Monday, November 12, 2012

காரைக்குடி உணவகம்( தீபாவளி விருந்து )



2012 தீப ஓளி திருநாள் - 13/11/2012

கடந்த இரண்டு வருடங்களாக தீபாவளி குறித்து எழுதி வருகின்றேன்.  ஒவ்வொரு முறையும் வெளிநாடுகளில் குறிப்பாக தமிழர்கள் அதிகம் வாழாத இடங்களில் வாழும் தமிழர்கள் எப்படி இந்த நாளை எதிர்நோக்குகிறார்கள் என்பதை எழுதும் ஒவ்வொருமுறையும் யோசித்தபடியே எழுதுவதுண்டு. சென்ற வருடம் சித்தப்பா இறந்த காரணத்தால் பண்டிகை விசேடமில்லை. ஆனால் கடுமையான வேலைப்பளூவும், மகிழ்வான தருணங்களுமாய் இருந்தது. அதற்கு முந்தைய வருடம் குறிப்பிடத்தக்க மாறுதல்கள் இல்லையென்றாலும் குழந்தைகள் ஊருக்குச் செல்லாமல் திருப்பூரில் கொண்டாடிய தருணத்தை நினைத்து எழுத முடிந்தது. 

இந்த வருடம் திருப்பூரில் தீபாவளி ஒலி எங்கும் இல்லை. இன்று தான் பல இடங்களில் வெடிச் சத்தமே கேட்கின்றது. நாளை தீபாவளி என்பதே நம்பும்படி இல்லை. மின் வெட்டு காரணமாக தொழில் நடத்த முடியாதவர்கள் பத்து நாளைக்கு முன்பே தொழிலாளர்களுக்கு கொடுக்க வேண்டிய போனஸ் தொகைக்கு பயந்து கொண்டு பல காரணங்களைச் சொல்லிக் கொண்டு நிறுவனத்தை மூடி வைத்து விட்டார்கள். நூற்றுக்கணக்கான பெரிய நிறுவனங்கள் கூட இறுதி மூச்சில் ஓடிக கொண்டிருப்பதால் இந்த ஓட்டம் எந்த இடத்தில் நிற்கும் என்பதாகத்தான் இருக்கின்றது. கடந்த இரண்டு வருடங்களும் வேலைகளுக்கிடையே சிறிது ஓய்வு கிடைத்தது. இந்த வருடம் ஓய்வுகளுக்கிடையே சிறிதான வேலையிருப்பதால் தற்போது தமிழகத்தில் உள்ள மினவெட்டுக்குப் பின்னால் உள்ள அத்தனை விசயங்களையும் எழுத முடிந்தது.  அழைத்துப் பாராட்டிய நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றி. 

துப்பாக்கி

நாலைந்து நாட்களாக வெடி எப்போ வாங்கித் தரப் போறீங்க என்று குழந்தைகள் கேட்டுக் கொண்டிருந்தார்கள். நவீன ரக துப்பாக்கியே அவர்களின் முக்கிய இலக்காக இருக்கிறது. சிவகாசி வெடி விபத்தைச் சொல்லி தவிர்த்து விடலாம் என்ற எண்ணத்தை தவிடுபொடியாக்கி விட்டார்கள்.  கடையில் சென்று விலையைக் கேட்டால் மயக்கமே வந்து விட்டது. அநியாய கொள்ளை என்பதற்கு மேல் ஏதாவது ஒரு வார்த்தையை போட்டு விடலாம்.  இது போன்ற சமயங்களில் தான் சீனப்பட்டாசு குறித்து யோசிக்க முடிகின்றது.  

ஆனால் எந்த விலை என்றாலும் சிவகாசியில் இந்த தொழிலில் ஈடுபட்டுருக்கும் எந்த தொழிலாளி வாழ்க்கையிலும் கடைசி வரைக்கும் சிறப்பான முன்னேற்ங்கள் எதுவும் வரப்போவதில்லை என்பதும் உண்மை தானே.  வெடிகளையும் வாங்கிக் கொடுத்துவிட்டு அவர்களை பயத்துடன் வேடிக்கை பார்க்கும் போது தான் நமக்கு வயதாகிக் கொண்டிருக்கிறது என்பதே நினைவுக்கு வருகின்றது.

ம்மாவின் கைபேசி

விசேட தினங்களில் சமீப காலமாக எக்காரணம் கொண்டு ஊருக்குச் செல்ல விரும்புவதில்லை.  முக்கிய காரணம் சாலை விபத்துக்களும், கூட்ட நெரிசலுமாய் ஆளை படுத்தி எடுத்து விடுகின்றது. அவசர அவசரமாய் சென்று வருவதை விட பொதுவான தினத்தில் சென்று அரட்டை கச்சேரியோடு அனுபவித்து வருவதைத் தான் விரும்புகின்றேன்.  ஒவ்வொரு விசேட தினத்தின் போது குழந்தைகள் அம்மாவுக்கு, அத்தைக்கு, சித்தப்பா, பெரியப்பா என்று ஒவ்வொருவருக்கும் அலைபேசியில் அழைத்து வாழ்த்துகளைச் சொல்வார்கள்.  

குழந்தைகள் இப்படி தொடங்குவார்கள்.

அத்தை தீபாவளி வாழ்த்துகள்.
ஹேப்பி தீபாவளிடீடீடீடீ
அத்தை வாழ்த்துகளை தமிழ்லேயே சொல்லுங்க.
ஏண்டி உங்கப்பன் உங்களையும் கெடுத்து வச்சுட்டானா?

ஆனால் அம்மா மட்டும் எப்போதும் அலைபேசியில் பேசமாட்டார்.  காரணம் அவர் சொல்லும் காரணம் மிகவும் எளிமையானது.

"அந்த பொட்டிய காதுல வச்சுக்கிட்டு இம் கொட்டுற நேரத்துல அதுக வரும் போது பேசிட்டா போச்சு. காது தான் வலிச்சு தொலையுது. நிம்மதியா சந்தோஷமா இருக்கீகதானே. அது போதும்டா. ஈசல் மாதிரி ரோடு முழுக்க காரு பறக்குது.  ஒன்னும் அவசரமில்ல.  அங்கேயே கொண்டாடுங்க."


புரட்சித்தலைவி

அரசியலில் சேவை செய்த தலைவர்களுக்கு உணடான பட்டங்களைத் தவிர்த்து தற்போதைய சூழ்நிலையில் உள்ள  தலைவர்களுக்கு எதற்காக? எதன் அடிப்படையில் இந்த பட்டங்கள்? என்பதை பல முறை யோசித்துப் பார்த்தும் என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. உங்களுக்குத் தெரிந்தால் கொஞ்சம் சொல்லுங்களேன்.

ஆனால் தற்போது தமிழ்நாட்டை முதல் அமைச்சராக ஆண்டு கொண்டிருக்கும் அம்மையார் ஜெயலலிதாவுக்கு அவரின் தொண்டர்கள் அழைக்கும் புரட்சித் தலைவி என்ற இந்த பட்டத்திற்கு மிகவும் பொருத்தமாகத்தான் இருக்கிறார். 

மிகப் பெரிய ஒரு ஆச்சரியமான சமூக மாற்றத்தை கொண்டு வந்து  நிலைப்படுத்தியவரைத்தானே புரட்சி என்ற வார்த்தையில் மக்கள்  அழைக்கின்றார்கள்.  இவரும் ஒரு வகையில் புரட்சி தானே செய்துள்ளார்.  

எப்படி என்கிறீர்களா?

தற்போது தமிழ்நாட்டில் உள்ள மின்வெட்டுக்கு புதுப்புது காரணங்களை கண்டுபிடித்து சொல்வதுடன் நான் எப்போது அப்படி சொன்னேன் என்று நம்மையே திருப்பிக் கேட்டு திடுக்கிடுடவும் வைப்பது ஒரு வகையில் புரட்சி தானே?

கையில் குறிப்பு இல்லாமல் தற்போது சட்டசபையில் மனோகரா பட வசனம் போலவே பேசத் தொடங்கியதும் புரட்சி தானே?

தமிழ்நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் நடுத்தரவர்க்க, அடித்தட்டு மக்கள்  வாழ்க்கையில் இவர் உருவாக்கிய புரட்சிகள் ஒன்றா இரண்டா?

காலை ஐந்து மணிக்குள் மின்சாரம் போய்விடும்.  அதற்குள் எல்லா வேலைகளையும் முடித்து விட வேண்டும் என்று மனைவி வேகமாக எழுந்து சுறுசுறுப்பாக செயல்படக் காரணம் யார்?

குழந்தைகள் தற்போது தொலைக்காட்சி பார்க்க வேண்டும் என்பதை சொல்வதே இல்லை? படிக்க வேண்டிய பாடங்கள், வீட்டுப் பாடங்கள்.  அதுவும் முடிந்து விட்டால் சேர்ந்து நன்றாக விளையாடுகிறார்கள். இதற்கு காரணம் யார்?

மதியம் தூக்கம் என்பதையே பலரும் மறந்து போய்விட்டார்கள்.  உடம்பு ஆரோக்கியம் மேம்பட காரணம் யார்?

மெழுகுவர்த்தி, கொசுவலை, கொசுவை விரட்ட உதவும் குறுந்தொழில்கள் என்று எல்லா பக்கமும் வளர காரணம் யார்?

யூபிஎஸ், இன்வெர்ட்டர் போன்ற மின்சாதன பொருட்களை உற்பத்தி செய்பவர்களின் வாழ்க்கையில் மறுமலர்ச்சியை உருவாக்கியது யார்?

மின்சாரம் இல்லாவிட்டாலும் கூட மாதந்தோறும் மின்சாரத் தொகையை கட்டும் போதே மயக்கம் போட்டு விழ வைத்தது யார்?

நிறுவனங்களில் பழைய பாக்கி கேட்டுச் சென்றால் எங்கப்பா கம்பெனி நடக்குது.  நீயே பாரு? என்று ஒரு வாட்டி அழத் தொடங்கினால் பணம் கேட்டு வருபவர்கள் கத்த முடியாமல் கப் சிப்?  வாங்கிய கடனை கொடுக்க முடியாத மறுமலர்ச்சி வாழ்க்கை தத்துவத்தை மறைமுகமாக போதித்தவர் யார்?

மாலை வேளை வந்துவிட்டால் தற்போது ஒவ்வொரு வீட்டின் வாசல்களிலும்  பழையபடி நிறைய பெண்கள் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கின்றார்கள்.  தொலைக்காட்சிக்கு அப்பாற்பட்ட ஒற்றுமை உணர்வுகளை இந்த பெணகள் வாழ்க்கையில் உருவாக்கியது யார்?

கவலைப்படாதே சகோதாரா? கருமாரி நான் இருக்கேன். இந்த வருடம் தீபாவளிக்கு   டாஸ்மாக் சரக்கை அதிகப்படுத்தியுள்ளேன்.  சந்தோஷமாக இரு என்று கருணை காட்டியது யார்?

இன்னும் பட்டியல்களை போட்டுக் கொண்டே போகலாம். 

உண்மையிலே தனது அற்புத நிர்வாகத் திறமையால் இத்தனை புரட்சிகளை கொண்டு வந்தவரை புரட்சித்தலைவி என்று அழைப்பது தானே முறையாகும்.

உங்கள் அனைவருக்கும் தேவியர் இல்லத்தின் தீப ஒளி திருநாள் வாழ்த்துகள்.


முந்தைய தீபாவளி



சென்ற வருடம் நண்பர் வவ்வால்ஜி எழுதிய வாழ்த்துரை இது. 


ஜோதிஜி,

வணக்கம், யதார்த்தமா எழுதி இருக்கிங்க. நான் தீபாவளி , அது இதுனு கண்டுக்கிறதே இல்லை , எல்லா நாட்களும் ஒன்றே, ஆனால் வாழ்த்துகள் சொன்னா தப்பில்லைனு சொல்வேன், தீபாவளி வாழ்த்துகள்.நல்லா சாப்பிட்டு , டீவீல போடுற படம் பாருங்க , தப்பி தவறி தியேட்டர் பக்கம் போய்டாதிங்க :-))

17 comments:

Anonymous said...

தீப ஒளி திருநாள் வாழ்த்துகள்...

கோவி.கண்ணன் said...

நல்வாழ்த்துகள் ஜோதிஜி.

திண்டுக்கல் தனபாலன் said...

குடும்பத்தார் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...

ஜோதிஜி said...

தனபாலன் தீபாவளி அன்றைக்கு வலை பக்கமே உங்களை பார்க்கக்கூடாது. சரியா? குடும்பத்துடன் நன்றாக இந்த விசேட தினத்தை கொண்டாடுங்க. வாழ்த்துகள்.

கண்ணன் அடுத்த வருடத்திற்குள் இப்ப இருந்த பதவியை விட உயர்ந்த பதவியில் இருப்பீங்க. ஷாப்பிங் செய்ய கிளம்பியவருக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் எங்கள் வாழ்த்துகளை சொல்லிடுங்க.

ரெவேரி உங்கள் முதல் வாழ்த்தை பெற்றுக் கொண்டேன்.

Avargal Unmaigal said...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் மற்றும்
உங்களது நண்பர்கள் அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
"தீப ஒளியினிலே தீயன மறைந்து நல்லன பிரகாசிக்கட்டும்"
இனித்திடும் இந்த இனிய தீபாவளித் திருநாளில் உங்கள் விருப்பங்கள்
எல்லாம் கைகூடி வந்து
என்றென்றும் சந்தோசமாக இருக்க வாழ்த்துக்கள்..
தித்திக்கட்டும் இனிய தீபாவளி உங்கள் வாழ்க்கையில்

Avargal Unmaigal said...

"பணக்காரனுக்கு சாதாரண நாளும் தீபாவளித் திருநாள் தான் ஆனால் ஏழைக்கோ தீபாவளித் திருநாளும் சாதாரண நாள்தான்''

வவ்வால் said...

ஜோதிஜி,

துப்பாக்கி, அம்மாவின் கைப்பேசினு நல்லா புடிக்கிறீங்க டைட்டில் :-))

இந்த போ(ட்)டா போ(ட்)டீ ,காசி குப்பம் எல்லாம் விட்டுப்புட்டிங்களே,

புரட்சி தலைவிக்கு அருஞ்சொற்பொருள் விளக்கம் நல்லா இருக்கு, நான் கூட எப்பவோ இதே போல ஒரு விளக்கம் பின்னூட்டமாக சொன்னேன் என்ன சொன்னேன்னு மறந்து போச்சு :-))
-----------

ஹி..ஹி போன வருட பின்னூட்டம் எல்லாம் நியாபகமா எடுத்தான்டு இருக்கீங்க :-))

தீவாளி எல்லாம் வழக்கம் போல விடுமுறை நாளாக நினைச்சு மகிழ வேண்டியது தான், எனவே நான் இம்முறை பொங்கல் வாழ்த்துக்கள் சொல்லிக்கிறேன் :-))

இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!

முடிஞ்சா நாளைக்கு சர்க்கரை பொங்கல் செய்ய சொல்லி சாப்பிடுங்க ...ஹி ஹி ...தீவாளிக்கு பொங்கல் சாப்பிடலாம் ,பொங்கலுக்கு தீவாளி சாப்பிட முடியுமா :-))

திண்டுக்கல் தனபாலன் said...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/11/blog-post_13.html) சென்று பார்க்கவும்... நன்றி...

இதைச் சொல்ல தான் சார் வந்தேன்... இனி உறவினர்கள் வீட்டிற்கு பயணம்...

மறுபடியும் தங்களுக்கும், தங்களின் குடும்பத்தார் அனைவருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...

Ranjani Narayanan said...

நன்றி ஜோதிஜி!

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி வாழத்துக்கள்!

http://ranjaninarayanan.wordpress.com/

Anonymous said...

happay diwali saravanan from bangalore

ஜோதிஜி said...

சரவணன் நலமா? வாழ்த்துகள்.

நன்றி அம்மா.

நன்றி தனபாலன்.

வவ்வுஜி ஏற்கனவே நம்ம வவுறு பஞ்சர். கௌப்பி வீடாதீங்க.

'பரிவை' சே.குமார் said...

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்..

Unknown said...

தீபாவளி வாழ்துக்கள்

தாராபுரத்தான் said...

நீங்க சொல்லுவதெல்லாம் சரிங்க ஆனால் இந்த அம்மாவுக்கு மாற்றை நெனைச்சா....இருட்டை பொறுத்துக்கலாம்.

ஜோதிஜி said...

வாழ்த்துகளும் நன்றியும் குமார்.

ஜோதிஜி said...

ஊருக்கு போவீங்களா?

ஜோதிஜி said...

இது தான் இவரின் பலமும் அதே சமயத்தில் நம்முடைய தற்போதைய பலவீனமும்.