Thursday, September 14, 2017

எழுந்து நிற்கலாம் வா?


மேலைநாடுகளில் கல்விக்கூடங்கள் என்பது சிறைக்கூடங்கள் அல்ல. அதுவொரு களம். பயன்படுத்திக் கொள்பவர்களின் திறமையைப் பொறுத்து வளர்ச்சியும் உண்டு. வீழ்ச்சியும் உண்டு. அரசியல் கலக்காத உலகமிது. எந்தக் காலத்திலும் அரசியல் உள்ளே நுழைய முடியாதபடி ஒழுங்குபடுத்தி வைத்துள்ளார்கள். மாறிக் கொண்டேயிருக்கும் உலகை உள்வாங்கிக் கொண்டே மாறிக் கொண்டே வருவதால் மாணவர்களின் தகுதியும் திறமையும் மற்ற வளரும் நாடுகளுடன் ஒப்பிட முடியாத உயரத்தில் எப்போதும் உள்ளது. 

அங்கே தனி மனித வாழ்க்கை வசதிகள் என்பது அவரவர் தனிப்பட்ட வாழ்க்கையில் தான் பிரதிபலிக்குமே தவிர அது பள்ளி, கல்லூரிக்குள் வந்து நிற்காது. சிறகுகளைக் கத்தரிக்காமல் வானத்தை எட்டிப்பிடிக்க ஆதரிக்கும் உலகமது. மேலைநாட்டுக் கல்விமுறைகளில் மாணவர்களுக்கு விளையாட்டு என்பது கூடுதல் தகுதி. விளையாட்டு மட்டுமல்ல. தனிப்பட்ட திறமைகளைக் கண்டறியும் கூட்டமும் உண்டு. அதனை வியாபாரத்திற்குப் பயன்படுத்திக் கொள்ளும் ஆர்வமும் கலந்த கல்வியது. ஆர்வமும் ஆரோக்கியமும் ஒன்றே கலந்து இருப்பதால் மன ரீதியான எழுச்சியும் இயல்பான ஒன்றாக உள்ளது. 

கடவுள் உண்டு இல்லை என்ற கூட்டமும் உண்டு. ஆனால் அறிவியல் அதனை விட நமக்கு முக்கியம் என்ற நம்பிக்கை இருப்பதால் ஒன்று மற்றதுடன் உரசுவதில்லை. 

ஆனால் இங்கே? 

ஒட்டி வைத்த மரத்தில் ஒடிக்கப்பட்ட கிளை போல அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கின்றது. குறிப்பிட்ட எல்லைக்குள் வளர்க்கப்படும் ஒருவித சோதனைச்சாலை. ஆன்மீகத்தை அறிவியலுடன் கலப்பார்கள். அறிவியலுக்கும் ஆதாரம் தேவையில்லை என்று வாதிடுவார்கள். வரலாறு என்பது சில சமயம் திணிக்கப்பட்டதாக இருக்கும். பல சமயம் நம்ப முடியாததாக இருக்கும். மொத்தத்தில் மாற்றுச் சிந்தனைகள் வளர்ந்து விடக்கூடாது என்ற எண்ணத்தில் உருவாக்கப்படும் பாடத்திட்டம் என்பது பல் இல்லாத கிழவனுக்கு வழங்கப்படும் பக்கோடா போலவே இருக்கும். 

படிப்பவனுக்குப் புரியாது. புரிந்தவனுக்கும் குழப்பமே மிஞ்சும். வளர்த்து விடக்கூடாது என்பவர்களுக்கும் இவர்கள் வளர்த்து விடக்கூடாது என்பவர்களுக்கும் இடையே தான் நம் மாணவர்கள் போராடிப் பெற்ற அறிவுடன் தான் இன்று உலகமெங்கும் சென்று வெல்கின்றார்கள். 

இந்தச் சூழ்நிலையில் மாணவர்களின் தனித்திறமையை எங்கே போய்க் காட்டுவது? அதுவும் இங்குள்ள அரசியலில் எல்லாமே விற்பனைக்கு என்ற சூழ்நிலையில் தான் பல மாணவர்கள் கருகிப் போகின்றார்கள். 

இந்திய விளையாட்டுத்துறை என்பது காசு பார்க்கும் கூட்டத்தால் ஆளப்படுவது. குறிப்பிட்ட வட்டம், குறிப்பிட்ட நபர்கள் என்ற எல்லையை உடைக்க முடியாத கூட்டத்திற்குள் சிக்கி சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கும் தனி ராஜ்ஜியம் அது. எந்த விளையாட்டின் மூலம் வருமானம் அதிகமாகக் கிடைக்குமோ? அதுவே தேசிய விளையாட்டாகப் பார்க்கப்படுகின்றது. இன்று வரையிலும் ஊதிப் பெருக்கப்பட்ட கிரிக்கெட் முன்பு வேறெந்த விளையாட்டும் பேசப்படுகின்றதா? 

மகளிடம் ஒவ்வொருமுறையும் இங்குள்ள விளையாட்டிற்குப் பின்னால் உள்ள அரசியல் தகிடுதத்தங்களைப் பற்றிச் சொல்வதுண்டு. ஆனாலும் அவர் ஆர்வத்தை மட்டுப்படுத்துவதில்லை. 

மகள் "நான் நாளை இங்கே விளையாடச் செல்லப்போகின்றோம்?" என்று முதல் நாள் சொல்லிவிட்டுச் செல்லும் போது என் மனதில் பல கேள்விகள் வந்து எழும். ஆனால் இந்தச் சமயத்தில் அவரின் விருப்பத்திற்கு ஏன் தடை சொல்ல வேண்டும் என்று அனுமதி கொடுப்பதுண்டு. ஒருவரின் வாழ்க்கையில் கல்லூரிப் பருவத்தை விடப் பள்ளிப் பருவம் தான் முக்கியமானது. நினைவுகளால் வாழ்ந்து பார்க்கக்கூடிய அத்தனை விசயங்களும் பள்ளிப்பருவத்தில் தான் கிடைக்கும். கல்லூரிப் பருவம் என்பது அடிப்படைக் கடமைகளும் சேர்ந்தே இருப்பதால் முழுமையாக அதனை அனுபவிக்க முடியாது. 

பள்ளிப்பருவத்தில் எனக்கான ஆர்வம் புத்தகங்களில் மட்டும் இருந்தது. ஆனால் இவர்களின் ஆர்வம் எல்லாவற்றிலும் கலவையாக உள்ளது. இதன் காரணமாகப் பெற்றோர்களுக்குத் தான் கூடுதல் சுமையாக உள்ளது. நடுத்தரவர்க்க பெற்றோர்கள் சம்பாரிக்கும் பணமென்பது உணவு, உடைகள், தங்குமிட வசதிகளை விடத் தற்போது குழந்தைகளில் கல்விக்குத்தான் பெரும்பங்கு செலவளிக்க வேண்டியதாக உள்ளது. இதற்கு மேல் குழந்தைகளின் தனித்திறமைகளை வளர்க்கின்றோம் என்ற பெயரில் ஒவ்வொரு நடுத்தரவர்க்க பெற்றோர்களும் பெரிய வன்முறையை நிகழ்த்திக் கொண்டிருக்கின்றார்கள். 

குழந்தைக்குப் பிடிக்குமா? பிடிக்காதா? என்பதனை விடக் கற்றே ஆக வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தில் செலவளிக்கும் தொகை கணக்கில் அடங்கா? 
ஒரு பக்கம் பள்ளிக்கூடங்கள் காட்டும் ஆசை வார்த்தைகள். மறுபக்கம் பெற்றோர்களின் தனக்கான "கௌரவம்" என்ற பெயரில் காசைக் கரியாக்கும் தான் தோன்றித்தனம். இவை எல்லாமே மற்ற மாணவர்களை, பெற்றோர்களைப் பல விதங்களில் பாதிப்பு உண்டாக்கவே செய்கின்றது. 

இப்போதைய சூழ்நிலையில் தனியார் பள்ளிக்கூடங்கள் மட்டுமல்ல. தனிப்பட்ட நபர்கள் வரைக்கும் எதையெல்லாம் காசாக்க முடியும் என்ற கலையில் வல்லவர்களாகவே இருக்கின்றார்கள். வாரத்தில் இரண்டு நாட்கள். மாதம் எட்டு வகுப்புகள். கணக்குப்பாடம் மட்டும். ஆனால் தொகையோ 5000 ரூபாய். இதே போல ஒவ்வொரு பாடத்திற்கும் தனித்தனியாக என்று பெரிய வன்முறையே நடந்து கொண்டிருக்கின்றது. 

எல்லாவற்றிலும், எப்போதும் காசு பார்க்க மட்டுமே என்கிற சூழ்நிலையில் தான் இங்கே மாணவர்களின் தனித்தகுதிகள் என்பது செல்லாக்காசாக மாறிவிடுகின்றது. 

மகள் படிக்கும் பள்ளியில் நடக்கும் ஒவ்வொன்றையும் அமைதியாக உள்வாங்கிக் கொள்வதுண்டு. பள்ளிக்குப் பெருமை வேண்டும். விளையாட்டு ஆசிரியருக்குத் தன்னை நிரூபித்தே ஆக வேண்டும். ஆனால் பள்ளி செய்ய வேண்டிய கடமைகளோ, அதற்குச் செய்ய வேண்டிய முயற்சிகளோ பெற்றோர்கள் எதிர்பார்க்கக் கூடாது. 

நாம் அழைத்துச் செல்ல வேண்டும். நாமே அழைத்து வர வேண்டும். செல்லும் இடங்கள் தூரமாக இருந்தால் அதற்கெனத் தனிக்கட்டணம். ஒவ்வொரு நிலையிலும் இங்கே காசு தான் பேசுகின்றது. காசு தான் தீர்மானிக்கின்றது. அதிகமாக யோசித்தால் இந்த வாழ்க்கை அலுத்துவிடும். ஊழல் மட்டுமே நீக்கமற நிறைந்திருப்பதால் எதார்த்தம் புரிந்து எந்தப் பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளைப் பலிகிடாவாக்க முயற்சிப்பதே இல்லை. 

'முடிந்தவரைப் படி. முயற்சி எடுத்துப் படி. ஏதோவொரு ஏணியைப் பிடித்துக் கொள். எப்படியாவது தொற்றிக் கொள். ஏதோவொரு இடத்தை அடைந்து விடு' 

இங்கே உள்ள வாழ்க்கை இதுவே தான். 

மாணவர்களுக்கு அறிவுரை சொல்பவர்கள், தன்னம்பிக்கை கதையைச் சொல்லி மாணவர்களைத் தளர வேண்டாம் என்று உற்சாகப்படுத்த நினைப்பவர்களுக்கும் கூட இங்குள்ள எதார்த்தம் புரிந்தாலும் ஏன் வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்ச வேண்டும் என்பதனை கருத்தில் கொண்டே வென்றவர்களின் கதையைப் பற்றி மட்டுமே விலாவாரியாகப் பேசுகின்றார்கள். எவரும் தோல்விகளைப் பற்றிப் பேசுவதில்லை. தோல்விகள் கற்றுத் தரும் பாடங்களைப் பற்றிக் கலந்துரையாடல் செய்வதில்லை. ஏன்? 

எதற்கு? எப்படி? என்ற வார்த்தைகளே இன்றைய கல்விச்சூழலில் தேவையில்லாத வார்த்தைகளாக மாறிவிட்டது. 

அவர்களுக்குப் பாடம் நடத்தத் தெரியவில்லை? என்ற கேள்வியை நாம் நினைத்துப் பார்த்து இருப்போமா? இன்றைய குழந்தைகள் இந்தக் கேள்வியை எளிதாக முன் வைக்கின்றார்கள். ஆனால் துணிந்து எதிர்த்து நின்று கேட்பதில்லை. வெட்டி வெட்டி வளர்க்கும் போன்சாய் மரங்கள் போலச் சிறிது சிறிதாக அவர்களை மாற்றி நாங்கள் சொல்வதை மட்டுமே செய் என்பதான கீழ்ப்படிதல் நிலையை மட்டுமே ஒவ்வொரு பள்ளிக்கூடமும் உருவாக்கி வைத்துள்ளது. 

எங்கள் வீட்டில் குழந்தைகளுடன் நடக்கும் விவாதங்கள் பள்ளிக்கூடம் சார்ந்த பொது நிர்வாகம் பற்றியதாகவே இருக்கும். பலரின் தகுதியை அதன் மூலம் உருவான விளைவுகளைப்பற்றியே பேசுவோம். ஒவ்வொருவருக்கும் என்ன செலவாகின்றது? என்பதனை பொது விவாதமாக மாற்றிப் பேசுவோம்? ஏன் அரசாங்கம் அரசுப்பள்ளியை வளர்ப்பதில் இருந்து பின்வாங்கியது என்பதனை புரிய வைப்பதுண்டு. காரணக் காரியங்களையும் அதன் விளைவுகளைப் பற்றி முடிந்த வரைக்கும் புரிய வைக்க முயற்சிப்பதுண்டு. 

அரசு பள்ளிக்கூடங்கள் தோல்வியானதற்கு முக்கியக் காரணங்கள் பலவுண்டு. ஆனால் எல்லாவற்றிலும் முதன்மையானது மக்களின் மாறிய பொருளாதாரச் சூழல். 

மேலைநாடுகளில் வர்க்க பேதமுண்டு. நீ வெள்ளை. நீ கருப்பு என்ற இனப்பாகுபாடு உண்டு. இந்த இரண்டுக்குள் நின்று விடும். ஆனால் இங்கே சாதி, மதம், பணக்காரன், ஏழை, கோடீஸ்வரன், அதிகாரம் பெற்றவன் என்று பல பிரிவுகள் உண்டு. ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு சாலைகள் உண்டு. அவரவர் அந்தந்த சாலைகளை விட்டு வெளியே பயணிக்க விரும்புவதே இல்லை. 

தனக்கான அடையாளம் என்பதனை தொடக்கத்தில் சாதி வழியே பார்த்தவர்கள் இன்று தாங்கள் வைத்துள்ள பணம் மற்றும் வசதிகள் வழியே நிரூபிக்க விரும்புகின்றார்கள்.

"என் குழந்தை பள்ளிக்குச் செல்லத் தொடங்கி விட்டார்" என்பது பழங்கதை. இன்றோ "என் குழந்தை இந்தப் பள்ளியில் படிக்கின்றார்" என்பதே முக்கியமாகப் பார்க்கப்படுகின்றது. பள்ளி என்பது கௌரவத்தின் அடையாளமாகப் பார்க்கப்படுவது என்று தொடங்கியதோ? அன்றே அரசு பள்ளிகளைத் தீண்டாத் தன்மை வெவ்வேறு வழிகளில் வெளிப்படத் தொடங்கியது. 

அதற்கு மேலும் அரசே வெளிப்படையாகச் செய்யக்கூடிய ஊழல் காரணமாக அரசுப் பள்ளிகளின் தரம் அதலபாதாளத்திற்குச் செல்லத் துவங்கியது. ஆனால் இன்னமும் அங்கங்கே மூச்சைப் பிடித்துக் கொண்டு தரத்தை மேம்படுத்தும் அரசுப் பள்ளிகளை ஆதரிக்க மனமில்லாத அதிகாரவர்க்கம் மறைமுகமாகப் பெற்றோர்களைத் தனியார் பள்ளிக்கூடங்கள் பக்கம் தள்ளுவதைத் தான் செய்து கொண்டிருக்கின்றார்கள். 

ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு விதமாகப் பாடத்திட்டம். கற்பிக்கும் முறைகளில் வேறுபாடுகள். இதற்கு மேலாக இந்த மொழியை நீ படித்தே ஆக வேண்டும் என்ற அரசின் ஆணவபோக்கு என்று எட்டுத் திசைகளும் சேர்ந்து மாணவர்களைச் சோர்வடையச் செய்கின்றதோ இல்லையோ பெற்றோர்களின் மன உளைச்சலை இந்த அரசும், அதிகாரவர்க்கமும் அதிகப்படுத்திக் கொண்டேயிருக்கின்றது. 

குழந்தைகளின் பாடப்புத்தகங்களை, பாடத்திட்டங்களை வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் படித்துப் பார்பபதுண்டு. மிரண்டு போயுள்ளேன். எட்டாம் வகுப்புப் பாடங்கள் நான் கல்லூரியில் படித்த பாடங்கள். எல்லாம் சரி? ஆனால் பாடங்களை நடத்தும் ஆசிரியரின் தகுதி தானே இங்கே முதன்மையாகப் பேசப்பட வேண்டும்? 

பெரிய பள்ளிக்கூடம், பிரபல பள்ளிக்கூடம் என்று எந்த இடத்தில் நம் குழந்தைகளைக் கொண்டு போய்ச் சேர்த்தாலும் அங்குள்ள நிர்வாகத்தின் தன்மையைப் பொறுத்து, பாடம் நடத்தும் ஆசிரியர் வைத்தே ஒரு மாணவரின் சிறப்பு வெளியே தெரியவரும். இவர்களின் மனோநிலையைத் தெரிந்து கொள்ள ஒரு முறை "ஏன்டா உங்கள் பள்ளியில் புதிதாகத் தொடங்கிய சிபிஎஸ்சி எப்படி இருக்கு?" என்று கேட்டேன். 

அப்போது தான் சில உண்மைகள் புரிய வந்தது. 

பெற்றோர்கள் ஆசைப்பட்டுச் சேர்ந்த குழந்தைகள் அடுத்த வருடமே பாரத்தைத் தாங்க முடியாமல் மீண்டும் மெட்ரிகுலேசன் பாடத்திட்டத்திற்கே வந்த கொடுமையைப் புரிந்து கொள்ள முடிந்தது. தனது குழந்தைகளின் அறிவுத் திறன் என்ன? என்பதையே உணர்ந்து கொள்ள முடியாத பெற்றோர்கள் நடத்தும் வன்முறையாட்டம் இது. 

சிபிஎஸ்சி பாடத்திட்டம் என்பது கடினமல்ல. அது தொடர்ச்சியாகப் பயிற்சியில் கொண்டுவர வேண்டியது. திடீரென்று கடலில் தள்ளி உனக்கு நீச்சல் தெரிந்தால் நீந்தி வா? என்று சொன்னால் நீச்சலே தெரியாதவனின் நிலை எப்படியிருக்கும்? அப்படித்தான் இங்கே அரசு நடத்தும் பரிட்சைகளும், தேர்வுகளும் உள்ளது. 

கோவையில் பணிரெண்டாம் வகுப்புக் கட்டணம் (இரண்டு வருடத்திற்கும் தங்கும் விடுதிக் கட்டணம் உட்பட) மூன்று லட்சம் ரூபாய் என்பதனைக் கேட்கும் போதே திகைப்பாக உள்ளது. அதன் பிறகு கல்லூரி மூன்று ஆண்டுகள். அதன் பிறகே அவருக்கான துறை சார்ந்த படிப்புகள். பத்தாம் வகுப்பு முடித்து இயல்பான கலைக்கல்லூரி பட்டம் வாங்குவதற்குச் சிறப்பான பள்ளி மற்றும் கல்லூரி என்ற பெயரில் ஒவ்வொரு பெற்றோரும் குறைந்தபட்சம் ஆறு லட்சம் ரூபாய் செலவழித்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்கள். 

ஆனால் இதன் மூலம் என்ன மாதிரியான வேலைவாய்ப்புகள் அந்த மாணவ மாணவியருக்குக் கிடைக்கும் என்பது எவ்வித உத்தரவாதமும் இல்லை என்பது தான் இப்போதைய நிதர்சனம். 

பத்துலட்சம் லஞ்சம் கொடுத்து மாதம் 15000 ரூபாய் வேலைக்குச் செல்லும் ஒருவரின் வாழ்க்கைக்கும், ஒரு பட்டப்படிப்பு படிக்க ஆறு லட்சம் ரூபாய் செலவளிக்கும் ஒரு நடுத்தரவர்க்கத்தினரின் வாழ்க்கைக்கும் இடையே உள்ளது தான் தமிழ்நாட்டின் உண்மையான அரசியல். 

நாம் தான் உண்மையான அரசியலைப் பேச விரும்புவதில்லை. நாம் தான் பேச வேண்டியதை விட்டு பேசக்கூடாதவற்றைத் தானே இங்கே எப்போதும் பேசிக் கொண்டேயிருக்கின்றோம்? 

நாம் பேச வேண்டியதைப் பற்றிக் கொஞ்சம் பேசுவோமா? 

(தொடர்ந்து பேசுவோம்............) 


படம் (நன்றி) Henk Oochappan


Wednesday, September 13, 2017

வெளிச்சம் தேடும் பறவைகள்பள்ளி முதல் கல்லூரி வரைக்கும் என்னுடன் படித்த சிலரைப் பல சமயம் நினைத்துக் கொள்வதுண்டு. அவர்கள் படிப்பதே தெரியாது. படிப்பு குறித்த பயமிருக்காது. அலட்டல் இல்லாமல் மதிப்பெண்களை அள்ளிக் கொண்டு வந்து அசத்துவார்கள். ஆச்சரியமாக இருக்கும். நன்றாக விபரம் புரிந்தபின்பு இதற்குப் பின்னால் உள்ள காரணங்களை ஆராய்ந்த போது நாம் வாழும் சூழ்நிலையும், குடும்பத்தின் பொருளாதார நிலையும் முக்கியப் பங்கு வகிப்பதாகப் புரிந்து கொள்ள முடிந்தது. இதிலும் அனிதா போன்ற விதிவிலக்குகள் உண்டு. 

சிறு, குறு கிராமங்களைச் சார்ந்து வாழும் மாணவர்கள் தங்கள் குடும்பத்தின் வேலைகளையும் செய்து அத்துடன் படிக்க வேண்டிய சூழ்நிலையில் தான் இங்கே பெரும்பாலானோர் இருக்கின்றார்கள். படிப்பு என்பது வீட்டில் செய்ய வேண்டிய ஐந்து வேலைகளில் அதுவும் ஒன்று. ஆனால் இன்று விவசாய வேலைகள் குறைந்து, இடப்பெயர்வு, நகரமயமாக்கல் என்று மாறிய சூழ்நிலையில் அனைவரின் வேலைத்தன்மையும் மாறிவிட்டது. தனி நபர்களின் பொருளாதார வசதிகள் பெருகியுள்ளது. அவரவர் பயன்படுத்தும் வசதிகளைப் பொறுத்து வாழ்க்கைத் தரமும் மாறியுள்ளது. 

பரம ஏழைகள் ஏழைகளாக மாறியுள்ளனர். ஏழைகள் நடுத்தரவர்க்கமாக மாறியுள்ளனர். நடுத்தரவர்க்கம் மேம்பட்ட உயர் நடுத்தரவர்க்கமாக மாறியுள்ளனர். பள்ளிப்படிப்போடு தனிப்பட்ட பயிற்சிகளில் கலந்து கொள்கிறார்கள். அறிவின் தன்மை மாறியுள்ளது. தற்போது படிக்கும் குழந்தைகளுக்குப் படிப்பைத் தவிர வேறொன்றும் வேலையில்லை என்கிற நிலைக்கு வந்து சேர்ந்துள்ளது. 

வீட்டில் ஒருவர் மட்டும் சுமார் ரகம். காரணம் அவர் எதிர்பார்க்கும் சூழ்நிலை பள்ளியில் இல்லை. செயல்முறை கல்வியில் அவர் ஆர்வமாக இருக்கின்றார். ஆனால் பள்ளி எதிர்பார்ப்பதோ மனப்பாடம் என்ற ஒற்றை வார்த்தையில் நிறுத்த அவர் மறுதலிக்கின்றார். உன்னால் முடிந்தவரைக்கும் முயற்சி செய் என்று கட்டாயப்படுத்தாமல் ஒதுங்கி விட்டேன். மற்ற இருவரும் போட்டிகளில் முந்தி வரக்கூடியவர்கள். படிப்பைத் தவிர வேறு எந்த வேலைகளிலும் கவனம் செலுத்த விரும்பாத சுகவாசிகள். பள்ளி எதிர்பார்ப்புக்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொண்டவர்கள். 

ஒவ்வொருமுறையும் இவர்களின் மதிப்பெண்களைப் பார்க்கும் போது நான் பழகிய பல நண்பர்களின் நினைவு தான் எனக்கு வந்து போகும். கூடவே இவர்களின் தனிப்பட்ட திறமைகளும் ஆச்சரியமளிக்கும். 

உங்கள் மகள் விளையாட்டில் மிகச் சிறப்பாக உள்ளார். நீங்க கொஞ்சம் ஒத்துழைப்புக் கொடுத்தால் என்னால் அவரை நல்ல இடத்திற்கு அழைத்துச் செல்ல முடியும் என்று ஒரு முறை மகளின் உடற்பயிற்சி ஆசிரியர் அலைபேசியில் என்னிடம் கேட்ட போது எனக்கே சற்றுக் குழப்பமாக இருந்தது. அவர் முதலில் கராத்தே பக்கம் சென்று கொண்டிருந்தார். அப்புறம் என்சிசி தொடர்ச்சியாக என்எஸ்எஸ் என்று ஏதோவொரு பக்கம் மாறி மாறி பயணித்துக் கொண்டிருந்தார். இப்போது விளையாட்டு என்கிற செய்தி வந்து சேர்ந்தது. 

என்னடா இது? இத்தனை நுணுக்கமாக இவர்களைக் கவனித்துக் கொண்டிருக்கின்றோமே? நம்மால் இதை யூகிக்க முடியவில்லையே? என்று யோசித்துக் கொண்டு வீட்டில் வந்து கேட்ட போது மற்றொரு அதிர்ச்சி காத்திருந்தது. அவரின் தனிப்பட்ட ஆர்வம் கலந்த பல விசயங்களை அப்போது தான் என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. நான் ஒன்றும் சொல்லவில்லை. ஆசிரியர் பின்னால் செல்லத் தொடங்கினார். 

ஓட்டப்பந்தயத்தில் தொடங்கியது. கால்பந்து விளையாட்டில் வந்து நின்றது. மாவட்ட பந்தயங்களில் கலந்து கொண்டு வரும் போது எனக்குக் குழப்பம் தான் மிஞ்சும். இன்னும் இரண்டு நாட்கள் தான் பரிட்சை உள்ளது. இவர் என்ன எழுதப் போகின்றார்? என்று யோசித்துக் கொண்டிருப்பேன். ஆனால் மதிப்பெண்களைப் பார்த்தால் 90 சதவிகிதத்தில் வந்து நிற்கும். படிப்பை மட்டுமே கவனத்தில் கொண்டு படிக்கும் இவரின் தோழிகள் வாங்கும் 98 சதவிகிதம் மதிப்பெண்களை இவருடன் ஒப்பிடவே மாட்டேன். கணக்கில் எடுத்துக்கொண்டால் அவர்களைப் போல இரண்டு மடங்கு திறமை உள்ளவராக நினைத்துக் கொள்வேன். 

மிகக் குறுகிய காலகட்டத்திற்குள் இந்த மதிப்பெண்கள் வாங்கும் போது நிச்சயம் இது தனிப்பட்ட திறமை தான் என்பதை மனதில் குறித்து வைத்துக் கொண்டேன். ஹிந்தி என்பதற்காகத் தனியாக அனுப்பி வைத்தேன். பாடம் சொல்லிக் கொடுத்த பெண்மணி பாடத்தை விடப் பணத்தில் மட்டும் குறியாக இருந்தார். குழிக்குள் கால் வைத்தாகி விட்டது என்று பொறுமையாக இருந்தோம். குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் தேர்வுக்கு அனுப்பாமல் அடுத்தத் தேர்வு காலகட்டங்களை மனதில் வைத்துக் கொண்டு இழுத்துக் கொண்டே சென்றார். கடைசி இரண்டு மாதங்கள் படித்து எழுதினார். ஒவ்வொரு இடத்திலும் தனிப்பட்ட நபர்கள் உருவாக்கும் நெருக்கடிகளையும் மீறி தன் தகுதியை நிரூபித்துக் கொண்டே வருவதைக் கவனித்துள்ளேன். 

கவனித்தல் என்பது வெவ்வேறு நிலைகளைக் கொண்டிருக்கும். ஆனால் கவனித்த பின்பு உள்வாங்குதல் தான் மாணவரின் அறிவுத்திறனில் முக்கியப் பங்கு வகிக்கும். ஒரு வகுப்பறையில் 40 மாணவர்கள் இருக்கின்றார்கள் என்று வைத்துக் கொள்வோம். ஒரு ஆசிரியர் நடத்தும் பாடங்களும், அவர் சொல்லித்தருகின்ற விசயங்களை மாணவர்கள் எப்படிக் கவனித்தார்கள் என்பதனை விட எந்த அளவுக்கு உள் வாங்கினார்கள் என்பதில் தான் அந்த ஆசிரியரின் வெற்றித் தொடங்குகின்றது. இந்த இடத்தில் ஆசிரியரின் திறமையை நம்மால் உணர முடியும். மாணவர்களால் உள்வாங்க முடியவில்லை என்றால் ஆசிரியரின் தவறு அது. மாணவர்களின் சிந்தனைகளை அவரால் ஒருங்கே ஒரு புள்ளியில் கொண்டு வரமுடியவில்லை என்றே அர்த்தம். 

இது இயல்பான பழக்கமாக உருவாகின்றதா? அல்லது அவரவர் ஆர்வத்தின் அடிப்படையில் வளர்கின்றதா? என்பதெல்லாம் கடந்த சில ஆண்டுகளாக வீட்டில் உள்ள மூவரின் வெவ்வேறு குணாதிசியங்களை வைத்து நானே பலவித கேள்விகளை எனக்குள் எழுப்பிக் கொள்வதுண்டு. என்னை, என் மனைவியை வைத்து என் குழந்தைகளின் அறிவுத்திறனை ஒப்பிடவே முடியவில்லை. அவர்களின் வளர்ந்த சிந்தனைகள் வேறுவிதமாக உள்ளது. ஒவ்வொரு தலைமுறையும் முந்தைய தலைமுறையை விட வீரியமாக உள்ளது என்பது பொதுவான கருத்தாக இருந்தாலும் தற்போதைய தலைமுறை என்பது இதுவரையிலும் பார்த்திராத வினோத கூறுகளைக் கொண்டிருக்கின்றது. காரணம் படிப்படியாக வளர்ந்து வந்த தொழில்நுட்ப வளர்ச்சி. 

நாம் கடந்து வந்த ஒவ்வொரு நூற்றாண்டுகளையும் அதன் வளர்ச்சி சார்ந்த சாதகப் பாதக அம்சங்களையும் கணக்கில் எடுத்துப் பாருங்கள். படிப்படியான வளர்ச்சியாகத் தான் இருந்து இருக்கும். ஆனால் கடந்த 25 ஆண்டுகளில் உருவான அதிவேக தொழில்நுட்ப வளர்ச்சி என்பது ஒரு நூற்றாண்டு வளர்ச்சியைத் தனது காலாண்டு பருவத்தில் செரித்துத் தின்று விட்டது. இதனால் சாதகமும் உள்ளது. பாதகமும் உள்ளது. சிந்தனைத் திறனின் தன்மை மாறியுள்ளது. எவற்றுக்கெல்லாம் நாம் மூளையைப் பயன்படுத்திக் கொண்டு இருந்தோமோ அதனைக் கருவிகள் கையாளத் தொடங்கி விட்டது. கருவிகளுக்குத் தேவைப்படும் கட்டளைகளை உருவாக்க மட்டுமே மனித சிந்தனை தேவைப்படுவதாக உள்ளது. பத்து சதவிகித உழைப்பென்பது 90 சதவிகித அறிவைப் பெற்றுள்ளதாக மாற்றப்பட்டு விடுகின்றது. இது இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் நடந்த நம்ப முடியாத மாற்றம். 

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை மாதத்திற்கு ஒரு முறையாவது இவர்கள் பயிலும் பள்ளிக்குச் செல்வதுண்டு. காரணம் வருடந்தோறும் ஒவ்வொரு வகுப்பிற்கும் ஆசிரியர்கள் மாறிக் கொண்டே இருந்தார்கள். வருகின்ற ஆசிரியர் ஒரு வருடம் கூடத் தாக்குப்பிடிப்பதில்லை. நிர்வாகம் கொடுக்கும் அழுத்தம் ஒரு பக்கம். அவர்களின் தனித்திறமை தள்ளாடத் தொடங்கும் போது அது மாணவர்களின் மூலமாக, பெற்றோர்கள் வாயிலாக நிர்வாகத்திற்குச் சென்று சேரப் பிரச்சனைகள் உருவாகத் தொடங்கி விடும்.

மாறி வந்த புதிய ஆசிரியர்களிடம் அறிமுகம் செய்து கொண்டு பேசுவதுண்டு. கடந்த இரண்டு ஆண்டுகளாகச் செல்வதில்லை. பத்து நிமிடம் பேசும் போதே ஆசிரியரின் தரத்தை ஓரளவுக்கு யூகித்துக் கொள்ள முடிகின்றது. இனி பேசி ஒன்றும் ஆகப்போவதில்லை என்று அமைதியாக வந்துவிடுவதுண்டு. 

சிறிய தொழிற்சாலைகளின் அடுத்த கட்ட வளர்ச்சியான பெரிய நிறுவனமாக மாறும் என்பது பொதுவிதி. அது ஆச்சரியமல்ல. அது தான் உண்மையான வளர்ச்சி. ஆனால் கல்விக்கூடங்கள் நிறுவனமாக மாறும் போது அடிப்படைத்தன்மை மாறி மாணவர்களை எந்திரமாக மாற்றும் பணியைச் செய்யத் தொடங்கிவிடுகின்றது. இதனைக் கண்கூடாகக் கடந்த மூன்று ஆண்டுகளாகக் குழந்தைகள் படிக்கும் பள்ளியின் மூலம் பார்த்து வருகின்றேன். 

தாங்கள் செய்யும் ஒவ்வொரு செயலுக்குப் பின்னாலும் பணம் வரும் வாய்ப்பை உருவாக்க முடியுமா? என்று ஒரு கல்விக்கூடம் யோசிக்கும்பட்சத்தில் அங்கே என்ன நிகழும்? அது தான் இப்போது தமிழ்நாடு முழுக்க நடந்து வருகின்றது, இவர்களின் தனிப்பட்ட திறமைகள் தேவையில்லாமல் போய்விடுகின்றது. திறமைகள் உள்ள குழந்தைகள் ஏன் நமக்குத் தேவையில்லாத வேலை? என்று யோசிக்கத் தொடங்கும் போதே அவர்களும் சராசரி மாணவராக மாறிவிடுகின்றார்கள். இதையும் மீறிப் பெற்றோர்களும் குழந்தைகளும் உணர்வுப் பூர்வமாக ஒன்றிணைந்து வாழும் குடும்பத்தில் தனித்திறமை கொண்ட குழந்தைகள் தங்கள் தனித்தன்மையை ஒவ்வொரு சமயத்திலும் வளர்த்துக் கொண்டே வருகின்றார்கள். 

ஆனால் இவர்களின் தனித்திறமைகள் வளர்வதற்கு நாம் எந்த அளவுக்குப் பாடுபட வேண்டும்? இருண்ட உலகத்திற்குள் வெளிச்சம் தேடும் வாழ்க்கையை எப்படிக் கையாள வேண்டும் என்பதனைப் பற்றிப் பார்க்கலாம்?


படம் (நன்றி) Henk Oochappan

(தொடர்ந்து பேசுவோம்) 

தொர்புடைய பதிவுகள்Monday, September 11, 2017

உரிமைக்குரல் ஒலிக்கட்டும்.


"நாம் வாழ்ந்த பழைய வாழ்க்கை தான் சிறப்பு" என்ற வாசகத்தை இன்று உச்சரிக்காத வாய்கள் குறைவாகவே இருக்கும். இனி முடியுமா? என்ற ஒற்றைக் கேள்விக்குப் பதில் ஒரே வரியில் சொல்லிடமுடியும். "இனி அதற்கு வாய்ப்பே இல்லை". சக்கரம் சுழலுகிறது. மேலேறியது இறங்கத்தான் செய்யும்? ஆனால் எப்போது என்று எவரால் சொல்ல முடியும்? 

வளமையான சாம்ராஜ்யங்கள் அழிந்த போது அடுத்த அரசு உருவானது. மற்றொரு மாற்றம். மாறியபடி பயணம் செய்த காலம் பல மாறுதல்களையும் கூடவே அழைத்து வந்தது. இன்று இங்கு வந்து நின்றுள்ளோம். அடுத்த மாற்றம் ஒரு மாத்திரையில் கூட வரக்கூடும். மொத்த சத்துக்களையும் ஒரு விழுங்கலில் முடித்து விடுவோம். 

அப்போது நாம் இருப்போமா? 

இயற்கை வேளாண்மை, இயற்கைப் பொருட்கள் என்று எத்தனையோ விளம்பரங்கள் நம்மை வந்து சேர்ந்து கொண்டேதான் இருக்கின்றது. அவை அனைத்தும் முன்பிருந்தபடியே இருந்த இயற்கையான விதங்களில் வந்ததா? யாருக்கும் தெரியாது? நம்பிக்கை தான் வாழ்க்கை. நம்பியவர்கள் வாங்குகின்றார்கள். விற்றவர்கள் பணக்காரனமாக மாறிவிடுகிறார்கள். 

காலையில் எழுந்து வாயில் வைக்கும் பற்பசை முதல் இரவு தூங்கும் வரைக்கும் நாம் பயன்படுத்தும் மொத்த பொருட்களில் உள்ள சமாச்சாரத்தில் 90 சதவிகிதம் செயற்கையால் உருவாக்கப்பட்ட பொருட்களுடன் தான் நம் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். இதற்குப் பின்னால் எத்தனையோ காரணங்கள். சரியா? தவறா? போன்றவற்றை நாம் இங்கே அலசப்போவதில்லை. 

வீட்டை விட்டு வெளியே வந்தால் புகையின் ஊடாகத்தான் நம் வாழ வேண்டியுள்ளது. எல்லா இடங்களிலும் பரவியுள்ள அசுத்தங்களைத்தான் உணர வேண்டியுள்ளது. தற்காலத்தில் கெமிக்கல் என்பது ஒரு வார்த்தையல்ல. அது இன்றைய வாழ்க்கையின் அடித்தளம். சுய திருப்திக்காகப் பல பொருட்களை நாம் பயன்படுத்திக் கொள்ள முடியும். ஆனால் நதிமூலம், ரிஷிமூலத்தை ஆராய்ந்தால் அதுவும் ஏதோவொரு இடத்தில் செயற்கையுடன் உறவாடித்தான் வெளியே வந்திருக்கும். 

நம் நாட்டில் வாழ்வதற்கு முக்கியத் தகுதி ஒன்று உண்டு. எப்போதும் உத்தேசமாகப் பேசிப் பழக வேண்டும். ஆணித்தரமாகப் பேசி விட்டால் மாட்டிக் கொள்வோம். அறிவோடு பேசி விட்டால் குழப்பமும் அத்தோடு அதிக எதிரிகளும் உருவாகி விடுவார்கள். 

இதனால் தான் நடுத்தரவர்க்கம் குறிப்பிட்ட எல்லையைத் தாண்டுவதில்லை. குழந்தைகளையும் அந்த வட்டத்திற்குள் தான் வளர்க்க நினைக்கின்றார்கள். லட்சியம் பெரிதா? லட்சம் பெரிதா? என்று கேட்டுப் பாருங்கள். லட்சம் பேர்களும் லட்சத்தை மட்டும் தான் கைகாட்டுவார்கள். 

அதனால் இன்று என் குழந்தை சம்பாத்தியம் லட்சத்தில் இருக்க வேண்டும் என்று ஒவ்வொரு பெற்றோர்களும் விரும்புகின்றார்கள். அதற்குத் தான் இங்கே இத்தனை அடிதடி. இயற்கை, செயற்கை என்று எல்லாமே பின்னுக்குப் போய் வாழ முந்திக் கொள் என்பது இன்றைய தத்துவமாக மாறியுள்ளது. அந்த வாழ்க்கையைத் தான் இன்று வாழ்ந்து கொண்டிருக்கும் ஒவ்வொரு குழந்தையும் எதிர்கொள்கிறார்கள். காற்று ஒரு பக்கம் அடிக்கும் போது எதிர்காற்றில் நாம் பயணித்தால் என்னவாகும்? 

மாறிப்போன சமூகத்தில் குழந்தைகளின் மாறிப் போன குணாதிசியங்களில் இருந்தே தொடங்குகின்றேன். 

வீட்டில் குழந்தைகள் பேருந்து பயணத்தை முழுமையாக வெறுக்கின்றார்கள். இதன் காரணமாக வெளியே செல்ல மறுக்கின்றார்கள். எந்த இடத்திற்குச் செல்ல வேண்டும் என்றாலும் முதன்மையாக ரயில் வசதி இருக்கின்றதா? என்பதனைத் அலசி ஆராய்கின்றார்கள். நமக்கே தெரியாத தொழில் நுட்ப வசதிகளை நமக்கு அறிமுகப்படுத்தி வைக்கின்றார்கள். இந்த வாய்ப்புகளைப் பயன்படுத்த முடியுமா? என்று பாருங்கள் என்று ஆலோசனையை அள்ளி வழங்குகின்றார்கள். வசதியில்லாத பேருந்துகளும், நெருக்கியடித்த மனிதர்களும் அவர்களுக்குப் பிடிக்கவில்லை. எல்லா இடங்களிலும் தனக்கான வசதிகளைத் தேடுகின்றார்கள். வார்த்தைகளாக, வாக்கியங்களாக வாசிக்கும் எந்தச் செய்திகளும் அவர்களுக்குப் பாதிப்பை உருவாக்குவதில்லை. 

பள்ளி ஆசிரியைகள் சொல்லும் புராஜெக்ட் வேலைகளில் இயற்கை சார்ந்த விசயங்களைப் படமாக, விளக்கமாக விவரித்து எழுதி, செய்து கொண்டே கொடுப்பவர்களிடம் இயற்கை குறித்துப் பேச முடிவதில்லை. அவர்கள் வாழ்க்கையைக் கோடு பிரித்து வைத்துள்ளதாகவே தெரிகின்றது. "என் தேவை மதிப்பெண்". அதற்காக நான் இதைச் செய்கின்றேன். "என் வசதி என் உரிமை". அதற்கும் இதற்கும் தொடர்பில்லை. நான் கேட்பதை உருவாக்கித் தருவது உங்கள் கடமை. என்பது போன்ற வாக்குவாதங்கள் வீட்டில் அடிக்கடி நடக்கும். 

எல்லாவற்றுக்கும் பின்னால் உள்ள காரணங்கள் ஒன்றே ஒன்று தான். வறுமை, பசி, பட்டினி, சோகம், வெள்ளம், துயரம், கவலைகள் போன்ற எதுவும் தாக்காது வாழும் எந்தக்குழந்தைக்கும் எது குறித்த பாதிப்பும் பதட்டங்களை உருவாக்குவதே இல்லை. 

பத்து வயதிற்குள் கோவில், விசேடங்கள் என்று கலந்து கட்டி இவர்களைக் கூட்டிச் சென்ற இடங்கள் அனைத்தும் மறந்து விட்டது. அன்று கார் இருந்தது. அருகாமைப்பள்ளி என்ற வசதியின் பொருட்டு வாழும் இடத்தில் கார் தேவையில்லை என்று விற்று விட்டேன். இன்று புதிதாய் பிறந்தோம் என்கிற ரீதியில் தான் அவர்களின் பேச்சுத் தொடங்குகின்றது. நீர்வீழ்ச்சிகள் கவர்ந்த அளவுக்குக் காடுகள் கவர்வதில்லை. உயிருள்ள விலங்குகளை விடத் தீம் பார்க் விசயங்களைத் தான் விரும்புகின்றார்கள். பழங்களை விடப் பழச்சாறு விருப்பமானதாக உள்ளது. செயற்கை பானங்கள் அதீதமாய் விரும்பப்படுகின்றது. 

தூரப் பயணமென்றாலும் ஒரு மணி நேரத்திற்குள் சென்று விட வேண்டும். வசதிகளுக்காக அழிக்கப்படும் காடுகள் குறித்து ஆர்வமில்லை. அதற்குப் பின்னால் உருவான நிகழ்வுகள் அதன் மூலம் கிடைக்கு வசதிகள் தான் முக்கியமாகத் தெரிகின்றது. 

ஆரவாரங்கள் என்பது உற்சாகத்தின் பாதை. ஆனால் உற்சாகம் மட்டுமே வாழ்க்கையாக இருந்தால் உள்ளும் புறமும் அலுத்துவிடாதா? யோசிக்கத் தெரியவில்லை என்பதனை விட அதைப் பற்றித் தற்போது யோசித்து ஒன்றும் ஆகப்போவதில்லை என்பதில் கவனமாக இருக்கின்றார்கள். எல்லாவற்றிலும் எளிதான வழியை இயல்பாகக் கண்டுபிடித்து வைத்துக் கொள்கிறார்கள். சுய விருப்பங்கள் என்பது சொல்லிக்கொடுத்து வருவதில்லை என்பதனை இவர்களைப் பார்த்து தான் கற்றுக் கொண்டுள்ளேன். பயிற்சி இல்லாமல் பலவித படங்களை நொடிப் பொழுதில் வரையும் மகளிடம் பாடக்கற்றுக் கொள் என்றால் பழிப்பு காட்டிவிட்டு நகர்கின்றார். உற்சாகமாக அரட்டை அடிக்கும் அடுத்த மகளிடம் பேச்சுப் போட்டில் கலந்து கொள் என்றால் வீட்டுக்கு ஒரு எழுத்தாளர் போதுமே? என்று நக்கல் விடுகின்றார். 

பள்ளியில் விளையாடப் போகும் மகளுக்குக் கடினமாக உழைக்கும் கால்பந்து விளையாட்டு அளவுக்கு யோகா என்பது வெறுக்கக்கூடியதாக உள்ளது. அமைதியின் அழகை ரசிக்கும் மனமில்லை. இயல்பாக வாழப் பழக்கம் இல்லாத சூழ்நிலை உருவாக்கிய தாக்கங்கள் ஒவ்வொன்றையும் இவர்களின் ஒவ்வொரு செயல்பாடுகளின் மூலமாகவும் பார்க்கின்றேன். 

இது தலைமுறை இடைவெளி மட்டுமல்ல. இங்கு ஐம்பது வயதை நெருங்கி வாழும் ஒவ்வொருவரும் அடுத்த இரண்டு தலைமுறையுடன் வாழ்ந்தே ஆகவேண்டிய சூழ்நிலையில் இருக்கின்றார்கள். இடைவெளி உருவாகாமல் இருக்க வேண்டுமென்றால் இயல்பான விசயங்களை எதார்த்தமாக எடுத்துக் கொள்ளப் பழக வேண்டும். அப்போது தான் வீட்டுக்குள் முரண்பாடுகள் முண்டியடிக்காமல் இருக்கும். 

அவசரம், உடனே, இப்போதே போன்ற வார்த்தைகள் வெறும் வார்த்தைகள் அல்ல. அது நரம்பை அதன் இயல்பை பலிகிடாவாக்கும் சமாச்சாரங்கள். மூளைகளின் வேகம் அதிகமாக அதிகமாக உள்ளே சுரக்கும் திரவங்கள் என்ன விளைவுகளை எதிர்காலத்தில் இந்தக் குழந்தைகளுக்கு உருவாக்கப் போகின்றதோ? என்பதனை பல முறை யோசித்துள்ளேன். வீட்டில் மட்டுமல்ல. குழந்தைகளின் தோழிகள், அவர்களின் நடவடிக்கைகள், பணிபுரியும் இடங்களில் நான் பார்த்த, பழகிய நபர்கள் அடங்கிய மொத்த சமூகத்தின் பாதிப்பாகவே இதனைப் பார்க்கின்றேன். 

குத்து, வெட்டு, ரத்தம் பீய்ச்சியடிக்கும் காட்சிகளை நாம் சிறுவயதில் பார்த்தால் என்ன மனநிலையில் இருந்தோம் என்பதனை இப்போது யோசித்துப் பாருங்கள். ஆனால் இன்றைய குழந்தைச் சமூகம் அதனை இயல்பாக எடுத்துக் கொள்ளக் கற்றுள்ளது. அதற்குப் பின்னால் உருவாக வேண்டிய பாவம், பரிதாபம்,வருத்தங்கள் அனைத்தும் காணாமல் போய்விட்டது. அறிவால் யோசித்து அறிவால் பிரித்து வாழும் குழந்தைகளின் வாழ்க்கையில் ரசனைகளுக்கு இடமேது? 

கிராமங்கள் என்றாலே வாழத்தகுதியற்ற இடம். வாய்ப்புகள் இல்லாத பகுதி என்ற எண்ணம் உருவாகிவிட்டது. சுத்தமான காற்று, நெருக்கடி இல்லாத வாழ்க்கை என்று பேசத் தொடங்கும் போதே ஏன் வசதிகளை நாம் மறுக்க வேண்டும்? அதற்கான உழைப்பு இருந்தால் போதுமே? என்று கேள்வி கேட்கும் குழந்தைகளிடம் உங்களால் என்ன பதில் சொல்ல முடியும்? 

குழந்தைகளுடன் நெருங்கிப் பழக வேண்டும். அவர்களைப் புரிந்து கொள்ள வேண்டும். புரிய வைக்க வேண்டும் என்று எத்தனையோ ஆலோசனைகள் தினந்தோறும் உங்களையும் என்னையும் தாக்கிக் கொண்டேதான் இருக்கும். ஆனால் என் பார்வையில் குழந்தைகள் வளர்ப்பு என்பது வேறுவிதமாகத் தெரிகின்றது. 

ஐந்தாவது வகுப்பு படிக்கும் வரைக்கும் உண்டான வாழ்க்கைக்கும், அதற்குப் பிறகு அந்தக் குழந்தைகளின் வாழ்க்கைக்கும் உருவாகும் பல விதமான மாற்றங்களைக் கடந்த சில வருடங்களாக உன்னிப்பாகக் கவனித்து வருகின்றேன். 

வீட்டில் ஐந்தாம் வகுப்பு வரைக்கும் பாடங்களே கதியென்று இருந்தார்கள். புத்தங்களைப் பாதுகாத்தார்கள். படிக்க எதுவும் இல்லாத போதும் அதனைக் குழந்தைகள் போலக் கொஞ்சிக் கொண்டிருந்தார்கள். ஆனால் ஆறாம் வகுப்பு தொட்டது முதல் மனம், குணம் எல்லாமே மாறத் தொடங்கியது. சுதந்திரம் குறித்துப் பேசுகின்றார்கள். விமர்சனங்களை வைத்துத் தொடர்ந்து கேள்விக்கணைகளைத் தொடுத்துக் கொண்டே இருக்கின்றார்கள். பதின்ம பருவத்தில் உருவாக்கும் ஹார்மோன் குறித்து, அதன் குதியாட்டம் என்னன்ன விளைவுகளை ஒரு குழந்தைக்கு உருவாக்கும் என்பதனை பல முறை மனைவியிடம் எடுத்துச் சொல்வேன். ஆனால் அவர் புரிந்தும் புரியாமலும் குழந்தைகளுடன் மல்லுக்கட்டிக் கொண்டிருப்பார். 

கடைசியில் மனைவியின் குற்றச்சாட்டு என் மேல் வந்து நிற்கும். "மூன்று பேரையும் கெடுத்து வச்சுட்டீங்க. கண்டதையும் பேசி அவர்களை முழுமையாக மாற்றிவிட்டீங்க" என்பார். 

இந்த இடம் தான் முக்கியம். 

குறிப்பிட்ட வட்டத்திற்கு நான் வாழ்ந்தேன். எல்லையை மீற எனக்கு யாரும் உதவவில்லை. அதற்கான வழியும் எனக்கும் தெரியவில்லை. எதைப் பார்த்தாலும் அச்சம். எங்குத் திரும்பினாலும் பயம். ஒழுக்கம் மட்டுமே உன்னை உணர்த்தும் உயர்த்தும் என்று வளர்க்கப்பட்ட என் வாழ்க்கைக்கும் என் குழந்தைகள் வாழும் சூழ்நிலையும் வெவ்வேறானது. 

கல் கூட மண்ணாக மாறுகின்றது. கால அளவு தான் வித்தியாசம். ஆனால் குழந்தைகளின் மாற்றங்கள் மட்டும் உடனே நடந்து விடுகின்றது. மேலைநாடுகளில் பதின்ம வயதுக் குழந்தைகளின் வாழ்க்கை வேறு விதமாக உள்ளது. ஆனால் இங்கே ஆதிக்கமாகப் பார்க்கப்படுகின்றது. "முளைத்து மூணு இலை விடல" என்ற வாசகத்தைச் சொல்லாத அம்மா அப்பாக்கள் நம் நாட்டில் அரிது. 

குழந்தைகள் வளரும் போதும், வளர்ந்த பின்பு உருவாகும் முரண்பாடுகளில் முதலில் பலியாவது தகப்பன்மார்களே. தகப்பனின் ஈகோ என்ற சுயமரியாதை முதலில் அடிவாங்கத் தொடங்குகின்றது. குடும்ப வாழ்க்கையில் தாங்கள் செலுத்தும் ஆதிக்கம் மூலமே வாழ்ந்து வளரும் ஒவ்வொரு ஆணுக்கும் கிடைக்கும் ஆப்பு என்பது குழந்தைகள் சொந்தமாக யோசித்துக் கேள்வி கேட்கும் தருணம் தான். நீங்க ஏன் அலுவலகம் தாமதமாகச் செல்றீங்க? ஏன் இன்று செல்லாமல் இருக்குறீங்க? ஏன் வரும் போது இதனை வாங்காமல் வந்தீர்கள்? என்று தொடங்கும் கேள்விகள் கடைசியில் கேலியாக மாறத் தொடங்குகின்றது. 

என் அலுவலகம், தொழிற்சாலை, பழகும் மற்ற எவர்களுடன் அதிகமாகப் பேச முடியாத சமூகம் சார்ந்த பொதுவிசயங்களை மூன்று பேருடனும் அவ்வப்போது உரையாடுவதுண்டு. ஆனால் எதை எப்போது சொன்னோம் என்று மறந்திருப்போம். கனகச்சிதமாகக் குறிப்பிட்ட விசயங்களைப் பிடித்து வைத்துக் கொண்டு மிரட்டத் தொடங்குவார்கள். 

என் பத்தாம் வகுப்பு, பணிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் பட்டிலை எடுத்துப் பார்த்தவர்கள் இன்று வரையிலும் நக்கல் நையாண்டி தான். சிரித்துக் கொண்டே நகர்ந்துவிடுவேன். நான் படித்த சூழ்நிலையை, எனக்கு வழங்கப்பட்ட வசதிகளை இவர்கள் கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை தப்ப முடியாத தருணங்களும், தாவிப் பாய்ந்து ஓடும் நிகழ்வுகளும் வீட்டில் அன்றாடம் நடக்கும் வாடிக்கையான நிகழ்ச்சியாக உள்ளது. காரணம் என் அப்பாவுடன் அன்று பேச எனக்குப் பயம். இன்று இவர்களுக்கோ அப்பா என்பவர் மற்றொரு தோழன். 

ஆனால் நாம் இந்த மாற்றங்களைக் கண்டு பயந்து சாகின்றோம். இனி என்ன ஆகப் போகின்றதோ? என்று அஞ்சுகின்றோம். 

ஆனால் குழந்தைகளிடம் உருவாகும் மாற்றங்கள் நம்மைக் கேட்டு வருவதில்லை. ஆசிரியர்கள், உடன்படிக்கும் தோழிகள், பழகும், பார்க்கும் நபர்கள் என்ற கலந்து கட்டி வர எல்லாவற்றையும் அவர்கள் பார்வையிலே கற்றுக் கொள்கின்றார்கள். இவை அனைத்தையும் விடச் சமகாலத்தில் வளர்ந்த தொழில்நுட்ப வசதிகள் தான் அவர்கள் வாழ்க்கை தீர்மானிக்கின்றது. மாற்றுகின்றது. தவறு, சரி என்று இனம் பிரிப்பதில்லை. இளங்கன்று பயமறியாது என்ற வார்த்தைகள் இருபது வயது வரைக்கும் பொருந்தும் அல்லவா? 

குழந்தைகளுடன் பேசிக் கொண்டிருக்கும் போது பல முறை அவரவர் ஆசிரியர்கள் குறித்துக் கேட்டுத் தெரிந்து கொள்வதுண்டு. நாம் ஆசிரியர் குறித்து மனதிற்குள் உருவாக்கி வைத்து இருக்கும் மரியாதை சார்ந்த பயங்கள் எல்லாமே இன்று அடிவாங்கி விட்டது. உன் வேலை உனக்கு? என் வேலை எனக்கு? என்று கொடுக்கல் வாங்கல் கணக்காகவே இன்றைய ஆசிரியர் மாணவர் உறவு உள்ளதாக எனக்குத் தெரிகின்றது. 

குழந்தைகளின் குணாதிசியங்களில் பெரும்பங்கு வகிப்பது ஆசிரியர்கள் தான் பலவிதங்களில் காரணமாக உள்ளார்கள் என்பதனை பலமுறை கவனித்துள்ளேன். தற்போது எந்த ஆசிரியர்களும் மாணவர்களுடன் நெருங்கிப் பழகுவதில்லை. பாடங்களுக்கு அப்பாற்பட்டுப் பேசுவதில்லை. பொதுவிசயங்கள் குறித்து உரையாடல் அறவே இல்லை என்பது தான் முக்கியமாகத் தெரிகின்றது. இதற்குப் பின்னால் மாறிய பள்ளிக்கூடச் சூழ்நிலைகள் பெரிதாக இருந்தாலும் ஆசிரியர் என்பவர் மாணவர்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் குறித்துப் பெரும்பாலான ஆசிரியர்களுக்குத் தெரிவதில்லை அல்லது அது குறித்த அக்கறையில்லை. வெளியே ஒரு உலகம் உள்ளது என்பதனை நம்பாத எவரும் பெற்ற வெற்றிகளைக் கடைசி வரைக்கும் தக்கவைத்துக் கொள்ள முடியும் என்று நம்புகின்றீர்களா? 

அடைகாத்து வைத்திருக்கும் சொத்துக்களை அடுத்தத் தலைமுறைக்குக் கடத்தி விட்டு இறந்து போய்விடலாம். ஆனால் பெற்ற சொத்துக்களைக் காப்பாற்றிக் கொள்ள வாங்கியவருக்கு அருகதை வேண்டுமே? 

ஆனால் எந்தத் தனியார் பள்ளிக்கூடமும் ஆசிரியரின் பொது அறிவு குறித்துக் கவலைப்படுவதில்லை. கல்வியென்பது மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டுமே என்று தீர்மானமாக மாறிய பின்பு பொது வாசிப்பு என்பது தேவையில்லாதது போல் ஆகிவிட்டது. 

23 வயதில் பள்ளி ஆசிரியராகப் பணியில் சேரும் ஒரு ஆசிரியர் அல்லது ஆசிரியை விடத் தற்போது குழந்தைகளின் மனோபாவம் மிஞ்சுவதாக உள்ளது. இதில் நல்லதும் உள்ளது. கெட்டதும் உள்ளது. லகானைப் பிடித்துக் கையாள வேண்டிய ஆசிரியர்கள் அவர்களின் கையாலாகத்தனத்தில் கோட்டைவிட்டு விடுகின்றார்கள் என்பதனை பலமுறை பலவித அனுபவங்களில் வாயிலாகப் பார்த்துக் கொண்டிருக்கின்றேன். 

நகர்ப்புறங்களில் வளரும் குழந்தைகள் சிறு நகரங்கள், கிராமங்களில் வளரும் குழந்தைகளைவிடப் பல்வேறு விதங்களில் தினந்தோறும் மாறிக் கொண்டே வருகின்றார்கள். நல்லதும் கெட்டதும் கலந்தே வருகின்றது. ஆனால் எல்லாப் பொறுப்புகளிலும் பெற்றோர் இடம் வந்து தான் சேர்கின்றது. தடுமாற்றம் இங்கே இருந்து தான் தொடங்குகின்றது. அளவு கடந்த ஆசைகளை மனதில் வைத்துக் கொண்டு தகுதிக்கு மீறி, தன் வருமானத்தை உணராமல் பள்ளிப்படிப்பில் தங்கள் சேமிப்பைக் கொட்டும் பெற்றோர்கள் அனைவரும் கண் இருந்தும் குருடர்களாகத்தான் எனக்குத் தெரிகின்றார்கள். 

மூன்றாம் வகுப்பு படிக்கும் போது "நான் என்னவாகப் போகின்றேன்?" என்று அவர்களாகவே சொன்னார்கள். இப்போது "மாற்றங்கள் பொறுத்து நாங்கள் முடிவெடுப்போம்" என்கிறார்கள். 

"உன் முடிவு உன் கையில்" என்ற சுதந்திரம் கொடுத்தபிறகு அவர்கள் என்னவெல்லாம் செய்கின்றார்கள் என்றால்? 

தொடர்ந்து பேசுவோம்............ 

தொடர்புடைய பதிவுகள்
Saturday, September 09, 2017

ஊர் காதல்


ஒவ்வொருமுறையும் முக்கியமான நிகழ்ச்சிக்காகப் பிறந்த ஊருக்குச் சென்று வரும் போது ஒன்றைக் கவனிப்பேன். மனதில் தோன்றும் கலவையான உணர்வுகள். ஒவ்வொரு ஊராகத் தாண்டி வரும் போது எத்தனையோ நினைவுகள். 25 வருடங்களில் உருவான மாற்றங்கள். மாற்றங்களின் ஊடாக மாறிய வாழ்க்கை. காரைக்குடியில் இருந்து கரூர் வரும் வரைக்கும் மனதில் இனம் புரியாத மகிழ்ச்சி உள்ளுற பிரவாகமாக ஊறிக் கொண்டேயிருக்கும். கரூர் எல்லையைத் தொட்டு, அந்த நகரைத் தாண்டி நகரும் போது மனத்தின் தன்மை மெதுமெதுவாக மாறிக் கொண்டேயிருக்கும். ஏன் இப்படி? ஒவ்வொரு முறையும் இப்படியிருக்கின்றதே?

இது நாமே கற்பனை செய்து வைத்திருக்கின்றோம் போல என்று என்னை நானே சமாதானப்படுத்திக் கொண்டிருந்தாலும் நான் பயணிக்கும் ஒவ்வொருமுறையும் இதே தான் அனுபவமாக எனக்குக் கிடைக்கின்றது. இதுவே அலுவலக வேலையாகச் சென்னை சென்று திருப்பூர் வரும் போது உருவான எண்ணங்களை யோசித்துப் பார்த்தால் வேறு விதமாக உள்ளது. ஊரிலே வாழும் உறவுகளுடன் நாம் முரண்பட்டு நிற்கலாம். முந்தைய தலைமுறை சேர்த்த சொத்துக்கள் நாம் வாழும் காலத்தில் இழந்ததாக இருக்கலாம். மாறிப் போன ஊரில் நமக்கென எந்த அடையாளமும் இல்லாமல் கூடப் போயிருக்கலாம். ஓடித்திரிந்த தெருக்களில் நடமாடும் மனிதர்களின் முகங்கள் அனைத்தும் அந்நியர்களாக இருக்கலாம். இது தான் நான் பிறந்த ஊரா? என்று கேள்விகள் ஆயிரம் உள்ளுக்குள் தோன்றினாலும் எவருக்கும் பிறந்த ஊர் நினைவென்பது சுகமானது. அது எப்போதும் நம் உணர்வுகளோடு சம்மந்தப்பட்டது.


நாம் வாழும் ஊரில் வசதியாக வாழ்ந்தாலும் அடிப்படையில் நாமும் ஒரு வந்தேறி தான். நாம் வாழும் ஊரில் நாம் பணிபுரிகின்ற தொழிலுக்கேற்ப ஒவ்வொரு நாளும் மனத்தின் தன்மை மாறிக் கொண்டேயிருக்கின்றது. பேச்சு, உடைகள், நடைமுறை பழக்கவழக்கங்கள் எல்லாமே மாறிக் கொண்டே வரும். நான் திருப்பூர் வந்து 25 வருடங்கள் முடிந்து விட்டது. மிச்சம் மீதி இல்லாமல் உள்ளும் புறமும் எல்லாமே மாறி விட்டது. ஆனாலும் என் சொந்த ஊர் காதல் இன்னமும் மாறவில்லை. நிறைவேறாத முதல்காதல் போல உள்ளேயே எங்கேயோ ஒரு ஓரத்தில் உள்ளது. குற்ற உணர்ச்சிகள் கலந்த இனம் புரியா ஏக்கத்துடன் மறக்க முடியாத நினைவுகளாய் அங்கங்கே உள்ளது.

உள்ளுற இருக்கும் அந்த ஏக்கத்தை ஏதோவொரு காரணத்தைச் சொல்லி துடைத்தெறிய வேண்டியதாக உள்ளது. இனி அங்கே வாழ வாய்ப்பில்லை. இங்குள்ள வசதிகள் அங்கே கிடைக்காது. குழந்தைகள் அவர்கள் வாழ்க்கையில் எல்லைகளைத் தாண்ட வேண்டுமென்றால் இங்கே தான் அதற்கான வாய்ப்புகள் உள்ளது. நம் தியாகம் தான் பெரிது என்று இதே போல ஏராளமான காரணங்களை நாம் நமக்குள்ளே அடுக்கி வைத்திருக்கின்றோம்.

பிறந்த ஊரை விட்டு வேறொரு ஊரில் வாழும் ஒவ்வொருவரும் அதற்கான காரணத்தை ஆராய்ந்தால் கடமைகளும் கடமைக்குப் பின்னால் உள்ள அழுத்தங்களும் தான் பதிலாக இருக்குமோ என்று தோன்றுகின்றது. பெற்ற மகள் திருமணமாகிச் சென்றபிறகு மனதிற்குள் உருவாகும் வெறுமையை வார்த்தைகளாக வாசித்துள்ளேன். இப்போது அந்த எண்ணங்கள் படிப்படியாக உள்ளே உருவாக்கிக் கொண்டிருக்கின்றது. ஒவ்வொரு வயது ஏறும் போது அந்த வருடங்களிலும் பல்வேறு சூழ்நிலைகளில் நான் எடுத்த புகைப்படங்களைச் சமயம் கிடைக்கும் போது எடுத்துப் பார்ப்பதுண்டு.

மாறிய முகங்கள் மௌனமாய்ச் சிரிக்கும். தோற்றப் பொலிவு மாறி இதுவும் நீயே தான் என்று கேலி பேசும். மாறிய முகங்களுடன் பெற்ற வெற்றியும் தோல்வியும் வரிசையாக எண்ணங்களில் வந்து மோதும். சேர்த்த பணமும், இழந்த பணமும் பக்கவாட்டில் வந்து நிற்கும். வாங்கிய வசவுகள் பலசமயம் எட்டிப்பிடிக்க முடியாத வசதிகள் என்று ஒவ்வொன்றாய் நம் மனக்கண்ணில் வந்து நிற்கும். ஆனால் எல்லாமே கடைசியில் கணக்கில் அடிப்படையில் மாறும்.


இங்கே வாழ்க்கை சிலருக்கு மட்டுமே வாழ அனுமதிக்கின்றது. பலருக்கும் உருளவைத்துக் கொண்டிருக்கின்றது. வேலை தேடுதல், வேலையின்மை, தகுதிக்கேற்ற வேலையில் இல்லாமல் தரமான மனிதர்களின் அறிமுகம் இல்லாமல் தடுமாறி, விழுந்து, எழுந்து, புரண்டு வெளியே சொல்லமுடியாத வார்த்தைகளை உள்ளே வைத்துக் கொண்டு நானும் வாழ்கிறேன் என்ற எண்ணத்தை மற்றவர்களுக்கு உருவாக்க வைத்துக் கொண்டிருக்கின்றது. அடிப்படை வசதிகளைத் தக்க வைப்பதில் 70 சதவிகித மக்கள் அன்றாடம் போராடிக் கொண்டிருக்கின்றார்கள். பெற்றதை இழந்து விடக்கூடாது என்ற கவனமும் பெற வேண்டியதை விரைவில் பெற்று விட வேண்டும் என்ற அவசரமும் கலந்த வாழ்க்கையைத் தான் இங்கே ஒவ்வொருவரும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.


வாழ்ந்த ஊருக்கும் வாழும் ஊருக்கும் உண்டான இடைவெளியே வெறுமனே 300 கிலோமீட்டர் தான் என்றாலும் கடல் தாண்டி வாழும் அனுபவங்கள் தான் எனக்குக் கிடைக்கின்றது. பேசும் மொழி, வாழும் கலாச்சாரம் என்று எல்லாவகையிலும் புதிய தேசத்தில் வாழும் வாழ்க்கை தான் என்பதாக எனக்குத் தோன்றுகின்றது. இது அவரவர் வாழும் ஊரை வைத்தே முடிவு செய்து கொள்ள முடியும். உடலும் மனமும் வாழ்ந்த ஊருக்குத் தகுந்தாற்போல மாற்றம் கொண்டாலும் ஆழ்மன எண்ணங்கள் இத்தனை வருடங்கள் ஆன போதும் இன்னமும் மாறாமல் அடம்பிடிக்கும் ஆச்சரியத்தை இந்த முறை ஊர் சென்று திரும்பி வரும் போது உணர்ந்தேன்.


திருப்பூரில் இருந்து திருச்சி வரைக்கும் தான் ரயிலில் விரும்பிய நேரத்தில் செல்ல முடியும். அதே போல வரும் போது இவ்வாறு இதே ரயிலில் வரமுடியும். ஆனால் நீண்ட தூர பேருந்துப் பயணம் என்பது உடம்புக்கு வெறுக்கக்கூடியதாக உள்ளது என்பது வெறுமனே வார்த்தையாகச் சொல்லிவிட முடியாது. நம் ஆரோக்கியத்தில் அளவுகோலாக எடுத்துக் கொள்ள முடியும்.


பொதுப் போக்குவரத்தில் பயணிக்கும் போது உடம்புக்குக் கிடைக்கும் அவஸ்தைகளை மீறி அரசு பேருந்தில் பயணிக்கும் கலவையான மனிதர்கள் மூலம் நமக்குக் கிடைக்கும் அனுபவங்கள் இன்னமும் மாறாமல் இருக்கின்றது. ஓரளவுக்கேனும் நம் உடம்புக்குச் சுகத்தைக் கொடுத்து பழக்கி விட்டோம் என்ற எண்ணம் ஒவ்வொருமுறையும் ஊருக்குச் சென்று வரும் அப்பட்டமாக உணர்த்துகின்றது. வயல்களையும், வரப்புகளையும், காடு, செடி, கொடி என்பதனை புகைப்படங்கள் பார்த்து ரசித்தே பழகிவிட்ட நியூரான்களுக்கு நிஜத்தை ரசிக்கமுடியாத நிலைக்குத் தள்ளிவிட்டதோ என்று இந்த முறை நினைத்துக் கொண்டேன்.


முன்பெல்லாம் குளித்தலையைத் தாண்டும் போது பக்கவாட்டில் தெரிந்த காவேரி ஆற்றைக் கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்த நினைவு வந்து போனது. இப்போது வாசித்த வார்த்தைகளின் அடிப்படையில் மணல் மாபியா குறித்தே யோசித்துக் கொண்டிருந்தேன். இயல்பாக அனுபவிக்க வேண்டிய அழகும் அங்கே இல்லாமல் போய்விட்டது. ஆற்றுக்குள் வரிசையாக நிற்கும் லாரிகளை எண்ணிக்கையாகப் பார்க்கத் தோன்றியது. கிராமத்து மனிதர்கள் இன்னமும் பல இடங்களில் மகிழ்ச்சியாகத் தான் இருக்கின்றார்கள். எதையும் காரணகாரியத்தோடு யோசித்துப் பழகாமல் இருப்பதே முக்கியக் காரணம் என்று நினைத்துக் கொண்டேன்.

அன்றாடம் நடக்கும் அரசியல் அசிங்கம் அவர்களைத் தாக்குவதில்லை. அது குறித்த அக்கறையும் அவர்களுக்கு இல்லை. தமிழ்நாட்டில் புழங்கும் செய்தித்தாள்களும், வாராந்திர பத்திரிக்கைகளும் அத்தனை பெரும்பாலான பேர்களைச் சென்றடைவதில்லை. இதற்குப் பின்னால் எத்தனையோ சமூகவியல் காரணங்கள் இருக்கலாம். ஆனால் அவர்களின் மகிழ்ச்சிக்கு இதுவே முக்கியமானதாக உள்ளது என்பதாகத்தான் எனக்குத் தெரிகின்றது. இணையதளங்களில் வரும் செய்திகள் குறித்து எவருக்கும் அக்கறையில்லை. பத்தில் எட்டு பேர்கள் அப்படியெல்லாம் இருக்கின்றதா? என்ற எண்ணத்தில் இருப்பதால் மன அழுத்தம் இல்லாமல் மகிழ்ச்சியாகவே வாழ்கின்றனர்.


இங்கே நாள்தோறும் லட்சக்கணக்கான பேர்கள் இணையத்தில் எழுதும் எந்தச் சிந்தனைகளும் சேர வேண்டியவர்களுக்கு இங்குச் சேரவே இல்லை. இங்குச் சிலருக்கு சிந்திப்பதே வாழ்க்கையாக உள்ளது. பலருக்கும் சிந்திக்கவே நேரம் இல்லாமல் இருப்பதால் இந்த வாழ்க்கையின் அர்த்தம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமாக உள்ளது. இதன் காரணமாகவே தமிழ்நாட்டில் பெரிய அசம்பாவிதங்கள் இன்னமும் நடக்காமல் இருக்கின்றது. அதற்கு உங்கள் பார்வையில் புரட்சி, எழுச்சி, மக்களின் அறியாமை என்று என்ன பெயர் வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம்.


திருச்சி வந்ததும் சதாப்தி ரயில் தடதடத்து திருப்பூர் நோக்கி போய்க் கொண்டிருந்த போது குழந்தைகள் (இப்போது அவர்கள் பெண்கள்) ஆசுவாசமாக இருந்ததைப் பார்த்து அவர்களிடம் இரண்டு கேள்விகள் கேட்டேன்.

"ஊர்ப்பயணம் பிடித்திருந்ததா?"

"பிடித்திருந்ததுப்பா."

"இந்தப்பக்கம் வந்துடலாமா?"

வேகமாக மூவரும் மறுத்துத் தலையாட்டினார்கள்.

(தொடர்ந்து பேசுவோம்............)


படம் (நன்றி) Henk Oochappan


தொடர்புடைய பதிவுகள்