Saturday, January 31, 2015

வளர நினைக்கும் இளைஞர்களின் கையேடு

எப்பேர்ப்பட்ட மோசமான குணாதிசயங்கள் கொண்டவருடன் பழகினாலும் தன் சுயபுத்தியை இழக்காமல் தன் நிலையை எந்தசூழ்நிலையிலும் கடைசி வரை மாற்றிக் கொள்ளாமல் அனைத்தையும் வேடிக்கை பார்க்கும் மனோநிலையில் இருக்கும் 22 வருட கடின உழைப்புடன் கூடிய அனுபவம் கொண்ட ஜோதிஜி எழுதியிருக்கும் “ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள்” என்ற தொடரை ஒரு அத்தியாயம் கூட விடாமல் கவனமாக வாசித்தேன். 

நான் வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கை, நான் சந்திக்கும் மனிதர்கள், நான் சார்ந்திருக்கும் தொழில் என்பதனை இந்த தொடர் மூலம் என்னால் மீள் ஆய்வு செய்து கொள்ள முடிந்தது.  இந்தத் தொடர் மூலம் தனிப்பட்ட முறையில் நான் கற்றதும் பெற்றதும் ஏராளம். என் பார்வையில் சில விமர்சனக் கருத்துக்களை மட்டும் இங்கே எழுதி வைக்க விரும்புகின்றேன்.

1. ஒரு தொழிற்சாலை நிர்வாகியின் அனுபவத்தொடர் என்பதா?  

2. ஒரு தொழிற்சாலை நிர்வாகியின் மனிதவளம் தொடர்பான அனுபவங்கள் மற்றும் ஆலோசனைகள் ;தொடர் என்பதா? 

3. மனிதர்களையும் அவர்களின் குணாதிசயங்களையும் அலசி ஆராயும் ஒரு சக மனிதரின் அனுபவக்குறிப்புகள் என்பதா? 

4. 22 வருடங்களுக்கும் மேலாக இருந்துவரும் தொழிலில் தான் கண்ட மனிதர்களின் ஏற்றஇறக்கங்களை பதிவு செய்யும் தொடர் என்பதா? 

5. ஆயத்த ஆடைத்தொழிலின் தலைநகரம் திருப்பூரைப் பிடித்துப் பார்த்த நாடித் தொடர் என்பதா? 

6. தான் கடந்து வந்த 22வருட திருப்பூர் வாழ்க்கையின் வாழ்வியல் தொடர் என்பதா? அல்லது

7. திருப்பூர் தொழிலதிபர்களின் வாழ்ந்த வீழ்ந்த கதையை சொல்லும் தொடர் என்பதா? 

8. வாழ்க்கையின் ஏற்ற இறக்கங்களைச் சொல்லி வாழ்க்கையை புரிந்துகொள்ளச் சொல்லும் வாழ்வியல் நன்னெறித் தொடர் என்பதா? 

9. எல்லாம் கலந்து கட்டிய சரம் என்பதா? 

என்று சத்தியமாக நம்மால் ஒரு முடிவுக்கு வர இயலவில்லை. அந்த அளவிற்கு வார்த்தைகளை வைத்து ஜோதிஜி விளையாடி இருக்கிறார்.

எழுதச்செல்லும் முன்பு எழுத வேண்டிய விசயத்தை மனதில் ஆழ்ந்து உள்வாங்கி அத்துடன் தனது கருத்துக்களையும் சரியான முறையில் எழுதியதால் இத்தொடர் ஒரு நாட்குறிப்பு போலவோ அல்லது ஒரு கட்டுரை போலவோ இல்லாமல் ஒவ்வொரு வார்த்தையையும் கவனத்துடன் படித்துச்செல்லும் அளவிற்கு அவரது எழுத்து நடை அமைந்திருப்பது மிகச்சிறப்பு. 

“வாழ்க்கை என்பதை புரிந்து வாழ்பவர்களுக்கு கொள்கையில் சமரசம் என்பதே இருக்காது. வாழ்க்கையின் மிகப்பெரிய சவால் என்பது தங்களுக்கான திறமையை அடையாளம் கண்டு கொள்வதே ஆகும். உங்களுக்கு உண்டான நேர்மை குறித்து உங்களுக்கே அக்கறை இல்லை என்றால் அது என்றாவது ஒரு நாள் மானங்கெட்ட மனிதர்களின் பட்டியலில் சேர்த்துவிடும் என்பதை நினைவில் வைத்திருக்கவும்” என்று வாழ்வியலை பதிவு செய்திருக்கும் விதம் அருமை.

“தர்மம் நியாயம் அறம் என்பதெல்லாம் அன்றும் இன்றும் பலரின் வாழ்க்கையில் வெறும் வார்த்தைகள் மட்டுமே. பணம் என்ற காகிதத்திற்காக இதன் சுகம் என்ற குறுகிய வட்டத்திற்காக எந்த எல்லைக்கும் போகலாம் என்பதாகத்தான் இங்கே பலரின் கொள்கைகளும் உள்ளது” என்று மனித மனங்களை வெளிப்படுத்தியிருக்கும் விதம் அருமை.

“ஓரு நிர்வாகத்தின் வெற்றி என்பது தனி மனித உழைப்பை மட்டும் சார்ந்தது அல்ல. அது பலருக்கு கொடுக்கப்படுகின்ற பயிற்சியினால் உருவாக்கப்படுகின்ற கூட்டுக்கலவை. அதன் மூலம் கிடைப்பதே மொத்த வெற்றி. ஒரு நிர்வாகத்தின் வளர்ச்சி வீழ்ச்சியடைய பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் முக்கியமான முதன்மையான காரணமாக இருப்பது மனித மனங்களை கையாளத் தெரியாத பட்சத்தில் வீழ்ச்சி விரைவாகும்”.

“அரசியலில் அவ்வப்போது பலியாடுகள் தேவைப்படுவதைப் போல நிர்வாகத்திலும் பலி கொடுத்தால் தான் நிர்வாகம் அடுத்த நிலைக்கு நகரும் என்றால் கொடுத்தே ஆக வேண்டும்.இது வெளியே சொல்லமுடியாத நிர்வாக விதிமுறை.ஒரு சிறந்த நிர்வாகி என்பவருக்கு முதல் தகுதியே நெருக்கடியான சூழ்நிலையில் உருவாகும் பிரச்சனைகளை எப்படிக் கையாள்கின்றார் என்பதை வைத்தே முதலாளி அவரைப்பற்றி முடிவுக்கு வருகின்றார்“ என்று நிர்வாகவியலை விளக்கியிருக்கும் விதம் அருமையிலும் அருமை..

“ஒருவர் வாழ்வில் தென்படும் சிறிய வெளிச்சம் தான் மிகப் பெரிய பாதையைக் காட்டுகின்றது. தன்னம்பிக்கையோடு உழைக்கத் தயாராக இருப்பவனுக்கு இங்கு ஏதோவொரு சமயத்தில் வழி கிடைக்கத்தான் செய்கின்றது” என்று நம்பிக்கையூட்டுகிறார்.

“நாம் எந்தப் பதவியில் இருந்தாலும் எந்த இடத்திலும் எந்தச் சூழ்நிலையிலும் நாம் இயல்பான மனிதராகக் கற்பனை செய்து கொண்டு வாழ்ந்தால் மட்டுமே நம் வாழ்க்கையை பதவியை நம்மால் காப்பாற்றிக் கொள்ள முடியும். சிறப்பான அங்கீகாரம் கிடைத்து விட்டது என்று இறுமாப்பில் நாம் நம்மை மாற்றிக் கொண்டால் அடுத்து ஒரு ஆப்புக் காத்திருக்கின்றது என்று அர்த்தம். இது தவிர ஒவ்வொரு சூழ்நிலையிலும் நாம் ஒவ்வொரு இடத்திலும் உள்ள மனிதர்களுடன் பேசினால் மட்டுமே அவர்களைப் பற்றிப் புரிந்து கொள்ள முடியும். நம் பதவி சார்ந்து ஒரு இறுக்கத்தை நாமே உருவாக்கிக் கொண்டே இருந்தால் அது பலவிதங்களில் நம்மைப் பல மனிதர்களிடத்தில் இருந்து அந்நியமாக வைத்து விடும் ஆபத்துள்ளது” என்று எச்சரிக்கவும் செய்கிறார்.

“ஒருவரின் தனிப்பட்ட பழக்கவழக்கம் மாறும் போது அவரால் எடுக்கப்படும் முடிவுகளும் மாறுகின்றது.'ஒழுக்கம் உயிரை விட மேலானது' என்று வள்ளுவர் சொன்னதன் காரணத்தை எவரும் யோசிப்பதே இல்லை.ஆனால் ஒரு மனிதனின் அனைத்து தோல்விகளும் அவனின் ஒழுக்கம் சார்ந்த நடவடிக்கை தொடங்கி வைக்கின்றது. அவனுடைய ஆசைகள் அதனை விரைவு படுத்துகின்றது. இது தான் சரியென்று அவனது பேராசை உறுதிப்படுத்துகின்றது. இதன் வழியே சென்று அழிந்தவர்கள் தான் இங்கே முக்கால்வாசி பேர்கள் உள்ளனர்”.

இவ்வளவுதான் திருப்பூர் என்று எளிமையாக புரிய வைத்துவிட்டீர்கள் ஜோதிஜி.

தொழிலையும் விளக்கி அதிலிருக்கும் மனித மனங்களையும் விளக்கி திருப்பூரில் உள்ள தொழில் நிறுவனங்கள் சார்ந்த செயல்பாடுகளை எழுதியுள்ள ஜோதிஜியின் “ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள்” என்பது வளர நினைக்கும் ஒவ்வொரு இளைஞரின் கைகளிலும் வைத்திருக்க வேண்டிய கையேடு ஆகும்.

தான் சாப்பிட்ட இட்லி சட்னி சாம்பாரையும் தான் பார்த்த சினிமாவையும் ரசித்து எழுதும் வலையுலகத்தில் வித்தியாசமாக ஒரு கனமான விசயத்தை இவ்வளவு அருமையாக எழுத முடியும் என்று எழுதிக்காட்டிய அன்புச்சகோதரர் ஜோதிஜி உங்களுக்கு என் அன்பான வாழ்த்துக்களும் வணக்கங்களும்.

“ஒரு நிறுவனத்தை விட்டு வெளியே வந்தவுடன் அவர்கள் பலமுறை மீண்டும் அழைத்தும் அந்தப்பக்கம் திரும்பிப் பார்ப்பதும் இல்லை என்ற கொள்கையைத் தொடக்கம் முதல் கடைபிடித்து வருகின்றேன்.ஒரு நிறுவனத்தை விட்டு நகர்ந்து வந்த பிறகு ஏதோவொரு இடத்தில் அடையாளம் தெரியாத தொழிலாளர் உண்மையான அக்கறையோடு என்னைப் பற்றி எங்கள் குடும்பத்தைப் பற்றி அக்கறையோடு விசாரிக்கின்றார்கள். "நீங்க இருந்த வரைக்கும் நாங்க நன்றாக இருந்தோம்" என்று சொல்கின்ற அவர்களின் அந்த வார்த்தைகள் தான் இன்னமும் என்னை இந்தத் துறையில் இயங்க வைத்துக் கொண்டேயிருக்கின்றது”. 

“கோடி கோடியாய் சேர்த்தவனும் இறுதியில் திருப்பூரில் மின் மயானத்திற்குத்தான் செல்லப் போகின்றான்.நானும் அங்கே தான் செல்லப் போகின்றேன்.கோடிகளைச் சேர்த்து வைத்தவனின் வாரிசு அவனை எளிதில் மறந்து விடக்கூடும்.ஆனால் என் கொள்கைகள் என் வாரிசுகளை வழி நடத்தும்.அவர்களும் பலரின் வாழ்க்கைக்கு உதவக் கூடியவர்களாக இந்தச் சமூகத்தில் எதிர்காலத்தில் செயலாற்றுவார்கள் என்ற ஆழ்ந்த நம்பிக்கை எனக்குள் உண்டு”

அன்புச்சகோதரர் ஜோதிஜி இதுதான் உங்களது 22 ஆண்டு கால உழைப்பிற்கான சம்பளம்.

ஆம். நம்பிக்கை தானே வாழ்க்கை. 

உங்கள் நல்ல எண்ணங்கள் எந்த அளவுக்கு நீங்கள் சார்ந்திருந்த தொழிலாளர்களுக்கு உதவியாய் இருந்துருக்கும் என்பதனை உங்கள் சத்தியமான வார்த்தைகள் மூலம் உணர்ந்து கொண்டேன். வாசிக்கும் எங்களைப் போன்றவர்களுக்கு நீங்கள் கடத்திய உணர்வுகள் என்பது இன்னும் சில மாதங்கள் அதன் தாக்கம் எனக்குள் இருப்பதைப் போல உங்களால் பலன் அடைந்தவர்களின் ஆசிர்வாதம் நிச்சயம் உங்கள் தலைமுறைகளை வாழ வைக்கும் என்று உறுதியாய் நானும் நம்புகின்றேன்.

நன்றி ஜோதிஜி

மாரியப்பன் ரவீந்திரன். மதுரை.

அலைபேசி எண் 944 27 38 002


தொடர்புடைய பதிவுகள்


பேசா பொருளை பேசு

இது மனிதர்களின் கதை

குறிப்புகளின் குறிப்புகள்

8 comments:

Unknown said...

நிகண்டு.காம் புதிய பொலிவுடன் புது சாப்ட்வேர் உடன் புதிய வேகத்தில் இந்த தமிழர் திருநாளில் ஆரம்பமாகிறது. தமிழில் எழுதுபவர்களையும் படிபவர்களையும் இணைக்கும் தளம் நிகண்டு.காம் வழியாக உங்கள் வலைப்பூக்கள்,புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

Amudhavan said...

\\தான் சாப்பிட்ட இட்லி சட்னி சாம்பாரையும் தான் பார்த்த சினிமாவையும் ரசித்து எழுதும் வலையுலகத்தில் வித்தியாசமாக ஒரு கனமான விசயத்தை இவ்வளவு அருமையாக எழுத முடியும் என்று எழுதிக்காட்டிய அன்புச்சகோதரர் ஜோதிஜி.....\\

எத்தனை அருமையான படப்பிடிப்பு.............

\\ஒரு நிறுவனத்தை விட்டு வெளியே வந்தவுடன் அவர்கள் பலமுறை மீண்டும் அழைத்தும் அந்தப்பக்கம் திரும்பிப் பார்ப்பதும் இல்லை என்ற கொள்கையைத் தொடக்கம் முதல் கடைபிடித்து வருகின்றேன்.ஒரு நிறுவனத்தை விட்டு நகர்ந்து வந்த பிறகு ஏதோவொரு இடத்தில் அடையாளம் தெரியாத தொழிலாளர் உண்மையான அக்கறையோடு என்னைப் பற்றி எங்கள் குடும்பத்தைப் பற்றி அக்கறையோடு விசாரிக்கின்றார்கள். "நீங்க இருந்த வரைக்கும் நாங்க நன்றாக இருந்தோம்" என்று சொல்கின்ற அவர்களின் அந்த வார்த்தைகள் தான் இன்னமும் என்னை இந்தத் துறையில் இயங்க வைத்துக் கொண்டேயிருக்கின்றது”.\\

உங்களுடைய வாழ்க்கையின் லட்சியம் என்ன என்பதை கச்சிதமாகச் சொல்லியிருக்கிறீர்கள். அதனை மிகச்சரியாகப் பிடித்திருக்கிறார் நண்பர் மாரியப்பன் ரவீந்திரன்.

\\கோடி கோடியாய் சேர்த்தவனும் இறுதியில் திருப்பூரில் மின் மயானத்திற்குத்தான் செல்லப் போகின்றான்.நானும் அங்கே தான் செல்லப் போகின்றேன்.கோடிகளைச் சேர்த்து வைத்தவனின் வாரிசு அவனை எளிதில் மறந்து விடக்கூடும்.ஆனால் என் கொள்கைகள் என் வாரிசுகளை வழி நடத்தும்.அவர்களும் பலரின் வாழ்க்கைக்கு உதவக் கூடியவர்களாக இந்தச் சமூகத்தில் எதிர்காலத்தில் செயலாற்றுவார்கள் என்ற ஆழ்ந்த நம்பிக்கை எனக்குள் உண்டு”\\

பல்ஸ் பிடித்துப் பார்ப்பது என்பது இதுதான். அதனை மிகச்சரியாக அணுகியிருக்கிறார் தோழர். அருமையான அற்புதமான கருத்துக்களை வெளிப்படுத்தும் நல்ல செறிவான நண்பர்களைக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் அதிர்ஷ்டசாலிதான்.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

நல்ல நூலுக்கு தரமான விமர்சனம் தந்திருக்கிறார் ரவீந்திரன்.நல்ல படைப்புகள் எப்போதும் சோடை போவதில்லை

கரந்தை ஜெயக்குமார் said...

தங்களின் நூலினை முழுமையாக வாசித்தவன் என்ற முறையில் கூறுகின்றேன் ஐயா
அருமையான விமர்சனம்
நன்றி

திண்டுக்கல் தனபாலன் said...

உங்களிடம் பேசியது போல் பலரும் தங்களின் எழுத்தை பலவிதத்தில் பயன்படுத்துவார்கள் என்பது நிதர்சனம்...

மிகவும் மகிழ்கிறேன்...

'பரிவை' சே.குமார் said...

தங்களின் நூல் குறித்து ஒவ்வொருவரின் பார்வையும் அருமை...வாழ்த்துக்கள் அண்ணா...

Thulasidharan V Thillaiakathu said...

தான் சாப்பிட்ட இட்லி சட்னி சாம்பாரையும் தான் பார்த்த சினிமாவையும் ரசித்து எழுதும் வலையுலகத்தில் வித்தியாசமாக ஒரு கனமான விசயத்தை இவ்வளவு அருமையாக எழுத முடியும் என்று எழுதிக்காட்டிய அன்புச்சகோதரர் ஜோதிஜி உங்களுக்கு என் அன்பான வாழ்த்துக்களும் வணக்கங்களும்.//

சத்தியமான வார்த்தைகள்! நாங்களும் அந்தத் தொடரை வாசிக்கும் போது, " சே நாம் என்ன எழுதுகின்றோம்? ஒன்றும் உறுப்படியாக எழுதுவதில்லையே, நானும் கச்சேரிக்குப் போகின்றோம் என்பது போல ஏதோ எழுதுகின்றோம் அவ்வளவே" என்ற எண்ணம் வந்ததைத் தவிர்க்க இயலவில்லை.

ஒவ்வொருவரின் விமர்சனமும் எப்படி உள்ளது! மிகவும் ஆழ்ந்து வாசித்திருக்கின்றார்கள் என்பதை உறுதி கூறுகின்றது. வாழ்த்துக்கள் நண்பரே!

Thulasidharan V Thillaiakathu said...

“கோடி கோடியாய் சேர்த்தவனும் இறுதியில் திருப்பூரில் மின் மயானத்திற்குத்தான் செல்லப் போகின்றான்.நானும் அங்கே தான் செல்லப் போகின்றேன்.கோடிகளைச் சேர்த்து வைத்தவனின் வாரிசு அவனை எளிதில் மறந்து விடக்கூடும்.ஆனால் என் கொள்கைகள் என் வாரிசுகளை வழி நடத்தும்.அவர்களும் பலரின் வாழ்க்கைக்கு உதவக் கூடியவர்களாக இந்தச் சமூகத்தில் எதிர்காலத்தில் செயலாற்றுவார்கள் என்ற ஆழ்ந்த நம்பிக்கை எனக்குள் உண்டு”//

நிச்சயமாக நீங்கள் வெல்வீர்கள் நண்பரே!