Sunday, November 18, 2012

மின்சாரம் கனவு – 9 மின் மிகை மாநில சவால்கள்

தொடக்கம்..

ஒன்று.   இரண்டு.   மூன்று.   நான்கு.   ஐந்து.   ஆறு   ஏழு    எட்டு

எல்லாத் துறைகளிலும் அரசாங்கம் சார்ந்த பொதுத் துறை நிறுவனங்கள் மட்டுமே ஈடுபடும் பட்சத்தில் பயன்படுத்துவோருக்கு மாற்று ஏற்பாடு இருக்காது. அரசாங்க நிறுவனம் என்றாலே நாம் தற்போது பார்த்துக் கொண்டு இருக்கும் காலத்தோடு ஒவ்வாத தன்மை இருக்கும்.  பொது மக்களுக்கு உடனடி தீர்வு கிடைக்காது. நாம் செலவழிக்கும் காசுக்கு நல்ல சேவை கிடைக்காது போன்ற ஆயிரத்தெட்டு குற்றச்சாட்டுகள் உண்டு.

குறிப்பாக தற்போது தனியார் துறை உள்ளே வந்தவுடன் தான் நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கும் தொலைபேசி, அலைபேசி சேவைகள் விரைவாக வளர்ந்துள்ளன. தனியார்கள் கொடுக்கும் சேவையினால் தான் இன்றைய இந்தியாவில் பல துறைகளில் ஒரு உண்மையான போட்டி நிலை உருவாகியுள்ளது  என்பது எத்தனை தூரம் உண்மையோ ஆனால் அந்த அளவுக்கு தனியார் நிறுவனங்கள் மக்களை சேவை என்ற வார்த்தை கொண்டு சுரண்டல் தன்மையையும் வளர்த்து மிக விரைவில் மிகப் பெரிய நிறுவனமாகவும் வளர்ந்து விடுகின்றது. இதன் மூலம் பாதிப்புக்கு அதிகம் உள்ளாவது பொதுஜனமே.

இன்றைய தனியார் அலைபேசி நிறுவனங்கள் மேல் பொதுமக்கள் வைக்கும் குற்றச்சாட்டுக்கு எந்த நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

காலதாமதம் என்பது காலப்போக்கில் மறந்து விடு என்பதாக அர்த்தம்.

முக்கிய காரணம் நம் அரசியல்வாதிகள் மற்றும் அவர்களுக்கு பின்னால் உள்ள சக்திகள்.  நமது சட்டமுறைகள் குறிப்பாக சாமானியனுக்கு  எட்டாத நிலையில் இருக்கும் சட்ட குளறுபடிகள். 

இந்த மின் துறையில் பல வெளிநாட்டு நிறுவனங்கள் உள்ளே வந்து துண்டை காணோம் துணியைக் காணோம் என்று ஓடக்காரணமே இங்கே உள்ளவர்களை சரிக்கட்ட அல்லது அவர்களின் நோக்கங்களை புரிந்து கொள்ளவே தனியான திறமை அவர்களுக்குத் தேவைப்பட்டது. சிறப்பான சேவை என்ற நிலையில் இருக்கும் பல நிறுவனங்கள் பின்வாங்கி விட முடிந்தவரைக்கும் லாபம் என்ற நிறுவனங்கள் மட்டுமே இந்தியாவிற்குள் வரத் தொடங்கின. அனுபவசாலிகள் உள்ளே வரும் போது அவர்களின் கொள்கைகள் வேறுவிதமாகத்தான் இருக்கும்.

சிலரோ இது போன்ற பழக்கங்கள் எங்களிடம் இல்லை என்று கிடைத்தவரைக்கும் லாபம் என்று அள்ளிக் கொண்டு ஓடிவிட்டார்கள்.  மேற்கொண்டு வெளியே இருந்தபடி தாங்கள் விரும்பியபடி ஆட்டிவைப்பது எளிது என்று தங்கள் திட்டங்களை மாற்றிக் கொண்டு விட்டார்கள்.  இன்று வரைக்கும் பல நிறுவனங்கள் அந்த வேலையை மட்டும் தான் இந்தியாவிற்குள் செய்தும் கொண்டும் இருக்கிறார்கள்.

தொடக்கத்தில் பல ஐடி நிறுவனங்கள் தமிழ்நாட்டிற்குள்ளே வந்தது. தமிழ்நாட்டில் உள்ள ஆட்சியாளர்களின் எதிர்பார்ப்புகளைப் பார்த்து பயந்து கர்நாடகா பக்கம் ஓடினார்கள்.  பத்தாண்டுகளில் கர்நாடகா பெற்ற வளர்ச்சி நினைத்தே பார்க்க முடியாத ஒன்று. இன்று வரைக்கும் பல நிறுவனங்கள் குஜராத் பக்கம் செல்லவே விரும்புகிறார்கள்.

அரசாங்க கொள்கை என்பது கண்கட்டி வித்தை போலவே இருப்பதால் பலருக்கும் இந்தியாவில் தொழில் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் வருவதே இல்லை.  அது குறித்தும் இங்குள்ள அரசியல்வாதிகள் கவலைப்படுவதும் இல்லை.

கட்டிங் என்பது மதுக்கடைகளில் உபயோகிக்கப்படும் வார்த்தை என்பதாக மட்டும் நீங்கள் தெரிந்து வைத்திருந்தால் இன்னமும் அரசியல் உலகத்தைப் பற்றி நிறைய தெரிந்து கொள்ள வேண்டும் என்று அர்த்தம்.

அரசியல் என்பது தற்போது ஒரு முதலீடு.  முதலீட்டை போட்டு உள்ளே வருபவர்கள் அதனை மீண்டும் எடுக்கத்தான் விரும்புவார்கள்.  ஓட்டுப் போட காசு தரமாட்டார்களா என்று யோசிக்கும் மக்கள் இருக்கும் வரையிலும் இந்த அரசியல் வணிகம் நடந்து கொண்டே தான் இருக்கும். 

கேள்விகள் என்பது கேலியாகிப் போனப் பிறகு எவர் எதைக்குறித்து பேச முடியும்?  உன் பங்கு உனக்கு? என் பங்கு எனக்கு என்பதாக மக்களும் மாறியுள்ளனர்.  இதைப் புரிந்த அரசியல்வாதிகளும் அவரவருக்கு தெரிந்த வகையில் உழைத்து மிக விரைவில் தொழில் அதிபர்களாக மாறிவிடுகின்றனர்.

இந்த இடத்தில் ஒரு சிறிய உதாரணத்தைப் பார்த்து விடுவோம். 

எஸ்டிசிஎம்எஸ் என்பது ஒரு தனியார் மின் உற்பத்தி நிறுவனம். 2002 டிசம் மாதம் தன் உற்பத்தியைத் துவங்கியது.

இதன் எரிபொருள் நெய்வேலியிலேயே கிடைக்கும் பழுப்பு நிலக்கரியாகும்.

தமிழகத்தில் எரிபொருள் வளம் குறைவே. இன்றும் தமிழ்நாடு மின்சார வாரியம் தனது அனல்மின நிலையங்களுக்கு தேவைப்படும் நிலக்கரியை வட மாநிலங்களில் இருந்து கப்பல் மூலமாகத்தான் கொண்டு வருகின்றது.  சென்னைத் துறைமுகத்தில் வந்திறங்கும் நிலக்கரியானது மேட்டூர் அனல் மின் நிலையத்திற்குத் தொடர் வண்டிகளின் மூலம் கொண்டு செல்லப் படுகிறது.

நிலக்கரியின் விலையானது டன் ஒன்றுக்கு தோரயமாக ரூ 900 என்று எடுத்துக் கொண்டால் அதனை மின் நிலையத்திற்குச் கொண்டு வர டன் ஒன்றுக்கு சுமார் 1600 ரூபாயை செலவிட வேண்டியுள்ளது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் தமிழகத்தின் ஒரே நிலக்கரி சுரங்கத்தின் வாயிலிலேயே அமைக்ககூடிய ஒரு மின் நிலையத்தைத் தனியாருக்கு விட்டுக் கொடுக்க வேண்டும் என்று மத்திய அரசு கட்டளையிட்டது.


இந்த தனியார் மின் உற்பத்தி நிலையத்தின் உண்மையான மூலதனம் 700 கோடி  ஆனால் தன்னுடைய முதலீடு 1608 கோடி என்று கணக்கு காட்டியது. பிரச்சனை விஸ்வரூபம் எடுத்தது.

வழக்கு நீதிமன்றத்திற்கு சென்றது.

ஆனால் நிறுவனம் இந்த வழக்கு இந்தியாவிற்ககு வெளியே தான் நடத்த வேண்டும் என்று மேலும் பிரச்சனையை உருவாக்கி விரும்பியபடியே லண்டன் நீதிமன்றத்தில் நடத்தி வெற்றியும் பெற்றது.

இந்த வழக்குக்காக ஆஜரானவர் தான் தற்போது பாரதிய ஜனதாவில் இருக்கும் முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி.

மக்களுக்காக நாங்கள் என்று சொல்லிக் கொண்டிருக்கும் ஒவ்வொரு தலைவர்களின் பின்னால் இருக்கும் விசயங்களை வெளிப்படையாக எழுதப் போனால் அது இந்த தொடரின் போக்கை மாற்றிவிடும்.

தாராளமயமாக்கத்திற்குப் பிறகு உருவான தனியார் மின் உற்பத்தியில் அப்போதைக்கு என்ன சந்தை நிலவரமோ அது தான் மின் கட்டணமாக நிர்ணயிக்கப்படுகின்றது. இந்தியாவின் பொதுத்துறை நிறுவனமே தற்போது வீட்டுக்குப் பயன்படுத்தும் எரிவாயுவுக்கு குறிப்பிட்ட சிலிண்டருக்கு மேல் தேவைப்படும் போது மானியம் இல்லாத விலைதான் என்று உருவாக்கியுள்ளது.

அதுவும் அப்போதைய சந்தை விலை.தான் என்று சொல்லும் போது இந்த துறைகள்  தனியார் வசம் என்றால் கேட்கவும் வேண்டுமோ?

போட்டியில் இருக்கும் பல நிறுவனங்கள் ஒன்று சேர்ந்து கொண்டு லாபி அமைப்பை உருவாக்கிக் கொண்டு குறிப்பிட்ட விலையை நிர்ணயிக்கும் போது அது கடைசியில் பயன்படுத்தும் பொதுஜனத்தை தான் வந்து தாக்குகின்றது. 

தனியார்கள் மின்சார உற்பத்திக்கு வந்த பிறகு அரசாங்கம் அவசர தேவையின் பொருட்டு  பல அசாதாரணமான முடிவுகளை எடுக்கத் தொடங்கின.

எடுத்துக் காட்டாக, மின் உற்பத்திக்கென உலகில் இது வரை மிகவும் அரிதாகவே பயன்படுத்தப்படும், மிகவும் விலை கூடிய நாப்தாவை எரிபொருளாக உபயோகிக்கும் மின் நிலையங்களைக் கட்டிக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டது.

நாப்தா என்பது பெட்ரோலிய திரவத்திலிருந்து பிரித்தெடுக்கப்படும் ஒரு பொருளாகும். இது வெகு விரைவில் ஆவியாகும் தன்மையைக் கொண்டது.

மேற்கத்திய நாடுகளில்  இது ரசாயன உரம் தயாரிப்பதற்காகப் பல காலம் பயன்படுத்தப்பட்டு வந்தது.  ரசாயன உரத்தினால் நிலத்திற்கும் நீருக்கும் ஏற்படும் பிரச்சனைகள் குறித்த விழிப்புணர்வு வந்த பிறகு மேற்குல நாடுகளில் ரசாயன உரத்தின் தேவை வெகுவாகக் குறைந்து போனது.  இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஏற்கனவே இந்த ஆலைகளால் உபயோகிப்பட்டு வந்த நாப்தாவிற்கான புதிதான பயன்பாடு கண்டறியப்பட்டது.

அது தான் மின் உற்பத்திக்கான எரிபொருளாக அதனைப் பயன்படுத்தும் செயல்படாகும் என்றாலும்கூட மேற்குலகம் இந்த எரிபொருளின் அடிப்படையிலான மின் நிலையங்களை இன்றளவும் நிறுவவில்லை. 

இந்த மின் நிலையங்களை இரண்டு வருடங்களுக்குள்ளாகக் கட்டிக் கொள்ள முடியும் என்பதுவும், இந்த மின் நிலையங்களால் உற்பத்தி செய்யப்டும் மின்சாரம் விலை கூடியது ஆகும்.

இந்த மின்சாரத்தை வாங்கும் மாநில மின் வாரியங்கள் வெகு விரைவில் திவாலாகிவிடும். இது தான் இப்போது நடந்து கொண்டிருக்கின்றது.

மேலும் உள்ளூரில் புதிதாக இயற்கை எரிவாயு கண்டறிப்படும் போது தனியார் மின் நிலையங்களுக்கு உடனடியாக வழங்கப்பட்டது.

மூச்சுத் திணறிக் கொண்டிருக்கும் மாநில மின் வாரியங்கள் தம்மைக் காப்பாற்றிக் கொள்வதற்காக இரண்டாண்டுகளுக்குள் கட்டமைக்க முடிகின்ற எரிவாயு மின் நிலையங்களைக் கட்டிக் கொள்வதைத் தடுக்கவே அனைத்து உள்ளூர்  எரிவாயு மூலாதாரங்கள் தனியாருக்குத் தாரை வார்க்கப்பட்டன.

தமிழ்நாடு மின்வாரியத்திற்கு மின் நிலையம் அமைப்பதற்காக அனுமதி வழங்காத மத்திய அரசு நெய்வேலி நிலக்கரிச் சுரங்கத்திலேய தங்களது மின உற்பத்தியை தொடங்கிக் கொள்ள தனியாருக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது.

இந்த தொடர் முழுக்க தற்போதைய பூதாகர பிரச்சனையாக உருவாகியிருக்கும் மினவெட்டைப் பற்றியும், அதற்குப் பின்னால் உள்ள அத்தனை விசயங்களையும் பற்றியும் பார்த்தோம்.

இனி இதனால் என்ன மாறுதல் இந்தியாவில் தமிழ்நாட்டில் உருவாகும்?

மாநில மின் வாரியங்கள் இனி இல்லாமல போகும்.

மின் வாரியத்தின் அனைத்து சொத்துக்களையும் தனியார் மின் உற்பத்தி மற்றும் மின் வழங்கல் நிறுவனங்கள் வாங்கிக் கொள்ள அரசுகள் வழி வகை செய்யும்.

மின்சாரத்தின் விலையை சந்தையே தீர்மானிக்கும் என்பதால் சாமானிய மக்களால் இதனை இனிவரும் காலங்களில் வாங்க இயலாது

வேளாண்மை மற்றும் வீட்டு உபயோகத்திற்கு அரசுகளால் வழங்கப்படும் மின்சார மானியம் நிறுத்தப்படும்.

சிறு குறுந் தொழில் துறையினருக்கும் தேவைப்படுகின்ற மின்சாரததை அவரகள் மாநிலத்தின் மைய மின் கட்டமைப்பில் இருந்து கேட்காமல் இருப்பதற்கான வழிமுறைகளை உருவாக்கும்.  நடை முறைகளை அரசுகள் மேற்கொள்ளும்.

எடுத்துக் காட்டாக, வீடுகளிலும் வேளாண் நிலங்களிலும் மின்சாரத்தை சுயமாக உற்பத்தி செய்து கொள்ள வழிவகை செய்கின்ற சூரிய ஒளி, சிறு காற்றாலை மற்றும் குப்பையில் இருந்து தயார் செய்ய முடிகனிற் மின உபகரணங்களை இந்த  துறையினர் பயன்படுத்த வேண்டும் என்ற திட்டங்களை அரசுகள் முன் வைக்கும். 

சில நாட்களுக்கு முன் தமிழ்நாடு அரசு வெளியிட்ட சூரிய சக்தி கொள்கையை நினைவில் கொண்டு வரவும்..

மாநிலத்தின் மைய மின் கட்டமைப்பில் இருந்து ஒரு வேளை இந்தத் துறையினருக்கும் மின்சாரம் தேவைப்படும் எனறால், அதற்காக அவர்கள் அணு மின் நிலையங்களை மட்டுமே நம்பியிருக்கவேண்டும்.

ஏனெனில் இதர எரிபொருட்களின் அடிப்படையிலான மின் உற்பத்தி என்பது முழுமையாகத் தனியார் கைகளில் சென்றடைநதிருக்கும்.

அவற்றை அவர்கள் சந்தை விலையில் விற்பர்.  எஞ்சியிருக்கும் அரசுத்துறை மின் உற்பத்தி என்பது ஆபத்துக்கள் நிறைந்த அணு மின் நிலையங்களைச் சார்ந்தாக மட்டுமே இருக்கும்.

ஆனால் அந்நிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் யுரேனியம் மற்றும் அணு உலைகளை மட்டுமே இந்த அணு மின் நிலையங்கள் நம்பியிருக்க வேண்டும்.

இதனை அமெரிக்காவால் 2005 ஆம் ஆண்டிலிருந்து முன்னெடுக்கப்பட்டு வந்தது. தற்போதைய மன் மோகன் சிங் அரசாங்கமும் வெற்றிகரமாக நிறைவேற்றியும் உள்ளது.

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைத் தீர்மானிக்கும் அதிகாரத்தை இது வரும் காலங்களில் யுரேனியம் மற்றும் அணுத் தொழில் நுட்பங்களை வைத்திருக்கும் அந்நிய நாடுகளின் கைக்குச் செல்லும். .

இப்படிப்பட்டக் சமூக நிறுவனக் கட்டமைப்பில் இருந்து சமானிய மக்களால் எளிதில் வெளியேற முடியாது.

ஆனால் சாமானிய மக்களின் உபயோகத்தில் இருந்து கையாட்டப்பட்ட மின்சாரமோ பன்னாட்டு நிறுவனங்களின் தொழில் மற்றும் வாத்தகத் துறையின் கட்டற்ற வளர்ச்சிக்கு உபயோககப்படுத்தப்படும்.

இப்படிப்பட்ட சூழலுக்கான முக்கால் பங்குப் பயணத்தை இன்று நம் சமூகம் கடந்து விடடிருக்கிறது. 

கேளிக்கை விசயங்களுக்கு, நுகர்வு சந்தையில் முன்னுரிமை கொடுத்து வாழப் பழகி விட்ட சமூகத்திற்கு இனி நம்மை கேட்பதற்கு எவருமில்லை என்ற நோக்கத்தில் தான் அரசாங்கத்தின கொள்கைகள் ஒவ்வொன்றும்  உருவாக்கப்படும்.

உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

13 comments:

எம்.ஞானசேகரன் said...

நம்மை நினைத்தே நாம் பரிதாபப் பட்டுக்கொள்ளவேண்டியதுதான்!

ஜோதிஜி said...

எதார்த்தம் சுடுகின்றது.

Dino LA said...

அருமை

ஜோதிஜி said...

நன்றி

வவ்வால் said...

ஜோதிஜி,

கிளைமாக்ஸ்ல தான் விறு விறுப்பை கூட்டி இருக்கீங்க, ஹி...ஹி நான் ஆரம்பத்திலேயே இதை எல்லாம் எதிர்ப்பார்த்துட்டேன்,எப்போ அரசு துறை நிறுவனங்களை எல்லாம் வரையறுக்கப்பட்ட தனியார் நிறுவனமாக கன்வெர்ட் செய்தாங்களோ அப்போவே இறுதி மணி அடிச்சாச்சு, தூர்தர்ஷனை பிரச்சார்பாரதியாக ஆக்குவது வலர்ச்சிக்குனு சொன்னாங்க,ஆனால் வளர்ந்துச்சா? அதே போல தான் மின் துறையை நிறுவனமாக மாற்றியதும்,ஆனால் எதுவுமே செய்யாமல் சமர்த்தா தூங்க வச்சுவிட்டு ,வேற வழியே இல்லை தனியார் தான் மின்சாரம் தயாரிக்கணும் என சொல்லிவிட்டு எல்லாத்துக்கும் காரணம் ஆணையம் என சொல்வார்கள் ஆனால் ஆணையத்திற்கு இப்படி செய்யுன்னு சொல்வது அரசு என்பதை மறைத்துவிடுவார்கள்.

எல்லாக்கட்சியுமே இன்னொரு கட்சியை குற்றம் சொல்லும் ஆனால் யார் ஆட்சிக்கு வந்தாலும் முன்னர் ஆண்டவர்கள் செய்த மக்கள் விரோத நடவடிக்கையை மட்டுமே செய்வார்கள். ஆனால் மக்கள் தான் ஆட்சி மாறினால் காட்சி மாறும் என நம்பிக்கையில் மாத்தி மாத்தி ஓட்டு போட்டு நம்பிக்கொண்டிருக்க வேன்டும்.

கிருஷ்ணா கோதாவரி எரிவாயு திட்டத்தில் நடைப்பெற்று இருக்கும் கோல்மாலை வெளிக்கொண்டு வந்தால் 2ஜீ விட பெரிய மோசடி வெளிவரும் , ஆனால் ஊழல் எதிர்ப்பாளர்கள் என சொல்லிக்கொள்பவர்கள் கூட வாயை திறக்க மாட்டேன்கிறார்கள்.

ஜோதிஜி said...

காரணம் அவர்கள் இயங்க டப்பு வேண்டுமே? ஆனாலும் அவர்கள் மூலமாவது சில விசயங்களாவது வெளியே வருகின்றதே என்று யோசிக்கும் அளவுக்கு நான் இயல்பான நடைமுறைக்கு மாறியுள்ளோம் என்பது தானே ஆச்சரியம்.

அடுத்த பதிவோடு முடிகின்றது. இந்த நம்பிக்கையை அடுத்த பதிவும் காப்பாற்றும் என்று நம்புகின்றேன்.

எப்போதும் திருப்பூரில் இருந்து தீபாவளிக்கு குறைந்தபட்சம் 300 பேரூந்துங்கள் வெளி மாவட்டத்திற்குச் செல்லும். ஆனால் இந்த முறை 40 மட்டுமே. அதுவும் காத்தாடி பாவாடை கணக்கு தான்.

ஈழம் தொடர் எழுதிய போது படித்த புத்தகங்கள் ஒரு விதமான மனநிலையை பிறழ வைத்தது. நீண்ட வருடங்களுக்குப் பிறகு இது குறித்த விசயங்களை தேடலாக தொடங்கிய போது தற்போது அனுபவித்துக் கொண்டு இருக்கும் தொழில் வாழ்க்கை இழப்புகள், கண் எதிரே அழிந்து கொண்டு இருப்பவர்கள், எதிர்கால அவநம்பிக்கை, மாற்று ஏற்பாடு என்று எல்லாநிலையிலும் பைத்தியம் பிடிக்க வைத்து விட்டது.

நிச்சயம் தேடல் உள்ளவர்களுக்கு இன்னும் ஐந்து ஆண்டுகளுக்கு இந்த பத்து பதிவுகளும் உதவும் என்பதே தனிப்பட்ட முறையில் திருப்தி தான்.

Unknown said...

இது எல்லாம் புதிய பொருளாதார கொள்கையின் விளைவு

Unknown said...

Ji... please write about world bank in next serial, i have put an comment in this serial.

ஜோதிஜி said...

அதைப் பற்றி மற்றொரு சமயத்தில் எழுத முயற்சிக்கின்றேன். உலகத்தையே சுருக்க வேண்டிய சமாச்சாரம் அல்லவா? நினைவு படுத்தியமைக்கு நன்றி.

ஜோதிஜி said...

காரணங்களில் இது முக்கியமானது. ஆனால் இதுவே முதன்மையானதுஅல்ல.

Unknown said...

Please write post on present tirupur situtation.

ஜோதிஜி said...

அது ஏற்கனவே ஆழம் பத்திரிக்கையில் வந்து விட்டது வினோத். அதை அப்படியே எடுத்து போட வேண்டும். அடுத்து ஜெ வுக்கு கடிதம் எழுத வேண்டும். அதன் பிறகு அந்த பதிவு.

ஜோதிஜி said...

உங்கள் தளத்தைப் பார்க்கும் போது சற்று பொறாமையாக இருக்கிறது. இங்கே இருக்கும் மின்வெட்டில் பொறுமையாக பார்க்க முடியும் என்று நம்புகிறீர்களா? தற்போதைக்கு சேர்ந்துள்ளேன். பின்னால் உதவக்கூடும்.