Showing posts with label தமிழ்மணம் விருதுகள் 2010. Show all posts
Showing posts with label தமிழ்மணம் விருதுகள் 2010. Show all posts

Saturday, January 15, 2011

தமிழ்மணம் விருதுகள் 2010 வெளியேறும் நேரமிது.

சென்ற ஆண்டு (2009) தமிழ்மணம் அறிவித்த விருதுகளுக்காக என்னை நண்பர் அழைத்து எனக்கு இதை புரியவைத்தார். எப்போதும் போல அவர் சொன்னபடியே சேர்த்துவிட்டு மறந்து போய்விட்டேன். ஆனால் தேர்வு நிலைக்கு வரவில்லை. அப்போது உள்ளடி வேலைகளும் இருந்தது என்பதை அதன் பிறகு பலரும் புரியவைத்தார்கள்.  ஆனால் இந்த முறை தமிழ்மணம் பெரும்பாலும் அது போன்ற உள்ளடி வேலைகளை அடக்கி ஒடுக்கியதோடு மட்டுமல்லாமல் சமீபத்தில் உண்மைத்தமிழன் போட்ட கூப்பாட்டில் தமிழ்மணத்தில் ஓட்டுப் போட நினைக்கும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு முறையும் கதவைத் தட்டி உள்ளே வரலாமா? என்கிற நிலை வரைக்கும் கொண்டு வந்துள்ளது.

இந்த முறை இதில் நிச்சயம் ஜெயிக்க வேண்டும் என்று ஆர்வத்துடன் யோசித்த போது என் மனதில் வந்து போனவர்கள் ஐந்து பேர்கள்.  வலைபதிவில் வெவ்வேறு பரிணாமத்தில் தங்கள் பங்களிப்பைச் செய்து கொண்டுருப்பவர்கள்.  

எனக்கு இடுகையில் உள்ள தொழில் நுட்ப அறிவு குறித்து எப்போதும் ஆர்வம் இருப்பதில்லை. இன்றைய தினத்தில் ஓரளவிற்கு இதன் தொழில் நுட்பத்தை உருண்டு புரண்டு கற்றுக் கொண்டாலும் பலரின் தளங்களைப் பார்க்கும் போது எனக்கு வியப்பாகவே இருக்கிறது. ஆனால் என்னுடைய ஓய்வு நேரங்களில் எழுதுவதைத் தவிர வேறெதிலும் நான் கவனம் செலுத்துவதில்லை. 

காரணம் "நம்மால் எது முடியுமோ அதில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும்"  என்பதை நான் இருக்கும் ஏற்றுமதி தொழில் வாழ்க்கையைப் போலவே இந்த வலையுலகத்திலும் கொள்கையாகவே வைத்துள்ளேன். இங்கு மற்றொரு பிரச்சனையும் உண்டு.

அதிவேக இணைப்பை சமீபத்தில் பிஎஸ்என்எல் ல் கேட்டு வாங்கிய போதும் கூட வீட்டில் உள்ள இணையத்தொடர்புக்கு அடிக்கடி சளி காய்ச்சல் இருமல் தொந்தரவு இயல்பாக வந்து விடுகின்றது. ஏர்டெல் போன்ற கொள்ளை கொலைகார கூட்டத்திடம் போய் மாட்டிக் கொள்வதை விட அரசாங்கம் எவ்வளவோ பரவாயில்லை. இதன் காரணமாகவே எனக்கு வலையுலக நகர்வலம் குறைவாகவே இருக்கிறது.

இந்த போட்டிக்கு எப்படி கலந்து கொள்ள வேண்டும்?  என்பதை நான் தேர்ந்தெடுத்த ஐந்து பேர்களிடமும் கேட்ட போது மூன்று பேர்கள் தங்கள் அறிவுரையைச் சொன்னார்கள்.  ஒருவர் வீடுவரை வந்து ஒரு விருதைக் கொடுத்து விட்டு வேறெதும் என்னிடம் கேட்காதே!!!!! என்பது போல் நகர்ந்து போய்விட்டார். ஒருவர் இப்போது பின்னூட்டம் கூட அதிகம் போடுவதில்லை. காரணம் அவரின் வேலைப்பளூவை நான் புரிந்தே வைத்திருக்கின்றேன். ஆனாலும் அவரும் சில புரிந்துணர்வுகளை தெரியப்படுத்தினார். 

கூட்டிக் கழித்துப் பார்த்தபோது கடைசியாக ஒருவர் கொடுத்த அறிவுரையை கரம் சிரம் புறம் பார்க்காமல் அவர் சொன்னபடியே மூன்று தலைப்புகளையும் சேர்த்துவிட்டு ஒதுங்கி விட்டேன்.  காரணம் அவரின் ஆளுமையை நான் அறிந்ததே. இப்போது வெற்றியும் கிடைத்துள்ளது.



இரண்டு தலைப்புகளுக்கும் இரண்டாவது பரிசு கிடைத்துள்ளது. இதில் ஒரு ஆச்சரியம்?  

எங்க ஊரு காரவுக சுடுதண்ணி. ஒன்னுமன்னா பழகிறவுக நம்ம செந்திலாண்டவர். (அவருக்கு இந்த வார்த்தை பிடிக்காது?)  இரண்டு பேருக்கிட்டத் தான் தோத்துருக்கேன். சுடுதண்ணி திடீர்ன்னு வருவாக. ஒரு சுனாமிய உருவாக்கிட்டு போயிடுவாக.  ஆனா நம்ம செந்திலாண்டவரை நான் சக போட்டியாளராக மனதில் வைத்துக் கொண்டு வேறொரு சமயத்தில் அவரை முந்த வேண்டும் என்று சமயத்தை எதிர்பார்த்து காத்துக் கொண்டுருக்கின்றேன்.  அதற்கான வாய்ப்பு விரைவில் வரும் போல தெரியுது. தமிழ் வலையுலகத்தில் சிறப்பான வீச்சை உருவாக்கிய செந்திலின் "எங்கே செல்லும் பாதை"  தளம் குறித்து எப்போதும் எனக்கொரு கர்வமான பொறாமை மற்றும் பெருமையுண்டு.

உங்களுக்கு நிச்சயம் வெற்றி கிடைக்கும் என்றவர்களுக்கும், வாழ்த்துரைத்தவர்களுக்கும், இந்த தலைப்பை வழிமொழிந்தவர்களுக்கும், மின் அஞ்சல் வாயிலாக என்னுடன் முன்பின் அறிமுகம் இல்லாத போதும் ஒவ்வொரு சமயத்திலும் இது குறித்து தெரிவித்த நல் இதயங்களுக்கும் தேவியர் இல்லத்தின் நன்றி. 

நான் கவனித்த வரையிலும் விதி ராஜீவ் மதி பிரபாகரன் என்ற தலைப்பு தினந்தோறும் எவரோ சிலர் வந்து படித்துக் கொண்டுருந்தார்கள். சற்று நம்பிக்கை இருந்தது.  இந்த சமயத்தில் இந்த விசயங்களை எழுத உதவிய முன்னாள் புலனாய்வு அதிகாரி டி.ஆர்.கார்த்திகேயன் அவர்களுக்கு நன்றி என்ற வார்த்தையை எழுதி வைக்கின்றேன்.  அவர் எழுதிய புத்தக அறிவை வைத்துக் கொண்டு வெகு ஜன ஊடகத்தில் வந்த தகவல்களை திரட்டி மொத்தமாக எழுதிப் பார்த்த (தொடர்) தலைப்பு இது. 

திருப்பூர் குறித்து நான் எழுதிய விசயங்கள் அத்தனையும் இன்று உண்மையாக நடந்து கொண்டுருக்கிறது.  ஆனால் இன்னமும் எவரும் இதன் விபரீதத்தை உணராமல் ஆட்சியாளர்களின் அயோக்கியதனத்தை எவரும் எதிர்க்கத் தயாராக இல்லை என்பது தான் இன்றைய எதார்த்த உண்மை.

இதுவொரு வெற்றி என்று கருத முடியவில்லை. ஒரு அங்கீகாரம் அல்லது என்னை சரியான முறையில் மற்றவர்களுக்கு உணர்த்தியுள்ளேன் என்பதாக எடுத்துக் கொள்கின்றேன். 

எழுதுபவனுக்கு தன் எழுத்துக்களை கொண்டு சேர்ப்பதும் முக்கியம். அதற்காக எந்த லாபி வட்டத்தையும் நான் உருவாக்கவில்லை.  உருவாக்கவிரும்புவதும் இல்லை. உணர்ச்சி, உணர்வு இந்த இரண்டு வார்த்தைகளிலும் உணர்ச்சிக்குத் தான் இந்த வலையுலகத்தில் அதிக முக்கியத்துவம் விரைவில் கிடைக்கின்றது. 

நீடிக்குமா? என்பதை நீங்கள் தான் புரிந்து கொள்ளவேண்டும். 

இந்த முறை போட்டியில் கலந்து கொண்ட பலரின் தலைப்புகளையும் பார்க்கும் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. மிக மிக அற்புதமாக எழுதியவர்களை சுட்டி கொடுத்து சுட்டித்தனமாக பாராட்டமுடியும். ஆனால் என்னைத் தெரிந்தவர்கள், என் எழுத்தைப் படிப்பவர்கள், என் நலம் விரும்பிகள் என்ற இந்த மூன்று வட்டத்திற்குள் ஏதோவொரு வட்டத்தில் பலருக்கும் நான் பிடித்தமானவனாக இருப்பதை உணர்ந்து கொண்டேன்.  இது போக இந்த தலைப்புகள் இறுதிப்பார்வைக்கு சென்ற போது இந்த தலைப்புக்குப் பின்னால் உள்ள உழைப்பை உணர்ந்து இருக்கக்கூடும். 

என் நெருங்கிய நண்பர் நிகழ்காலத்தில் சிவா கொடுத்துள்ள சுட்டியைப் படித்துப் பாருங்கள்.  இத்தனை பேர்களையும் குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் அணைவரும் படித்திருக்க முடியுமா?

மற்றொரு ஆச்சரியம்?? 

நானும் இந்த முறை தமிழ்மணம் நடுவர் குழுவில் ஒருவனாக தேர்வாகியிருந்தேன்.  ஆனால் தமிழ்மணம் நிர்வாக குழுவினர் என்னை தேர்ந்தெடுக்க காரணம் எதுவாக இருந்தாலும் தொடக்கத்தில் என் தளத்தின் சுட்டியை இந்த தமிழ்மணத்தில் இணைக்க முடியாத ஒரு சூழ்நிலையும் உருவானது. நான் ஏற்கனவே எழுதிக் கொண்டுருந்த வேர்ட்ப்ரஸ் சுட்டி என்னிடம் வந்து சேர்ந்த போது நிச்சயம் நாம் கலந்து கொள்ள முடியாது என்றே முடிவு செய்து விட்டேன். ஆனால் தமிழ்மண நிர்வாக குழுவின் சட்டதிட்டங்கள் உடைப்பது சாதாரணமானதல்ல என்பதை நான்கு நாட்கள் நான் தொடர்ந்து கொடுத்த மின் அஞ்சல் புரிய வைத்தது. 

காரணம் தமிழ்மணத்தின் தானியங்கி திரட்டி அதன் போக்கில் மட்டுமே செயல்படும்.    உள்ளே புகுந்து உழப்ப முடியாது போல.    அதன் பிறகே இந்த இடுகைக்கான சுட்டி வரவேண்டிய நேரத்தில் வந்து சேர்ந்தது. அந்த நாட்கள் மனம் பெற்ற உளைச்சலின் மூலம் புதிய நோக்கம் உருவானது.  

ஒருவேளை இந்த முறை ஏதோவொரு தலைப்புக்கு அங்கீகாரம் கிடைத்தாலும் அடுத்த முறை தமிழ்மணம் விருதுகளில் கலந்து கொள்ள வேண்டியதில்லை என்பதை முடிவாக வைத்திருந்தேன்.. எத்தனையோ புதியவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொள்ள நாம் தமிழ்மணம் விருதுகளில் இருந்து விலகியிருக்க வேண்டும் என்று யோசித்ததை இப்போது இதன் மூலம் உறுதிப்படுத்துகின்றேன். 

வினவு மற்றும் கோவிகண்ணன் இந்த வருடம் உருவாக்கிய பாதையிது.   அடுத்த ஆண்டு தமிழ்மணம் 2011 போட்டிகளில் கலந்து கொள்ளப் போகும் புதிய இணைய எழுத்தாளர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள். 

இந்த முறை வெற்றி பெற்ற சக தோழமைகளுக்கு என் வாழ்த்துகள்.

முகிலன் கூகுள் பஸ்ஸில் தமிழ்மணம் போட்டியில் நடுவர்களாக இருந்தவர்களின் தேர்வான இடுகையைப்பற்றி குறிப்பிட்டு இருந்தார். இந்த சமயத்தில் இது குறித்து சில வார்த்தைகள்.

இரண்டு பிரிவுக்கான தலைப்பு எனக்கு வநது சேர்ந்தது.  அதில் உள்ள இடுகைகளை என் பார்வையில் விமர்சித்து சாதக பாதகத்தை பட்டியலிட்டு அதற்கு தனியாக மதிப்பெண்கள் கொடுத்து அனுப்பி இருந்தேன்.  ஆனால் நான் தேர்ந்தெடுத்த தலைப்பில் ஒன்று மட்டும் வந்துள்ளது.  ஆக மொத்தம் நான் தேர்ந்தெடுத்த தலைப்பு இந்த குழுவில் இருந்த மற்ற எவருக்கோ போய் இருக்கக்கூடும்.  இன்னும் சிலருக்குக்கூட போயிருக்கலாம்.  அவர்களின்  மதிப்பெண்கள் என்னுடைய மதிப்பெண்கள் இரண்டும் சேர்ந்து பொது மதிப்பெண்கள் கிடைத்து இருக்கும். 

இதற்கு மேலே தமிழ்மணம் நிர்வாக ஒருங்கிணைப்பு குழு உருவாக்கும் தராசுப் பார்வை.  ஆக மொத்தம் ஓட்டை உடைசல் இல்லாத பாத்திரம் போன்ற இந்த முறை தமிழ்மணம் நிர்வாகத்தினரால் உருவாக்கப்பட்டுள்ளது என்றே கருதுகின்றேன்.

மற்றொரு ஆச்சரியம் ஆன்லைனில் வந்த அந்த பயபுள்ள கூட மூச்சு கூட விடாமல் அப்படியோ......... அப்படியா........ என்னங்க சொல்றீங்க......... என்று நழுவிப்போன போது ஆச்சரியமாக இருந்தது. இந்த சமயத்தில் புத்தக கண்காட்சியில் சூப்பர் ஸ்டார் போல பட்டையைக் கிளப்பிய என்னை பட்டை தீட்டிக் கொண்டுருக்கும் துளசி கோபால் கூட முச்சு விடவில்லை.. 


என்னடா இவங்கள எல்லாம் தமிழ்மணம் நடுவர் குழுவில் தேர்ந்தெடுக்காமல் நம்மள கொண்டு போய் வடிவேல் வலியக்க ஜீப்ல ஏறிப்போன மாதிரி ஏத்தியிருக்காங்களேன்னு யோசிச்சேன்.  

ஆனால் இந்த நடுவர் குழு பட்டியலைப் பார்த்த போது தான் புரிந்து கொண்டேன். ஆக மொத்தம் நடுவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் தமிழ்மணம் எந்த மாதிரியான திண்டுக்கல் பூட்டை  போட்டுள்ளது என்பதை உணர்ந்து கொண்டேன். .

தேவியர் இல்லத்துக்கு இரண்டு தளங்கள்.  வீட்டில் இரட்டை குழந்தைகள் கிடைத்ததும் இரண்டு பரிசுகள்.  ஏன் செந்திலு ஒன்னு பெரிசா ரெண்டு பெருசா?

போதும் மக்களே. 

உங்கள் ஆதரவுக்கும், அக்கறைக்கும் தமிழ்மணத்திற்கும் என் நன்றி. 

இந்த பொங்கல் திருநாளை முன்னிட்டு மூன்று நாட்கள் எதற்கும் அவசரப்பட வேண்டிய அவஸ்யமில்லாத விடுமுறை கிடைத்துள்ளது.  கடந்து போன பல நாட்கள் தூங்கும் போது சொல்லமுடியாத மந்திரக்கதைகளை இனிமேல் இந்த விடுமுறை நாளில் சொல்லவேண்டும் என்ற உத்தரவு மகாராணிகளிடம் இருந்து வந்துள்ளது. 

அப்புறம் மறக்காம நம்ம இராமநாதபுரம் பக்கம் வந்து பாண்டியனின் ராஜ்யத்தில் உய்யலாலா என்று வந்து பாடிட்டு போங்க.

Friday, December 17, 2010

தமிழ்மணம் விருதுகளும் விரும்பாதவர்களும்

நான் படித்து வந்த மற்றும் படித்துக் கொண்டுருக்கும் பல எழுத்தாளர்களைப் பற்றி பல செய்திகளை கடந்து வந்துள்ளேன். அவர்கள் வாங்கிய பல விருதுகளை அதன் சர்ச்சையான நிகழ்வுகளும் என் மனக்கண்ணில் வந்து போகின்றது.  எந்த வகையில் பார்த்தாலும் எழுதுபவனுக்கு ஏதோவொரு அங்கீகாரம் முக்கியமாக இருக்குமோ? என்று யோசித்தது உண்டு.



சென்ற வருடம் ஒரு நண்பர் தூர தேசத்தில் இருந்து என்னை அழைத்து இந்த தமிழ்மணம் குறித்து புரியவைத்தார்.  செந்தில் சொல்வது போல் மார்க்கெட்டிங் என்பது இந்த வலைபதிவுகளில் எழுதுவதை விட கடினமானது.  எனக்கு எப்போது அது போன்ற விசயங்களில் கவனம் இருப்பதும் இல்லை.  அதை முழுமையாக விரும்புவதும் இல்லை.  இதன் காரணமாக சென்ற வருடத்தில் அநேக பேர்களுக்கு அறிமுகம் இல்லாமல் நான் எதிர்பார்த்த ஈரவெங்காயம் என்ற தமிழ்மொழியின் 3000 வருட சரித்திரம் இரண்டாவது கட்டத்தோடு மூச்சு வாங்கி விட்டது.

ஆனால் இப்போதைய சூழ்நிலையில் வாசிப்பவர்கள், வரவேற்பாளர்கள், வாசக நண்பர்கள், அழைத்துப் பேசுபவர்கள், ஆச்சரியப்படுபவர்கள் என்று ஏராளமான நண்பர்கள் எனக்கு கிடைத்து இருக்கிறார்கள். தமிழ்மண விருது போல சமீபத்தில் வீட்டுக்கு வந்து விட்டு சென்றவர் ஒரு பெரிய இன்ப அதிர்ச்சியை கொடுத்து ஒரு வாய் தண்ணீர் மட்டும் குடித்து விட்டு ஓட்டமாக ஓடிவிட்டார். செல்லும் போது எப்படி இத்தனை வேலைகளுக்கு இடையே இத்தனை நீளமாக உன்னால் எழுத முடியுது? என்று கிள்ளிவிட்டு சென்று விட்டார்.

பதிவுலகத்தில் தேடுதலுடன் இருப்பவர்கள் அநேகம் பேர்கள் இருப்பதை உணர்ந்து கொண்டேன்.

தமிழ்மண விருதுகளில் கலந்து கொள்ள வேண்டும்? நம்முடைய தகுதி என்ன?  போட்டி என்று வரும் போது எப்படி தேர்ந்தெடுக்க வேண்டும்? என்று எப்போதும் என்னால் புரிந்து கொள்ள முடியாத விசயத்தை ஐந்து நண்பர்களிடம் ஆலோசனையாக கேட்ட போது அவர்கள் கொடுத்த விமர்சனமும், அவர்களின் ஆக்க பூர்வமான கருத்துக்களின் அடிப்படையிலும் இந்த மூன்று தலைப்புகளை தமிழ்மணம் விருதுகள் 2010 பட்டியலில் இணைத்துள்ளேன்.  

பிரிவு செய்திகள் நிகழ்வுகளின் அலசல்

விதி ராஜீவ் மதி பிரபாகரன் ( எண் 84)

( ராஜீவ் காந்தி படுகொலைக்கு பின்னால் உள்ள நிகழ்வுகள் குறித்து ஈழம் தொடரில் எழுதப்பட்ட குறிப்பிட்ட பத்து பகுதிகளை ஒரே தலைப்பில் கோர்த்துள்ளேன். எதிர்மறை நியாயங்களுடன் பாரபட்சம் இல்லாமல் எழுதப்பட்டது)

பிரிவு பயண அனுபவங்கள் ஊர் வாழ்வு நினைவோடைகள்

இனிய நினைவுகள் (எண் 36)

தமிழ்மண நட்சத்திரவாரத்தில் வாழ்ந்த ஊரான காரைக்குடியைப் பற்றி ஆசை மரம் என்ற தலைப்பில் தொடங்கிய கட்டுரைகளில் தொடர்ந்த வந்த தலைப்பில் இதுவும் ஒன்று. செட்டிநாடு என்ற பகுதி எப்படி உருவானது என்பதையும் நான் பார்த்த அனுபவ பார்வைகளும் என்பதுமாய் 
எழுதியுள்ளேன்)

பிரிவு பொருளாதாரம் வணிகம் தொடர்பான கட்டுரைகள்


பஞ்சு முதல் பஞ்சமாபாதகம் வரை (எண் 13)


இந்திய சுதந்திரம், ஈழம் தொடருக்குப் பின் நான் எழுதிய மூன்றாவது தொடர். நாறும் உள்ளாடைகள் என்ற தலைப்பில் தொடங்கி தற்போதைய திருப்பூர் குறித்தும், சமீபத்தில் உருவான பொருளாதார மந்த நிலை காரணமாக உருவான நிகழ்வுகளை என் அனுபவப் பார்வையில் எளிமையாய் எழுதினேன். இந்தியாவில் உள்ள அடிப்படை வளங்களை அரசியல்வாதிகள் தங்களின் சுயலாபத்துக்காக வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யாமல் இருந்தாலே உள்நாட்டு தொழில் வளர்ச்சியின் குறியீடு அற்புதமாக மேலே வரும் என்பதை சொல்லியுள்ளேன்.

நண்பர்களே,  இந்த முறை தமிழ்மணத்தில் பங்கெடுத்த தலைப்புகள் அத்தனையும் மிக அற்புதமாக உள்ளது.  நான் விரும்பும், என்னுடன் தொடர்புடைய, சமூக அக்கறையுடன் எழுதக்கூடிய பலரும் என்னுடைய போட்டியாளர்களாக இருக்கிறார்கள்.  மேலும் இந்த முறை தமிழ்மணம்  நிர்வாகம் சரியான தலைப்புகள் இறுதியாக தேர்வு பெற வேண்டும் என்ற நோக்கத்தில் பல சிறப்பான விதி முறைகளை கொண்டு வந்துள்ளார்கள்.  உண்மைத்தமிழன் சொல்வது போல மூன்று தலைப்புகளில் மட்டுமே கலந்து கொள்ள முடியும் என்ற விதி தான் ஏன் என்று என்னால் புரிந்து கொள்ள முடியாததாய் இருக்கிறது.

இந்த இடுகையின் நோக்கம் இன்னும் சில ஆண்டுகள் கழித்து என்னுடைய எழுத்துக்களை நான் திரும்பி பார்க்கும் போது இது போன்ற நிகழ்ச்சியில் நானும் பங்கெடுத்துள்ளேன் என்பதை நான் உணர்ந்து கொள்வதற்காக.  உங்களுக்கு இந்த தலைப்புகள் உணர்த்தும் கருத்துக்கள் பிடித்தமானதாக இருந்தால் இரண்டாம் கட்ட தேர்வுக்கு நகர்த்துங்கள்.  

தமிழ்மணம் திரட்டியில் மட்டும் தினந்தோறும் 407 இடுகைகள் சேர்க்கப்படுவதாக அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்கள்.  தமிழ்மணம் போல TAMILISH போன்ற பல திரட்டிகளில் இணைக்கப்படும் ஒவ்வொருவரின் தலைப்புகளும் குறைந்த பட்சம் 700க்கு மேற்பட்டதாக இருக்கலாம்.  ஆனால் எழுதுபவர்கள் அத்தனை பேர்களும் இது போன்ற போட்டிகளில் கலந்து கொள்ள ஆர்வம் இல்லாமல் இருப்பது வருத்தமே.  எழுதத் தொடங்கும் போது இருக்கும் ஆர்வம், புலம் பெயர்ந்து வாழ்பவர்கள் ஆங்கிலம் போல எளிதாக தட்டச்சுகளில் தங்களில் கருத்துக்களை அடிக்க முடியாத சோம்பேறித்தனம், நேரமின்மை போன்ற பல காரணங்கள் நான் ஆச்சரியப்படும் பலரும் படிப்பதில் மட்டும் தான் ஆர்வம் செலுத்துகின்றனர்.  

எனக்கு கிடைத்த அனுபவங்களின்படி வங்கி உயர் அதிகாரி முதல் அரசியல் தொடர்பாளர்கள் வரைக்கும் பலரும் பல பேருடைய எழுத்துக்களை படிப்பவர்களாகத்தான் இருக்கிறார்கள்.  ஆனால் எவரும் தங்களை வெளிக்காட்டிக் கொள்வதில்லை.  இதற்கு மேல் வலைபதிவுகளில் உள்ள வெளியே தெரியாத அரசியல் போன்ற காரணங்களினால் நன்றாக எழுதுபவர்களும் தங்களை வெறும் வாசிப்பாளர்களாக மாற்றிக் கொள்கின்றனர்.

விருதுகளுக்கு, அங்கீகாரத்திற்கு அப்பாற்பட்ட வெகுஜன எழுத்தாளர்கள் பலரும் என்னைப் போன்ற பலரின் வாழ்க்கையிலும் முழுமையான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள். 

வலை பதிவுகளில் சமூகத்தில் பார்த்த, பாதிப்பை உருவாக்கிய விசயங்களை எழுதுபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். 

உங்களின் தேர்வு உன்னதமாக இருந்தால் உங்களுக்கு நீங்களே கொடுத்துக் கொண்ட தமிழ்மணம் விருதாக கருதிக் கொள்கின்றேன். உங்களின் வாசிப்பு அனுபவம் தான் உங்களின் வாழ்க்கையை உங்களின் எண்ணங்களை தீர்மானிக்கிறது.  

இந்த போட்டியில் கலந்து கொண்ட நண்பர்கள் அத்தனை பேர்களுக்கும் என் வாழ்த்துகள்.  ஏற்பாடு செய்துள்ள தமிழ்மணம் நிர்வாக குழுவினருக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்.

ஜோதிஜி