Sunday, March 24, 2013

3. இலங்கைக்கு நடந்தே போயிடலாம்


இலங்கை சுதந்திரம் பெற்றதும் முதல் பிரதமராக பதவியில் அமர்ந்த சேனநாயகா உருவாக்கிய அரசாங்கத்தை நடத்திக் கொண்டுருந்தவர்கள் தோட்ட முதலாளிகளும், வெள்ளை துரைமார்களுமே., 

ஆனால் உள்ளே இருந்த கம்பூனிஸ்ட்டுகளும், தமிழ் தலைவர்களும் பதவியில் இருந்தார்களே தவிர அரசாங்கத்தை ஆண்டு கொண்டுருந்தது வெள்ளையர்களும் அவர்களின் சார்பாளர்களும். 

இவர்களுக்கு பதவி ஒரு பொருட்டல்ல.  

மேற்கித்திய நாடுகளுக்கு அன்றும் இன்றும் என்றும் செயல்படுத்திக்கொள்ள வேண்டிய ஆட்கள் மட்டுமே போதுமானது. அதுவே தான் இன்று ராஜபக்ஷே அரசாங்கம் வரைக்கும் தொட்டு தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. 

சிங்கள இனவாதம், தமிழர் சிறுபான்மை போன்ற வார்த்தைகளெல்லாம் வியாபாரிகளுக்கு தெரியவேண்டிய அவஸ்யமில்லை, இவர்கள் உருவாக்கும் சர்வதேச அரசியலும் அதன் கொள்கைகளும் சாதாரண பொதுமக்களுக்குத் தெரிந்தால் என்ன தெரியாவிட்டால் தான் என்ன?  

சுதந்திரம் பெற்ற போது இருந்த 33 சதவிகித தமிழர்கள் இப்போது சிறு புள்ளியாக மாற்றப்பட்டுள்ளனர். இனக்கலவரத்திற்கு புதிய அத்தியாயம் வகுத்துக்கொடுத்தவர் ஜே.ஆர். ஜெயவர்த்னே, முதல் தடவை பிரதமராகவும் இரண்டாவது முறை ஆட்சிக்கு வந்த போது அதிபராகவும் இருந்து உருவாக்கிய ஆட்டம் மொத்தமாக இன்று முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. 

இலங்கை தமிழர்களின் வாழ்வுரிமைகளும், ஆயுதம் ஏந்தி போராடியவர்களின் ’தனித் தமிழீம்’ என்பதும் ஏன் இன்று சூன்யமாய் போய் முடிவு தெரியாமல் நிற்கிறது. 

இலங்கை சுதந்திரம் பெறுவதற்கு முன்னால் உருவான இனவாத சிங்கள அரசியலின் இன்றைய வயது 200 ஆண்டுகள்.  

அனாரிகா தர்மபாலா

1810 அன்று உருவாக்கிய சிறு புள்ளியது. 

அதுவே இன்று படிப்படியாக வளர்க்கப்பட்டுள்ளது. ஒவ்வொருவரும் ஆட்சிக்கு வரும் போது தங்கள் பதவியைக் காப்பாற்றிக் கொள்ள செய்யப்பட்ட ஒவ்வொரு காரியங்களுக்குப் பின்னாலும் பாதிக்கப்பட்டது தமிழினமே. 

"இலங்கை என்பது தமிழர் சிங்களர் இருவரும் சேர்ந்து வாழ வேண்டிய நாடு.  நாம் அணைவரும் சேர்ந்து ஆங்கிலேயர்களை வெளியேற்ற வேண்டும்" என்பதற்காக முதல் தலைமுறை தமிழ் தலைவர்கள் போராடினார்கள். 

அரசியல் அரிச்சுவடியை தமிழர்களிடத்தில் பெற்று கற்றுக்கொண்ட சிங்களர்களே இறுதியில் தங்களை ஈழத்தின் மண்ணின் மைந்தர்களாக ஆட்சிக்குரியவர்களாக மாற்றிக்கொண்டார்கள். 

அன்று முதல் இன்று வரைக்கும் தமிழர்களால் புரிந்து கொள்ளப்பட முடியாத  ஒன்றாகவே இந்த அரசியல் இருந்து தொலைக்கின்றது, 

ஆனால் இலங்கை சுதந்திரம் பெற்ற போதே சிங்கள தலைவர்களால் அவர்களின். தந்திரங்களால், விலைக்கு வாங்கப்பட்ட தமிழ் தலைவர்களை வைத்தே முதல் அரசாங்கத்தை உருவாக்கிய சேனநாயகா காட்டிய வழி இது. 

தொடக்கத்தில் சிங்கள தலைவர்கள் வாய் வார்த்தைகளாக இனவாதத்தை வளர்த்துக் கொண்டுருந்தார்கள், அப்போது ஆதரவு கொடுத்த தமிழ் தலைவர்களை வைத்தே கடைசியில் அதிகாரபூர்வமாக சட்டமாக உருவாக்கினார்கள். சட்டம் உருவாக உதவி புரிந்த தமிழ்த் தலைவர்கள் முரண்பட்டு பிரிந்து நின்றார்கள்.

ஒவ்வொருவருக்கும் தனித்தனி கண்க்கு.

ஜீஜீ பொன்னம்பலம், தந்தை செல்வா வரைக்கும் அரசியல் சக்தியாக வளர்ந்தார்கள். 

தமிழ் மக்கள் கொடுத்த வாக்குகளையும், பெற்ற பாராளுமன்ற பதவிகளையும் ஆதரவுகளையும் சிங்களர்களுக்கே தாரை வார்த்தார்கள். சிங்கள தலைவர்கள் வசதியாக அமர்ந்து கொண்டார்கள். குனிய வைத்து குத்தவும் செய்தார்கள்.  குனிந்து இருந்த போதும் கூட வெட்கப்படாமல் கையேந்தி பார்த்தார்கள். ஒவ்வொரு காலகட்டத்திலும் இறுதியில் ஜெயித்தது சிங்களர்களின் தந்திர அரசியலே.

இலங்கையின் தேச அரசியல் போய் இன்று சர்வதேச அரசியலாக மாறி விட்டது. இன்று சர்வதேச அரசியலே பிரதான பங்காகி இலங்கையை நாகரிக பிச்சைக்கார நாடாக மாற்றி உள்ளது. 

அதனால் என்ன?  

விரும்பியபடி 3000 ஆண்டுகள் பாரம்பரியமுள்ள ஒரு இனத்தையே அழித்து முடித்தாகி விட்டது. 

பௌத்த நாட்டை சிங்களர்கள் ஆண்டால் என்ன? சீனா ஆண்டால் என்ன? 

மொத்தத்தில் இலங்கை என்பது தமிழர்களுக்கான நாடல்ல. 

இலங்கைக்குள் இருந்த சிங்கள தமிழர் அரசியல் என்பது மாறி சீனா அரசியல், இந்தியா அரசியல் என்று தொடங்கி உலக அரங்கில் பாவமாய் நிற்கும் பாகிஸ்தான் அரசியல் வரைக்கும் உள்ளே நுழைந்து இந்த குட்டித் தீவை கெட்டியாக பிடித்து வைத்து இருக்கிறது.  

இயல்பாகவே உணர்ச்சி பெருக்கில் உலகமெங்கும் வாழும் தமிழனத்திற்கு சர்வதேச அரசியலின் வலை பின்னல்களை இப்போதாவது உணர்ந்தே ஆகவேண்டும். விடுதலைப்புலிகளின் ஆயுதப் போராட்டத்தை வெறுப்பவர்களைப் போலவே சொர்க்க தேசம் என்று பண்டைய தமிழ் இலக்கியங்கள் வர்ணித்த இந்த ஈழத்திற்குள் ஏன் இத்தனை தீராத பிரச்சனைகள்.?  

காபிக்கொட்டையும், பச்சை தேயிலைச் செடிகளுமாய் பசுமையாய் போர்த்தியிருந்த இந்த இலங்கைத் தீவை இன்று கண்ணிவெடி சூழ்ந்த கதையையும் உணர்ந்து கொள்ள வேண்டும். பின்னோக்கி பாரபட்சம் இல்லாமல் பார்க்கும் போது இனவாத அரசியல் உருவாக்கிய பாதைகளும், கிடைத்த வாய்ப்புகளை நழுவ விட்ட மொத்த தமிழ் தலைவர்களையும் நாம் புரிந்து கொள்ள முடியும்.  

ஒற்றுமையில்லாமல் வாழும் எந்த இனத்திற்கும் இறுதியில் கிடைக்கும் அடிமை வாழ்க்கையை அப்போது தான் முழுமையாக உணர்ந்து கொள்ள முடியும். 

ஆனாலும் அருகில் உள்ள இந்த கண்ணீர்த் தீவுக்கு ஒரு காலத்தில் நடந்தே போயிடலாம்ன்னு சொன்னா நீங்க நம்புவீங்களா?


மேலும் அறிய

ஈழ வரலாறு பகுதி 1 மொத்தமும்  இங்கே சொடுக்கவும்.

ஈழ வரலாறு பகுதி 2 மொத்தமும் இங்கே சொடுக்கவும்

ஈழ வரலாற்றில் இந்திய அமைதிப்படைப் பற்றி அறிய சொடுக்கவும்

6 comments:

'பரிவை' சே.குமார் said...

நல்ல தகவலை அறியத் தந்தீர்கள் அண்ணா...

Anonymous said...

எல்லாம் சரி ஆனால் //விரும்பியபடி 3000 ஆண்டுகள் பாரம்பரியமுள்ள ஒரு இனத்தையே அழித்து முடித்தாகி விட்டது. // இந்த வரி தான் இடிக்குது. 3000 ஆண்டு காலம் தமிழர்களோ, சிங்களவர்களோ அங்கிருந்த போதிய ஆதாரமில்லை... இலங்கைத் தீவில் தமிழர்களுக்கு நீண்டதொரு வரலாறு இருந்திருக்கவில்லை என்பதையும் நாம் மறக்கக் கூடாது, ஆனால் அதைக் காரணம் காட்டி தமிழர்களின் பிரதேசங்களை அபகரிக்க சிங்கள ஆளும் வர்கத்துக்கும் உரிமை இல்லை.

Anonymous said...

இலங்கைத் தீவின் தமிழ் பேசும் மூன்று தேசிய இனங்களும் ஒருமித்து நின்றிருந்தால் இலங்கைத் தமிழரின் துர்பாக்கிய நிலை வந்திருக்காது. இன்று கூட இதனை ஏற்கவே மறுக்கின்றார்கள். என்ன செய்ய.

ஜோதிஜி said...

அடுத்து வரும் சில அத்தியாயங்களில் புரிந்து கொள்வீர்கள் செல்வன்.

வவ்வால் said...

ஜோதிஜி,

புதுசா ஒரு தொடர் ஆரம்பிச்சுட்டிங்களா, பலே!!!

நல்லா இருக்கு ஆனால் வழக்கம் போல ஆங்காங்கே சில முரண்கள் முட்டுது ,கண்ணைக்கட்டுது :-))

மேற்கொண்டு போங்க, எப்படி போகுதுனு பார்த்துட்டு ,சண்டைய ஆரம்பிக்கிறேன் :-))

// அருகில் உள்ள இந்த கண்ணீர்த் தீவுக்கு ஒரு காலத்தில் நடந்தே போயிடலாம்ன்னு சொன்னா நீங்க நம்புவீங்களா?
//

ஹி...ஹி இதை ரொம்ப நாளுக்கு முன்னர் சொல்லப்போய் எல்லாம் பிலு பிலுனு புடிச்சுக்கிட்டு ஆதாரம் காட்ட சொல்லிட்டாங்க.

வேதாரண்யத்தில் உள்ள வேதரண்யஷ்வர் என்ற சிவன் கோவிலுக்கு வழிப்பட இலங்கையில் இருந்து கோடியக்கரை வழியாக கடலில் நடந்தே வருவார்கள் என நான் கேள்விப்பட்டதை சொன்னேன் , அதற்கு ஆதாரமெல்லாம் இருக்கானு தெரியலை, அக்கோவிலுக்கு இன்றும் தர்மகர்த்தாவாக இருப்பது இலங்கை சைவ ஆதினமடத்தவரே.

அந்தக்கோயில் கதவு மூடி இருந்துச்சாம் திருநாவுக்கரசர் பாட்டுப்பாடியே திறக்க வச்சார்னு புராணம் உண்டு.

// 3000 ஆண்டுகள் பாரம்பரியமுள்ள ஒரு இனத்தையே அழித்து முடித்தாகி விட்டது. //

3000 ஆண்டுகளா என உறுதியாக சொல்ல முடியாது ,ஆனால் இலங்கைக்கும் ,தமிழுக்கும்,தமிழர்களுக்கும் நீண்ட தொடர்புண்டு,

நமது சங்க இலக்கியங்களில் சொல்லப்பட்ட நாவலந்தீவு, நாகத்தீவு,மணிமேகலையில் வரும் மணிபல்லவத்தீவு என்பது எல்லாம் இலங்கை தான்னு சொல்லுறாங்க. பல்லவர்கள் நாக இளவரசிக்கும், சோழ அரசனுக்கும் பிறந்த வாரிசுனு கூட கதை இருக்கு.


வரலாற்று ,இலக்கிய ரீதியாக நிறைய இருக்கு,ஆனால் முறைப்படி ஆய்வுகள் செய்யப்படவில்லை,யாராவது செய்து இருக்கலாம்,வெளியில் தெரியாமல் இருக்கிரதோ என்னமோ.

ஜோதிஜி said...

உங்க தளத்துக்கு வந்து அழைக்கனும்ன்னு ரெண்டு நாளா நினைச்சுக்கிட்டு இருந்தேன். முடியல. நல்ல வேளை நீங்களே வந்துட்டீங்க. நன்றி.

நீங்க சொன்னது உண்மை தான் . கடைசியாக சொன்ன பல விசயங்கள் முற்றிலும் உண்மை தான். நான் இந்த தொடரை புத்தகமாக்க கொண்டு வர வேண்டும் என்று மிக அழகான படிப்படியான ஆதார தகவல்களை பொறுமையாக கோர்த்து சேகரித்து எழுதிக் கொண்டு வந்தேன். அப்போது இதை பக்கமாக மாற்ற ஹாலிவுட் பாலாவிடம் கொடுத்த போது அந்த பணியை அழகாக செய்து கொடுத்து ஒரு குட்டும் வைத்தார்.

படிக்கவறங்களுக்கு புரிய வேண்டாமா? என்று சொல்ல மீண்டும் பலவற்றை நீக்கி விட்டு சக்கையைத்தான் இப்ப வெளியிட்டுக் கிட்டு இருக்கேன். ஒரு பெண்மணி முனைவர் பட்டத்திற்காக எழுதிய ஒரு அற்புதழமான நூல் கிடைத்தது. கடைசி அத்தியாயத்தில் ரசித்த ருசித்த நூலைப்பற்றி எழுதுகின்றேன்.