Showing posts with label மின் நூல். Show all posts
Showing posts with label மின் நூல். Show all posts

Thursday, March 01, 2018

ஞாநி -- தாயுமானவன்





கடந்த 25 வருடங்களில் தமிழகத்தில் உள்ள முக்கியப் பிரபல்யங்கள் பலரையும் நேரிடையாகச் சந்தித்துள்ளேன். நெருக்கமாகப் பழகும் வாய்ப்பும் அமைந்து இருந்தது. இன்று வரையிலும் பலருடனும் அந்தத் தொடர்பு இருந்து வருகின்றது. ஆனால் என் வாழ்க்கையில் ஞாநி என்பவர் எங்கள் குடும்பத்தில் ஒருவர் போலவே என்னுடன் இருந்தார். இவருடன் பழகிய அத்தனை பேர்களும் இதனைத் தவறாமல் குறிப்பிடுகின்றார். 
புத்தகங்கள் அதிகம் வாசிக்காத என் சகோதரிகள், உறவினர்கள் என அத்தனை பேர்களும் ஞாநி இறந்த தினம் அன்று என்னிடம் தொடர்ச்சியாக விசாரித்துத் தங்கள் வருத்தங்களைத் தெரிவித்தனர். அந்த அளவுக்குத் தன் தனிப்பட்ட குணநலனால் எங்கள் குடும்ப உறுப்பினர்களைக் கவர்ந்தவர். 
நிச்சயம் இவர் நினைவுகள் எதிர்காலத்தில் பலரின் பார்வைக்குப் பட வேண்டும் என்பதற்காக இந்த மின் நூலை தயாரித்தேன். என் ஆழ்ந்த அஞ்சலிகள்.
நான் இதுவரையிலும் வெளியிட்டுள்ள மின் நூலுக்கு அட்டைப்படத்தை பல்வேறு நண்பர்கள் இலவசமாக வடிவமைத்துக் கொடுத்துள்ளனர்.  குறிப்பாக என் இனிய நண்பர் மதுரைத் தமிழன் ( தற்போது அமெரிக்காவில் வசிப்பவர்)மிக விரைவாக வடிவமைத்துக் கொடுப்பார்.  மாறுதல் சொன்னால் உடனே மனம் கோணாமல் திருத்தி அனுப்பி வைப்பார்.  ஞாநி மின் நூலுக்கும் அவரே தான் வடிவமைத்து இருந்தார்.
திடீரென்று ஒரு நாள் மயிலாடுதுறையில் இருந்து நண்பர் சுரேஷ் மின் அஞ்சல் வாயிலாக என்னைத் தொடர்பு கொண்டார்.  அவர் தொடர்ச்சியாக என் மின் நூல்களை படித்து கவரப்பட்டு எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்க என்று கேட்டு இருந்தார். அவர் மயிலாடுதுறையில் புகைப்பட கலைஞராக உள்ளார்.  அவர் வரைந்த அட்டைப்படம் மிகச் சிறப்பாக வந்துள்ளது.  நண்பர் சுரேஷ் க்கு நன்றியும் அன்பும்.






Friday, January 27, 2017

அடிச்சுவடுகளை அங்கங்கே பதிக்கவும்

பழைய குப்பைகள் மதிப்புரை 

‘வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ளவேண்டும் என்ற ஆசை எப்போதும் உண்டு. வீட்டில் இருக்கும் ஒவ்வொருவரும் முறை வைத்துக் கூட்டிப் பெருக்கிக் கொண்டே இருந்தாலும் ஏதோவொரு ரூபத்தில் வீட்டுக்குள் ஏதோவொரு இடத்தில்குப்பைகள் இருந்து கொண்டே இருக்கும்’ என்று சொல்லும் ஜோதிஜிதன் மனதில் தேங்கிக் கிடக்கும் பழைய குப்பைகளை வெளியே கொட்ட முயன்றிருக்கிறார் இந்த மின்னூல் மூலம்.

அவரது பல கட்டுரைகளை, சில மின்புத்தகங்களைப் படித்திருக்கிறேன்.அவரது எழுத்துக்கள் எந்தவிதப் பாராபட்சமுமின்றி அகப்பட்டவர்களை எல்லாம் ‘சுருக் சுருக்’ என்று ஊசியாய் குத்தும். ‘நறுக் நறுக்’ என்று கேள்விகள் கேட்கும். உண்மைகளை அப்பட்டமாய் போட்டு உடைக்கும்.இந்தப் பழைய குப்பைகளில் ‘சுருக் சுருக்’, ‘நறுக் நறுக்’ சற்றுக் குறைவு.ஏனெனில் இது அவர் கடந்து வந்த பாதையைப் பற்றிய சுயஅலசல். கடந்து வந்த பாதை கரடுமுரடாக இருந்ததால் தான் இவரும் இப்படி இருக்கிறாரோ என்று தோன்றுகிறது.நடுநடுவே இதுவரை வெளிக்காட்டாத தனது மென்மையான பகுதியை இந்தப்‘பழைய குப்பைகள்’ மூலம் வெளிக் காட்டியுள்ளார் என்று சொல்லலாம்.

தனது தொழில் நிமித்தம் தான் வாழும் வாழ்க்கையைவிட இவர் மிகவும் ரசிப்பது தனது எழுத்துலக வாழ்க்கையைத் தான். என்னவென்று தெரியாமல் வலைப்பதிவு செய்ய ஆரம்பித்தவர்,பல்லாயிரக்கணக்கான வாசிப்பாளர்களை, ரசிகர்களைப் பெற்றுத் தந்த தமிழ் இணையத்தை நினைவு கூர்கிறார்,இந்தப் பழைய குப்பையில்.‘ஏதோ ஒரு காலத்தில் நிச்சயம் இறந்துவிடத்தான் போகிறோம். நாம் விட்டுச் செல்வது குடும்பத்திற்கான நலன் என்பதோடு, சமூகத்திற்கான பங்களிப்பு; நாம் இல்லாதபோதும் நம்மைப்பற்றி நம் எழுத்துக்கள் புரிய வைக்கும். வலைப்பதிவு எழுத்தென்பது உணர்ந்தவர்களுக்கு வாழ்நாள் பொக்கிஷம்’என்கிறார்.

எழுத்தின் மூலம் நண்பர்கள் ஆனவர்களிடமிருந்தும், விமரிசனம் என்ற போர்வையில் ‘நீ இப்படித்தான்’ என்று ஒரு முத்திரை பதித்து ஓரம் கட்டப்பார்ப்பவர்களிடமிருந்தும்இவர் கற்றதும், பெற்றதும்இவரைஅடுத்த நிலைக்கு நகர வைத்திருக்கிறது. சமூகம் பற்றிய ஆழமான கட்டுரைகளை எழுத இவருக்குஆவல் பிறந்தது அந்தக் காலகட்டத்தில்தான்.

‘புதிதாக வலைத்தளங்களில் எழுத ஆரம்பிப்பவர்கள் ஆரம்பத்தில் எதைப்பற்றி எழுத வருகிறதோ,அதை எழுதலாம். ஆனால் படிப்படியான மாறுதல் இந்த எழுத்துக்களத்தில் நிச்சயம் தேவை. நீங்கள் ரசித்து எழுதும் ஒருவிஷயம் படிப்பவர்களைக் கவராமல் போகலாம். நீங்கள் மேம்போக்காக எழுதுவது மிகுந்த வரவேற்பைப் பெறலாம். இதற்குக் காரணம் படிப்பவனின் வாழ்க்கையை எழுதுபவனால் யூகிக்க இயலாமல்போவதுதான்’ என்று சொல்லும் ஜோதிஜி, சமூகம் சார்ந்து எழுதும்போதுதான் நமது எழுத்துத் தகுதிகள் நமக்குப் புரிய வரும் என்கிறார்.தான் கடந்து வந்த ஒவ்வொரு நிலையையும் பதிவு செய்யும் போதே அப்போதைய சமூகநிலை பற்றிய தனது எண்ணங்களையும் எழுதி வருகிறார்.பல வலைப்பதிவாளர்கள் இதைச் செய்வதில்லை என்பதையும் ஆதங்கத்துடன் குறிப்பிடுகிறார்.

வேர்ட்ப்ரஸ் தளத்தில் வலைப்பதிவு செய்ய ஆரம்பித்தவர் முதலில் எழுதியது தனது தந்தையைப் பற்றித்தான். எந்தத் தந்தை தனது முன்னேற்றத்திற்குத் தடையாக இருப்பதாக நினைத்தாரோ அவரைப் பற்றிய எண்ணங்கள் தனது மகள்கள் பிறந்ததும் மாறியதை, ‘கால் நூற்றாண்டு காலம் அவரை வெறுத்துக்கொண்டே வாழ்ந்த வாழ்க்கையில் என் குழந்தைகளின் காலடித் தடங்களைப் பார்த்த போது அப்பா என்ற பிம்பத்தின் மீது முதன் முறையாக மரியாதை உருவானது’ என்றுகுறிப்பிடுகிறார்.தனது எழுத்திற்கு மூலகாரணமாக தன் அப்பா வாங்கிப்படித்த ‘தினமணி’யில் வந்த கட்டுரைகளையும், அந்தக் கட்டுரைகளையும், துணுக்குச் செய்திகளையும் சேகரித்து வைத்த தனது வழக்கத்தையும், தனது புத்தகம் வாங்கும் பழக்கத்தையும் சொல்லுகிறார்.ஆறாம் வகுப்பில் ஆரம்பித்த தனது வாசிக்கும் பழக்கம் படிப்படியாக மாறி வந்ததையும் சொல்லுகிறார்.

திருமணமும், தொடர்ந்து பிறந்த இரட்டையர்களும் தனது காட்டாற்று வாழ்க்கையை நதியாக மாற்றியதை சொல்லும்போது நாம் இதுவரை அறிந்திராத மென்மையான மனம் படைத்த ஜோதிஜி நம் முன் தோன்றுகிறார்.அதேமென்மை மாறாமல் தனது சொந்த ஊர் பற்றிச் சொல்லுகிறார். அந்தக் காலத்தில் தன் மனதை நிறைத்த முதல் காதலையும்,‘அவளது’ பெயரையும், தனது பெயரையும் செதுக்கி வைத்த ஆசை மரத்தைப் பற்றியும்ஒரே ஒரு வரியில் சொல்லிவிட்டுக் கடந்துவிடுகிறார்.

(இன்னொரு புத்தகத்திற்கென்று சேமித்து வைத்திருக்கிறாரோ?)

மிகப்பெரிய கூட்டுக் குடும்பத்தின் மூத்த மருமகளாக இருந்த தன் அம்மா தனது அமைதியான நடவடிக்கை மூலமே தனது அப்பாவின் முரட்டுத்தனத்திற்கு ஈடு கொடுத்ததைச்சொல்லுகிறார்.அதே அம்மாவிற்கும் தனது குழந்தைகளுக்கும் இடையே நிற்கும் தலைமுறை இடைவெளி பற்றிப் பேசுகிறார். தன் குழந்தைகளின்வாழ்க்கையை தினமும் ரசிக்கும் ஒரு அப்பாவாக தனது நிலையை வெகு சுவாரஸ்யமாக சொல்லிக்கொண்டே போகிறார். நடுவேஇன்றைய கல்வியின் தரம் பற்றியும் தனது ஆதங்கத்தை வெளியிடத் தவறவில்லை.(தற்போதைய கல்வியின் பலன் –அரிசி எந்த மரத்தில் வருகின்றது? என்று கேட்கும் குழந்தைகள்)

உலகத்தை உணர வைத்த காலங்களை ஒவ்வொன்றாக நினைவிற்குக் கொண்டு வந்து சொல்லிக்கொண்டே போகிறார்.தான் பிறந்த செட்டிநாடு, அதன்மக்கள் என்று ஆரம்பித்து வள்ளல் அழகப்பருக்கு தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுகிறார்.

தான் செய்த ரயில் பயணம் தன் ஊர் ரயில்வே ஸ்டேஷனை, அதன் நீண்ட நடைமேடையை(‘அதுதான்என்போதிமரம்’) நினைவுபடுத்த அதைப்பற்றியும் சொல்லுகிறார். ஒவ்வொரு  இடமும் காலப்போக்கில்  உருமாறியிருந்த போதிலும் இவரது நினைவுகள் அங்கங்கே நிலைத்திருப்பதை நாம் உணரமுடிகிறது.

அரசியல், விளம்பரங்கள் என்று தன் பாணியில் வெளுத்து வாங்குபவர் சாதிப் பொங்கலில் சமத்துவ சர்க்கரை என்று களம் புகுகிறார். 2 களங்களில் தான் கண்டதை, கேட்டதை எழுதியவர், மூன்றாவதாக தன் குழந்தைகளுடன் சாதி, மதம் பற்றிய தனது உரையாடல்களை குறிப்பிடுகிறார். தனது கருத்துக்களுடன் தலைவர்கள் சாதிப் பெயரில் விளையாடும் விளையாட்டுக்களையும் தோலுரித்துக் காட்டுகிறார். அங்கெல்லாம் நமக்குத் தெரிவது ஏற்கனவே நாம் அவரது வலைத்தளங்களில் பார்த்த ஜோதிஜி தான்.

அடுத்ததாக இவர் ஆன்மிகம் பற்றிப் பேச ஆரம்பிக்கிறார். திருவாவடுதுறை ஆசானுடன் தான் செய்த பயணம்; பயணத்தின் முடிவில் வந்து சேர்ந்த மடம்; அதன் பூர்வீக வரலாறு (இங்கும் இன்னொரு புத்தகம் தேறும்!) இப்போதைய அதன் நிலைமை, எதிர்கால நிலைமை எல்லாவற்றையும் சொல்லுகிறார். இதன் தொடர்ச்சியாக ஆன்மீகத்தைப் பற்றி இரண்டாவது, மூன்றாவது அத்தியாயங்களும் உண்டு. முதல் சில அத்தியாயங்களில் இருந்த மென்மை இங்கு அடியோடு மாறி தடாலடியாகப் பேச ஆரம்பிக்கிறார் ஜோதிஜி.

கடைசி பகுதி கேள்வி-பதிலாக அமைந்திருக்கிறது.

மொத்தப் பழைய குப்பைகளையும் கிளறிப் பார்த்த பின் – மன்னிக்கவும் – படித்துப் பார்த்தபின் மனதில் வந்த எண்ணங்கள்:

1. கரடுமுரடர் என்ற பட்டம் வாங்கிய ஜோதிஜிக்கு மென்மையான பக்கமும் உண்டு.

2. எங்கு போனாலும் அங்கிருக்கும் மனிதர்களையும் அவர்கள் சார்ந்த சமூகத்தையும் கூர்ந்து கவனித்து எழுதும் எழுத்தாளராக தன்னை இந்தப் புத்தகத்தின் மூலம் மறுபடியும் நிலை நிறுத்திக் கொண்டிருக்கிறார். இவரது சமூக அக்கறை மிகவும் பாராட்டத்தக்கது.

3. ஒரு நிலையிலிருந்து அடுத்த நிலைக்குப் போகும்போது தான் கற்றுக் கொண்டு போவதுடன் தன் அடிச்சுவடுகளை அங்கங்கே பதிக்கவும் தவறுவதில்லை.

4. தான் நிறைய சிந்திப்பதுடன், நம்மையும் அதிகமாகச் சிந்திக்க வைப்பது இவரது சிறப்பு என்று சொல்லலாம்.

5. எத்தனை உயர்ந்த நிலைக்குப் போனாலும் தனது முதலடியை மறக்காத மனிதராக இருப்பதால் தான் இப்படி எல்லாவற்றையும் பற்றி சமமாக எழுத முடிகிறது என்று தோன்றுகிறது.

திரு ஜோதிஜிக்கு மனம் நிறைந்த நல்வாழ்த்துகள்!

திருமதி ரஞ்சனி நாராயணன்
பெங்களூர்.







பழைய குப்பைகள் (மின் நூல்)


இதுவரை வெளியிட்டுள்ள மின் நூல்கள்


ஈழம் -- வந்தார்கள் வென்றார்கள்  (51.356)

தமிழர் தேசம்  (16.652)

காரைக்குடி உணவகம் (23.713)

பயத்தோடு வாழப் பழகி கொள் (11.407)

ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் (10,446)

கொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு (33.475)

வெள்ளை அடிமைகள்  (16. 943)



Tuesday, January 24, 2017

குப்பைகள் வாழ்வளிக்கும்

அன்றாட வாழ்வில் நமக்குத் தேவையற்றது என்ற வகையில் பலவற்றைக் குப்பையில் கொண்டு போய் கொட்டுகிறோம். அதிலும் சூழலியல் ஆர்வலர்கள் மக்கும் பொருட்களைத் தனியாக, நெகிழி பொருட்களைத் தனியாகப் போடுங்கள் எனப் பல பிரச்சாரங்கள் மேற்கொண்டாலும் அனைத்தையும் ஒன்றாகவே கொட்டுகிறோம். அத்தகைய குப்பைகளிலிருந்து நெகிழி பொருட்களை, உலோகச் சிதிலங்களை, பாட்டில்களை எனப் பொருட்களைப் பொறுக்கிச் சென்று காசாக்குகின்றனர். ஆகக் குப்பை கூடப் பலருக்கு வாழ்வளிக்கிறது. 

ஆனால் அனுபவ பாடங்களைத் தொகுப்பாகப் பழைய குப்பைகள் என நண்பர் ஜோதிஜி ஏன் வகைப்படுத்தினார் என்று புரியவில்லை. அந்தக் குப்பைகளைப் புரட்டிப் பார்க்கிறபோது பல ரத்தினங்கள், மதிப்புமிக்க ஆலோசனைகள், வாழ்வியல் கருத்துக்கள் ஏராளமாக இருப்பதாகத்தான் நான் பார்க்கிறேன். 

ஏறக்குறைய 7 ஆண்டுகளில் 700 பதிவுகளைக் கடந்து நிற்கின்றார் நண்பர். முன்னுரையிலும் முதல் அத்தியாயத்திலும் ஒரு மாய எண்ணைக் குறிப்பிடுகின்றார். 

அரசியல் அரங்கில் அனைவராலும் மறக்க முடியாத எண் அது. 1,70,000 + பார்வையாளர்களை மின்னூல் வாயிலாகத் தனது கருத்துக்கள் சென்றடைந்துள்ளது என்பதைப் பதிவு செய்துள்ளார். நிச்சயமாக இந்த எண் சாதனையின் உச்சம் என்பதில் ஐயமில்லை. 

யார் ஒருவர் தனது குடும்பத்தை, உறவுகளை நேசிக்கிறாரோ அவர் வாழ்வில் வரும் சங்கடங்கள், சோதனைகள் இதுவும் கடந்து போம் என்ற வகையில் பறந்துவிடும் என்பது நிதர்சனமான உண்மை. 

3 பெண் குழந்தைகளுக்குத் தந்தை நண்பர் ஜோதிஜி, அந்தத் தேவியரோடு இல்லத்துணையையும் சேர்த்து தேவியர் இல்லம் எனத் தனது வலைத்தளத்திற்குப் பெயரிட்டுப் பதிவுகள் மேற்கொண்டு வருபவர். 

செட்டிநாட்டு நகரமாம் காரைக்குடிக்கு அருகிலிருந்து விரைவு நகரமாம் திருப்பூருக்குப் புலம் பெயர்ந்தது, 

அந்தச் சூழலோடு ஒட்டியும், ஒட்டாமலும் வந்து சென்ற தாய், தந்தை அவர்களின் அருமை பெருமைகள், 

படிக்கப் படிக்கத் தேடல் விரிவடைந்தது, 

தாய் தமிழ்ப் பள்ளி, புதுக்கோட்டை ஞானாலயா புத்தகச் சுரங்கம், 

வலைச்சர ஆசிரியராய் பணியாற்றிய வாரத்தில் அறிமுகப்படுத்திய தளங்கள், 

வலைச்சரம் வாயிலாக விரிவடைந்த நட்பெல்லை, 
வந்த வேகத்தில் காணாமல் போகும் வலைப்பதிவர்கள், 
ஒழுக்கம், நேர்மை, பிறர் பொருளுக்கு ஆசைப்படாமை, 
பள்ளி ஆசிரியர்கள், படித்த ஊர், வாழும் ஊரில் உள்ள நட்புகள் 

இப்படி ஏராளமான செய்திகளை நேர்த்தியாகத் தொடுத்த பூச்சரம் போல் சொல்லிக் கொண்டு போகிறார். மாமனாரைப் பாராட்ட ஒரு மனது வேண்டும். அந்த வகையிலும் நண்பர் மற்றவர்களிடமிருந்து வேறுபட்டு உயர்ந்து நிற்கிறார். 

தந்தைக்கும் மகன்களுக்கும் இடையில் ஒரு சீனப் பெருஞ்சுவர் போல் ஒரு தடுப்பு இருப்பதாகவும், சற்று விலகியிருத்தல்தான் பெரும்பாலான இடங்களில் நிகழ்கிறது என்ற வகையில் ஒரு கருத்தைச் சொல்லியிருப்பார். அந்த இடத்தில் மட்டும்தான் நான் சற்று மாறுபடுகிறேன். தந்தை மகன் உறவில் பலர் மிக நெருக்கமாகவும், உள்ளுக்குள் நூறு கருத்து மாறுபாடுகள் இருந்தாலும் வெளியில் ஒருவரைப் பற்றி மற்றவர் உயர்வாகப் பேசுவதைத்தான் பெரும்பாலும் காண்கிறோம். 

ஜோதியும் தன் தந்தையைப் பற்றி எந்த வரியிலும் குறைத்து மதிப்பிடவில்லை, மாறாக இன்னும் சற்று நெருக்கமாக இருந்திருக்கலாமோ என்கிற ஏக்கமாகத்தான் அதை உணர முடிகிறது. 

நிச்சயமாக இந்தப் புத்தகத்தைப் பழைய குப்பைகள் என ஒதுக்கிவிட முடியாது. அவரவருக்குத் தேவையான பல செய்திகள், அனுபவங்கள் அதிலே பொதிந்து கிடக்கிறது. நண்பருக்கு விரையில் தனது தொழில் சார்ந்து அயல்நாடு செல்லும் வாய்ப்பு ஏற்படும் என எண்ணுகிறேன். அப்படி ஒரு வாய்ப்பு அமைந்தால், நிச்சயமாக நம்மைப் போன்ற வாசகர்களுக்கு அருமையான ஒரு பயணச் சரிதம் மின்னூலாகக் கிடைக்கும். மேலும் மேலும் சிகரங்கள் தொட உளம்கனிந்த வாழ்த்துக்கள்.

தோழமையுடன் 
ஸம்பத் ஸ்ரீனிவாசன் 
மதுரை



Tuesday, January 17, 2017

கவர்ச்சி என்னும் ஜிகினா


எழுத்து...

அது ஒரு வரம்... அந்த வரம் எல்லாருக்கும் அமைவதில்லை என்று இப்போது சொல்வதற்கில்லை. இன்று நாம் பார்க்கும்... ரசிக்கும்... கேட்கும்... எதையும் நம் மனதில் தோன்றும் விதத்தில் அழகான பகிர்வாக்க முடியும். பத்திரிக்கைகள் எல்லாமே சிலருக்கு மட்டுமே சாமரம் வீசிய காலத்தில் தன்னுடைய எழுத்துக்குப் பத்திரிக்கையில் அங்கீகாரம் கிடைக்காதா என்று ஏங்கியவர்களுக்குக் கிடைத்த வரப்பிரசாதமே இணையம்... இணையம் எழுத்தாளர்களை அதிகம் பிரசவிக்கத் தொடங்கிய ஆண்டு 2009. 

கவிதைகள், கதைகள், கட்டுரைகள், ஆன்மீகம், நகைச்சுவை, தொழில் சார்ந்த பதிவுகள் எனப் பலரையும் களமிறக்கிய ஆண்டு அது. படிக்கும் காலத்தில் பத்திரிக்கைகளில் எழுதி இருந்தாலும் இணையத்தில் நமக்கென ஒரு தளம் அமைத்து எழுத முடியும் என என்னை அழைத்து வந்தவன் நண்பன். நம் பகிர்வுகளைப் பலரிடம் கொண்டு சேர்க்கும் பணியை இணையத் திரட்டிகள் செய்ய, அடுத்தடுத்த ஆண்டுகளில் ஆகா நம் எழுத்தை வாசிக்கவும் ஆள் இருக்கு எனச் சந்தோஷித்த இணைய எழுத்தாளர்களின் உலகம் விரிய ஆரம்பித்தது. 

எழுத்து... நம்மைச் செம்மைப்படுத்தும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.... எழுத எழுத நாமும் எழுத்தைச் செம்மைப்படுத்தி ஆளுமையாவோம் என்பதும் உண்மை. நான் இப்படித்தான்... என்னோட எழுத்துக்கள் இப்படித்தான் இருக்கும் என்றெல்லாம் பேசும் பிரபலங்களுக்கு மத்தியில் தொழில் சார்ந்த, மண் மனம் சார்ந்த, சமூகம் சார்ந்த, வாழ்வில் கடந்தவை முதலான எதையும் வாசிப்பவனுக்குச் சுவாரஸ்யமாய்க் கொடுக்க என்னால் முடியும் என ஒவ்வொருவருக்குள்ளும் நம்பிக்கை விதையை இணையம் விதைக்க. இன்று பலர் முளை விட்டு... கிளை பரப்பி ஊடகங்களிலும் சினிமாவிலும் வேர் ஊன்றி வளர்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை நாம் அறிவோம். 

வாழ்க்கை நமக்கு நிறையக் கற்றுக் கொடுக்கிறது... ஒவ்வொரு காலகட்டத்திலும் புதிதாய் ஒன்றைப் பெற, நிறைய இழந்து கொண்டிருக்கிறோம். நமக்கு முந்திய தலைமுறை வயலும் வயல் சார்ந்தும் வாழ்ந்த நிறைவான வாழ்க்கையை நாம் முழுமையாக அனுபவிக்க முடியாமல் பணம் துரத்தும் வாழ்க்கைக்குள் தஞ்சமாகிவிட்டோம்.

கொஞ்சமேனும் அந்த வாழ்க்கை கிடைத்ததே என்ற சந்தோஷ சாரலுடன்... ஆனாலு நமக்குப் பின்னான தலைமுறைக்கு அந்த வயலும் வயல் சார்ந்த வாழ்க்கையும் இல்லாமலேயே போய்விட்டது. இன்றைய தலைமுறையோ கைப்பேசிக்குள் விவசாயம் செய்து விளையாடுகிறது. விவசாயம் மட்டுமின்றி இன்னும் எத்தனை எத்தனையோ இழந்துவிட்டோம். எத்தனை விளையாட்டுக்கள்... எவ்வளவு ஆனந்தம்... சந்தோஷமாய் அனுபவித்த அந்த ஆனந்தங்களை இன்று நினைத்து நினைத்து தேன் மிட்டாயாய் உள்ளத்துக்குள் நிரப்பிக் கொள்கிறோம். 

இன்றைய தலைமுறை இணையத்துக்குள்ளும் செல்போனுக்குள்ளும் சிதைந்து கிடப்பதால் சிறார் காலத்து ஆனந்தத்தை அடியோடு மறந்துவிட்டார்கள். இந்த வாழ்க்கையில் என்ன சாதித்து விட்டுப் போகப் போகிறோம் என்பது நமக்குத் தெரியாது. ‘வெந்ததைத் தின்று விதி வந்தால் சாவோம்’ என்ற கிராமத்து வழக்குக்குள் நாமும் ஏன் தொடர்ந்து பயணிக்க வேண்டும். எனக்குப் பின்னும் நான் பேசப்பட வேண்டும். என் தலைமுறை இப்படித்தான் இருந்தது என்பதை வரும் தலைமுறை அறிய வேண்டும் என்ற நினைப்போடு பயணிப்போமே... அப்படியான பயணத்தில் கிடைப்பவற்றைப் பதிந்து வைக்கத்தான் இணையம் என்னும் இன்பவலை நமக்குக் கிடைத்திருக்கிறதே. 

பார்த்த. கேட்ட, ரசித்த எல்லாம் எழுத்தாகும் போது அதில் நாமும் சமூகமும் வாழ்ந்து கொண்டிருப்போம். இந்தத் தொகுப்பில் நானில் ஆரம்பித்துக் கேள்விகளில் முடியும் 21 கட்டுரைகளிலும் கடந்து வந்தவற்றைத் தாங்கி நிற்கும் எழுத்தை வாசிக்கும் அந்த இடத்தில் நானிருந்ததைப் போல் சந்தோஷம் ஜோதிஜி அண்ணாவின் எதார்த்த எழுத்தில் கிடைத்தது. 

என்னால் முடியும் என்ற நம்பிக்கையோடு முயன்றால் பத்திரிக்கை என்றில்லை இணையத்திலும் நல்ல எழுத்தைக் கொடுக்க முடியும். தொழில் சார்ந்த கட்டுரைகளால் நம்மை எல்லாம் இன்று ஆட்கொண்டு வருபவர் .

தனது முதல் கட்டுரையில் படிப்பவர்களுக்குப் புரிய, எளிய நடை அமைய 40 கட்டுரைகளுக்கு மேல் ஆனது என்று சொல்லியிருப்பது முற்றிலும் உண்மை. ஆரம்பத்தில் எழுத ஆரம்பிக்கும் போது வட்டார வழக்குக்குள்தான் நம்மால் பயணிக்க முடியும். எல்லாரும் வாசிக்கும் பொது நடைக்குள் மாறி வர நிறையப் பதிவுகள் தேவைப்படும். எழுத ஆரம்பித்து விட்டால் அது நம்மைச் சுற்றுப்புறத்தை கூர்ந்து கவனிக்க வைக்கும். நாம் பார்க்கும் ஒவ்வொன்றும் எழுத்தாகும். எழுத... எழுத... அனுபவங்கள் கற்றுத் தரும் பாடம் வாழ்க்கையை ரசிக்கவும் அனுபவித்து வாழவும் கற்றுக் கொடுக்கும். 

சின்ன வயதில் இருந்து பத்திரிக்கைச் செய்திகளைக் கிழித்து எடுத்துத் துறை வாரியாகச் சேகரித்து வைக்கும் பழக்கம் இருந்தது என்பதையும் அந்தப் பழங்குப்பைகளை எப்போதேனும் எடுத்து வாசிக்கும் போது அதில் நமக்கு ஆத்ம திருப்தியும் சில முரண்களும் கிடைக்கும் என்பதையும் வீடு சுத்தம் செய்தாலும் பழங்குப்பைகளைத் தூக்கிப் போட மனமின்றி மீண்டும் அதனதன் இடத்தில் வைத்து விடுவேன் என்று சொல்வது என் வாழ்விலும் நடக்கும் நிகழ்வுதான். 

எவ்வளவுக் குப்பைகள் சேர்ந்தாலும் பரணில் இன்னும் பக்குவமாய்தான் வைத்திருக்கிறோம்... ஏனோ எடுத்துப் போட மனம் வருவதில்லை. சின்னச் சின்னப் பேப்பர்களாய் சேகரித்து வைத்து தூக்கிப் போடாமல் வீட்டில் திட்டு வாங்கும் அனுபவம் இன்றும் என்றும் உண்டு. மாற்றம் ஒன்றுதான் மாறாதது அல்லவா..? 

சின்ன வயது நண்பர்கள் இன்றைய நிலையில் அன்று போல் இருக்கிறார்களா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். வாழ்க்கை ஒட்டத்தில்தான் அவரவர் வாழ்க்கையில் எத்தனை எத்தனை மாற்றங்கள்... மணிக்கணக்கில் கண்மாய்க்கரையிலும் மடையிலும் அமர்ந்து பேசிய நண்பனை இன்று வாடா காலாற நடந்துவிட்டு வருவோம் என்றால் ‘நீ போ... எனக்கு வேலை இருக்கு’ என்று ஒதுங்கிக் கொள்கிறான். அதுவும் அவன் ஊரிலும் நாம் வெளியிடத்திலும் இருந்தால் சொல்லவே வேண்டாம் எங்கிருந்தோ சின்ன மரியாதை வேறு வந்து ஒட்டிக் கொள்கிறது. அன்று இருந்த அந்த நட்பு எங்கே போனது...? 

வாடா, போடாவிற்குள் இருந்த அந்நியோன்யம் என்ன ஆனது..? என்பதையும் சின்ன வயதில் படிக்க என்று வயல்வெளிக்கோ, ஊருக்கு ஒதுக்குப்புறமான கோவிலுக்கோ, கம்மாய்க்கரைக்கோ செல்வது அன்று பலரின் வழக்கம் அப்படிப் படிக்கச் சென்ற இரயில்வே நடைமேடை, அந்த ஆள் அதிகமில்லாத ரயில்வே நிலையம், ஒற்றை மரமென எல்லாவற்றையும் எழுத்தில் கொண்டு வந்திருக்கிறார். 

குழந்தைகள் அமைவது வரம்.. அதுவும் தேவதைகளாய் அமைந்துவிட்டால் சொல்லவா வேண்டும். அந்தத் தேவதைகளின் பேச்சுக்கள்... சண்டைகள்... இந்தச் சண்டை எல்லார் வீட்டிலும் நடக்கும் ஒன்றுதான் தினம் தினம் நான் இரவு ஸ்கைப்பில் பேசும் போது பெரும்பாலான நேரத்தைக் குழந்தைகளின் சண்டைக்குக் கத்துவதில்தான் செலவிடுகிறேன். அவர்களின் கேள்விகள், அதற்கான விடைதேடல் எல்லாமே நமக்கு நிறையக் கற்றுக் கொடுக்கும். தனது குழந்தைகளுக்கு இன்னும் சாதிச் சான்றிதழ் கொடுக்காமல் இழுத்தடிப்பதைச் சொல்லி, சாதிப் பொங்கலில் சமத்துவச் சர்க்கரை என்னும் கட்டுரையில் மூன்று களங்களாய் மூன்று நிகழ்வுகளைச் சொல்லியிருக்கிறார். 

இன்று சாதி என்பது வளர்ந்து உயர்ந்து நம்மை வளரவிடாமல் தடுத்துக் கொண்டிருக்கிறது. சாதிக் கொலைகள் இங்கே தவறாமல் நிகழ்கின்றன. சாதிக்க வேண்டிய வயதில் காதலும் காமமும் சாதிக் கொலைக்குள் தள்ளிவிடுகின்றன. 

சாதீயம் பேசும் பலரும் தம் சாதிக்குள் இருக்கும் உட்பிரிவை சரியாகப் பயன்படுத்தி அரசு சலுகைகளைச் சுவைத்தவர்களாய்த்தான் இருப்பார்கள். ஒரு வேலைக்கான படிப்பை படித்து அதில் என்னால் முடியும் என்றாலும் கூடச் சாதியை வைத்தே அதைச் செய்ய முடியுமா முடியாதா என்பதை இந்தச் சமூகம் தீர்மானிக்கிறது. அப்படித் தீர்மானிக்கப்பட்ட ஒருவன் குடும்பம் நடத்த இறந்தவர்களுக்குக் காரியம் பார்க்கும் வேலையைச் செய்து கொண்டிருக்கிறான். 

இன்று அவனின் குடும்பத்து ஒவ்வொரு நேரச் சாப்பாட்டுக்கும் ‘யார் சாவார்?’ என்ற எதிர்பார்ப்பில் என்று சொல்லும் போது இந்தச் சாதீயத்தின் தாக்கம் எப்படிப்படிப்படட்து என்பதை உணர முடிகிறது. 

எல்லாவற்றுக்கும் இறைவன் மீது பழி போடும் மனிதர்கள் குறித்தான பார்வையும் மதவாதத்தை இன்று மார்க்கெட்டிங் செய்து வளர்ப்பதையும் மடாலயங்களுக்கு உரித்தான சொத்துக்களைச் சுரண்டித் தின்பதையும் அவற்றிற்கு வரவேண்டிய வருமானத்தில் இருபதில் ஒரு பங்கு கூட வராததையும் இன்னும் இரண்டு வருடத்தில் மடாலயங்கள் எல்லாம் மறைந்து போகும் என்பதையும் சொல்லிச் செல்லும் ஆன்மீகம் என்பது யாதெனில் கட்டுரைகளும்... தன் காதலின் சின்னமாய்த் தன் பெயரோடு காதலியின் பெயரையும் பொறித்த மரத்தில் காதல் காணாமல் போனது போல் காதலியின் பெயரும் மறைந்து போய் இருப்பதைத் தடவிப் பார்க்கும் தருணத்தில் மகள்கள் தன் பெயருக்குக் கீழே அவர்கள் பெயரைப் பொறித்து வைப்பதை ஆசை மரம் என்னும் கட்டுரையிலும் சென்னையில் இருந்து இரயில் பயணிக்கும் போது கிடைத்த அனுபவத்தைப் பயணமும் எண்ணமும் என்னும் கட்டுரையிலும் இன்று நல்லதோ கெட்டதோ எல்லாவற்றிற்கும் போதையே முக்கியமாகப் போய்விட்ட காலமிது என்பதை விழா தரும் போதையிலும் சொல்லியிருப்பது போல் எல்லாக் கட்டுரைகளும் அன்றாடம் வாழ்வில் நடக்கும் நிகழ்வுகளை... மிக அழகாகப் படம் பிடித்துக் காட்டுகின்றன. 

ஒவ்வொன்றைப் பற்றியும் பேச ஆரம்பித்தால் நம் வாழ்வின் நிகழ்வுகளோடு இணைத்துப் பார்த்து இன்னும் இன்னுமாய் நிறைய ரசித்துப் பயணிக்கத் தோன்றும்… எழுத்து என்பது அதன் நடையால் மட்டும் நம்மை ஈர்ப்பதில்லை… வாழ்வின் ரசனையோடு எழுதும் போது அதன் போக்கில் நம்மைப் பயணிக்க வைத்து நாமும் இவற்றையெல்லாம் கடந்து வந்தோமே… ரசித்து வந்தோமே… என்று எண்ண வைப்பதாலும் நம்மை ஈர்க்கும். என்ன ஒரு ரசனையான எழுத்து இப்படியான ஒரு வாசிப்பு அனுபவத்தைக் கொடுக்கும் எழுத்து அமையப் பெறுவதுதான் உண்மையான வரம் என்று வாசிப்பவருக்குள் தோன்ற வைத்தால் நாம் பயணிக்கும் எழுத்து என்ற பாதையில் மிகச் சிறப்பாகப் பயணித்துக் கொண்டிருக்கிறோம் என்பதை உணரலாம். அதை உணர வைத்த வாழ்க்கைக் கட்டுரைகள் இவை. 

மகரந்தப் பூக்களாக மலர்ந்திருக்கும் கட்டுரைகள் நமது அறியாமையை ஆங்காங்கே சுட்டிக்காட்டத் தவறவில்லை. உண்மை பேசும் கட்டுரைகள் எழுதுவது என்பது அரிது. இந்தக் கட்டுரைகள் எல்லாமே வாசிப்புக்காகக் கவர்ச்சி என்னும் ஜிகினா பூசாமல் எதார்த்தத்தை மிக அழகாக எடுத்து இயம்புகின்றன. 

வாசித்து... மீண்டும் வாசித்து ஒவ்வொரு கட்டுரையிலும் அவரிடத்தில் என்னை நிறுத்திப் பார்த்து அந்தச் சுகந்தத்தை அனுபவித்தேன். ‘எண்ணம் போல் வாழ்வு’, ‘தீதும் நன்றும் பிறர் தர வாரா’ என்பதை விளக்கமாய்ச் சொல்லும் கட்டுரைகள். ஜோதிஜி அண்ணா இன்னும் இன்னுமாய் நிறைய வாழ்வியல் கட்டுரைகள் கொடுக்க வேண்டும் நாம் (சு)வாசிப்பதற்காக…. 

யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம். 

Wednesday, September 30, 2015

கொஞ்சம் காசு கொஞ்சம் கல்வி

அந்தப் பொன்னுலகின் கனவு விதைக்கப் பட்டது 90களின் ஆரம்பத்தில். காட் என்றும் டன்கல் என்ற ஒப்பந்தங்கள் இந்தக் கனவின் விதைகள் ஆனது. எல்லைகள் இல்லா உலகம், உலகளாவிய வாய்ப்பு என்ற கோசங்கள் சுழன்று அடிக்க ஆரம்பித்தது. கணினித் துறை வேலை என்பதும், அமெரிக்க வாசம் என்பதும் மத்தியத் தரப் பெற்றோர்களின் ஆதங்கம் என ஆகிப் போனது. நியூயார்க், வாஷிங்டன், கலிபோர்னியா, நியூ ஜெர்சி என்ற ஊர்கள் எல்லாம் எல்லார் வாயிலயும் விழுந்து புரள ஆரம்பித்தது.

உடலால் இந்தியர்களாகவும், சிந்தனையால் ஆங்கிலேயனாகவும் மாறிய குமாஸ்தா வர்க்கம், தன அடுத்த பாய்ச்சலுக்குத் தயார் ஆனது. மாறிய சிந்தனை, மிகப் பெரிய மாற்றத்தைத் தன்னுடன் கொண்டு வந்தது. கல்வி, சுகாதாரம் இரண்டும் அரசாங்கம் தர வேண்டிய தேவை இல்லை என்ற மனப்பாங்கு வளர்ந்தது. தனியார்மயம் என்பதே வளர்ச்சிக்கு ஒரே வழி என்று பேசப் பட்டது.

அரசியல் அடியாள்களும், சாராய வியாபாரிகளும், கந்து வட்டி ஆசாமிகளும் கிடைக்கும் இடம் எங்கும் கல்வி வியாபாரத்தை ஆரம்பித்தனர். பெயர் பலகையும், இடமும் அவர்கள் முதலீடு, கட்டிடமும் மற்ற உள்கட்டமைப்பு வசதிகளையும் பொன்னுலகின் கனவில் இருந்த மக்கள் தங்கள் பங்களிப்பாகத் தர ஆரம்பித்தனர்.

விட்டது தொந்தரவு என்று அரசும் வெற்று அறிக்கைகளை அள்ளித் தெளித்து தனது கடமையை முடித்துக் கொள்கிறது.

எப்படிக் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதைக் கற்றுக் கொடுத்து, முழுமையான ஆளுமைத் திறனை வளர்க்க வேண்டிய கல்விக் கூடங்கள், மனப்பாடம்  செய்து மதிப்பெண் வாங்கும் இயந்திரங்களை உருவாக்கும் தொழில்சாலைகளாக மாறிப் போனது.

நன்றாகப் படி, அதாவது நன்றாக மனப்பாடம் செய், அதனைத் தேர்வு நாளில் எழுது, மதிப்பெண்களை அள்ளு, அதன் மூலமாக ஒரு பொறி இயல் கல்லூரியில் நுழை, அங்கே இருந்து கணினித் துறையில் சேர், நல்ல பணம் சம்பாதிக்கும் வேலையில் அமரு, நீ வெற்றி பெற்ற மனிதனாக விளங்கு என்ற மாயச் சுழட்சி வலையில் மாட்டிக் கொண்ட மக்கள் அதையே சரி என்று நம்ப ஆரம்பித்தது.

வெற்றி என்பது தன்னை உணர்தல் என்பது மாறி பணம் சம்பாதிப்பது மட்டுமே என்ற எண்ணம் எல்லா இடங்களிலும் ஆழமாகப் பரவ ஆரம்பித்தது.

நேரம் காலம் இல்லாத வேலை, அதனோடு இணைந்து வந்த மன அழுத்தம், தாங்க முடியாத போட்டி, தனி மனித உறவு என்பதே இல்லாமல், வெடித்துக் கிளம்பும் திருமணச் சிக்கல்கள், எல்லா இடங்களிலும் பெருகி வரும் முதியோர் இல்லங்கள் என்பதே இந்தப் பொன்னுலகம் காட்டும் வளர்ச்சி என்று ஆனது.

பொன்னுலகின் கனவில் சஞ்சரித்த மனிதன், தன நிலை அறிந்து பார்க்கும் போது தெரிந்து கொண்டது தான் கட்டி இருந்த ஒற்றை வேட்டியும் களவாடப் பட்டதைத்தான். எதையும் பார்க்க விரும்பாத, அல்லது பார்க்கத் தெரியாத மனிதர்கள் இன்னும் கனவில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்,

தாங்கள் நிம்மதியாக இருக்கிறோம் என்ற நினைப்போடு.

கல்விகழகு கசடற மொழிதல் - இது கல்வி என்றால் என்ன என்று தமிழ் கூறும் இலக்கணம். கசடறப்  புரிந்தால் தான் கசடற மொழிய முடியும். கசடறப்  புரிதலே நடக்காத ஒரு கல்வி முறையில் எப்படி கசடற மொழியும் மாணவர்களை நாம் எதிர் பார்க்க முடியும்.

கற்ப்பித்தல் என்பது வெறும் வேலை இல்லை, அடுத்த தலைமுறைகளை உருவாகும் ஒரு பணி என்ற எண்ணமும், அதனால் வரும் ஒரு ஞானச் செருக்கும் எந்த ஆசிரியர்களுக்கும் இல்லை

தாய் மொழியில் படிப்பதும், பேசுவதும் தேவை இல்லை, புரிகிறதோ இல்லையோ ஆங்கிலத்தில் பேசுபவனே அறிவாளி என்ற எண்ணப் பாங்கு தமிழ் நாட்டில் நிலவி வருகிறது. மொழி என்பது வெறும் எண்ணங்களைப் பகிரும் கருவி இல்லை. அது ஒரு வாழ்வியல், வாழும் முறை, கலாசாரம், வரலாறு என்ற புரிதல் இல்லவே இல்லை. இலக்கியமும் வரலாறும் கற்றுக் கொடுக்கும் பாடங்களைப் படிக்க இங்கே மக்கள் தயாராகவே இல்லை, இதிலும் வேதனை பல ஆசிரியர்களுக்கே இந்தப் புரிதல் இல்லை.

.அறத்தைப் பற்றிய பேச்சே கல்விக் கூடங்களில் இல்லாமல் ஆகி விட்டது, ஒட்டு மொத்த சமுதாயம் முன்னேறாமல் தான் ஒருவன் மட்டும் முன்னேறினால் ( அதாவது பொருளாதார ரீதியில் முன்னேறினால் ) அதனால் வரும் பொருளாதார ஏற்றத் தாழ்வு என்பது சட்டம் ஒழுங்கு சீர்கெட்ட ஒரு சமுதாயத்தைத் தான் உருவாக்கும் என்ற உண்மை போதிக்கப் படவே இல்லை. இன்று நாம் தினம் தினம் படிக்கும் திருட்டு, கொள்ளை என்ற செய்திகள் இதனைத் தான் நமக்கு கட்டியம் கூறுகிறது.

பலர் பேசத் தயங்கும் இந்தப் பின்புலத்தில், தன்னையும் தன குடும்ப உறுப்பினர்களையும் பாத்திரங்களாக மாற்றி நண்பர் ஜோதிஜி எழுதிய வலைப் பதிவுகளின் தொகுப்பே இந்த நூல்.

தனது வாழ்க்கைக் கதையை சொல்வது போல முக்கியமான பல கேள்விகளை இந்த நூலில் எழுப்பி உள்ளார் திரு ஜோதிஜி.

இந்தக் கேள்விகள் எல்லா வீடுகளிலும், பள்ளிகளிலும், சாலைகளிலும் கேட்கப் படட்டும். அந்தக் கேள்விகள் மூலம் ஒரு  சிந்தனை மாற்றம் வரட்டும்

என்றும் மாறாத நம்பிக்கையுடன்,

இராமச்சந்திரன்  (BKR)
திருநெல்வேலி

வலைபதிவு  http://ramachandranwrites.blogspot.ae/


கொஞ்சம் காசு கொஞ்சம் கல்வி மின் நூல்

+++++++++++++
எழுத்தாளர்களின் முக்கிய விருப்பமே தங்களின் படைப்பு பலருக்கும் போய்ச் சேர வேண்டும். வாசிப்பவர்கள் அதை விமர்சனப் பார்வையில் அணுக வேண்டும் என்பதே. இந்த மின் நூலை வெளியிட முக்கியக் காரணம் ஈழம் குறித்து வெளியிட்ட மின்னூலை வாசித்த ஒருவர் அமெரிக்காவில் இருந்து ஒரு நள்ளிரவில் அழைத்து வெகுநேரம் பொளந்து கட்டினார்.

(புதுக்கோட்டை வலைப்பதிவர் சந்திப்பு 2015)

இதற்கு முன்னால் இதே போலப் பலரும் மின் அஞ்சல் வாயிலாகத்தான் உரையாடியிருக்கின்றார்கள். இவர் ஆக்கப்பூர்வமான (எதிர்மறை) விமர்சனங்கள் என்றபோதிலும் அவர் பக்கத்திற்குப் பக்கம் படித்து இருந்த விதமும், அது சார்ந்த துணைக் கேள்விகளும் எனக் கேட்டு நள்ளிரவில் மொட்டை மாடியில் நான் இருந்த போதும் என் வியர்வைச் சுரப்பியை விரைவாக்கினார். புத்தகங்களுக்கும் மின் நூலுக்கும் உள்ள பெரிய வித்தியாசமே இது தான். நினைத்துப் பார்க்க முடியாத உலகில் எந்தவொரு மூலையில் வாழும் ஒவ்வொருவருக்கும் நம் உழைப்புப் போய்ச் சேர்ந்து விடுகின்றது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். இதை விட வேறென்ன அங்கீகாரம் வேண்டும்?

(அங்கீகாரமும் அவஸ்த்தைகளும்)

உரையாடல் முடிவுக்கு வந்த போது தமிழ்நாட்டில் நிலவும் மொழிக் குழப்பத்தை, ஆங்கில மொழியின் ஆதிக்கத்தைப் பற்றிச் சில கேள்விகள் கேட்டார். இதன் பொருட்டே தொகுத்து வைத்திருந்த கட்டுரைகளை மெருகேற்றி இன்று இந்த மின் நூல் அனைவரின் பார்வைக்கும் வந்துள்ளது.

+++++++++++++

தொழில் உலகத்திற்கும் படைப்புலகத்திற்கும் ஒரு பெரிய வித்தியாசம் உண்டு. தொழிலில் "கொள்கை" என்பதே கூடாது. இருந்தாலும் மாறிக் கொண்டேயிருக்கும். நாமும் மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும். 

வாரந்தோறும் ஒவ்வொன்றும் காலாவதியாகிக் கொண்டேயிருக்கும். மொத்தத்தில் "லாபம்" ஒன்றே குறிக்கோள் மற்றும் இறுதி லட்சியமாக இருக்கும். கிடைத்த வாய்ப்பே போதும். எல்லைகளை உடைக்கத் தேவையில்லை என்பவர்களுக்கு ஒவ்வொரு நாளின் பிரச்சனையும் இயல்பாகவே தோன்றும். அலசி ஆராயத் தோன்றாது. 

எல்லைகளை உடைக்க வேண்டும் என்று எண்ணக்கூடியவர்கள் முடியாத பட்சத்தில் அனுபவங்களை எழுதத் தொடங்குவார்கள். அப்படித் தான் 2009 ஜுலை மாதம் எழுதத் தொடங்கினேன். 

2015 ஜுலை வரைக்கும் ஆறு வருடங்கள் என்றாலும் 62 மாதங்கள் தொடர்ச்சியாக மற்றும் இடைவெளி விட்டு எழுதிய போதும் 697 பதிவுகள் எழுதியுள்ளேன். 

டாலர்நகரம் மற்றும் நண்பர்களின் விமர்சனங்கள் என்பது போன்ற கட்டுரைகளைக் கணக்கில் கொண்டாலும் ஏறக்குறைய 650 பதிவுகள் எழுதியதை ஒரு புத்தகமாக மற்றும் இன்று வெளியிடப்பட்டுள்ள மின்னூலைச் சேர்த்து எட்டு மின் நூலாக வெளியிட முடிந்துள்ளது. 

ஏழு மின் நூலும் 93,910+ பேர்களுக்குச் சென்று சேர்ந்துள்ளது. 

(200 வது மின்நூலுக்கு நான் எழுதிய வாழ்த்துக்கடிதம்)

தொழில் உலகத்தில் நாம் என்ன முயற்சித்தாலும் சூழ்நிலை சந்தர்ப்பங்கள் பொறுத்தே நமக்கான அங்கீகாரம் கிடைக்கும். முட்டாள் நிர்வாகத்தில் மாட்டிக் கொண்டவர்கள் வாழ் நாள் முழுக்க முழு மூடனாகத்தான் வாழ்ந்தாக வேண்டும்.

ஆனால் படைப்புலகத்தில் உங்களின் உழைப்புக்கேற்ற, திறமைக்கேற்ற எல்லாவிதமாக அங்கீகாரமும் எப்போது வேண்டுமானாலும் உங்களைத் தேடி வரலாம். அப்படிப் பலமுறை வந்துள்ளது. மாதம் இரண்டு மின் அஞ்சலாவது படித்த மின் நூல் குறித்த உரையாடலுக்கு உலகின் ஏதோவொரு மூலையில் இருந்து யாரோ ஒருவர் அழைத்து அவர்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டே தான் இருக்கின்றார்கள். 

வலைதளங்கள், மற்றும் பின்னூட்டங்கள் மூலம் பலரின் அன்பையும் மரியாதையும் பெற்று இருப்பதையும் உணர முடிந்தது. எப்பொழுதோ உழைத்த உழைப்பு இன்று வரையிலும் ஏதோவொரு வகையில் திரும்பக் கிடைத்துக் கொண்டேயிருக்கின்றது என்கிற வகையில் மகிழ்ச்சியே.

(நன்றிக்குரியவர்கள் -  துளசிதளம்,  மூன்றாம் சுழி,  அவர்கள் உண்மைகள்)

எழுதும் ஆர்வம் இன்னமும் இருக்கக்தான் செய்கின்றது. ஆனால் முழுமையான ஈடுபாடு உருவாகாதன் காரணம் மாறிக் கொண்டேயிருக்கும் சூழ்நிலைகள், சுவராசியத்திற்கு என்று எழுதியே ஆக வேண்டிய நிர்ப்பந்தம் போன்றவற்றைக் கணக்கில் எடுத்துக் கொண்டே சில காலம் எழுதுவதை விட்டு வெளியே நிற்கலாம் என்று முடிவு செய்துள்ளேன். 

மற்றவர்களின் விருப்பத்திற்காகவே செயல்பட வேண்டும் என்றால் நமக்கான ஆர்வம் கால் பங்கு கூட அதில் இருக்க வாய்ப்பு இருக்காது. அதில் வாசிப்புக்கான வார்த்தைகள் மட்டுமே மிஞ்சியிருக்கும். வாசிப்பின் மூலம் கிடைக்க வேண்டிய தாக்கம் எதுவும் மிஞ்சாது. 

தினந்தோறும் சமரசங்களோடு வாழ்ந்தே ஆக வேண்டிய சூழ்நிலையிலும், குறைந்தபட்சம் எழுத்தின் மூலமாவது நேர்மையையும் உண்மைகளோடு உறவாட வேண்டும் என்பது என் எண்ணம்.  மாறிக் கொண்டே வரும் சூழ்நிலைகளின் மூலம் கிடைக்கப் பெறும் அனுபவங்கள் அடுத்த கட்ட எழுத்துப் பயணத்திற்கு உதவும் என்று நம்புகிறேன்.

அது போன்ற சூழ்நிலைகள் உருவாகும் போது மீண்டும் என் எழுத்துப் பயணம் தொடங்கும். 

Wednesday, March 04, 2015

மாற்றங்கள் உருவாக்கும் பாதைகள்

ரு நூற்றாண்டின் நான்கில் ஒரு பகுதியை அனுபவத்திற்கு செலவழித்துள்ளேன் என்பதை வாசிக்கும் போது சற்று மிரட்சியாக இருக்கும். ஆனால் கடந்த 25 ஆண்டுகள் என்றால் கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொள்ள முடியும் தானே?  இந்த 25 ஆண்டுக்குள் உருவான சமூக மாறுதல்களும், மாற்றத்திற்கு முக்கிய காரணமாக இருந்த நவீன தொழில் நுட்ப வசதிகளும் ஒவ்வொரு தனி மனிதர்களையும் நிறைய மாற்றம் அடையச் செய்து உள்ளது. நானும் மாறியுள்ளேன். நான் விரும்பாவிட்டாலும் நான் மாறியாக வேண்டிய சூழ்நிலையில் தான் இருக்கின்றேன்.

ம்மிடம் இன்று பணம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் பயணம் என்பது இயல்பான ஒன்றாக மாறியுள்ளது. அதற்கான தேவைகளும் உள்ளது. நெருக்கடிகள் நம்மை உந்தித் தள்ளுகின்றது. இன்று எவராலும் எங்கு வேண்டுமானாலும் செல்ல முடிகின்றது. 

ன்று பணம் அதிகம் வைத்திருப்பவர்களால் மட்டுமல்ல, பணிபுரிகின்ற பணிச்சூழலில் நினைத்த நேரத்தில் கண்டங்களைக் கூடக் கணப் பொழுதில் கடந்து விட முடிகின்றது. ஆனால் 25 ஆண்டுகளுக்கு முன் ஒரு மாவட்டத்திற்குள்ளே இருக்கும் அடுத்த ஊருக்குள் செல்ல முடியாமல், அந்த ஊரைப் பற்றி அறிந்திருக்காமலேயே வாழ்ந்து முடித்தவர்கள் அநேகம் பேர்கள். என் மாவட்டத்திற்குப் பக்கத்தில் உள்ள இராமேஸ்வரத்திற்குக் கல்லூரி முடிக்கும் வரைக்கும் பள்ளிச்சுற்றுலா என்ற பெயரில் ஒரே ஒரு முறை தான் நான் சென்றுள்ளேன்.  இன்று நான் தமிழ்நாட்டுக்குள் இன்னமும் முழுமையாக செல்ல வாய்ப்பு அமையாத மாவட்டங்கள் மூன்று உள்ளது. கிருஷ்ணகிரி, தர்மபுரி, கன்யாகுமரி.

டை மழை பெய்தால் கண்மாய் மீன். அளவான மழை என்றால் கடல் மீன். இது தவிர அன்றாட உணவில் ஆட்டுக்கறி. கோவில் திருவிழா என்றால் கோழிக்கறி. வீட்டு விசேடங்கள் என்றால் காய்கறிகளின் அணிவகுப்பு விருந்து தான் வாழ்க்கை. உணவு தான் முக்கியம். உணவே தான் மருந்து என்று வாழ்ந்த வாழ்க்கை. இன்று எப்போது தான் உங்கள் நாக்கை அடக்கப் போறீங்களோ? என்று மனைவி கேட்ட காலம் மாறி மகள்கள் கேட்கும் நிலைக்கு வாழ்க்கை கொண்டு வந்து சேர்த்துள்ளது. 

மார்கழி மாதம் குளிர் பொறுத்து, சில சமயம் சுடுதண்ணீர், பல சமயம் குளிர்ந்த நீரில் குளித்து விட்டு நான்கு சந்துகள் தாண்டி இருந்த பெருமாள் கோவிலுக்கு ஓட்டமும் நடையுமாக அக்காக்களுடன் ஓடியுள்ளேன். பொழுது விடியாத நிலையில் இருட்டுக்குள் தடவி பயந்து ஓடி கோவிலை அடைந்து பூஜை முடிந்து பெற்ற வெண் பொங்கல், சுண்டல் சமாச்சாரத்தைச் சூடு பொறுக்க முடியாமல் தின்று முடிக்கும் போது கிடைத்த மகிழ்ச்சி அடுத்த நாளும் அதே கோவிலுக்குச் செல்ல வைத்தது.  இன்று கோவில்களில் கூடும் கூட்டமும், இதற்கென தங்களை தயார்படுத்திக் கொள்ளும் மனிதர்களும் எனக்கு வேடிக்கைப் பொருளாக மாறியுள்ளனர்.

வீட்டுக்கருகே இருந்த கோவில் குளக்கரையில் கூம்பு வடிவ ஒலி பெருக்கியில் அன்று பேசப் போகின்ற அரசியல்வாதியின் பழையைப் பேச்சை கேட்டுக் கொண்டே கடந்த போதும், இரவில் பாதித் தூக்கத்தில் தூக்கம் வராமல் புரண்டு படுத்த போது அறைகுறையாக அன்றைய அரசியல்வாதி பேசிக் கொண்டிருந்த பேச்சைக் கேட்டபடியே அவற்றை மறந்து போனதுண்டு. "இங்கே அரசியல் பேசாதீர்" என்ற வார்த்தைகள் அடங்கிய வாசகத்தை எந்த இடத்திலும் பார்க்க முடிவதில்லை. அதற்குப் பதிலாக 24 மணி நேரமும் ஒவ்வொரு இடத்திலும் தொலைக்காட்சிகள் அந்த வேலையைச் செய்து கொண்டிருக்கின்றது.  ஆனால் தீவிர அரசியல் கொள்கைகள் மாறி திருகுதாள அரசியல் அங்கீகாரம் பெற்று விட்டது.

றாம் வகுப்புப் படித்த போது படக்கதைகள் அடங்கிய புத்தகத்திற்காக அலைந்த பொழுதுகள், பத்திரிக்கைகளில் வந்த நடிகர் மற்றும் நடிகைகளில் கிசுகிசுகளைப் படிக்க அலைந்த தருணங்கள், விடுமுறை தினங்களில் அருகே இருந்த நூலகத்தில் குடியிருந்த நேரங்கள் எனக் கழித்த பொழுதுகள்.  ஆனால் இன்று வாரப்பத்திரிக்கைகள் தவிர்த்து பெரிய கட்டுரைகள் அனைத்தையும் டேப்லெட் கணினி வழியாகப் படிப்பது தான் வசதியாக உள்ளது. 

ரு நாள் கூடத் தவறாமல் சென்ற பள்ளிக்கூட வாழ்க்கை. பயம் கலந்த மரியாதையோடு ஆசிரியரைக் கண்டு ஒளிந்து திரிந்த வாழ்க்கை. கல்வி தான் நம் வாழ்க்கை. ஒழுக்கம் மட்டுமே நமக்கு உயர்வைத் தரும் என்ற அறிவுரைகள். கல்லூரி வந்த போதிலும் எதிர்காலம் குறித்த எவ்வித அவநம்பிக்கைகளையும் சுமக்காத நம்பிக்கைப் பொழுதுகள். இந்த உலகமே அழகானது என்று நினைத்து வாழ்ந்த காலங்கள்.  நாம் வாசித்த புத்தகங்களில் படித்த, பாதித்த சாதனையாளர்களைப் போல நாமும் ஒரு காலத்தில் சமூகத்தில் உயர்வான  நிலைக்கு வந்து விடுவோம் என்று நம்பிக்கை கொண்டிருந்த வாழ்க்கை என் அனைத்தும் கடந்த 25 ஆண்டு பயணத்தில் மாறியுள்ளதை இந்த மின் நூல் வழியாகப் பேசியுள்ளேன். 

ள்ளிக்கூடத்தில் மக்குப் பையனுக்கும் சராசரி மாணவனுக்கு இடையே உள்ள ஒரு இடத்தை ஆசிரியர்கள் எனக்குக் கொடுத்து இருந்தார்கள். காரணம் பாராட்டிவிட்டால் பாம்பு படம் எடுத்து ஆடி விடும் என்ற நம்பிக்கையில். 

"உன் அக்கா, அண்ணன் பெயரைக் கெடுப்பதற்காகவே நீ எங்களிடம் வந்து சேர்த்துள்ளாய்" என்ற பொதுப் பாராட்டு அவ்வப்போது கிடைக்கும். பத்தாம் வகுப்பு கணக்கு ஆசிரியர் முத்துச் சாமி வழங்கிய ஆசிர்வாதம் இன்னமும் என் நினைவில் உள்ளது. "இந்த வருடம் நீ தேர்ச்சி பெற மாட்டாய். கணக்கில் பத்து மதிப்பெண்கள் எடுத்தாலே ஆச்சரியம்" என்றார். அவரைப் பழிவாங்க வேண்டும் என்பதற்காகவே பத்தாம் வகுப்பில் நூற்றுக்கு 84 மதிப்பெண்கள் எடுத்தேன்.  தனிப்பட்ட வாழ்க்கையில் பணத்தை கையாளத் தெரியாதவனாக இன்னமும் இருப்பது கூடுதல் சிறப்பு.

னால் வாரந்தோறும் ஐம்பது லட்சத்தைக் கையாள வேண்டிய பொறுப்பை வாழ்க்கை எனக்கு வழங்கியுள்ளது. பணம் கைக்கு வந்த அடுத்த 24 மணி நேரத்திற்குள் மொத்த கணக்குகளை ஒப்படைத்து விடுவதால் "அவர் கணக்கு விசயத்தில் புலி" என்று பாராட்டும் அளவிற்கு நிறுவன நிர்வாக விசயங்களில் திறமையைக் காட்ட முடிகின்றது. எனக்குப் பின்னால் எவர் என் பதவியில் வந்து அமர்ந்தாலும் நான் உருவாக்கிக் கொடுத்த "வழிகாட்டலை"த்தான் பின்பற்ற வேண்டும் என்று நிர்வாகம் சொல்லுகின்ற அளவிற்கு ஒவ்வொன்றிலும் எளிமை மற்றும் நேர்மையை உருவாக்க வாழ்க்கை கற்றுத் தந்துள்ளது.

நகைமுரண் என்பது வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்த ஒன்று போல. 

மாற்றம் என்பது மட்டும் மாறாதது. மாற்றங்கள் தான் உங்களை வழி நடத்துகின்றது. மாற்றமே உங்களை உருவாக்குகின்றது. மாற்றத்தை உங்களால் உள்வாங்க முடியாத பட்சத்தில் தேங்கிக் கிடக்கும் குளத்தைப் போல உங்கள் வாழ்க்கை நாற்றம் எடுத்து விடும் என்று அர்த்தம். நான் மாறினேன். என்னை இந்தச் சமூகம் மாற்றியது. மாற்றத்தை உள் வாங்கினேன். தேவையானவற்றைத் தேவையான சமயத்தில் எடுத்துக் கொண்டேன். 

விமர்சனங்களை எதிர்கொள்ள முடியாமல் குறுகிய வட்டத்திற்குள் நின்று கொண்டேயிருந்தால் இருட்டறையில் நின்று கொண்டு இந்த உலகத்தைப் பார்க்க விரும்புகின்றோம் என்று அர்த்தம். பல சமயம் திடீரென வெளிச்சம் நம் மீது பரவும் போது நம் வளர்த்துக் கொண்டுள்ள குறுகிய எண்ணங்கள், நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் நாடக வாழ்க்கையை மற்றவர்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டிவிடும். என்றாவது ஒரு நாள் மற்றவர்களின் பார்வைக்குப் படத்தான் செய்யும். 

வெளிப்படைத்தன்மை எல்லா இடத்திலும் தேவையில்லை என்றாலும் உங்கள் மனசு விடாமல் துரத்தும் கேள்விக்கு நீங்கள் பதில் சொல்லியே தானே ஆக வேண்டும்? நான் என்னையே கேள்வியாக்கிக் கொண்டதுண்டு. என்னையே கேலிப் பொருளாக மாற்றிக் கொண்டதும். மற்றவர்களின் கேலிகளைக் கவனித்ததுண்டு. மொத்தத்தில் ஒவ்வொரு நாளையும் பள்ளிக்கூடத் தினம் போலப் பார்ப்பதுண்டு. காரணம் இங்கே ஒவ்வொருவரும் நமக்கு ஆசிரியர்கள். நாம் மாணவர்களாக வாழும் பட்சத்தில். 

ணவு, ஆன்மீகம், அரசியல் இந்த மூன்றையும் பற்றி இந்த மின் நூலில் பேசியுள்ளேன். கடந்த 14 மாத மின் நூல் உலகில் என் முந்தைய ஆறு மின் நூல் வழியாக 66000+ நபர்களைச் சென்றடைந்துள்ளேன். "வாழ்க்கையில் இலக்கு தேவை" என்கிறார்கள். நிச்சயம் ஒரு லட்சம் என்ற இலக்கு நோக்கி இந்தப் பயணம் சென்று சேரும் என்ற நம்பிக்கை வந்துள்ளது. 

ந்த மின் நூலை நண்பர் ராஜராஜனுக்கு சமர்பித்துள்ளேன். அட்டைப்படம் உருவாக்கிக் கொடுத்த நண்பர் மனோஜ் மற்றும் என் மின் நூல்களுக்குச் சிறப்பான வகையில் ஒத்துழைப்பு கொடுத்துக் கொண்டிருக்கும் நண்பர் சீனிவாசன் அவர்களுக்கும் என் நன்றி.

ஏதோவொரு தருணத்தில், யாரோ ஒருவர், உலகின் ஏதோவொரு மூலையில் இருந்து கொண்டு என் எழுத்தை வாசித்துக் கொண்டிருப்பார் என்பதே யான் பெற்ற இன்பம்.

Sunday, February 15, 2015

வலைத்தமிழ்

"ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள்" தொடர் வலைத்தமிழ் இணையதளத்திற்கு முதல் தொடர் என்கிற ரீதியில் எங்களுக்கு இது முதல் அனுபவம். சில வாரங்களுக்கு முன்புதான் ஆரம்பித்ததுபோல் தோன்றினாலும் இருபது வாரங்களைக் கடந்து வாசகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கும் தொடராக வெற்றிகரமாக வெளிவருவதற்கு முழுமுதல் காரணம் திருப்பூர் ஜோதிஜியின் எழுத்து நடை மற்றும் தொடருக்கு ஏற்ற வண்ண வண்ண படங்கள் ஆகியவையே என்று கருதுகிறேன். 

ஒரு தொழிற்சாலை குறித்து எழுதப்பட்ட இந்தத் தொடருக்கும் வாசகர்களிடம் கிடைத்த ஆதரவும், அவர்கள் வழங்கிய கருத்துரையும் எங்கள் தளத்திற்குச் சிறப்பான அங்கீகாரத்தைத் தந்தது என்றால் அது முற்றிலும் உண்மையாகும். எந்தத் துறையைப் பற்றி வேண்டுமானாலும் எழுதலாம். ஆனால் வாசகர்கள் படிக்க விரும்பும் நடையில், எளிய மொழியில் எழுதினால் அது வெற்றியைப் பெறும் என்பதற்கு இந்தத் தொடர் முக்கிய உதாரணமாகும். 

இந்தத் தொடர் ஆரம்பித்தது முதல் இன்று வரை பல்வேறு ஆலோசனைகளை, வாசகர்களின் மன ஓட்டங்களை அறிந்து, தன் அனுபவங்களைப் பகிந்துகொண்டு வலைத்தமிழ் ஆசிரியர் குழுவினருடன் கைகோர்த்துப் பயணித்தது எங்களுக்கு ஒரு மறக்க முடியாத அனுபவம். 

ஜோதிதியின் ஆலோசனையின்பேரில் பல்வேறு தொழில்நுட்ப மாற்றங்களைத் தளத்தில் செய்தோம், இன்னும் ஒருசில மாற்றங்கள் விரைவில் முடிய இருக்கிறது. இது வலைத்தமிழ் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமான ஒன்றாகும். 

"ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள்" தொடர் மாடசாமி, ரம்யா, ராஜா போன்ற பாத்திரங்கள் வழியே தங்களின் வலியை, வாழ்க்கையை மிக நேர்த்தியாகப் பதிவு செய்து இன்றைய எதார்த்த நிலையை ஆசிரியர் ஜோதிஜி படம்பிடித்துக் காட்டியுள்ளார். 

ஒவ்வொரு தொழிலும் உழைப்பவர்கள் மட்டும் ஒரு பக்கமும், உழைப்பை உறிஞ்சு வாழ்பவர்கள் மறுபக்கமும் இருப்பது இயல்பு தானே? இதைத்தான் இந்தப் பாத்திரங்கள் வழியே ஜோதிஜி படம் போட்டுக் காட்டியுள்ளார். 

இடையிடையே ஆயத்த ஆடைத்துறையில் பணிபுரியும் தொழிலாளர்கள் வாழ்க்கை சார்ந்த பல்வேறு குறிப்புகள், முதலாளிகளின் மனோபாவம், தான் சந்தித்த அனுபவங்கள் வழியே உணர்ந்து எழுதிய மேற்கோள்கள் போன்றவற்றை மிக நேர்த்தியாக எழுதியுள்ளார். 

ஒவ்வொரு தொழிலும் பணத்தைத்தான் முதன்மை படுத்துகின்றது. பணம் தங்கள் வாழ்க்கையைச் சிறப்படைய வைக்கும் என்று நம்புகின்றார்கள். ஆனால் எத்தனை பணம் சேர்ந்தாலும் எவரும் நிம்மதியாக இருப்பதில்லை. அதற்குப் பின்னால் உள்ள காரணம் என்ன? என்பதனை தனக்குரிய பாணியில் தான் பார்த்த தொழில் சமூகத்தை வைத்து பலவித கருத்துக்களைச் செறிவாக வழங்கியுள்ளார். 

எல்லா உழைப்புக்குப் பின்னாலும் வெற்றி கிடைத்து விடுவதில்லை. குறிப்பிட்ட உழைப்பைத் தவிர வேறு எதற்கும் இங்கே எளிதில் அங்கீகாரம் கிடைத்து விடுவதில்லை. ஏன்? அதற்கான காரணங்கள் என்ன? என்பதனை தன்னை உதாரணமாகக் கொண்டு தான் பெற்ற தோல்வியை வெட்கப்படாமல் எடுத்துரைத்து அதன் வழியே புதிய கருத்துக்களை வழங்கியுள்ளார். இவர் இந்தத் தொடரில் எழுதியுள்ள பல நிகழ்வுகளில் நேர நிர்வாகம் குறித்து எழுதப்பட்ட பல சம்பவங்கள் அனைவருக்கும் பயன்தரக்கூடியது. 

மொத்தத்தில் "ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள்" ஆயத்த ஆடைத்துறையை மட்டும் விவரித்துச் செல்லாமல் இதன் மூலம் அனைவருக்கும் பயன்படும் வகையில் ஒரு தொழிற்சாலையைத் தாண்டிய கருத்துக்களாக விளங்குகிறது. 

ஒவ்வொரு வாரமும் பதியப்படும் வாசகர்களின் கருத்துக்கள் இந்தத் தொடரின் வெற்றியை உறுதிசெய்தது. இந்தத் தொடரைப் தொடர்ந்து படித்துவிட்டு அமெரிக்காவில் பணிபுரியும் பேராசிரியர் ஒருவர் அழைத்து ஜோதிஜியின் "ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள்" போல், தமிழகக் கண்டுபிடிப்புகள், குறிப்பாக ஜி.டி.நாயுடு குறித்துத் தான் ஒரு தொடர் எழுத வலைத்தமிழில் வாய்ப்பிருக்குமா? என்று எங்கள் குழுவினரிடம் கேட்டார். 

மேலும் ஜோதிஜியின் "ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள்" என்னை வெகுவாகக் கவர்ந்தது என்று குறிப்பிட்டார்.. இதுபோல் இங்கே இந்தத் தொடர் வெளியானது முதல் எங்களுக்குப் பலதரப்பட்ட இடங்களில் இருந்தும், பல உயர்பதவிகளில் வகிப்பவர்களிடமிருந்து ஆக்கப்பூர்வமான உற்சாகமான பாராட்டுக்கள் வந்து கொண்டே இருந்தன. 

ஜோதிஜி கடந்த 2009 முதல் 'தேவியர் இல்லம்' என்ற வலைபதிவின் மூலம் பலதரப்பட்ட விசயங்களைக் குறிப்பாகத் தற்காலச் சமூகம் குறித்து, தான் கடந்து வந்த வாழ்க்கை குறித்து எழுதி வருகின்றார். 

தன் அனுபவங்களை எவ்வித பாசாங்கு இல்லாத நடையில் பட்டவர்த்தனமாக எழுதுவது இவரின் சிறப்பாகும். தான் பணிபுரியும் ஆயத்த ஆடைத்துறையில் உள்ள அக்கிரம நிகழ்வாகட்டும், ஈழம் சார்ந்த நாம் அறியாத தகவலாகட்டும் எதையும் மேம்போக்காக எழுதாமல் தான் உணர்ந்தவற்றை, தன் மொழியில் எழுதிவிட்டு நகர்வது இவரின் சிறப்பு. 

தான் எது எழுதினாலும் அதில் ஒரு சமூக நேர்மை, அன்றாட வாழ்வியலில் இன்றைய நெருக்கடிகள் குறித்துப் பதிவு செய்துவரும் ஜோதிஜி, இதில் தமிழகத்தின் இன்றைய சூழலில் இயங்கும் ஒரு தொழிற்சாலையின் நிலை, அதன் உட்கட்டமைப்பு மற்றும் சவால்கள், தொழிற்சாலையை நடத்தும் முதலாளிகளின் நிலை, தொழிலாளர்களின் நிலை, அரசு மற்றும் போட்டியாளர்களின் சவால்கள் என்று பல்வேறு கோணத்தில் இந்தத் தொடரை செதுக்கியுள்ளார். 

இவர் இதற்கு முன்னால் "டாலர் நகரம்" என்றொரு புத்தகத்தின் வாயிலாகத் திருப்பூர் குறித்துப் பொதுவான பார்வையைப் பதிந்துள்ளார். அதனைத் தொடர்ந்து வலைத்தமிழ் இணைய இதழில் திருப்பூருக்குள் உள்ள தொழிற்சாலையைக் குறித்து எழுதியிருப்பது மிகவும் பொருத்தமான ஒன்ற. பாகம் ஒன்று பாகம் இரண்டு என்பதாக எடுத்துக் கொள்ளலாம். 

இது தொழிற்சாலைகள் குறித்த ஆவணம், குறிப்பாகத் திருப்பூர் ஆடைத் தொழில் குறித்த முழுமையான ஆவணம். இது ஒரு நூலாக வெளிவரும்போது இந்தத் துறையில் வேலைவாய்ப்பு தேடும் இளைஞர்கள், தொழில் ஈடுபட்டு வரும் தொழில்முனைவோர் என்று பலருக்கும் பயனளிக்கும். 

இதை ஆங்கிலத்திலும் மொழிபெயர்ப்பது தமிழ் தாண்டி அனுபவங்கள் சென்று சேர வழிவகுக்கும். இதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து விரைவில் வெளியிட வாலைத்தமிழ் குழு இசைந்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.. 

தொடர் நிறைவடையும் இந்தத் தருணத்தில் இந்த முதல் தொடரை எழுதிய ஜோதிஜிக்கு வலைத்தமிழ் ஆசிரியர் குழு சார்பாக எங்களது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். 

இதன்மூலம் வலைத்தமிழ் ஆசிரியர் குழுவிற்குக் கிடைத்த அனுபவமும், ஜோதிஜியின் எழுத்துக்களைத் தொடர்ந்து படித்து வரும் இணைய நண்பர்களின் ஒத்துழைப்பும், இத்தொடர் மூலம் தானும் தன் அனுபவங்களைப் பகிர வாய்ப்பிருக்குமா என்று கேட்டுவரும் எழுத்தாளர்களுக்கும் எங்களது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.. 
நன்றி.. 

ஆசிரியர் குழு சார்பாக 

ச.பார்த்தசாரதி 
U.S.A


தொடர்புடைய பதிவுகள்

Monday, February 09, 2015

உணர்வுகளை வாசித்து, வெற்றிக்கு வழிகாட்டும் ஆவணம்

திருப்பூர் பனியன் தொழிலில் தான் நுழைந்தது முதல் சந்தித்து வரும் பல்வேறு நிகழ்வுகளை, அந்த நகரம் பிறமாவட்டங்களிலிருந்து புலம் பெயர்ந்து வரும் பல்லாயிரக்கணக்கான இளைஞர்களை உள்வாங்கிக் கொண்டு வாழவைப்பதை, வாழ்ந்தவர்கள் வீழ்ந்ததை, ஏற்றுமதி மிகுதியினால் அந்நிய செலாவணி மிகுந்திருப்பதைத் தனது டாலர் நகரம் புத்தகத்தில் எழுதியிருந்தார்.

வலைதமிழ் என்ற இணைய இதழில் தொடராக எழுதி வந்து தற்போது மின்நூலாக வந்திருக்கும் ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் அதன் இரண்டாம் பாகம் என்றும் சொல்லலாம், 

பின்னலாடை தொழிலோடு இணைந்து அதில் உழலும் முதலாளிகள் முதல் அடிமட்ட தொழிலாளி வரை உள்ள மனிதர்களை வாசித்த வரலாறு என்றும் சொல்லலாம். 

திருப்பூர் எனது சொந்த ஊர். நான் 4 வகுப்பு வரை அங்குக் கொங்கு நகர் நகராட்சி பள்ளியில் படித்துவிட்டு, பின்னர்த் திண்டுக்கல்லில் பள்ளிக் கல்வியைத் தொடர்ந்தாலும், வருடந்தோறும் விடுப்பிற்குத் திருப்பூர் வந்து கொங்குநகர், பன்சிலால், தனலட்சுமி மில் ரோடு, யூனியன் மில் ரோடு, கஜலெட்சுமி தியேட்டர், டைமண்ட் தியேட்டர் பகுதி, ராயபுரம், ஏற்றுமதியில் நிராகரிக்கப்பட்டு 2ம் தரம் (செகண்ட்ஸ்) உலாவரும் காதர்பேட்டை எனச் சுற்றிச் சுற்றி வந்தது, முன்சீப் சீனிவாசபுரம் (தற்போதைய திருப்பூர் திருப்பதி கோவில் தெரு) ல் உள்ள பஞ்சாலை தொழிலாளர் சங்க தலைவர்களின் நடவடிக்கைகளைப் பள்ளிப்பருவத்திலிருந்தே கண்காணித்து வந்தது போன்ற வற்றால், நண்பர் ஜோதிஜியின் தொடரின் ஒவ்வொரு அத்தியாயம் வெளி வந்த போதும் நுனிப்புல் மேய்வது போல் சில வரிகளை மட்டும் படித்துவிட்டு அறிவாளி திரைப்படத்தில் எஸ்.வரலட்சுமி நடிகைக்குச் சப்பாத்தி செய்யத் தங்கவேலு சொல்லிக் கொடுக்கும் போது ஒவ்வொரு நிலையிலும் அதுதான் எனக்குத் தெரியுமே என்பது போல் நான் அருகில் இருந்து சுவாசித்த பனியன் தொழிலின் சில விபரங்களை அதுதான் எனக்குத் தெரியுமே என்று நகர்ந்திருக்கிறேன். 

ஆனால் முழுத் தொடரும் முடிந்து நண்பர் மின்நூல் வடிவில் பதிவேற்றியபிறகு பதிவிறக்கம் செய்து ஒரு விடுப்பு நாளில் தொடர்ந்து படித்த போது விறுவிறுப்பும், சுவாரசியமும் தொற்றிக் கொண்டது என்றால் அது மிகையல்ல. 

தனியார் தொழிலில் ஒரு நிறுவனத்தை விட்டு மற்றொரு நிறுவனத்திற்குத் தொழிலாளிகள் மாறுவது என்பது யதார்த்தமாக நிகழக் கூடிய ஒன்றே. அந்த வகையில் ஒரு நிறுவனத்தின் நிர்வாகப் பிரிவில் பணியாற்றி வந்த ஜோதி கணேசன் மனித வள மேம்பாடு மற்றும் நிர்வாகத்திறன் இணைந்த ஒரு பொறுப்பில் புதிய நிறுவனம் ஒன்றில் உள் நுழைந்தது முதல் அங்குள்ள பிரச்சனைகளை ஆழ்ந்து உணர்ந்து படிப்படியாக அவற்றைக் களைந்து வெற்றி கண்ட கதையைத் தொடர் அருமையாகப் படம் பிடித்துக் காண்பிக்கிறது. 

பொதுவாக ஒரு தொடரை, அல்லது அது தொகுப்பாகப் புத்தகமாக வெளிவருகையில் அதை வெளியிடும் நிறுவனத்தைச் சார்ந்தவர் தன்னுடைய வணிகமும் அதில் இணைந்துள்ளது என்கிற சுயநலத்தில் அந்தத் தொடரைப் பற்றி, புத்தகத்தைப் பற்றி உயர்வாக ஒன்றிரண்டு பக்கங்கள் பதிப்புரை எழுதுவது இயல்பு. 

ஆனால் வலைதமிழ் இணைய நிறுவனத்தினர் நண்பர் ஜோதி கணேசனின் தொடருக்கு கிடைத்த அபரிமிதமான வரவேற்பினை கண்டு திக்கு முக்காடி, மின்நூலுக்கு எழுதியிருக்கிற நெடிய பதிப்புரையிலிருந்தே தொடரின் வெற்றியை நாம் உணர முடிகிறது. 

என் தம்பி ஒருவன் இன்று மிகப்பெரும் நிறுவனமாக வளர்ந்து நிற்கின்ற ஒரு பனியன் நிறுவனத்தில் படிப்படியாக வளர்ந்து பொதுமேலாளராக அந்த நிறுவனத்தில் ஒரு அங்கமாக வளர்ந்து ஏறக்குறைய ஒரு நாளைக்கு 14 முதல் 16 மணி நேரம் அந்த நிறுவனமே கதியென்று இருக்கிறான். அவனது முதல் மனைவி அந்த நிறுவனம், 2 வது மனைவிதான் இல்லற வாழ்விற்குத் தேர்வுசெய்து மணம் முடித்துக் கொண்ட மனைவியும், குழந்தைகளும். அத்தகைய dedicated அர்ப்பணிப்பான உழைப்புத்தான் இந்த உயரத்திற்கு அவனைக் கொண்டு வந்திருக்கிறது. 

அது போல திருப்பூர் பின்னலாடை தொழிலோடு ஐக்கியமாகிவிட்ட ஜோதிஜியின் அர்ப்பணிப்பை அவருடைய விவரிப்புகளிலிருந்து உணர முடிகிறது. அன்றாடம் வேலை தேடி வருபவர்கள், வேலையின் உள் நுழைந்து சூட்சுமங்களைப் புரிந்து கொண்டு காலூன்றி வெற்றி பெறுபவர்கள், சோம்பேறித்தனத்தால் பாதியில் விட்டு விட்டுத் தோற்பவர்கள், சம்பாதிப்பதில் பெரும்பகுதியை டாஸ்மாக் கில் இறைப்பவர்கள், நிறுவனத்தில் பணியில் இருந்து கொண்டே நிறுவனத்திற்குத் துரோகம் இழைப்பவர்கள் இப்படிப் பலரைப்பற்றி விவரித்துச் செல்கிறது தொடர். 

பஞ்சிலிருந்து நூலாகி, நூல் துணியாகி, துணி வெள்ளைக்கப்பட்டு, அதில் கலர்கள் சேர்க்கப்பட்டு, பல வடிவங்களில் வெட்டப்பட்டு, ஓரிடத்தில் தைக்கப்பட்டு, ஓரிடத்தில் தரம் பிரிக்கப்பட்டு, ஒரிடத்தில் பெட்டியில் அடுக்கப்பட்டு வணிக மையத்திற்குச் செல்லும் வரை பல உப தொழில்கள் அதைச் சார்ந்துள்ளது. அந்த விபரங்களைப் புரிந்து கொண்ட பல சாதாரணத் தொழிலாளிகள், சில வருடங்கள் தொழில் பழகிவிட்டு, தனக்குத் தெரிந்த மேற்சொன்னவற்றில் ஏதேனும் ஒன்றை உப தொழிலாகத் துவங்கிக் கொண்டு, தான் முன்னர்ப் பணி புரிந்த நிறுவனத்திலிருந்தே ஆர்டர்கள் பெற்று வெற்றிப் படியை தொட்டவர்கள் ஏராளம். 

தொழில் சார்ந்த நிர்வாகவியலில் நண்பரின் தொடரை ஒரு பாடமாகவே வைக்கலாம். அத்தனை நெளிவு, சுளிவுகளை விவரித்துள்ளார். ஏற்றுமதி தொடர்பாகப் பையர் என்று சொல்லப்படுகிற வெளிநாட்டுப் பிரதிநிதிகள், அல்லது அவர்களின் முகவர்கள் வந்து பார்த்து, (சாம்பிள்) மாதிரி வாங்கி அனுப்பி, ஆர்டர் ஏற்கப்பட்டு மிகுந்த எதிர்பார்ப்போடு பலரின் கடுமையான உழைப்பை செலுத்தி தயார் செய்து இறுதிநிலை வருவதற்குள் நெய்தலில், சாயமேற்றுவதில், ஆடை வடிவமைப்பில், பட்டன் அமைப்பதில், ஜிப் அமைப்பதில், அளவில் இப்படி ஏதேனும் ஒரு விஷ‌யத்தினால் சிறு தவறு நேர்ந்தாலும் ஒட்டு மொத்த ஆர்டரும் ரத்தாகி அடிமாட்டு விலையில் காதர்பேட்டையை வந்தடைந்துவிடும். 

அந்த ஆர்டருக்காக உழைத்த முதலாளி எழுந்து நிற்க பல வருடங்களாகிவிடும் என்பதை அருமையாகச் சொல்லியிருக்கிறார் தொடரின் ஆசிரியர். 

காரைக்குடி நகரில் படிப்பை முடித்துப் பிழைப்பிற்காகத் திருப்பூர் புலம் பெயர்ந்து, நுழைந்ததிலிருந்து இது தான் தனது பிழைப்பிற்கான ஊன்றுகோல் என்று பின்னலாடை தொழிலை நேசித்து, அதன் ஒவ்வொரு அணுவையும் சுவாசித்து, வெற்றியடைந்ததை, இடையில் 30 ஆண்டுகளாகச் சந்தித்த இடைஞ்சல்களை, காயங்களை, அதிலிருந்து மீண்டு எழுந்து நின்றதை மிகச் சரியாக ஆவணப்படுத்தியிருக்கிறார் நண்பர் ஜோதி கணேசன். 

ஒரு தொழிற்சங்க நிர்வாகியான எனக்கு ஒரே ஒரு நெருடல், குழந்தை தொழிலாளர்- உழைப்புச் சுரண்டல், தொழிலாளர் நலச்சட்டங்களைப் பல நிறுவனங்கள் பின்பற்றாமலிருப்பது, உரிமைகள் கோர ஒன்றிரண்டு பேர் ஒன்றிணைந்தால் அவர்களின் கோரிக்கையில் உள்ள நியாயத்தை உணர்வதைக் காட்டிலும் அவரை உடனே வெளியேற்றுவது என்கிற முதலாளித்துவம் ஆகியவையும் இந்த நகர் முழுவதும் நிறைந்திருப்பதை விரிவாகச் சொல்லியிருக்கலாம் என்று எண்ணினேன். 

மற்றபடி இந்தத் தொடருக்கு விமர்சனம் எழுதிய அனைவரும் பல விபரங்களைச் சுட்டிக் காண்பித்தாலும், இறுதியில் இது தொழிலாளியாக, முதலாளியாக, நிர்வாகியாக எவ்வாறாகிலும் இந்தப் பின்னலாடை தொழிலில் நுழைபவர்களுக்கு ஒரு வழிகாட்டியாக இருக்கும் என்று சொல்லியிருப்பதோடு நானும் உடன்படுகிறேன். 

நிச்சயமாக அவரின் தொழிலில் உள்ள stress, tension ஆகியவற்றிலிருந்து விடுபட நிச்சயம் அவரின் எழுத்து அவருக்கு உதவியாக உடனிருக்கும். ஜோதிஜி இன்னும் பல வெற்றிப்படிகளைக் கடக்க வாழ்த்துக்களுடன் 

தோழமையுடன் 
எஸ்.சம்பத். மதுரை.




தொடர்புடைய பதிவுகள்






Wednesday, February 04, 2015

கதை போல எழுத முடியுமா?

தமிழ் வலையுலகில் பிரபலமானவர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்கள் பெரும்பாலும் திரைப்படம் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களைப் பற்றி எழுதுபவர்களே. ஆனால் தனக்கென்று ஒரு களத்தை ஏற்படுத்திக் கொண்டு தான் சார்ந்த  துறையை சமூகப் பார்வையுடன் எழுதுபவர்கள் மிகச் சிலரே. அவர்களில் தனி முத்திரை பதித்தவர் தேவியர் இல்லம் என்ற வலைப்பூவில் எழுதிவரும் அன்பிற்குரிய ஜோதிஜி அவர்கள்.  

2013ஆம் ஆண்டு  வெளிவந்து வெற்றி பெற்ற "டாலர் நகரம்" என்ற புத்தகத்தின் வாயிலாக  திருப்பூரை படம் பிடித்துக் காட்டிய ஜோதிஜி "ஈழம் -வந்தார்கள் வென்றார்கள்" "வெள்ளை அடிமைகள்"  "கொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு" போன்ற மின்நூல்களின் மூலமாக இணையத்தில் செயல்பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு நன்கு அறிமுகமானவர். 

இந்த நூல்கள் 50000 முறைக்கு மேல் பதிவிறக்கம்  செயப்பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது 

சமீபத்தில் வலைத்தமிழ் இணைய இதழுக்கு "ஒரு தொழிற்சாலைக் குறிப்புகள் "என்ற தொடரை இருபது வாரங்களாக எழுதி  வந்தார். ஆயத்த ஆடைத்  தொழிலின் பின்னணியை விரிவாக   சொன்ன  இதுபோன்ற ஒரு நூலை இதுவரை படித்ததில்லை. ஒரு குறிப்பிட்ட தொழிற்சார்ந்தவற்றை எந்தக் கல்லூரியிலும் கற்றுத் தரமுடியாத நுணுக்கங்களை   சுவாரசியமான நாவல் போல 20 அத்தியாயங்களாகப் படைத்தளித்துள்ளார். 

இத்தொடரை வாசித்தவர்களிடம்  இருந்துவந்துள்ள விமர்சனங்களை வைத்தே இத் தொடரின் கருத்தாழத்தை அறிந்து கொள்ள முடிகிறது. படிப்பவர்களிடையே ஒரு தாக்கத்தை ஏற்படுத்துவதே ஒரு படைப்பின் சிறப்பு. அந்த வகையில் இத் தொடர் பெரிய வெற்றியை பெற்றுள்ளது என்பதில் ஐயமில்லை 

ஆயத்த ஆடைகளே தற்போது அதிகமாக விரும்பப் பட்டு வருகின்றன . அதன் ரிஷிமூலம் என்ன என்பதை  இத் தொடர் எடுத்துரைக்கிறது.ஒரு ஆறு மலையில் உற்பத்தியாகி  நிலத்தில் வீழ்ந்து காடு மேடுகளை கடந்து, கற்களை உடைத்து  சமவெளிகளில் சஞ்சரித்து  பின்னர் கடலை அடைகிறது. அது போலவே ஆடைகளும் பருத்தியாய் விளைந்து நூலாய் மாறி இயந்திரங்களாலும் மனிதர்களின் வியர்வை சிந்தும் உழைப்பாலும் ஆடையாக  உருப்பெற்று  அங்காடிக் கண்ணாடிகளில் அழகாய் தவம் இருந்து நம் உடலை அடையும் வரை, நாம்  அறியாத ஒவ்வொரு பகுதியையும்  நம் கண் கொண்டு வந்து நிறுத்தி பிரமிப்பூட்டுகிறார்.

இத் தொடரில் முதலாளிகளின் சுயநலத்தை  தோலுரித்திக் காட்டுவதோடு, தன்னால் எத்தனை பேர் பாதிக்கப்பட்டாலும் ஏன் தானே பாதிப்படைந்தாலும் வறட்டு கெளரவங்கள் ஆடம்பரங்கள் இவற்றை விடாது பிடித்துக் கொண்டிருக்கும் அதிகார வர்க்கத்தின் செயல்பாடுகளை சாட சிறிதும் தயங்கவில்லை  ஜோதிஜி  

அவர் பணியாற்றிய நிறுவனங்களின் செயல்பாடுகள் தவறாக இருந்தபோது அவற்றை ஆணவம் மிக்க முதலாளிகளுக்கு அஞ்சாமல் சுட்டிக் காட்டியது  ஜோதிஜியின்  தன்னம்பிக்கையும் உறுதியையும்  நேர்மையையும் வெளிப்படுத்துகிறது. முதலாளிகளின் பலவீனங்களை போட்டு உடைத்திருக்கும் அதே வேளையில்  அனைத்தையும் வெளிப்படையாக  சொல்ல முடியாது என்பதால்  அவற்றை தொடர்வதை சில இடங்களில் சாமார்த்தியமாக தவிர்த்திருக்கிறார். 

இத் தொடரில் குறிப்பிடப் பட்டிருப்பவை  அனைத்தும் அவரது சொந்த அனுபவங்கள். நிர்வாகம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு மட்டுமல்லாது  எப்படி இருக்கக் கூடாது என்பதற்கும் உதாரணங்கள் நிறைந்திருக்கின்றன இக் குறிப்புகளில்  இந்தத் தொடரை ஒரு  நிர்வாகப் பாடமாகக் கொள்ளலாம். இங்கு வாழ்ந்தவர்களும் உண்டு. வீழ்ந்தவர்களும் உண்டு. துரோகிகள் வஞ்சகர்கள், மாடாய் உழைத்துத்  தேயும்  உழைப்பாளிகள் ,சோம்பேறிகள் என அனைத்து தரப்பினரைப் பற்றியும் முதலாளி அறிந்திருக்கிறாரோ இல்லையோ நிர்வாகப் பொறுப்பில் இருப்பவர்கள் அறிந்து வைத்திருக்க வேண்டும்  என்ற  அனுபவ நிர்வாகப் பாடம் பலருக்கும் பயனளிக்கக் கூடியது .

ஆயத்த ஆடைத் தொழிலில் ,  அயன் செய்தல், பிசிறு நீக்குதல் உட்பட சிறுசிறு பணிகள் கூட எவ்வளவு முக்கியமானவை  என்பதையும் விடாமல் கூறி இருக்கிறார். எதற்கு அதிக கவனம் கொடுக்கப் படவேண்டும் என்பதும் விவரிக்கப் பட்டிருகிறது . இவ்வளவு விஷயங்கள் இதில் உள்ளதா என ஆச்சர்யப் பட வைக்கிறது  ஜோதிஜியின் எழுத்துக்கள்  

அவர் அதிகாரப் பதவியில் இருந்தபோதும் தொழிலாளர்களின் சுக துக்கங்களை அருகில் இருந்து உணர்ந்தவர்  என்பதும்  அவரது எழுத்து உணர்த்துகிறது. தொழிலாளர்களுக்கு நியாயமாக கிடைக்கவேண்டியது தவறாமல் கிடைக்கவேண்டும் என்பதை முதலாளிகளிடம் வற்புறுத்தத் தயங்காத  மனிதாபிமானம் மிக்க நிர்வாகியாக இருந்ததுமே அவரது வெற்றிக்குக் காரணமாக அமைந்திருக்கும் என்பதை உணரமுடிகிறது.

 பெரிய நிறுவனங்கள் அதனை சார்ந்து இருக்கும் சிறிய நிறுவனங்கள் இவற்றின் பணி என்ன? என்பதையும் இவற்றின் வளர்ச்சி வீழ்ச்சி பற்றியும் ஒரு ஆய்வே நடத்தி இருக்கிறார் ஜோதிஜி .
   
இந்த தொழிற்சாலைக் குறிப்புகள் மூல நான் அறிந்து  கொண்ட ஒன்று தொழிலாளிகள்  நிர்வாகிகள் முதலாளிகள் என்ற மூன்று தரப்பினரும் முறையான ஒருங்கிணைப்பின்றி வெவ்வேறு  நிலைகளில்   செயல்படுகின்றனர்.  ஒருவரை பற்றி ஒருவர் கவலைப் படுவதில்லை. ஓருவரின் மகிழ்ச்சியும் துன்பமும் வளர்ச்சியும் வீழ்ச்சியும்    இன்னொருவரிடத்தில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை. மனிதாபிமானத்திற்கு இங்கு அவ்வளவாக இடம் இல்லை என்ற உண்மையை ஓங்கி உரைக்கிறது இத் தொடர். திறமையான ஒருவர் வெளியே போனாலும் அதை யாரும் பொருட்படுத்துவதில்லை.

காலத்திகேற்ப இத் தொழிலும் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளதையும் சுட்டிக் காட்டுகிறார் ஜோதிஜி.. விஞ்ஞான தொழில்  நுட்ப வளர்ச்சி காரணமாக ஏராளமான இயந்திரங்கள் பயன்படுத்தப் பட்டாலும் மனித உழைப்பின் தேவையும் இருந்தே கொண்டேதான் இருக்கிறது. ஒவ்வொரு நாளும் புதிது புதிதாக  இயந்திரங்கள் வெளி நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றன 

இவற்றின் தேவையும் அதிகரித்துள்ள நிலையில் உள்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக் கணக்கான பொறியாளர்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம் ஆனால் இவற்றில் அவர்களின் பங்கு சிறிதும் இல்லை என்ற ஆதங்கத்தின் மூலம்  கல்வி முறைக்கு ஒரு குட்டு வைக்கிறார் ஜோதிஜி  இடை இடையே சமுதாய  நிலையை கூறவும் தவறவில்லை..

ஒரு முறையற்ற தொழில் நகரமாக திருப்பூர் விளங்குகிறது என்பதை தெளிவாக உணர்த்துகிறார். திருப்பூருக்கு வந்தால் பிழைத்துக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையோடு வருபவர்களை வரவேற்று வாழ வைக்கும்  இந்நகரம் தொழில்சார்ந்து  முறைப்படுத்தப் படவேண்டும் என்ற விருப்பம் இவரது எழுத்த்துகளில்  புலப்படுகிறது  

இந்தத் தொடர் முழுதும் தொழிற்சாலையில் பணிபுரியும்  மனிதர்களை உளவியல் ரீதியாக விவரித்துக் கொண்டே போகிறார் . இந்த தொடரில் தொழிற்சங்கங்கள் பற்றி எந்தக் குறிப்பும் காணப் படவில்லை என்று நினைக்கறேன். இருபது பகுதிகளைக் கொண்ட இத் தொழிற்சாலைக் குறிப்புகளின் ஒவ்வொரு பகுதியும் சற்று நீளமாக உள்ளது என்பதைத் தவிர பெரிய குறைகள் ஏதும் புலப்படவில்லை

திருப்பூர் ஆயத்த ஆடைத்  தொழிலின் பின்னணியை ஒரு ஆவணப் படம் போல கண்முன் கொண்டு வந்து நிறுத்தியதில் வெற்றி பெற்றிருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும்.

இந்தத் தொடர் படிக்கும் சமயங்களில் சென்னை ரங்கநாதன் தெருவுக்கு செல்ல நேர்ந்தது .  பெரிய அங்காடிகளில் தொங்க விடப் பட்டுள்ள ஆயிரக் கணக்கான ஆயத்த  ஆடைகளை பார்க்கும்போது  ஒவ்வொன்றும் ஒரு முகம் காட்டுவது போல் தோன்றியது .  வறுமை, வெறுமை, கோபம் உழைப்பு  உயர்வு,ஏற்றம், இறக்கம், எதிர்பார்ப்புகள்  ஏமாற்றம் அனைத்தும் இணைக்கப்பட்டு ஆடை  வடிவம் கொண்டு தொங்கிக் கொண்டிருப்பதாக  உணர்ந்தேன்.

ஒரு வேளை நான் திருப்பூர் செல்ல நேர்ந்தால் திருப்பூர் மீதான பார்வை இதன் அடிப்படையிலேயே அமையும் வகையில் ஒரு தாக்கத்தை இத் தொடர் ஏற்படுத்தியுள்ளது என்பதை மறுப்பதற்கில்லை 

இத் தொடரில் விவரிக்கப் பட்டுள்ள ஆயத்த ஆடையின் பல்வேறு தொழில்சார் தகவல்களையும் நடைமுறைகளையும், தொழிலாளர் முதலாளி நிர்வாகிகளின்   வலிகள், வேதனைகள், வஞ்சகங்கள்  சிக்கல்கள்,வெற்றி தோல்விகள் இவற்றை   அடிப்படையாகக் கொண்டு  ஒரு நாவல் படைக்கப் பட்டால்   ஜோடி. குரூஸ் அவர்களின் "கொற்கை" நாவல் போல பேசப்படும் ஒன்றாக அமையும்  என்று நம்புகிறேன்.

ஒரு பயனுள்ள தொடரை வெளியிட்ட வலைத் தமிழ் இணைய தளத்திற்கும் படைத்தளித்த ஜோதிஜி அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள் 



தொடர்புடைய பதிவுகள்