Saturday, March 09, 2013

கச்சத்தீவு - உண்மைகளும் எதார்த்தமும்

தமிழ்நாட்டில் உள்ள சில பிரச்சனைகளுக்கு மட்டும் எப்போதும் உயிர்ப்பு இருந்து கொண்டேயிருக்கும்.

இந்த காரணமே இங்குள்ள அரசியல்வாதிகளுக்கு அல்வா போலவே இனிக்கின்றது. 

தற்போது இந்திய அரசியலில் வேலுப்பிள்ளை பிரபாகரன் மகன் இறப்பிற்கு பின்னால் உள்ள நிகழ்வுகளை வைத்து அரசியல் நடந்து கொண்டு இருக்கின்றது. 

இப்போது தான் இந்த விசயங்களை கேள்விப்படுவது போல தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் ஆட்டம் காட்டிக் கொண்டிருக்கின்றார்கள். இதன் தொடர்ச்சியாக தமிழ்நாட்டு மீனவர்கள் தாக்கப்படுவதைக் குறித்தும் எப்போதும் போல குரல் எழுப்பப்பட்டுக் கொண்டு இருக்கிறது.

கச்சத்தீவு பிரச்சனை என்பது தற்போது இந்திய பாரளுமன்றம் வரைக்கும் மீண்டும் விவாத பொருளாக மாறியுள்ளது.  ஆனால் இதுவரைக்கும் இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்ட தமிழ்நாட்டு மீன்வர்களைப் பற்றி, அவர்களின் இழந்து போன வாழ்வாரதாரங்களைப் பற்றி எவர் கண்டு கொண்டனர்?

தமிழக மீனவர்களுக்கு விடிவு காலம் உண்டா?

மற்ற தொழிலை விட மீனவ தொழிலில் ஒவ்வொருவருக்கும் கடவுள் பக்தி அதிகம், வெவ்வேறு மதமாக இருக்கலாம்,  ஆனால் கடவுள் நம்மை காப்பாற்றி விடுவார் என்று தான் தமிழ்நாட்டு மீனவர்கள் ஒவ்வொரு நாளும் கடலுக்குச் செல்கிறார்கள்,  ஆனால் கடந்த பல வருடங்களாகவே கரையில் வந்து சேர்வதென்னவோ அவர்களின் காயம் பட்ட உடம்பும், உயிர் இல்லாத உடம்பும் தான்,

உயிர் பயம் என்றால் உண்மையிலேயே நேரிடையாக நாள்தோறும் அனுபவித்துக் கொண்டிருப்பவர்கள் மீனவர்கள் மட்டுமே, இலங்கை கடற்படையினரால் அவமானப்படுத்தப்பட்ட, சித்ரவதை செய்யப்பட்ட, பயமுறுத்தப்பட்ட என்று அவரவர் பட்ட அவமானங்களை அவஸ்த்தைகளை தமிழ்நாட்டு கடற்கரையோர மீனவர்களிடம் கேட்டுப் பார்த்தால் வீட்டுக்கு ஒருவராவது இருப்பர்.

ஆனால் இதற்கெல்லாம் தீர்வு எப்போது கிடைக்கும் என்று கேட்டால் வானத்தை நோக்கி தான் கையை காட்டுவர்  பல தீர்ப்புகள் காலமாற்றத்தில் திருத்தக்கூடியதாக இருக்கின்றது,

ஆனால் இந்த மீனவர்களின் பிரச்சனைகளுக்குண்டான தீர்ப்புகளை எந்த தேவன் தரப்போகின்றார்?

இலங்கை கடற்படையினரால் தமிழ்நாட்டு மீனவர்கள் சிறைபிடிக்க பிடிக்கப்பட்டனர் என்ற செய்திகள் முதல் சித்ரவதைகளை அனுபவித்து கரை திரும்பிய மீனவர்களின் பேட்டி வரைக்கும் இன்று சாதாரண செய்தியாக மாறிவிட்டது,  .மற்ற நாடுகளுடன் இந்தியாவுக்கு ஏதோவொரு பிரச்சனை என்றால் அதில் ஏதோவொரு விசயம் மட்டும் தான் பேசும் பொருளாக இருக்கும்,  ஆனால் இலங்கை என்பதால் அதிலும் தமிழ்நாடு என்பதால் இனம், மொழி என்பதாக மாறிவிடுகின்றது,  தொழில் ரீதியான போட்டி பொறாமைகள் அத்தனையும் பின்னுக்குப் போய்விடுகின்றது, 

தங்கள் நாட்டு எல்லைக்குள் வருபவர்களை விரட்டுவது, மிரட்டுவது என்பதெல்லாம் கடந்து ஈவு இரக்கமின்றி சித்ரவதை செய்து அழகு பார்ப்பது இலங்கைக்கு கைவந்த கலையாக இருப்பதால் தமிழ்நாட்டு அரசியல்களமும் அவ்வப்போது இந்த பிரச்சனையை முன்னிட்டு சூடாகவே கொதித்துக் கொண்டிருக்கிறது, இலங்கையில் நடந்த போர் முடிவுக்கு வந்த பின்னால் அங்கு வாழும் தமிழர்களின் வாழ்வில் தேனும், பாலும் ஓடும் என்பதும் பொய்தது விட்டது,

இந்தியா கொடுத்த நிதி உதவியைக் கூட சரியாக பயன்படுத்தி வாழ்க்கை இழந்தவர்களுக்கு வீடும் கட்டிக் கொடுத்தபாடில்லை, இலங்கைக்குள் வாழ்ந்தாலும் தமிழர்கள் என்பவர்கள் இன்றுவரையிலும் அகதியாகத்தான் இருக்கின்றார்கள்,  இலங்கையில் வாழும் தமிழர்கள் சார்ந்த அத்தனை விசயங்களுக்குப் பினனாலும் அதிகமான துயரக்கதைகளே இன்று வரை வந்து கொண்டேயிருக்கிறது,

தமிழ்நாட்டு அரசியல்வாதிகளுக்கு ஈழமென்பது கடந்த 30 ஆண்டுகளாக விளம்பரத்தை தேடி தரக்கூடிய செய்தி. இங்குள்ள ஒவ்வொரு கட்சிகளும் தனித்தனியாக அறிக்கைகள், பேட்டி ,தீர்மானங்கள் என்று மாறி மாறி லாவணி கச்சேரியாக மாற்றி இது விக்ரமாதித்தன் சொல்ல முடியாத விடையாகத் தான் ஈழத்தீவின் பிரச்சனையும் தமிழ்நாட்டு மீனவர்களின் பிரச்சனையும் இருக்கிறது,  முடிவே தெரியாமல் இன்று வரையிலும் இறக்கும் மீனவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டேயிருக்கிறது, ,

ஆனால் மீனவர்களின் பிரச்சனையைப் பற்றி பேசுபவர்கள் அத்தனை பேர்களும் கடைசியில் ஒரு புள்ளியில் வந்து தான் நிற்கிறார்கள், 

“கச்சதீவை இந்தியா கைப்பற்ற வேண்டும்” என்கிறார்கள்., 

கச்சத்தீவு என்பது இவர்கள் சொல்வது போல என்ன இடுப்பில் கட்டியிருக்கும் கச்சைதுணியா? நினைத்த போது மாற்றிக் கொள்ள முடியுமா? 

இந்தியா நினைத்தால் கச்சத்தீவை மீண்டும் எடுத்துக் கொள்ளத்தான் முடியுமா? 

ஏன் மத்திய அரசாங்கம் தமிழ்நாட்டி மீனவர்களின் பிரச்சனைகளைக் கண்டு பாராமுகமாக இருக்கிறது என்று பார்த்தால் மீனவர்களின் வலைகளை விட இது மிகவும் சிக்கலாகவே இருக்கிறது, தெளிவற்ற இந்திய அரசாங்க்த்தின் வெளியுறவுக் கொள்கை, தமிழர்களின் பிரச்சனைகளில் ஆர்வமற்ற அதிகாரவர்க்கத்தினர் என்று ஆயிரம் காரணங்கள் சொன்னாலும் கச்சத்தீவு என்பதை இந்தியாவால் கைகழுவப்பட்ட துண்டு நிலம் என்பதே எதார்த்தம், அதில் இனி எந்த காலத்திலும் சொந்தம் கொண்டாடுவது என்பது கற்பனையில் வேண்டுமானால் நினைத்துக் கொண்டு சந்தோஷப்பட்டுக் கொள்ளலாம்,  

காரணம் இந்த ஒரு பிரச்சனையில் இந்தியா தமிழர்களுக்கு மகிழ்ச்சியளிக்க என்று கைவைத்தால் வைத்த கை சுட்டுவிடும் என்பதை விட கையே இல்லாமல் போய்விடக் கூடிய அபாயமும் உண்டு,  

இது தான் உண்மை,

கச்சத்தீவு இலங்கையின் நெடுந்தீவிலிருந்து 10,5 மைல் தொலைவிலும், இராமேஸ்வரத்திலிருந்து 12 மைல் தொலைவிலும் அமைந்திருக்கிறது, இந்த தீவின் மொத்த பரப்பளவே 285,2 ஏக்கர் மட்டுமே, தமிழக மீனவர்கள் தங்கள் வலைகளை உலர்த்துவதற்கு மட்டும் தான் சென்று கொண்டுருந்தனர்,  இது தவிர வருடந்தோறும் மார்ச் மாதம் நடக்கும் அங்குள்ள புனித அந்தோணியார் தேவாலய திருவிழாவிற்கு செல்வார்கள், 

தற்போது இந்த கொண்டாட்டங்களை கூட வேண்டா வெறுப்பாகவே இலங்கை அனுமதிக்கின்றது, இந்தியாவிற்கு அருகே நகம் அளவிற்கு இருக்கும் இலங்கையின் ஒவ்வொரு காலகட்ட ராஜதந்திர நடவடிக்கையின் காரணமாக இன்று இந்தியாவிற்கு தீராத வலியை தந்து கொண்டுருக்கும் நகச்சுத்தியாக மாறி ரொம்ப காலமாகி விட்டது,

ஆபத்துக்களுடன் மட்டுமே உயிர்வாழ்பவன் மீனவன், ஆனால் பாய்ந்து வரும் சுழலை,  சூறாவளியை தாண்டி வருபவன் 

ஆனால் ஒவ்வொரு முறையும் இலங்கை கடற்படையினரிடம் மட்டும் சரியாக மாட்டிக்கொள்ளும் மர்மத்தை தான் இன்று வரை புரிந்து கொள்ள முடியவில்லை, எல்லை தாண்டிச்சென்று  ஏராளமான மீன்களை அள்ளிவர என்று நினைத்துக் கொண்டு செல்பவர்களில் முக்கால்வாசி பேர்கள் உயிர்தப்பியதே போதும் என்று தான் எல்லாவற்றையும் இழந்து விட்டு உயிரை மட்டும் கையில் பிடித்துக் கொண்டு ஒவ்வொரு முறையும் கரைக்கு திரும்பிக் கொண்டு இருககிறார்க்ள்,

ஒவ்வொரு நாட்டுக்கும் தீர்மானித்த கடல் எல்லைகள் உண்டு, தமிழ்நாட்டு மீனவர்கள் மட்டுமல்ல, எந்த நாட்டு மீனவர்களும் இந்த எல்லைக் கட்டுபாடுகளை கண்டு கொள்வதில்லை, காரணம் மீன்கள் எங்கே அதிகமாக கிடைக்கின்றதோ படகும் அங்கே தானே செல்லும்,  

உலகமெங்கும் இதே நடைமுறையில் மீனவர்களின் வாழ்க்கை ஓடிக்கொண்டுருக்கிறது,

இலங்கை மீனவர்கள் இந்திய கடற்பகுதிகளுக்குள்ளும், இந்திய மீனவர்கள் பாகிஸ்தான் கடற்பகுதிகளுக்குள்ளும், வங்கதேசத்து மீனவர்கள் மியன்மர் பகுதிகளுக்குள்ளும், ஜப்பான், தைவான் மீன்வர் ஆசிய கடற்பரப்பு முழுவதும் சென்று பிடிப்பதும் வாடிக்கையாக இருந்தாலும் மற்ற நாடுகளை விட இலங்கைக்கும் இந்தியாவிற்குள்ளும் குறிப்பாக தமிழ்நாட்டு மீனவர்களின் பிரச்சனை தான் தினந்தோறும் பத்திரிக்கைகளில் தலைப்பு செய்தியாக வந்து கொண்டு இருக்கின்றது,

இலங்கை, இந்திய மீனவர்களின் களமென்பது இரண்டு நாடுகளுக்குமிடையே இருக்கும் பாக் நீரிணையே ஆகும், இது தமிழ்நாட்டில் உள்ள நாகபட்டிணம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள கடற்கரைப்பகுதிகளும், இதைப் போல இலங்கையில் உள்ள யாழ்ப்பாணம்,மன்னார் மாவட்டங்களில் உள்ள கடற்பரப்புக்கும் இடையே உள்ள பகுதியாக இருக்கிறது,  

மீனவளம் அதிகம் உள்ள இந்த பகுதிகளுக்குள் நடக்கும் முட்டல் மோதல் தான் கடைசியில் சுட்டுக்கொல்லப்படுவது வரைக்கும் செல்கின்றது,  அதுவே அரசியலாக மாற்றப்பட்டு ஆவேச அறிக்கைகள் தினந்தோறும் வர காரணமாக இருக்கிறது, கடைசியில் எப்போதும் போல அடுத்த மீனவர் சாகும் வரைக்கும் அமைதியாகி விடுகின்றது,

ஆனால் மீனவர்களின் பிரச்சனைகளுக்கு முடிவாக எப்போதும் மத்திய அரசாங்கம் மறக்காமல் ஒரு வாசகத்தை நமக்கு நினைவு படுத்தும்,  

மீனவர்கள் தங்கள் எல்லைகளை கடந்து செல்லக்கூடாது, 

ஆனால் தமிழ்நாட்டு மீனவர்கள் மட்டும் தான் கடல் எல்லைகளை கடந்து செல்கின்றார்களா? 

இலங்கை மீனவர்கள் அரபிக்கடலுக்குள் நுழைந்து கேரள கடற் பகுதி, லட்சத்தீவு, மினிகாய் தீவுகள் போன்ற இடங்களிலும் மீன்பிடித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள், இலங்கை மீனவர்களைப் பொறுத்தவரையிலும் முக்கிய இலக்காக சூரை மீன் இருக்கிறது, 

அது இந்திய கடற்கரைப் பகுதிகளில் தான் அதிகம் கிடைக்கிறது,  இதைப் போலவே இந்திய மீனவர்களின் குறியான இறால் மீன் கச்சத்தீவுக்கும் நெடுந்தீவுக்கும் இடையே தான் அதிக அளவு கிடைக்கின்றது,  வெளிநாட்டின் ஏற்றுமதி தேவைக்கு இந்த இறால் லாபம் கொழிக்கும் தொழிலாக இருப்பதால் தமிழ்நாட்டு மீனவர்களை எல்லை தாண்டுதல் என்பதை கபடி கோடு போல தாண்ட வைக்கின்றது,  

இந்திரா காந்தி ஆட்சி காலத்தில் கையெப்பம் இடப்பட்ட 1974 மற்றும் 1976 ஆம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தங்கள் தான் (சிறீமாவோ இந்திரா காந்தி ஓப்பந்தம்) தமிழ்நாட்டு மீனவர்களின் வாழ்க்கையில் அவலத்தை அறிமுகப்படுத்தியது, 1973 ஆம் ஆண்டு இலங்கையுடன் உறவை மேம்படுத்த இந்திரா காந்தி நல்லெண்ண பயனமாக இலங்கைக்குச் சென்றார்,  இரு நாட்டுக்கும் நெருடலாக இருக்கும் கச்சத்தீவை இலங்கைக்கு விட்டுக் கொடுக்க இந்திரா காந்தி தன்னிச்சையாக  முடிவெடுக்க தேவைப்படும் அதிகாரியாக பார்த்து இந்த ஒப்பந்தங்களுக்கு ஒரு லாபி உருவாக்கப்பட (1974  ஜுன் 28)ஒரு சுபயோக சுப தினத்தில் கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது, 

இந்த ஒப்பந்தம் இந்திரா காந்தி சிறீ மாவோ பண்டார நாயகாவின் நட்புக்காக என்பது ஒரு பக்கமும், என்னுடைய அரசியல் எதிர்காலம் உங்கள் கைகளில் என்று இந்திராவை நோக்கி சிறீமாவோ விடுத்த கெஞ்சலினால் என்பதாகக் கூட எடுத்துக் கொள்ளலாம்,

கட்டுப்பாடுகள் இல்லாமல் தொழில் செய்து வந்த மீனவர்களுக்கு அரசாங்கத்தால் போடப்பட்ட சட்டதிட்டங்களை கண்டு கொள்ள தயாராக இல்லை, இதற்கிடையே இந்த மீன் தொழில் காலப்போக்கில் நவீனங்களும் வந்து சேர்ந்து போட்டி போட தங்களது அடிப்படை வாழ்வாதாரமே தமிழ்நாட்டு மீனவர்களுக்கு கேள்விக்குறியாக மாறத் தொடங்கியது,  

எந்திர விசைப்படகுகளுக்கு இணையாக கட்டுமரத்தை, நாட்டு படகை, வல்லத்தை துணையாகக் கொண்டு போராடிக் கொண்டுருப்பவர்கள் என்ன செய்ய முடியும்? 

 மீன் வளம் குறைந்த பாக் நீரிணைக்குள் இன்று இரு நாட்டு மீனவர்களுக்கும் இரத்தச் சகதியாக மாறும் இடமாக மாறியுள்ளது, கூடவே இலங்கைக்கு திடீர் கூட்டாளியாக வந்து சேர்ந்துள்ள சீனாவை திருப்திபடுத்த வேண்டிய அவசர அவசிய நிலையிலும் இலங்கை இருப்பதால் கச்சத்தீவு என்பது திருகோணமலை தளத்தைப் போல முக்கிய கேந்திரமாக இருக்கின்றது,

இந்தியாவின் கடற்கரைபகுதியின் மொத்த அளவு 8,118 கீ,மீ, 

ஏறக்குறைய இந்தியாவில் மட்டும் 60 லட்சத்திற்கு மேற்பட்ட மீனவர்களுடன் தொழிலாளர்களுமாய் இந்த தொழிலில் இருக்கின்றனர், இதைப் போலவே இலங்கையில் 6 லட்சம் மீனவர்கள் இந்த தொழிலை நம்பித்தான் இருக்கின்றனர், தமிழ்நாட்டின் கிழக்குப் பகுதியில் பாக் வளைகுடாவும், வங்காள விரிகுடாவும், தென் கிழக்குப் பகுதியில் மன்னார் வளைகுடாவும், தென்மேற்கில் இந்தியப் பெருங்கடலும் அரபுக் கடலும் எல்லையாக இருக்கின்றது, 

அகில இந்திய அளவில் மீன் சார்ந்த தொழிலில் கேரளாவே முதல் இடத்தில் இருக்கிறது, கேரளா, குஜராத்தை தொடர்ந்து தமிழகம் மூன்றாவது இடத்தில் அதாவது இந்தியாவின் மொத்த மீன் உற்பத்தில் 13.25 சதவிகிதத்தை (2008ல் எடுத்த கணக்குப்படி) பெற்றுள்ளது,

1972 ஆம் ஆண்டு இந்தியாவின் வர்த்தக அமைச்சகம் அந்நிய செலவாணியை மனதில் கொண்டு கடல் உற்பத்தி ஏற்றுமதி வளர்ச்சி ஆணையத்தையை (MARINE PRODUCTS EXPORT DEVELOPMENT AUTHORITY MPEDA) உருவாக்கியது,  

1990 களில் தான் விலை அதிகமான கற்கள் (கிரானைட்), ஆய்த்த ஆடைகள், மற்ற ஜவுளிப் பொருட்கள் பெற்று தந்த அந்நியச் செலவாணிக்கு இணையாக இந்த மீன்கள் சார்ந்த ஏற்றுமதியும் இந்திய அரசாங்கத்திற்கு வருமானத்தை ஈட்டித்தர தொடங்கியது,அதிலும் இறால் மட்டும் 87 சதவிகிதமாக இருக்க,
அரசாங்கத்தின் கொள்கையிலும் மாற்றம் வரத் தொடங்கியது,  இதன் காரணமாக சராசரி மீனவர்களின் வாழ்க்கையிலும் அதிக பிரச்சனைகள் வரத் தொடங்கியது

மீன் பிடித்தல் தொழிலில் நவீனங்களை புகுத்தினால் அதிகமான லாபத்தை இந்த தொழில் மூலம் பெற முடியும் என்று மத்திய அரசாங்கம் முடிவு செய்தது,  இந்த கொள்கைகளை உருவாக்கியவர்களுக்கு மீனவர்களின் அடிப்படை வாழ்வாதாரத்தைப் பற்றி எதுவும் தெரியாது, 

எப்போதும் போல மீனவர்களுக்கென்று நலத்திட்டங்கள் என்கிற ரீதியில் அடுத்த அடிக்கு நகர்ந்து விட்டார்கள், மோட்டார்கள் பொருத்தப்பட்ட படகுகள், ஆழ்கடலுக்குச் சென்று பிடித்த வர உதவும் நவீன ரக படகுகள் என்று இந்த தொழிலின் முகமே மாறத் தொடங்கியது,  கூடவே அந்நிய மூதலீடுகள் மூலம் கூட்டாளிகள் பலரும் இங்கே வரத் தொடங்கினர்,  கழுத்துவலியுடன் திருகு வலியும் சேர்ந்தது,

மீனவர்களின் போராட்டங்க்ளின் காரணமாக உருவாக்கப்பட்ட முராரி குழு முடிந்த வரை போராடிப் பார்த்தது,  

இறுதியாக வேறுவழியின்று 1996 ஆம் ஆண்டு கொடுக்கப்பட்ட புதிய உரிமங்கள் அத்தனையும் 1997 ஆம் ஆண்டு இந்திய அரசாங்கம் ரத்து செய்தது,

இந்த தொழிலில் உள்ள லாபங்களைப் பார்த்து மீனவ சாதிகளைத் தவிர மற்ற பணம் படைத்த அத்தனை பேர்களும் குறிப்பாக அரசியல்வாதிகளுக்கு கொழுத்த வேட்டையாக அமைந்து விட் புதுப்புது நவீனங்கள் உடனடியாக வரத்தொடங்கியது.   முதன் முதலாக கேரளாவில் நார்வே நாட்டின் மூலம் அறிமுகமானது தான் பாட்டம் ட்ராலிங் (Bottom Trawling). என்பது, அதாவது மடிவலையை உபயோகித்து மீன் பிடிப்பது,  

இதன் மூலம் இறால் ஏராளமான அளவில் கிடைத்ததால் இது மற்ற மாநிலங்களுக்கும் வேகமாக பரவியது,  வல்லங்களில் பிடிக்கும் மீனவர்களுக்கும் இது போன்ற ட்ராலிங் மூலம் பிடிப்பவர்களுக்கும் உருவான மோதல் நாளுக்கு நாள் அதிகமானது, ட்ராலிங் மூலம் மீன்கள் மட்டும் பிடிக்கப்படுவதில்லை,  குஞ்சு குழுவான் வரைக்கும் அத்தனையும் துடைத்து எடுத்தாற்போல மொத்த மீன் வளத்தையே மாற்றி விடுவதால் முந்திக் கொண்டவர்கள் சடுதியாக மேலேறேத் தொடங்கினார்கள்,   

பாரம்பரிய மீனவர்களின் வருத்தமே இது தான், இதன் காரணமாகவே குறிப்பிட்ட இடங்களில் மீன்கள் அதிக அளவு கிடைக்காமல் போக எல்லைகளை கடந்தால் தான் மீன்கள் கிடைக்கும் என்ற நிலையும் உருவானது, அரசாங்க ரீதியில் எத்தனை ஒப்பந்தங்கள் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் உருவான போதிலும் ஏன் இந்த மீனவர்களின் பிரச்சனை மட்டும் முடிவுக்கு வராமல் சுழல் போல் சுழன்றடிக்கின்றது?

1991 ஆம் ஜெயலலிதா முதன் முறையாக ஆட்சிக்கு வந்த போது ஆகஸ்ட் 15 அன்று கோட்டையில் கொடியேற்றிய போது கச்சத்தீவை இலங்கையிடமிருந்து மீட்க வேண்டும் என்று மக்களுக்கு அறைகூவல் விடுத்தார்,  

இது கலைஞர் விடுத்த அறை கூவல், அதாவது பழைய மொந்தையில் புதிய கள்,

தொடர்ந்த ஒவ்வொரு கட்சிகளும் மனம் போன போக்கில் இதையே சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்,  

ஆனால் எதார்த்தம் என்பது வேறு,

இலங்கையுடன் இந்தியா செய்து கொண்டிருக்கும் இந்த ஒப்பந்தங்களைப் போல அருகே உள்ள மியன்மர்,  இந்தோனேசியா, மாலத்தீவுகள், தாய்லாந்து, பல நாடுகளுடன் பல சர்வதேச ஒப்பந்தங்கள் போட்டுள்ளன, 

தனி ஈழம் கேட்க ஆதரவளித்தால் இந்தியா முதலில் காஷ்மீர் பிரச்சனையில் கவனம் செலுத்தி அவர்களுக்குண்டான சுதந்திரத்தை கொடுக்கட்டும் என்பது போன்ற குண்டக்க மண்டக்க கோரிக்கையை இலங்கை ஐ,நா சபையில் எழுப்புவதைப் போல இந்த கச்சத்தீவு ஒப்பந்த பிரச்சனை இன்னும் பல பிரச்சனைகளை உருவாக்கும்,  முடிந்து போன ஒப்பந்தத்தை முடக்கவும் முடியாது, உயிர்ப்பிக்கவும் முடியாது,  

இது தான் உண்மை, 

ஆனால் நீண்ட கால ஒப்பந்த அடிப்படையை இந்தியா நினைத்தால் உருவாக்க முடியும், இந்த விசயத்தில் ஏற்கனவே ஒரு முன் உதாரணம் உண்டு,  

தீன்பிகா என்ற இடம் குறித்து 1974 மே 16ல் இந்தியாவிற்கும் வங்க தேசத்திற்கும் ஒரு ஒப்பந்தம் உருவானது,

இதன் முழுவிபரத்தை நாம் இங்கே பார்ப்பதை விட இந்த ஒப்பந்தத்தின் மூலம் இந்தியா வங்க தேசத்திற்கு நீண்ட கால குத்தகையின் அடிப்படையில் விட்ட காரணத்தால் பேருபரி விவகாரத்தை முடிவுக்கு கொண்டு வந்தது, இதைப் போலவே இரு நாட்டு மீனவர்களுக்கும் பிரச்சனை இல்லாத திட்டங்களை உருவாக்க முடியும்,  

குறிப்பிட்ட எல்லைகளை வகுக்க முடியும்,  குறிப்பிட்ட காலகட்டத்தினை இரு நாட்டு மீனவர்களுக்கும் அளித்து அந்தந்த காலகட்டத்தினை அவரவர் மீன்பிடிக்க உதவ முடியும்,  அடையாள அட்டையை உருவாக்கி இரு நாட்டின் பாதுகாப்பு தொடர்பான உறுதிப்பாட்டினனை இரு நாடுகளும் சேர்ந்து கச்சத்தீவில் உருவாக்க முடியும்,

ஆனால் இது இந்தியாவின் வெளியுறவு சம்மந்தப்பட்ட பிரச்சனை,  

தமிழ்நாட்டு அரசாங்கம் வெறுமனே வேடிக்கை தான் பார்க்க முடியும்,  இந்தியாவின் வெளியுறவு கொள்கை வகுப்பாளர்களிடம் நீங்கள் எதுவும் சொல்ல முடியாது, தமிழர்களின் பிரச்சனையை அறியாத வேறு மாநில அதிகாரியிடம் நீங்கள் என்ன சொன்னாலும் செவிடன் காதில் ஊதிய சங்காகத்தான் இருக்கும், இங்கிருந்து சொல்வதை கேட்கும் அளவுக்கு அவர்களுக்கு பொறுமையும் இல்லை, 

இப்போதைய சூழ்நிலையில் இந்தியாவிற்கு தேவைப்படும் வணிகரீதியான சந்தைகள் தான் முக்கியம்,  இலங்கையில் நடந்து முடிந்த போர் முடிவுக்கு வந்த காலம் தொட்டு இந்தியா இலங்கையில் போடும் முதலீடும் வருடந்தோறும் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது,  
Year
FDI (US$ Million)
% FDI from India
India
Rank
Total FDI into Sri Lanka
2003
54
1
158
34.2
2004
25
4
214
11.7
2005
18
4
249
7.2
2006
27
9
506
5.3
2007
43
4
645
6.7
2008
126
2
779
16.1

இந்திய வணிகம் முக்கியமா?  தமிழ்நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரம் முக்கியமா?

இதையெல்லாம் விட பிரச்சனைகளை முறைப்படி தெரிவித்து இந்த பிரச்சனைக்கு முடிவு கட்ட எவருக்கும் இங்கே அக்கறையும் இல்லை என்பது தான் நிதர்சனம்,  

காரணம் தமிழநாட்டில் அரசியல் செய்ய வேண்டியவர்களுக்கு இந்த மீனவர்களின் பிரச்சனை என்பது அள்ள அள்ள குறையாத அமுதசுரபி,  மீனவர்களுக்கு பிரச்சனை இல்லாமல் போனால் ஈழத்தை நோக்கி தேர்தல் சமயங்களில் மட்டும் எப்படி அறைகூல் விடுத்து அரசியல் நடத்த முடியும்?
                                                                   ++++++++++++++

ஈழம் தொடர்பாக இதுவரையிலும் இந்த தளத்தில் எழுதாமல் வைத்துள்ள விட்டுப்போன சில வரலாற்று உண்மைகளை விரைவில் சில தொடர் பதிவுகள் மூலம் வெளியிடுகின்றேன்.

16 comments:

ராஜ நடராஜன் said...

ஜோதிஜி!நலமா?கச்சத்தீவு பிரச்சினை அரசியல்வாதிக்கு அமுதசுரபி என்று எப்படி கூறுகிறீர்கள்? தொடரும் மீனவர் பிரச்சினைக்கு தீர்வாக கச்சத்தீவை முன்னிலைப்படுத்துகிறார்கள் என்று ஏன் எடுத்துக்கொள்ளக்கூடாது?

முதலில் இலங்கைக்காரனை இந்தியாவைப்போல் காஷ்மீருக்கான உயர் தன்னாட்சி அதிகாரத்தை வழங்கட்டும்.அப்புறம் குண்டக்க மண்டக்க என ஈழத்தை காஷ்மீருடன் இணைப்பதைப் பற்றி பேசட்டும்.

காஷ்மீரில் இந்திய ராணுவம் சார்ந்த அதிகார துஷ்பிரயோகங்கள் இருந்தாலும் கூட இலங்கை மனித உரிமை மீறல்,போர்க்குற்ற,இன அழிப்பு,தமிழர்களுக்கு சம உரிமை இல்லாமை போல் இந்தியா நடந்து கொள்ளவில்லை.காஷ்மீர் பிரச்சினையில் மூன்றாம் நாட்டின் தலையீடு கூடாது என்ற கொள்கையை இந்தியா வலியுறுத்தி வந்ததோடு பாகிஸ்தானின் தீவிரவாதம்,9/11க்குப் பின்பான உலக சூழலில் மூன்றாம் நாட்டின் தலையீடான அமெரிக்காவும் தனது நிலையை மாற்றிக்கொண்டது.

மாறாக இலங்கைப் பிரச்சினை இன்று மூன்றாவது நாட்டின் தலையீடாக மட்டுமல்லாமல் உலகநாடுகளின் தலையீடாக மாறிவிட்டது.அப்படியிருந்தும் கூட இந்தியாவின் துணை இருக்கின்ற நம்பிக்கையிலேயே இலங்கை தனது போக்கை மாற்றிக்கொள்ளாத நிலையும் கூட.இந்தியாவும் அமெரிக்க,சீனாவின் தலையீடுகளுக்குப் பயந்து கொண்டோ அல்லது வெளியுறவுக் கொள்கைகளில் தீர்க்கமான முடிவுகள் எடுக்க முடியாத பீரோகிராட்ஸ்கள் இருப்பதும் கூட ஒரு முக்கிய காரணம்.இலங்கை நட்பு நாடு,தமிழகத்தின் இலங்கை அரசுக்கான எதிர்ப்பு என்ற இரண்டு தர்மசங்கடமான கொள்கையில் சல்மான் குர்ஷித் எந்தப்பக்கம் சாய்வது என்ற குழப்பத்தில் முலாயம் சிங் யாதவ் தலைமையில் இந்திய குழுவை ஜெனிவாவிற்கு அனுப்புவதாக தற்போதைய தகவல்.

மீனவர்களின் பொருளாதாரப் பிரச்சினைகளை நன்றாக அலசியுள்ளீர்கள்.ஆனால் போருக்கு முந்தைய காலம் தொட்டு இலங்கையின் வடகிழக்குப் பகுதிக்கும்,தமிழகத்துக்கும் கடல் வழி சார்ந்த பொருட்கள் போனதும்,இப்பொழுதும் தமிழகத்திலிருந்து இலங்கைக்குப் பொருட்கள் அனுப்பும் சாத்தியங்களால் இலங்கை கடற்படையின் தலையீடுகள் இருக்ககூடும். .இதன் காரணம் கொண்டே இந்தியாவின் கண்டுகொள்ளாத போக்காக இருக்கலாம்.ஆனால் இலங்கை கடற்படையின் தொட்டதெற்கெல்லாம் துப்பாக்கிச் சூடு போக்கு கண்டனத்துக்குரியது என்பதோடு இதில் இந்தியாவின் நிலைப்பாடும் ஏனைய இலங்கை சார்ந்த வெளிநாட்டுக்கொள்கை தவறுகளின் ஒரு அங்கமாகவே தென்படுகிறது.

வவ்வால் said...

ஜோதிஜி,

ரொம்ப குழப்பமான ஒரு கட்டுரை,உண்மையில் நீங்கள் சொல்ல வருவது யாருக்கும் புரியக்கூடாதுனு இப்படி எழுதிட்டிங்களா?

கச்சத்தீவை கொடுத்தாச்சு அதை திரும்பக்கேட்பது தப்பு, கேட்டாலும் கிடைக்காது இதைத்தானே சொல்ல வறிங்க,அதை தெளிவாகவே சொல்லி இருக்கலாம், எங்கே உங்களை தப்பா நினைச்சுடுவாங்களோனு, மீனவர் வாழ்வு, மீன் பிடி, ட்ராலிங் என சுத்திக்கொண்டு இருக்கிறீர்கள்.

கச்சத்தீவை திரும்ப பெற முடியும், மத்திய அரசு மனது வைத்தால் சாத்தியம். ஏன் தமிழக அரசே கூட செய்ய முடியும் ,எப்படி என கண்டுப்பிடியுங்கள்.

இல்லை எனில் நானே பதிவாக போட்டு சொல்லிவிடுகிறேன். மனமிருந்தால் மார்க்கப்பந்து ச்சே மார்க்கமுண்டு :-))

ப.கந்தசாமி said...

படித்தேன்.

ஜோதிஜி said...

மிகப் பெரிய கட்டுரைகளை வாசிக்கு சொந்தகாரர்களான இரு பெரும் தலைகளுக்கும் என் வந்தனம்.

நன்றி ராஜ நடராஜன். என் கட்டுரையை விட உங்கள் விமர்சனம் தெளிவாக இருக்கும். திருப்தியா வவ்வு.

வவ்வு உங்கள் கட்டுரையை எதிர்பார்க்கின்றேன். கற்றுக் கொண்டால் குற்றமில்லை

ஜோதிஜி said...

இன்ப அதிர்ச்சி

அகலிக‌ன் said...

ராஜ நடராஜன்- "முதலில் இலங்கைக்காரனை இந்தியாவைப்போல் காஷ்மீருக்கான உயர் தன்னாட்சி அதிகாரத்தை வழங்கட்டும்.அப்புறம் குண்டக்க மண்டக்க என ஈழத்தை காஷ்மீருடன் இணைப்பதைப் பற்றி பேசட்டும்."

உயர் தன்னாட்சி அதிகாரம் உண்மைதான் ஆனால் சிறுபான்மையினரான இந்துக்கள் இன்றும் இலங்கைத் தமிழ்ழர்களைப்போல அகதிகளாகத்தானே இருக்கிறார்கள். பாக்கிஸ்த்தான் ஆக்கரமிப்பு பகுதிகளிலிருந்து வந்தவர்கள் இன்றும் முகாம்களில்தான் தங்குவைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. கடந்த பல வருடங்களாகவே இந்த நிலை என்பதால் அவர்கள் இருப்பது முகாம்கள் என்பதுகூட நமக்கு மறந்திருக்கலாம். ஆனால் அவர்களுக்கு இன்னும் இந்திய குடியுரிமையும் வழக்கப்படவில்ல்லை என்பதோடு அவர்கள் இருக்கும் இடத்திற்கும் வீடுகளுக்கும் அவர்கள் சொந்தம் கோரமுடியாது என்பதுதான் எதர்த்தம். மற்றபடி இலங்கைபோல் காஷ்மீரில் மனித உரிமை மீரல் போன்ற பெருங்குற்றங்கள் இல்லை என்பது ஆறுதலே. இதைப்பற்றி மேலும் விளக்கமாக வவ்வால் அவர்கள் தன் பதிலில் விளக்கக்கூடும்.அதற்காக காத்திருக்கிறேன்.

ஜோதிசார் நலமா? டாலர் நகரம் விமர்சனங்களை படிக்கவில்லை காரணம் எத்தகைய முன்முடிவுகளும் வந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான். மற்றபடி புத்தகவிற்பனை எப்படி? எனக்கான புத்தகத்திற்கு திரு சீனு என்னை தொடர்புகொள்வதாய் சொன்னார் இன்னும் இல்லை.iK way said...

அன்பின் திரு. ஜோதிஜி,

குழப்பமாக உள்ளது. கட்டுரையிலிருந்து புதிதாகவோ / சரியாகவோ ஒன்றும் இருப்பதாக புரிபடவில்லை. ஒருவேளை நான் ஏதேனும் செய்தியினை விளங்கிக்கொள்ளாமல் விட்டு இருக்கிறேனா?
மேலும், இந்த நிகழ்வுகள் மற்றும் பிரச்சினைகள் சார்ந்து தங்களது பார்வை என்ன என தெளிவாக எதையும் முன் வைக்காமல், சுற்றி வளைத்து வளவள என்று ஒரே விஷயத்தினை பல வகைப்பட்ட வாக்கியங்கள் / வாக்கிய அமைப்புகள் மூலம் கூறுவதாக தோன்றுகிறது.
இதனை புரிந்து கொள்ள மற்றும் இதற்கு ஒரு சரியான எடுத்துக்காட்டாக, நான் எழுதிய இந்த கவிதைப்பதிவு இருக்கக்கூடும்!!! :
காலநிறம் :http://www.concurrentmusingsofahumanbeing.blogspot.in/2012/09/blog-post_24.html

மேலும், தங்களிடம் / மற்றும் இந்த விஷயம் பற்றி பேசும் பலரிடமும் கேட்கலாம் என்று தோன்றும் சில சந்தேகங்கள் :

1> பெரும்பான்மையான மீனவ மக்களைக்கொண்ட கரையோர மாவட்டங்கள் ஏன் இந்த விஷயத்தில் ஒன்று பட்டு அரசியல் ரீதியாக ஒரு முடிவெடுப்பதில்லை? அதாவது ச. ம. உ மற்றும் ப. ம. உ தேர்தல்களில்.

2> பார்க்கப்போனால் மத ரீதியாகவும் ஓரளவிற்கு குறிப்பிடத்தக்க பொது அம்சம் கொண்ட மக்கள் கூடுகை கொண்ட பகுதிகளே இவை, எனில் இது ஏன் காரணிப்படுத்தப்படவில்லை?

3> எவ்வளவு காலத்திற்குத்தான், மத்தியில் உள்ள வெளியுறவு கொள்கை வகுப்பாளர்களுக்கு இந்த விஷயம் புரியவில்லை / புரிபடவில்லை என நம்பிக்கொண்டிருப்போம்? அப்படியே உண்மை எனில் அதனை மாற்ற என்ன முயற்சி எடுக்கப்பட்டது?

4> தமிழகத்திலிருந்து செல்லும் / சென்று மத்திய அரசுப்பணியில் இருக்கும் உயர்மட்ட அதிகாரிகள் அளவில் ஒரு புரிந்துணர்வினை உருவாக்க ஏதேனும் முயற்சி மேற்கொள்ளப்பட்டதா?

5> மேற்கண்டவர்களில்(4) ஒருவருக்கு கூடவா கடற்கரையோர மீனவர்களின் பிரச்சினைகள் பிடிபடாது?
இவர்களில் யாருக்குமே கூடவா முதல் தலைமுறை அரசுப்பணியாகவும், தாய் தந்தை, மாமன், மச்சான், உடன்பிறந்தோர், சொந்தம் பந்தம் இந்த தொழிலில் உள்ளோர் என்பதாகவும் இருக்காது?

6> தமிழகத்தில் சாதி ரீதியாக பொதுவில் தூற்றப்படும் சமுகத்தைச் சேர்ந்த, திரு. பார்த்தசாரதி காலத்தில் தான் ஓரளவிற்கு (ஒப்புநோக்கும் அளவில்) சரியான நிகழ்வுகள் நோக்கி நகர்ந்ததாக தோன்றுகிறது. இது பற்றிய உங்களின் பார்வை?

7> ஏன் எப்போதும் கட்டு மர / சாதாரண நாட்டுப்படகு / சிறு எந்திர விசைப்படகு மீனவர்கள் மட்டுமே இலங்கை கடற்படையினரால் தாக்குதலுக்குள்ளாகி பாதிக்கப்படுகின்றனர்? ஒருமுறை கூட பன்னாட்டு, பெரும் படகிலுள்ளோர் இது போன்று தங்களுக்கு நேர்ந்ததாக முறையிடுவதில்லை??!! இதில் ஏதோ இரகசியம் உள்ளடங்கியிருப்பதாக தோன்றவில்லையா?

மேலும் பல பரிமாண கேள்விகள், பல கோணங்களில் கேட்கப்படவேண்டும்.

http://www.concurrentmusingsofahumanbeing.blogspot.com/

வவ்வால் said...

ஜோதிஜி,

நன்றி!

நம்ம கட்டுரை தெளிவா இருக்குமா அவ்வ்!

நான் சொன்னது நீங்களே கட்சத்தீவை மீட்பது சாத்தியமில்லை, கையை சுட்டுக்கும் என்றெல்லாம் சொல்வதை தான், நீங்க சொன்ன மற்றவிவரங்கள் ,உண்மையான கருத்தினை "கவர் செய்துவிடுகிறது" :-))

கொள்கை அளவில் என்பார்களே அப்படியாவது கட்சத்தீவு மீட்பது பற்றி சாதகமாக பேசுவீர்கள் என நினைத்தேன் ,அதற்கு மாறாக இருக்கவே தான் அப்படி சொன்னேன்.

கொள்கையளவில் தற்போது சாத்தியமே, ஆனால் மைய அரசு எப்பொழுதும் எதிராகவே செயல்ப்படும் என்பதால், ஒரு பைபாஸ் ரூட் கண்டுப்பிடித்து ,தடுப்பார்கள் என்பதே நிதர்சனம் :-))
-----------------

அகலிகன்,

நம்ம பதிவை நீங்களாம் எதிர்ப்பார்ப்பதைப்பார்த்தால் கவனமாக எழுதனும் போல இருக்கே ...அவ்வ்!

//உயர் தன்னாட்சி அதிகாரம் உண்மைதான் ஆனால் சிறுபான்மையினரான இந்துக்கள் இன்றும் இலங்கைத் தமிழ்ழர்களைப்போல அகதிகளாகத்தானே இருக்கிறார்கள். பாக்கிஸ்த்தான் ஆக்கரமிப்பு பகுதிகளிலிருந்து வந்தவர்கள் இன்றும் முகாம்களில்தான் தங்குவைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. கடந்த பல வருடங்களாகவே இந்த நிலை என்பதால் அவர்கள் இருப்பது முகாம்கள் என்பதுகூட நமக்கு மறந்திருக்கலாம். ஆனால் அவர்களுக்கு இன்னும் இந்திய குடியுரிமையும் வழக்கப்படவில்ல்லை என்பதோடு அவர்கள் இருக்கும் இடத்திற்கும் வீடுகளுக்கும் அவர்கள் சொந்தம் கோரமுடியாது என்பதுதான் எதர்த்தம்//

இக்கருத்து காஷ்மீரில் இருந்து வெளியேற்றப்பட்ட இந்துக்கள் பற்றியதா?

அல்லது இலங்கை தமிழர்கள் பற்றியதா?

எனக்கு காஷ்மீரில் இருந்து வெளியேறியவர்கள் பற்றி சொன்னதாக தெரிகிறது. அப்படி எனில் முற்றிலும் தவறு.

அவர்கள் ஆரம்பத்தில் வேண்டுமானால் அகதிகள் முகாம்களில் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டிருக்கலாம், அதன் பின்னர் இந்தியா முழுக்க எங்கும் செல்லலாம்,படிக்கலாம்,அரசு வேலையில் சேரலாம், ஏன் வெளிநாட்டுக்கும் செல்லலாம்.

காஷ்மீரி பண்டிட் வகையினர் யு.கேவில் உள்ளார்கள்,அவர்களுக்கு என வலை தளமும் உள்ளது.

மேலும் நேரு குடும்பம்,முன்னாள் உட்ச நீதிமன்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு, இந்தி சினிமா நடிகர் அனுப்ம் கேர், என பலப்பிரபலங்களும் காஷ்மீர் பண்டிட்களே, அவர்கள் அங்கு இருந்து முன்னரே வெளியில் வந்திருக்கலாம்.

இன்னும் பலர் அரசு பணி,வெளியுறவுத்துறை என்றெல்லாம் இருக்கிறார்கள்,நானும் சிலரை சந்தித்துள்ளேன்.

ஆனால் இலங்கையில் இருந்து 80களில் வந்தவர்கள் நிலைமை அப்படியேத்தான் இருக்கு ,ஒரு தலைமுறையே முகாம்களில் உருவாகி இருக்கு. முகாம் என்பது சற்றே சுதந்திரமான சிறைச்சாலை அவ்வளவே.

நான் சுருக்கமாக கட்சத்தீவு பற்றி எழுதலாம் என நினைத்தேன், நிறைய எழுத வேண்டி வருமோனு தோனுது.

ஜோதிஜி said...

கொள்கையளவில் தற்போது சாத்தியமே, ஆனால் மைய அரசு எப்பொழுதும் எதிராகவே செயல்ப்படும் என்பதால், ஒரு பைபாஸ் ரூட் கண்டுப்பிடித்து ,தடுப்பார்கள் என்பதே நிதர்சனம் :-))


இன்று மூத்த மகளிடம் அவளின் லட்சத்தியத்திற்கான பின்னால் உழைக்க வேண்டிய விசயங்களைப் பற்றி பேசிக் கொண்டிருந்த போது நீ ஏன் வெளியுறவுத்துறை ஐ எஃப் எஸ் படிக்க முயற்சிக்கக்கூடாது? என்றேன். எதற்காக என்றேன்? நான் இந்த பதிவை இறுதி வடிவமாக ஒரு மதிய இடைவெளியில் செப்பனிட்டுக் கொண்டிருந்த போது அவரும் என் ( பள்ளி விடுமுறை) அருகே இருந்து படித்துக் கொண்டிருந்தார். முழுமையான விபரங்கள் சொல்லாமல் ஈழம் சார்ந்த சில விபரங்களைச் சொன்னேன். அப்போது அவர் சொன்னது

நாம் நினைப்பதை அரசாங்கம் செய்ய விடாதுப்பா என்றார்.

உங்கள் கருத்தும் அஃதே. பத்து வயது ஞானம் என்னை திகைப்பில் ஆழ்த்தியது.

ஜோதிஜி said...

1> பெரும்பான்மையான மீனவ மக்களைக்கொண்ட கரையோர மாவட்டங்கள் ஏன் இந்த விஷயத்தில் ஒன்று பட்டு அரசியல் ரீதியாக ஒரு முடிவெடுப்பதில்லை? அதாவது ச. ம. உ மற்றும் ப. ம. உ தேர்தல்களில்.

பல பதிவுகளில் இதையே தான் நான் கேள்வி எழுப்பிக் கொண்டு இருக்கேன் நண்பா.

ஜோதிஜி said...

சீனுவிடம் பேசுகின்றேன்.

அகலிக‌ன் said...

வவ்வால் - "எனக்கு காஷ்மீரில் இருந்து வெளியேறியவர்கள் பற்றி சொன்னதாக தெரிகிறது. அப்படி எனில் முற்றிலும் தவறு.

அவர்கள் ஆரம்பத்தில் வேண்டுமானால் அகதிகள் முகாம்களில் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டிருக்கலாம், அதன் பின்னர் இந்தியா முழுக்க எங்கும் செல்லலாம்,படிக்கலாம்,அரசு வேலையில் சேரலாம், ஏன் வெளிநாட்டுக்கும் செல்லலாம்."

பாக்கிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியிலிருந்து ஜம்முவிற்கு குடியேறியவர்களுக்கு இன்றும் குடியுர்மை வழங்கப்படவில்லை. பாக்கிஸ்தான் ஆக்ரமித்துவைத்திருக்கும் பகுதிகளையும் இந்தியா இன்னும் நம்முடையது என்றே சொல்லிவருவதாலும் நம்வரைபடதில் அது இன்னும் இடம் பெற்றிருப்பதாலும் அங்கிருந்து வந்தவர்களுக்கு தனியாக குடியுரிமை வழங்கினால் பாக்கிஸ்தான் ஆக்கரமிப்பு பகுதியின்மேல் நாம் கோரும் உரிமை கேள்விக்குறியாகிவிடும் என்பதால் அரசு அவர்களுக்கு குடியுரிமை வழங்காமல் உள்ளது.மற்றபடி நீங்கள் கூறும் பிரபலங்க்கள் பிரிவினையின்போதே வெளிவந்திருக்கலாம். மேலும் இவ்விஷயங்கள் அவ்வப்போது அங்கங்கே படித்ததும் கேள்விப்பட்டதும்தான் முழுமையான நிலையை தெரிந்துகொள்ளவே தங்கள் பதிவை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.

வவ்வால் said...

ஜோதிஜி,

பத்துவயசில ஞானமா,அபாரம், அதை விட அருமை 10 வயசுக்குழந்தையுடன் கூட உலக அரசியல் எல்லாம் பேசி இருக்கீங்களே !!!

நீங்க தான் குருவா? கண்டிப்பாக விரும்பிய துறையில் பெரிய ஆளா வருவாங்க,ஆனால் திணிக்காமல் விருப்பத்தை ஏற்படுத்துங்க போதும்.

இதில் கவனிக்க வேண்டியது என்னவெனில் நாம தெளிவு பெற இத்தனை ஆண்டு தேவைப்படுது,ஆனால் 10 வயதில் தெளிவு பெறுகிறார்கள் இக்காலக்குழந்தைகள். எனவே நாம எல்லாம் ரொம்ப தெரிஞ்சா போல ஆட்டம் போடக்கூடாதுனு புரியுது.ஹி...ஹி என் மூளை வளர்ச்சி இக்கால 10 வயசுக்குழந்தை அளவுக்கு தான் :-))

ஜோதிஜி said...

நீங்க வேற ஆப்பு ஒவ்வொரு முறையும் எனக்குத் தான் பலமாக சொருக்கப்படுது என்பதையும் நீங்க கவனத்தில் வைத்திருக்க வேண்டும். எந்த தப்பும் செய்ய முடியல. நீங்க மட்டும் இதை செய்யலாமா? என்று அடுத்து படாரென்று ஒரு கேள்வி வந்து விழ?

பாதி பழக்கங்கள் போயே போயிந்தே.

அத்தனைக்கும் ஆசைப்படாதே. இது தான் கடைசியில் கிடைக்கப் போகும் பரிசு போல.

நம் தோளில் நின்று உலகைப் பார்ப்பதால் கொஞ்சம் வித்தியாசம் தெரிகின்றது. மற்றபடி புத்திசாலி என்பதெல்லாம் இல்லை என்பது என் கருத்து. பத்தாம் வகுப்பு படிக்கும் போது தான் உண்மையான நிலவரம் மொழி அறிவு, சமூக அறிவு, உள்வாங்கல், அக்கறை சார்ந்த உணர்வு, குடும்ப பாசம் போன்றவற்றின் உண்மை நிலவரம் நமக்கு தெரிய வரும்.

நான் கணித்து வைத்துள்ள விடயங்கள் இது.

கொடஞ்சு கொடஞ்சு எழுதுற நீங்க பத்து வயது பையன்னா நான் பத்து மாச கரு.

Anonymous said...
அன்புள்ள ஜோதிஜி,

இது விஷயம் குறித்து எனக்கு சில கருத்துக்கள்
இருக்கின்றன. ஆனால், அவற்றை இங்கே
கூறுவது சரியாக இருக்காது.
எனவே, "விமரிசனம்" வலைத்தளத்தில்
ஒரு தனி கட்டுரையாகவே எழுதுகிறேன்.

உங்கள் உழைப்பிற்கு என் பாராட்டுக்கள்.

-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்

Rathnavel Natarajan said...

தமிழ்நாட்டு அரசியல்வாதிகளுக்கு ஈழமென்பது கடந்த 30 ஆண்டுகளாக விளம்பரத்தை தேடி தரக்கூடிய செய்தி. இங்குள்ள ஒவ்வொரு கட்சிகளும் தனித்தனியாக அறிக்கைகள், பேட்டி ,தீர்மானங்கள் என்று மாறி மாறி லாவணி கச்சேரியாக மாற்றி இது விக்ரமாதித்தன் சொல்ல முடியாத விடையாகத் தான் ஈழத்தீவின் பிரச்சனையும் தமிழ்நாட்டு மீனவர்களின் பிரச்சனையும் இருக்கிறது,

அருமையான பதிவு. நன்றி.