்டர் பரப்பளவை பொசுக்கும் தன்மை உடையது.  

சர்வதேச போர் விதிமுறைகள் அன்று தீவுக்கு வெளியே காற்று வாங்கிக்கொண்டுருந்தது.

திடுக்கிடும் திருப்பம் போல் ஒற்றுமையாய் நின்று பெரிய அவலத்தை மே 17 2009 அன்று முடிவுக்கு கொண்டு வந்தார்கள். 

உச்சி மாநாட்டில் இருந்து வந்து இறங்கியதும், ராஜபக்ஷே பாதுகாப்பு செயலாளராக இருந்த சகோதரர் ராஜபக்ஷேவை உச்சி முகர்ந்திருப்பார். தங்களுக்குள் வெளியே தெரியாத பரஸ்பர நல்லிணக்கத்தை பறிமாறி கூட்டல் கழித்தலுக்குப் பிறகு எச்சமும் சொச்சமாய் தப்பி பிழைத்து வந்த தமிழ், இனத்தை கூடார மக்களாகவும் மாற்றியாகி விட்டது. 

இராமாயண காவியத்தில் வரும் ராமனுக்கு பிரச்சனையை உருவாக்கிய மாயமான் போலவே பிரபாகரன் விரும்பிய தனித் தமிழீழம் என்பது கைகளில் சிக்காமல் ஒரு இனமே சிதறடிக்கப்பட்டாகிவிட்டது. 

வரலாறு எப்போதும் போலவே இதையும் அமைதியாய் தனக்குள் பதிவு செய்து கொண்டு விட்டது. 

உலக அமைதிக்கான பாதுகாவலர்கள் அமைதி காக்க, இலங்கையின் உள்ளே கடந்த 50 ஆண்டுகளாக நடந்து கொண்டுருந்த இன துவேஷச அரசியல் என்பது மாறி இன்று தீவிரவாதம் என்பதாக மாற்றப்பட்டு உள்ளது. 

நடத்தப்பட்ட அத்தனை கொடூரங்களையும் தடுத்து நிறுத்த எவருக்கும் தகுதியில்லை.  தகுதியிருந்தவர்களும் தரமானவர்களாகவும் இல்லை. 

உலக தமிழினத்தை வெறும் வேடிக்கையாளர்களாக பார்க்க வைத்துவிட்டது. 

தமிழர்களின் பண்பாட்டு பக்தியும் உதவிக்கு வரவில்லை. விடுதலைப்புலிகள் இறுதி வரைக்கும் போராடிய சக்திக்கும் பலனில்லாமல் போய்விட்டது.  

"இலங்கையின் இறையாண்மையில் இந்தியா தலையிடாது.  அதிபர் ராஜபக்ஷே என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக்கூடாது என்பதை சொல்ல வேண்டிய அவஸ்யம் இந்தியாவிற்கு இல்லை"  -  சிவசங்கர மேனன்.

"இந்த நூற்றாண்டின் இணையற்ற படைத்தளபதி சரத் பொன்சேகா" - எம். கே. நாராயணன்.

"ஈழ நான்காம் யுத்தம் முடிவுக்கு கொண்டு வர உதவிய இந்தியாவின் பங்கு மகத்தானது" -  இலங்கை

"ஐ. நா  பான் கி மூன் உடன் தமிழர்கள் தங்க வைக்கப்பட்டுருந்த முகாமை பார்வையிட்ட போது சரித்திரத்தில் படித்த ஹிட்லரின் வதை முகாமை நினைவு படுத்துவதாக இருந்தது" - டைம்ஸ் ஆப் இந்தியா 

இன்றைய தினத்தில் மொத்தமும் வெற்றி பெற்றவர் பார்வையாக சரித்திரம் திரும்பி விட்டது.  

உலக அதிகார வர்க்கத்தின் பார்வையில் பிரபாகரன் ஒரு தீவிரவாதி.  நடத்தப்பட்ட போரினால் வாழ்க்கை இழந்தவர்கள், தங்கள் குடும்ப உறுப்பினர்களை, உடல் உறுப்புகளை, வாழ்வாதாரங்களை இழந்தவர்கள் குறித்து சர்வதேச அரசியலுக்கு அக்கறையில்லை. 

காரணம் இதுவொரு அரசியல் விளையாட்டு

உலகில் பதவி ஆசை என்பது அனைத்தையும் விட மேலானது. பதவி கொடுக்கும் பணம், புகழ், அந்தஸ்த்து முன்னால் எதுவும் வந்து நிற்க முடியாது. உலகில் தர்ம நியாயங்கள் அனைத்தும் வணிகம் சார்ந்தே இயங்குகின்றது. 

மனிதர்கள் அன்றும் இன்றும் என்றும் வெறும் பொம்மையே. சிலர் வேடிக்கை காட்ட, பலர் வேடிக்கைப் பார்க்க. 

தொடர்வோம்............

ஆரம்பம் இங்கே.

முதல் பகுதி இங்கே.

முற்றுகைக்குள் இந்தியா தொடர்.

ஈழம் குறித்து எழுதத் தொடங்கிய தலைப்புகள் இங்கே

Friday, March 22, 2013

01 வந்தார்கள் வென்றார்கள்

தொடக்கம் இங்கே

மே 16 2009. ஜோர்டான் நாடு.

இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ஷே, உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள ஜோர்டான் நாட்டில் இருந்தவருக்கு கிடைத்த செய்தி அவர் வாழ்நாளில் மறக்க முடியாத நிகழ்ச்சி.  ஒரு வேளை இது உண்மைதானா? என்று பலமுறை கேட்டு உறுதிபடுத்தி இருக்கலாம். 

தன்னுடைய சகோதரர் கோத்தபய ராஜபக்ஷேவை நம்பாமல் இருக்க முடியுமா? இலங்கை முப்படைகளின் முதன்மை பொறுப்பில் இருந்து கொண்டு வழிகாட்டிக்கொண்டு  பாதுகாப்பு செயலாளராகவும் இருப்பவர். 

அவருடைய கண் அசைவில் நடத்தப்பட்டுக் கொண்டுருந்த இறுதி ராணுவ நடவடிக்கையின் முடிவு ஜோர்டான் நாட்டில் இருந்த அதிபர் ராஜபக்ஷேவுக்கு தெரிவிக்கப்படுகிறது. எல்லாவகையிலும் உறுதிபடுத்தப்பட்ட பிறகு இறுதியில் அங்கிருந்தேபடியே அறிக்கை விட்டார்.

"இறுதியாக விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்டார்கள்.  

விடுதலைப்புலிகளிடமிருந்து முழுமையாக விடுதலையான நாட்டிற்கு நான் நாளை திரும்புகிறேன்"
                                                                        #-#-#

மே 17 2009. கொழும்பு சர்வதேச விமான நிலையம்.

தான் பயணித்து வந்த விமானத்தின் படிக்கட்டுகளில் இருந்து இறங்கியவர் முழுங்காலிட்டு மண்ணைத் தொட்டு வணங்கி, வெற்றிப் பெருமிதத்துடன் கூடியிருந்தவர்களை பார்த்த பார்வை முற்றிலும் புதிதானது.   இதுவரைக்கும் ஆண்டு விட்டுச் சென்ற பத்து பிரதமர்களுக்கோ, நான்கு அதிபர்களுக்கோ கிடைக்காத வாய்ப்பு. அப்போது ராஜபக்ஷே பார்த்த பார்வை என்பது "தீவிரவாதத்தில் இருந்து நாட்டை மீட்டெடுத்து விட்டேன்".  

புரிந்தவர்களுக்குத் தெரியும் அது சர்வதேசத்திற்கான அழைப்புமணி. இதற்காக இவர் உழைத்த உழைப்பு அசாதாரணமானது, காரணம் மே 2009க்கு முன்  33 மாதங்கள் படிப்படியாக உழைத்த உழைப்புக்கு கிடைத்தது இந்த வெற்றி,  ஈழ நான்காம் யுத்தம் என்று சொல்லப்பட்ட விடுதலைப்புலிகள் இயக்கத்துடன் கூடிய யுத்தம் முடிவுக்கு வந்து இருந்தது.  கடந்த ஒரு நூற்றாண்டு காலமாக, தமிழர் - சிங்களர் என்ற இரண்டு இனங்களுக்கு இடையே நடந்து கொண்டுருந்த அரசியல் போராட்டங்கள் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு, இனி எப்போதும் இலங்கை என்பது “சிங்களர்களின் தேசம் ” என்பதை சொல்லாமல் சொல்லியது. மகிழ்ச்சி என்ற வார்த்தைக்கு மேலே வேறு எந்த வார்த்தைகளாவது இருக்குமா என்று மனதிற்குள் யோசித்தபடி அவரின் வாகன வரிசைகள் கொழும்புக்குள் அணிவகுத்துச் சென்றது.

                                                                                #-#-#

மே 18 2009. அமைதிக்குள் பேரமைதி

பரப்புரைகளும் வதந்திகளும் இறக்கை இல்லாமலேயே பறந்து கொண்டிருந்தது;  வேலுப்பிள்ளை பிரபாகரன் குறித்த செய்திகள்.  உறுதிப்படுத்துபவர்கள் எவரும் இல்லை.  அதிபர் மாளிகை உருவாக்கி இருந்த மயான அமைதி சர்வதேச தமிழர்களை வாழ்ந்த நாடுகளில் அணி திரள வைத்தது.  அவர்களின் கண்ணீர், கூக்குரல், கோரிக்கைகள் எல்லாமே வெறும் வேடிக்கைப் பொருளாக, ஊடக செய்தியாக மட்டும் இருந்தது.

                                                                               #-#-#

மே 19 2009  சர்வதேசத்திற்கான சமிக்ஞை உரை

அதிமேதகு மகிந்த ராஜபக்ஷே பாராளுமன்றத்தில் தனது உரையைத் தொடங்கினார்.  இலங்கை ஆங்கிலேயர்களிடமிருந்து சுதந்திரம் வாங்கிய பின்பு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பிரதமர் சேனநாயகா போலவே  தமிழில் தான் ராஜபக்ஷேவும் தனது உரையைத் தொடங்கினார்.

இலங்கையின் எதிர்க்கட்சியான (Sri Lanka Freedom Party) சுதந்திர கட்சியின் மூன்றாம், இரண்டாம் கட்ட தலைவர் பதவிகளில் இருந்து படிப்படியாக தன்னை வளர்த்து, எதிர்பாராத அதிர்ஷ்ட திருப்புமுனையில் அதிபராக உள்ளே வந்தவர் தான் மகிந்த ராஜபக்ஷே.

அதிபராக இருந்த சந்திரகா குமாரதுங்காவின் ஒத்துழைப்பு இல்லாத போதும் கூட தன்னை நிலைநிறுத்திக் கொண்டவர். சந்திரிகாவின் நம்பிக்கையை பெற்று இருந்த வெளியுறவுத்துறை அமைச்சருக்கு அந்த வாய்ப்பு தமிழர் என்பதால் மறுக்கப்பட்டது.  லஷ்மணன் கதிர்காமர் அமர வேண்டிய பதவியை தட்டிப்பறித்து உள்ளே வந்த ராஜபக்ஷே இன்று சிங்கள மக்களில் ஆதர்ஷ்ண கடவுள்.  அப்போது அறிவித்த அவரின் பாராளுமன்ற உரை இலங்கை வாழ் மக்களுக்கானது அல்ல.

"சர்வதேச வியாபார சமூகமே நீங்கள் இனி தயக்கம் இல்லாமல் உள்ளே வரலாம்.  இலங்கை என்பது இனி இரண்டே இனத்தால் ஆனது.  ஒன்று இலங்கையை நேசிக்கும் இனம். மற்றொன்று வெறுக்கும் இனம்,

அரசியல்வாதிகளுக்கே உரிய வார்த்தை ஜாலங்களுடன் அவரது  நீண்ட உரையை முடித்த போதும் அத்தனை பேர்களும் ஆவலுடன் எதிர்பார்த்த வேலுப்பிள்ளை பிரபாகரன் குறித்து எந்த அறிவிப்பும் இல்லை.  அது தான் ராஜபக்ஷே அரசியல்.  எதை சொல்ல வேண்டும்.  அதையும் எப்போது சொல்ல வேண்டும் என்பதை உணர்ந்தவர். ஆனால் சிங்கள மக்களைப் பொறுத்தவரையிலும் அன்றைய நாள் அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக கொடுத்த கொண்டாடித் தீர வேண்டிய விடுமுறை தினம். 

ஆரவாரங்கள்.  வீதியெங்கும் திருவிழா.  அசைத்துக்கொண்டு செல்ல அரசாங்கத்தின் சார்பாக வழங்கப்பட்ட, சிங்கக்கொடிக்குக்கூட கொழும்புவில் வாழ்ந்த தமிழ் வியாபாரிகள் தான் தேவையாய் இருந்தார்கள்.  கொழும்புவில் வாழும் தமிழ் மக்களுக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு யுகம் தான்.  கதவை சார்த்திக்கொண்டு உள்ளே முடங்கி கிடந்தாலும் கதவைத்தட்டி வீதிக்கு வரவழைக்கும் சிங்கள இனவாதிகளின் கொண்டாட்ட தினத்தை பார்க்கும் துணிவில்லாமல் பயத்தோடு தான் இருந்தார்கள். 

நிதி வசூல் என்று தொடங்கி ஆர்ப்பாட்டத்துடன் அநீதியாய் முடிக்கப்பட்ட ஒரு இனத்தின் வாழ்வுரிமைப் போராட்டங்களைப் பற்றி வெகுஜன சிங்கள மக்களுக்கு எதுவும் தெரியாது.  இன்றும் தமிழர்களின் பிரச்சனைகளை உண்மையாக உணர்ந்த எத்தனையோ சிங்களர்கள் உள்ளே வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள். தமிழனத்தைப் போலவே இவர்களும் திருவாளர் பொதுஜனமே. இவர்களை மந்த புத்தியாகவும் கொடூர இனவாத எண்ணம் உள்ளவர்களாகவும் மாற்றி வளர்த்தவர்கள்  சிங்கள தலைவர்கள் மட்டுமே..

“இது சிங்களர்களின் தேசம்.  சிங்களர்கள் மட்டுமே ஆள வேண்டிய தேசம்”.

இவ்வாறு சொல்லி மக்களை வெறியூட்டி வாக்கு கேட்டு வந்தவர்களும், கடந்த காலத்தில் உருவாக்கிய பல இனக்கலவரங்களுமாய் மாறி மாறி ஒவ்வொருவரும் ஆட்சியில் வந்து அமர்ந்ததும், அவர்களால் நடத்திக்காட்டிய இனவாத அரசியலில் இன்றைய தினம் ராஜபக்ஷேவின் பங்கு. அதற்கு உறுதிப்படுத்தும் விதமாக நடந்த எத்தனையோ கொண்டாட்டங்களில் இன்று நடப்பது மொத்தத் இலங்கை வரலாற்றிலும் முக்கியமான விழா. 

ஈழ நான்காம் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர இலங்கை அதிபருக்கு ஆதரவுக்கரம் நீட்டி வெளியேயிருந்து

பயமும் படபடப்புமும் பார்த்துக்கொண்டுருந்த சர்வதேச சமூகத்திற்கு இப்போது நிம்மதி பெருமூச்சு.  

இனி பயங்கொள்ளத் தேவையில்லையடி பாப்பா என்று பாடலாம் போலிருந்தது. .காரணம் கொடுக்கப்பட்ட ஆயுதங்களும், வழங்கப்பட்ட பயிற்சியும், அக்கறையாய் நடத்திக்காட்டிய பயிற்சி வகுப்புகளுக்கும் உண்டான பலன் இன்று நல்ல முறையில் முடிந்துள்ளது. இலங்கைக்கு கொடுக்கப்பட்ட கடன்களுக்கு ஈடுகட்டும் விதமாக உள்ளே கடைவிரிப்பை நடத்தியாக வேண்டுமே?  சீனாவின் பின்னால் போகாதே என்று இந்தியாவும், இந்தியாவை விட தவணை முறையில் உங்கள் இடத்திலேயே வந்து ஆயுதங்களை கொண்டு வந்து தருகின்றேன் என்ற சீனாவும் வெளியே நின்று கொண்டு இருக்கிறது. 

இரு நாடுகளும் முண்டியடித்துக்கொண்டு செய்த உதவிகளைப் பெற்ற ராஜபக்ஷே மற்ற சிங்கள தலைவர்களைக் காட்டிலும் அதிர்ஷ்டக்காரர் தான்.

பாகிஸ்தான், ரஷ்யா, இஸ்ரேல், அமெரிக்கா, பிரிட்டன் என்று நேச நாட்டு கூட்டணி படை மொத்தமும் ஒவ்வொரு வேலையைச் செய்து முடிக்க முடிவுக்கு வந்தது ஈழ நான்காம் யுத்தம். 

அதிபர் பாராளுமன்றத்தில் உரையாற்றிய, மே 19 2009 உடன் ராஜராஜசோழன், சங்கிலி மன்னன், பண்டார வன்னியன்,  வழித்தோன்றல்களை ரத்தமும் சதையுமாக பிய்த்து நிலமெங்கும் ரத்தமாக மாற்றி விட்டார்கள். எத்தனை பேர்கள் இறந்தார்கள்? எப்படி இறந்தார்கள்?

எல்லாவற்றுக்கும் விடுதலைப்புலிகள் இயக்கம் மட்டும் தான் காரணமா?  வேலுப்பிள்ளை பிரபாகரன் தலைமையில் இருந்த இயக்கத்தை அழிக்க இத்தனை நாடுகள் உள்ளே வர வேண்டிய தேவை தான் என்ன?

ஆங்கிலேயர்களிடமிருந்து சுதந்திரம் பெற்றது முதல் இலங்கையென்பது சிங்களர்களின் நாடு என்று பல பேர்கள் கனவு கண்டார்கள். இதற்காகவே தங்களை இனவாத தலைவர்களாக மாற்றி எந்த அளவிற்கு இலங்கையின் சரித்திர பக்கங்களை கேவலமாக மாற்ற முடியுமோ அந்த அளவிற்கு வாழ்ந்த ஒவ்வொரு ஆட்சியாளர்களும் வாழ்ந்து காட்டினார்கள். தங்களையும் பலிகொடுத்தும் அப்பாவி பொதுமக்களையும் பலியாக்கி, உணராமலேயே அடுத்தவருக்கு வழிகாட்டியாய் வாழ்ந்து முடித்து இருந்தனர். 

வாழ்ந்த அத்தனை பேர்களும் இலங்கை என்ற நாட்டின் தேச அரசியல் தலைவராக மட்டும் இருந்தவர்கள்.  ஆனால் இன்று சாதித்துக் காட்டி சர்வ தேசத்தையும் தனக்கு சாதகமாக மாற்றிய அதிபர் மகிந்த ராஜபக்ஷே இன்று சிங்களர்களுக்கு மாமன்னர்.  அப்படித்தான் இறுதிக்கட்ட போருக்குப் பின் நடந்த வெற்றிவிழா கொண்டாட்டத்தின் போது புத்த பிக்குகள் அதிபரை வரவேற்று உயரிய சிங்கள விருதளித்து பேசினார்கள்.

"மகாசேனனும், துட்டகை முனுவும் செய்யாததை நமது மாமன்னர் ராஜபக்ஷே செய்துவிட்டார்"

காலசக்கரத்தை சற்று பின்னோக்கி திருப்பி விடலாம்.

ஈழத்தைச் சுற்றியுள்ள சர்வதேச அரசியல் ( முற்றுகைக்குள் இந்தியா தொடர் பதிவு)  பற்றி அறிய இங்கே சொடுக்கவும்

Thursday, March 21, 2013

இன்று இரவு தரப் போகும் பாடங்கள்தமிழ்நாட்டில் நடந்த ஹிந்தி (1965) எதிர்ப்பு போராட்டத்திற்குப் பிறகு தற்போது ஈழம் குறித்த போராட்டத்தில் மாணவர்களின் போராட்டம் தமிழ்நாடு முழுக்க முதன் முறையாக பரவி அதன் வெப்பம் மாநிலம் கடந்தும் சென்று கொண்டு இருக்கிறது. இதன் முடிவு எப்படி இருக்கும் என்பதை விட களப் போராட்டத்தில் தற்போதைய இளைஞர்கள் ஈடுபட்டால் அதன் தாக்கம் எப்படியிருக்கும் என்பதை இது வரையிலும் ஈழத்தை வைத்து அரசியல் செய்து வாக்குகளாக மாற்றிக் கொண்டவர்களுக்கு புரிந்திருக்கும். 

அத்தனை பேர்களின் மனதிலும் கிலியடித்து போயிருக்கும். . 

ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் போராடிக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கு ஆதரவு கொடுக்கின்றோம் என்ற பெயரில் நான் முந்திக்கிறேன் என்று வரிசைக்கிரமமாக வந்து கொண்டு இருக்க நீ உள்ளே வராதே என்ற துரத்தலும் நடந்தது. 

போராட்டங்கள் தொடங்கிய போதிலிருந்து தினந்தோறும் செய்தித் தாளில் அந்த செய்தி வந்துள்ளதா? என்று ஆவலுடன் கவனித்துக் கொண்டே வந்தேன். எப்போதும் இது போன்ற போராட்டங்கள் தொடங்கும் போது ஒரு கண்ணாடி போட்ட புறா ஓலையை தூக்கிக் கொண்டு டெல்லியிலிருந்து வரும். ஆனால் இந்த முறை இடது வலம் என்று வேறு இரண்டு புறாக்களையும் கூட்டிக் கொண்டு கோபாலபுரம் சென்றது.  ஆடிக்காத்தில் அம்மியே பறக்கும் போது கோபாலபுரம் நாடாளுமன்றத் தேர்தலை கணக்கில் வைத்துக் கொண்டு வந்த புறாக்களை தவிக்க விட இப்போது தமிழ்நாட்டின் அரசியல் களம் மாணவர்களின் ஈழம் சார்ந்த போராட்டத்தால் தகித்துக் கொண்டிருக்கின்றது.

ஏற்கனவே பல போராட்டங்கள் தமிழ்நாட்டில் ஈழத்திற்காக நடந்துள்ளது. ஆனால் தற்போது நிலவரமே வேறு. தார் கொதிப்பது போல தமிழ்நாட்டில் ஈழப்பிரச்சனை கொதித்துக் கொண்டிருக்கின்றது. கையை வைத்தால் சுடுவதை விட விரலே இல்லாமல் போய் விடுமென்ற ஆபத்தை ஒவ்வொருவரும் உணர்ந்தே வைத்துள்ளனர். அவரவர் நிலையில் நாங்கள் ஈழ மக்களின் ஆதரவாளன் என்ற போர்வையில் முடிந்த வரைக்கும் அரசியல் செய்து கொண்டு(ம்) இருக்கின்றனர். 

இன்று வரையிலும் என்னை சந்திக்கும் எவரும் விடுதலைப்புலிகள் பற்றி அதிகம் எழுதியவர் நீங்க தானே? என்ற அறிமுகத்தோடு தான் பேசத் தொடங்குகின்றனர். அப்போதுருந்து உங்கள் எழுத்துக்களை படித்துக் கொண்டு வருகின்றனர் என்கின்றனர்.

ஈழம் சார்ந்த அநேக விசயங்களை எழுதியுள்ளேன். பலருக்கும் சென்று சேர்ந்துள்ளது என்கிற வரைக்கும் என் உழைப்பு வீணாகவில்லை.

எனது தொழில் வாழ்க்கையின் உச்சக்கட்ட துயரத்தில் இருந்த போது இந்த ஈழம் குறித்து ஆராயத் தொடங்கினேன். இரண்டு வருடங்கள் ஈழத்தைப் பற்றி, வேலுப்பிள்ளை பிரபாகரன் பற்றிய தேடல்களை இருந்து கொண்டே இருந்தது. முடிவில்லா பயணம் போல போய்க் கொண்டேயிருந்து. சில சமயம் மனமே பேதலித்துப் போய்விடும் அளவுக்கு மனமாற்றம் உள்ளே உருவாகிக் கொண்டேயிருந்தது. ஆனாலும் முழுமையாக இல்லாவிட்டாலும் கூட முடிந்தவரைக்கும் இலங்கையின் சர்வதேச அரசியல் பின்புலம் வரைக்கும் அத்தனை விசயங்களையும் இந்த தளத்தில் பதிவு செய்துள்ளேன்.

இப்போது வெளிவந்துள்ள என்னுடைய முதல் படைப்பான டாலர் நகரம் என்ற நூலுக்கு முன்பு இந்த ஈழம் குறித்த புத்தகத்தை கொண்டு வர வேண்டும் என்று முயற்சித்த போது இரண்டு பதிப்பகங்கள் பயந்து கொண்டு ஒதுங்கி விட்டன. என்னுடைய நோக்கம் நான் படித்த நூற்றுக்கும் மேற்பட்ட புத்தகங்களின் மொத்த தொகுப்பாக, சாறு போல அத்தனையும் கலந்துகட்டி படிப்பவனுக்கு ஒரு புரிதல் உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் எழுதியிருந்தேன்.  குறிப்பாக எளிய நடையில் படிப்பவனை இழுத்துக் கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் என்னுடைய அத்தனை உழைப்பையும் அதில் காட்டியிருந்தேன். 

மூன்று வருடங்களுக்கு முன்பு உழைத்த அந்த உழைப்பு இன்று வரையிலும் உறங்கிக் கொண்டு தான் இருக்கின்றது. நான் கவலைப்படவில்லை.  காரணம் ஈழத்தை வைத்து அரசியல் செய்து வாழ்க்கையில் வசதிகளை தேடிக் கொண்டவர்கள், கற்பனைகளோடு சுவராசியம் என்ற போர்வையில் புனைவுகளை அவிழ்த்து விட்ட எழுத்தாளர்கள் என்று ஏராளமான நபர்களைப் பற்றி உணர்ந்து கொண்டதால் அமைதியாகவே இருந்து விட்டேன்.

இந்த சமயத்தில் இலங்கையின் அடிப்படை விசயங்களை எனது தளத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று எண்ணம் தோன்றியதால் நான் எழுதி வைத்துள்ள முதல் 26 அத்தியாங்களை அடுத்தடுத்து இங்கே பதிவு செய்ய விரும்புகின்றேன். ஆதாரமான புத்தகங்களை கடைசி அத்தியாயத்தின் கடைசியில் எழுதுகின்றேன். 

கடந்த ஐந்து ஆண்டுகளில் நான் அதிகம் படித்த புத்தகங்கள் ஈழம் சம்மந்தப்பட்ட புத்தகங்களே. இந்த தளத்தில் எழுதியுள்ள இலங்கை குறித்த விபரங்கள், இலங்கையின் சரித்திரம், போருக்கு முந்திய காலங்கள், போர் நடந்து முடிந்து பிறகு உருவான சர்வதேச ஒப்பந்தங்கள், ஈழத்தை வைத்து நடந்து கொண்டிருக்கும் சர்வதேச அரசியல் என்று ஒவ்வொன்றயும் உள்வாங்க என்னுள் இருந்த உணர்ச்சிகள் ஒவ்வொன்றாக கழன்று போய் இன்று வேடிக்கை பார்க்கும் மனோநிலையில் இருக்கின்றேன்.

டாலர் நகரம் புத்தகத்தில் என்னுரையில் இதைப்பற்றித்தான் முக்கியமாக குறிப்பிட்டுள்ளேன். காரணம் என்னுடைய ஈழத் தேடலின் விளைவாக உருவான புத்தக வடிவம் என்பது இன்றும் என் மடிக்கணினியில் அப்படியே உறங்கிக் கொண்டு இருக்கின்றது. 

ஏறக்குறைய புத்தக வடிவில் 600 பக்கங்கள் வரக்கூடிய ஈழ வரலாறு என்னைப் பொறுத்தவரையில் மிக முக்கியமானதாகும்.  

காரணம் நான் படித்த ஏராளமான புத்தகங்கள் எல்லாமே ஒவ்வொரு விசயத்தைப் பற்றி அவரவர் பார்வையில் தனித்தனியாக எழுதி உள்ளனர்.  ஆனால் ஈழம் குறித்து ஒருவர் படிக்கத் தொடங்கினால் இலங்கை என்ற தீவு எப்படி உருவானது முதல் படிப்படியான ஒவ்வொன்றையும் படிப்பவர்களுக்கு எளிதான நடையில் எவரும் தந்ததில்லை. 

சிலர் முனைவர் கட்டுரைகள் போல எழுதியுள்ளனர். சிலர் காசாக்கும் அவசரத்தில் கற்பனையை அள்ளித் தெளித்துள்ளனர்.

டாலர் நகரம் புத்தகத்தை படித்த தமிழ்மணம் திரட்டியை உருவாக்கிய திரு. காசி ஆறுமுகம் சொல்லியுள்ள ஒரு வாசகம் மிக முக்கியமானது.  

பஞ்சு, நூலுக்குப் பின்னால் உள்ள சர்வதேச அரசியலைப் பற்றி சுவராசியமான நடையில் அதே சமயத்தில் படிக்க வைக்க வேண்டும் என்பதற்தாக தேவையற்ற எந்த விசயத்தையும் ஜோதிஜி கொண்டு வராமல் புலிப்பாய்ச்சல் காட்டி ஆச்சரியப்படுத்தியுள்ளார் என்று எழுதி இருந்தார்.  

இயல்பான என் எழுத்துநடை, சம்பவங்களை கோர்க்கும் விதம் என்ற அரிச்சுவடி விசயங்களை இந்த ஈழம் சார்ந்த ஆர்வத்தின் மூலமே தொடங்கினேன்.  

அடுத்து வரும் பதிவில் இருந்து இந்த தொகுப்பில் உள்ள முதல் பகுதியை இந்த தளத்தில் கொண்டு வருகின்றேன்.  ஆதரவு அளிக்க வேண்டுகின்றேன். 

காரணம் இது அடிப்படையான விசயங்கள். நீங்கள் எங்கேயும் படித்து இருக்க முடியாது. படித்து இருந்தாலும் துண்டு துக்கடா போல அங்கங்கே துணுக்குச் செய்திகள் போல படித்து கடந்து வந்துருபபீர்கள்.  நிச்சயம் இந்த ஆதாரத் தகவல்களை இந்த சமயத்தில் இங்கே கொடுப்பது சரியானதாக இருக்கும் என்று நம்புகின்றேன்.  சில சம்பவங்களை பழைய விசயங்களாக இருக்கும்.  தற்போது அதன் தாக்கம் என்பது சற்று மாறி இருக்கும். நான் எதையும் திருத்தும் மனோநிலையில் இப்போது இல்லை. மீண்டும் இதற்குள் நுழைந்தால் மறுபடியும் உணர்ச்சி வசப்பட்ட மனிதனாக மாறிவிடுவேனோ என்று அச்சமும் என்னுள் இருப்பதால் அப்படியே வெளியிடுகின்றேன். 

இன்றைய தினத்தில் இதை இங்கே தொடங்க காரணம் என்று நீங்கள் கேட்பீர்களேயானால் இன்று இரவு ஜெனிவாவில் நடக்க உள்ள கூட்டத்திற்குப் பிறகு உங்களுக்கு வரும் தகவல்களின் அடிப்படையில் உலகம் முழுக்க இருக்கும் மனிதர்களிடத்தில் அவரவர் உடம்பில் இதயம் இருக்கும் இடத்தில் இரும்புக்குண்டுகளை வைத்துக் கொண்டு எத்தனை பேர்கள் இந்த உலகத்தில் நடமாடிக் கொண்டு இருக்கின்றார்கள்? என்பதை உணர வாய்ப்பாக இருக்கும்.

Sunday, March 17, 2013

40+

நாற்பது வயதுகளை கடக்க இருப்பவர்களும், கடந்து சென்றவர்களுக்கு மட்டும்.  இந்த படங்களை ரசிக்க ருசிக்க மற்றவர்களுக்கு பகிரவும் செய்யலாம். மின் அஞ்சல் வழியே எனக்கு அனுப்பிய சேலம் திரு. லெஷ்மணன் அவர்களுக்கு தேவியர் இல்லத்தின் சார்பாக நன்றிகள்.