Thursday, March 21, 2013

இன்று இரவு தரப் போகும் பாடங்கள்தமிழ்நாட்டில் நடந்த ஹிந்தி (1965) எதிர்ப்பு போராட்டத்திற்குப் பிறகு தற்போது ஈழம் குறித்த போராட்டத்தில் மாணவர்களின் போராட்டம் தமிழ்நாடு முழுக்க முதன் முறையாக பரவி அதன் வெப்பம் மாநிலம் கடந்தும் சென்று கொண்டு இருக்கிறது. இதன் முடிவு எப்படி இருக்கும் என்பதை விட களப் போராட்டத்தில் தற்போதைய இளைஞர்கள் ஈடுபட்டால் அதன் தாக்கம் எப்படியிருக்கும் என்பதை இது வரையிலும் ஈழத்தை வைத்து அரசியல் செய்து வாக்குகளாக மாற்றிக் கொண்டவர்களுக்கு புரிந்திருக்கும். 

அத்தனை பேர்களின் மனதிலும் கிலியடித்து போயிருக்கும். . 

ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் போராடிக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கு ஆதரவு கொடுக்கின்றோம் என்ற பெயரில் நான் முந்திக்கிறேன் என்று வரிசைக்கிரமமாக வந்து கொண்டு இருக்க நீ உள்ளே வராதே என்ற துரத்தலும் நடந்தது. 

போராட்டங்கள் தொடங்கிய போதிலிருந்து தினந்தோறும் செய்தித் தாளில் அந்த செய்தி வந்துள்ளதா? என்று ஆவலுடன் கவனித்துக் கொண்டே வந்தேன். எப்போதும் இது போன்ற போராட்டங்கள் தொடங்கும் போது ஒரு கண்ணாடி போட்ட புறா ஓலையை தூக்கிக் கொண்டு டெல்லியிலிருந்து வரும். ஆனால் இந்த முறை இடது வலம் என்று வேறு இரண்டு புறாக்களையும் கூட்டிக் கொண்டு கோபாலபுரம் சென்றது.  ஆடிக்காத்தில் அம்மியே பறக்கும் போது கோபாலபுரம் நாடாளுமன்றத் தேர்தலை கணக்கில் வைத்துக் கொண்டு வந்த புறாக்களை தவிக்க விட இப்போது தமிழ்நாட்டின் அரசியல் களம் மாணவர்களின் ஈழம் சார்ந்த போராட்டத்தால் தகித்துக் கொண்டிருக்கின்றது.

ஏற்கனவே பல போராட்டங்கள் தமிழ்நாட்டில் ஈழத்திற்காக நடந்துள்ளது. ஆனால் தற்போது நிலவரமே வேறு. தார் கொதிப்பது போல தமிழ்நாட்டில் ஈழப்பிரச்சனை கொதித்துக் கொண்டிருக்கின்றது. கையை வைத்தால் சுடுவதை விட விரலே இல்லாமல் போய் விடுமென்ற ஆபத்தை ஒவ்வொருவரும் உணர்ந்தே வைத்துள்ளனர். அவரவர் நிலையில் நாங்கள் ஈழ மக்களின் ஆதரவாளன் என்ற போர்வையில் முடிந்த வரைக்கும் அரசியல் செய்து கொண்டு(ம்) இருக்கின்றனர். 

இன்று வரையிலும் என்னை சந்திக்கும் எவரும் விடுதலைப்புலிகள் பற்றி அதிகம் எழுதியவர் நீங்க தானே? என்ற அறிமுகத்தோடு தான் பேசத் தொடங்குகின்றனர். அப்போதுருந்து உங்கள் எழுத்துக்களை படித்துக் கொண்டு வருகின்றனர் என்கின்றனர்.

ஈழம் சார்ந்த அநேக விசயங்களை எழுதியுள்ளேன். பலருக்கும் சென்று சேர்ந்துள்ளது என்கிற வரைக்கும் என் உழைப்பு வீணாகவில்லை.

எனது தொழில் வாழ்க்கையின் உச்சக்கட்ட துயரத்தில் இருந்த போது இந்த ஈழம் குறித்து ஆராயத் தொடங்கினேன். இரண்டு வருடங்கள் ஈழத்தைப் பற்றி, வேலுப்பிள்ளை பிரபாகரன் பற்றிய தேடல்களை இருந்து கொண்டே இருந்தது. முடிவில்லா பயணம் போல போய்க் கொண்டேயிருந்து. சில சமயம் மனமே பேதலித்துப் போய்விடும் அளவுக்கு மனமாற்றம் உள்ளே உருவாகிக் கொண்டேயிருந்தது. ஆனாலும் முழுமையாக இல்லாவிட்டாலும் கூட முடிந்தவரைக்கும் இலங்கையின் சர்வதேச அரசியல் பின்புலம் வரைக்கும் அத்தனை விசயங்களையும் இந்த தளத்தில் பதிவு செய்துள்ளேன்.

இப்போது வெளிவந்துள்ள என்னுடைய முதல் படைப்பான டாலர் நகரம் என்ற நூலுக்கு முன்பு இந்த ஈழம் குறித்த புத்தகத்தை கொண்டு வர வேண்டும் என்று முயற்சித்த போது இரண்டு பதிப்பகங்கள் பயந்து கொண்டு ஒதுங்கி விட்டன. என்னுடைய நோக்கம் நான் படித்த நூற்றுக்கும் மேற்பட்ட புத்தகங்களின் மொத்த தொகுப்பாக, சாறு போல அத்தனையும் கலந்துகட்டி படிப்பவனுக்கு ஒரு புரிதல் உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் எழுதியிருந்தேன்.  குறிப்பாக எளிய நடையில் படிப்பவனை இழுத்துக் கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் என்னுடைய அத்தனை உழைப்பையும் அதில் காட்டியிருந்தேன். 

மூன்று வருடங்களுக்கு முன்பு உழைத்த அந்த உழைப்பு இன்று வரையிலும் உறங்கிக் கொண்டு தான் இருக்கின்றது. நான் கவலைப்படவில்லை.  காரணம் ஈழத்தை வைத்து அரசியல் செய்து வாழ்க்கையில் வசதிகளை தேடிக் கொண்டவர்கள், கற்பனைகளோடு சுவராசியம் என்ற போர்வையில் புனைவுகளை அவிழ்த்து விட்ட எழுத்தாளர்கள் என்று ஏராளமான நபர்களைப் பற்றி உணர்ந்து கொண்டதால் அமைதியாகவே இருந்து விட்டேன்.

இந்த சமயத்தில் இலங்கையின் அடிப்படை விசயங்களை எனது தளத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று எண்ணம் தோன்றியதால் நான் எழுதி வைத்துள்ள முதல் 26 அத்தியாங்களை அடுத்தடுத்து இங்கே பதிவு செய்ய விரும்புகின்றேன். ஆதாரமான புத்தகங்களை கடைசி அத்தியாயத்தின் கடைசியில் எழுதுகின்றேன். 

கடந்த ஐந்து ஆண்டுகளில் நான் அதிகம் படித்த புத்தகங்கள் ஈழம் சம்மந்தப்பட்ட புத்தகங்களே. இந்த தளத்தில் எழுதியுள்ள இலங்கை குறித்த விபரங்கள், இலங்கையின் சரித்திரம், போருக்கு முந்திய காலங்கள், போர் நடந்து முடிந்து பிறகு உருவான சர்வதேச ஒப்பந்தங்கள், ஈழத்தை வைத்து நடந்து கொண்டிருக்கும் சர்வதேச அரசியல் என்று ஒவ்வொன்றயும் உள்வாங்க என்னுள் இருந்த உணர்ச்சிகள் ஒவ்வொன்றாக கழன்று போய் இன்று வேடிக்கை பார்க்கும் மனோநிலையில் இருக்கின்றேன்.

டாலர் நகரம் புத்தகத்தில் என்னுரையில் இதைப்பற்றித்தான் முக்கியமாக குறிப்பிட்டுள்ளேன். காரணம் என்னுடைய ஈழத் தேடலின் விளைவாக உருவான புத்தக வடிவம் என்பது இன்றும் என் மடிக்கணினியில் அப்படியே உறங்கிக் கொண்டு இருக்கின்றது. 

ஏறக்குறைய புத்தக வடிவில் 600 பக்கங்கள் வரக்கூடிய ஈழ வரலாறு என்னைப் பொறுத்தவரையில் மிக முக்கியமானதாகும்.  

காரணம் நான் படித்த ஏராளமான புத்தகங்கள் எல்லாமே ஒவ்வொரு விசயத்தைப் பற்றி அவரவர் பார்வையில் தனித்தனியாக எழுதி உள்ளனர்.  ஆனால் ஈழம் குறித்து ஒருவர் படிக்கத் தொடங்கினால் இலங்கை என்ற தீவு எப்படி உருவானது முதல் படிப்படியான ஒவ்வொன்றையும் படிப்பவர்களுக்கு எளிதான நடையில் எவரும் தந்ததில்லை. 

சிலர் முனைவர் கட்டுரைகள் போல எழுதியுள்ளனர். சிலர் காசாக்கும் அவசரத்தில் கற்பனையை அள்ளித் தெளித்துள்ளனர்.

டாலர் நகரம் புத்தகத்தை படித்த தமிழ்மணம் திரட்டியை உருவாக்கிய திரு. காசி ஆறுமுகம் சொல்லியுள்ள ஒரு வாசகம் மிக முக்கியமானது.  

பஞ்சு, நூலுக்குப் பின்னால் உள்ள சர்வதேச அரசியலைப் பற்றி சுவராசியமான நடையில் அதே சமயத்தில் படிக்க வைக்க வேண்டும் என்பதற்தாக தேவையற்ற எந்த விசயத்தையும் ஜோதிஜி கொண்டு வராமல் புலிப்பாய்ச்சல் காட்டி ஆச்சரியப்படுத்தியுள்ளார் என்று எழுதி இருந்தார்.  

இயல்பான என் எழுத்துநடை, சம்பவங்களை கோர்க்கும் விதம் என்ற அரிச்சுவடி விசயங்களை இந்த ஈழம் சார்ந்த ஆர்வத்தின் மூலமே தொடங்கினேன்.  

அடுத்து வரும் பதிவில் இருந்து இந்த தொகுப்பில் உள்ள முதல் பகுதியை இந்த தளத்தில் கொண்டு வருகின்றேன்.  ஆதரவு அளிக்க வேண்டுகின்றேன். 

காரணம் இது அடிப்படையான விசயங்கள். நீங்கள் எங்கேயும் படித்து இருக்க முடியாது. படித்து இருந்தாலும் துண்டு துக்கடா போல அங்கங்கே துணுக்குச் செய்திகள் போல படித்து கடந்து வந்துருபபீர்கள்.  நிச்சயம் இந்த ஆதாரத் தகவல்களை இந்த சமயத்தில் இங்கே கொடுப்பது சரியானதாக இருக்கும் என்று நம்புகின்றேன்.  சில சம்பவங்களை பழைய விசயங்களாக இருக்கும்.  தற்போது அதன் தாக்கம் என்பது சற்று மாறி இருக்கும். நான் எதையும் திருத்தும் மனோநிலையில் இப்போது இல்லை. மீண்டும் இதற்குள் நுழைந்தால் மறுபடியும் உணர்ச்சி வசப்பட்ட மனிதனாக மாறிவிடுவேனோ என்று அச்சமும் என்னுள் இருப்பதால் அப்படியே வெளியிடுகின்றேன். 

இன்றைய தினத்தில் இதை இங்கே தொடங்க காரணம் என்று நீங்கள் கேட்பீர்களேயானால் இன்று இரவு ஜெனிவாவில் நடக்க உள்ள கூட்டத்திற்குப் பிறகு உங்களுக்கு வரும் தகவல்களின் அடிப்படையில் உலகம் முழுக்க இருக்கும் மனிதர்களிடத்தில் அவரவர் உடம்பில் இதயம் இருக்கும் இடத்தில் இரும்புக்குண்டுகளை வைத்துக் கொண்டு எத்தனை பேர்கள் இந்த உலகத்தில் நடமாடிக் கொண்டு இருக்கின்றார்கள்? என்பதை உணர வாய்ப்பாக இருக்கும்.

17 comments:

அகலிக‌ன் said...

மாணவர் எழுச்சி இதுவரை மௌனம்காத்த மனங்க்களை கூனிக்குறுக வைத்துள்ளது. இதில் பொதுமக்களூம் அடக்கம். மாணவர்களால் துரத்தப்பட்ட அரசியல்வாதிகள் மக்களாலும் துரத்தபடக்கூடும் என்ற உண்மை உறைத்ததினால்தான் கூட்டணிவிலகல். ஜெனிவா தீர்மானம் அமெரிக்க ராட்சசனின் அகோரபசிக்கு அடுத்த மெனுமட்டுமே.இதை உணர்ந்ததால்தான் மாணவர்கள் ஜெனிவாதீர்மாணத்தை மதிக்கவில்லை.
அதேசமயம் தங்கள் போராட்டத்தின் அடுத்தகட்டமாக அமெரிக்க பொருட்களை புரக்கணிப்போம் என்றும் அறிவித்துள்ளனர். இன்நிலையில் உங்கள் தொடர் மக்களை மேலும் விழிப்படையசெய்தால் மகிழ்ச்சியே.

Anonymous said...

ஈழமே உங்களை நம்பி இருக்கு தலைவா. கைவிட்டுடாதீங்க.

Anonymous said...

//மாணவர்களால் துரத்தப்பட்ட அரசியல்வாதிகள் மக்களாலும் துரத்தபடக்கூடும் என்ற உண்மை உறைத்ததினால்தான் கூட்டணிவிலகல். //

http://viruvirupu.com/2013/03/20/50402/

'பசி'பரமசிவம் said...

மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கிறேன்.

என் ஆதரவு என்றும் தங்களுக்கு உண்டு.

எழுதுங்கள்.

ஜோதிஜி said...

உங்க கையில பொறுப்பை கொடுத்துறேன்.

ஜீவன் சுப்பு said...

//ஏற்கனவே பல போராட்டங்கள் தமிழ்நாட்டில் ஈழத்திற்காக நடந்துள்ளது. ஆனால் தற்போது நிலவரமே வேறு. தார் கொதிப்பது போல தமிழ்நாட்டில் ஈழப்பிரச்சனை கொதித்துக் கொண்டிருக்கின்றது. கையை வைத்தால் சுடுவதை விட விரலே இல்லாமல் போய் விடுமென்ற ஆபத்தை ஒவ்வொருவரும் உணர்ந்தே வைத்துள்ளனர். அவரவர் நிலையில் நாங்கள் ஈழ மக்களின் ஆதரவாளன் என்ற போர்வையில் முடிந்த வரைக்கும் அரசியல் செய்து கொண்டு(ம்) இருக்கின்றனர். // எல்லாமே அரசியல் ..!

ezhil said...

உங்களின் பதிவுகள் அவ்வளவாகப் படித்ததில்லை... இனி படிக்கிறேன் ...ஈழச் செய்திகள் முன் பதிவுகளில் இருப்பின் தேடிப் படிக்கிறேன். நன்றி

ஜோதிஜி said...

இந்த பதிவில் இணைப்பு கொடுக்க மறந்து விட்டேன். அடுத்த பதிவில் தருகின்றேன் எழில். நன்றி.

'பரிவை' சே.குமார் said...

நம்பிக்கையோடு இருப்போம் அண்ணா...

விரைவில் உங்கள் புத்தகம் வெளிவரட்டும்....

ஜோதிஜி said...

எல்லாமே வணிக ரீதியான எண்ணங்களாக மாறிப் போன உலகில் மாறுதல்கள் நடப்பது என்பது நமது ஏக்கமாகத்தான் இனி இருக்கும்.

ஜோதிஜி said...

அந்த நாள் எந்நாளோ?

ஜோதிஜி said...

நன்றி பரமசிவம்

ஜோதிஜி said...

நேற்று உங்க தளத்தில் வந்து பார்த்தேன். நிறைய எழுதியிருக்கீங்க. விமர்சனம் போட்ட போது அடம் பிடிக்க வெளியே வந்து விட்டது. மீண்டும் வர வேண்டும். வருவேன். நன்றி சுப்பு

arul said...

waiting for your book

Anonymous said...

http://viruvirupu.com/category/7-eelam-war/

ஜோதிஜி said...

இதற்கும் நான் எழுதப் போவதற்கும் சம்மந்தம் இல்லை.

ஜோதிஜி said...

குமார் எழில் அந்த எண்ணம் என்னிடம் இல்லை.