Wednesday, July 02, 2014

அங்கீகாரமும் அவஸ்த்தைகளும்

மறதியென்பது மனிதனின் வரம். பலசமயம் ஒருவன் பைத்தியமாக மாறாமல் இருக்க இந்த மறதியே உதவுகின்றது. இதைப்போலத் தன்னைச் சார்ந்த பலவற்றை மறைத்துக் கொள்வதன் மூலம் சில சமயம் வளர்ச்சியும் பல சமயம் அவமானங்களில் இருந்து தப்பித்துக் கொள்ளவும் முடிகின்றது. இந்த இரண்டுக்குள் தான் ஒவ்வொருவரின் அந்தரங்கமும் உள்ளது.

ஆனால் வளர்ந்து கொண்டேயிருக்கும் தொழில் நுட்பத்தால் இனி எவருக்கும் தனிப்பட்ட அந்தரங்கம் தேவையில்லை என்று சமூகம் சார்ந்த சூழ்நிலைகள் ஒவ்வொருவரையும் மாற்றிக் கொண்டே வருகின்றது. ஒரு குடும்பம் சார்ந்த அத்தனை அந்தரங்களும் இன்று சமூக வலைதளங்களில் விருப்பத்துடன் பகிரப்படுகின்றது. பிற்நத நாள், இறந்த நாள் என்று தொடங்கிக் கணவன் மனைவி அந்தரங்கள் வரைக்கும் விவாதப் பொருளாக மாற்றப்பட்டு எழுத்தாக வந்து விழுந்து கொண்டேயிருக்கின்றது.

அதற்கான அங்கீகாரத்தை எதிர்பார்க்கும் மனோநிலையோடும் காத்திருக்கின்றார்கள்.

திருப்பூரில் கடந்த இருபது வருடங்களில் ஒவ்வொரு ஐந்து வருடங்களையும் நான் முக்கியமாகக் கருதுவதுண்டு. காரணம் ஒரு ஐந்து வருடத்தில் ஒட்டு மொத்த வளர்ச்சி, வீழ்ச்சி என்பதைச் சற்று நிதானமாகப் பார்க்க வாய்ப்பு கிடைக்கும். தொழில் ரீதியாகப் பாதிக்கப்பட்டுக் காணாமல் போனவர்கள், அழிந்து போனவர்கள், அழிக்கப்பட்டவர்கள், அசாத்தியமான உயரத்தை எட்டியவர்கள் என்று ஏராளமான ஆச்சரியத்தைக் கடந்த இருபது வருடத்தில் பார்த்துள்ளேன். இதற்குப் பின்னால் எண்ணிக்கையில் அடக்க முடியாத ஒரு சமூகக்கூட்டம் சம்மந்தப்பட்டு இருப்பதால் ஏராளமான அனுபவங்களை உணர்ந்துள்ளேன்.

அதைப்போலத்தான் நான் இணையத்தில் நுழைந்த போது எனக்குக் கிடைத்த அனுபவங்கள், ஒவ்வொரு காலகட்டத்திலும் அடைந்த மாற்றங்கள் எனக் கற்றதும் பெற்றதையும் இந்த ஐந்தாம் ஆண்டின் இறுதியில் எழுதி வைத்துவிட வேண்டும் என்று தோன்றியது. எப்போதும் நண்பர்கள் சொல்லும் சிறிய பதிவாகக் குறிப்பிட்ட விசயங்களோடு என் சமூகம் சார்ந்த பார்வையைப் பதிவுகளாக மாற்றி வைத்து விடுகின்றேன்.

ஊருக்குச் செல்லும் போது தாத்தா வாழ்ந்த வீட்டைப் பார்ப்பதுண்டு. அந்த இடம் தற்பொழுது வேறொருவர் கைக்குப் போய்விட்டது. கேட்பாரற்று வேலிக்கருவைச் செடிகள் மண்டி சுற்றிலும் வேலி போட்டு இடம் என்றொரு பெயரில் வைத்துள்ளனர். பல முறை முள்கம்பிகளை ஒதுக்கி உள்ளே சென்று அந்த இடத்தைப் பார்க்கும் பொழுது தாத்தாவுடன் பேசிய தினங்கள், பள்ளிக்கூட ஞாபகங்கள் ஒவ்வொன்றாக என் மனதில் வரும். அது போலத்தான் வேர்ட்ப்ரஸ் ல் முதன் முதலாக எழுதிய தினமும், அன்றைய தினத்தின் மனநிலை, அப்போது என் வாழ்க்கை இருந்து சூழ்நிலை என்று ஒவ்வொன்றும் இப்போது என் நினைவுக்கு வந்து போகின்றது.



2009 ஜுன் மாதம் இறுதியில் தமிழ் இணையம் அறிமுகமானதும் ஜுலை மாதம் முதல் வாரத்தில் எழுதத் தொடங்கியதும் எனத் தொடங்கிய என் எழுத்துப் பயணத்தின் வயது ஐந்து. இணையம் தொடர்பு இல்லாமல் எழுத்தாளர்களாக முப்பது வருடங்களாகச் செயல்பட்டுக் கொண்டிருப்பவர்கள், இணையத்தில் பத்து வருடங்களாக எழுதிக் கொண்டிருப்பவர்கள் என ஏராளமானோர் இங்கே இருந்தாலும் மொத்தமாக இது சார்ந்த அனுபவங்களை எவரும் இங்கே எழுதவில்லை என்றே நினைக்கின்றேன்.

தாங்கள் பார்த்த படங்கள், பயணித்த ஊர்கள், சந்தித்த மனிதர்கள் என்று அனுபவங்களைப் பகிர்பவர்கள் தாங்கள் வாழும் சமூகம் குறித்த பார்வையை எழுத எல்லோருக்கும் ஒரு சிறிய தயக்கம் இருக்கத்தான் செய்கின்றது. அதிலும் குறிப்பாகத் தங்களின் இணையம் சார்ந்த அனுபவங்களை ஒவ்வொரும் கடந்து போகவே விரும்புகின்றனர். அவரவருக்கு அந்தச் சமயத்தில் தோன்றியதை அவரவருக்குத் தெரிந்த மொழியில் எழுதி வைத்து விட்டு நகர்ந்து விடுவதும், அலுப்பு வந்த போது அல்லது எழுத முடியாத சூழ்நிலை உருவாகும் போது அது ஒரு கனாக்காலம் என்று மனதிற்குள் வைத்துக் கொண்டு மருகிக் கொள்வதுமான உணர்வு தான் இங்கே பலருக்கும் இருக்கின்றது.

ஏன் எழுதுகின்றாய்? என்ற கேள்வியும் எழுதி என்ன ஆகப்போகின்றது? என்ற கேள்வியும் எனக்கு அதிக ஆச்சரியம் அளித்தது இல்லை. ஆனால் நான் படித்தால் எனக்கு என்ன நன்மை? என்று கேட்பவர்களைப் பார்க்கும் போது தான் தமிழர்களின் எண்ணம் எந்த அளவுக்குக் குறுகிய இடத்திற்கு வந்து சேர்ந்துள்ளது என்பதை நினைத்துக் கொள்வதுண்டு. நுட்பமான உணர்வுகள் அனைத்தும் நம்மை விட்டுப் போய்விட்டது. ரசிப்பின் தன்மையும் ரசனைகளின் அளவுகோலும் மாறிவிட்டது.

நம் ஆசைகள் நம்மை வழிநடத்துக்கின்றது. இறுதியில் ஆசைகளே நம்மை ஆளவும் செய்கின்றது.

எல்லோருக்கும் ஏதோவொரு வகையில் அங்கீகாரத்தைப் பெற்று விட வேண்டும் என்று தான் விரும்புகின்றோம். ஆனால் அந்த அங்கீகாரம் எதற்காக? என்று யோசித்தால் அதனால் ஒரு பலனும் இல்லை என்பது தான் உண்மையாக இருக்கும்.

1947க்குப் பிறகு தமிழ்நாட்டில் வாழ்ந்த அரசியல்வாதிகள், திரைப்படப் பிரபல்யங்கள், எழுத்தாளர்களில் இன்று எத்தனை பேர்களின் பெயர்களை நம்மால் நினைவு வைத்திருக்க முடிகின்றது. ஒவ்வொரு காலகட்டத்திலும் வாழ்ந்து மறைந்தவர்கள் தன்னை நிலைநிறுத்திக் கொள்வதற்காக எத்தனை வேலைகளைச் செய்து இருப்பார்கள்.

ஏன் காணாமல் போனார்கள்?

காலம் என்பது ஒரு சல்லடை. பாரபட்சமின்றிச் சலித்துத் துப்பும் போது எஞ்சியவர்களும், மிஞ்சியவர்களும் மிக மிகக் குறைவான எண்ணிக்கையில் தான் இங்கே காலத்தை வென்றவர்களாக இருக்க முடிகின்றது.

என்னை யாராவது நினைவில் வைத்திருப்பார்களா? என் எழுத்தை அடுத்தத் தலைமுறைகள் படிப்பார்களா? என்று யோசிப்பதை விட அதற்கான வழிமுறைகளை உருவாக்கி விட்டு அமைதியாக ஒதுங்கி விடுவதே உத்தமம். காரணம் அறிவை விட அறியாமை தான் மிகப் பெரிய வரம். காலம் காலமாக அறியாமையுடன் வாழ்ந்தவர்கள் தான் வாழ்க்கை முழுக்கக் குறைவான வசதிகளுடன் வாழ்ந்த போதிலும் அமைதியாய் வாழ்ந்து மடிந்துள்ளனர்.

அறிவுடன் போராடி மல்லுக்கட்டிய அத்தனை பேர்களும் ஒவ்வொரு துறையிலும் வளர்ச்சிக்கு, ஆக்கப்பூர்வமான செயல்பாட்டிற்கு உதவியிருக்கின்றனரே தவிரத் தனிப்பட்ட வாழ்க்கையில் நிம்மதி இழந்து, அங்கீகாரத்தை எதிர்பார்த்து, வாழும் போது கிடைக்காமல், மற்றவர்களால் புறக்கணிப்பட்டு மறைந்தும் போயுள்ளனர்.

அங்கீகாரத்தின் தேவையை நாம் தான் உணர்ந்து வைத்திருக்க வேண்டும்.

அமைதியான கவனிப்பு, பரவலான கவனிப்பு, ஆர்ப்பட்டமான கவனிப்பு என்ற இந்த மூன்றுக்கும் உங்களுக்கு வித்தியாசம் தெரிந்தால் உங்கள் கடமையை அமைதியாகச் செய்து விட்டு அடுத்த வேலைக்கு நகர்ந்து விட முடியும் தானே?

19 comments:

Paramasivam said...

நல்ல பதிவு. //கடமையை அமைதியாக செய்து விட்டு அடுத்த வேலைக்கு நகர்ந்து விடல்//
உண்மை தான். அவ்வாறு செய்தால் நிம்மதியாக வாழ முடியும்.
ந. பரமசிவம்

”தளிர் சுரேஷ்” said...

காலம் என்பது ஒரு சல்லடை. பாரபட்சமின்றிச் சலித்துத் துப்பும் போது எஞ்சியவர்களும், மிஞ்சியவர்களும் மிக மிகக் குறைவான எண்ணிக்கையில் தான் இங்கே காலத்தை வென்றவர்களாக இருக்க முடிகின்றது.
// அருமையான வரிகள்! சிறப்பான பதிவு! நன்றி!

Unknown said...

காலம் யாரிடமும் கருணை காட்டுவதில்லை. முற்றிலும் உண்மை.

கரந்தை ஜெயக்குமார் said...

நம் கடமையை முடிந்த மட்டும் நிறைவாய் செய்வோம்
மற்றவை காலத்தின் கையில்
நன்றி ஐயா

எம்.ஞானசேகரன் said...

மறக்க முடியாத நினைவுகளை மறந்துவிடாமலிருக்க ஒவ்வொன்றாய் பதிவு செய்துவிடத் துடிக்கிறீர்கள் என்று தெரிகிறது.

//ஏன் எழுதுகின்றாய்? என்ற கேள்வியும் எழுதி என்ன ஆகப்போகின்றதுகேள்வியும்// இது மாதிரி எனக்குள்ளே தினமும் கேட்டுக்கொண்டே இருக்கிறேன். அதனால்தான் பதிவுகள் எழுதுவது குறைந்துகொண்டே வருகிறது.

//நான் படித்தால் எனக்கு என்ன நன்மை? என்று கேட்பவர்களைப் பார்க்கும் போது தான் தமிழர்களின் எண்ணம் எந்த அளவுக்குக் குறுகிய இடத்திற்கு வந்து சேர்ந்துள்ளது என்பதை நினைத்துக் கொள்வதுண்டு//
இது மாதிரி ஆட்களை நிறைய பார்த்தாயிற்று. வாழ்க்கை என்பது உண்பது, உடலுறவு கொள்வது, உறங்குவது என்று மாறிப்போனபின் படிப்பது குறித்த கேள்வியே அனாவசியம்தான். 90 சதவீதம் பேர் இப்படித்தான் இருக்கிறார்கள். பெண்களில் 99 சதவீதம்.

மகிழ்நிறை said...

Thomas grayயின் ignorance is bliss என்ற வரிகளை நினைவு படுத்துகின்றன உங்கள் காரணம் அறிவை விட அறியாமை தான் மிகப் பெரிய வரம். பதிவுகளில் விரிவாயும்,படங்களில் தெளிவாயும் பயணிக்கிற கட்டுரை என்னை சிந்திக்க வைத்திருக்கிறது! நேரம் கிடைக்கும் போது இந்த பதிவை வாசித்துப்பாருங்கள் அண்ணா//http://makizhnirai.blogspot.com/2014/02/town-fox-and-country-dog.html

திண்டுக்கல் தனபாலன் said...

அங்கீகாரம் எதற்காக...?

இதற்கான பதிவு உண்டு - எனது பாணியில்...

முடிவிற்கான கேள்வியும் சிந்திக்க வைத்தது...

'பரிவை' சே.குமார் said...

நல்ல பதிவு அண்ணா...

ஜோதிஜி said...

நன்றி குமார்

ஜோதிஜி said...

பதிவை எதிர்பார்த்து ஆவலுடன்.

ஜோதிஜி said...

நன்றி மைதிலி. கட்டுரையில் அதிக கவனம் செலுத்துங்க.

ஜோதிஜி said...

உல்லாசமாக வாழ்வது என்பது காலம் காலமாக மனித சமூகத்தில் ஊறிப்போன ஒன்று தான். முன்பு நாம் என்ன செய்தாலும் அடுத்த ஊருக்கே தெரிவது என்பது மிக அரிதாகவே இருந்தது. ஆனால் இன்று உலகில் எந்த மூலையில் என்ன நடந்தாலும் அந்த நொடியே பந்தி விரித்து வைத்து விடுகின்றார்கள். எல்லாமே கலந்தது தான் இந்த சமூகம். நம் பார்வையும் நோக்கமும் சரியாக இருக்கும் வரையிலும் நம் லட்சியத்தை, வாழ்க்கை கொள்கைகளைத் தவிர மற்ற அனைத்துமே நமக்கு வேடிக்கையாக மாறிவிடும்.

ஜோதிஜி said...

தொடர்ந்த உங்களின் வாசிப்புக்கு என் நன்றி.

ஜோதிஜி said...

வருகைக்கு நன்றி ரவி.

ஜோதிஜி said...

நன்றி சுரேஷ்

ஜோதிஜி said...

நிம்மதியில் தான் நம் மதியின் சூட்சமம் உள்ளது. நன்றி பரமசிவம்.

Rathnavel Natarajan said...

தாங்கள் பார்த்த படங்கள், பயணித்த ஊர்கள், சந்தித்த மனிதர்கள் என்று அனுபவங்களைப் பகிர்பவர்கள் தாங்கள் வாழும் சமூகம் குறித்த பார்வையை எழுத எல்லோருக்கும் ஒரு சிறிய தயக்கம் இருக்கத்தான் செய்கின்றது. அதிலும் குறிப்பாகத் தங்களின் இணையம் சார்ந்த அனுபவங்களை ஒவ்வொரும் கடந்து போகவே விரும்புகின்றனர். = திரு ஜோதிஜி அவர்கள் அருமையான சிந்தனையாளர். நான் சேமித்து வைத்து படிக்கும் பதிவு அவரது. எனது பக்கத்தில் பகிர்கிறேன். வாழ்த்துகள் திரு ஜோதிஜி.

சேக்காளி said...

//எல்லோருக்கும் ஏதோவொரு வகையில் அங்கீகாரத்தைப் பெற்று விட வேண்டும் என்று தான் விரும்புகின்றோம். ஆனால் அந்த அங்கீகாரம் எதற்காக? என்று யோசித்தால் அதனால் ஒரு பலனும் இல்லை என்பது தான் உண்மையாக இருக்கும்//
அந்த உண்மை பிடிபடும் வரை துரத்தி தானே ஆக வேண்டியிருக்கிறது.

கிரி said...

"நான் படித்தால் எனக்கு என்ன நன்மை? என்று கேட்பவர்களைப் பார்க்கும் போது தான் தமிழர்களின் எண்ணம் எந்த அளவுக்குக் குறுகிய இடத்திற்கு வந்து சேர்ந்துள்ளது என்பதை நினைத்துக் கொள்வதுண்டு"

சிலர் மிகவும் மோசமாக எழுதுவதால் அதைப் படித்து கடுப்பில் வந்த வார்த்தைகளாகக் கூட இருக்கலாம்.

"காலம் என்பது ஒரு சல்லடை. பாரபட்சமின்றிச் சலித்துத் துப்பும் போது எஞ்சியவர்களும், மிஞ்சியவர்களும் மிக மிகக் குறைவான எண்ணிக்கையில் தான் இங்கே காலத்தை வென்றவர்களாக இருக்க முடிகின்றது"

இது உண்மையே!

"என்னை யாராவது நினைவில் வைத்திருப்பார்களா? என் எழுத்தை அடுத்தத் தலைமுறைகள் படிப்பார்களா? என்று யோசிப்பதை விட அதற்கான வழிமுறைகளை உருவாக்கி விட்டு அமைதியாக ஒதுங்கி விடுவதே உத்தமம்."

நீங்க PDF ல வெளியிட்டு இருக்கிறீர்கள் எனவே.. நினைவில் இருப்பீர்கள் :-)