Wednesday, September 13, 2017

வெளிச்சம் தேடும் பறவைகள்பள்ளி முதல் கல்லூரி வரைக்கும் என்னுடன் படித்த சிலரைப் பல சமயம் நினைத்துக் கொள்வதுண்டு. அவர்கள் படிப்பதே தெரியாது. படிப்பு குறித்த பயமிருக்காது. அலட்டல் இல்லாமல் மதிப்பெண்களை அள்ளிக் கொண்டு வந்து அசத்துவார்கள். ஆச்சரியமாக இருக்கும். நன்றாக விபரம் புரிந்தபின்பு இதற்குப் பின்னால் உள்ள காரணங்களை ஆராய்ந்த போது நாம் வாழும் சூழ்நிலையும், குடும்பத்தின் பொருளாதார நிலையும் முக்கியப் பங்கு வகிப்பதாகப் புரிந்து கொள்ள முடிந்தது. இதிலும் அனிதா போன்ற விதிவிலக்குகள் உண்டு. 

சிறு, குறு கிராமங்களைச் சார்ந்து வாழும் மாணவர்கள் தங்கள் குடும்பத்தின் வேலைகளையும் செய்து அத்துடன் படிக்க வேண்டிய சூழ்நிலையில் தான் இங்கே பெரும்பாலானோர் இருக்கின்றார்கள். படிப்பு என்பது வீட்டில் செய்ய வேண்டிய ஐந்து வேலைகளில் அதுவும் ஒன்று. ஆனால் இன்று விவசாய வேலைகள் குறைந்து, இடப்பெயர்வு, நகரமயமாக்கல் என்று மாறிய சூழ்நிலையில் அனைவரின் வேலைத்தன்மையும் மாறிவிட்டது. தனி நபர்களின் பொருளாதார வசதிகள் பெருகியுள்ளது. அவரவர் பயன்படுத்தும் வசதிகளைப் பொறுத்து வாழ்க்கைத் தரமும் மாறியுள்ளது. 

பரம ஏழைகள் ஏழைகளாக மாறியுள்ளனர். ஏழைகள் நடுத்தரவர்க்கமாக மாறியுள்ளனர். நடுத்தரவர்க்கம் மேம்பட்ட உயர் நடுத்தரவர்க்கமாக மாறியுள்ளனர். பள்ளிப்படிப்போடு தனிப்பட்ட பயிற்சிகளில் கலந்து கொள்கிறார்கள். அறிவின் தன்மை மாறியுள்ளது. தற்போது படிக்கும் குழந்தைகளுக்குப் படிப்பைத் தவிர வேறொன்றும் வேலையில்லை என்கிற நிலைக்கு வந்து சேர்ந்துள்ளது. 

வீட்டில் ஒருவர் மட்டும் சுமார் ரகம். காரணம் அவர் எதிர்பார்க்கும் சூழ்நிலை பள்ளியில் இல்லை. செயல்முறை கல்வியில் அவர் ஆர்வமாக இருக்கின்றார். ஆனால் பள்ளி எதிர்பார்ப்பதோ மனப்பாடம் என்ற ஒற்றை வார்த்தையில் நிறுத்த அவர் மறுதலிக்கின்றார். உன்னால் முடிந்தவரைக்கும் முயற்சி செய் என்று கட்டாயப்படுத்தாமல் ஒதுங்கி விட்டேன். மற்ற இருவரும் போட்டிகளில் முந்தி வரக்கூடியவர்கள். படிப்பைத் தவிர வேறு எந்த வேலைகளிலும் கவனம் செலுத்த விரும்பாத சுகவாசிகள். பள்ளி எதிர்பார்ப்புக்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொண்டவர்கள். 

ஒவ்வொருமுறையும் இவர்களின் மதிப்பெண்களைப் பார்க்கும் போது நான் பழகிய பல நண்பர்களின் நினைவு தான் எனக்கு வந்து போகும். கூடவே இவர்களின் தனிப்பட்ட திறமைகளும் ஆச்சரியமளிக்கும். 

உங்கள் மகள் விளையாட்டில் மிகச் சிறப்பாக உள்ளார். நீங்க கொஞ்சம் ஒத்துழைப்புக் கொடுத்தால் என்னால் அவரை நல்ல இடத்திற்கு அழைத்துச் செல்ல முடியும் என்று ஒரு முறை மகளின் உடற்பயிற்சி ஆசிரியர் அலைபேசியில் என்னிடம் கேட்ட போது எனக்கே சற்றுக் குழப்பமாக இருந்தது. அவர் முதலில் கராத்தே பக்கம் சென்று கொண்டிருந்தார். அப்புறம் என்சிசி தொடர்ச்சியாக என்எஸ்எஸ் என்று ஏதோவொரு பக்கம் மாறி மாறி பயணித்துக் கொண்டிருந்தார். இப்போது விளையாட்டு என்கிற செய்தி வந்து சேர்ந்தது. 

என்னடா இது? இத்தனை நுணுக்கமாக இவர்களைக் கவனித்துக் கொண்டிருக்கின்றோமே? நம்மால் இதை யூகிக்க முடியவில்லையே? என்று யோசித்துக் கொண்டு வீட்டில் வந்து கேட்ட போது மற்றொரு அதிர்ச்சி காத்திருந்தது. அவரின் தனிப்பட்ட ஆர்வம் கலந்த பல விசயங்களை அப்போது தான் என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. நான் ஒன்றும் சொல்லவில்லை. ஆசிரியர் பின்னால் செல்லத் தொடங்கினார். 

ஓட்டப்பந்தயத்தில் தொடங்கியது. கால்பந்து விளையாட்டில் வந்து நின்றது. மாவட்ட பந்தயங்களில் கலந்து கொண்டு வரும் போது எனக்குக் குழப்பம் தான் மிஞ்சும். இன்னும் இரண்டு நாட்கள் தான் பரிட்சை உள்ளது. இவர் என்ன எழுதப் போகின்றார்? என்று யோசித்துக் கொண்டிருப்பேன். ஆனால் மதிப்பெண்களைப் பார்த்தால் 90 சதவிகிதத்தில் வந்து நிற்கும். படிப்பை மட்டுமே கவனத்தில் கொண்டு படிக்கும் இவரின் தோழிகள் வாங்கும் 98 சதவிகிதம் மதிப்பெண்களை இவருடன் ஒப்பிடவே மாட்டேன். கணக்கில் எடுத்துக்கொண்டால் அவர்களைப் போல இரண்டு மடங்கு திறமை உள்ளவராக நினைத்துக் கொள்வேன். 

மிகக் குறுகிய காலகட்டத்திற்குள் இந்த மதிப்பெண்கள் வாங்கும் போது நிச்சயம் இது தனிப்பட்ட திறமை தான் என்பதை மனதில் குறித்து வைத்துக் கொண்டேன். ஹிந்தி என்பதற்காகத் தனியாக அனுப்பி வைத்தேன். பாடம் சொல்லிக் கொடுத்த பெண்மணி பாடத்தை விடப் பணத்தில் மட்டும் குறியாக இருந்தார். குழிக்குள் கால் வைத்தாகி விட்டது என்று பொறுமையாக இருந்தோம். குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் தேர்வுக்கு அனுப்பாமல் அடுத்தத் தேர்வு காலகட்டங்களை மனதில் வைத்துக் கொண்டு இழுத்துக் கொண்டே சென்றார். கடைசி இரண்டு மாதங்கள் படித்து எழுதினார். ஒவ்வொரு இடத்திலும் தனிப்பட்ட நபர்கள் உருவாக்கும் நெருக்கடிகளையும் மீறி தன் தகுதியை நிரூபித்துக் கொண்டே வருவதைக் கவனித்துள்ளேன். 

கவனித்தல் என்பது வெவ்வேறு நிலைகளைக் கொண்டிருக்கும். ஆனால் கவனித்த பின்பு உள்வாங்குதல் தான் மாணவரின் அறிவுத்திறனில் முக்கியப் பங்கு வகிக்கும். ஒரு வகுப்பறையில் 40 மாணவர்கள் இருக்கின்றார்கள் என்று வைத்துக் கொள்வோம். ஒரு ஆசிரியர் நடத்தும் பாடங்களும், அவர் சொல்லித்தருகின்ற விசயங்களை மாணவர்கள் எப்படிக் கவனித்தார்கள் என்பதனை விட எந்த அளவுக்கு உள் வாங்கினார்கள் என்பதில் தான் அந்த ஆசிரியரின் வெற்றித் தொடங்குகின்றது. இந்த இடத்தில் ஆசிரியரின் திறமையை நம்மால் உணர முடியும். மாணவர்களால் உள்வாங்க முடியவில்லை என்றால் ஆசிரியரின் தவறு அது. மாணவர்களின் சிந்தனைகளை அவரால் ஒருங்கே ஒரு புள்ளியில் கொண்டு வரமுடியவில்லை என்றே அர்த்தம். 

இது இயல்பான பழக்கமாக உருவாகின்றதா? அல்லது அவரவர் ஆர்வத்தின் அடிப்படையில் வளர்கின்றதா? என்பதெல்லாம் கடந்த சில ஆண்டுகளாக வீட்டில் உள்ள மூவரின் வெவ்வேறு குணாதிசியங்களை வைத்து நானே பலவித கேள்விகளை எனக்குள் எழுப்பிக் கொள்வதுண்டு. என்னை, என் மனைவியை வைத்து என் குழந்தைகளின் அறிவுத்திறனை ஒப்பிடவே முடியவில்லை. அவர்களின் வளர்ந்த சிந்தனைகள் வேறுவிதமாக உள்ளது. ஒவ்வொரு தலைமுறையும் முந்தைய தலைமுறையை விட வீரியமாக உள்ளது என்பது பொதுவான கருத்தாக இருந்தாலும் தற்போதைய தலைமுறை என்பது இதுவரையிலும் பார்த்திராத வினோத கூறுகளைக் கொண்டிருக்கின்றது. காரணம் படிப்படியாக வளர்ந்து வந்த தொழில்நுட்ப வளர்ச்சி. 

நாம் கடந்து வந்த ஒவ்வொரு நூற்றாண்டுகளையும் அதன் வளர்ச்சி சார்ந்த சாதகப் பாதக அம்சங்களையும் கணக்கில் எடுத்துப் பாருங்கள். படிப்படியான வளர்ச்சியாகத் தான் இருந்து இருக்கும். ஆனால் கடந்த 25 ஆண்டுகளில் உருவான அதிவேக தொழில்நுட்ப வளர்ச்சி என்பது ஒரு நூற்றாண்டு வளர்ச்சியைத் தனது காலாண்டு பருவத்தில் செரித்துத் தின்று விட்டது. இதனால் சாதகமும் உள்ளது. பாதகமும் உள்ளது. சிந்தனைத் திறனின் தன்மை மாறியுள்ளது. எவற்றுக்கெல்லாம் நாம் மூளையைப் பயன்படுத்திக் கொண்டு இருந்தோமோ அதனைக் கருவிகள் கையாளத் தொடங்கி விட்டது. கருவிகளுக்குத் தேவைப்படும் கட்டளைகளை உருவாக்க மட்டுமே மனித சிந்தனை தேவைப்படுவதாக உள்ளது. பத்து சதவிகித உழைப்பென்பது 90 சதவிகித அறிவைப் பெற்றுள்ளதாக மாற்றப்பட்டு விடுகின்றது. இது இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் நடந்த நம்ப முடியாத மாற்றம். 

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை மாதத்திற்கு ஒரு முறையாவது இவர்கள் பயிலும் பள்ளிக்குச் செல்வதுண்டு. காரணம் வருடந்தோறும் ஒவ்வொரு வகுப்பிற்கும் ஆசிரியர்கள் மாறிக் கொண்டே இருந்தார்கள். வருகின்ற ஆசிரியர் ஒரு வருடம் கூடத் தாக்குப்பிடிப்பதில்லை. நிர்வாகம் கொடுக்கும் அழுத்தம் ஒரு பக்கம். அவர்களின் தனித்திறமை தள்ளாடத் தொடங்கும் போது அது மாணவர்களின் மூலமாக, பெற்றோர்கள் வாயிலாக நிர்வாகத்திற்குச் சென்று சேரப் பிரச்சனைகள் உருவாகத் தொடங்கி விடும்.

மாறி வந்த புதிய ஆசிரியர்களிடம் அறிமுகம் செய்து கொண்டு பேசுவதுண்டு. கடந்த இரண்டு ஆண்டுகளாகச் செல்வதில்லை. பத்து நிமிடம் பேசும் போதே ஆசிரியரின் தரத்தை ஓரளவுக்கு யூகித்துக் கொள்ள முடிகின்றது. இனி பேசி ஒன்றும் ஆகப்போவதில்லை என்று அமைதியாக வந்துவிடுவதுண்டு. 

சிறிய தொழிற்சாலைகளின் அடுத்த கட்ட வளர்ச்சியான பெரிய நிறுவனமாக மாறும் என்பது பொதுவிதி. அது ஆச்சரியமல்ல. அது தான் உண்மையான வளர்ச்சி. ஆனால் கல்விக்கூடங்கள் நிறுவனமாக மாறும் போது அடிப்படைத்தன்மை மாறி மாணவர்களை எந்திரமாக மாற்றும் பணியைச் செய்யத் தொடங்கிவிடுகின்றது. இதனைக் கண்கூடாகக் கடந்த மூன்று ஆண்டுகளாகக் குழந்தைகள் படிக்கும் பள்ளியின் மூலம் பார்த்து வருகின்றேன். 

தாங்கள் செய்யும் ஒவ்வொரு செயலுக்குப் பின்னாலும் பணம் வரும் வாய்ப்பை உருவாக்க முடியுமா? என்று ஒரு கல்விக்கூடம் யோசிக்கும்பட்சத்தில் அங்கே என்ன நிகழும்? அது தான் இப்போது தமிழ்நாடு முழுக்க நடந்து வருகின்றது, இவர்களின் தனிப்பட்ட திறமைகள் தேவையில்லாமல் போய்விடுகின்றது. திறமைகள் உள்ள குழந்தைகள் ஏன் நமக்குத் தேவையில்லாத வேலை? என்று யோசிக்கத் தொடங்கும் போதே அவர்களும் சராசரி மாணவராக மாறிவிடுகின்றார்கள். இதையும் மீறிப் பெற்றோர்களும் குழந்தைகளும் உணர்வுப் பூர்வமாக ஒன்றிணைந்து வாழும் குடும்பத்தில் தனித்திறமை கொண்ட குழந்தைகள் தங்கள் தனித்தன்மையை ஒவ்வொரு சமயத்திலும் வளர்த்துக் கொண்டே வருகின்றார்கள். 

ஆனால் இவர்களின் தனித்திறமைகள் வளர்வதற்கு நாம் எந்த அளவுக்குப் பாடுபட வேண்டும்? இருண்ட உலகத்திற்குள் வெளிச்சம் தேடும் வாழ்க்கையை எப்படிக் கையாள வேண்டும் என்பதனைப் பற்றிப் பார்க்கலாம்?


படம் (நன்றி) Henk Oochappan

(தொடர்ந்து பேசுவோம்) 

தொர்புடைய பதிவுகள்3 comments:

Thulasidharan V Thillaiakathu said...

திறமைகள் உள்ள குழந்தைகள் ஏன் நமக்குத் தேவையில்லாத வேலை? என்று யோசிக்கத் தொடங்கும் போதே அவர்களும் சராசரி மாணவராக மாறிவிடுகின்றார்கள். இதையும் மீறிப் பெற்றோர்களும் குழந்தைகளும் உணர்வுப் பூர்வமாக ஒன்றிணைந்து வாழும் குடும்பத்தில் தனித்திறமை கொண்ட குழந்தைகள் தங்கள் தனித்தன்மையை ஒவ்வொரு சமயத்திலும் வளர்த்துக் கொண்டே வருகின்றார்கள்.// ஆம் முற்றிலும் உண்மை...

//ஆனால் இவர்களின் தனித்திறமைகள் வளர்வதற்கு நாம் எந்த அளவுக்குப் பாடுபட வேண்டும்? இருண்ட உலகத்திற்குள் வெளிச்சம் தேடும் வாழ்க்கையை எப்படிக் கையாள வேண்டும் என்பதனைப் பற்றிப் பார்க்கலாம்?// தனித் திறமையை வெளிக்கொணர பெற்றோர்களின் ஒத்துழைப்பும், ஆதரவும், உழைப்பும் தேவையாகத்தான் இருக்கிறது ஒரு நிலையை அடையும் வரையிலேனும்!!

நல்ல கட்டுரை. தொடர்கிறோம்

துளசி, கீதா

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

பள்ளியில் நம் குழந்தைகள் பெறும் அனுபவங்களை நாம் பகிர்ந்துகொள்ள வேண்டியது மிகவும் அவசியம். கோடிக்கணக்கில் சம்பாதிக்கின்ற என் உறவினர் ஒருவர் அடிக்கடிக் கூறுவார், "பாப்பா (அவருடைய மகள்) என்ன வகுப்பு படிக்குதுன்னே தெரியாது. அப்பப்ப கேட்குற பணத்தைக் கொடுத்துடுவேன். வியாபாரத்தை முடிச்சுட்டு வர்றதுக்கு ராத்திரி 11.00க்கு மேல ஆயிடுது. ஞாயிற்றுக்கிழமையும் காலை வியாபாரம்." அவர் தன் குடும்பத்தினரோடு அமர்ந்தோ, பேசியோ நான் பார்த்ததேயில்லை. அவர் தன் மகள் படிக்கும் வகுப்பினையே தெரியாத நிலையில் எதைச் சாதித்துவிடப் போகப் போகிறார் என்றே என்னால் உணரமுடியவில்லை. பணம் ஒன்றையே பிரதானமாக ஆக்கிக்கொண்டு தம்மைத் தாமே ஏமாற்றிக் கொண்டிப்பவர்களைப் பற்றி என்ன கூறுவது?

G.M Balasubramaniam said...

குழந்தகளின் பின்னணி அறிந்ததாலேயே ஒதுக்கீடு முறைகள் வந்ததோ என்றும் எண்ணுவதுண்டு. அவர்கள் பந்தயங்களில் ஒருவித ஹாண்டிகாப்புடனே பங்கேற்க வேண்டி இருக்கிறது மேலும் குடும்பச் சூழல்களும் பெரும்பாலும் அவர்களுக்கு எதிராகவே இருந்தது இப்போதும் கிராம நகர குழந்தைகளிடையே இந்த புரிதல் வித்தியாசம் காணலாம்